ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Wednesday, January 25, 2012காலாமின் யோசனையும், அரசியலும், தீர்வும்.அப்துல் கலாமின் இலங்கை பயணத்திற்காக அவர் பலவாறு திட்டபட்டார். அந்த கோபத்தில் நியாயம் இருந்தது. இப்போது அவர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வாக ஒன்றை சொல்கிறார். அப்படி ஒன்றும் சிக்கலாக யோசித்து, நுண்ணறிவு கொண்டு வந்தடைந்த யோசனை அல்ல; சாதாரண பொது அறிவுக்கு தோன்றும் ஒரு யோசனைதான். ஆனால் அதில் தவறான உள்நோக்கமோ, சதித் திட்டமோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாடு மற்றும் ஈழத்து மீனவர்களிடையே இருக்கும் தீவீரமான பிரச்சனையில் தீர்வை நோக்கி நகர்வதற்கு இந்த யோசனை உதவும். காலாமின் யோசனை சிங்களப்படை தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் இனவெறி கலந்த தாக்குதலுக்கு எந்த தீர்வையும் தரப்போவதில்லை. அந்த பிரச்சனைக்கு இந்தியா மனது வைத்து தீவிர கறாரான நடவடிக்கைகள் எடுத்தால்தான் உண்டு. ஆனால் மீனவர் பிரச்சனையின் இன்னொரு பரிமாணமாக இருப்பது தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் இடையிலான மீன்பிடி பிரச்சனை. இந்த பிரச்சனையின் ஆதாரமே தமிழ் நாட்டு மீனவர்களின் மீன்பிடி முறையால் கடல் வளம் நாசமாவதுடன், ஈழத்து மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழப்பதுதான். இந்த பிரச்சனைக்கான தீர்வை இருதரப்பும் பேசித்தான் நெருங்க முடியும். ஆனால் பேசத்தயாராக இல்லாத தமிழ்நாட்டு தரப்பு, பேசுவது -குறைந்த பட்சமாக பிரச்சனையை எழுப்புவது கூட- ஏதோ துரோகம் என்பது போல் பேசும் தமிழ் தேசிய தரப்பு இதற்கான சாத்தியங்களை உருவாக்கப் போவதில்லை. கலாம் முன்வைப்பது போல், மூன்று நாட்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதும், மூன்று நாட்கள் ஈழத்து மீனவர்கள் மீன்பிடிப்பதும் இப்போதைக்கு சமரச தீர்வாக ஒப்புகொண்டு தொடங்கலாம் என்று தோன்றுகிறது. இந்த யோசனையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சாதகமானதே. தமிழக மீனவர்களின் கடல்சொத்தை மொத்தமாக அறுவடை செய்யும் மீன்பிடி முறையால், இது தங்களுக்கு சாதகமானது அல்ல என்றே ஈழத்து மீனவர்களின் தரப்பு நினைக்கிறது. ஆனால் இப்போதைக்கு இதைவிட மேலான தீர்வுக்கான யோசனை இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களின் எண்ணிக்கையையும், ஈழத்து மீனவர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு இந்த யோசனையை ஈழத்தவர்கள் ஏற்க வேண்டும். உரையாடல், பிரச்சனைக்கான தீர்வு நோக்கி நகர்தல் ஒருதரப்பை மற்றவர்கள் புரிந்து கொள்ளுதல் என்பதற்கு எந்த அறிகுறிகளும் இல்லாத இன்றய நிலையில் இங்கே தொடங்குவது சரியாக இருக்கும். கலாம் போன்ற அதிகாரத்துடன் தொடர்புடையவர் இதை முன்வைப்பது இந்த யோசனையை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த கவலையுடன் தீர்வுகளை பற்றி கவலைப்படாதவர்கள், இந்த முறையும் வழக்கம் போல கலாமை திட்டி அரசியல் சார்ந்து மனநிறைவடையலாம். அதனால் மீனவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. இந்த அரசியல் ஆவேசப் பிடிவாதத்தை மீறி, மீனவர்கள் நலன் பற்றி கவலைப்படுபவர்கள் யோசிக்க வேண்டும். கலாமின் யோசனையை ஏற்பதால் சிங்களப்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த முடியாது. அதற்கான போராட்டங்களும், எதிர்ப்பும், அரசியலும் தொடரத்தான் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மீன்பிடி முறையால் ஈழத்தவர்கள் பாதிப்பதால்தான் அவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் என்கிற பொய்பிரச்சரத்தை, இந்த இருதரப்பிற் கிடையிலான மீன்பிடிப் பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் முறியடிக்க முடியும். எப்படி இருந்தாலும் இது காலப்போக்கில் இரு தரப்பின் நியாயத்தையும் கணக்கில் கொண்டு ஏற்று தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனைதானே. (என் 'தூவானம்' வலைப்பதிவில் இடப்பட்ட பதிவின் முக்கியத்துவம் கருதி இங்கேயும் இடுகிறேன்.) |
17 Comments:
தீர யோசித்து எழுதப்பட்ட பதிவு.எல்லா பிரச்னைக்கும் அரசியல் பூர்வமாக யோசிக்க இயலாது. ஏனெனில் அது முடிவு தர வெகுகாலமாகும். அல்லது தீர்வே தராது. நன்றி!
இது உதவாத தீர்வு. கலாம் போன்றோர் இன்னும் சிறப்பான தீர்வை முன் வைத்திருக்கலாம். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்கு செல்லக்கூடாது. கடல் தொலைவு சிறிது என்பதால் இந்திய கடலோர காவல் படை ரோந்து வந்து எல்லை தாண்டி போகும் மீனவர்களை எச்சரிக்கலாம்\தடுக்கலாம்.
(twitlongerஇல் பிரகாஷ் எழுதியது)
ரோசா,
மீனவர்கள் பிரச்சனையைப் பற்றி கலாம் சொன்னதைவிட பலமடங்குத் தீவிரமாக பலர் (நீங்கள் உட்பட) பேசியம் எழுதியும் செயல்பட்டும் வந்துள்ளார்கள்.
கூடங்குளத்துக்கு அரசின் ஊதுகுழலாக வருகிறார் கலாம் என்று எழுதிய அ.மாக்கு, கலாமின் இலங்கைப் பயணம் மட்டும் “வரவேற்க்கத்தக்கதாக” இருக்கிறது. அவரின் பயணம் பொருட்டு கோபம் வருவதற்கான ஞாயம் இருக்கிறது என்று உங்களுக்கேத்தெரியும்.
மீனவர்ப் பிரச்சனையைப்பேசும் எல்லாம் இடதுசாரி அறிவுஜீவிகளிடத்திலுமிருக்கும் அயோக்கியத்தனம் இதுவரை நடந்த தாக்குதல்களை பேசாமல் விடுவது, அதை அ.மாவும் இப்பொழுது செய்திருக்கிறார். உங்கள் பதிவில் தாக்குதல்களைப்பற்றியும் அதற்கு தமிழ் வெளியில் முன்னெடுக்க வேண்டிய போராட்டத்தையும் எழுதிய நீங்கள் இதை அ.மா வசதியாக பேசாமல் விடுவதைப் பற்றி குறிப்பிடவில்லை (கலாம் பேசவே மாட்டார் என்பது திண்ணம்)
பிரகாஷ்,
தெளிவுக்காக சில தகவல்கள். காலையில் மீனவர் பிரச்சனையில் கலாம் சொன்ன யோசனைக்காக, அவரை திட்டி எழுதப்பட்ட ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பார்த்ததே இந்த பதிவை எழுதுவதற்கான உந்துதலாக இருந்தது. எழுதிய பிறகு அ.மார்க்ஸ் எழுதிய பதிவை பார்த்தேன். குறிப்பிட்ட பிரச்சனையில், குறிப்பிட்ட இடத்தில், ஓரளவு ஒத்த பார்வையை பகிர்ந்து கொள்வதால் 'like' செய்தேன். அதே நேரம் கலாமின் பயணத்தை பயனுள்ளதாக அமா சொல்வதை சீரியசாக எடுக்கவில்லை என்று டிஸ்கியாக ட்விட்டரில் எழுதினேன். என் பதிவை எழுதி இட்ட பின்னரே அ.மார்க்ஸ் எழுதியதை வாசித்தேன். 20 வருடங்கள் முன்பு அ.மார்க்ஸ் எனக்கு இன்ஸ்பிரேஷன். இப்போது அவர் எழுதும் பலதை 'ஏதோ அவர் சுபாவம் அப்படி' என்று கூட கடந்து செல்லமுடியவில்லை. அவர் எழுதியதை பற்றிய சந்தேகங்களை அவரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். நீங்கள் கேட்ட கேள்விக்கு அல்லாமல் வேறு கேள்விக்கு அவர் பதில் சொன்னால் நான் பொறுப்பல்ல. அதே போல, ராஜன்குறை ஏன் அ.மார்க்ஸின் பதிவை பயனுள்ள பதிவு என்கிறார் என்பதை ராஜன்குறையிடமே கேட்கவேண்டும். ஏதோ ஒரு நிலைபாட்டில் அ.மார்க்ஸ் 'பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களே கிடையாது' என்று துணிந்து சொன்னால் கூட அதை ஆதரிக்க வேண்டும் என்று அவர் இருக்கிறார். அதற்கான தத்துவ விளக்கத்தை அவரிடம்தான் கேட்கவேண்டும்.
நாம் தீவிரமாக பேசும் அரசியல்களை விட முக்கியமான விஷயம், நடைமுறையில் மீனவர்கள் பிரச்சனையில் ஏற்படக் கூடிய ஒரு மாற்றம் அல்லது அதற்கான ஒரு சிறு சமிஞ்ஞை. பக்கம் பக்கமாக நாம் தீவிரமாக பேசுவதை விட கலாம் சொல்லுகிற ஒரு சாதரண யோசனைக்கு நடைமுறையில் பலன் இருக்கக் கூடும் என்பதுதான் அதை சீரிய்சாக எடுக்க ஒரே காரணம். கலாம் பற்றிய மதிப்பீடாக என் பதிவை எழுதவில்லை. கலாம் சொன்ன விஷயத்தை நடைமுறையில் எப்படி மீனவர் பிரச்சனையின் தீர்வுக்கு பயன்படுத்தலாம் என்பதே எனது அக்கறை. மீனவர்களுடனும் இலங்கை/இந்திய அதிகாரத்துடனும் உரையாடக்கூடிய சக்தியாக அவர் விளங்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. எல்லோருடனும் உரையாடாமல் எந்த தீர்வும் சாத்தியமில்லை. அந்த நிலையில் அவருடைய பழைய ட்ராக் ரெக்கார்டை பார்த்து என்ன செய்யபோகிறோம்? கலாம் ஒருநாளும் அரசு அதிகாரத்திற்கு எதிராக பேசப்போவதில்லை. பேசினால் அவர் அந்த இடத்தில் இருக்க மாட்டார். அந்த வகையில் மீனவர் மீதான தாக்குதலுக்கு இலங்கையையும், அது குறித்த மௌனத்திற்கு இந்தியாவையும் அவர் ஒருநாளும் கண்டிக்கக் போவதில்லை. அந்த பிரச்சனையில் அவருக்கு எந்த வித பங்களிப்பும் இருக்க முடியாது; சொல்லப்போனால் அவர் ஒரு மேட்டரே இல்லை. (குஜாராத்தில் நடந்தத எதையும் கூட அவர் கண்டித்ததில்லை.)
மீன்பிடிப்பது தொடர்பான பிரச்சனையில் அவர் வாய் திறந்திருக்கிறார். அவர் கூறிய யோசனையும் அப்பழுக்கற்றது. அந்தவகையில் மட்டுமே, கலாம் சமூகத்தில் வகிக்கும் இடத்தை முன்வைத்து, அதை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மிகுந்த யோசனைக்கு பின், ஆனால் மிக குறுகிய நேரத்தில், ட்விட்டரில் எழுத வந்ததை ஒரு பதிவாக இங்கே இட்டுள்ளேன். இதன் ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் அளித்து எழுத முடியும். யாராவது சீரியசாக எடுத்து விவாதித்தால் விரிவாக விளக்கமளிக்க முடியும்.
எல்லை தாண்டாமல் மீன் பிடிப்பது என்பது சாத்தியமில்லை; இருதரப்பு மீனவர்களுக்கும் எல்லை தாண்டி மீன் பிடிப்பது உரிமையாக்கப்படவேண்டும். காலத்தையும் கடற்பரைப்பையும் பங்கிடுவது பற்றி பேசி முடிவுக்கு வரவேண்டும்.
ரோசா,
உங்கள் லைக்கை எப்படியாகப் புரிந்துகொள்வது என்பதற்காகவே போன கமண்டை எழுதினேன்.
தீவிர அறம் சார்ந்த ஒரு நிலைப்பாடை எடுக்கும்போதெல்லாம் நடைமுறை சாத்தியக்கூறுகளை கணக்கில் எடுக்க நீங்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருப்பது சுயவிமர்சனத்துக்கு உந்துதல்! Theory is a relay from one practice to another.
கலாம் சொல்லும் நாட்கள் பிரித்து மீன்பிடிப்பது என்பது அப்பழுக்கற்ற யோசனையாயினும் அவர் சொல்லும் ட்ராலர்களின் உபயோகம் விமர்சிக்கப்படவேண்டியது. அவர் சொல்பவற்றில் இருக்கும் constructive influence ஐ அன்னப்பறவைப்போல் தனியாக பிரித்து அது நடைமுறையில் நடந்தால் உவகைக் கொள்வது என்பது கடினம் என்றே தோன்றுகிறது. பொதுவாக அவர் கருத்துகளின் குறிப்பிடத்தகுந்த மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு என்பது என் புரிதல்.
இனிய ரோசா ,
உப்பிடி ஒரு சிந்தனை தோன்றியதற்கு நீங்கள் முதலில் வெட்கப்பட வேண்டும்.
மன்னிப்பு பின்னர் கேட்கலாம் .
இந்தியாவிற்குள்ளேயே மீனவர் பிரச்சனை ,விவசாயிகள் ,மற்றும் உழைக்கும் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஆயிரம் வழிகள்
இருக்கின்றன . நீங்க்கள் முதலில் இலங்கையின் இறைமையை மதிக்க வேண்டும் .
நீங்கள் இலங்கையின் இறைமையில் தலையிடுகிறீர்கள்.நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறீர்கள் ..
அன்புள்ள சுகன்,
முதலில் பகடி செய்திருக்கிறோர்களோ என்று நினைத்தேன்; பார்த்தால் அப்ப்டி எதுவும் தெரியவில்லை என்பதால் சீரியசாகவே பதில் சொல்கிறேன்.
இலங்கையின் இறைமைக்குள் தலையிடக்கூடிய அதிகாரம் எனக்கு இருந்தால் (குறைந்த பட்ச சாத்தியம் இருந்தால் கூட) பேசிகொண்டு எல்லாம் இருக்க மாட்டேன்; நேரடி நடவடிக்கைதான்.
என்னவெல்லாமோ பேசிவிட்டு, கற்பிக்கப்பட்ட இறைமையை எல்லாவற்றிற்கும் அப்பால் வைக்கும் நீங்கள் முதலில் வெட்க வேண்டும் பிறகு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றெல்லாம் கேட்கமாட்டேன்; என்றாவது யோசிக்க நேர்ந்தால் சரி.
இனிய ரோசா .
நீங்கள் முன்வைப்பது அப்படமான கடற்கொள்ளைக்கான யோசனை .
இலங்கையின் மீன்பிடி முறைகளும் கடல் பாதுகாப்பு முறைகளும் முற்றிலும் இயற்கை சார்ந்தது. கடல்வளத்தைப்பாதுகாப்பதில் நாமும்
வயித்தைக்கட்டித்தான் காலம் கடத்துகிறோம் .நமது பிள்ளைகளின் கடல் வளத்தில் கைவைக்க நமக்கு உரிமையில்லை.
இங்கு இரண்டு மீனவர்கள், பத்திற்கு மேற்படாத சிறுவலை ,மூவாயிரத்திற்கு மேற்படாத வருமானம்.
இவைதான் நமது வாழ்க்கை .இரண்டு மாதத்திற்கு முன் பல வலைகளை தடைசெய்துள்ளோம் .
நல்வாய்ப்பாக யுத்தம் முடிந்ததால் மேலும் இவற்றில் கவனம் கொள்ள முடிகிறது .
நீங்கள் வாரத்திற்கு மூன்று நாள் மீன்பிடிக்க வந்து எல்லாவற்றையும் காலிபன்னிவிடுவீர்கள்
பின்னர் நாம் எங்கு போவது ?.
அன்புள்ள சுகன்,
நீங்கள் முதலில் சொன்னதிலிருந்து இப்போது சொல்வது மாறுபட்டு உள்ளது. பிரச்சனை இறைமை அல்ல, மீன்பிடி முறைதான் என்றால் என் கருத்தும் பார்வையும் வேறு.
1. இன்றய யதார்த்த நிலைமைக்கு தகுந்தாற் போல சாத்தியமாகக் கூடிய யோசனைகளை, பிரச்சனையின் தீர்வு நோக்கிய அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதை பற்றி அலசுவதை மட்டுமே நான் செய்ய விழைகிறேன்.
2. தமிழக மீனவர்களின் மீன்பிடி முறையை நான் ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அரசால் 20 ஆண்டுகளாக ஊக்குவிக்கப்பட்டு இன்று அதில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள். திடீரென ஒரு கட்டத்தில் வெளிவருவது சாத்தியமில்லை. இன்று எல்லா தளங்களிலும் அழிவை நோக்கித்தான் போய்கொண்டிருக்கிறோம்; மீன்பிடி தொழிலில் மட்டும் விதி விலக்கு இருக்க முடியுமா? தொடர்ந்து பேசித்தான் இது குறித்து ஏதாவது நடக்க வாய்புள்ளது. காலத்தின் கட்டாயத்தின் ஈழமீனவர்களும் இந்த சுழலில் சிக்கினால், ஒரு வகையில் சமநிலையில் நிலமை சிக்கலாகலாம்.
கலாம் கூறிய யோசனையை இலங்கை தமிழ் மீனவர்கள் முற்றாக நிராகரித்து விட்டனர். இலங்கையில் எவரும் இதை ஆதரிக்கவில்லை. உண்மையில் கலாமின் யோசனை என்பது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கடற்கொள்ளைக்கான அனுமதி.
ஈழத்து மீனவர்கள் ஏற்காத நிலையில் இந்த யோசனைக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை நிலவும் யதார்த்த நிலைமையை உத்தேசித்து அவர்கள் சமரசத்திற்கு வருவார்களாயின் இந்த யோசானை உதவலாம். கலாமின் யோசனை தமிழக மீனவர்களுக்கு சாதகமானது என்பதே என் கருத்தும்; மேலே அதை சொல்லியிருக்கிறேன். அது கூட புரியாமல் இங்கே சிலர் கலாமை திட்டுவதாலேயே இந்த பதிவு எழுத நேர்ந்தது.
அன்புள்ள வசந்த்,
இந்தியாவில் குடியரசு தலைவர்களுக்கு அரசு எடுக்கு அரசியல்/அயல்நாட்டு கொள்கைகளின் போகை மாற்ற இருக்கும் அதிகாரம் எத்தகையது? கலாம் குடியரசு தலைவராக இருந்த நான்கு (5?) ஆண்டுகளில் மீனவர் பிரச்சினை அவருக்கு கண்ணுக்கு படவில்லையா? இன்னும் எக்ஸ்-குடியரசு தலைவருக்கு மேற்படி அதிகாரங்கள் எத்தகையவை?
எனக்கு தெரிந்து ஒன்றுமில்லை(நான் தவறாக இருக்கலாம்). ஆனால் நடப்பது தமிழ்மீனவர்களை இந்திய அரசு "Expendables" ஆக ஏற்றுக்கொண்ட நிலைமை. ஆக பழைய/கழிக்கப்பட்ட குடியரசு தலைவர்கள் "ந்ல்லெண்ணத் துதுவர்களாக" என்ற போர்வையில் அனுப்பபட்டாலும் , அரசின் அடியாளாக செல்வதாகத் தான் எனக்கு படுகிறது?
மேலும் அவர் சென்ற அஜென்டா கண்டிப்பாக வெளியில் /பத்த்ரிகையில் வராது. அப்ப்டி இருக்கும் என்றால் இந்த்
புண்ணிய ஆத்துமா சொல்வது எல்லாம் நிலைமைக்கு ஏற்ற பொய்கள் தாம். மேலும் இதுவரை கலாமால்
ஆகியிருக்கிற ஆக்கூடிய பெருய அரசியல் நெருக்க மாற்றம் எப்போதாவது நடந்ததுண்டா?
பிரச்சினை இலங்கை மீனவருக்கும் தமிழ் மீனவர்களுக்கும் என்றால் இதில் இலங்கை இராணுவம் தலையிடுவது எவர் தரும் அதிகாரத்தில்? இதையே மாற்றி இந்திய இராணுவம் இலங்கை மீனவர்கள் மீது கைவைக்கமுடியுமா? முமையில் அத்துமீறிவிட்டால் இந்திய இறையாண்மை கற்பழிக்கபடும்போது தமிழக எல்லையில் அத்தும்மீறும் என்ன வேசித்தனமா செய்துகொண்டுள்ளது?
உங்கள் கருத்து ஆப்டிமிஸ்டிக்காக இருப்பதை விரும்புகிறேன். அப்படி சிறுமாற்றம் நடந்தாலும் உம் வாயில் முதல்சர்க்கரை எம்முடையதுதான்.
கார்த்திக்(ராமாஸ்)
அன்பிற்கினிய ரோசா,
சிலமாதங்களுக்கு முன் அராலித்துறை கடலில் மீனவர் ஒருவருடன் வலை தெருவாக்கிக் கொண்டிருந்தேன் .அன்றைய பிடிபாடு ௨ வெள்ளை நண்டு , 4 மணலை ,2 ஒட்டி இவ்வளவுதான் .
300 றுபாவும் வராது முழுவதும். நான் கறிப்பாட்டுக்கு மணலையைக்கொண்டுவந்தேன்.
http://www.bbc.co.uk/tamil/india/2012/01/120130_sustainablefishing.shtml
இலங்கைக் கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்துமாறு அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் வடமராட்சி கடற்றொழிலாளர் கோரிக்கை
இலங்கைக் கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநதிகள் மகஜர் ஒன்றை இன்று (27.03.2012) செவ்வாய்க்கிழமை கையளித்தனர். வடமராட்சி மீனவர்களினால் இன்று வடமராட்சியில் ஆர்பாட்டப் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை அடுத்தே வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநதிகள் இந்த மகஜரைக் கையளித்தனர். மகஜரைப் பெற்றுக்கொண்ட அரச அதிபர், இந்தப் பிரச்சினை தொடர்பில் தன்னால் உடனடியாக நடடிக்கைகள் மேற்கொள்ள முடியாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாக இந்த மகஜரைக் அனுப்பி வைத்து தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார். மேலும், 1983ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்திலிருந்து 48 மெற்றிக்தொன் மீன்கள் தென் பகுதிக்கு அனுப்பப்பட்டது என்றும், 2000ஆம் ஆண்டு 10 மெற்றிக்தொன் மீன்களே அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், தற்போது 28 மெற்றிக்தொன் மீன்கள் அனுப்பப்படுவதாகவும் குறிப்பிட்டார். இந்தத் தொகை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை தான் பெற்றுத் தருவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இந்திய மீனவர்களின் இந்த நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் மாகாண ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்க சமாசத் தலைவர் நவரத்தினம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்துமாறு அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் வடமராட்சி கடற்றொழிலாளர் கோரிக்கை
இலங்கைக் கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநதிகள் மகஜர் ஒன்றை இன்று (27.03.2012) செவ்வாய்க்கிழமை கையளித்தனர். வடமராட்சி மீனவர்களினால் இன்று வடமராட்சியில் ஆர்பாட்டப் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை அடுத்தே வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநதிகள் இந்த மகஜரைக் கையளித்தனர். மகஜரைப் பெற்றுக்கொண்ட அரச அதிபர், இந்தப் பிரச்சினை தொடர்பில் தன்னால் உடனடியாக நடடிக்கைகள் மேற்கொள்ள முடியாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாக இந்த மகஜரைக் அனுப்பி வைத்து தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார். மேலும், 1983ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்திலிருந்து 48 மெற்றிக்தொன் மீன்கள் தென் பகுதிக்கு அனுப்பப்பட்டது என்றும், 2000ஆம் ஆண்டு 10 மெற்றிக்தொன் மீன்களே அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், தற்போது 28 மெற்றிக்தொன் மீன்கள் அனுப்பப்படுவதாகவும் குறிப்பிட்டார். இந்தத் தொகை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை தான் பெற்றுத் தருவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இந்திய மீனவர்களின் இந்த நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் மாகாண ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்க சமாசத் தலைவர் நவரத்தினம் தெரிவித்துள்ளார்.
Post a Comment
<< Home