ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, January 31, 2005

நெரிந்து!

ம. மதிவண்ணன்

(மதிவண்ணனின் நெரிந்து கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதைகளை தேர்ந்தெடுத்து இங்கே பதிகிறேன். இவை ஏற்கனவே அநாதையின் வலைப்பதிவுகளில் துண்டு துண்டாக பல பதிவுகளில் பதிந்ததுதான். இங்கே மொத்தமாக பதிவது மட்டுமில்லாமல், முன்பு டிஸ்கியில் பதிந்தது இப்போது யூனிகோடிற்கு மாற்றப்பட்டுள்ளது - ரோஸாவசந்த்.)

1. ஆகப்போவதொன்றுமில்லை
எல்லா எத்தனமும் வீணேயெனினும்
மூளையன்றோடு பிணைத்துன்
கழுத்தை சுற்றி கிடக்கும் வலிய சங்கிலியின்
இரும்புக் கண்ணிகளை
கடித்துக் கொண்டாவது இரு.


2. ஊர்த்தெரு நடுவில் நொத்தப்பட்ட
உள், வெளி வலிமரக்க ஊற்றிக்கொண்ட
தகப்பனின் போதைப் புலம்பலில்
யுகங்களின் வலி வெளிப்படுகையில்
கையாலாகாமற் குமையும் இம்முகத்தின் உள்ளீடும்,

விழிமலர் விரிப்பில் வீழ்ந்து
கொஞ்சு மொழிப் புதிர்ப் பொருளில் கிறங்கிக்
கிட்டே போகுங்கால்,
பாட்டன் தூக்கிய பீவாளியிலிருந்தொன்று
புறப்பட்டு வந்து பொறிகலங்கச் சென்னியிலறைய
நொண்டி புறமோடும்
உணர்வு நடுங்கலின் அதிர்வெண்ணும்

அறிவாயா?
என்னை எழுதும் உரிமை நாட்ட
முண்டாத் தட்டும் நீ.
சொல்ல பதிலில்லையெனில்,
தூரமோடிப் போ
எல்லாத்தையும் பொத்திகொண்டு.


3. தனது அத்தியவசியங்களாலான
மூட்டையைக் கவனமாய் இடுக்கிகொண்டு
தகிக்கும் வெயிலை உணராதவனாய்
நீளமான அந்த கடைவீதியைச்
சளைக்காமல் பெருக்கிக் கொண்டிருக்கிறான்.

கற்கவசம் கட்டிய மனித முகங்களுக்கிடையில்
காற்றின் திசையிலும் பெருக்கதெரியாமல்
மல்லுக்கட்டி கொண்டேயிருக்கிறான்
கடைவீதி வேறு இன்னும் நீளமாயிருக்கிறது.


4. ஆடை உறுத்தாத நிர்வாணங்கொண்டு
ஒரு பூ மாதிரி என் மீது கவிந்து
ஒவ்வொரு மயிர்காலிலும்
என்னை மீட்டிகொண்டிருக்கிறாய்.

நான் நாறும் சட்டையுடனவன்
திடுமென நுழைந்து தன் கர்ணகடூரக் குரலெழுப்ப
பதறியடித்தெழ வேண்டியதாயிற்று நாம்.

எழுந்து அவனை எதிர்கொள்ளத் தயாராகையில்
நீயுமுன்னை அவசரமாய் பொதிந்து கொண்டோடிப் போனாய்

இதோ!
வந்தவனுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டுத்
துளித்துளியாய் மௌனப் பூத் தெளித்து
இந்த படுக்கையை தயார் செய்கிறேன் திரும்பவும்.



5. அழுக்கேறிய அரைக்கால் சட்டையுடன்
மலக்குழி சுத்தபடுத்தியவனின் பேரன்
குழாய் மாட்டிகொண்டு
வீதியில் நடப்பது பொறுக்காது
அவன் ஏவி விட்ட நாயிடமும்
நாய் ஏவி விட்ட அவனிடமும்
சிக்கிவிடாது தப்பியோடிய கிலியை
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
திணைகளை தூக்கிக் கொணரவில்லை யென
ரொம்பத்தான் சடைத்து கொள்கிறாய்.



6. எல்லாமும் சாத்தியம் தானெனினும்
எதையும் செய்யபோவதில்லை நான்
என்னை கீழாகவும் உன்னை மேலாகவும் காட்ட
எனக்கு பூட்டிய இழிமுகத்தை மட்டுமில்லாது
நீயணிந்து கொண்ட உயர்முகத்தையும்
கிழித்து கொண்டிருப்பது தவிர.



7. எவருமறியா உன் ஜட்டிக்கிழிசலை போல்
நீ மட்டுமே அறிந்தவை
உன் மனசின் கசடுகள்.

சொல்ல துணிவுண்டா உனக்கு?
உன் அந்தரங்களில்
நீ ஒளித்து வைத்திருக்கும் எல்லாமும்
வேப்பமரத்தடி மணலில்
சூரியனுக்கு தெரியாமல்
நீ புதைத்து வைத்தமுதலாய் விழுந்த சிங்கப்பல்லை போல
ஒரு பாவமுமறியாதவையே என.




8. எத்தனையாவது முகம் இது?
சண்டாளனென என்னை வரையறுத்த
மனுவின் அழுகல் குறியை ஊம்பி
வல்லமை பெற்ற ஷத்திரியக் கைவாளின்
நினைப்பில் கருகிய முகங்களே அதிகமும்.
இருசக்கர வாகனமொன்றின் பின்னிருக்கையில்
முயக்கத்தில் தோன்றியகணம் கருகிய
இம் முகம் போலும் சில முகங்கள்.
ஒவ்வொரு முகம் கருகும்போதும்
மூர்சையாகிச் செத்தவள் போல் விழுபவள்
புதிது புதிதாய் முளைக்கும் முகங்களுடன்
எழுந்து என்னில் தழும்பி கொண்டிருக்கிறாள்.
முகமும் உருவமுமற்ற என்னுள் உறவாட
உயிர் ஊறிக் கொண்டிருக்கிறது என்னிலிருந்து.



10. பொருட்படுத்தாது நீ போன கணத்திலிருந்து
புழுத்து வீச்சமெடுத்துக் கொண்டிருக்கிறது.
நாசியைப் பிடித்துக் கொண்டு
வசைகளுடன் கடந்து போகிறவர்களை
சட்டை செய்யாது ஏந்திக் கொண்டிருக்கிறேன்.
வேறொன்றும் செய்திடலாகாது.
உனக்கு படையலிடவென்றே
கடைந்தெடுத்த அமுதமிது.


11.

அ.

என்னை நீ பார்பதென்பது
எப்போதும் என் பின்புறத்தைப்
பார்பதாகவே இருக்கிறது.

ஒவ்வொரு எதிர்படுதலிலும்
கவனமாய் அவதானிக்கிறாய்.
நீ மொட்டையாக்கிய இவ்வாலை
குலைக்கும் வேகத்தை,
ஊம் ஊமென குழறும் குழறலை,
உன் காலை மோந்து, நக்கி சுற்றிச் சுற்றி
வருமென் கால்களில் மிதியுண்டு கிடக்கும் நானை,
நீ வீசியெறிவதை நக்கி தின்னுமென் வேகம்
உன் திருப்திக்கு உத்திரவாதமளிப்பதாயிருப்பதை,
எல்லாவற்றையும்.
நக்கி தின்னும் வேளையில் ஓங்கி வயிற்றிலுதைபட்டு
ஊளையிட்டு இறைஞ்சி நிற்குமென் பசிபார்வையில்,
என் மழுங்கல்தனத்தை உறுதி செய்து
கடந்து போவதுன் வழக்கம்.


ஆ.

உன்னை நான் பார்பதென்பது
எப்போதும் எச்சில் ஒழுகும் உன் வாயை
பார்பதாகவே இருக்கிறது.

ஒவ்வொரு எதிர்படுதலிலும்
கவனமாய் அவதானிக்கிறேன்.
எல்லாவற்றையும் குரோதமுடன் நோக்கும்
உன் நிலையற்ற பார்வையை,
அருவத்தை குதறும் உன் குரைப்பை,
எதிர்படுமெல்லாவற்றிலும் மோந்து பார்த்துத்
தலைக்கேறித் ததும்பும் வெறியைச்
சேர்பிக்கத் தோதான உயிர் தேடி
ஓட்டமும் நடையுமாய்த் தொடரும் உன் அலைச்சலை,
அனைத்தையும்.
பாதுகாப்பான தொலைவு கடந்து வந்தபின்
உன்னை திரும்பி பார்பதென் வழக்கம்
பேச்சு மூச்சற்றுத் திகிலுடன்.



12.
முகங்கள் தேவையற்றவையாய்ப் போய்விட்டன.
உனக்கும் எனக்கும் எவருக்கும்.
சுற்றியிருப்பவர் பாலுறுப்புகளை
விழுப்புடன் கண்காணித்திருப்பதோடு
முடிந்து விடுகிறது
சக மனிதர் மீதான அக்கறைகள்.



13.
நமைச்சலெடுக்கும் குறிகள் மூணு
கூட இருக்கும் தெம்பில் குறிநீட்டி
எல்லை மீறுபவனுக்கெதிராய்
எதுவுஞ் செய்ய இயலாமல்
குறியைச் சுருட்டிக் கொண்டவனின்
கையாலாகாத்தனம்
அர்த்தமற்ற குத்தலுடன் குற்றபடுத்தும் உன்னை.
நாங்கள் சுமத்திய எங்கள் அகோரங்களை
அறியவும் அனுமதிக்கபடாமல்
நீட்டியவனுக்கும் சுருட்டியவனுக்குமிடையே
குறுகிக் கிடக்கிறாய் நீ.
முலையும் யோனியுமாய்
வெறும்
முலையும் யோனியுமேயாய்.



14.
அக்கா குருவியின் மெல்லிய குரல் லயமும்
சிறு சிறு மலர்களின் மௌனச் சுகமும்
எனக்கும்தான் பிடித்திருக்கிறது.
பிறகெதற்கு இந்த ஒப்பாரியும் கூப்பாடும்
என்கிறாயா?

தேவைகள் சமைத்த என் குரலைச் சலிக்காது
சற்றே பொறு நண்பனே,
என் காதலி உன்னையும்
உன் காதலி என்னையும்
தழுவி முத்தமிட எந்த தடையுமில்லாமற்பொகும்
உன்னதப் பொழுதுவரை




15.
தலைவாசலுக்கருகில் படுத்துகொண்டு
முகம் திருப்பி முதுகு கடித்து
அரிப்புக்கு பதில் சொல்ல
முயற்சித்துக் கொண்டிருக்கிறது
அது எப்போதும்.

சொறிந்து கொள்ளக் கைகளின்றி
அதுபடும் அவஸ்தை புரிந்தாலும்
என் கைகளை இரவல் கொடுக்க முடியாது
ஒரு போதும்.

வேதனையுடன் கழிக்கவென விதிக்கபட்ட
அதன் எஞ்சிய வாழ்வு குறித்து
அனுதாபம் நிறைய இருந்தாலும்
எதுவும் செய்யக் கூடவில்லை
இந்த இடத்தையும் அதற்கில்லையென
மறுக்கும் ஒற்றைக்கல்லை
இதுவரை வீசாமலிருப்பதை தவிர.


16.

அலையடித்து நுரைகக்கும் கரையை
மிகுந்த பிரயாசையுடன் கடந்து செல்லுமென்
கைகளில் புராதனத்தின் கிழிசல் மிக்கவொரு வலை.
ஆழங்களில் வீசி காத்திருந்து மீட்டெடுக்கையில்
மீன்களை வழிய விட்டுவிட்டுக்
கடற்தாவரங்களோடு கெக்கலிட்டுச் சிரிக்கிறது
அது அநேக நேரங்களில்.
பெருமீன் பிடிக்க லாயக்கற்றுக் கிழியுமிதைப்
புதுப்பிக்கும்வரை
திருப்தி கொள்ள வேண்டியதாயிருக்கிறது
குறுமீன்களோடு.

கிழிசல் வலையைப் பலவீனத்தோளில்
போட்டுக்கொண்டு மீண்டும் மீண்டும்
வரச் செய்வதாயிருக்கிறது கடலின் அழைப்பு.
விடாப்பிடியான தாகத்துடன் விரித்துகொண்டேயிருக்கிறேன்
மீன்களுக்கான வலையில்
நானே விழுந்து கிடப்பதை அறிந்தும்
அறியாதவனாய்.


17.

வருடிக் கொடுப்பதான பாவனை செய்யவல்ல
உன் வார்த்தைகளை மூலதனமாக்கிப்
பெற்றது உனதிந்த ஸ்தானம்.
கேள்விகளற்றுத் தலையாட்டலுடன் தொடர்ந்த
இத்தூரத்தின் முடிவில் மிச்சமாகியிருப்பது
உனக்குன் ஸ்தானமும்
எனக்குன் வார்த்தைகளும்.

ஸ்தானம் கொடுப்பது நிறைய
தனம் தானியம் அதிகாரம் கீர்த்தி என.
வார்த்தைகள் கொடுத்தது ஒன்று
நீண்ட மயக்கம்.

ஒரு நீர்கயிறாய் வலியின்றி பிணைத்திருக்கும்
உன் வார்த்தைகளிலிருந்து மீள
வேறென்ன வழி மீந்திருக்கிறது சொல்!
கனவு ததும்பும் உன் விழிகள் ஒளிர
பரிவு சுமந்துவரும் அவ்வார்த்தைகள் புறப்படும்
உனதந்த குரல்வளையை குதறுவதை தவிர.


18

அ.

கான் தள்ளும் கறுப்பு வளையல்காரிகளின்
கைகளில் வந்தாவது
சரியாய் இருக்குமா?

கிழிசல் உடை பரட்டைத்தலை
சக்கிலிய வீட்டு பிள்ளைகளைக்
குறிவைத்துத் துரத்தியடித்தே பழக்கப்பட்ட
வாத்திச்சிகளின் கைப்பிரம்பும்,

காக்கிக் குறிகள் ஒரு அபலையை
வெறிதீரக் குதறத் தோதாய்
செம்பருத்திப் படம் பார்க்கப் போன
பொறுப்பான பொம்பளப் போலீஸின் லத்தியும்.

ஆ.

பிரம்புகளும் லத்திகளும்
மொத்தமாய் எரியுண்ட
சாம்பல் மேட்டை நோக்கியே
துவக்க வேண்டியிருக்கிறது
இந்த பயணத்தின் முதல் அடியை.



19. மூச்சிரைத்து நுரைதள்ள
வெகுதூரம் வந்துவிட்டேன் உன்னை தொடர்ந்து.
இன்னுமெவ்வளவு தூரம் போக்கு காட்டி
இழுத்து போக உத்தேசித்திருக்கிறாய்?
அண்டி தெறிக்க குலைக்குமிவை
மேலே விழுந்து குதறும் நிமிடமும்
தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.
வலுவும் வழியும் இல்லாவிட்டாலும்
திரும்பலை குறித்து யோசித்தாயிற்று பலமுறை.
கண்ணீரிலும் குரோதத்திலும் செய்த
கிடுக்கியோடு தொலைவில் காத்திருக்கிறது வீடு
என் விரைகளை நசுக்க.

20.

மௌனத்தின் அழுகையாய் உறுமியும்
வெறிக்கூத்தின் ஒலிபெயர்பாய் பறையும்
திகில் மந்திர புதிர்புதை மொழியில் உடுக்கையுமொலிக்கும்
மறைவெளி மண்டலங்களிலொன்றில்
பட்டைசாராயமும் பனங்கள்ளும்
மாந்திச் சிவந்த விழிகளுடன்
பன்னிக்கறியின் மெதனை படிந்த கைகளில்
கொடுவாளுடன் எதிர்பட்டானவன்.

கொடுவாளைக் கொண்டு மேனியை அடிக்கடி
அலுப்புடனும் கடுப்புடனும் வழித்துக் கொண்டிருந்தவன்
"ஓய்ந்து கொண்டிருக்கிறேன்
வழி நெடுக மேலே விசிறியடிக்கும்
சைவ அசைவ பீக்களை வழித்து வழித்தே"
யென்ற புகாருடன் அறிமுகப்படுத்திகொண்டான்
என் தொல்குடித் தெய்வமென்று தன்னை.
தெண்டனிட்டு வணங்கியெழுந்த போது
எனதேயான தன்முகம் மலர
வேண்டுவன கேளென்றான்
பூப்பறித்து விளையாடுவதாய் எம் தலையறுத்தாடும்
மெஜாரிட்டி கைகளில் சாதுவானவொன்று
பின் மெல்ல அறிவிக்கும்
எரிச்சலூட்டுவதாக
எங்கள் தலையின் எந்தப் பாகம் இருந்ததென்பதை
குறித்து நடத்தலாமிப்பொ
பொதுவிவாத மொன்றென்று.

தொல்குடித்தலைவா! வெட்டத் தளிர்க்கும் மரம் மாதிரி
எங்கள் மைனாரிட்டித் தலைகளும்
கொப்படித்துத் தளிர்க்க வேணுமென்றேன்.
பரிதாபமாய் பார்த்தவன் வேறென்னவென்றான்
அவ்வண்ணமே கூட்டமாய் வந்தவர்கள்
கிழிக்க முடியாவகையில் எம்குலப் பெண்களின் குறிகளை
உலோகக் குறிகளாய் மாற்றிதரவேணும்
முடிந்தால் கவர்சியான தங்கத்திலென்றேன்
அரண்டுபோனவன்
தன்னால் தரமுடிவதிதுதானென்று
பீ வழித்துக் கொண்டிருந்த கொடுவாளை
கூர்தீட்டிக் கையில் தந்து
ஊளையிட்டுப் போனானொரு காட்டுமிருகம் போல.



Post a Comment

---------------------------------------

Friday, January 28, 2005

காதல்!

காதலை தீண்டாத, காதலின் கனவுச்சுவையை தராத, அதன் கற்பனை ஃபாண்டஸிக்கு வித்திடாத ஒரு தமிழ் சினிமா இருக்கமுடியாது. இத்தனை விதமாய் பேசப்பட்டும், காட்டப்பட்டும் இன்னும் அலுக்கவில்லை. இனியும் அலுக்கபோவதில்லை.

80 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாய் இயங்கி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் ஒரு உன்னத சாதனை என்று ஒன்று உண்டெனில், அது காதலை சமூகத்தில் லெஜிடிமைஸ் செய்ததுதான். இன்னும் குடும்ப தளத்தில் காதல் முழுவதும் அங்கீகரிக்கபடவில்லை எனினும், சமூகத்தின் ஊடகங்கள், நிறுவனங்கள் அத்தனையிலும் காதல் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஒரு நூற்றாண்டு காலத்தில் இது ஒரு பெரிய சமூக மாற்றமாகவே தெரிகிறது. இதற்கு மிக பெரிய உந்தும் சக்தியாய் தமிழ் சினிமா விளங்கி வருவதை மறுக்க முடியாது.

விஷயம் ஒன்றும் இல்லை. இணையத்திலிருந்து இறக்கி 'காதல்' படம் பார்தேன். வலைப்பதிவிலே பலரும் பாரட்டிவிட்ட படம். நண்பர் கார்திக் மட்டும் சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதற்கு கடைசியில் வருகிறேன்.

எனக்கு என்னவோ இது சமீபத்திய தமிழ் திரைப்படங்களில் குறிப்பிட தகுந்ததாகவே தெரிகிறது. தமிழ் வெகுஜன சினிமாவின் வெளி அளிக்கும் சாத்தியங்களை மிக திறமையாய் பயன்படுத்தி, மிக குறைந்த அளவு சொதப்பி எடுக்கப்பட்ட படமாகவே தெரிகிறது. முக்கியமான விஷயம் இப்படி ஒரு படம் ஹிட்டாவது. இது ஒரு ட்ரெண்ட் அமைத்து மேலும் இது போன்ற படங்கள் வெளிவர வழி வகுக்கும்.

கதை ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாய் கொண்டதாகவும், ஒரு ரயில் பிரயாணத்தில் இந்த (தன்) கதையை சொன்ன மனித நேயம் மிக்கவரின் அனுமதியோடு படமாக்கப் பட்டதாகவும், படமுடிவில் எழுத்துக்கள் மேலே போகின்றன. இதையும் கதை புனைவின் ஒரு பகுதியாக கருதி வாசிக்க முடியும். அப்படி ஒரு வாசிப்பின் சாத்தியம் படம் பார்க்கும் அனைவருக்குமே இருக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நம் மக்கள் "அப்படின்னு சொல்லுதான். எவனுக்கு தெரியும்! படம் ஓடணும்னு நேக்கா இப்படி சொல்லுதானே என்னவோ!" என்று தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பேசக்கூடும்.

உண்மையிலேயே உண்மை கதையின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில், அச்சாக அதை அப்படியே எடுக்கவில்லை என்பது தெளிவு. அதற்கு பாராட்டவேண்டும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. அச்சாக எடுத்திருந்தால் படம் இத்தனை பேரால் பார்க்கபட்டிருக்காது.

படத்தின் சிறப்பாக தெரிவது அதன் கச்சிதமான திரைக்கதை, மற்றும் யதார்த்தபடுத்துதல். சற்றும் தொய்வில்லாமல், எந்த இடத்திலும் அலுப்பு தராமல், தொடர்ந்து ஒரு ஆர்வத்தை தக்க வைத்துகொண்டே செல்லும் திரைக்கதை. எந்த கலைப்படைப்பினாலும் யதார்த்தத்தை அப்படியே படம் பிடிக்க இயலாது என்பது இன்று ஒப்புகொள்ளப்படும் உண்மை. முடிந்தவரை துல்லியமும், நம்பபகத்தன்மையை ஏற்படுத்துவதையுமே யாதார்த்தபடுத்துதல் என்கிறேன். அது சிறப்பாகவே செய்யபட்டிருப்பதாக தெரிகிறது. யதார்த்தமாய் எடுக்கிறேன் பேர்வழி என்று மாடு சாணி போடுவதையும், வைக்கோல் தின்பதையும், மனிதன் சாம்பார் சாதம் சாப்பிடுவதையும் நிமிடக்கணக்கில் காட்டும் இந்திய 'கலைப்படம்' போல் இல்லாமல், ஒரு வெகுஜன திரைப்படத்தின் சுவாரசியத்தையும். மேலோட்டத்தையும் தக்கவைத்தபடியே இதை செய்திருப்பதே தனித்தன்மை.

படத்தின் தொடக்கம் தமிழக எண்ணெய் பலகாரக்கடை, சர்வோதயா இலக்கிய பண்ணை, கோவில், சர்ச், மசூதி என்று மதுரைக்கு எளிதில் அழைத்து செல்ல படுகிறோம். படம் முழுக்க அப்படி ஒரு மிகை காட்டாத, சொதப்பாத ஒரு நடிப்பை அனைவரும் தந்திருக்கின்றனர். காதநாயகி நிஜமாகவே காதலிக்கிறார். உணர்ச்சி வசப்படுகிறார். அலைமோதுகிறார். காதலை பற்றியே எடுக்கப்பட்ட முழுநீள திரைப்படங்களில், 80களின் கதாநாயகிகள் காதலிக்கும் நடிப்பை ஒப்பிடும்போது, எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டதாக தோன்றுகிறது. (அவர் அழகாய் இருப்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.) இனிவரும் வருடங்களில் இவர் எப்படி எக்ஸ்ப்ளாயிட் பண்ண படுவார் என்று நினைக்க மட்டும் கொஞ்சம் கவலையாய் இருக்கிறது.

காதாநாயகன் இதைவிட இயல்பாய் நடித்திருக்கவே முடியாது. படத்தில் வரும் ஏனைய அனைவருமே அந்த பாத்திரத்தை மிகையின்றி உணர்விக்கின்றனர். மிக எளிதாக இவர்களை நடைமுறை வாழ்வில் சந்திக்கலாம் -"உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?" என்று கேட்கும் சகமாணவியை ஒரு பஸ் நிலயத்தில் சந்திக்கமுடியும். கதாநாயகனின் அம்மாவின் முருகபக்தை வேடம் தமிழ் சினிமாவில் புதிது. கதாநாயகனின் அம்மாவென்று ஒரு 'ஷ்பெஷல்'தன்மை எதுவும் தராமல் ஒரு ஸபால்டர்ன் அம்மாவை காண்பித்திருக்கிறார்கள்.

தமிழில் எத்தனையோ படங்களில் கலக்கியது போல் இந்த படத்திலும் ஒரு சின்னபையன் வந்து கலக்குக்கிறார். புரியவே இல்லை. காஜா ஷெரீஃப், தவக்களை தொடங்கி இந்த உதாரணக்கள் எல்லாம் என்னவானார்கள்? இவரும் என்னவாவார் என்று தெரியவில்லை.

அப்பத்தா போன்ற அப்படியே உயிர்கொண்ட பாத்திரங்களை பாரதிராஜா படங்களில்தான் பார்க்கமுடியும். ஆனால் அவர் படத்தில் கதாநாயகி/நாயகன் அசடு வழிவார்கள். சமீப கால திரைப்படங்களில் ஒரு டெரெண்டாக அமைந்துள்ள (திலி தமிழ்போல்) மதுரை தமிழ் அப்படியே எல்லோராலும் (க.நாயக/நாயகி முதல் சீன் உட்பட) பேசப்பட்டாலும், திடிரெனெ கதாநாயகனின் தோழன் ஒரு கட்டத்தில் மட்டும் 'ஏலே, வாலே'யை மதுரை தமிழுடன் கலந்தடிக்கிறார். ஒருவேளை அவர் ராமநாதபுரம் பக்கத்திலிருந்து வந்ததாக உணர்துகிறார்களோ?

ஒரு சடங்கு நிகழ்ச்சி அத்தனை யதார்த்தங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது போன்ற வைபவங்களில் தவறாமல் நடைபெறும் சண்டையும் காண்பிக்கபடுகிறது. கதாநாயகியின் ஜாதியை குறிப்பால் உணர்த்திவிடுகிறார்கள். மற்றபடி கதை பெரிய விஷயமில்லை. இந்த சம்பவ கோர்வையை போட்டு, ஏற்கனவே சொல்லப்பட்ட சாதாரண கதையை, மனதை பாதிக்கும் விதமாய் எடுத்ததே படத்தின் சிறப்பு. படத்தை பார்த்த எவரும்-பொதுவாய் உணர்சிவசப்படும் தமிழ் சினிமா பார்க்கும் வெகுமனம்- ரொம்பவே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் என்று தோன்றுகிறது.

படத்தின் பல்வேறு சிறப்பை ஏற்கனவே பலர் எழுதியிருப்பதால் இத்தோடு ஜகா வாங்கிகொள்கிறேன். நான் பார்த்தது ஒரு இணணய காப்பி. இடையில் கொஞ்ச நேரம், இருட்டாகி ஒலிச்சித்திரமாய் கேட்க வேண்டியிருந்தது. மொத்தத்தில் தமிழ் சினிமா உலகில் உற்சாகத்தை அளிக்கும் படமாகவே என்னால் இதை பார்க்கமுடிகிறது. இனி கார்திக் முன்வைத்த குற்றசாட்டுகளுக்கு வருகிறேன்.

கதாநாயகனுக்கு புத்தியில்லாததாக சித்தரிக்கபட்டிருப்பதாக கார்திக்கை போல என்னால் வாசிக்க முடியவில்லை. ஆனால் கார்திக்கின் வாசிப்பை மறுக்கவும் வாதங்களில்லை. கதாநாயகன் வேறு வழியின்றியே நாதியற்ற தன் சென்னை தோழனை நாடி போகிறானே ஒழிய, புத்திகுறைவினால் அல்ல என்று தோன்றுகிறது. அதே போல கிரிமினல் மூளையுடய சித்தப்பாவை நம்புவது பொதுவாய் (காதலிக்கும் ஒருவனுக்கு தேவையான) வெகுளித்தனமும், அப்பாவித்தனமுமே அன்றி, முட்டாள்தனமாய் எனக்கு தெரியவில்லை. இப்படி பார்ப்பது சரியா என்பதை விட படம் பார்த்து துய்க்க அது உதவும் என்று தோன்றுகிறது. துய்பது முக்கியமானது என்று நான் நினனக்கிறேன். அது தவிர கார்திக் நோண்டி பார்த்து சொல்லும் பல குறைகள், தமிழ் வெகுஜன சினிமாவை பற்றி பேசும்போது பெரிதுபடுத்த தேவையில்லாத விஷயங்களாக எனக்கு தோன்றுகிறது. அதனால் இரண்டு கருத்துக்களை அவர் சொல்வதில் முக்கியமாய் கருதி அதை மட்டும் எதிர்கொள்கிறேன்.

"இப்படம் காதல் என்பது பண்க்காரனுக்கும் ஏழைக்கும் வரவே கூடாது என்பது போல் தான் எடுக்கப்பட்டுள்ளது. அது நம் சமூகத்தில் பிச்சிகிட்டு ஓடி வெற்றி பெறுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை."

முதலில் எந்த ஒரு கலைப்படைப்பும் ஒரு குறிப்பிட்ட நோக்கதுடன் எடுத்தாலும், அப்படி அது திகழ்வதாய் தெரிந்தாலும், அது நிறைவேறாது என்பது முக்கியமானது. நண்பர் ஒருவர் 50களில் வந்த ஒரு திரை விமர்சனத்தை பல வருடங்கள் முன்னால் காட்டினார். படம் பெயர் எதுவும் நினைவிலில்லை. அது இங்கே தேவையும் இல்லை. அந்த விமர்சனம் "மோசமான காட்சிகள் கொண்ட படம் என்றாலும், நல்ல கருத்துள்ள முடிவு" என்பதாக ஒரு தொனியுடன் நிறைவு பெறும். அதாவது படம் சற்று தூக்கலாக ஸெக்ஸ் காட்சிகள் கொண்டது, ஆனால் படமுடிவில் கதாநாயகன் தனது 'லீலை'களுக்கு பாடம் கற்றுகொண்டு திருந்துவதாய் கதை இருக்கலாம்.

இப்போ விஷயம் என்னவெனில் படம் பார்க்கும் யாரும் இந்த நீதிபோதனைத்தனமான முடிவிற்காக பார்க்கபோவதில்லை. அதை கண்டுகொள்ளவே போவதில்லை. படம் பார்த்த கூட்டம் அத்தனையும் பாலியல் காட்சிகளுக்காக மட்டுமே படம் பார்த்திருக்கும். ஆக படத்தின் நோக்கம் என்று ஒன்றை சொல்லகூடும் என்றாலும், அது யாராலும் கண்டுகொள்ள போவதில்லை.

இதுவரை எடுக்கப்பட்ட காதல் படங்கள் பல காதல் தோல்வியை அடிப்படையாய் கொண்டாலும், அது காதலை போற்றுவதாகவும் காதல் குறித்த கற்பிதத்தை இன்னும் தீவிரமாக்கவுமே பயன்பட்டிருப்பதாய் தோன்றுகிறது. இது போன்ற படங்கள் மேலும் வர காதலிப்பவர்கள் இன்னும் அதிகமாக கூடுமே ஒழிய, இது அவர்களை நம்பிகை இழக்க வைக்காது என்றே நினைக்கிறேன்.

"மேலும் சாதி விட்டு சாதி கல்யாணம் பற்றி கதை இருந்தும் கூட, அதை ஆதரிப்பது பற்றி ஒரு டயலாக் கூட இல்லாதது பாலாஜி சக்திவேலின் சமூகச் சிந்தனையின் அளவை தெரிந்து கொள்ள உதவுகிறது."

ஓரளவு நியாயமான விமர்சனம் என்றாலும், நம் வெகுஜன சினிமாவின் முக்கிய நோக்கம் படம் பிரச்சனையில்லாமல் ஒடுவதும், அதை ஹிட்டாக்குவதும் மட்டுமே. இதற்கு நடுவிலேயே மற்ற விஷயங்கள் பேசப்படும். அவைகள் எந்த வித தீவிரத்தன்மை அற்றதாய் இருப்பினும், இத்தகைய பிரம்மாண்டமான வெளியில் பிரச்சனை தொடப்படுவது முக்கியமானது.

இந்த படத்தில் ஜாதி குறித்த தகவலை முழுவதும் மறைத்து எடுத்திருக்க முடியும். ஆனால் அது சாமர்தியமாய் பேசப்படுகிறது. மெல்லியதாய் அந்த பிரச்சனையும் தொடப்படுகிறது என்பதே நல்ல விஷயம்தான். குறிப்பாய் ஒரு இடைநிலை ஆதிக்க ஜாதியின் (என்ன வென்று சொல்லவும் வேண்டுமோ) வெறி கோடிட்டு காட்டபடுகிறது. பொதுவாய் நிலப்பிரபுத்துவ ஜாதி அடையாளங்கள் மறைக்கப்பட்டு கிராம சினிமாக்கள் கூட எடுக்கப்படும் (அதில் தலித்தாக வாசிக்க கூடிய பாத்திரங்கள் கேவலப்படுத்த படும்) சூழலில், பாரதி கண்ணம்மா போன்ற (உண்மையில் தேவர் ஜாதிக்கு சார்பாக எடுக்கப்பட்ட ஒரு) திரைப்படத்தையே ஒடவிடாமல் செய்த பிறகும் இந்த அளவாவது பிரச்சனை தொடப்படுவது நல்லது என்றே தோன்றுகிறது.

'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. இந்த படத்தில் (தெளிவாக அடையாளங்கள் சொல்லபடவில்லை எனினும்) ஒரிரு நாள் சேர்ந்து வாழ்கிறார்கள். பார்போம்!

(அ.ராமசாமி படம் பற்றி தீம்தரிகிடவில் எழுதியதாக ரஜினி ராம்கி குறிப்பிட்டிருந்தார். எனக்கு தீம்தரிகிட படிக்க கிடைப்பதில்லை. யாரவது, அந்த விமர்சனத்தை அல்லது அது குறித்த கருத்தை தரமுடியுமா?)

Post a Comment

---------------------------------------

Wednesday, January 26, 2005

விளக்கம்!

அனுராக் டீஜேயின் பதிவில் நான் இட்ட கோபப்பின்னூட்டத்தை முன் வைத்து ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அது குறித்த ஒரு அவசர விளக்கமே இது. எனக்கு இருக்கும் வேலை நெருக்கடி காரணமாய், என் கடந்த பதிவின் பின்னூட்டங்களில் நடக்கும் விவாதத்திலிருந்து தற்காலிகமாய் விலகி கொண்டிருக்கிறேன். இந்த நெருக்கடி திங்கள் மதியம் வரை தொடரும். அதற்கு பிறகு நான் அது குறித்து கருத்து சொல்லலாம். இப்போது அனுராகிற்கு மட்டும் என் தரப்பிலிருந்து விளக்கம்.

அவர் என்னை பற்றி -அடிக்கடி நிதானமிழப்பவர் என்று- சொல்லும் கருத்து குறித்து பேச விரும்பவில்லை. இதற்கான கரணத்தை நான் பதிவுகள் விவாதகளம் தொடங்கி பல முறை சொல்லியிருக்கிறேன். ஒருவர் தன்னை பற்றிய தீர்ப்பை/கணிப்பை தானே சொல்லமுடியாது என்பதுதான். இது ஒரு தன்னடக்கம், தற்பெருமை அல்லது இதற்கிடையேயான ஏதோ ஒரு 'மயிரிழை' தொடர்பான பிரச்சனை இல்லை. அப்படி ஒரு தீர்ப்பு/கணிப்பு சாத்தியமில்லை என்பதே. தன்னை பற்றி சொல்ல, தான் கையில் வைத்திருக்கும் சட்டகத்தின் உள்ளே உட்கார்ந்து கொண்டு, தனது சட்டகத்தை பற்றி பேசவேண்டி உள்ளது. எந்த ஒரு சட்டகத்தின் உள்ளே உட்கார்ந்துகொண்டும், அதனுள் தர்கிக்கபடும் விஷயங்களை பற்றி மட்டுமே பேசமுடியும். சட்டகத்தை பற்றியே பேசவேண்டுமானால் அதற்கு வெளியே வந்துதான் பேசவேண்டும் என்பதால், தனக்கு தானே வெளியே வர வாய்பில்லாததால், அது சாத்தியமில்லை. கடவுளால் கூட அது முடியாது (அவர் தர்கத்திற்கு கட்டுபடுவாரெனில்.) ஆகையால் என்னை பற்றிய கருத்துகளுக்குள் போகாமல் அது குறித்த தகவல்ரீதியான விஷயங்களை மட்டுமே பேசுகிறேன்.

நான் எழுதிய பல மறுமொழிகளை நானே 'நீக்கிவிடுவதிலிருந்து' என் நிதானமின்மை தெரிகிறது என்கிறார். இது உண்மையல்ல. நான் சற்று கோபமாய், நிதானமின்றி எழுதிவிட்ட காரணத்தால் எந்த பின்னூட்டத்தையும் நீக்கிய நினைவு இல்லை. அப்படி நிதானமின்றி எழுதியதாய் எனக்கு தோன்றினால் அதற்கு பொறுப்பேற்று *மன்னிப்பு கேட்பேனே* ஒழிய நீக்குவதில்லை. திண்ணணயில் மட்டையடித்து கொண்டிருந்த காலம் தொடங்கி என் உள்ளிடுகைகளை எடிட் கூட செய்வது கிடையாது.

பின்னூட்டங்கள் சிலமுறை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்ததால் நீக்கியதுண்டு. குறிப்பிட்ட நபருடன் பேச விரும்பாமல், அவருக்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் நீக்கியதுண்டு. இவ்வாறு நீக்கப்பட்ட பின்னூட்டத்தை கவனித்தால் அது மிக *நிதானமாய்* எழுதபட்டிருக்கும். வந்தியதேவனின் பதிவில் நீக்கபட்டதும் (அதை என் பதிவில் இட்டிருக்கிறேன்), சிவக்குமார் பதிவில் எழுதி நீக்கபட்டதும் (அது அருண் பதிவில் உள்ளது ) அந்த வகையை சார்ந்தது. என் கடந்த பதிவில் நீக்கபட்டதற்கு காரணம் இப்போது இதில் நேரவிரயம் செய்ய விருப்பமில்லாமையே. இது தவிர நிதானமின்றி எழுதி (அப்படி எழுதவில்லை என்று சொல்லவில்லை) எதையும் நீக்கியதில்லை.

உதாரணமாய் திண்ணை விவாதகளத்தில், வீரப்பன் வேட்டை என்ற பெயரில், எந்த அதிகாரமும் இல்லாத அப்பாவி மக்கள் மீது நிகழ்ந்த வன்கொடுமைகளை நடக்கவே இல்லையென்றும், அது குறித்து பேசுபவர்களை 'வீரப்பன் தொண்டர்' என்றும் சொன்ன அம்பியை 'ராஸ்கல்' என்று விளித்திருக்கிறேன். இது நிதானமின்றி சொன்னது அல்ல. மிக நிதானமாய், 'அன்பே சிவம்' படத்தில் மாதவனை அருகில் அழைத்து முகத்தில் கமல் நிதானமாய் ஒரு குத்துவிடுவாரே, அந்த நிதானத்துடன் சொல்லப்பட்டது. அதே போன்ற நிதானமாய் இல்லையெனினும், இப்போது பேசப்படும், டீஜே பதிவில் இட்டதும் மனதார, பின்னர் வருத்தப்பட தேவையின்றி, சொல்லப்பட்டது.

இந்த சந்தர்பத்தில் குறிப்பிடப்படும் ஈழப்பிரச்சனை தொடர்பான கருத்துக்களை இங்கே காணலாம்.

இங்கே வெளிவந்த கருத்துகளுடன் வெறும் வேறுபாடு மட்டும் என்னால் காணமுடியாது, அவற்றில் பல பச்சையான இனவாதம் என்பது என் கருத்து. உண்மையில் என் கோபத்தை காட்ட வார்த்தைகள் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அளவுக்கு மீறி கோபம் எற்படும்போது கையில் கிடைத்த சீப்பு, சோப்பை தூக்கி எறிவது போன்றதுதான் இது. கனமான பொருள் எதுவும் என் கையில் அகப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது.

மேலே உள்ள சுட்டியில் எழுதப்பட்ட பல -குறிப்பாய் வந்தியதேவனது- கருத்துக்கள் மிக தெளிவாக அடுத்தவரை புண்படுத்தும் வெறியில் எழுதப்பட்டது. அதுவும் என்னை போன்றவன் மீது அந்த வெறிவந்தால் மன்னிக்கலாம். எத்தனையோ சோகங்களையும், இழப்புக்களையும் சுமந்து நிற்பவரின் மீது நிகழ்த்தப்பட்ட வெறி. உண்மையில் அவர்களைத்தான் புண்படுத்த முடியும். என்னை எந்த வார்த்தையாலும் புண்படுத்த முடியாது. (ஏற்கனவே மேற்சொன்ன இனவெறி கருத்துகளை படித்து புண்பட்டுவிட்டதால் அந்த விஷயத்திலும் மேற்கொண்டு புண்படுத்த சாத்தியமில்லை.) அதனால்தான் எவனும் வாயை திறக்கவில்லை. விஷயத்தை சரியாய் விளங்கிகொள்ளாத அனுராக் திறந்திருக்க்கிறார்.

சிவக்குமாரை பொறுத்தவரை அவர் எழுதியது மிக நிதானமாய் தெரிந்தாலும் (அதன் விஷத்தன்மையே அதுதான்), மிக கடைந்தெடுத்த கயமைத்தனத்துடன் எழுதப்பட்டுள்ளது. மற்றவர்களின் கருத்தை திரிப்பதில் இந்த நபரைவிட திறமை (அதாவது நேர்மையின்மை) காட்டிய ஒருவரை நான் எதிர்கொண்டதில்லை. ஒரு உதாரணமாய் 'ஈழத்து மக்கள் எல்லோரும் இந்தியர்களை வெறுப்பதாய்' அவர் திரித்து எழுதியுள்ள பின்னூட்டத்தை சொல்லலாம். இந்த பெயரிலி என்ற அப்பாவியும் போய் இதற்கெல்லாம் பதில் சொல்லிகொண்டிருக்கிறது.

வந்தியத்தேவனின் இனவெறுப்பும், சிவக்குமாரின் கயமைத்தனமும் மிக எளிதாய் பலருக்கும் புரியகூடும். அது புரியாத அல்லது புரியாமல் நடிப்பவர்களிடம் பேச எனக்கு எதுவும் இல்லை. ஆனால் மூக்கனின் கருத்துக்கள் ஒரு தவறான கருத்தாக்கமாக மட்டும், நட்புரீதியாய் வேறுபடதக்கதாகவும் இங்கே பலரால் பார்க்கபடுவதாய் தெரிகிறது. குறிப்பாய் பெயரிலி, சுந்தரவடிவேல், தங்கமணி போன்றவர்களாலும் அவ்வாறு பார்க்கபடுகிறததய் தெரிகிறது. அதனால் அது குறித்து மட்டும் கட்டுடைக்கும் நோக்கம் உண்டு. சில வாரங்களில் அல்லது மாதங்களில் ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தி நிச்சயமாய் அதை செய்வேன்.

டீஜே, பின்னூட்டத்தில் வெட்டி ஒட்டிய என் கருத்தில் சொன்னதுபோல், நான் எல்லா இந்தியரையும் அவ்வாறு குறிப்பிடவில்லை. வெள்ளை இனவெறியன் என்று ஒருவனை திட்டினால் எல்லா வெள்ளை நிறத்தவரையும் திட்டியதாய் ஆகாது. அதுபோலவே இதுவும். ஆகையால் "பத்ரி, காசி, மாலன் போன்ற வலைப்பதிவு முன்னோடிகள் உட்பட நாங்கள் நூற்றுக்கணக்கான வலைப்பதிவர்கள் இந்தியத் தமிழர்கள் தான். ரோசாவின் மேற்கண்ட வசை எங்களுக்கும் சேர்த்தா?" என்று அனுராக் கேட்பதற்கு பதில் "இல்லை" என்பதே!

அடுத்து "இந்தியத் தமிழர் - ஈழத்தமிழர் என்ற பேதமோ, பிராமணர் அல்லாதார் - பிராமணர் என்னும் மாறுபாடோ கருத்துக் களத்தில் வெளிக்காட்டப் படுவது நியாயமல்ல." என்று அனுராக் சொல்வது எந்த விதத்திலும் நியாயமானதோ ஏற்புடையதோ அல்ல. இது ஒரு எலீட் வன்முறை! 'வித்தியாசங்களை பேசாதே' என்பது, பொது அடையாளம் என்ற பெயரில் தன் அடையாளத்தை திணிப்பது மட்டுமே. இதன் வன்முறை தலித்தியம் பேசுபவர்களை சாதிவெறியர்களாகவும், தங்கள் பிரச்ச்னைகளை பேசும் ஈழத்தமிழர்களை இனபற்றாளர்களாகவும் காட்டகூடிய தந்திரத்தில் வெளிப்படும். எல்லா எலீட் தன்மைகொண்ட நாசுக்கான இனவாதிகளிடம் வெளிப்படும் தந்திரம் இது. அனுராக் அவர்கள் இதை ஒரு வெகுளித்தனமாக மட்டுமே முன்வைத்திருப்பார் என்று எடுத்து கொண்டு, நட்புரீதியில் இதற்கு மாறுபடுகிறேன்.

நான் டீஜேவிற்கு உவப்பான கருத்துகளை மட்டும் எப்போதும் முன்வைப்பவனல்ல என்பது குறைந்த பட்சம் டீஜேவிற்கு தெரியும். குறிப்பாய் புலிகளை நான் கடுமையாய் எதிர்ப்பது அவருக்கு தெரியும். இந்த முரண்பாடுகளுகிடையில் என் தரப்பில் பேசிய அவருக்கு என் நன்றி.

பொதுவாய் சிக்கல் வரும்போது அதை மௌனத்தால் எதிர்கொள்வதும், கோபப்படுபவன் அவசரத்தில் சிந்தும் வார்த்தைகளை திரித்து தன் அரசியலுக்கு சாதகமாய் பயன்படுத்துவதுமே பொதுவாய் நடப்பது. இதற்கான உதாரணக்களை பேசதொடங்கினால் அலுப்புதான் தட்டும். இந்த யதார்தத்தில் வெளிப்படையாய் தன் கருத்துகளை முன்வைத்த அனுராகிற்கு என் மனப்பூர்வமான நன்றி.

Post a Comment

---------------------------------------

Saturday, January 22, 2005

துப்பாக்கி குறித்த மூன்று கதைகள்

(மீண்டும் சோபாசக்தியின் 'ம்' நாவலில் இருந்து ஒரு அத்தியாயத்தின் சிறுபகுதி. அனுராதபுரத்தில் புலிகள் செய்த படுகொலையை சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதியினர், வன்மையாக கண்டித்து அறிக்கை எழுதும் பொறுப்பை இடதுசாரி சிந்தனையாளரான தோழர் பக்கிரியிடம் அளிக்கின்றனர். அவர் அன்னந் தண்ணி இல்லாமல் மூன்று நாட்களாய் மண்டையை உடைத்து இருபது பக்க அறிக்கையை தயார் செய்கிறார். அதை சக அரசியல் கைதிகளால் புரிந்துகொள்ள இயலவில்லை. முடிக்கும் போது மாவோவின் 'துப்பாக்கி குழல்களிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது' என்ற வாசகத்துடன் வேறு முடிகிறது. இந்த சந்தர்பத்தில் இந்த கதைகள் சொல்லப்படுகிறது.- ரோஸாவசந்த்)

I

1971 ஏப்ரல் அய்ந்தாம் நாள் ஜே.வி.பி. தொடங்கிய ஆயுத கிளர்சியை இலங்கை இந்திய கூட்டு படைகள் நசுக்கியதன் பின்பாக பத்தாயிரத்துக்கும் அதிகமான சிங்கள் இளைஞர்கள் , மாணவர்களும் பெண்களும் சிறிமாவோ பண்டாரநாயகாவின் அரசால் கொல்லப்பட்டு, தெருவிலும், ஆறுகளிலும் பிணங்கள் வீசப்பட்டன. வகைதொகையின்றி ஜே.வி.பி.யினர் கடுமையான காவல் ஏற்பாடுகளுடன் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைபிடிக்க பட்டிருந்த ஜே.வி.பி. கைதிகளிடையே ஒரு புத்தகம் இரகசிய சுற்றில் இருந்தது. சிறைக்குள் இருந்த ஜே.விபி.யினர் இரகசியமாக 'மாவோ சே துங் சிந்தனைகள்' என்ற மவோவின் புகழ் பெற்ற புத்தகத்தை தீவிரமாய் படித்துகொண்டிருந்த போது, ஜே.வி,பி.யினரை சிறையில் அடைத்து வைத்துக் காவலுக்கு நின்ற போலிசார் மாவோ அரசு சிறிலங்கா அரசுக்கு வழங்கிய நவீனரக துப்பாக்கிகளை தங்களது கைகளில் வைத்திருந்தனர்.

II

சோவியத் யூனியன் உடைந்த நேரத்தில் ரஷ்யா மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கியிருந்தது. அப்போது மொஸ்கோவின் பெரிய வங்கி ஒன்றுக்குள் நுழைந்த ஒரு வாலிபன் இடுப்பிலிருந்து துப்பாக்கியை உருவி வங்கி மேனேஜரின் நெற்றியில் வைத்து 2460 ரூபிள்கள் தரும்படி கேட்டான். வங்கி மேனேஜரோ உயிரே போனாலும் காசு பணம் தரமாட்டேன் என்று துப்பாக்கி வாலிபனிடம் கூறிவிட்டு தான் போலிசாரை அழைக்கபோவதாக சொன்னார். வாலிபனோ நீங்கள் அழைப்பதானால் அழையுங்கள் என்று கூறிவிட்டு , துப்பாக்கியை நீட்டியபடியே நின்றான். மனேஜர் போலிஸாரை தொலைபேசியில் அழைத்தார். போலிஸார் வந்து தீர விசாரணை செய்துவிட்டு, துப்பாக்கி வாலிபனின் வங்கி கணக்கிலிருந்து 2460 ரூபிள்களை வங்கி மேனேஜரிடமிருந்து பெற்று வாலிபனிடம் ஒப்படைந்தார்கள்.

III

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற குழந்தை போராளிக்கு வயது பதினைந்து. தம்பாட்டி கடற்கரையில் இரவு நேர காவல் கடமையிலிருந்த ராஜெந்திரன் உடல் அலுப்பாலும் கடற்கரை காற்றாலும் ஒரு கணம் கண்ணயர்ந்தபோது அவனது குழந்தை போராளி தோழர்கள் ராஜெந்திரனின் துப்பாக்கியை விளையாட்டாக எடுத்து மறைத்து வைத்தார்கள். ராஜேந்திரன் கண் விழித்த போது அவனருகில் இருந்த துப்பாக்கி காணாமல் அவன் ஏங்கிபோனான். அவனோடு அக்கடற்கரையில் இருந்த சிறுவர்களிடம் அவன் தனது துப்பாக்கி எங்கே என்று கேட்டபோது அவர்கள் இருளுள் குரும்பாக சிரித்தார்கள். தங்களுக்கு தெரியாது என்றும் துப்பாக்கியை பறிகொடுத்ததுக்கு பொறுப்பாளர் வந்தவுடன் பெரும் தண்டனை கிடைக்கும் என்றும் அவர்கள் விளையாட்டாக ராஜெந்திரனை பயமுறுத்தினார்கள். ராஜேந்திரன் அவமானத்தாலும் பயத்தாலும் அலைக்கழிக்கபட்டிருக்கலாம். அவன் உடனடியாக அந்த கடற்கரையிலேயே குப்பி கடித்தான். அவனது தோழர்கள் தடுப்பதற்கு முன்னதாகவே இறந்து போனான். இயக்கம் அவனது முகவரியை குறிப்பு புத்தகத்தில் பார்த்து போது தெளிவான முகவரி ஏதும் அதில் குறிக்கபட்டிருக்கவில்லை. முருகன் கோவிலுக்கு அருகில் ஹற்றன் என்றொரு முகவரியும் அதனருகே ஏர்னஸ்ட், பனைத்தீவு என்று இன்னொரு முகவரியும் காணப்பட்டன. 'ராஜேந்திரனின் உடலை பெற்று செல்ல விருப்பமா?' என்ற செய்தியை இயக்கம் பனைத்தீவுக்கு அனுப்பியபோது, தனக்கு ராஜேந்திரனுடன் எந்த உறவுமில்லை, உரிமையுமில்லை என்ற பதில் செய்தியை ஏர்னஸ்ட் இயக்கத்துக்கு அனுப்பினான். ராஜேந்திரன் உடல் இயக்கத்தாலேயே புதைக்கப்பட்டது.


பின் குறிப்பு 1.

மூன்றாவது பத்தியில் வரும் ஏர்னஸ்ட், நாவலின் கதை சொல்லியான நேசகுமாரனின் தகப்பன். ராஜேந்திரன் என்ற பனிரண்டு வயது பாலகனை பத்து ரூபாய் சம்பளம் பேசி, தன் வீட்டில் கடினமாய் வேலை வாங்குகிறான். கிட்டதட்ட கொத்தடிமையை ஒத்த வேலை வாங்கப்ட்ட ராஜேந்திரன், ஒரு தீபாவளியில் தப்பித்து இயக்கத்தில் போய் சேருகிறான். கதையின் இறுதி பகுதியில், ஒரு வழியாய் சிங்கள அரசாங்கத்தின் பல சிறைகளில் வாசம் முடிந்து தமிழ் பகுதிக்கு திரும்பும் நேசகுமாரன், புலிகள் இயக்கத்தால் கைது செய்யபட்டு காவலில் வைக்கபடுகிறான். அவனை பார்க்க வரும் ஏர்னஸ்ட் கண்கள் சிவந்து, முகாம் பொறுப்பாளனிடம் "நாங்கள் மாவீரர் குடும்பம்" என்றார். நேசகுமாரனை கைகாட்டி "இவனது தம்பி வீரச்சாவு அடைந்தவன்" என்றார். "எங்கே அவர் வீரச்சாவடைந்தார்? அவரின் பெயர் என்ன?": என்று கேட்க,

"அந்த பிள்ளையை நான் சின்ன வயசில் இருந்தே எடுத்து என் பிள்ளை மாதிரியே வளர்த்தேன். ராஜேந்திரன் என்று பெயர் தம்பாட்டி கடற்கரையில் சயனைட் குடித்து செத்து போனான்"

இதை சொல்லும் போது அவர் கண்ணிலிருந்து கண்ணீர் கண்ணீராய் கொட்டியது.

பின் குறிப்பு 2.

1984 மார்ச் எட்டாம் தேதி சுன்னாகச் சந்தைக்குள் புகுந்து விமானபடையினர் மக்கள் கூட்டத்தை சுட்டதில் பத்து பேர் இறந்த்து போனார்கள். 1984 ஆகஸ்ட் பதினோரம் திகதி கொழும்பிலிருந்து யாழ்பாணத்திற்கு வந்துகொண்டிருந்த பேருந்து வண்டியை இராணுவத்தினர் காட்டுக்குள் மறித்து வெட்டியதில் பதினாறு பயணிகள் இறந்து போனார்கள். இவர்களில் மூவர் குழந்தைகள். 1984 டிசம்பர் இரண்டாம் திகதி செட்டிகுளத்தில் இருபத்தேழு பேரும் நான்காம் திகதி மன்னாரில் தொண்ணூறு பேரும் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்கள். 1985 ஏப்ரல் இருபத்தி ஒன்பதில் அரியாலையில் அறுபத்தி நான்கு விசேட அதிரடி படையினர் கொல்லப்பட்டார்கள். 1985 மே ஒன்பதாம் திகதி வல்வெட்டிதுறை நூல் நிலயத்தின் உள்ளே அய்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களை அடைத்து வைத்த இராணுவத்தினர் பின் இளைஞர்களோடு நூல் நிலயத்தையும் குண்டு வைத்து தகர்த்தனர். 1985 மே பதினான்காம் திகதி அனுராதபுரம் நகருக்குள் நுழைந்த தமிழீழ விடுதலை புலிகள் சீருடையிலிருந்த பள்ளி குழந்தைகள், பெண்கள் புத்தபிக்குகள் உட்பட 140 பேரை வெட்டியும் சுட்டும் கொலை செய்தனர். இதற்கு அடுத்த நாள் மே பதினைந்தாம் திகதி ஒரே நேரத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வெவ்வேறு கொலை செயல்களில், நெடுங்தீவிலிருந்து குறிகட்டுவானுக்கு வந்து கொண்டிருந்த குமுதினி படகு கடலில் கடற்படையினரால் மறிக்கப்பட்டு ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாய் அறுபத்தோரு பேர் கடற்படையினரால் வெட்டி கொல்லப்பட்டனர். உடும்பன் குளத்தில் இராணுவத்தினரால் எழுபத்தியிரண்டு மக்கள் ஒரு பாடசாலைக்குள் அடைக்கபட்டு உயிரோடு கொழுத்தப்பட்டனர். நாய்பட்டிமுனையில் இருபத்தி மூன்று பேர் விசேட அதிரடி படையினரால் கொல்லப்பட்டனர்.

Post a Comment

---------------------------------------

Friday, January 21, 2005

சண்முகநாதன் கதை

(ஷோபாசக்தியின் சமீபத்திய நாவலான 'ம்'லிருந்து, ஒரு சிறுகதை வடிவிலிருக்கும் இந்த அத்தியாயத்தை இங்கே தருகிறேன். மேலே தலைப்பு நான் தந்தது. ரோஸாவசந்த்)

கனகரட்ணம் சண்முகநாதன் என்ற மட்டக் களப்புத் தமிழர் சிற்றாண்டி எனும் ஊரை சேர்ந்தவர், நோயாளியான அவரது மனைவிக்கு உணவும் மருந்தும் இரண்டு வயதேயான அவரது மகளுக்கு பாலும் வாங்க சண்முகநாதன் பணம் தேடி அலைந்தார். கடைசியாக நகரத்தில் 'மில்' வேலைக்கு கூலிக்கு ஆள் எடுப்பதாக கேள்விபட்டு அவர் வேலை தேடி புறப்பட்டு சென்றபோது சிற்றாண்டி எல்லையில் வைத்து சிறிலங்கா விசேட அதிரடி படையினரால் சண்முகநாதன் கைது செய்யப்பட்டார். அப்போது வருடம் ஆயிரத்து தொளாயிரத்து என்பத்தாறாய் இருந்தது. கைது செய்யப்படும் போது சணமுகநாதனுக்கு வயது இருபத்தியிரண்டு.

அன்று சண்முகநாதனுடன் மேலும் அறுபத்தியிரண்டு தமிழர்கள் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப் பட்டார்கள். இவர்கள் அனைவரும் இராணுவ வாகனங்களிலே காட்டுக்குள் அமைந்திருந்த விசேட அதிரடி படையினரின் துப்பாக்கி சுடும் பயிற்சி முகாமிற்கு அழைத்து செல்லபட்டார்கள். மறுநாள் அதிகாலையில் அதிரடி படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டபோது அதுவரை இலக்குகளாக உபயோகிக்கபட்டுவந்த வைக்கோல் பொம்மைகள் அகற்றப்பட்டு பொம்மைகளின் நிலையில் சண்முகநாதனும் மற்ற கைதிகளும் நிறுத்த பட்டார்கள். அன்றய காலை பயிற்சியில் நாற்பத்தியிரண்டு அதிரடி படையினர் இலக்குகளை துல்லியமாய் சுட்டு தள்ளினார்கள். இருபத்தோரு படை வீரர்கள் இலக்கு தவறி சுட்டார்கள். சண்முகநாதனுக்கு காலிலே வெடி விழுந்தது. இன்னும் இருபது கைதிகள் குற்றுயிரும் கொலைஉயிருமாய் கிடந்தார்கள். காயமுற்றவர்களுக்கு கொழும்பு வைத்திய சாலையில் கட்டில்களோடு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

வைத்தியசாலையிலிருந்து நேராக சண்முகநாதன் இராணுவ தடுப்புமுகாமுக்கு அனுப்பப்பட்டர். அவர் அனுப்பப்பட்ட இராணுவ முகாம் அவிசாவளை பகுதியில் குரிவிட்ட என்னும் ஊரில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தடுப்பு முகாமில் சண்முகநாதன் இரண்டு வருடங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த தருணங்களில் நிலமையை தன் குடும்பத்தாருக்கு சொல்லிவிட எந்த வழியும் திறக்கவில்லை. சண்முகநாதனை தேடி கண்டுபிடிக்க அவரின் குடும்பத்தாலும் முடியவில்லை. ஒரு வருடம் கழித்து, சண்முகநாதனின் குடும்பம் செத்தவீடு கொண்டாடிற்று. சிற்றாண்டியில் இழவு நடந்துகொண்டிருந்தபோது கொழும்பில் இந்திய இலங்கை ஒப்பந்தம் நடந்தது. ஒப்பந்தத்தின் பின்னால் பல அரசியல் கைதிகள் விடுவிக்கபட்ட போதும் யாருக்கும் தெரியாமல் யாருடைய கவனத்தையும் பெறாமல் சண்முகநாதன் குரிவிட்ட தடுப்பு முகாமிலேயே இருந்தார். அடுத்த வருடம் அவர் போகம்பர பெருஞ்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போகம்பர சிறையில் ஒன்றல்ல இரண்டல்ல, பதினாறு வருடங்கள் சண்முகநாதன் பிரேதமாய் கிடந்தார். அவருடைய எல்லா பற்களும் குறடுகளால் பிடுங்கப்பட்டன. அவரின் முதுகு கோடாரியால் பிளக்கப்பட்டது. அந்த நிணமும் தசையுமான உடல் கிடங்கில் கந்தகத்தை கொட்டி எரித்தார்கள். அவரின் மார்புக் காம்புகளில் மின் அதிர்வு செலுத்தப்பட்டு பதினெட்டு வருடங்களாக வெளியில் எவருடனும் எந்தவித தொடர்பும் இல்லாதிருந்தவரிடம் "பிரபாகரன் எங்கே ஒளிந்திருக்கிறான்?" என்ற பைத்தியக்காரத்தனமான கேள்வி அதிகாரிகளால் கேட்கப்பட்டபோது வேலுப்பிள்ளை பிராபகரன் வன்னியில் சர்வதேச பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்தி கொண்டிருந்தார்.

சண்முகநாதன் சிறையதிகாரிகளால் மிருகத்தனமாக வேலைவாங்கப்பட்டார். பகல் முழுவதும் சுத்தம் செய்தல், உருளைக்கிழங்கு, காரட், போஞ்சி பயிரிடுதல், சமையல் போன்ற வேலைகளை செய்ய அவர் கட்டளையிடப்பட்டர். காலையில் ஒரு துண்டு பாணும் சீனியில்லாத கருப்புத்தேனீரும் மதியம் நூறுகிராம் சோறும் ஒரு பூசணிக்காய் துண்டு அல்லது சிறிதளவு கோவா மட்டுமே அவருக்கு உணவாக வழங்கப்பட்டது. சண்முகநாதன் சிறைப் பிடிக்கபட்ட நாளிலிருந்து அவருக்கு முகச்சவரம் செய்ய வழி எதும் இருக்கவில்லை. அவரின் தாடி இடுப்புவரை படர்ந்து கிடந்தது.

சிறைவளாகத்துள் இருந்த ஒர் சிறையதிகாரியின் வீட்டை சுத்தம் செய்ய சண்முகநாதன் போவதுண்டு. அந்த சிறையதிகாரியின் நோனா சண்முகநாதனுக்கு இரங்கினாள்.அவளின் உதவியோடு சண்முகநாதன் இரண்டாயிரத்து நான்காம் வருடம் ஏப்ரலில் ஒரு மழைக்கால இரவில் போகம்பர சிறையிலிருந்து தப்பி சென்றார். காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து கடைசியாக சண்முகநாதன் தனது ஊருக்கு வந்து சேர்ந்தபோது தனது வயதை மறந்து போயிருந்தார். சண்முகநாதனின் மனைவி இறந்து போயிருந்தார். இரண்டு வயதில் அவர் பிரிந்து சென்ற அவரது மகளுக்கு இப்போது நான்கு வயதில் ஒரு குழந்தையிருந்தது.

தப்பி வந்தவரின் கதையை இயக்கம் முதலில் நம்ப மறுத்தது. அவரை அரசாங்க உளவாளி அல்லது மாற்று இயக்கத்தை சேர்ந்தவர் என்று இயக்கம் சந்தேகமுற்றது. தன்னை விசாரணை செய்த இயக்கக்காரர்கள் நால்வரில் எவருமே பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தான் விசேட அதிரடி படையினரால் கைது செய்ய பட்டபோது பிறந்தேயிருக்கமாட்டார்கள் என்று சண்முகநாதன் அடித்து சொல்கிறார். இவர் சிறையிலிருந்த முழுக் காலங்களிலும் எந்த மனித உரிமை இயக்கமோ, செஞ்சிலுவை சங்கமோ அரசியல் கட்சியினரோ இவரை சந்திக்கவில்லை என்றும் கூறுகிறார். இவரைப் போலவே வந்தாறுமூலை, கிரான். முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி பகுதிகளை சேர்ந்த இருபது தமிழர்கள் வழக்குகள், விசாரணைகள் ஏதுமின்றி போகம்பர சிறையில் அநாதரவாய் கிடக்கிறார்கள் என்றும் சண்முகநாதன் கூறுகிறார்.

சண்முகநாதனின் உடல் சிதைக்கப்பட்டுவிட்டது. அவர் சற்று மனச்சமநிலை சரிந்தவராகவும் காணப்படுகிறார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நட்டஈடாக ஒரு வேலையும் வீடும் வழங்குமாறு இந்த அப்பாவி தொலைக்காட்சி பேட்டிகளில் அரசாங்கத்தை கோருகிறார். ஆனால் நட்டஈட்டை பெறுவதிலுள்ள ஒரு நுணுக்கமான சட்டச் சிக்கலையும் அவரே விபரிக்கிறார்.

அதாவது சண்முகநாதன் கைது செய்யப்பட்ட மறுவருடமே சண்முகநாதனின் மரண சான்றிதழ் கிராம நிர்வாக அதிகாரியால் சண்முகநாதனின் மனைவிக்கு வழங்கபட்டுள்ளது. இப்போது உயிரோடு மீண்டு வந்த சண்முகநாதன் கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து தனக்கு வழங்கபட்டுள்ள மரண சான்றிதழை அரசாங்கம் மீளப் பெற்றுகொள்ள வேண்டுமென்று கேட்டபோது மரண சான்றிதழை மீளபெற்றுகொள்ள தனக்கு அதிகாரமில்லை என சொல்லி கிராம நிர்வாக அதிகாரி மறுத்துவிட்டார். ஆக அரசு ஆவணங்களின் படி சண்முகநாதன் இன்றும் இறந்துபோனவராகவே கருதப்படுவார். கனகரட்னம் சண்முகநாதன் கூறுகிறார்:

"எனவே எனது இப்போதய கவலையெல்லாம் நான் உயிருடன் இருப்பதை எப்படியாவது அரசாங்கத்திற்கு நிருபித்து காட்டவேண்டும் என்பதே."

Post a Comment

---------------------------------------

Thursday, January 20, 2005

ரோஸா!

யமுனா ராஜேந்திரன் பதிவுகளில் எழுதியுள்ள இந்த கட்டுரையை பார்தேன். படிக்க தொடங்கி, சில வரிகள் தாண்டி, இரவு நேரமாகிவிட்டதாலும், நீளம் காரணமாகவும் தொடர முடியவில்லை. நாளை பொழுதோடு வேலைக்கு போகவேண்டியிருப்பதால், நாளை பார்த்து கொள்ளலாம் என்று தூங்க போனால் தூக்கம் வர மறுக்கிறது. போய் யமுனாவின் கட்டுரையையும் படிக்க முடியும் என்று தோன்றவில்லை. கிட்ட தட்ட 9 வருடங்கள் முன்பு சென்னை ஃபிலிம் சொசைட்டி புண்ணியத்தில் ரோஸா லக்ஸம்பர்க் படம் பார்த்து, பித்து பித்து பிடித்த அந்த தினம் நினைவில் வந்தவண்ணம் இருக்க, இப்போது தூங்குவதும் சாத்தியமில்லை என்று தெரிகிறது.

20ஆம் நூற்றாண்டு, அதன் தொடக்கம்தான் எத்தனை நம்பிக்கை தருவதாய் இருந்தது! அந்த நம்பிக்கைகள் அத்தனையும் பாசிசமாய் பரிணமித்த பின், எல்லா ஊன்றுகோல்ளையும் இழந்து, எதை பற்றி கொண்டு தொடர்வது என தெரியாமல் முழித்துகொண்டு தத்தளிக்கிறோம். ஆனால் தொடங்குபோதே பிரச்சனையுடன் தான் அவைகள் பிறந்திருக்கின்றன. ரோஸா லக்சம்பர்க் திரைபடத்தில் ரோஸாவும், காட்ஸ்கியும் முரண்படும் கட்டத்தில், " இடது சாரிகளான நாங்களும் நாட்டு பற்றுடையவர்கள்தான் என்று காட்ட விரும்பினோம்" என்று போருக்கு சாதகமாய் முடிவு சொல்லும்போது, எதோ ஒரு வகையில் தேசியம் எல்லா லட்சியத்துடன் பிணைக்கப்படும் சிக்கலும், தவிர்க்க முடியாமையும், பின்ன்னாளில் தலைதூக்க போகும் பாசிசத்திற்கான கவர்ச்சி குறித்த புரிதலுக்கான சாவி கிடைக்கிறது. யமுனா அது குறித்த கேள்விகளுக்குள் போவார என்று எனக்கு மிகுந்த சந்தேகமாய் உள்ளது.

இருப்பினும் படித்தவரை யமுனா எழுதியுள்ளது முக்கியமானதாய் தெரிகிறது. தவறுகளால் குறிக்க படும் புரட்சியின் மீது அவிழ்த்து விடப்படும் அரசு வன்முறையின் நம்பமுடியாத பரிமாணத்தை பலமுறை வறலாற்றில் பார்த்திருக்கிறோம். வங்காளத்தில் நக்ஸ்லைட்டுகள், இலங்கையில் (தொடக்க கால) ஜேவிபியினர் என்று, அரசாங்கம் என்பது அதற்குதான் காத்திருந்தது போல் ரத்த ஆறு ஓடவிடுவதில் இறங்க, எத்தனையோ தியாகங்கள் அதில் பலியிடபடுகிறது.

மறைவிடத்திலிருந்து ரோஸா கண்டுபிடிக்க படுகிறார். அழைத்து வரப்படும் ரோஸா மீது, திட்டமிடபட்டு, தாக்குதலுக்கு காத்திருக்க வைக்கபடும் 'உணர்ச்சி பூர்வமான' கும்பல் " you whore!" என்று ரோஸாவின் மீது பாய்கிறது. ரோஸாவின் உடைகள் கிழிபட, ரோஸா காவலர்களால் அழைத்து செல்லபடுகிறார். கூட்டம் போலிஸை 'மிஞ்சி' முண்டியடித்து ரோஸாவின் மூஞ்சியில் குத்துகிறது. படம் முழுக்க ஒட்டிவைத்த புன்னகையுடனே இருக்கும் ரோஸா அந்த ஒரு கட்டத்தில் மட்டுமே தெளிவாய் புண்பட்ட முகத்துடன் வருகிறார். ஆனால் சிறையிலும் காவலுக்கு இருக்கும் இளைஞனிடம் பேச்சு கொடுக்கிறார். அவரால் கவரப்படுவதை அவனாலும் தவிர்க்க முடிவதில்லை.

ரோஸாவை கொல்ல முடிவெடுக்க படுகிறது. ரோஸா இரவு சிறையிலிருந்து அழைத்து செல்ல படுகிறார். சிறைக்கதவை திறந்து வெளியே கால் வைக்கும் ரோஸா துப்பாக்கியால் காவல்காரனால் ஒரு இயந்திரத்தனாமான வேகத்துடன் தாக்கபடுகிறார். அது ஏதோ கொல்வதற்கு முன்னான சடங்கு போல இருக்கிறது. ரோஸாவை அழைத்து செல்லப்படும் வாகனத்தில், வாகனம் சென்று கொண்டிருக்கும் போது அவன் ஓடிசென்று ஏறிகொள்கிறான். துப்பாக்கியை எடுப்பது தெரிகிறது, அடிபட்ட மயக்கதின் நினைவில் "Don't shoot" என்கிறார். சுடப்பட்டு ஆற்றில் வீசப்படுகிறார்.

படம் பார்த்து விட்டு, விடுதியறையில் இருக்க முடியாமல் ஸ்டார் வொயின்ஸ் போய் மித மிஞ்சி குடித்தேன். ரோஸாவின் காதலர்கள், குறிப்பாய் அந்த இளைஞன்(பெயர் நினைவிலில்லை). ரோஸாவை பிரிந்து செல்வதை நினைத்து அழு அழு என்று அழுகிறான். அந்த காட்சியும். சுடபடுவதற்கு முன் "சுடாதே!" என்று ரோஸா சொல்லும் காட்சியும் மாறி மாறி ஆக்ரமித்து கொண்டிருந்தது.

ஸ்டார் வொயின்ஸ் அடையார் டிப்போ பஸ் ஸ்டாப்பை, எல்.பி.ரோட்டை இந்திரா நகரிலிருந்து தொடும் முனையில் இருக்கிறது. கடையில் குவார்டரும், தண்ணி பாக்கட்டும் வாங்கி கொண்டு ரோட்டோரமாகவே மணல் திண்டில் உட்கார்ந்து அடிக்கலாம். நான் ரோட்டில் தண்ணியடித்து குலுங்கி, குலுங்கி அன்றிரவு அழுது கொண்டிருந்தேன்.

Post a Comment

---------------------------------------

Tuesday, January 18, 2005

ஃபேன்ஸி பனியன்கள்!

நண்பர் டீஜே சாருநிவேதிதா பற்றி எழுதியதை தொடர்ந்து, பத்ரியின் பழைய பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தை (தாவி தீர்ந்து போய்) தேடி எடுத்து, பிழைதிருத்தி, இன்னும் சிலதை சேர்த்து, மீண்டும் ஒரு முறை தேடி எடுக்க தேவையில்லாத வண்ணம் இங்கேயே இடுகிறேன். தமிழ் சூழலில் சாருவின் எழுத்துக்கள் தனித்துவமானதும் முக்கியமானதுமாகும் என்பது என் கருத்து.

எனக்கு சாருநிவேதிதாவுடன் நேரடி பழக்கம் கிடையாது. ஆனால் அவருடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்த சிலருடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. அப்படி அறிந்தவகையில் சாரு மிகவும் போலியான மனிதர், `குறைந்த பட்ச தொடர்புடைய நட்பிற்கு' கூட அவர் லாயக்கற்றவர் என்று கூறவே கேள்விபட்டிருக்கிறேன். அதே போல நான் வாசித்தவரையில் அவருடய எழுத்தில் காட்டப்படும் தீவிரமும் ஒரு போலித்தனத்தை அடக்கியது என்றே நினைக்கிறேன். சாரு அறிவுறுத்தும் வகையில் அவர் வாழ்க்கையையோ, எழுத்தையோ மட்டும் தனித்து புரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல், இவற்றை எல்லாவற்றுடனும் தொடர்பு படுத்தி பார்க்கையில் போலித்தனமே மிகுதியாய் தெரிகிறது.

வெங்கட் பலவகை பொய்கள் குறித்து போனமாதம் சில பதிவுகள் எழுதியிருந்தார். அதில் சாருவகை என்ற ஒரு வகை பொய்யை விட்டுவிட்டார். அதன் தனித்தன்மை குறித்து அவர் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. சாருவின் ஸ்பெஷாலிடியாக நான் அறிவது, பொய்யை முழுமையாய் தானும் நம்பிகொண்டு சொல்வது. வெங்கட் பொய்கள் குறித்த கடைசி பதிவில், பொய்களை கண்டுபிடிப்பது குறித்து பேசுகிறார். 'பொய் சொல்பவரின் உடலில் இரத்த அழுத்தம், வெப்பம், இருதயத் துடிப்பு, தோலின் விரைப்புத்தன்மை என அசாதாரண மாற்றங்களை அளந்து' சொல்லும் பாலிகிராஃப் பற்றியும், 'பொய் சொல்பவர் மூளையில் ஏற்படும் மின்னோட்ட மாறுபாடுகளை' அணுக்கரு காந்த ஒத்திசைவு (Nuclear Magnetic Resonance) என்ற கருவியை பற்றியும் எழுதியிருந்தார். ஆனால் இது எதுவுமே சாருவகை பொய்யை கண்டுபிடிக்க அணுவளவும் உதவாது. சாரு பொய்யை முழுமையாய் தானும் நம்பிகொண்டு அதை சொல்பவர். இவ்வாறு தானே அதை நம்புவதால், மேற்சொன்ன எந்த மாற்றமும் நிகழாமல் போவதால், அதை பொய் என்று கண்டுபிடிக்கும் சாத்தியமற்று போய்விடுகிறது. எந்த பொய்யறியும் கருவியையும் சாருவால் ஏமாற்றிவிட முடியும் என்றே தோன்றுகிறது.

இதை எல்லாம் தாண்டியே அவருடைய எல்லா வகை எழுத்துகளும் முக்கியமானதாக தெரிகிறது. இவ்வாறு தெரிவதற்கான முக்கிய காரணம் தமிழ் சூழலும், அதன் எழுத்து வரட்சியும், அது பலவகை நவீன வடிவங்களிலும் பேணிவரும் சனாதனமுமே காரணமே அன்றி, சாருவின் எழுத்தாற்றல் அன்று. ரொம்ப காலமாகவே தமிழிலக்கிய சூழல் பேணிவந்த, அவருடைய பாணியில் சொல்வதானால், ஒரு தயிர்வடை ஸென்ஸிபிலிடியை உடைத்தவர் அவர்தான். அதிர்ச்சி மதிப்பிட்டிற்காக செய்வதாக, அதே தயிர்வடை சென்ஸிபிலிடிக்கள் கூறலாம். அதனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அதிர்ச்சி அளிப்பதற்காக செய்திருந்தாலும் கூட வரவேற்க தக்கதாகத்தான் தெரிகிறது. தனது தாயை பாலியல் தொலிலாளி என்பதை/என்று சொல்லிகொள்ளும்/புனையும் தைரியம் நம் சூழலில் யாருக்கும் இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் அதையே முன்வைத்து வசைபாட எத்தனை பெரிய கூட்டம்! தன் கதையை திருட்டு கொடுத்த ஆபிதீன் கூட சாருவை இந்த விஷயத்தில் குத்த முனையும் போது எனக்கு சாருவின் சார்பாகத்தான் யோசிக்க தோன்றுகிறது.

நிச்சயமாய் புரியவில்லை, தனது தாய் ஒரு ஸெக்ஸ் வொர்கர் என்று சொன்னதன்/புனைவதன் மூலம்(அல்லது அப்படி நிஜமாகவே இருப்பதன் மூலம்) என்ன கீழான நிலையை ஒருவர் அடைய முடியும் என்று புரியவில்லை. `கற்போடு' இருப்பதாக நம்பபடும் (என்னையும் சேர்த்து) நமது தாய்மார்களை விட ஸெக்ஸ்வொர்கர் எப்படி கீழனவர் என்று விளங்கவில்லை. `தேவிடியா மவனே' என்ற ஒரு வசைக்கு அத்தனை முக்கியத்துவமும், கோபமும் தரும் நமது சமூக மதிப்பீட்டில் சாருவின் (எழுத்தின்) இருப்பு மிக முக்கியமானதாகவே தெரிகிறது. நம் சூழல் எத்தனை அபாசமானது என்பதை சில காலம் முன்பு 'மன்மதன்' படத்தை ஏதோ வகையில் நியாயபடுத்தும் எல்லா விமர்சனங்களையும், ஆனால் 7G RBC படத்தில் கதாநாயகி நாயகனை புணர்சிக்கு அழைப்பதை சீரழிவாய் எழுதிய கூட்டத்தையும் பார்கும் போது புரிந்து கொள்ளலாம். 'அதிர்ச்சி தருவதன்' மூலம் இங்கே 'புகழை' விட வசைகளை அதிகம் வந்து விழும் என்கிற யதார்தத்தை கணக்கில் கொள்ளும் போது, இந்த 'அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக' என்கிற தர்கம் தயிர்வடைகளின் இன்னொரு துக்ளக் பாணி அசட்டு லாஜிக்காகிவிடுகிறது. இத்தகைய சூழலில், சாருநிவேதிதா என்ற மனிதன் சுய வாழ்க்க்கையில் செய்யும் சமரசங்கள், போலித்தனங்கள், நண்பர்களுக்கான துரோகங்கள் இதை மீறி இந்த முக்கியத்துவம் அப்படியே இருப்பதாக தெரிகிறது.

சாருவின் எழுத்தின் அடுத்த முக்கியதன்மை அதன் பாப்புலர்தன்மைதான். அதே நேரம் அது pulபாகவும் மாறிவிடுவதில்லை. சீரிய(அல்லது சீரியஸ்) இலக்கியத்திற்க்கும், வெகு இலக்கியத்திற்குமான இடைவெளியை அழிப்பது பின் நவீனத்துவ எழுத்தின் ஒரு தன்மையாக சொல்லபடுகிறது. சாருவின் எழுத்து பலவகை வாசகர்களுக்கு இடமளிப்பதை காணமுடியும். ஜீரோ டிகிரியே தினமலர் வாசகர்களாலும், தீவிர சிறுபத்திரிகை வாசகர்களாலும் வாசிக்க பட்ட ஒரு நாவல். இந்த இரண்டு நேரெதிர் தளங்கள், மற்றும் இதற்கு இடைப்பட்ட எல்லாவகை வாசகர்களுக்கும், சுவாரசியமான ஒரு வாசிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அது எழுத பட்டிருப்பதை அறிய முடியும்.

இதை விட முக்கியதன்மை சாருவின் எழுத்தில் வெளிப்படும் நையாண்டிதன்மை. காமெடி என்கிற நகைச்சுவையையோ, ஜெயமோகன் முன்னிலைபடுத்தும் அங்கதத்தையோ நான் குறிக்கவில்லை. Parody என்பதையே நையாண்டி என்பதாக குறிப்பிடுகிறேன். (இதை எள்ளல் என்பதாக டீஜேயும் குறிக்கிறார். ) ஆனால் இங்கே எள்ளல் செய்யபடுவதன் பின்னே ஒரு ஆழமும் இருப்பதை உணரமுடியும். வெறும் புன்முறுவலை மட்டும் வரவழைக்க செய்யும் எள்ளல் அல்ல. பல நவீன கருத்தாக்கங்கள், நிறுவனங்கள் சாருவின் எழுத்தில் சாரளமாய் நையாண்டி செய்யபடுவதை காணலாம். (யாருக்கேனும் இங்கே 'சோ' நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. இங்கே குறிப்பிட படும் நையாண்டி சோவின் அசட்டுத்தனமான அரசியல் நையாண்டி தன்மைகளை உள்ளடக்கியது அல்ல, அதன் தன்மைக்கு நேரெதிரானது. விரிவாய் வேறு ஒரு சந்தர்பத்தில் உதாரணத்துடன் எழுத முயற்சிக்கிறேன்.) ' எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்ஸி பனியன்களும்' நாவல் எக்சிஸ்டென்சியலிஸத்தை, குறிப்பாக அன்று கொண்டாடபட்டு கொண்டிருந்த ஜேஜே சில குறிப்புகளை(மற்றும் தன்னை) நையாண்டி செய்ய எழுதியதாக பார்கலாம். இன்னொரு உதாரணமாய் ஜீரோ டிகிரியில் வரும் `லால் சலாம்' என்ற அத்தியாயத்தை குறிப்பிடலாம். இந்த அத்யாயத்தில் சாரு ஒரு பெரும் விளையாட்டை நிகழ்த்தியிருப்பார்.

(கையில் புத்தகம் இல்லை. அதானால் விரிவாய் மேற்கோள் காட்ட முடியவில்லை. படித்தும் 6 வருடங்கள் 5 வரிடங்கள் ஆகபோகிறது. )

ஒரு போலீஸ்தனமான வன்முறை கலந்த நக்கலுடன் பேசும் ஒரு போலிஸ்காரன், கைது செய்யபட்டுள்ள ஒரு தமிழ்தேசிய புரட்சிகாரன், மற்றும் சாருவின் பிரதிபலிப்பான ஒரு பெட்டி பூர்ஷ்வா எழுத்தாள பாத்திரம், இவர்களிடையேயான உரையாடல். (அந்த பாத்திரம் எந்த அளவிற்கு நாவல் முழுவதும் பகடி செய்ய படுகிறது என்பதை பார்க்க வேண்டும். இதை தன்னை பற்றிய பிம்ப உருவாக்கமாக எல்லாவற்றையுமே அருவருப்பு தரும் அளவிற்கு எழுதும், ஜெயமோகனின் எழுத்தின் தன்மையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.)

ஒரு கட்டத்தில் தேசியகீதம் பற்றி போலிஸ்காரன்,

"தோழர், தேசியகீதம் பத்தி என்ன நினைக்கறீங்க?"

"அது உங்கள் நாட்டின் தேசிய கீதம். எங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எங்கள் லட்சியத்தை அடையும் போது நாங்கள் எங்களுக்கான தேசிய கீதத்தை எழுதுவோம்."

"அடி சக்கை! ஸார் நீங்க தேசிய கீதத்தை பத்தி என்ன நினைக்கறீங்க?"

"நான் அதை ஒரு பிரதியாக பார்கிறேன், ஒரு இலக்கிய பிரதியாக."

"அய்ய யய்யயோ என்னா பதிலு ஸார். இந்த பதிலுக்கே ஒங்களுக்கு நோபல் பரிசு குடுக்கணும் ஸார்!"

(என் நினைவில் இருந்து எழுதபடுகிறது, அதனால்...)

இப்படி ஒரு ஏகபட்ட அர்தங்கள் தொனிக்கும் ஒரு நையாண்டித்தனமான எழுத்தை தமிழில் வேறு யாரும் சாருவிற்கு முன் எழுதியதில்லை. சாருவிற்கு பின் அது ஷோபாசக்தியிடம் வெளிப்படுகிறது, ஆனால் சாருவிடம் வெளிப்படும் *போலித்தனம் நீங்கலாக*. இன்னும் பலமடங்கு தீவிரத்துடன் வெளிப்படும் அந்த நையாண்டி குறித்து விரிவாய் எழுத இருப்பதால் இங்கே மீண்டும் சாருவிற்கே வருகிறேன்.

மேலே சொன்னவற்றை எல்லாம் விட அவருடைய முக்கியமான எழுத்தாக அவர் ஜேஜே சில குறிப்புகளுக்கு எழுதிய விமர்சனத்தை பார்கிறேன். 80களில் ஜேஜேக்கு எழுந்த தகுதியற்ற HYPEற்க்கு எந்த சரியான நேர்மையான எதிர்வினையும் வந்ததில்லை. வந்த சில எதிர்வினைகள் பழமைவாதிகளிடமிருந்து வந்த நொள்ளைகளாக இருந்தது, ஜேஜேயை தூக்கிபிடிக்க இன்னும் வசதியாகவும் போயிற்று. அதை சொல்லவே அன்றய சூழலில் மிகுந்த தைரியம் தேவைபட்டது. சொல்பவன் கேனையனாக பார்க்கபட்டான். பிரமீள் ஜேஜே குறித்து எழுதிய விமர்சனம், பல முக்கியமான தர்கங்களை கொண்டிருப்பினும், மிகுந்த தனி நபர் விமர்சனமும், சொந்த வெறுப்பும் கொண்டது. மேலும் பிரமீளின் (ஜேஜேயின் விதவை மனைவியை முன்வைத்தது போன்ற) வக்கரமும் வெளிப்பட, பிரமீள் சொல்ல வந்த விஷயம் அதில் அடித்து செல்லபட்டுவிடுகிறது. சாருவின் விமர்சனமே ஜேஜே ஒரு போலி என்பதையும், சுத்தவாதி என்பதையும், ஜேஜேயிடம் வெளிப்படுவது எக்சிஸ்டென்ஷியலிஸம் அல்ல, பாசிசமே என்பதை சொன்னது. இதை மிக விலாவாரியாய் மிகுந்த எள்ளல் தன்மையுடன் விளக்குவதாகவும், ஜேஜே குறித்த பல பிரமைகளை உடைக்கும் விதமாக சாருவின் விமர்சனம் மட்டுமே வெளிப்பட்டது. எக்சிஸ்டென்ஷியலிஸமாக கொண்டாடபட்டு, விவரிக்க படும் (குஷ்டரோகி பிச்சைகாரனுக்கு அளித்த பிச்சைமூலம் ஜேஜேக்கு ஏற்படும் 'மாபெரும்' மனவலி) சம்பவங்களை, ஒரு குட்டி கதை மூலமாய் மகாநையாயண்டியுடன் தொடங்கும் விதமே அலாதியானது. இதை விரிவாய் நினைவிலிருந்து இப்போது எழுதமுடியாது.மொத்தத்தில் மீண்டும் ஒரு விளையாட்டை நிகழ்த்தியிருப்பார் என்று மட்டும் சொல்கிறேன். அன்றய சூழலில் அதை அவரால் எந்த பத்திரிகையிலும் வெளியிட முடியாமல், பல முயற்சிகளுக்கு பின், மிகுந்த சிரமத்துடன் தன் சொந்த செலவில் தனி பிரசுரமாக கொண்டுவந்தார். இந்த ஒரு விமர்சனம் சாருவை தமிழ் சூழலில் தனித்து காட்டுவதாகவே எனக்கு தோன்றுகிறது.

முடிக்கும் முன் சொல்லாமல் இருக்க முடியாது. 'ஆபிதீன் கதையை திருடினாரா?' என்பதில் இனியும் சந்தேகப்பட, அல்லது சாருவிடம் ஏதேனும் நியாயம் இருக்கும் என்று நம்ப இனியும் எந்த காரணமும் இல்லை. அது குறித்து சாரு காட்டி வரும் மௌனம் வெறும் கயமைத்தனம் மட்டும் இல்லை. இங்கேதான் சாரு அம்பலபடுகிறார். திருடியது கூட அல்ல, அது குறித்த மௌனத்தில்தான் சாரு ஒரு சாதாரணனாக, ஒரு பெட்டிபூர்ஷ்வா கயமைத்தனத்தை தாண்டாதவராக விழுந்துவிடுகிறார். மிக எளிதாய் அது குறித்த உண்மையை ஒப்புகொள்வதன் மூலம், தனது சாதனைகளை அவரால் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் அப்படி நிகழாமல் இருப்பதில் சாரு நிகழ்திய அனைத்தின் தீவிரமும் பொசுக்கென்று போய்விடுகிறது.

மீண்டும் இதை முன்வைத்து தங்கள் அரசியல்களை பழமைவாதிகள் புதுப்பித்து கொள்வதும், தங்கள் சனாதன தர்கங்களுக்கு இதை ஒரு ஆதாரமாக முன்வைப்பதும் விளங்கிகொள்ள முடியாதது அல்ல. இதில் தன்னைதானே சாரு அழித்துகொண்டதே என்னை பொருத்தவரை மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஆனால் இதை முன்வைத்து இன்னும் குற்றசாட்டுகளை அதிரடியாய் வைத்து, தங்கள் சொந்த கணக்குகளை தீர்க்கமுனைவது நம் இலகியவாதிகளை எவ்வளவு தூரம் ஸீரியஸாய் எடுத்துகொள்ளலாம் என்பதை சொல்கிறது. உதாரணமாய் ரமேஷ்-பிரேம் எக்சிஸ்டென்ஷியலிசம் பென்ஸிபனியனையும், ஜீரோ டிகிரியை திருடி எழுதியதாக கூறுவது வெறும் நகைச்சுவை. 'எக்சிஸ்டென்ஷியலஸமும், பேன்ஸிபனியன்களும்' நாவலுக்கு பிரேம்தான் முன்னுரை எழுதினார், காப்பியடிக்கபட்ட நாவல் என்று தெரியாமலா எழுதினார்? அதே பொலவே ஜீரோ டிகிரி வந்து அத்த்னை காலம் ரமேஷும் பிரேமும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. மேலும் ஜீரொ டிகிரியில் வெளிப்படும் நையாண்டியை ரமேஷ் பிரேமால் உருவாக்கமுடியும் என்று தோன்றவில்லை. அதற்கான முன்னோடி எழுத்தும் அவர்களிடத்தில் இல்லை.

Post a Comment

---------------------------------------

Saturday, January 15, 2005

அறிந்த முகமொன்று சுனாமியில் மறைந்தது....

மு. சுந்தரமூர்த்தி

(நண்பர் சுந்தரமூர்த்தி இங்கே பகிர்ந்து கொள்ள சொல்லி கேட்டுகொண்டதை பதிவு செய்கிறேன். என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்-ரோஸாவசந்த்)

சுனாமியில் மறைந்த லட்சத்திற்கும் அதிகமானோரின் முகங்களில் ஒன்றுகூட நேரடியாக பார்த்திராத முகங்கள். இந்தியாவிலும், இலங்கையிலும் மறைந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் தேச, கலாச்சார காரணங்களால் நெருக்கமாக உணரப்பட்டவர்கள். அதில் விளைந்த சோகம் எல்லோரையும் போலவே என்னையும் ஆட்கொண்டது. பணியிடத்திலும், பிற இடங்களிலும் தெரிந்தவர்கள் "உங்களுக்கு வேண்டியவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டார்களா" என்று கேட்டுவந்த கேள்விக்கு இதுவரை இல்லை என்று சொல்லிவந்தேன். இனிமேல் அது சாத்தியமில்லை.

தொழில்முறையில் நான் அறிந்த என் துறையைச் சேர்ந்த மூத்த அறிவியலாளர் பேராசிரியர் முத்தையா சுந்தரலிங்கமும், அவர் மனைவி இந்திராணி சுந்தரலிங்கமும் விடுமுறைக்காக திருக்கோணமலை சென்றிருந்தபோது சுனாமியில் கொல்லப்பட்ட செய்தியை இன்றுதான் பார்த்தேன். கல்லூரிக் கல்வியை இலங்கையில் முடித்து 60களில் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று வாஷிங்டன், விஸ்கான்சின், ஒஹையோ மாநிலப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். X-கதிர் படிகவியல் துறை ஆராய்ச்சியாளரான சுந்தரலிங்கம் இத்துறையில் புகழ்பெற்று விளங்கியவர். சென்னைப் பல்கலைக்கழக இயற்பியல் துறை, பெங்களூர் இந்திய அறிவியல் கழக அறிவியலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். இந்தியாவில் நடக்கும் இத்துறையின் அறிவியல் மாநாடுகளுக்கு அடிக்கடி வந்துக்கொண்டிருந்தார். அவரிடம் பயிற்சி பெற்ற, அவருடைய ஆய்வகத்தில் பணியாற்றியவர்களில் பலர் இந்தியர்கள். எண்பதுகளில் பெங்களூரில் மாணவனாக இருந்தபோது தான் முதன்முதலாக சந்தித்தேன். அவருக்கும், எனக்கும் இருந்த பெயர் ஒற்றுமை கூட அமெரிக்கா வந்த புதிதில் துறையில் உள்ளவர்களோடு அறிமுகம் பெற எனக்கு கொஞ்சம் உதவியாக இருந்திருக்கிறது.

மேலதிக விவரங்களுக்கு:
http://www.hwi.buffalo.edu/ACA/

http://www.post-gazette.com/pg/05003/436264.stm

http://www.pittsburghlive.com/x/kqvradio/s_287800.html


Post a Comment

---------------------------------------

Friday, January 14, 2005

கண்ணன் மனநிலையை.....!

சென்ற பதிவில் எழுத நினைத்தது இது. விஷ்வதுளசி படத்தில், இளையராஜாவின் பிண்ணணி இசையில் ஸ்பார்குகளை எதிர்பார்த்து ஏமாந்ததை குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பிண்ணணியில் வந்த வேறு ஒரு இசை, ஏதோ 'அருள் வந்தது' போல், என் மேல் தாக்குதலிட்டது. "கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்..." என்று 'தெய்வத்தின் தெய்வம்' படத்தில் ஜானகி பாடிய பாடல். நந்திதா மன சஞ்சலத்துடன் இருக்கும் பல கட்டங்களில் இரண்டில், பிண்ணணியில் எதிர்பாராமல் இசைத்த பாடலின் இரணடு சரணங்கள் என்னை நிலைகுலைத்துவிட்டது.

இந்த பாடலை சிலோன் தமிழ்சேவையில் எத்தனையோ முறை சிறுவயதில் கேட்டிருக்கிறேன். இந்த அளவிற்கு ஒரு பாதிப்பை உருவாக்கியதில்லை. திறமையான இசை, திறமையாய் பாடப்பட்ட பாடல், என்பதை மீறி அது குறித்து கருத்து பெரிதாய் இருந்ததில்லை. இப்போது ஐந்தாறு நாட்களாய் கணக்கின்றி முழுபாடலை கேட்டபோது கூட அப்படி ஒரு உணர்ச்சி வந்ததில்லை. எனக்கென்னவோ அந்த *சரணங்களை மட்டும்*, நந்திதாவின் மன சஞ்சலத்திற்கு பிண்ணணியாய் கேட்டபோதே அந்த பாடல் அப்படி ஒரு உணர்வெழுச்சியை உண்டாக்குவதாய் தோன்றியது. இரண்டுமுறை வெவ்வேறு சந்தர்பங்களில் இரண்டு சரணங்கள் படத்தில் வருகிறது. (பல்லவி வருவதிலை.)

முதன் முறை "ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள் .." என்று, அதை தொடர்ந்து ஒரு ஷெனாய்(?) இசையும், எதிர்பாராத தருணத்தில் வந்த போது, உடலெங்கும் பரவிய உணர்வலையில், மயிர்கால்கள் சிலிர்த்தன. அது உள்ளே உருவாக்கிய உணர்வை எழுத முடியாது. இரண்டாவது முறையும், அதே போன்ற ஒரு காட்சியில், எதிர்பாராத வகையில் அடுத்த சரணம். "நேர முழுதிலும் அப்பாவி தன்னையே..." என்று, அதை தொடர்ந்து ஒரு புல்லாங்குழல் தொடர்ச்சி..... அய்யோ...உயிரே போய்விட்டது! பல வருடங்கள் கழித்து கேட்டதா, சின்ன வயது நனவிடை தோய்ந்ததா, வேறு பழைய நினைவுகள் ஆக்ரமித்ததா, நந்திதா மீதான காதலா, ஜானகியின் குரலுக்கும் இசைக்கும்தான் அத்தனை சக்தியா? அழுகையே வந்துவிட்டது! இந்த பாடாவதி படம் கூட கண்ணீர் வரவழைக்க கூடும் என்று நினைத்து பார்கவே இல்லை.

அதற்கு பின்னான படத்தை பார்க்கும் உணர்வில்லாமலே பார்த்தேன். அதற்கு அடுத்து இரண்டு நாட்கள் வெறி பிடித்தது போல் இணையத்தில் தேடினேன். கூகிள் வழியே சத்யா கீர்த்தி என்பவரின் (இவர்தான் எனக்கு 'யானை தந்தம்' அளித்தவர்) ஜானகி பாடல் தளத்தை அடைந்து, இந்த பாட்டை கண்டுபிடித்து சுட்டினால், எங்கேயோ போய் "The page you wanted is taking a long lunch." என்றது. மீண்டும் சுட்ட, "This page has moved to California to find itself. ", மீண்டும், "The dog ate your webpage. Yeah, that's it". தூள்.காமில் பலமுறை மனம் தளாராமல் முயன்றால் சில பாட்டுக்கு திடீரென உயிர்வந்து ஒலிக்ககூடும். அதனால் விடாமல் மீண்டும் "We sent this page to NASA for testing. ", மீண்டும், மீண்டும், மீண்டும்...

"I think we should not be meeting like this",

"A billion websites, and you had to pick this one. "

"OK, that's the last time we let you drive."

"If true happiness can only be achieved through a state of nothingness, you're going down the right path."

"Wait, don't leave! Let's make our own webpage! "

இத்தனையும் கேட்டுகொண்டு மீண்டும், மீண்டும் முயற்சித்து கஜினி முகமதின் தளாராமையை வெற்றிகொண்டும், செயலில் வெற்றியை பெறமுடியாமல், மீண்டும் தூள்.காமிற்கு போய் தேடி, அங்கே இருந்த பாடலும் வேலை செய்யாமல் அதே சோதனையை தர, ஆனாலும் விக்கிரமாதித்யன் மனம் தளரவில்லை. ஏதோ நம்பிக்கையில், தூள்.காமின் SOTDஇல், முதலில் மேலோட்டமாய் தேடி கிடைக்காமல், பின் கண்ணில் ஆலிவ் எண்ணெய் விட்டுகொண்டு ஒவ்வொன்றாக தேடி கண்டுபிடித்தேன். கடைசியில் வேதாளம் கையிலடங்கியது. இதோ பயித்தியம் பிடித்து நாளொன்றுக்கு இருபது தடவை கேட்கிறேன். ஆனால் இன்னும் நந்திதாவின் மனசஞ்சலத்தின் பிண்ணணியில் கேட்ட அந்த உணர்வை அடைய முடியவில்லை. இந்த ஒரே காரணத்திற்காக விஸ்வதுளசி படம் பார்த்ததை நினைத்து வருத்தபடவில்லை. பாடல் வரிகளை பார்த்துகொண்டு கீழே தரப்பட்டுள்ள சுட்டியில் பாடலை கேட்கலாம்.

பாடல் வரிகள்:
கண்ணன்....(குழலிசை தொடர்சி..)

கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;

எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்..ஆஆ...(ஜானகி ஹம்மிங்)
எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்
பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!

(கண்ணன்...)

ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள்...

(ஷெனாய் இசை. தொடர்ச்சி..)

ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள்
எனை அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேனென்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்..!

(கண்ணன்...)

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே...

(குழலிசை தொடர்ச்சி...)

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே
உள்ளம்நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்..!
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்....

தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
பின்பு
தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்..!

(கண்ணன்..)

சந்தேகமே வேண்டாம். பாட்டை எழுதியது பாரதி.
படம்: தெய்வத்தின் தெய்வம்.
பாடியது: எஸ் ஜானகி.
இசை : ஜி. ராமநாதன்.

இது ஆபேரியும், பேஹாகும் கலந்த ராகமாலிகையாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை.

நான் பதிவு செய்த அனுபவத்தை நம்பாதவர்களும், நம்ப விரும்புபவர்களும், பாடலை கேட்க. (எம்.எல்.வி.யின் பாட்டு ரொம்ப சுமார்தான்) ஒரு வேளை நெஞ்சை தொடவில்லையெனில், மீண்டும், மீண்டும் கேட்டு பார்க்கவும், வேறென்ன சொல்ல

பின் குறிப்பு: இசையமைப்பில் பல நுட்பங்களை கொண்ட பாடல், அது குறித்து பேச தெரிந்தவர்கள் பேசட்டும்.

Post a Comment

---------------------------------------

Thursday, January 13, 2005

பழமைக்கு ஏங்கும் 'அழகியலின்' உளவியல்!

ஒரு வாரம் முன்பு விஷ்வதுளசி என்ற படத்தை இணையத்திலிருந்து இறக்கி முழுவதுமாய் பார்த்தேன். அதற்கு சில வாரங்களுக்கு முன் படத்தை பார்க்க தொடங்கி, தொடர இயலாமல் போய், அது குறித்து கீழ்கண்டவாறு மனப்போக்கில் முன்பு குறித்திருந்தேன்.

"விஷ்வதுளசி படம் கொஞ்சம் பார்தேன். பத்ரி ஏற்கனவே இந்த படம் குறித்து எழுதியிருந்ததை படித்து, படம் பார்க்க எந்த ஆசையும் இல்லையென்றாலும், இளையராஜா என்ற பெரும் மேதையின் இசைக்காகவும், நந்திதா என்ற பேரழகி, பெரும் நடிகைக்காகவும் (முதல் காரணம்தான் முக்கியம்) பார்க்க துணிந்தேன். இருந்தும் என்னால் 20 நிமிடங்களுக்கு மேல் பார்க்கமுடியவில்லை. அமேரிக்காவிலிருந்து வந்து ஒரு பெண்ணுக்கு ஏன் இப்படி ஒரு படம் எடுக்க தோன்றியது என்று தெரியவில்லை. அவர் தமிழ் படம் பார்க்கவில்லை என்று சொன்னாலும், மலையாளபட்ங்கள் பார்த்து, அதன் மோசமான அம்சத்தை மட்டும் கற்றிருக்கிறார் என்று தெரிகிறது. மேலே சொல்ல எதுவும் இல்லையென்றாலும், இதை எழுதும்போது இன்னும்க் நந்திதாவின் முகம் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கிறது. மீண்டும் படத்தை இறக்கி பார்க்ககூடும் என்று தோன்றுகிறது."


படத்தை பார்க்கும் விபத்திலிருந்து அப்போது தப்பினாலும், பின்னர் அமைந்த சந்தர்பத்தில் மாட்டிகொண்டேன். காதல், கிராமம் போன்றவற்றை முன்வைத்த படம் என்பதால் எழுந்த, இளசு + எம்.எஸ்.வி. இணைவு குறித்த என் எதிர்பார்ப்பு முற்றிலும் ஏமாற்றப்பட்டது. சில பாடல்கள் தூர்தர்ஷன் மெல்லிசை பாணியில் இருந்தது. வேறு சில இசைஞானி 80களின் மத்தியில், வருடம் நூறு படங்கள் என்ற கணக்கில் இசையமைத்தபோது, மோனோடானஸாக இடையில் வழங்கிய சில சாதாரணங்களை ஒத்திருந்தது. "மயக்கமா..அந்தி மயக்கமா.." என்ற பாடல் மட்டும் உருப்படியாய் என் பார்வையில் தேர்கிறது. ஆனால் நான் மிகவும் எதிர்பார்த்த, பிண்ணணி இசையில் துணுக்குகளாக இசைஞானி அளிக்கும் அற்புதமான பொறிகள் கூட அகப்படவில்லை, மிக சாதாரணமாய் இருந்தது பிண்ணணி இசை. ஆனால் நந்திதா என்னை ஏமாற்றவில்லை, அதற்கான வாய்பும் இல்லை.எப்படி அழகாய் இருந்தாரோ, அதே அழகில் படம் முழுக்க தொடர்ந்து, ஒரு நாள் மனநிலையை வியாபித்தார்.

பத்ரி படம் குறித்து உருப்படியான விமர்சனம் எழுதியிருந்தார். (ஆர்கைவில் தேடினேன் கிடைக்கவிலை.) அதை தொடர்ந்து பின்னூட்டமாய் எழுதியதில், " உங்கள் பதிவை படித்த பிறகு மீண்டும் ஒரு முறை என் கணணியில் 'கில்லி' போட்டு பார்பதே சால சிறந்தது என தோன்றுகிறது" என்றிருந்தேன். மற்றபடி எழக்கூடிய கேள்வி ஒன்றே ஒன்று, மேலே சொல்லியதுதான். அமேரிக்காவிலிருந்து வந்து, தமிழில் படமெடுக்க துணிந்த ஒரு பெண்ணுக்கு ஏன் இப்படி ஒரு முழுக்க, முழுக்க நிலபிரபுத்துவ ரசனையுடன் படம் எடுக்க நேர்ந்தது என்பதுதான். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் அந்த ரசனையை பார்க்கலாம். மம்முட்டியின் இளம் வயது பாத்திரம், சங்க்கீதம் கற்றுகொள்ள வரும் காட்சியில் வாத்தியார் ஏதாவது பாடச்சொல்ல, ஸ்ரீனிவாஸின் பிண்ணணி குரலில் அரோகணிக்க,

"ம்.. ஜமீன் பரம்பரை இல்லையா! அதான் ஸ்ருதி சுத்தமா இருக்கு!" இது ஒரு உதாரணம்தான்.

ஒரு அமேரிக்க ஆணுக்கு இப்படி பட்ட ஏக்கம் இருப்பதை புரிந்துகொள்ள முடியும். பெண்கள் மீதான இந்திய நிலபிரபுத்துவம், மற்றும் வெகுகலாச்சாரம் உள்ளிட்ட எல்லாவகை இந்திய கலாச்சாரமும் அளிக்கும் தளைகளிலிருந்து விடுபட்டு, மேற்கின் சுதந்திரத்தில் செட்டிலாகிவிட்ட இவருக்கு இருக்கும், இந்த பழைய காலத்திற்கான ஏக்கத்தை எப்படி புரிந்து கொள்வது? கவனிக்க வேண்டியது இது ஒரு தனித்த உதாரணம் அல்ல. மேற்கில் செட்டிலாகிவிட்ட, தமிழக பிராமண மற்ற ஆதிக்க சாதியினரின் பொதுவான குணாதிசியமாகவே இது தெரிகிறது. மொழி தவிர்த்த கலாச்சாரத்தின் மீதான இவர்களின் தேடல், மொழிரீதியான அடையாளங்களை தக்கவைப்பதில் இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருப்பதையோ அவதானிக்க முடியும். புலம் பெயர்ந்த ஈழதமிழ் பெண்களிடம் இந்த பொதுவான தன்மை நேர்மாறாக இருப்பதை காணலாம். மீண்டும் கவனிக்க வேண்டியது, தமிழ் மொழிரீதியான அடையாளங்களை அவர்கள் தக்கவைக்க முயற்சிப்பதையும், மற்ற கலாச்சார ரீதியான மாற்றங்களை எளிதாய் ஏற்றுகொள்வதையும் காணமுடியும்.

தழிழகத்து மாமிகள் சென்னையிலேயே தமிழில் பேசுவதை கேவலமானதாய் மாற்றி வருபவர்கள். மேற்கில் நிலைகொண்ட பின் தமிழை திரும்பி பார்க்காததில் ஆச்சரியமில்லை. ஆனால் மேற்கில் இந்தியர்கள் கூடும் ஏதாவது ஒரு நிகழ்சிக்கு போனால், ஏதோ கட்சி கட்டுபாட்டுடன் நடப்பதுபோல் அத்தனை பெண்களும் புடவை கட்டியிருப்பார்கள்.இதற்கு மாறாக புலம் பெயர்ந்த ஈழதமிழர்கள் எங்கேயுமே வெளிநாட்டில் புடவை அணிந்து பார்க்கவே முடியாது. அவர்களிடையேதான் பல ராடிக்கல் பெண்ணியவாதிகளும் உருவாகியிருக்கிறார்கள். இத்தனையும் அவர்கள் மொழிரீதியான தமிழ் அடையளத்தை தக்கவைத்தபடியே செய்வதை கவனிக்க வேண்டும். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் சென்னையில் சில ஃபெமினிஸ்ட்(அதாவது கர்நாடக சங்கீதம் பரத நாட்டியம் என்று கேள்வி கேட்காமல் சமரசம் கொள்ளும்) மாமிகளுடன் உறவாடிய போது, அவர்கள் தமிழ் பேசாததற்கு, 'தமிழ் மேல் ஷோவினிஸத்தை' ஒரு காரணமாய் சொல்ல கேட்டிருக்கிறேன்.

இப்படி சொல்லிகொண்டு போகும்போதே ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டி இருக்கிறது, நான் மேலே சொன்னது போல் விஷயம் அத்தனை மேலோட்டமானது அல்ல. யதார்த்தத்தில் மேற்குலகில் ஸெட்டிலாகிவிட்ட மாமிகள் மேற்கு தரும் சுதந்திரத்தையும், விடுதலையையும், சுயத்தையும் அனுபவித்தே வருகிறார்கள். நம்ம அம்பிகள் கூட அதை அவர்களுக்கு *வழங்க* தயங்குவதில்லை. ஆனால் கலாச்சரத்தின் மீது தாக்குதல் நடப்பதோ, குறைந்த பட்ச விமர்சனமோ இவர்களுக்கு உவப்பானதாய் இல்லை. தாங்கள் கடைபிடிக்க இயலாத கலாச்சாரத்தை, உன்னதமாய் போற்றிகொள்ள, நிகழ்ச்சிகளுக்கு புடவை கட்டிகொள்கிறார்கள். வைபவங்களில் மடிசார் கட்டிகொள்கிறார்கள். கடைபிடிக்க முடியாவிட்டாலும் அதை ஒரு உன்னதமாய் பார்கிறார்கள். அந்த பார்வையின் உளவியல்தான் தாய்நாடு வந்து 'விஷ்வ துளசி' மாதிரி ஒரு படத்தை எடுக்க வைக்கிறது, என்று தோன்றுகிறது.

எதையோ பேசப்போய் எங்கேயோ போய்விட்டேன். நான் எழுத நினைத்து தொடங்கிய விஷயம் இதுவல்ல, முற்றிலும் வேறுபட்டது. இப்போது எழுதியதற்கு முற்றிலும் நேர்மாறானது. அதனால் இப்போது தலைப்பை மாற்றிவிட்டு, எழுத தொடங்கிய தலைப்பில் நாளை தொடர்கிறேன்.

Post a Comment

---------------------------------------

Wednesday, January 12, 2005

காணாமல் போன சென்ற பதிவு.

ஏன் பதிவுகள் காணாமல் போகின்றன என்று புரியவில்லை. இது மூன்றாவது முறை. வேறு சிலரும் இந்த பிரச்சனை குறித்து எழுதியுள்ளனர். பொதுவாய் எழுதிய உடனே காணாமல் போகும். இந்த முறை ஒரு நாள் கழித்து மறைந்துவிட்டது. யாருக்காவது என்ன செய்யலாம் என்று தோன்றினால் விளக்கவும். சென்ற பதிவையே மீண்டும் கீழே சில மாற்றங்களுடன் கீழே தருகிறேன்.

ட்சுனாமி மீட்பு பணி ஒருங்கிணைப்பு வலைப்பதிவும், அது குறித்த வேண்டுகோளும்!

நண்பர்களே!

அனைவருக்கும் வணக்கம். ட்சுனாமி பேரழிவால் பாதிக்க பட்டவர்கள் மீட்பு பணி குறித்து விவாதிக்க இந்த பதிவை தொடங்கியுள்ளோம். இதை ஒரு கூட்டு முயற்சியாக கொண்டு செல்வதே எங்கள் எண்ணம். தமிழ் வலைப்பதிவுகளில் அவ்யப்போது மீட்பு பணிகள் குறித்து பல விஷயங்கள் எழுதபட்டுள்ளன. அவற்றை ஒரு முறையான வகையில் ஒழுங்கு செய்து, வாசகர்களின் பார்வைக்கு வைப்பதே இதன் நோக்கம். இதில் பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.

என்ன வகையான கருத்துக்களை வேண்டுமானாலும் இங்கே எழுதலாம். அறிவிப்புகளை இடலாம். வேண்டுகோள்களை முன் வைக்கலாம். அவையனைத்திற்கும் ஏதாவது ஒரு விதத்தில் ட்சுனாமி மீட்பு பணிகளுடன் தொடர்பு இருத்தல் இன்றியமையாதது, என்பதை தவிர வேறு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எந்த வகையான அரசியல் பேசுவதையும் தவிர்க்கவேண்டும், என்று சொன்னாலும், மீட்பு பணிகள் மற்றும் பிரச்னைகளை புரிந்து கொள்ளும் வண்ணம் தொடர்புள்ள அரசியலை பேசலாம். குறிப்பாய் சில உதவிகள், உரிய மக்களுக்கு போய் சேராததன் அரசியலை பேசலாம். வேறு ஒரு உதாரணமாய், அருள்குமரன் ஏற்பாடு செய்த அரட்டையில், மீனவர்கள் மீண்டும் கடற்கரையோரமாகவே குடிசைகள் அமைப்பது, சமூக சூழல் மற்றும் அவர்களின் வாழ்க்கைமுறை காரணமாய் அது தவிர்க்க முடியாமல் போவது குறித்து பேசபட்டது. இது போன்ற பிரச்சனைகளுடன் தொடர்புள்ள சமூக அரசியலை பேசலாம். அப்படி செய்யும் போது பிரச்சனை எந்த விதத்திலும், தங்கள் சார்பு நிலைபாடுளால், திசை திரும்பி விடாத வண்ணம், அதன் அடிப்படை மீட்பு பணிகள் குறித்த கரிசனமாய் இருக்கும்படி பார்த்து கொள்ளவேண்டியது அவசியம்.


இது தொடர்பான பழைய பதிவுகளை, அதன் முக்கியத்துவம் சார்ந்து, அவ்யப்போது நான் (ரோ.வ.) இங்கே இடுவேன். ஆனால் பொதுவாய் மீட்புபணிகள் குறித்து பேச நான் தகுதியில்லாதவனாகவே இருக்கிறேன். பிரச்சனையோடு நேரடி தொடர்பில்லாதவனாய், எல்லாவற்றையும் செய்திகளாய் கேட்கும் நிலையிலேயே நான் இருக்கிறேன். ஆகையால் பிரச்சனையோடு எதாவது ஒரு வகையில் தொடர்புள்ள அனைவரும், தங்கள் பங்களிப்பை நல்குமாறு கேட்டுகொள்கிறேன்.

பங்களிக்க விரும்புபவர்கள், தங்கள் மின்னஞ்சல் முகவரியையும், பெயரையும் என் வலைப்பதிவிலோ, நரைனின் வலைப்பதிவிலோ அல்லது இங்கேயோ பின்னூட்டமாய் விட்டு செல்லவும். மின்னஞ்சலாய் rksvasanth@yahoo.com அல்லது narain@gmail.com என்ற முகவரிக்கும் எழுதலாம். வலைபதிவதற்கான அழைப்பு, அல்லது கடவுசொல் கொடுக்கப்படும். பொதுவாய் இங்கே வலைப்பதிவிலோ அல்லது மற்ற இணைய பத்திரிகைகள் மூலம் அறிமுகமானவராக இருப்பது நல்லது. வலைபதிய விரும்பாதவர்கள், எழுத விரும்பும் விஷயத்தை என் முகவரிக்கு எழுதினாலும், அதை என்னால் பதிவு செய்ய முடியும். இப்போது பத்ரி, ரஜினி ராம்கி, கார்த்திக், மாலன், பெயரிலி ஆகியோர் உறுப்பினராகியுள்ளனர். இன்னும் சிலருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.


வாருங்கள் நண்பர்களே! இதை ஒரு கூட்டுமுயற்சியாய் கொண்டு செல்வோம். உங்களால் சாத்தியமான எல்லாவகை பங்களிப்பையும் தாருங்கள். எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு பயன் இருக்கும். நன்றி!

அன்புள்ள ரோஸாவசந்த் மற்றும் நரைன்.



Post a Comment

---------------------------------------

Monday, January 10, 2005

மீண்டும்!

என்ன காரணம் என்று தெரியவில்லை. உதவிகள் குறித்த என் பதிவிற்கு தமிழ்மணம் அளித்திருந்த தொடர்பை காணவில்லை. தொடர்பு அளித்ததும் எப்போது என்று எனக்கு சரியாய் தெரியாது. தொடர்பு நீங்கியதும் எனக்கு தெரியாது. அதனால் பெரிய பிரச்சனையில்லை.

எப்படியாயினும் பல புதிய தகவல்கள் சேர்க்கபட்டுள்ளன என்பதை தெரிவிக்கவே இந்த பதிவு. குறிப்பாய் இன்று சுநாமி குறித்த அருள்குமரனின் கலந்துரையாடல் அறிவிப்பு, மற்றும் அதன் மூலம் அறிந்த நண்பர் மதுரபாரதியின் தொடர்பு எண்கள். எனக்கென்னவோ நாம் இப்போதுதான் மீட்புபணிகள் போன்றவை குறித்து இன்னும் தீவிரமாய் பேச தொடங்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆரம்ப கட்ட உணர்சிகள் மிகவும் குறைந்திருக்கும். அறிவு பூர்வமாக உணர்சிகளை தவிர்த்தும் சிந்திக்க இயலும். ஒரு குழப்பமான முறையில் பணிகள் நடைபெறுவதும் குறைந்திருக்கும். இதையெல்லாம் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு சொல்வது, எளிதானதாய் இருந்தாலும், அந்த ஒரே காரணத்திற்காக சொல்லாமலிருக்கவும் தோன்றவில்லை. ஆகவே நண்பர்களே
தொடர்ந்து இது குறித்து ஏதாவது பேசுவோம். நானும் 5 நாட்களுக்கு ஒரு முறையாவது இது குறித்து தோன்றியவற்றை எழுதுவேன். உதவி குறித்த என் பதிவு தொடர்ந்து அது தொடர்பான தகவல்களை சேர்த்து கொண்டிருக்கும்.


Post a Comment

---------------------------------------

Sunday, January 09, 2005

சொதப்பல்!

சென்ற இரு பதிவுகளை நிதானமாய் மறுவாசிப்பு செய்தபோது, ரொம்பவே சொதப்பியிருப்பதாக உணர்கிறேன். குழப்பமாய் இருப்பது ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் குழப்பத்தையே தெளிவாய் முன்வைக்க இயலாமல் சொதப்பியிருப்பதாக படுகிறது. குழப்பமே குழம்பிவிட்டதாக தெரிகிறது. இதை சரி செய்ய முயல்வது மேலும் விபத்துகளுக்கு இடமளிப்பதாக தோன்றுவதால் அந்த முயற்சியில் இறங்கவில்லை. ஜெயமோகனின் கட்டுரையே இதை இப்போது எழுத தொடங்கியதன் காரணமாக இருந்தாலும், அதை முன்வைத்து பதிவை தொடங்கியது ஒரு அசம்பாவிதமாக தெரிகிறது. எனினும் சொல்லவந்த விஷயம் ஒரளவு சொல்லபட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். இதை பேசுவது இப்போது அவ்வளவு முக்கியமில்லை, சொல்ல வந்த விஷயமும் திசை திரும்ப அல்லது திரிபு வாசிப்புகள் சாத்தியமாக வாய்ப்புகள் உள்ளதாக நினைப்பதால், யாரும் மேற்கொண்டு எதுவும் சொல்லாத காரணத்தால் பின் ஒரு நிதானமான சந்தர்பத்திற்கு தள்ளிபோடுகிறேன். வரும் மாதங்களில் சென்ற மாதம் போல் அதிகம் தலை காட்டமுடியும் என்று தோன்றவில்லை. சென்ற பதிவில் கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

Post a Comment

---------------------------------------

Saturday, January 08, 2005

சென்ற பதிவின் பின்னூட்டங்களும், மேலும்...!

சென்ற பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் எதிர்கொள்ள தக்கவையாய் எனக்கு படுபவற்றை இங்கே தருகிறேன். முழுதாய் அவைகளை படிக்க சென்ற பதிவிற்கு செல்லவும். அது தொடர்ந்து சொல்ல நினைப்பதை அதற்கு கீழே எழுதுகிறேன்.


அனானிமஸ்: ஜெ.மோவின் பதிவு முக்கியமானது என்று உங்களுக்கு கொஞ்சம் முன்னால் பதிந்தவரும் சொல்கிறார். நெஜமாவே அது ரொம்ப முக்கியமான பதிவா? ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க வசந்து.... இன்னிக்கு சுனாமி பத்தி எத்தனைக்கு எத்தனை dispassionate ஆக, எழுதறோமோ அதுக்குத்தான் மவுசு. ஜெயமோகன் செஞ்சது என்ன? கடலோரப் பகுதியில் வசிக்ககூடிய ஒரு ரேஷனலான மனுஷன், அந்த நேரத்தில் பண்ணக் கூடிய காரியத்தைத்தான். ஆனால் அவர் எழுத்திலே பதிஞ்சது மூலமா ஜெ.மோ, காட்டுவது என்ன? மும்மதத்தினரும் சேர்ந்து செயல் பட்டாங்கன்னு சொல்லி தன்னுடைய பாசிட்டிவ் ஆட்டிட்யூடை. கழக அரசுகளை திட்டி, அதன் மூலமான தன் நடுநிலைமையை, அரசு அதிகாரிகளின் மெத்தனத்தைக் கண்டித்து அதன் மூலமாக, தன் ஆன்டி எஸ்டாப்ளிஷ்மண்ட் ஸ்டாண்டை, கம்யூனிஸ்ட்டுகளை லேசா ஒரு தட்டு தட்டி, தன்னுடைய சா·ப்ட் கார்னரை, மொத்தத்திலே, முக்கியமான பதிவுங்கற உங்களோட, மற்றும் உங்களை ஒத்தவங்களோட பாராட்டுக்களை, "வெங்கடேஷ் என்பவர் அன்புடன் பகுதியில்" ன்னு நடுவுலே சொருவினார் பாருங்க, அங்க அவாளோட வீக் பாய்ண்டை டச் செஞ்சது, தன்னுடைய இலக்கிய உலகில் வெங்கடேசு என்பவர்களுக்கு எல்லாம் இடமே இல்லைன்னு தன்னுடைய பீடத்தை உறுதி செஞ்சதுன்னு எத்தனை விஷயம் ஒரு கட்டுரைலே நடந்து முடிஞ்சிருக்கு.? இல்ல நான் கேக்கிறேன் இதை எல்லாம் எழுதியே ஆகணுமா? பரபரப்பா ஒரு விஷயம் நடந்தா, அங்கே போய் தன்னை இருத்திக்கிறது ஒரு வியாதி. இந்தக் கேசிலே, அவர் அங்கேயே இருந்தது, இன்னும் வசதியாப் போச்சுது. சுனாமியில் இருந்து தப்பித்த ஜெயமோகனின் அனுபவங்கள்னு நாளைக்கு, குமுதத்திலேயோ, விகடன்லயோ, பேட்டி வராட்டா, தலையை மொட்டை அடிச்சிகிறேன்.


சுந்தர மூர்த்தி: எங்கோ தூரதேசத்தில் சொகுசாக உட்கார்ந்துக்கொண்டு இதை எழுதக் கூச்சமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் எழுதுகிறேன். ஜெயமோகனின் கட்டுரைக் களம் குமரி மாவட்டம். இந்தப் பகுதியில் பொதுவாகவே அரசியல்-மத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகம். கலவரங்களிலும் சரி, ஆபத்து காலங்களிலும் சரி. நாகை, கடலூர், சென்னைப் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் பெரிய அளவில் பங்காற்றிய தொண்டு நிறுவனங்களின் பின்னணிகள், நோக்கங்கள் என்ன என்று ஜெயமோகன் போல யாராவது எழுதினால் எல்லாவற்றையும் ஒரு context ல் வைத்துப் பார்க்க முடியும். ஜெயமோகன் குறிப்பிட்ட எல்லா அமைப்புகக்கும் முதலில் நன்றி சொல்லிவிட்டு அடுத்து அச்செயல்பாடுகளை எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். எனக்கு இந்த மாதிரி விஷயங்களை கேட்கும், படிக்கும் நேரங்களில் ஆர்பர்ட் காமுவின் The Stranger நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடிவதில்லை. இப்போது தியாகுவின் சிறையனுபவ நூலும்.

பெரிய அரசியல் கட்சிகளின் தொண்டர் படைகள் போகாமலிருந்ததே நல்லது. சண்டைபோட்டு வேலை செய்துக் கொண்டிருந்தவர்களையும் கெடுத்திருப்பார்கள்.


வீச்சறுவாள்: மிகவும் துரதிர்ஷ்டமான, கண்ட அனைத்து கண்களிலும் கண்ணீரையோ குறைந்தபட்சம் கவலையோ தரும் காட்சிதான் சுனாமியின் விளைவு. அதைவிட துரதிர்ஷ்டமானது , ஜெயமோகன் ஆர் எஸ் எஸ் எல்லோரும் மீட்பு பணிகளில் வேலை செய்கிறார்கள், அமிர்தானந்தமயி 100 கோடி நிவாரண நிதி அளித்துள்ளார் ஆதலால் ஆர் எஸ் எஸ்தான் உலகின் மிகப் பெரும் தியாக அமைப்பு அல்லது அது போன்ற ஒரு அமைப்பில் சேராதவன் எஅவ்னுக்கு மீட்பு பணிகளில் ஈடு பாடு இந்த ஜென்மத்துக்கு வராது என்பது போல் கூவிக்கொண்டே , மதங்களை தூக்கிப் பிடிப்பது.

ஜெய்மோகனின் கட்டுரையில் உள்ள தகவல்கள் அனைத்திலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்படித்தான் கேடு கெட்ட சமூகமாய் இருக்கிறது நம்முடைய சமூகம்/அரசு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த பிரச்சினைக்கெல்லாம் தீர்வு மதம் தான் என்று ஒரு ஓலமிட்டு அழுகிறாரே அங்கேதான் பிரச்சினை.

1976- சைனாவின் தங்ஷான் நகரில் ஒரு 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.அதன் இறப்பு கணக்கு 8000 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்ன் நேரடி பாதிப்புக்குள்ளானோர் 242,419 பேர். இன்னுமொரு 164,581 பேர் பலத்த காயப்பட்டனர்.உடனடி சாவுகள் 7000 போல என்று பதிவாகியுள்ளது.ஆதாரம்:http://history1900s.about.com/od/horribledisasters/a/tangshan.htm

அந்தக்காட்சியை காற்பனைசெய்து பார்த்தோமெனில் சற்றேறக்குறைய சுனாமியின் காட்சி போலவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கும். பிரச்சினை என்னவெனில் அங்கு ஆர் எஸ் எஸ் இருக்கவில்லை. மீட்பு பணிகளும் இதுபோல்தான் நட்ந்துள்ளன.எங்கு பார்த்தாலும் அழுகிய பிணங்களும் இருந்தன. சீனாக்காரனுக்கு மதம் தேவைப்படவில்லை மீட்பு பணி செய்வதற்கு. இந்த உண்மையின் பின் உள்ளதை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் நேர்மை தேவைப்படுகிறது. ஜெயமோகனுக்கு நேர்மையைவிட,சுனாமியை, சுனாமி மீட்பு செயல்களை அளவுகோலாக மாற்றி, அனைவரையும் அதில் fail ஆக்கி , ஆர் எஸ் எஸ் இன்னும் பல வர்ணங்களை அப்பி கலவையான புருடாவை சுவையாக தருகிறார்.

ஆர் எஸ் எஸ் -ஐயே எடுத்துக்கொள்வோம் உதாரணத்துக்கு(அல்லது சேவை செய்யும் எந்த அமைப்பையும் ஆகட்டும்). தமிழ் நாட்டில் இருந்த அத்தனை ஆர் ஆர் எஸ் சேவகர்களுமா மீட்பு பணிக்கு ஆஜராகி விட்டார்கள் இல்லையே. இந்த கேள்வியை ஏன் கேட்க வேண்டியதாகிறது எனில், மதம் சார்ந்த அத்தனை உள்ளங்களும் கருணையே வடிவாய் மாறிவிட்டதா, ஜெயமோகன் சொல்வது போல் என்று தெரிந்து கொள்ளத்தான்.

திமுக அதிமுக கட்சிகள் ஆள் பலமிருந்தும் ஏன் மீட்ட்பு பணிகளை செய்யவில்லை. அவர்கள் செய்தால்தான் ஆச்சரியபடவேண்டும் , செய்யாததற்கு ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இவர்கள் பொது வாழ்வில் சம்பாரிக்க வந்தவர்கள். பொது வாழ்வில் அக்கறை , ஆட்சி போகிறது என்றால் தான் வரும். ஆ ர் எஸ் எஸ் சினால் எப்படி செய்யமுடிகிறது? என்று பார்ப்போம்.இத்தனை பெரிய மீட்பு பணியை செய்ய அத்ற்கேற்ற ஒருங்கிணைப்பு முதலில் தேவை. அந்த ஒருங்கிணைப்பை பொது மக்களிடமிருந்து அவரசர காலத்தில் பெற முடியவே முடியாது என்பதுதான் , இன்றல்ல என்றும் வரலாற்றில் இருந்து வரும் சிக்கல். அவ்வாறு ஒருங்கிணைப்பை பெற முடிந்தால், காவல் துறைகூட தேவைப்படாது சமூகத்திற்கு. ரோட்டில் நடந்து சென்றுகொண்டுருக்கு அத்தனை பேரும் , உடனடியாய் லெப்ட் ரைட் என்று சொல்லி , மீட்பு பணியில் சுனாமி வந்த 5 நிமிடத்தில் இறங்கிவிடுவார்கள். பொது மக்களிடம் அதை எதிர்பார்க்கமுடியாது. அவர்களை கலவரமும் பீதியும் தான் தொற்றிக்கொள்ளும். உடமையையும்,உயிரையும் பாதுகாப்பு நோக்கி செலுத்துவத்லே மனம் இருக்கும். 9/11 கூட அப்படத்தான் ஆயிற்று. எந்த பேரழிவின் முதல் மணினேரங்கள் அப்படித்தான் இருக்கும் இதற்க்கு எந்த சமூகமும் விலக்கல்ல. ஆர் எஸ் எஸ் ஓ, மறற அமைப்புகளுக்கோ இந்த ஒருங்கிணப்பு ஒரு சில மணி நேரங்களில் சாத்தியமாகும். அதன் பலனாகவே இம்மாதிரி பெரும் பணிகளில் ஈடுபட முடிகிறது. எந்த ஒருங்கிணைப்பு இந்திய ராணுவத்தில் சாத்தியமாகிறதோ அதே ஒருங்கிணைப்பு. இதற்க்கும் மதத்துக்கு முடிச்சு போடுவது போல் ஒரு முட்டாள்தனம் இல்லை.

இன்னொரு முக்கியமான காரணி, கையிருப்பு நிதி. இது போன்ற சமயங்களில் அளவுக்கு அதிகமாகவே செலவாகும் நிதி கையில் பணமாக இருந்தால் தான், பணத்தை அதிகமாய் செலவு செய்தாவது சில உயிர்களை காப்பாற்ற முயலலாம். அது சரி தளவாய் சுந்தரம் என்ன ஆர் எஸ் எஸ் காரரா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எப்படி மீட்பு பணியிடத்துக்கு வந்தார்? உலகமெங்கிலும் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சுனாமி நிதியாக மீண்டும் சொல்கிறேன், 4 பில்லியன் டாலர்கள் (இணைய செய்திகள்) குவிந்துள்ளன. இவர்களில் 99.9 சதவீதம் இந்து மதத்தினர் இல்லை என்பதை எப்படி மறுப்பார் ஜெயமோகன்.இல்லை நாகர் கோவிலுக்கு வந்து பிணம் சுமந்தால் தான் மீட்பு மனம் உண்டு என்று சொல்வரா? ஒரு வேளை ஆர் எஸ் எஸ் சில் சேர்ந்தால் சொன்னால் சொல்வார்.

ஜகத் குரு கைதின் காரணமாய்தான் சுனாமி வந்தது என்று சொல்லும் மூடர்களை , இந்து மதத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்போகிறாரா? அல்லது ஆர் எஸ் எஸ் சில் சேரச் சொல்லபோகிறரா? குஜராத் சம்பவம் கண்முன் வந்து குமட்டுகிறது ஏனோ தெரியவில்லை.
இந்தியாவுக்கு தொலைபேசும்போது நண்பரொருவர் சொன்னார்.தமிழகத்தில் 5,6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிப் பிள்ளைகள் , தெருவில் செல்பவர்களுக்கு காலணி துடைத்துவிட்டு,பாலிஷ் போட்டு உதவி நிதி திரட்டுகிறார்களம். இவர்கள்மனத்தில் ஆர் எஸ் எஸ் விதைக்கபடவில்லை. இவர்கள் மனத்தில் மதமும் முழுசாய் விதைக்கப்படவில்லை. இவர்களுக்கு மதம் எதற்கு என்று புரியவும் புரிவதில்லை. ஆனால் மீட்பு பணியில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். இது வரை செய்திராத வேலையைச் செய்து நிதி சேகரிக்கிறார்கள்.இது மாசற்ற உள்ளங்களுக்கு ஜெயமோகனின் அறிவுரை என்ன. ஆர் எஸ் எஸ்-சில்/மதத்தில் சேர்ந்து அடுத்த சுனாமி வருவதற்குள் மீட்பு பணிக்காக ஆயத்தமாகிவிங்கள் என்பதா? என்ன லாஜிக் ஜெயமோகனுடையது.

இன்னும் நிறைய எழுத இருந்தாலும் , சலிப்பு தட்டுகிறது. இனியாவது ஜெயமோகன், தனது எழுத்து வலிமையை நேர்மையாய் செலவிடுவார் என்று எதிர்பார்க்கலாமா?


அனானிமஸ்: இந்த விஷயத்தில், ஜெயமோகன் பதிவு செய்த அனைத்துமே போலியானது, பாசாங்கானது என்பது என் கருத்து. ஆனால் அதை நிரூபிக்க என்னிடம் வழியில்லை.


ரவி ஸ்ரீனிவாஸ் : A perfect gentleman can also be a collaborator in a genocide. A zealot can be a humanitarian in some context.organizations likeRSS have views on nation-state and cultural nationalism. Nandy's views are important as they question these.(I have edited by putting capital letters etc - Rosvth)

சுந்தர்: நானெழுதப் போவதை நன்றிகெட்ட பினாத்தல் என்று சுலபமாய்த் திரிக்க முடியும். ஜெயமோகனுக்குத் தெரியும் இதனால் லாபமடையப் போவது கிறிஸ்தவ அமைப்புக்களோ அல்லது தமுமுவோ இல்லையென்பது. மூனு கொடியையும் தூக்கிப் போடுறேன். வேணுங்கறவன் புடிச்சுக்க. யாரு எப்போ அந்தக் கொடியைத் தூக்கிப் புடிச்சுக்குவாங்கன்னு தெரியும். I salute RSS அப்படின்னு யாரு முன்னாடி ஓடியாறுவான்னு தெரியும். கழகங்கள் செய்யத் தவறியதை ஆர் எஸ் எஸ் செய்திருக்கிறது. கழகங்களுக்குக் கிடைக்காத மதிப்பெண்கள் ஆர் எஸ் எஸ்ஸுக்குக் கிடைக்கும். இந்த அமைப்பு செய்த அதே வேலையைத்தான் ரஜினி ராம்கியும், பாபுவும் செய்தார்கள். அவர்கள் யாராக அங்கே நின்றார்கள்? பிணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கைகழுவி விட்டிருப்பார்கள். ஆனால் அதை ஆர் எஸ் எஸ் சுமந்து கொண்டேயிருக்கும். இருக்கிறது. கிறிஸ்தவப் பிணங்களைத் தூக்கிப் போட்ட இஸ்லாமியர்கள் அதற்கான நற்சான்றிதழ்களோடு ஊர்வலம் போவார்களா என்று தெரியாது. விபத்து நடந்த எல்லாவிடங்களிலும் மனிதம் வெளிப்பட்டிருக்கிறது. அது மதத்தால் அங்கு கொண்டுவரப்பட்டதோ அல்லது எக்ஸ்னோராக்கள், க்ளப்புகளால் கொண்டுவரப்பட்டதோ. பகைவரும் பாராட்டும் ஒழுக்கமும், வேகமும் புலிகளின் மீட்புப் பணிகளிலும் இருந்திருக்கிறது. அவர்கள் என்ன மதத்தின் கீழா ஒன்றாயிருக்கிறார்கள். சமூகப் புரட்சி செய்யாததை மதம் சாதிக்கிறது என்று ஜேமோ கூப்பாடு போடுவதைப் புலிகளின் மீட்புப் பணிகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. கழகங்களும், ரசிகர் மன்றங்களும், அரசமைப்பும் இயங்காத இடத்தில் அம்மணமான ஊர்ல கோவணம் கட்டுன ஒசத்தியா மதங்களின் வேலை தெரிஞ்சிருக்கு. அதுலயும் ஏற்கெனவே நெகட்டிவ் இமேஜ் இருக்க ஒரு மதவமைப்புக்காரங்க அதைச் செஞ்சா அதுக்கான மதிப்பு பெருசாக் கூடிப்போகும். அந்தக் கோவணமே பெருங்கொடியா மாறும். இதையெல்லாம் அவரு யோசிச்சு எழுதினாரான்னு தெரியாது. ஆனா இதெல்லாம் சாத்தியம். ஒரு விபத்துக்குப் பின்னாடி டக்குன்னு போயி உதவுறதுக்கு ஆயிரமாயிரம் வருஷமா மதத்தைக் கட்டிக் காக்க வேணாம், அதுகளோட சேர்ந்த கழிவுகளைக் கட்டிக் காக்க வேணாம், எழுத்தில் 1, 2, 3 போட்ட சாதாரண விதிகளையும் அதைச் செய்யும் முறைகளையும் fire drill மாதிரி சொல்லிக் குடுத்தாப் போதும். யாரோ கேட்ட மாதிரி, மதங்களாலதான் இந்தச் சேவையைச் செய்ய முடியும்னா சொவத்துல குந்திப் பேசுன டாக்டர்மாரெல்லாம் மதத்துக்காரங்க இல்லலயா அல்லது பக்கத்துத் தெருவுல பொணம் நாற நாற மோச்சதீபம் மெழுகுவர்த்தி ஏத்துனவங்க மதத்துக்காரங்க இல்லலயா. வேலை செய்றதுக்கு மனுசன் போதும், மதம் வேண்டியதில்லை. அங்கு வேலை செய்த மனிதர்களை நான் வணங்குகிறேன். (தாமதமாய் சேர்க்கபட்டுள்ளது. ரோஸாவச.)


இதை தொடர்ந்து என் கருத்து:
ஜெயமோகனின் பதிவு முக்கியமானதா என்பது முக்கியமில்லை. ஜெயமோகனின் பதிவு அளிக்கும் செய்திகளை நம்பகமானது என்று எடுத்துகொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அந்த வகையில் அது முக்கியமானது என்பதுதான் என் தொனி. கிரிஸ்டோபர் தன்னுடைய குமரிமாவட்டம் குறித்தது என்பதனால் முக்கியமானது என்று பதிந்திருக்க கூடும். சிவக்குமார் முக்கியமானது என்று சொல்வதன் பிண்ணணி கூட புரியாத வாயில் விரல் வைத்த குழந்தைகளிடம் இனியும் எத்தனை காலத்திற்கு பேசிகொண்டிருப்பது? இதையே பேசி கொண்டு, இதிலேயே சக்தி அனைத்தும் செலவழிப்பது அலுப்பாக இருக்கிறது.

என் பதிவில் இதை ஜெயமோகன் எழுதியதால் எழக்கூடிய கேள்விகளை ஒதுக்கிவைத்து விட்டு வேறு விஷயங்களை பேசுவதை பற்றியே அக்கறை காட்டியிருந்தேன். ஆனால் அது எளிதானது அல்ல என்று தெரிகிறது. ஜெயமோகன் காட்டிகொள்வதற்காக செய்கிறாரா என்பதற்கு, ஏன் இத்தனை எத்தனமும், முக்கியமும் தரவேண்டும் என்று புரியவில்லை. கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாய் இணையத்தில் ஜெயமோகனின் 'வேஷங்கள்' குறித்து பேசி பேசி எங்கே போய் சேர்ந்திருக்கிறோம் என்பது புரியவில்லை. நான் சொல்ல வருவது ஜெயமோகனின் எழுத்தின் அரசியலை பேசக்கூடாது என்பதல்ல. உண்மையில் தன் மீதான சிலவகை தாக்குதல்களை திரித்து, தன் எழுத்தின் அரசியலை பேசும் அனைத்தையும் ஒரே லெபிளில் அடக்கி ஒரு நிராகரிப்பு கேப்ஸ்யூலை வழங்குவதுதான் ஜெயமோகனின் வலை.

ஜெயமோகனின் பதிவு மதத்திற்கு வக்காலத்து வாங்குவதாக நினைப்பதில் நியாயம் உண்டு. வழக்கமான உத்தியாக ஞாநி சொன்ன ஒன்றரையணா மேற்கோளை எடுத்துகொண்டு பேசுவதில் அதை தொட்டிருக்கிறேன். மற்றபடி ஜெயமோகனின் பதிவு குறித்து மேலே உள்ள கருத்துக்களில் பொதுவாக ஒத்துபோகிறேன். குறிப்பாக வெட்டறுவாள் எழுதியது மிகவும் பிடித்திருந்தது. என்னை பொறுத்தவரை ஜெயமோகனின் எழுத்து அவரது ஐந்தாவது மருந்தில் விவரிக்கபடும் கிருமியின் தனமையை கொண்டது. இதுவரை வந்த எதிர்புகளை உள்ளடக்கி மேலெழும்பியதாகும். எப்படியிருப்பினும், ஜெயமோகனின் பாசாங்குகள், அரசியல்கள் இன்ன பிற கதகளியாட்டங்கள் பற்றி மட்டும் பேசி சக்தி அனைத்தையும் விரயம் செய்ய ஆசை எனக்கில்லை என்பதால் நான் பேச வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

முதலில் RSSஇனால்தான் எல்லாம் சாத்தியம் என்ற தொனி எங்கே எற்பட்டிருந்தாலும் மிக பிரச்சனை குரியது. RSSபணிகளை எப்படி அணுகுவது என்பதுதான் கேள்வி. இதை சாக்காக வைத்து RSSற்கு ஸல்யூட் அடிக்கும் பிரகிருதிகள் குறித்தெல்லாம் கவலைப்பட எதுவும் இல்லை. எப்படியும் இது போல பல இணையத்தில் எழுதப்படும், இன்னும் பல பிரசாரங்கள் நடக்கும். யார் எதை சொன்னாலும். நான் எழுப்ப வந்த விஷயம் RSS போன்றவையை என்ன வகை சொல்லாடல்களால், பார்வைகளால் அணுகுவது என்பதை பற்றியது. அஷீஷ் நந்தியை உந்துதலாய் வைத்து இதை செய்யவேண்டிய அவசியத்தையெ வலியுறுத்துகிறேன். அதில் காட்டவேண்டிய அளவுக்கதிகமான ஜாக்கிரத்கை உணர்வு முக்கியமானது. அதை கோடிட்டு காட்டவே ஹேராம் என்ற 'விபத்தை' பற்றி குறித்திருந்தேன். (விளக்கமாய் இப்போது முடியாது.)

இதை ஏன் செய்ய வேண்டும் எனில் பழைய பாணி சட்டகங்கள் பயனற்றவையாய், சோனியாய் இருப்பதுதான். (எப்படி எய்ட்ஸிற்கு ஐந்தாவது மருந்து வேண்டுமோ!) உதாரணமாய் இங்கே வலைப்பதிவுகளில் 'என் கிறுக்கல்கள்' என்று ஒருவர் தொடர்ந்து RSS பற்றி பழைய பாணி தொடர் ஒன்று எழுதிவருகிறார். நான் புரிந்துகொண்ட வரை விடுதலை ராஜேந்திரனோ யாரோ எழுதிய புத்தகத்திலிருந்து வழங்கி கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு 15 வருடங்கள் முன்பு மிகவும் பயனுள்ள கட்டுரையாய் அது இருந்திருக்கலாம். இப்போது அதை வைத்துகொண்டு பயணிக்க முடியாது.

இந்த விஷயத்தை யாருமே தொட்டு செல்லாதது (தர்ம அடியாய் கூட்) ஏமாற்றமாய் எனக்கு தெரிகிறது. ரவி அல்லது வேறு யாராவது கொஞ்சம் நிதானமாய், விரிவாய் எழுதினால், எனக்கு ஏதேனும் புதிய கருத்துக்கள் தோன்றினால் மீண்டும் இது குறித்து பேசலாம். ஒரிரு வாரங்கள் விடுப்பு எடுத்து கொண்டு அதற்கு பிறகு அதை செய்யலாம் என்று நினைக்கிறேன்.


Post a Comment

---------------------------------------


சுனாமி பேரழிவின் மீட்புபணிகளில் வைத்திருந்த தொடர்பை வைத்து, தனது அனுபவங்களையும், அதை சார்ந்த சில கருத்துக்களையும் ஜெயமோகன் திண்ணையில் எழுதியுள்ளது ஒரு முக்கியமான பதிவாக எனக்கு படுகிறது. அதிலுள்ள சில கேள்விகளை எதிர்கொள்ள தொடங்குவதே இந்த பதிவின் நோக்கம். பொதுவாய் ஜெயமோகனின் (புனைவற்ற) எழுத்துக்களில் தட்டுபடும் ஒரு தன்மையை நான் அவதானித்து வருவதாக நினைத்து கொண்டிருக்கிறேன். ஒரு புனைவு எழுத்தாளன் இயல்பாகவே சிக்கலானதாக கருத/முன்வைக்க வேண்டியவற்றை, ஒற்றைதன்மையுடன் ஒரு மேலோட்டமான பார்வையின் முடிவாக (யாரை நோக்கி எழுதபடுகிறதோ அந்த வாசக கூட்டத்திற்கு உவப்பானதாகவும்) அறிவிக்கும் வேலையை ஜெயமோகன் பல இடங்களில் செய்வதை காணலாம். குறிப்பாக திராவிட இயக்கம் மற்றும் அதன் 'பக்க விளைவுகள்' என்பதாக கருதபடுபவை குறித்து பேசும்போது இதை தெளிவாகவே பார்க்கமுடியும். மிக எளிமையான தர்கத்தை கொண்டு அதை செய்வதையும் காணமுடியும். இந்த எளிமைபடுத்துதல் அல்லது மேலோட்டத்திற்கு பின்னே ஜெயமோகனின் இயல்பு இருக்கிறது என்பதை விட தேவையே இருக்கிறது என்று தோன்றுகிறது. அத்தகைய தன்மை இல்லாத ஒரு பதிவாகவே இந்த திண்ணை கட்டுரையை என்னால் பார்க்கமுடிகிறது. இதற்கு ஒரு காரணம் அத்தகைய தன்மையின் தேவையே இல்லாமலிருப்பதாக கூட இருக்கலாம்.

ஜெயமோகனின் குறிப்புகளில் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வியாக எனக்கு படுவது, 'சர்ச், ஆர்.எஸ்.எஸ், த.மு.மு.க. போன்ற மத அமைப்புகளால் அர்பணிப்புடன் மீட்பு பணிகளில் ஈடுபட முடிந்த அளவிற்கு, மற்ற எந்த மத சார்பற்ற அமைப்புகளால் ஏன் ஈடுபட முடியவில்லை?' என்பதே.இந்த கேள்வியின் பின்னுள்ள ஜெயமோகனின் வெகுகால அரசியல் குரல், உள்நோக்கம் இன்ன பிற விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அல்லது பிற்கால சிந்தனைக்கு தள்ளிவிட்டு, அல்லது அதை ஒருமுறை சம்பிரதாயமாய் இந்த வரியை போல சொல்லிவிட்டு, மிக சிக்கலான இந்த கேள்வி எதிர்கொள்ள படவேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு எளிமையான சொல்லபோனால் எந்த வித தெளிவான பதிலும் இல்லாத நிலையில், இந்த என் பதிவை படித்து பின்னூட்டமாய் வரும் கருத்துக்களையும் கணக்கில் சேர்த்து, இதை எதிர்கொள்ள தொடங்குவதே என் நோக்கம். சற்று சிந்தித்து நிதானமாய் தங்கள் கருத்துக்களை முன் வைத்தால் நல்லது என்று பொதுவாய் சொன்னாலும், எல்லோரையும் சிந்திக்க நான் கட்டாயபடுத்தவில்லை. தர்ம அடிகளையும், இதை பயன்படுத்தி தங்கள் லட்சியங்களை ஒரு அடி தள்ள நினைப்பவர்களையும் நான் இங்கே கருத்து சொல்ல வரவேற்கிறேன்.

ஒரு விஷயத்தில் தெளிவாகிவிட வேண்டியதிருக்கிறது. மேலே சொன்னதில் சர்ச் என்று பொதுவாய் விளிக்க படுவதை தவிர்த்து, ஆர்.எஸ்.எஸ்ஸும் த.மு.மு.க.வும் வெறும் மத இயக்கங்கள் அல்ல. அதன் உருவாக்கம், செயல்பாடு எல்லாமே மதம் சார்ந்து இருந்தாலும், அவர்களுடைய நோக்கங்கள் தெளிவான அரசியல்தன்மை கொண்டவை. ஒரு குறிப்பிட்ட மக்கள் நலன் சார்ந்த அரசியல் லட்சியங்களை அறிவித்து பிறந்தவை. இதில் RSSஐயும் தமுமுகவையும் வேறு படுத்தும் பல விஷயங்கள் இருந்தாலும் இரண்டும் அரசியல் இயங்கங்களே, அதற்கு பின்னே மதச்சார்பு இருக்கிறது என்பதே இங்கே சொல்லவருவது. இது தவிர்த்து ஜெயமோகன் பதிவின் பட்டியலிலே, கிருஸ்தவ இயக்கங்கள், மாதா அமிர்த்தானந்தமயி, சத்ய சாயிபாபா, ராமகிருஷ்ணா மிஷன் என்று ஒரு பட்டியல் நீள்கிறது. இதில் மாதா அமிர்தானந்த மயி அடியார்கள் தவிர்த்து மற்றவர்களின் பணி குறித்து எனக்கு சந்தேகங்கள் உண்டு. உதாரணமாய் பிணங்களை கையாள்வது போன்ற பணிகளில் அவர்களின் பங்கு என்னவென்று எனக்கு தெரியாது. அவைகள் எப்படியிருந்தாலும், நாம் கவனிக்க விழைவது RSS, த.மு.மு.க. போன்றவைகள் பற்றியே.

முந்தய மகராஷ்டிர, குஜராத பூகம்பங்க அழிவுளில் நண்பர்கள் மூலமும், ஒரிசா புயலழிவில் ஓரளவு நேரடியாகவும், இந்துத்வ இயக்கங்கள் அர்பணிப்புடன் செய்துள்ள மீட்புபணிகள் குறித்து எனக்கு தெரியும். இதை எப்படி பார்பதென்ற குழப்பம் ரொம்ப காலமாகவே உண்டு. அதே போல அன்னை தெரசா போன்றவர்களின் சில அர்பணிப்பை பார்க்கும்போது மதம் என்ற ஒன்றின் உந்துதல் இல்லாமல் அது சாத்தியமா என்ற சந்தேகம் ரொம்ப காலமாகவே உண்டு.இந்த இடத்தில் ஒன்றை எனக்கு சொல்லவேண்டியிருக்கிறது. த.மு.மு.க. முஸ்லீம் பிணங்களை மட்டுமே சுமந்ததாக *வதந்திகள் வந்ததாகவும்*, தாமே கண்ணால் அவர்கள் கிரிஸ்தவ பிணங்களையே அதிகம் தூக்கி சென்றதாகவும், சர்சிற்கு கொண்டு சென்றதாகவும் ஜெயமோகன் சாட்சியம் சொல்கிறார். தமுமுகவிற்கு எதிராய் சிந்திக்கும் ஜெயமோகன் சொல்வதை நம்பகதன்மையுடனேயே எடுத்துகொள்ள வேண்டும். RSS சார்பாக யோசிப்பவராக பலரால் கருதப்படும் ஜெயமோகன் RSSஇடம் ஏதேனும் பாகுபாடு இருந்ததா என்று கூறவில்லை. மகாராஷ்டிர பூகம்ப மீட்புபணிகளில் தீவிரமாய் பங்கு கொண்ட (இமாசல பிரேதேசத்தில் பிறந்து பூனாவில் வாழும்) என் நெருங்கிய நண்பன் RSSஉடன் இணைந்தே பணிகளை மேற்கொள்ள வேண்டிவந்தது. (தோண்ட தோண்ட பிணங்களாய் வந்த காட்சிகளை அவன் விவரித்ததை இங்கே அதே தீவிரத்துடன் தரமுடியாது. அதன் தீவிரத்தை விளக்க ஒரே ஒரு விஷயம். பணிகள் முடித்து ஊர் திரும்பிய பின் 15நாட்களுக்கு எங்கே சென்றாலும் நாய்கள் அவனை பார்த்து குரைத்த வண்ணம் இருந்ததாக கூறுகிறான்.) எந்த விதத்திலும் RSSஐ தவிர்த்து எந்த பணியும் நடந்திருக்க வாய்பில்லை என்றே கூறுகிறான். ஆனால் ஒரு கட்டத்தில், இருப்பதிலேயே அதிகமாய் பாதிக்க பட்ட, யாருமே பிழைக்கவில்லை என்று கருதிய சில முஸ்லீம் கிராமத்தில் பணியாற்ற அவர்கள் மறுத்ததாக சொன்னான். உண்மையில் அவன் அதை குற்றமாகவே சொல்லவில்லை. "அவர்கள் எங்களை தடுப்பார்களோ என்று பயமாய் இருந்தது. ஆனால் எங்களை அனுமதித்ததற்கும், சில உதவிகள் செய்ததற்கும் அவர்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும். அவர்கள் அனுமதிக்காமல் ஒன்றுமே செய்யமுடிந்திருக்காது." என்றான். இந்த சம்பவம் என் நண்பன் சொல்லி நான் பதிவு செய்யும் ஒரு தகவல் அன்றி இதற்கு ஆதாரம் எதுவும் தரமுடியாது.

தமிழகத்தில் நிலமை வேறு மாதிரி, ஓரளவு வெளிப்படையான பாரபட்சம் இல்லாமலே இருக்கும் என்றே தோன்றுகிறது. இத்தகைய ஒரு அர்பணிப்பு மற்ற யாரிடமும் இருக்கமுடியாது என்பதல்ல என் வாதம். இதன் தீவிரத்தை காணமுடியுமா என்பது சந்தேகமாய் உள்ளது. புலிகள் போன்ற தற்கொலைக்கும் தயாரான ஒரு அமைப்பில் இது சாத்தியமாகலாம். ஜெயமோகனும் ரஜினி ராம்கியும் அழுத்தி சொன்னது போல் எந்த அரசியல் கட்சியிடமும், ரசிகர் மன்றங்களிடமும் இதை எதிர்பர்க்க முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி களத்தில் இறங்கியதாக தெரிந்தாலும் அது குறித்த தகவல் எதுவும் இல்லை. ஓட்டுக்களை வாங்கி தரகூடிய இந்த வேலையில் ஏன் அரசியல் கட்சிகளால் இறங்க முடியவில்லை, இது போன்ற மீட்புபணிகளில் RSS ஒரு தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகவே இருக்கிறது என்ப்தை எப்படி எதிர்கொள்வது என்பேதே என் பிரச்சனை.

இது குறித்து சொல்ல வருவதெல்லாம் 'மதவெறி' என்ற ஒற்றை வார்த்தை RSSஇன் செயல்பாடுகளை எல்லாம் விளக்க போதுமானதாக இல்லை எனபதுதான். அதாவது, "இவ்வமைப்புகளின் கொள்கைகளைப்பற்றிய விவாதமோ எதிர்ப்போ உருவாக்கப்படுவதற்குப் பதிலாக அவற்றை பேய் பிசாசு என்று பிரச்சாரம்செய்யும்போக்கு உருவாக்கப்படுகிறது." என்ற ஜெயமோகனின் குற்றசாட்டை ஆமோதித்து வேறு பார்வைகளில் இது விவாதிக்கபடவேண்டும் என்பதே நான் சொல்ல விரும்புவது.

இந்த இடத்தில் அஷீஷ் நந்தி தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தாக வேண்டும். கோட்ஸேயை வெறும் "இந்து மத வெறியன் " என்ற சொல்லாடல்களுக்குள் சிக்க வைத்து விளக்குவதை நிராகரித்து, அவனை ஒரு சமூகத்தின் ஒரு ஆண்மைய சிந்தனையின் , "தங்களுக்கு என சில சலுகைகளை எதிர்பார்த்த" உயர்சாதியின் , நவீனமான பிரதிநிதியாய், இந்தியாவை ஒரு வல்லரசாக்கும் கனவை கொண்ட லட்சியவாதியாய் முன்வைத்து விளங்க முயற்சிக்கிறார். இங்கே மிகவும் ஜாக்கிரதையாய் இதை கையாள வேண்டியிருக்கிறது. ஏனெனில் அஷீஷ் நந்தியை உந்துதலாய் வைத்து, இந்துத்வமாய் வெளிவந்த ஹேராம் எடுத்த கமலை பாராட்டுவதில் போய் இது முடியக்கூடிய அபாயம் உண்டு.

அஷீஷ் நந்தியின் பார்வை இங்கு உதவுமா என்று தெரியவில்லை. என்னுடய கேள்வி RSSபோன்றவற்றின் இத்தகைய பணிகளை சாதகமான ஒரு விஷயமாய் எடுத்து கொள்ளலாமா என்பதுதான். பின்னூட்டங்களை (ஒருவேளை வந்தால்) கவனித்த பின் இதை மேலே தொடர்கிறேன்.

ஆனால் ஜெயமோகனுக்கு மீண்டும் வழக்கம் போல் ஞாநியின் மேற்கோளை முன்வைத்து தான் சொல்வதை வலியுறுத்த வேண்டிய அவசியம் வந்ததில் ஆச்சரியபட எதுவும் இல்லை. ஞாநியை அவர் சொல்லும் கருத்துக்களை தீவிரமாய் எதிர்ப்பவர்கள்தான் பொருட்படுத்த வேண்டி இருக்கிறது. ஞாநி அவரை எதிர்பவர்களுக்கே அதிகம் பயன்படுவார் என்பதற்கு இன்னோரு ஆதாரமாய் அவருடய மிரட்டல் கடிதம் திண்ணையில் இந்த வாரம் வெளிவந்துள்ளது. இத்தனை முறை இந்த ட்ராமா காட்டியும் புத்தி வராவிட்டால் என்ன செய்வது?

ஜெயமோகன் சொல்வதில் மேலே உள்ள கேள்வி தவிர்த்து மற்றவை வழக்கம் போலவே இருக்கிறது. உதாரணமாய் வெங்கடேஷ் விவகாரம். வலைப்பதிவில் உள்ள சில அபிஷ்டுக்கள் தவிர்த்து யாராலுமே நியாயபடுத்த முடியாத இதை, 'ஒரு பிராமண நடுத்தர வர்கத்து' சுயநலமான பதிவாக பார்கிறார். ஓரளவு ஜெயமோகன் சொல்வது சரியென எனக்கு தோன்றினாலும், அதற்கான சிறுபத்திரிகை பங்கை அவர் மறுக்கிறார். மற்றொரு பக்கம் பிராமண நடுத்தர வர்கத்து பார்வையை ரொம்பவே எளிமைபடுத்தி ஆபத்தில்லாததாக காட்டுகிறார். அதாவது ":பெரியவாளை உள்ளே போட்டதுனாலத்தான் இப்படி நடந்தது" என்று குசும்பு செய்வதுதான் அந்த பார்வை. அதை எதோ மூட நம்பிக்கை என்பது போல் மெல்லியதாய் மத்த பெந்தகோஸ்தே, 'இணையத்தில் கூட கேள்விபட்ட' ஜாபர் அலியுடன் சேர்த்து பொதுவாய் சொல்லி செல்லமாய் தட்டுகிறார்.

மேலே உள்ள பழைமை வாத பார்பனியம் நவீனமனால் அது இப்படித்தான் வெளிவரும். பார்பன வெறி எந்த முகமுடியும் இல்லாமல் வெளிவருவது என்பது இதுதான். இதை எந்த விதத்திலும் பெந்தகோஸ்தேவுடனும், ஜாஃபர் அலியுடனோ ஒப்பிடமுடியாது. அது ஆழ்ந்த ஒரு மதநம்பிக்கை, அவர்களிடம் வெளிப்படுவது பிறர் மீதான வெறுப்பொ, நடந்தது குறித்த களியாட்டமோ இல்லை. மாறாக பாசிசம் என்பது, உதவிகள் எதையும் இந்தியாவிற்கு அளிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுக்கும் இந்த பார்பன வெறிதான். ஜெயமோகன் எல்லாத்தையும் பற்றி ஒற்றை வரி எழுதி தீவிரமான பார்பனியத்தையும் ஒரு மூடநம்பிக்கை சார்ந்த பிரச்சனையாக்கி விடுகிறார்.

வெங்கடேஷ் எழுதியது, ஒரு சிறுபத்திரிகை அன்னியமாகும் மனோபாவமாய் நினைக்கும் ஒன்றின் விளைவு என்று சொல்ல ஜெயமோகனுக்கு வசதிபடாது. சாருநிவேதிதா தயிர்வடை சென்ஸிபிலிடி என்று அழைத்து வருவதும் இதைத்தான். சிறுபத்திரிகை மனோபாவத்தின் இந்த தன்மையை புரிந்துகொண்ட ஒரே நபராக சாருதான் தெரிகிறார். அவர் ஒரு போலியாக இருப்பதால் இது பொய்யாகிவிடாது. தயிர்வடை சென்ஸிபிலிடியின் ஆபத்தை வன்முறையை வெங்கடேஷ் இன்னும் இதற்காக ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்க்காததில், அதை இத்தனை அபிஷ்டுக்கள் (ஏதோ வகையில்) நியாயபடுத்தி வருவதிலிருந்து காணலாம். அதைவிட இரா முருகன் அதை பாரதி சொன்னதோடும், இன்னும் சில அபிஷ்டுக்கள் அசோகனோடும் ஒப்பிடும் வக்கிரமாய் போவதில் காணலாம்.

கடைசியாய் வைரமுத்துவை நான் நாய் என்று சொன்னதை பலர் விமர்சித்திருந்தார்கள். சில அபிஷ்டுக்கள் 'ஒரு கவிஞர் அப்படித்தான் உயர்வு நவிற்சியுடன் எழுதுவார்' என்று சொலவதை பற்றி எல்லாம் பேச எதுவும் இல்லை. ஆசிஃப் மாதிரி நபர்கள் கூட எழுதியிருந்தது ஆச்சரியமாய் இருந்தது. கொஞ்சம் விரிவாய் பார்ப்போம்.முதலில் எழுதுவது என்ற செய்ல்பாடே செயற்க்கை தன்மை தவிர்க்க முடியாதது. எதை எழுத உத்தேசித்தாலும், வார்த்தைகளை தேடி, வாக்கிய அமைப்பை திட்டமிட்டு ஒரு வரிசை படுத்தி, தர்க்கபடுத்தி எழுத வேண்டியிருக்கிறது. ஆதலால் யாராலும் மிக 'இயல்பாய்' எழுதுவது என்பது சாத்தியமே இல்லை. இதனாலேயே ட்சுனாமி நிகழ்ந்த பின் உடனே எதுவும் எழுத முடியாமலும், அதற்கு பின் எதை எழுதினாலும் எனக்கே போலித்தனமாகவும் தெரிந்தது. ஆகையால் போலித்தனமாய் எழுத நேர்வதல்ல பிரச்சனை. ஒரு பேரழிவு குறித்து எந்த வித பிரஞ்ஞை சுய உணர்வு இல்லாமல் ஒருவன், 'சுனாமி பினாமி' என்று அதை ஒரு ஆபாசமாய் மாற்றுவதுதான் கோபமே. வைரமுத்து தன் சாமர்த்தியத்தை காண்பிக்க நினனத்தது அல்ல கோபம், தன் சாமர்த்தியத்தை காண்பிப்பதாய் நினனத்து ஒரு ஆபாச கோஷமாய் மாற்றியதுதான் கோபம். இங்கே விசிதா என்பவர் கூட கவிதை என்று ஒன்று எழுதியிருந்தார். எனக்கு கூட பிடித்திருந்தது. கவிதைக்கு பின் என்ன உணர்வு இருக்கிறது என்பதுதான் பார்க்க வேண்டியது. ஜெயமோகனை போல ஒரு வாரம் கழித்து, திண்ணையில் எழுத நேர்ந்தால் அதை ஆபாசம் என்று மட்டும் சொல்லிவிட்டு போயிருப்பேன்.

ஆனால் ஆசிஃப் அதை சுத்தமாய் மாற்றிவிட்டார். விரும்பி செய்தார் என்று சொல்லவரவில்லை. அரையும் குறையுமாய் புரிந்துகொண்டதானால் இப்படி சொல்கிறார். அவர் சொல்வதை போல் இந்த அழிவை பாடு பொருளாய் வைக்க கூடாது என்று யாருமே சொல்லவில்லை. நிச்சயமாய் நான் இந்த அழிவை பதிவு செய்வதையோ, கருவாக கொள்வதையோ எங்குமே ஆட்சேபிக்கவில்லை. பாடிய விதம்தான் ஆபாசம். இதனால் என்ன பெரிய பிரச்சனை என்று கேட்டால், இது இன்னும் பல பேரை போலித்தனத்தையே மேதாவித்தனமாய் முன்வைத்து நிலமையை இன்னும் ஆபாசமாக்குவதுதான். உதாரணமாய் இங்கே குறைந்தது 4 நபர்கள் மீண்டும், மீண்டும் வைரமுத்துவின் கவிதையை பதிவு செய்தார்கள். அதே மதிரி வேறு கவிதைகளும் வரக்கூடும், வந்திருக்கிறது. இன்னும் முக்கியமாய் தமிழகத்தின் தெருக்களில், ஒரு மக்கள் கூட்டத்தின் பெரும் சோகம் ஆபாசமான மொழியில், வெற்று கோஷமாய் போஸ்டர்களிலும், பத்திரிகைகளிலும் இளிக்கும். நான் பலமுறை தமிழ்நாட்டின் ஆரோக்கியமான அம்சமாய் வலியுறுத்திய வெகுகலாச்சாரத்தின் அழுகிய இன்னொரு முகம்தான் இது. மிக தீவிராமான பிரச்சனையையும் வலியையும், மிக சாதரணமாய், ஒரு ஆபாசமான வன்முறையாய் மாற்றுவது. மேலும் கோபத்தின் முக்கிய காரணம், ஜெயமோகன் அதை இப்படி சொல்வார்

"தமிழனின் சுரணையின்மையின் தடையம். கேரள ஆட்கள் காறித்துப்புகிறார்கள்."

Post a Comment

---------------------------------------

Wednesday, January 05, 2005

குமட்டல் வாரங்கள்.

வலைப்பதிவுகளிலும் மற்றும் இணையத்திலும் சுனாமியை முன்வைத்து படிக்க நேர்ந்த சில விஷயங்கள் இரண்டு வாரமாய் ரொம்பவே குமட்டிவிட்டது. வலைப்பதிவுகள் படிப்பதை நன்றாகவே குறைத்துகொண்டு கொஞ்சம் மற்ற விஷயங்களை படிக்கலாம் என்று போனால் பதிவுகளில் இந்த கட்டுரை படிக்க நேர்ந்தது.

இந்த வெங்கட் சுவாமிநாதன் விவகாரத்தை முதலில் இருந்தே கவனித்து வருகிறேன். நண்பர் டீஜே 'ஏதோ' எழுதி ஜெயமோகன் தாக்குதலிட்டதில் மலையில் அடிக்க பட்ட டார்ச் ஒளியாய் தெரிந்த சில காட்சிகள் குறித்து எழுத ஒரு சந்தர்பத்தை நோக்கியிருந்தால், இன்னொரு பக்கத்தில் காலச்சுவடின் நிறுவனமாக்க பட்ட குதர்க்கங்கள் வேறு பரிமாணத்தை காட்டி, அதன் நிழல் இந்த காட்சிகளில் மங்கலடிப்பது தவிர்க்க முடியாமல் போவதை எப்படி எடுத்துகொள்வது என்ற குழப்பத்தின் உச்சமாக காலச்சுவட்டின் இந்த மிரட்டல்.

இந்த மிரட்டல்களில், நமக்கு எந்த வகையிலும் தெளிய வாய்பில்லாத வகையில், நேரடியாகவோ, உந்துதலாகவோ, நிழலாகவோ, மௌனமான ஆமோதித்தலாகவோ சுந்தர ராமசாமி பின்னால் இருக்கிறார். இவர்தான் 80களில், - சொல்லபோனால் விக்ரகங்கள் உடைத்து சிதறடிக்க பட்டு, அதன் ஜல்லியில் போடப்பட்ட சாலைகளில் நவீனவகை வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் இன்றும்- ஒரு தேர்ந்த இலக்கியவாதியாகவும், முக்கியமாய் ஒரு இருத்தலியல்வாதியாய் அறியபட்டார்- படுகிறார் - என்றால் தமிழ் இலக்கிய சூழலை நினைக்கையில், ஹாரிபிள்!

சுந்தர ராமசாமியை இன்னமும் இருத்தலியல் வாதியாக நினைக்கும் நபர்கள் இருக்கும் இலக்கிய சூழல் ஒரு பக்கம் இருக்கும்போது, சுனாமிக்கு நன்றி சொன்ன ஆசாமி பாரதியோடும், அவருக்கு சுனாமி தந்த ஞானம் அசோகனின் கலிங்கத்து மனமாற்றத்துடனும் ஒப்பிடப் படும் வலைப்பதிவு வக்கிரம் புரிந்துகொள்ள முடியாதது அல்ல.



Post a Comment

---------------------------------------
Site Meter