ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, October 29, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தவளைகளும் (refined version)


(குறிப்பு: படம் பார்த்த அன்றய இரவே எழுதப்பட்ட  சென்ற இடுகை சுத்திகரிக்கப்பட்டு,  சில மறுபரிசீலனைகளையும், எதிர்வினைகளையும் கவனத்தில் கொண்டு இந்த கட்டுரையாக மாற்றப்பட்டிருக்கிறது.   ̀காட்சிப்பிழை'யில் வெளியாகியுள்ளது.)

 ̀ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' திரைப்படம் மக்களின் பெரும் வரவேற்பை பெற்று ஒரு ஹிட் படமாகவில்லையென்றாலும்,  கிட்டதட்ட கருத்துரைப்போர் அனைவரும் பாராட்டும் படமாக உள்ளது. சினிமா உலகை சார்ந்த பலர், இளம் இயக்குனர்கள், மூத்த இயக்குனர்கள், ஊடகங்கள், இணையத்தின் அமைச்சூர் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் அனைவரும் ஒருமித்த குரலில் இதை சிறந்த படம் என்கின்றனர்.   ̀இங்கிலீஷ் படம் போல இருக்கு' என்று சிலர் கொச்சையாக சொல்கின்றனர்; அந்த கருத்தையே வேறு சிலர் அழகாக   ̀உலக்கத்தரமானது' என்கிறார்கள்; கமலஹாசன் தன் பாராட்டை உணர்த்தும் விதமாக மிஷ்கின் படத்தில் நடிக்க  விருப்பம் தெரிவிக்கிறார். சேரன்  ̀இதை மிஷ்கின் காலகட்டம் என்று அழைக்க வேண்டும்' என்கிறார். படத்தின் இடைவேளையில் சிலரிடம் பேசியபோது இந்த பாராட்டுக்கள் ஒரு முன்னபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்ததை அறிய முடிந்தது. 'இப்படியெல்லாம் படம் எடுக்கறதே பெரிய விஷயம்' என்றார் ஒரு இளைஞர். நானும் இடைவேளை வரை படத்தை பற்றி நல்லெண்ணமே கொண்டிருந்தேன்.  ஆனால் முழு படமும் பார்த்து அடைந்த ஏமாற்றத்தில், இதற்கா இவ்வளவு பாராட்டுக்கள் என்று வியப்பும் விரக்தியும் ஒருங்கே அடைய நேர்ந்தது. 

படத்தை பார்த்துவிட்டு வந்த உடனே ஃபேஸ்புக்கில்  ̀உலகத்தரமான ப்ளாஸ்டிக் குப்பை' என்று எழுதினேன். இப்போது படத்தை குப்பை என்று சொல்லமாட்டேன்; குப்பை என்று சொல்வது மதிப்பீடு சார்ந்த ஒரு கருத்து. படத்தில்  ஏதோ இருக்கிறது, நம் மதிப்பீடு அதை குப்பை என்று குறிப்பதாக அர்த்தமாகிறது. இந்த படமோ காற்று மட்டும் அடைக்கப்பட்ட ராட்சத பலூன் போன்று, உள்ளே வெற்றாக, வெளியே பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது; பஞ்சராகி காற்று இறங்கிய பிறகு,  மிஞ்சும் ப்ளாஸ்டிக்கை மட்டுமே நாம் குப்பை தொட்டியில் போடவேண்டியுள்ளது. படத்தில் என்ன பிரச்சனை என்பதை விட, படத்தில் என்னதான் இருக்கிறது என்பதுதான் கேள்வி. வித்தியாசமான காட்சியமைப்பு, தீவிரமாக பாவனை செய்யும் சில கதைத் தருணங்கள்,  உள்ளத்தை உலுக்கும் சிக்கலான இசை இவை மட்டும் ஒரு திரைப்படத்தை உருவாக்கிவிடாது. 

இந்த திரைப்படம் ஓடுவதிலோ, படத்தை சார்ந்தவர்கள் பொருளாதாரரீதியில் பயன் பெறுவதோ எந்த வித பிரச்சனையும் இல்ல. தமிழ் வெகுஜன சினிமா கலாச்சாரத்தில் ஒரு படத்தை துய்ப்பதில் பல்வேறு விதமான சாத்தியக்கூறுகள் உள்ளன. வெறும் இசைக்காகவோ, குறிப்பிட்ட வசனங்களுக்காகவோ, நடனத்திற்காகவோ, சண்டைக்காகவோ, நகைச்சுவைக்காகவோ படம் பார்ப்பதுண்டு;  ̀இண்டர்வல் வரை பாக்கலாம்' என்பது போன்ற விநோதமான விமர்சன அபிப்பிராயங்களை சகஜமாக கேட்கலாம். அந்த வகையில் இந்த படத்தின் சில காட்சிகளை,  இசையை யாரும் சிலாகிப்பதும், ரசிப்பதும் ஒரு பிரச்சனையே இல்லை. அதே நேரம் உள்ளடக்கமாக எதுவுமே இல்லாத ஒரு படத்தை, நம் சமூக யாதார்த்தத்திற்கும் தமிழ் சினிமா பிரதிபலித்து வரும் யதார்த்தத்திற்கும் அன்னியமான ஒரு படத்தை, நம் காலத்தின் சிறந்த திரைப்படமாக கொண்டாடுவதை, இந்த தருணத்தில் எதிர்த்து பதிவு செய்வது அவசியமாகிறது. 

படத்தின் தலைப்பில் உள்ள ஓநாயும் ஆட்டுக்குட்டியும் யாரார் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், படம் பார்ப்பதற்கு முன்னர் மிஷ்கினே பலமுறை நேராகவும், திரைக்கதையிலும் தெளிவாக சொல்லியாகிவிட்டது; போதாதற்கு இறுதியில் பெயர் போடும்போதும் காட்டில் யார் யார் எந்த பாத்திரம் என்றும் நமக்கு உணர்த்துகிறார்கள். நமக்கு முன்னபிப்பிராயம் ஏற்படுத்தியபடி, இவர்களுக்குள்ளான முரண்பாடுதான் முக்கிய கதையோட்டமா என்றால், அப்படி ஒரு முரணியக்கம் படத்தில் நிகழவே இல்லை. ஓநாய்த்தனம் X ஆட்டுக்குட்டித்தனம் என்று குறிக்கப்படும் குணரீதியான முரண்பாடோ, அதை குறிக்கும் கதாபாத்திரங்களின் உணர்வுரீதியான மோதலோ, அல்லது ஒருவனுக்குள்ளேயே இருக்கும் ஓநாய்த்தனம் ஆட்டுக்குட்டித்தனம் என்ற உளரீதியான எந்த மோதலும் பார்வையாளனை பாதிக்கும் வகையில் எங்கும் காட்சியாகவில்லை; ஆட்டுக்குட்டியாக குறிக்கப்படும் சந்துருவும், ஓநாயாக குறிக்கப்படும் வுஃல்பும் கிட்டதட்ட படம் முழுக்க சேர்ந்து இருந்தும், அவர்களுக்குள்ளே இப்படிப்பட்ட ஒரு முரணியக்கம் படத்தின் சிறு பகுதி கதையாக கூட இல்லை.  இளையராஜா இசையமைத்து, படம் வருவதற்கு முன்பே வெளியிடப்பட்டு விட்ட தீம் இசை மட்டும் அவ்வாறான ஒரு முரணியக்கத்தை குறிப்பதான உணர்வை தந்தாலும், கதையும் காட்சிகளும் அதற்கு  ஒத்துழைப்பை நல்காமல், நம் இசை பயணத்தையும் வெறுமையாக்குகிறது.  

படத்தில் மூன்று இடங்கள் ஆட்டுகுட்டியான சந்துருவிடம் இருக்கும் ஓநாய்த்தனமாக காட்சியாக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் கதையின் போக்கில் அது புரியுமா என்பது சந்தேகமாயினும், மிஷ்கின் ஏற்கனவே அளித்த இளையராஜாவின் இசைதுண்டுகளை கேட்டு பழக்கமானவர்கள்,  நுட்பமாக கவனித்தால் இதை அறிய முடியும். Growl என்ற தலைப்பில் உள்ள அந்த இசைத்துண்டு சந்துரு இவ்வாறு குணம் மாறும் இடங்களில் இசைக்கப்படுகிறது.  சந்துரு ஒரு கட்டத்தில் வுல்ஃபை கல்லால் தாக்குகிறான்; இன்னொரு கட்டத்தில்  குழந்தை மீது கத்தி வைத்தும், பாதளச்சாக்கடையில் தள்ளப் போவதாகவும் மிரட்டி, வுல்ஃபை கொஞ்ச நேரத்திற்கு பணிய வைக்கிறான். இது அவன் இயல்புக்கு மாறானது என்றாலும், அவனுள் இருக்கும் ஓநாய்த்தன்மையாக இதை நிச்சயம் எடுக்க முடியாது. தன்னை கடத்தி செல்லும் கொலைகாரனுக்கான எதிர்வினையாகவும், அவனுள் ஏற்கனவே இருக்கும் சாகசதன்மையின் இன்னொரு பகுதியாகத்தான் பார்க்கமுடியும். கல்லறை தோட்டத்தினுள் நுழையும்போது தம்பாவின் ஆள் ஒளிந்திருப்பதை சந்துரு பார்த்துவிடுகிறான்; ஆனால் அதை சொல்வதில்லை. இதுவும் அவனிடம் உள்ள ஓநாய்த்தன்மையை குறிக்கும் காட்சிதான் என்பதை, அதே   ̀Growl' பின்னணியில் இசைப்பதை வைத்து புரிந்துகொள்ள முடியும். க்ளைமாக்ஸ் காட்சியில் இதற்காக  ̀அந்த அக்காவை கொன்னது நாந்தான்' என்று அழுவான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது கதையுடன் ஒத்துப்போவதில்லை. அப்போதுதான் தம்பாவின் ஆட்களிடமிருந்து தப்பித்து வந்திருக்கிறார்கள். தம்பாவின் ஆட்களை தாக்கி வுல்ஃப் தப்பிப்பதில் சந்துருவும்  ஒத்துழைக்கிறான்; எதிராக எதுவும் செய்வதில்லை. மேலும் வேண்டுமென்றே தப்பான சிமெட்டெரியில் எல்லோரும் இருப்பதாக பொய் தகவலை சிறிது நேரத்திற்கு முன்னால்தான் சொல்லியிருப்பான். பொய்தகவலை நம்பி போய் தேடிவிட்டு,  சரியான இடத்திற்கு தம்பாவின் ஆள் வந்தவுடன், சந்துரு ஓநாய்த்தனம் கொள்வதை விளக்க இடைக் கதையில் எதுவும் நிகழவில்லை. இப்போது சந்துருவிற்கும் அந்தாளிடம் இருந்து உயிராபத்து இருக்கிறது. ஆகையால் இங்கே சந்துரு ஓநாய்த்தன்மை கொள்வதாக காண்பிப்பது கதைரீதியாக அபத்தம். தர்க்கத்திற்கும், காரண காரியங்களுக்கும் அகப்படாமல் நம்முள் ஓநாய்த்தனம் வெளிப்படும் என்பதை சொல்ல விரும்பியிருந்தால், ஒரு அம்புலிமாமா கதா தர்க்கத்துடனான கதையில் ஒரு லாஜிக்கல் பிழையாக அதை செய்ய முடியாது. 

வுல்ஃபோ படம் தொடங்குவதற்கு முன்பே, ஏற்கனவே ஒரு ஆட்டுக் குட்டியாக மாறிதான் இருக்கிறான்; அப்படித்தான் அந்த மெழுகுவர்த்திகளுக்கு இடையேயான ஃப்ளாஷ் பேக் கதை சொல்கிறது. அந்த குடும்பத்தில் ஒருவனாக ஆன போதே அவன் ஓநாய் அல்ல. கதையின் முதல் ஆட்டுக்குட்டியான தங்கள் மகனின் பெயராலேயே   ̀எட்வர்ட்' என்றுதான் அந்த அம்மா-அப்பா ஆடுகள், குழந்தை ஆட்டுக்குட்டி, எல்லோரும் மிஷ்கினை அழைக்கின்றனர். ஆனால் அந்த அம்மாவை கோவில் வாசலில் காட்டும் வரை, மிஷ்கினின் கதாபாத்திரம், இந்த கதையதார்த்ததிற்கு சம்பந்தமில்லாமல், பார்வையாளர்களுக்காக இயல்பில் ஓநாயாகவே சித்தரிக்கப்படுகிறது. அந்த கண் தெரியாத ஆட்டுக்குட்டியை கொன்றபோதே, தனக்குள்ளான ஆட்டுக்குட்டியை கண்டு கொண்டுவிடுகிறான். தனக்குள்ளான ஆட்டுக்குட்டியை தரிசிக்கும் அதை விட தீவிரமான தருணம், படத்தில் காட்டப்படும் கதையில் நிகழவே இல்லை. நிச்சயமாக வுல்ஃப் சந்துருவுடனான முரணான உறவில் ஆட்டுக்குட்டித்தன்மையை அடையவில்லை. பின் என்ன ஓநாய்-ஆட்டுக்குட்டி பிரச்சனை?  வுல்ஃபை ஓநாய் என்று நினைத்து, வுல்ஃபினுள் மென்மையான ஆட்டுக்குட்டியும் இருப்பதை நாமும் சந்துருவும் அறிவதுதான் கதை என்றால், இதை நேரடியாக இன்னும் சிறப்பாக சொல்லும் நூற்றுக்கணக்கான படங்கள் எடுக்கப்பட்டுள்ளதை மறக்கலாகாது.

படத்தின் லாஜிக்கல் பிரச்சனைகளாக சிலவற்றை சிலர் கூறுகின்றனர்; அதற்கெதிராக மற்ற மசாலா படங்களில் இவ்வாறெல்லாம் கேட்கிறீர்களா என்ற நியாமான கேள்வியை சிலர் எழுப்புகின்றனர்;  வேறு சிலர் இது யதார்த்தத்தை மீறிய படம், இதில் தர்க்கம் செல்லுபடியாகாது என்று தர்க்கிக்கின்றனர். பொதுவாகவே கதையில் இருக்கும் தர்க்கத்தையும், தர்க்க பிழையையும் பேசுவதில் பல குழப்பங்கள் இருப்பதை அறிய முடிகிறது.  

யதார்த்தவாத கதையானாலும், யதார்த்தம் என்று நாம் வரையறுக்கும் ஒன்றை மீறீய கதையானாலும், கதை தனக்குள் ஒரு தர்கத்தை பின்னிக்கொள்கிறது. குதிரை பறக்கும் கதையிலும், கதைக்குள் தர்க்கரீதியாக சாத்தியமாகாதது ஒன்று இருக்கும். புராணக்கதைகளின் போர்களிலும் தர்க்கரீதியான கேள்விகளுக்கு இடமுண்டு. ஆனால் அது கதைக்குள் கட்டமைக்கப்படும் தர்க்கத்தை ஒட்டி இருக்குமே தவிர நாம் யதார்த்தமாக அடையாளம் காணுவதை ஒட்டி இருக்காது.

இந்த திரைக்கதையில் சிலர் கேட்பதுபோல, அப்படி ஒரு ஆபரேஷன் பண்ணமுடியுமா, ஆபரேஷன் ஆனவன் ஆக்‌ஷன் செய்யமுடியுமா, மெழுகுவர்த்தி அணையாமல் இருக்குமா, அனுபவம் இல்லாத சந்துருவால் ரயிலில் இருந்து குதிக்க முடியுமா என்ற கேள்விகள் முக்கியமானவை அல்ல என்று நினைக்கிறேன். அவ்வளவு கவனமாக திட்டமிடும் வுல்ஃப் சந்துருவின் துப்பாக்கியை ஏன் வாங்கிக் கொள்ளவில்லை என்பது போன்ற கேள்விகளை கூட நான் கேட்க விழையவில்லை. யதார்த்தத்தை கூர்மையாக படம் பிடிப்பதாக பாவனை செய்யும் திரைக்கதையில் பிழைகள் குறித்த தீவிர கவனம் தேவைதான; ஆனால் கதை கட்டமைக்கும் தர்க்கத்தை உடைக்காதவரை, நாம் கண்டுபிடிக்கும் இத்தகைய லாஜிக்கல் பிரச்சனைகள் ஒரு கதாமுரண்பாடு இல்லை.  சென்னையின் இரவில் இயக்குனர் காட்டும்  கதையின் பாத்திரங்கள் தவிர வேறு யாரும் குறுக்கிடவில்லையே, சாலைகள் யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறதே என்றும் நான் கேட்கவில்லை;  இவை கதை உலகினுள் கட்டமைக்கபடும் தர்க்க ஒழுங்கில் இருக்கும் பிழைகள் அல்ல; கதையின் உள் உலகை, நமக்கு பழக்கப்பட்டதை முன்வைத்து, நாம் அடையாளம் காணுவதால் வரும் கேள்விகள் இவை. 'பட்டியல்' என்ற படத்தில் அத்தனை குற்ற சம்பவங்கள் நடக்கும்போது போலீஸின் குறுக்கீடே இல்லாததை ஒரு தர்க்க பிழையாக நண்பர் சொன்னார். அந்த கதைக்கு போலீஸ் தேவையில்லை என்பதுதான் அதற்கான பதில்.  இன்னொரு புறத்தில்  'கில்லி' படத்தில் லைட்ஹவுசின் மேலிருந்து குதித்து த்ருஷாவும் விஜய்யும் சாதரணமாக எழுந்து போவதிலும், விமானத்தினுள் உட்கார்ந்துவிட்ட த்ருஷா கபடி மைதானத்தில் பின் தோன்றுவதிலும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது; மற்ற வெகுஜன படங்களுக்கு தரும் சலுகையை  ̀உலகத்தரம்' என்று பலர் பம்மாத்து செய்வதாலேயே  ̀ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்திற்கு நாம் தர மறுக்க வேண்டியதில்லை.

ஆனால் கதையாடல் தனக்குள் புனைந்துகொள்ளும் தர்க்கத்தில் உள்ள ஓட்டை மிக மிக முக்கியமான பிரச்சனை. 'ஓநாயும் ஆட்டுகுட்டியும்'  என்ற படத்தின் மிச்ச முக்கால்வாசி கதைக்கு அடித்தளமாக இருப்பது மிஷ்கின் ஶ்ரீயை ரயிலில் கடத்தி தன்னுடன் கொண்டு போகும் சம்பவம்;  ஏன் அந்த  கடத்தலை மேற்கொள்கிறான் என்பதற்கு கதையின் தர்க்கத்தில் எந்த உருப்படியான விடையும் இல்லை; கதை பொய்யாக நடிக்கும் தத்துவ தளத்திலும் இதற்கு எந்த பதிலும் இல்லை. போலீஸ் வகுத்து கொடுத்த திட்டப்படி அந்த பையன் ஓநாயை சந்திக்க போகவில்லை; எந்த சந்தேகமும் இல்லாமல், அந்த பையனை வரவழைத்து, துப்பாக்கி காட்டி மிரட்டி, தன் உயிரை காப்பாற்றியனை பலவந்தமாக கடத்தி கொண்டு போகிறான்  வுல்ஃப்.  எதற்காகத்தான் அந்த பையனை கடத்துகிறான்? கதைப்படி அதற்கான தேவை என்ன? வுல்ஃபிற்கு கிடைத்த பயன்தான் என்ன? நல்லவனாக மாறிவிட்ட வுல்ஃப் இந்த கடத்தலை செய்வதன் அறமும்தான் என்ன?

கதைப்படி வுல்ஃபின்  நோக்கம் யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல், கண்காணிப்பிற்கு ஆளாகாமல் அந்த அம்மா அப்பா ஆடுகளையும் குழந்தை ஆட்டுகுட்டியையும் அந்த 'ஹிந்திக்கார பார்ட்டி'யிடம் சேர்ப்பது; சேர்ந்து தானும் தப்பிப்பது; இடையில் கல்லறையில் ஒரு மெழுகுவர்த்தி பிரார்த்தனை.  வுல்ஃப் ஆபேரேஷன் நடந்து எட்டு நாளோ என்னவோ ஓய்வில் இருக்க வேண்டியவன் என்ற விஷயம் தம்பாவிற்கும் போலீசிற்கும் தெரியும். அவன் அந்த ஓய்வு நாட்கள் முடியும் முன்பு வெளியே வர மாட்டான் என்ற நம்பிக்கையில் திவிரமாக கண்காணித்து கொண்டு இருக்க மாட்டார்கள். இடையில் ஆறாவது நாளே யாருக்கும் தெரியாமல் வுல்ஃப் தனது மேற்படி கடமையை முடிப்பது எளிதானது. ஆனால் அவனோ சந்துருவை கடத்துவதன் மூலம், ஒட்டுமொத்த போலீசின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இரவுகளில் தான் இருக்கும் இடங்களை  ஊகிக்க விட்டு, தானிருக்கும் சுற்று வட்டாரத்தில் தேடவிட்டு, மாட்டிகொள்ளும் ரிஸ்க்கை காரணமே இன்றி எடுக்கிறான்; அது  மட்டுமின்றி, தனக்கு உதவிய சந்துருவையும் அந்த ஆபத்தின் உள்ளே கொண்டு வருகிறான். போலிஸ் அவன் பின்னால் வருகிறது என்று நன்கு அறிந்து, தன்னை கொல்ல போலிஸ் சந்துருவின் உயிரை பணையம் வைக்கத் தயங்காது என்றும் அறிந்த வுஃல்ப் அவனை கடத்துகிறான். 

கடத்தப்பட்ட பின், வுல்ஃப் சொல்லி சந்துரு இரண்டு காரியங்கள் செய்கிறான்.  முதலாவது அந்த அம்மாவிற்கு பிச்சை போடப்போவது; தம்பாவின் ஆட்கள் அந்த அம்மாவை கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்து சந்துருவை அனுப்புகிறான். அவர்களும் வெளிவந்து சந்துருவின் கழுத்தில் கத்தி வைக்கின்றனர். பின்னாலிருந்து வுல்ஃப் தாக்குவானா என்றால், நேராக அந்த அம்மாவிடம் போய்  ̀வாங்க போகலாம்' என்கிறான். சந்துருவின் கழுத்தில் கத்தி வைத்திருப்பவன் நல்ல மனது பண்ணி சந்துருவை ஒன்றும் செய்யாமல், வுல்ஃபை தாக்க வருகிறான்; அடிவாங்கி விழுகிறான். ஆக இந்த பிச்சை போடும் பத்து பைசா பெறாத காரியத்திற்காக சந்துருவை கடத்தியிருக்க மாட்டான் என்று நாம் நம்பலாம்.

இரண்டாவது  ̀நான் வுல்ஃபை சுட்டுட்டேன் ஸார்' என்று சிபிசிஐடி அதிகாரி லாலுக்கு சந்துரு போன் செய்து சொல்கிறான். அந்த அப்பாவி அதிகாரியும் சந்துரு சொன்னதை சந்தேகிக்காமல், இடையில் ஃபோன் செய்து விசாரிக்காமல், மொத்த போலீஸ் படையையும் அங்கே கொண்டு வந்து நிறுத்துகிறார். 

வுல்ஃப் எந்த விதமான நாடகத்தையும் நடத்தும் திறமைசாலி என்று போலிஸுக்கு தெரியும்; அதை வசனமாகவும் சொல்கிறார்கள்; அப்போதுதான் எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு மின்சார ரயிலில் தப்பித்திருக்கிறான். லாலும் கூட புத்திசாலி; மற்றவர்களை போல அல்லாமல், அவன் பீச் ஷ்டேஷன் போகமாட்டான், இடையில் தப்பிப்பான் என்று யூகிக்ககூடியவர். ஆனால் இந்த இடத்தில் மட்டும், இது வுல்ஃபின் திட்டமாக இருக்குமோ என்று சந்தேகிக்க மறுக்கிறார். வுல்ஃப் ஒரு இடத்தில் ஒளிந்திருக்கிறான் என்ற தகவல் வந்தால் மொத்த போலீஸ் படையும் அங்கே செல்வது நியாயம்; கல்லறை தோட்டத்தில் உயிருடனிருக்கும் வுல்ஃபை, எதிர்கொண்டு சண்டை போடுமளவிற்கான தைரியசாலி, செத்துப்போன வுல்ஃபை சந்திக்க மட்டும் தனியே வராமல் ஒட்டுமொத்த போலீஸ்படையையே கொண்டு செல்கிறாராம். இவ்வாறாக போலிஸ் கவனத்தை திசை திருப்பி வுல்ஃப் அடுத்த வேலைகளை கவனிக்க செல்கிறானாம்.  இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் வுல்ஃபிற்கு வேலை இன்னும் முடியவில்லை. பக்கத்திலேயே குழந்தையை பாரதியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்; மெழுகுவர்த்தி பிரார்த்தனை வேறு இருக்கிறது; பின்பு அந்த பார்கிங் லாட்டிற்கு போகவேணும். ஒருவேளை அந்த ஹிந்திக்கார பார்ட்டியுடன் தப்பிக்கும் கடைசி கட்டத்தில் இப்படி போலிசை திசை திருப்பும் ஒரு நாடகத்தை செய்தாலாவது அர்த்தம் உண்டு. இவ்வாறாக சப்பை மேட்டர் என்று கூட சொல்ல முடியாத ஒரு காரணத்திற்காக, தனக்கும் தன்னை காப்பாற்றியவனுக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி கடத்துகிறான். 

இந்த கேள்விகள் பார்வையாளர்களுக்கு இருக்கத்தான் செய்யும்; ஆனால் கதையின் இந்த முக்கியமான பிரச்சனையை எப்படி பலர் எளிதாக கடந்து செல்கிறார்கள் என்பதுதான் சுவாரசியம். படத்தை ஒருமுறைக்கு மேல் பார்த்ததாக சொல்லி பாராட்டிய பலர் இந்த முக்கிய பிரச்சனையை கண்டுகொள்ளவேயில்லை; சிலர் போலீஸ் அவ்வாறு திட்டம் தீட்டியதாக தப்பான கதையை சொல்லிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் பணய கைதியாக கொண்டு சென்றதாக உடான்ஸ் விடுகிறார்கள். என் இணையதளத்தில் இந்த கேள்வியை எழுப்பிய பிறகு வந்த பதில்கள் இன்னமும் சுவாரசியம். சந்துருவை போலிசிடம் இருந்து காப்பாற்றத்தான் அவ்வாறு கடத்தினான் என்கிறார்கள் சிலர்; ஒரு நண்பர், சந்துருவை அழைத்து சென்று, இறுதியில் அவன் கையால் குண்டுவாங்கி இறந்து, அதன் மூலம் அவனை போலிஸ் பிரச்சனையிலிருந்து காப்பாற்றி, அந்த ஆட்டுக் குடும்பத்தையும் நல்லவனான சந்துருவிடம் ஒப்படைப்பதுதான் வுஃல்பின் நோக்கம் என்று அழகாக திரைக்கதை எழுதுகிறார். துரதிர்ஷ்டவசமாக கதையில் இரண்டு முறை வுல்ஃப் சந்துருவை கட்டிப்போட்டு விட்டு தன் போக்கில் போய்விடுவதுதான் இந்த திரைக்கதையுடன் ஒத்துவரமாட்டேன் என்கிறது.  ஒரு சொதப்பல் திரைக்கதையை நியாயப்படுத்த, இந்த  ̀நல்ல சினிமா ரசிகர்கள்' இயக்குனரைவிட அதிக பிரயத்தனம் எடுத்துக் கொள்வது எனக்கு புரியவே இல்லை. 

தன் மருத்துவ தேவைக்காக அழைத்து சென்றான் என்று சொன்னாலாவது பொருள் உண்டு. அப்படி சற்று மேலான அபத்தமாக காரணம் சொல்லக்கூட வழியில்லாமல், வுல்ஃப் அந்த பையனை மருத்துவத்திற்கு கூட பயன்படுத்துவதில்லை. பெரிய கல்லால் அடிவாங்கி, மிதிக்க மிதிக்க மயங்கிய பிறகும் கூட, ஆப்பரேஷன் ஆன உடம்பிற்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. ஆகையால் கதையின் அடிததளமே மாபெரும் தகறாரு; அடித்தளமே இல்லை. அந்தரத்தில் சீட்டுமாளிகையாக கதை கட்டப்பட்டுள்ளது. படம் தத்துவரீதியாக பாவனை செய்துகொள்ளும் ஓநாய் X ஆட்டுகுட்டி என்ற முரணுக்கும் சந்துரு பயன்படுத்தப்படவில்லை; கதையின் நோக்கமாக உள்ள காரியத்திற்கும் தேவையில்லை. மிஷ்கினை ஆபரேஷன் செய்த ஆரம்ப காட்சியோடு அந்த கதாபாத்திரத்திற்கு வேலை முடிந்து, பின் கதைக்கு சம்பந்தமில்லாமல் படம் முழுக்க சுற்றிக்கொண்டு இருக்கிறது. 

கதையில்  வேறு என்ன என்று பார்த்தால், அந்த அம்மா அப்பா ஆடுகளை, குழந்தை ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவது. மிஷ்கின் கண்ணிமைக்காமல் சொல்லும் அந்த கதையின் படி, இந்த எட்வர்ட் ஆட்டுக்குட்டி குறுக்கே வந்து மாட்டிக் கொண்டு  இறந்து போகிறது; ஏவி செய்யப்பட்ட கொலை அல்ல; தெரியாமல் நடந்த கொலை. தம்பா கும்பலுக்கும் அந்த ஆட்டுக் குடும்பத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனையே இந்த ஓநாய் மனம் திருந்தி அவர்களுடன் தங்குவதுதான். கதையிலேயே அந்த குடும்பத்தை பார்த்துகொள்ள பாரதி அக்கா, இரவில் கூட பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் கண்தெரியாதவர்கள் சமூகமே இருக்கிறது. அவர்கள் வாழ்வதற்கு கண் தெரியாததை தவிர  வேறு  பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. விபத்து போன்ற சம்பவத்தில் மகன் இறந்த பிறகான  வாழ்க்கையில் இருக்கும் தீவிர பிரச்சனை இந்த ஓநாய்தான். இந்த ஓநாய் கூட இருப்பதால்தான்,  ̀வேட்டைக்கு வா வேட்டைக்கு வா' என்று வற்புறுத்தும் தம்பா அந்த குடும்பத்திற்கும் பிரச்சனை தருகிறான். இந்நிலையில் போலிசில் சரணடைவதுதானே அவன் அந்த குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் தராமல் முடிப்பதாக இருக்கும்? தம்பாவின்  ̀வேட்டைக்கு வா.. வேட்டைக்கு வா..' நிர்பந்தத்தில் இருந்தும் தப்பிக்கும் வழியும் அது. பதினாலு கொலைக்குற்றங்களை செய்தவன், மனம் திருந்திய உடன்  நார்மலாக செய்வதும் போலிசில் சரணடைவதுதானே.

பிரச்சனையுடன் எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு ஆட்டுக்குட்டியை  ஏற்கனவே கொன்றது போக, தேவையில்லாத அலைக்கழிப்பில் அந்த ஆட்டுக்குட்டி ஃபேமிலியில் ஒவ்வொருவராக பலி கொடுத்ததிலும், குழந்தையையும் சாவுக்கு அருகிலான ட்ரௌமாவிற்கு கொண்டுபோனதிலும் எந்த நியாயமும் இல்லை. ஒருவேளை இவ்வாறு புத்தியில்லாமல் தன்கூட இருப்பவர்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதுதான் ஓநாயின் தன்மை என்று இயக்குனர் சொல்ல விரும்பினாரோ என்னவோ! 

பார்வையாளர்களுக்கு அந்த  ̀காப்பாற்றுதலை' காரணப்படுத்துவதற்காக, வுல்ஃப் தம்பாவை தாக்கி மூத்திரப்பை சுமக்க வைப்பதாகவும், அதனால் அவன் வுல்ஃப் மட்டுமின்றி அந்த குடும்பத்தையே அழிக்க நினைப்பதாகவும் கதை புனையப்படுகிறது. படத்தின் மற்ற பிரச்சனைகள் அளவுக்கு இது  தர்க்க சொதப்பல் இல்லாமல் ஒத்து வரும் ஒரு காரணம்தான்; ஆனால் இது  முன்கதையின் மூலம் ஏற்பட்ட இந்த குடும்பத்துக்கு பின்னால் தீவிரமாக ஏதோ ஒரு கதை இருக்கிறது என்பதான எதிர்பார்ப்பை ஒன்றுமில்லாமலாக்குகிறது.

சந்துருவும் கதையில் இல்லாமல், மிஷ்கினும் சரணடைந்துவிட்டால் என்னய்யா படம் இருக்கிறது என்பது நியாயமான கேள்வி. இந்த மாதிரி பிரச்சனைகள் இன்றி, அந்த குடும்பத்தையும் சந்துருவையும் வாசிப்பில் விலக்க முடியாதபடி கதையோடு பிணைப்பதுதான் நல்ல திரைக்கதையாக இருக்க முடியும்; குறைந்த பட்சம் ஒரு கதையாகவே தகுதி பெறமுடியும். இந்த படத்தின் கதையாடல் கதையே இல்லாமல்  செத்து கிடக்கிறது என்பதுதான் மேலே உள்ள வாதம். 

மீண்டும் ஓநாய்-ஆட்டுக்குட்டி பிரச்சனைக்கு வருவோம். வுல்ஃப் என்ற பட்டப்பெயர் கொண்ட மனிதன், ஃப்ளாஷ்பேக் கதையின் படி, படம் தொடங்கும் முன்னரே நல்லவனாக மாறிவிட்டான். ஆனால் பார்வையாளர்களுக்காக ஓநாய்த்தனமாக காட்டப்படுகிறான். தன் உயிரை காப்பாற்றியவனின் உயிரை பற்றி கவலைப்படாமல் கடத்துகிறான்;  யாரோ ஒரு தம்பதிகளை துன்புறுத்தி காரில் தப்பிக்கிறான்; 'அவன் துப்பாக்கி வச்சிருக்கான்'  என்றாலே பயப்படும் ஒரு வயோதிக போலிஸ்காரரை தேவையின்றி காலில் சுடுகிறான்.  கோவில் வாசலில் அந்த அம்மாவிற்கு பிச்சை போட சந்துருவை அனுப்புவதே தம்பாவின் ஆட்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான்; இவ்வாறு தனக்கு உதவிய ஆட்டுக்குட்டியை பலிகடாவாக்குகிறான். 

தம்பாவின் ஆட்கள் ஊரெல்லாம் துப்பாக்கியுடன் தேடிக்கொண்டிருக்க, இந்த அம்மாவை பார்க்க இந்த இடத்திற்குதான் வுல்ஃப் வருவான் என்று தெரிந்தும், இங்கு மட்டும் இரண்டு சொத்தையான ஆட்கள் கத்தியுடன் கண்காணிக்கிறார்கள்.  சந்துருவின் கழுத்தில் ஒருவன் கத்தி வைத்திருக்கும்போது, தன் உயிரை காப்பாற்றியவனை பற்றி கவலையே படாமல் வுல்ஃப் அந்த அம்மாவிடம் பேசப்போகிறான். இந்த இடத்தில் தம்பாவின் அடியாட்கள் மனதிலும் ஒரு ஆட்டுக்குட்டி இருக்கிறதாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ என்னவோ! அந்த ஆளே அனாவசியமாக ஒரு ஆட்டுகுட்டியை  கொலை செய்யவேண்டாம் என்று முடிவெடுத்து சந்துருவின் கழுத்தை கீறவில்லை. இவ்வாறாக பின்கதைக்கு முரணாக கொடிய ஓநாயாக மிஷ்கின் காதாபாத்திரத்தை படத்தின் தொடக்கத்தில் சித்தரித்துவிட்டு, எந்த தர்க்கமும் கதைத்திருப்பமும் இல்லாமல் திடீரென்று அவன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். 

கடவுள் போல இருக்கும் அந்த அம்மாவும் சந்துருவை கடத்திக் கொண்டு செல்வதையும், காலில் சுடப்பட்ட போலிஸ்காரரை கொடூரமாக நடத்தியே கூட்டிசெல்வதையும் அனுமதிக்கிறார். வலி வேதனையில் அவரது முனகல்கள் அந்த அம்மாவிற்கு கேட்டிருக்கும்தானே.  'எட்வர்ட் தண்ணி குடுப்பா' என்பவர் அந்த போலிஸ்காரரை  ̀ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போப்பா' என்று சொல்வதில்லை. காதருகில் கொடுமைகள் நடக்கும்போது கேளாவிருந்து, சொந்த பிரச்சனைக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவிகளை, தனது சுயநலத்திற்காக கொடுமை படுத்துவதை அனுமதிப்பவர் எப்படி தன் மகனை கொன்றவனை மன்னிக்கும் கடவுள்தன்மை கொண்டவராக இருக்க முடியும்? 

மேலும் இந்த வுல்ஃப் ஆதியிலாவது ஒரு ஓநாயாக இருந்தானா? ஒரு கொடூரமானவனிடம்  அடியாளாக வேலை பார்க்கும் பெய்டு கில்லர் அதுவரை நரிகளை மட்டுமேவா கொன்றுவந்திருக்க முடியும்? நரிகளை மட்டுமே கொல்லும் வேலையை விட்டுவிடுபவனுக்கு, பின்னால் அப்பாவிகளை துன்புறுத்துவதில் பிரச்சனை எதுவும் இல்லையே!  அல்லது அந்த பார்கிங்லாட்டில்தான் தனது முழுமையான மனம் திரும்புதல் முடிவை எடுக்க இருந்தானா?

ஓநாய் எதற்காக குறுக்கே வந்த ஆட்டுக்குட்டியை, தெரியாமல் முதன்முறையாக கொன்றதற்காக வருந்த வேண்டும்? ஆட்டுக்குட்டியை தெரிந்தே கொல்வதை இயல்பாக கொண்டிருப்பதுதானே ஓநாய்த்தனம்! ஓநாய் தன் கடமையை தெரியாமல் செய்யும் முதன் முறையிலேயே தரிசனம் பெறுவதும் மனம் திரும்புவதும் என்னவிதமான கதை! ஒரு ஓநாய் தன் ஆட்டுக்குட்டி தன்மையை கண்டுணர்வது என்பது எவ்வளவு தீவிரமான தருணமாக ஒரு கதையில் இருக்க வேண்டும்! ஒரு அச்சு பிச்சு ஃப்ளாஷ்பேக் கதையில், ஒட்டாத மிகை நடிப்பில் அவ்வளவு அபத்தமாக சொல்லப்படுவதற்கு ஏன் இத்தனை பேர்கள் பாராட்டுகிறார்கள்? கதையில் ஓநாயே இல்லையே!

தத்துவ பிரச்சனைகள், கதை சார்ந்த பிரச்சனைகளை விட்டு, ஒரு வெகுஜன திரில்லராக இது வெற்றி பெற்றிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. திரில்லர் என்பது தொடர்ந்து கொலைகள் விழுவதோ, துப்பாக்கி வெடிப்பதோ அல்ல; தொடர்ந்து நம் எதிர்பார்ப்பை கிளப்புவதும், சீட் நுனியில் உட்கார்ந்திருக்கும் விறுவிறுப்பை கடைசி காட்சிவரை தக்கவைப்பதுமே ஆகும். படத்தில் நமக்கு இடைவேளை வரும் வரை ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரே எதிர்பார்ப்பு, கதையில் ஏதோ தீவிரமாக சந்துருவை கடத்தும் சம்பவத்திலும், அந்த குடும்பத்தின் பின்னணியிலும் இருக்கிறது என்பதுதான். எல்லா எதிர்பார்ப்புகளும் மிஷ்கின் சொல்லும் ப்ளாஷ்பேக் கதையில் புஸ்ஸென்று ஆனபின்பு, பாபா படத்தின் க்ளைமாக்ஸ் அளவிற்கு நம் எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது. 

உண்மையிலேயே இது ஒரு சுவாரசியமான வெகுஜன திரில்லராக இருந்தால் அது தன்போக்கில் ஹிட்டாகியிருக்கும். மக்களின் ரசனையின்மையை  திட்டவேண்டிய அவசியமே இருந்திருக்காது. வெகுமக்களை கவராத ஒரு படத்தை ஊடகங்கள், ஆர்வக்கோளாறு கொண்ட இணைய எழுத்தாளர்கள், பலூன் வண்ணத்தை பார்த்து மயக்கியவர்கள், உண்மையிலேயே படத்தின் ஒரே உன்னதமான இளையராஜாவின் இசைக்கு ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு சென்சேஷன் அலையை உருவாக்கி, தாங்களும் அதில் மிதந்து படத்தை இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 

படத்தில் குறியீடுகள் பொங்கி வழிவதாக என்னவெல்லாமோ வியாக்யானம் சொல்கிறார்கள். முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும். சினிமா,  நாவல், சிறுகதை போன்ற ஒரு கதையாடல் சார்ந்த கலையில் கதைதான் முதலில் முக்கியமானது. கதை தீவிர இலக்கியமாக மாறும் போதுதான் குறியீடு பற்றி பேசுவதில் அர்த்தம் உண்டு. கோபால்ஜி உபன்யாசம் மாதிரி   ̀அப்படி பார்க்க கூடாது,  இதெல்லாம் குறியீடு' என்பது உளரல்.  கதை என்பது நேர்கோட்டில் இல்லாமல் இருக்கலாம்; சிதறலாக துண்டு துண்டான உளரலாக இருக்கலாம்; கதை என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் எதுவும்  இல்லாமல் கூட ஒரு கதை இருக்கலாம்; அதிலும்  கதையாடலைத்தான் நாம் முக்கியப்படுத்த வேண்டுமே தவிர குறியீட்டை அல்ல. கதை எந்த பிரச்சனையும் இன்றி தன்னை நிறுவிய பிறகுதான், அதில் உள்ள குறியீடுகளை பற்றி பேசமுடியும். ஒருவேளை கதையல்ல, குறியீடுகள்தான் படம் என்றால்,  நம்மால் ஒரு கதாதர்க்கமாக சிந்திக்கவே முடியாமல், கதையை மனதில் உருவாக்கவே முடியாமல் படிமங்களாக மட்டும் காட்சிகள் நகர்ந்திருக்க வேண்டும். இரண்டு வருடங்கள் முன்னால் வந்த  `Tree of life' படம் இதற்கு ஒரு உதாரணம்.  மிக தெளிவாக ஒரு சாதரண தட்டை யதார்த்த கதையை நேர்கோட்டில் சொல்லும் போது இந்த குறியீடு பேசுவது அபத்தம் மட்டுமல்ல, ஏமாற்று வேலை. மேலும் பலர் சொல்லும் குறியீடுகள்  பொருந்துவதில்லை என்பதுடன், குறியீடுகளின் அர்த்தங்கள் ஒன்றுக்கு ஒன்று அபத்தமாக முரண்படுகிறது. 

யோசிக்க யோசிக்க ஒரு கட்டுரையில் அடக்க இயலாதபடி முடிவே இல்லாமல் இந்த படத்தின் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இவ்வளவு சொதப்பலான கதையம்சம் கொண்ட படத்தை எதற்காக இத்தனை பேர் பாராட்டுகிறார்கள்?  காமிக்ஸ் என்கிறார்கள்; விவிலியத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்; அதிகாரம் பற்றியது, சாதாரணன் அதிகாரத்துக்கு எதிராக எதிர்வினையாற்றுவது என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். இவர்கள் பொய்யாக பாராட்டவில்லை என்பதுதான் அதிக கிலியை உண்டு பண்ணுகிறது. தமிழ் சினிமாவில் முப்பத்தி ஐந்து வருடங்களாக தடம்பதித்துள்ள ஒரு மூத்த இயக்குனர் "I am happy that I have lived to watch this movie"  என்று சொன்னதாக நண்பர் ஒருவர் சொன்னார். படத்தில் ஒரு மயக்கம் இருப்பது உண்மை என்றாலும், கருத்து சொல்லும் முன், கருத்தை தனக்குள் உருவாக்கும் போது யோசிக்க மாட்டார்களா? இத்தனை உலகப்படங்கள் பார்த்து வருபவர்களுக்கு எதுவுமேவா நெருடவில்லை. பாட்டு, காமெடி ட்ராக் போன்ற தமிழ் சினிமாவின் வழமைகள் இல்லாததும், மிஷ்கினின் அடையாளமான மஞ்சள் புடவை இல்லாததும் ஒரு படத்தை  ̀உலகத்தர'மானதாக்கி விடுமா? இந்த  ̀இல்லாதது' என்பது எப்படி ஒரு படத்தின் சிறப்பாக முடியும் என்பது புரியவில்லை. கதையோடு ஒட்டிய உணர்வுகளை மிகைப்படுத்தும் வழமையான தமிழ் சினிமா மிகைநடிப்பை விட, கதாபூர்வமாக ஒட்டாத உணர்வுகளை வித்தியாசமாக மிகைப்படுத்தும் இப்பட காட்சிகள் ஏன் கொண்டாடப்படுகிறது? சமரசம் செய்யாமல் எடுத்திருக்கிறார், அதனால் பாராட்ட வேண்டும், குறை கண்டுபிடிக்க கூடாது  என்கிறார்கள். சமரசம் செய்யாமல் எதை அளித்தாலும் நாம் ஏற்கவேண்டுமா? சமரசம் செய்யாமல் எடுத்ததாக நினைப்பதால், குறைகளை கண்டுகொள்ளாமல் நாம் சமரசத்துடன் பார்க்கமுடியுமா? 

படத்தை பாராட்டுவதன், பாதுகாப்பதன் உளவியலை விட,  மிஷ்கின் ஏன் இப்படி படத்தை எடுத்தார் என்பது பிடிபடவே இல்லை. படத்திற்காக உழைத்திருக்கிறார், இடர்களை எதிர்கொண்டிருக்கிறார், யோசித்திருக்கிறார்; இளையராஜாவை பிடித்து குறிப்பிட்ட கருப்பொருள்களை கொண்ட இசைத்துண்டுகள் உருவாக வழி செய்திருக்கிறார்; பேட்டிகளில் அழகாக பேசுகிறார். ஆனால் ஏனோ திரைக்கதையில் இவ்வளவு சொதப்பியிருக்கிறார். இதற்கு முன்பு தனது வேறு எந்த படத்திலும் இந்த அளவு சொதப்பியதாக தெரியவில்லை. ஆனால் இந்த படத்தை மிஷ்கினின் உச்ச சாதனையாக அனைவரும் கோஷ்டிகானமாக பாராட்டும் நிலையில், அவர் தன் உலகத்தரமான சொதப்பலை உணரவே போவதில்லை. 

Post a Comment

2 Comments:

Blogger ROSAVASANTH said...

சற்றுமுன் ஆரண்ய காண்டம் யூ ட்யூபில் பார்த்தேன். உலகப்படங்கள் என்கிற டிவிடி உலகில் இருந்து நகல் செய்யப்பட்ட போலி. இந்த படத்தை எவ்வாறெல்லாம் புகழ்ந்தார்கள் என்று நினைவு கூறும்போது, தமிழில் ஒரு போலிச்சினிமா சார்ந்த ஒரு மனநோய் உருவாக்கப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. படத்தில் பல லாஜிக்கல் பிழைகள் இருந்ததாக ராஜன்குறை ஃபேஸ்புக்கில் சொன்னதை வாசித்திருந்தேன்; அப்போது படம் பார்த்திராததால் சீரியசாக வாசிக்கவில்லை; இப்போது நினைவில் இல்லை.

படத்தின் பல பிரச்சனைகளை மீறி அந்த தந்தைக்கும் மகனுக்கான உறவு படத்தில் கவித்துவமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ̀நீயும் என்ன அப்படி சொல்லாதடா வெல்லக்குஞ்சு' திரைக்கதை நம் உணர்சிகளை தீண்டும் இடம். இந்த வகையில் நம் சினிமாவையும், நம் சமூகத்தையும் ஆரண்ய காண்டம் தொட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் ̀ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' முற்றிலும் போலியானது என்பதுதான் என் பார்வை. இதுவரை எழுதியவைகளில் இன்னமும் படத்தை நான் விமர்சிக்கவே தொடங்கவில்லை. படம் எப்படி ஒரு உருப்படியான திரைக்கதை கொண்ட திரைப்படமாக தேறவில்லை என்பதிலேயே நின்றுவிட்டேன்; அதுவே இவ்வளவு நீண்டு விட்டது. ஒருவேளை தேறியிருந்தால் படத்தை விமர்சிப்பதில் இறங்கியிருக்கலாம்.

ஆனால் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ஒரு பேரனுபவத்திற்கான இசையை இளையராஜா அளித்திருக்கிறார். 10 ஆண்டுகள் கழித்து, இப்போது 80களின் பல பின்னணி இசைகளை நாம் பேசுவது போல உட்கார்ந்து வியந்து பேசலாம்.

ஆராண்ய காண்டம் படத்தில் இசையே இல்லாமல் மொக்கையாக காட்சி நகர்ந்து கொண்டிருப்பதை நம்மூர் ̀உலகப்பட ரசிக' மொண்ணைகள் பாராட்டலாம்; அதிலும் இசை ஒலிக்கும் இடங்களிலும் அப்பட்டமாக சுட்டு போட்டிருப்பதை வாய் பிளந்து பாராட்டலாம். (ஒரு இடத்தில் சம்பத் மாடியில் தாவும் காட்சியில் விவால்டியின் வயிலின் அப்படியே சிடியிலிருந்து ஒலிக்கிறது; துரத்தல் காட்சிக்கு இப்படி ஒரு பிட்டை நேரடியாக சுட்டதே படத்தை உலகதரமாக்கிவிடுகிறது.) இயலாமையையும், வறட்சியையும் சரியான கலாயுக்தியாக போற்றும் முட்டாள்கள் விமர்சகர்களாக கருதப்படும்வரை, செழிப்பும், வளமும் குப்பையில் போடவேண்டிய சமாச்சாரங்களாகத்தான் தெரியும். இந்த கொடூரமான முரண்நகைகளை கடந்து செல்வது, தமிழ் சூழலபத்தங்கள் உருவாக்கியிருக்கும் ஏகப்பட்ட சாவால்களில் முக்கியமானது.

11/01/2013 5:34 AM  
Blogger ROSAVASANTH said...

நான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை விமர்சிக்கவே இல்லை; விமர்சனம் என்பது நாம் உள்வாங்கிய பிரதியை கருத்தியல் கொண்டு அணுகுவது. ஒரு பிரதியாக இந்த படம் தேறமாட்டேன் என்கிறது என்பதே என் பிரச்சனை. அதை மட்டுமே முன்வைத்திருந்தேன்.

நண்பர் @equanimus தொடர்ந்து என் கருத்துக்களுக்கு எதிர்வினை செய்து வருகிறார். நான் எழுப்பிய எல்லா கேள்விகளையும் அவர் அணுகவில்லை, அணுகியவற்றிலும் நிறைவாக பதில் சொல்லவில்லை என்று நான் நினைத்தாலும், நான் எதிர்கொள்ள தகுந்த ஒரே எதிர்வினையாக அவர் எழுதியதை கருதுகிறேன். இதை மேலும் மேலும், எழுதி தீர்ப்பதற்கு ஆகும் நேரத்தை இந்த படத்திற்கு செலவளிக்க மனம் இல்லாததால், பேசி தீர்க்கலாம் என்று நினைக்கிறேன்.

யாரேனும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தால் நலம்; அல்லது என் வீட்டில் எனக்கு வசதியான ஒரு நாளில் சந்திக்கலாம். சில நண்பர்களிடம் பேசுகிறேன்.

என் பார்வையில்

1. fableஆக பார்க்கவேண்டும் என்று @equanimus சொல்வதை ஏற்கமுடியாது, அவ்வாறு பார்ப்பதும் படத்தை காப்பாற்றவும் இல்லை என்பதை விரிவாக விளக்கமுடியும்.

2. கதையின் பல பிரசனைகளுக்கு இன்னமும் பதில் இல்லை; பதில் சொன்னவைகளும் நிறைவாக இல்லை. ஒருவேளை இந்த பிரச்சனைகளுக்கு பதிலாக ஒரு வாசிப்பை செய்யகூடுமெனினும், அது படத்தை சிறந்ததாக மாற்ற எந்த வாய்ப்பும் இல்லை.

3. ஓநாய்-ஆட்டுக்குட்டி பிரச்சனையாக @equanimus வாசித்து சொல்வதிலும் பல பிரச்சனைகள் உள்ளன; மேலும் ஓநாய் X ஆட்டுக்குட்டி முரண்பாடு தரும் fableஇன் அர்த்தங்களும் மிக சப்பையானது.

ஒரு தேறவே தேறாத படத்திற்கு இதையெல்லாம் விவாதிப்பதில் அர்த்தம் இல்லை; ஆனால் இந்த படத்தை ஒரு அரிய நிகழ்வாக காண்பது தமிழ் சூழலின் மிக முக்கியமான பிரச்சனை என்று கருதுகிறேன். அந்த பிரச்சனையை அணுவது என்ற வகையில் இந்த விவாதத்தை முக்கியமானதாக நான் நினைக்கிறேன். என் தரப்பை நிதானமாக விரிவாக விளக்க தயராக இருக்கிறேன்.

@equanimus சென்னையில் இருந்தால், மற்றவர்களும் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் கலந்துரையாடலாம்.
எனக்கு நேரத்தை உருவாக்கிக் கொள்வது பிரச்சனையில்லை. வேறு இடத்தில் யாரேனும் ஏற்பாடு செய்தால் நல்லது; அல்லது என் வீட்டிலேயே சந்திக்கலாம். அடுத்த 1 மணி நேரத்திற்கு பிறகு (சத்தியமாக) ட்விட்டருக்கு இனி வரப்போவதில்லை; அதனால் கலந்துரையாடலை ஏற்பாடு செய்பவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யவும்; என் பதிவில் பின்னூட்டமிட்டாலும் சரி.

11/05/2013 12:27 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter