ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, March 10, 2011

மீனவர் ராஜா முகமது.

கடந்த மாதம், 'இலங்கை கடற்பரப்பில்' மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், 'ஈழத்து மீனவர்களால் சிறைபிடிக்கப் பட்ட' செய்தியை நாம் அறிவோம். முதலில் 106 மீனவர்களும், தொடர்ந்து இன்னமும் 22 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டதாக செய்தி வந்தது. இந்த சிறைபிடிப்பிற்கு உந்துதலாகவும், பின்னியக்கும் சக்தியாகவும் இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இருந்ததாக பரவலாக நம்பப் படுகிறது. செய்தி வாசிக்கும் பொது மனத்தால் இதில் அதிகம் கவனம் செலுத்தப் படாத செய்தி, சிறை பிடிக்கும் போது தப்பிக்க முயன்ற மீனவர்களின் படகுகள் மீது, பெட்ரோல் வெடிகுண்டுகளை இலங்கை மீனவர்கள் வீசி தாக்கியது.

இந்த செய்திகளின் பின்னால், நாம் கவனத்திற்கு வரவே வராத சம்பவம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜா முகமது என்பவர், பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் சிக்கி, பாதிக்கப்பட்டு, தீவிர தீக்காயங்களுடன் படுக்கையில் இன்னமும் போராடி வருவது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பது போன்ற மற்ற செய்திகளில் இவர் மறக்கப்பட்டு விட்டார்.

அரசு தரப்பில் அவருக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக செலவு செய்து, மேலும் செலவு செய்து, அவரை கவனிக்கும் வசதியில்லாமல் வேறு ஒரு இடத்தில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

மீனவர்கள் கொல்லப்பட்டால் கிடைக்கும் நஷ்ட ஈடும், கவனமும் காயம் பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நடைமுறையில் பாதிக்கப்பட்ட ராஜாமுகமதை அவரது வீட்டில், அண்மையில் மீனவர் நிலை குறித்து அறியும் நோக்கத்துடன் பயணம் சென்ற நாங்கள், தோழர் ராமநாதன் உதவியுடன் சந்தித்தோம். அவரது நிலை மனதை உருக்கக் கூடியதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக (கேசட் காலியானதால்) வீடியோ எடுக்க இயலவில்லை. புகைப்படம் எடுத்ததுடன், அவரது பேச்சை அலைபேசியில் பதிவு செய்தோம்.




இந்த இடத்தில் குறைந்த பட்ச சரியான நியாயம் என்பது இலங்கை அரசு ராஜ முகமதிற்கு தேவையான மருத்துவ செலவுகளையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டதற்கான நஷ்ட ஈட்டையும் வழங்க வேண்டும். மேலும் அவரது ஒரு கை அசைக்க இயலாத நிலையில் இருப்பதால், அவர் மீண்டும் தொழிலுக்கு போக இயலுமா என்பதும் கேள்விக்குறியே. இதற்கான இழப்புத் தொகையையும் இலங்கை அரசு அளிப்பதே சரியான நீதியாக இருக்கும்.

நமக்கு வாய்த்த மாநில, மத்திய அரசுகள் இருக்கும் லட்சணத்தில் இப்படி ஒரு நியாயமும் நீதியும் கிட்டுவதற்கு முயற்சிக்கும் லட்சியக் கனவு கூட நாம் காண இயலாது. மத்திய அரசும் இதுவரை (நேரில் விசாரித்த வகையிலும்) எந்த உதவியும், இழப்பீடும் அளித்ததாக கேள்விப்பட்டது இல்லை. இந்நிலையில் தமிழக அரசை நோக்கி ராஜமுகமதிற்கு உதவுவதற்கு கோரிக்கை வைப்பதும், நிர்பந்திப்பதுமே நாம் முன்னெடுக்கக் கூடிய சாத்தியம் உள்ள செயல். தமிழக அரசு எவ்வளவு கையாலகாமலும், துரோக தன்மையும் கொண்டதாயினும், தன் அரசியல் சுய நலம் கருதியாயினும் பாதிக்கப்பட்ட மீனவர்க்கு உதவும் சாத்தியம் உள்ளது.

பாதிக்கப்படும் மீனவர்களுக்கு எல்லாம் நாம் உதவ நினைப்பது நடைமுறை சாத்தியமில்லாதது. மேலும் நம்முடைய அரசியல் செயல்பாடு இந்த அநியாயங்களுக்கு நீதி கிட்டுவதாகவும், அநியாயங்களை எதிர்காலத்தில் தடுப்பதாகவும் இருக்க வேண்டுமே தவிர, பாதிக்கப்பட்ட மீனவர் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி செய்வதாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.

ஆனால் சில பாதிக்கப்பட்ட ராஜா முகமதிற்கு இத்தகைய அரசியல் நிலைபாடுகளை விட வசதியுடையவர்கள் அளிக்கும் உதவி பயனுள்ளதாக இருக்கக் கூடும். ஆகையால் இந்த பதிவை வாசிக்கும் நல்ல மனம் கொண்டவர்கள் ராஜமுகமதிற்கு உதவ விரும்பினால் என்னையோ, மா,சிவக்குமாரையோ அணுகலாம்.

குறிப்பிட்ட அளவு நண்பர்கள் நிதியுதவி அளிக்க முன்வந்தால், நேரடியாக மீண்டும் ஜெகதாபட்டினம் சென்று, ராஜா முகமதின் துணையாரிடம் நிதியை அளிக்க முடியும். உதவுபவர்களின் விபரங்கள், அளித்த தொகை வெளிப்படையாக அறிவிக்கப்படும்.

உதவ விரும்புபவர்கள் என்னை அல்லது மா.சிவக்குமாரை தொடர்பு கொள்ள:

அலைபேசி எண்: 8489681589

மின்னஞ்சல்: rosavasanth at gmail dot com , masivakumar at gmail dot com

Labels: ,


Post a Comment

2 Comments:

Blogger காஞ்சி பிலிம்ஸ் said...

ரோசா எப்படி இருக்கின்றீர்கள் ? ஜப்பானில் நில நடுக்கம் என்றவுடன் உங்கள் நினைவு தான் வந்தது. நீங்கள் நலமா இருப்பீர்கள் என நம்புகிறேன்.

காஞ்சி பிலிம்ஸ்

3/16/2011 9:51 PM  
Blogger ROSAVASANTH said...

காஞ்சி ஃபிலிம்ஸ், நெடுநாட்கள் கழித்து சந்திப்பதில் மகிழ்ச்சி.

நான் ஜப்பானை விட்டு சென்னை செட்டில் ஆகி 5 வருடங்கள் ஆகப்போகிறது. அவ்வப்போது திரும்ப செல்வதுண்டு என்றாலும் இப்போது சென்னையில்தான் இருக்கிறேன். எல்லாம் நலம். நீங்களும் நலம் என்று நம்புகிறேன்.

3/17/2011 2:58 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter