ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Monday, October 05, 2015இந்து அடையாளமிலி-2
இந்து மதத்திற்கான வரையறை பற்றிய அலுத்துப்போன விவாதங்களை விடுத்து, இந்தியச் சமூகத்தின் எல்லா வழிபாட்டுமுறைகள், நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள், சடங்குகளை அவ்வாறு அழைப்போமெனில், அது மிகுந்த முரண்பாடுகள் கொண்ட பன்மைக் கலாச்சார வளமாகும். சாதி போன்ற கொடூர சமூக ஒடுக்குமுறையிலிருந்து, கஜுராஹோ கலை வரை அதில் அடக்கம். இதை ஒற்றை அடையாளமாகக் கற்பிதப்படுத்த முயலும் இந்துத்வம், இந்தக் கலாச்சார வளத்தின் முக்கிய எதிரி. இந்துக் கலச்சார வளத்தின் விளைச்சல் மீதும், பக்கவிளைச்சல் மீதும் நேரடியாகத் தாக்குதல் தொடுக்கும் இந்துத்வ லும்பன்தனம் எளிதான புரிதலுக்கு உட்பட்டது; ஆனால் எளிதில் கையாளமுடியாத சிக்கல், இந்தக் கலாச்சார வளத்தையே தனது அரசியலுக்கான கவர்ச்சி விளம்பரமாகக் கொண்ட இந்துத்வ அறிவுஜீவித்தனம் இதனுடன் கலந்து நிற்பது. ஒரு பக்கம் இந்து மதத்தின் பன்மைத்தன்மையை விளம்பரமாகக் கொள்வார்கள்; இன்னொரு பக்கம் பல்வேறு ராமாயணங்கள் இருப்பதைக் கூட பொறுக்க மாட்டார்கள். ஒரு பக்கம் இந்துமதத்தின் சகிப்புத்தன்மை பற்றிப் பேசுவார்கள்; கடந்த 25 ஆண்டுகளில் நடந்த இந்துத்வத்தின் சகிப்புதன்மையற்ற செயல்களைப் பட்டியலிட இணையம் போதாது. ஒரு பக்கம் நாத்திகமும் இந்துமதத்தின் ஒரு பகுதி என்பார்கள்; மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பரப்புரை செய்த நரேந்திர தபோல்கர் போன்றவர்கள் கொலை செய்யப்படுவார்கள். இந்து மதம் மதமாற்றப் பரவுதலில் ஈடுபடாததை அதன் ஒரு சிறப்பியல்பாகச் சொல்வார்கள்; கர்வப்சியை நிறைவேற்றுவார்கள்.
இந்துத்வத்தின் பாசிசக் கூறுகளுக்கும், வெறுப்புப் பிரச்சாரத்திற்கும், இதர கலாச்சாரங்கள் மீதான தாக்குதல்களுக்கும் உதாரணப் பஞ்சமே இல்லை; வெடிகுண்டு பயங்கரவாதம்வரை வந்தாகிவிட்டது. இதற்கு நடுவில் ஓர் அறிவு சார்ந்த, காந்தியை அம்பேத்காரை ஏற்கும், சீர்திருந்திய இந்து மதம் சார்ந்த ஒரு முகத்தையும் காட்டிவருகிறது. உள்ளிருக்கும் பாசிச சக்திகளை இந்த முகம் ஒருவேளை பலவீனப்படுத்துவதாக இருந்தால், இதை வரவேற்கவே செய்யலாம். மாறாக இந்துத்வ பாசிசத்தை வெகுஜன பொதுமனம் எதிர்கொள்வதன் தீவிரத்தை மழுங்கடிப்பதாகவும், பாசிசம் வெளிபடும் போதெல்லாம் அதற்குத் தர்க்க நியாயங்களும் சமாதானங்களும் தருவதாகவே இந்த அறிவுமுகம் இருந்து வருகிறது. இந்துத்வ பாசிசத்தின் மிக நேரடி வெளிப்பாடான 2002 குஜராத்தை இந்த அறிவுத் தரப்பு சிறுவிமர்சனம் செய்ததில்லை; மாறாக அந்நிகழ்வுகளுக்கு நியாயங்கள் தந்து கடந்து போனதோடு, தன் மற்ற ஆதர்ச முன்னோடிகளைப் புறம் தள்ளிவிட்டு, 2002ஐ நிகழ்த்திய தலைமையையே இன்று அதிகாரத்திற்கும் கொண்டு வந்திருக்கிறது. இந்த அறிவு முகம், இந்துத்வத்தின் உள்ளியங்கும் பாசிசத்திற்கு விமர்சனம் மூலம் எதிரியங்கி, ஒரு சமனைக் கொண்டு வரும் பகுதி அல்ல என்பதற்கு இந்த ஓர் உதாரணமே போதும்; இக்கருத்திற்கான மாற்று உதாரணம் ஒன்றையும் காண முடியவில்லை; 2002இன் மீது விமர்சனம் இல்லாதவர்கள் 1992ஐக் கொண்டாடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இந்து மதத்தைக் கருப்பொருளாகக் கொண்ட அரசியல் என்ற வகையில், இந்துத்வத்தை இந்து மதத்திலிருந்து பிரித்து அணுக முடியாது; ஆனால் இந்து சமூகத்தின் பன்மை வளத்தால், இந்துத்வம் கற்பிக்க விரும்பும் இந்துத்தன்மைக்கு மாறாகவும் எதிராகவும் யதார்த்தத்தில் இந்து சமூகம் இயங்குகிறது என்பதைத்தான், ̀இந்துமதம் வேறு, இந்துத்வம் வேறு' என்கிற ஒரு கருத்தாக சொல்லப்படுகிறது. இப்படி வேறுபடுத்துவதை ஏற்காமல், இரண்டையும் எதிர்க்க வேண்டும், அழிக்க வேண்டும் என்ற அரசியல் கொண்டவர்களுக்கு அதற்கான நியாயங்கள் தர்க்கப்படும்; ஆனால் இந்த இரண்டையும் குழப்பிக் கொள்வதோடு, இதில் பார்ப்பனியத்தையும், சாதியத்தையும் கூட சேர்த்துக் குழப்பிக் கொள்கிறார்கள். இந்துத்வம் என்பது வருணாஸ்ரம அமைப்பைக் காக்கவே பிறந்ததாக பலர் தீவிரமாக நம்புகிறார்கள்; இந்து சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினர் இந்துத்வக் கருத்தியலை இத்தனை ஆண்டுகளாகத் தழுவிக்கொள்ளாததைக் கவனிக்க மறுக்கிறார்கள். பார்ப்பனியம், சாதியம், இந்து மதம், இந்துத்வம் என்று வசதிக்காகப் பெயரிட்டு அழைப்பவை ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டதாயினும், அதனதன் பண்புகளை வேறுபடுத்திப் பார்ப்பதன் மூலமே அதனதன் இயங்கியலைப் புரிந்து கொள்ள முயல முடியும்.
சாதி என்ற படிநிலை ஒழுங்கு சார்ந்த அடக்குமுறை இந்து சமூகம் சார்ந்தது; இந்து மத ஆதாரங்களால் நியாயப்படுத்தபட்டது. ஆயினும் மற்றவர்களின் இருப்பை முற்றிலும் புறக்கணிக்காத, அழிக்க விரும்பாத சாதியத்தை பாசிசம் என்று அழைக்கமுடியாது என்றுதான் நினைக்கிறேன். வலிமையான பாரதம் என்ற இந்துத்வ லட்சியத்திற்கு சாதியமைப்பு பெரும் தடையாக இருப்பதால், நவீன இந்துத்வ மனம் சாதியத்திற்கு எதிராக நிலைபாடு கொண்டிருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். வர்ணாஸ்ரம தர்மத்தை நியாயப்படுத்தும் விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளின் பிரதிகளை வாசித்திருக்கிறேன்; ஆனாலும் ஆர்எஸ்எஸ் சார்ந்த நவீன இந்துத்வம் நிலைபாட்டளவில் சாதியத்திற்கு எதிராகவே இருக்கிறது; சாவர்கரின் சில சாதிய எதிர்ப்பு செயல்பாடுகளை அம்பேத்கரே பாராட்டியிருக்கிறார். ஆனால் இந்திய சாதி அமைப்பு, இதுவரையிலான எத்தனையோ தாக்குதல்களால் நிலைகுலைவதற்கு பதில், இன்னும் வலிமையாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுமளவு, மிகச் சிக்கலான இயங்கியலைக் கொண்டிருக்கிறது; வெறும் மனம் மாறக்கோரும் நிலைப்பாடுகளால் அதில் சிற்றலைகளைக் கூட உருவாக்க முடியாது. சாதிய முரண்பாட்டை மறுத்தாலும், ஆதிக்க ஜாதியினரின் கலாச்சாரத்தைப் பெருமித அடையாளமாகவும், ஆதிக்க ஜாதியினர் பங்களிப்பைப் பெரும்பான்மையாகவும் கொண்ட இந்துத்வம், ஆதிக்க ஜாதியினரின் மனமாற்றத்தைக் கோரும் பாவனை நடவடிக்கைகளைத் தாண்டி, எந்தத் தாக்குதலையும் இறுகிய சாதியமைப்பின் மீது நிகழ்த்த இயலாது. இந்துக்கள் ஒன்று சேர்வதற்குத் தடையாக உள்ள உள்முரண்பாடான சாதியமைப்பை நிலைபாட்டளவில் எதிர்த்தாலும், அதை எதிர்த்துத் தீவிரமாகப் போராடுவதால் உருவாகப்போகும் இன்னும் தீவிரமான உள்முரண்பாட்டைக் கணக்கில் கொண்டு, இந்துத்வத்தின் சாதிய எதிர்ப்பு பேச்சளவிலும் நிலைப்பாட்டளவிலும் மட்டுமே இருக்கவும் முடியும்; சொல்லிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட வலிந்த சில அடையாள உதாரணங்கள் மட்டுமே செயலாக இருக்கும்.
கடவுள் நம்பிக்கையற்றவராக தன்னை அறிவித்து கொண்ட இந்துத்வப் பிதாமகர் சாவர்கர், இந்துமதமும் இந்துத்வக் கருத்தியலும் வேறு வேறு என்பதாகவே கற்பிக்கிறார். ஆனால் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை - தங்கள் அடையாள நிபந்தனைகளை ஏற்காத நிலையில் - அந்நியராகக் கற்பிக்கும், பாரத சமுதாய வரலாற்றுப் பெருமிதம் மூலம் அடையாளம் பெறும் இந்துத்வம், இந்து சமூகத்தின் சாதியத்தை விட ஆபத்தான பாசிசக் கருத்தியலாகிறது. அடையாளக் கற்பிதத்திற்கு வரலாற்றுத் தொன்மையை அடித்தளமாகக் கொண்ட வகையில், பழமைவாதமும் அடிப்படைவாதமும் கலந்திருந்தாலும், மற்ற மத அடிபடைவாத அரசியல் போல் அல்லாமல், ஒரு நவீன அரசியல் சிந்தாந்தமாகவே இந்துத்வம் எழுந்தது. சுய அழிவுத்தன்மை குறைவாக இருப்பதற்கு அதனுடைய நவீனத்தன்மை ஒரு காரணம்; அதே நேரம் கையாளச் சிக்கலாக இருப்பதும், பழமைவாதததை விட ஆபத்தாக இருப்பதும் இந்த நவீனத்தன்மையால்தான்.
தமிழகத்தில் இந்துத்வச் சக்திகள் அரசியல்வெளியைப் பெருமளவில் கைப்பற்ற இயலாததற்குத் திராவிட அரசியல் முக்கிய காரணம். இந்துத்வ எதிர்ப்பில் இடதுசாரி அரசியலின் பங்கும் அளப்பரியது. ஆனால் அகில இந்திய அளவில் காந்தியமும், அதனுடன் இயைந்த - ஆனால் சமூக, பொருளாதாரப் பார்வையில் எதிரான - நேருவியமும், இந்து மதத்தின் வெகுஜனத்தன்மையும்தான், நவீன இந்துத்வ அரசியல் அதிகாரத்தை பிடிப்பதில் இருந்து ஐம்பது ஆண்டுகள் இந்தியாவை காத்தது; இப்போதும், பௌத்தப் பேரினவாதம் இலங்கையிலும் பர்மாவிலும் நிகழ்த்தியது போலவோ, இஸ்லாமிய அடிப்படைவாதம் போலவோ, உலகில் நாம் கண்ட பல அழிவுகளுக்கு இந்துத்வத்தின் பாசிசத்தன்மை இட்டுச் செல்லாமல் இந்து சமூகத்தின் பன்மை வளமும் மதசகிப்புத்தன்மையும் காக்கிறது.
இந்து மதத்தின் பன்மைத்தன்மை, மதம் சார்ந்த சகிப்புத்தன்மையைப் பேசினாலே சிலர் - குறிப்பாக பெரியாரியர்கள் - அதையும் ஓர் இந்துத்வ உத்தியாகப் பார்க்கிறார்கள்; சாதி சார்ந்த சகிப்பின்மையைக் கொண்டு வந்து குழப்புகின்றனர். ஓர் உரையாடலின்போது, "இந்து மதத்தப் பத்தி நல்லதா சொல்லப்போறீங்களா?" என்று விஷயத்தைத் தொடங்கும் முன்பே கோபப்பட்டு முற்றுப்புள்ளி வைத்தார் ஒரு நண்பர்; இன்னொரு நண்பர் பொறுமையாகக் கேட்டு "இதைத்தான்யா ஆரெஸ்ஸெஸ்காரனும் சொல்றான்" என்று மேஜையைக் குத்தினார். (இருவரும் வழமையான திகவினர் அல்ல.) எவனெவன் எதனெதைச் சொன்னாலும் அதனதை ஆய்ந்து முடிவுக்கு வருவதுதானே அறிவு? நாம் ஏற்காதவர்கள் சொன்னதாலேயே ஒரு விஷயம் ஏற்கத்தகாதது ஆகிவிடாது என்பது எத்தனை முறை சொன்னாலும் அர்த்தம் நைந்து போகாத ஒரு வாக்கியம். இந்துத்வர்கள் இந்து மத்தின் ஆரோக்கியமான ஒரு விஷயத்தை விளம்பரப்படுத்தத்தான் செய்வார்கள்; அந்த ஆரோக்கியத்திற்கு அவர்களால் வரும் நன்மை தீமைகளையும், அந்த ஆரோக்கியத்தைக் கெடுக்கும் நோய்களுக்கு என்ன எதிர்வினை வைத்திருக்கிறார்கள் என்பதையும் வைத்துத்தான் அவர்களை மதிப்பிட முடியும். இந்து மதம் என்று எதுவும் வரையறுக்கப்படாததை ஒரு குறையாக பெரியாரியர்கள் 80 வருடங்களாகச் சொல்லிவருகிறார்கள்; இவ்வாறு வரையறுக்கப்படாமல் இருப்பதுதான், இந்துத்வம் விரும்பும் இயல்புக்கு எதிரான விசேடப் பண்பு என்று அவர்களுக்குப் புரியவில்லை.
ஆனாலும் இந்த இந்து X இந்துத்வா விஷயம் ரொம்பக் குழப்பமாகத்தான் இருக்கிறது. இந்துவாகத் தன்னை உணர்ந்த ஒருவர்தானே இந்துத்வவாதியாகிறார்? இந்து மதத்தவராகத் தன்னை உணரும் ஒருவர் இந்துத்வத்திற்கு எதிராக இயங்குவது சாத்தியமெனில், எந்த நிலையில் சாத்தியம்? இந்தச் சகிப்புதன்மை சமாச்சாரம் உண்மையெனில் எப்படி இத்தனை கலவரங்கள், அராஜகங்கள் நிகழ்ந்தன? குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட சாதரண இந்துக்கள், கோல்வால்கரைப் பயின்று இந்துத்வ அரசியல் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லவே? முழுவதும் இந்துத்வ அரசியல்மயமாகாத ஒரு வெகுஜன இந்துவிடம் இருக்கும் இஸ்லாமிய வெறுப்பை எப்படிப் புரிந்து கொள்வது? சில உதாரணங்களை வைத்து இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்; அல்லது இன்னும் குழப்பிக் கொள்ளலாம்.
பெரியாரின் இயக்கமும், திமுகவிற்கான மக்கள் ஆதரவும் உச்சத்தில் இருந்த 1971 தமிழகத்தில், இந்து மத நம்பிக்கையிலிருந்து விடுபட்ட நாத்திகர்களாக, ஒரு பத்து லட்சம் மக்கள் கூட இருந்திருக்க மாட்டார்கள்; ரொம்ப மிகையான மிகைப்படுத்தலாக இப்படிச் சொல்கிறேன், உண்மையில் இப்போதிருப்பதை விட அதிகமாக அப்போது ராமனை(யும்) ஒரு கடவுளாகத்தான் பெரும்பான்மை வெகுமக்கள் நம்பியிருப்பார்கள். தமிழக மக்கள் தொகையில் தொண்ணூற்றைந்து விழுக்காடுக்கு மேல் இந்து மத நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில், நாத்திகம் பேசிய இயக்கத்திற்கு ஆதரவு அளித்தது மட்டுமின்றி, முருகன் உட்பட எல்லா இந்துத் தெய்வங்களையும் ஆபாசமாகச் சித்தரித்திருந்த பெரியாரது ஊர்வலத்தில், ராமர் படத்தைச் செருப்பால் அடித்த நிகழ்வை சாதாரணமாக எடுத்தது மட்டுமின்றி, அது ஒரு தேர்தல் பிரச்சனையாகியும் மீண்டும் அமோக ஆதரவோடு திமுகவையே தேர்ந்தெடுத்தார்கள். தமிழக மக்களின் திராவிட இயக்க ஆதரவிற்கு - பார்ப்பன எதிர்ப்பு உட்பட - பல காரணங்கள் இருந்தாலும், மத நம்பிக்கை என்ற தனிப்பட்ட காரணம் அந்த ஆதரவு நிலையைப் பாதிக்கவில்லை என்பதுதான் கவனிக்க வேண்டியது. ராமர் படத்தைச் செருப்பால் அடித்தவரை அடிக்கும் பேச்செல்லாம் இந்துத்வா 2014இல்தான் பொதுவெளியில் பேசுகிறது. ராமர் ஒரு தனிப்பட்ட உதாரணம் இல்லை; இந்துச் சாமிகளின் மீது திக நடத்தாத தாக்குதல் இல்லை; இந்துக் கடவுள்களை ஆபாசமாகப் பேசும் திகவின் A பட்டிமன்றங்களுக்கே, இந்துத்வம் ஓர் அரசியலாகக் காலூன்றிய பிறகுதான் எதிர்ப்பு வருகிறது. கோவில்களுக்கு அருகிலேயே ̀சிறுநீர் கழி, சிவனை ஒழி' என்று திகவினர் எழுதிய வாசகம் வருஷக்கணக்கில் அழிக்கக்கூடப்படாமல் இருந்ததை 80களில் கண்டிருக்கிறேன்; அந்த திருநெல்வெலி மீனாட்சிபுரத்தில், மொத்தமாக 5 திக குடும்பங்கள் இருந்திருந்தால் கூட ஆச்சரியமே. 90களில் தமிழக மக்கள் திராவிடக் கருத்தியலில் இருந்து பக்தியை நோக்கிச் சென்றதாக, யாரோ எழுதிய புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு சிரிப்புதான் வந்தது. தமிழகம் பெரியாரை மதித்தாலும், திமுகவை ஆதரித்தாலும், மிகப் பெரும்பான்மையாக கடவுள் நம்பிக்கையுடனேயே அன்றும் இருந்திருக்கிறது. 70கள் வரை இருந்த தீவிர பக்திப் பட மோகம் 80களில்தான் குறையத் தொடங்கியது. இப்படிப் பெரும்பான்மையினரின் மத நம்பிக்கை மிதிக்கப்படும் போது, புண்படக்கூட செய்யாமல் இருந்த நாகரிகச் சமூகம், வேறு எங்கும் சாத்தியமானதாகத் தெரியவில்லை. நிச்சயமாக இஸ்லாமிய சமூகங்களில் சாத்தியமில்லை; கிறிஸ்தவப் பெரும்பான்மை நாடுகளில் சாத்தியமாவதற்கு அவர்கள் நவீனமாகியதும், மதம் தனிப்பட்ட வெளியில் கட்டுண்டிருக்க, சமூக வெளியிலிருந்து மதத்தை முற்றிலும் விடுவித்த அவர்களின் மதச்சார்பின்மையே காரணமாகும்.
அண்மையில் ஶ்ரீரங்கத்தில் அணுகுதலுக்கான இன்னொரு உதாரணம் ஒன்றை பார்த்தேன். 2006இல் ராஜகோபுரம் முன்பான பெரியார் சிலை இந்து மக்கள் கட்சியை சார்ந்த சிலரால் சேதப்படுத்தப்பட்ட பின்னர், தடுப்புகளுக்குப் பின், போலீஸ் பாதுகாப்புடன், தனது ̀கடவுள் இல்லை' வாசகங்களுடன் பெரியார் பாதுகாப்பாக இருக்கிறார்; ஆனால் ராஜகோபுர வாயிலருகிலும், கோவிலை சுற்றிய தெருக்களிலும் திக கொடிகள் நடப்பட்டிருந்ததை காணமுடிந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் புழங்கும் இடத்தில், எந்தப் பாதுகாப்புமற்று, நாட்கணக்கில் நான் பார்த்த அந்தக் கொடிகள் இன்றும் கூட இருக்கலாம். இதை இந்து மதச் சகிப்புத்தன்மையாக - அல்லது விருப்பு வெறுப்பற்ற அக்கறையின்மையாக - கொண்டால், இதைக் கோழைத்தனம் என்று, இந்துமதத்தின் வெட்கப்பட வேண்டிய ஒரு பண்பாகத்தான் இந்துத்வம் கருதும். பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, இந்து மக்கள் கட்சியினரை பதிலுக்கு திகவினர் தாக்கியிருந்தால், அந்தப் பழிவாங்கலில் அர்த்தம் இருந்திருக்கும்; மாறாக தங்களைச் சகிக்கும் பக்தர்களின் கோவில்களுக்குள் புகுந்து சிலைகளை உடைப்பதில் ஈடுபட்டனர்.
தமிழகம் ஒரு தீவிர விதிவிலக்கு உதாரணம்தான்; ஆனால் தமிழகத்தில் மட்டும் திராவிட இயக்கத்தால் இது நிகழ்ந்ததாக நினைக்க முடியாது. சமீபத்தில் பீகே படத்திற்கான இந்துத்வ எதிர்ப்பைக் கண்டோம்; ஆனால் கன்னட, தெலுங்கு, இந்திப் படங்களிலும், தமிழ்ப் படங்களை போலவே, இந்துக் கடவுள்கள் எவ்வளவோ - இந்துத்வ எதிர்ப்பரசியல் பரவலாகித் தலையிடும் முன் - கிண்டல் செய்யப்பட்டுள்ளனர். காதலன், காதலி இந்துக் கடவுள்களாகத் தங்களைக் கற்பனை செய்வதும், ஒப்பிட்டுக் கொள்வதும், பௌத்த நாடுகளில் கூட புத்தரைப் கொண்டு செய்யமுடியாது. இந்து பக்திப் படங்களில் - இந்துத் திருவிழாக்களைப் போலவே - பாலியல் சமாச்சாரங்கள் தூக்கலாக இருப்பது போல், வேறு எந்த மதம் சார்ந்த திரைப்படத்திலும் சாத்தியமில்லை. இன்றும் கோவில் வளாகங்களில் இஸ்லாமியர்கள் கடை வைத்திருப்பதும், தர்காவிற்குச் செல்வதில் இந்துக்களுக்கு மனத்தடை இல்லாதிருப்பதையும் காணலாம்; உஸ்தாத் பிஸ்மில்லாகான் தன் இஸ்லாமிய அடையாளத்துடன் அல்லாவின் பெயரைச் சொல்லித் தொழுத பின், அலகாபாத் மாக்மேளா திருவிழாவில் வருடந்தோறும் வாசிப்பதைக் கேட்டிருக்கிறேன். நாகூர் ஹனிஃபாவின் பாடல்களை ரசித்து கேட்கும் வைதிக பிராமணர்களைப் பார்த்திருக்கிறேன். (ஹனிஃபாவின் திமுக பாடல்கள் அவர்களுக்குக் கடுப்பாக இருக்கலாம்.) இந்துத்வத்திற்கும் வகாபிசத்திற்கும்தான் இந்த வழமைகள் உவப்பாக இல்லை. இந்து தாந்திரிக மரபைச் சார்ந்த எம்.எஃப் ஹுசேனை இருக்க விடாமல் செய்ததும், ஃபயர், வாட்டர் போன்ற படங்களைத் தாக்கியதும், குலாம் அலி கானைத் தாக்கியதும், சூஃபி தலங்களைத் தாக்கியதும் இந்து மனநிலைக்கு எதிரான இந்துத்வ அரசியல்.
இன்னும் எவ்வளவோ உதாரணங்களை அடுக்கலாம்; பல பரிமாணங்களில் அணுகலாம். விமலாதித்த மாமல்லன் பாபர் மசூதி இடிக்கபட்ட போது மாமி ஒருவர் ̀அதுவும் கோவில்தானே, கோவிலை இடிக்கறது சாமி கும்படறவன் செய்யற காரியம் இல்லை' என்று சொன்னதைப் பதிவு செய்திருப்பார். இதே போன்ற உதாரணங்களை நானும் சந்தித்திருக்கிறேன். வைதிக பிராமணப் பெண் அரசியல்மயப்படாத ஓர் இந்து; மடி ஆசாரம் என்ற தீண்டாமை வடிவங்களை பேணும் ஒரு வைதிக மனம், மசூதி இடிப்பை ஏற்காதது மேலோட்டமான இந்துத்வ எதிர்ப்புப் புரிதலுக்கு உட்பட்டது அல்ல.
இந்துத்வத்திற்கு எதிரான இந்துத் தன்மையாக, மிக மேலோட்டமான உதாரணங்களை மட்டும், ஒரு கலாச்சார ஆய்வாளன் என்று துறை சார்ந்து சொல்ல முடியாத அமைச்சூர் அவதானிப்பாளனாகக் கையாண்டுள்ளேன்; இந்து சமூகத்தின் அ-இந்துத்வ பண்புகள் மிக விரிவான சமூகச் சோதனைகள், தகவல் திரட்டல்கள் மூலம் ஆராயப்பட வேண்டியது என்று நினைக்கிறேன். இப்படியாக, தொடாத பல பரிமாணங்கள் இருக்க, இந்து மனமும் இந்துத்வ மனமும் வேறானது என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி, இந்துத்வ அரசியலுக்கு ஆட்படாத இந்து மனதை சாத்விகச் சாகரமாக உருவகப்படுத்துமளவு விஷயம் எளிதானதும் அல்ல; ஒரு கருத்தியலாக கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த ஐடியா, ஒருவகையில் கற்பனா உணர்ச்சி வாதமாகும். இவ்வாறு சாத்விகமாக இந்து மனதை மிகைக் கற்பிதப்படுத்தும் பலர், இந்துத்வ ஆதரவாளர்களாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். இந்துமதத்தின் மற்றதை ஏற்கும் சகிப்புத்தன்மையை ரொமாண்டிசைஸ் செய்துகொண்டே, இவர்கள் மோடியை ஆதரிக்கும் முரண்நகையை எப்படிப் புரிந்து கொள்வது? அதை விட வெகுஜன இந்துக்களே மோடிக்கு பேராதரவு அளித்ததை எப்படிப் புரிவது? வெகுஜன இந்துக்கள் பல கலவரங்களில் ஈடுபட்டதையும், முஸ்லீம்கள் தாக்கப்படுவதை ஆதரிப்பதையும் எப்படிப் புரிந்து கொள்வது? ஆகையால் இது போன்ற மிகைக் கற்பித பார்வைகளை விளக்க வேறு சில மாற்று உதாரணங்களைக் கொண்டு குழப்பிக் கொள்வோம்.
இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலை மனித நேய உலகம் கண்டித்துக் கொண்டிருந்த நேரத்தில், இஸ்ரேலின் நியாயங்களைத் தீவிரமாக பேசும் ஒரு கட்டுரையில், ̀இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இருக்கும் சாதரண முஸ்லீம்கள் ஏன் எந்தச் சம்பந்தமும் இல்லாத யூதர்களை வெறுக்க வேண்டும்?' என்று ரொம்ப ஆச்சர்யப்பட்டு ̀திண்ணை'யில் சின்னக்கருப்பன் என்ற எழுத்தாளர் கேட்டிருப்பார்; குரானில் இருக்கும் யூத வெறுப்புதான் இதற்கு காரணம் என்று அவரே பதிலையும் சொல்லியிருப்பார். அப்படியும் இருக்கலாம், ஆனால் எந்த வெகுஜனக் கூட்டமும் ஒட்டுமொத்தமாக தன் மதப்பிரதிகளை வார்த்தைக்கு வார்த்தை உள்வாங்கி வாழ்வதில்லை; வாழ்வது சாத்தியமுமில்லை. யூதர்களும் தம்மைப் போல ஹலாலாக உண்பதையும், சுன்னத் செய்வதையும், பன்றி உண்ணாததையும் வைத்து தங்களுடன் அடையாளம் கண்டுகொள்ளும், யூத வெறுப்பு இல்லாத முஸ்லீம்களையும் பார்க்க முடியும்; வெறுப்பவர்களையும் பார்க்க முடியும். வெறுப்பவர்கள் பாலஸ்தீனத்தில் பாதிக்கப்படும் முஸ்லீம்களை, மதரீதியாக தங்களவராக அடையாளம் கண்டு, இஸ்ரேலியர்களை வெறுக்கிறார்கள் என்பது நேரடியான எளிய பதிலாக இருக்கும். ஆனால் கேட்கவேண்டிய முக்கியமான ஆச்சர்ய கேள்வி அதுவல்ல; இனரீதியாகவும், மதரீதியாகவும் எந்த சம்பந்தமும் இல்லாத இந்திய நாட்டின் இந்துக்கள் பலர், எதற்காக யூதர்களை தீவிரமாக ஆதரிக்கிறார்கள்? பார்ப்பனர்கள் திராவிட இயக்கத்தை வெறுப்பதற்கும் அண்ணா திமுகவை ஆதரிப்பதற்கும், முஸ்லீம்கள் பாஜகவை வெறுப்பதற்கும் பட்டறிவின் மூலம் எளிதான விடையை அடையமுடியும். ஆனால் எங்கோ நடக்கும் ஒரு பிரச்சனையில், இந்திய இந்துக்களிடம் வெளிபடும் பாலஸ்தீன வெறுப்பிற்கும் இஸ்ரேல் ஆதரவிற்கும், மதம் இனம் என்று அடையாளம் சார்ந்த காரணங்கள் எதுவுமே செல்லுபடியாகாது; அவர்களின் வேதங்களிலும், மத நூல்களிலும் சொல்லப்படவுமில்லை. இஸ்லாமிய எதிர்ப்பின் காரணமாக, இஸ்ரேல் ஆதரவு நிலைகொண்ட இந்துத்வ அரசியல் இதற்குக் காரணம் என்பதே ஒரே பதில். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரகாரத்தில், அர்ச்சகர் ஒருவர் இஸ்ரேலை ஆதரித்து பேசிக்கொண்டிருந்ததை ஒருமுறை கேட்டேன். ஒரு வைதிக மனம் கொண்ட கலாச்சார இந்து, எதற்காக வாழ்க்கையில் சந்திக்கவே சாத்தியமில்லாத யூதர்களை ஆதரிக்கிறார்? அவர் ஆதரிப்பது ஜெர்மானிய யூதர்களை அல்ல, இஸ்ரேலிய யூதர்களை மட்டுமே. இது போகிற போக்கிலான ஓர் உதாரணம் மட்டுமே. நகர்ப்புற ரயிலிலும், பேருந்துகளிலும் சாதரண மக்களிடம் எவ்வளவோ இந்துத்வ அரசியல் கொண்ட கருத்துகளைச் சகஜமாகக் கேட்கலாம். இஸ்லாமியர் மீதான முன்முடிவுகளும், முஸ்லீம்கள் பாடம் கற்கவேண்டும் என்ற மனோபாவமும் எத்தனையோ சாதாரண இந்துக்களிடம் அன்றாடம் வெளிப்படுகிறது.
ஆகையால் இந்துத்வம் கட்டமைக்க முயலும் இந்துதன்மைக்கு எதிராக ஓர் இந்து இயங்குவதும், இந்துத்வ அரசியலின் பாதிப்புகளைக் கொண்டிருப்பதும் ஒரே தரப்பு மக்களிடம் நிகழ்கிறது. இந்துக்கள் என்றழைக்கப்படும் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி இந்துத்வாவிற்கு எதிரான மனநிலையுடனும், இன்னொரு பகுதி இந்துத்வ அரசியலுக்கு ஆட்பட்டதாகவும் சொல்ல வரவில்லை. இந்துவாக இந்துத்வத்திற்கு எதிராக இயங்கும் ஒரு தனிப்பட்ட ஆளுமையே, இந்துத்வ மனதையும் வெளிப்படுத்தும் முரண் நிகழ்கிறது. நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள் என்று வாழ்க்கைமுறை மற்றும் சமூக இயக்கம் சார்ந்து இயங்கும் இந்துமனம், இந்துத்வ அரசியலுக்கு ஆட்படாததோடு, தன்னையுமறியாமல் எதிராகவும் உள்ளது. ஆனால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மற்ற மதத்தவர்களை எதிர்வைத்து, தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்து மனம் இந்துத்வ மனநிலைக்கு ஆட்படுகிறது. இந்துத்வக் கற்பிதங்களுக்கு எதிராக இயங்கும் அடையாளப் பிரஞ்ஞையற்ற இந்து, இந்துவாக மற்றதை முன்வைத்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது இந்துத்வம் சுரக்கிறது. இந்து சமூகக் கூட்டத்தின் ஒரு தனி ஆளுமை, பெரும்பான்மை நிகழ்தகவுடன் அடையாளப் பிரஞ்ஞையற்ற இந்துவாகவும், ஆங்காங்கே அவ்வப்போது இந்துத்வ அரசியல் கூறுகள் கொண்டும் குழப்பமாக இருப்பதால்தான், இந்துத்வ பாசிசம் அதிகாரத்திற்கு வந்தாலும் அஜெண்டாவைச் செயல்படுத்த முடியாமல் இருக்கிறது.
|
0 Comments:
Post a Comment
<< Home