ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, January 25, 2012

காலாமின் யோசனையும், அரசியலும், தீர்வும்.

அப்துல் கலாமின் இலங்கை பயணத்திற்காக அவர் பலவாறு திட்டபட்டார். அந்த கோபத்தில் நியாயம் இருந்தது. இப்போது அவர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வாக ஒன்றை சொல்கிறார். அப்படி ஒன்றும் சிக்கலாக யோசித்து, நுண்ணறிவு கொண்டு வந்தடைந்த யோசனை அல்ல; சாதாரண பொது அறிவுக்கு தோன்றும் ஒரு யோசனைதான். ஆனால் அதில் தவறான உள்நோக்கமோ, சதித் திட்டமோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாடு மற்றும் ஈழத்து மீனவர்களிடையே இருக்கும் தீவீரமான பிரச்சனையில் தீர்வை நோக்கி நகர்வதற்கு இந்த யோசனை உதவும்.

காலாமின் யோசனை சிங்களப்படை தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் இனவெறி கலந்த தாக்குதலுக்கு எந்த தீர்வையும் தரப்போவதில்லை. அந்த பிரச்சனைக்கு இந்தியா மனது வைத்து தீவிர கறாரான நடவடிக்கைகள் எடுத்தால்தான் உண்டு. ஆனால் மீனவர் பிரச்சனையின் இன்னொரு பரிமாணமாக இருப்பது தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் இடையிலான மீன்பிடி பிரச்சனை. இந்த பிரச்சனையின் ஆதாரமே தமிழ் நாட்டு மீனவர்களின் மீன்பிடி முறையால் கடல் வளம் நாசமாவதுடன், ஈழத்து மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழப்பதுதான். இந்த பிரச்சனைக்கான தீர்வை இருதரப்பும் பேசித்தான் நெருங்க முடியும். ஆனால் பேசத்தயாராக இல்லாத தமிழ்நாட்டு தரப்பு, பேசுவது -குறைந்த பட்சமாக பிரச்சனையை எழுப்புவது கூட- ஏதோ துரோகம் என்பது போல் பேசும் தமிழ் தேசிய தரப்பு இதற்கான சாத்தியங்களை உருவாக்கப் போவதில்லை.

கலாம் முன்வைப்பது போல், மூன்று நாட்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதும், மூன்று நாட்கள் ஈழத்து மீனவர்கள் மீன்பிடிப்பதும் இப்போதைக்கு சமரச தீர்வாக ஒப்புகொண்டு தொடங்கலாம் என்று தோன்றுகிறது. இந்த யோசனையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சாதகமானதே. தமிழக மீனவர்களின் கடல்சொத்தை மொத்தமாக அறுவடை செய்யும் மீன்பிடி முறையால், இது தங்களுக்கு சாதகமானது அல்ல என்றே ஈழத்து மீனவர்களின் தரப்பு நினைக்கிறது. ஆனால் இப்போதைக்கு இதைவிட மேலான தீர்வுக்கான யோசனை இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களின் எண்ணிக்கையையும், ஈழத்து மீனவர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு இந்த யோசனையை ஈழத்தவர்கள் ஏற்க வேண்டும். உரையாடல், பிரச்சனைக்கான தீர்வு நோக்கி நகர்தல் ஒருதரப்பை மற்றவர்கள் புரிந்து கொள்ளுதல் என்பதற்கு எந்த அறிகுறிகளும் இல்லாத இன்றய நிலையில் இங்கே தொடங்குவது சரியாக இருக்கும். கலாம் போன்ற அதிகாரத்துடன் தொடர்புடையவர் இதை முன்வைப்பது இந்த யோசனையை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த கவலையுடன் தீர்வுகளை பற்றி கவலைப்படாதவர்கள், இந்த முறையும் வழக்கம் போல கலாமை திட்டி அரசியல் சார்ந்து மனநிறைவடையலாம். அதனால் மீனவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. இந்த அரசியல் ஆவேசப் பிடிவாதத்தை மீறி, மீனவர்கள் நலன் பற்றி கவலைப்படுபவர்கள் யோசிக்க வேண்டும்.

கலாமின் யோசனையை ஏற்பதால் சிங்களப்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த முடியாது. அதற்கான போராட்டங்களும், எதிர்ப்பும், அரசியலும் தொடரத்தான் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மீன்பிடி முறையால் ஈழத்தவர்கள் பாதிப்பதால்தான் அவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் என்கிற பொய்பிரச்சரத்தை, இந்த இருதரப்பிற் கிடையிலான மீன்பிடிப் பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் முறியடிக்க முடியும். எப்படி இருந்தாலும் இது காலப்போக்கில் இரு தரப்பின் நியாயத்தையும் கணக்கில் கொண்டு ஏற்று தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனைதானே.

(என் 'தூவானம்' வலைப்பதிவில் இடப்பட்ட பதிவின் முக்கியத்துவம் கருதி இங்கேயும் இடுகிறேன்.)

Post a Comment

---------------------------------------

Tuesday, January 10, 2012

கறுப்பு வெள்ளையை கருப்பு வெள்ளையாக பார்த்தல்.

பொலிடிகல் கரெக்ட்னெஸ் பற்றி பாடம் எடுப்பதையும், அதை முன்வைத்து எதிர்வினை புரிவதையும் எழுத்தில் இனி செய்யக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். பொலிடிகல் கரெக்ட்னெஸ் என்பதில், இன்னமும் ஒண்ணாங்கிளாஸ் பாஸ் செய்யாத தமிழ் சூழலில், அப்படி எல்லாம் விபரீத முடிவு எடுக்கக்கூடாது என்று தெரிகிறது. மறத்தமிழர்கள் பச்சையாக காட்டும் ஆணாதிக்க வெறியை இணையத்தில் வாசிக்க நேரும்போதெல்லாம், வேறு ஏதோ நாட்டில் நடக்கும் வன்முறை செய்தியை வாசிப்பதுபோல எதிர்கொள்ளும் பழக்கம் கிட்டத்தட்ட வந்துவிட்டது.

நேற்று மதியம்கூட ஸ்ருதிஹாசன் பீர் சாப்பிடும் படம் ஒன்றை எடுத்துப் போட்டு, அதை ஒரு அதிர்ச்சியளிக்கும் விஷயமாக சொல்லி, அந்த செய்தியை இணையத்தில் பரப்பும்படி வேறு கேட்டுக் கொள்ளும் ஃபேஸ்புக் செய்தியை பார்த்தேன்; அதற்கு நிறைய 'லைக்'கள் வேறு; ஸ்ருதிஹாசன் பீர் சாப்பிடுவதில் உனக்கேன் இந்த கொலைவெறி என்று ஒருவர் கேட்கக்கூட நாதியில்லாத அளவில் தமிழ் சூழல் உள்ளது. நேற்றிரவு அன்றாடம் ட்விட்டரில் உரையாடும் நண்பர்கள், அவ்வளவு பச்சைத் தமிழ்தனமாக இல்லாவிட்டாலும், அதே தமிழ் ஜோரில் எதிர்வினை செய்திருக்கிறார்கள்; பல கொக்கிப் பிடி கேள்விகளும் கேட்டிருக்கிறார்கள். இப்போதய சுகாசினி சர்ச்சையில், போஸ்டர், தக்காளி, முட்டை வீசுதல், தமிழ் அடையாளக் குழப்பம் பற்றிய அறிவுச் சொறிதல்வரை வளரும் அளவிற்கு சீரியஸாக இல்லையென்றாலும், சில தெளிவுகளுக்காக, எழுதுவதில் எனக்கே இருக்கும் மொக்கையை சகித்து மெனக்கிடுகிறேன்.

அதற்கு முன் சுகாசினி மீது பரிவு கொண்டு பேச எனக்கு காரணம் எதுவும் கிடையாது; குஷ்பு மீதான தாக்குதல் நடந்த அந்த ஒரு சந்தர்ப்பத்தை தவிர, சுகாசினி சொல்லும் எதையும் நான் ஆதரித்தது கிடையாது. அவர் எதை பற்றி பேசினாலும், ஐந்து நிமிடம் கேட்கும் பொறுமை கூட கிடையாது; எலீட் குரலான அவரை பலமுறை திட்டக் கூட தயங்கியது கிடையாது; எதிர்காலத்திலும் அதற்கான சந்தர்ப்பங்கள் இன்னும் அதிகம். இந்த சந்தர்ப்பத்தில் சுகாசினி பற்றிய சர்ச்சை என்று அல்லாது, குறிப்பிட்ட பிரச்சனையின் அரசியல் பரிமாணங்களும், நம் மக்களின் எதிர்வினையும், என்னை நோக்கிய கேள்வியுமே என்னை எழுத வைக்கிறது. அதே போல அழகான ஆண் என்பதன் இலக்கணத்திற்கு எம்ஜியார், கமல், அரவிந்த்சாமி, அஜீத்தை ஒருநாளும் நான் உதாரணமாக கொண்டதில்லை. நடிகைகள் விஷயத்திலும், பெரும்பான்மை தமிழ் மக்களின் ரசனைக்கு எதிராக, 'கலர்' கண்டு அழகியல் இலக்கணத்தை நான் கற்பித்து கொண்டதில்லை. இவை எல்லாம் என்னை ஒருமுறை வாசித்தவர்களுக்கும் தெரியும் என்றாலும், விவாதம் என்று வந்துவிட்டால், சதாம் குர்து இனத்தவரை கொன்றதை பற்றி பேசினால், புஷ் செய்த அக்கிரமங்களை பதிலாக முன்வைப்பது ஒரு விவாத அணுமுறையாகி விட்டதால் இந்த சுய விளக்கத்தை சொல்கிறேன்.

அதே போல சுகாசினி இதற்கு முன்வாழ்க்கையில் என்னவெல்லாம் பேசினார் என்ற முழுத் தகவல்கள் என்னிடம் கிடையாது; தெரியாது; நண்பர் டிபிசிடி அளித்த இந்த செய்தியை மட்டும் வைத்தே பேசுகிறேன். இந்த செய்தியையும் தட்ஸ்டமில் போன்ற ஒரு நம்பகதன்மையில்லாத தளத்தை வைத்து பேசுவதில் பிரச்சனையிருந்தாலும் ஒரு கருத்து சார்ந்த விவாதத்திற்காக அதை அப்படியே எடுத்துக் கொள்கிறேன்.

சுகாசினி இப்போது சொன்னது என்ன? 'எம்ஜியார், கமல், அரவிந்த்சாமி, அஜீத் போன்று அழகானவர்களை' கதாநாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு சாதாரண ரசிகையாக தான் கேட்டுக் கொள்வதாக சொல்லியுள்ளார்; அவ்வளவுதான் சொல்லியுள்ளதாக செய்தி வந்துள்ளது. நேரடியாக அவர் தமிழ் கலாச்சாரத்தின் அதி முக்கிய கருத்தாக்கமான 'கலர்' பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்னதை பற்றிய ஒரு தனிப்பட்ட வாசிப்பாகத்தான் 'கலராக' கதாநாயகர்கள் வேண்டும் என்று அவர் கேட்பதாக பொருள் கொள்ள முடியும். ஆனாலும் அப்படி அவர் சொன்னதாகவே எடுத்துக் கொள்வோம். அதிலேதான் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு யாரும் திருப்தியான பதில் எதுவும் சொல்லவில்லை.

ஒருவர் தனக்கு வெள்ளை நிறத்தில் கதாநாயகர்கள் பிடிக்கும் என்று சொல்வது ரேசிசமா? அப்படியானால் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று நான் சொன்னால் அது என்ன? அதை ஒரு சமூகத்தின் பொதுவான ரசனையாக கட்டமைப்பதும், முன்னனுமானமாக கொள்வதும், கருப்பாக இருக்கும் ஒருவரை மட்டமாக பேசியிருந்தால் அதுவும்தான் பிரச்சனை. நிச்சயமாக சுகாசினி அப்படி நேரடியாக கருப்பான ஒருவரை மட்டமாக சொல்லவில்லை 'எம்ஜியார் கமல், அஜித்தான் தேவை, தனுஷ் தேவையில்லை என்பது ரேசிசம் இல்லையா' என்று கேட்கிறார் தமிழ் சசி. 'தனுஷ் தேவையில்லை' என்ற கருத்தை சசி எங்கே வாசித்தாரோ எனக்கு தெரியாது; வெளிவந்த செய்தியில் நான் வாசிக்கவில்லை. ஆனால் ஒருவேளை தனுஷின் கலரை பற்றி அவர் பேசியிருந்தால் கூட, அதில் எந்த தவறும் இல்லை. அதை ஒரு எதிர்வினையாக நிச்சயம் பார்க்கமுடியும். 'வொயிட்டு கலரு கேர்ளு..' என்று பாடுபவருக்கு, பெண்மட்டும் வொயிட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு, அவர் கருப்புதான் என்று உணர்த்துவது ஒருவகையான எதிர்வினைதான். (உண்மையில் 'வொயிட் கலரு கேர்ளு' என்று தனுஷ் பாடுவதில் கிடப்பது அல்ல ரேசிசம், 'கேர்ளு ஹார்ட்டு ப்ளாக்கு..' என்று எதிர்மறையான ஒரு விஷயத்திற்கு கருப்பு நிறத்தை குறியீடாக்குவதுதான் நிறம் சார்ந்த ரேசிச மனப்பான்மை.)

'வெள்ளை கலர் பிடிக்கும்' என்று ஒருவர் கருதுவதும், கருத்து சொல்வதும் ரேசிசமா என்று நேரடியாக கேட்பதை விடுவோம்; சமூக பொது அழகியலாக அது இருப்பதனால், அதன் பிரச்சனைகளை மனதில் கொண்டு, அவ்வாறு கருதுவதை எதிர்ப்பதாக கொள்வோம்; அப்படியானாலும் உண்மையில் எதிர்க்க வேண்டியது சுகாசினி பேசியதையா? மேலும் சுகாசினி பேசியதை எதிர்க்கும் அருகதை யாருக்காவது இங்கு இருக்கிறதா? நிச்சயமாக அதற்கான அருகதை சேரனுக்கு கிடையாது. சேரனுக்கு மட்டுமின்று எனக்கு @போட்டு பேசிய யாருக்கும் கூட இருப்பதாக தெரியவில்லை.

சேரன் எத்தனை கறுப்பு நடிகைகளை தனது படத்தில் நடிக்க வைத்துள்ளார்? சேரனை விடுவோம், இந்த செந்தமிழன் சீமான் நடிக்க வைத்துள்ள கறுப்பு நடிகைகள் ஒன்றாவது உண்டா? நடிகைத் தேர்வு என்பது வெகுஜன ரசனையை கணக்கில் கொண்டு மட்டும் நடப்பது அல்லவே; இவர்களின் அழகியல் ரசனை, இன்னபிற ரசனைகள் சார்ந்தும் நடப்பதுதானே. தன் படத்தில் நடிக்க கலரான, புத்தம் புதிய, இளைமையான நடிகை வேண்டும் என்று தெளிவாக இருப்பவர், பெண்கள் மட்டும் தங்களை போன்று வயசாகி கன்னச்சதை தொங்கும் 'ஹேண்ட்சம் கருப்பர்களை' ரசிக்க வேண்டும் என்பது என்ன எண்ணம்? இதைத்தான் ஆணாதிக்க ரேசிசம் என்கிறேன். நண்பர்கள் புரியவில்லை என்கிறார்கள். இதென்ன அவ்வளவு கடினமான கான்செப்டா? பெண்களுக்கான அழகியலாக வெள்ளையையும், ஆண்களுக்கான அழகியல் என்று வரும்போது மட்டும் சுய அடையாளத்தை முன்வைத்து கருப்பை ரசிக்க வேண்டும் என்று பெண்களை நோக்கி சொல்வதைத்தான் ஆணாதிக்க ரேசிசம் என்கிறேன். வெள்ளை கதாநாயகியை தனக்கு தேர்வு செய்துவிட்டு, சுகாசினியை கறுப்பு கதாநாயகர்களை ரசிக்க சொல்வது நிறம் சார்ந்த ஆணாதிக்க திமிர் அன்றி வேறென்ன? (அடிப்படையில் இது ஆணாதிக்கம் சார்ந்த பிரச்சனை என்பதால் இதை நான் ரேசிச ஆணாதிக்கம் என்று சொல்லியிருக்க வேண்டும்.) இதைத்தானே தமிழ் அரசியலை முன்வைக்கும் சேரன், சீமான், பாரதிராஜா பொன்ற அனைவரும் செய்கின்றனர்.

அந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த நிலை கூட இல்லாமல், கலைஞரின் பொன்னர்-சங்கரில் கூட நீல நிற கண்களுடன் நடிகைகள் இருக்கும் இன்றய சூழலில், சுகாசினி சொன்னதை சூழலுக்கான எதிர்வினையாக பார்க்கமுடியும். நடிகைகள் எல்லாம் உங்களுக்கு வெள்ளை வெள்ளையாக வேண்டும்; இதில் நடிகர்கள் வெள்ளையாக இருக்க ஒரு பெண் ஆசைப்பட்டால் அது ரேசிசமா? என்ன லாஜிக் இது! இன்று நிலவும் அழகியல் அடிப்படையில், தங்களுக்கும், தங்களது ரசனைக்கும் பங்கு கேட்கிறார் சுகாசினி. தொடர்ந்து நிலவும் சமூக ரசனையை பற்றி தொடர் விமர்சனம் செய்யாத யாருக்கும் சுகாசினிக்கு எதிர்வினை வைக்கும் தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தினமும்தானே தமிழ் சேனலில், எஃபெம்மில், நண்பர்களிடத்தில், பேருந்தில், பொது இடத்தில் என்று எங்கும் வெள்ளை கலரை புகழும், தீ ஃபிகரை வியக்கும் வசனங்களை கேட்கிறோம். இதில் எத்தனை இடத்தில் இவர்கள் எதிர்வினை செய்திருக்கிறார்கள்? அதை பற்றிய பிரஞ்ஞையில்லாமல், சுகாசினிக்கு மட்டும் பொங்குவதன் உளவியல் ஆணாதிக்கம் சார்ந்தது என்று நான் கருதுகிறேன். சுகாசினியின் பேச்சுக்கு எதிர்வினை வைத்தவர்களால் சின்ன சுயவிமரசனத்தை கூட செய்து கொள்ள முடியவில்லை; ஒரு கறுப்பு கதாநாயகியை யதார்த்தத்தில் முன்வைக்காத, சேரனை குற்றம் சொல்ல கூட யாருக்கும் தோன்றவில்லை.

மேலும் இது ஏதோ சினிமாக்காரர்களின் தேர்வு சார்ந்த பிரச்சனையும் அல்ல. நமது வெகுஜன ரசனை சார்ந்ததும்தான். கன்னங்கரேல் இளைஞன் ரொம்ப கலரான பெண்ணை மணம் செய்ய விரும்புவதாக, வெளிப்படையாக சொல்வதை கேட்கும் யதார்த்தத்தில்தானே நாம் இருக்கிறோம். ஒருவேளை உண்மையில் நம் வெகுஜன ரசனைக்கு கறுப்புதான் பிடிக்கும் என்றால், பணம் செலவழித்து மும்பையிலிருந்து அழைத்து வந்து, ஹோட்டல் வாடகை எல்லாம் கொடுத்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் நம் சினிமாக்காரர்களுக்கு இருக்காது. நம் சமூகத்தின் பொதுமகன் வெள்ளை கதாநாயகியுடன் கற்பனையில் குலாவ சினிமாவிற்கு செல்கிறான்; சினிமா அதை அளிக்கிறது. இந்த சமூக இயக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத போது, பெண்களும் அதே போன்ற கதநாயகர்களை விரும்பினால் அதை ரேசிசமாக பார்க்கமுடியாது; நிலவும் யதார்த்தத்திற்கு எதிர்வினையாகத்தான் பார்க்கமுடியும்.

இதையெல்லாம்விட நம் கருப்பு கதாநாயகர்களே மேக்கப் போட்டு வெள்ளையாகத்தானே தோன்றுகிறார்கள். 'மண்டேலா மண்டையா' என்று திட்டப்படும் செந்தில் கூட மூஞ்சியில் சிகப்பு சாயம் பூசாமல் தோன்றுவதில்லையே. இதில் ஒரிஜினலாகவே 'கலரில்' ஒரு கதாநாயகனை கேட்டால் அதில் என்ன பெரிய பிரச்சனை?

'அயன்' படம் வெளிவந்த போது ஏதோ ஒரு டீவியில் இயக்குனர் ஆனந்த், தமன்னா, ஜெகன், சூர்யா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி. படக்குழுவை சேர்ந்த ஒருவர் இயக்குனரை கேட்கிறார், "ஏங்க இவன் (ஜெகன்) இப்படி அண்டங்காங்காக்கா மாதிரி இருக்கான், இவனைப்போய் எப்படி தமன்னாவிற்கு அண்ணனா சூஸ் பண்ணிங்க?' டைரக்டரும் ஏதோ பதில் சொல்கிறார். அதற்கு பிறகு டைரக்டர் ஆனந்தே தமன்னாவிடம்,

" அது எப்படி நீங்க இவ்வளவு கலரா இருக்கீங்க?" என்று கேட்கிறார். தமன்னா தான் வெயிலுக்கு எடுக்கும் முன்னெச்சரிக்கைகள், குங்குமப்பூ, பப்பாளி அரைத்து தேய்த்தல் என்று பலதை வரிசையாக சொல்கிறார்.

"ஓ.. இதெல்லாம் செஞ்சா உங்களை மாதிரி கலரா மாறிரலாமா?" (ஒரே சிரிப்பு)

தமன்னாவும் சிரித்து "இல்ல.. பேசிக்கா இது ஹெரிடிடரியா வர்ரது, அதுக்கு மேலே ப்ருகாஷனா..."

இந்த இயக்குனார் இன்னொரு விழாவில் சுகாசினியின் ரேசிசத்தை கண்டித்தால், நம் மக்கள் அதற்கு விசில் அடித்தால் ஆச்சரியமே படவேண்டாம்.

Post a Comment

---------------------------------------
Site Meter