ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, March 31, 2006

செய்தியல்ல!

டெகான் கொரோனிகிளில் இந்த செய்தி பின்னிணைப்பில், பல நடிகர் நடிகைகள் சார்ந்த செய்திகளுக்கு நடுவில், நான் தவற விடக்கூடிய எல்லா வாய்புகளுடன் வெளிவந்திருந்தது. மிக எதேச்சையாய் பார்க்க நேர்ந்தது. பின் இந்துவிலும் பார்க்க நேர்ந்தது.

பெரியசாமி, மூர்த்தி என்ற இரண்டு துப்புரவு தொழிலாளர்கள். இருவரும் சென்னையில் நடைபாதைகளில் வசிப்பவர்கள். மூர்த்தி சேலம் மாவட்டத்திலிருந்தும், பெரியசாமி விழுப்புரம் மாவட்டத்திலிருந்தும் சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள். தினக்கூலிக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்துவிட்டு, வார இறுதியில் சொந்த ஊருக்கு திரும்பி விடுபவர்களாக செய்தியில் சொல்லப் படுகிறது.

இந்துவில் முகபேரு மேற்கு என்றும், டெகான் க்ரோனிகிளில் நோலாம்பூர் என்றும் குறிக்க பட்டிருக்கும் இடத்தில், ஒரு பாதாள சாக்கடையில் குழாயை சுத்தம் செய்ய, மேன்ஹோல் வழியாக மூர்த்தி முதலில் இறங்கினார். அவருடய உதவிக்கான கூச்சலை கேட்டு, உதவி செய்யும் நோக்கத்துடன் பெரியசாமியும் உள்ளே சென்று மாட்டிக் கொண்டார். இருவரும் உள்ளே சென்று வெளியே வர இயலாததை பார்த்து மற்றவர்கள் போலிசை அழைத்திருக்கிறார்கள். போலிஸ் தீயணைப்பு படையுடன் போய் சேர்ந்து, அவர்களுடைய இறந்த உடல்களை மட்டும் வெளியே எடுக்க முடிந்தது.

இது வெறும் சென்னை நகரில், நடந்த ஒரு விபத்தில், இருவர் இறந்து போனது பற்றிய சாதாரண செய்தி மட்டுமல்ல என்பதை விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

Post a Comment

---------------------------------------

Tuesday, March 21, 2006

முன்னுரையிலிருந்து...

(குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் பேசப்பட்டு, மனதில் ஏற்பட்ட தாக்கமும் சுமையும் நீங்கி, மறந்து போய்விடாமல் இருக்க, தொடர்ந்து ஒரு விவாதப் பொருளாய் பார்வைக்கு வைக்கும் பொருட்டு, இடைவெளி விட்டு கீதா ரமசாமியின் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை அளிக்கவிருக்கிறேன்.)

புத்தகத்தின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள்.

..... 2005இல் கூட பொதுக்கழிப்பிடங்களிலும், தனிப்பட்ட கழிப்பிடங்களிலும், எதற்காக தனி மனிதன் ஒருவரால் மலம் எடுத்து செல்லப் பட வேண்டிய தேவை இருக்கிறது என்று நமக்கு நாமே கேட்டுகொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வழக்கத்திற்கு மிக பெரிய அளவில் காரணமாக இருப்பதாக நான் நினைக்கும் சாதிய அமைப்பின் மூலமாக, துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்துடன் (ஸஃபாயி கரம்சாரி அந்தோலன் - SKA) இணைந்து பணியாற்றி, இந்த பிரச்சனை குறித்து நான் புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன். துப்புரவு தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையினூடே, எது அவர்களை இந்த தொழிலில் தொடர்ந்திருக்க நிர்பந்திக்கிறது என்பதை புரிந்துகொள்ள இந்த புத்தகம் முயலுகிறது. ஸபாயி கரம்சாரி அந்தோலனின்(SKA) பிறப்பையும் வளர்ச்சி, அதன் பாதிப்புகளை ஆவணப்படுத்த முயற்சிக்கிறது. ......


.... SKAவுடனான எனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் விளக்குவது பயனுள்ளதாகவும் ஒருவேளை தேவையானதாகவும் இருக்கலாம். எடுப்பு கழிவறை துப்புரவு தொழிலாளர்களுடன் முன்னமே எனக்கு தொடர்பு இருந்தது. தீவிர இடதுசாரி அரசியலில் (CPI(ML)) இருந்து விலகிய பிறகு, 1975இன் இறுதியில் நானும் எனது கணவ்ர் சிரில் ரெட்டியும் காசியாபாத் அருகில், இரண்டு வருடங்களுக்கு மேலாக, பங்கியருடன் (Bhangis - துப்புரவு தொழிலில் நிர்பந்திக்கப் பட்ட ஒரு ஜாதி -ரோவ) வேலை பார்த்து வந்தோம். கட்சிரீதியான கருத்துருவத்திலிருது விலகி, மக்களோடு சேர்ந்து, அவர்களால் உணரப்பெறும் தேவைகளின் அடைப்படையில், வேலை செய்யவேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம். பங்கியருடன் ஏன் வேலை செய்ய நேர்ந்தது என்பது தெரியவில்லை என்றாலும், அவர்களை சென்று பார்த்து, கல்விபெற்ற தென்னிந்திய தம்பதியரான நாங்கள் அவர்களுக்கு என்ன செய்ய இயலும் என்று கேட்டோம். அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் வழி நடத்தும் படியும், ஆண்களுக்கு ஆங்கிலமும், பெண்களுக்கு தையலும் சொல்லி தரும்படி கேட்டனர். ஒரு அறையை எடுத்துகொண்டு வேலையை தொடங்கினோம். தினமும் பெண்கள் தலைச்சுமையாக மலத்தை சுமந்து, மதியம் திரும்பி வருவதையும், தங்கள் காலனி முன்னிருந்த வெற்று நிலத்தில் அதை கொட்டுவதையும் கவனித்திருந்தேன். ஆண்கள் ரயில்வேயிலும் மற்ற நிறுவனங்களிலும், அதே வேலையை செய்து வந்தனர். அவர்களின் வீட்டில் நான் உண்ண நேர்ந்த (வெற்று நிலத்தில் கொட்டப்படும் மலத்தை உண்ணும்) பன்றி மாமிசத்தின் மூலம் இலைபுழு என்னிடம் வந்து சேருமோ என்பதை தவிர, அவர்களின் வேலையையும் அதன் அவலநிலை பற்றியும், நான் வேறு எதையும் எண்ணவில்லை என்பதை இப்போது எழுத வெட்கமாய் இருக்கிறது. வழக்கமான பாணியில் அவர்களின் குறைந்த கூலி பற்றி கவலைபட்டேனே ஒழிய, அந்த வேலையின் அவலத்தன்மை பற்றி நினைத்து பார்க்கவில்லை.

அவர்களுக்கு படிக்கவும் எழுதவும் உதவக்கூடிய, ஒரு இந்தி தொடக்க நிலை பாடததை தயாரித்ததை நினைத்துப் பார்கிறேன். அந்த தொடக்க நிலைபாடம் ஒரு துப்புரவு தொழிலாளியின் கதையை அடிப்படையாக கொண்டிருந்தது. ஒவ்வொரு பாடத்திலும் அந்த பெண்ணின் படங்களையும், அவள் வேலை, வேலை செய்யும் இடத்தையும் வரைந்திருந்தேன். அவர்களுடன் திருமணங்களுக்கு, உறவினர்களின் வீட்டிற்கு, சினிமாக்களுக்கு சென்று, அதே வேலையை செய்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களை சந்தித்தேன். இந்த எல்லா காலங்களிலும், இவர்கள் ஏன் இந்த வேலையை செய்துகொண்டிருக்க வேண்டும் என்ற சிந்தனையின், சிறிய பிரதிபலிப்பு கூட என்னிடம் ஏற்படவில்லை. புத்தகம் பதிப்பிப்பதில் நிலைகொண்டபின், 1984-91 இடையில், தலித்களுடன் களப்பணி ஆற்றுவதில் திரும்பி, தலித் மகாசபாவின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்றேன். இவற்றை எல்லாம் மீறி, சஃபாயி கரம்சாரி அந்தோலனை பற்றி நான் கேள்விப்படிருக்கவில்லை என்றால், ஏன் நம் மக்களில் சிலர் மலம் அள்ள நேர்கிறது, மற்றவர்கள் அது குறித்து ஏன் எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற பிரச்சனைக்கு என் கண்கள் திறந்திருக்காது என்பதை ஒப்புகொள்ள எனக்கு நடுங்குகிறது. ....

..... இது ஒரு தனிப்பட்ட தலைகுனிவிற்கான விஷயமான எனக்கு இருக்கிறது. இந்த அவலம் குறித்து 'தெரியாமல்' இருக்கும் ஒரே காரணத்தினால், துப்புரவு தொழிலாளர்களை மலத்தை சுத்தம் செய்ய வைப்பதற்கு நானும் பொறுப்பாகி போவதால், எல்லா ஜாதி இந்துக்களை போல நானும் சலுகைகளை அனுபவித்து வருவதை நான் உணர்ந்தேன். அதற்கு பிறகு (SKAவில் இருக்கும் யாரும் அவர்களின் களப்பணி இயல்பு காரணமாய் இதை செய்யும் வாய்ப்பு குறைவாக இருப்பதால்) இந்த புத்தகத்தை செயல்படுத்த தீர்மானித்தேன்.

Post a Comment

---------------------------------------

Thursday, March 16, 2006

சரியான சுட்டி.

சென்ற பதிவு இரண்டு முறை வந்து, அதில் ஒன்றை நீக்கிய குழப்பத்தில், தமிழ் மணத்தில் வரும் சுட்டி வேலை செய்யவில்லை. பதிவிற்கான சரியான சுட்டி இது.

Post a Comment

---------------------------------------
நாறுவது மனம்!

தங்கமணியின் 'கையால் மலமள்ளும் இந்திய மக்கள்' என்ற பதிவை பார்க்க நேர்ந்த சமயத்தில், நிதானமாய் படிக்கும் வகையில்லாததால், பதிவின் தொடக்கத்தில் இருந்த சுட்டி மூலம், தலித்முரசில் வெளிவந்த கட்டுரையை மட்டும் படித்துவிட்டு நகர்ந்துவிட்டேன். அதனால் அவர் இரண்டாவதாக சுட்டி அளித்த பெசவாடா வில்சனின் கட்டுரை, ஏற்கனவே (புலேந்திரனால்) மொழிபெயர்க்கப் பட்டு, கீற்றில் வெளிவந்திருப்பதை அறிந்திருக்காமல், அதே கட்டுரையை நானும் மொழிபெயர்க்க தொடங்கி, பாதி பெயர்த்தும் விட்டேன். அதனால் பெரிய பாதகமில்லை என்பதால் எனது (பாதி)மொழிபெயர்ப்புடன், மீதியை தலித்முரசிலிருந்து சேர்த்து இங்கே இடுகிறேன். வில்சனின் கட்டுரை பலர் ஒழுங்காய் படித்தார்களா என்ற மிகப்பெரிய சந்தேகம் இருப்பதாலும்.

வெங்கட்டின் பதிவு, அதில் தொடர்ந்த மறுமொழிகளை பார்தால், வில்சனின் கட்டுரை பெரிதாய் படிக்கப் பட்டதாக தெரியவில்லை. படித்திருந்தார்களெனில் இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ். வில்சன் தனது கட்டுரையில், அரசாங்கத்தின், 'அக்கறையின்மை என்ற வார்த்தையை தாண்டிய தொரு, அலட்சியம்' பற்றி விளக்குகிறார். மேலும் சாதிய மேலான்மை என்பதில் (முற்றிலும் தகர்க்காவிட்டாலும்) கைவைக்காமல், இதில் எல்லாமே வெட்டி பேச்சாகவே இருக்கும் என்பதை ( கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இந்த அவலத்தை ஒழிக்கும் ஒரே பணியில் மட்டும், தன் வாழ்க்கையை அர்பணித்துள்ள வில்சன்) தனது அனுபவங்களின் அடிப்படையிலான தெளிவின் மூலம் உணர்த்துகிறார். "சமூக ஒதுக்குதலையும், பொருளாதார சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டு கட்டப்பெற்ற நமது சாதிய உளவியலே, இந்த அவலத்தை ஒழிப்பதில் தடையாக இருக்கிறதே ஒழிய, தொழில்நுட்பக் குறைவோ, நிதிநிலை பற்றாக்குறையோ, ஒரு அங்கீகரிக்கப் பட்ட சட்டகம் ஒன்று இருப்பதோ இல்லாதிருப்பதோ அல்ல பிரச்சனை." என்றும் சொல்கிறார். ஆதலால் இது வெங்கட் முன்வைத்துள்ளது போன்றும், படித்த உடனே அதை ஜெயஸ்ரீ வியந்தோதுவது போலவும் அத்தனை எளிதான விஷயமில்லை.

வெங்கட் பதிவில் ஜோசஃப் அவர்கள் எழுதிய பின்னூட்டம் இன்னும் விநோதமானது. (அந்த பின்னூட்டங்களுக்கு உள்நோக்கம் எதையும் ஆராயாமல், ரொம்ப நல்லவிதமாய் இப்படி விநோதமானது என்று மட்டும் சொல்கிறேன்.) முதலில் இந்த பழக்கங்கள் இன்று (ஓரிரண்டு இடங்களை தவிர) கிடையாது, மலையேறிவிட்டது என்பது உண்மையல்ல. வில்சன் தனது (2005இல் எழுதப்பட்ட) கட்டுரையில் 13லட்சம் manual sacavengers இந்தியாவில் இருப்பதாக சொல்கிறார். (அது தேவையில்லை, உஷா குறிப்பிட்டமாதிரி, சென்னை நகரத்து சாலைகளிலிலேயே மிக எதேச்சையாக, ஆனால் அடிக்கடி, நமக்கு பார்க்கக் கிடைக்கும், பாதாள சாக்கடையிலிருந்து கோவணத்துடன் ஒரு மனிதன் நனைந்தபடி வெளிவரும் காட்சியும் பெருமைக்குரியது அல்ல.) அராசாங்கத்தின் கணக்கே 6.75 லட்சம் என்கிறது. தமிழக நிலைமை சற்று மேலானது என்றாலும், 1998இல் கூட பெருமைக்குரியதாக இல்லை என்று, அப்போது இருந்த தொடர்பில் எனக்கு தெரியும். (ஆனால் இப்போதய புள்ளி விவரம் தெரியவில்லை. ) ஆந்திராவில் ஒன்றரை லட்சம் துப்புரவு பணியாளர்கள் இருப்பதாக வில்சனின் கட்டுரை அறியத் தருகிறது.

ஜோசஃப் சார் அடுத்து முன்வைக்கும் சிந்தனைகள் ('லாட்டரல் திங்கிங்' செய்பவர்களுக்கு) இன்னும் சுவாரசியமானது. உடல் ஊனமுற்றவர்களை differently abled என்று சொல்வதை போல் (அவர்களின் குறைபாடுகளை குறிப்பிட்டு, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தாதது போல்), நாமும் இது போன்ற விஷயங்களை பற்றி எழுதக் கூடாது என்கிறார். "இதுபோன்ற முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் என தங்களைக் கூறிக்கொண்டு மறைந்துக்கொண்டிருக்கும் பழக்கங்களைப் பற்றி இனியும் எழுதி அதில் ஈடுபட்டிருப்பவரை ஏதோ தீண்டப்படாதவர்களென சமுதாயம் கருதி ஒதுக்குவதாக ஒரு பிரம்மையை, பிம்பத்தை ஏற்படுத்தாதீர்கள், ப்ளீஸ்.." என்கிறார்.

முதலில் யாரும் துப்புரவு தொழிலாளர்களை தாழ்வாக நினைக்கவில்லை என்று சொல்வது பொய் அல்லது அறியாமை அல்லது இரண்டும் கலந்தது மட்டுமே. ஒரே ஒரு நடைமுறை சார்ந்த உதாரணமாய், தமிழகத்தில் 'இரட்டை தம்ளர்' வழக்கம் பற்றிய புள்ளிவிவரத்தை அறிந்தாலே இது எளிதில் புலப்படும். அதைவிட "நீங்கள் இருப்பதாக கூறும் பழக்கங்களை எங்கோ ஒரிரண்டு இடங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தங்களை எந்தவிதத்திலும் யாரும் இழிவுபடுத்தியதாக என்னிடம் முறையிட்டதில்லை. " என்று அவர் சொல்வது, ஜாலியாக எடுத்துகொண்டு சிரித்து விட்டு போகக் கூடிய விஷயமில்லை. பல இடங்களில் மாறி மாறி பலரால் வேவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் சாதிய உளவியல் சார்ந்த தருக்கம் இது. ஒரு தலித் அல்லாத தன்னிடம் முறையிடாததால், ஒரு தலித் மனதினுள்ளும் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருப்பார் என்ற பிரகாசமான தருக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு வேளை ஒரு தலித் தன் இழிநிலை பற்றிய பிரஞ்ஞையை கொண்டிருக்காமல் இருந்தால், அதுவும் இந்த சாதிய மேலான்மை சமூகம் உருவாக்கிய உளவியல் மட்டுமே. தன் படிநிலையை தானே ஒப்புகொள்ளவும், அதன் இழிவு குறித்த சுய பிரஞ்ஞை இல்லாததும், சாதிய சமூகம் திட்டமிட்டு உருவாக்கிய ஒரு உளவியல் மட்டுமே.

அவருடய ஒப்பிடுதலின் பொருத்தப்பாடு பற்றி, (வெங்கட் அந்த ஒப்பிடுதலை பொருத்தமானது என்று ஏற்றுகொண்டே பதிலளித்ததாக தெரிகிறது) . உடல் ஊனம் என்பது ஒரு நபருக்கு இயற்கையாகவோ, விபத்தின் காரணமாகவோ ஏற்படும் ஒரு 'குறைபாடு'. அதற்கான காரணம் அவராகவோ, அல்லது இயற்கையாகவோ அல்லது விபத்தாகவோ இருக்கலாம். சாதிய அடிப்படையில் கட்டாயப்படுத்தி பணிக்கப் படும் துப்புரவு தொழில் என்பது, காலகாலமாய் ஒரு குறிப்பிட்ட மக்களை தனிமைப்படுத்தி, அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை. அவர்களை வேறு வேலைகளுக்கு(பல உளவியல் சமூக முட்டுகட்டை காரணிகளை கொண்டு) அனுமதிக்காத வன்முறை. உதாரணமாய் ஒரு துப்புரவு தொழிலாளியை அரசு 'விடுவித்தாலும்' சலுகை அளித்தாலும், சமூகத்தில் அவரோ அவரது வாரிசுகளோ வேறு வேலை பெறுவதில் கணக்கற்ற பிரச்சனைகள் இருக்கும். அவரால் ஒரு டீக்கடை கூட பொதுவில் தொடங்க இயலாது. சாதிய மேலாண்மையின் அடிப்படையில் கட்டப்பெற்ற சமூக அடுக்கில், ஒரு துப்புரவு தொழிலாளியின் இடமும், ஒரு ஊனமுற்றவனின் நடைமுறை சங்கடங்களும் எந்த விதத்திலும் ஒப்பிடக்கூடியது அல்ல. ஏதோ ஒரு காரணத்தால் ஃபுட் பாய்சனாகி வயிற்றில் அவதிப்படுவதற்கும், வாயில் மலம் திணிக்கப் படுவதற்குமான வித்தியாசங்களை போன்றது.

அடுத்து ஒரு ஊனமுற்றவர் தன் 'குறையை' மீறி ஒரு வேலையை செய்வது உற்சாகத்திற்கும் பெருமைக்கும் உரியது. ஒரு தலித் தனது வேலையை செய்வது, அதுவும் சமூகத்தால் நிர்பந்திக்கப் பட்டு செய்வது, எந்த விதத்திலும் உற்சாகத்திற்கும் பெருமைக்கும் உரியது அல்ல. (ஓவ்வொரு விவாதக்களத்திலும் அம்பிக்களால் முன்வைக்கப்படும் ஒரு வாதம் , 'சூத்திரன்' என்பது கேவலத்துக்கு உரியது அல்ல என்று சொல்வதைப் போன்றது இது. விவேகாநந்தர் தொடங்கி சோ வரை(பார்க்க: வெறுக்கத்தக்கதா பிராமணியம்) இடையில், பல்லாயிரக்கணக்கான பார்பன கொழுந்துக்களால் இந்த வாதம் முன்வைக்கப் பட்டுள்ளது.)

ஒரு ஊனமுற்றவரின் குறையை நாம் கண்டுகொள்ளாதது, அதில் தாழ்வு எதுவும் இல்லை என்று கருதுவது, நமது கண்ணியம், முதிர்ச்சி ஆகியவற்றின் வெளிபாடு மட்டுமில்லாமல், ஊனமுற்றவர் உற்சாகத்துடன் தன் பணியில் தொடர்வதற்கு உதவுவதாகவும் இருக்கும். தலித் ஒருவரின் சமூக நிலை பற்றி நாம் மௌனமாய் இருப்பது, நம் இருப்பையும், சமூக அடுக்கில் நம் நிலையையும் பாதுகாக்கும் மொள்ளமாரித்தனமாக இருக்கலாம். மட்டுமில்லாமல் அது தலித்தை தன் நிலையின் அவலத்தை கூட உணராமல் இருக்க செய்யும் ஏற்பாடாகவும் இருக்கலாம்.

ஜோசஃப் அவர்கள் தனது கருத்தை நேர்மையாக (அதாவது தான் மனதார நம்புவது அன்றி எந்த சதித் திட்டத்தையும் உள்நோக்கமாய் கொள்ளாமல்) அதை எழுதியிருக்கலாம். அந்த ஒரே காரணத்தால் மட்டும் ஒரு விஷயம் சகித்துக் கொள்ளக் கூடியதாய், எதிர்ப்பதற்கும் கண்டிப்பதற்கும் முகாந்திரமில்லாமல் ஆகிவிடாது. இது அவருக்கு மட்டுமின்றி ஜெயஸ்ரீக்கும் பொருந்தும். இப்படி ஒரு சமூக அவலம் குறித்து எந்த வித பிரஞ்ஞையும் இல்லாமல், தன் வாழ்வு, தன் அனுபவம், தன் நலம், தனக்கு பரம்பரையாய் அளிக்கப் பட்ட சட்டகத்திற்கு உட்பட்ட தர்க்கம், இதன் அடிப்படைகளை தாண்டி, கிடைக்கும் துளையினூடே கூட மற்றதை எட்டி பார்க்கும் அறிகுறி கூட இல்லாமல், பலர் இயங்கும் சூழலில், கொஞ்சமாவது அவர்களின், தங்களுக்கு தாங்களே சொல்லிகொள்ளும் மனச்சாமாதானங்களையும், தங்கள் மன அரிப்பை சொரிந்துகொள்ள செய்யும் வாதங்களையும் (என்னையும் சேர்த்து) உலுக்கும் நோக்கில், கீதா ராமசாமியின் புத்தகத்தில் பல பகுதிகளை மொழி பெயர்த்து இங்கே அளிக்கவிருக்கிறேன். அதன் இடையே வெங்கட் தளத்தில் இடப்பட்ட மற்ற கருத்துக்கள் பற்றியும் வேறு தொடர்புடைய விசயங்கள் பற்றியும் எழுத விழைகிறேன். தனிப்பட்ட முறையில் சிலரை தொடர்புகொள்ளவும் முயற்சிக்கிறேன்.

புத்தகத்தில் 'Bezwada Wilson: Shepherd of the manual Scavengers' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையின் (தலித் முரசில் வெளிவந்த) மொழியாக்கத்தை படிக்க.




'இந்தியா நாற்றமடிக்கிறது' புத்தகத்தின் முன்னுரை.

--- பெசவாடா வில்சன்.

கைகளால் மலம் அள்ளும் துப்புரவு தொழில் என்பது சாதிய அமைப்பின் அஸ்திவாரத்தின் மீதே நிலைகொண்டிருக்கிறது. தீட்டு, சுத்தம், மாசு, தர்மம், கர்மம் என்று சாதிய அமைப்பு சார்ந்து உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளின் கேவலமான வெளிபாடாகவே துப்புரவு தொழில் விளங்குகிறது. இதை சொன்னால் ஜாதி இந்துக்கள் கருத்து வேறுபடலாம்; கைகளால் மலம் அள்ளும் துப்புரவு தொழில் வழக்கம் என்பது சாதிய அமைப்பின் ஒரு விலகலாகவும், சரி செய்யப்படவேண்டிய அதன் பிரச்சனைகளில் ஒன்று மட்டும் என்பதாகவும் வாதிடலாம். ஆனால் சாதிய மேலாண்மையை தகர்காமல் துப்புரவு தொழில் என்பதை ஒழிக்க இயலாது என்ற தெளிவிற்கு நான் வந்துவிட்டேன். சாதி இந்துக்கள் அதை செய்வதற்கு பயப்படுகிறார்கள். நிஜாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் ஒரு எடுப்பு கக்கூஸ் இருப்பதையும், ஸஃபை கரம்சாரி அந்தோலனால் ஒரு குறியீடாக கூட அது இடிக்கபடுவதை தடுக்கும் எழுத்து மூலமான அரசாணையை வேறு எப்படி புரிந்து கொள்ள முடியும்? இது நமது பழங்காலத்தின் வலி மிகுந்த அடையாளமாக மட்டுமில்லாமல், நிகழ்காலத்தினுடையதாகவும் இருக்கிறது. வருங்காலமாவது இந்த அவலத்தை ஒரு பரம்பரை பண்பாக்கி கொள்ளாமல் இருக்கட்டும்.

1993இல் இந்திய அரசாங்கம் 'எடுப்பு கழிப்பறைகள், கைகளால் மலம் அள்ளுவோர்கள் பணி நியமனம் தடுப்பு சட்டத்தை' பிறப்பித்தது. ஆனாலும் இன்று வரைக்கும் 13 லட்சம் தலித் சமூகத்தை சேர்ந்த மக்கள் - தனிப்பட்ட வீடுகளிலும், நகராட்சியால் நிர்வகிக்கப்படும் பொது கழிப்பிடங்களிலும், ரயில்வே இராணுவம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் - நாடெங்கிலும் கைகளால் மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களாக பணிக்கப் படுகிறார்கள். ( அடிக்குறிப்பு: இந்திய அரசாங்கத்தின் Ministry of Social justice and Empowermentஇன் 2002-03இன் அதிகாரபூர்வமான கணக்கு 6.76லட்சம் என்கிறது.) ஆந்திராவில் 8330 துப்புரவு தொழிலாளர்கள் பொது கழிப்பறைகளிலும், ஒன்றரை லட்சம் பேர்கள் தனிநபர் எடுப்பு கக்கூஸ்களிலும் பணிக்கப் பட்டுள்ளனர்.

நமது நாட்டின் நிலப்பரப்பளவையும் வளத்தையும் பார்கும்போது, இந்த வழக்கத்தை ஒழிப்பதும், ஸஃபை கரம்சாரிகளுக்கு மறுவாழ்வளிப்பதும் சாத்தியமே இல்லாத காரியமல்ல. இந்த பிரச்சனையின் பல்வேறு கோணங்களை கண்டறியும் பொருட்டு, வேறு வேறு குழுக்களிலும், கமிசன்களிலும், செயல்பாடுகளிலும் நமது அரசங்கம் முதலீடு செய்து வருகிறது. ஆரோக்கியதை பற்றியும், சுத்தத்தை பற்றியும் நமது சிவில் சமூகத்திற்கு அறிவு புகட்டும் பொருட்டு நிது ஒதுக்கியும் வருகிறது. ஃப்ளஷ் கக்கூஸ்களை கட்டுவதற்கான சலுகைகளையும் அளித்து வருகிறது. ஆனாலும், கைகளால் மலம் அள்ளும் துப்புரவு தொழிலில் ஒருவரை பணித்ததற்காக, ஒரே ஒரு தனி நபர் மீது கூட இதுவரை வழக்கு தொடுக்கப் படவில்லை. மிகவும் தாமதமாகவே தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு, இவ்வழக்கம் சட்டவிரோதமாக்கப் பட்டு, 12 ஆண்டுகள் கழிந்த பின்னும் சிவில் சமூகத்திற்கு எங்களின் நோக்கங்களின் மீது நம்பிக்கை இல்லை.

அரசு தான் தொடங்கிய நடவடிக்கைகளில், அக்கறையின்மை என்பதைவிட அதிகமான அலட்சியத்துடன் இருந்தது. 1993இல் சட்டம் கொண்டவரப்பட்டாலும், 1997 வரை அது இந்திய கெஜட்டில் இடம் பெறவில்லை. எந்த மாநிலமும் அந்த சட்டத்தை 2000 வரை வெளிப்படையாய் அறிவிக்கவில்லை. ரயில்வே அமைச்சகம் இந்த வழக்கத்தை ஒழிக்க வேண்டுமெனில், நிதிநிலமையை கணக்கில் கொள்ளவேண்டும் என்று சொல்வதை நாம் எப்படி புரிந்து கொள்ள முடியும்? நகராட்சிகள் தொடர்ந்து எடுப்பு கக்கூஸ்களை தொடர்ந்து கட்டி வருவதையும், ஸஃபை கரம்சாரிகளை பணியிலமர்த்துவதையும் எப்படி புரிந்துகொள்ள முடியும்? ஒரு நீதிமன்றம் தனது வளாகத்தில் உள்ள எடுப்பு கக்கூஸ்களை, அரசின் சொத்து என்று அறிவித்து, அதை இடிப்பதை தடுக்கும் எழுத்து மூலமான ஆணை பிறப்பிப்பதை எப்படி புரிந்துகொள்ள முடியும்? ஸஃபை கர்மாச்சாரிகள் ஒழுங்கான சம்பளத்தை வாங்கிகொண்டு, அதற்கேற்ப திறம்பட சுத்தமான வேலை செய்யவில்லை என்று இன்னமும் இந்த சமூகத்தில் பலர் அங்கலாய்ப்பதை எப்படி புரிந்து கொள்வது? சமூக ஒதுக்குதலையும், பொருளாதார சுரணடலையும் அடிப்படையாகக் கொண்டு கட்டப்பெற்ற நமது சாதிய உளவியலே, இந்த அவலத்தை ஒழிப்பதில் தடையாக இருக்கிறதே ஒழிய, தொழில்நுட்பக் குறைவோ, நிதிநிலை பற்றாக்குறையோ, ஒரு அங்க்கீகரிக்கப் பட்ட சட்டகம் ஒன்று இருப்பதோ இல்லாதிருப்பதோ அல்ல பிரச்சனை.

இரண்டு தலைமுறையாக கர்நாடக கோலார் தங்கவயலில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களின் மகன் நான். என் மக்களின் அவலநிலையை அறியும் வயதை அடைந்த தருணத்தில், மலம் கொட்டும் குழிக்கு அருகில் புரண்டு, என் இதயத்திலிருந்து கதறி அழுதேன். தாய் தன் குழந்தைகளுக்கு ஆற்றும் சேவையாய், இந்த மலம் அள்ளும் தொழிலை புனிதமானதாய் சொன்ன காந்தியை என்னால் எந்த விதத்திலும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. தினந்தோறும் புழுக்கள் நிரம்பி நெளியும், கொடிய நாற்றமடிக்கும் பீயள்ளுவதில் எப்படி ஒருவர் பெருமை கொள்ள முடியும்? மூச்சு துவாரங்களை தன்னிச்சையாய் அடைத்துக் கொண்டு, கக்கூஸை அடைவதற்கு முன் நெஞ்சில் முடிந்த அளவிற்கு நல்ல காற்றை அடைத்துகொண்டு, ஸஃபை கரம்சாரிகளான நாங்கள், மிக மோசமான மூச்சு மற்றும் தோல் நோய்களுக்கு ஆளாகி அவதிப் படுகிறோம்.(இந்த புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றுள்ள) நாராயணம்மாவைப் போல எங்களில் பலர் எட்டு அல்லது பதினோரு வயதில் இந்த தொழிலில் தள்ளப்பட்டதை பற்றி விவரிப்பார்கள். எவ்வாறு பல நாட்களுக்கு அவர்களால் வாயருகே உணவை கொண்டுசெல்ல இயலாமல் இருந்ததை பற்றியும், அவர்ளின் மூச்சு துவாரங்களில் பீயின் கொடும் நாற்றம் எல்லா காலங்களிலும் வியாபித்திருப்பதையும், அவர்களின் குடல்கள் குமட்டலுடன் புரட்டி கொண்டு வெளியே எதிர்த்து வந்து விடும் உணர்வு பற்றியும் , எவ்வாறு அவர்கள் எல்லா நேரமும் கூனிகுறுகும் அவமானத்தையும், கண்ணியக் குறைவையும் வெளியே துப்பிக் கொண்டிருப்பதையும் விவரிப்பார்கள். இதைவிட சோகமான யதார்தம், பெரும்பான்மையான மலமள்ளும் தொழிலாளிகள் பெண்களாய் இருப்பது.

(இனி தலித் முரசில் வெளிவந்த புலேந்திரனின் மொழிபெயர்ப்பையே இடுகிறேன் - ரோவ.)

கையால் மலமள்ளும் வேலையைச் செய்வதில் எந்தப் பெருமையும் இல்லை. இந்த வழக்கத்திற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்' என்று முழங்கிய பாபாசாகேப் அம்பேத்கரை, நமது தலைவராக கையால் மலமள்ளுவோராகிய நாம் ஏற்றுக் கொள்ளாதது, இன்னொரு வருத்தத்திற்குரிய செய்தியாகும். நம்மிடையே பிரிவினைகளை வகுத்துக் கொண்டு, நம் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆதரவு தெரிவிக்க, பிற தலித் இயக்கங்களை நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண, கடந்த இருபது ஆண்டுகளாக உழைத்து வருகிறவன் என்ற அடிப்படையிலும், கடந்த பத்து ஆண்டுகளாகக் கையால் மலமள்ளுவோர் சங்கங்களை ஒருங்கிணைத்து வருகிறவன் என்ற அடிப்படையிலும் சொல்கிறேன் : நாம், இந்தியக் குடிமைச் சமூகம், இந்த ஜாதிய உளவியலில் இருந்து விடுதலை பெறாதவரை கையால் மலமள்ளுவதை ஒழிக்கவே முடியாது; கையால் மலமள்ளுவோரும் விடுதலை பெறவே முடியாது. இது என் முடிந்த முடிவு.

தலித்துகளும், தலித் அல்லாதவர்களும், ஏன் கையால் மலமள்ளுவோரும்கூட, என்னிடம் ஒரு கேள்வியை எழுப்புகின்றனர் : ""இதற்கு என்ன மாற்று இருக்கிறது? இந்தத் தொழில் இல்லை எனில், அவர்கள் எப்படி வாழ முடியும்?'' நான் உறுதியாகச் சொல்கிறேன். எமது வாழ்வியலைப் பற்றி அக்கறை கொண்டு எழுப்பப்படும் கேள்விகள் அல்ல இவை. ஜாதி உளவியலும் ஜாதிய மதிப்பீடுகளுமே இத்தகைய கேள்விகளை எழுப்புகின்றன.

இந்நாட்டின் குடிமகன் என்ற வகையில், பாரம்பயம் மிக்க செழுமைமிக்க நாகரீகமுகங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்ற வகையில், நான் உங்கள் முன்வைக்கும் கோரிக்கை இதுதான் : இத்தகைய உளவியலில் இருந்து நாம் விடுதலை பெற்றால்தான் நமது சகோதரர்களும் சகோதரிகளும் இயல்பாகவே விடுதலை பெறுவர். இப்பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு, விடுதலைக்கான இப்போராட்டத்தில் எம்முடன் இணைந்து கொள்ள, நாங்கள் இன்னும் அதிகளவு நண்பர்களை வரவேற்கிறோம்.

- 'இந்தியா நாறுகிறது' என்ற நூலுக்கு பெசவாடா வில்சன் எழுதியுள்ள முன்னுரை

Post a Comment

---------------------------------------

Tuesday, March 14, 2006

நாறும் பாரதம்!

'India Stinking' என்பதை 'நாற்றமடிக்கும் இந்தியா' என்றுதான் மொழிபெயர்க்க வேண்டுமெனினும், பாரதம் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கீதா ராமஸ்வாமி எழுதிய 'India Stinking: Manual scavengers in Andhra Paradesh and their work' என்ற புத்தகத்தின் விலை ரூ 100. புத்தகக் கடைகளில் எளிதாய் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. சென்னையில் இருக்கும் யாருக்காவது (ஒன்றுக்கு மேற்பட்டதாயினும்)பிரதி வேண்டுமெனில் என்னை அணுகலாம். தபாலில் அனுப்பும் வேலைகளை (குறைந்த பட்சம் உடனடியாய்) என்னால் செய்யமுடியும் என்று தோன்றவில்லை. இருப்பினும் வேண்டுவோர் தொடர்பு கொண்டால் ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறேன். தன்வீட்டு கக்கூஸை ஹார்பிக் போட்டு கழுவி சாதிய சமுதாயத்தை தகர்த்துவிட்டதாக நினைப்பவர்களுக்கும், அதை வடிவான தர்க்கமாய் முன்வைத்தால் ஆடிபோய் கள்ளருந்திய போதை கண்டு, போதிஞானம் கண்டது போல் பாவனை செய்பவர்களுக்கும் இது உகந்தது அல்ல என்பது ஒரு தாழ்மையான தனிப்பட்ட கருத்து மட்டுமே. மற்றபடி பீயைவிட நாற்றமடிப்பதாக நான் கருதும் கருத்துக்களை சொல்பவர்களுக்கும், பிரதி அனுப்புவதில் மனத்தடை எதுவுமில்லை.

என்னை பொறுத்தவரை வாழ்தலும் இருத்தலுமே இந்த சமுதாயத்தில் மாபெரும் குற்றமாகிறது. எனது நாற்றமற்ற வாழ்க்கை, ஒரு பெரும்திரளான மக்களின் கைகளில் பீயை திணிப்பதன் மூலமே சாத்தியமாகியுள்ளது. ஆனால் அதை மட்டும் சொல்லிகொண்டு இருக்காமல், பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதன் துவக்க புள்ளியாக, இந்த புத்தகம், மற்றும் வெங்கட்டின் பதிவை முன்வைத்து என் கருத்துக்களை விரைவில் பதிகிறேன். இது குறித்த எழுதப்பட்டுள்ளவைகள்.

இந்துவில் வெளிவந்த மதிப்புரை.

அதை முன்வைத்து வெங்கட் எழுதியது.

தொடர்ந்து எழுதியது.

நியூ இண்டியன் எக்ஸ்பிரசில் வந்த மதிப்புரை.

அவுட்லுக்கில் லாகின் பாஸ்வேர்ட் பிரச்சனை இருப்பதால் காஞ்சா இலையா எழுதியதை நேரடியாய் தருகிறேன்.
Soiled Tracks
Brings out the ideological hang-ups that encourage manual scavenging and needs to be read by every civilised citizen of India.

KANCHA ILAIAH


Instead of creating a technology to remove human excreta from houses, the pandits took the easy way out by condemning a particular caste to do the job. Even when the technology was available, our Brahminical bureaucracy was unwilling to abolish manual scavenging. How the combination of caste and urbanisation has contributed to the persistence of the most inhuman of jobs is revealed in this small but significant book.
Gita Ramaswamy’s book evolved out of her work in the campaign to demolish the infamous


dry latrine system that still prevails in Andhra Pradesh, home to over two lakh dry latrines. Despite being banned in ’93, manual scavenging persists even in the 21st century.
The book brings out the ideological hang-ups that encourage manual scavenging. It points out the limits of Communist ideology, so long as it remains caste-blind. It shows how this abominable system was allowed by every successive ruling party because of the Gandhian understanding that the Bhangis were born to do this work—just like a mother cleans her child’s nappies. It cites Ambedkar’s argument that if this work was/is so sacred, why don’t the upper castes take it up? This book needs to be read by every civilised citizen of India.

Post a Comment

---------------------------------------

Monday, March 13, 2006

Sakya Sanga

ட்சுனாமி பேரழிவு நடந்து ஓராண்டுக்கு மேலாகியும், இன்னமும் அதன் பாதிப்புகளில் இருந்து பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கை மீளவில்லை. பாதிக்கப் பட்ட மக்கள், பாதிக்கப் பட்ட இடம் இவற்றுடன் எந்த தொடர்பும் இல்லாமல், காதில் எதேச்சையாக வந்து விழும் சில விஷயங்களே தாங்கவியலாததாக இருக்கிறது. பயணத்தில் வந்து மறையும் இந்த தவிர்க்க முடியாத, காட்சிகளினூடே, ஸாக்ய சங்காவில் பணியாற்றும் (அல்லது நெருங்கிய தொடர்புடைய) ஒருவரின் நட்பு கிடைத்தது.அதன் மூலம் ஸாக்யா சங்கம் குறித்த அறிமுகமும், தொடர்பும், மேல் விவரங்களும் கிடைத்தன. ட்சுனாமியில் எல்லாவற்றையும் இழந்த தலித் குழந்தைகளுக்காக நிறுவப்பட்ட விடுதிகள் பள்ளியை பார்த்துவிட்டு அது தொடர்பான என் அனுபவங்களை இங்கே பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு ஸாக்ய சங்கத்தின் உதவிக்கான வேண்டுகோளை இங்கே தருகிறேன். அதற்கு முன்..

ஸாக்ய சங்கம் புத்தமத சார்புடையது. தலித் மக்களை பூர்வ பவுத்தர்கள் என்று கருதுகிறது. புத்தமதம் உட்பட எந்த மதத்துடனும் என்னை நான் அடையாளம் காணவில்லை, குறிப்பாக புத்தமதம் சார்ந்த சடங்குகளிலும் எனக்கு ஒப்புதல் இல்லை எனினும், இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு மனத்தடை எதுவும் கிடையாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடுதிகள், பல வகைப்பட்ட ட்சுனாமி நிவாரணப் பணிகளால் தீண்டப்படாத தலித் மக்களுக்கானது. இங்கே நீங்கள் அளிக்கும் உதவிகள் தலித் மக்களை, தலித் குழந்தைகளை மட்டுமே சென்றடையும்.

இது குறித்து நேரடியாக என்னை மின்னஞ்சலில் அணுகலாம். உதவிகளை என்னிடமே அல்லது நான் மேலே குறிப்பிட்ட நண்பரிடமும் அளிக்கலாம். அல்லது கீழே தரப்பட்டுள்ள முகவரி மற்றும் இணைய தளத்தை அணுகலாம். நன்றி.


WHAT YOU CAN DO FOR THE CHILDREN?

The 2006 state of the World's Children Report provides an assessment of the world's most vulnerable children, whose rights to a safe and healthy childhood are exceptionally difficult to protect.

People Revival Centre(PRC) is committed for the protection of child rights and well being of the children, especially from Dalit and other deprived communities. PRC has been involved in various social development activities since 1993, for example organising personality development camps for poor children in summer holidays.

PRC has intiated two hostels for Tsunami hit children in July 2005, a boys hostel and girls hostel with a capacity of 31 and 24 children respectivly. Children are provided with free shelter, food clothing and books. Apart from formal education, the children are trained in English language skills, personality development, art, sports, photography and human rights etc.

The hostel envision to providing a good environment for educational developement and growing the children as responsible global citizens based on universal ethics and values.

We encourage contributions of any amount small or large. We also welcome rice and cooking meterials, books and other educational meterials, cloths, toiletries and any other supplies.

You may visit the hostels and celebrate your special days with children. You may come to the hostel as valunteers and support the children by teaching, playing, making friendship and sharing your love.

We extend your hands with deep gratitute, inviting your love and compassion to support the noble cause of helping the children.

Sponsorship for a child:

Monthly Rs 1250
Quaterly: Rs 3750
Half Yearly : Rs 7500
Annual : Rs 15000


You may send the Demand Draft/Cheque in favour of 'Sakya Sangha' payable at Chennai.

May all beings be happy!

Sakya vihar
A home for Tsunami hit children


Sakya Sangha
People Revival Centre(PRC)
Plot No: 59, Door No: 12/95, Subramani Nagar,
Manali New town, Vichoor, Chennai-600 103.
Tel +91 44 25930383
Cell: 09841686892 & 09841255342

Branch office:
Flat No. 360, DDA SFS Flats, Pocket -I,
Sector -9, Dawaraka, New Delhi-110 075.
sakyagroup@yahoo.com www.sakyasangha.org

(ஒரு துண்டு விளம்பரம்/விண்ணப்பதிலிருந்து அப்படியே தட்டச்சிட்டிருக்கிறேன்.)

Post a Comment

---------------------------------------
Site Meter