ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, April 13, 2006

சாக்ய சங்கம் -2.

சாக்ய சங்கம் குறித்த முதல் பதிவையும் விண்ணப்பத்தையும் இட்ட இரு நாட்களிலேயே இரண்டு நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டதை குறிப்பிட்டிருந்தேன். அதற்கு பிறகு இன்னொரு அன்பரையும் சேர்த்து, இதுவரை மூன்று நண்பர்கள், மணலியில் உள்ள, ட்சுனாமியால் பாதிக்கப் பட்டு, ஆதரவு அற்று இருக்கும் குழந்தைகளுக்கான சாக்ய சங்க விடுதிக்கு (மற்றும் குழந்தைகளின் எல்லா வகை செலவுகளுக்கும்) உதவியளிக்க என்னை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தன் முதல் தவணையாக அனுப்பியும் விட்டார். அவர்களுக்கு என் நன்றி. நண்பர்களை பற்றிய விவரங்களை அடுத்து வரும் பதிவுகளில் (அவர்களுக்கு ஆட்சேபணை இல்லாத பட்சத்தில்) தருகிறேன். இது தவிர நான் அறியாமலேயே நேரடியாக சாக்ய சங்கத்தை தொடர்பு கொண்டவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் எல்லா நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

பத்து நாட்களுக்கு முன்பு, மணலி சாக்ய சங்க விடுதிக்கு என் நண்பருடன் சென்று, குழந்தைகளுடன் ஒரு முழுநாளை செலவழித்தோம். முழு ஆண்டு தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்த அவர்களுக்கு, முடிந்த வரையில் ஒரு நாள் முழுவதும் எங்களால் முடிந்ததை சொல்லி கொடுத்தோம். (நண்பர் அந்த வேலையை ஒரு வருடத்திற்கு மேலாக செய்துவருகிறார்.) மொத்தம் 58 குழந்தைகள். 5 வகுப்பிலிருந்து 11 வரை படிப்பவர்கள். நண்பர் ஒற்றை ஆளாக (அதுவும் தமிழ் இன்னும் முழுமையாய் தெரியாத நிலையில்) பெரிய அளவில் எல்லா மாணவ மாணவிகளையும் பயிற்றுவித்திருக்க முடியாதுதான். எனக்கு மிக மிக வருத்தமாகவும், கழிவிரக்கமாகவும் இருந்தது. 10 ஆம் வகுப்பு தேர்விற்கு தயாராகி கொண்டிருந்தவர்களுக்கு கணக்கு மற்றும் ஆங்கில இலக்கணம் முடிந்தவரை நடத்தினேன். சில மாதங்கள் முன்பு இந்த அறிமுகம் நிகழ்ந்திருந்தால் உருப்படியாய் எதையாவது செய்திருக்க முடியும். குழந்தைகள் படிப்பதில் மிக மிக ஆர்வமாக இருந்தார்கள். படிப்பின் முக்கியத்துவம் எல்லாவிதத்திலும் அவர்களுக்கு புரிந்திருக்கிறது. யாருடைய உதவியும் இல்லாமல் கல்வி பயில்வதில் உள்ள இயல்பான பிரச்சனைகள் இருந்தன. பல கேள்விகளை கேட்டார்கள். பலவற்றை அவர்களாகவே சொல்லித் தரக் கேட்டார்கள். ஆனால் ஒரு நாளில், தேர்வை மட்டும் மனதில் வைத்து எந்த அளவிற்கு சாதிக்க முடியும்? அடுத்த வருடம் உருப்படியாக எதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

விடுதி என்று சொல்வது மிகவும் தவறான சித்திரத்தை தோற்றுவிக்கக் கூடும். பெரிய அறைகளை கொண்ட இரண்டு வீடுகள்.(அடுத்த முறை புகைப்படம் இடுகிறேன்.) ஒன்றில் மாணவிகள், இன்னொன்றில் மாணவர்கள். எல்லோரும் ஒரே(பெரிய) அறையில் உறங்கவேண்டும். சுவரில் புத்த மதம் சார்ந்த சுலோகங்கள்(எல்லாமும் இன்புற்றிருக்க வேண்டுவதாய்) எழுதப்பட்டுள்ளன. காலையிலும், மாலையிலும் அதை சேர்ந்து சொல்லக்கூடும். சொல்லிக் கொடுப்பதிலேயே நேரம் கழிந்ததால் குழந்தைகளிடம் வேறு விஷயங்கள் குறித்து பேச இயலவில்லை.

தலித் குழந்தைகளை மனதில் வைத்தே இந்த விடுதிகள் துவங்கப் பெற்றதை குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சில மீனவ இனத்தை சேர்ந்த குழந்தைகளும் உள்ளார்கள். நானறிந்து ஒரு முஸ்லீம் குழந்தை கூட இருக்கிறார். ஆகையால், பலவித நிவாரணப் பணிகளால் கைவிடப்பட்ட தலித் குழந்தைகளை மனதில் வைத்து தொடங்கப் பட்டதாயினும், மற்றவர்களும் இருப்பதால், ட்சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களை ஜாதிரீதியாய் பிரிப்பதாய் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.

சரி, இப்போதிருக்கும் முதன்மையான பிரச்சனை மற்றும் தேவையை ஒரு வார்த்தையில் சொல்வதானால் அது பணம். இதைவிட மேலான ஒரு தங்கும் விடுதி அவர்களுக்கு தேவைப்படும். நிலம் வாங்கவும், புதிதாய் விடுதி கட்டவும் சாக்ய சங்கம் முயற்சிக்கிறது. பணம் திரட்டும் அவர்களது பல முயற்சிகள் (உதாரணமாய் வெளிநாட்டு பௌத்தர்கள் மூலம்) முழு வெற்றியடையவில்லை. அடுத்த வருடம் பள்ளி துவங்கினால் சீருடைகள் புத்தகங்கள் இன்னும் எத்தனையோ தேவைப்படும். 10வது முடித்தவர்கள் மேல்நிலை பள்ளியில் சேரவேண்டும். இன்னும் சமாளிக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அதைவிட முக்கியமாக இன்னும் எத்தனை குழந்தைகளுக்கு உதவி தேவை என்ற கேள்வியும் இருக்கிறது. தங்களால் இயன்ற ஒரு சிறிய அளவிலான குழந்தைகளை மட்டுமே சாக்ய சங்கம் பராமரிப்பதக தோன்றுகிறது.

அடுத்து குழந்தைகளை நமக்கிருக்கும் அனுபவத்தை வைத்து வழி காட்டுதல். 12ஆவது படிக்கும் நம் வீட்டு பிள்ளைகள் ஐஐடி பற்றியோ, குறைந்த பட்சம் பொறியியல் மருத்துவம் என்று சிந்திப்பது இயற்கையானது. இவ்வாறு சிந்திக்கவும் தானாகவோ அதற்கு முயற்சிக்கவும் ஒரு உந்துதல் தேவைப்படுகிறது. அதை அளிக்க வேண்டும். மற்ற வகைகளிலும் பாடங்களில் பயிற்றுவிக்க வேண்டும்.

ஆகையால், இந்த பதிவை படித்து உந்துதல் ஏற்பட்டால், ஏற்பட்ட நண்பர்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்கவும். சென்னையில் இல்லாதவர்கள் நிதிரீதியாக உதவலாம். மற்றவர்கள், எல்லாம் நல்லபடியாக அமைந்தால் நான் ஈடுபடுத்திகொள்ள உத்தேசித்திருக்கும், அடுத்த வருடம் இந்த குழந்தைகளுடன் பழகி அவர்களை நம் அனுபவத்தை கொண்டு பாதையை காண்பிக்கும் வேலையில், குறிப்பாக பாடங்கள் சொல்லித்தரும் வேலையில் என்னுடன் ஈடுபடலாம். வேறு ஏதாவது யோசனைகள் உங்களுக்காகவே தோன்றினால் அதையும் செய்யலாம். எதற்கும் அவசரமில்லை. மிக நிதானமாக எல்லா விவரங்களையும் என்னிடமும், மற்றவர்களிடமும் விசாரித்து மனம் தெளிந்து செய்யலாம். என்னாலான எந்த விவரத்தையும் (தனிப்பட்ட முறையில்) அளிக்கத் தயாராயிருக்கிறேன். மிகவும் நன்றி. May all beings be happy!

Post a Comment

2 Comments:

Blogger ராம்கி said...

Good work. I will call up you to get further details. Thanks for the post.

4/13/2006 9:20 PM  
Blogger ROSAVASANTH said...

Rajini, Thanks!

4/15/2006 2:16 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter