ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, February 24, 2005

எதிர்கொள்ளல்!

சென்ற பதிவு அவசரமாய் எழுதப்பட்டதாலும், எதிர்வினைகளுக்கு மறுமொழிய இயலாததாலும், பின்னூட்டங்கள் சிலவற்றை எதிர்கொள்கிறேன். எதிர்கொள்ள தக்கவைகளாக நான் கருதுவதை மட்டுமே இங்கே தந்து அதற்கான என் மறுமொழிகளை கீழே தருகிறேன்.

எவ்வளவு அசட்டுத்தனமாய் எதிர்வினைகள் அளிக்க முடியும் என்பதற்கு உதாரணங்களாக முதலில் சிலவற்றை தருகிறேன். பேசும் விஷயம், பயன்படுத்தப்படும் தர்கம் இதற்கு சற்றும் தொடர்பு இல்லாமல் எப்படி எதிர்வினைகள் அளிக்க முடியும் என்பதற்கான உதாரணமாக மட்டுமல்லாமல், அதை அவர்கள் புத்திசாலித்தனம் என்று நினைத்து எழுதியதாலும், உண்மையிலேயே கூட அவ்வாறு சிலர் நம்பகூடும் என்பதாலும் அதை முதலில் தருகிறேன்.

S. K. : "அபத்தம்" என்ற சொல் உங்களுக்கு ரொம்பப் பிடித்தம் போலிருக்கிறது. அடிக்கடி கையாண்டிருக்கிறீர்கள்.
அதென்ன "எழவு"! ஒருவேளை அது அவ்வளவு அமங்கலச் சொல்லல்ல என்று நிரூபிக்க இருக்கலாம்!!

Shankar: தேசிகன் எழுதியதற்கும் இங்குள்ள பின்னூட்டங்களுக்கும் எதுவும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ரோஸாவசந்த்,
உங்கள் கடைசி வரியை மிகவும் ரசித்தேன்.
".. குடும்ப சூழலில் என்னால் விரிவாய் இது குறித்து எழுத முடியவில்லை".
இந்த வாரம் படித்த நல்ல நகைச்சுவையாக இதை கருதுகிறேன். - ஷங்கர்

சோ ரசிகன்: Desikann. Ippo tamilnadu konjam munneritu irukku. Periyar vandhaa avlo dhaan. Hindi edhirpu, brahmin edhirpu, hindi board kku thaar poosi azhikaradhu, pillayar kku seruppu maalai podaradhu idhu ellam start aagidum. Avlo dhaan. Kurangilirindhu vandha manidhanai marubadiyum kurangu aaki viduvaargal namadhu dravidar kazhaga pagutharivu vyadhigal

Lazy Geek: (ரவியின் பின்னூட்டத்தை முன்வைத்து சொன்னது) In the last years, we've seen enough ways and means which bloggers/people employ to grab attention to their blogs. This one could be skipped as yet-another-one.

Anonymous: //In the last years, we've seen enough ways and means which bloggers/people employ to grab attention to their blogs. This one could be skipped as yet-another-one. //

Hear! Hear!!

இதை தொடர்ந்து நாராயணணும், மணிகண்டனும் 'சோ ரசிகனுக்கு' எதிர்வினை வைத்ததும் எனக்கு ஒப்புதலில்லை. ஏதோ ஒரு அரை லூஸு 'அவ்ளோதான்.. இவ்ளோதான்..!' என்று ஒளரி கொட்டியதற்கு இவ்வளவு ஸீரியஸாய் எதிர்வினை வைத்தது சுத்தமாய் பிடிக்கவில்லை. சோவின் ரசிகன் எவ்வளவு முட்டாள்தனமாய் வெளிப்படக் கூடும் என்பதை சுட்டி காட்டினால் போதுமானது என்று நினைக்கிறேன்.

இனி எதிர்கொள்ள தக்கவைகளாக தென்படும் சிலவற்றை பார்கும் முன் தேசிகன் இதை எப்படி எதிர்கொண்டார் என்று பார்க்கவேண்டும். மௌனம்! தனது பதிவின் தலைப்பிற்கு கூட விளக்கம் தராமல் மௌனமாய் நகர்ந்து விட்டார். அல்லது அடுத்த பதிவில் தான் வரைந்த பெரியார் படத்தையும், தனது அப்பாவிற்கு "பிரபந்தத்தில் எவ்வளவு ஈடுபாடோ அதே போல் பெரியாரிடத்திலும் ஈடுபாடு உண்டு." என்றும், பெரியார் கருத்து மீது தனக்கு மரியாதை உண்டு என்று பொதுவாய் சொல்லி தாவிவிட்டார். இனி மற்றவை.

அனாமதேயம்: அய்யோ, ரோஸாவசந்த், கடைசில என்ன சொல்ல வரீங்க?

ரோஸாவசந்த்: இவர் என்ன கேட்க வருகிறார் என்பது சரியாய் தெரியவில்லை. ஆனால் கடந்த பதிவில் நான் எதையும் சொல்ல வரவில்லை, தெளிவாய் சொல்லியிருப்பதாகவே நினைக்கிறேன்.

1. என் எதிர்வினை தேசிகனின் பதிவை முன்வைத்து மட்டும் எழுதப் படவில்லை. ராகாகியில் இது குறித்து முன்வைக்கப் பட்ட அபத்தங்கள், மற்றும் இணையத்தில் பல சந்தர்பங்களில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ள ஒருவகை திரிபு தர்கத்தை பற்றியே நான் சுட்டி காட்ட விரும்பினேன்.

அ. ராமசாமியின் (அந்த ஓரிரு) விமர்சன வரிகள் மிகவும் அபத்தமானவை. ஆனால் அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மற்றவர்கள் பேச விரும்புவதும், 'நிறுவ' விரும்புவதுமாக உள்ளவைகளின் பின்னே இருப்பது நேர்மையற்ற ஒரு அரசியல். பெரியாரை பற்றி பேச வேண்டுமானால் அதற்கு அவர் ஐம்பது ஆண்டுகளாய் முன்னிறுத்திய விஷயங்கள், அவரை பற்றி முன்வைக்கப் பட்டுள்ள வாசிப்புகள் இவற்றை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, பெரியாரிஸ்ட் என்று சொல்லி கொள்ளும் சிலரின் அபத்தமான கட்டுரைகளை முன்வைத்து பேசமுடியாது. உதாரணமாய் ஞாநி அபத்தமான வாதங்கள் நிறைந்து ஒரு கட்டுரை எழுதினால் அதற்கு ஞாநி மட்டுமே பொறுப்பாக முடியும். ஆனால் இங்கே அதை முன்வைத்து பெரியார் விமர்சிக்க படுகிறார்(உதாரணமாய் திண்ணையில்). இந்த திரிபு தர்கத்தை பற்றியே பேசியிருக்கிறேன்.

இது போலவே ஹிந்தி திணிப்பு அல்லது அதற்கான எதிர்ப்பு/ஆதரவு பற்றி பேசவேண்டுமானால், கருணாநிதி பேரனின் ஹிந்தி அறிவு குறித்த தகவலை முன்வைத்து அதை பேச முடியாது. அது கருணாநிதியின் போலித்தனத்தை மட்டுமே விளக்கும். ஹிந்தி திணிப்பின் சாதக/ பாதகங்களை பேச இதனால் மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பு, தமிழகத்தில் ஏற்படாத பாதிப்பு போன்றவற்றை வைத்து மட்டுமே பேசமுடியும். கருவறையில் பார்பனரல்லாதார் நுழைவதை, வீரமணி நேர்மை குறித்த தகவலை வைத்து கொண்டு விவாதிக்க முடியாது. ஒரு பேச்சுக்கு வீரமணி செய்வதெல்லாம் அயோக்கியத்தனம் என்று வைத்துகொண்டால் கூட, கருவறையில் நுழைவதற்கும், 'அனைவரும் அர்சகராகலாமா' என்ற கேள்விக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. விவாதத்தை திசை திருப்ப மட்டுமே அது உதவும். நானும் கூட சோ ரசிகன் என்று பெயர் வைத்திருக்கும் ஒருவரின் முட்டாள்தனமான பின்னூட்டத்தையோ, 30 ஆண்டு கால சோ ரசிகரான டோண்டுவின் பதிவுகளை வைத்தோ சோவின் அரசியல் குறித்து தீர்பளிக்க முடியாது.

அ. ராமசாமியின் மிகைவாசிப்பை நாம் புறக்கணிக்கலாம். இதனால் (இன்னும் இங்கே பலராலும் படிக்காமலே பேசப்படும்) அந்த கட்டுரையையே அபத்தம் என்று கூட சொல்லமுடியாது. ஆனால் இங்கே அறிவுரீதியாய் எழுதுவதையும், விமர்சனம் என்பதை பற்றியும் இன்னும் பெரியாரை பற்றியெல்லாம் இதை முன்வைத்து வாதங்கள் போகிறது. இந்த வகை திரித்தல்வாதம் தொடர்ந்து பல இடங்களில் பயன்படுத்தப் படுவதை காணலாம்.

2. ஒரு திரைப்படத்தை அதில் பயன் படுத்தப் படும் காமிரா கோணங்கள், பிண்ணணியில் வரும் காட்சிகளை வைத்து நிச்சயமாய் விமர்சிக்க முடியும். அவை ஏன் முக்கியமானவை என்று விளக்கமுடியும். அத்தகைய பல விமர்சனங்கள் வெளி வந்திருக்கின்றன. அப்படி பேசுவதாக நினைத்து அ. ராமசாமி ஏதோ ஒளரியிருக்கிறார். அந்த ஒரே காரணத்திற்காக அப்படி விமர்சிக்கவே முடியாது என்று சொல்வது அபத்தம். அதற்கு ஒரு உதாரணமாய் ஞாநி பாபா படத்தில் வரும் ஒரு காட்சியை விமர்சித்துள்ளதை சென்ற பதிவில் சுட்டி காட்டியிருக்கிறேன். 'இருவர்' படம் குறித்து வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் விமர்சனத்தை இன்னோரு உதாரணமாய் குறிப்பிடலாம். இன்னும் பல பல உதாரணங்கள் உண்டு.

இங்கே இவர்கள் அ. ராவின் வரிகளை வைத்து கொண்டு, இது போன்ற மற்ற விமர்சனங்களை மறுக்க முயல்வதையே திரித்தல் என்பதாக எழுதியிருந்தேன்.

3. அடுத்து அறிவுரீதியான எல்லா விமர்சனங்களையும் இந்த ஒரு வரியை வைத்து கொண்டு நிராகரிப்பதை பார்கலாம். ஆனால் மிக முக்கியமான திரை விமர்சனங்கள் அறிவுத் துறையினரால் எழுதப் பட்டுள்ளது. ஒரு பெரிய பட்டியலே உள்ளது. இதை அ. ராமசாமியின் ஒரு அபத்தமான வரியை நிராகரிக்க முன்வைப்பது அறிவு பூர்வமான வாதமல்ல.

4. நடைமுறையிலும் பிண்ணணி காட்சிகள், பிண்ணணியில் வரும் சிலைகள், தலைவர்களின் படங்கள், குறியீடுகள் இவைகள் தியேட்டரில் பார்க்கும் பார்வையாளராலும் கணக்கில் கொண்டு பார்க்க படுகின்றன. எந்த ஒரு குறிபிட்ட காட்சிக்கு பின்னும் ஒரு முன்திட்டமிடல் நிச்சயம் இருக்கிறது. இதன் பிரதிபலிப்பாய் பார்வையாளனின் வாசிப்பிலும் பாதிப்பு இருக்கிறது. ஒரு குறிபிட்ட காட்சியில் முத்துராம லிங்க தேவரின் சிலையை காட்டுவதை(சில விமரசகர்களால் மட்டுமல்ல) பார்வையாளர்களாலும் கதையோடு பொருத்தி பலவிதமாய் உள்வாங்க படும். அதே காட்சியில் தேவருக்கு பதிலாக அம்பேத்கார் சிலை வந்தால் வாசிப்பே மாறக்கூடும். பாப் கார்ன் தின்று விட்டு தனக்கு சாத்தியமில்லாததாக தேசிகன் சொல்ல கூடிய வாசிப்புகள், தியேட்டரில் பலருக்கு சாத்தியமாகலாம். நேற்று, இன்று, நாளை படத்தில் இரண்டு விநாடிகள் காட்டப்படும் திண்டுக்கல் இடை தேர்தல் போஸ்டர் பார்வையாளர்களால் வாசிப்புக்கு உட்படுத்த படுகிறது. சின்ன உதாரணமாய் இதை சொல்கிறேன். இப்படி ஒரு அரசியல் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் முன்வைக்க படுகிறது, உள்வாங்க படுகிறது. அ. ராமசாமி மிகையாக ஒரு விஷயத்தை சொன்னதாலேயே அத்தகைய வாசிப்புகள் சாத்தியமில்லை என்பதாகாது.

கடைசில எதையும் நான் சொல்லவரவில்லை. இவைகளே நான் சொல்லியது. இதை உள்வாங்கி இது குறித்து கேள்வி எழுப்பினாலோ, மேலே பேச நினைத்தாலோ பேச முடியும்.

டோண்டு ராகவன்: மு.ராமசாமி மற்றும் அ.ராமசாமி இருவரும் ஈ.வெ.ராமசாமியைப் பற்றி எழுதியிருப்பது தனக்குப் புரியவில்லை என்று தேசிகன் தன் பதிவில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதில் குழப்பம் என்ன வந்தது?

ரோஸாவசந்த்: குழப்பம் வந்ததாக நான் எப்போது சொன்னேன்? மேலும் அவர்கள் ஈவே ராமசாமியை பற்றி எழுதினார்களா? நான் எழுதியதற்கு, அல்லது பேசப்படும் விஷயத்திற்கும் டோண்டு குறிப்பிடும் இந்த 'குழப்பதிற்கும்' என்ன தொடர்பு?

டோண்டு: மேலும் பொதுவாக அறிவுஜீவிகள் எப்போதும் புரியாமல் எழுதுவதைப் போன்றத் தோற்றமும் வருகிறது.

ரோஸாவசந்த்: 'பொதுவாக' அறிவிஜீவிகள் எழுதுவது உங்களுக்கு புரிவதில்லை. உங்களுக்கு புரியும் விஷயங்கள் வேறு சிலருக்கு புரியாமல் போகலாம்.

ஆமாம், சோ மாதிரி 'உங்களுக்கு புரியும்படி' எல்லோராலும் எழுத முடியுமா?

டோண்டு: மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி என்பது மேலே கூறியக் கருத்தைத்தான் முன்னிறுத்துவதாக நாஞ் புரிந்துக் கொள்கிறேன்.

ரோஸாவசந்த்: நல்ல புரிதல்! உங்களுக்கு இப்படி சொன்னாலே போதுமே! அதை நிறுவிய திருப்தி கிடைத்திருக்குமே! அது சரி, இதை புரிந்து கொண்டீர்கள், நான் வைத்த தலைப்பை புரிந்து கொண்டீர்களோ?

ஜெ. ரஜினி ராம்கி: 'பாபா'வுக்கு பலபேர் விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் நடத்தினார்கள். உருப்படியான விமர்சனம் என்று சொன்னால் அது கல்கி மற்றும் தினமணிகதிரில் வந்தவைதான். பாபா பத்தி நான் எது சொன்னாலும் எடுபடாது என்பதால் ஜூட்!

ரோஸாவசந்த்: குறிப்பிட்ட ஆசாமி பேசுகிற ஒரே காரணத்திற்காக, முத்திரை குத்தி ஒரு விஷயத்தை புறம் தள்ளும் அணுகுமுறைக்கு நானும் ஆளாகியிருப்பதாலும், என் கருத்துக்கள் பலமுறை அவ்வாறே எதிர்கொள்ள பட்டிருப்பதாலும் நான் அதை ஒரு போதும் உங்களுக்கு செய்யமாட்டேன். பாபா படம் பற்றி நீங்கள் பேசுகிற ஒரே காரணத்திற்காக அது எடுபடாமல் போகாது. நீங்கள் சொல்லும் விஷயத்தை நான் மறுக்கலாம், முரண்படலாம், எடுபடாமலும் போகலாம். அப்படி செய்வதற்கான காரணத்தை தெளிவாய் முன்வைக்க முடியும். நிச்சயம் 'ரஜினி ராம்கி ஒரு ரஜினி ரசிகர்' என்ற ஒற்றை வரி அந்த காரணமாய் இருக்காது.

ரஜினி ராம்கி: மட்டமான மசாலா படத்துக்கு கூட ஞாநி இப்படியெல்லாம் மெனக்கெட வேண்டுமா என்பதுதான் என்னுடைய கேள்வி. லேட்டஸ்ட் படத்துக்கு மட்டுமல்ல 'ஊமை விழி'களுக்கு கூட ஒரு காமெடி விமர்சனம் எழுதியிருக்கிறார். 'பாய்ஸ்'க்கு இவர் எழுதிய விமர்சனத்தை படித்ததும் ஷங்கர் மீது எனக்கொரு அனுதாபமே வந்துவிட்டது. 'தென்றலை' ஏனோ தீண்டவேயில்லை! ஞாநி சினிமா விமர்சனம் பண்ணாமல் இருந்தால் சினிமாக்காரர்களை விட அதிகமாக சந்தோஷப்படும் ஆள் நானாகத்தான் இருப்பேன்!

ரோஸாவசந்த்: 'மசாலா சினிமா' குறித்த ஞாநியின் கருத்துகளுடன் நான் உடன்பட்டதில்லை. ஆனால் 'மசாலா' குறித்த விமர்சனம் தேவையில்லை என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை. இந்த இலக்கியம், கலை, கலைப்படங்கள் இதை எல்லாம் விட மிக பரந்த அளவில் பாதிப்பை 'மசாலா' உண்டாக்குகிறது. மிக பெரும் திரளான மக்களால் பார்க்கபடுகிறது. இதை பற்றி பேசாமல் வேறு எதை பற்றி பேசுவது முக்கியமானது என்று புரியவில்லை.

ஆனால் 'மசாலா'வை மட்டமானது எனும்போது நீங்கள் ஞாநியுடன் உடன்படுகிறீர்கள். நான் இங்கே கடுமையாய் வேறுபடுகிறேன். சென்ற வருடம் வெளிவந்த திரைப்படங்களில் (நான் பார்த்ததில்) சிறந்த படமாய் 'கில்லி'யும், மட்டமான படமாய் 'விஸ்வதுளசி'யும் என் பார்வைக்கு படுகிறது. நீங்கள் இதை நேரெதிராய் பார்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு ஞாநி செய்யும் விமர்சனத்தில்தான் முரண்பாடே ஒழிய, விமர்சிப்பதிலேயே அல்ல. ஞாநி தொடர்ந்து 'மசாலா' படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அது குறித்த விமர்சிப்பது மிகவும் தேவையானதே. அந்த எல்லா விமர்சனங்களிலும் இதுவரை ஞாநி பேணி வந்த தனி நபர் நேர்மையும், சமூக அக்கறையும் வெளிப்படுவதை யாரும் மறுக்க முடியாது.


ரஜினி: 'காதல்' பற்றிய அ.ராமசாமி விமர்சனத்தின் ஒரு பகுதியை நான் ராகாகியில் இட்டதும் அதற்கு திருமலை தந்த எதிர்வினையையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். முழுமையான விமர்சனம் தீம்தரிகிடவில் வந்திருக்கிறது. தேசிகன் தவறாக குறிப்பிட்டு விட்டார் என்று நினைக்கிறேன். குமுதம், விகடனில் வரும் சிரிப்பு வராத ஜோக்குகளை படிப்பவர்கள் அவசியம் படிக்கவேண்டிய விமர்சனம்.

ரோஸாவசந்த்: என் பையனுக்கு வயது மூன்று மாதம். முகத்தை கோணலாக்கி காட்டினாலோ, குதித்து குண்டக்க மண்டக்க நான் எது செய்தாலும் அவனுக்கு சிரிப்பாய் இருக்கிறது. அடுத்த சில வருடங்களில் இதே செய்கைகளை வேறு மாதிரி செய்தால் சிரிக்க கூடும். ஆனால் இருபது வருடம் கழித்து இதே செய்கைகளுக்கு சிரிக்க கூடுமெனில் ஏதோ பிரச்சனை என்றுதான் பொதுவாய் எல்லோரும் நினைப்பார்கள். யோசித்து பார்த்தால் அதை பிரச்சனை என்பதைவிட, பெரிய இழப்பாகவே பர்க்க முடியும்.

சுமார் 15 வருடங்கள் முன்பு தவறாமல் துக்ளக் படித்த காலங்களில், துக்ளக் சத்யாவின் அசட்டு 'நையாண்டிகள்' (வேறு வார்த்தை கிடைக்காமல் வழியின்றி இதை நையாண்டி என சொல்லவேண்டியுள்ளது) சிரித்து மகிழாத ஒரு இதழ் இருக்க முடியாது. இன்று அந்த அசட்டு நகைச்சுவைகள் மிகவும் எரிச்சலை தரக் கூடியவையாய் மட்டுமே இருக்கிறது. சத்யாவின் அரசியல் புரியவில்லையெனில் இதையும் ஒரு இழப்பாகவே கருதியிருக்க கூடும்.

அந்த துக்ளக்தனமான ஒரு அசட்டு நையாண்டியின் மேலோட்டமான ஒரு வடிவம்தான் நீங்கள் குறிப்பிடும் திருமலையின் 'விமர்சனம்'. இன்னும் இதையெல்லாம் பலரால் ரசிக்க முடிகிறது என்பதை பார்க்க ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. சில நாட்கள் முன்பு (மீனாக்ஸ் என்று நினைக்கிறேன்) சத்யாவின் துக்ளக் அசட்டு ஜோக்குகளை போட்டு,'ஹாட்ஸ் ஆஃப்' சொல்லி ஸல்யூட் கூட அடித்திருந்தார். எனக்கு அதை படித்தால் குமட்டல்தான் வருகிறது. அதைவிட எப்படி இத்தனை வருஷமாய் இந்த அசட்டுத்தனக்களுக்கு சிரிக்கும் தரத்தில் மக்கள் இருக்க முடிகிறது என்ற ஆச்சரியமும் வருகிறது. 'ஒரு குழந்தையாய் கோமாளித்தனங்களுக்கு சிரிக்க முடியவில்லையே' என வருத்த படுவதை போல இதையும் பார்க்க முடியவில்லை.

நையாண்டி என்பது ஒரு அறிவுபூர்வமான தளத்தில், நாம் பயன்படுத்தும் தர்கத்தை மீறி வரவேண்டும். இங்கே அடிப்படை தர்கமே ஆட்டம் காணுகிறது. தர்கத்தை மீறுவது, உடைத்து போடுவது என்பது வேறு. தர்க்கத்தையே சொதப்புவது என்பது வேறு. திருமலையின் எழுத்துகளில் என்ன அறிவு பூர்வமான தர்கம் வெளிபடுகிறது என்று அதை சிலகித்தவர்கள்தான் சொல்லவேண்டும்.

ஜேஜே சில குறிப்புகள் குறித்து நீங்கள் எழுதியதை படித்தேன். "‘இன்னும் இருபது வருடங்கள் கழித்து (அப்போது 1978!) அதாவது 90களில் தலைகீழ்மாற்றங்கள் வரும். அப்போது எந்த தவளையும் கிணற்றுக்குள் இருக்கமுடியாது" என்ற வரிகள் இணையத்தை பற்றிதான் சுரா என்ற தீர்கதரிசி சொல்வதாக உங்களுக்கு தெரிகிறது. (//படிக்கப் படிக்க பரவசத்தை ஏற்படுத்திய வரிகள். பாரதி பரம்பரையில் வந்தவர்களில் தொலைநோக்கு பார்வை ஒரு சிலருக்குத்தான் உண்டு. அந்த வகையில் 90களுக்கு பின்னர் இணையம், தமிழை ஏற்றத்தில் வைக்கும் என்பதை எப்படித்தான் எழுதிவைத்தாரோ? //) இது ஒரு மிகை வாசிப்பு. நாவலில் பாலு என்ற பாத்திரம் 17 மொழிகளிலிருந்து, கலை செல்வங்களை தமிழுக்கும் அந்த மொழிகளுக்குமான பரிமாற்றங்களை பற்றி பேசும்போது இந்த வரி வருகிறது. பேசப்படும் விஷயமும், கிணற்று தவளை என்ற உவமையும் மற்ற மொழியின் கலை செல்வங்களை முன்வைத்து எழுதப்பட்டது. தமிழின் ஏற்றத்தை பற்றியது அல்ல. ஆனால் உங்களுக்கு இணயத்தை பற்றி எழுதப்பட்ட தீர்க்கதரிசனமாக தெரிகிறது.

உங்கள் வாசிப்பை குறை கூறுவதல்ல என் நோக்கம். உங்களால் எப்படியோ அப்படி 'வாசிக்க' முடிந்திருக்கிறது. எனக்கு அது ஒரு அபத்தமான மிகை வாசிப்பாக தெரிகிறது. அதே போலத்தான் அ.ராமசாமி தனது வாசிப்பாக முன்வைத்த விமர்சனம் ஒரு மிகை வாசிப்பு மட்டுமே! நமக்கு அது அபத்தமாக தெரியலாம். அவ்வளவுதான்.


பாலா: மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமிஇந்த தலைப்புக்கு என் மனதில் பட்ட interpretations-ஐ கூறுகிறேன்!

1. சிலை வரும் காட்சியை ஒருவர் பாஸிடிவாக பார்க்கிறார். மற்றவர் நெகடிவாகப் பார்க்கிறார்! இதிலிருந்து, ஈ.வெ.ரா வும், நல்ல விஷயங்களும் செய்திருக்கிறார், தவறுகளும் செய்திருக்கிறார் என்று கொள்ளலாம். அவரது, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, தலித் மேம்பாட்டுக்கான உழைப்பு போன்றவைகள் பாஸிடிவ் வகை! பிற மத மூடநம்பிக்கைகளையும், கடவுளர்களையும் கண்டு கொள்ளாத ஓரவஞ்சனையான அதி தீவிர இந்துக் கடவுளர் எதிர்ப்பு (வீரமணி செய்வதும் இது தான்!), தமிழ் மொழியை காட்டுமிராண்டிகளின் பாஷை என்று சாடியது போன்றவைகள் நெகடிவ் வகை என்பேன்!

2. இரண்டு முரண்பட்ட விமர்சனம் தந்த ஆசாமிகளை கூட்டினால் ஈ.வெ.ரா வருவதால், ஈ.வெ.ரா விடமும் முரண்பாடுகள் இருந்தன என்றும் கொள்ளலாம்!

பொதுவாக, இலக்கியவாதிகளின் திரை விமர்சனம் கூட தலைக்கு மேலே ஓடும் வகையில் (over the head) உள்ளன என்ற தேசிகனின் கூற்று ஓரளவு சரியானதே எனத் தோன்றுகிறது! எனவே, இலக்கியப் பத்திரிகைகளில் வரும் திரை விமர்சனங்களை படித்தல் ஆகாது :-) அப்படியே படித்தாலும், அவை பற்றி விமர்சனம் செய்தல், வம்பை விலைக்கு வாங்குவதற்கான சிறந்த வழி :-(

ரோஸாவசந்த்: பாலா, இது கொஞ்சம் ஓவராக இல்லை? தேசிகன் ஏதோ அந்த நேரத்தில் தோன்றிய அச்சு பிச்சு தலைப்பை வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறதே அன்றி இப்படி ஒரு அர்த்தம் அதற்கு கற்பிக்க சாத்தியமிருப்பதாக தெரியவில்லை.

பாலாவுக்கு பெரியாரிடம் பாசிட்டிவாகவும், நெகடிவாகவும் சில விஷயங்கள் தோன்றுகின்றன. இருக்கட்டும்! அதே போல அ.ரா நெகடிவாகவும், மு.ரா பாசிட்டிவாகவும் தோன்றுகிறது. சரி! அதனால் பெரியாரின் +/-உம் இந்த +/-ஐயும் ஒன்றாய் போட்டு, இந்த +/-ஐ கூடினால் பெரியார் வருகிறாரா? இதை போன்ற ஒரு வாதம்தான் பெரியார் சிலையையும் காட்சிகளையும் சில காமிரா கோணங்களையும் வைத்து அ.ராமசாமிக்கு தோன்றியிருக்கிறது. அது எப்படி அபத்தமோ அதைபோல பாலா எழுதியுள்ளதும் அபத்தம். இப்போது நான் பாலாவும் தேசிகனும் எழுதியதை முன்வைத்து சுஜாதாவை திட்டினால் எப்படி இருக்கும்?

கடைசியாய் பாலா பெரியாரை முன்வைத்து எழுதியுள்ளதற்கு பதில் தருவது போன்ற அலுப்பூட்டும் வெட்டியான வேறு ஒரு வேலை இருக்க முடியாது. தங்கமணி அந்த வேலையை செய்ததுடன் "பெரியாரிடமே நேரடியாகச் சென்று, எந்தச் சூழலில், எந்தப் பிண்ணனியில் அவர் இதைப் பேசியிருக்கிறார் என்று பாருங்கள்" என்கிறார். தங்கமணி சொல்ல வருவது என்னவென்று சிறுகுழந்தைக்கும் புரியும். பெரியார் பேசியதாக('காட்டுமிராண்டி பாசை' போல) சொல்லபடும் ஒரு விஷயம் குறித்து பேச, பெரியார் அது குறித்து எழுதியது பேசியதை அதன் சந்தர்ப்ப சூழலை முன்வைத்து விவாதிக்க வேண்டும் என்ற அர்தத்தில் "பெரியாரிடமே நேரடியாகச் சென்று" என்கிறார். அதற்கு பாலா "நான் மாட்டேன்! இன்னும் சிறிது காலம் இவ்வுலகில் வாழ்ந்த பின் பெரியாரை சென்று சந்திக்கிறேன் :-0" என்று அசட்டுதனமாய் பதிலளிக்கிறார்.

பெரியார் சிந்தனைகளாக தொகுக்கப் பட்ட விஷயங்கள், தினமும் ஒன்றாய் வாரம் முழுவதும் தலையணையாய் பயன்படுத்தும் அளவிற்கு புத்தகங்களாய் வந்துள்ளன. பாலா பெரியார் எழுதிய ஒரு கட்டுரையாவது நேரடியாய் படித்திருப்பாரா என்பது சந்தேகமாய் உள்ளது. குறைந்த பட்சமாய் ஏதேனும் படித்த பின்பு இது குறித்து விவாதிப்பதில் அர்த்தம் உள்ளது. பெரியார் குறித்து பதிலளிக்க, விவாதிக்க (ரவிகுமார் தொடங்கி ஜேமோ வரை) எத்தனையோ தீவிரமான விஷயங்கள் உள்ளன. இதை போன்ற மேலோட்டமான (ஏற்கனவே பலமுறை பெரியாராலேயே பதிலளிக்கப் பட்டுள்ள) கேள்விகளை எதிர்கொள்வது போல அலுப்பானது எதுவுமில்லை.

பாலா சொல்வது போல் அவர் மற்ற மதங்களை எதிர்க்கவில்லை என்பது உண்மையில்லை. கிருஸ்தவம் குறித்து அதிகமாய் பேசியுள்ளார். இஸ்லாம் குறித்து நேர்மறையாய் பேசியிருந்தாலும், இஸ்லாமியர்களிடையே பேசும்போதே அவர்களுக்கு உவப்பில்லாத கருத்துகளை பல முறை சொல்லியிருக்கிறார். பர்தாவின் கொடுமை பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளார். பாலா பெரியாரை ஓரளவு படித்துவிட்டு இன்னும் சற்று தீவிரமான கேள்விகளை எழுப்ப வேண்டும். காட்டுமிராண்டி பாஷை குறித்து அரவிந்தன் நீலகண்டனுக்கு பதிலாய் முன்பு எழுதியதை (எளிதான காரியமாய் இருப்பதால்)இங்கே வெட்டி ஒட்டுகிறேன்.

"மறக்காமல் RSSபுத்தி இந்த 'காட்டுமிராண்டி பாஷை' விஷயத்தில் வந்து நிற்கும். தமிழ் குறித்து பெரியார் உயர்வாய் சொன்ன விஷயத்தை எல்லாம் விட்டு விட்டு, இந்த விசயம் மட்டும் மறக்காமல் ஞாபகம் வரும். உலகில் எங்கும் இல்லாத அற்புதமாய், சங்ககாலம் என்பது ஒரு பொற்காலமாகவும், உலகில் உள்ள மொழிக்கெல்லாம் தமிழ்தான் தாய் போலவும், தமிழ் உணர்வு என்பது இங்கே தறிகெட்டு போன ஒரு கட்டத்தில், பெரியார் இதை சொன்னார். மொழிக்கு தரப்பட்ட உன்னத குணங்களை மறுத்து, மொழி நவீனமடைவதன் அவசியத்தை உணர்த்தும் விதமாய், "தமிழ் ஒரு காட்டுமிராண்டிகாலத்து மொழி" (primitive language) என்ற அர்தத்தில் சொன்னார். இது என்ன தமிழ் மீதுள்ள வெறுப்பாலோ, தமிழை அழிக்கும் சதிதிட்டத்தாலோ, வேறு மொழிகொண்டு அதை மேலாதிக்கம் செய்யும் நோக்கிலோ சொல்லபட்டதா? தமிழ் நவீனபடுத்த படவேண்டிய கட்டாயத்தை உணர்த்தும் வண்ணம் சொல்லபட்டது. உன்னதம் என்று ஒன்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இருக்கமுடியாது என்ற அறிவின் அடிப்படையில் சொல்லபட்டது. இதை RSSகாரர் நேர்மையாய் அணுகுவார் என்று எதிர்பார்க்கமுடியுமா? ஆனால் ஆயிரம் வருடங்கள் முன்னால் பேசப்பட்ட ஒரு மொழியில், இன்றய செயற்கை அறிவிற்கான சமாச்சாரங்கள் எல்லாம் இருக்கிறது, இன்றய அறிவியல் சமாச்சாரங்கள் எல்லாம் அன்றே சொல்லபட்டதாய் நினைக்கும் மனத்திற்கு பெரியார் சொன்னது பகுத்தறிவற்ற விஷயமாக தெரியாமல் வேறு எப்படி தெரிய கூடும்!


ஆனாலும் பெரியார் தமிழ் குறித்து சொன்னதும், இன்னும் பொதுவாய் மொழி குறித்தும், ஆங்கிலம் குறித்து சொன்னதும் எனக்கும் கூட முழு ஒப்புதலில்லை என்பது வேறுவிஷயம். எந்த தத்துவத்திற்க்கும், இயக்கத்திற்கும், அதன் கொள்கைகளுக்கும் எனது உடல்-ஆவி-மூளையை நான் அடகு வைக்காத காரணத்தால், பெரியார் சொன்ன எல்லாவற்றிற்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பெரியாரியத்தின் அடிப்படையில்தான் பூமி சுற்றவேண்டும் என்றோ, மூச்சுவிட வேண்டுமென்றொ நான் நினைப்பதில்லை. இது ஏதோ, பதரை அகற்றி வேண்டியதை கொள்ளும், பழையபாணி வேலையும் இல்லை. பெரியார் சொன்னதை சூழலுக்கு ஏற்ப வாசித்து, தேவையானால் அதற்கு ஒரு மீள் உருவாக்கம் கொடுக்க முனையலாம். இன்னும் தேவையானால் அவர் சொன்னவற்றை குழி தோண்டி புதைக்க புறப்படவேண்டியிருக்கலாம். ரவிகுமார் பெரியார் மீது அண்மைகாலத்தில் வைத்த விமர்சனத்தில் கூட(அதிலுள்ள சில தனி நபர் அரசியல் காரணமாய், சில விமர்சனங்கள் இருந்தாலும், அத்தகைய விஷயங்களை வகுத்துவிட்டு) எனக்கு பல விஷயங்கள் ஒப்புதலுள்ளன. இது குறித்து ரவி ஸ்ரீனிவாஸிற்கு எழுத நினைத்த பதில், அரைகுறையாய் என் கணணியிலேயே தங்கிவிட்டது. "

இந்த பதிவை முடிக்கும் முன் ஒரு விஷயம். சுஜாதா குறித்து ரவி முன்வைத்துள்ள கருத்துக்கள் எனக்கு ஒப்புதலில்லாதவை. ரவி இந்த முறை கொஞ்சம் ஸ்வீப்பிங்காக சொல்லியிருப்பினும், அவர் இதற்கு முன்பே பலமுறை சொன்னதுதான். எனக்கும் சுஜாதா மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களுடன் ரவி வேறுபடக் கூடும். அதேபோல ரவியின் 'விமர்சனங்கள்' எனக்கு ஒப்புதலில்லை.

சுஜாதாவின் எழுத்து ஒரு தீவிரமான வாசிக்கும் பழக்கத்திற்கு எத்தனையோ பேரை இட்டு சென்றிருக்கின்றது, செல்கின்றது என்பதுதான் எனது கருத்து. முப்பது ஆண்டுகளாக மிகுந்த விஷய ஞானத்துடன் பல ஜனரஞ்சக பத்திரிகைகளில் அவர் எழுத்தின் மூலம் ஆற்றிய பணி மகத்தானது. வேறு யாரையும் அவருடன் ஒப்பிட முடியும் என்று தோன்றவில்லை.

இது என் பதிவாகையால் என் அனுபவததை முன்வைக்கிறேன். தனிப்பட்ட முறையில் என் இலக்கிய வாசிப்பும் சிந்தனையும் சுஜாதாவின் மூலமே தொடங்கியது. இன்று எந்த விதத்திலும் சுஜாதாவை வாசித்து பெறகூடியதாய் எனக்கு பெரிதாய் எதுவுமில்லை. ஆனால் தமிழ்வாணன் வாசகனாய் இருந்து சுஜாதா ரசிகனாய் பரிணமித்த போதே வாசிப்பின் தீவிரம் என்னை தொற்றிகொண்டது. ஒரு ஜனரஞ்சக தளத்தில் அவர் சாத்தியப் படுத்தியுள்ள இலக்கிய உலகத்தை நன்கு துய்த்தவன் என்ற முறையில் அது எனக்கு முக்கியமானது. அதை எந்த ஆரம்ப கட்ட வாசகனுக்கும் பரிந்துரைக்க முடியும். என்னை தவிர தனிப்பட்ட முறையிலும் இது போல பல உதாரணங்களை எனக்கு தெரியும். அந்த வகையில் சுஜாதாவின் எழுத்துப் பணி மிக முக்கியமானது என்றே எனக்கு தோன்றுகிறது.

ஒருவகையில் என் அரசியல் சிந்தனை சோ மூலமும், இலக்கிய சிந்தனை சுஜாதா மூலமுமே தொடங்கியது. இதில் சோவால் ஈர்க்கப்பட்டதை மிகவும் துரதிர்ஷ்டமாகவும், ஒரு நீண்டகாலத்திற்கு இருந்த அந்த பாதிப்பு குறித்து மிகுந்த வெட்கமும் எனக்கு உண்டு. இன்று அதற்கு நேரெதிராய் சிந்திப்பதாய் நினைத்து கொண்டிருக்கும் போதும், 'சோ'த்தனமாக ஏதேனும் தர்கம் வந்துவிடுமோ என்பதில் மிகவும் சுய நினைவுடன் இருக்கிறேன். மாறாக ஒரு சுஜாதா ரசிகனாய் இலக்கிய வாசிப்பை தொடங்கியதில் எந்த வெட்கமும் இல்லை. இன்றும் எழுத்து நடையில் அந்த வாசிப்பின் பாதிப்பு இருப்பதை உணர்கிறேன். சுயநினைவுடன் அதை தவிர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதை எல்லாம் சோவிற்கும், சுஜாதாவிற்கும் அரசியல் சிந்தனையில் பெரிய வித்தியாசம் கிடையாது என்ற உண்மையை நன்கு அறிந்து வைத்திருப்பதாய் நினைத்து கொண்டிருக்கும் சுய நினைவுடனேயே சொல்கிறேன்.

இந்த அளவிற்கு வழவழ கொழகொழவென வேறு பதிவு எழுதியதாய் தெரியவில்லை. அதனால் நிறுத்தி கொள்கிறேன்.

Post a Comment

---------------------------------------

Wednesday, February 23, 2005

அ. ராமசாமியை முன் வைக்கும் சோ ராமசாமிகள்!

இது தேசிகனின் பதிவிற்கான ஒரு அவசர எதிர்வினை! தலைப்பில் சோ. ராமசாமியின் பெயர் அர்தத்துடனேயே பயன்படுத்த பட்டுள்ளது.

அ. ராமசாமி, மு. ராமசாமி இருவரும் எழுதிய காதல் திரைப்பட விமர்சனத்தை நான் படிக்கவில்லை. அது குறித்து மேற்கோள் காட்டப் பட்ட வரிகளை மட்டுமே படித்திருக்கிறேன். அதனால் இருவரும், குறிப்பாய் அ. ராமசாமி எழுதியிருக்க கூடிய உருப்படியான விமர்சன வரிகளை குறித்து சொல்ல எதுவும் இயலவில்லை. அ. ராமசாமி எழுதியுள்ளது (அதாவது மேலே உள்ள வரிகள்) மிகவும் அபத்தமான விமர்சனம் என்பது சந்தேகமில்லை. எனக்கு சுவாரசியம் அளிப்பது அதை முன்வைத்து மற்றவர்கள் தங்கள் அரசியலை அஜண்டாக்களை நிறைவேற்றி கொள்வதுதான். இரண்டாவது இதை முன்வைத்து திரைவிமர்சனம் என்பது குறித்து முன்வைக்கப் படும் ஒரு அபத்தமான பார்வை. அதன் குழப்பமற்ற நேரடி வெளியீடுதான் தேசிகனின் இந்த பதிவு.

அ. ராமசாமி இது வரை எத்தனையோ உருபடியான கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்த கட்டுரையில் கூட வேறு பல உருப்படியான வரிகள் இருக்கலாம். ஆனால் ஒரு ஒற்றை வரி மட்டும் மேற்கோள் காட்டப் பட்டு, அதை முன் வைத்து ஒரு தர்க்கமற்ற ஒரு வாதம் மற்ற விமர்சனங்களை மறுக்க பயன்படுத்த படுகிறது. அதாவது இதை முன்வைத்து, விமர்சனம் என்பதே இப்படித்தான் என்பது போல் பேசுவதும், முக்கியமாய் வேறு விமர்சனங்களை மறுப்பது போல் பேசுவதும். உதாரணமாய் ராகாகி அபத்தங்களை சொல்லலாம். ரஜினி ராம்கி ஞாநியையும் இத்துடன் இணைத்து ஞாநியின் பாபா விமர்சனத்தை மறுக்க முனைகிறார். இங்கே தேசிகன் "ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி" என்று ஒரு தலைப்பு வைத்து வேறு ஏதோ சொல்ல வருகிறார். இந்த தலைப்பின் மூலம் என்ன எழவை சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். பெரியார் எழுதியது பேசியதெல்லாம் அ. ராமசாமி சொல்வது போன்ற அபத்தம் என்று சொல்லவருவதாக எனக்கு தோன்றுவதை எடுத்து சொன்னால், என் இஷ்டத்திற்கு வாசிப்பதாக அவருக்கு தோன்றலாம். ஆக இவர்கள் அ. ராமசாமியின் ஒரு அபத்தமான வரிகளை வைத்துகொண்டு, இருக்கும் அத்தனை விமர்சனங்களையும் நிராகரிக்க பயன்படுத்தும் ஒரு அசட்டு வெறிதான் தெரிகிறது. உதாரணமாய் காதல் படம் குறித்து நான் கூட ஒரு முக்கிய விமர்சனம் வைத்துள்ளேன். இதை யார் கண்டுகொள்ளுவார்கள்?

இது இப்படியிருக்க தேசிகன் விமர்சனம் என்பது குறித்து எழுதியுள்ளதும் இன்னும் மற்றவர்களும் சொல்ல வருவது என்ன? ஒரு குறிப்பிட்ட காட்சியில் "பெரியார் சிலைக்குப் பதில் கண்ணகி சிலை, காந்தி சிலை அல்லது பசும்பொன் தேவர் சிலை அந்த ·பிரேமில் வந்துபோயிருந்தால்' அதை முன்வைத்து எந்த விமர்சனமும் வைக்க கூடாது என்பதுதான். அ. ராமசாமி படத்தில் இறுதிகாட்சியில் வரும் பெரியார் சிலையை முன்வைத்து எழுதியது எவ்வளவு அபத்தமோ, அதை விட அபத்தம் இப்படி ஒரு குறிப்பிட்ட ஃப்ரேமில், வரும் பெரியார் சிலையையும் அதன் காமிரா கோணங்களையும் முன்வைத்து விமர்சனமே கூடாதென்பது. ஒரு திரைப்படத்தை விமர்சிக்கும் போது நிச்சயமாய், அதில் இடம்பெரும் காட்சி பிண்ணணிகளையும், காமிரா கோணங்களையும் குறித்து நிச்சயமாய் பேசலாம். உதாரணமாய் மு. ராமசாமியின் விமர்சனம் (அதாவது மேற்கோள் காட்டப் பட்ட வரி) நிச்சயமாய் ஒரு சாத்தியமுள்ள வாசிப்பு. தமிழ் சினிமா பார்வையாளர்களின் வாசிப்புகளில் (ஒரு வேளை பாப் கார்ன் தின்றுவிட்டு தேசிகன் இது குறித்து யோசிக்காவிட்டாலும்) பிண்ணணியில் வரும் சிலைகள், நபர்கள், அடையாளங்களுக்கு நிச்சயமாய் வாசிப்புகள் உண்டு. தியேட்டரில் படம் பார்த்த எவருமே இப்படிப்பட்ட வாசிப்புக்ளில் இருந்து ப்தப்பிக்க இயலாது. ஞாநி பாபா விமர்சனத்தில் முக்கியமான ஒன்றை சொல்லியிருப்பார். 'நண்பர் பகைவர் யார் வந்தாலும்..' என்ற பாடல்வரியின் போது பகைவர் என்பதன் குறியீடாய் இஸ்லாமியர் வருவார். படத்தில் தெளிவாகவே இது காட்சி படுத்த பட்டிருக்கும். ஞாநி சொல்லும் இந்த விமர்சனத்தை மறுக்க அ.ராமசாமியை பயன்படுத்தி மறுப்பதை போன்ற அபத்தம் உண்டுமா? அ. ராமசாமி முன்வைத்துள்ளது ஒரு அபத்தமான over interpretation. அதை முன்வைத்து இப்படி பட்ட விமர்சனங்களையே நிராகரிப்பதும், கிண்டலடிப்பதும், இன்னும் முக்கியமாய் வேறு விமர்சனங்களை மறுக்க நினைப்பதும் நம் சூழலின் அழுகலை மட்டுமே காண்பிக்கிறது.

இதை அவசரமாய் அடிக்க வேண்டுயுள்ளது. குடும்ப சூழலில் என்னால் விரிவாய் இது குறித்து எழுத முடியவில்லை. எதிர்வினையே வைக்காமல் போய்விட கூடுமாதலால் இப்போதைக்கு இதை தட்டி வைக்கிறேன்.

Post a Comment

---------------------------------------

Thursday, February 17, 2005

வடு!

---- ரோஸாவசந்த்.

குப்பையை அளைந்தபடியே மறுபடியும் தலைதிருப்பி பார்த்தபோது, அவன் இன்னும் அதே மரத்தடித் திண்டில், காவி-வெள்ளையடித்த சிமெண்டுச் சிறுதெய்வத்தினருகில் அவளை பார்த்தபடி குந்தியிருப்பது தெரிந்தது. அவள் பார்பதை உணர்ந்ததும், பார்வையை விலக்கி வானத்தைப் பார்த்தபடி தன் மந்தமான தாடியை சொரிந்து விட்டு கொண்டான். எதிர்பக்கம் கூடியிருந்த செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து, தமிழ் சினிமா வசனம், சற்று தள்ளி இருவர் புகைத்து கொண்டிருந்த கஞ்சா புகைமணத்துடன் கலந்து, கேட்டுகொண்டிருந்தது. சாலையில் காய்கறி வண்டியுடன் சென்றுகொண்டிருந்த தமிழ் சிறுமியை பார்த்ததும் எழுந்து கைதட்டி அழைத்தான். அவள் இவனை பார்த்ததும் ஒரு கேரட்டை கொண்டு வந்து நீட்டினாள். கேரட்டை கடித்தபடியே, இயல்பானது போல் பவனை செய்தபடி மீண்டும் அவள் பக்கம் பார்வையை செலுத்தி, அவள் இன்னும் பார்த்து கொண்டிருப்பதை அறிந்து பழையபடி வானம்பார்கலானான்.

"பரதேசி நாய்க்கு ரோஷத்த பாரு!" முகத்தை அலட்சியமாய் வைத்தபடி கிளறுவதை தொடர்ந்தாள்.

சோம்பல் தரும் குளிர்காற்று சோம்பேரித்தனமாய் வீசிகொண்டிருந்தது. வெகுநேரமாய் தள்ளி நின்று யோசித்துகொண்டிருந்த தெருநாய், முகரும் நோக்கத்தோடு சோம்பலான உறுமலுடன் அவள் அருகில் வர, மடித்த காலி அட்டைபெட்டியால் அலட்சியமாய் அதன் முகத்திலடித்தாள். நாய் நொடிபொழுதில் தலையை பின்னுக்கிழுத்து, இரண்டடி பின்னகர்ந்து மீண்டும் புடவையருகே முகத்தை கொண்டுவந்தது.

"சீ.. போ..!" விழுந்த பலமான அடியில் `வவ்'வென்ற சத்தம் செய்துவிட்டு சாலை நடுவே சென்று, சிறிது யோசனைக்கு பின் தலையை உயர்த்தி குரைக்க தொடங்கியது.

"ஸனியனுங்க..! எழவு புடிச்சதுங்க..!" பின் அவள் முணுமுணுத்ததில் சில வசவு வார்த்தைகள் கலந்திருந்தன.

இவளை ரொம்ப நாட்களாக பார்த்து வருகிறேன். இந்த பக்கம் வரும்போதெல்லாம் இவள் கண்ணில் படுகிறாளா என்று பார்கவே, டீயும் சிகரெட்டும் குடித்தபடி காத்திருந்துவிட்டு போவதுண்டு. பார்க்க நேரிடும் போதெல்லாம் கந்தலான தோற்றத்துடனேயே இருந்தாலும், சிறு சிறு சகதிகட்டிகள் போல் முகத்திலும் கழுத்திலும் தெரிந்த வடுக்கள் இல்லையென்றால் அவள் ஒரு பேரழகியாகவே இருப்பாள் என்று தோன்றியது.

எழுந்து புடவையை சரி செய்து, சேகரித்த ப்ளாஸ்டிக் கழிவுகளை சாக்குபையில் அடைத்து, கிளம்புவதற்காக நிமிரும்போது அவன் அருகே அசட்டு புன்னகையை வரவழைக்க முயன்றபடி நின்றிருந்தான். "என்னா வேணும்?" முகத்தை திருப்பிகொண்டு உருவாக்கிய கோபத்துடன் கேட்டாள்.

"இன்னும் கோவமாவே இருக்கர போல!"

"உனுக்கின்னா வேணும் ஸொல்லு! காசு எதும் என்கிட்ட இல்லை."

"அய்ய... இதபாரு! யாருக்கு வேணும் காசு! காசுக்கா நான் பின்னாடி வரேன்!"

"அப்ப வேலையை பாத்துனு போ, எனக்கு போணம்."

தாடியை சொரிந்து, "இப்ப இன்னா பண்டேன்னு கோச்சுக்கற? ·பேட்ரி போறியான்னு கேக்கவந்தேன், அதுக்குள்ளே.."

"போறேன், போல! ஒனுகின்னா வந்த்சு? நாதான் எங்கிட்டக்க பேசவேணாம், உனுக்கும் எனக்கும் ஸம்பந்தமில்லேனு ஸொல்டேன்ல! இன்னும் இன்னா பண்ணனுன்னு பின்னாடி அலைஞ்சுனுக்கறே?"

"ஸ¤ம்மா பேசினேக்கிறியே, ஒனக்குதான் பேசதெரியுன்னு பேசறியே! நாதான் எல்லாந்தப்பு மன்னிச்சுருன்னு ஸொல்டேன்ல!"

"ஒண்ணும் ஸொல்லவேணாம் நீ, எதியும் கேக்க தயாராயில்ல நா!" குப்பை மூட்டையை முதுகில் ஏற்ற முயற்சித்தாள். அவன் அவளுக்கு உதவி, " ரெண்டு நாளா ஜொரம் வந்து குளிர்ல நோவுபட்னுக்கிறேன் தெரிமா! ஒரு வார்த்த கேட்டியா!"

" இன்னாத்துக்கு கேக்கணுன்றேன்? எனக்கு நீ பண்ணதுக்கு அன்னிக்கே உன்னைவிட்டு போயாச்சு நா! மேலெல்லா பத்த வச்சுட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறான் பாரு! என்னை ஒண்ணும் இல்லாத ஆக்கிட்டியே, பரதேசி!" மூட்டையை கீழே வைத்துவிட்டு கத்தினாள்.

"இன்னும் அதெயே பேசினிக்கிர பத்தியா! ஏதோ ஆயிபோச்சு. அன்னிக்கு மாத்ரம் தண்ணி அடிக்கலன்னா இப்டி ஆயிருக்குமா? இல்ல, நீதான் கண்ரோல்ல இருந்தினா ஆயிருக்குமா? எல்லாம் மறந்துட்டு நல்லா இருக்லான்னுதானே ஸொல்றேன். ஸரி, எங்க போற? ·பேட்ரிக்குதானே, வா, இப்டியே ஜல்தியா போய்ட்லாம்."

" நீ ஒண்ணும் வர தேவயில்ல, போறதுக்கு தெரியும் எனக்கு. இப்ப நீ இன்னாத்துக்கு ஒட்றேன்னு தெரிது எனக்கு. உன் கிட்டக்க படுக்க தயாராயில்ல நா, ஒனக்கு காசு குடுத்தும் என்னால ஆவாது... எங்கூட வராத நீ!"

"என்னா பேசற நீ! ம்.. எனுக்கு வேலை செய்ய தெரியாதா? கய்யும் காலும் இல்லியா?" அவள் இரக்கத்தை பெறும் முயற்சியாய் முகத்தை வைத்துகொண்டு, "ரெண்டு நாளா ஒடம்பு முடியல. மேலெல்லா நோகுது. கால்ல வேற காயமா போச்சு பாரு!" என்று முடி வளர்ந்த கல் போல் தோற்றமளித்த கால்புண்ணை காட்டினான்.

அவள் கவனியாமல் மீண்டும் மூட்டையை தூக்கி, " ஏன்யா மேலே பேசினே இருக்கற! மான ரோஷம் எதும் இல்லியா? உனுக்கு ஜொரன்னா எனிக்கின்னா வந்த்சு! போய் எவனுக்காவது ஊம்பி விடு! ஸரியா போகும்." என்று நகர தொடங்கினாள். அவன் புண்படும்படி தாக்கபட்டது ஒரு நொடி முகத்தில் தெளிவாக தெரிந்து, முகமாற்றத்தை உடனே சாதாரணமாக்கிகொண்டு, " இதோ பார்! போகாத! நான் சொல்றேன் போகாத! உனுக்கு எதுனா வந்த்சுனா தெரியும்", என்று கையை பிடித்து தடுக்க, " விடு கய்ய, தொடாத என்னெ." கையை உதறி அவன் மேலே சொன்னது காதில் விழாதது போல் சென்றாள்.

திகைத்து போனவன்போல் சிறிது நேரம் அவள் போவதையே பார்த்து கொண்டிருந்தவன், திடீரென கோபம் கொண்டு தரையிலிருந்து காரைகட்டிகளை எடுத்து, "ஒரு நாளில்ல ஒரு நா எரிக்கதாண்டி போறேன் ஒன்ன, பேச்சா பேசர தேவ்டியா!" , என்று அவள்பால் எறிந்தான். சாலையை கடந்து கொண்டிருந்த அவளை தவிர்த்து, ஓடிக்கொண்டிருந்த காரினடியில் நோக்கமற்று சென்றன.

"தேவ்டியா! இவ தொழில் பண்ணினு இருந்தா நான் பாத்துட்டே இருக்கணுமா! மொகம் வெந்து போச்சாம், தொழில் பண்ண முடியலன்னு பாக்கறா! அன்னிக்கே எரிச்சிருக்கணும் இவளெ!" மரத்தடி செருப்பு தைப்பவர்களும், கஞ்சா புகைப்பவர்களும், இப்பொழுதுதான் கவனத்திற்கு வந்தது போல் பார்த்துவிட்டு, வசனம் கேட்பதை தொடர்ந்தனர். அவள் தொலைவில் எதுவும் நடவாதது போல் குப்பை மூட்டையுடன் போய் கொண்டிருந்தாள். அவனுக்கு குளிர்சியையும் மீறி வியர்த்தது.

********** *********** *********

அனிச்சை செயலாய் இன்னொரு டீ சொன்னேன். பசி வயிற்றில் அமிலமாய் சுரந்து கொண்டிருந்தது. டீயும், சிகரெட்டும் அதை இன்னும் எரிய வைக்க போகிறது. சாலை முனையில் உள்ள தர்ஷினியில் பசியை தீர்த்துகொள்ள முடியும் என்றாலும், டீயை தவிர வேறு எதுவும் உள்ளே போகும் சாத்தியமில்லை. பசியை விட தலைக்குள்ளும், காலிலும் பூரான் ஓடுவது போன்ற இருப்புகொள்ளாமை பெஞ்சில் உட்கார்ந்தபடி காத்துகொண்டிருப்பதை பெரும் சித்ரவதையாய் ஆக்கிகொண்டிருந்தது. தூரத்தில் நின்றிருந்த கான்ஸ்டபிளுக்கு, சூழலுக்கு பொருந்தாமல் நான் இங்கே உட்கார்ந்திருப்பதன் காரணம் புரியும் என்றாலும் ஏனோ என்னை அணுகவில்லை. அவர் கடமையின் காரணமாக நிற்கிறாரா, மாமுலுக்காக நிற்கிறாரா என்று தெரியவில்லை. முருகன் என்ற காரணபெயரால் அழைக்கப்படும் சிறுவன் வரும் வழியாய் தெரியவில்லை. என்னை போலவே சாலையின் எதிர்பக்கம் காத்திருந்த இருவர் பீடிபற்ற வைப்பதை பார்த்து, தன்னிச்சையாய் சிகரெட் பாக்கெட்டை எடுத்தேன். டீ வந்தது.

அவன் என்னை பார்த்து "நமஸ்காரா ஸார்!" என்றான். நான் கண்டுகொள்ளவில்லை.

"ஒந்து பன்னு அரதா டீ கொடிரீ ஸ்வாமி."

கடைக்காரன் காதில் விழாதது போல் சில்லரை எண்ணிகொண்டிருந்தான். புது ஹிந்தி பாடல் ஒன்று இரைச்சலாய் அலறிகொண்டிருந்தது. இவன் சொன்னதையே மீண்டும் சொல்ல, தலைநிமிராமல் "காசு வச்சிருக்யா?" என்றான்.

"எல்லோஹுத்தேனே! கொட்தினி ஸ்வாமி, பன்னு மாத்ர கொடி."

"ஸும்மா கொடுக்கரதில்லே இங்கே, காசு கொடுத்து வாங்கு."

"ஆமெல கொட்தினி, நம்பிக்கெ இல்லுவா?"

" ஏ...ஹோகப்பா, ஸும்னே தொந்த்ரோ கொட்தாயிதானே...போ..போ.. இங்கே ஒண்ணும் இல்லே."

கடைக்காரனின் எரிச்சலில் மௌனமாகி, ஆயினும் நகாராமல் சுற்றிலும் பரிதாப பார்வையை படரவிட்டான். நான் திரும்பி முருகன் வருகிறானா என்று பார்தேன். கடைக்காரன் அவன் இருப்பை கவனிக்காமல் முடிந்திருந்த கேஸட்டை மாற்றி போட்டான். எதிர் பெஞ்சில் உட்கார்ந்திருந்த மூன்று பேர் அவனை பார்த்து கொண்டிருந்தனர். கருப்பாக இருந்தவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும். நடுவில் பிரதானமாய் தெரியும் மீசையுடன் அமர்ந்திருந்தவன் நல்ல போதையில் இருப்பதை, தொடங்கியிருந்த பாடலுக்கு அவன் உடல் முழுவதையும் ஆட்டி தாளம் போடும் விதம் சொன்னது.

"ஏனு பேக்கு?" புருவத்தை உயர்த்தி தாளத்தை நிறுத்தாமல் கேட்டான்.

"பன்னு, டீ ஹேளி ஸார்" என்றான் பணிவான சிரிப்புடன்.

"நனகொந்து கெலஸ மாடுத்தியா? ஹேளுத்தினி." (எனக்கொரு வேலை செய்கிறாயா? சொல்கிறேன்.)

"ஹேளி ஸார்."

குரல் உயர்த்தி, ஏற்ற இறக்கமாய் நடிப்புடன், அவன் தன் வட்டார கன்னடத்தில் சொன்னது இவனுக்கு புரியவில்லை. சொல்லிவிட்டு குதிரைக்கு புரை ஏறியது போல் தலையை ஆட்டி ஆட்டி சிரித்தான். மற்ற இருவரும் தங்கள் கடமை போல் அவனுடன் சிரித்தனர். சிரித்ததில் அவர்களும் போதையிலிருப்பது தெரிந்தது. கடைக்காரன் கவனிக்கவில்லை.

"கொத்தாகில்லா ஸார்." (புரியவில்லை.)

மீண்டும் அதே போல ஏதோ சொல்லி திரும்பவும் சிரித்தான். என்ன செய்வதென்று விளங்காமல் அவர்களை பார்த்தபடி நின்றிருந்தான். தமிழன் போல் இருந்தவன் `இவனிடம் போய் கேட்கிறாயே' என்பதுபோல் தலையிலடித்து, 'போ!போ!' என்று சைகை செய்தான். போகவில்லை.

இரு மாநிற இளைஞர்கள் க்ரீஸ் எண்ணெய் படிந்த உடைகளுடன் உருதுவில் பேசியபடி வந்து, இவனை ஐயத்துடன் பார்த்தபடி, "தோ.. சாய்!" என்றான். விசாரித்த மீசை ஆசாமி பாட்டுக்கு உடலாட்டுவதில் மூழ்கியிருந்தான். இன்னும் சிறிது போதையேற்றினால் நடனமாடுவான் என்று தோன்றியது. எனது இருப்புகொள்ளாமை ஜுரம் தாக்குபிடிக்க முடியாத நிலைமைக்கு சென்றிருந்தது.

"அய்யா... பசிக்குது ஸ்வாமி! ஊட்டா மாடில்லா ஸார்....பசி தாங்க முடியலயே!" வயிற்றை பிடித்தபடி அடித்தொண்டையில் கத்தினான். கண்களில் அழுகைக்கு தயாராய் நீர் திரையிட்டிருந்தது.

"இன்னா பண்ரதுபா! என்கிட்டே கொடுக்கறதுக்கு ஒண்ணும் இல்லே." வந்தவர்களுக்கு தண்ணிர் வைத்தபடி சொன்னான். அவன் குத்துகாலிட்டு அமர்ந்து அழத்தயாரானான். "க்யா ஹ¤வா?" என்று உருது இளைஞன் விசாரித்தான்.

"அய்யோ.. பசிக்குது...நான் என்ன பண்ணுவேன், வயிறு நோகுதே..அம்மா...!" வார்த்தைகள் தெளிவற்று வெளிவராமல் உள்ளே போய், சத்தமற்ற அழுகையாய் பரிணமித்து, ஒரு எல்லையை தொட்டவுடன் பெரும் சத்தத்துடன் வெளிவந்தது. ஒரு பன்னிற்காக அழுவதை எப்படி விவரிப்பது? வந்த வேலைக்கு போக, தாராளமாய் என்னிடம் பணம் இருந்தது. என்னால் இவனுடைய பசியை தீர்த்துவைக்க முடியும்.

கடைக்காரன் வெளியே வந்து, "ஏய்... போடா! டெய்லி இதே பண்றே நீ, இன்னிக்கு கொடுக்கறதில்லே... போ!" கூஜாவிலிருந்து தண்ணீரை அவன் மேல் ஊற்றினான். விரட்டபட்ட ஆடு போல் சிறிது நகர்ந்தான்.

"அங்கே போ! அந்த பக்கம் போய் அளு! இங்கே கலீஜ் பண்ணாதே!" முழுசாய் நகற்றி அவனை பெஞ்சிற்கு பின்னால் இழுத்துவிட்ட பின்புதான் உள்ளே போனான். அழுக்கு வேட்டி விலகி அவன் உறுப்பு தெரிந்தது. முழங்கையில் தலை வைத்து, மண்ணில் படுத்த நிலையில், உடைந்த குரலில் குழப்பமான வார்த்தைகளால் அழுதுகொண்டிருந்தான்.

கடைக்காரன் இவன் தினமும் தரும் தொல்லை குறித்து, சிதைந்த ஹிந்தியில் உருது இளைஞர்களிடம் சொல்லிகொண்டிருந்தான். மூக்கை சிந்தி மடங்கியிருந்த கதவில் தடவி, ஒலியெழுப்பி கபம் துப்பிவிட்டு மீண்டும் அழுதான். கடையில் கூட்டம் சேர்ந்து, பல மொழிகள் கலந்த பேச்சு சத்தம், இன்னும் உற்சாகத்துடன் ஒலித்துகொண்டிருந்த பாடலுடன் கேட்டது. கொஞ்சம் கரிசனத்துடன் விசாரித்த உருது இளைஞர்களும் போய்விட்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் பயனற்ற அழுகை என்பது புரிந்தோ அல்லது அழ தெம்பு இல்லாமலோ, அழுவதை நிறுத்தி தரையில் கோடு போட்டுகொண்டிருந்தான். என்னை பார்த்தான். அவன் சிரிக்க முயற்சிப்பானோ என்று பார்வையை தாழ்தினேன். நிமிர்ந்த போது கோடு போட்ட குச்சியை வைத்தே பல் குத்தியபடி, பார்வையை சுழற்றியவன், மீசை ஆசாமியின் கால்சட்டை பையிலிருந்து எப்போழுதும் விழுந்துவிடும் நிலையிலிருந்த பர்ஸை பார்பதை நானும் பார்தேன். எதிர்பக்கம் காத்துகொண்டிருந்த இருவரும் அவசரமாய் பீடியை அணைத்துவிட்டு எழுந்திருப்பதை பார்த்து, நானும் உஷாராகி முருகன் வந்துவிட்டிருப்பதை அறிந்தேன்.


******** ********* ********


தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் பனி தெரிந்தது. நடப்பதற்கும் ஆளற்று வெறிச்சோடிய சாலையில், தன் வர்கத்தை சேர்ந்த அவனைவிட இளையவன் ஒருவனுடன், சாவகாசமாய் வந்து கொண்டிருந்தான்.

"காபா கட மாத்றி யார்ரா ஷீக் குடுக்கறான்! குளிர்லே எப்டி உள்ளெ போச்சு! நாளிக்கு இப்டியே சிவாஜி நகர் போலாம், அங்க காட்றன் பார்."

உடலை சுற்றியிருந்த பழந்துணிகள் போதாதென்றாலும், மிதப்பில் குளிர் தெரியவில்லை. வேண்டுமென்றே முதுகில் எடை இருப்பது போல் கொஞ்சம் குனிந்து, கூட்டத்தை விலக்கி வருவது போன்ற குழம்பிய நடையில் வந்தனர்.

"ஆமா, ஏதுரா காசு உனுக்கு?"

"அப்டி கேளு, அதாண்டா.. காசு வரும் .. போகும்னு வள்ளுவர் சொல்லிகிறார் தெரிமா! தெவ்டியாபசங்க! சில தொறக்கவிடமாட்டேன்றான். பதினஞ்சாம் தேதி ஊர்வலன்னு எழுதி போட்டுக்கரான் பார்!"

"லாட்ரி எதுனா வுளுந்த்சா?"

"லாட்ரி! ஆமா லாட்ரிதான் வுளுந்த்சு!" என்று அட்டகாசமாய் வலிந்து கொண்டுவந்த போதை சிரிப்பு சிரித்து, விழப்போவது போல் போக்குகாட்டி, தெருமுக்கு திரும்பியவனின் சிரிப்பு நொடியில் உறைந்தது. மீசை ஆசாமி அதே சகாக்களுடன் நின்றிருந்தான். அவசரமாய் திரும்பும் முன் பார்த்துவிட்டிருந்தார்கள். சிரிப்பு சத்தம் முன்னமே கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.

"என்னாச்சு?"

"ஜல்தி வா. இப்டி போய்டலாம்."

"ஏன்? என்னாச்சு?"

ஓடத்துவங்கினான். ஆனால் அவர்களின் வலுவான ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் அகப்பட்டு, கால் தடுக்கபட்டு தாறுமாறாக சாலையில் விழுந்தான்.

"எல்லி ஹோகுத்தியா... நன் மகனே! நன் கை நல்லி ஆட்டா ஆடுத்தியா!" வயிற்றில் மிதித்தான். தடுத்த கைகளை பற்றி, மிக சாதாரணமாக அவனை தூக்கி, மீண்டும் கீழே போட்டு மிதித்தான். நிதானமான ஆர்வத்துடன், அவன் கைகளை அழுத்தி கொண்டு, தேர்ந்தெடுத்த இடத்தில் மிதித்தான். கூட வந்த இளையவயதினனை காணவில்லை.

"இல்லா ஸார், நானில்லா...!" அரைகுறையான கதறல்கள் விழுந்த அடிகளில் கரைந்தன. அவனை மீண்டும் தூக்கி நிறுத்தி, முரட்டுதனமாய் முகத்திலடித்து, வாசனையை உணர்ந்து, "குடிதுபிட்டு பந்திதானே, காஸு நின் அம்மனா கொட்டது!". போதையையும் மீறி பல இடங்களில் வலி தெரிந்தது.

"தமிள்காரன் மானத்த வாங்க வந்திரிக்கியே, அவ்ளோதான் நீ! கவ்டா போலீஸ்ல விடாத போமாட்டான்!" கூடவந்த தமிழன் சொன்னான். மூன்றாமவன் உங்களை போல வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்தான்.

அவன் தப்பிப்பதை மறந்து அடிகளை ஏற்றுகொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தான். தொடர்ந்து விழுந்துகொண்டிருந்த அடிகளை தடுக்க கூட முயலாமல் சூழ்நிலைக்கு தன்னை முழுமையாய் ஒப்படைத்திருந்தான். கண்கள் செருகி அப்படியே தூங்கவிடத் தோன்றியது. கௌடா விட்டால்தானே. அம்மாவின் நினைவு வந்தது. அப்பா ராயப்பன் செயலற்றுபோய் பார்த்து கொண்டிருக்க, தங்கராசு அம்மாவை நடு ரோட்டில் போட்டு மிதித்து கொண்டிருந்தான். பாலிஸ்டர் வேஷ்டி விலகும்படி தங்கராசு புல்லட்டிலிருந்து இறங்கும் காட்சி மனதில் தோன்றும் போதெல்லாம், எத்தனை முறை அவனை போட்டுதள்ளுவதை ஒத்திகை பார்த்திருக்கிறான். இந்த கௌடாவையாவது போட்டுதள்ளினால் என்ன? மனம் விரிவாகி, பெரும் சக்தி நிரம்பியது போல உணர்ந்தான். தன்னை இயல்புக்கு கொண்டு வந்து நிதானமாய் புலன்களை கூராக்கியபோது அடிகள் விழுவது நின்றிருப்பது தெரிந்தது. பேச்சு சத்தம் கேட்டது. அவள்தான்! முன் அனுபவித்தறியாத உணர்வு உடல் முழுவதும் அலையென பரவகண்டான். எப்போது, எப்படி இங்கு வந்தாள் என்று ஊகிக்க முடியவில்லை. மேகங்கள் விலகி திடீரென பெய்யும் வெயில் போல, அவள் அங்கே தோன்றியிருக்க கூடுமோவென எண்ண தோன்றியது.

கௌடா ஏதோ சத்தமாய் சொல்லிகொண்டிருந்தான். அவள் தமிழில் பதில் சொல்லிகொண்டிருப்பதால் கௌடாவிற்கு எரிச்சல் கிளம்புவதை உணர்ந்து தமிழன் அவளுக்கு விளக்க தொடங்கினான்.

"இப்ப இன்னா பண்ணணுன்றான்?" அவன் மெதுவாய் நிமிர்ந்து அவளை பார்த்தான். இதுவரை அவன் பார்த்திராத ஒரு பொலிவில் தெரிந்தாள். ஆழ்ந்த உறக்கத்திற்கு பின் விழித்து, குளித்து வந்தது போன்ற தெளிவுடன் அவள் கண்கள். அவள் முகத்தில் சிறு சிறு சகதிகட்டிகள் போன்ற அந்த வடுக்கள் இல்லை.

"காசக்கொடுத்தா விட்ருவான். இவன் கிட்டக்க எங்க காசு, அதான் எல்லா குடிச்சு தின்னுட்டு வந்திருக்கிறானே."

அவள் மார்பிலிருந்து பணமெடுத்து, "எவ்ளோ?" என்றாள்.

(1994-95இல் எழுதபட்டு, சுபமங்களாவிற்கு அனுப்பபட்டு வெளிவரவில்லை. பின் அண்மையில் உயிர்மைக்கு அனுப்பி 'என்ன முடிவு எடுக்கப் பட்டது' என்று தெரியாத நிலையில் வேறு காரணங்களால் திரும்ப பெற்றது. (சில திருத்தங்களுடன் தட்டச்சு செய்யபட்டு) பதிவுகள் இணைய இதழிலும், பின் அநாதையின் வலைப்பதிவிலும் வெளியானது. இங்கே யூனிகோடில்! 10 ஆண்டுகளாக கதையை பத்திரப்படுத்த முக்கிய காரணம், தனது வாசிப்பாக ராஜன்குறை சொன்ன கருத்து. அதற்கு அவருக்கு நன்றி!)

Post a Comment

---------------------------------------

Saturday, February 12, 2005

நிர்பந்திக்கபட்ட மனப்பதிவுகள்.

நமது அரசியல் மற்றும் இலக்கிய சூழலை புரிந்து கொள்ள உதவும் வகையில் சில தகவல்களையும் குறிப்புகளையும் என் மேல் நிர்பந்திக்க பட்ட மனப்பதிவுகளாய் தருகிறேன்.

முதலில் 'காதல்' திரைப்படம் குறித்து நான் எழுதிய 1 + 1 = 2 பதிவுகளை ஒன்று சேர்த்து, சில வார்த்தைகளை மாற்றி, ஓரிரு வரிகளை சேர்த்து தட்ஸ்டமில்.காமிற்கு அனுப்பினேன். அனுப்பும் போதே கொஞ்சம் சந்தேகம்தான். அதனால் 'வெளியிடவில்லையெனில் தகவல் சொல்லவும்' என்று கேட்டிருந்தேன். வெளியும் வராமல், தகவலும் வராமல் மேலும் இரண்டு மின்னஞ்சல் அனுப்பி விசாரித்து பார்த்து, அதற்கும் பதில் வராமல், அவர்கள் வெளியிடப் போவதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.

என் கட்டுரையில் 'பார்பனியம்' பற்றி கொஞ்சம் பேசியிருப்பினும் அது ஒரு பிரச்சனையாக இருக்க வாய்பில்லை, தட்ஸ்டமில்.காமில் பார்பனியம் குறித்து பேசும், இன்னும் சில தீவிர தமிழ் தேசிய ஆக்கங்கள் கூட வருகிறது. அதனால் மிக லேசாய் மனுதர்மம் போன்றவற்றை தொட்டு பேசியிருப்பதனால் வெளிவராமல் போக வாய்பில்லை. தேவர் ஜாதியை முன்வைத்த விமர்சனத்தினாலேயே வெளியிடப் படவில்லை என்று தெளிவாகவே தெரிகிறது. இன்று இது போன்ற விஷயங்களை பேசுவதுதான் கஷ்டமாக இருக்கிறது. இணையத்தில் இருக்கும் ஒரு இதழிற்கு தேவர்களிடமிருந்து வன்மிரட்டல் இருக்க வாய்பில்லை. தட்ஸ்டமில்.காம் தானாக கொண்டிருக்கும் சார்பினாலேயே வெளியிடவில்லை என்றே எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதே நேரம் தேவர் ஜாதியை சேர்ந்த ஒரு தமிழ் தேசியவாதிக்கு அது தொடர்ந்து இடமளிப்பதை காணலாம்.

இது இப்படி இருக்க இதை திண்ணை முன்பு (இன்றும்) என்னை தடை செய்தததுடன் ஒப்பிட முடியாது. ஏன் என்பதை திண்ணை விவகாரம் குறித்து பேசப்போகும் பதிவில் பார்க்கலாம்.

பதிவுகளுக்கு அதே கட்டுரையை அனுப்பி அது பதிவுகளில் வெளி வந்துள்ளது. தட்ஸ்டமில்.காமில் வெளியிட படவில்லை என்பதை அறிந்தே நண்பர் கிரிதரன் இதை வெளியிட்டுள்ளார். இதற்கு முன் திண்ணையால் அநியாயமாய் பொய் குற்றம் சாட்டப்பட்டு தடை செய்ய பட்ட என் கட்டுரையையும் அவர் வெளியிட்டதையும் மனதில் கொள்ளவேண்டும். கருத்து சுதந்திரத்திற்கு பதிவுகள் ஆசிரியர் தரும் இடம் நம்பிக்கையளிப்பதாய் உள்ளது. அவருக்கு என் நன்றிகள்.

அடுத்து ஆபிதீன் விவகாரம். கிட்டதட்ட இரண்டு வருடங்கள் முன்பு ஆபிதீனின் இணைய தளத்தை முதன் முதலில் பார்தேன். அதற்கு முன்னமே இந்த (சாரு திருடிய) விவகாரம் தெரியும் என்றாலும், என் அலுவலக கணணியின் ஃபாண்ட் பிரச்சனையால் பல மாதங்கள் கழித்தே பார்க்க முடிந்தது. அதற்கு பிறகு பதிவுகள் விவாதம் என்று தொடர்ந்து இந்த விவகாரத்துடன் எனக்கு தொடர்பிருக்கிறது. ஆபிதீனின் இணையதளத்தை பார்த்த அன்று ஏற்பட்ட கோபத்திற்கும், மன சஞ்சலத்திற்கும் அளவே கிடையாது. அதற்கு பிறகு சாருவிற்கு இரண்டு முறை -முதல் முறை கோபமாகவும், அடுத்த முறை கிண்டலாகவும்- இரண்டு மின்னஞ்சல் எழுதியிருக்கிறேன். இரண்டையும் சாரு கண்டு கொள்ளவில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை.

சாரு குறித்து எழுதிய பதிவு ஏற்கனவே பத்ரியின் பதிவிற்கு அளித்த பின்னுட்டத்தின் திருத்திய வடிவம் மட்டுமே. விஷயம் சாருவின் எழுத்து பற்றியது என்றாலும், சாருவின் எழுத்தை பற்றி பேசும்போது ஆபிதீனை பற்றி பேசாமலிருக்க முடியாது என்று நினைத்ததனாலேயே அது குறித்தும் எழுதினேன். பத்ரி பதிவில் அது விடுபட்டு போக மீண்டும் ஞாபகமாய் அது குறித்து எழுதி உள்ளிட்டேன். என் வாசிப்பின் அடிப்படையில் என் பார்வையை இப்படித்தான் முன்வைக்க முடியும்.

சதயஜித் ரேயின் 'சாருலதா'வை, காம்ரேட் சாரு மஜும்தாரை புகழ்ந்தால் கூட கோபம் வருமளவிற்கு ஆபிதீனிடம் நியாயமான காரணங்கள் இருக்கலாம். அதன் தீவிரம் மற்றவரிடமும் இருக்க வேண்டும் என்ற அசட்டுத்தனமான வெறி, அவருள் இருக்கும் எழுத்தாளனை காலி பண்ணிவிடும் என்பதை அவர் அறிந்து கொள்வது நல்லது.

ரூமியின் பதிவின் மறுமொழியில் அவர் என்னை கடுமையாய் வசைப்பாடி (நான்தான் என்று தெளிவாய் தெரியும் விதத்தில் அதே நேரம் என் பெயரை சொல்லாமல் எழுதி) எழுதியிருந்ததை படித்த மறுநொடி, சாருநிவேதிதாவின் 'பேன்ஸி பனியன்கள்' நாவலில் ஒரு பாத்திரமாய் தொடங்கி பல விவாதங்களினூடே எனக்குள் எழும்பியிருந்த ஆபிதீன் குறித்த பிம்பம் நொறுங்கி சாக்கடையில் விழுந்தது. அதை படித்த உடனேயே தூக்கத்தை துறந்து பதிலடி கொடுக்க கை பரபரத்தது.

சென்ற வருடத்தின் இறுதியில் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் தமிழ் இணையம் பக்கமே வராமல், தண்ணி, இசை, இணைய (ஆங்கில) இலக்கியம், சமையல் ஓயாமல் தினமும் 'கில்லி' என்ற அற்புதமான திரைப்படம் என்று இருந்த ஒரு அற்புத குட்டி பூர்ஷ்வா வாழ்க்கையின் போது இது போன்ற பரபரக்கும் உந்துதல்கள் குறித்து மிகவும் யோசித்திருந்தேன். (ஏற்கனவே பெயரிலியும், கார்திக்கும் இது போன்ற அஞ்ஞாத வாசத்திற்கு பிறகு தோன்றும் ஞானம் குறித்து எழுதியவைகள் இருக்கும்போது இதை அதிகம் வளர்த்த தேவையில்லை. கிட்டதட்ட அது போன்றவையே எனக்கு ஏற்பட்ட ஞானங்களும்.) ஆனால் தனித்திருந்து அடையும் முதிர்சியையும், முடிவுகளையும் பின் செயலில் காட்டுவது மிகவும் சவாலாக இருக்கிறது. செயல்பாட்டிலும் காட்டகூடிய முதிர்ச்சியை அடைந்துவிட்டதாய் நினைத்தே இந்த வலைப்பதிவை தொடங்கினேன். ஆனால் அது மிக அற்பமான முறையில் என் மீது அன்பு காட்டிய அநாதை ஆனந்தனுடனான சண்டையில் வெளிப்பட்ட போது எங்கேயும் போய் சேரவில்லை என்று உணர்ந்தேன். கை பரபரத்த அடுத்த வினாடி தட்ட தொடங்கியிருந்தால், அனாதைக்கு எழுதியதை விட பலமடங்கு தீவிரத்துடன் ஆபிதீனுக்கு பதிலடி கிடைத்திருக்கும். மிகவும் கஷ்டப்பட்டு தியானம் போன்ற பயிற்சியின் பின், நிதானத்திற்கு மனதை கொண்டுவந்து நாளை எழுதுவது என்ற முடிவுடன் தூங்க சென்றேன்.

நாகூர் ரூமி ஆபிதீன் எழுதிய தனிப்பட்ட கடிதத்தையே வெளியிட்டதாக சொல்லி தொடர்ந்து இறுதியில் பதிவையே நீக்கிவிட்ட நிகழ்வுகளுக்கு பின், முதன் முறையாய் பதிலடி கொடுக்கும் என் உந்துதலை கட்டுபடுத்தி வென்று, நான் எழுத நினைத்த விரிவான பதிலை எழுதவில்லை, அதற்கான தேவையும் இல்லை என்ற முடிவிற்கு வந்தேன். அதை கடந்த ஒரு நாள் பிறகான மனப்பதிவே இது.

ஆபிதீனின் வசைக்கடிதம் நீக்கப் பட்டுவிட்டாலும் அது பலரால் படிக்க பட்டிருக்கிறது. அவர்கள் சாருவை முன்வைத்த என் பதிவை படித்து, ஆபிதீன் எழுதியதன் திரித்தல்களையும், அதில் வெளிப்படும் நியாயமற்ற கோபத்தையும், நான் சாருவை கடுமையாய் விமர்சித்திருப்பதையும் புரிந்து கொள்ளலாம். நான் விளக்க தேவையில்லை.

எனக்கு இங்கே சுவாரசியம் அளிப்பது என்னவெனில் ஆபிதீன் ஒரு சாருவாக மாறுவதுதான். என்னை பொறுத்தவரை, சாரு ஆபிதீனிடமிருந்து கதையை தன் பெயரில் போட்டு வெளியிட்டது ஒரு சாதாரண நிகழ்வு. வாழ்க்கையில் இப்படி ஒரு தவறை ஒருவர் செய்ய நேர்வதல்ல எனக்கு பிரச்சனை. அதற்கு பிறகான விளைவுகளை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதில்தான் சாருவின் கயமைத்தனம் வெளிப்படுகிறது. இப்போது அதே விதத்தில் ஆபிதீன் இந்த நிகழ்வை எதிர்கொள்கிறார்.

தனிப்பட்ட கடிதத்தில் என்னை திட்டுவது குறித்து சொல்ல எதுவும் இல்லை. அதை நாகூர் ரூமி (தவறுதலாகவே கூட) வெளியிட்ட பின், தாக்கப்பட்ட என்னிடம் அதற்கு விளக்கம் அளிப்பதுதான் நேர்மையாய் இருந்திருக்கும். சாருவின் பழைய நண்பரிடம் அதை எதிர்பார்பது அதிகமோ என்னவோ? ஆக ஆபிதீனின் தார்மீக கோபத்தில், திமுக போன்ற கட்சியில் ஸ்டாலினுக்காக ஒதுக்கப்படும் ஒரு அரசியல் தலையிடம் வெளிபடும் கோபத்தின் தார்மீகத்தை விட அதிகமாக எதுவும் இல்லை என்று தெரிகிறது. சாரு இவர் கதையை திருடாவிட்டால், அல்லது வேறு ஒருவர் கதையை திருடியிருந்தால், இந்த அளவு தார்மீக கோபம் ஆபிதீனுக்கு இருந்திருக்காது என்று புரிகிறது. இந்த புரிதல் வந்ததும் நல்லதற்கே!

இது இப்படி இருக்க, விஜய் போன்றவ்ர்களும் மற்றவர்களும் இதை முன்வைத்து இலக்கியவாதிகளை அதன் விளைவாய் இலக்கியத்தையும் போட்டு தாக்குவது எனக்கு ஒப்புதலில்லை. இலக்கியவாதியின் போலித்தனத்தையோ, மற்ற நாம் எதிர்கும் தன்மையை வைத்தோ இலக்கியத்தை நிராகரிக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். இதன் பொருள் சாரு சொல்வது போல், 'எழுத்தையும், எழுத்தாளனையும்' பார்ட் பார்டாக கழட்டி தனியே பார்க்க வேண்டும் என்பதல்ல. எல்லாவற்றையும் எல்லாவற்றோடும் பொருத்தியே பார்க்க முடியும். அப்படி பார்த்த பின் ஒரு வாசிப்பில் கிடைக்க கூடிய எந்த உலகையும் நாம் நிராகரிக்க முடியாது என்பதே. வழக்கம் போல இது குறித்து விளக்கமாய் என் கருத்தை முன் வைப்பதை பிற்காலத்திற்கு தள்ளி போடுகிறேன்.

அதற்கு முன் ஏறகனவே சொன்னது "சாருநிவேதிதா என்ற மனிதன் சுய வாழ்க்கையில் செய்யும் சமரசங்கள், போலித்தனங்கள், நண்பர்களுக்கான துரோகங்கள் இதை மீறி இந்த முக்கியத்துவம் அப்படியே இருப்பதாக தெரிகிறது."

அதே போல இப்போது ஆபிதீன் வெளிகாட்டிய (அல்லது ரூமியால் தவறுதலாக வெளிவந்த) அற்பத்தனத்தை மீறி, ஆபிதீனின் எழுதிற்கான முக்கியத்துவம் அப்படியே இருகிறது. அதைவிட முக்கியமாய் மீண்டும் நான் சொல்வது, நான் மிகவும் எதிர்க்கும் ஜெயமோகனின் எழுத்தின் முக்கியத்துவத்தையும், என் அரசியல் பார்வையை முன் வைத்து நிராகரிக்க முடியாது.

Post a Comment

---------------------------------------

Thursday, February 10, 2005

எதிர்கொள்ளும் மரம்.

குளிர் காலத்தில் இலைகள் எல்லாம் உதிர்ந்து போய்
ஓவியம் போலத்தான் காண்பித்துக் கொள்கிறது.
பனி கொட்டியிருந்தால்
'கலைத்தன்மை' இன்னும் கூடிவிடக் கூடும்
என்று வழக்கம் போலத் தோன்றுகிறது.
பெய்த பின் வேறு தோன்றலாம்!
நிலவின் ஏதாவதொரு பிறை
அதனிடையில்
தென்படக் கூடுமோவென தினமும் கவனிக்கிறேன்.
வானத்தின் பிண்ணணியிலாவது பார்க்க முடிகிறது.
வளர்சிதை மாற்றத்தில்
இலைகள் ஜனித்து
சூரிய ஒளியில்
அதன் மெய்மை
உயிர்ப்பிக்கும் வரை
காத்திருக்கிறேன்
அதனுடன் உறவாட!

Post a Comment

---------------------------------------

Tuesday, February 01, 2005

காதல் + கல்யாணம் - உறவு = ?

எனது காதல் குறித்த கடந்த பதிவு, படம் பார்த்த மறுதினம் அவசரத்தில் எழுதப்பட்டது. மூன்று நாட்கள் முன்பு தற்போக்கு சிந்தனையில் ஏதோ பொறிதட்ட, படத்தை இறக்கி, கவனமாய் கடைசி சில காட்சிகளை பார்த்த பிறகு, நான் எழுதியதில் உள்ள ஒரு தவறு தெரிந்தது. (இதற்கு முன் முதல் பாதி படத்தை ஒரு பத்து முறையாவது இறக்கி பாத்திருபேன். ) அது குறித்து பேசும் முன், இப்போதும் காதலை முன்வைத்து இப்படி ஒரு படம் வருவதை, ஹிட்டாவதை ஆரோக்கியமானதாகவும், கலையம்சம் என்பதாக படம் குறித்து சொன்னவைகளையும் மீண்டும் வலியுறுத்தி கொள்கிறேன்.

கடந்த பதிவு படம் குறித்த விமர்சனமாக எழுதப்படவில்லை. படம் குறித்து பலர் நல்லவிதமாய் எழுதியுள்ளதை பொதுவாய் ஒப்புகொண்டு எழுதப்பட்டது. படம் காதல் குறித்தது எனினும், கதை காதலோடு கல்யாணம் என்ற சமூக கருத்தாக்கத்தையும் யதார்த்தமாய் தொட்டுசெல்கிறது. இதற்கு மாறாக உறவு, அதாவது பாலியல் உறவு என்பது குறித்து படக்கதை யதார்தத்திற்கு முரணாக மௌனம் சாதிக்கிறது.

எண்ணிக்கையில் அடக்கவியலாத வகைகளில் பேசப்பட்டும், இன்னும் இந்த காதல் என்பது குறித்து குண்ட்ஸாக கூட வரையருக்க முடிவதில்லை. திருமணமும், பாலியல் உறவும் மிக தெளிவான வார்த்தைகளில் விளக்க கூடியவை, வரையரைக்குள் அடங்க கூடியவை. அதற்கு பின் எந்த கற்பித தன்மையும் இல்லை. இவை இரண்டுடன் மிக நெருங்கிய தொடர்புடையதெனினும், இவற்றின் அடிப்படையில் மட்டும் காதல் என்ற ரொமாண்டிக் கற்பிதத்தை விளக்க இயலவில்லை. குறைந்த படசம் விளக்க நமக்கு விருப்பமில்லை. இது குறித்து விவாதிப்பதல்ல இப்போதய நோக்கம்.

கடந்த பதிவில் இப்படி எழுதியிருந்தேன்.

"'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. இந்த படத்தில் (தெளிவாக அடையாளங்கள் சொல்லபடவில்லை எனினும்) ஒரிரு நாள் சேர்ந்து வாழ்கிறார்கள். பார்போம்!"

படம், நம்ம கதாநாயகி/நாயகன் ஓடிவந்து சென்னையில் வீடு தேடும் காட்சிகளில், சமூகத்தில் கல்யாணம் என்ற கருத்தாக்கத்திற்கு வைத்திருக்கும் அதீதமான மரியாதையை காட்சிபடுத்துகிறது. ஆனால் அதை ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே தூக்கிபிடிக்கிறது. வீட்டை விட்டு ஒடி வந்து இன்னும் பெண் கழுத்தில் தாலி ஏறாத நிலையில், வாடகைக்கு வீடு கிடைப்பது மட்டுமல்ல பிரச்சனை. காதலர்களாய் இருக்கும்வரை மேன்ஷன் வாலிபர்கள் 'ஃபிகரை தள்ளி கொண்டு வந்ததாய்' பார்கிறார்கள். துப்பறிய முயலுகிறார்கள். கல்யாணம் என்ற ஓற்றை நிகழ்வு அவர்கள் பார்வையை தலை கீழாக்குகிறது. அதுவரை 'சான்ஸ் கிடைக்குமா' என்று நாக்கை தொங்க போட்டு ஆர்வம் காட்டுபவர்கள், ஒரு மஞ்சள் தாலி தெருவோர குட்டி கோவிலில் கட்டப்பட்ட உடன் 'ஸிஸ்டராக' பார்கின்றனர். இன்றைய திரைப்படங்களில் தாலியை தூக்கிகாட்டி கதாநாயகியை வசனம் பேச வைக்காவிட்டாலும், தாலி மகிமை இப்படி வேறு வகைகளில் பேசப்படுகிறது.

இதை படத்தின் மீதான விமர்சனமாக இதை சொல்லவில்லை. சமுதாய மதிப்பீடுகளை -அதுவும் பார்வையாளருக்கு பிரச்சனை உண்டு பண்ணாத உவப்பான மதிப்பீடுகளை - சற்று மிகைபடுத்தி, பார்வையாளரை நெகிழ வைப்பதாக, ஒரு வெகுஜன சினிமா பொதுவாய் செய்ய கூடியதுதான் இங்கே படமாகியிருக்கிறது.

என் நண்பர்கள் இருவர் (அதாவது கணவன் மனைவி அல்லது துணைவன் துணைவி) பதிவு திருமணம் செய்தவர்கள். ஆனால் (ஏதோ கொள்கை பிடிப்பாய்) தாலி கட்டி கொள்ளவில்லை. சென்னையில் 'டீஸன்டாய்' வீடு கிடைக்க அவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நேரடியாக 'கல்யாணம் ஆச்சுங்கறீங்க, தாலியில்லையே!' என்று கேட்பார்கள். அந்த வகையில் இந்த பிரச்சனை - இதை ஒரு பிரச்சனையாய் காண்பிக்காமல், தாலி ஏறியவுடன் மற்றவர்கள் காட்டும் பாசத்தை நெகிழவைப்பதாக கட்டமைத்து காட்டியிருப்பினும் - யதார்தத்துடன் காட்டபட்டுள்ளது. ஆனால் யதார்தத்திற்கு முரணாக கல்யாணம் ஆனவுடன் இயல்பாகவும் மரபாகவும் இறங்கவேண்டிய காரியம் குறித்து மட்டும் மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனம் தற்செயலானதாக தெரியவில்லை.

படத்தில் என்ன நடக்கிறது? முந்தய நாள் தாலி ஏறாத காரணத்தால் தங்க வீடு கிடைக்கவில்லை. இரவை தியேட்டரிலும், பஸ் பயணத்திலும் செலவழித்துவிட்டு, மறுநாள் காலை தோழன் ஏற்பாடு செய்த பணத்தில் பியூட்டி பார்லரில் அலங்காரம் செய்துகொண்டு, நடுரோட்டில் ஒரு கோவிலில் மாலை மாற்றி தாலி கட்டிகொண்டு, அதை ஒரு மேன்ஸன் மேட் பார்த்து, மேன்ஸனில் எல்லோரும் பணம் பிரித்து, 'ரிசப்ஷனுக்கு' ஏற்பாடு செய்து, பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, புதுவீட்டில் எவர்சில்வர் பாத்திரங்கள் ஜமுக்காளம் சகிதமாய் பால் காய்ச்சி குடியேறி . . . . . . இத்தனைக்கு பிறகு என்னய்யா நடக்கும்? இயல்பாக இருந்தாலும் சரி, அல்லது மரபு கலாச்சார ரீதியாகவும், வழக்கமான சினிமாத்தனமாக கூட என்ன நடக்க வேண்டும்? சாந்தி முகூர்த்தம் முதலிரவு என்று பல வார்த்தைகளால் அழைக்கபடும் ஜல்சாதானே!

இங்கேதான் அவ்வளவு யதார்த்தமாய் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சித்தரிக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட படம் பார்வையாளனை டபாய்கிறது. கதாநாயகன் இதற்கு பிறகு ஒரு வொர்க் ஷாப்பில் தனக்கு தெரிந்த மெகானிக் வேலைக்கு ( ஒரு மேன்சன்காரன் சிபாரிசு சொல்லி) போகிறான். அதாவது இரண்டு நாட்களாய் ஓயாத அலைச்சலில் இருப்பவர்களை, அன்றய தினம்தான் திருமணமானவர்களை ஒரு நல்ல சாப்பாடு போட்டு ஒய்வெடுத்து ஜல்ஸாவில் ஈடுபட உதவாமல் மொத்த மேன்சன் கூட்டம் போய்விட, யதார்த்தமாய் மறுநாள் ஏற்பாடு செய்து ஹீரோ போகவேண்டிய வேலைக்கு அன்றே போகிறான். கதாநாயகி வாசலில் குழாயடியில் குடம் நீரை தூக்க முடியாமல் தூக்கி கீழே போட்டு, முருகன் (ஹீரோ பேரு) ஸ்டோர்ஸ் பாத்திரத்தை செல்லமாய் சிணுக்கி சமைக்க தொடங்குகிறாள்.

இதற்கு நடுவில் மதுரையிலிருந்து ஓடிப்போன பெண்ணை தேடி துப்பறிந்து அவர் சித்தப்பா கோஷ்டி அடியாட்களுடன் கிளம்பி சென்னை வருகிறது. நல்ல வார்த்தை நைச்சியம் பேசி காதலர்களை மதுரைக்கு திரும்ப கூட்டி போகிறது. போகிற வழியெல்லாம், மதுரை போய் சேரும்வரையிலும் சேர்ந்த பின்னும் ஒரே வெளிச்சம். அதாவது காட்சிகள் பகலிலே நிகழ்கின்றன. இவ்வளவு துல்லியமாய் யதார்தத்தை காண்பித்த கதை சொல்லல் இடையில் ஒருநாள் இரவை முழுசாய் முழுங்கியிருப்பதை காணலாம்.

இப்படி ஒரு லாஜிக்கல் பிரச்சனையாக பார்க்காவிட்டால் கூட, கதை இயக்குனரின் முழு ஆளுகைக்கு உட்பட்டது. சித்தப்பா ஒரு நாள் தாமதமாய் தேடி வந்திருக்க முடியும். இயல்பாக நடந்திருக்க வேண்டிய முதலிரவு நடந்திருக்கும். எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும்போது இயக்குனருக்கு காதலர்கள் உறவு கொள்வது ஒப்புதலில்லை, குறைந்த பட்சம் அப்படி ஒரு காட்சியமைக்க மனசில்லை என்பதாகவே தெரிகிறது.

எவ்வளவு பெரிய வாய்ப்பை அவர் தவறவிட்டிருக்கிறார்! சேரனும், சரி பாலாஜி சக்திவேலும் சரி, யதார்த்தமாக சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற ஒரு செய்கையை, சினிமாவில் எந்த தற்செயல் தன்மையின்றி மிகவும் சுய நினைவுடன் தணிக்கை செய்திருப்பது குறித்து ரொம்பவே யோசிக்க வேண்டியுள்ளது.

உலகம் முழுமையும் எல்லா சமூகத்திற்கும் தனது இனமானத்தை மதிப்பீடு செய்யும் சமாச்சாரமாக பெண்களின் கற்பு திகழ்ந்து வருகிறது. மேற்கும், மேற்கின் தாக்கத்தில் மற்றவையும் இதில் மாற்றங்கள் கண்டிருப்பினும், நம் சூழலில் இந்த மதிப்பீடு, ஒரு 'வாழ்வா சாவா' கேள்வியாக பிரச்சனைகளை கிளப்பிவருகிறது. தலித்கள் மீதான பல கலவரங்கள்/தாக்குதல்களுக்கு இப்படி ஒரு பிண்ணணி பொதுவாக இருக்கிறது.

சமூகத்தின் மீதான கருத்தியல் வன்முறையில் முதலிடம் வகிக்கும் பார்பனியம் இது குறித்து ஏற்படுத்தியிருக்கும் கற்பிதங்களை உலகின் எந்த சமூகத்திலும் காணமுடியாது. இன்றைக்கும், திராவிட இயக்கத்தின் 70 ஆண்டுகளுக்கு மேலான பாதிப்பிற்கு பிறகும், தமிழ் சமூகத்தில் 'அய்யர் பொண்ணை தொட்டா விளங்காம' போய்விடும் நம்பிக்கை இருப்பதை கேட்கமுடியும். மனித இனம் சிந்திக்க தொடங்கியபின் உருவாக்கிய பிரதிகளில், மனவக்கிரத்தில் எதனுடனும் ஒப்பிடமுடியாத பிரதியாகிய மனுதர்மம் விலாவாரியாய் இது குறித்து பேசுகிறது. பார்பன பெண்ணை மற்றவர் தொடுவதன் பாவத்தன்மை குறித்து பேசும் போதே, மற்ற சமூகத்து பெண்கள் பார்பனனின் விந்தை 'வாங்கி கொள்ளும்' புண்ணியம் குறித்தும் பேசுகிறது. (கேரளாவில் இன்னும் அந்த வழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சுமதி ரூபன் 'மாயா' படம் குறித்து எழுதியதையும், இந்த கருத்தாக்கம் பேசப்படும் இன்னொரு இடமாக 'சம்ஸ்காரா' நாவலையும் பார்கலாம்.) மனுதர்மத்தின் பல சட்டங்கள் பார்பன பெண்களின் இந்த 'நெறி பிறழ்தலை' தடுப்பதை அடிப்படையாய் கொண்டிருப்பதை காணமுடியும். அம்பேத்கார் 'சாதிகளின் தோற்றம்' குறித்த நூலில், சதி போன்ற பழக்கங்கள் கூட இந்த (சாதிகளுக்குள்ளான ) அகவுறவை கட்டிகாப்பதை முன்வைத்தே தோன்றியவையாக தர்க்க ஆதரங்களுடன் நிகழ்த்தி காட்டுகிறார். மனு தர்மத்தை ஏற்று கொள்ளவில்லை என்று சொல்லி, அதற்கு எதிரானதாக ஜெயமோகன் போன்றவர் தூக்கி பிடிக்கும் கீதையிலேயே அர்ஜுனன் போருக்கு எதிரான முக்கிய காரணமாய் இதை கூறுகிறான். அதாவது போரினால் ஏற்படப் போகும் ஆண்களின் இறப்பினால், தன் குலபெண்கள் நெறி தவறி போய் *தர்மத்திற்கு* கேடு வரப் போவதை ஒரு முக்கிய காரணமாய் போர் புரிய மறுப்பதற்கு சொல்கிறான்.


இந்த நம்பிக்கைகளின் பாதிப்பு இன்றும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்கிறது. கலப்பு மணம் ஓரளவு பரவலான பின்னும் கூட, அய்யர் பொண்ணை சைட் அடிக்கவும், ஜொள் விடவும் தயாராயிருந்தும், 'கை வைத்தால்' ஏற்படும் 'பாவம்' குறித்த நம்பிக்கை உயிர்ப்புடன் தொடர்வதை அறியமுடியும். ஆனால் தமிழ் சினிமா இதை உடைத்திருக்கிறது. வேதம் புதிதில் கதாநாயகன் காலி பண்ணபட்டாலும், பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்தில் (எனக்கு தெரிந்து) முதல் முறையாக (கடைசியாகவும்?) இந்த 'புரட்சி' நடக்கிறது. (அரங்கற்றம் படத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை இத்தகையதாய் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை, அது ஒரு முக்கியமான படம் எனினும்.)

தேவர் என்ற ஜாதி பாலியல்ரீதியாக தலித் பெண்கள் மீது (அதன் பாதிப்பை அந்த சமூகத்தின் மீது) நிகழ்த்தும் வன்முறையை நேரடியாக திருநெல்வேலியில் பார்த்திருக்கிறேன். (90களில் தலித்களின் எதிர் தாக்குதலுக்கு பின் இது இல்லாமலாயிருப்பதாக அல்லது பெருமளவிற்கு குறைந்திருப்பதாகவே அறிகிறேன்.) ஆனால் ஒரு சினிமாவில் தேவர் பெண் தலித்தை காதலிப்பதையும், இறந்த பின் எரிந்துகொண்டிருக்கும் பிணத்தை உடன் கட்டையேறி ஒரு தலித் 'புணர்தல்' சைகைகள் செய்வதாலும், பாரதி கண்ணம்மா திரைப்படம் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் ஓட அனுமதிக்க படவில்லை.

இத்தனைக்கும் பாரதி கண்ணம்மா தேவர் என்ற அடையாளத்தை glorify செய்வதாகவே எடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாய் சொல்ல 'அய்யா தேவரய்யா' என்று கும்பிட்டபடி தலித்தான பார்திபன் பாடும் ஒரு பாட்டும், ஒரு கட்டத்தில் 'எவன் தேவன்?' என்ற கேள்வியை கேட்டு மாற்றி மாற்றி விஜயகுமார் 'தேவனு'க்கான இலக்கணமாய் அடுக்கும் வசனங்களை சொல்லலாம். அந்த வசனங்களை எழுதியவனை செருப்பை கழட்டி அடிக்க தோன்றும். அந்த அளவு ஜாதி பெருமை பேசும் வசனங்கள்!

கிராம யதார்தத்தை செல்லுலாயிடில், ரொமாண்டிஸிஸம் கலந்து, கொண்டு வந்த பாரதிராஜாவின் படங்களில் தேவர் அடையாளம் பெரிதுபடுத்த பட்டிருப்பினும், தேவர் அடையாளத்தை முழுமையாய் கொண்டாடும் விதமாய் தேவர்மகன் படமே முதலில் வெளிவந்தது. கதை தேவர்களின் அடையாளமான 'அறுவாள், வெட்டு குத்து' குறியீடுகளை எதிர்த்து எடுக்க பட்டதாய் காட்டிகொண்டாலும், அப்படி ஒரு நோக்கம் உணமையிலேயே கதைக்கு இருந்தாலும், படம் தேவர்களால் தங்கள் அடையாளமாய் பார்க்கப்பட்டது. தேவர் வீட்டு வைபவங்களில் மீண்டும், மீண்டும் அந்த படம் காட்டப்பட்டது. தேவர் சாதி சங்கத்தவர்கள் கமலை போய் பார்த்தார்கள். சமூகத்தில் தேவர்களின் சாதி பெருமையை, அதன் மூலமாக சாதிவெறியை தூண்டி எரியவிடுவதாகவே இருந்தது. இதன் பிண்ணணியிலேயே கிருஷ்ணசாமியின் 'சண்டியர்' படத்திற்கான எதிர்ப்பை பார்க்கவேண்டும். அதை பிறகு இன்னொரு பதிவில் பார்போம்.

இதற்கு பின் வந்த பாரதிகண்ணம்மா தேவர் மகனின் அணுகுமுறையையே (தேவன் என்ற ஜாதி அடையாளத்தை தூக்கி பிடித்து கொண்டாடிவிட்டு, அவர்களிடம் உள்ள குறையாய் ஜாதிபிரச்சனையை சொல்வதையே) கொண்டிருந்தாலும், தேவர் ஜாதியினரின் பலத்த எதிர்பிற்கு உள்ளனது. இத்தனைக்கும் தலித்களாக சித்தரிக்கபடும் பல பாத்திரங்கள் மிகவும் கேவலபடுத்த பட்டிருக்கும். (உதாரணமாய் பொண்ணை வடிவேலுவிடம் 'செட்டப்' பண்ணிகொள்ள சொல்லும் ஒரு அப்பன்.) இத்தகைய சித்தரிப்புகள் வருடபோக்கில் மாறி வந்திருப்பதை காணமுடியும். 'கில்லி' படத்தில் கூட மதுரைவாழ் வில்லன் பிரகாஷ் ராஜின் ஜாதி நுட்பமாய் குறிக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில் 'காதல்' திரைப்படம் (சடங்கு வைபவத்தில் வரும் பாடலின் வரிகள் தவிர்த்து) எங்கேயும் தேவர் அடையாளம் ஜாதி பெருமையாக கொண்டாடப் படாமல், அதற்கு மாறாக ஜாதி வெறியாக எதிர்மறையாகவே சித்தரிக்கிறது. மிக குறைவான காட்சிகளிலானாலும் தீவிரமான முறையில் சித்தரிக்க பட்டிருக்கிறது. கடைசி காட்சியில் 'அவளை வெட்டுரா, ராஜேந்திரா!' என்று கத்தும் அப்பத்தா, கதநாயகியை கூடி அடிக்கும் பெண்கள்! ஆண்களை விட பெண்களிடம் ஜாதிவெறி வெளிப்படும்போதே அதன் நோய்கூறு தன்மையை விளங்கிகொள்ள முடியும். கதாநாயகியை உறவுக்கார பெண்கள் கூடி அடிக்கும் அந்த காட்சி மிகுந்த அர்த்தமுள்ளதாகும்.

இத்தனை இருந்தும் ஒரு இயல்பாய் நடந்திருக்க வேண்டிய ஒரு முதலிரவை வலிந்து தடுத்தன் மூலம் பாலாஜி சக்திவேல் ஒரு பெரிய வாய்ப்பை இழந்திருக்கிறார். படத்தில் ஜாதி பிரச்சனை சாமர்த்தியமாக பேசபடுகிறது. ஒரு முதலிரவு காட்சியை புகுத்துவதன் மூலம் எந்த பிரச்சனையும் இயக்குனருக்கு வர வாய்பில்லை. 'கட்டாயத்தின் பேரில்' புகுத்தப் படும் கிளர்ச்சி பாடலான 'கிறு கிறு கிறு வென ..' என்ற பாடலை ஒரு முதலிரவு பிண்ணணியில் படமாக்கியிருக்க முடியும். மேன்சனில் தனித்திருக்கும் போது இடை புகுவதை விட, ஒரு முதலிரவு காட்சியாய் அது பொருத்தமாக வந்திருக்கும். ஆனால் இயக்குனருக்கு அதை செய்ய மனம் வரவில்லை. இதற்கு பின்னுள்ள தனிப்பட்ட மற்றும் உளவியல் காரணங்கள் மிகவும் ஆராயபட வேண்டும்.

பெண்களை உறவு கொள்வதை முன்வைத்து ஒரு சமூக பிரச்சனையை அணுகுவது குறித்து கேள்விகள் சிலருக்கு இருக்க கூடும். ரவி ஸ்ரீனிவாஸ் திண்ணையில் அப்படி ஒரு கேள்வியை ('காடு' நாவல் குறித்து) முன்வைத்து, அது சுத்தமாய் திரிக்கப்பட்டு வேறு திசையில் போய்விட்டது. அப்படி பட்ட கேள்விகளை கைவசம் வைத்துகொண்டிருக்க வேண்டும். அதை கேட்டுபார்த்து பார்வை எந்த திசையில் போகிறது என்று விழிப்புடன் இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. ஆனால் இங்கே பேசியிருப்பது ஒரு யதார்த்தம் எவ்வாறு திரிக்க படுகிறது, திரிக்க படுவதன் பிண்ணணியில் என்ன கருத்தாக்கங்கள், மதிப்பீடுகள் இருக்கின்றன என்பதும், அத்தகைய மதிப்பீடுகள் மீறப்படுவதன் அரசியல் குறித்தும்.

இப்போதய நிலமை இதுதான். 'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. காதல் படத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் யதார்த்தமாய் உறவு கொள்ள இயக்குனரால் அனுமதிக்க படுவதில்லை. மாறாக யதார்த்தமாய் அந்த தலித் அடித்து பைத்தியமாக்க படுகிறான்.

காதல் படத்தை இப்போழுதும் தமிழின் குறிப்பிட தகுந்த படங்களில் ஒன்றாக நினைத்தாலும், அதற்கு தொடர்ந்து கொண்டிருக்கும் பாராட்டுகள் கொஞ்சம் ஓவராய் தெரிகிறது. அதனால் பிரச்சனை எதுவும் பெரிதாய் வரப் போவதில்லை. இந்த படத்தினால் ட்ரண்ட் அமைந்து எடுக்கபட போகும் எதிர்கால படங்களில் என்ன வருகிறது என்று பார்போம்.

Post a Comment

---------------------------------------
Site Meter