ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, July 31, 2013

இப்போதைக்கு சில.


வசந்த கந்தசாமி பிரச்சனை தொடர்பாக கணிதரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் கூட்டு உளவியல் தொடங்கி 'எதை சொன்னாலும் இவங்க நம்புவாங்கடா' என்கிற கவுண்ட மணி வசனம் வரை பல விஷயங்களை பேசலாம் என்று தோன்றுகிறது.  இப்போதைக்கு கீழே உள்ளவைகள்.

நான் இங்கு என் பதிவில் மட்டுமே விவாதிக்க விரும்புகிறேன்.  (பொய்களின் மூலம்) செலிபிரிடியாகிவிட்ட வசந்த கந்தசாமி மட்டுமல்ல, அவரை நம்பும் கைப்புள்ளைகள் கூட நான் எழுதுவதை முற்றிலும் புறக்கணித்து விட்டு, தங்கள் போக்கில் சொன்ன பொய்களையோ அல்லது தாங்கள் நம்பும் தவறான தகவல்களையோ  மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியும்.  வரலாறு இப்படி பலதை கண்டிருப்பதால் இதை புன்னகையுடன் கடக்க வேண்டியதுதான். மற்றபடி விவாதங்கள் கேள்விகளுக்கு மற்றும் பொருட்படுத்தக்கூடிய எதிர்வினைகளுக்கு சற்று தாமதமானாலும் இங்கு விரிவாக பதில்கள் எழுதுவேன்.

ஏற்கனவே எழுதிய பதிவு இந்த சுட்டியிலும் கீழேயும்.

அரசியல் கருதுகோள்களும் அறிவு நிஜமும்


ஐஐடியில் நிலவும் பார்பனிய அரசியல் பற்றியும், அதே நேரம் அதற்கான எதிர்பரசியலை வசந்த கந்தசாமியை முன்வைத்து முன்னெடுக்க முடியாது என்கிற வாதத்தையும் கடந்த 10 வருடங்களாக வேறு வேறு இடங்களில் இணையத்தில் நான் முன்வைத்து இருக்கிறேன். 

வசந்தா கந்தசாமி இந்தியாவில் வேறு யாருடனும் ஒப்பிடமுடியாத மாபெரும் கணிதமேதை என்று அவரை சார்ந்தவர்கள் பொய்யாகவும், அவரை சாரத கணிதத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் தவறாகவும் செய்தி பரப்பிக்கொன்டிருக்கிறனர். அவரது ஆரய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கைக்காக ஒருவேளை நீதிமன்றம் கூட அந்த பொய்யை உண்மையாக ஏற்று அவருக்கு ஆதரவாக தீர்ப்பு தரகூடும். அப்படி நடந்தால் கூட அவரது ஆய்வு கட்டுரைகள் குப்பை என்ற உண்மையை எந்த தயக்கமும் இல்லாமல் நான் சொல்லுவேன். குப்பைகள் எவ்வளவு எழுதி குவித்தாலும் ஒரே ஒரு உண்மையான இரண்டு பக்க பேப்பரின் அருகில் வரமுடியாது. ஆகையால் ஒரு மாபெரும் கணித மேதைக்கு பதவி உயர்வே தராமல் வஞ்சிக்கபடுவதாக சொல்லப்படும் செய்தி பொய்யானது. பதிவி நியமனத்தில் அவருக்கு ஏதேனும் தனிப்பட்ட அநீதி நிகழ்ந்திருக்கலாம். அது என்ன வகை அநீதி என்று கேள்விப்பட்டவைகளை மட்டும் வைத்து என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை; அவர் தரப்பு வாதத்தை மட்டும் வைத்தும் முடிவுக்கு வரமுடியாது; எதிர்தரப்பின் வாதத்தை நான் முழுமையாக அறியவுமில்லை. ஆனால் அது பார்பனரல்லாத ஒரே காரணத்திற்காக நடந்தது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக தோன்றவில்லை. அதே கணிதத்துறையில் இருக்கும் மற்ற பார்ப்பனரல்லாதவர்கள் எல்லாம் பார்பனியத்துக்கு கூஜா தூக்கியவர்கள் அல்ல. எந்த விஷயத்தையும் சிக்கல்கள் இல்லாமல் புரிய முனைவது வசதியாக இருக்குமே ஒழிய அரசியல் பாதுகாப்பானது அல்ல. 

இது தவிர ஐஐடி மீது குறிப்பாக இட ஒதுக்கீடு அரசியல் சார்ந்து விமர்சனமும் எதிர்ப்பும் கொண்ட அரசியல் நியாயமானது என்பதுதான் என் நிலைபாடு; அதற்காக தவறான உதாரணத்தை கொண்டாடுவது அந்த அரசியலுக்கு நண்மை பயக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் பெரியார் குறித்து ("Fuzzy and Neutrosophic analysis ofPeriyar's views on untouchability") எழுதியுள்ள நூல் எந்த பயனும், அறிவு உள்ளடக்கமும் அற்ற குப்பை மட்டுமல்ல, முழுக்க ஒரு ஏமாற்று வேலை. இதை என்னால் விரிவாக எழுதமுடியும்; ஆனால் என் அரசியல் முன்னுரிமை இதை எழுதுவதற்கு இல்லை. சமஸ்கிருதம் கணிணிக்கு ஏற்ற மொழி என்று வரும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.தனமான கட்டுரைக்கு எதிர்வாதம் வைப்பதே எனக்கான முன்னுரிமையாக இருக்கும். ஆனால் provoke செய்யப்படும் சவால் வந்து அவசியம் என்று தோன்றினால் இதற்காக வீணாகும் நேரத்தை ஒதுக்கி இந்த செயலில் ஈடுபட நேரலாம்




வசந்தா கந்தசாமியின் விகடன் நேர்காணலின் ஒரு சிறுபகுதியை ஃபேஸ்புக்கில் பார்த்தேன்; முழுக்க பார்த்தும் பயனிருக்க போவதில்லை. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று. விகடனில் வசந்தா தான் ஒரு பெண் என்பதால்தான் ஐஐடியில் பழிவாங்கப்படுவதாக சொல்லியுள்ளார். இவ்வளவு நாட்களாக இவ்வளவு இடங்களில் தன் ஜாதி காரணமாக பார்பனரல்லாதவராக இருப்பதால்தான் வஞ்சிக்கப்படுவதாக சொன்னவர் விகடனுக்கு மட்டும் ஷ்பெஷலாக பெண் என்கிறார்.  நல்ல சாமர்த்தியமான பாராட்டப்பட வேண்டிய அரசியல்தான். ஏற்கனவே  சுப்பிரமணியன் சாமியையே தனக்கு ஆதரவாக பயன்ப்டுத்தியவர்தானே. (பெரியாரிஸ்ட் கைப்புள்ளைகள் கவனிக்கவும்).

அவர் பணியாற்றும் அதே ஐஐடி கணிதத் துறையில் இத்தனை மற்ற பெண்கள் இருக்கிறார்களே, துறைதலைவராக கூட ஒருவர் பெண் இருந்தாரே என்ற கேள்வி எல்லாம் விகடனுக்கும் வராது; அண்டப் பொய்களாக சொல்லி தமிழகத்து அரசியல் கட்சிகளையும், அரசாங்கத்தையும்
ஏமாற்றியுள்ள வசந்தாவிற்கு இந்த தகவல் எல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்காது.

“அவமானம் எனக்கல்ல... ஐ.ஐ.டி.-க்கு!”  என்கிறார்.கைப்புள்ளைகளாக இவர் சொல்வதை நம்பி இத்தனை வருடங்ளாக இவர் பதவி உயர்வுக்கான போரட்டத்தை ஒரு சமூக நீதிக்கான போராட்டம் என்று முன்னெடுப்பவர்களுக்குதான் உண்மையான அவமானம். வரலாற்றில் இவ்வளவு விவரம் தெரியாதவர்களாக, தகவல்களை சரிபார்க்காமல் குருட்டுத்தனமாக இருந்ததற்கு நாளை  வலதுசாரிகளிடம் என்ன அடி வாங்கினாலும் தகும்.

'கணிதத் துறையில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்திருக்கும் எனக்கு சரியான நேரத்தில் பதவிகள் கிடைத்திருந்தால்... இந்நேரம் நான் துணைவேந்தராகவே இருந்திருப்பேன்' என்கிறார். இப்போது மட்டும் என்ன பிரச்சனை?  இவ்வளவு பெரிய கணித மேதைக்கு வேறு எங்குமே வேலை கிடைக்கவில்லையா? இந்தியாவில் இருக்கும் அத்தனை முன்னணி கல்வி நிறுவனக்களிலும் ஒரே பார்பன ஆதிக்கமாக இருந்து வசந்தா என்கிற ஒரே ஒரு பார்பனரல்லாதவருக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லையா!  சரி,  ஒரு சவாலாக சொல்கிறேன்; உலகின் முக்கியமான 10 பல்கலை கழகங்களின் பெயர்களை தருகிறேன். அதில் வேலை எல்லாம் வேண்டாம்; 'நான் ஒரு முறை என் கணித பங்களிப்புகள் பற்றி உரையாற்றுகிறேன்.  என்னை அழைத்து ஒரு வாய்ப்பு தரமுடியுமா?' என்று கேட்டு அவர் அங்கே ஒரு உரையாற்றினால் கூட போதும்.  இந்தியாவில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கணித மேதைக்கு இது ஒரு ஜுஜுபி வேலைதானே.

(ஐஐடியில் பணி நியமனங்கள் பதிவு உயர்வுக்கான விதிமுறைகள் எனக்கு தெரியாது. ஆனால் இந்தியாவில் இருக்கும் முன்னணி கணித நிறுவனங்களில்,  உதரணமாக மேட் சயின்சில்  அவர் தற்போது வகித்துவரும்  உதவி பேராசியர் வேலை கிடைப்பதற்கு கூட அவருக்கு தகுதி கிடையாது என்பதுதான் என் கருத்து; வேண்டுமானால் முயற்சித்து பார்க்கட்டும்.)

Post a Comment

0 Comments:

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter