ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, January 26, 2005

விளக்கம்!

அனுராக் டீஜேயின் பதிவில் நான் இட்ட கோபப்பின்னூட்டத்தை முன் வைத்து ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அது குறித்த ஒரு அவசர விளக்கமே இது. எனக்கு இருக்கும் வேலை நெருக்கடி காரணமாய், என் கடந்த பதிவின் பின்னூட்டங்களில் நடக்கும் விவாதத்திலிருந்து தற்காலிகமாய் விலகி கொண்டிருக்கிறேன். இந்த நெருக்கடி திங்கள் மதியம் வரை தொடரும். அதற்கு பிறகு நான் அது குறித்து கருத்து சொல்லலாம். இப்போது அனுராகிற்கு மட்டும் என் தரப்பிலிருந்து விளக்கம்.

அவர் என்னை பற்றி -அடிக்கடி நிதானமிழப்பவர் என்று- சொல்லும் கருத்து குறித்து பேச விரும்பவில்லை. இதற்கான கரணத்தை நான் பதிவுகள் விவாதகளம் தொடங்கி பல முறை சொல்லியிருக்கிறேன். ஒருவர் தன்னை பற்றிய தீர்ப்பை/கணிப்பை தானே சொல்லமுடியாது என்பதுதான். இது ஒரு தன்னடக்கம், தற்பெருமை அல்லது இதற்கிடையேயான ஏதோ ஒரு 'மயிரிழை' தொடர்பான பிரச்சனை இல்லை. அப்படி ஒரு தீர்ப்பு/கணிப்பு சாத்தியமில்லை என்பதே. தன்னை பற்றி சொல்ல, தான் கையில் வைத்திருக்கும் சட்டகத்தின் உள்ளே உட்கார்ந்து கொண்டு, தனது சட்டகத்தை பற்றி பேசவேண்டி உள்ளது. எந்த ஒரு சட்டகத்தின் உள்ளே உட்கார்ந்துகொண்டும், அதனுள் தர்கிக்கபடும் விஷயங்களை பற்றி மட்டுமே பேசமுடியும். சட்டகத்தை பற்றியே பேசவேண்டுமானால் அதற்கு வெளியே வந்துதான் பேசவேண்டும் என்பதால், தனக்கு தானே வெளியே வர வாய்பில்லாததால், அது சாத்தியமில்லை. கடவுளால் கூட அது முடியாது (அவர் தர்கத்திற்கு கட்டுபடுவாரெனில்.) ஆகையால் என்னை பற்றிய கருத்துகளுக்குள் போகாமல் அது குறித்த தகவல்ரீதியான விஷயங்களை மட்டுமே பேசுகிறேன்.

நான் எழுதிய பல மறுமொழிகளை நானே 'நீக்கிவிடுவதிலிருந்து' என் நிதானமின்மை தெரிகிறது என்கிறார். இது உண்மையல்ல. நான் சற்று கோபமாய், நிதானமின்றி எழுதிவிட்ட காரணத்தால் எந்த பின்னூட்டத்தையும் நீக்கிய நினைவு இல்லை. அப்படி நிதானமின்றி எழுதியதாய் எனக்கு தோன்றினால் அதற்கு பொறுப்பேற்று *மன்னிப்பு கேட்பேனே* ஒழிய நீக்குவதில்லை. திண்ணணயில் மட்டையடித்து கொண்டிருந்த காலம் தொடங்கி என் உள்ளிடுகைகளை எடிட் கூட செய்வது கிடையாது.

பின்னூட்டங்கள் சிலமுறை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்ததால் நீக்கியதுண்டு. குறிப்பிட்ட நபருடன் பேச விரும்பாமல், அவருக்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் நீக்கியதுண்டு. இவ்வாறு நீக்கப்பட்ட பின்னூட்டத்தை கவனித்தால் அது மிக *நிதானமாய்* எழுதபட்டிருக்கும். வந்தியதேவனின் பதிவில் நீக்கபட்டதும் (அதை என் பதிவில் இட்டிருக்கிறேன்), சிவக்குமார் பதிவில் எழுதி நீக்கபட்டதும் (அது அருண் பதிவில் உள்ளது ) அந்த வகையை சார்ந்தது. என் கடந்த பதிவில் நீக்கபட்டதற்கு காரணம் இப்போது இதில் நேரவிரயம் செய்ய விருப்பமில்லாமையே. இது தவிர நிதானமின்றி எழுதி (அப்படி எழுதவில்லை என்று சொல்லவில்லை) எதையும் நீக்கியதில்லை.

உதாரணமாய் திண்ணை விவாதகளத்தில், வீரப்பன் வேட்டை என்ற பெயரில், எந்த அதிகாரமும் இல்லாத அப்பாவி மக்கள் மீது நிகழ்ந்த வன்கொடுமைகளை நடக்கவே இல்லையென்றும், அது குறித்து பேசுபவர்களை 'வீரப்பன் தொண்டர்' என்றும் சொன்ன அம்பியை 'ராஸ்கல்' என்று விளித்திருக்கிறேன். இது நிதானமின்றி சொன்னது அல்ல. மிக நிதானமாய், 'அன்பே சிவம்' படத்தில் மாதவனை அருகில் அழைத்து முகத்தில் கமல் நிதானமாய் ஒரு குத்துவிடுவாரே, அந்த நிதானத்துடன் சொல்லப்பட்டது. அதே போன்ற நிதானமாய் இல்லையெனினும், இப்போது பேசப்படும், டீஜே பதிவில் இட்டதும் மனதார, பின்னர் வருத்தப்பட தேவையின்றி, சொல்லப்பட்டது.

இந்த சந்தர்பத்தில் குறிப்பிடப்படும் ஈழப்பிரச்சனை தொடர்பான கருத்துக்களை இங்கே காணலாம்.

இங்கே வெளிவந்த கருத்துகளுடன் வெறும் வேறுபாடு மட்டும் என்னால் காணமுடியாது, அவற்றில் பல பச்சையான இனவாதம் என்பது என் கருத்து. உண்மையில் என் கோபத்தை காட்ட வார்த்தைகள் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அளவுக்கு மீறி கோபம் எற்படும்போது கையில் கிடைத்த சீப்பு, சோப்பை தூக்கி எறிவது போன்றதுதான் இது. கனமான பொருள் எதுவும் என் கையில் அகப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது.

மேலே உள்ள சுட்டியில் எழுதப்பட்ட பல -குறிப்பாய் வந்தியதேவனது- கருத்துக்கள் மிக தெளிவாக அடுத்தவரை புண்படுத்தும் வெறியில் எழுதப்பட்டது. அதுவும் என்னை போன்றவன் மீது அந்த வெறிவந்தால் மன்னிக்கலாம். எத்தனையோ சோகங்களையும், இழப்புக்களையும் சுமந்து நிற்பவரின் மீது நிகழ்த்தப்பட்ட வெறி. உண்மையில் அவர்களைத்தான் புண்படுத்த முடியும். என்னை எந்த வார்த்தையாலும் புண்படுத்த முடியாது. (ஏற்கனவே மேற்சொன்ன இனவெறி கருத்துகளை படித்து புண்பட்டுவிட்டதால் அந்த விஷயத்திலும் மேற்கொண்டு புண்படுத்த சாத்தியமில்லை.) அதனால்தான் எவனும் வாயை திறக்கவில்லை. விஷயத்தை சரியாய் விளங்கிகொள்ளாத அனுராக் திறந்திருக்க்கிறார்.

சிவக்குமாரை பொறுத்தவரை அவர் எழுதியது மிக நிதானமாய் தெரிந்தாலும் (அதன் விஷத்தன்மையே அதுதான்), மிக கடைந்தெடுத்த கயமைத்தனத்துடன் எழுதப்பட்டுள்ளது. மற்றவர்களின் கருத்தை திரிப்பதில் இந்த நபரைவிட திறமை (அதாவது நேர்மையின்மை) காட்டிய ஒருவரை நான் எதிர்கொண்டதில்லை. ஒரு உதாரணமாய் 'ஈழத்து மக்கள் எல்லோரும் இந்தியர்களை வெறுப்பதாய்' அவர் திரித்து எழுதியுள்ள பின்னூட்டத்தை சொல்லலாம். இந்த பெயரிலி என்ற அப்பாவியும் போய் இதற்கெல்லாம் பதில் சொல்லிகொண்டிருக்கிறது.

வந்தியத்தேவனின் இனவெறுப்பும், சிவக்குமாரின் கயமைத்தனமும் மிக எளிதாய் பலருக்கும் புரியகூடும். அது புரியாத அல்லது புரியாமல் நடிப்பவர்களிடம் பேச எனக்கு எதுவும் இல்லை. ஆனால் மூக்கனின் கருத்துக்கள் ஒரு தவறான கருத்தாக்கமாக மட்டும், நட்புரீதியாய் வேறுபடதக்கதாகவும் இங்கே பலரால் பார்க்கபடுவதாய் தெரிகிறது. குறிப்பாய் பெயரிலி, சுந்தரவடிவேல், தங்கமணி போன்றவர்களாலும் அவ்வாறு பார்க்கபடுகிறததய் தெரிகிறது. அதனால் அது குறித்து மட்டும் கட்டுடைக்கும் நோக்கம் உண்டு. சில வாரங்களில் அல்லது மாதங்களில் ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தி நிச்சயமாய் அதை செய்வேன்.

டீஜே, பின்னூட்டத்தில் வெட்டி ஒட்டிய என் கருத்தில் சொன்னதுபோல், நான் எல்லா இந்தியரையும் அவ்வாறு குறிப்பிடவில்லை. வெள்ளை இனவெறியன் என்று ஒருவனை திட்டினால் எல்லா வெள்ளை நிறத்தவரையும் திட்டியதாய் ஆகாது. அதுபோலவே இதுவும். ஆகையால் "பத்ரி, காசி, மாலன் போன்ற வலைப்பதிவு முன்னோடிகள் உட்பட நாங்கள் நூற்றுக்கணக்கான வலைப்பதிவர்கள் இந்தியத் தமிழர்கள் தான். ரோசாவின் மேற்கண்ட வசை எங்களுக்கும் சேர்த்தா?" என்று அனுராக் கேட்பதற்கு பதில் "இல்லை" என்பதே!

அடுத்து "இந்தியத் தமிழர் - ஈழத்தமிழர் என்ற பேதமோ, பிராமணர் அல்லாதார் - பிராமணர் என்னும் மாறுபாடோ கருத்துக் களத்தில் வெளிக்காட்டப் படுவது நியாயமல்ல." என்று அனுராக் சொல்வது எந்த விதத்திலும் நியாயமானதோ ஏற்புடையதோ அல்ல. இது ஒரு எலீட் வன்முறை! 'வித்தியாசங்களை பேசாதே' என்பது, பொது அடையாளம் என்ற பெயரில் தன் அடையாளத்தை திணிப்பது மட்டுமே. இதன் வன்முறை தலித்தியம் பேசுபவர்களை சாதிவெறியர்களாகவும், தங்கள் பிரச்ச்னைகளை பேசும் ஈழத்தமிழர்களை இனபற்றாளர்களாகவும் காட்டகூடிய தந்திரத்தில் வெளிப்படும். எல்லா எலீட் தன்மைகொண்ட நாசுக்கான இனவாதிகளிடம் வெளிப்படும் தந்திரம் இது. அனுராக் அவர்கள் இதை ஒரு வெகுளித்தனமாக மட்டுமே முன்வைத்திருப்பார் என்று எடுத்து கொண்டு, நட்புரீதியில் இதற்கு மாறுபடுகிறேன்.

நான் டீஜேவிற்கு உவப்பான கருத்துகளை மட்டும் எப்போதும் முன்வைப்பவனல்ல என்பது குறைந்த பட்சம் டீஜேவிற்கு தெரியும். குறிப்பாய் புலிகளை நான் கடுமையாய் எதிர்ப்பது அவருக்கு தெரியும். இந்த முரண்பாடுகளுகிடையில் என் தரப்பில் பேசிய அவருக்கு என் நன்றி.

பொதுவாய் சிக்கல் வரும்போது அதை மௌனத்தால் எதிர்கொள்வதும், கோபப்படுபவன் அவசரத்தில் சிந்தும் வார்த்தைகளை திரித்து தன் அரசியலுக்கு சாதகமாய் பயன்படுத்துவதுமே பொதுவாய் நடப்பது. இதற்கான உதாரணக்களை பேசதொடங்கினால் அலுப்புதான் தட்டும். இந்த யதார்தத்தில் வெளிப்படையாய் தன் கருத்துகளை முன்வைத்த அனுராகிற்கு என் மனப்பூர்வமான நன்றி.

Post a Comment

27 Comments:

Blogger ROSAVASANTH said...

மறுமொழிகளும், மனக்காயங்களும் என்று தலைப்பிட்டி அனுராக் எழுதியுள்ளார். அதாவது என் வசை சொற்களால் ஏற்படக்கூடிய மன்க்காயம் குறித்து பேசியுள்ளார். இப்போது நான் மேலே கொடுத்த ஈழபிரச்சனை குறித்த சண்டையினால் பலருக்கு (எனக்கும்) ஏற்பட்ட மனக்காயம் குறித்து வேறு யார் பேசுவார் என்று பார்போம்!

1/26/2005 4:09 PM  
Anonymous Anonymous said...

Dear Rosa,
There is no doubt that the comments in Mooku sundar's post are in utter bad taste! But, as I mentioned on 2 previous occasions, using strong words against individuals is not going to actually encourage purposeful and meaningful argument or discussion. It will only spoil the atmosphere and generate hatred. Your views told (without much emotion and anger) will have better impact on people having differing views. This is my opinion. Pl. tone down a bit when articulating your views. This is my suggestion.
enRenRum anbudan
BALA

1/26/2005 4:40 PM  
Blogger SnackDragon said...

அன்றொரு நாள் இதே நிலவில்...
http://karthikramas.blogdrive.com/archive/74.html
சில புரிதல்களுக்காகவும், ரோசாவின் கேட்ச்-அப் காகவும் இது.

1/26/2005 11:49 PM  
Blogger SnackDragon said...

அன்றொரு நாள் இதே நிலவில்...
http://karthikramas.blogdrive.com/archive/74.html
சில புரிதல்களுக்காகவும், ரோசாவின் கேட்ச்-அப் காகவும் இது.

1/26/2005 11:50 PM  
Blogger ROSAVASANTH said...

DEar Bala and Karthik,

Thanks for the comments. I will write something tommorow. Now I am just absconding. thanks!

1/27/2005 12:57 AM  
Blogger SnackDragon said...

http://karthikramas.blogspot.com/2005/01/blog-post_26.html

1/27/2005 2:13 AM  
Blogger வலைஞன் said...

நன்றி ரோசா

//'வித்தியாசங்களை பேசாதே' என்பது, பொது அடையாளம் என்ற பெயரில் தன் அடையாளத்தை திணிப்பது மட்டுமே. இதன் வன்முறை தலித்தியம் பேசுபவர்களை சாதிவெறியர்களாகவும், தங்கள் பிரச்ச்னைகளை பேசும் ஈழத்தமிழர்களை இனபற்றாளர்களாகவும் காட்டகூடிய தந்திரத்தில் வெளிப்படும். எல்லா எலீட் தன்மைகொண்ட நாசுக்கான இனவாதிகளிடம் வெளிப்படும் தந்திரம் இது.//

வித்தியாசங்களை பேசக்கூடாது என்பதல்ல. பேசும் மொழியின் தன்மை குறித்தே நான் கூறவந்தது. உங்கள் வார்த்தையின் கடுமை...அதை அறச்சீற்றம் என்பதாக நீங்கள் கருதினாலும் எனக்கு அந்தப்பதிவு தந்த அதிர்வு கடுமையானது. இந்த விவாதங்களில் நான் பங்கேற்காதபோதும்.

//நான் மேலே கொடுத்த ஈழபிரச்சனை குறித்த சண்டையினால் பலருக்கு (எனக்கும்) ஏற்பட்ட மனக்காயம் குறித்து வேறு யார் பேசுவார் என்று பார்போம்!//

இத்தகைய மனக்காயங்களை இனியாவது தவிர்க்கலாமே! தனிப்பட்ட தாக்குதல்களை விடுத்தும் விவாதிக்க முடியும்தானே.... கருத்துக்களங்கள் போர்க்களங்களாவதில் பயனுண்டா? தவிரவும் இது போன்ற அரசியல் விவகாரங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். அதை எந்த விவாதமும் மாற்றிவிட முடியாதென்பதும் உண்மை. இந்த நிலையில் அதை பகைப் புலமாக மாற்றுவதென்பது வேண்டாமே.

1/27/2005 4:17 AM  
Anonymous Anonymous said...

90களில் soc.culture.tamil, soc.culture.india போன்ற செய்திக் குழுக்கள் விவாதங்களுக்கான பொதுத் தளங்களாக இயங்கி வந்தன. பின் இணையத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் தனி நபர்கள் தங்களுக்கென விவாத அரங்கை உருவாக்கிக்கொள்ள முடிந்ததில், தமிழில் மட்டும் நூற்றுக் கணக்கில் வலைப்பதிவு தளங்கள் இருக்கும் இப்போதைய சூழ்நிலையில் ஒரு சில தளங்களுக்கு மட்டுமே சென்று படிக்கவோ, விவாதங்களில் பங்கு பெறவோ முடிகிறது. அங்கும், இங்குமாக மேய்ந்தாலும், நான் தவறாமல் சென்று பார்க்கும் சில தளங்களில் ரோசாவின் தளமும் ஒன்று. அதற்கானக் காரணம் அவர் எப்போதாவது பயன்படுத்தும் 'வசை'ச் சொற்களைப் படித்து குதூகலிப்பதனால் அல்ல. 'நாகரிக'மாக எழுதுவோர் தொட மறுக்கும் விஷயங்களையும் அணுகும் தைரியமும், தர்க்கரீதியாக, சரளமாக அலசும் திறமையும் தான். அவருடைய விவாதங்களில் இருக்கும் இன்னொரு முக்கியமான அம்சம் இரட்டை நியாயம் பேசாத நேர்மை. இந்த அம்சத்தை நாகரிகக் கனவான்களிடம் காண்பது அரிது. விவாதங்களின் உட்பொருளை அதனளவில் எதிர்கொள்ள இயாலாமல் போகும்போதே அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளைப் பிடுங்கி எறிய வேண்டிவரும். இப்போது ரோசாவின் மீது எறியப்படும் அம்புகள் அத்தகையனவே. உதாரணத்திற்கு, 'சுனாமி வெளிப்படுத்திய வக்கிரங்கள்' பதிவில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு நேர்மையான பதிலை நான் எங்கும் பார்க்கவில்லை. ஆனால் அவர் பயன்படுத்திய 'நாய்' மட்டும் திரும்பத் திரும்ப வந்து உறுமிக்கொண்டிருக்கிறது.

அவர் வைரமுத்துவை 'நாய்' எனக் குறிப்பிட்டதை பின்னவரின் போலித்தனமான கவிதையை மேலோட்டமாகப் படித்தவர்களுக்குக் கூட பெரிதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காது. அப்போதிருந்த மனநிலையில், சுனாமியை அனுப்பியதாகக் குற்றம் சாட்டி சுமத்ராவைப் பார்த்து வைரமுத்து குரலெழுப்பியது குரைப்பது போலத்தான் எனக்கும் தோன்றியது ('திங்களை நாய்க் குரைத்தற்று' என்பது போல). 'இந்திய ஓநாய்கள்' என்று குறிப்பிட்டபோது இந்தியனான எனக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை. இந்தியர்களுள் ஓநாய்களாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் பதற்றமேற்படவேண்டும்.

ரோசாவின் பதிவுகளை தொடர்ந்து படிக்க விரும்பும்,

மு. சுந்தரமூர்த்தி

1/27/2005 4:31 AM  
Anonymous Anonymous said...

சுந்தரமூர்த்தி! ஆச்சரியம்தான். நீ தமிழ்தேசிய ஓநாய் என்று தானே நினைத்திருந்தேன். எப்போது இந்திய ஓநாயாக ஆனாய்?

1/27/2005 11:05 AM  
Blogger ROSAVASANTH said...

கார்திக், அனுராக், சுந்தர மூர்த்தியின் கருத்துகளுக்கு நன்றி.

என் பதிவில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம். என்னை குறித்து எழுதபட்ட எந்த விஷயமும் நீக்கப்படாது. மற்றவரை தாக்கி எழுதுவது குறித்து நான் கொஞ்சம் கவனமாய் இருப்பேன்.

சுந்தரமூர்த்தி இந்த அநாமதேய பின்னூட்டத்தை புறக்கணிப்பது நல்லது. தொடர்ந்து அனாமதேயமாய் எழுதுவது, எழுதும் கருத்துக்கு பொறுப்பு ஏற்றுகொள்ளாமல் இருப்பது, வசை மற்றும் திரித்தலாய் கருத்து சொல்லிவிட்டு ஓடிவிடுவது, யார் எழுதியது என்பதில் குழப்பம் ஏற்படுத்துவது... என்று இந்த கூட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேறு பெயர்களில் எழுதவும், சிண்டு முடியவும் இது தயாராய் இருக்கிறது. இந்த பிழைப்பின் கேவலம் குறித்து விளக்க வேண்டியதில்லை. நான் நேரடியாய் பொருட்படுத்த கூடிய கருத்து வந்தால் ஒழிய இவற்றை கணக்கில் எடுத்து கொள்வதில்லை.

பேச எத்தனையோ விஷயம் இருக்கிறது. இவற்றை எரிதங்களை போல் புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை.
அனுராக் எழுதியுள்ளது குறித்து அடுத்த பதிவில் எழுத உத்தேசம்.

1/27/2005 6:09 PM  
Blogger Thangamani said...

//'வித்தியாசங்களை பேசாதே'//
பேசுவதென்பதே வித்தியாசங்களை வெளிப்படுத்தும் முயற்சிதானே!
தோன்றியதை எழுதினேன் வசந்த். நன்றி

1/28/2005 1:45 PM  
Anonymous Anonymous said...

//என்னை குறித்து எழுதபட்ட எந்த விஷயமும் நீக்கப்படாது. மற்றவரை தாக்கி எழுதுவது குறித்து நான் கொஞ்சம் கவனமாய் இருப்பேன். //
சூப்பர்.. இதெப்படி இருக்கு! அய்யா ஊர் மேஞ்சி பிளாக் பிளாக்கா தேவடியா மவனே, தாயோளின்னு ஊர்ப்பட்டவனை (அதுவும் இங்கிலிபீஸில) திட்டிட்டு வருவார். அதையும் விலாவாரியா நியாயப்படுத்துவார். இங்கே யாரு எதும் சொல்லிடக்கூடாது!
அப்படிப்போடு அருவாளை!

என்னடா துண்ணுறிங்க?

1/28/2005 1:49 PM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணி, கருத்துக்கு நன்றி.

அநாமதேயத்திற்கும் நன்றி. எவ்வளவு தூரம் கேவலமாய் பிழைத்துகொண்டு, அதே நேரம் வெட்கமில்லாமல் கேள்வியும் கேட்கமுடியும் என்று உலகுக்கு எடுத்து சொல்வதற்கு! ஆனால் என்ன, அடையாளம் தெரியாமல் எழுதுவதால் கேவலம் வெளியில் தெரியாது.

//இங்கே யாரு எதும் சொல்லிடக்கூடாது!//

முந்தய பின்னூட்டத்தில் நான் எழுதியது :"என் பதிவில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம்."

//என்னடா துண்ணுறிங்க?//

நான் செரிக்க தருவதை விட்டு விட்டு, நான் கழித்து போடுவதை எல்லாம் தின்று கொண்டிருக்கும் ஒருவன் , இப்படி எல்லாம் கூட கேள்வி கேட்கமுடியுமா? இந்த பிறவியை எதனுடன் ஒப்பிடமுடியும்?

1/28/2005 2:20 PM  
Blogger சன்னாசி said...

This comment has been removed by a blog administrator.

1/28/2005 2:38 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி மாண்ட்ரீஸர். நான் நீங்கள் நீக்குவதற்கு முன் படித்துவிட்டேன். மன்னிக்கவும்!

1/28/2005 3:19 PM  
Blogger சன்னாசி said...

தேவையில்லாத திசையில் பிறகு விவாதம் போய்க்கொண்டிருக்கும், அனைவருக்கும் தேவையற்ற நேர விரயம். அதுதான் நீக்கித் தொலைத்தேன்; வேறு காரணமில்லை.

1/28/2005 4:06 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி. அதனால் நோ ப்ராபளம்!

1/28/2005 4:25 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Dear ரோசா,

//என்னை குறித்து எழுதபட்ட எந்த விஷயமும் நீக்கப்படாது. மற்றவரை தாக்கி எழுதுவது குறித்து நான் கொஞ்சம் கவனமாய் இருப்பேன். //

சற்று விளக்கவும். மற்றவரை தாக்கி எழுதுவது நீங்கள் எழுதுவது குறித்தா, அல்லது, உங்கள் பதிவின் பின்னூட்டப் பகுதியில் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுவது குறித்தா? ஒருவர் உங்கள் பதிவின் பின்னூட்டப் பகுதியில் இன்னொருவரை கடுமையாகச் சாடி எழுதியிருந்தால் அதை நீக்கி விடுவீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

என்றென்றும் அன்புடன்
பாலா

1/28/2005 5:25 PM  
Blogger ROSAVASANTH said...

நான் எழுதும் எல்லவற்றிற்கும் நான் பொறுப்பு எடுத்துகொள்வேன். அது குறித்து விளக்கமளிப்பதோ, திருத்துவதோ, மன்னிப்பு கேடபதோ என் வேலை.

என் தளத்தில் மற்றவர்களை வசைபாட, அதுவும் தன் பெயர் போடாமல் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் *அநாமதேயமாக வந்து* இஷ்டத்திற்கு ஒருவன் திட்டிவிட்டு போவானெனில் அது குறித்து என்ன செய்யலாம் என்று நான் யோசிப்பேன். என்ன செய்யலாம் என்று இப்போதும் எனக்கு தெளிவில்லை. அந்த வசைகளை பொறுத்து நடவடிக்கை அமையும். நிச்சயமாய் எந்த ஒரு பின்னூட்டமும் தடம் இன்றி நீக்கப்படாது. ஒருவேளை சில வசை சொற்கள் நீக்கப்படலாம்.தெரியாது. முடிவெடுக்கவில்லை.

அதுவும் பாலா மாதிரி ஒரு 'இணைய அடையாளம்' (ஏதேனும் குறிப்பிட்ட ஒரு பெயர் போதும் இதற்கு) வைத்து கொண்டு செய்பவருக்கு நேராது. இது மற்றவர்களை நோக்கி வைக்கபடும் வசைகளை பொறுத்து கவனமாய் இருப்பேன் என்று சொன்னதின் விளக்கம்.

மற்றபடி என்னை பற்றி எது எழுதினாலும் எந்த பிரச்சனையும் இல்லை. எந்த நடவடிக்கையும் இராது.

1/28/2005 5:36 PM  
Blogger ROSAVASANTH said...

//கடுமையாகச் சாடி எழுதியிருந்தால் ...//

எந்த கடுமையும் கருத்து ரீதியாய் வைக்கப்படும் எந்தவகை குற்றசாட்டும் பிரசனையில்லை. அநாமாதேயமாய் எழுதுவதை ஒரு வசதியாய் எடுத்துகொண்டு, அதனால் இன்னொருவார் பாதிக்க கூடும் (அதுவும் பழி யார் மீதும் விழாமல்) என்று தோன்றினாலே ஏதாவது செய்ய உத்தேசம்.

1/28/2005 5:40 PM  
Blogger ROSAVASANTH said...

யோசிப்பவர் பதிவில் நான் இட்ட பின்னூட்டம். மறந்துவிடாமலிருக்கவும். பின்னர் தேட அவசியமில்லாமல் இருக்கவும் இங்கே போட்டு வைக்கிறே,

http://yosinga.blogspot.com/2005/01/blog-post_27.html

இந்த புதிரை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. இதில் பயன்படுத்தப்படும் 9என்ற எண்ணின் சிறப்பையும் இன்றுதான் அறிந்தேன். நான் எழுதுவதை விட எளிய நிருபணம் இருக்குமா என்று தெரியவில்லை. (ஆனால் அது நிருபிக்கவேண்டும்!)

அன்னார் யோசிப்பவர் எங்கிருந்து அள்ளி போடுகிறார் என்று தெரியவில்லை. புதிரை படித்துவிட்டு ஒரு தன்னம்பிக்கையில் 'நாளை சொல்கிறேன்' என்று சொல்லிவிட்டு, இன்று மாலை யோசிக்க தொடங்கியபோதுதான் சொதப்பியது புரிந்தது. விடை உடனே வந்துவிடவில்லை. 'அசடு வழிய நேரிடுமோ?' என்று சீரயஸாகவே கவலைப்பட தொடங்கியபோதுதான் பொறி தட்டியது. அதை கீழே எழுதுகிறேன்.

கார்திக் சொன்னது புரியவில்லை. ஆனாலும் 'my own theorem' என்று ஒன்று கிடையாது. தியரம் என்று வந்தபின் எது எல்லோருக்கும் பொதுவாய்தான் இருக்கமுடியும். மூர்த்தி ரொம்பவே திக்குமுக்காட வைத்துவிட்டார். மனிதர் 'கால்குலேட்டரில்' போட்டு வகுத்தது மட்டுமில்லாமல் ரவுண்டப் வேறு பண்ணிவிட்டார். , 8ஐ 9ஆல் வகுத்தால் வரும் விடை .88 அல்ல, .88888....... ஒரு முடிவில்லாத எண். இது குறித்த ஒரு துணுக்கை கடைசியில் தருகிறேன்

பத்ரி சரியாய் பயணத்தை தொடங்கினாலும், அங்கேயே நின்றுவிட்டு தொடரவில்லை, இலக்கை அடையவில்லை.

கேள்வி 1. . அந்த கடைசி விடை ஏன் எப்பொழுதும் 9தால் வகுபடக் கூடிய எண்ணாகவே இருக்கிறது?

கேள்வி 2. இந்த வித்தை ஏன் வேலை செய்கிறது?

கேள்வி1இல் குறிப்பிடபடும் 'கடைசி விடை' என்பது எதை குறிக்கிறது என்பது கொஞ்சம் குழப்பமாய் உள்ளது. கேள்வியில் தெளிவாய் இல்லை.

நாம் தேர்ந்தெடுத்து கொள்ளுகம் அந்த பல இலக்க எண்ணிலிருந்து, தனியிலக்கங்களின் கூட்டுதொகையை கழித்து வரும் விடை பற்றியது கேள்வி என்று எனக்கு தோன்றவில்லை. பத்ரியும் ஜெயஸ்ரீயும் அப்படி எடுத்துகொண்டே , அது குறித்தே பேசியுள்ளனர்.

அவ்வாறு கழித்து வரும் விடையின் தனி இலக்கங்களை மீண்டும் கூட்டினால் வரும் விடை 9ஆல் வகுப்படக்கூடியது என்பதே கேள்வி என்று தோன்றுகிறது.அதுதான் கேட்ச். அதை பயன் படுத்தியே இந்த வித்தை ஏன் வேலை செய்கிறது என்று விளக்கமுடியும்.

ஒவ்வொன்றாய் தொடங்குவோம். இந்த 'வித்தை' எத்தனை இலக்க எண்ணுக்கு வேண்டுமானாலும் வேலைசெய்யும். ஆனால் எல்லோருக்கும் எளிமையாய் இருக்க நான்கு இலக்க எண்ணையே எடுத்துகொள்கிறேன். பொதுவான ஒரு 'N' இலக்க எண்ணுக்கு இதே வழிமுறையை அப்படியே பின்பற்றி எழுதலாம். ஒரே விஷயம் (10^N - 1) = 9(10^(N-1) + 10^(N-2) +......+10 +1) என்ற ஃபார்முலாவை பயன்படுத்த வேண்டும். (இதில் 10^N என்பது 10இன் N மடங்கு, அதாவது 1000 என்பதை 10^3 என்று குறிக்கிறேன்.) இனி நான்கு இலக்க எண்ணுக்கான விளக்கமும் நிறுவுதலும்.

தேர்ந்தெடுக்கும் எண்ணை பத்ரி விரும்பியது போல்
dcba
என்று குறிக்கவும்.

அதாவது பத்ரி சொன்னதுபோல் நமது எண்

d1000 +c 100+ b10 +a,

அதனுடன் தனி இலக்க கூட்டுதொகையான a + b + c +d யை கழித்தால் வருவது

999d + 99c +9b = 9(111d + 11c + 1b).

ஒரு வசதிக்கு இதை விடை1 என்ற வார்த்தையால் அழைப்போம். இது பின்னால் உதவும்.

இந்த விடை1ஐ

9 ( 100 +10 +1)d +9(10 +1)c + 9b

என்றும் குறிக்கலாம். ஒண்ணும் இல்லைய்யா, 111ஐ 100 +10 +1ண்ணு போட்டிருக்கேன். அதே மாதிரி 11ஐயும்.

அதை அப்படியே மாற்றி எழுதினால்

9 (d)100 + 9(d+c)10 + 9 (d +c +b)

என்றும் எழுதலாம். மேலே உள்ள விடை1ஐத்தான் இடம் மாற்றி இப்படி எழுதியுள்ளேன். சரிதானா என்று உற்று கவனித்து பாருங்கள்!

சரி, இப்போது உடனே அவசரப்பட்டு நம் கையில் இருக்கும் விடை1இன் தனி இலக்கங்களாக 9 d, 9(d+c), 9 (d +c +b) ஆகியவற்றை கருதமுடியாது. ஏனெனில் இவை இப்போது ஒரு இலக்க எண்கள் இல்லை. 9ஆல் பெருக்குவதாலும், மற்ற எண்களோடு கூட்டுவதாலும் இது வேறு ஏதாவதோவாக மாறிவிடக்கூடும். ஆனாலும் நமக்கு அது என்னவென்பது பிரச்சனையில்லை. நமக்கு தேவை அந்த தனி இலக்கங்களை கூட்டினால் வரும் விடை (இதுதான் அந்த கடைசிவிடை!) 9ஆல் வகுபடகூடியது என்ற தகவல் மட்டுமே. அதை நிறுவி விட்டால் காரியம் முடிந்தது.

அதை நிறுவும் முன், எப்படி காரியம் முடிந்தது என்று பார்போம். தனி இலக்கங்களை கூட்டினால் வரும் கடைசி விடை 9ஆல் வகுபட கூடியது என்று வைத்துகொள்வோம். இப்போது ஒரு தனி இலக்கத்தை நீக்கிவிடுவோம். ஆமாம், சுபமூகா கண்டுகொண்டது போல் 0வையும், 9ஐயும் நீக்கினால் பிரசனைதான். அதையும் ஏன் என்று பார்போம்.

நீக்கபட்ட தனி இலக்கம் 0விலிருந்து 9ற்குள் இருக்கும் ஒரு எண். எல்லா தனி இலக்கங்களையும் கூட்டினால் வரும் எண் 9ஆல் வகுபடகூடியது(இதை இன்னும் நிறுவவேண்டும், ஞாபகம் இருக்கட்டும்.) அப்படியெனில் நீக்கபட்ட எண்ணை தவிர்த்து மற்ற தனி இலக்கங்களை கூட்டி, அதை ஒன்பதால் வகுத்து, மீதம் வருவதை ஒன்பதில் இருந்து கழித்தால், அந்த நீக்கப்பட்ட தனி இலக்கம் கிடைக்குமன்றோ! இதுக்கு மேல புட்டு புட்டு வைக்கமுடியாது. ஒவ்வொரு வரியா பாருங்க. யோசிச்சு முடிவுக்கு வாங்க! அல்லது உதாரணக்களை கொண்டு மனசிலாய்க்கிகோங்க! ஆனால் நீக்கப்பட்ட எண் 9ஆகவோ, 0வாகவோ இருந்தால், வரப்போகும் மீதி எப்படியும் 0. அதனால் இப்பொது இரண்டு சாத்தியங்கள் உள்ளது புரிகிறதா?

ஆக செய்யவேண்டிய ஒரே வேலை இந்த கடைசிவிடை 9ஆல் வகுபடுவதை நிறுவுவது மட்டுமே. அதாவது நம்மிடம் விடை1 என்று

9 (d)100 + 9(d+c)10 + 9 (d +c +b)

என்பதாய் குறிக்கபடும் எண் இருக்கிறது. இதன் தனி இலக்கங்களை கூட்டி வரும் கடைசி விடை 9ஆல் வகுபடும் என்று நிறுவுவதே நாம் செய்யவேண்டிய ஒரே வேலை. இதற்கு விடை1றின் தனி இலக்கங்கள் என்னவென்று தெளிவாய் தெரிய வேண்டிய அவசியமே இல்லை. நமக்கு வேண்டியது அதன் கூட்டுதொகை மட்டுமே.

மேலே உள்ள விடை1இல் உள்ள 9 (d), 9(d+c), 9 (d +c +b), இந்த எண்களின் தனி இலக்கங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய் சேர்த்து கூட்டினால் வருவது, விடை1இன் தனி இலக்கங்களின் கூட்டுதொகை. அதாவது நாம் குறிக்கும் கடைசி விடை இதுதான். குண்ட்ஸாய் பார்த்தால் இது உண்மை போல் தெரிந்தாலும், இது அத்தனை தெளிவு இல்லை. ஆனால் 'மனக்கணக்கிலேயே' இது குறித்து தெளிய முடியும் என்றாலும் ஒரு பேப்பரும் பேனாவும் வைத்துகொண்டு சரிபார்க்கலாம். அதை அடுத்த பத்தியில் தருகிறேன். பார்க்க விரும்பாமல், குண்ட்ஸாய் சொன்னதிலேயே புரிந்ததாய் நினைப்பவர்கள் அதற்கு அடுத்த பத்திக்கு செல்லலாம். மற்றி, மாற்றி அல்ட் பட்டனை தட்ட விரும்பாமல் ஆங்கிலத்திலேயே எழுதுகிறேன்.

Please take a pen and paper to verify the following.
Suppose 9d = x10 + y, where x,y are one digit numbers. (Note that 9d is a two digit number, atmost.)

Similarly denote 9(d +c) = r100 +s10 + t

9(d +c +b) = u 100 +v10 +w

Then, by direct substitution and manipulation, one can verify that the above விடை1

( 9 (d)100 + 9(d+c)10 + 9 (d +c +b) )

can be written as follows.

(x +r)1000 + (y +s +u)100 +(t +v)10 + w.

இப்போது கொஞ்சம் மண்டையை உடைத்தால் மேற்சொன்ன "9 (d), 9(d+c), 9 (d +c +b), இவற்றின் தனி இலக்கங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய் சேர்த்து கூட்டினால் வருவது, விடை1இன் தனி இலக்கங்களின் கூட்டுதொகை. இப்போ இது தெளிவு. மனக்கணக்காக கூட தெளியலாம்.

ஆக இப்போது இந்த 9 (d), 9(d+c), 9 (d +c +b) இந்த ஒவ்வொரு எண்களின் தனி இலக்க கூட்டுதொகை 9ஆல் வகுபடும் என்று நிறுவினால் போதும்." அதான் எனக்கு தெரியுமே" என்று சரோஜா (தங்கவேலு) மாதிரி சொல்லாதீர்கள். கொஞ்சம் கவனமாய் எடுத்துகொண்டு சரி பார்க்கவேண்டும். அதாவது 9ஐ ஏதாவது ஒரு எண்ணால் பெருக்கினால் வரும் விடையை எடுத்துகொள்ளுங்கள். அதன் தனி இலக்கங்களை கூட்டுங்கள். அது மீண்டும் ஒன்பதால் வகுபடும். இதையும் நிறுவ முடியும் என்றாலும், "ப்ளீஸ் வேண்டாமே": என்று நீங்களே சொல்வீர்கள் என்று எடுத்துகொண்டு விட்டுவிடுகிறேன். உதாரண்மாய் 81, 72, 63, 153, 2718 இப்படி சில உதாரணங்களை கொண்டு சரிபார்க்கவும். இது ஒன்பதுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு. உதாரணமாய் 6ஐயும் 5யும் பெருக்கினால் 30. தனி இலக்கங்களை கூட்டினால் 3. இது 5ஆலும் வகுபடாது, 6ஆலும் வகுபடாது. 9மட்டுமே இந்த வேலையை செய்யும்.

ஆகையால் மேலே உள்ள 9 (d), 9(d+c), 9 (d +c +b) இவற்றின் தனி இலக்க கூட்டுதொகை 9ஆல் வகுபடும். அதனால் விடை1இன் தனி இலக்க கூட்டுதொகையான கடைசி விடை 9ஆல் வகுபடும். இதனால் இந்த வித்தை வேலை செய்கிறது. ஆமென்! இதற்கும் மேலே விளக்கங்கள் வேண்டுமானால் ஒருவாரம் கழித்து என்னை தொடர்புகொள்ளவும்.

முடிக்கும் முன்பு மூர்த்தியின் பாணியில் ஒரு துணுக்கு. அமேரிக்கவில் கால்குலேட்டர்கள் பையன்களை கெடுப்பது குறித்த துணுக்கு இது.

ஒரு வாத்தியார் பையனிடம் '1ஐ 3ஆல் பெருக்கி 3ஆல் வகுத்தால் என்ன வரும்' கேட்கிறார். பையன் கால்குலேட்டரில் போட்டு .99999999 என்கிறான். (கால்குலேட்டர் 8 இலக்கம் வரை காட்டும்.) ஆசிரியர் 'இல்லை, தவறு! 1ஐ 3ஆல் பெருக்கி 3ஆல் வகுத்தால் வரும் விடை 1தான்' என்கிறார். அதற்கு பையன் சொல்கிறான்.

"Yeah, if you round it up.".

1/28/2005 11:22 PM  
Blogger Jayaprakash Sampath said...

//." அதான் எனக்கு தெரியுமே" என்று சரோஜா (தங்கவேலு) மாதிரி சொல்லாதீர்கள்//

அது சரோசா இல்லை. முத்துலட்சுமி. முத்துலட்சுமி பிசைந்த சப்பாத்தி மாதிரி, மூளையைக் கசக்கிப் பிழிந்தாலும், ஒரு லெவலுக்கு மேல் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

1/29/2005 5:18 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

அன்புள்ள ரோஸாவசந்த்,
கணக்கு பற்றியப் பின்னுட்டம் திடீரென்று இங்கே எப்படி வந்தது? அதற்கு ஒரு பதில் பின்னூட்டமும் கூட! நிற்க.
பெயர் கூறாமல் பின்னூட்டம் இடுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. பார்க்க:
http://dondu.blogspot.com/2004_11_28_dondu_archive.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

1/29/2005 10:57 AM  
Blogger ROSAVASANTH said...

இகாரஸ் திருத்தியமைக்கு நன்றி!
எளிமையாய் இதை சொல்லகூடும் என்று தோன்றுகிறது. எனக்கு அப்போது தோன்றிய விளக்கம் இது. 'யோசிப்பவர்' என்ன விடை போடுவார் என்று தெரியாது. அதற்கு பின் மேலே கருத்து சொல்கிறேன்.

டோண்டு ஸார், மேலே கொடுக்கபட்டுள்ள இணைப்பில் போனால், கணித புதிர் கிடைக்கும்.
http://yosinga.blogspot.com/2005/01/blog-post_27.html

பெயர் கூறாமல் பின்னூட்டம் இடுவது எனக்கு அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை. (சில பிரச்சனைகள் உண்டு எனினும்.) பெயர் போடாமல் *திட்டுவதும்*, யார் மீதும் அந்த பழி விழாமலிருப்பதும்தான் பிரச்சனை. அதுவும் என்னை திட்டினால் பிரச்சனையில்லை, மற்றவரை திட்டுவதற்கு நான் இடமளிக்கும் போதுதான் பிரச்சனை. இப்போது எழுதியுள்ள (அநாமதேய) கருத்துக்கள் அப்பட் பட்டது என்று கூறவில்லை. எதிர்காலத்தில் (ஏற்கனவே வேறு இடங்களில் வந்துள்ளது போல்) வசைகள் வர நேர்ந்தால் என்ன செய்யலாம் என்பதே யோசனை!

1/29/2005 12:55 PM  
Blogger ROSAVASANTH said...

ஜெய்ஸ்ரீ, கருத்துக்கு மிக நன்றி!

ரொம்ப வீம்பா சொல்லிட்டு, நேத்து முயற்சி பண்ணபோதுதான் கையிலே பிடிபடாம வம்பா போனது தெரிஞ்சது. பத்ரியும் அப்படி முயற்சி பண்ணிட்டு விட்டுருக்கலாம். ஆனா நான் ஏற்கனவே வீம்பா சொல்லிவிட்டதால வாழ்வா சாவான்னு போட்டு பாக்க வேண்டியதாயிடுச்சி.

நீங்க சொன்னமாதிரி, வார்த்தைல ரொம்பதான் சுத்தியடிச்ச மாதிரி தெரியுது. விடை வந்த நிம்மதிலே அப்படியே எழுத தொடங்கியது. முயற்சி பண்ணியிருந்தா எளிமை படுத்தியிருக்கலாம். பார்போம் யோசிப்பு என்ன சொல்லுதுன்னு!

உங்கள் கருத்துக்கு நன்றி.

1/29/2005 9:24 PM  
Blogger வலைஞன் said...

தமிழில் சிறு பத்திரிகைகள் இடையேயான குழுச்சண்டைகள் பிரசித்தம். வலைப்பதிவுகளிலும் அப்படி ஒரு நிலையும் தனித்தனி குழுக்களாக பிரிந்திணைந்து மோதிக்கொள்வதும் நடந்துவிட வேண்டாமே என்ற எண்ணத்தில் நான் எழுதிய பதிவு அது. சிறுபத்திரிகைச் சூழலில் இருந்து வந்ததாலோ என்னவோ வலைப்பதிவுகளில் குழுச்சண்டைகள் வருவது எனக்கு உறுத்தலாக இருக்கிறது. இப்போதைக்கு கருத்துக்கள் ஆரோக்கியமாக வருவது திருப்தியாக இருந்தாலும் பெயரின்றி எழுதுவோரின் அத்துமீறல்களும் தவிர்க்கப் படல் வேண்டும்.

1/30/2005 3:37 AM  
Blogger ROSAVASANTH said...

அனுராக், கருத்துக்களுக்கு நன்றி!

1/31/2005 6:00 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter