ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Sunday, October 04, 2015

இந்து அடையாளமிலி - 1


ஏதேனும் ஒரு பிரச்சனையைத்தொடர்ந்து பரபரப்பாக வைத்திருப்பது ஊடகங்களின் இருப்பிற்கு இன்றியமையாதது; வணிக நிர்பந்தங்களற்ற, பலதரப்பட்ட மக்களின் தன்னார்வப் பங்களிப்பினாலான இணையத்தின் இயங்கியலிற்கும், தொடர்ந்த பரபரப்பு அவசியமாவது சுவாரசியமளிக்கிறது. இணையத்தில் கவனிக்கப்படுவர்கள், இரு எதிர்நிலைகளில் ஒன்றைத் தேர்வு செய்து, அதைப் பாதுகாத்து தர்க்கப்படுத்தும் கட்டாயத்திலிருக்க, பரபரப்புப் பிரச்சனையின் பல பக்கங்களை அணுக ஆளிருப்பதில்லை. பரபரப்பான பிரச்சனைகளில் கருத்து சொல்வதைத் தவிர்க்க வேண்டும்' என்ற கருத்துடைய எழுத்தாளரும் ஒரு நிலையைச் சார்ந்து கருத்து சொல்லிக் கொண்டிருக்க, வதவதவென வரும் பதிவுகளுடன் குறிப்பிட்ட பிரச்சனை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது, சிலரது விநோத நிலைபாடுகள் அந்தப் பரபரப்புக் கட்டத்திற்குப் பிறகு மறந்து சாதாரணமாகி விடுகிறது.

உதாரணமாக, இணையவெளியில் ஒரு பெண் மீது மோசமான வசைத் தாக்குதல் நடந்தால், நாகரீகம் பேணும் அனைவரும் அதை நிபந்தனையின்றி கண்டிப்பார்கள் என்றுதான் எதிர்பார்ப்போம். ஆனால் சற்றும் எதிர்பாராத வண்ணம் பெண்ணியம் பேசக்கூடிய ஒருவர் - அதிலும் பெண்ணியம் பேசக்கூடிய பெண் ஒருவர்அந்தத் தாக்குதலை நடத்தியவருக்கு ஆதரவான நிலைபாட்டுடன் பதிவு எழுதி பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குவார். இந்தகைய விநோத அதிர்ச்சிகள் ஒவ்வொரு பரபரப்புப் பிரச்சனையின் போதும் எதிர்கொண்டு சகஜமான ஒன்றாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இவை நிலைப்பாடு எடுப்பவர்களின் ஓர்மை சார்ந்த பிரச்சனையா, நிலைப்பாடுகளை கணிப்பவரின் அளவை சார்ந்த பிரச்சனையா என்று துல்லியப்படுத்த முடியாத சிக்கல், இணைய ஊடகத்தின் ஒரு சுவாரசியம்.

சமீபத்தில் அடித்து ஓய்ந்துவிட்ட 'மாதொருபாகன்' நாவல் பிரச்சனையை, சாதிய மற்றும் இந்துத்வச் சக்திகள் ஓர் எழுத்தாளரின் சுதந்திரம் மீது நடத்திய ஓர் அடக்குமுறை என்று புரிந்துகொண்டால், சாதியத்திற்கும் இந்துத்வத்திற்கும் எதிராக எழுதிக் கொண்டிருப்பவர்களும், கட்டற்ற எழுத்துச் சுதந்திரத்தை அங்கீகரிப்பவர்களும் நிபந்தனையின்றி கண்டிப்பார்கள் என்று நியாயமாக எதிர்பார்ப்போம். குறிப்பாக நாவலில் மையப்படுத்தப்பட்ட பாலியல் பிரச்சனையைக் கவனத்தில் கொண்டால், எதிர்கலாச்சாரம், மாற்றுக்கலாச்சாரம், பாலியல் சுதந்திரம் என்று பேசியவர்கள், இந்தக் கலாச்சார வன்முறையை வேறு உள்நோக்கமின்றி எதிர்ப்பார்கள் என்றுதான் எதிர்பார்க்க வேண்டும். அப்படிப் பலர் தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர்; இதன் மூலம் உலகக் கவனம் பெறும் பிரச்சனையாகவும் மாறியது. ஆனால் வழக்கம் போல, நாம் எதிர்பார்க்கவே முடியாத தர்க்க நிலையிலிருந்து, பிரச்சனையைத் திசை திருப்புவதிலும், நீர்த்துப் போகச் செய்வதிலும் இவர்களில் சிலரும் முன்னணியில் நின்றார்கள். நல்லவேளையாக கருத்தியல்ரீதியாகத் தர்மசங்கடம் பெரிதும் அளிக்காத வண்ணம், அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்வர்கள் துவக்கத்தில் பெருமாள் முருகனின் எழுத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக பேசினாலும், பின்னர் இந்துத்வ பொதுக்குரலுடன் ஐக்கியமாகிக் கொண்டார்கள். ஆயினும் இந்துத்வாக்களின் லிபரல் வேஷம் கலைந்தது என்று தலைப்பிடும் வாய்ப்பை, குத்துத் திராவிடியம் பேசிய சில இணையர்கள் தட்டிவிட்டார்கள் என்பது நகைத்துயரம். சுயலாபத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசத் தயராக இருப்பவர்களையும், தனிப்பட்ட கடுப்புகளில் கருத்துருவ நிலைபாட்டை சொதப்புவர்களையும் உரையாடிப் புரிந்து கொள்ள முயலும் அபத்தத்தைத் தவிர்த்து, தங்கள் கருத்தியலுக்கு நேர்மையாக, சொதப்பாத நிலைப்பாடுகளை எடுக்கும் திறன் கொண்ட இந்துத்வவாதிகளையும் மற்றவர்களையும் புரிந்து கொள்ள முயல்வது அறிவுப்பயன் கொண்ட செயல் என்று தோன்றுகிறது

̀மாதொரு பாகன்' நாவலின் திருவிழாவில் நடக்கும், அந்தக் குடும்ப உறவுகளை மீறிய பாலுறவு நடைமுறை உண்மையானதுதானா என்று ஆதாரங்கள் கொண்டு உறுதி செய்ய முடியாது; இப்போதிருக்கும் அதீத சாதியக் கண்காணிப்பில் யாரும் அதற்கு வெளிப்படையாகச் சாட்சி சொல்லப் போவதில்லை. ஒருவகையில் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த பெருமாள் முருகன், அப்படி சாட்சி சொல்லித்தான் இந்தப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். ஆதாரங்களற்ற சதித்திட்டப் புனைவுகளைக் குப்பையில் போட்டுவிட்டுப் பார்த்தால், பல்வேறு கலாச்சாரத் தகவல்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கும் நாவலில், தன் சமூகத்தைப் பற்றி இல்லவே இல்லாத ஒன்றைப் புனைவாக்க, பெருமாள் முருகனின் உள்நோக்கத்திற்கான காரணம் எதுவும் புலப்படவில்லை. இந்தியச் சமூகங்களில், திருவிழாக்களுடன் பாலியல் சார்ந்த கொண்டாட்டங்கள் கொண்டிருக்கும் தொடர்பை அறிந்த பலருக்கும், நேரடியாகக் கண்டிருப்பவர்களுக்கும், நாவலின் சம்பவங்களும் அதன் விவரிப்புகளும் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டது. இந்தக் குறிப்பிட்ட வாய்கதையின் உண்மைத்தன்மை பற்றிய விவாதத்திற்குள் நான் இறங்கவில்லை; நாவலை முன்வைத்து எழுப்பப்பட்ட பல அபத்தமான கேள்விகளையும், சில நியாயமான கேள்விகளையும் எதிர்கொண்டு பதில் சொல்லவும் முயலவில்லை. இத்தகைய நடைமுறை - இருப்பதற்கு சாத்தியங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில் - இருந்ததாகக் கருதுகோள் கொண்டு, சில கருத்து நிலைகளை மட்டும் கவனத்தில் கொள்கிறேன்.  

நாவலில் விவரிக்கப்படும், பிள்ளைப்பேறில்லா தம்பதிகள் எதிர்கொள்ளும் நிந்தனைகளும், இழிவுபடுத்தல்களும், அதன் விளைவாகும் சண்டைகளும், சமூகப் புறக்கணித்தல்களும் எல்லோரும் நம்பக்கூடிய யதார்த்தம் கொண்டவை; சமீபகாலம் வரை கூட இப்படி எத்தனையோ கேள்விப்பட்டிருப்போம். அசையாச் சொந்த நிலம் சார்ந்த விவசாயிகளாக, உறவினர்கள் சுற்றத்தார்கள் என்று தன் இருப்பை நிர்ணயிக்கும் சமூகத்தை விட்டுத் தப்ப முடியாத நிலையில் அந்தக் குடும்பம் இருக்கிறது. அப்படியான விதிவசப்பட்ட நிலையில், எல்லா முயற்சிகளும் கைவிட்ட பிறகு, ஒரு நெகிழ்வான தீர்வாக திருவிழா நடைமுறை இருக்கிறது. நம் சமூகத்தின் இறுக்கமான பல நெருக்குதல்களுக்கும், இப்படி ஏதோ ஒரு தீர்வுக்கான நெகிழ்வு இருப்பதை காணலாம். அந்த வகையில் இந்து சமூகத்தின் ஒரு நெகிழ்வான தன்மையையே நாவல் கையாளுகிறது. இன்னொரு பக்கம் சமூகத்தின் தந்தைவழி சமூகக் கற்பு மதிப்பீடுகளுக்கு எதிராக, அந்த சமூகத்தினுள்ளேயே இருக்கும் ஒரு கூறாகவும் இந்த நடைமுறையைக் காணமுடியும்

சாதியும், அது சார்ந்த பெருமிதங்களும் என்றும் உள்ளவை; சமூக அரசியலை அவை எப்போதும் பாதித்து வந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் வெளிப்பட்டது போன்ற, மிக வெளிப்படையான சாதியப் பெருமைகளும் சாதித்திமிர்களும் கொண்ட நேரடி அரசியல், தமிழகத்தில் முன்னால் இருந்ததில்லை. நேரடிச் சாதிய அரசியலில் வன்னியர் சங்கமாக பாமக முதலில் துவங்கினாலும், துவக்கத்தில் அதன் அரசியல் மற்ற ஒடுக்கப்பட்டவர்களை உள்ளடக்குவதாகவும், குறிப்பாக தலித் அரசியலை அங்கீகரிப்பதாகவும் குறியீடாகவேனும் இருந்தது. தொண்ணூறுகளில் எழுந்த தனித்துவமான தலித் அரசியலுக்கு எதிர்வினையாக, பாமக மட்டுமின்றி வேறு சாதிகளும், சாதிப் பெருமிதமும் தலித் எதிர்ப்பும் கொண்ட அரசியலைக் கைகொண்டது. தேவர் மகன், சின்ன கவுண்டர் போன்று, அதற்கு முன் இல்லாத, நேரடியாக சாதியடையாளப் பெருமை பேசும் படங்கள், இந்த அடையாள அரசியலுக்குக் கருப்படிம உந்துதலாக அமைந்தன. அதே தொண்ணூறுகளில், ஜெயலலிதா ஆட்சியில், அகலமாகக் கால் ஊன்றிய இந்துத்வமும் இந்த அரசியலுக்கு உறுதுணை செய்தது. இந்த அரசியலின் ஒரு பகுதியாக சாதியப் பெருமை சொல்லும் வரலாறுகளும், தூய்மைக் கற்பிதங்களும், அதைக் காக்கும் பரப்புரைகளும், அது சார்ந்த கண்காணிப்புகளும் உருவானது. கவுண்டர் சாதி இதில் ஒரு முக்கிய உதாரணப் பாத்திரத்தை வகிக்கிறது.  (முற்போக்கு சொல்லாடல்களில் மயங்கி, சாதி எதிர்ப்பரசியல் பேசிய சிலர் பாமகவை ஆதரிக்கும் வரலாற்றுத் தவறை ஆரம்ப கட்டத்தில் செய்தாலும், மற்ற ஜாதி விஷயத்தில் செய்யவில்லை.) இந்த அரசியல் வளர்ந்த உச்சக்கட்டமான இன்றய நிலையில், திருச்செங்கோட்டு மக்களிடம் வேறு எந்த வகை எதிர்வினைகளையும் எதிர்பார்க்க முடியாது. ஓட்டுமொத்த சாதியினரின் பிறப்பையும் இழிவு செய்துள்ளதான பொய்ப்பரப்புரை எடுபட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை

திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்தது என்றாலும், இந்தத் திருவிழாச் சமாச்சாரத்தை சமூகத்தின் ஒரு ஆரோக்கியமான கூறாக இவர்கள் பார்க்கவில்லை. முக்கால் நூற்றாண்டாக, இந்த ̀சாமி கொடுத்த பிள்ளை' திருவிழா விஷயத்தை அசட்டுக் கவிதைகளாக, வசைகளாக, ஆபாச நகைச்சுவைகளாக சொல்லிச் சிரித்து வருபவர்கள் இவர்கள். முரட்டு நாத்திக பார்வையில் இதை ஒரு சமூக ஆபாசமாக, அந்த ஆபாசத்தை நாவல் வெளிகொணர்ந்ததாகக் கருதியே, இவர்கள் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நின்றார்கள். நாவலின் சித்தரிப்பு அப்படி இல்லை என்பது இவர்களுக்கு புலப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. திருவிழாவில் தனியாய் விடப்படும் பொன்னா தன்னை விடுதலை பெற்றவளாக, தனக்கான வெளி கட்டுபாடற்று விரிவதாக, பல்வேறு தேர்வுகளும் வாய்ப்புகளும் கொண்டதாக மாறியதாக உணர்கிறாள்; நாவல் பொன்னாவின் விடுதலை உணர்வையும், அவள் செய்யும் சுதந்திரமான தேர்வையும் விவரிக்கிறதேயன்றி ஆபாசத்தை அல்ல

திருசெங்கோடு மக்களும், திகவினரும் நிலைபாட்டைத் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் குழப்பம் எதுவும் ஏற்படாத தெளிவான கருப்பு வெள்ளை நிறத்தில் கொண்டிருப்பவர்கள்; மாறாக இந்துத்வர்கள் வானவில் வண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். பொதுவான கட்டத்தில் இப்படிப் பல்வேறு நிறநிலைகளில் இருப்பதைப் போல் தோற்றமளித்தாலும், பிரச்சனை ஓர் உச்ச கட்டத்தை அடையும்போது தெளிவாக எல்லோரும் ஒரே ஒரு நிறம் மட்டுமே காட்டுகிறார்கள். சுதந்திரவாதம் பேசுவதாக சொல்லிக்கொள்ளும் இந்துத்வர்கள், நாவல் இந்துமதத்தையோ குறிப்பிட்ட மக்களையோ இழிவுபடுத்தவில்லை என்று முதலில் சொன்னார்கள்; புத்தகத்தை எரித்ததைக் கண்டித்தார்கள்; இந்துத்வவாதிகள் நாவல் எதிர்ப்பில் ஈடுபடவில்லை, புத்தகத்தை எரிக்கவில்லை என்றார்கள். ஆனால் உள்ளூர் ஆர்எஸ்எஸ், பாஜகவின் பங்கு என்று வெளிவரத்தொடங்கி, ஊடகங்களிலும் இந்த எதிர்ப்பை இந்துத்வ அமைப்புகள் முன்னெடுக்க, பெருமாள் முருகனுக்கான ஆதரவுக் குரல் பரவலாகி பலமாகிவிட்ட ஒரு கட்டத்தில், ஒட்டுமொத்தமாக எல்லா இந்துத்வவாதிகளும் திருச்செங்கோட்டுக் குரலையே ஒலித்தார்கள். அரசியல்ரீதியான அடையாள ஐக்கியம் என்று மட்டுமில்லாமல், கருத்தியல்ரீதியிலும் ̀ஒரு சமூகமே ஒரு அப்பனுக்கு பிறக்காத' என்பது போன்ற மதிப்பீடுகளையும் பொய்வாசிப்புகளையும் பேசும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். (இதில் வலதுசாரி தமிழ்த் தேசியர்களும் சேர்ந்துகொண்டார்கள்.) 

இந்துத்வ இயக்கங்கள் ஒழுக்க அடைப்படைவாதமாக காதல் மீதும், இளைஞர்களின் பாலீர்ப்பின் மீதும், கலாச்சார மீறல்கள் என்று அவர்கள் கற்பிப்பவற்றின் மீதும் நிகழ்த்தியுள்ள அராஜகத் தாக்குதல்கள் கணக்கற்றவை; அவை குறித்து இங்கு பேசவில்லைபிறமத அரசியலில் இல்லாத அதிசயமாக, லிபரல்களாக ஆணாதிக்க எதிர்ப்பு என்றும் ஓர் பாலுறவு சுதந்திரம் என்றெல்லாம் கூட பேசிய சில நவீன இந்துத்வவாதிகளால், இந்துச் சமூகத்தின் நெகிழ்வான ஒரு நடைமுறையை, நேர்மறையாக மொழியும் நாவலுக்கு ஆதரவாக, ஒரு வரலாற்றுக் கட்டத்தில் ஏன் முரணின்றி நிற்க முடியவில்லை?  


ஜெயமோகனும் நாவலின் இந்த தெளிவான கூறைப் பொதிவாக அணுகவில்லை. சாருவின் கருத்து ஒன்றை அங்கீகரித்து தனது தரத்திலிருந்து இறங்கி எழுதி அழித்த பதிவு தவிர, வார்த்தைகளில் குழப்பாமல் தெளிவாக பெருமாள் முருகனுக்கு ஆதரவாகத்தான் எழுதி வந்தார். ஆனால் அது எழுத்து சுதந்திர ஆதரவாக இருந்ததே தவிர, இந்து சமூகத்தின் நெகிழ்வை எடுத்துகாட்டும் ஒரு முக்கிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாகவும், அதை இலக்கியத்தில் மொழிந்ததைப் பாராட்டும் முகமாகவும் இல்லை. புனைவாகக் கையாளப்பட்டதை பரந்த பொதுவெளியில் நாறடிக்கிறார்களே என்றார்; பரவலாகத் தெரியாததை விளம்பரப்படுத்தி, திருச்செங்கோடு மக்கள் தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக் கொள்வதாகவுமே எழுதினார். சாதியப் பெருமிதம், தீண்டாமை, பிள்ளைப் பேறின்மைக்காக ஒரு குடும்பத்திற்கு நிகழும் ஒதுக்கம் - இவை போன்றவைதானே சமூகத்தின் அசிங்கங்கள்? இந்த சமூக ஒடுக்குமுறைகளுக்கிடையில் நெகிழ்வாக இருக்கும் இந்தத் திருவிழா சமாச்சாரம்  எந்த விதத்தில் அசிங்கமானது? அதை அசிங்கமாகக் குறிப்பிடுவதன் மதிப்பீடு என்ன


Post a Comment

1 Comments:

Blogger ROSAVASANTH said...

சரவண கார்த்திகேயன் நடத்தும் 'தமிழ்' மின்னிதழில் வெளி வந்த கட்டுரை, நீளத்தை கருதி, நான்கு பதிவுகளாக இங்கு வெளியிடப்படும்.

10/04/2015 7:01 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter