ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, March 16, 2006

நாறுவது மனம்!

தங்கமணியின் 'கையால் மலமள்ளும் இந்திய மக்கள்' என்ற பதிவை பார்க்க நேர்ந்த சமயத்தில், நிதானமாய் படிக்கும் வகையில்லாததால், பதிவின் தொடக்கத்தில் இருந்த சுட்டி மூலம், தலித்முரசில் வெளிவந்த கட்டுரையை மட்டும் படித்துவிட்டு நகர்ந்துவிட்டேன். அதனால் அவர் இரண்டாவதாக சுட்டி அளித்த பெசவாடா வில்சனின் கட்டுரை, ஏற்கனவே (புலேந்திரனால்) மொழிபெயர்க்கப் பட்டு, கீற்றில் வெளிவந்திருப்பதை அறிந்திருக்காமல், அதே கட்டுரையை நானும் மொழிபெயர்க்க தொடங்கி, பாதி பெயர்த்தும் விட்டேன். அதனால் பெரிய பாதகமில்லை என்பதால் எனது (பாதி)மொழிபெயர்ப்புடன், மீதியை தலித்முரசிலிருந்து சேர்த்து இங்கே இடுகிறேன். வில்சனின் கட்டுரை பலர் ஒழுங்காய் படித்தார்களா என்ற மிகப்பெரிய சந்தேகம் இருப்பதாலும்.

வெங்கட்டின் பதிவு, அதில் தொடர்ந்த மறுமொழிகளை பார்தால், வில்சனின் கட்டுரை பெரிதாய் படிக்கப் பட்டதாக தெரியவில்லை. படித்திருந்தார்களெனில் இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ். வில்சன் தனது கட்டுரையில், அரசாங்கத்தின், 'அக்கறையின்மை என்ற வார்த்தையை தாண்டிய தொரு, அலட்சியம்' பற்றி விளக்குகிறார். மேலும் சாதிய மேலான்மை என்பதில் (முற்றிலும் தகர்க்காவிட்டாலும்) கைவைக்காமல், இதில் எல்லாமே வெட்டி பேச்சாகவே இருக்கும் என்பதை ( கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இந்த அவலத்தை ஒழிக்கும் ஒரே பணியில் மட்டும், தன் வாழ்க்கையை அர்பணித்துள்ள வில்சன்) தனது அனுபவங்களின் அடிப்படையிலான தெளிவின் மூலம் உணர்த்துகிறார். "சமூக ஒதுக்குதலையும், பொருளாதார சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டு கட்டப்பெற்ற நமது சாதிய உளவியலே, இந்த அவலத்தை ஒழிப்பதில் தடையாக இருக்கிறதே ஒழிய, தொழில்நுட்பக் குறைவோ, நிதிநிலை பற்றாக்குறையோ, ஒரு அங்கீகரிக்கப் பட்ட சட்டகம் ஒன்று இருப்பதோ இல்லாதிருப்பதோ அல்ல பிரச்சனை." என்றும் சொல்கிறார். ஆதலால் இது வெங்கட் முன்வைத்துள்ளது போன்றும், படித்த உடனே அதை ஜெயஸ்ரீ வியந்தோதுவது போலவும் அத்தனை எளிதான விஷயமில்லை.

வெங்கட் பதிவில் ஜோசஃப் அவர்கள் எழுதிய பின்னூட்டம் இன்னும் விநோதமானது. (அந்த பின்னூட்டங்களுக்கு உள்நோக்கம் எதையும் ஆராயாமல், ரொம்ப நல்லவிதமாய் இப்படி விநோதமானது என்று மட்டும் சொல்கிறேன்.) முதலில் இந்த பழக்கங்கள் இன்று (ஓரிரண்டு இடங்களை தவிர) கிடையாது, மலையேறிவிட்டது என்பது உண்மையல்ல. வில்சன் தனது (2005இல் எழுதப்பட்ட) கட்டுரையில் 13லட்சம் manual sacavengers இந்தியாவில் இருப்பதாக சொல்கிறார். (அது தேவையில்லை, உஷா குறிப்பிட்டமாதிரி, சென்னை நகரத்து சாலைகளிலிலேயே மிக எதேச்சையாக, ஆனால் அடிக்கடி, நமக்கு பார்க்கக் கிடைக்கும், பாதாள சாக்கடையிலிருந்து கோவணத்துடன் ஒரு மனிதன் நனைந்தபடி வெளிவரும் காட்சியும் பெருமைக்குரியது அல்ல.) அராசாங்கத்தின் கணக்கே 6.75 லட்சம் என்கிறது. தமிழக நிலைமை சற்று மேலானது என்றாலும், 1998இல் கூட பெருமைக்குரியதாக இல்லை என்று, அப்போது இருந்த தொடர்பில் எனக்கு தெரியும். (ஆனால் இப்போதய புள்ளி விவரம் தெரியவில்லை. ) ஆந்திராவில் ஒன்றரை லட்சம் துப்புரவு பணியாளர்கள் இருப்பதாக வில்சனின் கட்டுரை அறியத் தருகிறது.

ஜோசஃப் சார் அடுத்து முன்வைக்கும் சிந்தனைகள் ('லாட்டரல் திங்கிங்' செய்பவர்களுக்கு) இன்னும் சுவாரசியமானது. உடல் ஊனமுற்றவர்களை differently abled என்று சொல்வதை போல் (அவர்களின் குறைபாடுகளை குறிப்பிட்டு, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தாதது போல்), நாமும் இது போன்ற விஷயங்களை பற்றி எழுதக் கூடாது என்கிறார். "இதுபோன்ற முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் என தங்களைக் கூறிக்கொண்டு மறைந்துக்கொண்டிருக்கும் பழக்கங்களைப் பற்றி இனியும் எழுதி அதில் ஈடுபட்டிருப்பவரை ஏதோ தீண்டப்படாதவர்களென சமுதாயம் கருதி ஒதுக்குவதாக ஒரு பிரம்மையை, பிம்பத்தை ஏற்படுத்தாதீர்கள், ப்ளீஸ்.." என்கிறார்.

முதலில் யாரும் துப்புரவு தொழிலாளர்களை தாழ்வாக நினைக்கவில்லை என்று சொல்வது பொய் அல்லது அறியாமை அல்லது இரண்டும் கலந்தது மட்டுமே. ஒரே ஒரு நடைமுறை சார்ந்த உதாரணமாய், தமிழகத்தில் 'இரட்டை தம்ளர்' வழக்கம் பற்றிய புள்ளிவிவரத்தை அறிந்தாலே இது எளிதில் புலப்படும். அதைவிட "நீங்கள் இருப்பதாக கூறும் பழக்கங்களை எங்கோ ஒரிரண்டு இடங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தங்களை எந்தவிதத்திலும் யாரும் இழிவுபடுத்தியதாக என்னிடம் முறையிட்டதில்லை. " என்று அவர் சொல்வது, ஜாலியாக எடுத்துகொண்டு சிரித்து விட்டு போகக் கூடிய விஷயமில்லை. பல இடங்களில் மாறி மாறி பலரால் வேவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் சாதிய உளவியல் சார்ந்த தருக்கம் இது. ஒரு தலித் அல்லாத தன்னிடம் முறையிடாததால், ஒரு தலித் மனதினுள்ளும் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருப்பார் என்ற பிரகாசமான தருக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு வேளை ஒரு தலித் தன் இழிநிலை பற்றிய பிரஞ்ஞையை கொண்டிருக்காமல் இருந்தால், அதுவும் இந்த சாதிய மேலான்மை சமூகம் உருவாக்கிய உளவியல் மட்டுமே. தன் படிநிலையை தானே ஒப்புகொள்ளவும், அதன் இழிவு குறித்த சுய பிரஞ்ஞை இல்லாததும், சாதிய சமூகம் திட்டமிட்டு உருவாக்கிய ஒரு உளவியல் மட்டுமே.

அவருடய ஒப்பிடுதலின் பொருத்தப்பாடு பற்றி, (வெங்கட் அந்த ஒப்பிடுதலை பொருத்தமானது என்று ஏற்றுகொண்டே பதிலளித்ததாக தெரிகிறது) . உடல் ஊனம் என்பது ஒரு நபருக்கு இயற்கையாகவோ, விபத்தின் காரணமாகவோ ஏற்படும் ஒரு 'குறைபாடு'. அதற்கான காரணம் அவராகவோ, அல்லது இயற்கையாகவோ அல்லது விபத்தாகவோ இருக்கலாம். சாதிய அடிப்படையில் கட்டாயப்படுத்தி பணிக்கப் படும் துப்புரவு தொழில் என்பது, காலகாலமாய் ஒரு குறிப்பிட்ட மக்களை தனிமைப்படுத்தி, அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை. அவர்களை வேறு வேலைகளுக்கு(பல உளவியல் சமூக முட்டுகட்டை காரணிகளை கொண்டு) அனுமதிக்காத வன்முறை. உதாரணமாய் ஒரு துப்புரவு தொழிலாளியை அரசு 'விடுவித்தாலும்' சலுகை அளித்தாலும், சமூகத்தில் அவரோ அவரது வாரிசுகளோ வேறு வேலை பெறுவதில் கணக்கற்ற பிரச்சனைகள் இருக்கும். அவரால் ஒரு டீக்கடை கூட பொதுவில் தொடங்க இயலாது. சாதிய மேலாண்மையின் அடிப்படையில் கட்டப்பெற்ற சமூக அடுக்கில், ஒரு துப்புரவு தொழிலாளியின் இடமும், ஒரு ஊனமுற்றவனின் நடைமுறை சங்கடங்களும் எந்த விதத்திலும் ஒப்பிடக்கூடியது அல்ல. ஏதோ ஒரு காரணத்தால் ஃபுட் பாய்சனாகி வயிற்றில் அவதிப்படுவதற்கும், வாயில் மலம் திணிக்கப் படுவதற்குமான வித்தியாசங்களை போன்றது.

அடுத்து ஒரு ஊனமுற்றவர் தன் 'குறையை' மீறி ஒரு வேலையை செய்வது உற்சாகத்திற்கும் பெருமைக்கும் உரியது. ஒரு தலித் தனது வேலையை செய்வது, அதுவும் சமூகத்தால் நிர்பந்திக்கப் பட்டு செய்வது, எந்த விதத்திலும் உற்சாகத்திற்கும் பெருமைக்கும் உரியது அல்ல. (ஓவ்வொரு விவாதக்களத்திலும் அம்பிக்களால் முன்வைக்கப்படும் ஒரு வாதம் , 'சூத்திரன்' என்பது கேவலத்துக்கு உரியது அல்ல என்று சொல்வதைப் போன்றது இது. விவேகாநந்தர் தொடங்கி சோ வரை(பார்க்க: வெறுக்கத்தக்கதா பிராமணியம்) இடையில், பல்லாயிரக்கணக்கான பார்பன கொழுந்துக்களால் இந்த வாதம் முன்வைக்கப் பட்டுள்ளது.)

ஒரு ஊனமுற்றவரின் குறையை நாம் கண்டுகொள்ளாதது, அதில் தாழ்வு எதுவும் இல்லை என்று கருதுவது, நமது கண்ணியம், முதிர்ச்சி ஆகியவற்றின் வெளிபாடு மட்டுமில்லாமல், ஊனமுற்றவர் உற்சாகத்துடன் தன் பணியில் தொடர்வதற்கு உதவுவதாகவும் இருக்கும். தலித் ஒருவரின் சமூக நிலை பற்றி நாம் மௌனமாய் இருப்பது, நம் இருப்பையும், சமூக அடுக்கில் நம் நிலையையும் பாதுகாக்கும் மொள்ளமாரித்தனமாக இருக்கலாம். மட்டுமில்லாமல் அது தலித்தை தன் நிலையின் அவலத்தை கூட உணராமல் இருக்க செய்யும் ஏற்பாடாகவும் இருக்கலாம்.

ஜோசஃப் அவர்கள் தனது கருத்தை நேர்மையாக (அதாவது தான் மனதார நம்புவது அன்றி எந்த சதித் திட்டத்தையும் உள்நோக்கமாய் கொள்ளாமல்) அதை எழுதியிருக்கலாம். அந்த ஒரே காரணத்தால் மட்டும் ஒரு விஷயம் சகித்துக் கொள்ளக் கூடியதாய், எதிர்ப்பதற்கும் கண்டிப்பதற்கும் முகாந்திரமில்லாமல் ஆகிவிடாது. இது அவருக்கு மட்டுமின்றி ஜெயஸ்ரீக்கும் பொருந்தும். இப்படி ஒரு சமூக அவலம் குறித்து எந்த வித பிரஞ்ஞையும் இல்லாமல், தன் வாழ்வு, தன் அனுபவம், தன் நலம், தனக்கு பரம்பரையாய் அளிக்கப் பட்ட சட்டகத்திற்கு உட்பட்ட தர்க்கம், இதன் அடிப்படைகளை தாண்டி, கிடைக்கும் துளையினூடே கூட மற்றதை எட்டி பார்க்கும் அறிகுறி கூட இல்லாமல், பலர் இயங்கும் சூழலில், கொஞ்சமாவது அவர்களின், தங்களுக்கு தாங்களே சொல்லிகொள்ளும் மனச்சாமாதானங்களையும், தங்கள் மன அரிப்பை சொரிந்துகொள்ள செய்யும் வாதங்களையும் (என்னையும் சேர்த்து) உலுக்கும் நோக்கில், கீதா ராமசாமியின் புத்தகத்தில் பல பகுதிகளை மொழி பெயர்த்து இங்கே அளிக்கவிருக்கிறேன். அதன் இடையே வெங்கட் தளத்தில் இடப்பட்ட மற்ற கருத்துக்கள் பற்றியும் வேறு தொடர்புடைய விசயங்கள் பற்றியும் எழுத விழைகிறேன். தனிப்பட்ட முறையில் சிலரை தொடர்புகொள்ளவும் முயற்சிக்கிறேன்.

புத்தகத்தில் 'Bezwada Wilson: Shepherd of the manual Scavengers' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையின் (தலித் முரசில் வெளிவந்த) மொழியாக்கத்தை படிக்க.




'இந்தியா நாற்றமடிக்கிறது' புத்தகத்தின் முன்னுரை.

--- பெசவாடா வில்சன்.

கைகளால் மலம் அள்ளும் துப்புரவு தொழில் என்பது சாதிய அமைப்பின் அஸ்திவாரத்தின் மீதே நிலைகொண்டிருக்கிறது. தீட்டு, சுத்தம், மாசு, தர்மம், கர்மம் என்று சாதிய அமைப்பு சார்ந்து உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளின் கேவலமான வெளிபாடாகவே துப்புரவு தொழில் விளங்குகிறது. இதை சொன்னால் ஜாதி இந்துக்கள் கருத்து வேறுபடலாம்; கைகளால் மலம் அள்ளும் துப்புரவு தொழில் வழக்கம் என்பது சாதிய அமைப்பின் ஒரு விலகலாகவும், சரி செய்யப்படவேண்டிய அதன் பிரச்சனைகளில் ஒன்று மட்டும் என்பதாகவும் வாதிடலாம். ஆனால் சாதிய மேலாண்மையை தகர்காமல் துப்புரவு தொழில் என்பதை ஒழிக்க இயலாது என்ற தெளிவிற்கு நான் வந்துவிட்டேன். சாதி இந்துக்கள் அதை செய்வதற்கு பயப்படுகிறார்கள். நிஜாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் ஒரு எடுப்பு கக்கூஸ் இருப்பதையும், ஸஃபை கரம்சாரி அந்தோலனால் ஒரு குறியீடாக கூட அது இடிக்கபடுவதை தடுக்கும் எழுத்து மூலமான அரசாணையை வேறு எப்படி புரிந்து கொள்ள முடியும்? இது நமது பழங்காலத்தின் வலி மிகுந்த அடையாளமாக மட்டுமில்லாமல், நிகழ்காலத்தினுடையதாகவும் இருக்கிறது. வருங்காலமாவது இந்த அவலத்தை ஒரு பரம்பரை பண்பாக்கி கொள்ளாமல் இருக்கட்டும்.

1993இல் இந்திய அரசாங்கம் 'எடுப்பு கழிப்பறைகள், கைகளால் மலம் அள்ளுவோர்கள் பணி நியமனம் தடுப்பு சட்டத்தை' பிறப்பித்தது. ஆனாலும் இன்று வரைக்கும் 13 லட்சம் தலித் சமூகத்தை சேர்ந்த மக்கள் - தனிப்பட்ட வீடுகளிலும், நகராட்சியால் நிர்வகிக்கப்படும் பொது கழிப்பிடங்களிலும், ரயில்வே இராணுவம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் - நாடெங்கிலும் கைகளால் மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களாக பணிக்கப் படுகிறார்கள். ( அடிக்குறிப்பு: இந்திய அரசாங்கத்தின் Ministry of Social justice and Empowermentஇன் 2002-03இன் அதிகாரபூர்வமான கணக்கு 6.76லட்சம் என்கிறது.) ஆந்திராவில் 8330 துப்புரவு தொழிலாளர்கள் பொது கழிப்பறைகளிலும், ஒன்றரை லட்சம் பேர்கள் தனிநபர் எடுப்பு கக்கூஸ்களிலும் பணிக்கப் பட்டுள்ளனர்.

நமது நாட்டின் நிலப்பரப்பளவையும் வளத்தையும் பார்கும்போது, இந்த வழக்கத்தை ஒழிப்பதும், ஸஃபை கரம்சாரிகளுக்கு மறுவாழ்வளிப்பதும் சாத்தியமே இல்லாத காரியமல்ல. இந்த பிரச்சனையின் பல்வேறு கோணங்களை கண்டறியும் பொருட்டு, வேறு வேறு குழுக்களிலும், கமிசன்களிலும், செயல்பாடுகளிலும் நமது அரசங்கம் முதலீடு செய்து வருகிறது. ஆரோக்கியதை பற்றியும், சுத்தத்தை பற்றியும் நமது சிவில் சமூகத்திற்கு அறிவு புகட்டும் பொருட்டு நிது ஒதுக்கியும் வருகிறது. ஃப்ளஷ் கக்கூஸ்களை கட்டுவதற்கான சலுகைகளையும் அளித்து வருகிறது. ஆனாலும், கைகளால் மலம் அள்ளும் துப்புரவு தொழிலில் ஒருவரை பணித்ததற்காக, ஒரே ஒரு தனி நபர் மீது கூட இதுவரை வழக்கு தொடுக்கப் படவில்லை. மிகவும் தாமதமாகவே தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு, இவ்வழக்கம் சட்டவிரோதமாக்கப் பட்டு, 12 ஆண்டுகள் கழிந்த பின்னும் சிவில் சமூகத்திற்கு எங்களின் நோக்கங்களின் மீது நம்பிக்கை இல்லை.

அரசு தான் தொடங்கிய நடவடிக்கைகளில், அக்கறையின்மை என்பதைவிட அதிகமான அலட்சியத்துடன் இருந்தது. 1993இல் சட்டம் கொண்டவரப்பட்டாலும், 1997 வரை அது இந்திய கெஜட்டில் இடம் பெறவில்லை. எந்த மாநிலமும் அந்த சட்டத்தை 2000 வரை வெளிப்படையாய் அறிவிக்கவில்லை. ரயில்வே அமைச்சகம் இந்த வழக்கத்தை ஒழிக்க வேண்டுமெனில், நிதிநிலமையை கணக்கில் கொள்ளவேண்டும் என்று சொல்வதை நாம் எப்படி புரிந்து கொள்ள முடியும்? நகராட்சிகள் தொடர்ந்து எடுப்பு கக்கூஸ்களை தொடர்ந்து கட்டி வருவதையும், ஸஃபை கரம்சாரிகளை பணியிலமர்த்துவதையும் எப்படி புரிந்துகொள்ள முடியும்? ஒரு நீதிமன்றம் தனது வளாகத்தில் உள்ள எடுப்பு கக்கூஸ்களை, அரசின் சொத்து என்று அறிவித்து, அதை இடிப்பதை தடுக்கும் எழுத்து மூலமான ஆணை பிறப்பிப்பதை எப்படி புரிந்துகொள்ள முடியும்? ஸஃபை கர்மாச்சாரிகள் ஒழுங்கான சம்பளத்தை வாங்கிகொண்டு, அதற்கேற்ப திறம்பட சுத்தமான வேலை செய்யவில்லை என்று இன்னமும் இந்த சமூகத்தில் பலர் அங்கலாய்ப்பதை எப்படி புரிந்து கொள்வது? சமூக ஒதுக்குதலையும், பொருளாதார சுரணடலையும் அடிப்படையாகக் கொண்டு கட்டப்பெற்ற நமது சாதிய உளவியலே, இந்த அவலத்தை ஒழிப்பதில் தடையாக இருக்கிறதே ஒழிய, தொழில்நுட்பக் குறைவோ, நிதிநிலை பற்றாக்குறையோ, ஒரு அங்க்கீகரிக்கப் பட்ட சட்டகம் ஒன்று இருப்பதோ இல்லாதிருப்பதோ அல்ல பிரச்சனை.

இரண்டு தலைமுறையாக கர்நாடக கோலார் தங்கவயலில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களின் மகன் நான். என் மக்களின் அவலநிலையை அறியும் வயதை அடைந்த தருணத்தில், மலம் கொட்டும் குழிக்கு அருகில் புரண்டு, என் இதயத்திலிருந்து கதறி அழுதேன். தாய் தன் குழந்தைகளுக்கு ஆற்றும் சேவையாய், இந்த மலம் அள்ளும் தொழிலை புனிதமானதாய் சொன்ன காந்தியை என்னால் எந்த விதத்திலும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. தினந்தோறும் புழுக்கள் நிரம்பி நெளியும், கொடிய நாற்றமடிக்கும் பீயள்ளுவதில் எப்படி ஒருவர் பெருமை கொள்ள முடியும்? மூச்சு துவாரங்களை தன்னிச்சையாய் அடைத்துக் கொண்டு, கக்கூஸை அடைவதற்கு முன் நெஞ்சில் முடிந்த அளவிற்கு நல்ல காற்றை அடைத்துகொண்டு, ஸஃபை கரம்சாரிகளான நாங்கள், மிக மோசமான மூச்சு மற்றும் தோல் நோய்களுக்கு ஆளாகி அவதிப் படுகிறோம்.(இந்த புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றுள்ள) நாராயணம்மாவைப் போல எங்களில் பலர் எட்டு அல்லது பதினோரு வயதில் இந்த தொழிலில் தள்ளப்பட்டதை பற்றி விவரிப்பார்கள். எவ்வாறு பல நாட்களுக்கு அவர்களால் வாயருகே உணவை கொண்டுசெல்ல இயலாமல் இருந்ததை பற்றியும், அவர்ளின் மூச்சு துவாரங்களில் பீயின் கொடும் நாற்றம் எல்லா காலங்களிலும் வியாபித்திருப்பதையும், அவர்களின் குடல்கள் குமட்டலுடன் புரட்டி கொண்டு வெளியே எதிர்த்து வந்து விடும் உணர்வு பற்றியும் , எவ்வாறு அவர்கள் எல்லா நேரமும் கூனிகுறுகும் அவமானத்தையும், கண்ணியக் குறைவையும் வெளியே துப்பிக் கொண்டிருப்பதையும் விவரிப்பார்கள். இதைவிட சோகமான யதார்தம், பெரும்பான்மையான மலமள்ளும் தொழிலாளிகள் பெண்களாய் இருப்பது.

(இனி தலித் முரசில் வெளிவந்த புலேந்திரனின் மொழிபெயர்ப்பையே இடுகிறேன் - ரோவ.)

கையால் மலமள்ளும் வேலையைச் செய்வதில் எந்தப் பெருமையும் இல்லை. இந்த வழக்கத்திற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்' என்று முழங்கிய பாபாசாகேப் அம்பேத்கரை, நமது தலைவராக கையால் மலமள்ளுவோராகிய நாம் ஏற்றுக் கொள்ளாதது, இன்னொரு வருத்தத்திற்குரிய செய்தியாகும். நம்மிடையே பிரிவினைகளை வகுத்துக் கொண்டு, நம் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆதரவு தெரிவிக்க, பிற தலித் இயக்கங்களை நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண, கடந்த இருபது ஆண்டுகளாக உழைத்து வருகிறவன் என்ற அடிப்படையிலும், கடந்த பத்து ஆண்டுகளாகக் கையால் மலமள்ளுவோர் சங்கங்களை ஒருங்கிணைத்து வருகிறவன் என்ற அடிப்படையிலும் சொல்கிறேன் : நாம், இந்தியக் குடிமைச் சமூகம், இந்த ஜாதிய உளவியலில் இருந்து விடுதலை பெறாதவரை கையால் மலமள்ளுவதை ஒழிக்கவே முடியாது; கையால் மலமள்ளுவோரும் விடுதலை பெறவே முடியாது. இது என் முடிந்த முடிவு.

தலித்துகளும், தலித் அல்லாதவர்களும், ஏன் கையால் மலமள்ளுவோரும்கூட, என்னிடம் ஒரு கேள்வியை எழுப்புகின்றனர் : ""இதற்கு என்ன மாற்று இருக்கிறது? இந்தத் தொழில் இல்லை எனில், அவர்கள் எப்படி வாழ முடியும்?'' நான் உறுதியாகச் சொல்கிறேன். எமது வாழ்வியலைப் பற்றி அக்கறை கொண்டு எழுப்பப்படும் கேள்விகள் அல்ல இவை. ஜாதி உளவியலும் ஜாதிய மதிப்பீடுகளுமே இத்தகைய கேள்விகளை எழுப்புகின்றன.

இந்நாட்டின் குடிமகன் என்ற வகையில், பாரம்பயம் மிக்க செழுமைமிக்க நாகரீகமுகங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்ற வகையில், நான் உங்கள் முன்வைக்கும் கோரிக்கை இதுதான் : இத்தகைய உளவியலில் இருந்து நாம் விடுதலை பெற்றால்தான் நமது சகோதரர்களும் சகோதரிகளும் இயல்பாகவே விடுதலை பெறுவர். இப்பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு, விடுதலைக்கான இப்போராட்டத்தில் எம்முடன் இணைந்து கொள்ள, நாங்கள் இன்னும் அதிகளவு நண்பர்களை வரவேற்கிறோம்.

- 'இந்தியா நாறுகிறது' என்ற நூலுக்கு பெசவாடா வில்சன் எழுதியுள்ள முன்னுரை

Post a Comment

12 Comments:

Blogger பத்மா அர்விந்த் said...

ரோசாவசந்த்
மற்ற பகுதிகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். சில இடங்களில் இவ்வாறு இருட்டில் தொலைதூரம் போகும் பெண்கள் ஆண்கள் சந்திக்கும் வன்முறைகளை பற்றி படித்தேன். அரசாங்க மெத்தனத்திற்கு அவர்கள் நம்பியுள்ள வாக்குவங்கிகளும் ஒர் காரணம் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.(வட இந்தியாவில் மட்டுமாவது)

3/16/2006 8:12 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

//தலித் ஒருவரின் சமூக நிலை பற்றி நாம் மௌனமாய் இருப்பது, நம் இருப்பையும், சமூக அடுக்கில் நம் நிலையையும் பாதுகாக்கும் மொள்ளமாரித்தனமாக இருக்கலாம்//

ம்ம்ம், வழக்கமான ரோசாஜியின் வார்த்தைகள். சென்னைக்குப் போய் கிட்டே இருக்கேன். அங்க
கீதாவின் புத்தகம் எங்க கிடைக்கும்? நீங்க போட்ட அந்த வில்சனின் கட்டுரை சமீபத்தில் படிச்சேன்.
எங்கே, எந்த மொழியில் என்று ஞாபகம் இல்லை? தமிழ் இணையத்துல யாராவது லிங்க் கொடுத்தார்களா என்றும் தெரியவில்லை.

3/16/2006 9:22 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

ஐயகோ! இதுக்கு முன்பு போட்ட மறுமொழியில் முதல்வாக்கியத்தில் ஸ்மைலி போட மறந்துட்டேன் :-) தயவு செய்து எடுத்துப் போட்டுக்குங்க வசந்த்

3/16/2006 10:37 PM  
Blogger Venkat said...

>வெங்கட்டின் பதிவு, அதில் தொடர்ந்த மறுமொழிகளை பார்தால், வில்சனின் கட்டுரை பெரிதாய் படிக்கப் பட்டதாக தெரியவில்லை.

நான் படித்திருக்கிறேன். அதிலிருக்கும் பெரும்பாலான விடயங்களை நான் மறுக்கவில்லை. இதையொழிக்க ஆணிவேராகிய சாதியை ஒழிக்க வேண்டும் என்பதிலும் எனக்கு மறுப்பில்லை. ஆனால் அதை ஒழிக்கக் கைக்கொள்ளும் ஒற்றைப்படைத்தனமான வழிமுறைகளை மட்டுமே நான் விமர்சித்து, மாற்றுவழிகளின் சாத்தியங்களில் ஒன்றை முன்வைத்தேன்.

அதே ஒற்றைப்படைத்தனமான வாதங்களை நானும் மேற்கொள்ளாததால் என் வாதங்கள் முற்றாகத் திசைதிருப்பப்படுவதைக் காணமுடிகிறது. நம்மில் இன்றைய சமூகத்தில் அறிவியலின் பங்கு குறித்து தெரிந்து கொண்டவர்கள்கூட அதை புறக்கணிப்பதின் நோக்கத்தை நான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. (One can imagine very well where India might be today had it not supported 'information based' economy. The way it drastically changes the landscape is obvious be it economy, development or respect from other countries).

திரு. வில்ஸனின் ஒரே ஒரு விடயத்தை மட்டும் என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை

>இந்த அவலத்தை ஒழிப்பதில் தடையாக இருக்கிறதே ஒழிய, தொழில்நுட்பக் குறைவோ, நிதிநிலை பற்றாக்குறையோ, ஒரு அங்க்கீகரிக்கப் பட்ட சட்டகம் ஒன்று இருப்பதோ இல்லாதிருப்பதோ அல்ல பிரச்சனை.

பிற நாடுகளில் இதற்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களின் சாத்தியங்களைக் காண்பவன் என்ற ரீதியில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். நாம் இதில் நுட்பத்தின் பயன்பாட்டில் இன்னும் இம்மிகூட முன்னேறவில்லை. இதை மறுத்து இல்லை நாம் இதில் கரைகண்டுவிட்டோம் ரீதியில் யாராவது மார்தட்டிக்கொண்டிருந்தால் ஒன்று அவர்களின் அறியாமைக்கு நான் வருத்தப்பட வேண்டும், அல்லது அவர்களின் நோக்கங்களை நான் சந்தேகிக்க வேண்டும்.

மற்றும் நிதிநிலை; இந்திய பட்ஜெட்டில் R&D க்கான ஒதுக்கீட்டில்

2000 : Atomic Energy
3000 : DRDO
3610 : Space
2160 : Agriculture
1750 : CSIR
1746 : DST
0534 : Biotech
2774 : UGC, etc.
1718 : Tech. Ed.
1436 : Medicine

இதில் biotech, medicine, Agri மூன்றும்தான் சுகாதாரம் சார்ந்தவை. இது இராணுவம் சம்பந்தமான space, Atomic Energy, DRDO க்கு ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவு. ஆஹா, நமக்கு இந்திய அரசு தாராளமாகப் பணம் தருகிறது என்று நினைத்துக்கொண்டால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

வில்ஸனின் ஒத்துக்கொள்ள முடியாத இந்த ஒரே விடயத்தைப் பற்றித்தான் என்னுடைய அக்கறையே.

3/16/2006 11:25 PM  
Blogger Venkat said...

திரு ஜோஸப்பின் தலித்துகளியும் உடல் ஊனமுற்றவர்களையும் ஒப்பிடும் வாதத்தின் பொருத்தமின்மையை நான் விமர்சிக்கவில்லை என்று வஸந்த் சொல்லியிருக்கிறார்.

>நீங்கள் சொல்லும் “அவர்களைத் தனியே விடுங்கள்” என்பது உண்மையானாலும், இது ஒரள்வுக்குத்தான் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

என்று எழுதியிருந்த நான் அதன் ஓரளவுகு மேல் பொருத்தமின்மையையும் நேரடியாக எழுதியிருக்க வேண்டும். வேலைகளுக்கிடையில் கிடைத்த சிறு இடைவெளிகளில் பதிலிடும்பொழுது கோர்வையாகச் சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது. இதன் பொருத்தமின்மையை வஸந்த் இப்பொழுது தெளிவுபடுத்தியிருக்கிறார். இதையே நானும் எழுதியிருக்கலாம்.

3/16/2006 11:29 PM  
Blogger ROSAVASANTH said...

For those who want to buy the book online.

http://www.navayana.org/content/catalog.htm#

Thanks for all the comments. I will try to reply today. Otherwise I will reply on monday. thanks!

3/17/2006 7:06 PM  
Blogger ROSAVASANTH said...

பின்னூட்டங்களுக்கு திங்கள் வந்து பதிலளிக்கிறேன்.

எனது மொழிபெயர்ப்பில் ஒரு தவறு இருக்கிறது. நேற்று மொழிபெயர்க்கும்போது Safai Karamchari' என்பதை ஸஃபை கரம்சாரி என்பதாக அப்படியே எழுதியிருந்தேன் - ஒருவேளை அது அவர்களை அழைக்கும் வழக்காக இருக்குமோ என்று எண்ணி. பிறகுதான் உறைத்தது. safai என்பது ஸஃபாயி, ஹிந்தியில் சுத்தம் செய்தல் என்று பொருள். துப்புரவு தொழிலாளர்கள் என்பதற்கான (பொதுவாய் வழங்கப்படும்) ஹிந்தி வார்த்தையையே வில்சன் குறிப்பிடுகிறார். மீதி பிறகு.

3/17/2006 9:01 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

ஜோசப் சாரின் கூற்றிலுள்ள நியாயம் உங்களுக்கு புரிந்திருக்கிறதுபற்றி மகிழ்ச்சி.

நானும் சாதி அமைப்புக்கள் பற்றிய எந்தவித பாதிப்பும் இல்லாமல் வளர்ந்தவன். ஒரு மீனவக் குடம்பத்தில் பிறந்திருந்தாலும் ஒருநாளும் என்னை சாதிபேரில் யாரும் கையாணடதில்லை. அதற்கு முதலில் என் சாதி பற்றிய (தாழ்வான அல்லது உயர்வான) மனப்பாங்கு எனக்கு இருந்ததில்லை. சொல்லப்போனால் வலைப்பதிவுகளைப் படித்துத்தான் சாதி அமைப்பு பற்றிய பல விஷயங்கள் தெரிந்துள்ளேன், அதுபற்றிய எண்ணங்களில் ஈடுபட்டேன்.

என் அனுபவத்தை வைத்துப் பார்த்தால் சாதி என்பதை நாம் அங்கீகரிக்காதவரை, நாமே அது தரும் லாப நஷ்டங்களை தேடிச் செல்லாதவரை, மனித உறவுகளை சாதி அடிப்படையில் ஏற்படுத்திக்கொள்ளாதவரை, எடைபோடாதவரை அது ஒரு பெரிய விஷயமாயில்லை எனச் சொல்வேன்.

ஆனால் இதுவே எல்லோருக்கும் நிலை எனக் கூறமுடியவில்லை. சாதிபற்றிய பிடிப்புக்களை நான் கொஞ்சம் களைந்திருக்கிறேன். என் மகன் இன்னும் கொஞம் களைவான் என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது.

3/18/2006 12:53 AM  
Blogger ROSAVASANTH said...

பத்மா நன்றி. உஷா சென்னையில் எல்லா (உதா:landmark odissey) கடைகளிலும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் கவனிக்கவில்லை. ஆனால் என்னிடம் பிரதிகள் கிடைக்கும் என்பதையும், சென்னையில் அதை அளிப்பது எளிதானது என்பதையும் சென்ற பதிவில் எழுதியிருக்கிறேன். நன்றி.

வெங்கட், ஜெய்ஸ்ரீ,
இன்று அல்லது நாளை ஒரு பதில் எழுதுகிறேன். இப்போதைக்கு சொல்வதானால் நான் உங்கள் அனைவரின் அக்கறைகளையும் மதிக்கிறேன். நன்றி.

3/20/2006 3:59 PM  
Blogger தருமி said...

சென்ற சனிக்கிழமை 17.03.06 மதுரையில் தலித் கலைவிழா நடந்து கொண்டிருந்தபொழுது அந்த மைதானத்தில் சில நண்பர்களோடு தங்கமணியின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். சாதியோடு இணைக்கப்பட்டுள்ள வேலைகளிலிருந்து அம்மக்கள் விடுபட வேண்டும் என்பது என் வாதமாக இருந்தது. (ஒரு சில பதிவுகளை இக்கோணத்தில் எழுதியுமுள்ளேன்)
அப்போது அந்த நண்பர் வட்டத்தில் எழுந்த ஒரு கேள்வி: பள்ளர்களில் பெரும்பான்மையர் தங்கள் 'குலத்தொழிலில்' இருந்து விடுபட்டு பலகாலமாகவே விவசாய தொழிலில்தான் ஈடுபட்டு வருகிறார்கள்; அவர்களோடு அந்த வேலையில் மற்ற பிற்படுத்தப் பட்டோரும், மிக பிற்படுத்தப் பட்டோரும் இணைந்தே வேலை செய்தாலுமே, அதனால் பள்ளர்களின் மேல் உள்ள சாதீய வேறு பாடுகளும், உதாசீனங்களும் தொடர்ந்தே இருந்து வருகின்றன.வர்ணாசிரமத்தில் விதித்த குலத்தொழில் என்று ஒன்றிலிருந்து வெளி வந்தாலும் அவர்கள் இன்னும் தங்கள் மேல் காலம் காலமாய் சமூகம் விதித்துள்ள படிநிலைகளில் எந்த மாற்றம் காணாமல்தான் இருந்து வருகிறார்கள்.

அப்படியாயின்,புதிதாகக் கொண்டு வரும் துப்புரவு எந்திரங்களால் மலம் அள்ளுதலோடு பிணைக்கப்பட்ட மக்களின் சமூக நிலை - பொருளாதர நிலையை விடுங்கள்- மாறுவது சாத்தியமா? எப்போது? எப்படி?

3/20/2006 4:59 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

3/20/2006 5:14 PM  
Blogger ROSAVASANTH said...

பின்னூட்டங்களுக்கு இப்போதைக்கு இங்கே (http://vivathakooththu.blogspot.com/2006/03/blog-post_21.html) பதில் அளித்திருக்கிறேன்.

3/21/2006 9:27 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter