| ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்...! | ||
|
நமக்கு தொழில் முடிந்தவரை கலகம். கலகிய பின் எண்ணுதலும், பரிசீலித்தலும். அதற்கு பின்னும் சூழல் சாதகமாயிருந்தால் சில நல்லிணக்க முயற்சிகளை அவ்யப்போதாவது முன் வைப்பதுவும். Friday, November 06, 2009மறதி.கார்களுக்கிடையே கடந்து போனவனுக்கு கார்களுக்கிடையே கடக்கும் கர்வம். கார்களுக்கிடையே ஓடிய நாய்க்கு கார்களுக்கிடையே ஓடும் பீதி. கார்களுக்கிடையே பறந்த தட்டானுக்கு கார்களை பற்றிய பிரஞ்ஞையில்லை. தட்டான் என்ற தன்னிலை, பறப்பதன் அற்புதம், turbulenceஇன் மர்மம், காலங்காலமாக கைமாற்றி காத்து செல்லும் ரகசியம் எது குறித்தும் தட்டானுக்கு பிரஞ்ஞையில்லை. turbulenceஐ முழுசாய் விளக்க நூற்றாண்டாய் தூக்கம் கெட்டவனுக்கு தட்டானைப் போல பறக்க வைக்க தெரியவில்லை. கனவில் தட்டானாய் மாற தெரியாத எனக்கு கார்களுக்கிடையே கடந்த போனவனின் கர்வம் மறக்கவில்லை Sunday, April 26, 2009திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.திமுக-காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் தோற்கும் என்றுதான் தோன்றுகிறது என்றாலும், 40திலும் படுதோல்வி அடைய வேண்டும் என்ற அளவில் ஈழப்பிரச்சனை சார்ந்த கரிசனம் கொண்ட பலரும் ஆத்திரமாக இருக்கிறார்கள். இருந்தாலும் ஜெயலலிதாவை ஆதரிக்க அவர்களில் பலருக்கு இன்னும் மனம் வரவில்லை; பலர் மொட்டையாக திமுக- காங்கிரஸ் தோற்கவேண்டும் என்றும், சிலர் 49ஓ எதிர்ப்பு ஒட்டு போடலாம் என்றும் கூறுகிறார்கள். எனக்கும் இடையில் -எவ்வளவு கேவலமாக இருந்தாலும்- விஜயகாந்தை முன்மொழிய வேண்டும் என்று கூட தோன்றியது. இவை அனைத்தும் வேலைக்காவாதது என்று இப்போது தெளிவாக தோன்றுகிறது. திமுக-காங்கிரஸ் தோற்க வேண்டும் என்றால் அதற்கான ஒரே வழி அதிமுக கூட்டணியை ஆதரிப்பது. தேர்தல் ஜனநாயகம் நமக்கு அளிக்கும் ஒரே வாய்ப்பு இதுதான். பிரச்சனை என்னவென்றால் தர்க்க பூர்வமாக சிந்தித்தால் இப்போதும் ஜெயலலிதாவே பெரிய எதிரியாக தோன்றும். அது உண்மையாகவே கூட இருந்தாலும், தேர்தல் ஜனநாயகம் என்பது நமக்கு அளிக்கும் குறிப்பிட்ட உரிமை மற்றும் வாய்ப்பு குறித்த தெளிவில்லாததால் இந்த குழப்பம் என்று நினைக்கிறேன். தேர்தலில் வாக்கு மூலமாக நாம் பிரதிநிதிக்கும் கருத்து என்பது நம் முன்னிருக்கும் சாய்ஸ்களில் யார் பரவாயில்லாதவர் என்று நம் அரசியல்/ சமூக மற்றும் சுயநல பார்வையின் மூலம் முடிவுக்கு வந்து தெரிவிப்பது அல்ல; அப்படி முடிவெடுத்தால் ஒரே ஒரு முடிவைத்தான் காலாகாலத்துக்கும் நாம் எடுக்க முடியும்; இந்த பலவீனத்தை வைத்தே கருணாநிதி தன் அரசியலை உயிருடன் வைத்திருக்கிறார். அப்போதய நமது கோபத்தை, அதிருப்தியை தெரிவிப்பது, குறிப்பாக அண்மைய கோபத்தில் தண்டிப்பதுதான் தேர்தல் மூலம் முன்வைப்பது; அந்த வகையில் ஜெயலலிதா எவ்வளவு மோசமாக இருந்தாலும், திமுகவை தோற்கடிக்க நாம் அதிமுக கூட்டணியைத்தான் முழுவதுமாய் ஆதரிக்க வேண்டும். ஜெயலலிதா தான் ̀ஈழம் பெற்று தெருவேன்' என்பது வெத்து சவடால் நாடகம் என்றாலும், அந்த சவடாலுக்காகவாவது நாம் ஜெயலலிதாவை ஆதரிப்பதுதுதான் தேர்தல் சார்ந்த அரசிலாக இருக்கும். ஈழப்பிரச்சனை மட்டுமில்லாது, ஊழலையும், ஊழல் சார்ந்த மிரட்டலையும் மட்டும் சார்ந்து -தங்கள் பகையை மறந்து -கூட்டு கொள்ளையடிக்க சேர்ந்துள்ள கருணாநிதியின் குடும்ப கொள்ளை தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக விழுங்குவதை, தார்மீகம் என்று எதுவுமே இல்லாத நிலைக்கு இட்டு செல்வதை தடுக்கவும் திமுகவை தோற்கடிக்க வேண்டும். அதற்கு அதிமுகவை வெற்றி பெற வைப்பதை தவிர வேறு சாத்தியம் இல்லை. . கவலையே வேண்டாம், இதன் விளைவாக இந்த ஆட்சியே கவிழும்! அந்த தேர்தலில் அன்றய சூழலுக்கு ஏற்றாற் போல யோசிக்க வேண்டியதுதான்! Sunday, October 26, 2008தீபாவளி.(உளரல்.காமில் எழுதத் துவங்கியது பெரிதாகி விட்டதால் இங்கேயே இடுகிறேன்). தேர்தல் அரசியல் தலைவர்களில், கலைஞர் மட்டும் இன்னும் கொள்கை பிடிப்பாய் தீபாவளி வாழ்த்து தெரிவிக்காமலிருக்க, கலைஞர் டீவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ̀சன்'னுடன் போட்டியிடும் காலத்தின் கட்டாயத்தில், தீபாவளி பற்றிய சில கருத்துக்கள்; தீபாவளி பற்றி ஏதோ வகையில் எதிரெண்ணம் கொண்டவர்களை முன்வைத்து. கிட்டத்தட்ட 15 வருஷங்கள் தீபவளியை கொண்டாடாமலும், விலகியும், பட்டும் படாமலும், தவிர்த்தும் வந்து, கடந்த மூன்று வருடங்களாய் கொண்டாடுகிறேன்; கொண்டாடுவது என்பது புத்தாடை, வெடிகளுடன், ̀சகலை' வீட்டில் கொண்டாட்டங்களில் பங்கேற்பது. மகன் பிறந்த பிறகு தீபாவளியை தவிர்ப்பது வன்முறையாகவும், அராஜகமாகவும் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் பெரியார் இயக்க பாதிப்பில், கொள்கை பிடிப்புள்ள ஒரு கூட்டம் தீபாவளி பற்றி எதிர் எண்ணம் கொண்டு, ராவணனை/நரகாசூரனை -என்ற திராவிடன/ ̀சூத்திரனை'- கொன்ற தினமாக கருதி, கொண்டாட்டங்களை தவிர்த்து வருகிறது. இஸ்லாத்திற்கோ, கிரிஸ்தவத்திற்கோ , முடிந்தால் பௌத்தத்திற்கு மாறுவது இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு. (எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று சொல்லவில்லை.) மிக தெளிவாக ̀நாம் வேறு; தீபாவளி நமக்கானதல்ல' என்ற எண்ணம் திடமாக வந்து, கொண்டாடாததன் மனக்குறை இருக்காது; குறிப்பாக குழந்தைகளுக்கு இருக்காது. இந்துவான அடையாளத்தை மாற்று மதத்தில் கரைக்காமல், குழந்தைகளிடம் தீபாவளியை பிடுங்குவது நிரப்ப முடியாத வெற்றிடத்தையும், மனக்குறையையும், தாழ்வு மனப்பான்மையை ஒத்த ஒரு மனநிலையையையுமே ஏற்படுத்தும். மேலும் எந்த ஒரு செயலுக்குமான பொருளை நாம் புதிது புதிதாக கற்பிக்க இயலும்; 80களின் (இளைஞ)தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக முந்தய தினம் முட்ட முட்ட தண்ணியடிப்பதே. மூன்று மதத்தவரும் சம அளவில் வாழும் தூத்துக்குடியில் வாழ்ந்த போது, 80களின் தெரு முக்கு க்ரூப்களில், இந்துக்கள் தீபாவளியன்று (எல்லோரும் கலக்க) பார்ட்டி தருவதும், ரம்ஜானில் இஸ்லாமிய இறுப்பினர்களும், கிரிஸ்மஸ் அன்று கிருஸ்தவ நண்பர்கள் தருவதும் ஒரு பண்பாடாய் உருவானது. அந்த தீபாவளி நீர் கொண்டாட்டத்திற்கு நரகசூரனோ, ராவணனோ, ராமனோ, கிரிஷ்ணனோ அருத்தம் தருவதில்லை. ஆகையால், இப்போதைக்கு தீபாவளியை வேறு தினத்திற்கு, வேறு சந்தர்ப்பத்திற்கு மாற்றவோ, இதே அளவு குதுகலத்தை பதிலீடு செய்யவும் இயலாததால், எல்லாரையும் தீபாவளி கொண்டாட அறைகூவுகிறேன். மீறி கொண்டாடாதவர்களை நான் திட்ட மாட்டேன். கொண்டாடுபவர்களை யாரும் திட்டாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கொண்டாடும் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்! Wednesday, December 06, 2006விடைபெறும் முன் நண்பர்களுக்கு..!இந்த பதிவை எழுதுவதன் தேவை குறித்து ஒரு முடிவுக்கு வர இயலாமல் குழம்பி, இந்த பதிவின் இறுதியில் பேசப்போகும் விஷயம் காரணமாக இதை எழுதுவது என்ற முடிவுக்கு வந்து, என் பதிவுகளை சீரியசாக எடுத்து படித்து வந்த நண்பர்களுக்காக இதை எழுதுகிறேன். இதற்கு முன்பு பலமுறை குறுகிய காலத்திற்கு தமிழ் வலையுலகத்திலிருந்து (படிப்பதிலும், எழுதுவதிலும், பின்னூட்டமிடல் உட்பட்ட எதிர்வினையாற்றுவதிலிருந்து) சில காலத்திற்கு விலகியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அதை முழுவதும் செயல்படுத்த முடியாமலே இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அதற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் இருப்பது மட்டுமில்லாமல், அதை செயல்படுத்தும் முதிர்ச்சியும், சந்தர்ப்ப சூழலும் வந்துவிட்டதாக நினைக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே நாள்தோறும் தமிழ்மண பதிவுகளை படிப்பது என்ற நிலையிலிருந்து விலகி, சில நாட்களுக்கு ஒருமுறை ஒட்டுமொத்தமாக கடந்த நாட்களின் பதிவுகளை (தேர்ந்தெடுத்து) படிப்பது என்ற நிலையிலேயே இருக்கிறேன். அதனால் இந்த முறை இந்த விரதத்தை செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். சில மாதங்களுக்கு - முதலில் நான்கு மாதங்களுக்கு, தேவைப்பட்டால் அதிக மாதங்களுக்கு - வலைப்பதிவிலிருந்து முழுமையாய் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருக்கிறேன். புதிதாக அழுத்தும் கூடுதல் வேலைப்பளு, வேறு சில வேலைகள் மட்டுமின்றி, வலைப்பதிவில் ஏற்பட்டுவிட்ட அலுப்பு, இயங்குவதில் உணரும் அபத்தம் மட்டுமின்றி, வேறு தளங்களில் தீவிரமான ஈடுபாட்டுடன் இயங்குவதற்காக முயலவும் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இதை இங்கே அறிவிக்க வேண்டியது அத்தனை முக்கியமானது அல்லதான். இரண்டு காரணங்களுங்காக மட்டும் ஒரு பதிவின் மூலம் அறிவிக்க வேண்டியுள்ளது. வரும் மாதங்களில் சாக்ய சங்கத்தின் விடுதியில் உள்ள குழந்தைகளுடன், அவர்கள் கல்வி சார்ந்த சில பணிகளை ஆற்ற முடிவு செய்துள்ளேன். இது குறித்து நான் எழுதிய பதிவுகளுக்கு கிடைத்த 'ஆதரவு' மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது என்றாலும், சொந்தமாகி விட்ட கடையை திறந்து வைப்பதில் நஷ்டம் எதுவும் ஏற்படபோவதில்லை என்கிற வகையில், ஊதுவதை ஊதி வைப்போம் என்ற அளவிலேயே எழுதி வருகிறேன். இது குறித்து உதவி செய்யும் நோக்கத்துடன் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் rosavasanth at yahoo dot com என்ற முகவரிக்கு எழுதலாம். பண உதவி மிக முக்கியமானது எனினும், சென்னையில் உள்ள நண்பர்கள் -சிறார்களுக்கு பாடம் சொல்லி தருவது போன்ற - நேரடி பணிகளில் ஈடுபட விரும்பினாலும் என்னை அணுகலாம். சாக்ய சங்கம் குறித்த பதிவுகள் 1. Sakya Sanga 2. சாக்ய சங்கம் -2. 3. சாக்ய சங்கம் -3. 4. சாக்ய சங்கம் -4. இரண்டாவதாக என்னை கடந்த ஒரு வாரத்திற்கு மேல் உறுததிக் கொண்டிருக்கும் முக்கியமான விஷயம் பெரியாரின் 'கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்த அறிக்கை' (1 + 2 இதை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ரவி ஸ்ரீனிவாசிற்கு நன்றி) . இது குறித்து எழுத நினைத்த நீண்ட பதிவை எழுத இயலாமல் செல்லும் காரணத்தாலே இந்த பதிவை எழுத வேண்டியுள்ளது. இன்னமும் பெரியாரின் அறிக்கையை படித்து வந்த அதிர்ச்சியை விழுங்க இயலாமல் இருப்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இதுவரை நான் வாசித்துள்ள பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள், சொற்பொழிவுகளுக்கு மாறாக, மிகவும் பிரச்சனைக்கு உரியதாக இந்த அறிக்கை எனக்கு தென்படுகிறது. இந்த அறிக்கையை பெரியார் வெளியிட்டதன் பிண்ணணி, அவருக்கு கிடைத்த தகவல்கள் என்பது பற்றி எதுவும் எனக்கு தெரியவில்லை. (இந்த அறிக்கையே இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது. இதுவரை வெண்மணி குறித்து பெரியார் அறிக்கை எதுவும் விடவில்லை என்றே நினைத்திருந்தேன்.) இந்த அறிக்கையை மட்டும் ஒரு தனிப்பிரதியாக பார்கும் போது, மிக மோசமான அரசு ஆதரவு நிலைப்பாட்டுடன், எதையும் நியாயப்படுத்த வலிந்து செய்யும் கபடமான தர்க்கத்துடன் எழுதப்பட்டதாகவே எனக்கு தெரிகிறது. பெரியார் குறித்த முந்தய வாசிப்புகள் இல்லாதிருந்தால், பெரியார் இதுவரை ஏற்படுத்தியிருந்த பாதிப்புகள் மீதிருக்கும் மரியாதை இல்லாதிருந்தால், 'அயோக்கியத்தனம்' என்ற பெரியாரிய சொல்லாடலில்தான் இந்த அறிக்கையை அழைக்க வேண்டும். முத்துகுமரனின் பதிவின் பின்னூட்ட விவாதத்தில், பெரியார் மீதான அளவுக்கு அதிகமான நம்பிக்கையில், ரவி ஸ்ரீனிவாஸ் மீது வழக்கமான தாக்குதலை தொடுத்திருந்தேன். இப்போதும் ரவி மீதான (அவரது நோக்கங்கள், புரிதல்கள் மற்றும் அவரது அறிவின்/புரிந்து கொள்ளும் திறனின்/அரசியல் முதிர்ச்சியின் எல்லைகள் மீதான) கருத்துக்களில் மாற்றமில்லை; ஆனால் பெரியார்தான் காலைவாரிவிட்டிருக்கிறார். சமீபத்தில் நட்பு ஏற்பட்ட நண்பர் (மிதக்கும் வெளி) சுகுணா திவாகருடன் அரைமணி நேரத்திற்கு மேலாக இது குறித்து இருவரும் தொலைபேசினோம். இருவருக்கும் இது விழுங்க இயலாததாய், ஒத்த கருத்துடனான விமர்சனத்துடன் இருப்பதாக தோன்றியது. அவர் விரிவாய் தன் கருத்தை எழுதி வருவதாக (வலைப்பதிவில் அல்ல)சொன்னார். அவர் அதை வலைப்பதிவிலும் எழுத வேண்டும் என்பது என் வேண்டுக நமது விமர்சனங்களை 'எதிரிகள்' பயன்படுத்திக் கொள்வார்கள் என்று அஞ்சாமல், அதே நேரம் அவ்வாறு பயன்ப்படுத்திக் கொள்ளப்படும் சாத்தியங்கள் பற்றிய தெளிவுடன், அதையும் குறிப்பிட்டு அது குறித்த ஜாக்கிரதை உணர்வுடன் எல்லாவற்றை பற்றியும் விம்ர்சனமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அவ்வாறாக பெரியாரின் வெண்மணி அறிக்கை பற்றி (என் குழப்பங்களுடன், இது போன்ற வரலாற்று தவறுகள் நிகழ்வது பற்றிய என் புரிதல், பெரியாருக்கான சில பிரச்சனைகள், இதை முன்வைத்து பொதுவாகவே எந்த அரசியல் இயக்க சொல்லாடல்களிலும் வெளிபட வாய்ப்புள்ள வன்முறை இவைகளை முன்வைத்து) நான் எழுத உத்தேசித்திருந்த பதிவு மிக நீளமாக செல்லும் என்று தோன்றுகிறது. இப்போது முடிவு எடுத்துவிட்ட நிலையில் அதை இங்கே இந்த தருணத்தில் எழுத முடியாது என்று நினைக்கிறேன். அதனால் குறைந்த பட்சம் பெரியாரின் அறிக்கை மிக மோசமானது, மிகவும் பிரச்சனைக்குரியது (அதை சிலர் நேர்மறையாக பார்த்துக் அப்பாவியாய் அதை வெளிப்படுத்தும் விபத்துக்கள், ஆபத்துக்கள், பரிதாபங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்தில்) என்ற கருத்தை பதிவு செய்ய இந்த பதிவை எழுத வேண்டியுள்ளது. இது தவிர எழுத துவங்கிய, எழுத நினைத்த பதிவுகளை எழுதப் போவதில்லை. இதுவரை என் பதிவுகளை வாசித்த, பின்னூட்டமிட்ட, விமர்சித்த பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம். Friday, November 10, 2006இளயராஜாவின் அடிமை தன்னிலை!ஞானராஜசேகரன் எடுத்து வரும் பெரியார் படத்திற்கு தன்னால் இசையமைக்க முடியாது என்று இசைஞானி மறுத்துள்ளார். அதற்கு அவர் அளித்த காரணத்தை படித்தால், நியாயம் போலத்தான் தோற்றமளிக்கிறது. பெரியார் மீது தனக்கு பெரிய மரியாதை இருப்பதாகவும், இன்றும் கூட பெரியாரின் பல கருத்துக்கள் பொருத்தமானதாக இருப்பதாகவும் சொல்கிறார்; ஆனால் தனது வாழ்வும் எண்ணங்களும் பெரியாருக்கு முற்றிலும் எதிராக இருப்பதால், தன்னால் பெரியார் படத்துக்கு இசையமைக்க முடியாது, தான் அதற்கு பொருத்தமானவன் இல்லை என்றும் கூறுகிறார். முன்பு இதே போல 'ஹேராம்' படம் கோட்சேயை போற்றுவதாக இருப்பதால், அதற்கு இசையமைக்க முடியாது என்று முதலில் இளயராஜா மறுத்தாராம். அதனால் கமல் எல்.சுப்ரமணியத்தை இசையமைக்க தேர்ந்தெடுத்தாகவும், பின்னர் கமல் திரைக்கதை முழுவதையும் விளக்கிய பின்னர் இளயராஜா மனம் 'தெளிவாகி' (இதற்குள் எல்.சுப்பு வேறு காரணங்களால் விலக) இசையமைக்க ஒப்பு கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது. இதையெல்லாம் பார்த்தால், இசையை தனது வாழ்வாய், ஆன்மீக தேடலாய் கொண்டுள்ள இளயராஜா மீது, எல்லாவற்றிலும் இசைவு கொண்டபின்னரே இசையமைக்கும் அவரது பண்பு மீது மீது சிலருக்கு மரியாதை வரலாம். வேறு சிலர் தான் ஒப்புகொள்ளாத எண்ணவோட்டங்கள் கொண்ட கதையமைப்புக்கும் இசையமைக்க முடியும், அவ்வாறு செய்வதுதான் சவாலானது என்றும் கருதி, இளயராஜா செய்ததை முட்டாள்தனம் என்றும் சொல்லலாம். இப்படி பேச இன்னும் பல இருக்கிறது. ஆனால் தமிழின் 'ஆபாச' பாடல்கள் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றிலும் அவர் மன இசைவுடன் இசையமைத்தாரா என்று கேட்பது நியாயமில்லை என்றே நினைக்கிறேன். அதில் அவருக்கு பிரச்சனை இருந்திருக்கலாம்; இல்லாமலும் இருந்திருக்கலாம்; வணிகக் கட்டாயத்திற்காக செய்திருக்கலாம். ஆனால் அதில் உள்ளது உணர்வு மட்டுமே; இசை எல்லாவகை உணர்வுகளுக்கும் இடமளிக்க வேண்டிய ஒன்று. சரச காட்சிகளும் அதில் அடக்கம். அதனால் 'பெரியாரு'க்கு இசையமைப்பது போன்ற பிரச்சனை அதில் இல்லாமலிருக்கலாம். எனக்கு பிரச்சனை என்னவென்றால், பெரியார் படத்துக்கு இசையமைப்பதில் இசைவு கொள்ள முடியாத இளயராஜாவிற்கு, 'தேவர்மகன்' படத்திற்கு இசையமைக்கும் போது எந்த இடத்திலும் நெருடலே ஏற்படவில்லை என்பதுதான். படத்தில் எத்தனை இடங்களில் தேவர் பெருமைகளை துக்கி பிடிக்கும் காட்சிகளுக்கு பிண்ணணி இசையமைக்க வேண்டியிருந்தது. அதைவிட எல்லாம் 'போற்றி பாடடி பெண்ணே!' என்று தன் சொந்த குரலில் பாடும்போது, இளயராஜாவிற்கு எங்குமே நெருடவில்லை என்பதுதான். வணிக நிர்பந்தம் காரணமாய் மட்டும் இசையமைத்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் கோடிரூபாய் அளித்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க முடியாதவருக்கு, தேவர் காலடிமண்னை (தேவர் சமூகம் ஒரு பெரிய வன்முறையை தலித் சமுதாயம் மீது அவிழ்த்து விட்ட காலகட்டத்தில்) போற்றி பாடும்போது, எந்த நெருடலும் இல்லாமல் இசைவு கொள்ள முடிகிறதென்றால் அதை என்ன சொல்லலாம்?! ஒரு விமர்சனமற்ற முழுமையான அடிமை மனோபாவத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். நமது சாதிய சமூகம் ஏற்படுத்தி இருக்கும் அடிமை தன்னிலைகள் அளவிற்கு, ஆழமான கருத்துலக வன்முறை வேறு இருப்பதாக தெரியவில்லை. அதற்கான முக்கியமான உதாரணம் இளயராஜா. பிகு: இளயராஜவை முன்வைத்து முன்பு தெரிவித்த எந்த கருத்துக்களிலும் இப்போதும் மாற்றமில்லை. Friday, October 27, 2006ஐரோப்பா, நவீனத்துவம், மரண தண்டனை!தமிழ்சசி மரண தண்டனை குறித்து எழுதிய பதிவை தாமதமாகத்தான் நிதானமாக படித்தேன். அதில், அவர் என் பதிவிலிருந்த கருத்தை முன்வைத்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு பதிலாக இப்போதய அளவில், நான் வந்தடைந்திருக்கும் சில கருத்துக்களை முன்வைப்பதும், முடிந்தால் வேறு விஷயங்களை தொட்டுச் செல்வதும் இந்த பதிவின் நோக்கம். மரணதண்டனை குறித்து ஏற்கனவே வலைப்பதிவுகளில் எழுதி குவிக்கப் பட்ட பின்பு, இதை எழுதவும் படிக்கவும் அலுப்பாக இருக்கலாம். ஆனால் அலுப்பாக இருக்கும் ஒரே காரணத்திற்காக, சொல்லவேண்டியவை என நினைக்கும் கருத்துக்களை, முக்கியமான கட்டத்தில் சொல்லாமல் விடலாகுமா என்று தோன்றுவதால்... ! மற்ற பதிவுகளில் இருந்து மேற்கோள் காட்டப்படுபவைகளை //,// குறிகளுக்கு இடையில் தருகிறேன். சசி எழுதியது கீழே. //அதே சமயத்தில் தூக்கு தண்டனை கூடாது என்பவர்களின் வாதங்களும் சரியாக முன்வைக்கப்படுவதில்லை. அரசாங்கத்திற்கு ஒரு உயிரை எடுக்க உரிமையில்லை என்று கூறும் ரோசாவசந்த் ஐரோப்பாவை மனிதகுல நாகரிகத்திற்கு உதாரணமாக எப்படி மேற்க்கோள் காட்டுகிறார் என்பது புரியவில்லை. அமெரிக்கா சதாம் உசேனுக்கு எதிரான தாக்குதல் எனக்கூறி இராக்கில் அப்பாவி மக்கள் பலரை குண்டுவீசி தாக்கியதே அது மனிதநாகரிகத்தின் முதிர்ச்சியான நிலையா ? அமெரிக்காவின் இந்த தாக்குதலை அதன் ஐரோப்பிய நேச நாடுகள் ஆதரித்துக் கொண்டு தானே இருக்கின்றன. எண்ணெய் வளத்திற்க்கு நடக்கும் இந்தச் சண்டையில் மனித நாகரிகம் இன்னும் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பது தான் தெளிவாகிறது. மரண தண்டனையை நீக்கினால் மட்டும் நாகரிக முதிர்ச்சி ஒரு நாட்டிற்கு வந்து விடுமா ? எத்தனையோ அப்பாவிகள் அரசாங்க இயந்திரங்களால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சத்தமில்லாமல் மரணிக்கும் நிலையில், சட்டங்களை நீக்குவதால் மட்டும் நம்மை மனிதகுல நாகரிகத்திற்கு உயர்த்திக் கொள்ள முடியுமா ? அரசாங்கத்தின் சட்டங்களே சில இடங்களில் அமுக்கப்பட்டு இராணுவத்திற்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சட்ட வரையறைகள் மட்டுமே நம்மை எந்தவகையிலும் நாகரீகமான சமூகமாக மாற்றாது.. // முதலில் எனது பதிவு மரண தண்டனை குறித்த எனக்கிருக்கும் கருத்துக்களை எழுதும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் 'பொதுபுத்தி' என்பது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி பேசுவதே முக்கிய நோக்கமாக இருந்தது. தமிழ் வலைப்பதிவுகள் மட்டுமில்லாது இணையத்தில் மற்ற இடங்களில், செய்திதாள்களில் வாசிக்க நேர்ந்த, பொதுப்புத்தி என்று நான் நினைக்கும் ஒன்றை சார்ந்த எதிர்வினைகளினால் தூண்டபெற்று, அவற்றை முன்வைத்து எனது பதிவு எழுதப்பட்டது. 'பொதுப்புத்தி' என்பது குறித்து நான் எழுதிய கருத்துக்களை, என் பதிவிற்கு வந்த எதிர்வினைகளை விட நேர்த்தியாக வேறு வகையில் நிருபிக்க இயலாது; வேறு பிரச்சனையாக இருந்திருந்தால், இவ்வாறு என் கருத்துக்களுக்கு பலம் சேர்த்ததற்கு நன்றி தெரிவித்திருப்பேன். அஃப்சலின் மரண தண்டனை பற்றிய சர்ச்சையை முன்வைத்தே பதிவு எழுதத் தொடங்கியிருந்தாலும், பதிவில் நான் முன்னிலை படுத்திய பிரச்சனை அஃப்சல் தொடர்பானதும் அல்ல; ராஜிவ் கொலை வழக்கில் 26 பேரை ஒட்டு மொத்தமாக தூக்கிலிடும் தீர்ப்பு வெளிவந்த போதும், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் SAR கீலானி அனுபவிக்க நேர்ந்த கொடுமைகளின் போதும், பொதுப்புத்தி எவ்வாறு செயலாற்றியது என்பதையே முக்கிய ஆதாரமாக முன்வைத்திருந்தேன். ஜுர வேகத்தில் வெளிபடும் கூட்டு கூச்சலினிடையில் , அஃப்சல் வழக்கு குறித்த தெளிவின்மையை முன்வைப்பதே எனக்கான அரசியலாகப் படுவதாகவும் சொல்லியிருந்தேன். தங்களின் வசதிக்கும், அறிவிற்கும் தோதான வகையில் அவை வாசிக்கப்பட்டதையும், திரிக்கப்பட்டதையும் குறித்து இங்கே ஆராய்வது எனது தற்போதய வல்லமைகளுக்கு உட்பட்டது அல்ல. ஆனாலும் தூக்கு தண்டனை பற்றிய என் விரிவான கருத்துக்களை சொல்லும் நோக்கத்தில் பதிவை எழுதவில்லை என்பதை சசிக்கான பதிலில் சொல்ல வேண்டியிருக்கிறது. பிரச்சனை குறித்த எனது நிலைபாட்டை மொட்டையாகவேனும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் மட்டும், சுருக்கமாக தூக்குதண்டனை குறித்த என் கருத்தை பதிவில் எழுத வேண்டிவந்தது. அதே நேரம் 'தூக்கு தண்டனை எதிர்ப்பு' என்பதுடன் மட்டும் (மற்ற சந்தர்ப்பங்களில் இல்லாது இந்த பிரச்சனையில் மட்டும்) தொடர்புப் படுத்தி பேசுவது, பிரச்சனையை திசை திருப்புவதாக அமையும் என்று சொல்லி, "ஐரோப்பிய கூட்டமைப்பு போன்ற, மனித நாகரீகத்தின் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்துவிட்ட ஒரு குமுகாயமாக நாம் இல்லாத யதார்த்தத்தை ஒப்புகொண்டே, நாம் இந்த விஷயத்தை அணுக வேண்டியிருக்கிறது." என்று எழுதியிருந்தேன். தமிழ்சசி புரிந்து கொண்டது போல, இப்படிச் சொல்லும்போது ஐரோப்பாவை மனித நாகரீகத்தின் உதாரணமாக கற்பித்து, அந்த கற்பிதத்தை மரண தண்டனைக்கு எதிரான ஆதாரமாக முன்வைக்கவில்லை; மரண தண்டனையை ஒழித்து விட்டதால் மட்டும் ஒரு சமூகம் நாகரீகம் பெற்றுவிட்டதாகவும் சொல்ல வரவில்லை. 'மனித நாகரீகம்' என்பதற்கு மேற்கை, ஐரோப்பாவை ஆதர்ச உதாரணமாக கொள்வது எனக்கு எந்தவிதத்திலும் ஒப்புதலும் உவப்பானதும் அல்ல; குறிப்பாக விளக்க வேண்டுமெனில், 'நவீனமாதல்' என்ற வார்த்தை கொண்டு விளங்கிக் கொள்ளக் கூடிய (மதநீக்கம், அறிவியல், பகுத்தறிவு துணைகொண்டு வந்தடைந்தவை உட்பட்ட), கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றங்களை கூட மனித நாகரீகத்தின் வளர்ச்சியாக என்னால் பார்க்க முடியவில்லை. மனித வறலாற்றிலேயே உச்ச காட்டுமிராண்டித்தனமான (நாகரீகத் தன்மை என்பதாக கருதும் ஒன்றிற்கு எதிரானதாக மட்டும் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறேன்) கூறுகளை கொண்டதாக, சென்ற நூற்றாண்டின் நவீனத்துவத்தின் வறலாறு இருப்பதாகவே நினைக்கிறேன். இத்தனை கோடி ஆண்டுகளாக உயிர்த்து இருக்கும் இந்த பூமியே அழிந்து, மனித இனமே இல்லாமல் போகக் கூடிய நிலை வருமானால், அது நவீனத்துவத்தால் மட்டுமே சாத்தியமாகும்; மத அடிப்படைவாதமோ பழமைவாதமோ கூட அதை செய்யும் அளவிற்கு வல்லமை கொண்டது அல்ல. நடக்கும் நடப்புகளை பார்த்தால் நவீனத்துவம் நம்மை அப்படிபட்ட அழிவுக்காலத்துக்கு இட்டுச் செல்வதாகவே தோன்றுகிறது. அது குறித்து பேசுவது இங்கே நோக்கம் அல்ல. மரண தண்டனையை ஒழிக்க முயல்வது என்பது ஒரு சமூகம் நாகரீகம் அடைவதன் (இதற்கு என்ன பொருள் கற்பித்து கொண்டாலும்) ஆரோக்கிய அறிகுறி; நாகரீக சமுதாயத்தை நோக்கிய பயணத்தில் முக்கியமான ஒரு கட்டம்; அதற்காக அதே அரசு நடத்தும் (அல்லது ஆதரவளிக்கும்) மற்ற சமூகங்கள் மீதான தாக்குதலும், சிறை சார்ந்த சித்ரவதைகளும் நாகரீகமானது என்பதல்ல கருத்து; எல்லா சமூக குற்றங்களையும் ஒழித்துவிட்டு, அல்லது அவைகளுடன் தொடர்புப் படுத்தித்தான் எல்லாவற்றையும் பேசவேண்டும் என்றால் நாம் பேசத் துவங்கவே முடியாது. ஒரு நாட்டின் அரசு, தனது நிறுவனங்களின் விசாரணைகள் ஊடாக, தர்க்கபூர்வமான வாதங்கள் மூலம், சில மனித மனங்கள் கன்வின்ஸ் ஆவதன் அடிப்படையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு, அளிக்கப்படும் மரணதண்டனை என்பதை ஒழிப்பது, மனித நாகரீகத்தின் முக்கியமான ஒரு கட்டம் என்று மிக தெளிவாக எந்த குழப்பமும் இல்லாமல் கருதுகிறேன். வறலாறு முழுக்க மரண தண்டனையின் உக்கிரம், அளிக்கப்படும் அதிகாரம், நிறைவேற்றப் படும் முறை இவைகள் மாறி வந்திருப்பதையும், அதற்கு எதிராக ஒலித்துள்ள குரல்களையும் நோக்கினால் இதை புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அந்த வகையில் ஐரோப்பிய கூட்டமைப்பு மரண தண்டனையை ஒழித்தது, மனித நாகரீகத்தின் முக்கியமான கட்டமாகத்தான் எனக்கு படுகிறது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான முரண்பாட்டை கவனிக்கலாம். மனித குலம் நவீனமடைய அடைய, (சட்டபூர்வமாக, சமூகத்தால் அங்கீகரிக்கப் பட்டு அளிக்கப் படும்) மரண தண்டனையின் எண்ணிக்கை, நிறைவேற்றப் படும் முறையின் கொடூரத்தன்மை ஆகியவை குறைந்து இறங்கு முகமாக இருப்பதையும், அதற்கு நேர்மாறாக சிறை, ராணுவம், போலீஸ் சார்ந்த சித்ரவதைகளின் உக்கிரம் அதிகமாகி, நவீனமாகி, விஞ்ஞானபூர்வமாய் வலிகளை பெருக்கும் விதமாக, அது அடுத்த பரிணாம கட்டத்தை அடைந்திருப்பதையும் காணமுடியும்; இந்த முரண்பாட்டை கணக்கில் கொண்டே நாம் பேசவேண்டும். சசி தனது பதிவின் இறுதிப் பகுதியில், அமேரிக்காவை 'Free Democratic country ' சொல்வதை ஒப்புகொள்வதாகவும், அதே நேரம் அதன் சட்டங்கள் கடுமையாக இருப்பதை பாராட்டுவதாகவும் எழுதியுள்ளது, அதற்கு முந்தய பத்திகளில் ஐரோப்பாவை முன்வைத்து அவர் எழுப்பிய கேள்விகளின் தர்க்கத்திற்கு முரணானதாக இருக்கிறது. நிர்பந்தித்துக் கொண்ட சில கட்டுபாடுகளுக்கு உட்பட்டு, தனி மனித சுதந்திரங்கள் maximise செய்யப்பட்ட ஒரு லிபரல் சமூகம் என்பதாக அமேரிக்க குமுகாயத்தை, கருதினால், எனக்கு எதிர்ப்பு பெரிதாக எதுவும் கிடையாது. அதே சமுதாயத்தை சாத்தியமாக்கி நடைமுறைப்படுத்தும் அரசுதான், உலகில் ஜனநாயகத்துக்கான எழுச்சிகளை நசுக்குவதையும், அவைகளுக்கு எதிராக சதி செய்வதும், ஜனநாயக அரசுகளை கவிழ்ப்பதுமான வேலைகளில், மனித வறலாற்றில் ஒப்பிடக்கூடிய வேறு உதாரணம் இல்லாத தனித்தன்மையுடன் செயலாற்றி வருகிறது. எந்த சுதந்திரம் அமேரிக்க சமுதாயத்திற்கு உயிர்நாடியாக இருக்கிறதோ, அதே சுதந்திரம் மற்ற சமூதாயங்களுக்கு கிடைக்காமலிருக்க, அதே அரசுதான் காரணமாக இருக்கிறது. அதற்காக அமேரிக்கா லிபரல் சமுதாயம் அல்ல என்று வாதிடுவது நியாயமானதாக இருக்காது. ஆகையால் மீண்டும் இப்படி ஒரு சமூகம் தனக்குள்ளே பேணிவரும் விழுமியங்களுக்கும், அதன் அரசு மற்ற சமூகங்களை பாதிப்பதற்கும் உள்ள முரண்பாட்டை மனதில் கொண்டே எல்லா பிரச்சனையையும் அணுக வேண்டியிருக்கிறது. ஏற்கனவே வேறு ஒரு பதிவில் நான் பேசியது போல், பொலிடிகலி கரக்ட்னெஸ் என்பதை பேணுவதிலும், பண்மை தன்மைக்கு முக்கியத்துவம் தருவதிலும், ஐரோப்பிய சமுதாயங்களே இப்போதைக்கான நடைமுறை முன்னுதாரணங்களாக இருக்கிறது. 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில், அரவாணிகள் கேவலமாக சித்தரிக்க பட்டிருப்பதை நம் சூழலில் பேசுவதே இப்போதுதான் நடக்கிறது; அதுவும் பகடி செய்யப் படுவதை கவனிக்க வேண்டும். ஒரு ஐரோப்பிய சமுதாயத்தில் பொதுக்கருத்தே இந்த சித்தரிப்புகளுக்கு எதிரானதாக இருக்கும்; குறைந்த பட்சம் வெளிப்படையான நியாயப்படுத்துதல் எதையும் கேட்க இயலாது. நம் சூழலிலோ, இலக்கியத் தேடல் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கூட, இந்த படத்தின் (அரவாணிகளுக்கு எதிரான, ஒரு பாலின புணர்ச்சியாளர்களுக்கு எதிரான சித்தரிப்பு பற்றிய) பிரச்சனை புரியவேயில்லை; நம் சமூகத்தில், கல்வி பெற்ற மக்கிளிடையே கூட, பொலிடிகலி கரெக்ட்னெஸ் பிரச்சனை குறித்த அடிப்படை பிரஞ்ஞை கூட இல்லை என்பதையே இது காட்டுகிறது. வறலாற்றில் பெருத்த வன்முறைகளை தன் அண்டை நாடுகளின் மீது பெய்த ஜப்பான், பண்மைதன்மை பேணுவதை ஒரு அரசாங்க கொள்கையாக தற்போது கொண்டிருக்கிறது; தன் வறலாற்று குற்றங்களுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கும் உதாரணமாகவும் அது திகழ்கிறது. அமேரிக்காவின் இராக் மீதான ஆக்ரமிப்பிற்கு ஜப்பான் அளிக்கும், விமர்சனமற்ற ஆதரவை காரணம் காட்டி இதை மறுக்க இயலாது. இந்தியா பங்களாதேஷ் மக்களை நடத்தும் விதத்தையும், ஈழத் தமிழ் மக்களை அகதிகளாக நடத்தும் மனித தன்மையற்ற விதத்தையும், ஐரோப்பா அதே மக்களை (சில பிரச்சனைகள், விதிவிலக்குகள் தவிர்த்து), தங்கள் நாட்டு பிரஜைகளாக்கி, சட்டபூர்வமாக சமமாக அங்கீகரிப்பதையும் ஒப்பிட வேண்டும். கடைசியாக ஐரோப்பாவின் பல நாடுகள் (மற்றும் ஐரோப்பா முழுவதும் அதன் மக்கள்) ஈராக் போரை தீவிரமாக எதிர்த்ததையும், பின்னர் அமேரிக்கா நிகழ்த்திக் காட்டிய நிர்பந்தத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆகையால் ஐரோப்பிய குமுகாயத்தின் குறிப்பிட்ட கூறுகளை நாகரீகத்தின் உதாரணங்களாக, குறிப்பிட்ட கட்டத்தை அடைந்ததாக சுட்டும்போது, மற்ற பிரச்சனைகள் இல்லை என்று பொருள் இல்லை; மற்ற பிரச்சனைகளை காரணம் காட்டி அந்த கூறுகளை மறுக்கவும் கூடாது என்று நினைக்கிறேன். ஐரோப்பா பற்றி பேசுவதை இங்கே நிறுத்திக் கொண்டு, மரண தண்டனை குறித்த கருத்துக்களுக்கு வருகிறேன். 'பொதுப்புத்தி' குறித்த பதிவில் சுருக்கமாக மரணதண்டனை குறித்து நான் எழுதியது கீழே. //எனது நிலைபாடு தூக்குதண்டனை என்பதற்கே எதிரானது. அது ஆட்டோ சங்கருக்கும், வீரப்பனுக்கும், சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டவனுக்கும், 24பேரை ஒரே சமயத்தில் கொன்றவனுக்கும் சேர்த்து அது பொதுவானது; 'ஒரு நிரபராதி கொல்லப்பட்டு விடக்கூடாது' என்ற வாதத்தின் அடிப்படையில் வரும் தூக்குதண்டனை எதிர்ப்பு வாதம் அல்ல; எந்த வகை குற்றம் நிறுவப்படுதலுக்கும், ஒரு உயிரை அரசாங்கம் என்ற நிறுவனம், மிகுந்த இயந்திரத்தனமான திட்டமிடுதலுடன் (உதாரணமாய் தூக்கில் இடும்போது மலம் வெளிவந்துவிடாமலிருக்க, அதற்கு முன் சில மணிநேரங்களுக்கு பட்டினிபோடுதல் உட்பட்ட) மிக நிதானமாக செய்யப்படும் அங்கீகரிக்கப் பட்ட கொலையை செய்வது, ஒரு நாகரீக சமுதாயத்தில் நடக்க முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் தூக்கு தண்டனையை எதிர்க்கிறேன். அந்த பார்வையில் கமலின் 'விருமாண்டியை', அவர் பிரசாரித்தது போல், தூக்குதண்டனைக்கு எதிரான ஒரு படமாக என்னால் பார்க்க முடியவில்லை. குற்றம் செய்யாமல் மாட்டிகொண்ட கமலின் நிரபராதி பாத்திரம, தூக்கிலிடப்படுவதை பிரச்சனையாக பார்ப்பது அல்ல, தூக்குதண்டனைக்கு எதிரான பிரச்சாரம்; கமல் தூக்கு தண்டனையை எதிர்த்து படமெடுக்க நினைத்தால், அவர் பசுபதியின் பாத்திரம் தூக்கிலிடப்படுவாதாகவும், அதற்கு எதிராகவும் என்பது மாதிரி கதை நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் பசுபதி கொல்லப்படுவதுதான் சரி என்கிற நியாயத்துடன் அமைந்த திரைக்கதையை, தூக்கு தண்டனைக்கு எதிரானதாக என்னால் பார்க்க முடியவில்லை. (படத்தில் வேறு பல பிரச்சனைகள் உண்டு எனினும் இது முதன்மையானது.)// மரண தண்டனை குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் விரிவானதாக இல்லைதான்; ஆனால் அவை எப்படி சரியானதாக இல்லை என்று சசி சொல்கிறார் என்று சரியாக புரியவில்லை. நீதி மன்றத்தால் அளிக்கப்படும் தீர்ப்பு என்பது சட்டபூர்வமான வாத பிரதிவாதங்கள், 'ஆதாரங்கள்' அடிப்படையில், நீதிபதிகளின் மனம் 'தெளிவாகி' ஒரு முடிவுக்கு வருவதன் மூலம் அளிக்கப்படுகிறது. தர்க்கபூர்வமாய் 'உண்மையை' வந்தடைவது என்பதே, பல துறைகளில் மிகவும் பிரச்சனைக்குரியது என்பது இன்று தெளிவாகிப் போன ஒரு விஷயம். அந்த வகையில், விசாரணை நேர்மையுடனும், திறந்த மனதுடனும் நடத்தப்பட்டாலும் கூட, ஒரு குறைபாடுகள் சாத்தியமுள்ள வழிமுறையில், முழுமையற்ற சட்டகத்தில் வழங்கப்படும் தீர்ப்பு தவறானதாகவும், நியாயமற்றதாகவும் இருக்க சில வாய்ப்புக்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ஒரு முறை தண்டனை நிறைவேற்றப் பட்ட பின்பு, சரி செய்ய இயலாததாக இருக்கும் மரணதண்டனையை, 'ஒரு நிரபராதி தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது' என்று எதிர்ப்பது மிக முக்கியமான வாதம். அடுத்த வாதம் தமிழ்சசி சொல்வது போல, நீதிமன்றம் தண்டனை அளிப்பது என்பது குற்றவாளி திருந்துவதற்காக என்றால், மரண தண்டனை திருந்துவதற்கானது அல்ல என்பது; மரணதண்டனை உள்ளே உறைந்திருப்பது பழிவாங்குதலே அன்றி திருத்தும் நோக்கம் அல்ல என்பது; பிரபு ராஜதுரையும் இதை சொல்கிறார். அஃப்சல் தண்டனை குறித்த தீர்ப்பில், மக்களின் அபிலாஷைகளை திருப்தி செய்யவேண்டியிருப்பதாக ஒரு வாதத்தை அடுக்கும் போது, குற்றத்திற்கான பழிவாங்குதலே அதில் உள்ளடங்கி இருப்பது வெளியாகிவிடுகிறது. சசியும் மற்றவர்களும் முன்வைக்கும் மரணதண்டனைக்கு எதிரான இந்த வாதமும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. இவற்றை ஏற்றுக்கொண்டு, இவைகளை விட முக்கியமானதாக நான் முன்வைக்கும் வாதம், நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் மரணதண்டனை எல்லா வகை உயிர்பறித்தல்களிலேயே - அதாவது கொலைகளிலேயே - மிகவும் கொடூரமானது; அதற்கு அளிக்கப்படும் சட்டபூர்வமான சமூக அங்கீகாரம் நாகரீகத்தை நோக்கிய சிந்தனைகளினால் ஏற்றுக்கொள்ள இயலாதவை; இதற்கான காரணமாக நான் சொல்வது அதில் இருக்கும் இயந்தரத்தனம், நிதானம், மிகவும் பகுத்தறிவு பூர்வமாக தண்டனை அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் முறை, மற்றும் சட்டத்தின் சமூகத்தின் அங்கீகாரத்துடன் அதற்கு பின் வைக்கப்படும் நியாயம்; நண்பர் சுமு சரியாக எடுத்துக் கொண்டது போல, இந்த மரண தண்டனையை எந்த கொடூரமான குற்றத்திற்கும் ஒரு நாகரீக சமுதாயத்தில் அளிக்கக் கூடாது என்பதுதான் எனது வாதம். அப்படியானால் அந்த கொடூரமான குற்றம் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் மரணதண்டனை அளவிற்கு கொடூரமானது இல்லையா என்ற கேள்வி எழலாம்; 'இல்லை' என்பதுதான் எனது பணிவான கருத்து. மனித சமுதாயத்தில் நிகழும் எல்லாவகை குற்றங்களுக்கும் தேவை சார்ந்த, (பழிவாங்கல், துவேஷம் உட்பட்ட) உணர்வு சார்ந்த ஒரு பிண்ணணி இருக்கலாம்; அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவை அனைத்திற்கும் பின்னால், மனித மனத்தோடு புகை போல கலந்திருக்கும் பயித்தியகாரத்தனம் -Madness - இருப்பதை அறியலாம். கோயம்புத்தூரில் ஒரு போலிஸ்காரரை கொன்றவருக்கும், பழிக்கு பழியாக பல இஸ்லாமியர்களை போலிஸுடன் கூட்டு சேர்ந்து தாக்கி கொன்றவர்களுக்கும், அடுத்த கட்டமாக அதவானியை கொல்வதற்கும், அப்பாவிகளை கொல்வதற்கும் குண்டு வைத்தவர்களுக்கும் இந்த madness உண்டு. கோத்ராவில் ரயிலை எரித்தவர்களுக்கும், பின்பு குஜராத் முழுவதும் முஸ்லீம்களை வேட்டையாடிவர்களுக்கும், அக்ஷர்தாமில் துப்பாக்கியால் சுட்டவர்களுக்கும் இந்த மேட்னெஸ் உண்டு; இப்படி எதுவும் இல்லாவிட்டாலும் கூட, மனைவியையோ, கணவனையோ, குழந்தையையோ, பக்கத்து வீட்டுக்காரனையோ கொல்லக்கூடிய பயித்தியக்கார வன்முறை, மனித இனம் எவ்வளவு நாகரீகம் அடைந்தாலும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஒரு வகையில் மனித மிருகங்களுக்கு மட்டுமே இருக்கும், அதன் இயல்புத் தன்மையாகவும் தோற்றமளிக்கும் இந்த பயித்தியகாரத்தனத்தில் வெளிப்படும் வன்முறையை விட, இதற்கு எதிர் பண்புடனிருக்கும் பகுத்தறிவின் விளைவாக வெளிபடும் வன்முறையே மிக கொடூரமானது என்பது நான் வந்து அடைந்திருக்கும் கருத்து. நீதிமன்றத்தால் அளித்து நிறைவேற்றப்படும் மரணதண்டனை முழுக்க பகுத்தறிவு சார்ந்து அளிக்கப்பட்டு, பகுத்தறிவின் நிதானத்துடன் நிறைவேற்றப்படும் தண்டனை ஆகும்; அதை விட கொடூரம் அது முழுக்க ஒரு சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் முழுவதும் திறந்த வெளியில் பகீரங்கமாக நிறைவேற்றப்படுவது. தமிழ்சசி குறிப்பிடுவது போல, 'அரசாங்கத்திற்கு ஒரு உயிரை எடுக்க உரிமை இல்லை' என்று எளிமைப்படுத்தப் பட்டது என் வாதம் அல்ல. அராசாங்கம் எந்த உயிரையும் பறிக்ககூடாது என்று பொதுவாய் சொன்னாலும், ஒரு போரின் நடைமுறைகளின் போதோ, அராசங்க நிறுவனம் தாக்கப்பட்டு அதன் உறுப்பினர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்போதும், எதிலும் சம்பந்தப்படாத பொதுமக்கள் மீது பயங்கரவாதம் தாக்குதல் நடக்கும் போது அதை எதிர்கொள்ளும் நேரடி நடவடிக்கையின் போதும், 'யார் உயிரையும் பறிக்க கூடாது' என்று ஒரு சுயநிபந்தனை வைத்துக் கொண்டு இயங்க முடியாது; எந்த ஒரு நாகரீக சமுதாயத்திற்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கான கட்டாயங்கள் இருக்கும் வரை, இப்படி ஒரு நிபந்தனையால் கையை கட்டிக்கொள்ள முடியாது. நான் அது குறித்து எதுவும் சொல்லவில்லை. ஒரு நாகரீக சமுதாயத்தில், மரண தண்டனை போன்ற, எந்த பயித்தியக்காரத்தனமும் சம்பந்தப்படாமல் பகுத்தறிவு பூர்வமான சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் கொலை நிகழ்த்தப் படக் கூடாது என்பதுதான். எப்போது மரண தண்டனை தீர்ப்பளிக்கப் படுகிறதோ அப்போதே அது நிறைவேற்றப்படத் துவங்குகிறது. அந்த கணத்திலிருந்து தூக்கில் தொங்கி இறக்கும் வரை அந்த தண்டனை அனுபவிக்கப்படுகிறது. அது குறித்த கருணை மனு, அது குறித்த விவாதம், வினாக்கள், சண்டைகள், செய்திகள், அலசல்கள், தெரிவிக்கப் படும் அனுதாபங்கள், எல்லா பக்கமும் உள்ள வாதங்கள் இவை அனைத்திலும் குற்றவாளி தண்டனையை அனுபவிக்கிறார். அவரது தண்டனை மிக தீர்மானமான முறையில் திட்டமிடப்பட்டு, அந்த திட்டங்கள் குற்றவாளிக்கும் அனைவருக்கும் வெளிப்படையாய் அறிவிக்கப்பட்டு, மறைப்பதற்கு எதுவுமில்லாமல் நிறைவேற்றப்படுகிறது. தண்டனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்திற்கு முன்னால், குற்றவாளி எல்லா வகையிலும் தூக்கில் தொங்குவதற்காக மனதளவிலும் உடலளவிலும், கோரமானதாக தோற்றமளிக்காமல் இருப்பதற்காக, தண்டனை நிறைவேற்றும் பணியாளர்களின் மனசாட்சி, குமட்டல்தன்மை இவற்றை கணக்கில் வைத்தும் தயார் செய்யப்படுகிறார். அவருடைய கடைசி ஆசை கேட்கப்படுவதும், தண்டனையின் இன்னொரு சடங்காகிறது. உடல்ரீதியில் அவர் தயார் செய்யப்படுகிறார்; முந்தய நாள் அவருக்கு நல்ல உணவு அளிக்கப்படுகிறது; தண்டனைக்கு முன்னால் மலம், மூத்திரம் வெளிவராமலிருக்க, உணவும் நீரும் சில மணி நேரங்கள் முன்னால் அவருக்கு தடை செய்யப்படுகிறது; முகம் போர்த்தப்படுகிறது. இவையெல்லாம் தண்டனை பற்றி மிக குறைந்த அளவு நான் கேள்விப்பட்டு எழுதுவது; ஆராய்ந்தவர்களும், நேரடி தொடர்புள்ளவர்களும் இன்னும் அதிகமாக மரணதண்டனையின் இயந்தரத்தனமான, நிதானமான திட்டமிதல்களையும், குற்றவாளி மீதான அதன் பாதிப்புகளையும் விளக்க இயலும். ஆகையால் எனது மரண தண்டனை எதிர்ப்பின் பின்னால், அதன் பகுத்தறிவு பூர்வத்தின், நிதானத்தின், இயந்தரத்தனமாக திட்டமிடல்களின் கொடூரமே முக்கிய காரணமாக இருக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் மரண தண்டனை இத்தகைய ஒரு பார்வையின் அடிப்படையிலேயே - இதே வகையில் வாதங்களை அடுக்கி வெளிப்படையாய் அறிவித்திருக்கவிட்டாலும் - தடை செய்யப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த எனது பார்வை சரியாக புரிந்து கொள்ளப்படாமலோ, ஏற்றுகொள்ளப்படாமலோ போவது வேறு விஷயம். மிக எளிதாக இதற்கு எதிர்வாதங்களை முன்வைக்க முடியும் என்றும் தெரியும். 'நிராபராதி கொல்லப்பட்டு விடக் கூடாது' எனபதற்கும் எதிர்வாதாடுவது கடினம் அல்ல; விபத்து நடக்கும் என்பதற்காக விமானத்தில் போவதில்லையா, ஒரு பெரும் விபத்து நடந்து பலர் சாக சிறு வாய்ப்பு இருந்தாலும் அணுமின்சாரம் தயாரிப்பது இல்லையா என்பது போல கேட்கலாம். சட்டம் 'பழி வாங்குவதாக இருக்க கூடாது' என்பதற்கும் இது போல கேட்க இயலும்; மதத்தில் பாவத்திற்கு தண்டனை என்பதுபோல, குற்றத்திற்கான (எந்த விதமானாலும்) தண்டனை என்பதிலேயே ஒரு பழிவாங்கும் நோக்கம் உள்ளுறையாக இருப்பதுதான். மேலும் பழிவாங்காத தண்டனை, சாலை விபத்து நிகழ்த்தி ஒரு உயிரை காவு கொண்டு விட்டு, 1000ரூபாய் ஃபைன் கட்டி தப்பிப்பது போல் இருந்துவிடும் என்றும் ஒரு வாதத்தை முன்வைக்கலாம். முன்னமே ஒரு நிலைபாட்டை பற்றிக் கொண்டவர்கள், எதிர்வாதம் செய்வது மிக மிக எளிதானது. உடலில் அழுக்கெடுப்பதை விட, மிக எளிதாக தர்க்கத்தை சமைத்துவிடலாம். யோசித்து பார்தால் அவைகளுக்கு எல்லோரையும் நிறைவு செய்யும் ஒரு பதிலும் கிடையாது. நாகரீகமான சிந்தனை என்று நான் நினைப்பதை முன்வைத்துள்ளேன். ஏதாவது ஒருவகையில் அதனுடன் பகிர்ந்து கொள்பவர்களுக்கும், தங்களை பரீசீலனை செய்ய தயாராய் இருப்பவர்களுக்கும் மட்டுமே இது பயன்படும். இதே கருத்துக்களை வேறு சிலரும் சொல்லியிருக்கக் கூடும்;வேறு மாதிரியும் சொல்லியிருக்கக் கூடும் (ஆனால் நான் படிக்கவே படிக்காத தெகல்காவில் இப்படி எதுவும் தட்டுப்படும் என்றும், நான் ஓரளவு படித்த அருந்ததி ராய் எங்காவது இப்படி சொல்லியிருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை). அவைகளும் நான் ஆதரிப்பவையே; 'தூக்கில் போடத்தான் வேண்டும்' என்று சிறு மன உதறல் இல்லாது, கூட்டமாய் கூச்சல் கேட்கும் என் சமுதாயத்தில், இதை ஓரமான ஒரு பார்வையாக, யார் மீதும் திணிகாமல், அதே நேரம் அழுத்தமாய் சொல்வது என் கடமை என்பதால், சோர்வினிடையே இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. 'பொதுப்புத்தி' பதிவில் மிக தெளிவாக பொதுப்புத்தி என்று எதை குறிப்பிடுகிறேன், அதன் வன்முறை என்று எதை சொல்கிறேன் என்று குழந்தைக்கும் புரியும் வகையில் எழுதியும், மீண்டும் பின்னூட்டத்தில் அதை விளக்கியும், பலர் அதை புரிந்து கொண்டவிதம், இவ்வளவு கொடுமையாகவா வாசிக்கும் திறன் கொண்டிருக்கிறார்கள் என்று சோர்வை ஏற்படுத்துகிறது. ( பிரச்சனை அவர்களின் வாசிக்கும் திறனில் இல்லை என்பது வேறு விஷயம்). இதில் 'பொதுப்புத்தி' என்பதாக லேபிள் ஒட்டப்படுமோ என்ற கவலை இல்லாமல் தங்கள் கருத்தை சொல்வதாக சிலர் காட்டும் வீரத்தை பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. 'தேவனே எல்லோரையும் ரச்சியும்' என்பதை தவிர சொல்ல வேறு எதுவும் இல்லை. அஃப்சல் பிரச்சனையை, குற்றத்துடன் அவர் தொடர்பிற்கு உரிய தீவிரத்தை முன்வைத்து விவாதிக்க வேண்டும் என்பதை என் பார்வையாக சொல்லியிருந்தேன். எனக்கு தெரிந்து ரவி ஸ்ரீனிவாஸ் பதிவில் மட்டும் அப்படி ஒரு பார்வை வெளிபட்டதாக நினைக்கிறேன். ஆனால் ரவி எழுதியதை பற்றி பேசவேண்டுமெனில் இதுவரை பதிவில் காட்டிய நிதானத்தை, வேண்டுமென்றே விலக்க வேண்டிவரும். அவ்வாறு செய்வதுதான் நியாயமானது என்று சில காரணங்களால் நான் நினைக்கிறேன். அப்படி செய்வதற்கான விருப்பமின்மை மட்டுமின்றி, ரவியின் 'கருத்துக்களுக்கு' முக்கியத்துவம் அளிக்கவும் தேவை எதுவும் இருப்பதாக தோன்றாததால், ரவி பெயர் குறிப்பிடும் நாகரீகமும் நேர்மையும் இல்லாமல் திரித்துள்ள எனது சில கருத்துக்களை பற்றி மட்டும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. //காவல் துறை கை காட்டுபவர்களையெல்லாம் குற்றவாளிகள் என்று நீதிமன்றங்கள் தீர்மானிப்பதில்லை என்ற மிக எளிய அடிப்படை உண்மையைக் கூட புரிந்து கொள்ளாமல் ஒருவர் எழுதுகிறார்......// என்னை சொல்கிறரா, பிரபு ராஜதுரையை சொல்கிறாரா என்கிற குழப்பம் வரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பிரபு ராஜதுரையின் பதிவில் ரவி எழுதி நீக்கிவிட்டதை நான் படிக்கவில்லை. மேலே உள்ள வரியில் அடுத்தவர் சொல்வதை ரவி எப்படி வாசிக்கும் திறன் கொண்டவர் என்பதையும், மற்றவர்களின் அறிவை எந்த அளவு எளிதாக்கி, மற்றவரை முட்டாளாக்கி எளிமைப் படுத்துகிறார் என்று புரிந்து கொள்ளலாம். நக்கீரன் ராஜதுரையிடன், அரசாங்கம் தவறுதலாக இழைக்கும் தண்டனை என்ன வகையில் நஷ்ட ஈடு செய்ய இயலும் என்று கேட்டதற்கு பதிலாக நான் பதில் கூறியிருந்தேன். 'சட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது' என்றே பதிலை துவங்கியிருந்தேன். நடைமுறையில் வைகோவிற்கும், கீலானியிற்கும் யாரும் பொறுபேற்றுக் கொள்ளவில்லை, ஈடு செய்யும் எந்த முயற்சியும் நடைபெறவில்லை என்பதை மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். இந்த செய்தியில் தவறு இருந்தால் கூறலாம். மாறாக 'காவல் துறை கை காட்டுபவர்களையெல்லாம் குற்றவாளிகள் என்று நீதிமன்றங்கள் தீர்மானிப்ப'தாக திரிப்பது என்னவென்று சொல்லலாம் என்று வாசிப்பவர்கள் தீர்மானிக்கலாம். நகைச்சுவை உணர்வு என்பதை என்ன தேடினாலும் கண்டுபிடிக்க இயலாத எழுத்துக்கு சொந்தக்காரரான ரவி ஸ்ரீனிவாஸ் பகடி செய்து பதிவு போடுகிறாராம். (அவர் எழுத்தில் இல்லாதது நகைச்சுவை உணர்வு மட்டுமல்ல என்பது வேறு விஷயம்). அதை ரசித்து சிரிக்க நகைச்சுவை உணர்வை விட ஒத்த அரசியல் நிலைபாடு ரொம்ப முக்கியம். அப்படி இல்லாமல் எல்லோரும் வாசித்து சிரிக்க அவர் பதிவிலிருந்து ஒரு மேற்கோள். //ஒரு வகையில் இதையெல்லாம் எழுதுவது கூட வீண் என்றே தோன்றுகிறது. பல பதிவுகளைப் படித்த பின் சலிப்பும், ஏமாற்றமுமே மிஞ்சியது. என் கருத்துக்களை ஏற்கனவே எழுதிவிட்டேன். மீண்டும் அடுத்த வாரம் என் கருத்துக்களை எழுதுகிறேன்.// Friday, October 06, 2006பொதுப்புத்திடிசம்பர் 13 பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் குற்றம் உறுதி பெற்று, முகமது அஃப்சலுக்கு தீர்பளிக்கப்பட்ட தூக்குதண்டனைக்கு எதிரான நிலைபாடுகளுக்கு, வழக்கம் போல பொதுப்புத்தி சார்ந்த எதிர்வினைகள், வலைப்பதிவுகள் உட்பட்ட எல்லா உடகங்களிலும் வந்துள்ளன. 'நமது நாட்டின் பாராளுமன்றத்தை தாக்கியவன்; அதை கோர்ட் உறுதி செய்தாகி விட்டது; அவன் சாவதுதான் எல்லாவிதத்திலும் நியாயமானது' என்பதற்கு மேல் வேறு எதையுமே யோசிக்கத் தெரியாத, யோசிக்க விரும்பாத பொதுபுத்தியுடன் எதையும் உரையாட முடியாது. இந்த விஷயத்தில் விநோதம் என்னவென்றால், அஃப்சலின் தூக்குதண்டனைக்கு எதிராக வலைப்பதிவுகளில் கருத்து சொல்ல வந்த சில இஸ்லாமியர்கள் கூட, இந்த பொது புத்தியிலிருந்து விலகி எதையும் சொல்லமுடியவில்லை என்பதுதான். நரேந்திர மோடியையும் தூக்கில் போடவேண்டியதுதானே என்பதற்கு மேல் அவர்களிடமும் வேறு வாதங்கள் இல்லை. வேறு யாரிடமிருந்தும் எந்த வகை குரலும் ஒலித்ததாக எனக்கு கேட்கவில்லை. வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், உளவுத்துறையின் கண்காணிப்பும், பொதுமக்களின் கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது இந்த விஷயத்தில் தெளிவான நிலைபாடு எடுக்கும் அளவிற்கு, செய்திகளையும், ஆதாரங்கள் குறித்த கட்டுரைகளையும் நான் இன்னும் படிக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளின் மூலம் தெரிந்த அளவில் அஃப்சலுக்கு பாராளுமன்றத் தாக்குதலில் பங்கு இருப்பதாக நம்பவே காரணங்கள் அதிகமாக இருக்கிறது. அவரே அதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. எனது தெளிவின்மை, அஃப்சலுக்கு தாக்குதலில் எந்தவிதமான பங்கு, அதற்கான ஆதாரம் என்பதை பற்றி மட்டுமே இருக்கிறது. நிச்சயமாக மாஸ்டர் மைண்டாக தாக்குதலை திட்டமிட்டு, அதில் நேரடியாய் பங்கு பெற்ற காரியத்தை அஃப்சல் செய்ததாக தெரியவில்லை. நேரடியாய் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரும் உயிருடன் இல்லை. திட்டமிடலின் பிராதான மூளையாக, இயக்கமாக இருந்து தாக்குதலை செயல்படுத்தியவர்களை இந்திய சட்டம் நெருங்கப் போவதில்லை. அப்படியில்லாமல் ஏதோ வகையில் தொடர்பு கொண்டதான பங்கிற்கு, இந்த தூக்கு தண்டனை நியாயமானதுதானா என்கிற விதத்தில்தான் எனக்கு கேள்வி இருக்கும். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 26 பேர்களை ஒட்டுமொத்தமாக தூக்கில் போடும்படி ஆணையிட்ட தீர்ப்பும் எப்படி பரவலான, பொதுப்புத்தி சார்ந்த வரவேற்பை பெற்றது என்பதை பார்க்க வேண்டும். குமுதமும், ஃப்ரண்ட்லைனும் சரித்திர புகழ்வாய்ந்த தீர்ப்பாக அதை கொண்டாடியது. கொலைக்கான சதியில் 26 பேரும் நேரடியாய் பங்கு கொண்டு அதில் ஈடுபட்டதாகவும், அனைவரையும் தூக்கில் போடுவது மிகவும் நியாயமானதாகவுமே பொதுபுத்தி கருதியது. ஆனால் இது குறித்து ஓரளவு தீவிரமாய் உள்ளே போய் ஆராய்பவருக்கு கூட, 26 பேரில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குற்றச்செயலை நேரடியாய் மேற்கொண்ட குற்றவாளிகளுடன், ஏதோ வகையில் - குற்றம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு - தொடர்பு இருக்க நேர்ந்தவர்கள் என்ற வகையில் மட்டுமே, அவர்கள் மீது குற்றம் 'நிருபிக்கப் பட்டிருப்பதை' அறியலாம். (உதாரணமாக குற்றவாளி ஒருவருடன் மாலை காபி அருந்திவிட்டு போவதும் தொடர்பு என்பதாக கொள்ள வேண்டியது; காபி குடித்தவருக்கு எதிராளி சில நாட்களில் கொலை செய்யப் போகிறார் என்பது தெரியாமல் இருக்கலாம் என்பது ஒரு பொருட்டு இல்லை.) அவர்களுக்கு, அரசியல் நிலைபாடு சார்ந்து தமிழ் தேசியவாதிகள், தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் என்று பலரின் கரிசனம் இருந்ததால், பின்னர் மேல் முறையிடப்பட்டு, செலவு செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வாதாடப்பட்டு விடுதலையாகும் அதிர்ஷ்டம் இருந்தது. மீண்டும் நான் இங்கே குறிப்பிட விரும்பவது, பொதுபுத்தியின் பட்டறிவில் வெளிபடும், 26 பேரும் குற்றத்துடன் நேரடி தொடர்பு கொண்ட குற்றவாளிகளாகவும், அவர்களை கொல்வது மிகவும் நியாயமானதுதான் என்ற விமர்சனமற்ற ஆழ்ந்த நம்பிக்கை பற்றி மட்டுமே. எனது கருத்தை சொல்லியாக வேண்டுமென்பதால் - இந்த எல்லாவற்றிலும் எனது நிலைபாடு தூக்குதண்டனை என்பதற்கே எதிரானது. அது ஆட்டோ சங்கருக்கும், வீரப்பனுக்கும், சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டவனுக்கும், 24பேரை ஒரே சமயத்தில் கொன்றவனுக்கும் சேர்த்து அது பொதுவானது; 'ஒரு நிரபராதி கொல்லப்பட்டு விடக்கூடாது' என்ற வாதத்தின் அடிப்படையில் வரும் தூக்குதண்டனை எதிர்ப்பு வாதம் அல்ல; எந்த வகை குற்றம் நிறுவப்படுதலுக்கும், ஒரு உயிரை அரசாங்கம் என்ற நிறுவனம், மிகுந்த இயந்திரத்தனமான திட்டமிடுதலுடன் (உதாரணமாய் தூக்கில் இடும்போது மலம் வெளிவந்துவிடாமலிருக்க, அதற்கு முன் சில மணிநேரங்களுக்கு பட்டினிபோடுதல் உட்பட்ட) மிக நிதானமாக செய்யப்படும் அங்கீகரிக்கப் பட்ட கொலையை செய்வது, ஒரு நாகரீக சமுதாயத்தில் நடக்க முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் தூக்கு தண்டனையை எதிர்க்கிறேன். அந்த பார்வையில் கமலின் 'விருமாண்டியை', அவர் பிரசாரித்தது போல், தூக்குதண்டனைக்கு எதிரான ஒரு படமாக என்னால் பார்க்க முடியவில்லை. குற்றம் செய்யாமல் மாட்டிகொண்ட கமலின் நிரபராதி பாத்திரம, தூக்கிலிடப்படுவதை பிரச்சனையாக பார்ப்பது அல்ல, தூக்குதண்டனைக்கு எதிரான பிரச்சாரம்; கமல் தூக்கு தண்டனையை எதிர்த்து படமெடுக்க நினைத்தால், அவர் பசுபதியின் பாத்திரம் தூக்கிலிடப்படுவாதாகவும், அதற்கு எதிராகவும் என்பது மாதிரி கதை நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் பசுபதி கொல்லப்படுவதுதான் சரி என்கிற நியாயத்துடன் அமைந்த திரைக்கதையை, தூக்கு தண்டனைக்கு எதிரானதாக என்னால் பார்க்க முடியவில்லை. (படத்தில் வேறு பல பிரச்சனைகள் உண்டு எனினும் இது முதன்மையானது.) இந்தப் பார்வையில் எனது நிலைபாடு, எல்லாவகை தூக்கு தண்டனையையும் எதிர்ப்பதுபோல், அஃப்சலுக்கான தூக்கு தண்டனையையும் எதிர்க்கிறது. இவ்வாறான, எல்லாவகை குற்றம் நிறுவப்பட்டவர்களுக்குமான மரணதண்டனை எதிர்ப்பை பற்றி பேசுவது இந்த பதிவின் நோக்கமில்லை. விரிவாக பேச இயலாதது மட்டுமின்றி, அவ்வாறு பேசுவது இந்த குறிப்பிட்ட பிரச்சனையை திசை திருப்பவும் செய்யும். ஏனெனில் அஃப்சல் மீதான தூக்கு தண்டனைக்கு எதிரான விவாதம், என்னை மாதிரி நட்டு கழண்ட சில கேஸ்களின் ஒட்டுமொத்த தூக்கு தண்டனைக்கான எதிர்ப்புடன் மட்டும் தொடர்புடையது அல்ல. ஐரோப்பிய கூட்டமைப்பு போன்ற, மனித நாகரீகத்தின் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்துவிட்ட ஒரு குமுகாயமாக நாம் இல்லாத யதார்த்தத்தை ஒப்புகொண்டே, நாம் இந்த விஷயத்தை அணுக வேண்டியிருக்கிறது. அவ்வாறாக மரணதண்டனையின் இருப்பை அங்கீகரித்துக் கொண்டே, நாம் இந்த விஷயத்தை அணுகும் போதே, அஃப்சலுக்கு இந்த தாக்குதலில் எந்த வகையில் பங்கு, அதன் ஈடுபாடு மற்றும் தீவிரம் என்ன என்பதை பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. முதன்மை குற்றவாளிகளை பிடிக்க இயலாத கையாலாகத்தனத்தை இவரை கொல்வதன் மூலம், நாம் தணித்து மனச்சமாதானம் அடைய விரும்புகிறோமா என்றும் கேட்டுக்கொள்ளலாம். அந்த வகையில் அஃப்சலை தூக்கில் போடுவதன் நியாயம் குறித்து எனக்கு தெளிவான கருத்து எதுவும் இல்லை. ஆனால் எந்த வித விவாதத்திற்கும் தயாராக இல்லாத மனங்கள், கொல்வது மட்டுமே தர்மம் என்றும், அதில் இருந்து விலகி சிந்திப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்று நினைக்கும் ஒரு சூழலில், இந்த தெளிவின்மையை முன்வைப்பதும் எனக்கான அரசியலாக இருக்கிறது. இவர்கள் வெளிப்படுத்தும் கூட்டு ஹிஸ்டீரியாவின் கொடூரத்தை அறிய, நாம் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு, பொடா சிறையில் உடல்ரீதியில் கொடுமையாய் சித்ரவதை செய்யப்பட்டு, பின்பு மிக ஒட்டையான ஆதாரங்கள் மற்றும் பொய்யாக தயாரிக்கப் பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அது நன்றாக தெரிந்தும் துக்குதண்டனை அளிக்கப் பட்டு, சாவு தலைக்கு மேல் தொங்கும் பயங்கரத்துடன் மீண்டும் ஜெயில் வாழ்க்கை வாழ்ந்து, இறுதியில் அதிர்ஷ்டவசமாக உச்ச நீதிமன்றத்தில் தப்பிய கிலானியின் கதையை மிக விரிவாக அறிய வேண்டும். கிலானி என்ற பலரது அன்பிற்குரிய பேராசிரியரின் மீதான ஆதாரம் ஒன்றே ஒன்றுதான்; பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு இறந்துவிட்ட ஒருவனின் செல்பேசியில், அவருடய தொலைபேசி எண் இருந்தது. அது தவிர தாக்குதல் நடந்த மறுநாள் அவர் காஷ்மீரியில் பேசிய ஒரு தொலைபேசி உரையாடலை பதிந்து, அதை ஒரு லோக்கல் மொழிபெயர்பாளரால் மொழிபெயர்த்ததாக நினைத்து அளித்த மொழிபெயர்ப்பில், "What is this you have done in Delhi?" என்று எதிராளி கேட்க, "This was necessary." என்பதாக இருந்ததுதான். (பின்னர் அவர் பேசியது வேறு என்பதாக நிறுவப்பட்டது.) இந்த 'ஆதாரங்களின்' அடிப்படையில் கிலானி கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, வேலை இழந்து, குடும்ப அமைதி எல்லாவற்றையும் இழந்து, மரணதண்டனை பயமுறுத்த சில ஆண்டுகள் வாழ நேர்ந்து, இறுதி கட்டத்தில் உயிர் தப்ப நேர்ந்தது. இதை இந்த சந்தர்ப்பத்தில் சொல்ல ஒரே ஒரு காரணம்தான் உண்டு. மேலே பேசியுள்ள பொதுப்புத்தி எல்லாவகை ஊடகங்களிலும் கிலானி பற்றியும், அவருக்கான தண் டனை பற்றியும் எப்படி வெளிப்பட்டது என்பதுதான். இப்போது அஃப்சல் பற்றி வெளிபடும் அதே குரல்கள்தான் கிலானி பற்றியும் வெளிபட்டது; 'ஒரு கல்லூரி பேராசிரியரே பயங்கரவாதியாக இருப்பது' பற்றியும் கவலை கொண்டது; கிலானியையும் துக்கில் போடுவதுதான் சரி என்ற தன் கருத்தில் எந்த பரிசீலனைக்கும் அது இடம் அளிக்கவில்லை. கிலானியின் உதாரணம், சமூகத்தில் மதிப்பு பெற்ற ஒருவரின் கதி பற்றியது. அவ்வாறு இல்லாமல் நாடு முழுவதிலும் அநியாயமாய் சிறையில் வாடும் அப்பாவிகளை (தமிழர்கள் உட்பட) பற்றி பேசுவது எனது சக்தியை, இந்த வலைப்பதிவின் சாத்தியதை தாண்டியது இந்த பொதுபுத்தியை மீறி சிந்திக்கவும், பரிசீலிக்கவும், அதை வெளிப்படையாய் பேசவும் மிகுந்த மனத்துணிவு வேண்டும்; பாயக்கூடிய வசைகள், தேசத்துரோக பட்டங்கள், அதிகாரத்தின் மிரட்டல் இதை மீறி செயல்படவும் வேண்டும்; இந்த நேர்மையால் பத்து பைசா பயன் இருக்காது; மாறாக விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்குமானதாக திரிக்கப்படும் அவதூறு பற்றிய கவலையும் இருக்க கூடாது; அந்த வகையில் செயல்படும் சிறுபான்மை அறிவுஜீவிகளை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் இவ்வாறான நிலைபாடுகளையும் ஒற்றை பரிமாணத்தில் சுயவிமர்சனமின்றி எடுப்பதும் ஆபத்தானதாகவே எனக்கு தெரிகிறது. பொதுபுத்தி நமக்கு எதிராளியாகும் கட்டாயத்தில், சுயவிமர்சனமற்ற ஒரு சுழலில் மாட்டிக்கொள்ளும் அபாயமும் இருப்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியுள்ளது. அத்தகைய விமர்சனத்தை அஃப்சல் விவகாரத்தில் நான் காண நேராததால் இதையும் சொல்ல வேண்டியிருக்கிறது; எனது கருத்தும் - கிலானி பற்றிய பிரச்சனையில் இருப்பது போல் - இந்த பிரச்சனையில் தெளிவில்லாமல் இருப்பதாகவும் முன்வைக்க வேண்டியுள்ளது. கிலானி வழக்கு தொடர்பாக அடிப்படையான சிலவற்றை அறிய கீழே உள்ள இரண்டு சுட்டிகளில் வாசிக்க முயலலாம். 1. கார்டியனில் வந்த கட்டுரை Victims of December 13 2. அருந்ததியின் கட்டுரை Who Pulled The Trigger... Didn't We All? இன்னும் இணையத்தில் இருக்கலாம். தேடுபவர்களுக்கு கிடைக்கும். Wednesday, July 12, 2006புரட்ச்சியாளன் ஜிதான்!ஜிதான் முட்டி மெதராத்ஸி கீழே விழுந்த அந்த வரலாற்று கணத்திற்கு சில மணி நேரங்களுக்கு பின்னால், யதார்த்தமாய் பலருக்கும் தோன்றியிருக்க வேண்டிய விஷயத்தை, இப்போதுதான் உலகம் பேசத் தொடங்கியிருக்கிறது. முதலில் தான் எதுவுமே பேசவில்லை என்று சொன்னதை மாற்றி, இரண்டு நாட்கள் கழித்து, ஜிதானை இகழும் வார்த்தைகளால் தான் கேவலப்படுத்தி கோபமூட்டியதை மெதராத்ஸி இப்போது ஒப்புகொண்டுள்ளார். எரிச்சல் என்னவென்றால் ஒரு இரண்டு நாட்கள் தலையங்கங்களிலும், கட்டுரைகளிலும் ஜிதானை, மாபாதகம் செய்தது போல் உலகம் திட்டிக் கொண்டிருந்தது. அந்த காட்சியை பார்த்த அடுத்த சில நொடிகளிலேயே அல்லது திரும்ப திரும்ப அந்த காட்சியை பார்த்தபின்னாவது, மிக தெளிவாக ஒரு விஷயம் தெரியும். மெதாராத்ஸியை விலக்கிவிட்டு சாதாரணமாக நடந்து சென்ற ஜிதான் திடீரென திரும்பி மண்டையால் முட்டி கீழே தள்ளுகிறார். அந்த செயல் விளையாட்டின் முரட்டுத்தனத்தின் போக்கில் நடைபெற்றதல்ல. ஒரு கோபமூட்டுதல் இல்லாமல் அவ்வாறு திடீரென திரும்பி அடிப்பதற்கான உந்துதல் இருக்க வாய்பில்லை. ஜிதானின் அல்ஜீரிய வேர்கள் எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பாவில் வட ஆப்பிரிக்கர்கள் பற்றிய முன்னபிப்ராயமும், பல இனவாத சொல்லாடல்களும், அதை வைத்து மிக எளிதாய் ஒரு கோபமூட்டலை செய்ய முடியும் என்பதும் தெரியும். இது தெரிந்தும், ஜிதான் ஏன் முட்டினார் என்ற கேள்வியை எழுப்பாமல், விளையாட்டு நேயத்தை அழுக்கு படுத்திவிட்டதாக ஒரு பாட்டம் பத்திரிகைகளும் பார்வையாளர்களும் திட்டித் தீர்த்தனர். பொதுப்புத்தி என்பது எப்படி வேலை செய்யும் என்பதற்கான இன்னொரு உதாரணம் இது. இப்போதும் மெதாரத்ஸி தான் 'dirty terorist' என்றோ, ஜிதானின் அம்மா/சகோதரியை கேவலப்படுத்தும் விதமாகவோ எதுவும் சொல்லவில்லை என்கிறார். இன்னும் வேறு எதையோ எல்லாம் அவர் சொல்கிறார். ஆனால் 'நாகரீகமான முறையில்' ஜிதானை கேவலப்படுத்தி கோபப்படுத்த என்ன வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று மட்டும் சொல்லவில்லை. அநாகரிக வசவு பற்றியே விலாவரியாய் விவாதிக்கும் போது, நாகரீகமான வசவை அவர் பிரயோகித்திருந்தால், அதை சொல்வதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. மெதாரத்ஸி அந்த கோபமூட்டும் வார்த்தைகளை சொன்ன விதத்தை கவனிக்க வேண்டும். வெளிப்படையாய் தெரியும் வகையில் இல்லாமல், கேமாராவில் சிக்காத வகையில், உதட்டசைவு கூட தெரியாத வகையில் பார்வையாளர்களின் பார்வையிலிருந்து மறைந்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். வெள்ளை குசும்பு என்பது இதுதான். மாறாக தனது உடனடி எதிர்வினையை காட்டிவிட்டு ஜிதான் காட்டிய காட்டும் மௌனம் மிகுந்த நாகரீக தன்மை வாய்ந்தது. இந்த கால்பந்தாட்டத்தின் போது பல இடங்களில் இனவாதம் நேரடியாய் தலைகாட்டியிருக்கிறது. கருப்பு வீரர்கள் வந்து இறங்கும் போது கூச்சலிடுவதும், கேவலப்படுத்தும் வகையில் சைகைகள் காட்டுவதும் நடந்திருக்கிறது. இந்த காரணங்களால்தான் 'இனவாதத்திற்கு எதிராய் கால்பந்தாட்டம்' என்பதாக விளம்பரப்படுத்த பட்டு, இறுதி ஆட்டத்திற்கு முன்னால் ஜிதானும் கானவாரோவும் இணைந்து இனவாதத்திற்கு எதிராய் அறிக்கையும் விட்டார்கள். இப்போது என்னவகை சுயசோதனைகளில் எல்லோரும் இறங்குவார்கள் என்பதை அவர்கள்தான் வெளிகாட்டவேண்டும். இன்னமும் உண்மையாய் என்ன நடந்தது என்று தெரியாதுதான். ஒருவேளை ஜிதான் எதையாவது தவறாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டிருக்கலாம்தான். அப்படி நடந்திருந்தாலும் அவருக்கு அதற்கான நியாயம் இருக்கிறது. இனவாதத்தையும் தன்னை கேவலப்படுத்தும் செய்கைகளையும் முன்னரே அவர் எதிர்கொண்டிருக்கிறார். இதன் விளைவாக எந்த இடத்திலும் தான் கேவலப்படுத்தப் படலாம், கோபமூட்டப்பட்டு வேடிக்கை பார்க்கப்படலாம் என்ற உணர்வு அதீதமாய் இருக்கவும், அதன் காரணமாய் தவறாக எடுத்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடியாது. வெட்டியாக அறிவுரை மட்டுமே சொல்ல முடியும். மதிவண்ணன் இப்படிப்பட்ட ஒரு உணர்வு பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். ( தவறாக எடுத்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவர் மன்னிப்பு கேட்கலாம். ஆனால் அதற்காக தண்டைனையை அவர் ஏற்கனவே பெற்றாகிவிட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.) ஆனால் எரிச்சல் தருவது எதுவென்றால், ஜிதானை உடனடி எதிர்வினைகளால் திட்டி தீர்த்த பொது புத்தியும், தன் நிலையிலிருந்து செய்த அறிவுரைகளும்தான். தனது செயலுக்கான தண்டனையை பெற்ற பின்னரும், அதற்கான மிக பெரிய விலையை அளித்த பின்னரும் திட்டி தீர்த்தன. 8 ஆண்டுகளுக்கு முன்னால் ஜிதான் இன்னொரு தாக்குதலில் வாங்கிய சிகப்பு அட்டையை பற்றி பேசியது பொது புத்தியின் இன்னொரு கேவலமான பகுதியை காட்டுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அவருக்கு வந்த ஒரு முன்கோபம் (அதற்கான காரணம் எதுவாகவும் இருக்கட்டும்), இப்போது அவரை குற்றவாளியாக்க ஒரு ஆதாரமாகிறது. ஏற்கனவே தீக்காயம் பட்டவன் தீயிடம் இன்னுமல்லவா ஜாக்கிரதையாக இருப்பான் என்ற காமன் சென்ஸ் இவர்கள் பட்டறிவில் படவில்லை. இப்படிப்பட்ட பொது புத்தியினிடையே, அதை ஏற்கனவே எதிர்கொண்ட, தன் கோபத்திற்கு கொடுக்க வேண்டிய பெரிய விலையையும் நன்றாக அறிந்து, போலி நாகரீக தளைகளால் தன்னை இன்னமும் அடிமைப்படுத்திக் கொள்ளும் உளவியலிலிருந்து விடுப்பட்டு, தனது அந்த நேரத்து எதிர்வினையை நிகழ்த்திய புரட்ச்சியாளன் ஜிதானிற்கு என் வணக்கங்கள்! பிகு: புரட்சி என்று சொன்னது அவர் முட்டி மோதிய சம்பவத்தை அல்ல; ஆட்டத்தின் கணிப்புகளையும், போக்குகளையும் புரட்டிப் போட்ட அவரது அற்புதமான விளையாட்டை குறிக்கிறது. Monday, July 03, 2006வயறு எரிகிறது!30 மணி நேரமாகிவிட்டது; இரண்டு முறை தூங்கி எழுந்தாகிவிட்டது; இன்னும் தாங்க முடியவில்லை. ஏற்கனவே டீஜே எழுதிவிட்டாலும், செய்தி தாள்களில் பலர் ஒப்பாரி வைத்துவிட்டாலும், ஒரு வடிகாலாக இங்கே எழுதினாலும் கூட வயிற்றில் எரிச்சல் அடங்கும் போல தோன்றவில்லை. ஜெர்மனியின் மூர்க்கத்தனமான அழுகுணி ஆட்டத்திடம் அர்ஜண்டைனா தோற்றதென்பது உதை பந்தாட்ட நடைமுறை மேலான கோபமாக மட்டும் இருந்தது. அர்ஜண்டைனா தன் அற்புத ஆட்டத்தை வெளிபடுத்தவாவது செய்தது. ஜெர்மனி வென்றது பெனால்டியில் என்பதும், அதுவும் மூர்க்கமான ஆட்டத்தின் போக்கில் கோலி ராபர்த்தோ மீது மோதி காயப்படுத்தி வெளியே அனுப்பிய காரணமாவது இருந்தது. பிரேஜில் ஆடியது மோசமான ஆட்டம். தன்னம்பிக்கையின் அளவுக்கு மீறிய அரகன்ஸாக இருக்கலாம்! முதல் பாதியில் முனைப்பே எடுக்காமல், கடைசி நிமிடங்களில் உச்ச பரபரப்பில் முயன்று ... என்னத்த சொல்ல! நினைக்க நினைக்க மனசு ஆறமாட்டேனென்கிறது. காசு கீசு வாங்கிவிட்டார்களா என்று கூட (உண்மையில் அப்படி நினைக்கவில்லை) சந்தேகம் வந்து போய் கொண்டிருக்கிறது. அர்ஜண்டைனாவும் பிரசிலும் இறுதியில் மோதும், யார் வென்றாலும் சந்தோஷமே என்ற கலாபூர்வமான மனநிலையுடன் பார்க்கலாம் என்று இருந்த நப்பாசை தவிடு பொடியாகிவிட்டது. டீஜேயை போலவே இனி தொடர்ந்து பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஒரு வேளை பிரான்ஸ், குறைந்த பட்சம் ஜெர்மனியை தவிர யாராவது ஜெயித்தால் வயிற்றெரிச்சல் குறையலாம். அளவுக்கு மீறி தூக்கி வைத்த ரொனால்டினோ மொத்த ஆட்டத்திலும் கூட பெரிதாய் எதையும் செய்து காட்டாதது இன்னொரு விஷயம். இந்த தோல்வி மிக முக்கியமான பாடங்களை எல்லோருக்கும் கற்று கொடுக்கும் என்று நம்பலாம். வேறு என்ன சொல்ல, இதற்கு மேல் தத்துவ விசாரமாய் புலம்பி என்ன நடக்க போகிறது! Friday, June 23, 2006அருந்ததிக்காக! -1.பாஸ்டன் பாலாஜி 'china is democratic' என்று அருந்ததி ராய் சொன்னதாக தலைப்பிட்டு எழுதிய பதிவின் ஊடாக, அருந்ததி அமி குட்மேனுக்கு அளித்த பேட்டி, மற்றும் சில துணுக்கு செய்திகள், வஜ்ரா சங்கர் எழுதிய ஒரு வழக்கமான வெகுளி முகம் காட்டும் அயோக்கிய பதிவு ஆகியவற்றை பார்த்தேன். வஜ்ரா என்ன எழுதுகிறார் என்பது பற்றி எனக்கு எந்த பொருட்டும் கிடையாது. அவரை ஒரு மனிதனாகவே நான் மதிப்பதில்லை. பாஸ்டன் பாலாஜியின் (அரசியல்) கருத்துக்களையும் கூட ரொம்ப சீரியசாய் எடுத்துக் கொள்வதில்லைதான் என்றாலும், அவரை நிச்சயம் ஒரு நல்ல மனிதராய் மதிக்கிறேன்; அண்மைக் காலமாய் நல்ல நண்பராகவும் கருதுகிறேன். அந்த வகையில் அவர் எழுதியதற்கு எதிர்வினை வைக்க என் தனிப்பட்ட பார்வையிலான தகுதியை தருவதாலும், நான் மதிக்கும் இன்னொரு நண்பர் ஸ்ரீகாந்தும் ஏதோ எழுதியிருப்பதாலும், எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் மிகவும் மதிக்கும் அன்பு வைத்திருக்கும் தோழி அருந்ததிக்காக இந்த பதிவை எழுத வந்தேன். இவ்வாறாக தொடங்கி கிட்டத்தட்ட பாதி பதிவை நேற்றே எழுதிவிட்டு, என் பின்னூட்டத்திற்கு பாஸ்டன் பதில் தருவதற்காக காத்திருந்து, பதிவை ஊர வைத்திருந்தேன். பாஸ்டன் தலைப்பிட்டு, பதிவினுள்ளே 'மொழி பெயர்த்து தமிழில் மேற்கோள் காட்டியுள்ள' சீனா குறித்த வரிகளை அவர் அளித்துள்ள சுட்டிகள் எதிலும் படிக்க முடியவில்லை. குறிப்பாக பேட்டியில் படிக்கவில்லை. மிக மிக நிச்சயமாக அருந்ததியின் எந்த எழுத்துக்களிலும் அதை படிக்க முடியாது. அப்படி எதையுமே அவர் எழுதியதில்லை என்பதை, அந்த வரிகள் அவருடைய பாணியில் இல்லை என்பதை அருந்ததியின் ஒரே ஒரு கட்டுரையை படித்தவர் கூட உணர முடியும். அதனால் அது குறித்து விளக்கம் கேட்டிருந்தேன். பாஸ்டன் பாலாஜி ஏதோ கூட்டத்தில் கலந்து கொண்டு, ஒரு 'தமிழ் வலைப்பதிவராய்' கேள்வி கேட்டு, தனக்கு கிடைத்த பதிலை, தான் புரிந்துகொண்ட விதத்தில் மனதில் வாங்கி, தன் வார்த்தைகளில் பதிவில் போட்டது என்பதாக அதை எடுத்து கொண்டிருந்தேன். இந்த நிச்சயமின்மை காரணமாக இதை எப்படி வாசிப்பது என்று எனக்கு குழப்பம் இருந்தது. மற்ற யாருக்கும் அப்படி ஒரு குழப்பமே வரவில்லை; அப்படி ஒரு குழப்பத்தின் தேவையே இருக்கவில்லை. முட்டாள்தனத்தை பெருமையாய் அறிவிக்கும் கூட்டு உளவியலின் போக்கில், எல்லோரும் பாலாஜி எழுதியதை உண்மை என எடுத்துக் கொண்டு (அதை முட்டாள்தனம் என்று சொல்லவில்லை) அருந்ததியை திட்டி கொண்டிருக்கும் போதும், தான் எழுதியது ஒரு பகடிதான் என்று அறிவிக்கும் அவசியம் பாலாஜிக்கு தோன்றவில்லை. (பின்னர் சொல்லலாம் என்று நினைத்திருக்கலாம், ஆனால் அப்படி நினைத்தாரா என்பதும் தெளிவாய் தெரியவில்லை.) இப்போது பலாஜி தெளிவாக்கிய பின்பு ஏற்கனவே (அருந்ததி அப்படி சொன்னதாக எடுத்துக் கொண்டு, அவர் பேச்சில் வெளிபட்ட Wit புரியாமல் மற்றவர் பேசுவதாக) எழுதிய பத்திகளை நீக்கியிருக்கிறேன். அருந்ததியின் முதல் எழுத்துக்களில் இருந்து அவர் எல்லாவகை அரசு அதிகாரம் பற்றியும் பேசி வருகிறார். அவர் சீனா பற்றி அத்தனை இடங்களில் பேசியிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்டுகளை பற்றி முதல் நாவலிலிருந்து பேசி, கம்யூனிஸ்டுகளிடம் இருந்து திட்டு வாங்கி வருகிறார். மார்க்சியத்தையும் ஒரு மதமாக பார்பதாக தன் பேட்டிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பேசியிருக்கிறார். இந்த நேர்காணலிலேயே நதிகளை இணைக்கும் திட்டத்தை ஒரு Stalinist scheme என்கிறார். புத்திசாலித்தனம் கொஞ்சம் உள்ள எவருக்கும் இப்படி சொல்லும்போது Stalinist scheme என்பதை எதிர்மறையாக குறிப்பிடுகிறார், (சீனா உட்பட) எல்லா ஸ்டாலினிச அமைப்பின் மீதும் அவருக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது எதையுமே ஒழுங்காய் படிக்காத, அல்லது படித்தாலும் அதை கண்டு கொளாமல், வழக்கமாய் கம்யூனிஸ்டுகளை கிண்டலடிக்கும் அல்ப அணுகுமுறையில், சீனாவை பற்றி அவர் எப்படி பேசக்கூடும் என்று கற்பனை செய்து பாலாஜி ஒரு பதிவு எழுதுகிறார். படித்து விட்டு ஸ்ரீகாந்த் சீனாவின் three gorges dam பற்றி அவர் என்ன கூறக்கூடும் என்று புத்திசாலித்தனமாக வியக்கிறார். எதற்காக வியக்க வேண்டும்? அந்த பின்னூட்டம் எழுத, மீண்டும் வந்து வந்து மற்ற பின்னூட்டங்களை படிக்க என்று இந்த பதிவு தொடர்பாக செலவழிக்கும் நேரத்தில், பத்தில் ஒரு பங்கை செலவிட்டு கூகுளில் தேடினால், அருந்ததி என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்துவிடும். அருந்ததி அணைகள் பற்றிய தனது முதல் கட்டுரையிலேயே சைனாவை பற்றி பேசியதாக எனக்கு ஞாபகம். இப்போது அதை மீண்டும் படிக்கவில்லை. இது தவிர உண்மையிலேயே ஆர்வமிருந்தால், ஸ்ரீகாந்தும் மற்றவர்களும் இணையத்தில் தேடிகொள்ள வேண்டும். நிச்சயமாய் கிடைக்கும் என்று தேடாமலே நான் சொல்கிறேன். அருந்ததி இந்திய ஜனநாயம் பற்றி பேசிய விஷயத்துக்கு வருவோம். அதற்கான ஆதாரமாக இவர்கள் தருவது எக்ஸ்பிரஸின் செய்தி. எக்ஸ்பிரஸ் செய்திகளை எப்படி தருகிறது என்பதை, நேர்காணலில் தனது பிரபலம் என்ற நிலையை முன்வைத்து அருந்ததி பேசிய வரிகள் கீழே. I was at a meeting in Delhi a few months ago, the Association of Parents for Disappeared People. Now, women had come down from Kashmir. There are 10,000 or so disappeared people in Kashmir, which nobody talks about in the mainstream media at all. Here were these women whose mothers or brothers or sons or husbands had -- I'm sorry, not mothers, but whatever -- all these people who were speaking of their personal experiences, and there were other speakers, and there was me. And the next day in this more-or-less rightwing paper called Indian Express, there was a big picture of me, really close so that you couldn't see the context. You couldn't see who had organized the meeting or what it was about, nothing. And underneath it said, "Arundhati Roy at the International Day of the Disappeared." So, you have the news, but it says nothing, you know? இந்த செய்தியும் அப்படிபட்டதுதான் எனினும், அதில் உள்ளதையே அப்படியே மட்டும் எடுத்துக் கொள்வோம். அருந்ததி சொன்னது இந்திய ஜனநாயகம் பற்றி தனித்து சொன்ன ஒரு கருத்து அல்ல. 'இந்திய ஜனநாயகத்தையும்', இந்தியா ஓட்டு போடுவதை பற்றியும் தாமஸ் ஃப்ரீட்மேன் என்பவர் ஒரு அமேரிக்க வியத்தலுடன், அமேரிக்க உள்நோக்கங்களுடன் எழுதியதை முன்வைத்த அருந்ததி ராயின் எதிர்வினை. அருந்ததி ஏதோ தாமஸ் சொன்னது மறுத்து, இந்தியாவில் ஓட்டெடுப்பு நிகழாமல் ஆயுதம் மூலம் ஆட்சி மாறியதாகவும், சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாகவும் சொல்லவில்லை. அப்படி சொன்னது போல கிண்டல் செய்வதன் மூலம் தங்கள் முட்டாள்தனத்தை வழக்கம் போல வரிசையாய் எல்லோரும் வெளிபடுத்தியுள்ளனர். ஜனநாயகம் என்ற வார்தைக்கு இன்று நிலவும் இந்திய யதார்தம்தான் பொருளா என்பதை முன்வைத்து தான் பேசியுள்ளார் என்பது குறைந்த பட்ச புத்தியுள்ள எவருக்கும் புரியும். இந்திய ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்ப அருந்ததி முன்வைக்கும் வாதங்கள் சில; 80000 மக்கள் (தீவிரவாதிகள் அல்ல) காஷ்மீரில் அரச வன்முறை மூலம் மட்டும் (போராளி பயங்கரவாதத்தால் அல்ல) கொல்லப்பட்டுள்ளதை நாம் ஜனநாயகம் என்று சொல்லமுடியுமா? 700000 இராணுவ வீரர்களால் ஆக்ரமித்துள்ள ஒரு மானிலம் இருக்கும் போது அதை ஜனநாயகம் என்று சொல்ல முடியுமா? (அமைதி காக்கப் போவதாக நடுநிலைதன்மையுடன் போன இலங்கையில் நம் ராணுவம் நடத்திய வெறியாட்டம் இன்று ஈழத்தமிழர்களால் ஆவணப்படுத்தப் பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகாலமாய் ஒரு நடைமுறை போரில் இருக்கும் மானிலத்தில் என்னவென்ன நடந்திருக்கும் என்பதை ஊடக செய்திகளை முன்வைத்து மட்டும் பேசமுடியாது. ஆமாம், சமுத்ரா சொன்ன மாதிரி குறைந்தது அங்குள்ள மக்களிடம் பேசவாவது வேண்டும். காஷ்மீருக்கு போயிருக்காவிட்டாலும் என்னளவில் சிலருடன் பேசியுள்ளேன்.அருந்ததி என்னை விட பல மடங்கு அதிகமாய் பேசியுள்ளார். கருத்தரங்குகளில் பங்கு கொண்டுள்ளார். ஆதாரம் காட்டி இதற்கு முன்னரே பல கட்டுரைகளில் எழுதியுள்ளார். மொட்டையாய் இந்துத்வவாதிகளும், மற்ற இந்திய தேசியவாதிகளும் மறுப்பார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்! இரண்டு மாத காலமாய் உலகிற்கு அறிவித்துவிட்டு, ஊடகங்கள் முன்பு குடுமிவிரித்தாடிய குஜாராத் இன அழிப்பையே மறுக்கின்றனர். உதாரணமாய் கர்பிணி பெண்களை வயிற்றிலிருந்து குழந்தையை வெளியே எடுக்கவில்லை என்று அப்பாவியாய் மூஞ்சியை வைத்துக் கொண்டு ஆஃபிஸ் உடகார்ந்து கொண்டு ஒருவர் வலைப்பதிவில் எழுதுகிறார். ) இது தவிர (பேட்டியில்) இந்த நாட்டில் எல்லாவற்றையும் இறுதியாய் தீர்மானிக்கும் அதிகாரம் என்பது நீதிமன்றத்திடம் இருப்பதை முன்வைத்து பேசியிருக்கிறார். நான்கு லட்சம் எண்ணிக்கை கொண்ட ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை வெளியேற்றுவது என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படுவதும், தனது தீர்ப்புகளையே வெட்டி வெட்டி மாற்றி மாற்றி ஒரு நீதிமன்றம் கடைசியாக (தான் முன்னர் சொன்ன மறுவாழ்வு உள்ளடகத்தை தொடாமல்) 'அணை கட்டலாம்' என்று மொட்டையாக தீர்பளிப்பதை முன்வைத்து கேட்கிறார். இன்னொரு பரிமாணத்தில், ஒரிசாவில் பாக்சைட்டை முன்வைத்த கார்பரேட் கொள்ளைக்காக, இந்த நாட்டின் ஆதி மக்கள் மீது நடக்கும் சட்டபூர்வமாய் அங்கீகரிக்கக் பட்டு, அரசால் அவிழ்த்து விடப்படும் விசாரணைக்கு உடபடாத வன்முறையை முன்வைத்து கேட்கிறார். ஒரு பக்கம் கிராமங்களை மலைப்பகுதிகளை விட்டு, காலங்காலாமாய் அங்கு வாழ்ந்து வந்த, அந்த நிலத்தின் ஆதி மக்களை விரட்டுவதை பற்றியும், இன்னொரு புறம் கிராமத்திலிருந்து சேரிகளில் குடியேறியுள்ள அதே மக்களை ஆக்ரமிப்பாளர்களாகவும், பிக்பாக்கெட்களாகவும், கிரிமினல்களாகவும் காட்டும் நீதிமன்ற சட்டபூர்வமான அணுகுமுறை பற்றி பேசுகிறார். அருந்ததியை முட்டாளாய் கிண்டலடிப்பவர்கள் கீழே உள்ள எதையாவது செய்திருக்க வேண்டும். அவர் சொல்லும் செய்திகள் பொய், உண்மைக்கு முரணானது என்று துணிந்து வாதிட்டு இருக்க வேண்டும். இந்துத்வவாதிகளுக்கு அப்படிபட்ட துணிவும் கயமையும் நிச்சயம் உண்டு. மற்றவர்கள் இந்த செய்திகள் உண்மையாய் இருந்தாலும், 'ஜனநாயகத்தில இதெல்லாம் சகஜம்பா!' என்று ஒரு வாதத்தையாவது முன்வைத்து பேசியிருக்க வேண்டும். மாறாக கேனத்தனமான கிண்டல் மட்டுமே ஒலித்தது. ( சமுத்ரா என்பவர் மட்டும் 'ராணுவ அதிகாரிகளிடம் பேசி தான் தெரிந்து கொண்ட செய்திகளை' தந்திருக்கிறார். அது குறித்தெல்லாம் என்னை மாதிரி ஆட்கள் என்னய்யா பேசமுடியும்?!) வஜ்ரா மாதிரி ஆசாமிகள் அருந்ததி யாசின் மாலிக்குடன் கைகுலூக்கும் படத்தை போட்டு எதிர்கொள்வது போலத்தான், இந்துத்வவாதிகள் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பாஸ்டன், ஸ்ரீகாந்த் போன்ற மற்றவர்கள் செய்வதும் கூட கிட்டதட்ட அதுதான். சொல்லப் போனால் பாஸ்டன் செய்வது அதைவிட மொட்டையாய் சௌவுதியை, சீனாவை காட்டி மட்டையடி கேள்விகள் எழுப்பும் வேலையைத்தான் செய்கிறார். இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடந்து, பாகிஸ்தான் எல்லையில் இராணுவம் குவிக்கப் பட்டு, போரின் தீவிரம் ஊசலாடிகொண்டிருந்த போது, அருந்ததியிடம் (ஒரு அணு ஆயுத தாக்குதலின் சாத்தியம் காரணமாய்) 'இந்தியாவை விட்டு வெளியேறிவீர்களா?' என்று கேட்டபோது, 'இதை விட சுதந்திரமாக என்னை போன்ற ரவுடியை வேறு எந்த நாடு இப்படியே இருக்க அனுமதிக்கும்?' என்று கேட்டிருப்பார். (இணையத்தில் பேட்டியை மேலோட்டமாய் தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை.) இந்த பேட்டி மட்டுமில்லாது இந்திய நாட்டில் தனக்கு இருக்கும் உரிமைகள் பற்றிய எல்லா சுய உணர்வும் அவருக்கு இருப்பதை அவரது எழுதுக்களில் உணர முடியும். அவர் பேசுவது இந்த நாட்டின் அதிகாரமற்ற மக்களின் மீது அரசும் சமூகம் பெய்து வரும் விசாரணைக்கு உட்படாத அங்கீகரிக்கப் படும் வன்முறை பற்றி. அதை பேசினால் 'டிக்கெட் எடுத்து தருகிறேன். கொரியா போகிறாயா, சவுதி போகிறாயா?' என்று மெண்டல்கள் (வேறு வழிவகையின்றி) கேட்பதை போலவே, கொஞ்ச நஞ்ச புத்தியும் சமூக அக்கறை உள்ளவர்களும் கூட கேட்கிறார்கள். செப்டம்பர் 11ற்கு பிறகு, அதை முன்வைத்தும் அதற்கான காரணங்களை பற்றியும் விமர்சனமாய் பேசும் எல்லோரையும் 'ஆஃப்கானிஸ்தானுக்கு போ!' என்ற அயோக்கியத்தனமான, அதேநேரம் முட்டாள்தனமான ஒற்றை வசையில் எதிர்கொள்வதை போலத்தான் இதுவும். இந்திய அணுகுண்டு சோதனை பற்றி விமரசனமாய் பேசியவர்களையும் 'பாகிஸ்தானுக்கு போ!' என்று பாராளுமன்றத்திலேயே பேசியதன் தொடர்ச்சி மட்டுமே. அமேரிக்க சிவில் சமூகம் பற்றியும், அதன் லிபரல் தன்மை பற்றியும் அருந்ததியே (ஈராக் போரை முன்வைத்த கட்டுரைகளில்) பேசியிருக்கிறார். மீண்டும் மீண்டும் (ஒரு கட்டத்தில் அமேரிக்க வெறுப்பு என்பதின் ஆபத்தான பரிமாணம் பற்றி சொல்லும் போது) அமேரிக்க அரசிற்கும் அமேரிக்க சமூகத்திற்கும் உள்ள வேறுப்பாட்டை மனதில் வைக்க வேண்டிய அவசியம் பற்றி பேசி வருகிறார். அமேரிக்கா என்ற நாட்டின் அரசு, உலகின் மற்ற நாடுகள் மீது அவிழ்த்து விட்டு பயங்கரவாதம் பற்றி பேசினால், அங்கிருக்கும் அதன் மக்களுக்கான சமூக உரிமைகள் பற்றி பேசுவதாகாது. அரபு நாடுகளின் ஜனநாயகமின்மை பற்றி அருந்ததியும் ஒப்புக்கொண்டே பேசியிருக்கிறார். (மீண்டும் ஒரு பழைய கட்டுரையில், அது ராயர் காப்பி கிளப்பில் கூட விவாதிக்கப் பட்டதாய் ஞாபகம்). சவுதியில் இருப்பது மிக மூர்க்கமான சர்வாதிகாரம் மிகுந்த மத அடிப்படைவாத அரசு என்பதைத்தான் சாம்ஸ்கியிலிருந்து அருந்ததி வரை சொல்லி வருகிறார்கள். சவுதியுடன் தோழமை பாராட்டும் அமேரிக்கா, ஈராக்கில் 'ஜனநாயகத்தையும் மதசார்பின்மையையும் கொண்டுவருவதையும்', தாலிபான்களை அழிக்கும் அமேரிக்கா அதைவிட அடிப்படைவாதத்தை நடைமுறை படுத்தும் சவுதியை அங்கீகரிப்பதையும் முன்வைத்து பேசுகிறார்கள். ஜனநாயகம் மத சார்பின்மை அடைப்படையில் போராடியதற்கு பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு அமேரிக்கா, இஸ்ரேல் மற்றும் வரலாறு தந்த பரிசை முன்வைத்து கேள்வி எழுப்புகிறார்கள். இப்படி பிரச்சனைகளை பேசுவதை திரித்து குண்டக்க மண்டக்க கேள்விகளை கேட்பதும் அவதூறு செய்வதும்தான் எல்லா வகை தீவிர தேசியவாதிகள் தொடர்ந்து உலகம் முழுவதும் செய்து வரும் வேலை. இந்த லட்சணத்தில் அவர் sweeping statements and arrogant judgement வைத்து கவன ஈர்ப்பு செய்வதாக பாஸ்டன் பாலாஜியின் தீர்ப்பு வேறு. அவர் பதிவிலேயே அருந்ததியை முட்டாளாக வர்ணித்து மகா மட்டமான ஸ்வீப்பிங் கம்ண்டுகளை நண்டு சிண்டுகள் எல்லாம் எழுதியிருக்கின்றன. ஒருவர் தாலிபானை அருந்ததி ஆதரித்ததாக அபாண்டமாய் புளுகுகிரார். சைனாவின் அணை பற்றி ஏற்கனவே பேசியுள்ள அருந்ததியை, அது குறித்து என்ன சொல்லுவார் என்று வழக்கமான மட்டையடி கேள்வியை ஸ்ரீகாந்த் கேட்கிறார். தனது ஒவ்வொரு நிலைபாடுகளுக்கும் அவதானிப்புகளுக்கு பின்னாலும் ஏராளமான தகவல்கள், வாதங்கள், ஆதாரங்கள் தரும் அருந்ததி எழுதிவது ஸ்வீப்பிங்காக தெரிகிறது, மட்டையாய் பல ஸ்வீப்பிங் வாக்கியங்கள் எழுதியவர்களுக்கு, அருந்ததி எழுதியதை திரித்தவர்களுக்கு, புளுகியவர்களுக்கு நன்றி சொல்லி பாராட்டு வேறு. தனிநபர் முட்டாள்தனமாய் இருப்பதோ, அதையே அறிவு என்று நம்பி பெருமையாய் வெளிப்படுத்துவதோ பிரச்சனையல்ல. சமூகத்திற்கு அத்யாவசியமான இயல்பு அது என்று நினைக்கிறேன். அதையே மொத்த சமூகமும் வியந்து கொண்டாடுவதுதான் சாக்ரடீசை கொல்வது போன்ற அழிவு. அதை பார்த்துதான் இந்த பதிவை எழுத வேண்டி வந்தது. கொஞ்சம் உருப்படியாய் அடுத்த பதிவில் எழுத உத்தேசம். முடிக்கும் முன் கடைசியாக, ரவி ஸ்ரீனிவாசின் பதிவை படித்து கொஞ்சம் ஆச்சரியமாக இருந்ததை சொல்லத்தான் வேண்டும். கடந்த சில மாதமாய் அவர் பதிவுகளை படித்து அடைந்து வரும் nauseaவிற்கிடையில் இப்படி எதையாவது நிதானமாய் ஒரு விமர்சனத்தன்மையுடன் அவரால் எழுத முடியும் என்று பார்க்க ஆறுதாலாய்தான் இருக்கிறது. ரவி வழக்கம் போல மொட்டையாய் சொல்லும் தீர்ப்புகளை (இரண்டாவது பத்தி), மற்றும் தனது எழுத்தில் வெளிபடும் மொண்ணையான அறிவுபூர்வத்திற்கு மேலாக அலட்டிக்கொள்வதை (உதாரணமாய் ' But globalization is a more complicated issue than both would like us believe.') எல்லாம் தவிர்த்து (வேறு என்ன அதை செய்வதாம்!) கொஞ்சமாவது விஷயபூர்வமாய் சொல்லிய விஷயத்தை எடுத்துக் கொண்டால், அவை ஏற்கனவே பலராய் வேறு சந்தர்பங்களில் விவாதிக்கப்பட்ட விஷயம். நீதி மன்றம் வர்க்க சார்புடையதா என்பது பற்றி ஏற்கனவே கட்டுரைகள் எழுதப்பட்டு, பதிலாக இது போன்ற மொட்டை வாதங்கள் எல்லாம் காலகாலமாய் வந்தாகி விட்டது. ஆனால் ரவிக்கு அருந்ததி என்ன சொன்னார் என்றே புரியவில்லை என்பதுதான் அடிப்படை பிரச்சனை. அருந்ததி ஜனநாயகத்தில் அறுதியாய் தீர்மானிக்கும் உரிமை நீதிமன்றத்திடம் இருக்கும் சிக்கல் பற்றியும், அந்த அதிகாரம் சின்ன விமர்சனம் என்பதற்கு கூட அப்பாற்பட்டு இருப்பதையும் பற்றி பேசியிருக்கிறார். வழக்கமாய் எதையும் வாசித்து உள்வாங்கும் திறனும் பொறுமையும் இல்லாத ரவி, நீதிமன்றம் ஏழைகள் சார்புடையதா இல்லையா என்று z-axisஇல் ஜல்லியடிக்கிறார். நீதிமன்ற தீர்ப்புகள் சூழலியல் சார்பாக இருப்பதையும் சொல்கிறார். அவர் செய்திருக்க வேண்டியது தீர்மானிக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும் தளம் இருக்கிறதா என்பதை பற்றி இருந்திருக்க வேண்டும். நீதி மன்ற அவமதிப்பு என்ற அஸ்திரம் பற்றி பேசியிருக்க வேண்டும். இப்படி தொடர்பில்லாத ஒன்றை பற்றி பேசியே அறிவு பாவனை செய்வது பலரின் திட்டமிட்ட அணுகுமுறைதான். ஆனால் ரவி பாவனை செய்யவில்லை. அவர் சீரியசாகவே அருந்ததி சொன்னதை புரிந்து கொள்ளாமல் எழுதியுள்ளார். தனது அதே மொண்ணையான வாசிப்பில், நக்சலைட்டுகளை அருந்ததி ரொமாண்டிசைஸ் செய்வதாக சொல்கிறார். இந்துத்வவாதிகளும் மற்றவர்களும் அப்படி திரிப்பார்கள். ரவி திரிக்கவில்லை; மாறாக தனது மொண்ணையான பார்வையாலும் அவசரபுத்தியாலும் அப்படி புரிந்து கொள்கிறார். "In any case the origins of the Naxal movement could be traced to the late 1960s. The Maoists by and large still swear by Stalin and Mao. They still have faith in proletarian dictatorship." என்ன ஒரு அரிய தகவல்கள்! 'நக்சலைட்டுகள் வன்முறை பாதையில் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள், அவர்கள் அகிம்சை போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை' என்றெல்லாம் ஏனோ சொல்லவில்லை. இதெல்லாம் தெரியாமல்தானே அருந்தி போன்றவர்கள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்! ஒரிசாவிலும் ஜார்கண்டிலும் என்ன நடக்கிறது, அதன் பரிமாணக்கள் என்ன என்று ஒரு மண்ணங்கட்டி புரிதலும் இல்லாமல் தகவல்களையும், ஐடியாக்களையும் முன்வைத்து பதிவு முழுக்க மட்டையடிகள். அருந்ததி பேசியிருப்பது வன்முறையின் பரிமாணம், போராட்ட வழிமுறைகள் அரசு எதிர்கொள்ளும் விதம் பற்றியது. நட்சத்திர வாரத்தில் நான் நர்மதாவை முன்வைத்து எழுதிய பதிவு பேசும் விஷயங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. அவர் நக்சலைட்டுக்களை ரொமாண்டிசைஸ் செய்யவில்லை. ஒரு வேளை எதையாவது அவர் அப்படி ரொமாண்டிசசஸ் செய்திருந்தால், அது நர்மதாவின் வன்முறையற்ற போராட்டம் பற்றி இருந்திருக்கும். இந்த விஷயம் எதுவும் புரியாமல் மொட்டையாய் ' It is one thing to oppose state repression in the name of containing naxals, it is another thing to romanticize the Naxal/Maoist movement' என்று மேதவித்தனமான பாவனையில் ஒளருவது ரவிக்கே உரிய தனித்தன்மை. ரவிக்கு பிரச்சனை வயிற்றில் பசி மட்டுமல்ல ("the calls from the stomach are becoming louder"), வயிற்றின் கீழே நடப்பதுடன் தொடர்புடையது. இன்னொரு பதிவு எழுத உத்தேசம் உள்ளது. இரவு கால்பந்தாட்டம் அனுமதித்தால்! Monday, June 05, 2006நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...!நன்றி! .. நன்றி!!.. நன்றி!!! எல்லாவற்றையும் வாசித்தவர்கள், சிலவற்றையாவது வாசித்தவர்கள், வாரத்தின் முதல் பதிவில் பின்னூட்ட மிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள், பின்னர் தொடர்ந்து பின்னூட்டியவர்கள், கில்லியில் போட்ட பிரகாஷ், எல்லாவற்றிற்கும் காரணமான மதி, தமிழ்மணம் நடத்தும் காசி, நான் உடன் செலவழிக்க வேண்டிய நேரத்தை தியாகம் செய்து எழுதுவதில் மட்டும் என்னை ஈடுபட அனுமதித்த துணைவி, தூக்கத்தை மட்டும் தொந்தரவு செய்து மற்றபடி சுதந்திரமாய் விட்ட மகன் அனைவருக்கும் நன்றி. முதல் பதிவில் எதிர்பார்ப்பை நண்பர்கள் வெளிபடுத்தியபோது கொஞ்சம் டென்ஷனாகவே இருந்தது. எழுத விஷயம் இருந்தும் தட்டச்சு செய்ய முடியுமா என்ற பயம்தான். தொடர்ந்து எழுதுவதை மட்டுமே ஒரே வேலையாய் வெறித்தனமாய் வைத்திருந்தாலும் எழுத நினைத்த சில விஷயங்களை எழுத முடியவில்லை. செவ்வாய் இரவு வரை முன்தீர்மானித் திருந்ததை அப்படியே செயல்படுத்த முடிந்தது. புதனில் ஒரு பதிவு குறைந்தது. வியாழன் தொடங்கி நினைத்தவற்றை எழுத இயலவில்லை. ஆனால் எழுத நினைக்காத சிலவற்றை, இந்த வார நிகழ்வுகளுடன் சம்பந்த முடைய சிலதை எழுதினேன். இளயராஜா பற்றிய தொடரில் மொத்தம் நான்கு எழுத நினைத்தேன். இரண்டுதான் முடிந்தது. குவாண்டம் கணித்தல் பற்றி இரண்டு பதிவுகள் போட நினைத்தேன். ஒன்றுதான் முடிந்தது. ஜப்பானை முன்வைத்த சில பார்வைகளை படங்களுடன் எழுத நினைத்ததை எழுத முடியவில்லை. நம் ஊரில் இருக்கும் மாற்று வைத்தியங்கள் அதன் பிரத்யேகங்கள் பிரச்சனைகளை தொட்டு, என் பட்ரஹள்ளி அனுபவத்தை எழுத நினைத்ததை எழுத இயலவில்லை. தமிழ் நாட்டை பற்றி பலர் வைத்திருக்கும் சினிமா பின்னால் போவதான பிம்பம் போன்றவற்றை முன்வைத்து வெகுகலாச்சாரம் பற்றியும், இந்துமதம் அதன் வெகுகலாச்சாரப் பண்மைதன்மை, அதே நேரம் அது கொண்டிருக்கும் சாதியம், அதிலிருந்து முகிழ்ந்த ஆனால் அடிப்படையான இந்துதன்மைக்கு எதிரான இந்துத்வம், இதன் பிண்ணணியில் காந்தி பெரியாரை எப்படி பார்ப்பது என்று என் பார்வவகளை வரிசையாக ஒரு நான்கு பதிவுகளாக முக்கியமானதாக எழுத நினைத்ததை தொடங்கவே இல்லை. இதன் காரணமாகவே அரசியல் நெடி இந்த வாரம் குறைவு. அதுவும் நல்ல விஷயம்தான். எழுதியிருந்தால் அது சிறிதளவாவது ஆழமான முறையில் பிரச்சனைக்குள் போயிருக்கும் என்று தோன்றவில்லை. இப்படி நினைத்த பல விஷயங்கள் நடக்கவில்லை. புதனுக்கு பிறகு ஏற்பட்ட சோர்வும், அலுப்பும் இதற்கு முக்கிய காரணம். மேலும் ஸ்டாமினாவிற்கு ஒரு எல்லை இருக்கிறதே! நர்மதாவை முன்வைத்த பதிவை எழுதும் போது, அலுப்பு எழுத்தில் கலந்து, எழுத்து நடை சற்றே அலையவும் வேண்டி வந்தது. ஆனாலும் அது நிறைவாய் வந்திருப்பதாகவே முடித்தவுடன் நினைத்தேன். தங்கமணி அதை குறிப்பிட்டதும் திருப்தியாக இருந்தது. எழுதாத பதிவுகளில் சில பத்திகள் எழுதியுள்ளேன். அவற்றை முடித்து நட்சத்திரமில்லாத வாரங்களில் எழுத மீண்டும் இறைவன், சாத்தான், சார்பற்ற இயற்கை கடைக்கண் காட்ட வேண்டும். மீண்டும் அனைவருக்கும் நன்றி. அடுத்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்! Sunday, June 04, 2006சாக்ய சங்கம் -3.இதை பற்றி எழுத அலுப்பாகவும் வெட்கமாகவும்தான் இருக்கிறது. சாக்ய சங்கம் பற்றி இரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறேன். அதற்கான சுட்டி நிரந்தரமாய் என் பதிவின் பக்கவாட்டிலும் இருக்கிறது. இது குறித்த கடந்த பதிவில் சொன்னது போல், மொத்தமாய் இரண்டு நண்பர்கள் தமிழ் வலைப்பதிவு உலகத்திலிருந்து உதவியிருக்கிறார்கள். வலைப்பதிவில் அறிமுகமாகாத இன்னொரு நண்பரும் உதவியிருக்கிறார். ஆக மொத்தம் மூன்று. இவ்வாறு நூற்றுக்கணக்கில் மக்கள் வாசிப்பதாக சைட் மீட்டர் தகவல் தரும் என் பதிவின் வாசிப்பவர்களில் மூன்று பேர்தான், இயற்கை அழிவால் நிராதரவாக்கப் பட்ட குழந்தைகளுக்கு உதவுவது என்ற ஒரு உயர்ந்த நோக்கத்தில் பங்கு பெறுவார்கள் என்பதில் எனக்கு வெட்கமாய் இருக்கிறது. ஏன் எனக்கு வெக்கமாய் இருக்கிறது என்றால், ரோஸாவசந்த் என்ற ஒருவன் விண்ணப்பித்த காரணத்தினால் மட்டுமே ரெஸ்பான்ஸ் இப்படி இருக்கக் கூடும் என்று நினைப்பதால். ஆனால் அதற்கு செய்யக் கூடியது எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நான் மாறமுடியாது என்பது மட்டுமல்ல, நான் பங்குகொள்ளும், எனக்கு தெரிந்த ஒரு விஷயம் தொடர்பாக நான் மட்டும்தானே விண்ணப்பிக்க முடியும்! உதவி செய்த மூன்று நபர்களும் அவர்கள் பெயரை நான் வெளியிடுவதை விரும்பவில்லை. குறிப்பாக வலைப்பதிவில் இருப்பவர்கள், தங்கள் பெயர் குறிப்பிடப்பட்டால், அது சாக்ய சங்கம் தொடர்பான ஒரு முன் அனுமானம் ஏற்பட்டு எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது சரி என்று எனக்கு தோன்றவில்லை. அப்படி ஒரு எதிர்விளைவு இருக்கக் கூடுமெனில், அது விண்ணப்பம் என்னிடமிருந்து வந்தபோதே நிகழ்ந்திருக்கும். எனினும் நட்சத்திர வாரம் என்பது ஏற்படுத்தி தந்த வாய்ப்பை கருதி, இதை எழுதுவதை கடமையாக எண்ணி இந்த பதிவை எழுதுகிறேன். ஏற்கனவே விவரங்கள் விரிவாய் எழுதப்பட்டுள்ளது. இது வரை படிக்காதவர்கள் கீழே சுட்டலாம். நன்றி! முதல் பதிவு: Sakya Sanga இரண்டாம் பதிவு : சாக்ய சங்கம் -2. தர்மபுரியிலிருந்து மைசூருக்கு ஜைன கருத்துக்களை போதிக்கும் பணியில் நடைபயணம் மேற்கொண்டிருந்த நிர்வாண ஜைன சாமியார்களை, நேற்று முந்தய தினம் பெரியார் திகவினரும் திமுகவினரும் சுற்றி வளைத்து போகவிடாமல் தடுத்து கலவரம் செய்ததில், அவர்கள் (சீடர் ஒருவரின்) கெமிக்கல் தொழிற்சாலையில் இரவு முழுக்க தஞ்சம் கொள்ள வேண்டியிருந்தது. போலிஸ் திகவினரை சமாதானப்படுத்த முயல, அவர்கள் சாமியார்கள் கைது செய்யப்படவேண்டும், துணி அணியவில்லையெனில் சாமியார்களை போகவிடமாட்டோம் என்றும் உறுதியாய் நின்று போராடியிருக்கிறார்கள். இந்துத்வ இயக்கங்கள் வந்து சாமியார்கள் சார்பாக குதித்து பிரச்சனை பெரிதாகுமோ என்றிருந்த நிலை மாறி, ஒரு வழியாய் நேற்று ஒரு சமாதான உடன்படுக்கைக்கு வந்தார்கள். சாமியார்களை சுற்றி சதுர வடிவில் துணியினால் ஒரு திரையமைத்து, அந்த கூண்டிற்குள் அவர்கள் நடந்து, பாதுக்காப்பான பூமியான கர்நாடகத்தை அடைய முடிவு செய்துள்ளனர். ஆனால் திகவினருக்கு இரவு நேரத்தில் சாமியார்கள் துணியை விட்டு வெளியே வந்துவிடுவார்களோ என்று சந்தேகமாம். கர்நாடக எல்லையை அடையும் அவர்களை கண்காணித்தபடி கூட செல்லப் போகிறார்களாம். பொதுமக்கள் யாரும் பார்காத நேரத்தில் நிர்வாணமாய் வெளியே வந்தால், அதனால் யாருக்கும் பிரச்சனை இல்லையெனில், அதிலும் திகவினருக்கு என்ன பிரச்சனை என்று புரியவில்லை. அப்படி நிர்வாணமாய் இருப்பதே தவறு என்றால், இனி திககாரர்கள் குளிக்கும்போதெல்லாம் கேமேராவைத்து எந்த கணத்திலாவது பொட்டு துணியில்லாமல் இருக்க நேரிடுகிறதா என்று கண்காணித்து தண்டிக்க வேண்டியதுதான். அடுத்த அபத்தம் என்னவென்றால் கர்நாடகத்தில் நுழைந்து போராட திககாரர்களை எது தடுக்கிறது என்று புரியவில்லை. கர்நாடகத்தில் நுழைய எதாவது விசா பிரச்சனையா அல்லது கர்நாடகத்தில் நிரவாணமாய் அலைந்தால் தப்பில்லை என்று எதாவது தமிழ்ததனமான கருத்து இருக்கிறதோ என்னவோ? அது எப்படியோ பெரியார் பிறந்த தமிழகம் பாதுக்காப்பற்ற பிரதேசமாகவும், கர்நாடகம் பாதுகாப்பான பிரதேசமாகவும் நிர்வாண சாமியார்களுக்கு இருக்கிறது. திக நடந்து கொண்டது சிவசேனா பஜ்ரங் தள் நடத்தும் அராஜகங்களை விட எந்த விதத்திலும் குறையாத ஒரு காட்டுமிராண்டித்தனம். அவர்களுக்கு மதம் என்றால் இவர்களுக்கு பகுத்தறிவு (என்பதாக இவர்கள் கற்பித்து கொண்டது ) தூண்டுதலாக இருக்கிறது. பெரியார் ஜெர்மனி சென்ற போது, அங்கிருந்த நிர்வாண சங்கத்தில் சேர்ந்து, தானும் நிரவாணமாக படம் எடுத்து கொண்டார். அந்த விவரமெல்லாம் எல்லா பெரியார் சீடனுக்கும் தெரியும். மதரீதியாய் நிர்வாணமாவது காட்டுமிராண்டித்தனம், மேற்குபோய் ஏதாவது நவீன எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து நிர்வாணமாவது பகுத்தறிவு என்று பகுத்தறிவுப்பூர்வமான காரணங்கள் ஏதாவது அவர்களிடம் இருக்கலாம். ஆனால் இப்போது எதிர்ப்பதற்கு இவர்கள் சொன்ன முக்கிய காரணம் ஆபாசம். ஆபாசத்திற்காக கைது செய்யப்பட வேண்டும். எப்படி பெரியார் நிரவாணமாய் போஸ் கொடுத்தது ஆபாசம் இல்லை, இது ஆபாசம் என்று பகுத்தறிவு கொழுந்துகள்தான் விளக்க வேண்டும். ஒரு மனிதருக்கு பொது இடத்தில் நிரவாணமாய் இருக்க உரிமை இருக்கிறதா என்று கேட்டால் அது சிக்கலான கேள்வி. மேற்கில், ப்ரான்ஸ் போன்ற நாட்டில் கூட கடற்கரையில் முழுவதும் நிரவாணமாக பொதுவாய் உரிமை இல்லை. (ஆண்களும் பெண்களும்) கீழேயாவது சின்னதாய் ஒரு கைக்குட்டையாவது அணிந்திருக்க வேண்டும் (ஆனால் அது போதுமானது.) கடற்கரையில் நிரவாணமாக இருக்கவே சில குறிப்பிட்ட கடற்கரைகளை ஒதுக்கியிருக்கிறார்கள். அங்கே நிர்வாணமாகலாம். அமேரிக்க பல்கலைகழகம் ஒன்றில் (கலிஃபோர்னிய, பெர்க்லி) ஒரு மாணவன் (யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல்) நிர்வாணமாய் வரத் தொடங்க, சட்டத்தில் அதை தடுக்க வழி வகையில்லாத்தால், கொஞ்ச நாட்கள் பொறுத்து பிறகு ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து சிறிய ஷார்டஸாவது அணிய கட்டாயப் படுத்த வேண்டியதாயிற்று. (அங்கே எல்லாம் மதவாதிகள் பழைமைவாதிகளின் பிரச்சனை என்றால், இங்கே பகுத்தறிவு பேசுபவர்களின் பிரசனை.) ஒரு மனிதரின் (ஆணொ, பெண்ணோ) நிரவாணமாக்கி கொள்ளும் உரிமை என்பது, அந்த குறிபிட்ட இடத்தில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை முன்வைத்தே இருக்க முடியும். ஜைன சாமியார்கள் பேருந்து நிலயத்திலும், கடைதெருவிலும் நிரவாணமாகவில்லை. தேர்ந்தெடுத்த ஒரு பாதையில், தங்கள் வாழ்க்கை முறை பற்றி அறிவித்து துறவரம் பூண்டு நிர்வாணமாயிருக்கிறார்கள். அவர்கள் தங்களை பினபற்றும் சிலரை மட்டுமே சந்திக்க போகின்றனர். அவர்கள் செயலால் யாருக்கும் ஒரு தொந்தரவும் கிடையாது. (உதாரணமாய் பொது இடத்தில் பெண்கள் முன்னால் நிர்வாணமாகி காட்டுவது, அந்த பெண்கள் மீதான வன்முறையாக இருக்கும்.) அவர்களை வழிபடுபவர்கள் பார்க்கலாம், வணங்கலாம். மற்றவர்கள் கண்ணை மூடிக்கொள்ளக் கூட தேவையில்லை, அந்த பக்கமே போகாமல் இருக்கலாம். இப்படி சமூகத்திற்கு எந்த தொந்தரவும் இல்லாத ஒரு விஷயத்திற்காக இந்த முட்டாள்கள் இரவு முழுக்க கொட்டும் மழையில் தேவுடு காத்து போராடியிருக்கிறார்கள். தமிழகத்தில் இன்னமும் ரெட்டை கிளாஸ் இருக்கும் பிரச்சனைக்காகவோ (சரி, அதையெல்லாம் பேசினால் தமிழர்களை பிரித்து சண்டை போட வைத்ததாகிவிடும்), அனைவரும் அர்சகராவதை நடைமுறை யதார்த்தமாக்கவோ, தமிழில் அர்ச்சனை செய்வதையும் நடைமுறை யதார்த்தமாக்கவும் இத்தனை தீவிரத்தை கட்டவில்லை. இத்தனைக்கும் ஜைன சாமியார்கள் மற்ற செக்ஸ் சாமியார்கள் போல எந்தவித லீலைகளிலும் ஈடுபடவில்லை. நிர்வாணம் என்று தாங்கள் நம்பும் தத்துவம் சார்ந்து ஆடையில்லாமல் இருக்கிறார்கள். அதற்கு வசதி ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமலும், மற்றவர்களால் அவர்களுக்கு தொந்தரவு இல்லாமலும் பார்த்து கொள்வதுதான் ஒரு நாகரீக, சகிப்புத் தன்மையுள்ள, பரந்த மனப்பான்மை கொண்ட, பண்மைதன்மையை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் ஒரு சமூகம் செய்ய வேண்டிய கடமை. திகவின் ஒற்றை பரிமாண, கச்சாவான, குதிரை தட்டை பகுத்தறிவு பார்வை அதை நோக்கி பயணிக்காது என்பதற்கு முக்கியமான் உதாரணம் இது. பெரியாரின் 50 ஆண்டுகால இயக்கத்தை, பேச்சுக்களை, எழுத்துக்களை திகவினர் Crudeஆக எடுத்து கொண்டு, மொண்ணையான பகுத்தறிவு பேசுவது உண்மைதான், என்றாலும் இந்த விஷயத்தில் பெரியாரிடமே அடிப்படையில் பிரச்சனை இருப்பதாகவே தோன்றுகிறது. கடவுள் கதைகளை முன்வைத்து, அதன் ஆபாசங்கள் பற்றி பேசியது, கடவுள்களின் ஒழுக்கக் கேட்டை விலாவாரியாக பேசியது என்ற விஷயத்தில் பெரியார்தான் இதற்கான மதிப்பீடுகளை இவர்களுக்கு ஏற்படுத்தி தருகிறார். அப்படியானால் அவர் தன் 'ஒழுக்க கேட்டை' பற்றி வாக்குமூலம் கொடுத்ததும், திருமணத்தை மீறிய உறவுகளுக்கு தார்மீக நியாயத்தை (இரு பாலினருக்கும்) அளித்ததும் அதற்கு முரணாக தோன்றும். பிரச்சனை என்னவென்றால் பெரியார் ஒரு கூட்டத்தை நோக்கி உரையாட வேண்டியிருக்கிறது. ஒரு பக்கம் அவர்களின் மதிப்பீடுகளை உடைக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் அவர்களின் மதிப்பீடுகளை தனது பார்பன எதிர்ப்பிற்கு, ஜாதிய எதிர்ப்பிற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. அதனால்தான் 'சூத்திரன் என்றால் தாசிமகன்;' என்று மீண்டும் மீண்டும் மேடைதோறும் சொல்கிறார். அதே நேரம் வேசியாயிருப்பதிலும், வேசி மகனாய் இருப்பதில் கேவலம் எதுவுமில்லை என்றும் சொல்கிறார். பெரியாருக்கு தான் என்ன பேசுகிறோம், எங்கே பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம் என்பதை பற்றி எல்லாவித தெளிவும் இருந்தது. அதற்கு ஏற்ப தனது நிகழ்த்துதல் கலையை வெற்றிகரமாய் நிகழ்த்திக் காட்ட முடிந்தது (இலக்கை அடைவதில் அது வெற்றி பெற்றதா என்பது வேறு விஷயம்.) பெரியாரின் செயல்பாடுகள் பற்றிய எந்த புரிதலும் தெளிவும் இல்லாத சீடர்கள், ஒரு மதவாதியின் மூர்கத்தோடு சமூகத்தை அணுகி கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்க, பகுத்தறிவு கொண்டு உண்மையை அடையமுடியும் என்கிற பார்வை இன்று பல தளங்களில் பொய்ப்பிக்கப் பட்டு, பகுத்தறிவின் வன்முறை பற்றியும், அதன் அதிகாரம் பற்றியும் பேசப்பட்டு, பகுத்தறிவு என்பதே இன்று கட்டுடைக்கப் பட்டு வருகிறது. யதார்த்தவாத எழுத்தை கொண்டு எப்படி யதார்தத்தை படம் பிடிக்க இயலாதோ, அதே போல பகுத்தறிவை கொண்டு உண்மையையும் அடையமுடியாது. ஆனால் யதார்த்தவாதம் யதார்த்தத்தை படம் பிடித்துவிட்டது போல் பவனை செய்யும். அது போல பகுத்தறிவு பார்வையும் தான் உண்மையை பேசுவது போல், தான் மட்டும்தான் உண்மையை பேசுவது போல் பாவனை செய்யும். இங்கேதான் அதன் ஆபத்து அடங்கியிருக்கிறது. இன்று பல சமூகவியல் கலாச்சார ஆய்வுகள் பகுத்தறிவை கட்டுடைத்து மறுபார்வைகளுக்கு அழைக்கிறது. பகுத்தறிவு பூரவமாகவே பாத்தாலும் கூட, பகுத்தறிவு வெற்றிகரமாய் எந்த பிரச்சனயும் இல்லாமல் ஒரு கணித சட்டகத்தில்தான் செயல்பட முடியும். இயற்பியல் உட்பட்ட மற்ற துறைகளிலும், கணித சட்டகத்தில் இயங்கும் போது மட்டுமே, அங்கே அறிவியல் பூர்வமான ஒரு பகுத்தறிவு பார்வை செயல்படுவதாக கூற முடியும். ஆனால் கணித சட்டகத்தில் நாம் அரசியலும், இலக்கியமும், சமூகவியல் ஆய்வுகளும் செய்ய இயலாது. அதனால் பகுத்தறிவு என்பதன் பயன் ஒரு எல்லை வரைதான் இருக்க முடியும். இந்த இடத்தில் இந்துத்வவாதிகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப அவர்கள் மாறிக்கொள்கிறார். கோல்வால்கர் ஹிட்லரை புகழ்ந்து பேசியதற்காக இன்று அவர்கள் புகழ்வதில்லை. கோல்வால்கர் சொன்னதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்றய காலத்துக்கு ஏற்ப இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் நவீன கருத்தாக்கங்கள், நவீன அறிவியல் அனைத்தையும் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆராய்கிறார்கள். அந்த வகையில் மற்ற மத அடிப்படைவாதிகளிலிருந்து அவர்கள் வேறுபடுகிறார்கள். இந்த வேறுபாடு ஒரு சில விஷயங்களில் ஆபத்துக்களை தடுப்பதாகவும், ஒரு சில விஷயங்களில் இவர்கள் இன்னும் பெரிய ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். எப்படி என்று இந்த பதிவில் ஆராயப் புகமுடியாது. ஆனால் சொல்ல வந்த விஷயம் என்னவெனில், இந்துத்வவாதிகள் காலத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொள்கிறார்கள், திகவினர் (ஒருவகையில் கம்யூனிஸ்டுகளும்) ஒரே சூத்திரத்தை மத அடிப்படைவாதிகளை போல பற்றி கொண்டு, காலத்துக்கு ஏற்ற பரிசீலனைகளில் ஈடுபடாமல் இயங்கிவருகிறார்கள். இதில் யார் உயிர்த்து இருப்பார்கள், எந்த தத்துவம் சாகும் என்பதை தெரிந்துகொள்ள பரிணாம அறிவியல் தேவையில்லை. (செய்திகளுக்கு ஆதாரம் :இன்றய நேற்றய டெகான் க்ரோனிகிள்) நர்மதா பற்றிய ஒரு படத்தை பார்க்க. நர்மதா குறித்த செய்திகளை கொஞ்ச நாட்களாக காணும். செய்திகள் இல்லையென்றால் பிரச்சனையில்லை என்று பொருள் இல்லை. அணை கட்டும் பணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. புலம் பெயர்க்கப்பட்டவர்களின் மறுவாழ்வு என்பது ஏமாற்று வேலையாகத்தான் இருக்கிறது. மேதா பட்கர் உண்ணாவிரத மிருந்த சம்பவ காலத்தில் இவ்வாறு எழுதியிந்தேன். "ஒருக்காலும் அரசு அணைக்கட்டு தொடர்பான தன் நிலையை தளர்த்தப் போவதில்லை. மிஞ்சி போனால் புலம் பெயர்க்கப் பட்ட மக்களுக்கான மறுவாழ்வு பற்றி மீண்டும் வாக்குறுதி அளிக்கலாம். அது நடைமுறையில் காலப்போக்கில் என்னவாகும் என்பதை மீண்டும் மீண்டும் வறலாறு சொல்கிறது." இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் நாம் சொல்லும் ஆருடம் பொய்த்து போகும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விட மிகுதியானது எது? ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கான வாய்ப்பு இல்லவே இல்லாமல்தான் இருக்கிறது. அரசு தங்களால் தேவையான மறுவாழ்விற்கான ஏற்பாடுகளை செய்ய முடியாது, அதற்கான நிலம் இல்லை என்று தெளிவாகவே சொல்லிவிட்டு, மீண்டும் மறுவாழ்வு பஜனையை சுப்ரீம் கோர்ட்டில் பாடுகிறது. மேதாவின் உண்ணவிரதம் தந்த அழுத்தத்தால், தனது அராசாங்கத்தின் மந்திரிகள் நேரில் சென்று பார்த்து, அவர்கள் வாக்குமூலம் தந்த யதார்த்தத்தை உச்சநீதி மன்றத்தில் மாற்றி பேசுகிறது. இது குறித்து விரிவாய் பேசுவது இந்த பதிவின் நோக்கமல்ல. விரிவாய் பேசினால், தினம் ஒரு பதிவாக ஒரு வருடத்திற்கு எழுதும் அளவிற்கு விஷயமிருக்கும். இணயத்தில் எல்லாம் பேசப் பட்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடி தேவையான அளவு விஷயங்களை அறியலாம். நர்மதா மூலம் இந்திய அரசு என்ன வகை செய்தியை மக்களுக்கு, குறிப்பாக போராடும் மக்களுக்கு தருகிறது என்று பார்க்க வேண்டும். அரசு என்ற வலிமை மிகுந்த நிறுவனத்தை எதிர்த்த போராட்டத்தில், உரையாடல் என்பது இரு பக்கமும் ஏற்படும் நிர்பந்தங்களின் அடிப்படையிலேயே நிகழுகிறது. இவ்வாறான நிர்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்த எந்த ஒரு போராட்டமும் அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. (நெருக்கடிகள் தேவையில்லாமல் உரையாட முடியும் என்றால் போராட்டமே இல்லாமல் அரசை அணுகியிருக்க முடியும்.) இவ்வாறான நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் வன்முறை எத்தகைய பங்கை வகிக்கிறது என்பது சிக்கலான கேள்வி. அரசு (அதிலும் நாம் அனுபவிக்கும் 'ஜனநாயக அரசு') வன்முறையை எளிதில் கட்டவிழ்த்து விடாது. வன்முறையை அவிழ்த்து விட அதற்கு போராட்டம் ஒரு தீவிரமான நிலையை எட்ட வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் அரசின் எதிர்வினை அதீதமாய் இல்லாதிருப்பதை தங்களுக்கு சாதகமான நிலை என்று நினைத்து, முட்டாள்தனமாய் போராளி குழுக்கள் சகட்டு மேனிக்கு வன்முறையை பிரயோகித்து, அரசு எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த தீவிரமான சூழலை ஏற்படுத்தி தருகிறது. அதற்காகவே காத்திருக்கும் அரசு எதிர்பாராத வன்முறை கொண்டு மொத்த போராட்டத்தையும் ஒடுக்குவது ஒரு வழக்கமாக பல சந்தர்ப்பங்களில் இருகிறது. ஆதிவாசிகள் போன்ற அதிகாரமற்ற மக்களின் போராட்டங்களை அடக்க இத்தகைய தீவிரமான ஒரு நிலையை எட்டவேண்டிய அவசியம் கூட இல்லை. மிக மெலிதான வன்முறை தென்பட்டால் அது போதுமானதாயிருக்கிறது. துப்பாக்கி சூடு மூலம் பலரை கொல்லும் அளவிற்கான அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட முடிகிறது. இந்த வகையில் வன்முறையும் பயங்கரவாதமுமே வெல்வது உலகின் நியதியாக இருப்பது போலவே ஒரு தோற்றம் இருகிறது. உதாரணமாய் ஒரு தீவிரவாத குழுவுடன் அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருவது என்பது பயங்கரவாதத்தின் வெற்றியாகவே கருதமுடியும். தீவிரவாதக் குழுவின் தார்மீக நியாயங்களை உணர்ந்து எந்த அரசும் இறங்கி வந்த வரலாறு இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவிலும் அப்படித்தான், இலங்கையிலும் அப்படித்தான். தமிழர்களுக்கான நியாயங்களை உணர்ந்து புலிகளுடன் சிங்கள அரசு பேச வரவில்லை. போர்களத்தில் புலிகளை தாக்கு பிடிக்க இயலாமலே இறங்கி வருகிறது. அந்த வகையில் இது புலிகளின் பயங்கரவாதத்திற்கான வெற்றி மட்டுமே. புலிகளை சிங்கள அரசு வெற்றி கொண்டிருந்தால் பயங்கரவாதத்தை ஒழித்து கட்டியதாக சிலர் புருடா விடுவார்கள். ஆனால் அதன் பொருள் புலிகளின் பயங்கரவாதத்தை விட சிங்கள் அரசின் பயங்கரவாதம் பலம் வாய்ந்தது என்றுதான் அதை கொள்ள முடியும். பின்லேடனின் பயங்கரவாதத்தை விட அமேரிக்க அரசின் பயங்கரவாதம் பன் மடங்கு பெரியது. அதனால் உரையாடலுக்கு இறங்கி வரும் கட்டாயம் ஒரு நாளும் அமேரிக்காவிற்கு ஏற்பட்டதில்லை. தொடர்ந்த வெற்றிகளுடன் கேள்வி கேட்க நாதியில்லாமல் பயங்கரவாத பட்டியலின் முதலிடத்தில் அமேரிக்கா வீற்றிருக்கிறது. இந்த உதாரணங்களை கொண்டு பார்தால் பயங்கரவாதம்தான் வென்று வருவதாக தோன்றும். இப்படி நினைப்பதற்கு எதிருதாரணமாக காந்தியின், அவரால் உந்தப்பெற்ற மார்டின் லூதர் கிங், மண்டேலா போன்றவர்களின் போராட்டங்களின் வெற்றிகள் இருப்பதாக தோன்றுகிறது. இங்கே வன்முறை கலக்கவில்லை என்றாலும், இந்த வகை போராட்டங்களும் நெருக்கடிகளை அரசுக்கு ஏற்படுத்துவதன் மூலமே அரசை நிர்பந்திக்க முடிகிறது. ஆனால் வன்முறையால் போராட்டத்தை எதிர்கொள்ள நினைக்கும் அரசை இது குழப்பிவிடுகிறது. வன்முறையை எதிர்கொள்வது வலிமையான அரசுக்கு மிகவும் எளிது. ஒரு பக்கம் போராட்டத்தின் வன்முறை மூலம் நிகழும் பாதிப்புகள் பற்றி ஒரு அரசுக்கு கவலைகிடையாது. அதே நேரம் அந்த பாதிப்புகளை வாய்பாக கொண்டு அதைவிட பல மடங்கு வன்முறையை செலுத்தி மொத்த எதிர்ப்பையும் அமுக்கிவிட முடிகிறது. ஆனால் வன்முறையற்ற போராட்டத்தில் இத்தகைய ஒரு வாய்ப்பு அரசாங்கத்திற்கு கிட்டுவதில்லை. ஏனெனில் போரட்டம் பலதரப்பட்ட (வன்முறையற்ற) வழிமுறைகளை கொண்டு, அரசு இயங்கும் சட்டகத்திற்குள்ளாகவே அரசுக்கு நெருக்கடிகளை கொடுக்கிறது. இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் அரசுக்கு குழப்பம் இருப்பது இயல்பானதே. காந்தி அகிம்சையை தனது தத்துவ/அரசியல் பார்வையின் அடிப்படையாக கொண்டிருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் காந்தி அகிம்சை மீதான காதலினால் மட்டும் ஒரு வன்முறையற்ற போராட்டத்தை தேர்ந்தெடுக்கவில்லை. வன்முறையின் இந்த பரிமாணங்களை உணர்ந்தும் அதை தேர்ந்தெடுத்தார். அவருடைய போராட்டம் உலக அளவில் பலருக்கு உந்துதலாய் இருக்கிறது. (காந்தி மீது வேறு விமர்சனங்கள் இருப்பதை, குறிப்பாய் அம்பேதகாருக்கு எதிராக அவர் செயல்பட்டது, பூனா ஒப்பந்தம் இது போன்றவையை, இந்த இடத்தில் பேசவில்லை. போராட்ட வழிமுறை பற்றி மட்டுமே பேசுகிறேன்.) காந்தியின் வன்முறையற்ற போராட்டம் பலருக்கு, குறிப்பாய் நவீன இந்துத்வவாதிகளுக்கு மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு முட்டாள்தனமாக தெரிந்தது. போராட்டங்களின் மூலம் போராடுபவர்களுக்கும் அரசுக்கும் வன்முறையோடு இருந்த தொடர்பை காந்தி புரிந்து வைத்திருந்த விஷயம் அவர்களுக்கு பிடிபடவில்லை. ஆனால் வன்முறையற்ற போராட்டத்திற்கு காந்தி மட்டுமே உதாரணமாய் காட்டபட்டு, பெரியாரின் போராட்டமும் வன்முறையற்றது என்ற உண்மை திட்டமிட்டு மறக்கடிக்கப் படுகிறது, திரிக்கப்படுகிறது. ஆனால் பெரியார், காந்தி போல், தனது அரசியல் தத்துவங்களை அகிம்சையின் அடிப்படையில் கொண்டிருக்கவில்லை. பெரியாருக்கு அகிம்சையா, வன்முறையா என்பது ஒரு பிரச்சனையில்லை. ஆனால் காந்தியை போலவே, சொல்லப்போனால் காந்தியை விட தெளிவாக போராட்டங்களின் வன்முறைகளின் பின் மற்றும் பக்க விளைவுகளை பெரியாரும் புரிந்து கொண்டிருந்தார். அதனால்தான் 'பிராமணாள் ஹோட்டல்' என்ற ஒற்றை போர்டை நீக்க, மிக எளிதாக தாக்குதல் நடத்தி அதை சாதிக்க கூடிய ஒரு படைய தன் பக்கம் வைத்துருந்தும் நூறு நாட்களுக்கு வன்முறையற்ற போராட்டத்தை நடத்தினார். (அதையும் சில பார்பன புத்தி திரித்து, பெரியார் மூக்குடைந்ததாக அல்பமாய் இருமாப்புறுவதை கவனிக்க வேண்டும்.) காந்தி தனது புரிதலை பேசியதில்லை, பெரியார் பேசவும் செய்திருக்கிறார். குறிப்பாய் பிரிடீஷ் அரசு அடக்கு முறை கொண்டு வந்த போது. கம்யூனிஸ்டுகள் எதிர்த்து தலைமறைவு போராட்டம் செய்ய முனைந்த போது, பெரியார் அரசுடன் ஒத்துழைக்க முன்வந்தார். அப்போது அவர் பேசிய பேச்சுக்களில் இந்த புரிதலை தெளிவாக முன்வைத்திருக்கிறார். (தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. கைவசம் சிக்கினால் தருகிறேன்.) கம்யூனிஸ்டுகள் வழக்கமான மூர்க்கத்தில் பெரியார் செய்ததை துரோகமாக மட்டும் பார்கின்றனர். 'லட்சக்கணக்கான தோழர்களின் உயிர்களை பலியிட்டுத்தான் ஒரு லட்சிய சமுதாயத்தை நாம் அடையவேண்டுமெனில் அது நமக்கு தேவையில்லை" என்று அவர் சொன்னதை நியாயமான முறையில் அறிவுபூர்வமாய் அவர்களால் எதிர்கொள்ள முடியாது. பெரியாருக்கு அகிம்சை மீது காதல் எதுவும் கிடையாது. போரட்டத்தின் இலக்குகளை அடைய வன்முறையற்ற போராட்டம் உதவக்கூடும் என்றால் மென்முறையை கைகொள்ளலாம். மென்முறை உதவவில்லை, வன்முறைதான் உதவும் என்றால் வன்முறையையும் கைகொள்ளலாம் என்பதுதான் அவர் பார்வை. அதனால்தான் ராஜாஜியின் குலக்கல்விக்கு எதிரான போராட்டத்தில் தனது இரண்டு வருட போரட்டம் பலன் தராததால் வன்முறைக்கு அழைப்பு விடுத்தார். (எதிர்பார்த்தது போல் அந்த வன்முறை விளைவுறும் கலகத்தை முன்வைத்தே போராட்டத்தை நசுக்க ராஜாஜி எண்ணினார். ஆனால் முடிவில் அவர் பதிவி இழக்க நேரிட்டது.) இத்தனையும் குறிப்பிட காரணம், அகிம்சை என்பதையும் ஒரு அடிப்படைவாதம் போல் பிடித்து தொங்குவதும் பயன் தரக்கூடியது அல்ல. மேதா பட்கர் மிக பெரிய அகிம்சை வழி போரட்ட எழுச்சியை உருவாக்கினார். அவருக்கு முன்னோடிகள் உண்டு, வேறு சிலரும் உண்டு. ஆனால் போராட்டம் மென்முறையில் செல்ல அவர் முக்கிய காரணம். ஜார்கண்டில் இருக்கும் நக்சல் பிரச்சனை நர்மதாவில் இல்லாததற்கு அவர் முக்கிய காரணம். அவர் இல்லாவிட்டால் வன்முறை துணைகொண்டு போராட்டம் நகர்ந்திருக்கலாம். வழக்கம் போல அதை எதிர்கொள்வது ஒரு அரசுக்கு எளிதானது, கலிங்காநகரிலும், கங்காவரத்திலும் எதிர்கொண்டது போல் எதிர்கொண்டிருக்கும். இந்துத்வவாதிகள் நர்மதா போராட்டத்தை புரட்டுகளால் எதிர்கொள்வதையும், அராஜகங்களை அவிழ்த்து விடுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், மன்மோகன் சிங்கும் நர்மதா விஷயத்தில், அற்புதமான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, சாதனை படைத்து, வரலாற்றில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் அது நடந்து கொண்ட விதத்தின் மூலம் மிக மோசமான ஒரு செய்தியை நாட்டு மக்களுக்கு தருகிறது. அரசியல் நிர்பந்தத்திற்கும், கும்பல் வன்முறைக்கும், உயர் நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளுக்கும்தான் ஒரு அரசு மரியாதை அளிக்குமே அன்றி, அதிகாரமற்ற விளிம்பு நிலை மக்களின், மிக பெரிய மென்முறை போராட்டத்திற்கு அல்ல. தீவிரவாதத்தின் வேர்களை ஆராயவேண்டும் என்று சொல்பவனை எல்லாம் திட்டி தீர்ப்பதை பிழைப்பாக வைத்திருப்பவர்கள், இந்த கட்டத்தில் எந்த வித சுயபரிசீலனைக்கும் தங்களை உட்படுத்த மாட்டார்கள் என்று தெரியும். தங்களின் இப்போதய குரலும் செய்கையும் மௌனமும்தான் தீவிரவாதத்திற்கு சுவாசம் அளிப்பதை ஒரு நாளும் அவர்கள் உணரப்போவதில்லை. உணர்ந்தாலும் சுயநலத்தால் அது குறித்து பேசப்போவதில்லை. இரைஷேமஸே பதிவில் பெயரிலி, " கோட்டை நன்றாக இருக்கிறது. உச்சியையும் சேர்த்து எடுத்திருக்கலாம்" ![]() ![]() ![]() ஒழுங்கான படம் இருக்கும் போது எதுக்காக அய்யா தலை தட்டின படத்தை போட்டாய்?, என்று ஒரு நியாயமான கேள்வி எழலாம். படத்தில் படர்ந்து இருக்கும் அந்த மரங்களுக்காக! மரத்தின் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நினைவிலில்லை. ஜப்பானை பற்றி என்ன பார்த்திருந்தாலும் அதன் ஒரு பகுதியாய் இந்த மரமும் அறிமுகமாகியிருக்கும். பல வகை வனங்கள் (Koen) ஜப்பானின் அழகியல் உணர்வை பறை சாற்றுபவை. அவற்றில் முக்கிய பங்கு இந்த மரங்கள் வகிக்கின்றன. இந்த மரங்கள் நித்தியதன்மையை குறிப்பதாக ஜப்பானியர்களின் நம்பிக்கை. குறுப்பன் மன்னிக்கணும். உள்ளே போயிருக்கிறேன், ஆனால் படம் எடுக்க அனுமதியில்லை. |