ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, January 06, 2010

அரசியலின் வன்மமும், வன்மத்தின் அரசியலும்.

லீனா மணிமேகலை இயக்கும்   ̀செங்கடல்' படப்பிடிப்பின் போது நடந்ததாக தினத்தந்தி அளித்த செய்தியை முன்வைத்து எழுதப்பட்ட இரண்டு பதிவுகள் காண கிடைத்தது. அரசியல்களை தாண்டி தமிழ் சூழலுக்கே உரித்தான அதீதமான வன்மத்தையே அதில் நான் காண்கிறேன். ஒரு செய்தியின் நம்பகத்தன்மை, செய்தி அளிக்கப்படும் முறை,  செய்தியில் சொல்லப்படாத விஷயங்களான சம்பவங்களின் பிண்ணனி போன்றவை குறித்த எந்த கேள்விகளும் இல்லாத பொதுபுத்தி, இந்த வன்மம் தன்னை தர்க்கப்படுத்தி கொள்வதற்கான அடித்தளமாக இருப்பதாக தோன்றுகிறது.  


தினத்தந்தியில் வரும் செய்திகளின் நம்பகதன்மை நம் அனைவருக்கும் தெரியும். ஷோபா சக்தி, லீனா மணிமேகலை இருவரும் இணையத்தில் பதிவு வைத்திருக்கிறார்கள். இருவரும்  இன்னமும் தங்கள் தரப்பை எங்கும் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் தரப்பை அறியும் பொறுமை கூட இல்லை. ஒரு சிக்கலில் அவர்கள் மாட்டிகொண்ட செய்தி கிடைத்த மறு கணம் அதை தங்கள் அரசியல் வன்மங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் அவசரம் மட்டுமே எனக்கு தெரிகிறது. இதற்கான முதல் உதாரணம் 'இனியொரு' வெளியிட்ட செய்தி மொழியின் தொனி.  வன்முறை மிகுந்த அடுத்தக்கட்ட வக்கிர ஆபாசத்திற்கு வினவு இட்டு செல்கிறது.  இன்னொரு பக்கத்தை அறியும் பொறுமையோ காத்திருந்தலோ எதுவும் வினவுக்கு தேவை இல்லை. பரபரப்புக்காக மட்டும் எழுதப்படும் ஜனரஞ்சக பத்திரிகை செய்திபோல் பதிவு வெளிபடுகிறது. வசைவதன் மூலம் எழுதுபவர் அடையும் உவகை வெளிப்படையாக தெரியும் ஒரு மொழியில் பதிவு எழுதப்பட்டுள்ளதை எளிதில் புரிந்து கொள்ளலாம். . 


வன்மம், ஆணாதிக்க வக்கிரம் எல்லாம் கலந்து, லீனா மணிமேகலை மீதான அப்பட்டமான ஆண் வெறி தாக்குதலுக்கான எல்லா சொற்களாலும் எழுதப்பட்ட பதிவுக்கு கீழே நான் மரியாதை வைத்திருந்த டாக்டர். ருத்ரன் பின்னூட்டமிடுகிறார், "ஆனாலும் பெண்கள் எழுதவேண்டும் என்பதற்கான எதிர்ப்பாக இதை யாரும் திசைதிருப்பாமல் இருக்க வேண்டும்".

தீப்பொறி ஆறுமுகம் ஜெயலலிதாவை மேடையில் திட்டியதை விட  (கடைசி பாராவை படியுங்கள்) மோசமான பாணியில் எழுதப்பட்டுள்ள பதிவை  பெண் எழுத்துக்கு எதிரானது என்று யாராவது திரித்துவிட போகிறார்களே என்று உளவியல் டாக்டருக்கு கவலையாயிருக்கிறது. இந்த பதிவு  பின்னுள்ள உளவியலை கூட புரிந்து கொள்ள முடியாத அறிவு நிலையிலா இவர் இருக்கிறார். அந்த பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்கள், அதன் பின்னான மதிப்பிடுகள் இவற்றுடன் ருத்ரன் ஒத்துபோகிறாரா என்று சொல்ல வேண்டும்.  இதையெல்லாம் என்னால் உண்மையிலே புரிந்து கொள்ள முடியவில்லை. பொதுப்புத்தி என்பது இவ்வளவு மோசமாகவா அறிஞர், முதிர்ந்தவர் என்று நாம் நினைக்க கூடியவர்களின் அறிவை மழுங்கடிக்க கூடியது?



  ̀செங்கடல்' திரைப்படம் வினவு யாரிடமோ  ̀கேள்விப்பட்டு' எழுதுவதாக சொல்வது போல் ஒரு புலி எதிர்ப்பு திரைப்படம் கிடையாது. முதலில் இவர்கள் கற்பனை செய்தோ, கேள்விப்பட்டோ முன்வைப்பது போல ஆவணப்படம் கிடையாது, feature film எனப்படும்  முழுநீள திரைப்படம். கதையாக இருக்கும் சம்பவங்கள் தவிர்த்து, படத்தில் அரசியலாக வருவது தமிழக மீனவர்கள் மீதான சிங்கள் ராணுவத்தின் அராஜகம், இந்திய கடற்படையின் கண்டுகொள்ளாமை, இந்திய அரசின் உதாசீனம். புலிகள்தான் ராமேஸ்வரம் மீனவர்களின் பிரச்சனைக்கான காரணம் என்று அதில் எந்த தொனியும் கிடையாது. ஒரு திரைப்படத்தின் அரசியல் நோக்கமாக நாம் ஒன்றை விமர்சனமாக வைக்க வேண்டுமானால் ஆக குறைந்த பட்சமாக அதை கண்ணால் பார்க்கவாவது செய்ய வேண்டும். அல்லது முன்படிவம், கதை சுருக்கம் என்று எதையாவது கேட்டிருக்கவாவது வேண்டும். வினவில் எழுத இது எதுவும் தேவையில்லை. ஆதாரம் என்று தான் கேள்விப்பட்டதாக பதிவில் சும்மா எழுதினால் போதுமானது. இவர்கள் கையில் அதிகாரம் வந்தால் என்ன மாதிரி நியாயத்துடன் விசாரணை நடத்தி தண்டனை தருவார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.  


படத்தின் திரைகதையை நான் அறிந்தவரையில், இந்த திரைப்படம் சென்சாரால் அனுமதிக்கபடுமா என்பதே எனக்கு மிகவும் சந்தேகமாக இருக்கிறது. சிங்கள ராணுவம் நடத்தும் அராஜகம், அதற்கு இந்தியா உடந்தையாய் இருப்பதாக வரும் சித்தரிப்பினாலேயே எனக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. இப்படி இருக்க இதை ஒரு புலி எதிர்ப்பு படம் என்று வினவு எழுத்தாளர் அப்பட்டமாக திரிக்கிறார். கேள்விபட்டேன், நம்புகிறேன் என்று வாயால் சும்மா எழுதினால் அது இவர்களுக்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது. ஒரு வேளை  திரைக்கதை நான் சொல்வது போல் இருந்து, வினவு சொல்வது பொய்யாக இருந்தால் இவர்கள் பகீரங்க மன்னிப்பு கேட்பார்களா?


நான் நேரடியாக அறிந்தவரை மிகுந்த பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த படத்தை அவர்கள் எடுத்து வருகிறார்கள். பணரீதியான பிரச்சனைகள், வேலை செய்தவர்கள் செய்த துரோகம், அலைக்கழிப்புகள், கழண்டு கொள்ளுதல்கள் என்று அவர்கள் தங்கள் அனுபவங்களாக தொகுத்து அளித்தால் மட்டுமே வெளியில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு நடுவில் படப்படிப்பை நடத்தி வருகிறார்கள். இணையத்தில் ஒரு பதிவு எழுதும் வெற்று புரட்சியின் மூலம் அந்த உழைப்பையும் போராட்டத்தையும் இவர்கள் கொச்சைபடுத்துகிறார்கள். 


இந்த படத்தின் மூலம் பணம் சம்பாதிக்கப்போவதில்லை. முடியவும் முடியாது. அதற்கான ஜனரஞ்சகதன்மையும் படத்தில் கிடையாது. அதை விட முக்கியம் படத்தில் வெளிப்படும் அரசியல். கேள்வி கேட்பார் இன்றி இருக்கும் தமிழ் மீனவர்களின் வாழ்க்கை மீதான இரண்டு அரசு மற்றும் அதன் கப்பல் படைகள் நடத்தும் வன்முறை பதிவாகிறது. இதை விட இந்த படத்தை ஆதரிக்க வேறு என்ன காரணம் வேண்டும்? நியாயமாய்  'இனியொரு'வும், வினவும் தங்கள் அரசியல் நிலைபாடுகளின்படி ஆதரிக்க வேண்டிய ஒரு விஷயத்தை, அதுவும்  மிகுந்த இடர்களுக்கு இடையில் நடைபெறுவதை, தங்கள் வன்மத்தின் அரசியல் காரணமாக மட்டும் மகா சந்தோஷத்துடன் கேவலப்படுத்துகிறார்கள். இதில் வினவு பதிவு எவ்வளவு கேவலமான ஆணாதிக்க மொழியில் வெளிப்பட்டுள்ளது என்பதையும்,  வேறு இடங்களில் இவர்கள் ஆணாதிக்கத்தை எதிர்க்க தயங்க மாட்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

நல்லவேளையாய் இவர்கள் அதிகாரத்தை கைகொள்ளும் சாத்தியம் இல்லை. இருந்தால் இருந்தால்  'மன்மதன்'  படத்தில் சிம்பு செய்ததை பொது தண்டனையாக மாற்றியிருப்பார்கள். 



இந்த சம்பவங்கள் குறித்து நேரடியாக விசாரித்து தெளிவுபடுத்திக் கொள்ள என்னால் இயலவில்லை. அதற்கு முக்கிய காரணம் நான் சோபாசக்தியுடன் பேசுவதில்லை. ஏற்கனவே அறிந்திருந்த நிலவரத்தை முன்வைத்தும், விசாரித்து அறிந்த வரையிலும் பணம் தயாரிப்பாளர்களிடம் சரியான நேரத்தில் வந்து சேராததால் வந்த பிரச்சனையாகவே எனக்கு இந்த செய்தியின் பின்னால் இருக்கும் சம்பவங்கள் தெரிகிறது. அதை பணி புரிந்த நபர் பெரும் பிரச்சனையாக்கியதும், பிரச்சனை குறித்த பதட்டங்களும், பத்திரிகைக்கு செய்தி அளித்ததும் செய்தியின் பிண்ணணியாக கேள்விப்படுகிறேன். எந்த விதத்திலும் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்காமல் ஏமாற்றும் கயமைத்தனம் கொண்டவர்களாக லீனாவும், ஷோபா சக்தியும் இல்லை என்று நான் நன்கு அறிவேன். என்  நம்பகதன்மை என் பதிவுகளின் மொழியில் தெரியும். இந்த நம்பகதன்மையை விட தினத்தந்தி செய்தியை (உண்மையாகவோ, தங்கள் வசதிக்காகவோ) நம்புபவர்களுக்காக நான் இந்த பதிவை எழுதவில்லை. 



நான் சோபசக்தியின் நண்பனாக இந்த பதிவை எழுதவில்லை. அவர் இப்போது என் நண்பனும் இல்லை. அரசியல்ரீதியாக அவர் மீது எனக்கிருக்கும் விமர்சனங்களை இங்கே உள்ளடக்கவில்லை.


பின்குறிப்பு: வினவின் பதிவிலும் சரி, பின்னூட்டங்களிலும் லீனா மணிமேகலையை  மிக மோசமாக தாக்கி ஆணாதிக்க திமிருடன் வெளிவந்த கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இணையப்போலிகள் அனானியாய் இடும் தாக்குதல்களை விட கேவலாமான அந்த எழுத்தை தர்க்கரீதியாக விமர்சிக்க நான் தயராகயில்லை. 


அரசியல்ரீதியாக, கருத்துரீதியாக எழுதப்படும் பின்னூட்டங்கள் இங்கே வெளியிடப்படும். தனிப்பட்ட தாக்குதல்கள் குறிப்பாக ஆண் திமிர் கொண்ட தாக்குதல்கள் வெளியிடப்படாது. ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டுகளை வெளியிடுவதா வேண்டாமா என்பதை பற்றி நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. உங்கள் உழைப்பு வீணாகக் கூடிய சாத்தியத்தை கணக்கில் கொண்டு அத்தகைய பின்னூட்டங்களை இடுங்கள்.




Post a Comment

---------------------------------------
Site Meter