ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, February 01, 2005

காதல் + கல்யாணம் - உறவு = ?

எனது காதல் குறித்த கடந்த பதிவு, படம் பார்த்த மறுதினம் அவசரத்தில் எழுதப்பட்டது. மூன்று நாட்கள் முன்பு தற்போக்கு சிந்தனையில் ஏதோ பொறிதட்ட, படத்தை இறக்கி, கவனமாய் கடைசி சில காட்சிகளை பார்த்த பிறகு, நான் எழுதியதில் உள்ள ஒரு தவறு தெரிந்தது. (இதற்கு முன் முதல் பாதி படத்தை ஒரு பத்து முறையாவது இறக்கி பாத்திருபேன். ) அது குறித்து பேசும் முன், இப்போதும் காதலை முன்வைத்து இப்படி ஒரு படம் வருவதை, ஹிட்டாவதை ஆரோக்கியமானதாகவும், கலையம்சம் என்பதாக படம் குறித்து சொன்னவைகளையும் மீண்டும் வலியுறுத்தி கொள்கிறேன்.

கடந்த பதிவு படம் குறித்த விமர்சனமாக எழுதப்படவில்லை. படம் குறித்து பலர் நல்லவிதமாய் எழுதியுள்ளதை பொதுவாய் ஒப்புகொண்டு எழுதப்பட்டது. படம் காதல் குறித்தது எனினும், கதை காதலோடு கல்யாணம் என்ற சமூக கருத்தாக்கத்தையும் யதார்த்தமாய் தொட்டுசெல்கிறது. இதற்கு மாறாக உறவு, அதாவது பாலியல் உறவு என்பது குறித்து படக்கதை யதார்தத்திற்கு முரணாக மௌனம் சாதிக்கிறது.

எண்ணிக்கையில் அடக்கவியலாத வகைகளில் பேசப்பட்டும், இன்னும் இந்த காதல் என்பது குறித்து குண்ட்ஸாக கூட வரையருக்க முடிவதில்லை. திருமணமும், பாலியல் உறவும் மிக தெளிவான வார்த்தைகளில் விளக்க கூடியவை, வரையரைக்குள் அடங்க கூடியவை. அதற்கு பின் எந்த கற்பித தன்மையும் இல்லை. இவை இரண்டுடன் மிக நெருங்கிய தொடர்புடையதெனினும், இவற்றின் அடிப்படையில் மட்டும் காதல் என்ற ரொமாண்டிக் கற்பிதத்தை விளக்க இயலவில்லை. குறைந்த படசம் விளக்க நமக்கு விருப்பமில்லை. இது குறித்து விவாதிப்பதல்ல இப்போதய நோக்கம்.

கடந்த பதிவில் இப்படி எழுதியிருந்தேன்.

"'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. இந்த படத்தில் (தெளிவாக அடையாளங்கள் சொல்லபடவில்லை எனினும்) ஒரிரு நாள் சேர்ந்து வாழ்கிறார்கள். பார்போம்!"

படம், நம்ம கதாநாயகி/நாயகன் ஓடிவந்து சென்னையில் வீடு தேடும் காட்சிகளில், சமூகத்தில் கல்யாணம் என்ற கருத்தாக்கத்திற்கு வைத்திருக்கும் அதீதமான மரியாதையை காட்சிபடுத்துகிறது. ஆனால் அதை ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே தூக்கிபிடிக்கிறது. வீட்டை விட்டு ஒடி வந்து இன்னும் பெண் கழுத்தில் தாலி ஏறாத நிலையில், வாடகைக்கு வீடு கிடைப்பது மட்டுமல்ல பிரச்சனை. காதலர்களாய் இருக்கும்வரை மேன்ஷன் வாலிபர்கள் 'ஃபிகரை தள்ளி கொண்டு வந்ததாய்' பார்கிறார்கள். துப்பறிய முயலுகிறார்கள். கல்யாணம் என்ற ஓற்றை நிகழ்வு அவர்கள் பார்வையை தலை கீழாக்குகிறது. அதுவரை 'சான்ஸ் கிடைக்குமா' என்று நாக்கை தொங்க போட்டு ஆர்வம் காட்டுபவர்கள், ஒரு மஞ்சள் தாலி தெருவோர குட்டி கோவிலில் கட்டப்பட்ட உடன் 'ஸிஸ்டராக' பார்கின்றனர். இன்றைய திரைப்படங்களில் தாலியை தூக்கிகாட்டி கதாநாயகியை வசனம் பேச வைக்காவிட்டாலும், தாலி மகிமை இப்படி வேறு வகைகளில் பேசப்படுகிறது.

இதை படத்தின் மீதான விமர்சனமாக இதை சொல்லவில்லை. சமுதாய மதிப்பீடுகளை -அதுவும் பார்வையாளருக்கு பிரச்சனை உண்டு பண்ணாத உவப்பான மதிப்பீடுகளை - சற்று மிகைபடுத்தி, பார்வையாளரை நெகிழ வைப்பதாக, ஒரு வெகுஜன சினிமா பொதுவாய் செய்ய கூடியதுதான் இங்கே படமாகியிருக்கிறது.

என் நண்பர்கள் இருவர் (அதாவது கணவன் மனைவி அல்லது துணைவன் துணைவி) பதிவு திருமணம் செய்தவர்கள். ஆனால் (ஏதோ கொள்கை பிடிப்பாய்) தாலி கட்டி கொள்ளவில்லை. சென்னையில் 'டீஸன்டாய்' வீடு கிடைக்க அவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நேரடியாக 'கல்யாணம் ஆச்சுங்கறீங்க, தாலியில்லையே!' என்று கேட்பார்கள். அந்த வகையில் இந்த பிரச்சனை - இதை ஒரு பிரச்சனையாய் காண்பிக்காமல், தாலி ஏறியவுடன் மற்றவர்கள் காட்டும் பாசத்தை நெகிழவைப்பதாக கட்டமைத்து காட்டியிருப்பினும் - யதார்தத்துடன் காட்டபட்டுள்ளது. ஆனால் யதார்தத்திற்கு முரணாக கல்யாணம் ஆனவுடன் இயல்பாகவும் மரபாகவும் இறங்கவேண்டிய காரியம் குறித்து மட்டும் மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனம் தற்செயலானதாக தெரியவில்லை.

படத்தில் என்ன நடக்கிறது? முந்தய நாள் தாலி ஏறாத காரணத்தால் தங்க வீடு கிடைக்கவில்லை. இரவை தியேட்டரிலும், பஸ் பயணத்திலும் செலவழித்துவிட்டு, மறுநாள் காலை தோழன் ஏற்பாடு செய்த பணத்தில் பியூட்டி பார்லரில் அலங்காரம் செய்துகொண்டு, நடுரோட்டில் ஒரு கோவிலில் மாலை மாற்றி தாலி கட்டிகொண்டு, அதை ஒரு மேன்ஸன் மேட் பார்த்து, மேன்ஸனில் எல்லோரும் பணம் பிரித்து, 'ரிசப்ஷனுக்கு' ஏற்பாடு செய்து, பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, புதுவீட்டில் எவர்சில்வர் பாத்திரங்கள் ஜமுக்காளம் சகிதமாய் பால் காய்ச்சி குடியேறி . . . . . . இத்தனைக்கு பிறகு என்னய்யா நடக்கும்? இயல்பாக இருந்தாலும் சரி, அல்லது மரபு கலாச்சார ரீதியாகவும், வழக்கமான சினிமாத்தனமாக கூட என்ன நடக்க வேண்டும்? சாந்தி முகூர்த்தம் முதலிரவு என்று பல வார்த்தைகளால் அழைக்கபடும் ஜல்சாதானே!

இங்கேதான் அவ்வளவு யதார்த்தமாய் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சித்தரிக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட படம் பார்வையாளனை டபாய்கிறது. கதாநாயகன் இதற்கு பிறகு ஒரு வொர்க் ஷாப்பில் தனக்கு தெரிந்த மெகானிக் வேலைக்கு ( ஒரு மேன்சன்காரன் சிபாரிசு சொல்லி) போகிறான். அதாவது இரண்டு நாட்களாய் ஓயாத அலைச்சலில் இருப்பவர்களை, அன்றய தினம்தான் திருமணமானவர்களை ஒரு நல்ல சாப்பாடு போட்டு ஒய்வெடுத்து ஜல்ஸாவில் ஈடுபட உதவாமல் மொத்த மேன்சன் கூட்டம் போய்விட, யதார்த்தமாய் மறுநாள் ஏற்பாடு செய்து ஹீரோ போகவேண்டிய வேலைக்கு அன்றே போகிறான். கதாநாயகி வாசலில் குழாயடியில் குடம் நீரை தூக்க முடியாமல் தூக்கி கீழே போட்டு, முருகன் (ஹீரோ பேரு) ஸ்டோர்ஸ் பாத்திரத்தை செல்லமாய் சிணுக்கி சமைக்க தொடங்குகிறாள்.

இதற்கு நடுவில் மதுரையிலிருந்து ஓடிப்போன பெண்ணை தேடி துப்பறிந்து அவர் சித்தப்பா கோஷ்டி அடியாட்களுடன் கிளம்பி சென்னை வருகிறது. நல்ல வார்த்தை நைச்சியம் பேசி காதலர்களை மதுரைக்கு திரும்ப கூட்டி போகிறது. போகிற வழியெல்லாம், மதுரை போய் சேரும்வரையிலும் சேர்ந்த பின்னும் ஒரே வெளிச்சம். அதாவது காட்சிகள் பகலிலே நிகழ்கின்றன. இவ்வளவு துல்லியமாய் யதார்தத்தை காண்பித்த கதை சொல்லல் இடையில் ஒருநாள் இரவை முழுசாய் முழுங்கியிருப்பதை காணலாம்.

இப்படி ஒரு லாஜிக்கல் பிரச்சனையாக பார்க்காவிட்டால் கூட, கதை இயக்குனரின் முழு ஆளுகைக்கு உட்பட்டது. சித்தப்பா ஒரு நாள் தாமதமாய் தேடி வந்திருக்க முடியும். இயல்பாக நடந்திருக்க வேண்டிய முதலிரவு நடந்திருக்கும். எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும்போது இயக்குனருக்கு காதலர்கள் உறவு கொள்வது ஒப்புதலில்லை, குறைந்த பட்சம் அப்படி ஒரு காட்சியமைக்க மனசில்லை என்பதாகவே தெரிகிறது.

எவ்வளவு பெரிய வாய்ப்பை அவர் தவறவிட்டிருக்கிறார்! சேரனும், சரி பாலாஜி சக்திவேலும் சரி, யதார்த்தமாக சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற ஒரு செய்கையை, சினிமாவில் எந்த தற்செயல் தன்மையின்றி மிகவும் சுய நினைவுடன் தணிக்கை செய்திருப்பது குறித்து ரொம்பவே யோசிக்க வேண்டியுள்ளது.

உலகம் முழுமையும் எல்லா சமூகத்திற்கும் தனது இனமானத்தை மதிப்பீடு செய்யும் சமாச்சாரமாக பெண்களின் கற்பு திகழ்ந்து வருகிறது. மேற்கும், மேற்கின் தாக்கத்தில் மற்றவையும் இதில் மாற்றங்கள் கண்டிருப்பினும், நம் சூழலில் இந்த மதிப்பீடு, ஒரு 'வாழ்வா சாவா' கேள்வியாக பிரச்சனைகளை கிளப்பிவருகிறது. தலித்கள் மீதான பல கலவரங்கள்/தாக்குதல்களுக்கு இப்படி ஒரு பிண்ணணி பொதுவாக இருக்கிறது.

சமூகத்தின் மீதான கருத்தியல் வன்முறையில் முதலிடம் வகிக்கும் பார்பனியம் இது குறித்து ஏற்படுத்தியிருக்கும் கற்பிதங்களை உலகின் எந்த சமூகத்திலும் காணமுடியாது. இன்றைக்கும், திராவிட இயக்கத்தின் 70 ஆண்டுகளுக்கு மேலான பாதிப்பிற்கு பிறகும், தமிழ் சமூகத்தில் 'அய்யர் பொண்ணை தொட்டா விளங்காம' போய்விடும் நம்பிக்கை இருப்பதை கேட்கமுடியும். மனித இனம் சிந்திக்க தொடங்கியபின் உருவாக்கிய பிரதிகளில், மனவக்கிரத்தில் எதனுடனும் ஒப்பிடமுடியாத பிரதியாகிய மனுதர்மம் விலாவாரியாய் இது குறித்து பேசுகிறது. பார்பன பெண்ணை மற்றவர் தொடுவதன் பாவத்தன்மை குறித்து பேசும் போதே, மற்ற சமூகத்து பெண்கள் பார்பனனின் விந்தை 'வாங்கி கொள்ளும்' புண்ணியம் குறித்தும் பேசுகிறது. (கேரளாவில் இன்னும் அந்த வழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சுமதி ரூபன் 'மாயா' படம் குறித்து எழுதியதையும், இந்த கருத்தாக்கம் பேசப்படும் இன்னொரு இடமாக 'சம்ஸ்காரா' நாவலையும் பார்கலாம்.) மனுதர்மத்தின் பல சட்டங்கள் பார்பன பெண்களின் இந்த 'நெறி பிறழ்தலை' தடுப்பதை அடிப்படையாய் கொண்டிருப்பதை காணமுடியும். அம்பேத்கார் 'சாதிகளின் தோற்றம்' குறித்த நூலில், சதி போன்ற பழக்கங்கள் கூட இந்த (சாதிகளுக்குள்ளான ) அகவுறவை கட்டிகாப்பதை முன்வைத்தே தோன்றியவையாக தர்க்க ஆதரங்களுடன் நிகழ்த்தி காட்டுகிறார். மனு தர்மத்தை ஏற்று கொள்ளவில்லை என்று சொல்லி, அதற்கு எதிரானதாக ஜெயமோகன் போன்றவர் தூக்கி பிடிக்கும் கீதையிலேயே அர்ஜுனன் போருக்கு எதிரான முக்கிய காரணமாய் இதை கூறுகிறான். அதாவது போரினால் ஏற்படப் போகும் ஆண்களின் இறப்பினால், தன் குலபெண்கள் நெறி தவறி போய் *தர்மத்திற்கு* கேடு வரப் போவதை ஒரு முக்கிய காரணமாய் போர் புரிய மறுப்பதற்கு சொல்கிறான்.


இந்த நம்பிக்கைகளின் பாதிப்பு இன்றும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்கிறது. கலப்பு மணம் ஓரளவு பரவலான பின்னும் கூட, அய்யர் பொண்ணை சைட் அடிக்கவும், ஜொள் விடவும் தயாராயிருந்தும், 'கை வைத்தால்' ஏற்படும் 'பாவம்' குறித்த நம்பிக்கை உயிர்ப்புடன் தொடர்வதை அறியமுடியும். ஆனால் தமிழ் சினிமா இதை உடைத்திருக்கிறது. வேதம் புதிதில் கதாநாயகன் காலி பண்ணபட்டாலும், பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்தில் (எனக்கு தெரிந்து) முதல் முறையாக (கடைசியாகவும்?) இந்த 'புரட்சி' நடக்கிறது. (அரங்கற்றம் படத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை இத்தகையதாய் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை, அது ஒரு முக்கியமான படம் எனினும்.)

தேவர் என்ற ஜாதி பாலியல்ரீதியாக தலித் பெண்கள் மீது (அதன் பாதிப்பை அந்த சமூகத்தின் மீது) நிகழ்த்தும் வன்முறையை நேரடியாக திருநெல்வேலியில் பார்த்திருக்கிறேன். (90களில் தலித்களின் எதிர் தாக்குதலுக்கு பின் இது இல்லாமலாயிருப்பதாக அல்லது பெருமளவிற்கு குறைந்திருப்பதாகவே அறிகிறேன்.) ஆனால் ஒரு சினிமாவில் தேவர் பெண் தலித்தை காதலிப்பதையும், இறந்த பின் எரிந்துகொண்டிருக்கும் பிணத்தை உடன் கட்டையேறி ஒரு தலித் 'புணர்தல்' சைகைகள் செய்வதாலும், பாரதி கண்ணம்மா திரைப்படம் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் ஓட அனுமதிக்க படவில்லை.

இத்தனைக்கும் பாரதி கண்ணம்மா தேவர் என்ற அடையாளத்தை glorify செய்வதாகவே எடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாய் சொல்ல 'அய்யா தேவரய்யா' என்று கும்பிட்டபடி தலித்தான பார்திபன் பாடும் ஒரு பாட்டும், ஒரு கட்டத்தில் 'எவன் தேவன்?' என்ற கேள்வியை கேட்டு மாற்றி மாற்றி விஜயகுமார் 'தேவனு'க்கான இலக்கணமாய் அடுக்கும் வசனங்களை சொல்லலாம். அந்த வசனங்களை எழுதியவனை செருப்பை கழட்டி அடிக்க தோன்றும். அந்த அளவு ஜாதி பெருமை பேசும் வசனங்கள்!

கிராம யதார்தத்தை செல்லுலாயிடில், ரொமாண்டிஸிஸம் கலந்து, கொண்டு வந்த பாரதிராஜாவின் படங்களில் தேவர் அடையாளம் பெரிதுபடுத்த பட்டிருப்பினும், தேவர் அடையாளத்தை முழுமையாய் கொண்டாடும் விதமாய் தேவர்மகன் படமே முதலில் வெளிவந்தது. கதை தேவர்களின் அடையாளமான 'அறுவாள், வெட்டு குத்து' குறியீடுகளை எதிர்த்து எடுக்க பட்டதாய் காட்டிகொண்டாலும், அப்படி ஒரு நோக்கம் உணமையிலேயே கதைக்கு இருந்தாலும், படம் தேவர்களால் தங்கள் அடையாளமாய் பார்க்கப்பட்டது. தேவர் வீட்டு வைபவங்களில் மீண்டும், மீண்டும் அந்த படம் காட்டப்பட்டது. தேவர் சாதி சங்கத்தவர்கள் கமலை போய் பார்த்தார்கள். சமூகத்தில் தேவர்களின் சாதி பெருமையை, அதன் மூலமாக சாதிவெறியை தூண்டி எரியவிடுவதாகவே இருந்தது. இதன் பிண்ணணியிலேயே கிருஷ்ணசாமியின் 'சண்டியர்' படத்திற்கான எதிர்ப்பை பார்க்கவேண்டும். அதை பிறகு இன்னொரு பதிவில் பார்போம்.

இதற்கு பின் வந்த பாரதிகண்ணம்மா தேவர் மகனின் அணுகுமுறையையே (தேவன் என்ற ஜாதி அடையாளத்தை தூக்கி பிடித்து கொண்டாடிவிட்டு, அவர்களிடம் உள்ள குறையாய் ஜாதிபிரச்சனையை சொல்வதையே) கொண்டிருந்தாலும், தேவர் ஜாதியினரின் பலத்த எதிர்பிற்கு உள்ளனது. இத்தனைக்கும் தலித்களாக சித்தரிக்கபடும் பல பாத்திரங்கள் மிகவும் கேவலபடுத்த பட்டிருக்கும். (உதாரணமாய் பொண்ணை வடிவேலுவிடம் 'செட்டப்' பண்ணிகொள்ள சொல்லும் ஒரு அப்பன்.) இத்தகைய சித்தரிப்புகள் வருடபோக்கில் மாறி வந்திருப்பதை காணமுடியும். 'கில்லி' படத்தில் கூட மதுரைவாழ் வில்லன் பிரகாஷ் ராஜின் ஜாதி நுட்பமாய் குறிக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில் 'காதல்' திரைப்படம் (சடங்கு வைபவத்தில் வரும் பாடலின் வரிகள் தவிர்த்து) எங்கேயும் தேவர் அடையாளம் ஜாதி பெருமையாக கொண்டாடப் படாமல், அதற்கு மாறாக ஜாதி வெறியாக எதிர்மறையாகவே சித்தரிக்கிறது. மிக குறைவான காட்சிகளிலானாலும் தீவிரமான முறையில் சித்தரிக்க பட்டிருக்கிறது. கடைசி காட்சியில் 'அவளை வெட்டுரா, ராஜேந்திரா!' என்று கத்தும் அப்பத்தா, கதநாயகியை கூடி அடிக்கும் பெண்கள்! ஆண்களை விட பெண்களிடம் ஜாதிவெறி வெளிப்படும்போதே அதன் நோய்கூறு தன்மையை விளங்கிகொள்ள முடியும். கதாநாயகியை உறவுக்கார பெண்கள் கூடி அடிக்கும் அந்த காட்சி மிகுந்த அர்த்தமுள்ளதாகும்.

இத்தனை இருந்தும் ஒரு இயல்பாய் நடந்திருக்க வேண்டிய ஒரு முதலிரவை வலிந்து தடுத்தன் மூலம் பாலாஜி சக்திவேல் ஒரு பெரிய வாய்ப்பை இழந்திருக்கிறார். படத்தில் ஜாதி பிரச்சனை சாமர்த்தியமாக பேசபடுகிறது. ஒரு முதலிரவு காட்சியை புகுத்துவதன் மூலம் எந்த பிரச்சனையும் இயக்குனருக்கு வர வாய்பில்லை. 'கட்டாயத்தின் பேரில்' புகுத்தப் படும் கிளர்ச்சி பாடலான 'கிறு கிறு கிறு வென ..' என்ற பாடலை ஒரு முதலிரவு பிண்ணணியில் படமாக்கியிருக்க முடியும். மேன்சனில் தனித்திருக்கும் போது இடை புகுவதை விட, ஒரு முதலிரவு காட்சியாய் அது பொருத்தமாக வந்திருக்கும். ஆனால் இயக்குனருக்கு அதை செய்ய மனம் வரவில்லை. இதற்கு பின்னுள்ள தனிப்பட்ட மற்றும் உளவியல் காரணங்கள் மிகவும் ஆராயபட வேண்டும்.

பெண்களை உறவு கொள்வதை முன்வைத்து ஒரு சமூக பிரச்சனையை அணுகுவது குறித்து கேள்விகள் சிலருக்கு இருக்க கூடும். ரவி ஸ்ரீனிவாஸ் திண்ணையில் அப்படி ஒரு கேள்வியை ('காடு' நாவல் குறித்து) முன்வைத்து, அது சுத்தமாய் திரிக்கப்பட்டு வேறு திசையில் போய்விட்டது. அப்படி பட்ட கேள்விகளை கைவசம் வைத்துகொண்டிருக்க வேண்டும். அதை கேட்டுபார்த்து பார்வை எந்த திசையில் போகிறது என்று விழிப்புடன் இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. ஆனால் இங்கே பேசியிருப்பது ஒரு யதார்த்தம் எவ்வாறு திரிக்க படுகிறது, திரிக்க படுவதன் பிண்ணணியில் என்ன கருத்தாக்கங்கள், மதிப்பீடுகள் இருக்கின்றன என்பதும், அத்தகைய மதிப்பீடுகள் மீறப்படுவதன் அரசியல் குறித்தும்.

இப்போதய நிலமை இதுதான். 'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. காதல் படத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் யதார்த்தமாய் உறவு கொள்ள இயக்குனரால் அனுமதிக்க படுவதில்லை. மாறாக யதார்த்தமாய் அந்த தலித் அடித்து பைத்தியமாக்க படுகிறான்.

காதல் படத்தை இப்போழுதும் தமிழின் குறிப்பிட தகுந்த படங்களில் ஒன்றாக நினைத்தாலும், அதற்கு தொடர்ந்து கொண்டிருக்கும் பாராட்டுகள் கொஞ்சம் ஓவராய் தெரிகிறது. அதனால் பிரச்சனை எதுவும் பெரிதாய் வரப் போவதில்லை. இந்த படத்தினால் ட்ரண்ட் அமைந்து எடுக்கபட போகும் எதிர்கால படங்களில் என்ன வருகிறது என்று பார்போம்.

Post a Comment

32 Comments:

Blogger மயிலாடுதுறை சிவா said...

அன்பு நண்பர் ரோசா வசந்திற்கு
தங்களின் மாறுப் பட்ட சிந்தனையில் இந்த விமர்சனம்
என்னுள் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தப் படத்திற்கான
டிவிடிக் காக காத்தி இருக்கிறேன். பார்த்தவுடன் உங்கள்
கருத்துகளை மீண்டும் மறுமுறை வாசிக்கலாம் என்று
உள்ளேன். நீங்கள் இதுப் போல் நிறைய எழத வேண்டும்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

2/08/2005 2:20 AM  
Blogger SnackDragon said...

This comment has been removed by a blog administrator.

2/08/2005 5:01 AM  
Blogger கறுப்பி said...

காதல் திரைப்படம் கனடாவில் திரையரங்குகளில் காண்பிக்கப்படவில்லை (எனக்குத் தெரிந்து) டி.வீ.டியிலும் வரவில்லை. விமர்சனங்கள் பார்க்கத் தூண்டியதால் வீடியோ பிரதியில் பார்த்தேன். அவ்வளவு தெளிவாக இருக்கவில்லை. இருந்தும் கதையின் போக்கு மற்றைய திரைப்படங்களில் இருந்து விலகி யதார்த்தமாக நகர்ந்ததால் பார்த்து முடித்தேன். அனைத்து நடிகர்களினது நடிப்பும் மிகவும் இயற்கையாகவும் திறம்படவும் அமைந்திருந்தது. ரோசாவசந்த கூறியது போல் நாயகனும், நாயகியும் உடலுறவு கொள்ளவில்லை என்பதை பிரதியின் தெளிவின்மை காரணமாகவோ, இல்லாவிட்டால் ஒரே அறையில் களிக்கின்றார்கள், திருமணமும் ஆகிவிட்டது என்ற காரணத்தின் அசட்டையினாலோ என்னவோ கவனிக்கத் தவறியதால் (மீண்டும் ஒருமுறை பார்க்கவுள்ளேன்) அட.. மற்றைய திரைப்படங்கள் போல் பெண், அவள் கற்பு என்று அலட்டிக்கொள்ளாமல் எடுத்திருக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
இந்தியாவில் இருப்பதைப் போல் ஈழத்தில் சாதியின் வீச்சம் மிக மோசமான அளவிற்கு இல்லை. உள்நாட்டுப் போராட்டத்தால் இருந்ததில் கணிசமாக வீதம் குறைந்தும் விட்டது. ஆனால் புலம்பெயர்ந்த மக்கள் தம்மோடு அதனையும் கட்டிக்கொண்டு வந்து இங்கும் சிலுப்பிக்கொண்டு திரிகின்றார்கள்.
“காதல்” திரைப்படத்தின் திரைக்கதையைப் போல் ஒரு உண்மைச் சம்பவத்தை எப்போதோ ஜீனியர் விகடனில் படித்த ஞாபகம். அதில் அழைத்து வரப்பட்ட நாயகனும், நாயகியும் கொல்லப்படுகின்றார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்பதாக இருக்கலாம்.
ரோசாவசந்த் கூறியது போல் கணவனும், மனைவியும் இணைந்ததாகக் காட்டப்பட்டால் சாதிப் பிரகாரம் மரணதண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் எண்ணினாரோ என்னவோ.
பல விமர்சனங்களுக்குள்ளும் தமிழ் சினிமா கொஞ்சமேனும் தலை நிமிர்ந்து நிற்க “காதல்” திரைப்படம் உதவி செய்யும் என்பதே எனது கருத்து

2/08/2005 5:06 AM  
Blogger இராதாகிருஷ்ணன் said...

பதிவின் எழுத்துகள் மிகவும் சிறியதாகத் தெரிகின்றன. அப்புறம், வழக்கமான பிரச்சனையான ஃபயர்பாக்ஸில் எழுத்துகள் உடைந்து தெரிகின்றன. இரண்டையும் கொஞ்சம் கவனியுங்கள்.

அப்படத்தில் திருமணம் நடக்கும் நாளைக்கு முந்தைய தினத்தில் நாயகி மாதவிலக்காகிப் போகிறாள் (அதற்காக நாயகனிடம் சிகரெட்டு அட்டையில் எழுதிக்கொடுத்து carefree வாங்குவதும், பிற்பாடு திரையரங்கின் கழிப்பறைக்கு அவள் செல்லும் காட்சியும் வைக்கப்பட்டுள்ளது). நீங்கள் குறிப்பிடும் முதலிரவு காட்சியின்மைக்கு மாதவிலக்கு ஒரு காரணமாக இருக்கலாம் இல்லையா?

எனக்கென்னவோ இந்தப்படத்தைத் தேவைக்கதிகமாகத் தூக்கிவிடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

2/08/2005 6:16 AM  
Blogger ROSAVASANTH said...

உலகம்.. அழகு கலைகளின் சுரங்கம்..
(சோதனை பின்னூட்டம்.)

2/08/2005 10:13 AM  
Blogger SnackDragon said...

Test comment

2/08/2005 10:13 AM  
Blogger ROSAVASANTH said...

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா?

2/08/2005 10:21 AM  
Blogger இளங்கோ-டிசே said...

Karuppi, Just for an info. I did watch the movie, Kathal, in a theatre in Toronto.

2/08/2005 10:34 AM  
Blogger இளங்கோ-டிசே said...

RosaVasanth, Beleive you have problem in your comments section. I did post a comment, but disappeared.

2/08/2005 10:36 AM  
Blogger ROSAVASANTH said...

you mean disappared? your earlier comment is there!

New Comments updates are not shown in Thanmizhmanam. So posting test comments.
(Karthik changed the template, hope no pronlem due to that.)

2/08/2005 10:39 AM  
Blogger ஒரு பொடிச்சி said...

ரோசா வசந்த். நல்ல விமர்சனம். இது தனியே பெண்ணுடன் உறவு கொள்கிற என்ற விசயம் இல்லை. நனவாக, -இரண்டு possibilities ஐயும் முன்வைத்தே- தவிர்க்கப்பட்டிருக்கிறதென நினைக்றேன். அவர்களுக்குள் உறவு இருக்கவில்லை என்று படம் பார்த்போது எனக்கத் தோன்றவில்லை (இறுதிக்காடசியில் பெண்ணை குளிக்க வைக்கிறார்கள்)etc. அந்தளவுக்கேனும் 'மீறல்' குறித்து சந்தோசப்பட்டிருந்தேன்.
எப்படியோ'நடந்திருக்கலாம்' என்கிற நிச்சயமற்ற முடிவிற்கு விடுவதற்கு ஒரு காரணமுமில்லை, சாதியைத் தவிர.
and for kathiravan,
IF her period is the reason for not having sex,
it would be the silliest of all.

2/08/2005 10:41 AM  
Blogger ROSAVASANTH said...

சோதனை மேல் சோதனை!

2/08/2005 11:49 AM  
Blogger ROSAVASANTH said...

இதுதான் கடைசி சோதனை
இதுக்கு மேலே கிடையாது வேதனை.

2/08/2005 11:56 AM  
Blogger ஒரு பொடிச்சி said...

sorry it's not kathiravan
it's Radhakrisnan.

2/08/2005 12:16 PM  
Blogger இளங்கோ-டிசே said...

இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே :))

2/08/2005 12:18 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்து தெரிவித்த நண்பர்கள் கதிரவன், மணிக்கூண்டு, கருப்பி, ராதாகிருஷ்ணன், டீஜே, பொடிச்சி, அனைவருக்கும் நன்றி.

புதிய டெம்ப்ளேட் போட்டு இப்போ பழய மாடலுக்கே திரும்பியிருக்கிறேன். மீண்டும் மாற்றப்படலாம்.

வெகுஜன படங்கள் குறித்த கதிரவனின் பார்வையுடன் நான் வேறுபடுகிறேன். அது குறித்த கருத்தை தொடர்ந்து நான் எழுதுவேன்.

நண்பர் ராதாகிருஷ்ணான் சொன்னது போல் மாதபிரச்சனை ஒரு காரணமாய் இருக்கமுடியாது. நான் படத்தில் லாஜிக் இடிக்கிறது என்று மட்டும் சொல்லவில்லை. கதை இயக்குனரின் ஆளுகைகு உட்பட்டது. மாத பிரச்சனையை காட்டி இதை தவிர்த்திருந்தால் (கூட) அதுவும் இயக்குனர் வேண்டுமென்றே வலிந்து தவிர்த்ததாகவே எடுத்துகொள்ள வேண்டும்.

பொடிச்சி, உங்களை போலவே அதை நானும் முதல்முறை பார்கும்போது உணரவில்லை. இந்த சந்தேகம் வந்தபின் கடைசி காட்சிகளை கவனமாய் பார்தேன். உறவுகொண்டிருக்க கூடும் என்ற சந்தேகம் கொள்ள காரணமே இல்லை. காட்சிகள் தொடர்சியாகவே போகின்றன. (பதிவில் சொன்னது போல் ஒரு நாள் இரவை கதை முழுங்குகிறது.) அவர்கள் உறவு கொள்வதற்கு முன்பே சித்தப்பா வந்து அழைத்து செல்வதாகவே இருக்கிறது. இருவரும் மணக்கோலத்தைலேயே இருப்பதை காணலாம். கடைசிகாட்சியில் குளிப்பாட்டியது 'தொட்ட' காரணத்திற்காக கூட இருக்கலாம். கருப்பி சொன்னதுபோல் ஒருவேளை உறவுகொண்டிருந்தால் கதாநாயகன் கொல்லப்பட்டிருக்க கூடும்.

கருத்துக்களுக்கு நன்றி!

2/08/2005 12:30 PM  
Blogger Narain Rajagopalan said...

இன்னா தல, ஒரே டெஸ்டிங்கிலேயே இருக்கு, இந்த டெம்பளட்டும் சொதப்பது (காதல் ஒரு சீனை விட்டா மாதிரியே ;-)) நீங்க எழுதறது எல்லாமே நெடும் பதிவு, அதுக்கு இந்த மாதிரி டெம்பளட் தோது படாது. மாத்தப் பாருங்க.

2/08/2005 1:16 PM  
Blogger ROSAVASANTH said...

மனுஷ்யபுத்திரனுக்கு நான் இட்ட பின்னூட்டம்.

http://uyirmmai.blogspot.com/2005/02/blog-post_110784055110724572.html

இதில் ஆச்சரியம் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது. வேறு மாதிரி நடந்திருந்தால்தான் ஆச்சரியம் வரக்கூடும். அரசியல் காரணங்களால் பலர் கொல்லப்படும் கலவரங்களை தூண்டும் அரசியல்வாதிகள், இப்படி ஒரு பேரழிவில் மட்டும் மனிதாபிமானத்தை காட்டுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்.

ஆனால் அரசியவாதிகள் மட்டுமல்ல, எல்லா அரசாங்கங்களும், இலங்கை, இந்தோனேஷியா, அமேரிக்கா, எல்லாமே இந்த பேரழிவை தங்களுக்கு சாதகமாவே பயன்படுத்த முனைகிறது. கிரிஸ்தவர்கள் இதை முன்வைத்து திருசெய்தியை பரப்ப நினைக்கிறார்கள். வேறு வக்கிரங்கள் பெரியவாளை உள்ளேபோட்டதையும் இதையும் முடிச்சி போடுகிறார்கள். ஆக இதில் அரசியல்வாதி வேறு மாதிரி நடப்பதை ஏன் எதிர்பார்க்க வேண்டும்? மேலும் அரசிய்யல்வாதிகளின் சுயநலமும், மனிதாபிமானமற்ற தன்மையும் வெளிப்படையானவை. எளிதில் புலப்பட கூடியவை! மற்றவை குறித்து அதிகம் பேசவேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.

2/08/2005 3:06 PM  
Blogger ROSAVASANTH said...

ஆமாம் நரேன். மீண்டும் டெம்ப்ளேட் மாத்தவேண்டியதுதான்.

2/08/2005 3:07 PM  
Blogger ROSAVASANTH said...

http://uyirmmai.blogspot.com/2005/02/blog-post_110784055110724572.html

சீட்டாடுவதிலும், தண்ணியடிப்பதிலும் அப்படி என்ன பெரிய பிரச்சனை இருக்கிறது. சுநாமி வந்து பாதிக்கப்பட்டதால் *அவர்கள்* தண்ணி அடிக்க கூடாது, சீட்டாட கூடாது, கறிசோறுக்கு கூட ஆசைப்பட்கூடாது என்றெல்லாம் ஏன் எண்ணம் தோன்றுகிறது என்பதையும், அதற்கு பின்னுள்ள உளவியலை யோசிக்கவேண்டும். இப்படி ஒரு கருத்தை பல இடங்களில் வலைப்பதிவுகளில் பார்த்ததால் ஒரு முறையேன்னும் ஆட்சேபிக்க இதை எழுதுகிறேன்.

2/08/2005 3:47 PM  
Anonymous Anonymous said...

வறலாறு இருமுறை தன்னை எழுதிகொல்கிறது. முதல்முறை சோக நாடகமாக மறுமுறை கேலிகூத்தாக- சொன்னது பேராசான் மார்க்ஸ்!

(மீண்டும் சோதனை)

2/08/2005 8:41 PM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ள ரஜினி ராம்கி,

நான் உங்கள் கட்டுரைகளிலும் இப்படி சில கருத்துக்களை பார்திருக்கிறேன். அந்த தொனி குறித்து எனக்கு விமர்சனம் இருந்தும் சொல்லியதில்லை. காரணம் உங்களுக்கும் தெரியும். நீங்கள் களத்தில் இருக்கிறீர்கள். நான் ஒரு துரும்பை கூட எடுத்து போடாமல் இணையத்தில் தட்டிக்கொண்டிருக்கிறேன். இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் எப்போதும் வாயை மூடிகொண்டிருக்க வேண்டுமா என்று தெரியவில்லை.

மேலே சுதர்சன் அரசியல்வாதிகளின் செயல்களோடு, மக்கள் குடிப்பதையும் சீட்டாடுவதையும் ஒப்பிடும்போதே சொல்லாமல் இருக்க கூடாது என்று தோன்றி என் ஆட்சேபத்தை தெரிவித்தேன். குடி, சீட்டாட்டத்தில் மனுஷ்யபுத்திரன் குறிப்பிடும் பிரச்சனைகளை நானும் ஏற்றுகொள்கிறேன். எல்லா நேரத்திதிலும் அப்படி ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.

மீனவர்களின் பொதுவான வாழ்க்கையே கேர்ஃப்ரீயாகத்தான் இருக்கிறது. நமக்கு ஏற்படும் அதிர்ச்சி மதிப்பீடுகளை வைத்து அதை அளப்பது நியாயமாக தோன்றவில்லை. 'ஒரு நாள் போவார், ஒருநாள் வருவார்' என்று பொதுவாக இருக்கும் வாழக்கை, அதன் காரணமான கவலைப்படா தன்மை சுனாமி வந்த ஒரே காரணத்தால், நாம் விரும்பும் பொறுப்புணர்வு வரவேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்? நேற்றுவரை இருந்த சிட்டாட்டமும், குடியும் இன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட காரணத்தால் நாம் விரும்புவது போல் மாறவேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?

கர்நாடகாவிலிருந்து வந்து உதவிவிட்டு அவர்கள் வேலையை பார்க்க போககூடும். இப்படி பலரை பார்த்து அது ரொம்பவே பழக்கமும் ஆகியிருக்கும். இப்படி ஒவ்வொருவர் வரும்போதும், அதற்கான வரவேற்ப்பையும், நன்றியுணர்வையும் காட்டவேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும்? ஒரு நல்ல நோக்கத்தில், உதவுபவர்கள் மனம் கோணக்கூடாது என்று நீங்கள் நினைக்கலாம். தினமும் இப்படிபட்ட காட்சிகளை எத்ர்கொள்ளும் அவர்களும் ஒவ்வொருமுறையும் அப்படி நினைக்க முடியுமா?

எல்லாவற்றிலும் பிரச்சனை இருக்கிறது. நாம் பரிசீலனை செய்யாமல் மேலோட்டமக தோன்றுவதை மட்டும் சொல்லமுடியாது. ஆயினும் ஆண்களின் குடி போன்ற பிரச்சனைகளை முன்வைத்து 'அரசு நிவாரண உதவிகளை பெண்களிடம் வழங்கவேண்டும் ' என்று மனுஷ்யபுத்திரன் சொல்வதை ஏற்கிறேன்.

கடைசியாக ரஜினி ராம்கி, நான் ஆரோக்கியமான முறையில் ஸ்காட்ச் குடிப்பது குறித்து, என் தனிப்பட்ட பிரச்சனை என்பதை தாண்டி உங்களுக்கு விமர்சனம் இருக்காது என்றே நினைக்கிறேன். குறைந்தபட்சம் குடிப்பதை நிறுத்தி அந்த பணத்தையும் சுனாமி நிவாரணத்துக்கு அளிக்க வேண்டியதுதானே' என்று கூட கேட்க மாட்டீட்கள். அப்படி இருக்கும் போது மீனவர்களின் குடி குறித்து நீங்களும் நானும் எப்படி அறிவுரை சொல்லமுடியும்?

2/08/2005 11:16 PM  
Blogger ROSAVASANTH said...

http://uyirmmai.blogspot.com/2005/02/blog-post_110784055110724572.html

2/08/2005 11:17 PM  
Blogger ROSAVASANTH said...

இங்கே பேசப்பட்டிருக்கும் மனு.புத்,ரோசா கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன் என்றாலும் ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும்.

சுனாமிக்கு முன்னும், சுனாமிக்குப்பின்னும் மீனவர்களின் சகஜனிலை,பாதிப்பு போண்றவைகள் மாறினதே ஒழிய, அவர்களது கல்வியோ , அறிவோ திடிரென மாறிவிடாது. சுனாமிக்கு உதவ செல்லும்போது நமக்கு இருக்கும் மனநிலையில், நாம் அவர்களை எதிர்பார்ர்ப்பது(நிவாரண பணாத்தில்குடிக்காதே போன்றது) அதிகமோ என்று நினைக்கிறேன். அவர்களைப்பொறுத்தவரை எழவுக்கும் குடி,கல்யாணத்துக்கும் குடி என்றுதான் இதுகாலம் வரை வாழ்ந்திருப்பார்கள். சுனாமியில் கடுமையாய் தாக்கப்பட்டு , குடுமப்த்தினரை இழந்தவர்களுக்கு அதை விட பெரிய காரணம் தேவையில்லை. பாதிப்பில்லாதவர்கள், அவர்களை பொறுத்தவரையில், இது ஏதோ ஒரு பெரிய வித்தியாசமான விழா போன்றது என்ற புரிதலில் கூட இருப்பார்கள்.

பொறுப்பற்று நடக்கிறார்கள் என்று மீனவர்களை எதிர்பார்க்கும்/சாடும் நம் மனத்தை கொண்டுதான், அதேவேளையில் அவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் என்றும்(பெரும்பாலும்), இது நாள் வரை கல்வி புகட்டப்படாத சமுதாயத்தைதான் நாம் உருவாக்கி வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் சற்று யோசிக்கவேண்டும் என்கிறேன்.

2:10 PM
karthikramas said...
மற்றபடி தலைப்பில் அநாகரிகத்துக்கு எல்லை இருக்கிறதா? என்ற கேள்விக்கு,
அதன் எல்லை அநாகரிகர்கள் கையில்தான் இருக்கிறது. :-)
அதன் உச்சம் கொலையில் தான் முடியும். :)

2/09/2005 12:05 PM  
Blogger ROSAVASANTH said...

சென்ற பின்னூட்டம், கார்திக்கினுடையது. என் Bளாகர் கணக்கில் உட்கார்ந்துகொண்டு இட்டிருக்கிறார். ரோஸாவசந்த்.

2/09/2005 3:20 PM  
Blogger ROSAVASANTH said...

பாட்ம் போதுநான் தென்றல் காற்று! (சோதனை.)

2/09/2005 3:48 PM  
Blogger ROSAVASANTH said...

'கல்வி இல்லாமை காரணம்' என்று கார்திக் சொல்வதையும் நான் ஏற்றுகொள்ளவில்லை. கார்திக், சுதர்சனும் மற்றவர்களும் சொல்வதை போல் பிரச்சனை மீனவர்களிடமே இருப்பதாக ஏற்றுகொண்டு அதற்கு காரணமாய் கல்வியின்மையை சொல்கிறார.நான் இங்கே பேச புகுந்தது சுதர்சன் போன்றவர்கள் சொல்வதில் உள்ள பிரச்சனையை, அவரகளின் பார்வையில் உள்ள பிரச்சனையை!(மீனவர்களிடம் பிரச்சனை இல்லை என்று சொல்லவரவில்லை, அப்படி சொல்வது பல பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதில் முடியும். )

2/09/2005 9:05 PM  
Blogger SnackDragon said...

ரோசா,
சுதர்சன் சொன்னதை நான் வாசிக்ககூட இல்லை. எனவே அதுக்கு ஒத்துப்போவதாய் அமைந்து விட்டது நான் செய்ஞ்ச போன ஜென்ம பாவம்.

நான் சோனது, பொதுவிலே, சமூகப்பணிகளை மீனவர்களிடமிருந்து எதிர்ப்பார்த்து ஏமந்து போவதற்கு அவர்கள் கல்வியும், அதன் விளைவாய் ஏற்பட்ட புரிதலும் காரணமாக இருக்கும் என் நினைக்கிறேன். அதே கல்வியில்லாமைதான் , நீங்கள் சொல்வது போல கேர்-ப்ரீ வாழ்க்கைக்கு காரணம் என்றும் நினைக்கிறேன். இதிலெல்லாம் , வெளியிலிருந்து யோசித்து இப்படித்தான் எழுத முடிகிறது. நீங்கள் ஏது வேறு காரணம் இருந்தால் சொல்லுங்கள், யோசிக்கிறேன்.

மனு.புத்,ராம்கிக்கு எழுதுவதாகவே எழுதினேன். மற்றவை பின்னர்.

2/10/2005 2:24 AM  
Blogger ROSAVASANTH said...

கார்திக்

சுதர்சன்

"குடிப்பது, சீட்டாடுவது பற்றி அல்ல என் வாதம், அவர்களின் பொறுப்பைப் பற்றியது; அதற்கும் கல்வி இல்லாததுதான் காரணம் என்று சொல்லிவிடாதீர்கள்." என்று சொன்ன காரணத்தினாலே நான் அந்த 'கல்வியின்மை' என்பதை முன்வைத்து எந்த வாதத்தையும் நான் முன்வைக்கவில்லை என்று சொல்லவேண்டி வந்தது.

நான் இந்த பிரச்சனை குறித்து அங்கே பேச விரும்பவில்லை. தேவையில்லாமல் குண்டக்க மண்டக்க ஏதாவது சொல்ல நேரிடலாம். அதனால் ஜகா வாங்கிவிட்டேன்.

உங்கள் கருத்துடன் எனக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. இருந்தால் அதை நேற்றே சொலியிருப்பேன். இப்போது ரொம்ப தாமதமாகிவிட்டதால் துங்க போக வேண்டும். நாளை பார்போம்.

2/10/2005 3:33 AM  
Blogger ROSAVASANTH said...

//வசந்த் சார், என்னிடம் உள்ள ப்ரச்னை என்னவென்று உண்மையாகவே எனக்குப் புரியவில்லை. தயவு செய்து இந்த பின்னூட்டத்திலோ, அல்லது ஒரு புதிய பதிவிலோ அல்லது என் தனி மின்னஞ்சலிலாவது சொல்லிவிடுங்கள்.//

அன்புள்ள சுதர்சன்,

நீங்கள் என்னிடம் கேட்டு கொண்டதால் இதை எழுதுகிறேன்.

நீங்கள் உங்களையும், நீங்கள் அன்றாடம் தொடர்பு கொள்ளும் உங்களுக்கு பரிச்சயமான சமூகத்தையும், அதன் மூலம் உங்களுக்கு இருக்கும் மதிப்பீடுகள் நியாயங்கள், தர்கங்கள் இதை முன்வைத்து, உங்களுக்கு பரிச்சயமில்லாத சமூகத்தை பற்றி பேசவும் அளந்து பார்கவும் புரிந்துகொள்ளவும் முயல்கிறீர்கள். பிரச்சனை என்று கேட்டால் இதைத்தான் சொல்லமுடியும்.

பொறுப்புணர்வு என்பதற்கு உங்களுக்கு ஒரு அர்தம் இருக்கிறது. அதையே மேலே பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் யோசித்து பாருங்கள். பொறுப்புணர்வு இல்லாமல் மீனவ வாழ்க்கை சாத்தியப்படுமா என்று. எல்லைகள் தெரியாத கடலில் பயணம் போகும்போது பொறுப்புணர்வு இல்லாமல் எப்படி அவர்களால் வாழமுடியும்? அவர்களுக்கு பொறுப்புணர்வு என்பதற்கு வேறு பல அர்தங்கள் இருக்கலாம். அத்தககய ஒரு பொறுப்புணர்வு நமக்கு என்றுமே தேவைஉப்படுவதில்லை. அந்த பொறுப்புணர்வு தேவை இல்லாத சந்தர்பங்களில் சீட்டாடுவதும், குடிப்பதும் அவர்களுக்கு மிக தேவையான விஷயமாய் கூட இருக்கலாம். நீங்கள் தர்கரீதியாய் ஒரு பொறுப்பு என்று வந்தடைந்த ஒன்றை அவர்களிடம் எதிர்பார்பது நியாயமல்ல என்பதைத்தான் நான் சொல்லவிரும்பினேன்.

நான் உங்களை குறிவைத்து பேசவில்லை. 'நன்றி கெட்ட ஜனங்கள்' என்கிற வகையில் கூட நேரடியாய் வலைப்பதிவுகளில் பேசப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு சந்தர்பத்திலாவது கருத்து சொல்லவேண்டுமே என்றுதான் சொன்னேன். மற்றபடி நானும் எனக்கு தெரிந்த அளவூகோல்களை வைத்துதான் எல்லாவற்றையும் அணுகுகிறேன். அது போதுமானவையல்ல, அதை வைத்து எல்லாவற்றையும் விளங்கிகொள்ள முடியாது என்ற தெளிவு மட்டும் இருக்கிறது.

நீங்கள் ஒரு பக்கம் மக்கள் சார்ந்த அக்கறையினால் கூட சொல்லியிருக்கலாம். உதாரணமாய் மீனவ சமூகத்தினரிடம் போய் 'குடிப்பதன், சிட்டாடுவதன்' பிரச்சனைகளை சொன்னால் அப்படி எடுத்துகொள்ள முடியும். இங்கே வலைப்பதிவுகளில் இதை சொல்வதற்கு என்ன பலன் இருக்க முடியும்? அந்த மக்களின் பிரச்சனைகளுக்கு அவர்களே காரணம், பிரச்சனை அவ்வர்களிடம் மட்டுமே இருக்கிறது, அவர்களை சுரண்டுபவர்களிடம் இல்லை, என்கிற வாதத்திற்கு வலு சேர்க்க மட்டுமே உதவும்.

நீங்கள் விவாதிக்க முன் வந்தமைக்கு நன்றி. இதை முன்வைத்து பேச நிறைய இருக்கிறது. என்னால் விரிவாய் விவாதமாய் எடுத்து செல்லவோ, கலந்து கொள்ளவோ முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். வேறு ஒரு சந்தர்பத்தில் இன்னும் விரிவாகவும், நிதானமும் என்னால் விவாதிக்க முடிந்தால் கலந்து கொள்கிறேன். இன்றிலிருந்து இணையம் பக்கம் தலைகாட்டுவதே குறைந்துவிடும்.

2/10/2005 5:51 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

2/11/2005 12:06 AM  
Blogger ROSAVASANTH said...

http://lldasu.blogspot.com/2005/02/blog-post_09.html

//அமெரிக்கர்களைப் போல, ஆங்கிலேயர்களைப் போல ஒரு வல்லரசைத் தமிழன் என்றாவது உருவாக்கியது உண்டா? உண்டு என்ற பதில் நம் குனிந்த தலையை நிமிற வைக்கிறது.. இந்த பெருமையை தந்தவன் பேரரசன் இராஜேந்திர சோழன்.//

அடப்பாவி, இங்கே ஒருத்தருக்கு கூடவா அடுத்தவன் நாட்டை நாம் போர் புரிந்து வீழ்த்துவதில் ஒரு பெருமையும் இல்லை, அது அராஜகம் என்று தோன்றவில்லை. அப்பறம் ஆங்கிலேயன் நம்மை ஆண்டதிலும், அமேரிக்கா உலகத்தையே புணர்வதிலும் என்னய்யா (அதாவது உங்கள் வாதப்படி) தப்பு?

நக்கீரன், சோழர் காலத்தில்தான் இங்கே ஜாதி கறாராய் நிறுவனமயமானது என்று தெரியுமா?

2/11/2005 12:07 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter