ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, May 23, 2005

ஜெயகாந்தனுக்கு நன்றி!

ஜெயகாந்தனுக்கும் சிவக்குமாருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

PKசிவக்குமாரின் பதிவின் மூலம் ஜெயகாந்தனின் பேச்சை கேட்டேன். சிவக்குமாரின் பதிவுகளை படிப்பதில் எனக்கு பொதுவாய் உள்ள ஒரே சிக்கல், எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் ஏற்படும் குமட்டலை அடக்கி கொள்வது. ஆனாலும் மனித மன வெளிப்பாடு எவ்வளவு தூரம் நேர்மையற்று இருக்க முடியும் என்று அறிந்துகொள்ள, எனக்கு இருக்கும் ஆவலின் காரணமாய், எங்கே கிடைத்தாலும் அவர் எழுதியதை படிக்கும் மசாக்கிச முயற்சியில் இறங்குவதுண்டு. இது தீமையின் பரிமாணத்தை முழுமையாய் அறிந்துகொள்ளும் முனைப்பு அல்ல. ஏனெனில் நேர்மை என்பது தீமைகளின் உறைவிடத்தில் கூட காணக்கூடியது. உதாரணமாய் மார்க்வெஸ் தெ சாத் என்ற, சாடிஸம் என்ற கருத்தாக்கம் உருவாக காரணமான மனிதனின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். அவை அத்தனையும் உச்சகட்ட நேர்மையுடன் எழுதப்பட்டவை. அவரது புனைவில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் நேர்மையாய் பேசக்கூடியவை. சரியாக சொல்ல வேண்டுமானால் பெரியாரிடம் நான் கண்ட முரட்டுத்தனமான நேர்மையை sadeஇடம் என்னால் காண முடிந்தது. (ஆனால் பெரியாரிடம் மனிதமாகவும் ஸாடிடம் சாடிஸமாகவும் அது வெளிப்பட்டது வேறு விஷயம்.)

ஆனால் சோ தொடங்கி அரவிந்தன் நீலகண்டன் வரை நான் எதிர்க்கும் எல்லோரிடமும் ஏதோ ஒரு கட்டத்தில் காணக்கூடிய நேர்மை துளிகூட காணக் கிடைக்காமல் எனக்கு சிவக்குமாரின் எழுத்துக்கள் மட்டுமே தெரிந்து வந்தது. இதற்கு இவ்வளவு பொருத்தமான வேறு உதாரணம் எனக்கு கிடைத்ததில்லை. இதனாலேயே அவர் எழுத்து அச்சுபிச்சுத்தனமாக இருந்தாலும், அதனால் பயன்பெற எனக்கு எதுவும் இல்லாவிட்டாலும் அவரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் (குமட்டல் தாக்குபிடிக்கும் வரை) படித்து வந்தேன். ஆனால் அந்த மனிதருக்கு, நான் எதிர்த்த போதும் நேர்மையாளனாய் மதித்த, ஜெயகாந்தன் ஆதர்சமாய் இருப்பது மட்டும் எனக்கு ஒரு முரணாய் தொடர்ந்து உறுத்தி வந்தது. ஆனால் அந்த பிரச்சனை ஜெயகாந்தனின் இந்த பேச்சை கேட்டவுடன் மறைந்தது. சிவக்குமாரின் பதிவுகளில் காணக்கூடிய, மிக அபத்தமான ஒரு வாதத்தை மிகவும் நேர்மையற்ற முறையில் திறமையாய் தர்க்க படுத்துவது என்ற தன்மையை, ஜெயகாந்தனின் பேச்சில் கேட்க முடிந்தது. உண்மையில் ஜெயகாந்தனின் 'நாய்பேச்சு' கூட எந்த ஆச்சரியத்தையும் அளிக்காமல் பழைய ஜெயகாந்தனின் தொடர்ச்சியாய்,அவரின் 'வெளிப்படையான நேர்மை' என்று நினைத்ததன் பகுதியுமாகவே தெரிந்தது. அதற்கு அவர் அளித்த விளக்கங்கள் மட்டுமே இந்த தெளிவை அளித்தது. இப்போது பார்க்கும்போது எனக்கு ஜெயகாந்தன் என்ற ஆளுமையின் எச்சமாக சிவகுமார் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த புரிதலை எனக்கு அளித்ததற்காகவும், வாழ்வும் இயற்கையும் முரண்பாட்டின் அடிப்படையில் அமையப்பட்டதோ என்ற என் ஐயத்திற்கான ஒரு கண்ணியை உடைத்ததற்காகவும் ஜெயகாந்தனுக்கும், அதை தனது வழக்கமான தர்க்கத்துடன் அளித்த சிவக்குமாருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இதை ஜெயகாந்தனின் பேச்சை கேட்டு கொதித்து போய் எழுதவில்லை. ஏனெனில் இப்போது கூட நான் ஜெயகாந்தனின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை புறக்கணிக்க அழைப்பு விட மாட்டேன். எந்த விதத்திலும் ஸாடை ஒப்புகொள்ள முடியாவிட்டாலும், ஸாடின் பார்வைக்கு எதிராகவே பயணித்தாலும், தீமைகளின் உடோப்பியாவை முன்வைத்த ஸாடின் எழுத்துக்கள், அதன் நேர்மை காரணமாகவும், நம்மை ஏதோ ஒரு விதத்தில் பரிசீலிக்க வைத்து கருமாற்றம் செய்வதற்காகவும் அது முக்கியமானது. ஸாத் என்ற ஜீனியஸுடன் ஒருக்காலும் ஜெயகாந்தனை ஒப்பிட முடியாது. நாம் ஏற்றுகொள்ளாமல் எதிர்க்கும் ஒருவரின் எழுத்து எப்படி மிக முக்கியமாகிறது எனபதற்கான உதாரணமாய் மட்டும் ஸாடை குறிப்பிட்டேன். அது போல் முரண்பாடுகளின் இயங்குதலை புரிந்துகொள்ளவும், நம் சமூகத்தின் அழுகலை அடையாளம் காணவும், நேர்மையின்மையின் பல பரிமாணங்களை தெரிந்துகொள்ளவும், ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள் எவ்வளவு சுயமரியாதையற்று இருக்க முடியும் என்று அறிந்துகொள்ளவும் (பேச்சினிடையே கைதட்டல்களை கவனிக்கவும்) ஜெயகாந்தனின் எழுத்துக்களும், வாழ்வும், கருத்துக்களும் நமக்கு மிகவும் அவசியமாகிறது. அதனால் ஜெயகாந்தனை அவசியம் அலசவேண்டுமே ஒழிய, புறக்கணிக்க வேண்டாம் என்று என் சார்பில் கேட்டுகொள்கிறேன்.

ஒரு மனத்தெளிவை உடனடியாய் பதிந்து வைப்பதற்காக மட்டுமே இந்த பதிவு. தொடர்ந்து அஞ்ஞாதவாசத்தை பாவனை செய்யபோவதால் யாரேனும் பின்னூட்டமிட நேர்ந்தால் முன்னமே நன்றி!

பின் குறிப்பு: இந்த பதிவு முழுக்க சீரியஸானது, ஒரு வார்த்தை கூட கிண்டல் இல்லை என்பதை, அப்படி எடுத்துகொள்ளும் வாய்ப்பை கணக்கில் கொண்டு, சொல்லிக் கொள்கிறேன்.

Post a Comment

---------------------------------------
Site Meter