ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, July 12, 2006

புரட்ச்சியாளன் ஜிதான்!

ஜிதான் முட்டி மெதராத்ஸி கீழே விழுந்த அந்த வரலாற்று கணத்திற்கு சில மணி நேரங்களுக்கு பின்னால், யதார்த்தமாய் பலருக்கும் தோன்றியிருக்க வேண்டிய விஷயத்தை, இப்போதுதான் உலகம் பேசத் தொடங்கியிருக்கிறது. முதலில் தான் எதுவுமே பேசவில்லை என்று சொன்னதை மாற்றி, இரண்டு நாட்கள் கழித்து, ஜிதானை இகழும் வார்த்தைகளால் தான் கேவலப்படுத்தி கோபமூட்டியதை மெதராத்ஸி இப்போது ஒப்புகொண்டுள்ளார்.

எரிச்சல் என்னவென்றால் ஒரு இரண்டு நாட்கள் தலையங்கங்களிலும், கட்டுரைகளிலும் ஜிதானை, மாபாதகம் செய்தது போல் உலகம் திட்டிக் கொண்டிருந்தது. அந்த காட்சியை பார்த்த அடுத்த சில நொடிகளிலேயே அல்லது திரும்ப திரும்ப அந்த காட்சியை பார்த்தபின்னாவது, மிக தெளிவாக ஒரு விஷயம் தெரியும். மெதாராத்ஸியை விலக்கிவிட்டு சாதாரணமாக நடந்து சென்ற ஜிதான் திடீரென திரும்பி மண்டையால் முட்டி கீழே தள்ளுகிறார். அந்த செயல் விளையாட்டின் முரட்டுத்தனத்தின் போக்கில் நடைபெற்றதல்ல. ஒரு கோபமூட்டுதல் இல்லாமல் அவ்வாறு திடீரென திரும்பி அடிப்பதற்கான உந்துதல் இருக்க வாய்பில்லை. ஜிதானின் அல்ஜீரிய வேர்கள் எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பாவில் வட ஆப்பிரிக்கர்கள் பற்றிய முன்னபிப்ராயமும், பல இனவாத சொல்லாடல்களும், அதை வைத்து மிக எளிதாய் ஒரு கோபமூட்டலை செய்ய முடியும் என்பதும் தெரியும். இது தெரிந்தும், ஜிதான் ஏன் முட்டினார் என்ற கேள்வியை எழுப்பாமல், விளையாட்டு நேயத்தை அழுக்கு படுத்திவிட்டதாக ஒரு பாட்டம் பத்திரிகைகளும் பார்வையாளர்களும் திட்டித் தீர்த்தனர். பொதுப்புத்தி என்பது எப்படி வேலை செய்யும் என்பதற்கான இன்னொரு உதாரணம் இது.

இப்போதும் மெதாரத்ஸி தான் 'dirty terorist' என்றோ, ஜிதானின் அம்மா/சகோதரியை கேவலப்படுத்தும் விதமாகவோ எதுவும் சொல்லவில்லை என்கிறார். இன்னும் வேறு எதையோ எல்லாம் அவர் சொல்கிறார். ஆனால் 'நாகரீகமான முறையில்' ஜிதானை கேவலப்படுத்தி கோபப்படுத்த என்ன வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று மட்டும் சொல்லவில்லை. அநாகரிக வசவு பற்றியே விலாவரியாய் விவாதிக்கும் போது, நாகரீகமான வசவை அவர் பிரயோகித்திருந்தால், அதை சொல்வதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

மெதாரத்ஸி அந்த கோபமூட்டும் வார்த்தைகளை சொன்ன விதத்தை கவனிக்க வேண்டும். வெளிப்படையாய் தெரியும் வகையில் இல்லாமல், கேமாராவில் சிக்காத வகையில், உதட்டசைவு கூட தெரியாத வகையில் பார்வையாளர்களின் பார்வையிலிருந்து மறைந்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். வெள்ளை குசும்பு என்பது இதுதான். மாறாக தனது உடனடி எதிர்வினையை காட்டிவிட்டு ஜிதான் காட்டிய காட்டும் மௌனம் மிகுந்த நாகரீக தன்மை வாய்ந்தது.

இந்த கால்பந்தாட்டத்தின் போது பல இடங்களில் இனவாதம் நேரடியாய் தலைகாட்டியிருக்கிறது. கருப்பு வீரர்கள் வந்து இறங்கும் போது கூச்சலிடுவதும், கேவலப்படுத்தும் வகையில் சைகைகள் காட்டுவதும் நடந்திருக்கிறது. இந்த காரணங்களால்தான் 'இனவாதத்திற்கு எதிராய் கால்பந்தாட்டம்' என்பதாக விளம்பரப்படுத்த பட்டு, இறுதி ஆட்டத்திற்கு முன்னால் ஜிதானும் கானவாரோவும் இணைந்து இனவாதத்திற்கு எதிராய் அறிக்கையும் விட்டார்கள். இப்போது என்னவகை சுயசோதனைகளில் எல்லோரும் இறங்குவார்கள் என்பதை அவர்கள்தான் வெளிகாட்டவேண்டும்.

இன்னமும் உண்மையாய் என்ன நடந்தது என்று தெரியாதுதான். ஒருவேளை ஜிதான் எதையாவது தவறாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டிருக்கலாம்தான். அப்படி நடந்திருந்தாலும் அவருக்கு அதற்கான நியாயம் இருக்கிறது. இனவாதத்தையும் தன்னை கேவலப்படுத்தும் செய்கைகளையும் முன்னரே அவர் எதிர்கொண்டிருக்கிறார். இதன் விளைவாக எந்த இடத்திலும் தான் கேவலப்படுத்தப் படலாம், கோபமூட்டப்பட்டு வேடிக்கை பார்க்கப்படலாம் என்ற உணர்வு அதீதமாய் இருக்கவும், அதன் காரணமாய் தவறாக எடுத்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடியாது. வெட்டியாக அறிவுரை மட்டுமே சொல்ல முடியும். மதிவண்ணன் இப்படிப்பட்ட ஒரு உணர்வு பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். ( தவறாக எடுத்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவர் மன்னிப்பு கேட்கலாம். ஆனால் அதற்காக தண்டைனையை அவர் ஏற்கனவே பெற்றாகிவிட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)

ஆனால் எரிச்சல் தருவது எதுவென்றால், ஜிதானை உடனடி எதிர்வினைகளால் திட்டி தீர்த்த பொது புத்தியும், தன் நிலையிலிருந்து செய்த அறிவுரைகளும்தான். தனது செயலுக்கான தண்டனையை பெற்ற பின்னரும், அதற்கான மிக பெரிய விலையை அளித்த பின்னரும் திட்டி தீர்த்தன. 8 ஆண்டுகளுக்கு முன்னால் ஜிதான் இன்னொரு தாக்குதலில் வாங்கிய சிகப்பு அட்டையை பற்றி பேசியது பொது புத்தியின் இன்னொரு கேவலமான பகுதியை காட்டுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அவருக்கு வந்த ஒரு முன்கோபம் (அதற்கான காரணம் எதுவாகவும் இருக்கட்டும்), இப்போது அவரை குற்றவாளியாக்க ஒரு ஆதாரமாகிறது. ஏற்கனவே தீக்காயம் பட்டவன் தீயிடம் இன்னுமல்லவா ஜாக்கிரதையாக இருப்பான் என்ற காமன் சென்ஸ் இவர்கள் பட்டறிவில் படவில்லை.

இப்படிப்பட்ட பொது புத்தியினிடையே, அதை ஏற்கனவே எதிர்கொண்ட, தன் கோபத்திற்கு கொடுக்க வேண்டிய பெரிய விலையையும் நன்றாக அறிந்து, போலி நாகரீக தளைகளால் தன்னை இன்னமும் அடிமைப்படுத்திக் கொள்ளும் உளவியலிலிருந்து விடுப்பட்டு, தனது அந்த நேரத்து எதிர்வினையை நிகழ்த்திய புரட்ச்சியாளன் ஜிதானிற்கு என் வணக்கங்கள்!

பிகு: புரட்சி என்று சொன்னது அவர் முட்டி மோதிய சம்பவத்தை அல்ல; ஆட்டத்தின் கணிப்புகளையும், போக்குகளையும் புரட்டிப் போட்ட அவரது அற்புதமான விளையாட்டை குறிக்கிறது.

Post a Comment

---------------------------------------

Monday, July 03, 2006

வயறு எரிகிறது!

30 மணி நேரமாகிவிட்டது; இரண்டு முறை தூங்கி எழுந்தாகிவிட்டது; இன்னும் தாங்க முடியவில்லை. ஏற்கனவே டீஜே எழுதிவிட்டாலும், செய்தி தாள்களில் பலர் ஒப்பாரி வைத்துவிட்டாலும், ஒரு வடிகாலாக இங்கே எழுதினாலும் கூட வயிற்றில் எரிச்சல் அடங்கும் போல தோன்றவில்லை.

ஜெர்மனியின் மூர்க்கத்தனமான அழுகுணி ஆட்டத்திடம் அர்ஜண்டைனா தோற்றதென்பது உதை பந்தாட்ட நடைமுறை மேலான கோபமாக மட்டும் இருந்தது. அர்ஜண்டைனா தன் அற்புத ஆட்டத்தை வெளிபடுத்தவாவது செய்தது. ஜெர்மனி வென்றது பெனால்டியில் என்பதும், அதுவும் மூர்க்கமான ஆட்டத்தின் போக்கில் கோலி ராபர்த்தோ மீது மோதி காயப்படுத்தி வெளியே அனுப்பிய காரணமாவது இருந்தது. பிரேஜில் ஆடியது மோசமான ஆட்டம். தன்னம்பிக்கையின் அளவுக்கு மீறிய அரகன்ஸாக இருக்கலாம்! முதல் பாதியில் முனைப்பே எடுக்காமல், கடைசி நிமிடங்களில் உச்ச பரபரப்பில் முயன்று ... என்னத்த சொல்ல! நினைக்க நினைக்க மனசு ஆறமாட்டேனென்கிறது. காசு கீசு வாங்கிவிட்டார்களா என்று கூட (உண்மையில் அப்படி நினைக்கவில்லை) சந்தேகம் வந்து போய் கொண்டிருக்கிறது.

அர்ஜண்டைனாவும் பிரசிலும் இறுதியில் மோதும், யார் வென்றாலும் சந்தோஷமே என்ற கலாபூர்வமான மனநிலையுடன் பார்க்கலாம் என்று இருந்த நப்பாசை தவிடு பொடியாகிவிட்டது. டீஜேயை போலவே இனி தொடர்ந்து பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஒரு வேளை பிரான்ஸ், குறைந்த பட்சம் ஜெர்மனியை தவிர யாராவது ஜெயித்தால் வயிற்றெரிச்சல் குறையலாம்.

அளவுக்கு மீறி தூக்கி வைத்த ரொனால்டினோ மொத்த ஆட்டத்திலும் கூட பெரிதாய் எதையும் செய்து காட்டாதது இன்னொரு விஷயம். இந்த தோல்வி மிக முக்கியமான பாடங்களை எல்லோருக்கும் கற்று கொடுக்கும் என்று நம்பலாம். வேறு என்ன சொல்ல, இதற்கு மேல் தத்துவ விசாரமாய் புலம்பி என்ன நடக்க போகிறது!

Post a Comment

---------------------------------------
Site Meter