ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, January 21, 2005

சண்முகநாதன் கதை

(ஷோபாசக்தியின் சமீபத்திய நாவலான 'ம்'லிருந்து, ஒரு சிறுகதை வடிவிலிருக்கும் இந்த அத்தியாயத்தை இங்கே தருகிறேன். மேலே தலைப்பு நான் தந்தது. ரோஸாவசந்த்)

கனகரட்ணம் சண்முகநாதன் என்ற மட்டக் களப்புத் தமிழர் சிற்றாண்டி எனும் ஊரை சேர்ந்தவர், நோயாளியான அவரது மனைவிக்கு உணவும் மருந்தும் இரண்டு வயதேயான அவரது மகளுக்கு பாலும் வாங்க சண்முகநாதன் பணம் தேடி அலைந்தார். கடைசியாக நகரத்தில் 'மில்' வேலைக்கு கூலிக்கு ஆள் எடுப்பதாக கேள்விபட்டு அவர் வேலை தேடி புறப்பட்டு சென்றபோது சிற்றாண்டி எல்லையில் வைத்து சிறிலங்கா விசேட அதிரடி படையினரால் சண்முகநாதன் கைது செய்யப்பட்டார். அப்போது வருடம் ஆயிரத்து தொளாயிரத்து என்பத்தாறாய் இருந்தது. கைது செய்யப்படும் போது சணமுகநாதனுக்கு வயது இருபத்தியிரண்டு.

அன்று சண்முகநாதனுடன் மேலும் அறுபத்தியிரண்டு தமிழர்கள் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப் பட்டார்கள். இவர்கள் அனைவரும் இராணுவ வாகனங்களிலே காட்டுக்குள் அமைந்திருந்த விசேட அதிரடி படையினரின் துப்பாக்கி சுடும் பயிற்சி முகாமிற்கு அழைத்து செல்லபட்டார்கள். மறுநாள் அதிகாலையில் அதிரடி படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டபோது அதுவரை இலக்குகளாக உபயோகிக்கபட்டுவந்த வைக்கோல் பொம்மைகள் அகற்றப்பட்டு பொம்மைகளின் நிலையில் சண்முகநாதனும் மற்ற கைதிகளும் நிறுத்த பட்டார்கள். அன்றய காலை பயிற்சியில் நாற்பத்தியிரண்டு அதிரடி படையினர் இலக்குகளை துல்லியமாய் சுட்டு தள்ளினார்கள். இருபத்தோரு படை வீரர்கள் இலக்கு தவறி சுட்டார்கள். சண்முகநாதனுக்கு காலிலே வெடி விழுந்தது. இன்னும் இருபது கைதிகள் குற்றுயிரும் கொலைஉயிருமாய் கிடந்தார்கள். காயமுற்றவர்களுக்கு கொழும்பு வைத்திய சாலையில் கட்டில்களோடு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

வைத்தியசாலையிலிருந்து நேராக சண்முகநாதன் இராணுவ தடுப்புமுகாமுக்கு அனுப்பப்பட்டர். அவர் அனுப்பப்பட்ட இராணுவ முகாம் அவிசாவளை பகுதியில் குரிவிட்ட என்னும் ஊரில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தடுப்பு முகாமில் சண்முகநாதன் இரண்டு வருடங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த தருணங்களில் நிலமையை தன் குடும்பத்தாருக்கு சொல்லிவிட எந்த வழியும் திறக்கவில்லை. சண்முகநாதனை தேடி கண்டுபிடிக்க அவரின் குடும்பத்தாலும் முடியவில்லை. ஒரு வருடம் கழித்து, சண்முகநாதனின் குடும்பம் செத்தவீடு கொண்டாடிற்று. சிற்றாண்டியில் இழவு நடந்துகொண்டிருந்தபோது கொழும்பில் இந்திய இலங்கை ஒப்பந்தம் நடந்தது. ஒப்பந்தத்தின் பின்னால் பல அரசியல் கைதிகள் விடுவிக்கபட்ட போதும் யாருக்கும் தெரியாமல் யாருடைய கவனத்தையும் பெறாமல் சண்முகநாதன் குரிவிட்ட தடுப்பு முகாமிலேயே இருந்தார். அடுத்த வருடம் அவர் போகம்பர பெருஞ்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போகம்பர சிறையில் ஒன்றல்ல இரண்டல்ல, பதினாறு வருடங்கள் சண்முகநாதன் பிரேதமாய் கிடந்தார். அவருடைய எல்லா பற்களும் குறடுகளால் பிடுங்கப்பட்டன. அவரின் முதுகு கோடாரியால் பிளக்கப்பட்டது. அந்த நிணமும் தசையுமான உடல் கிடங்கில் கந்தகத்தை கொட்டி எரித்தார்கள். அவரின் மார்புக் காம்புகளில் மின் அதிர்வு செலுத்தப்பட்டு பதினெட்டு வருடங்களாக வெளியில் எவருடனும் எந்தவித தொடர்பும் இல்லாதிருந்தவரிடம் "பிரபாகரன் எங்கே ஒளிந்திருக்கிறான்?" என்ற பைத்தியக்காரத்தனமான கேள்வி அதிகாரிகளால் கேட்கப்பட்டபோது வேலுப்பிள்ளை பிராபகரன் வன்னியில் சர்வதேச பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்தி கொண்டிருந்தார்.

சண்முகநாதன் சிறையதிகாரிகளால் மிருகத்தனமாக வேலைவாங்கப்பட்டார். பகல் முழுவதும் சுத்தம் செய்தல், உருளைக்கிழங்கு, காரட், போஞ்சி பயிரிடுதல், சமையல் போன்ற வேலைகளை செய்ய அவர் கட்டளையிடப்பட்டர். காலையில் ஒரு துண்டு பாணும் சீனியில்லாத கருப்புத்தேனீரும் மதியம் நூறுகிராம் சோறும் ஒரு பூசணிக்காய் துண்டு அல்லது சிறிதளவு கோவா மட்டுமே அவருக்கு உணவாக வழங்கப்பட்டது. சண்முகநாதன் சிறைப் பிடிக்கபட்ட நாளிலிருந்து அவருக்கு முகச்சவரம் செய்ய வழி எதும் இருக்கவில்லை. அவரின் தாடி இடுப்புவரை படர்ந்து கிடந்தது.

சிறைவளாகத்துள் இருந்த ஒர் சிறையதிகாரியின் வீட்டை சுத்தம் செய்ய சண்முகநாதன் போவதுண்டு. அந்த சிறையதிகாரியின் நோனா சண்முகநாதனுக்கு இரங்கினாள்.அவளின் உதவியோடு சண்முகநாதன் இரண்டாயிரத்து நான்காம் வருடம் ஏப்ரலில் ஒரு மழைக்கால இரவில் போகம்பர சிறையிலிருந்து தப்பி சென்றார். காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து கடைசியாக சண்முகநாதன் தனது ஊருக்கு வந்து சேர்ந்தபோது தனது வயதை மறந்து போயிருந்தார். சண்முகநாதனின் மனைவி இறந்து போயிருந்தார். இரண்டு வயதில் அவர் பிரிந்து சென்ற அவரது மகளுக்கு இப்போது நான்கு வயதில் ஒரு குழந்தையிருந்தது.

தப்பி வந்தவரின் கதையை இயக்கம் முதலில் நம்ப மறுத்தது. அவரை அரசாங்க உளவாளி அல்லது மாற்று இயக்கத்தை சேர்ந்தவர் என்று இயக்கம் சந்தேகமுற்றது. தன்னை விசாரணை செய்த இயக்கக்காரர்கள் நால்வரில் எவருமே பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தான் விசேட அதிரடி படையினரால் கைது செய்ய பட்டபோது பிறந்தேயிருக்கமாட்டார்கள் என்று சண்முகநாதன் அடித்து சொல்கிறார். இவர் சிறையிலிருந்த முழுக் காலங்களிலும் எந்த மனித உரிமை இயக்கமோ, செஞ்சிலுவை சங்கமோ அரசியல் கட்சியினரோ இவரை சந்திக்கவில்லை என்றும் கூறுகிறார். இவரைப் போலவே வந்தாறுமூலை, கிரான். முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி பகுதிகளை சேர்ந்த இருபது தமிழர்கள் வழக்குகள், விசாரணைகள் ஏதுமின்றி போகம்பர சிறையில் அநாதரவாய் கிடக்கிறார்கள் என்றும் சண்முகநாதன் கூறுகிறார்.

சண்முகநாதனின் உடல் சிதைக்கப்பட்டுவிட்டது. அவர் சற்று மனச்சமநிலை சரிந்தவராகவும் காணப்படுகிறார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நட்டஈடாக ஒரு வேலையும் வீடும் வழங்குமாறு இந்த அப்பாவி தொலைக்காட்சி பேட்டிகளில் அரசாங்கத்தை கோருகிறார். ஆனால் நட்டஈட்டை பெறுவதிலுள்ள ஒரு நுணுக்கமான சட்டச் சிக்கலையும் அவரே விபரிக்கிறார்.

அதாவது சண்முகநாதன் கைது செய்யப்பட்ட மறுவருடமே சண்முகநாதனின் மரண சான்றிதழ் கிராம நிர்வாக அதிகாரியால் சண்முகநாதனின் மனைவிக்கு வழங்கபட்டுள்ளது. இப்போது உயிரோடு மீண்டு வந்த சண்முகநாதன் கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து தனக்கு வழங்கபட்டுள்ள மரண சான்றிதழை அரசாங்கம் மீளப் பெற்றுகொள்ள வேண்டுமென்று கேட்டபோது மரண சான்றிதழை மீளபெற்றுகொள்ள தனக்கு அதிகாரமில்லை என சொல்லி கிராம நிர்வாக அதிகாரி மறுத்துவிட்டார். ஆக அரசு ஆவணங்களின் படி சண்முகநாதன் இன்றும் இறந்துபோனவராகவே கருதப்படுவார். கனகரட்னம் சண்முகநாதன் கூறுகிறார்:

"எனவே எனது இப்போதய கவலையெல்லாம் நான் உயிருடன் இருப்பதை எப்படியாவது அரசாங்கத்திற்கு நிருபித்து காட்டவேண்டும் என்பதே."

Post a Comment

13 Comments:

Blogger -/பெயரிலி. said...

this is not a story, but a real one. This happened at the end of Karuna affair. Some web radios and sites had news and interviews from that guy. one of them was tamilwebradio. At this moment, I can not anything in archives over there. However, when you check you can find some references in the net.

1/21/2005 4:31 AM  
Blogger Thangamani said...

இந்தச் செய்தியை சமீபத்தில் (2 அல்லது 3 மாதங்களுக்கு முன்) நான் தமிழ்நெட்டில் படித்தேன். அதை அப்படியே சோபா எழுதியுள்ளார் என நினக்கிறேன். சன்முகநாதன் மகளுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. மவுண்ட்ரோடு மார்க்க்சிய மனித உரிமை மாணிக்கம் இதை பிரசுரிக்கவில்லையாதலால் உண்மை வெளி உலகின் கண்களுக்கு எட்டாமல் போய்விட்டது போலும்.

//பதினெட்டு வருடங்களாக வெளியில் எவருடனும் எந்தவித தொடர்பும் இல்லாதிருந்தவரிடம் "பிரபாகரன் எங்கே ஒளிந்திருக்கிறான்?" என்ற பைத்தியக்காரத்தனமான கேள்வி அதிகாரிகளால் கேட்கப்பட்டபோது வேலுப்பிள்ளை பிராபகரன் வன்னியில் சர்வதேச பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்தி கொண்டிருந்தார்.//


அடிப்பதற்கும், பல்லை பிடுங்குவதற்கூம் முன்னும் ஏதாவது பதில் சொல்லமுடியாத கேள்வியை கேட்க்காமல் செய்வது தர்மமல்லவே.

1/21/2005 4:41 AM  
Blogger -/பெயரிலி. said...

here you go
Escapee details 18-year detention, torture in STF camp
[TamilNet, April 27, 2004 15:17 GMT]

1/21/2005 4:44 AM  
Blogger KARTHIKRAMAS said...

தட்டச்சு செய்ததற்கு நன்றி. நான் சொல்ல வந்ததை (இது உண்மைசம்பவமா என் கேட்க நினைத்தை) பெயரிலி சொல்லிவிட்டார்.
இது போன்று கருத்து தெரிவிக்கும் நேரத்தில் பொட்டிக்குள் அடங்கும் தமிழ்விஷப் பாம்புகளும் நினைவுக்கு வருகின்றன.

1/21/2005 6:16 AM  
Blogger டிசே தமிழன் said...

அதுசரி எப்போது, ரோசாவசந்தும், பெயரிலியும் இந்தக்கதையைப் பற்றி விரிவாக எழுதப்போகிறியள்? கெதியாய் எழுதுங்கோப்பா! இரண்டு வார்த்தை நானும் ஏதாவது சொல்லலாம் என்று ஒரு ஆவல்தான் ::)).

1/21/2005 9:09 AM  
Blogger ROSAVASANTH said...

கருத்துக்களுக்கு நன்றி.

சமீபவருடங்களாக நான் ஈழம் குறித்த செய்திகளை அவ்வளவாக படிக்கவில்லை. ஆயினும் இதை ஒரு உண்மை சம்பவமாகவே கருதி நாவலில் வாசித்தேன். 'ம்' நாவல் முழுக்க உண்மை சம்பவங்களே வந்து போகின்றன, டக்ளஸ் தேவானந்தா, குட்டிமணி என்று வரலாற்று நபர்க்ளும் வருகிறார்கள். இதன் நடுவில் ஒரு புனைவாளன் செய்ய வேண்டிய வேலையை முதிர்சியாய் செய்திருப்பதாக நினைக்கிறேன்.

தமிழ் நெட்டின் செய்தியை சார்புடையதாக சிலர் நினைக்ககூடும். ஷோபாசக்தி போன்ற புலிகள் அரசியலை எதிர்பவர் எழுதும்போது இதன் தீவிரம் அதிகமாகிறது. உண்மைசம்பவத்தை செய்தியாய் விவரிப்பதற்கும், ஷோபா எழுதுவதற்குள்ள ஒரே வித்தியாசம் இந்த வரிதான்.

"பதினெட்டு வருடங்களாக வெளியில் எவருடனும் எந்தவித தொடர்பும் இல்லாதிருந்தவரிடம் "பிரபாகரன் எங்கே ஒளிந்திருக்கிறான்?" என்ற பைத்தியக்காரத்தனமான கேள்வி அதிகாரிகளால் கேட்கப்பட்டபோது வேலுப்பிள்ளை பிராபகரன் வன்னியில் சர்வதேச பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்தி கொண்டிருந்தார்"

டீஜே, 'ம்' குறித்து விரிவாய் உடனடியாய் எழுதுவது சாத்தியமாகும் போல் தோன்றவில்லை. படித்து முடித்தவுடன், அந்த அனுபவத்தின் தீவிரத்துடன் எழுதியிருக்க வேண்டும். அதை செய்யாததால், இப்போது நிதானமாய் விரிவாய் எழுத நேரம் அனுமதிக்காது என்றே தோன்றுகிறது. ஆனாலும் இதுவரை எந்த பதிவு குறித்தும் திட்டமிட்டு எழுதவில்லையாதலால் இதுவும் எதிர்பாராமல் நடைபெறலாம்.

கருத்துகளுக்கு நன்றி.

1/21/2005 3:36 PM  
Anonymous Anonymous said...

Very tragic story, indeed.
Really moved after reading this tale of woes and beautifully written!
enRenRum anbudan,
BALA

1/21/2005 3:58 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி பாலாஜி.

முடிவில் வரும் அந்த வசனம்தான் எத்தனை அபத்தமானது, எத்தனை அர்த்தமுள்ளது!

1/21/2005 4:10 PM  
Blogger Narain said...

வசந்த், இந்தக் கதையை தங்கள் பதிவில் 3 முறை விட்டு விட்டு வாசித்தேன். ஒவ்வொரு முறைப் படிக்கும்போதும், ஒரு சிலப்பத்திக்கு மேல், மனம் போகவில்லை.படிக்கும்போதே இவ்வளவு குருரமும், வன்முறையும், இன்றைக்கு அங்கே, வாழ்க்கையாய் போனதை எண்ணி மனது வலிக்கின்றது. என் செய்ய, சுரணையற்றுத் தான் தமிழக்த்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்/றோம்.

1/21/2005 7:45 PM  
Blogger Narain said...

தவிர்க்கமுடியாமல், வந்த சிந்தனை, நாஜிக்கள் ஒரு வேளை மேலோ?

1/21/2005 7:47 PM  
Blogger ROSAVASANTH said...

நரேன் கடலில் ஒரு துளிதானே! இதற்கே பதட்டபட்டால் எப்படி? மேலும் இதை பற்றி பேச இலங்கைக்கு ஏன் போகவேண்டும்? நம்ம ஊர் விசேட அதிரடி படையினர், வீரப்பன் தேடுதல் வேட்டையில் செய்யாததா? அதையும் நம் மக்கள், இங்கே வலைப்பதிவில் கூட குமட்ட, குமட்ட நியாயபடுத்தினார்களே!

1/21/2005 7:57 PM  
Blogger Narain said...

இது பதட்டப்படுதல் இல்லை வசந்த். எந்த அளவிற்கு நம் மக்கள் ஊடகங்களை நம்புகிறார்கள் என்பதில்தான் என் பயம் அதிகரிக்கிறது. இதனை வெறும் கதையாகத் தான் 90% பேர் படிப்பார்கள் என்பதில்தான் என் படபடப்பு இரட்டிப்பாகிறது. கசப்பாய் இருந்தாலும், சென்னையிலிருந்து இதைப்பற்றிப் பேசினாலேயே, என்னை விட்டு நிறைய நண்பர்கள் தள்ளிப்போகின்றனர். என்னத்த சொல்ல!

1/21/2005 8:20 PM  
Blogger ROSAVASANTH said...

விகடனின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.

http://vikadan.blogspot.com/2005/01/blog-post_21.html

ஒரு பக்கம் கொஞ்சம் அப்பாவியாய், அதன் காரணமாய் வரும் நேர்மையுடன் நீங்கள் எழுதுவதாய் தெரிகிறது. உணமையை முழுவதும் பேசவிட்டாலும், பொய் பேச மறுக்கும் உங்களை பாரட்டுகிறேன்.

ஆனால் "To put in simple words, "they are not yet civilised" and it is pretty hard to mix with them. I look forward for many changes in this community as a whole.." என்று ஒரு இனவாத வார்த்தைகளையே சொல்கிறீர்கள். ஒரு பேரினவாதம், உங்களுக்கு இத்தனை கொடுமைகளை புரிந்தும், ஒரு பக்கத்து நாடு(அட, என் நாடுதான்) தீங்கிழைத்தும், இன்னும் மற்றொரு இனத்தை பற்றி நீங்கள் இவ்வாறு சொல்கிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல. பல ஈழதமிழர்களிடம் கேட்டிருக்கிறேன். சிங்களவர்களிடம் இருக்கும் தமிழ் வெறுப்புக்கு, எந்த அளவிலும் குறையாத முஸ்லீம் வெறுப்பை (அதுவும் இனவாதத்தால் புலம் பெயர்ந்த) ஈழதமிழரிடம் கேட்கமுடியும். இங்கே கூட மற்ரவர்கள் உங்க:ளுடன் சேர்ந்தூ நியாயபடுஇத்துவார்கள், அல்லது இந்திய அமைதி படை அட்டூளியத்தை 'ஏற்கவில்லை' என்று மொட்டையாய் சொல்லிவிட்டு, அதையே நியாயபடுத்தும் இந்திய ரேசிஸ்டுகளின் *திறமையுடன்* ஏதாவது சொல்வார்கள். இதில் யாரை நம்ப? இதில் மேலும் பேச, மேலும் இது போன்றவைகளையே கெட்க நேரிடும் என்று தெரியும்.

1/21/2005 8:46 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter