ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, June 23, 2006

அருந்ததிக்காக! -1.

பாஸ்டன் பாலாஜி 'china is democratic' என்று அருந்ததி ராய் சொன்னதாக தலைப்பிட்டு எழுதிய பதிவின் ஊடாக, அருந்ததி அமி குட்மேனுக்கு அளித்த பேட்டி, மற்றும் சில துணுக்கு செய்திகள், வஜ்ரா சங்கர் எழுதிய ஒரு வழக்கமான வெகுளி முகம் காட்டும் அயோக்கிய பதிவு ஆகியவற்றை பார்த்தேன். வஜ்ரா என்ன எழுதுகிறார் என்பது பற்றி எனக்கு எந்த பொருட்டும் கிடையாது. அவரை ஒரு மனிதனாகவே நான் மதிப்பதில்லை. பாஸ்டன் பாலாஜியின் (அரசியல்) கருத்துக்களையும் கூட ரொம்ப சீரியசாய் எடுத்துக் கொள்வதில்லைதான் என்றாலும், அவரை நிச்சயம் ஒரு நல்ல மனிதராய் மதிக்கிறேன்; அண்மைக் காலமாய் நல்ல நண்பராகவும் கருதுகிறேன். அந்த வகையில் அவர் எழுதியதற்கு எதிர்வினை வைக்க என் தனிப்பட்ட பார்வையிலான தகுதியை தருவதாலும், நான் மதிக்கும் இன்னொரு நண்பர் ஸ்ரீகாந்தும் ஏதோ எழுதியிருப்பதாலும், எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் மிகவும் மதிக்கும் அன்பு வைத்திருக்கும் தோழி அருந்ததிக்காக இந்த பதிவை எழுத வந்தேன்.


இவ்வாறாக தொடங்கி கிட்டத்தட்ட பாதி பதிவை நேற்றே எழுதிவிட்டு, என் பின்னூட்டத்திற்கு பாஸ்டன் பதில் தருவதற்காக காத்திருந்து, பதிவை ஊர வைத்திருந்தேன். பாஸ்டன் தலைப்பிட்டு, பதிவினுள்ளே 'மொழி பெயர்த்து தமிழில் மேற்கோள் காட்டியுள்ள' சீனா குறித்த வரிகளை அவர் அளித்துள்ள சுட்டிகள் எதிலும் படிக்க முடியவில்லை. குறிப்பாக பேட்டியில் படிக்கவில்லை. மிக மிக நிச்சயமாக அருந்ததியின் எந்த எழுத்துக்களிலும் அதை படிக்க முடியாது. அப்படி எதையுமே அவர் எழுதியதில்லை என்பதை, அந்த வரிகள் அவருடைய பாணியில் இல்லை என்பதை அருந்ததியின் ஒரே ஒரு கட்டுரையை படித்தவர் கூட உணர முடியும். அதனால் அது குறித்து விளக்கம் கேட்டிருந்தேன். பாஸ்டன் பாலாஜி ஏதோ கூட்டத்தில் கலந்து கொண்டு, ஒரு 'தமிழ் வலைப்பதிவராய்' கேள்வி கேட்டு, தனக்கு கிடைத்த பதிலை, தான் புரிந்துகொண்ட விதத்தில் மனதில் வாங்கி, தன் வார்த்தைகளில் பதிவில் போட்டது என்பதாக அதை எடுத்து கொண்டிருந்தேன். இந்த நிச்சயமின்மை காரணமாக இதை எப்படி வாசிப்பது என்று எனக்கு குழப்பம் இருந்தது. மற்ற யாருக்கும் அப்படி ஒரு குழப்பமே வரவில்லை; அப்படி ஒரு குழப்பத்தின் தேவையே இருக்கவில்லை. முட்டாள்தனத்தை பெருமையாய் அறிவிக்கும் கூட்டு உளவியலின் போக்கில், எல்லோரும் பாலாஜி எழுதியதை உண்மை என எடுத்துக் கொண்டு (அதை முட்டாள்தனம் என்று சொல்லவில்லை) அருந்ததியை திட்டி கொண்டிருக்கும் போதும், தான் எழுதியது ஒரு பகடிதான் என்று அறிவிக்கும் அவசியம் பாலாஜிக்கு தோன்றவில்லை. (பின்னர் சொல்லலாம் என்று நினைத்திருக்கலாம், ஆனால் அப்படி நினைத்தாரா என்பதும் தெளிவாய் தெரியவில்லை.) இப்போது பலாஜி தெளிவாக்கிய பின்பு ஏற்கனவே (அருந்ததி அப்படி சொன்னதாக எடுத்துக் கொண்டு, அவர் பேச்சில் வெளிபட்ட Wit புரியாமல் மற்றவர் பேசுவதாக) எழுதிய பத்திகளை நீக்கியிருக்கிறேன்.

அருந்ததியின் முதல் எழுத்துக்களில் இருந்து அவர் எல்லாவகை அரசு அதிகாரம் பற்றியும் பேசி வருகிறார். அவர் சீனா பற்றி அத்தனை இடங்களில் பேசியிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்டுகளை பற்றி முதல் நாவலிலிருந்து பேசி, கம்யூனிஸ்டுகளிடம் இருந்து திட்டு வாங்கி வருகிறார். மார்க்சியத்தையும் ஒரு மதமாக பார்பதாக தன் பேட்டிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பேசியிருக்கிறார். இந்த நேர்காணலிலேயே நதிகளை இணைக்கும் திட்டத்தை ஒரு Stalinist scheme என்கிறார். புத்திசாலித்தனம் கொஞ்சம் உள்ள எவருக்கும் இப்படி சொல்லும்போது Stalinist scheme என்பதை எதிர்மறையாக குறிப்பிடுகிறார், (சீனா உட்பட) எல்லா ஸ்டாலினிச அமைப்பின் மீதும் அவருக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது எதையுமே ஒழுங்காய் படிக்காத, அல்லது படித்தாலும் அதை கண்டு கொளாமல், வழக்கமாய் கம்யூனிஸ்டுகளை கிண்டலடிக்கும் அல்ப அணுகுமுறையில், சீனாவை பற்றி அவர் எப்படி பேசக்கூடும் என்று கற்பனை செய்து பாலாஜி ஒரு பதிவு எழுதுகிறார். படித்து விட்டு ஸ்ரீகாந்த் சீனாவின் three gorges dam பற்றி அவர் என்ன கூறக்கூடும் என்று புத்திசாலித்தனமாக வியக்கிறார். எதற்காக வியக்க வேண்டும்? அந்த பின்னூட்டம் எழுத, மீண்டும் வந்து வந்து மற்ற பின்னூட்டங்களை படிக்க என்று இந்த பதிவு தொடர்பாக செலவழிக்கும் நேரத்தில், பத்தில் ஒரு பங்கை செலவிட்டு கூகுளில் தேடினால், அருந்ததி என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்துவிடும். அருந்ததி அணைகள் பற்றிய தனது முதல் கட்டுரையிலேயே சைனாவை பற்றி பேசியதாக எனக்கு ஞாபகம். இப்போது அதை மீண்டும் படிக்கவில்லை. இது தவிர உண்மையிலேயே ஆர்வமிருந்தால், ஸ்ரீகாந்தும் மற்றவர்களும் இணையத்தில் தேடிகொள்ள வேண்டும். நிச்சயமாய் கிடைக்கும் என்று தேடாமலே நான் சொல்கிறேன்.

அருந்ததி இந்திய ஜனநாயம் பற்றி பேசிய விஷயத்துக்கு வருவோம். அதற்கான ஆதாரமாக இவர்கள் தருவது எக்ஸ்பிரஸின் செய்தி. எக்ஸ்பிரஸ் செய்திகளை எப்படி தருகிறது என்பதை, நேர்காணலில் தனது பிரபலம் என்ற நிலையை முன்வைத்து அருந்ததி பேசிய வரிகள் கீழே.

I was at a meeting in Delhi a few months ago, the Association of Parents for Disappeared People. Now, women had come down from Kashmir. There are 10,000 or so disappeared people in Kashmir, which nobody talks about in the mainstream media at all. Here were these women whose mothers or brothers or sons or husbands had -- I'm sorry, not mothers, but whatever -- all these people who were speaking of their personal experiences, and there were other speakers, and there was me.

And the next day in this more-or-less rightwing paper called Indian Express, there was a big picture of me, really close so that you couldn't see the context. You couldn't see who had organized the meeting or what it was about, nothing. And underneath it said, "Arundhati Roy at the International Day of the Disappeared." So, you have the news, but it says nothing, you know?

இந்த செய்தியும் அப்படிபட்டதுதான் எனினும், அதில் உள்ளதையே அப்படியே மட்டும் எடுத்துக் கொள்வோம். அருந்ததி சொன்னது இந்திய ஜனநாயகம் பற்றி தனித்து சொன்ன ஒரு கருத்து அல்ல. 'இந்திய ஜனநாயகத்தையும்', இந்தியா ஓட்டு போடுவதை பற்றியும் தாமஸ் ஃப்ரீட்மேன் என்பவர் ஒரு அமேரிக்க வியத்தலுடன், அமேரிக்க உள்நோக்கங்களுடன் எழுதியதை முன்வைத்த அருந்ததி ராயின் எதிர்வினை. அருந்ததி ஏதோ தாமஸ் சொன்னது மறுத்து, இந்தியாவில் ஓட்டெடுப்பு நிகழாமல் ஆயுதம் மூலம் ஆட்சி மாறியதாகவும், சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாகவும் சொல்லவில்லை. அப்படி சொன்னது போல கிண்டல் செய்வதன் மூலம் தங்கள் முட்டாள்தனத்தை வழக்கம் போல வரிசையாய் எல்லோரும் வெளிபடுத்தியுள்ளனர். ஜனநாயகம் என்ற வார்தைக்கு இன்று நிலவும் இந்திய யதார்தம்தான் பொருளா என்பதை முன்வைத்து தான் பேசியுள்ளார் என்பது குறைந்த பட்ச புத்தியுள்ள எவருக்கும் புரியும்.

இந்திய ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்ப அருந்ததி முன்வைக்கும் வாதங்கள் சில; 80000 மக்கள் (தீவிரவாதிகள் அல்ல) காஷ்மீரில் அரச வன்முறை மூலம் மட்டும் (போராளி பயங்கரவாதத்தால் அல்ல) கொல்லப்பட்டுள்ளதை நாம் ஜனநாயகம் என்று சொல்லமுடியுமா? 700000 இராணுவ வீரர்களால் ஆக்ரமித்துள்ள ஒரு மானிலம் இருக்கும் போது அதை ஜனநாயகம் என்று சொல்ல முடியுமா? (அமைதி காக்கப் போவதாக நடுநிலைதன்மையுடன் போன இலங்கையில் நம் ராணுவம் நடத்திய வெறியாட்டம் இன்று ஈழத்தமிழர்களால் ஆவணப்படுத்தப் பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகாலமாய் ஒரு நடைமுறை போரில் இருக்கும் மானிலத்தில் என்னவென்ன நடந்திருக்கும் என்பதை ஊடக செய்திகளை முன்வைத்து மட்டும் பேசமுடியாது. ஆமாம், சமுத்ரா சொன்ன மாதிரி குறைந்தது அங்குள்ள மக்களிடம் பேசவாவது வேண்டும். காஷ்மீருக்கு போயிருக்காவிட்டாலும் என்னளவில் சிலருடன் பேசியுள்ளேன்.அருந்ததி என்னை விட பல மடங்கு அதிகமாய் பேசியுள்ளார். கருத்தரங்குகளில் பங்கு கொண்டுள்ளார். ஆதாரம் காட்டி இதற்கு முன்னரே பல கட்டுரைகளில் எழுதியுள்ளார். மொட்டையாய் இந்துத்வவாதிகளும், மற்ற இந்திய தேசியவாதிகளும் மறுப்பார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்! இரண்டு மாத காலமாய் உலகிற்கு அறிவித்துவிட்டு, ஊடகங்கள் முன்பு குடுமிவிரித்தாடிய குஜாராத் இன அழிப்பையே மறுக்கின்றனர். உதாரணமாய் கர்பிணி பெண்களை வயிற்றிலிருந்து குழந்தையை வெளியே எடுக்கவில்லை என்று அப்பாவியாய் மூஞ்சியை வைத்துக் கொண்டு ஆஃபிஸ் உடகார்ந்து கொண்டு ஒருவர் வலைப்பதிவில் எழுதுகிறார். )

இது தவிர (பேட்டியில்) இந்த நாட்டில் எல்லாவற்றையும் இறுதியாய் தீர்மானிக்கும் அதிகாரம் என்பது நீதிமன்றத்திடம் இருப்பதை முன்வைத்து பேசியிருக்கிறார். நான்கு லட்சம் எண்ணிக்கை கொண்ட ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை வெளியேற்றுவது என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படுவதும், தனது தீர்ப்புகளையே வெட்டி வெட்டி மாற்றி மாற்றி ஒரு நீதிமன்றம் கடைசியாக (தான் முன்னர் சொன்ன மறுவாழ்வு உள்ளடகத்தை தொடாமல்) 'அணை கட்டலாம்' என்று மொட்டையாக தீர்பளிப்பதை முன்வைத்து கேட்கிறார். இன்னொரு பரிமாணத்தில், ஒரிசாவில் பாக்சைட்டை முன்வைத்த கார்பரேட் கொள்ளைக்காக, இந்த நாட்டின் ஆதி மக்கள் மீது நடக்கும் சட்டபூர்வமாய் அங்கீகரிக்கக் பட்டு, அரசால் அவிழ்த்து விடப்படும் விசாரணைக்கு உடபடாத வன்முறையை முன்வைத்து கேட்கிறார். ஒரு பக்கம் கிராமங்களை மலைப்பகுதிகளை விட்டு, காலங்காலாமாய் அங்கு வாழ்ந்து வந்த, அந்த நிலத்தின் ஆதி மக்களை விரட்டுவதை பற்றியும், இன்னொரு புறம் கிராமத்திலிருந்து சேரிகளில் குடியேறியுள்ள அதே மக்களை ஆக்ரமிப்பாளர்களாகவும், பிக்பாக்கெட்களாகவும், கிரிமினல்களாகவும் காட்டும் நீதிமன்ற சட்டபூர்வமான அணுகுமுறை பற்றி பேசுகிறார்.

அருந்ததியை முட்டாளாய் கிண்டலடிப்பவர்கள் கீழே உள்ள எதையாவது செய்திருக்க வேண்டும். அவர் சொல்லும் செய்திகள் பொய், உண்மைக்கு முரணானது என்று துணிந்து வாதிட்டு இருக்க வேண்டும். இந்துத்வவாதிகளுக்கு அப்படிபட்ட துணிவும் கயமையும் நிச்சயம் உண்டு. மற்றவர்கள் இந்த செய்திகள் உண்மையாய் இருந்தாலும், 'ஜனநாயகத்தில இதெல்லாம் சகஜம்பா!' என்று ஒரு வாதத்தையாவது முன்வைத்து பேசியிருக்க வேண்டும். மாறாக கேனத்தனமான கிண்டல் மட்டுமே ஒலித்தது. ( சமுத்ரா என்பவர் மட்டும் 'ராணுவ அதிகாரிகளிடம் பேசி தான் தெரிந்து கொண்ட செய்திகளை' தந்திருக்கிறார். அது குறித்தெல்லாம் என்னை மாதிரி ஆட்கள் என்னய்யா பேசமுடியும்?!)

வஜ்ரா மாதிரி ஆசாமிகள் அருந்ததி யாசின் மாலிக்குடன் கைகுலூக்கும் படத்தை போட்டு எதிர்கொள்வது போலத்தான், இந்துத்வவாதிகள் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பாஸ்டன், ஸ்ரீகாந்த் போன்ற மற்றவர்கள் செய்வதும் கூட கிட்டதட்ட அதுதான். சொல்லப் போனால் பாஸ்டன் செய்வது அதைவிட மொட்டையாய் சௌவுதியை, சீனாவை காட்டி மட்டையடி கேள்விகள் எழுப்பும் வேலையைத்தான் செய்கிறார். இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடந்து, பாகிஸ்தான் எல்லையில் இராணுவம் குவிக்கப் பட்டு, போரின் தீவிரம் ஊசலாடிகொண்டிருந்த போது, அருந்ததியிடம் (ஒரு அணு ஆயுத தாக்குதலின் சாத்தியம் காரணமாய்) 'இந்தியாவை விட்டு வெளியேறிவீர்களா?' என்று கேட்டபோது, 'இதை விட சுதந்திரமாக என்னை போன்ற ரவுடியை வேறு எந்த நாடு இப்படியே இருக்க அனுமதிக்கும்?' என்று கேட்டிருப்பார். (இணையத்தில் பேட்டியை மேலோட்டமாய் தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை.) இந்த பேட்டி மட்டுமில்லாது இந்திய நாட்டில் தனக்கு இருக்கும் உரிமைகள் பற்றிய எல்லா சுய உணர்வும் அவருக்கு இருப்பதை அவரது எழுதுக்களில் உணர முடியும். அவர் பேசுவது இந்த நாட்டின் அதிகாரமற்ற மக்களின் மீது அரசும் சமூகம் பெய்து வரும் விசாரணைக்கு உட்படாத அங்கீகரிக்கப் படும் வன்முறை பற்றி. அதை பேசினால் 'டிக்கெட் எடுத்து தருகிறேன். கொரியா போகிறாயா, சவுதி போகிறாயா?' என்று மெண்டல்கள் (வேறு வழிவகையின்றி) கேட்பதை போலவே, கொஞ்ச நஞ்ச புத்தியும் சமூக அக்கறை உள்ளவர்களும் கூட கேட்கிறார்கள். செப்டம்பர் 11ற்கு பிறகு, அதை முன்வைத்தும் அதற்கான காரணங்களை பற்றியும் விமர்சனமாய் பேசும் எல்லோரையும் 'ஆஃப்கானிஸ்தானுக்கு போ!' என்ற அயோக்கியத்தனமான, அதேநேரம் முட்டாள்தனமான ஒற்றை வசையில் எதிர்கொள்வதை போலத்தான் இதுவும். இந்திய அணுகுண்டு சோதனை பற்றி விமரசனமாய் பேசியவர்களையும் 'பாகிஸ்தானுக்கு போ!' என்று பாராளுமன்றத்திலேயே பேசியதன் தொடர்ச்சி மட்டுமே.

அமேரிக்க சிவில் சமூகம் பற்றியும், அதன் லிபரல் தன்மை பற்றியும் அருந்ததியே (ஈராக் போரை முன்வைத்த கட்டுரைகளில்) பேசியிருக்கிறார். மீண்டும் மீண்டும் (ஒரு கட்டத்தில் அமேரிக்க வெறுப்பு என்பதின் ஆபத்தான பரிமாணம் பற்றி சொல்லும் போது) அமேரிக்க அரசிற்கும் அமேரிக்க சமூகத்திற்கும் உள்ள வேறுப்பாட்டை மனதில் வைக்க வேண்டிய அவசியம் பற்றி பேசி வருகிறார். அமேரிக்கா என்ற நாட்டின் அரசு, உலகின் மற்ற நாடுகள் மீது அவிழ்த்து விட்டு பயங்கரவாதம் பற்றி பேசினால், அங்கிருக்கும் அதன் மக்களுக்கான சமூக உரிமைகள் பற்றி பேசுவதாகாது.
அரபு நாடுகளின் ஜனநாயகமின்மை பற்றி அருந்ததியும் ஒப்புக்கொண்டே பேசியிருக்கிறார். (மீண்டும் ஒரு பழைய கட்டுரையில், அது ராயர் காப்பி கிளப்பில் கூட விவாதிக்கப் பட்டதாய் ஞாபகம்). சவுதியில் இருப்பது மிக மூர்க்கமான சர்வாதிகாரம் மிகுந்த மத அடிப்படைவாத அரசு என்பதைத்தான் சாம்ஸ்கியிலிருந்து அருந்ததி வரை சொல்லி வருகிறார்கள். சவுதியுடன் தோழமை பாராட்டும் அமேரிக்கா, ஈராக்கில் 'ஜனநாயகத்தையும் மதசார்பின்மையையும் கொண்டுவருவதையும்', தாலிபான்களை அழிக்கும் அமேரிக்கா அதைவிட அடிப்படைவாதத்தை நடைமுறை படுத்தும் சவுதியை அங்கீகரிப்பதையும் முன்வைத்து பேசுகிறார்கள். ஜனநாயகம் மத சார்பின்மை அடைப்படையில் போராடியதற்கு பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு அமேரிக்கா, இஸ்ரேல் மற்றும் வரலாறு தந்த பரிசை முன்வைத்து கேள்வி எழுப்புகிறார்கள். இப்படி பிரச்சனைகளை பேசுவதை திரித்து குண்டக்க மண்டக்க கேள்விகளை கேட்பதும் அவதூறு செய்வதும்தான் எல்லா வகை தீவிர தேசியவாதிகள் தொடர்ந்து உலகம் முழுவதும் செய்து வரும் வேலை.

இந்த லட்சணத்தில் அவர் sweeping statements and arrogant judgement வைத்து கவன ஈர்ப்பு செய்வதாக பாஸ்டன் பாலாஜியின் தீர்ப்பு வேறு. அவர் பதிவிலேயே அருந்ததியை முட்டாளாக வர்ணித்து மகா மட்டமான ஸ்வீப்பிங் கம்ண்டுகளை நண்டு சிண்டுகள் எல்லாம் எழுதியிருக்கின்றன. ஒருவர் தாலிபானை அருந்ததி ஆதரித்ததாக அபாண்டமாய் புளுகுகிரார். சைனாவின் அணை பற்றி ஏற்கனவே பேசியுள்ள அருந்ததியை, அது குறித்து என்ன சொல்லுவார் என்று வழக்கமான மட்டையடி கேள்வியை ஸ்ரீகாந்த் கேட்கிறார். தனது ஒவ்வொரு நிலைபாடுகளுக்கும் அவதானிப்புகளுக்கு பின்னாலும் ஏராளமான தகவல்கள், வாதங்கள், ஆதாரங்கள் தரும் அருந்ததி எழுதிவது ஸ்வீப்பிங்காக தெரிகிறது, மட்டையாய் பல ஸ்வீப்பிங் வாக்கியங்கள் எழுதியவர்களுக்கு, அருந்ததி எழுதியதை திரித்தவர்களுக்கு, புளுகியவர்களுக்கு நன்றி சொல்லி பாராட்டு வேறு. தனிநபர் முட்டாள்தனமாய் இருப்பதோ, அதையே அறிவு என்று நம்பி பெருமையாய் வெளிப்படுத்துவதோ பிரச்சனையல்ல. சமூகத்திற்கு அத்யாவசியமான இயல்பு அது என்று நினைக்கிறேன். அதையே மொத்த சமூகமும் வியந்து கொண்டாடுவதுதான் சாக்ரடீசை கொல்வது போன்ற அழிவு. அதை பார்த்துதான் இந்த பதிவை எழுத வேண்டி வந்தது. கொஞ்சம் உருப்படியாய் அடுத்த பதிவில் எழுத உத்தேசம்.

முடிக்கும் முன் கடைசியாக, ரவி ஸ்ரீனிவாசின் பதிவை படித்து கொஞ்சம் ஆச்சரியமாக இருந்ததை சொல்லத்தான் வேண்டும். கடந்த சில மாதமாய் அவர் பதிவுகளை படித்து அடைந்து வரும் nauseaவிற்கிடையில் இப்படி எதையாவது நிதானமாய் ஒரு விமர்சனத்தன்மையுடன் அவரால் எழுத முடியும் என்று பார்க்க ஆறுதாலாய்தான் இருக்கிறது.

ரவி வழக்கம் போல மொட்டையாய் சொல்லும் தீர்ப்புகளை (இரண்டாவது பத்தி), மற்றும் தனது எழுத்தில் வெளிபடும் மொண்ணையான அறிவுபூர்வத்திற்கு மேலாக அலட்டிக்கொள்வதை (உதாரணமாய் ' But globalization is a more complicated issue than both would like us believe.') எல்லாம் தவிர்த்து (வேறு என்ன அதை செய்வதாம்!) கொஞ்சமாவது விஷயபூர்வமாய் சொல்லிய விஷயத்தை எடுத்துக் கொண்டால், அவை ஏற்கனவே பலராய் வேறு சந்தர்பங்களில் விவாதிக்கப்பட்ட விஷயம். நீதி மன்றம் வர்க்க சார்புடையதா என்பது பற்றி ஏற்கனவே கட்டுரைகள் எழுதப்பட்டு, பதிலாக இது போன்ற மொட்டை வாதங்கள் எல்லாம் காலகாலமாய் வந்தாகி விட்டது.

ஆனால் ரவிக்கு அருந்ததி என்ன சொன்னார் என்றே புரியவில்லை என்பதுதான் அடிப்படை பிரச்சனை. அருந்ததி ஜனநாயகத்தில் அறுதியாய் தீர்மானிக்கும் உரிமை நீதிமன்றத்திடம் இருக்கும் சிக்கல் பற்றியும், அந்த அதிகாரம் சின்ன விமர்சனம் என்பதற்கு கூட அப்பாற்பட்டு இருப்பதையும் பற்றி பேசியிருக்கிறார். வழக்கமாய் எதையும் வாசித்து உள்வாங்கும் திறனும் பொறுமையும் இல்லாத ரவி, நீதிமன்றம் ஏழைகள் சார்புடையதா இல்லையா என்று z-axisஇல் ஜல்லியடிக்கிறார். நீதிமன்ற தீர்ப்புகள் சூழலியல் சார்பாக இருப்பதையும் சொல்கிறார். அவர் செய்திருக்க வேண்டியது தீர்மானிக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும் தளம் இருக்கிறதா என்பதை பற்றி இருந்திருக்க வேண்டும். நீதி மன்ற அவமதிப்பு என்ற அஸ்திரம் பற்றி பேசியிருக்க வேண்டும். இப்படி தொடர்பில்லாத ஒன்றை பற்றி பேசியே அறிவு பாவனை செய்வது பலரின் திட்டமிட்ட அணுகுமுறைதான். ஆனால் ரவி பாவனை செய்யவில்லை. அவர் சீரியசாகவே அருந்ததி சொன்னதை புரிந்து கொள்ளாமல் எழுதியுள்ளார்.

தனது அதே மொண்ணையான வாசிப்பில், நக்சலைட்டுகளை அருந்ததி ரொமாண்டிசைஸ் செய்வதாக சொல்கிறார். இந்துத்வவாதிகளும் மற்றவர்களும் அப்படி திரிப்பார்கள். ரவி திரிக்கவில்லை; மாறாக தனது மொண்ணையான பார்வையாலும் அவசரபுத்தியாலும் அப்படி புரிந்து கொள்கிறார். "In any case the origins of the Naxal movement could be traced to the late 1960s. The Maoists by and large still swear by Stalin and Mao. They still have faith in proletarian dictatorship." என்ன ஒரு அரிய தகவல்கள்! 'நக்சலைட்டுகள் வன்முறை பாதையில் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள், அவர்கள் அகிம்சை போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை' என்றெல்லாம் ஏனோ சொல்லவில்லை. இதெல்லாம் தெரியாமல்தானே அருந்தி போன்றவர்கள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்! ஒரிசாவிலும் ஜார்கண்டிலும் என்ன நடக்கிறது, அதன் பரிமாணக்கள் என்ன என்று ஒரு மண்ணங்கட்டி புரிதலும் இல்லாமல் தகவல்களையும், ஐடியாக்களையும் முன்வைத்து பதிவு முழுக்க மட்டையடிகள்.

அருந்ததி பேசியிருப்பது வன்முறையின் பரிமாணம், போராட்ட வழிமுறைகள் அரசு எதிர்கொள்ளும் விதம் பற்றியது. நட்சத்திர வாரத்தில் நான் நர்மதாவை முன்வைத்து எழுதிய பதிவு பேசும் விஷயங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. அவர் நக்சலைட்டுக்களை ரொமாண்டிசைஸ் செய்யவில்லை. ஒரு வேளை எதையாவது அவர் அப்படி ரொமாண்டிசசஸ் செய்திருந்தால், அது நர்மதாவின் வன்முறையற்ற போராட்டம் பற்றி இருந்திருக்கும். இந்த விஷயம் எதுவும் புரியாமல் மொட்டையாய் ' It is one thing to oppose state repression in the name of containing naxals, it is another thing to romanticize the Naxal/Maoist movement' என்று மேதவித்தனமான பாவனையில் ஒளருவது ரவிக்கே உரிய தனித்தன்மை. ரவிக்கு பிரச்சனை வயிற்றில் பசி மட்டுமல்ல ("the calls from the stomach are becoming louder"), வயிற்றின் கீழே நடப்பதுடன் தொடர்புடையது.

இன்னொரு பதிவு எழுத உத்தேசம் உள்ளது. இரவு கால்பந்தாட்டம் அனுமதித்தால்!

Post a Comment

---------------------------------------

Monday, June 05, 2006

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...!

நன்றி! .. நன்றி!!.. நன்றி!!!

எல்லாவற்றையும் வாசித்தவர்கள், சிலவற்றையாவது வாசித்தவர்கள், வாரத்தின் முதல் பதிவில் பின்னூட்ட மிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள், பின்னர் தொடர்ந்து பின்னூட்டியவர்கள், கில்லியில் போட்ட பிரகாஷ், எல்லாவற்றிற்கும் காரணமான மதி, தமிழ்மணம் நடத்தும் காசி, நான் உடன் செலவழிக்க வேண்டிய நேரத்தை தியாகம் செய்து எழுதுவதில் மட்டும் என்னை ஈடுபட அனுமதித்த துணைவி, தூக்கத்தை மட்டும் தொந்தரவு செய்து மற்றபடி சுதந்திரமாய் விட்ட மகன் அனைவருக்கும் நன்றி. முதல் பதிவில் எதிர்பார்ப்பை நண்பர்கள் வெளிபடுத்தியபோது கொஞ்சம் டென்ஷனாகவே இருந்தது. எழுத விஷயம் இருந்தும் தட்டச்சு செய்ய முடியுமா என்ற பயம்தான்.

தொடர்ந்து எழுதுவதை மட்டுமே ஒரே வேலையாய் வெறித்தனமாய் வைத்திருந்தாலும் எழுத நினைத்த சில விஷயங்களை எழுத முடியவில்லை. செவ்வாய் இரவு வரை முன்தீர்மானித் திருந்ததை அப்படியே செயல்படுத்த முடிந்தது. புதனில் ஒரு பதிவு குறைந்தது. வியாழன் தொடங்கி நினைத்தவற்றை எழுத இயலவில்லை. ஆனால் எழுத நினைக்காத சிலவற்றை, இந்த வார நிகழ்வுகளுடன் சம்பந்த முடைய சிலதை எழுதினேன். இளயராஜா பற்றிய தொடரில் மொத்தம் நான்கு எழுத நினைத்தேன். இரண்டுதான் முடிந்தது. குவாண்டம் கணித்தல் பற்றி இரண்டு பதிவுகள் போட நினைத்தேன். ஒன்றுதான் முடிந்தது. ஜப்பானை முன்வைத்த சில பார்வைகளை படங்களுடன் எழுத நினைத்ததை எழுத முடியவில்லை. நம் ஊரில் இருக்கும் மாற்று வைத்தியங்கள் அதன் பிரத்யேகங்கள் பிரச்சனைகளை தொட்டு, என் பட்ரஹள்ளி அனுபவத்தை எழுத நினைத்ததை எழுத இயலவில்லை. தமிழ் நாட்டை பற்றி பலர் வைத்திருக்கும் சினிமா பின்னால் போவதான பிம்பம் போன்றவற்றை முன்வைத்து வெகுகலாச்சாரம் பற்றியும், இந்துமதம் அதன் வெகுகலாச்சாரப் பண்மைதன்மை, அதே நேரம் அது கொண்டிருக்கும் சாதியம், அதிலிருந்து முகிழ்ந்த ஆனால் அடிப்படையான இந்துதன்மைக்கு எதிரான இந்துத்வம், இதன் பிண்ணணியில் காந்தி பெரியாரை எப்படி பார்ப்பது என்று என் பார்வவகளை வரிசையாக ஒரு நான்கு பதிவுகளாக முக்கியமானதாக எழுத நினைத்ததை தொடங்கவே இல்லை. இதன் காரணமாகவே அரசியல் நெடி இந்த வாரம் குறைவு. அதுவும் நல்ல விஷயம்தான். எழுதியிருந்தால் அது சிறிதளவாவது ஆழமான முறையில் பிரச்சனைக்குள் போயிருக்கும் என்று தோன்றவில்லை. இப்படி நினைத்த பல விஷயங்கள் நடக்கவில்லை. புதனுக்கு பிறகு ஏற்பட்ட சோர்வும், அலுப்பும் இதற்கு முக்கிய காரணம். மேலும் ஸ்டாமினாவிற்கு ஒரு எல்லை இருக்கிறதே! நர்மதாவை முன்வைத்த பதிவை எழுதும் போது, அலுப்பு எழுத்தில் கலந்து, எழுத்து நடை சற்றே அலையவும் வேண்டி வந்தது. ஆனாலும் அது நிறைவாய் வந்திருப்பதாகவே முடித்தவுடன் நினைத்தேன். தங்கமணி அதை குறிப்பிட்டதும் திருப்தியாக இருந்தது.

எழுதாத பதிவுகளில் சில பத்திகள் எழுதியுள்ளேன். அவற்றை முடித்து நட்சத்திரமில்லாத வாரங்களில் எழுத மீண்டும் இறைவன், சாத்தான், சார்பற்ற இயற்கை கடைக்கண் காட்ட வேண்டும். மீண்டும் அனைவருக்கும் நன்றி. அடுத்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

Post a Comment

---------------------------------------

Sunday, June 04, 2006

சாக்ய சங்கம் -3.

இதை பற்றி எழுத அலுப்பாகவும் வெட்கமாகவும்தான் இருக்கிறது. சாக்ய சங்கம் பற்றி இரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறேன். அதற்கான சுட்டி நிரந்தரமாய் என் பதிவின் பக்கவாட்டிலும் இருக்கிறது. இது குறித்த கடந்த பதிவில் சொன்னது போல், மொத்தமாய் இரண்டு நண்பர்கள் தமிழ் வலைப்பதிவு உலகத்திலிருந்து உதவியிருக்கிறார்கள். வலைப்பதிவில் அறிமுகமாகாத இன்னொரு நண்பரும் உதவியிருக்கிறார். ஆக மொத்தம் மூன்று. இவ்வாறு நூற்றுக்கணக்கில் மக்கள் வாசிப்பதாக சைட் மீட்டர் தகவல் தரும் என் பதிவின் வாசிப்பவர்களில் மூன்று பேர்தான், இயற்கை அழிவால் நிராதரவாக்கப் பட்ட குழந்தைகளுக்கு உதவுவது என்ற ஒரு உயர்ந்த நோக்கத்தில் பங்கு பெறுவார்கள் என்பதில் எனக்கு வெட்கமாய் இருக்கிறது. ஏன் எனக்கு வெக்கமாய் இருக்கிறது என்றால், ரோஸாவசந்த் என்ற ஒருவன் விண்ணப்பித்த காரணத்தினால் மட்டுமே ரெஸ்பான்ஸ் இப்படி இருக்கக் கூடும் என்று நினைப்பதால். ஆனால் அதற்கு செய்யக் கூடியது எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நான் மாறமுடியாது என்பது மட்டுமல்ல, நான் பங்குகொள்ளும், எனக்கு தெரிந்த ஒரு விஷயம் தொடர்பாக நான் மட்டும்தானே விண்ணப்பிக்க முடியும்!

உதவி செய்த மூன்று நபர்களும் அவர்கள் பெயரை நான் வெளியிடுவதை விரும்பவில்லை. குறிப்பாக வலைப்பதிவில் இருப்பவர்கள், தங்கள் பெயர் குறிப்பிடப்பட்டால், அது சாக்ய சங்கம் தொடர்பான ஒரு முன் அனுமானம் ஏற்பட்டு எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது சரி என்று எனக்கு தோன்றவில்லை. அப்படி ஒரு எதிர்விளைவு இருக்கக் கூடுமெனில், அது விண்ணப்பம் என்னிடமிருந்து வந்தபோதே நிகழ்ந்திருக்கும்.

எனினும் நட்சத்திர வாரம் என்பது ஏற்படுத்தி தந்த வாய்ப்பை கருதி, இதை எழுதுவதை கடமையாக எண்ணி இந்த பதிவை எழுதுகிறேன். ஏற்கனவே விவரங்கள் விரிவாய் எழுதப்பட்டுள்ளது. இது வரை படிக்காதவர்கள் கீழே சுட்டலாம். நன்றி!

முதல் பதிவு: Sakya Sanga

இரண்டாம் பதிவு : சாக்ய சங்கம் -2.

Post a Comment

---------------------------------------
பகுத்தறிவின் காட்டுமிராண்டித்தனம்.

தர்மபுரியிலிருந்து மைசூருக்கு ஜைன கருத்துக்களை போதிக்கும் பணியில் நடைபயணம் மேற்கொண்டிருந்த நிர்வாண ஜைன சாமியார்களை, நேற்று முந்தய தினம் பெரியார் திகவினரும் திமுகவினரும் சுற்றி வளைத்து போகவிடாமல் தடுத்து கலவரம் செய்ததில், அவர்கள் (சீடர் ஒருவரின்) கெமிக்கல் தொழிற்சாலையில் இரவு முழுக்க தஞ்சம் கொள்ள வேண்டியிருந்தது. போலிஸ் திகவினரை சமாதானப்படுத்த முயல, அவர்கள் சாமியார்கள் கைது செய்யப்படவேண்டும், துணி அணியவில்லையெனில் சாமியார்களை போகவிடமாட்டோம் என்றும் உறுதியாய் நின்று போராடியிருக்கிறார்கள். இந்துத்வ இயக்கங்கள் வந்து சாமியார்கள் சார்பாக குதித்து பிரச்சனை பெரிதாகுமோ என்றிருந்த நிலை மாறி, ஒரு வழியாய் நேற்று ஒரு சமாதான உடன்படுக்கைக்கு வந்தார்கள். சாமியார்களை சுற்றி சதுர வடிவில் துணியினால் ஒரு திரையமைத்து, அந்த கூண்டிற்குள் அவர்கள் நடந்து, பாதுக்காப்பான பூமியான கர்நாடகத்தை அடைய முடிவு செய்துள்ளனர். ஆனால் திகவினருக்கு இரவு நேரத்தில் சாமியார்கள் துணியை விட்டு வெளியே வந்துவிடுவார்களோ என்று சந்தேகமாம். கர்நாடக எல்லையை அடையும் அவர்களை கண்காணித்தபடி கூட செல்லப் போகிறார்களாம்.

பொதுமக்கள் யாரும் பார்காத நேரத்தில் நிர்வாணமாய் வெளியே வந்தால், அதனால் யாருக்கும் பிரச்சனை இல்லையெனில், அதிலும் திகவினருக்கு என்ன பிரச்சனை என்று புரியவில்லை. அப்படி நிர்வாணமாய் இருப்பதே தவறு என்றால், இனி திககாரர்கள் குளிக்கும்போதெல்லாம் கேமேராவைத்து எந்த கணத்திலாவது பொட்டு துணியில்லாமல் இருக்க நேரிடுகிறதா என்று கண்காணித்து தண்டிக்க வேண்டியதுதான். அடுத்த அபத்தம் என்னவென்றால் கர்நாடகத்தில் நுழைந்து போராட திககாரர்களை எது தடுக்கிறது என்று புரியவில்லை. கர்நாடகத்தில் நுழைய எதாவது விசா பிரச்சனையா அல்லது கர்நாடகத்தில் நிரவாணமாய் அலைந்தால் தப்பில்லை என்று எதாவது தமிழ்ததனமான கருத்து இருக்கிறதோ என்னவோ? அது எப்படியோ பெரியார் பிறந்த தமிழகம் பாதுக்காப்பற்ற பிரதேசமாகவும், கர்நாடகம் பாதுகாப்பான பிரதேசமாகவும் நிர்வாண சாமியார்களுக்கு இருக்கிறது.

திக நடந்து கொண்டது சிவசேனா பஜ்ரங் தள் நடத்தும் அராஜகங்களை விட எந்த விதத்திலும் குறையாத ஒரு காட்டுமிராண்டித்தனம். அவர்களுக்கு மதம் என்றால் இவர்களுக்கு பகுத்தறிவு (என்பதாக இவர்கள் கற்பித்து கொண்டது ) தூண்டுதலாக இருக்கிறது. பெரியார் ஜெர்மனி சென்ற போது, அங்கிருந்த நிர்வாண சங்கத்தில் சேர்ந்து, தானும் நிரவாணமாக படம் எடுத்து கொண்டார். அந்த விவரமெல்லாம் எல்லா பெரியார் சீடனுக்கும் தெரியும். மதரீதியாய் நிர்வாணமாவது காட்டுமிராண்டித்தனம், மேற்குபோய் ஏதாவது நவீன எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து நிர்வாணமாவது பகுத்தறிவு என்று பகுத்தறிவுப்பூர்வமான காரணங்கள் ஏதாவது அவர்களிடம் இருக்கலாம். ஆனால் இப்போது எதிர்ப்பதற்கு இவர்கள் சொன்ன முக்கிய காரணம் ஆபாசம். ஆபாசத்திற்காக கைது செய்யப்பட வேண்டும். எப்படி பெரியார் நிரவாணமாய் போஸ் கொடுத்தது ஆபாசம் இல்லை, இது ஆபாசம் என்று பகுத்தறிவு கொழுந்துகள்தான் விளக்க வேண்டும்.

ஒரு மனிதருக்கு பொது இடத்தில் நிரவாணமாய் இருக்க உரிமை இருக்கிறதா என்று கேட்டால் அது சிக்கலான கேள்வி. மேற்கில், ப்ரான்ஸ் போன்ற நாட்டில் கூட கடற்கரையில் முழுவதும் நிரவாணமாக பொதுவாய் உரிமை இல்லை. (ஆண்களும் பெண்களும்) கீழேயாவது சின்னதாய் ஒரு கைக்குட்டையாவது அணிந்திருக்க வேண்டும் (ஆனால் அது போதுமானது.) கடற்கரையில் நிரவாணமாக இருக்கவே சில குறிப்பிட்ட கடற்கரைகளை ஒதுக்கியிருக்கிறார்கள். அங்கே நிர்வாணமாகலாம். அமேரிக்க பல்கலைகழகம் ஒன்றில் (கலிஃபோர்னிய, பெர்க்லி) ஒரு மாணவன் (யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல்) நிர்வாணமாய் வரத் தொடங்க, சட்டத்தில் அதை தடுக்க வழி வகையில்லாத்தால், கொஞ்ச நாட்கள் பொறுத்து பிறகு ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து சிறிய ஷார்டஸாவது அணிய கட்டாயப் படுத்த வேண்டியதாயிற்று. (அங்கே எல்லாம் மதவாதிகள் பழைமைவாதிகளின் பிரச்சனை என்றால், இங்கே பகுத்தறிவு பேசுபவர்களின் பிரசனை.) ஒரு மனிதரின் (ஆணொ, பெண்ணோ) நிரவாணமாக்கி கொள்ளும் உரிமை என்பது, அந்த குறிபிட்ட இடத்தில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை முன்வைத்தே இருக்க முடியும்.

ஜைன சாமியார்கள் பேருந்து நிலயத்திலும், கடைதெருவிலும் நிரவாணமாகவில்லை. தேர்ந்தெடுத்த ஒரு பாதையில், தங்கள் வாழ்க்கை முறை பற்றி அறிவித்து துறவரம் பூண்டு நிர்வாணமாயிருக்கிறார்கள். அவர்கள் தங்களை பினபற்றும் சிலரை மட்டுமே சந்திக்க போகின்றனர். அவர்கள் செயலால் யாருக்கும் ஒரு தொந்தரவும் கிடையாது. (உதாரணமாய் பொது இடத்தில் பெண்கள் முன்னால் நிர்வாணமாகி காட்டுவது, அந்த பெண்கள் மீதான வன்முறையாக இருக்கும்.) அவர்களை வழிபடுபவர்கள் பார்க்கலாம், வணங்கலாம். மற்றவர்கள் கண்ணை மூடிக்கொள்ளக் கூட தேவையில்லை, அந்த பக்கமே போகாமல் இருக்கலாம். இப்படி சமூகத்திற்கு எந்த தொந்தரவும் இல்லாத ஒரு விஷயத்திற்காக இந்த முட்டாள்கள் இரவு முழுக்க கொட்டும் மழையில் தேவுடு காத்து போராடியிருக்கிறார்கள். தமிழகத்தில் இன்னமும் ரெட்டை கிளாஸ் இருக்கும் பிரச்சனைக்காகவோ (சரி, அதையெல்லாம் பேசினால் தமிழர்களை பிரித்து சண்டை போட வைத்ததாகிவிடும்), அனைவரும் அர்சகராவதை நடைமுறை யதார்த்தமாக்கவோ, தமிழில் அர்ச்சனை செய்வதையும் நடைமுறை யதார்த்தமாக்கவும் இத்தனை தீவிரத்தை கட்டவில்லை.

இத்தனைக்கும் ஜைன சாமியார்கள் மற்ற செக்ஸ் சாமியார்கள் போல எந்தவித லீலைகளிலும் ஈடுபடவில்லை. நிர்வாணம் என்று தாங்கள் நம்பும் தத்துவம் சார்ந்து ஆடையில்லாமல் இருக்கிறார்கள். அதற்கு வசதி ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமலும், மற்றவர்களால் அவர்களுக்கு தொந்தரவு இல்லாமலும் பார்த்து கொள்வதுதான் ஒரு நாகரீக, சகிப்புத் தன்மையுள்ள, பரந்த மனப்பான்மை கொண்ட, பண்மைதன்மையை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் ஒரு சமூகம் செய்ய வேண்டிய கடமை. திகவின் ஒற்றை பரிமாண, கச்சாவான, குதிரை தட்டை பகுத்தறிவு பார்வை அதை நோக்கி பயணிக்காது என்பதற்கு முக்கியமான் உதாரணம் இது.

பெரியாரின் 50 ஆண்டுகால இயக்கத்தை, பேச்சுக்களை, எழுத்துக்களை திகவினர் Crudeஆக எடுத்து கொண்டு, மொண்ணையான பகுத்தறிவு பேசுவது உண்மைதான், என்றாலும் இந்த விஷயத்தில் பெரியாரிடமே அடிப்படையில் பிரச்சனை இருப்பதாகவே தோன்றுகிறது. கடவுள் கதைகளை முன்வைத்து, அதன் ஆபாசங்கள் பற்றி பேசியது, கடவுள்களின் ஒழுக்கக் கேட்டை விலாவாரியாக பேசியது என்ற விஷயத்தில் பெரியார்தான் இதற்கான மதிப்பீடுகளை இவர்களுக்கு ஏற்படுத்தி தருகிறார். அப்படியானால் அவர் தன் 'ஒழுக்க கேட்டை' பற்றி வாக்குமூலம் கொடுத்ததும், திருமணத்தை மீறிய உறவுகளுக்கு தார்மீக நியாயத்தை (இரு பாலினருக்கும்) அளித்ததும் அதற்கு முரணாக தோன்றும். பிரச்சனை என்னவென்றால் பெரியார் ஒரு கூட்டத்தை நோக்கி உரையாட வேண்டியிருக்கிறது. ஒரு பக்கம் அவர்களின் மதிப்பீடுகளை உடைக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் அவர்களின் மதிப்பீடுகளை தனது பார்பன எதிர்ப்பிற்கு, ஜாதிய எதிர்ப்பிற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. அதனால்தான் 'சூத்திரன் என்றால் தாசிமகன்;' என்று மீண்டும் மீண்டும் மேடைதோறும் சொல்கிறார். அதே நேரம் வேசியாயிருப்பதிலும், வேசி மகனாய் இருப்பதில் கேவலம் எதுவுமில்லை என்றும் சொல்கிறார். பெரியாருக்கு தான் என்ன பேசுகிறோம், எங்கே பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம் என்பதை பற்றி எல்லாவித தெளிவும் இருந்தது. அதற்கு ஏற்ப தனது நிகழ்த்துதல் கலையை வெற்றிகரமாய் நிகழ்த்திக் காட்ட முடிந்தது (இலக்கை அடைவதில் அது வெற்றி பெற்றதா என்பது வேறு விஷயம்.) பெரியாரின் செயல்பாடுகள் பற்றிய எந்த புரிதலும் தெளிவும் இல்லாத சீடர்கள், ஒரு மதவாதியின் மூர்கத்தோடு சமூகத்தை அணுகி கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்க, பகுத்தறிவு கொண்டு உண்மையை அடையமுடியும் என்கிற பார்வை இன்று பல தளங்களில் பொய்ப்பிக்கப் பட்டு, பகுத்தறிவின் வன்முறை பற்றியும், அதன் அதிகாரம் பற்றியும் பேசப்பட்டு, பகுத்தறிவு என்பதே இன்று கட்டுடைக்கப் பட்டு வருகிறது. யதார்த்தவாத எழுத்தை கொண்டு எப்படி யதார்தத்தை படம் பிடிக்க இயலாதோ, அதே போல பகுத்தறிவை கொண்டு உண்மையையும் அடையமுடியாது. ஆனால் யதார்த்தவாதம் யதார்த்தத்தை படம் பிடித்துவிட்டது போல் பவனை செய்யும். அது போல பகுத்தறிவு பார்வையும் தான் உண்மையை பேசுவது போல், தான் மட்டும்தான் உண்மையை பேசுவது போல் பாவனை செய்யும். இங்கேதான் அதன் ஆபத்து அடங்கியிருக்கிறது. இன்று பல சமூகவியல் கலாச்சார ஆய்வுகள் பகுத்தறிவை கட்டுடைத்து மறுபார்வைகளுக்கு அழைக்கிறது.

பகுத்தறிவு பூரவமாகவே பாத்தாலும் கூட, பகுத்தறிவு வெற்றிகரமாய் எந்த பிரச்சனயும் இல்லாமல் ஒரு கணித சட்டகத்தில்தான் செயல்பட முடியும். இயற்பியல் உட்பட்ட மற்ற துறைகளிலும், கணித சட்டகத்தில் இயங்கும் போது மட்டுமே, அங்கே அறிவியல் பூர்வமான ஒரு பகுத்தறிவு பார்வை செயல்படுவதாக கூற முடியும். ஆனால் கணித சட்டகத்தில் நாம் அரசியலும், இலக்கியமும், சமூகவியல் ஆய்வுகளும் செய்ய இயலாது. அதனால் பகுத்தறிவு என்பதன் பயன் ஒரு எல்லை வரைதான் இருக்க முடியும்.

இந்த இடத்தில் இந்துத்வவாதிகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப அவர்கள் மாறிக்கொள்கிறார். கோல்வால்கர் ஹிட்லரை புகழ்ந்து பேசியதற்காக இன்று அவர்கள் புகழ்வதில்லை. கோல்வால்கர் சொன்னதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்றய காலத்துக்கு ஏற்ப இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் நவீன கருத்தாக்கங்கள், நவீன அறிவியல் அனைத்தையும் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆராய்கிறார்கள். அந்த வகையில் மற்ற மத அடிப்படைவாதிகளிலிருந்து அவர்கள் வேறுபடுகிறார்கள். இந்த வேறுபாடு ஒரு சில விஷயங்களில் ஆபத்துக்களை தடுப்பதாகவும், ஒரு சில விஷயங்களில் இவர்கள் இன்னும் பெரிய ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். எப்படி என்று இந்த பதிவில் ஆராயப் புகமுடியாது. ஆனால் சொல்ல வந்த விஷயம் என்னவெனில், இந்துத்வவாதிகள் காலத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொள்கிறார்கள், திகவினர் (ஒருவகையில் கம்யூனிஸ்டுகளும்) ஒரே சூத்திரத்தை மத அடிப்படைவாதிகளை போல பற்றி கொண்டு, காலத்துக்கு ஏற்ற பரிசீலனைகளில் ஈடுபடாமல் இயங்கிவருகிறார்கள். இதில் யார் உயிர்த்து இருப்பார்கள், எந்த தத்துவம் சாகும் என்பதை தெரிந்துகொள்ள பரிணாம அறிவியல் தேவையில்லை.

(செய்திகளுக்கு ஆதாரம் :இன்றய நேற்றய டெகான் க்ரோனிகிள்)

Post a Comment

---------------------------------------
நர்மதா தரும் செய்தி.

நர்மதா பற்றிய ஒரு படத்தை பார்க்க.


நர்மதா குறித்த செய்திகளை கொஞ்ச நாட்களாக காணும். செய்திகள் இல்லையென்றால் பிரச்சனையில்லை என்று பொருள் இல்லை. அணை கட்டும் பணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. புலம் பெயர்க்கப்பட்டவர்களின் மறுவாழ்வு என்பது ஏமாற்று வேலையாகத்தான் இருக்கிறது. மேதா பட்கர் உண்ணாவிரத மிருந்த சம்பவ காலத்தில் இவ்வாறு எழுதியிந்தேன்.

"ஒருக்காலும் அரசு அணைக்கட்டு தொடர்பான தன் நிலையை தளர்த்தப் போவதில்லை. மிஞ்சி போனால் புலம் பெயர்க்கப் பட்ட மக்களுக்கான மறுவாழ்வு பற்றி மீண்டும் வாக்குறுதி அளிக்கலாம். அது நடைமுறையில் காலப்போக்கில் என்னவாகும் என்பதை மீண்டும் மீண்டும் வறலாறு சொல்கிறது."

இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் நாம் சொல்லும் ஆருடம் பொய்த்து போகும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விட மிகுதியானது எது? ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கான வாய்ப்பு இல்லவே இல்லாமல்தான் இருக்கிறது. அரசு தங்களால் தேவையான மறுவாழ்விற்கான ஏற்பாடுகளை செய்ய முடியாது, அதற்கான நிலம் இல்லை என்று தெளிவாகவே சொல்லிவிட்டு, மீண்டும் மறுவாழ்வு பஜனையை சுப்ரீம் கோர்ட்டில் பாடுகிறது. மேதாவின் உண்ணவிரதம் தந்த அழுத்தத்தால், தனது அராசாங்கத்தின் மந்திரிகள் நேரில் சென்று பார்த்து, அவர்கள் வாக்குமூலம் தந்த யதார்த்தத்தை உச்சநீதி மன்றத்தில் மாற்றி பேசுகிறது. இது குறித்து விரிவாய் பேசுவது இந்த பதிவின் நோக்கமல்ல. விரிவாய் பேசினால், தினம் ஒரு பதிவாக ஒரு வருடத்திற்கு எழுதும் அளவிற்கு விஷயமிருக்கும். இணயத்தில் எல்லாம் பேசப் பட்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடி தேவையான அளவு விஷயங்களை அறியலாம். நர்மதா மூலம் இந்திய அரசு என்ன வகை செய்தியை மக்களுக்கு, குறிப்பாக போராடும் மக்களுக்கு தருகிறது என்று பார்க்க வேண்டும்.

அரசு என்ற வலிமை மிகுந்த நிறுவனத்தை எதிர்த்த போராட்டத்தில், உரையாடல் என்பது இரு பக்கமும் ஏற்படும் நிர்பந்தங்களின் அடிப்படையிலேயே நிகழுகிறது. இவ்வாறான நிர்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்த எந்த ஒரு போராட்டமும் அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. (நெருக்கடிகள் தேவையில்லாமல் உரையாட முடியும் என்றால் போராட்டமே இல்லாமல் அரசை அணுகியிருக்க முடியும்.) இவ்வாறான நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் வன்முறை எத்தகைய பங்கை வகிக்கிறது என்பது சிக்கலான கேள்வி. அரசு (அதிலும் நாம் அனுபவிக்கும் 'ஜனநாயக அரசு') வன்முறையை எளிதில் கட்டவிழ்த்து விடாது. வன்முறையை அவிழ்த்து விட அதற்கு போராட்டம் ஒரு தீவிரமான நிலையை எட்ட வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் அரசின் எதிர்வினை அதீதமாய் இல்லாதிருப்பதை தங்களுக்கு சாதகமான நிலை என்று நினைத்து, முட்டாள்தனமாய் போராளி குழுக்கள் சகட்டு மேனிக்கு வன்முறையை பிரயோகித்து, அரசு எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த தீவிரமான சூழலை ஏற்படுத்தி தருகிறது. அதற்காகவே காத்திருக்கும் அரசு எதிர்பாராத வன்முறை கொண்டு மொத்த போராட்டத்தையும் ஒடுக்குவது ஒரு வழக்கமாக பல சந்தர்ப்பங்களில் இருகிறது. ஆதிவாசிகள் போன்ற அதிகாரமற்ற மக்களின் போராட்டங்களை அடக்க இத்தகைய தீவிரமான ஒரு நிலையை எட்டவேண்டிய அவசியம் கூட இல்லை. மிக மெலிதான வன்முறை தென்பட்டால் அது போதுமானதாயிருக்கிறது. துப்பாக்கி சூடு மூலம் பலரை கொல்லும் அளவிற்கான அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட முடிகிறது.

இந்த வகையில் வன்முறையும் பயங்கரவாதமுமே வெல்வது உலகின் நியதியாக இருப்பது போலவே ஒரு தோற்றம் இருகிறது. உதாரணமாய் ஒரு தீவிரவாத குழுவுடன் அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருவது என்பது பயங்கரவாதத்தின் வெற்றியாகவே கருதமுடியும். தீவிரவாதக் குழுவின் தார்மீக நியாயங்களை உணர்ந்து எந்த அரசும் இறங்கி வந்த வரலாறு இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவிலும் அப்படித்தான், இலங்கையிலும் அப்படித்தான். தமிழர்களுக்கான நியாயங்களை உணர்ந்து புலிகளுடன் சிங்கள அரசு பேச வரவில்லை. போர்களத்தில் புலிகளை தாக்கு பிடிக்க இயலாமலே இறங்கி வருகிறது. அந்த வகையில் இது புலிகளின் பயங்கரவாதத்திற்கான வெற்றி மட்டுமே. புலிகளை சிங்கள அரசு வெற்றி கொண்டிருந்தால் பயங்கரவாதத்தை ஒழித்து கட்டியதாக சிலர் புருடா விடுவார்கள். ஆனால் அதன் பொருள் புலிகளின் பயங்கரவாதத்தை விட சிங்கள் அரசின் பயங்கரவாதம் பலம் வாய்ந்தது என்றுதான் அதை கொள்ள முடியும். பின்லேடனின் பயங்கரவாதத்தை விட அமேரிக்க அரசின் பயங்கரவாதம் பன் மடங்கு பெரியது. அதனால் உரையாடலுக்கு இறங்கி வரும் கட்டாயம் ஒரு நாளும் அமேரிக்காவிற்கு ஏற்பட்டதில்லை. தொடர்ந்த வெற்றிகளுடன் கேள்வி கேட்க நாதியில்லாமல் பயங்கரவாத பட்டியலின் முதலிடத்தில் அமேரிக்கா வீற்றிருக்கிறது. இந்த உதாரணங்களை கொண்டு பார்தால் பயங்கரவாதம்தான் வென்று வருவதாக தோன்றும்.

இப்படி நினைப்பதற்கு எதிருதாரணமாக காந்தியின், அவரால் உந்தப்பெற்ற மார்டின் லூதர் கிங், மண்டேலா போன்றவர்களின் போராட்டங்களின் வெற்றிகள் இருப்பதாக தோன்றுகிறது. இங்கே வன்முறை கலக்கவில்லை என்றாலும், இந்த வகை போராட்டங்களும் நெருக்கடிகளை அரசுக்கு ஏற்படுத்துவதன் மூலமே அரசை நிர்பந்திக்க முடிகிறது. ஆனால் வன்முறையால் போராட்டத்தை எதிர்கொள்ள நினைக்கும் அரசை இது குழப்பிவிடுகிறது. வன்முறையை எதிர்கொள்வது வலிமையான அரசுக்கு மிகவும் எளிது. ஒரு பக்கம் போராட்டத்தின் வன்முறை மூலம் நிகழும் பாதிப்புகள் பற்றி ஒரு அரசுக்கு கவலைகிடையாது. அதே நேரம் அந்த பாதிப்புகளை வாய்பாக கொண்டு அதைவிட பல மடங்கு வன்முறையை செலுத்தி மொத்த எதிர்ப்பையும் அமுக்கிவிட முடிகிறது. ஆனால் வன்முறையற்ற போராட்டத்தில் இத்தகைய ஒரு வாய்ப்பு அரசாங்கத்திற்கு கிட்டுவதில்லை. ஏனெனில் போரட்டம் பலதரப்பட்ட (வன்முறையற்ற) வழிமுறைகளை கொண்டு, அரசு இயங்கும் சட்டகத்திற்குள்ளாகவே அரசுக்கு நெருக்கடிகளை கொடுக்கிறது. இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் அரசுக்கு குழப்பம் இருப்பது இயல்பானதே.

காந்தி அகிம்சையை தனது தத்துவ/அரசியல் பார்வையின் அடிப்படையாக கொண்டிருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் காந்தி அகிம்சை மீதான காதலினால் மட்டும் ஒரு வன்முறையற்ற போராட்டத்தை தேர்ந்தெடுக்கவில்லை. வன்முறையின் இந்த பரிமாணங்களை உணர்ந்தும் அதை தேர்ந்தெடுத்தார். அவருடைய போராட்டம் உலக அளவில் பலருக்கு உந்துதலாய் இருக்கிறது. (காந்தி மீது வேறு விமர்சனங்கள் இருப்பதை, குறிப்பாய் அம்பேதகாருக்கு எதிராக அவர் செயல்பட்டது, பூனா ஒப்பந்தம் இது போன்றவையை, இந்த இடத்தில் பேசவில்லை. போராட்ட வழிமுறை பற்றி மட்டுமே பேசுகிறேன்.) காந்தியின் வன்முறையற்ற போராட்டம் பலருக்கு, குறிப்பாய் நவீன இந்துத்வவாதிகளுக்கு மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு முட்டாள்தனமாக தெரிந்தது. போராட்டங்களின் மூலம் போராடுபவர்களுக்கும் அரசுக்கும் வன்முறையோடு இருந்த தொடர்பை காந்தி புரிந்து வைத்திருந்த விஷயம் அவர்களுக்கு பிடிபடவில்லை.

ஆனால் வன்முறையற்ற போராட்டத்திற்கு காந்தி மட்டுமே உதாரணமாய் காட்டபட்டு, பெரியாரின் போராட்டமும் வன்முறையற்றது என்ற உண்மை திட்டமிட்டு மறக்கடிக்கப் படுகிறது, திரிக்கப்படுகிறது. ஆனால் பெரியார், காந்தி போல், தனது அரசியல் தத்துவங்களை அகிம்சையின் அடிப்படையில் கொண்டிருக்கவில்லை. பெரியாருக்கு அகிம்சையா, வன்முறையா என்பது ஒரு பிரச்சனையில்லை. ஆனால் காந்தியை போலவே, சொல்லப்போனால் காந்தியை விட தெளிவாக போராட்டங்களின் வன்முறைகளின் பின் மற்றும் பக்க விளைவுகளை பெரியாரும் புரிந்து கொண்டிருந்தார். அதனால்தான் 'பிராமணாள் ஹோட்டல்' என்ற ஒற்றை போர்டை நீக்க, மிக எளிதாக தாக்குதல் நடத்தி அதை சாதிக்க கூடிய ஒரு படைய தன் பக்கம் வைத்துருந்தும் நூறு நாட்களுக்கு வன்முறையற்ற போராட்டத்தை நடத்தினார். (அதையும் சில பார்பன புத்தி திரித்து, பெரியார் மூக்குடைந்ததாக அல்பமாய் இருமாப்புறுவதை கவனிக்க வேண்டும்.)


காந்தி தனது புரிதலை பேசியதில்லை, பெரியார் பேசவும் செய்திருக்கிறார். குறிப்பாய் பிரிடீஷ் அரசு அடக்கு முறை கொண்டு வந்த போது. கம்யூனிஸ்டுகள் எதிர்த்து தலைமறைவு போராட்டம் செய்ய முனைந்த போது, பெரியார் அரசுடன் ஒத்துழைக்க முன்வந்தார். அப்போது அவர் பேசிய பேச்சுக்களில் இந்த புரிதலை தெளிவாக முன்வைத்திருக்கிறார். (தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. கைவசம் சிக்கினால் தருகிறேன்.) கம்யூனிஸ்டுகள் வழக்கமான மூர்க்கத்தில் பெரியார் செய்ததை துரோகமாக மட்டும் பார்கின்றனர். 'லட்சக்கணக்கான தோழர்களின் உயிர்களை பலியிட்டுத்தான் ஒரு லட்சிய சமுதாயத்தை நாம் அடையவேண்டுமெனில் அது நமக்கு தேவையில்லை" என்று அவர் சொன்னதை நியாயமான முறையில் அறிவுபூர்வமாய் அவர்களால் எதிர்கொள்ள முடியாது.

பெரியாருக்கு அகிம்சை மீது காதல் எதுவும் கிடையாது. போரட்டத்தின் இலக்குகளை அடைய வன்முறையற்ற போராட்டம் உதவக்கூடும் என்றால் மென்முறையை கைகொள்ளலாம். மென்முறை உதவவில்லை, வன்முறைதான் உதவும் என்றால் வன்முறையையும் கைகொள்ளலாம் என்பதுதான் அவர் பார்வை. அதனால்தான் ராஜாஜியின் குலக்கல்விக்கு எதிரான போராட்டத்தில் தனது இரண்டு வருட போரட்டம் பலன் தராததால் வன்முறைக்கு அழைப்பு விடுத்தார். (எதிர்பார்த்தது போல் அந்த வன்முறை விளைவுறும் கலகத்தை முன்வைத்தே போராட்டத்தை நசுக்க ராஜாஜி எண்ணினார். ஆனால் முடிவில் அவர் பதிவி இழக்க நேரிட்டது.)

இத்தனையும் குறிப்பிட காரணம், அகிம்சை என்பதையும் ஒரு அடிப்படைவாதம் போல் பிடித்து தொங்குவதும் பயன் தரக்கூடியது அல்ல. மேதா பட்கர் மிக பெரிய அகிம்சை வழி போரட்ட எழுச்சியை உருவாக்கினார். அவருக்கு முன்னோடிகள் உண்டு, வேறு சிலரும் உண்டு. ஆனால் போராட்டம் மென்முறையில் செல்ல அவர் முக்கிய காரணம். ஜார்கண்டில் இருக்கும் நக்சல் பிரச்சனை நர்மதாவில் இல்லாததற்கு அவர் முக்கிய காரணம். அவர் இல்லாவிட்டால் வன்முறை துணைகொண்டு போராட்டம் நகர்ந்திருக்கலாம். வழக்கம் போல அதை எதிர்கொள்வது ஒரு அரசுக்கு எளிதானது, கலிங்காநகரிலும், கங்காவரத்திலும் எதிர்கொண்டது போல் எதிர்கொண்டிருக்கும்.

இந்துத்வவாதிகள் நர்மதா போராட்டத்தை புரட்டுகளால் எதிர்கொள்வதையும், அராஜகங்களை அவிழ்த்து விடுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், மன்மோகன் சிங்கும் நர்மதா விஷயத்தில், அற்புதமான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, சாதனை படைத்து, வரலாற்றில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் அது நடந்து கொண்ட விதத்தின் மூலம் மிக மோசமான ஒரு செய்தியை நாட்டு மக்களுக்கு தருகிறது. அரசியல் நிர்பந்தத்திற்கும், கும்பல் வன்முறைக்கும், உயர் நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளுக்கும்தான் ஒரு அரசு மரியாதை அளிக்குமே அன்றி, அதிகாரமற்ற விளிம்பு நிலை மக்களின், மிக பெரிய மென்முறை போராட்டத்திற்கு அல்ல. தீவிரவாதத்தின் வேர்களை ஆராயவேண்டும் என்று சொல்பவனை எல்லாம் திட்டி தீர்ப்பதை பிழைப்பாக வைத்திருப்பவர்கள், இந்த கட்டத்தில் எந்த வித சுயபரிசீலனைக்கும் தங்களை உட்படுத்த மாட்டார்கள் என்று தெரியும். தங்களின் இப்போதய குரலும் செய்கையும் மௌனமும்தான் தீவிரவாதத்திற்கு சுவாசம் அளிப்பதை ஒரு நாளும் அவர்கள் உணரப்போவதில்லை. உணர்ந்தாலும் சுயநலத்தால் அது குறித்து பேசப்போவதில்லை.

Post a Comment

---------------------------------------
பெயரிலிக்காக - Himeji castle.

இரைஷேமஸே பதிவில் பெயரிலி, " கோட்டை நன்றாக இருக்கிறது. உச்சியையும் சேர்த்து எடுத்திருக்கலாம்"


















































ஒழுங்கான படம் இருக்கும் போது எதுக்காக அய்யா தலை தட்டின படத்தை போட்டாய்?, என்று ஒரு நியாயமான கேள்வி எழலாம். படத்தில் படர்ந்து இருக்கும் அந்த மரங்களுக்காக! மரத்தின் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நினைவிலில்லை. ஜப்பானை பற்றி என்ன பார்த்திருந்தாலும் அதன் ஒரு பகுதியாய் இந்த மரமும் அறிமுகமாகியிருக்கும். பல வகை வனங்கள் (Koen) ஜப்பானின் அழகியல் உணர்வை பறை சாற்றுபவை. அவற்றில் முக்கிய பங்கு இந்த மரங்கள் வகிக்கின்றன. இந்த மரங்கள் நித்தியதன்மையை குறிப்பதாக ஜப்பானியர்களின் நம்பிக்கை.

குறுப்பன் மன்னிக்கணும். உள்ளே போயிருக்கிறேன், ஆனால் படம் எடுக்க அனுமதியில்லை.

Post a Comment

---------------------------------------

Saturday, June 03, 2006

ஸ்ரீ ரங்க ரங்க..!
















மேலே வெள்ளை கோபுரம், கீழே ராஜகோபுரம். ராஜ கோபுரம் அண்மையில் கட்டபட்ட கதை நமக்கு தெரியும். இளயராஜா கூட ஏதோ ஒரு அடுக்கிற்கு உபயம் செய்தார். வெள்ளை கோபுரம் பற்றிய கதை கீழ்கண்டவாறு கேள்விப்பட்டேன். வரலாற்று பூர்வமான தகவல் அல்ல, கேள்விப்பட்டது மட்டுமே. மாலிக் காஃபூர் ஸ்ரீரங்க கோவிலை கொள்ளையிடும் நோக்கில் படையெடுத்து வந்த போது, சில காரணங்களால் படைகள் வந்து சேருவதை தாமதப்படுத்த வேண்டியிருந்தது. வழக்கம் போல அதற்கு ஒரு தேவதாசி தன் வழக்கமான திறமையால் தாமதப்படுத்தினார் என்று கேள்வி.(பெயர் நினைவிலில்லை, நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். ) அவர் நினைவாக வெள்ளை கோபுரம் கட்டபட்டது. பொதுவாக கோபுரம் வெள்ளை நிறத்தில் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.


Post a Comment

---------------------------------------
இராஷைமாஸே!

வெர்டிக்கோ பிரச்சனை இல்லாத போதே, க்யோத்தோ ரயில் நிலய எஸ்கலேட்டரில் ஐந்தாவது மாடியில் ஊறும் போது, நின்று கொண்டு கீழே பார்த்தபடி பேலன்ஸ் செய்வது கடினமாயிருந்தது.

















ஹிமேஜி கோட்டை, மேற்கின் நவீனம் ஜப்பானோடு கலப்பதற்கு முன்னாலான பொறியியல் அற்புதம் என்கின்றனர். (கலந்த பிறகான அற்புதங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை.) அது நமக்கு சரியாய் புரியாவிட்டாலும் ஒரு நவீன ஓவியம் போன்ற அதன் வடிவம் போதும், இந்த ஒரு விஷயத்தை மட்டும் பார்க்க நான்கு மணிநேரத்திற்கும் மேல் க்யோத்தோவிலிருந்து பயணம் செய்ய!





































கின்காகுஜி (Ginkakuji) என்னும் ஜென்வனத்தின் படத்தை ஒரு பழைய பதிவில் இட்டிருந்தேன். இதுவும் கின்காகுஜிதான், ஆனால் Kinkakuji. Gin என்றால் வெள்ளி, kin என்றால் தங்கம். Ginkakuji வெள்ளியால் ஆனது அல்ல. ஆனால் கீழே காணும் kinkakuji முழுமையாய் தங்கத்தால் ஆனது.



Post a Comment

---------------------------------------
ஒண்ணே ஒண்ணு.

ப்ளாகர் சொதப்பியதில் நான்கு முறை பதிவு வந்தது. அதில் மூன்றை நீக்கிவிட்டேன். ஒண்ணே ஒண்ணை மட்டும் விட்டு வைத்திருக்கிறேன். அதை இந்த சுட்டியில் வாசிக்கலாம். மன்னிக்கவும்.

Post a Comment

---------------------------------------
குவாண்டம் கணித்தல் - 1.

கணினிகளின் 'முழுமையான ஆதி கோட்பாட்டு வடிவத்தை' மனதில் கொண்டு, அதை உருவாக்கும் பணியில், சார்லஸ் பாபேஜ் (Babbage), 1833இல் இறங்கினார். 'அனலிடிகல் மெஷின்' (analytical Machine) என்ற அந்த இயந்திரத்தை உருவாக்கும் பணியில், தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்பணித்தார். ஆனால் அவரால் வாழ்வின் இறுதிவரை, தன் கனவை நனவாக்கி, அந்த பணியில் வெற்றி பெற முடியவில்லை. அவருக்கு பிறகும் யாராலும் அந்தப் பணி தொடரப் படாமல், அவர் கற்பனை செய்திருந்த இயந்திரத்தின் ஒரு அரைகுறை வடிவத்தை, அவருடைய வழிமுறை படியே 1991இல் செய்து முடிக்கப் பட்டது.

இவ்வாறாக பாபேஜால் உருவகிக்கப் பட்ட 'அனலிடிகல் மெஷின்' தொடங்கி, இன்றய சூப்பர் கணினிகள் வரை எல்லாமே, ஒரே வழி முறைப்படி, ஒரே தத்துவங்களின்படி, ஒரே அறிவியல் விதிகளின்படி இயங்குகிறது. பழசு எட்டடி பாய்ந்தால், புதுசு ஒருவேளை எட்டாயிரம் அடி பாயலாம்; பழசை விட புதுசுகள் மேனாமினுக்கலாம்; வேகமாய் வேலைகளை செய்யலாம்; கைக்கு அடக்கமான வடிவில் இயக்குவதற்கு எளிமையாக விற்பனையில் உலா வரலாம். ஆனால் எல்லா கணினிகளும் அடைப்படையில் பிட்(Bit)களாலானது. (பிட் குறித்து எல்லோருக்கும் தெரியுமென்றாலும், பிறகு விரிவாய் வருவோம்.) எல்லா கணணிகளின் தொடர்ச்சியான செயல் திட்டங்களும் பணிகளும் இந்த பிட்களை கொண்டே நடக்கிறது. இந்த வகையில், இந்த (சாதா)பிட்களை வைத்து இயங்குகின்ற காரணத்தால், அவை எல்லாவற்றின் முன்னேற்றங்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது.

உதாரணமாய் வடிவளவில் என்னதான் குறுகிக் கொண்டே போனாலும், அதனால் ஒருநாளும் அணுவின் அளவை அடைய முடியாது. அதே போல கணிக்கும் வேகத்திலும் இயல்பியல் விதிகளால் ஒரு எல்லை இருக்கிறது. மேலும் 'நுண் அளவுகள்' என்பதை அடையும் போது அல்லது 'அதிவேகத்தை' அடையும் போது, நமது 'அன்றாட' வாழ்க்கையை தீர்மானிக்கும் (நியூட்டன் தந்த) அறிவியல் விதிகள் அங்கே எடுபடாது. குவாண்டம் விதிகளால் இயங்க வேண்டிய அவலம் அல்லது அற்புதம் அதற்கு நேர்ந்து விடும். இவ்வாறாக நமது சாதாரண கணணிகளின் களியாட்டங்களுக்கு எல்லாம் ஒரு எல்லை இருப்பதால், அதன் பலனாக அவைகளின் கணிக்கும் திறனுக்கும், அறிவியல் விதிகள் ஒரு எல்லையை நிர்பந்திங்கிறது. அவைகளால் ஒரு கால கட்டத்திலும் சில 'மகா சிக்கலான' கணித்தல் வேலைகளை செய்ய முடியாது. மொட்டையாக சிக்கல் என்று சொல்லக்கூடாது, ஒரு கணினிக்கு சிக்கலாக இருப்பது இன்னொரு எதிர்கால கணினிக்கு சிக்கலில்லாமல் இருக்கலாமே என்று தோன்றினால், அது நியாயமானதுதான். ஆனால் இங்கே சிக்கலின் அளவை பற்றி பேசவில்லை. சிக்கலின் தன்மை பற்றி பேச வேண்டியுள்ளது. அதாவது 'எவ்வளவு சிக்கல்' என்பது அல்ல நம் பிரச்சனை, 'எப்படிப் பட்ட சிக்கல்' என்பது; சிக்கலை அளப்பது அல்ல, சிக்கலை வகைப்படுத்துவது.

ஆகையால், நமக்கு கணினிகளால் ஆகவேண்டிய பணிகளின் சிக்கல்களை வகைப்படுத்த, நாம் ஒரு வழிமுறையை கொள்ள வேண்டியிருக்கிறது. நேரடியாய் அதை பற்றி பேசும் முன், நமது வழக்கமான உதாரணத்திற்கு வருவோம்., உதாரணமாய் இரண்டு எண்களை பெருக்க வேண்டும் என்றால், அது தற்காலத்தில் இருக்கும் கணினிகளுக்கு 'பெரிய சிக்கலான' விஷயமாக இருக்க முடியாது. கொஞ்சம் அதிவேக கணினி, அல்லது பல கணினிகள் கொண்டு எத்தனை பெரிய இரண்டு எண்களானாலும், பெருக்கி விடலாம். ஆனால் குறிப்பிட்ட எண்ணை, அதன் பகா எண்களின் பகுதிகளாக( prime factors), பகுப்பது என்பது பெரிய சிக்கலான சமாச்சாரம். வார்த்தையால் விளையாடுவது என்றால், பெருக்குவது என்பது ஒரு 'பாலினாமியல் (polynomialy complex) தன்மை' கொண்ட சிக்கலான பணி; பகுப்பது என்பது 'எக்ஸ்போனென்ஷியல் (exponentialy complex) தன்மை' கொண்ட சிக்கலானது என்று சொல்ல வேண்டும். இந்த இரண்டு வகை சிக்கல்களை என்னவென்று விலாவாரியாய் விளக்குவதற்கு முன்னால், இப்போதைக்கு ஒரு தகவலாய் சொல்லவெண்டியது என்னவென்றால், பாலினாமியல் தன்மை கொண்ட சிக்கல்களை நமது சாதா கணினிகளால் (அதாவது குவாண்டம் கணினி இல்லாத சாதா கணினிகளால்) தீர்க்க முடியும்; எக்ஸ்போனென்ஷியல் சிக்கல்களை அதனால் தீர்க்க முடியாது. ஏன் என்று, வாசிப்பவர்களின் உற்சாகத்தை பொறுத்து, பிறகு பார்ப்போம்.

இதுவரை சொன்னதில் ஏதாவது புரியாமல் இருந்தால் அதை அப்படியே மறந்துவிட்டு, நமது இப்போதய பிரச்சனையில் கவனம் செலுத்துவோம். அதாவது நாம் கணினிகளுக்கு சில பணிகளை இடுகிறோம். (அதற்காகத் தானே கணினியை கண்டு பிடித்து வைத்திருக்கிறோம்!). அவ்வாறு கணினிகளுக்கு நாம் இடும் பணிகளின் 'சிக்கல்தன்மை' (complexity) இரண்டு வகைப்பட்டது. அந்த இரண்டு வகை பற்றி இப்போது புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். இதில் ஒன்றுக்கு 'பாலினாமியல் சிக்கல்' என்றும், இன்னொன்றுக்கு 'எக்ஸ்போனென்ஷியல் சிக்கல்' என்றும் பெயர். இந்த பெயர்களை தொடர்ந்து பல இடங்களில் நாம் பயன்படுத்தும் போதெல்லாம் பேஜார் செய்யப் போவதால், நமக்கு வசதிப்படும் படி (Polynomial சிக்கலை) பாலி சிக்கல் என்றும், (exponential சிக்கலை) அடுக்கு சிக்கல் என்றும், சுருக்குத் தமிழில் இப்போதைக்கு அழைப்போம். நல்ல தமிழ் சொல்லை அருள் செல்வன் போன்ற நண்பர்கள் தந்தால், பிறகு அதற்கு மாறிக் கொள்வோம். மிகவும் கறாரான கணித மொழியில் சொல்வது எனக்கு மட்டுமில்லாமல், வாசிக்கும் பலருக்கும் மண்டை காய்வதாக இருக்கும் என்பதால், நமது இரண்டு உதாரணமான பெருக்குதல், பகுத்தல் இவற்றை வைத்து குண்ட்ஸான மொழியிலேயே விவரிக்கிறேன்.

இரண்டு எண்களை பெருக்கும் பணியை ஒரு கணினியிடம் அளித்தால், அது அந்த வேலையை எப்படி செய்கிறது என்று பார்போம். 3ஐ 4ஆல் பெருக்க வேண்டுமெனில், கணினிக்கு அடிப்படையில் பெருக்கத் தெரியாது. அதனால் தனது கூட்டும் திறன் கொண்டே பெருக்குகிறது. அதாவது 3ஐ, 4கால் பெருக்க, கணினி மூன்றை நான்கு முறை கூட்டுகிறது. இது எப்படியிருந்தாலும் நாம் மனதில் வைக்க வேண்டியது, 3ஐ 4கால் பெருக்க அது ஒரு குறிப்பிட்ட நேரத்தை (மிக மிக குறைந்ததாயினும்) ஒரு கணணி எடுத்துக் கொள்கிறது. ஆனால் கூட்டுவது கணினிக்கு ஒரு பெரிய வேலை இல்லை. அதனால் 3ஐ (1லிருந்து 9வரையிலான) எந்த ஒரு இலக்க எண்ணால் பெருக்கவும் கிட்டத்தட்ட அதே நேரத்தையே எடுத்து கொள்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.

ஒரு இரண்டு இலக்க எண்ணுக்கு வருவோம். 3ஐ, 34ஆல் பெருக்க வேண்டும். 34ஐ 30+4 என்று எழுதலாம். அதாவது (3 into 10) +4. இப்போது 3ஐ, 34ஆல் பெருக்க நம் கணணி முதலில் இரண்டு வேலைகள் செய்ய வேண்டியுள்ளது.முதலில் 3ஐ 3ஆல் பெருக்க வேண்டும்(=9), பிறகு 3ஐ 4கால் பெருக்க வேண்டும் (=12) என்று இரண்டு வேலைகள் இருக்கிறது. அதற்கு பிறகு 90ஐயும் 12ஐம் கூட்ட வேண்டும்(ஏன்?). அவ்வளவுதான்! கூட்டுவது கணணிக்கு ஜுஜுபி வேலை. அதனால் நமது கணணி இரண்டு இலக்க எண்ணை பெருக்க, ஒரு இலக்க எண்ணை பெருக்குவது விட, கிட்டதட்ட இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்று கொள்ளலாம். அதாவது ஒரு இலக்க எண்ணை பெருக்குவது போல அதற்கு இரண்டு மடங்கு நேரம் ஆகும். இப்போது மூன்று இலக்க எண்ணை பெருக்க 3 மடங்கு வேலை/நேரம், 10இலக்க எண்ணை பெருக்க 10 மடங்கி வேலை/நேரம் ஆகும் என்றால் புரியும்தானே! இதை பொத்தாம் பொதுவாய் சொல்ல வேண்டுமெனில், 3ஐ, ஒரு இலக்க எண்ணால் பெருக்க அதற்கு ஒரு நொடி (அவ்வளவு ஆகாது, ஒரு பேச்சுக்கு) ஆகிறது என்றால், 'N' இலக்க எண்ணை பெருக்க அதற்கு சுமார் N நொடிகள் ஆகிறது. அதாவது இலக்கங்கள் கூட கூட அதற்கு ஏற்ப நேரமும், வேலையும் நேரடியாய் அதிகப்படுகிறது.

எட்டாம் வகுப்பு கணிதம் படித்த அனைவருக்கும் பாலினாமியல் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். இப்போது பொதுவாக பணியை எடுத்து கொள்வோம். அதில் ஒரு இலக்க எண் சம்பந்த படுவதாய் வைத்துக் கொள்வோம். (மேலே 3ஐ பெருக்கியது போல) ஒரு இலக்க எண்ணை கொண்டு அந்த வேலையை செய்ய ஒரு நொடி ஆகிறது என்றும் வைத்துக் கொள்வோம். இப்போது ஒரு N இலக்க எண்ணைக் கொண்டு அதே வேலையை செய்ய Nஇன் ஒரு பாலினாமியல் அளவு நேரம் எடுப்பதாக இருந்தால், அந்த பணியை பாலி சிக்கல் கொண்ட பணி என்று அழைக்கலாம்.


இப்போது இன்னொரு உதாரணத்திற்கு வருவோம், நாம் ஏற்கனவே சொன்ன பகுப்பது. ஒரு எண்ணை அதன் அடிப்படை பகா எண்களின் பகுதிகளாக பகுப்பது.
அதாவது 8என்றால், அதன் பகா எண் பகுதிகள் 2,2,2.

9என்றால் 3,3.

15 என்றால் 3,5.

21 என்றால், 3,7.

23 என்றால் 23 மட்டுமே(அது பகா எண்).

இந்த மாதிரி சில ராட்சச எண்களை பகுப்பது என்ற பணியை ஒரு கணினி எப்படி செய்யும் என்று பார்ப்போம். கணினிக்கு தெரிந்ததெல்லாம் (அதன் அடிப்படை செயல்களை கொண்டு) ஒரு குறிப்பிட்ட பகா எண் நாம் தரும் எண்ணை வகுக்குமா என்பது பார்க்க மட்டுமே. அதனால் நாம் ஒரு ராட்சச எண்ணை கொடுத்து அதை பகுக்க சொன்னால், அது அந்த ராட்சச எண்ணை விட குறைந்த (அவ்வளவு தேவையில்லை ராட்சச எண்ணின் suqare root வரை போதும்) எல்லா பகா எண்களை கொண்டு, அது வகுக்குமா என்று ஒவ்வொன்றாக பரிசோதிக்கும். இவ்வாறு பரிசோதித்து பாஸான எண்களை எல்லாம் ஒன்று சேர்த்து தரும்.

உதாரணமாய் 144 என்ற எண்ணை பகுக்க 12க்கு குறைவான எல்லா பகா எண்களையும் (2,3,5,7,11) ஒவ்வொன்றாக எடுத்து, அது 144ஐ வகுக்குமா என்று பரிசோதிக்கும். அப்படி பார்த்தால் 3யும் 2உம் மட்டுமே தேரும். அதாவது 144ஐ பகுத்தால் 2,2,2,2,3,3 என்று கிடைக்கும். இதைவிட சிறந்த வகையில் பகுப்பதற்கான தீர்வுமுறை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. (இருக்கிறது அதுவும் அடுக்கு சிக்கலை தவிர்க்க இயலாது என்ற வகையில் சிறந்தது இல்லை.) இப்போது எண் கணிதத்தின் உதவி கொண்டு (விளக்கத்தை ரொம்ப சிக்கலாக்க வேண்டாம் என்பதால் தவிர்க்கிறேன்) கீழ் கண்ட முடிவுக்கு வர முடியும்.

அதாவது ஒரு இலக்க எண் ஒன்றை பகுக்க ஒரு நொடி ஆகும் என்றால், 2N இலக்கங்கள் கொண்ட எண்ணை பகுக்க நமக்கு கிட்டதட்ட 2^N நொடிகள் ஆகும். இங்கே 2^N என்பது இரண்டின் Nவது அடுக்கை குறிக்கிறது. அதாவது 2இன் 2வது அடுக்கு 4, 3வது அடுக்கு 8, 4வது அடுக்கு 16, 5வது அடுக்கு 32... இப்படி.

இவ்வாறாக நாம் ஒரு பணியை ஒரு இலக்க எண் கொண்டு செய்யும் போது ஒரு நொடி ஆகும், N இலக்க எண்ணை கொண்டு அந்த பணியை செய்ய எதோ ஒரு எண்ணின் Nவது அடுக்கு நொடிகள் ஆகும் என்றால், அந்த பணி ஒரு அடுக்கு சிக்கல் கொண்ட பணி. அடுக்கு சில்கலில் என்ன பிரச்சனை என்றால் அது கூடும் வேகம் ராட்சதத் தனமானது. உதாரணமாக 2ஐ 100 பெருக்கினால் 200தான் வரும்.. 2இன் நூறாவது மடங்கு என்பது ரொம்ப ரொம்ப பெரிய எண். (கணக்கு பண்ணி கன்வின்ஸ் ஆகவும்!)

இதுதான் இந்த இரண்டு வகை சிக்கல்கள். இப்போது மேலே உள்ள சமாச்சாரங்களை மறந்து விட்டு நமக்கு வேண்டிய விஷயத்தை ஏற்கனவே சொல்லிவிட்டேன். நம்மிடம் இருக்கும் கணினிகள் பாலி சிக்கல் கொண்ட பணிகளில் புகுந்து கலாய்த்துவிடும். ஆனால் இந்த அடுக்கு சிக்கல் பணிகளை ஓரளவுதான் செய்ய முடியும். கொஞ்சம் பெருசாய் போனால், இந்த அகிலத்தின் மொத்த காலம் அளவிற்கு உலகில் உள்ள எல்லா கணினிகளும் சேர்ந்து பணி செய்தால் கூட வேலை நடக்காது. உதாரணமாய் ஒரு மில்லியன் இலக்கங்கள் கொண்ட ஒரு எண்ணை பகுக்க, காலம் என்ற ஒன்று உருவாகி (அது ஜீரோவில் உருவாகியிருந்தால்) இது வரை கழிந்த அளவிற்கான நேரம் வேலை செய்தாலும், இனி கண்டு பிடிக்கப் போகும் எந்த காலத்து கணினியானாலும் வேலையை முடிக்க முடியாது.

ஏன் பாலி சிக்கல் முடிகிறது, அடுக்கு சிக்கல் முடியவில்லை என்றால் பிட்களை கொண்டு அவ்வளவுதான் சாதிக்க முடியும். ஆனால் ஒரு குவாண்டம் கணினியால் அடுக்கு சிக்கல் கொண்ட (எல்லாவற்றையுமா என்று இன்னமும் தெரியாது) சில பணிகளை குறிப்பிட்ட காலத்தில் கச்சிதமாய் செய்து முடிக்க முடியும. உதாரணமாய் பகுக்கும் வேலையை குவாண்டம் கணினி நமக்கு வசதியாகும் கால இடைவெளிக்குள் முடித்து கொடுத்து விடும். ஏனெனில் அதனிடம் க்யூபிட் இருக்கு! இப்படி சொல்லி அதற்கு ஒரு தீர்வுமுறை கண்டு பிடித்தவர் பெயர் பீட்டர் ஷார். ஏன் எப்படி என்று மேற்கொண்டு அடுத்த பதிவில் பார்போம்

Post a Comment

---------------------------------------

Friday, June 02, 2006

Bonjour!

1930களில் பெரியார் பொதுவுடமைக் கோட்பாடுகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்த காலம். மார்க்ஸ் எங்கெல்ஸ் இணைந்து எழுதிய Communist Manifesto, தமிழில் முதலில் 'மார்க்ஸ் எங்கெல்ஸ்' அறிக்கை' என்ற பெயரில் பெரியாரால்தான் வெளியிடப்பட்டது. (பிறகே 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' சிவப்பு கலரில் தமிழில் வெளிவந்தது.) இதன் ஒரு பக்கமாக பெரியார் ரஷ்யா சென்றபோது, அங்கேயிருந்த 'பொதுவுடமை சமுதாயத்தை' பார்த்து, மனதை பறி கொடுத்து ரஷ்யாவில் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார்.(கிடைக்கவில்லை).

கிட்டதட்ட அதே போன்ற உணர்வு, இந்தியாவை விட்டு முதன் முதலாக பிரான்ஸில் வாழ நேர்ந்த போது எனக்குள் தோன்றியது. பெரியாருடன் இப்படி அல்பத்தனமாக என்னை ஒப்பிட்டு கொள்வதற்கு தீவிர பெரியாரியர்கள் மன்னிக்கவும். பெரியார் ரஷ்யா சென்று வந்த பிறகான 40 வருட இயக்கத்தில், சில இடங்களில் சோவியத் அமைப்பு, அவர் சந்தித்த ஸ்டாலின் பற்றி சின்ன விமர்சனங்களை பெரியார் வைத்திருந்தாலும், சோவியத்தின் சமூக அமைப்பு அதன் மக்கள் மீது செலுத்திய (இப்போது வறலாற்றில் இடம்பெற்றுவிட்ட) வன்முறை, படுகொலைகளை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. பொதுவுடமை அமைப்பு என்பதாக முயற்சி செய்யப்பட்ட அனைத்துமே (பேசப்பட்டது அல்ல), பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகள் கூட இல்லாத ஸ்டாலினிச அமைப்புகளாகவே, உண்மையில் விளங்கிய யதார்த்தம் தாக்க, நம்பிக்கை தரகூடிய சமூக அமைப்பு என்று எதுவுமே கண்ணில் படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.


அந்த வகையில் 'முதாளித்துவ யதார்தத்தை' ஒப்புக்கொண்டு பார்க்கும் போது, முதன் முதலாய் இந்தியாவை விட்டு போய் பிரான்சில் போய் இறங்கியபோது, அங்கே காண நேர்ந்த சுதந்திரம், பண்மை தன்மை, கலை, களியாட்டம் எல்லாமே என்னை ஆட்கொண்டு, அங்கேயே தங்கிவிட மாட்டோமா என்று தோன்றியது.

அந்த காலகட்டத்தில் என்னை சுற்றியிருந்த சூழல் காரணமாக, குறிப்பாக வட இந்திய வெறியை எதிர்கொள்வதை, சாதிய பேச்சுக்களை/சாதிய யதார்தத்தை காண நேருவதில், அன்றாட வாழ்வின் அளவுக்கு மீறிய ஹிபாக்ரசியை நானும் பூசிகொள்ள வேண்டிய கட்டாயத்திலிருந்து இருந்து விடுதலை பெற்று, இந்தியாவை விட்டு எங்காவது போய் இருக்க மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நேரம். (பெரியாருக்கும் ரஷ்யாவை பார்ப்பதற்கு முன்னால் இப்படி ஒரு பெரிய ஏக்கம் இருந்திருக்கத்தானே செய்திருக்கும்.) பிரான்சை போல இந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் இடம் வேறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இது குறித்த நான் சொல்ல விரும்பும் பல விஷயங்களை சாருநிவேதிதா எனக்கு முன்னால் தனது பாணியில், ஜெர்மனியுடன் பிரான்சை ஒப்பிட்டு சொல்லியிருக்கிறார். (பார்க்க 1. , 2. )


நான் பார்க்க நேர்ந்த பிரான்ஸ், பாரிஸும் அதன் அருகிலுள்ள ஒரு நகரமும். பெரிய அளவில் கருப்பர்களும், (வட ஆப்பிரிக்க) அரேபியர்களும் வாழும் இடம். ரேசிஸம் என்ற நான் கருதும் ஒன்றை, நான் அறிந்து பிரான்சில் காண நேர்ந்தது கிடையாது - இத்தாலியிலும், ஜெர்மனியிலும் இருந்த குறைந்த காலத்தில் காண நேர்ந்தது போல். (ஆனால் தெற்கு பிரஞ்சு பகுதிகளில் இனவாதத்தை அதிகம் காணமுடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த பதிவில் நான் பேசுவது முழுமையாய் பாரிஸ், அதை சுற்றிய பகுதிகளை மட்டுமே.) ஆனால் ஒரு லூ பான் 17 விழுக்காடு வோட்டு வாங்கியதை வைத்து மற்ற உலகம் (அதிலும் இங்கிலாந்து) தாங்கள் யோக்கியம் போல போட்ட கூச்சல் நாராசமானது.

இந்தியாவிலிருந்து மேற்கே போய் ஸெட்டிலான 'மேல்'ஜாதிகாரர்கள், மேற்கில் ரேசிசத்தை எதிர்கொள்வது பற்றி பேசுவதை போன்ற ஸிக் ஜோக் வேறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவர்களிடம் கொஞ்சநேரம் பேசினால் மிக மோசமான ஜாதிய உளவியலை கொண்டிருப்பதை காணலாம். (நாம் பொதுவாய் சந்திக்க கூடிய பெரும் விழுக்காடை பற்றி பேசுகிறேனே ஒழிய எல்லோரையும் இல்ல்லீங்க!) நான் பிரான்ஸில் இருந்த ஒரு வருடத்தில் ஒரு இடத்தில் கூட அரேபியர்களை பற்றி கருப்பர்களை பற்றி ஒரு பிரஞ்சுக்காரன் தவறாக கதைத்து கேட்டது கிடையாது. ஆனால் பாண்டிச்சேரி தமிழர்களிடமும், ஈழத்தமிழர்களிடமும் மிக சாதாரணமாக, அதிர்ச்சி அளிக்கும் வகையில் கேட்கலாம். (பாண்டிச்சேரி தமிழர்கள் ஈழத்தமிழர்கள் பற்றியும் கூட மோசமான கமெண்டுகளை வைக்க கூடியவர்கள். அந்த விஷயத்தில் மட்டும் ஈழதமிழர்கள் பாண்டி தமிழர்களிடமிருந்து வித்தியாசப்படுவர்.)


ஆனாலும் பிரஞ்சுக்காரர்கள் அரேபியர்களுடன், கருப்பின மக்களுடன் ஏன் சேர்ந்து வாழ முடியவில்லை, ஒவ்வொருவரும் ஏன் தனிப்பகுதிகளில் வாழ்கின்றனர் என்று கேள்விகள் உண்டு. அந்த வகையில் இனப்பிரச்சனைகள் உண்டு எனினும், அது பெருமளவில் ஒரு பொருளாதாரம் சார்ந்ததாகவே படுகிறது. எனது விருந்தோம்பி (host) பிரஞ்சுகார பகுதியில்தான் வீடு பார்த்தார். நமக்கு தோட்டமும் தொரவும் கொண்ட அத்தனை பெரிய வீட்டில் வாழக் காரணம் எதுவும் இல்லாததால், சென்ற இடத்தில் காசை மிச்சம் செய்யும் விதமாய் அரேபியர்கள், கருப்பின மக்கள் வாழ்ந்த பகுதியில்தான் வாழ்ந்தேன். அந்த பகுதி குறித்து ஒரு முன்கருத்து பிரஞ்சுகாரகளுக்கு இருக்கலாம். அது இனவாதம் சார்ந்ததாய் கூட இருக்கலாம். ஆனால் பொலிடிகலி கரெக்ட் பிரச்சனையால் - பிரஞ்சுகாரகளுக் கிடையிலேயே பேசிகொள்வதானாலும் - அதை வெளிப்படையாய் சொல்ல மாட்டார்கள்.

பிரான்ஸ் மட்டுமில்லாது பொதுவாய் மேற்கில் 'பொலிடிகலி கரெக்ட்' என்ற ஒரு வார்த்தையும் அடிக்கடி பயன்படுத்த படுவதையும், அது குறித்து விவாதிக்க படுவதையும், சிலவற்றை பேசுவது 'பொலிடிகலி நாட் கரெக்ட்' என்று கூறுவதையும் காணமுடியும். நமது சூழலில் (உதாரணமாய் திண்ணையில் மஞ்சுளா நவனீதன் ஒரு கட்டுரையில்) இந்த பொலிடிகலி கரெக்ட் என்று பேசுவதே வன்முறை என்பதாக குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

நான் பாரிஸ் மெட்ரோவில் பர்ஸை பறி கொடுத்ததை பற்றி தமிழ்/இந்திய நண்பர்களிடம் சொன்ன போதெல்லாம் ஒரு மாற்று உதாரணாம் இல்லாமல் எல்லோரும் 'கருப்பனா?' என்று உடனடியாக அத்தனை வெளிப்படையாக கேட்கிறார்கள். ஒரு பிரஞ்சுகாரரிடம் ஒருநாளும் அப்படி ஒன்றை கேட்க இயலாது. ஒருவேளை உள்ளே அப்படி ஒரு கருத்தை கொண்டிருந்தாலும், பொதுவாய் தோளை குலுக்கி உதட்டை பிதுக்கி குறிப்பாய் அதை உணர்த்த முயற்சிக்க கூடுமே ஒழிய, நேரடியாய் ஒரு நாளும் பேசமாட்டார். பொலிடிகலி கரெக்டாக இருப்பது என்பது அவர்கள் தின வாழ்வின் மூச்சில் கலந்த விஷயம்.

யாருக்கும் எந்த வித குத்தல் இல்லாமல் நம் ஊர் எல்லாவகை ஊடகத்திலும் இந்த ஃபேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பரங்கள் வருகிறது. கருப்பாய் இருப்பதை கேவலப்படுத்தியும் சிவப்பழகு பற்றியும் இங்கே எந்த கவலையும் இல்லாமல் பேசுவது போல் பிரான்சில் பேசுவது சாத்தியமே இல்லை. வழக்கு தொடுக்கப்பட்டு விளம்பரம் தடை செய்யப்படும். சோபாசக்தி சிலருடன் சேர்ந்து, ஈழதமிழ் பத்திரிகைகளில் ஜாதி குறிப்பிட்டு, ஜாதிவாரியாக தேர்வு செய்யும் திருமண விளம்பரங்களை தடை செய்ய முயற்சித்து கொண்டிருந்தார். (அதில் ஒரே ஒரு சிக்கல். சாதி பேசுவது இனவாதம் என்பதை நிறுவ வேண்டும்.) என் இணை, 80 விழுக்காடுக்கும் மேல் மக்கள் கருப்பாய் இருக்கும் தமிழகத்தில், கருப்பாய் இருப்பதால் பள்ளிநாட்களில் தான் அனுபவித்த பாகுபாடுகளை பற்றி சொல்வார். அதை எங்களின் பிரான்ஸ் அனுபவத்துடன் ஒப்பிடும்போது, எனக்கு பிரான்ஸ் சொர்கமாக தெரிந்தது. பலமுறை இதை பற்றி பேசும் போது சோபாசக்தி சொன்னால் ஒப்புகொள்ள மாட்டார். அரசு வன்முறை, அரேபியர்கள் கருப்பர்கள் மீதான ஒதுக்கம் என்று பலதை அவரால் அடுக்க முடியும். நான் சொல்வதெல்லாம் மிக எளிது. பிரான்ஸில் செட்டிலாக பின், இந்த வெள்ளை ஆதிக்கம் மற்ற விடுதலை அரசியல்களை பற்றி வசதியாய் பேசலாம்.

தவிர பிரான்சின் கலை அரசியல் சூழல் பற்றி பேசவும் வேண்டுமோ! எல்லாவற்ரையும் கலாபூர்வமாக அவர்களால்தான் செய்ய முடியும். கலைத்துவமாய் இருக்கும் பாரிஸ், அதே நேரம் எல்லா காலம்களிலும் ஏதாவது ஒரு அரசியல் உணர்வுடன் அலையும். எனக்கு பிரான்ஸை விட்டு கிளம்பியே ஆக வேண்டும் என்ற நிலை வந்த போது அழுகையே வந்துவிட்டது. அப்போது 'கன்னத்தில் முத்தமிட்டால்' வெளிவந்திருந்த நேரம். ஒவ்வொரு காலகட்டத்தின் ஞாபகங்களை, பின்னர் நனவிடை தோய, சினிமா பாட்டின் இசை இடுக்குகளின் வைப்பது நம் வழக்கம். எனக்கு 'விடை கொடு எங்கள் நாடே' என்ற பாடல் பிரான்ஸை விட்டு வெளியேறுவதையே நினைவுபடுத்தும்.

Post a Comment

---------------------------------------
செந்தூரப்பூவே -2.

இளயராஜா மீது அபிமானம் கொண்ட சிலரில் கூட, அவரை பற்றி நல்ல விதமாய் சொல்வதாக நினைத்து கொண்டு, பொதுவாய் சொல்வது; ஒரு கட்டத்தில் விஸ்வநாதனின் இசை மக்களுக்கு அலுப்பு தருவதாக சென்று கொண்டிருந்தது; இந்தி பாடல்களின் பக்கம் தமிழ் மக்களின் ரசனை போய்க் கொண்டிருந்த நேரத்தில், இளயராஜா வந்து தன் பக்கம் மக்களை திருப்பி, தமிழ் பாடல்களை செவி மடுக்க வைத்தார் என்பது; இப்படி சொல்வதில் பகுதி உண்மை கொஞ்சம் இருந்தாலும், பல இடங்களில் தொடர்ந்து கேட்கும் இந்த அலுப்பு தரும் வாதத்தில் எந்த அளவு நியாயம் இருக்கிறது என்று பார்போம்.

முதலில் எம். எஸ்.வியின் இசை அலுப்பு தரும் வகையில் போய்கொண்டிருந்ததா என்பது மிகவும் கேள்விக் குரியது. அவரது இசை காலத்துக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டு கொண்டிருந்தது, அவர் தொடர்ந்து பல ஹிட்களை அளித்துக் கொண்டிருந்தார் என்பதுதான் உதாரணங்களுடன் கூடிய உண்மை. 70களின் மத்தியில் (அவர் பயணத்தை துவங்கிய வடிவத்திலிருந்து) முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தை அடையவும் செய்தார். அதன் உச்ச கட்ட வெளிபாடாக 'நினைத்தாலே இனிக்கும்' 1979இல் இளயராஜா தோன்றி மூன்று ஆண்டுகள் கழித்து அமைந்தது. 80 களின் துவக்கத்திலும், விஸ்வநாதன் பிஸியாக இளயராஜாவிற்கு போட்டியாளராய் ஊடகத்தாலும் மக்கள் ரசனையாலும் பார்க்கப் பட்டு, சொல்லப் போனால் இளயராஜாவை விட அதிகம் மதிக்கப்படுபவராய், ராஜா பிரபலமாகி பல வகை இசைகளை அமைத்திருந்தாலும் ஒரு 'டப்பாங்குத்து இசையமைப்பாளராகவே' பார்க்கப் பட்டும, எம்.எஸ்.வியை தமிழ் சமூகம் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருந்ததாகத்தான் தோன்றுகிறது. இன்று வரை ஒரு கொண்டாட்டமான இசையமைப்புக்கு, 'நினைத்தாலே இனிக்கும்' பாடல்களுடன் ஓப்பிட கூடிய வகையில் இந்திய அளவில் வேறு திரைப்படத்தின் பாடல்கள் இருப்பதாக தோன்றவில்லை -குறிப்பாக 'எங்கேயும் எப்போதும்', 'சம்போ, சிவசம்போ'.

அடுத்து ஹிந்திப் பாடல்களின் பக்கம் தமிழ் மக்கள் காதை திருப்பினார்கள் என்பது முற்றிலும் நகைப்பிற்குரிய ஒரு வாதம். தமிழ் சமூகம் எல்லா காலகட்டத்திலும் இந்திப் பாடல்களுக்கு ஒரு சிறிய இடத்தை அளித்தே வந்திருக்கிறது. வருடங்களுக்கு ஒரு முறை, சில நேரம் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை என்று பாபி, குர்பானி, கயாமத் ஸே கயாமத் தக், தேசாப் என்று ஏதாவது ஒன்று, அலுப்பு தரும் இடைவெளியில் ஹிட்டாகி கொண்டே இருக்கும். சில குறிப்பிட்ட படங்கள், பாடல்கள் மட்டும் (ஹிந்தி தெரியாத சமூகத்திடம்) எடுபட்ட வறலாறு பற்றி தனியாய் ஆராய வேண்டும். எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு கட்டத்தில் போனி-Mஉம், ஆபாவும் கூட தமிழ் நாட்டில் பிய்ந்து கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் சமூகம் பற்றி வெளி மாநிலங்களிலும் (தமிழ் சமுதாயத்தினுள்ளும் சிலரால்) வைத்திருக்கப்படும்/பரப்பப்படும் முன் பிம்பத்திற்கு மாறாக, தமிழ் சமூகம் கொண்டிருக்கும், எல்லாவற்றிற்கும் இடமளிக்கும் எல்லாவற்றையும் நுகர விழையும், பரந்த மனப்பான்மையின் ஒரு பரிமாணம்தான் இது. ஒரு சிலர், கலைத்தாகம் கொண்டு எட்டுத் திக்கிலும் நோக்குபவர்கள், ஹிந்திப் பாடல்களையும் நுகர்ந்திருக்கலாம். தொடர்ந்து இப்படி ஒரு நிலை இருந்ததே ஒழிய ஹிந்திப் பாடல்களின் பக்கம் தமிழ் சமூகம் எப்போது காதை திருப்பிக்கொண்டது என்று புரியவில்லை.

இதை தவிர்த்து ஹிந்திப் பாடல் கேட்பது என்பது தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு சிறு கூட்டத்திற்கு, போலித்தனமான ஒரு பெருமைக்குரியதாக இருந்திருக்கிறது. இப்போது அது அதிகமும் ஆகியிருக்கிறது. அப்படி ஒரு கூட்டம் எல்லா காலகட்டத்திலும் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மானால் தமிழில் இசையமைக்கப் பட்டு, ஹிந்தியில் நகலெடுக்கக் கூட ஒழுங்காய் வக்கில்லாமல், அரைகுறையாய் காப்பியடிக்கப் பட்ட பாடல்களை, ஹிந்தியில் கேட்பதில் கூட அவர்களுக்கு ஒரு பெருமை. ஹிந்தி என்ற மொழிக்கு இருக்கும் மேலாண்மையான நிலையும், தமிழ் சமூகத்தின் கருப்பு வெள்ளை உளவியலில் இருக்கும் அடிமை புத்தியும் தவிர்த்து, இசை பூர்வமான காரணம் எதுவும் இதற்கு கிடையாது. இப்படி ஒரு நிலை நேன்று இன்று மட்டுமில்லாமல், தமிழ் உயிர்த்து இருக்கும் எல்லா கட்டத்திலும் தொடரும். எதிர்காலத்தில், தமிழ் திரை இசை உச்சத்தை தொட்டாலும், இந்த காய்ச்சல் இன்னும் அதிகமாக மட்டுமே செய்யும். அதனால் ஹிந்தியிடமிருந்து, தமிழ் திரையிசையை காத்ததாக சொல்வது, ராஜாவின் சாதனைகளை மிகவும் குறுக்கும் ஒரு அற்பமான வாதம் என்பது என் தாழ்மையான கருத்து. ராஜாவின் சாதனை முற்றிலும் வேறு வகையானது.

பரிணமித்து கொண்டிருக்கும் எல்லா கலைகளின் வளர்ச்சியிலும் ஒரு கட்டத்தில் நெருக்கடி என்று ஒன்று எற்படுவது இயல்பு அல்லது ஆதார விதி. எல்லா வகை கலைகளிலும், அரசியல், அறிவியலில் கூட இதை காணமுடியும். இது சமூக மாற்றத்தாலும், நவீனமாவதாலும் மட்டும் நிகழவேண்டிய அவசியம் இல்லை. ஒரு கலை தொடர்ந்து உயிர்த்து இருப்பதால் அதன் இருப்பினாலே கூட ஏற்படலாம். அந்த நெருக்கடி விளிக்கப்படாமல் உள்வாங்கி கொள்ளப்படாமல் தொடர்வதும் உண்டு. அதன் பலனை அதற்கு அடுத்த காலகட்டத்தில்தான் உணரமுடியும். விஸ்வநாதன் அற்புதமாய் தொடர்ந்திருந்தாலும், இன்னும் பலர் புதிதாய் வந்திருந்தாலும் இந்த நெருக்கடி தவிர்க்க இயலாதது. இளயராஜா இல்லாவிட்டால் நிச்சயம் புதிதாய் வேறு பலர் வந்திருப்பார்கள். ஜிகே வெங்கடேஷ் தமிழில் பெரிய ஆளாக கூட வந்திருக்கலாம். ஆனால் இந்த நெருக்கடி நிச்சயம் தொடர்ந்திருக்கும்.

ஹிந்தியில் வளமான அளவு இசையமைப்பாளர்கள் இருந்தும், அங்கேயும் சரியாக எழுபதுகளில் இந்த நெருக்கடி ஏற்பட்டு, அது விளிக்கப் படாமல் லஷ்மிகாந்த் பியாரேலால் போன்றவர்களின் நேர்கோட்டு இசையுடன் தொடர்ந்தது. ஹிந்தியில், எண்பதுகளில் உருப்படியாய் எதுவுமே வெளிப்படாமல் (தமிழில் 80களும் ஒரு பொற்காலம்), 90களின் தொடக்கத்தில் எந்த வித படைப்பு தன்மையும் அற்ற (சினிமாபாட்டில் கிரியேட்டிவிடியா என்று கேட்கக்கூடாது, பரவலாய் நகலெடுத்த தேவாவிடம் கூட படைப்பு தன்மை உண்டு), வெறும் நகலெடுக்கும் வேலையாக மாறி, ஏ.ஆர். ரஹ்மானின் புதிய இசை உள்ளே நுழையும் வரை இந்த கலை நெருக்கடி விளிக்கபடாமல் ஹிந்தியில் தொடர்ந்திருந்திருக்கிறது. தமிழில் அப்படிப்பட்ட நெருக்கடி காலத்தில், மிக சரியாக தோன்றி, முற்றிலும் புதிய ஒரு இசையை அளித்து, அனைத்தையும் அள்ளிக் கொண்டு போனவர்தான் இளயராஜா. அவர் அளித்த இசைக்கு முன்னோடி தமிழில் மட்டுமின்றி, உலகிலும் இல்லை. எம்.எஸ்.வி/ஹிந்தி பாடல்களை முன்வைத்து சொல்லும் ஸ்டீரியோ வகை வாதத்திலிருந்து முற்றிலும் வேறுபடும் விஷயமிது.

ஏ.ஆர். ரஹ்மானும் கிட்டதட்ட இளயராஜாவின் தொடர்ந்த தனிக்காட்டு ஆதிக்கத்தால் ஏற்பட இருந்த நெருக்கடிக்கு சற்று முன் வந்தவர்தான். ரஹ்மானின் புதிய இசைகொண்டு தமிழ் திரையிசை அந்த நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும் சில வித்தியாசங்கள் உண்டு. ஒரு வகையில் ரஹ்மானின் இசைக்கு ராஜா ஒரு முன்னோடி. ராஜா தந்த இசையின் இயல்பான தொடர்சியை ரஹ்மான் தந்தார். ஆனால் ராஜா அளித்தது, முன்னோடி இல்லாத புத்தம் புதிய இசை.

ராஜாவின் இசை ஒரு தமிழ் சூழலுக்கு(அதாவது தென்னிந்திய சூழலில்) மட்டுமே எடுபடக்கூடியதாக் இருந்தது. வட இந்திய வெகு மனம் ராஜாவின் இசையில் அடையாளம் காணமுடியவில்லை. மாறாக ரஹ்மானின் இசை வட இந்திய மனம் அடையாளம் கண்டு அனுபவிக்கும் வகையில் வெளிபட்டது. இதன் காரணமாய் வந்த சில ஆண்டுகளிலேயே ரஹ்மானை பாலிவுட் அள்ளிக் கொண்டு போய்விட, அவர் அமைத்துத் தந்த ட்ரெண்ட்களின் வழி தோன்றல்களோடு நாம் சமாதானப்பட வேண்டியதாயிற்று.

(தொடரும்)

Post a Comment

---------------------------------------

Thursday, June 01, 2006

இனி.

தமிழை பத்தாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்கியதற்கு (செய்தியை இன்னமும் முழுமையாய் படிக்கவில்லை, தமிழகத்திலுள்ள எல்ல வகை பள்ளிகளையும் (உதாரணமாய் மகாராஷ்டிரத்தில் இருப்பது போல்) இது கட்டாயப்படுத்துமா என்று தெரியவில்லை) கலைஞரை பாராட்டி பதிவு போடலாம் என்று நினைத்தால், டாவின்சி கோட் திரைப்படத்தை நேற்று மாலை தடை செய்து, மிக மோசமான முட்டாள்தனமான முன்னுதாரணத்தை தமிழக அரசு ஏற்படுத்தி யிருக்கிறது. இனி இந்துத்வ ஆசாமிகளும், பார்பன கொழுந்துகளும் பெரியார் எழுதுக்களை தடை செய்ய லாஜிக் போட்டு கேள்வி கேட்கலாம். அப்படி கேட்டால், 'கிரிஸ்தவர்கள் கேட்டால் செய்வோம், நீங்கள் கேட்டால் முடியாது' என்று சொல்வதற்கான நியாயத்தை, ஒரு அரசாங்கம் வெகுமக்களிடம் எடுபடக்கூடிய வகையில் தர முடியும் என்று தோன்றவில்லை.

குறிப்பிட்ட அளவு கிருஸ்தவ சமுதாயம் திரைப்படத்திற்கு எதிராக தமிழகத்தில் கொதித்து எழுந்ததாகவும் தெரியவில்லை. கோரிக்கை எழுப்பியவர்களில் பலர் படத்தை பார்த்திருப்பார்கள், நாவலை படித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. குருட்டுத்தனமான மதப்பற்றிலேயே ஒரு மேலோட்டமான எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள். குறிப்பிட்ட ஜாதியினர், தங்களுக்கென்று ஒரு வரலாற்று ஆசாமியை தேர்ந்தெடுத்து மாவட்டத்தின் பெயரை அவர் பெயரில் மாற்றாவிட்டால் 'புரட்சி வெடிக்கும்' என்று போஸ்டர் ஒட்டுவது போன்ற, தமிழகத்தில் பழகிப் போன உணர்வு தளும்பும் எதிர்ப்பு. அது தமிழ்நாட்டின் அமைதியை, சமனை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. ஆனால் ஓட்டிற்காக இந்த அரசு இதை செய்திருக்கிறது. அதுவும் முட்டாள்தனமானது என்பது என் கருத்து.

காங்கிரஸ் இதை செய்தால், ஏற்கனவே பாஜகவிற்கு எதிராக இருக்கும் கிருஸ்தவ மனம் காங்கிரஸை ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் அதிமுக மீது அப்படி ஒரு எதிர்ப்புணர்வு கிருஸ்தவர்களுக்கு இல்லாத நிலையில், அடிப்படைவாத கிரிஸ்தவர்கள் இந்த ஒரு தடைக்காக திமுகவை ஆதரிப்பார்கள் என்று தோன்றவில்லை. தாராள மனம் உடைய கிரிஸ்தவர்களுக்கு இந்த தடை ஒரு பொருட்டு அல்ல. 'என்ன இருந்தாலும் இவர்கள் கடவுள் இல்லை என்பவர்கள், மதத்துக்கு எதிரானவர்கள்' என்று படிந்து போன கருத்துடன் நாளை ஜெயா டீவியில் யாராவது பாதிரியார் பேசலாம். அதனால் எதிர்ப்பார்ப்பது போல் (அதுவும் அதிமுக தடையை எதிர்த்து பேசாத போது) திமுகவிற்கு வோட்டு லாபம் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. திமுக என்ன வகை சமரசங்களை செய்தாலும், வளைந்து கொடுத்தாலும், அதை பற்றி ஏற்ப்பட்ட பிம்பம் மாறப் போவதில்லை.

மத அடிப்படைவாதிகள் தேவையென்றால் ஒன்று சேர்ந்து கொள்ளவும் தயங்க மாட்டார்கள். பெரியார் எழுத்தை, அல்லது பெரியார் பற்றி நாளை தடை செய்ய உதவுமென்றால் டாவின்சி கோட் தடைக்கு ஆதரவாக இந்துத்வ பார்பனியவாதிகள் குரலெழுப்பவும் செய்வார்கள். மற்றவர்களும் சேர்ந்து கொள்ளலாம். ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரபூர்வ 'ஆர்கனைஸர்' தலையங்கத்தில் டாவின்சி கோட் தடை செய்யப்படுவதற்கு ஆதரவாக எழுதியுள்ளது. ஆனால் அவர்கள் அதே போல வாட்டர், ஃபயர் படங்களையும் அரசாங்க ஆணை மூலம் தடை செய்ய விரும்புகிறார்கள்.

தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து தங்களுக்கான வெளியையும், வசதியையும் கருதி, அம்பேத்காரை இந்துத்வா (எல்லா இந்துத்வ இயக்கங்களும் என்று சொல்ல முடியாது, குறிப்பாக ஆர். எஸ். எஸ்) தங்கள் சட்டகத்திற்குள் தொட்டுகொண்டிருக்கின்றன. (அதற்கு முன்னாலேயே கூட முயற்சி தொடங்கியிருக்கலாம் என்றாலும், நேரடியாய் ஊடகத்தில் அம்பேத்காரை தங்கள் சார்பாக உதிர்க்க தொடங்கியதை குறிப்பிடுகிறேன்.) அம்பேத்காரை இந்துத்வ சட்டகத்தில் அடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை, அம்பேத்காரை பலர் தீவிரமாய் படிக்கத் தொடங்குவது இந்துத்வத்திற்கு உவப்பாக இருக்காது என்பது நிதர்சனம். என்றாலும் இந்துத்வம் பகிர்ந்து பயன்படுத்திகொள்ள அம்பேத்காரிடம் ஒரு பகுதி இருந்தது. அதன் வெளிபாட்டைத்தான் காண்கிறோம். அப்படிப் பட்ட நிலையிலேயே சல்மான் ருஷ்டியின் சாத்தானின் கவிதைகள் தடை செய்யப்பட்டது போல், அம்பேத்காரின் எழுத்துக்களையும் தடை செய்ய வேண்டும் என்று குரல் எழும்பியது. உதாரணமாய் நியு இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு கட்டுரையே வந்தது. (தமிழ்நாட்டுக்கு வெளியே இருப்பதால் அவர்களுக்கு பெரியாரின் இன்னும் பிரச்சனையான எழுத்து பற்றி பேசவேண்டியிருந்ததில்லை. அதே நேரம் தமிழ்நாட்டுக்குள் பெரியாரை எதிர்கொள்ள இவர்கள் அம்பேத்காரை தொட்டுகொள்ளவும் செய்வார்கள்.)

இஸ்லாமிய, கிருஸ்தவ அடிப்படைவாதிகள் தாங்கள் புண்படுவதாக சொல்லி கேட்கும் தடைக்கும், இந்துத்வவாதிகள் விரும்பும் தடைக்கும் மிக தெளிவான வித்தியாசங்கள் உண்டு. அதை வித்தியாசத்தை தர்க்க பெருக்கில் அடித்து சென்று விடுவார்கள். கிரிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கேட்பது தங்கள் மதம் மட்டும் சார்ந்த விஷயம். அதை தடைசெய்வதற்கும் சமுதாய பிரச்சனைகளுக்கும் தொடர்பு இல்லை. அவர்கள் கேட்கும் தடையை நிறைவேற்றினால் ஒரு கருத்து சுதந்திர மறுப்பாக மட்டும் இருக்கும். ஆனால் வட்டர் படத்தை தடை செயவ்து, நமது வரலாற்றில் இருந்த விதவைகளின் நிலை பற்றி பேசுவதற்கான தடையாகும். அம்பேத்காரின்/பெரியாரின் எழுத்துக்களின் நோக்கம் இந்துமதத்தை தாக்குவது அல்ல, சாதிய சட்டகத்தை தாக்குவது. அதில் இந்துமத்ததையும் தாக்குவது தவிர்க்க இயலாதது. இந்த வித்தியாசம் புரியும் என்றாலும், மொட்டையாக டாவின்சி கோடிற்கும், சாத்தானின் கவிதைகளுக்கு விழுந்த தடையை (அதுவும் எனக்கு ஒப்புக் கொள்ள கூடியது அல்ல என்றாலும்) பெரியார் அம்பேத்கார் எழுத்துக்களுடன் ஒப்பிட்டு மட்டையடிப்பதற்கு காரணம், அவர்களுக்கு சிந்திக்க தெரியாது என்பதல்ல.

ஆமீர்கானின் ஃபானா திரைப்படம் இப்படி அதிகார பூர்வ தடையில்லாமல் குஜராத்தில் அராஜகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அதிகார பூர்வமான தடையில்லாததையே ஒரு வித்தியாசமாய் காட்டி, தங்களின் ஜனநாயகத்திற்கு சுயசான்றிதழ் வழக்கும் கலையெல்லாம் இந்துத்வ குதர்கங்களுக்கு மட்டுமே தனித்துவமானது. கவனிக்க வேண்டியது என்னவெனில், தமிழக அரசு தடை செய்யவில்லையெனில், 'டாவின்சி கோட்' எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடியிருக்கும். கூடிபோனால் ஒரு கூட்டம் போட்டு தங்கள் எதிர்ப்பை காட்டியிருப்பார்கள். ஆனால் சட்டபூர்வமாய் தனக்கு படத்தை வெளியிட உரிமை இருந்தும், ஆமீர்கானால் முடியவில்லை. அவர் தோன்றும் விளம்பரங்களை கூட திரும்ப பெற்று கொண்டாகிவிட்டது. இதெல்லாம் மக்கள் தாங்களாக செய்யும் எழுச்சியாகத்தானே கருத வேண்டும் என்று கூட சொல்வார்கள். இத்தனக்கும் திரைப்படம் பாஜகவின் கருத்துருவத்திற்கு எதிரானது அல்ல. நர்மதாவிற்கும் படத்திற்கும் கூட தொடர்பு இல்லை. படத்தில் அவர்களுக்கு பிரச்சனையே இல்லை. ஆமீர்கான் பேசிய ஒரு பேச்சுக்கு, சொந்த கருத்துக்கு அவர் விலை தர வேண்டியிருக்கிறது. அப்படியும் அவர் குஜராத்திற்கு எதிராக, அணை கட்டுவதற்கு எதிராய் கூட பேசியதாய் தெரியவில்லை. வெளியேற்றப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு சட்டப்படி நடக்க வேண்டிய மறுவாழ்வு பற்றியே அவர் பேசினார். மனிதாபிமானம் இருப்பதாக கூறும் யாருக்கும் இதில் எதிர்க்க எதுவும் இருக்க வாய்பில்லை. ஆனல் உலகிலேயே எங்கேயும் இல்லாத சகிப்புதன்மையை கொண்டிருப்பதாக, தூக்கி பிடித்து கொண்டிருக்கும் மதத்தையும் நாட்டையும் முன்வைத்த தேசியவாதிகளுக்கு, ஆமீர்கானின் மனிதாபிமானம் தேசத் துரோகமாக தெரிகிறது. ஆமீர்கான் சின்னதாய் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இறங்கி வந்திருப்பார்கள். நஷ்டமடைந்தாலும் தன் கருத்தில் உறுதியாக இருந்த அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த விஷயங்கள் ஒரு புறத்திலிருக்க இந்துவவாதிகளுக்கு அவலை அளிக்கும் வகையில் நியாயமில்லாத இந்த தடையை தமிழக அரசு செய்திருக்கிறது. ஒரு தெளிவான கிரிஸ்தவ அடிப்படைவாதியான புஷ் ஆட்சி செய்யும் அமேரிக்காவில் கூட தடை செய்யப்படாதது, கிரிஸ்தவத்தின் மீதும் கடும் தாக்குதல் நடத்திய பெரியாரின் படத்தையும் பெயரையும் ட்ரேட் மார்க்காக கொண்ட ஒரு கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் தடை செய்யப்பட்டிருப்பது வெட்கக்கேடு. மிகவும் தவறான உதாரணத்தை எதிர்காலத்தில் மேற்கோள் காட்டும்படி நிறைவேற்றியிருக்கிறது.

அதே நேரம் தமிழை கட்டாய பாடமாக ஆக்கியதற்கு, இதை ஏன் இத்தனை ஆண்டுகளாய் செய்யவில்லை என்ற கேள்விகளை எல்லாம் விடுத்து பாராட்டுவோம். இதில் எதோ ஜனநாயகமின்மை இருப்பது போலவும், ஏதேச்சதிகாரம் போலவும் வழக்கம் போல குரல்கள் ஒலிக்கும். தமிழ் சூழலில் மட்டுமே நடக்கக் கூடிய அவலமாக இது இருந்தாலும் இதை கண்டு கொள்ள வேண்டியதில்லை. அவர்களும் இந்த நாட்டில் இருந்து விட்டு போகட்டும். இப்படி சிலர் பேசுவதையும் பொறுத்துக் கொள்ளக் கூடிய பரந்த மனப்பான்மை நமக்கு இருப்பதாக எடுத்து கொண்டு புன்சிரிப்புடன் காரியங்களை கவனிக்க வேண்டியதுதான். மற்றபடி இந்த விஷயத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்டு அரசாங்கம் நடக்க முடியாது. நாட்டின் பாதுகாப்பிலோ, மற்ற அடிப்படை விஷயங்களிலோ ஒரு அரசாங்கம் அப்படி நடந்து கொள்வதில்லை. குழந்தைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது என்று, அப்படி அனுப்பக் வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பத்தின் பெற்றோர்களை கேட்டுவிட்டு ஒரு அரசாங்கம் சட்டம் கொண்டு வருவதில்லை. அரசாங்கம் சிலதை நிர்பந்திக்கிறது என்றால், திட்டமிட்ட நுகர்வு கலாச்சாரமும் காலனியாதிக்க பாதிப்புக்ளும் வேறு ஒன்றை நிர்பந்திக்கிறது. அதில் அரசாங்கம் மட்டும் கருத்து கணிப்பு நடத்தி விட்டு செய்ய முடியாது.

அதே நேரம் தமிழ் பயில்வதில் பல மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும். மார்க் போடுவதில் உள்ள கஞ்சத்தனம், எடுப்பதில் உள்ள பிரச்சனைகளை களையப் பட வேண்டும். இன்று தமிழ் தெரியாத ஒரு இளய தலைமுறையே வடிவெடுத்துள்ளது. அவர்கள் தமிழை தங்களுக்கான மொழியாக கொள்வதே இப்போதய முக்கிய கரிசனமாக இருக்க வேண்டும். முதலில் தமிழை கற்பதும், தமிழில் எல்லாவற்றையும் புழங்க வைப்பதும் மிக அத்தியாவசியமாய் செய்யவேண்டியவை. தமிழ் வளர்ச்சிக்கு வேறு எத்தனையோ செய்யலாம். தமிழ் வளர எல்லா மாணவர்களும் சங்ககால பாடல்களை உருப்போடவேண்டிய கட்டாயமில்லை. இலக்கியத்திலும் தற்கால நவீன இலக்கியம் அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் அதில் தமிழண்ணலும் வைரமுத்து போன்றவர்களும்தான் இப்போதைக்கு மூக்கை காட்டுவார்கள் என்பதால் இன்னும் கொஞ்ச காலம் அதற்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

Post a Comment

---------------------------------------
குவாண்டம் கணித்தல் -0.

குவாண்டம் கணித்தல் பற்றி தமிழிலும் இப்போது ஆர்வம் காட்டப்படுவதால், மேலோட்டமாக, முடிந்தவரை எளிமையாக, எனக்கு தெரிந்த இன்னும் கொஞ்சத்தை, இனி வரும் நாட்களில் இங்கே பேசலாம் என்று இருக்கிறேன். வெங்கட் திண்ணையில் கட்டுரை எழுதி நான்காண்டுகள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். அந்த கட்டுரையை உள்ளடக்கி 'குவாண்டம் கணணி' என்று தலைப்பிட்டு புத்தகம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதென்று நினைக்கிறேன்.

மோகன்தாஸ் எழுதிய பதிவு ஒன்றில் இருந்த சில தவறுகளுக்கு எதிர்வினையாய், நான் ஒரு பதிவு எழுதி, அதை தொடர்ந்து பின்னூட்டங்களில் சில விளக்கங்களையும் அளித்திருந்தேன். அண்மையில் வெளிகண்ட நாதர் எல்லாவற்றையும் குறிப்பிட்டு ஒரு பதிவு போட்டு என் கருத்தையும் கேட்டிருந்தார். அப்போது கருத்தெழுத இயலவில்லை. நான் வாசித்த வரை வெளிகண்ட நாதர் எளிமையான மொழியில் நன்றாக எழுதியுள்ளார். இது போல அவர் தொடர வாழ்த்துக்கள். இனி ஜீரோவிலிருந்து தொடங்கி இது பற்றி, எனக்கு தெரிந்ததை, இதுவரை பேசாத விஷயங்களை, நாளை எழுதத் தொடங்க விரும்புகிறேன். இது குறித்த அதிகம் உழைத்து தயரிப்பில் இறங்க நேரம் இல்லாததால், பல விஷயங்கள் மேலோட்டமாக இருக்கும். இன்னும் விரிவாக, இன்னும் எளிதான மொழியில், ஒருவேளை எதிர்காலத்தில் விரிவாய் எழுதுவதற்கு உதவும் நோக்கத்துடன் எழுதப்படுகிறது. குறிப்பாக தமிழ் கலை சொற்களை வலிந்து பயன்படுத்த முனையப் போவதில்லை. கையில் கிடைத்தால் நிச்சயமாக வரும், வராத போது ஆங்கிலத்திலேயே தட்ட எண்ணம். நல்ல கலைச் சொற்களை நண்பர்கள் தரக்கூடும் என்றால் மிகவும் மகிழ்வுடன் அதை ஏற்று, எதிர்கால பதிவுகளில் பயன்படுத்தத் தயங்க மாட்டேன். நன்றி!

குவாண்டம் கணித்தல் குறித்த எனது புரிதல்கள் நான்கு ஆண்டுகளுக்கு முந்தயது. 2002இல் சற்று தீவிரமாக கற்க முயன்று கொண்டிருந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளில் குவாண்டம் கணித்தல் குறித்து எதையுமே படிக்கவில்லை. அதனால் அண்மைக்கால முன்னேற்றங்கள் பற்றி (செய்திகளாகக் கூட) சரிவரத் தெரியாது. ஆனால் சில மிக அடிப்படை விஷயங்களை மட்டுமே இங்கே பேசப்போவதால் இது பிரச்சனையில்லை என்று தோன்றுகிறது. இது எவ்வளவு தூரம் முன்னேறும் என்று இப்போதைக்கு சொல்வதற்கு இல்லை. வாசிப்பவர்கள் காட்டும் உற்சாகம், விருப்பம், ஆதரவு பொறுத்து, இந்த வாரம் தாண்டி, எவ்வளவு தூரம் வண்டி ஓடுமோ அவ்வளவு தூரம் தொடரக்கூடும்.

ஆர்வமுள்ளவர்கள் இதுவரை எழுதப்பட்டவைகளை, குறிப்பாய் வெங்கட் திண்ணையில் எழுதிய கட்டுரையை, எனது சில பின்னூட்டங்களை இன்று படிப்பது நல்லது. ஏதாவது புரியாவிட்டால் பிரச்சனையில்லை, பின்னர் பேசி தீர்த்து கொள்ளலாம்.

Post a Comment

---------------------------------------
நாகசாகி, 9/02/1945, 11.02.

கொகுரா நகரின் மீது வானில் மூன்று முறை சுற்றி வந்தும், மேகமூட்டம் காரணமாக, விமானக் குழுவினரால் தீர்மானித்திருந்த இலக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இரண்டாவது இலக்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த நாகசாகி நகரத்தை நோக்கி பாம்பர் விமானம் நகர்ந்தது. அமேரிக்க வான்படையின் B-29 Bock car காலை 10.58க்கு நாகஸாகியை அடைந்த போது, மீண்டும் மேக மூட்டம் காரணமாக கீழே எதுவும் தெரியவில்லை. மேகங்களுக்கிடையில் ஒரு கண இடைவெளி கிடைத்த போது, ஏற்கனவே இலக்காக தீர்மானிக்கபட்டிருந்த Mitsubishi Shipyardற்கு பதில் Mitsubishi Arms works கண்ணில் பட, அது இலக்காக உடனே தீர்மானிக்கப் பட்டது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட 'சின்ன பையனை' (Little boy) விட, நாகசாகியில் வீசப்பட்ட 'குண்டு மனிதன்' (Fat Man) பல மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. (ஆயிரக்கணக்கில் அப்பாவிகளை கொல்லப் போகிற ஒரு அணுகுண்டுக்கு சின்ன பையன், குண்டு மனிதன் என்று செல்லப் பெயர் வைப்பது என்ன வக்ர புத்தி என்று தோன்றக்கூடும்.வெளிப்படையான அணு ஆயுத போட்டியை பக்கத்து எதிரி நாட்டுடன் ஏற்படுத்தப் போகும் அணுகுண்டு சோதனைக்கு, 'புத்தர் சிரித்தார்' என்று மறைசொல் வைத்ததைப் போன்ற சமமான வக்ரமாக இதை பார்கலாம்.) வேலை முடிந்து, கிட்டதட்ட எரிபொருள் காலியாகும் நிலையில் ஒகினவா நோக்கி விமானம் விரைந்தது.

சரியாக 11.02க்கு, 500மீட்டர் உயரத்தில் அணுகுண்டு வெடித்தது. வெடித்த நேரத்திலேயே, நாகசாகியின் புறப் பிரதேசமான உரகாமி (Urakami) பகுதியை கிட்டதட்ட முழுவதும் நாசம் செய்தது. குண்டு வெடித்த போது, விழுந்த இடத்தில் அருகே ஓடிகொண்டிருந்த ஆற்றில் ஆறு சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தார்களாம். அவர்களின் ஒரு எலும்பு, ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை. குண்டு வெடிப்பு நாகசாகியின் இரண்டரை லட்சம் மக்கள் தொகையில் எழுபத்தைந்தாயிரம் பேரை உடனடியாய் அப்படியே காவு கொண்டது. அவர்கள் பாக்கியவான்கள்! இன்னொரு எழுபத்தைந்தாயிரம் மக்கள் காயமடைந்து (வெறுமே காயம் என்று சொல்வது அக்கிரமம்), கதிரியக்கத்தால் தோல் பிய்ந்து, உறுப்புகள் உருக்குலைந்து சாவதை விட கொடுமையாக துன்பப்பட்டு, சிறுக சாக வேண்டி வந்தது. இன்னும் அதே அளவு மக்கள் வெடிப்பின் கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்டு சாக முடியாமல், இயற்கையாய் சாவு வந்து விடுதலை கிட்டுவதை எதிர்பார்த்திருக்கும் கொடூரத்தோடு வாழ வேண்டியிருந்தது. குண்டு வெடித்த இடத்திலிருந்து, இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் அனைவரும் எரிய வேண்டி வந்தது, நாலு கிலோ மீட்டர் வரை தீக்காயங்கள் இருந்தன. ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்து பொருள்களும் முழுவதுமாய் எரிக்கப்பட்டு, இரும்பு உருகி உருமாறி கற்கள் சிதைந்து, மூன்றில் ஒரு பங்கு நகரம் முற்றிலுமாக கருகி அழிந்தது.

1998இல் வாஜ்பாயின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து இந்தியாவில், அதன் எதிர்வினையாய் சில நாட்களில் கழித்து பாகிஸ்தானிலும் மக்கள் தெருவுக்கு வந்து இனிப்பு வினியோகித்து ஆடி கொண்டாடியதை தொலைகாட்சியில் கண்ட, நாகசாகி வெடிப்பில் உயிர் பிழைத்து செத்துக்கொண்டிருக்கும் ஒருவர், கோபமாய் எழுதிய ஒரு கடித்தத்தை பல வருடங்கள் முன்பு இணையத்தில் வாசித்தேன். தேடி பார்பவர்களுக்கு ஒரு வேளை கிடைக்கலாம். மிகவும் உணர்ச்சியை கிளப்பும் கடிதம்.


2004கின் ஜூலையில் ஜப்பானின் நான்கு தீவுகளில் ஒன்றான க்யூஷு தீவின் தலை நகரம் ஹகாடா/ஃபக்குவோக்காவிற்கு வேலை காரணமாய் சென்ற போது, ஒரு முழு நாள் சுற்றி பார்க்க கையில் இருந்தது. க்யூஷு தீவு முழுக்க இயற்கையின் அற்புதங்கள், எரிமலைகள் சூடான நீருற்றுகள் என்று எவ்வளவோ பார்க்க இருந்தும், நாகஸாகி செல்ல தீர்மானித்தேன். குண்டு வெடிப்பில் சிதிலமான ஒரு நகரை பார்க்க போவதில்லை, எல்லா ஜப்பானிய நகரை போன்ற ஒரு கலகலப்பான நகர்தான் காண கிடைக்கப் போகிறது என்று முன்னமே தெரிந்திருந்தாலும், வறலாற்று மற்றும் உணர்ச்சி பூர்வமான காரணங்களுக்காக செல்ல தீர்மானித்தேன். அதிகாலை எழுந்து இரண்டரை மணி நேரப் பயணத்தில் நாகஸாகியை அடைந்தேன். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து, நடைபாலம் தாண்டி, சுற்றுலா அலுவலகத்திற்கு சென்று, பரிந்துரைகள், வரைபடம், ட்ராமில் சுற்றுவதற்கு முழுநாள் பாஸ் வாங்கிகொண்டேன். முதலில் ட்ராமில் ஏறி குண்டு விழுந்த உரகாமி பகுதியை நோக்கி பயணப்பட்டேன்.

அமேரிக்காகாரன் அணுகுண்டு போடாமல் இருந்திருந்தால் கூட, நாகஸாகி ஜப்பானின் முக்கிய நகரங்களில் ஒன்று. நூற்றாண்டுக் கணக்கில் வெளியே தொடர்பில்லாமல் ஒரு மூடுண்ட சமூகமாய் இருந்த ஜப்பானுக்கு, மேற்கின் நாகரீகம், குறிப்பாய் போர்துகீசு டச்சுகாரர்களுடன் தொடர்பு, வணிகம், நவீனம் கிருஸ்தவம் எல்லாமே நாகஸாகி வழியாகத்தான் வந்தது. சில நூறு ஆண்டுகள் முன்னாலேயே சிலர் கிருஸ்தவர்களாக மாறியும் இருந்தனர். குண்டு விழுந்த உரகாமி பகுதியில் கிருஸ்தவர்கள் அதிகம். அமேரிக்காகாரன் போட்ட அணுகுண்டு, தீர்மானித்திருந்த இலக்கை தவறவிட்டு, உரகாமி கதீட்ரல் மீதுதான் விழுந்தது. (இரவு ஆங்கிலம் தெரிந்த ஒரு ஜப்பானியருடன் மதுவருந்திக் கொண்டிருந்த போது சொன்னார்,"அமேரிக்காகாரன் விவரம் தெரியாமல் அவன் மீதே குண்டு போட்டுகொண்டான்".)

1500களிலேயே மேற்குடன் நாகஸாகி தொடர்பு வைத்திருந்தது. ஒரு பிரான்சிஸ் சேவியரும் வருகை தந்தார். கிருஸ்தவம் பரவத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, ஜப்பானிய அதிகார வர்க்கம் விழித்துக் கொண்டு, விசாரணைகளில் இறங்கியது. 1597இல் 26 ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய கிரிஸ்தவர்களை சிலுவையில் அறைந்தது. (இன்று அந்த 26 துறவிகளின் நினைவாக ஒரு சர்ச் நாகஸாகி நடுவில் உள்ளது.) சுற்றி வளைக்கப் பட்டு கிரிஸ்தவர்கள் சித்ரவதை, கொலை செய்யப்பட்டனர். வெளி நாட்டுக்காரர்களின் ஜப்பானிய மனைவிகளை நாடு கடத்தினர். ஸ்பானிஷ், போர்த்துகீசிய வியாபாரிகளும் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில் கிருஸ்தவர்கள் ஒரு கலகமோ புரட்சியோ எதோ ஒரு எழுச்சியை நிகழ்த்த முனைய, மொத்தமாய் கிருஸ்தவத்தின் வாழ்வே ஒரு முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு பல நூற்றாண்டுகளாய் (ஜப்பானிய) கிரிஸ்தவர்கள் மிக ரகசியமாக கிருஸ்துவத்தை தங்களுக்குள் பேணி வந்தனர். மீண்டும் 18ஆம் நூற்றாண்டில் மேற்கிற்கும், நவீனத்திற்கும், கிரிஸ்தவத்தித்ற்கும் நாகசாகி கதவுகளை திறக்க, பொருளாதாரம் சிறந்து, முக்கிய கடற்கரை நகரமாய் வளர்ந்தது. 1945இல் அந்த ஒன்பதாம் தேதியில் நாகசாகியின் கப்பல் கட்டும் தொழிலை குறிவைத்தே பாம்பர் விமானம் வந்தது.

இதையெல்லாம் படித்து கொண்டு, குண்டு விழுந்த உரகாமி பகுதிக்கு ட்ராம் வந்தவுடன் இறங்கி கொண்டேன். உரகாமி இன்று ஒரு வளமான, அமைதியான புறநகர் பகுதி. கதிரியக்க கழிவுகள் நீக்கப்பட்டு பாதுகாப்பான தொலைவுகளுக்கு சென்றுவிட, கடைகள், உணவகங்கள் என்று ஒரு இன்பத்தலமாக மாறியிருந்தது. குண்டு விழுந்த ஹைபோ செண்டர் பகுதிக்கு அருகிலேயே ஆர்பாட்டமான விடுதிகள். மொத்தத்தில் ஒரு ஐம்பது ஆண்டுகள் முன்பு அணுகுண்டால் நிகழ்ந்த பேரழிவை, கற்பனை தவிர, வேறு எதைகொண்டும் உணர முடியாத நிலை. ஹிரோஷிமாவில் இடிபாடுகள் கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வைத்திருப்பதாக நண்பன் சொன்னான். நாகசாகியில் எதுவுமே இல்லை. குண்டு விழுந்த இடத்தினருகில் இருந்த நதியின் சிமெண்டுக் கரையில், பல் வேறு உணர்ச்சிகளுக்கிடையில் வெயிலில் தனியாக நடந்தேன். வெடிப்பின் சிதிலமாக எதோ ஒன்று சுற்றுசுவரில் கண்ணாடி பகுதிக்கு பின்னே இருப்பதாக எழுதியிருந்தது. கதிரியக்கம் இருக்கலாம் என்று எச்சரித்திருந்தது. கண்ணை இடுக்கி பார்த்தும், ஒரு காம்பவுண்டு சுவர் இடிந்தது போல ஏதோ மங்கலாக (உள்ளே இருட்டு, கண்ணடியில் சூரிய பிரதிபலிப்பு வேறு) தெரிந்தது. நதிவழியே நடந்து விட்டு, சூப்பர் அங்காடியில் சாப்பாட்டை வாங்கி கொண்டு, குண்டு 500 மீட்டர் உயரத்தில் 50 ஆண்டுகள் முன்னால் விழுந்த, ஹைபோ செண்டர் பூங்காவிற்கு வந்தேன். எதிரில் ஜப்பான் என்ற குழந்தை 50 ஆண்டுகாலம் முந்தய வெடிப்பழிவிலிருந்து எழுந்து வருவதை உருவகிக்கும் படி எழுப்பப்பட்ட ஒரு சிலை. கையில் குழந்தையுடன் பிரமாண்டமான பெண் சிலை. பூங்காவின் ஒரு பக்கத்தில் குண்டு வெடிப்பில் கிட்டதட்ட அழிந்து போன கதீட்ரலின் மீதமிருக்கும் ஒரே ஒரு கற்சுவர். மற்றபடி கதிரியக்க பிரச்சனை எதுவுமில்லாமல் தாராளமாய் கிளைபரப்பியிருந்த மரங்கள்.

ஒரு பெஞ்சில் அமர்ந்து உண்ண தொடங்கினேன். எனது பக்கத்து பெஞ்சில் கொரியர் ஒருவர் பகல் தூக்கத்தில் இருந்தார்.தூரத்தில் மெலிதாக ஒரு ட்ரம் சத்தம் கேட்டது. அதை ட்ரம் என்று சொல்லமுடியாது, வேறு என்ன சொல்லலாம என்று தெரியாததால் ட்ரம் என்கிறேன். நம்ம ஊர் தப்பட்டை போன்ற தோல் வாத்தியம், அதில் (மௌன ஊர்வலத்தின் ஆரம்பத்தில் ஒருவர் பெரிய ட்ரம் ஒன்றை அடித்து கொண்டு போக பயன்படுத்துவாரே அந்த) குச்சி ஒன்றால் சீராக அடித்த படி, ஒரு ஷிண்டோ மதகுரு அணிவகுப்பிற்கே உரிய மிக சீரான நடையோடு நடந்து வந்தார். ஒரு கால் பின் தொடர, ஒரு கால் நடனத்தின் லாவகத்துடன் தரையை தொட்டும் தொடாமல் ஒரு அடி சென்று பாதத்தை முன்னால் வைத்தது. பூங்காவின் நடுவில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட, தினமும் நடந்து பழகிப்போன பாதையில், அவர் ட்ரம் சத்தத்துடன் நடந்து, குறிப்பிட்ட புள்ளியில் மீண்டும் அணுவகுப்பின் லாவகத்துடன் செங்கோணத்தில் திரும்பி, நட்ட நடு பூங்காவில் தியானிக்கும் மௌனத்தை அரை நிமிடம் காட்டி விட்டு, அதே ட்ரம் சத்தம் கலந்த நடையுடன் பூங்காவை விட்டு மெதுவாக அகன்றார். பல வருடங்களாக அவர் அந்த வேலையை தினமும் செய்து வந்துகொண்டிருக்க வேண்டும். இந்த ஒரு நிகழ்வு என் உணர்வுகளை முற்றிலும் மாற்றிவிட்டது. சாப்பிட பிடிக்கவில்லை. நடக்க வேண்டிய தொலைவுகளை நினைத்து சாப்பிடாமல் இருக்க முடியாது. உணர்வை மாற்ற இந்தியாவில் இருந்த இணையுடன் பேசிவிட்டு, ஒரு வழியாய் உணவை முடித்து பூங்காவை விட்டு கிளம்பினேன்.

ஹைபோசெண்டர் பூங்காவின் ஒரு பக்கத்தில், அமைதி பூங்கா, ஒன்று அதில் ஒரு அமைதிக்கான சிலை வானத்தை நோக்கி கைகாட்டியபடி.. குண்டு விழுந்த போது இந்த இடத்தில் ஒரு சிறைச்சாலை இருந்தது. கைதிகள், வார்டன் பாகுபாடின்றி ஒருவர் கூட மிஞ்சவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை. குண்டு வெடிப்புக்கு முன்னான உரகாமி கதீட்ரலை வேறு ஒரு இடத்தில் மறுநிர்மாணம் செய்திருந்தார்கள். நான் உள்ளே போகவில்லை.

குண்டு வெடிப்பின் அழிவு அடையாளங்களை எல்லாம் முற்றாக அழித்து புதிதாய் ஆக்கி விட்டதால், அதை உணர ஒரு அணுகுண்டு மியூசியம் ஒன்றை 1996இல் திறந்து வைத்திருந்தார்கள். உள்ளே போனால் நரகம் எப்படியிருக்கும் என்பதை உருவகிக்க முடியும். ஆனால் செயற்கையான வகையில் காட்சிபெட்டிகள் அலர, வெடிப்பில் பிழைத்தவர்கள் ஜப்பனிய மொழியில் பேசிக்கொண்டிருக்க ஒரே குழப்பமாக இருந்தது. குண்டு வெடித்து உருக்குலைந்து, அக்கணமே நின்று போய் 11.02 காட்டிக் கொண்டிருக்கும் ஒரு கடிகாரம், எவ்வாறு பீங்கான்கள், நாணயங்கள் இதர பொருட்கள் உருமாறின என்று வரிசையாய் ஒரு மியூசியத்துக்கே உரிய பொருட்கள். மேலும் படங்கள் கதிரியக்க பாதிப்புடன் வாழ்ந்தவர்களின் பட தொகுப்புகள். பல படங்களை ஏற்கனவே பார்த்து விட்டதால் நாகசாகி போய் பார்த்து வந்த புதிய உணர்வை அவை ஏற்படுத்தவில்லை. என்னை மிகவும் பாதித்தது இரண்டு விஷயங்கள்.

ஒன்று ஒரு ஜப்பானிய குடும்பம். அம்மா, அப்பா இருவருமே குண்டு வெடிப்பின் தீவிரம் தாக்காத நாகசாகியின் புறநகர் பகுதியில் வேலைக்கு சென்றிருக்க, அவர்களது இரண்டு சிறுவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். குண்டு வெடித்த பின், நாம் கற்பனை செய்யக்கூடிய பதைபதைப்புடன், வீட்டிற்கு வந்து பார்தால் அவர்களால் தங்கள் குழந்தைகள் அங்கே இருந்ததற்கான எந்த தடயத்தையும் காணமுடியவில்லை. எலும்புகள், உடைகள் அணிகலன் காலணி என்று அவர்கள் இருந்ததற்கான எந்த தடயமும் அங்கில்லை. அவர்கள் இருந்திருக்க வேண்டிய இடத்தில் (ம்யூசியத்தில் வைக்கப்பட்டிருந்த வித்தியாசமான வடிவிலான) ஒரு கல் மட்டும் இருந்தது - குண்டு வெடிப்பின் அதிவெப்பத்தில் நடந்த எக்குதப்பான மாற்றங்களில் குழந்தைகள் அந்த கல்லாக உருமாறி சுருங்கி விட்டது போல். வெகு நாட்களுக்கு அவர்கள் அந்த கல்லையே தங்கள் குழந்தைகளாக கருதி, பத்திரப் படுத்தி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அணு குண்டு காட்சியகத்தை கட்டியவர்கள், இதை கேள்விபட்டு அவர்களை அணுக, தங்கள் கடைசி காலத்தில் அந்த கல்லை இங்கே ஒப்படைத்திருக்கிறார்கள். உணர்வு பூர்வமாய் பாதித்த விஷயம் இது.

இரண்டாவது அரசியல் பூர்வமாகவும் பாதித்தது. அமைதி பூங்காவிலிருந்து அணு குண்டு காட்சியகத்திற்கு செல்லும் வழியில் எகப்பட்ட நினைவு கற்கள். அதில் ஒன்று குண்டு விழுந்த சமயம், நாகசாகியில் ஒப்பந்த தொழிலாளர்களாக கொண்டு வரப்பட்டு, இறந்து போயிருந்த கொரிய மக்களுக்கானது. ஜாப்பான் நாடு கடந்த ஐநூறு வருடங்களில் அண்டை நாடுகளான சீனா, கொரியாவின் மீது நடத்திய வன்முறை வெறியாட்டம், உலகின் மற்ற எந்த ஆதிக்க நாடுகளினுடையதை விட குறைவானதல்ல. அதில் ஒரு உதாரணமாக நாகசாகியில் கொண்டு வரப்பட்டிருந்த கொரியர்கள். இதில் மற்ற நாடுகளிடமிருந்து ஜப்பான் வேறுபடும் இடம், தனது தவறுகளை பட்டியலிட்டு அதற்காக ஜப்பான் கேட்கும், இன்று வரை தொடர்ந்து கேட்டு வரும் மன்னிப்புகள். ஜப்பானிய பிரதமரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் கொரியாவிடம் இதற்கு மன்னிப்பு கேட்கிறார். அந்த நினைவு கல்லில் விரிவாக ஜப்பான் செய்த அட்டூழியங்களை பட்டியலிட்டு, கொரிய மக்கள் அனைவரிடமும் ஜப்பான் அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும், இனி ஒரு முறை இது எங்கும் நடைபெறக்கூடாது என்று உலக சமுதாயத்திடன் வேண்டி கேட்டுகொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. அட்டூழியம் செய்து விட்டு மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமா என்று தோன்றலாம். பல நவீன கருத்தாக்கங்கள், சகிப்பு தன்மை/பரந்த மனப்பான்மையை முன்வைத்த - குறிப்பாக தேசியத்தை ஒரு நோயாக அணுகும் பார்வைகள் - உலக போர்களுக்கு பின்னால், அதன் பேரழிவை தரிசித்த பிறகு ஏற்பட்டது. ஜப்பான் நிகழ்தியது வன்முறைகள் உலகப்போர்களின் போது, உலகமே தொழில்நுட்ப காட்டுமிராண்டிகளாக இருந்த நேரம். ஆனால் அமேரிக்கா போன்ற நாடு, கடந்த ஐம்பது வருடங்களில் தங்களால் நிகழ்த்தப் பட்ட எந்த பயங்கரவாதத்திற்காவது குறைந்த பட்ச வருத்தமாவது தெரிவிக்குமா என்று பார்க்க வேண்டும். அதற்கு பிறகுதான் நேடிவ் இந்தியர்கள் என்று அழைக்கப்படும் செவ்விந்தியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு பற்றி கேள்வி கேட்க முடியும். அமேரிக்காவை விடுவோம். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளாக செய்த பல வன்கொடுமைக்ளுக்கு தலித்களிடம் மன்னிப்பு கேட்கும் பண்பு ஆதிக்க ஜாதி சமூகங்களிடம் இருக்கிறதா? இடவொதுக்கீடு பற்றி என்னவும் கருத்து இருக்கட்டும். அதற்கு இவர்கள் முன்வைக்கும் வாதங்களை பாருங்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக கொழுத்ததன் குற்ற உணர்வு எங்காவது தெரிகிறதா? இன்று ஆதிவாசிகள் சமூகம் மீது நாம் நடத்தி வரும் வறலாறு காணாத வன்முறைகளை நியாயப்படுத்துவதிலும், பொய்யான அயோக்கியத்தனமான வாதங்களை முன்வைப்பதிலும் என்ன ஒரு கொடுரமான இந்திய உயர்தர வர்கத்தின் முகம் வெளிப்படுகிறது! காலகாலமாய் தங்கள் வாழ்ந்து வந்த நிலத்தை விட்டு ஒரு பெரும் சமூகத்தை வெளியேற்றுவதிலும், அவர்களுக்கான 'மறுவாழ்வு' (அதுவே வன்முறை நிறைந்தது என்பது ஒருபுறமிருக்க, அதை) பற்றி பேசுபவர்களை கூட தேசதுரோகிகாளாக சித்தரிக்கும் சகிப்புதன்மையற்ற சமூகமாக நாம் இருக்கிறோம். இதில் ஜப்பானிய அரசாங்கமும் சமூகமும் தங்கள் வறலாற்று குற்றத்திற்காக மன்னிப்பு கேட்பதை பார்த்து உணர்வு கொள்ளாமல் இருக்க இயலுமா! (சீனா தன் மக்கள் மீது நிகழ்த்திய வன்முறைக்கு கூட மன்னிப்பு கேட்காது என்பதும் ஒரு விஷயம்.)

தகாஷி நகாய் என்று ஒரு மருத்துவர்; அவரும் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்;நாகசாகியை விட்டு வெளியேறாமல் கதிரியக்கத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவே தன் வாழ்க்கையை அர்பணித்தவர். ஆனால் வெடிகுண்டின் பிற்கால விளைவுகளால் பாதிக்கப்பட்டு 51இல் இறந்து போனார்.அவர் வாழ்ந்த குடிசை அவரின் நினைவிடமாக பராமரிக்கப்படுகிறது. இதையெல்லாம் பார்த்து முடித்த போது மதியம் நன்றாக தாண்டியிருந்தது. அதற்கு பிறகு கிளம்பி ஒரு கனோனின் (புத்தர் காளி) கோவில், ஒரு கன்ஃப்யூஷியஸ் தலம், க்ளோவர் என்ற ஒரு டச்சுகாரன் ஒரு பிரபுவாய் வாழ்ந்து பராமரித்திருந்த, மலைமீதான க்ளோவர் தோட்டம் எல்லாம் பார்த்து, மையநகரத்தில் அலைந்து இரவு ஜப்பானிய பாரில் நாகசாகிக்கே உரித்தான குறிப்பிட்ட ஷஷீமி மீன் உட்ப்பட்ட ஒரு பெரும் மீன் உணவை பீர், சாகேயுடன் உள்ளே தள்ளிவிட்டு, காடைசி ரயிலை பிடித்து ஹகாதாவை பின்னிரவில் அடைந்த போது காலையிலிருந்த உணர்வுகள் முற்றிலும் மாறிவிட்டது.

Post a Comment

---------------------------------------
Site Meter