ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, October 06, 2015

இந்து அடையாளமிலி-3

 ̀இந்து வேறு, இந்துத்வம் வேறு' என்கிற வடிவான வாதத்திற்கு இருக்கும் சவலான கேள்வியே, ஏன் இந்துக்களுக்கான எந்த அரசியலும், இந்துத்வம் என்று நாம் அறியும் சட்டகத்தின் வெளியே இயங்க முடியவில்லை என்பது. இந்துவிற்கான அரசியல் என்பது, மற்ற மதத்தினரின் இருப்பை முன்வைத்து தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டு, தான் வஞ்சிக்கபடுவதாகவும் பாதுகாப்பற்று இருப்பதாகவும் கருதுவதால் உருவாவது. அவ்வாறு கருதுவதற்கான காரணங்களைப் பொய்யாகவும், நியாயமாகவும், கற்பிதமாகவும் சமூக யதார்த்தம் வழங்குகிறது. அரசியல் சட்டம் என்பது நாட்டின் எல்லா மக்களுக்கும் பொதுவான நியாயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மதசார்பின்மைவாதிகளின் கோரிக்கையாகத்தான் இருக்க முடியும். ஆனால் எங்குமில்லா அதிசயமாக இந்துத்வவாதிகள் மட்டுமே இந்தியாவில் அப்படிக் கோருகிறார்கள்; எல்லாவகை மதச்சார்பின்மை அரசியலைச் சேர்ந்தவர்களும் அதை எதிர்க்கிறார்கள்இந்த ஓர் உதாரண விஷயத்தைக் கொண்டே, இந்துத்வ அரசியலை பொய்யான, நியாயமான, கற்பிதமான காரணங்களால் சமைக்க முடியும். ஆகையால் இந்து என்ற அடையாளம் கொண்ட அரசியல் அனைத்தும் தவிர்க்க முடியாமல் இந்துத்வத்தின் பகுதியாகத்தான் இருக்குமா என்று கேட்டால், அதற்கு ஒரே விதிவிலக்காக இருப்பது காந்தியம்

காந்தி தன்னை முழுமையாக இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டவர்; ஆனால் மற்ற அடையாளத்தின் எதிர்வாக தன் இந்துத்தன்மையைக் கற்பிதப்படுத்திக் கொள்ளவில்லை. மற்றதை உள்ளடக்குவதன் மூலமாகவே தன்னை இந்துவாக அடையாளப்படுத்தினார். சமணத்தின் அகிம்சையையும் சத்யாகிரக வழிமுறையையும் தழுவுவதும், ஈஸ்வர அல்லா தேரே நாம் என்பதும் அவருக்கு இந்துத்தன்மைதான். அடையாள இறுக்கமற்றும், பன்மைத்தன்மை கொண்டும், மற்றதை உள்வாங்கியும், காலத்திற்கும் சிந்தனைக்கும் ஏற்ப மாற்றத்தை ஏற்றுப் பரிணமிப்பதையும் அவர் இந்துத்தன்மையாகக் கற்பித்தார். இதை எல்லாம் விட, பெரும் நாசங்களை ஏற்படுத்திப் பிரிந்து போகும் பாகிஸ்தானை வெறுக்கக் கூட அவரது அரசியலில் இடம் இல்லை. இந்திய அரசியலில் உண்மையான முழுமையான ஒரே இந்து அவர்தான்; அவரது இந்துத்தன்மை இந்துத்வாவிற்கு இயல்பில் எதிரானது என்பதால்தான், இந்துத்வர்கள் பிரிட்டிஷார்களை விட அவரை வெறுத்தனர்.  


இந்துவாக தன்னை அடையாளம் கண்டு அரசியல்படுத்திக் கொண்டாலும், அதை இந்துவிற்கான அரசியலாக காந்தி மாற்றிக் கொள்ளவில்லை; அதாவது இந்து அடையாளத்தை அரசியல்மயப்படுத்தவில்லை. அதனாலேயே, மற்ற நேரடி இந்துத்வ எதிர்ப்பு அரசியலை காட்டிலும், காந்தியம் இந்துத்வத்திற்கு பெரும் சவலாக இருந்தது. ஆனால் காந்தியமும் ஒரு மித இந்துத்வம்தான் என்று சிலர் புத்தகம் எழுதுகிறார்கள்; காந்தியம் இந்துத்வத்தின் முந்தய படி என்று நானும் பத்தாண்டுகளுக்கு முன்னால் நினைத்திருந்தேன். இந்தப் பார்வையை முழுக்க அபத்தமானதாக இப்போதும் கருத முடியவில்லை. மார்க்சிய பெரியாரிய சொல்லாட்சிக் கருத்தாளரான .மார்க்ஸ் கூட காந்தியை முன்வைக்கும் காலகட்டம் இது. காந்தியம் பேசுவது பின்நவீன மோஸ்தராகிப் போனதோ என்று தோன்றும் இந்தக் கட்டத்தில், காந்திய அரசியலைக் கறாராக பரிசீலிக்கும் தேவை உள்ளது. இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல; காந்தியத்தை இந்துத்வம் உள்ளடக்கிக் கொள்ளும் தோற்ற மயக்கம் பற்றி மட்டும் கவனிப்போம்.  

காந்தியத்தின் பாதிப்பு இன்றும் எல்லாவகையிலும் இருந்தாலும், சில உதிரி உதாரணங்களைத் தவிர்த்து, காந்திய அரசியலின் ஆளுகை இந்திய அரசியல் வெளியில் காந்தியுடன் முடிந்து போனது. பெரியாருக்கு திராவிடர் கழகமும் திமுகவும் போல், காந்தியின் அரசியல் அவரது வழிதோன்றல்களால் பரவலாக அரசியல் வெளியில் தொடரப்படவில்லை. பெரியார் இடையில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு மேல் திமுகவினரை திட்டி வந்தாலும், திமுகவின் அரசியல் சொல்லாட்சிகள் பெரியாரிடம் இருந்து பிரிக்க முடியாதவை; அப்படி ஒரு உறவு காங்கிரசிற்கு - காந்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் மேம்போக்கு பாவனைகளைத் தாண்டி - கிடையாது. முழுப் புரட்சிக்கு அழைத்த சோசியலிஸ்டான ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம், காந்தியத்தின் பாதிப்பைக் கொண்டிருந்தாலும், இந்துத்வத்தின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கவில்லை; மாறாக சர்வாதிகாரத்திற்கு எதிரான கிளர்தலில், இந்துத்வத்தைச் சமரசத்துடன் உள்ளடக்கிக் கொண்டது. இவ்வாறாக காந்தியம் இந்திய அரசியல் பெருவெளியில் நேரடிச் சவாலாக இல்லாத நிலையில், ஆனால் அதன் பாதிப்பு சமூகம் முழுக்க இருக்கும் நிலையில், இந்துத்வம் தனக்குள் காந்தியத்தை கரைத்துக் கொள்வது ஒர் அணுகுமுறை அவசியமானது. இவ்வாறாக நிகழும் பின்காந்திய கூத்துக்களைத்தான் காந்தியம் என்று நாம் இன்று தமிழ் இணையச் சூழலில் பார்த்து வருகிறோம். காந்தியை ஆதர்சமாக முன் வைக்கும் சின்னக்கருப்பன் மோடியை ஆதரிக்கிறார்; இஸ்ரேலின் கொடூர ஆக்ரமிப்பையும் அடக்குமுறைகளையும் நியாயப்படுத்துகிறார். காந்தி முழுமையாக பாலஸ்தீனர்களின் நியாயத்தை ஆதரித்து எழுதிய கட்டுரையை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்; காந்தி இருந்திருந்தால் பாலஸ்தீனத்தின் போராட்ட வன்முறையை நிராகரித்தாலும், போராட்ட நியாயத்தை இன்றும் நிச்சயம் அங்கீகரித்திருப்பார்.

இந்துத்வத்தின் அறுதிப் பெரும்பான்மை ஆட்சியில், கோட்சேக்கு சிலை வைக்கும் முயற்சிகள் நடந்தால், அதை எதிர்க்கும் எந்த ஒரு தார்மிக எழுத்தாளரும், ஆட்சி அதிகாரப் பின்னணியையும் இந்துத்வத்தையும்தான் முதலில் கண்டிப்பார். ஜெயமோகன் மட்டுமே அதற்கும் இடதுசாரிகளையும், பெரியாரியர்களையும் திட்டுவார். இடதுசாரி அரசியலும், பெரியாரியமும், அம்பேத்கரியமும் பரஸ்பர உறவில் காந்தியின் அரசியலுக்கு எதிரானது. அவர்கள் காந்தியை விமர்சிப்பதிலும் எதிர்ப்பதிலும் எந்த ஆச்சர்யமும் இல்லை; நேர்மையின்மையும், நகைமுரணும் இல்லை. காந்திய எதிர்ப்பில் அவர்கள் கொண்டிருக்கும் மூர்க்கத்தை வேண்டுமானால் விமர்சிக்கலாம்; ஆனால் இந்துத்வத்திற்கும் காந்தியத்திற்குமான முரண் தீவிரப்படும் தருணங்களில் எல்லாம், அவர்கள் நேர்மையுடன் காந்தியத்திற்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள்; அதை இந்துத்வத்திற்குள்ளான சகோதரச் சண்டை என்று வேடிக்கை பார்க்கக் கூட முனையவில்லை. இப்படி இருக்கையில் ஒரு காந்தியவாதி அதைவிட உண்மையாக நேர்மையாக காந்தியத்தின் பக்கம் நின்று இந்துத்வத்தை எதிர்க்க வேண்டும்; ஆனால் காந்தியவாதியாக தன்னை முன்வைக்கும் ஜெயமோகன், மைய இந்துத்வம் காந்தியை மதித்து உள்வாங்கியுள்ளதாகவும், ஏதோ சில விளிம்பு முனை இந்துத்வங்கள் மட்டுமே உதிரிகளாக காந்தியை எதிர்ப்பதாக எழுதுகிறார்; திருகல்வாதமாக கோட்சேக்கு சிலை வைக்கும் முயற்சிகளுக்கு, காந்தியைத் திட்டும் இடதுசாரிகள் பெரியாரியர்கள் பக்கம் பழியைத் திருப்புகிறார். உண்மையான காந்தியவாதியான காந்தி, தன்னைத் தொடர்ந்து தாக்கி வந்த அம்பேத்கர் குறித்து எந்தக் குற்றத்தையுமே சொல்லாததையும், தருணம் அமையும்போது பெரியாருடன் உரையாடல் நிகழ்த்தியதையும் இந்த அணுமுறையுடன் ஒப்பிட்டுக் கவனிக்க வேண்டும்

கோட்சே காந்தியைக் கொன்ற பிறகு, பல இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய செய்திகள் உண்டு. 1964இல் கோபால் கோட்சே விடுதலையானதற்கான கொண்டாட்டங்களின் விளைவாய் நடந்த கபூர் கமிஷன் விசாரணை, 'சாவர்கருக்கு காந்தியின் கொலையில் பங்கிருப்பதான கதையாடலைத் தவிர மற்ற அனைத்தையும் ஆதாரங்கள் தகர்கின்றன' என்று இறுதியாக எழுதியது. இவைகளை மறுத்து இந்துத்வவாதிகள் வாதிட முடியும். அது எப்படி இருந்தாலும், இந்துத்வாதிகளில் பெரும் எண்ணிக்கையினர் காந்தியை வெறுப்பதையும், கொலையை நியாயப்படுத்துவதையும் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் எளிதாக அறியமுடியும். இணையம் மூலம் அறிமுகமான அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் காந்தியைப் பற்றி நல்லவிதமாகவே சொல்லிவந்தாலும், சிறு வயதில் இருந்து நான் தனிப்பட்ட முறையில் அறிந்த அத்தனை ஆர்எஸ்எஸ்காரர்களுமே, ஏதாவது ஒரு கட்டத்தில் காந்தியின் கொலைக்கு நியாயம் கற்பித்தவர்கள்; ஐந்து வருடங்கள் முன்பு தொடர்பு மீண்டும் ஏற்பட்ட என் இந்துத்வ பள்ளித்தோழனை, அண்மையில்தான், காந்தி கொலையை நியாயப்படுத்தி எழுதியதற்காக, ஃபேஸ்புக் நட்புப் பட்டியலில் இருந்து நீக்கினேன். காந்தியைக் கொல்லும்போது கோட்சே ஆர்எஸ்எஸ்ஸில் ஒரு உறுப்பினரா, கொல்லும் முன் சாவர்கரை சந்தித்து ஆசி பெற்றது உண்மையா, ஆர்எஸ்எஸ்ஸிற்கு சதித்திட்டத்தில் பங்கு உண்டா என்ற ஆராய்ச்சிகளின் உதவியின்றி எளிமையான ஒரு முடிவிற்கு வரமுடியும்; சாவார்கரும், கோல்வால்கரும் மிகத் தெளிவாக முன்வைத்த காந்திய எதிர்ப்பு என்ற அரசியல் கருத்தியல்தான் காந்தியைக் கொன்றது; கோட்சே அதை நிகழ்த்திய கருவி மட்டுமே. அவர்களுக்குச் சதித்திட்டத்தில் நேரடி தொடர்பிருந்ததா என்பது இந்த கருத்தியல் உண்மைக்கு முன் மதிப்பில்லாதது

இந்துத்வ கருத்தியல் கொண்டு, அதே நேரம் காந்தியையும் மதிக்கும் ஒரு தரப்பு இருப்பதற்கான வாய்ப்பை நான் மறுக்கவில்லை; ஆனால் அந்தத் தரப்பு காந்தியை வெறுக்கும் தரப்புடன் எப்போதுமான சமரசத்துடனேயே இருக்கும். ஆனால் ஒரு காந்தியவாதி நிச்சயமாக அந்தச் சமரசத்தைச் செய்யமுடியாது. பொத்தாம் பொதுவான தர்க்கத்தின் மூலம், இந்துத்வத்தை காந்தி கொலையில் இருந்து விடுதலை செய்வது, ஜெயமோகன் முன்வைக்கும் காந்தியத்தைக் காவிப்படுத்துகிறது. ஜெயமோகன் கருத்துக்களில் எடுத்தாண்ட, காந்தியை முன்வைக்கும் ராமச்சந்திர குஹா, எந்தச் சமரசமும் இன்றி இந்துத்வாவைத் தீவிரமாக எதிர்ப்பதை எத்தனையோ கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார். இந்து மதத்திற்கும், இந்துத்வாவிற்குமான வேறுபாடுகளை பெரிதும் கவனப்படுத்திய, காந்தியை முன்வைக்கும் அஷீஷ் நந்தி, இந்துத்வ எதிர்ப்பை மனசுக்குள் செய்வதில்லை; 2002 நிகழ்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன், மோடியைப் பேட்டி எடுத்த அவர், 'ஒரு text book fascist, எதிர்கால பெருங்கொலைகாரனாகும் சாத்தியமுள்ளவனை' சந்தித்ததாகச் சொல்கிறார். ஜெயகாந்தன் உதிர்த்த பல அரசியல் கருத்துக்களையும் இந்துத்வத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்கமுடியும்.


காந்தியத்திற்கும் இந்துத்வத்திற்குமான வேறுபாட்டை பொதுப்புத்தி புரிந்து கொள்ள வேண்டுமெனில், அப்படி ஒரு வித்தியாசம் யதார்த்தத்தில் இருந்தாக வேண்டும். ஆனால் இந்துத்வப் புடை சூழ, ஜெயமோகன் காந்தியை முன்வைக்கும்போது, இந்துத்வ எதிர்ப்பு அரசியல் காந்தியத்தை நேர்மறையாக அணுகுவதைத் தடுக்கிறது; காந்தியம் இந்துத்வத்தின் மிதமான ஒரு பகுதிதான் என்கிற கச்சா நிலைபாட்டிற்கு இந்துத்வத்திற்கு எதிரான பொதுப்புத்தியைத் தள்ளுகிறது. இன்றய தேவையான காந்தியப் பரவலுக்கு, இவ்வாறாக ஜெயமோகன் ஊறு விளைவிக்கிறார். அவரது நோக்கம் அதுதான் என்று நான் சாரம்சப்படுத்தவில்லை; அவர்தான் தன் சாராம்சத்தை பரிசீலித்துக் கொள்ளவேண்டும்

Post a Comment

0 Comments:

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter