ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, April 16, 2010

இந்து மக்கள் கட்சியை கண்டிக்கிறேன்.

சில நேரங்களில் நாம் காமெடியாக புரிந்து கொண்ட சில விஷயங்களுக்கு பின்னே ஆழ்ந்த தீவிரமான பொருள் இருக்கக்கூடும். அதே போல நாம் தமாசை எதிர்பார்த்து வாசிக்கும் பிரதி மிக தீவிரமான திருப்பங்களுடன், பற்பல பரிமாணங்களில் சமூகப் பாடம் நடத்தும் அளவிற்கு சிக்கலான இலக்கிய பிரதியாகிவிட கூடிய சாத்தியங்கள் உண்டு. பிரதியை வாசிக்காமல், பிரதி வெளியாகும் முன்பே அது குறித்து தீர்ப்பு கூறும் விமர்சகர் 'மண் ஒட்டவில்லை' என்று தனக்கு தானே சொல்லிக் கொள்வதற்காகவாவது பல அசட்டு சமாதானங்களை பின்னர் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு இதனால் ஆளாகிறார். ஆனால் அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நான், விமர்சகனின் கணிப்புகளை பொய்யாக்குவதுதான் ஒரு இலக்கிய பிரதியின் வேலை என்ற ஒரு வசதியான இலக்கணத்தை கொண்டு பிரதியை எதிர்கொள்ள துணிந்துவிட்டேன்.

இன்று லீனா மணிமேகலையின் கவிதை எழுதும் உரிமை மேலான தாக்குதல்களை கண்டித்து நடத்தப்பட்ட கூட்டம், தமாசாக இருக்கும் என்று நினைத்தற்கு மாறாக தீவிர வடிவத்தை அடைய, இந்து மக்கள் கட்சியினர் கூட்டத்தில் செய்த கலகம் காரணமானது. கூட்டம் தொடங்கிய போதே காவி உடையணிந்த இந்து மக்கள் கட்சியினர் ஸீட் பிடித்து அமர்ந்திருந்தனர். அ.மார்க்ஸ் அறிமுகப் பேச்சை முடித்த உடனேயே, இந்து மக்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தன் கேள்விக்கு பதில் அளித்த பிறகுதான் கூட்டம் தொடர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, பலர் பதில் சொல்ல, கூச்சலும் குழப்பமும் உருவாகியது. குழப்பம் பேரலைபோல எப்போது உச்சத்தை அடைந்தது, அமைதி வருவது போன்ற தோற்றத்தை எப்போது அடைந்தது என்று சரியாக சொல்ல முடியாத அளவில் குழப்பம். பிறகு ஒரு வழியாக அமைதியாகி, ராஜன் குறை பேசி முடிக்க, 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்று மீண்டும் இந்து மக்கள் கட்சி தொண்டர் குரல் எழுப்பினார். மீண்டும் பலர் கத்த, கூச்சலாக குழப்பம். சுமார் அரைமணி நேரம் சண்டைக்கு பிறகு, வேறு வழிதெரியாமல் பேசி விட்டு போகட்டும் என்று, வந்திருந்த இந்து மக்கள் கட்சியினரின் பிரதிநிதியாக பொறுப்பேற்ற ஒருவரிடம் கேள்வி கேட்க மைக் அளிக்கப்பட்டது. ஒரு கேள்வி கேட்கப் போவதாக துவங்கியவர் உரை ஒன்றை நீட்டி முழக்கி பேசத் துவங்கினார். கிட்டத்தட்ட மேடையை கைப்பற்றி (அவரே இடையிடையே கூட்டத்தையும் அமைதிப்படுத்தி), அறிமுகம், தோழமை அமைப்புக்கு நன்றி எல்லாம் சொல்லிய பின்னர் வரிசையாக பாயிண்டுகளை அடுக்கினார். அதில் ஒரு பாயிண்ட் லீனா மீதான ஆபாசமான ஒரு கேள்வியாக மாற, லீனா பதிலுக்கு அடிப்பதற்காக மேடையை நோக்கி செல்ல மீண்டும் ரசாபாசமாகியது. அடுத்த அரைமணி நேரம் பல விதமான குழப்பம். நீண்ட ரசாபாசத்திற்கு பிறகு அவர்களை வெளியேறச் சொல்லி மைக்கில் கேட்டு, மீண்டும் மீண்டும் கேட்ட பின்பு, வரிசையாக பல கோஷங்களை எழுப்பி, அப்போது கோஷம் காற்றில் சீராக பரவ விடாமல் மற்றவர்கள் கூச்சலிட்டதால் மீண்டும் மீண்டும் எழுப்பி, வாசலிலும் ஒருமுறை எழுப்பிய பின்பு சென்றனர். அதன் பிறகு கலகம் செய்த இந்து மக்கள் கட்சியினரை அனைவரும் தங்கள் உரையில் கண்டித்தனர். அதன் பிண்ணணிகளை ஆரய்ந்தனர். இது குஜராத், மும்பை, கர்நாடகாவில் நடந்த பாசிச நிகழ்வின் தொடர்சி என்றும் பலர் குறிப்பிட்டனர். இவ்வாறாக 'எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகளா'க உண்மையிலேயே மாறியது; நான் தமாசாக எதிர்பார்த்த நிகழ்ச்சிகளும் தீவிர பரிமாணத்தை அடைந்தது.

கூட்ட அழைப்பிதழில் 'இணயத்திலும் பரவியுள்ள தாக்குதல்', மற்றும் 'விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன' என்று குறிப்பிடப்படிருந்தது. இணையத்தை வாசிக்கவே வாசிக்காத ஒருவருக்கு, இணையத்தில் நடந்த தாக்குதல்களையும் இந்து மக்கள் கட்சிதான் செய்ததாக ஒரு வாசிப்பு வரக்கூடும். இணையத்தில் வாசிக்கும் பழக்கமுள்ள இணையர்களின் வாசிப்பில் , அந்த இணையரல்லாதவர்களின் பிரதி சார்ந்த உண்மை எப்படி உண்மையில்லையோ, அது போல கூட்டத்திற்கு செல்லாதவர்களுக்கு நான் மேலே இதுவரை 'இந்து மக்கள் கட்சி' என்று பலமுறை எழுதியது இந்து மக்கள் கட்சியை இந்த பதிவில் குறிப்பதாக வரக்கூடும் வாசிப்பு சார்ந்த உண்மை, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வாசிப்புண்மையாக பிரசன்னமாக வாய்ப்பில்லை. அந்த வகையில் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், இந்த பதிவின் மூலம் நடந்ததை அறிய விழைபவர்களுக்கு 'இந்து மக்கள் கட்சியின் தொண்டர்கள்' என்பது இந்து மக்கள் கட்சியை குறிக்கவில்லை என்று சொல்வது அவர்களின் பன்முக வாசிப்பை தடை செய்யுமாயினும், வேறு வழியில்லாமல் யதார்த்தவாதிகளின் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து பின்னறிவிப்பாக அவ்வாறாகவே இங்கே எழுத வேண்டியுள்ளது. அது எப்படியிருப்பினும் இந்து மக்கள் கட்சியின் இந்த அராஜகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

வினவு தளத்தில் லீனா பற்றி எழுதப்பட்ட பதிவுகளை நான் ஏற்கனவே கண்டித்துவிட்டேன். எனக்கு தெரிந்து முதன் முதலாக ஒரு பதிவாக கண்டனத்தை நான் தான் முன்வைத்தேன் என்று நினைக்கிறேன். ஒருமுறை பிரச்சனை குறித்து எழுதிய பின்பு மீண்டும் மீண்டும் பதிவுகள் எழுதவும், பிரச்சனைகளை கிளப்பவும் தோழர்களுக்கு தீவிர பிரச்சனை ஏதேனும் இருக்கலாம். எனக்கு ஒரு முறை கண்டித்ததே என் நிலைபாட்டை அறிவிக்க போதும் என்பதாலும், இந்த பதிவில் இந்து மக்கள் கட்சிக்கு என் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Labels:


Post a Comment

---------------------------------------

Sunday, April 11, 2010

தமாசு!

தீவிர அறிவு விவாதம், மற்றும் களப்பணிகள் செய்து அயர்ந்துவிட்ட தமிழ் அறிஞர் கூட்டம், சற்றே இளைப்பாற சில வெட்டி வேலைகளில் ஜாலியாக ஈடுபடுவதாக தோன்றுகிறது. இந்து மக்கள் கட்சி லீலாமணிமேகலையின் கவிதை தொகுப்பையும், இணையதளத்தையும் தடை செய்ய கோரி போலிஸில் புகார் கொடுத்திருக்கிறதாம். இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்தது; சிலர் பத்திரிகைகளில், இணையத்தில் கருத்து சொன்னார்கள்; கண்டித்தார்கள்; எல்லாம் நல்ல விஷயம்தான். இப்போது அடுத்த கட்டமாக கண்டன ஒன்று கூடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். யாரை கண்டித்து கூட்டம்? இந்து மக்கள் கட்சியையா? அப்படி என்றால் ஒரே ஒரு கூட்டம், ஒரே ஒரு விஷயத்துக்கு எப்படி போதுமானதாகும்? தினமும் ஒரு விஷயத்துக்காக கூட்டம் நடத்துவதுதானே நியாயமாக இருக்கும். ஒருவேளை அடையாள வேலை நிறுத்தம் மாதிரி எல்லாவற்றிற்கும் அடையாளமாக ஒரு நாள் கண்டன ஒன்று கூடல் போலும்.


' பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. ' என்கிறார்கள். தமாசாக இருக்கிறது. இப்படியே ஒரே மாதிரி ஸ்டீரியோடைப் வாக்கியங்களை எவ்வளவு காலத்துக்கு இன்னமும் அமைத்துக் கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.

இந்து மக்கள் கட்சியின் புகாரை ஏற்று போலிஸோ, அரசாங்கமோ தடை செய்வதற்கு முன்நடவடிக்கையாக, முதன் முதல் படியாக, ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் மேலே சொன்ன அச்சுறுத்தல் என்பதற்கு பொருள் இருக்கிறது. இந்து மக்கள் கட்சி -மும்பையில் எண்ணிக்கையிலடங்கா வண்ணம் நடந்திருப்பதுபோல்- ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டிருந்தாலும் இந்த அச்சுறுத்தல் என்று சொல்வதற்கு முகாந்திரம் உண்டு. ஒருவேளை அப்படி எதாவது நடக்காதது இவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமாகவும் இருந்து, வேறு வழியில்லாமல் புகார் கொடுத்ததையே முகாந்திரம் கொண்டு கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களோ என்னவோ! இப்படி ஏதையாவது கண்டித்து கூட்டம் நடத்தாவிட்டால் ஆழ்மனதில் ஒரு கண்டன ஈகோ நிறைவு கொள்ளாமல் ஆவியாக அலையும் போல.

அல்லது ஆண்குறி, விந்து பீச்சியடித்தல் போன்றவற்றை கச்சாவாக பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளை இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்பு வேறு எப்படி எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழகமாக இருக்கும் காரணத்தால் இந்து மக்கள் கட்சி, சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் எடுக்காமல், சட்டத்திற்கு உட்பட்டு ஒரு தடையை கோரும் ஜனநாயக தன்மையை காட்டியிருக்கிறார்கள். அப்படி இருப்பது பிரச்சனையோ என்னவோ, அவர்களையும் கூட்டம் கண்டனம் என்று மேற்படி செயலில் இறங்கத் தூண்டும் வகையில் ஒன்று கூடல் நடத்துகிறார்கள். இந்து மக்கள் கட்சியை விடுங்கள் கம்யூனிஸ்டுகளும், பாமகவும், திராவிட இயக்கங்களும் கட்சியின் அதிகாரபூர்வமாக என்ன நிலைபாடு கொண்டிருக்கிறது என்று கவிதைகளை படிக்க சொல்லிவிட்டு பின் கருத்து சொல்ல கேட்டு பார்க்கலாம்.

எனக்கு லீலாமணிமேகலையின் கவிதைகளில் பிரச்சனை எதுவும் இல்லை - அவைகளை கவிதை என்றவகையில் என்னால் எந்த விதத்திலும் ரசிக்க முடியவில்லை என்பதை தவிர. மிகவும் கச்சாவான மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த கவிதைகளில் கலகமோ, கவித்துவமோ வெளிபட்டதாக நான் தனிப்பட்டு கருதி அதற்கு வக்காலத்து என்னால் வாங்க முடியாது. ஆனால் அதை எழுதுவதற்கு அவருக்கு இருக்கும் உரிமைக்கு என் ஆதரவு குரலை வெளிப்படுத்த முடியும். அதில் எந்த தயக்கமும் இல்லை. அதே நேரம் அந்த கவிதைகளை விமர்சிக்கவும், எதிர்க்கவும், அந்த கவிதைகளில் மொழிரீதியான அத்து மீறல் நடந்துள்ளதாக கருத்து சொல்லவும் மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.( என் கருத்து அதுவல்ல.) இந்து மக்கள் கட்சி மேலே ஒரு படி போய் சட்டரீதியான தடையை கோரியிருக்கிறது. அதை சட்டரீதியாக எதிர்கொள்வதை தவிர பெரிதுபடுத்த இதில் எதுவும் இல்லை. பாய்ஸ் படத்தை தடை செய்ய பெண்கள் அமைப்புகள் கேட்டது போன்றதுதான் இது. தடைசெய்ய கேட்பது என்பதும் ஒருவித எதிர்ப்பை தெரிவிக்கும் வழிதான். அதற்கு அரசின் அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் (அல்லது சட்டவிரோதமாக நடவடிக்கைகள்/தாக்குதல்கள் நடந்தாலோ) அது கருத்து சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலாக முடியும். ஒருவேளை மார்க்சியர்களும், ஃப்ராய்டியர்களும் கூட தங்கள் மனம் புண்பட்டதாக வழக்கு தொடரலாம். 'குட்டி ரேவதி' என்று ஒரு சினிமா கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்கவே எஸ்ராவிற்கு உரிமை இல்லை என்று ஒரு கண்டன கேலிகூத்து நடத்தியவர்கள், இப்படி எதிர்ப்பை தெரிவிக்க உரிமையில்லை என்று நினைப்பது இன்னொரு 'கருத்து சுதந்திர மனித விடுதலை' கேலிகூத்து மட்டுமே. (வினவின் பதிவுகளில் வெளிப்பட்ட ஆணாதிக்க மொழியை, வசவுகளை, சமூக மதிப்பிடுகளை தன் வாதத்திற்கு சாதகமாக்கும்தன்மையையும் நான் கண்டிக்கிறேன். கண்டித்தேன். ஆனால் எதிர்ப்பு என்பதே வெளிப்படக்கூடாது என்பது என் கருத்தல்ல.)

மீண்டும் சொல்வதானால் என்னால் கச்சாவான பாலியல்ரீதியான மொழி(வெளிப்படுவதால் மட்டும் ஒரு பிரதியை இலக்கியமாக கருத முடியாதே தவிர) அதனுடன் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்கள் சமூகத்தில் மிக மிக குறைவாகவே இருப்பார்கள். மிக குறைவாக மட்டுமே எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். இது ஆணாதிக்கம் என்றும் குறுக்க முடியாது. ஆணிடம் இதே போன்ற மொழி வெளிபடும்பொதும் இதை ஒத்த எதிர்ப்பு வெளிபடலாம். கற்பித நெறிகளால் பெண்ணின் தூய்மையை உன்னதப்படுத்தும் ஆணாதிக்க சமூகமாக நம் சமூகம் இருப்பதால் பெண்ணுக்கான எதிர்ப்பு பல மடங்கு அதிகமாக இருக்கலாம். எனினும் பொதுக்களத்தில் இயங்கும் ஒரு கச்சாவான பாலியல் மொழிக்கான எதிர்ப்பு என்பதாக ஒன்று இருப்பதே பாசிசம் என்று நினைப்பதும், பாசிச கூறு கொண்ட குருட்டு பாசிச எதிர்ப்பு என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆகையால் எந்த வித பொறுப்பும் இல்லாமல் வெளிபடும் பாலியல்ரீதியான மொழிக்கு, எதிர்ப்பு என்பதே இருக்க கூடாது என்று நினைப்பவர்களுடன் பேச எனக்கு எதுவும் இல்லை. (தஸ்லிமா நஸ்ரின், தீபா மெஹ்தா, ஹுசைனுக்கு நிகழ்ந்த எதிர்ப்புகளை இங்கே ஒப்பிடவே முடியாது. அதன் தீவிரமும், அதிகாரமும் வேறு. தஸ்லிமா, தீபா, ஹுசைனிடம் வெளிபட்டதும் எந்தவித பொறுப்புணர்வும் இல்லாத ஒரு கச்சாவான பாலியல் மொழி சார்ந்த வெளிபாடு அல்ல.) மாறாக இவ்வாறான எதிர்ப்பும் இருக்கலாம் என்று ஜனநாயக பூர்வமாக நினைப்பவர்கள் எந்த வகையில் இந்த எதிர்ப்பு வெளிபட வேண்டும் என்பதை விளக்கி சொல்ல வேண்டும். குறிப்பாக சட்டரீதியான நடவடிக்கை என்றல்லாமல் வேறு எந்த ஜனநாயக வழியில் இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்டுகளின் அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்கிறார்கள் என்பதை சொல்லட்டும். மேலே பேசலாம்.

என்னை பொறுத்தவரை இதை பெரிது படுத்துவது வெட்டிவேலை. தமிழகத்திற்கு வெளியே தேசிய மற்றும் பிராந்திய இந்துத்வ கட்சிகள் அடைந்த நிலையை, இத்தனை ஆண்டுகால முனைப்புக்கு பிறகும் அடையாத நிலையில், குஷ்புவின் முன்மண பாலுறவு குறித்த கருத்தை அங்கீகரித்து தீர்ப்பு வெளிவந்த இந்த உற்சாகமான காலகட்டத்தில், இதெல்லாம் இல்லாத எதிரியை கற்பித்து போராட கம்பு சுத்தும் வேலையாகத்தான் தெரிகிறது. விளம்பரத்திற்காக இதை செய்வதாகவெல்லாம் குற்றம் சாட்ட நான் சில அறிவு சார்ந்த அற காரணங்களால் விரும்பவில்லை.

இதைவிட இந்த பதிவை என்னை எழுத தூண்டிய ஒரே தீவிர விஷயம் தஸ்லிமா நஸ்ரின் மீதான தொடர்ந்த தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இவர்கள் என்னவகை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள் என்கிற யதார்த்தம்தான். கண்டன கூட்டம் எல்லாம் வேண்டாம். எங்காவது ஒரு இடத்தில் தங்களின் தீவிர கண்டன குரலை இவர்கள் பதிவு செய்திருக்கிறார்களா? குறிப்பாக அ.மார்க்ஸ், பிறகு ஷோபாசக்தி, குறைந்த பட்சம் லீலா மணிமேகலையாவது. எல்லா பிரச்சனை குறித்தும் கருத்து சொல்ல இயன்றதில்லை என்றால், இப்போதாவது கருத்து சொல்லும் படி நேரடியாக அறைகூவுகிறேன். இதில் அ.மார்க்ஸ் தஸ்லீமா நஸ்ரின் மீதான தாக்குதலை நியாயப்படுத்துபவர்களுடன் இணைந்து செயல்படுபவர். தமிழ் நாட்டிற்கு வெளியில் நடந்ததை விடுவோம். ஷகீலா பர்தா போடுவதற்கு எதிராக ரத்தம் கொதிக்கும் அறிக்கைகளை விட்டவர்களை எதிர்த்து என்ன செய்திருக்கிறார்கள்? அ.மார்க்ஸின் இந்த நிலைபாடுகளை சரியானதாக நியாயப்படுத்திய ராஜன்குறை இந்த கூட்டத்தில் என்ன பேசுவார் என்று கேட்க ஆவலாக உள்ளது. (பார்க்க: சத்தியகடிதாசியில் ராஜன் குறையின் ஒரு காகமோனா பற்றிய கட்டுரையின் பின்னூட்டத்தில் அ.மார்க்ஸ் குறித்த ரவி ஶ்ரீனிவாசின் கேள்விக்கான ராஜனின் பதில்) என்னை பொறுத்தவரை தஸ்லிமா நஸ்ரினை வாழவிடாமல் இருக்கவிடாமல் இயங்கவிடாமல் இருக்கும் அடிப்படைவாதத்தை அனுமதிக்கும்/அங்கீகரிக்கும் அரசியல்களை விட, எந்த வித முக்கியத்துவம் இல்லாத இந்த விஷயத்திற்கு கூட்டம் நடத்துவது எல்லாம் நோய்கூறுகள் கொண்ட தமாசுகள் மட்டுமே.

தமிழ் சூழலில் அக்கறை கொண்டதாலும், இவர்கள் மீதும் இவர்களின் அரசியல் மீது நெடுங்காலமாக ஈடுபாடு கொண்டவன் என்ற வகையிலும் இந்த தமாசை பார்க்க போகலாமா வேண்டாமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Post a Comment

---------------------------------------
Site Meter