ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Saturday, January 08, 2005

சென்ற பதிவின் பின்னூட்டங்களும், மேலும்...!

சென்ற பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் எதிர்கொள்ள தக்கவையாய் எனக்கு படுபவற்றை இங்கே தருகிறேன். முழுதாய் அவைகளை படிக்க சென்ற பதிவிற்கு செல்லவும். அது தொடர்ந்து சொல்ல நினைப்பதை அதற்கு கீழே எழுதுகிறேன்.


அனானிமஸ்: ஜெ.மோவின் பதிவு முக்கியமானது என்று உங்களுக்கு கொஞ்சம் முன்னால் பதிந்தவரும் சொல்கிறார். நெஜமாவே அது ரொம்ப முக்கியமான பதிவா? ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க வசந்து.... இன்னிக்கு சுனாமி பத்தி எத்தனைக்கு எத்தனை dispassionate ஆக, எழுதறோமோ அதுக்குத்தான் மவுசு. ஜெயமோகன் செஞ்சது என்ன? கடலோரப் பகுதியில் வசிக்ககூடிய ஒரு ரேஷனலான மனுஷன், அந்த நேரத்தில் பண்ணக் கூடிய காரியத்தைத்தான். ஆனால் அவர் எழுத்திலே பதிஞ்சது மூலமா ஜெ.மோ, காட்டுவது என்ன? மும்மதத்தினரும் சேர்ந்து செயல் பட்டாங்கன்னு சொல்லி தன்னுடைய பாசிட்டிவ் ஆட்டிட்யூடை. கழக அரசுகளை திட்டி, அதன் மூலமான தன் நடுநிலைமையை, அரசு அதிகாரிகளின் மெத்தனத்தைக் கண்டித்து அதன் மூலமாக, தன் ஆன்டி எஸ்டாப்ளிஷ்மண்ட் ஸ்டாண்டை, கம்யூனிஸ்ட்டுகளை லேசா ஒரு தட்டு தட்டி, தன்னுடைய சா·ப்ட் கார்னரை, மொத்தத்திலே, முக்கியமான பதிவுங்கற உங்களோட, மற்றும் உங்களை ஒத்தவங்களோட பாராட்டுக்களை, "வெங்கடேஷ் என்பவர் அன்புடன் பகுதியில்" ன்னு நடுவுலே சொருவினார் பாருங்க, அங்க அவாளோட வீக் பாய்ண்டை டச் செஞ்சது, தன்னுடைய இலக்கிய உலகில் வெங்கடேசு என்பவர்களுக்கு எல்லாம் இடமே இல்லைன்னு தன்னுடைய பீடத்தை உறுதி செஞ்சதுன்னு எத்தனை விஷயம் ஒரு கட்டுரைலே நடந்து முடிஞ்சிருக்கு.? இல்ல நான் கேக்கிறேன் இதை எல்லாம் எழுதியே ஆகணுமா? பரபரப்பா ஒரு விஷயம் நடந்தா, அங்கே போய் தன்னை இருத்திக்கிறது ஒரு வியாதி. இந்தக் கேசிலே, அவர் அங்கேயே இருந்தது, இன்னும் வசதியாப் போச்சுது. சுனாமியில் இருந்து தப்பித்த ஜெயமோகனின் அனுபவங்கள்னு நாளைக்கு, குமுதத்திலேயோ, விகடன்லயோ, பேட்டி வராட்டா, தலையை மொட்டை அடிச்சிகிறேன்.


சுந்தர மூர்த்தி: எங்கோ தூரதேசத்தில் சொகுசாக உட்கார்ந்துக்கொண்டு இதை எழுதக் கூச்சமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் எழுதுகிறேன். ஜெயமோகனின் கட்டுரைக் களம் குமரி மாவட்டம். இந்தப் பகுதியில் பொதுவாகவே அரசியல்-மத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகம். கலவரங்களிலும் சரி, ஆபத்து காலங்களிலும் சரி. நாகை, கடலூர், சென்னைப் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் பெரிய அளவில் பங்காற்றிய தொண்டு நிறுவனங்களின் பின்னணிகள், நோக்கங்கள் என்ன என்று ஜெயமோகன் போல யாராவது எழுதினால் எல்லாவற்றையும் ஒரு context ல் வைத்துப் பார்க்க முடியும். ஜெயமோகன் குறிப்பிட்ட எல்லா அமைப்புகக்கும் முதலில் நன்றி சொல்லிவிட்டு அடுத்து அச்செயல்பாடுகளை எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். எனக்கு இந்த மாதிரி விஷயங்களை கேட்கும், படிக்கும் நேரங்களில் ஆர்பர்ட் காமுவின் The Stranger நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடிவதில்லை. இப்போது தியாகுவின் சிறையனுபவ நூலும்.

பெரிய அரசியல் கட்சிகளின் தொண்டர் படைகள் போகாமலிருந்ததே நல்லது. சண்டைபோட்டு வேலை செய்துக் கொண்டிருந்தவர்களையும் கெடுத்திருப்பார்கள்.


வீச்சறுவாள்: மிகவும் துரதிர்ஷ்டமான, கண்ட அனைத்து கண்களிலும் கண்ணீரையோ குறைந்தபட்சம் கவலையோ தரும் காட்சிதான் சுனாமியின் விளைவு. அதைவிட துரதிர்ஷ்டமானது , ஜெயமோகன் ஆர் எஸ் எஸ் எல்லோரும் மீட்பு பணிகளில் வேலை செய்கிறார்கள், அமிர்தானந்தமயி 100 கோடி நிவாரண நிதி அளித்துள்ளார் ஆதலால் ஆர் எஸ் எஸ்தான் உலகின் மிகப் பெரும் தியாக அமைப்பு அல்லது அது போன்ற ஒரு அமைப்பில் சேராதவன் எஅவ்னுக்கு மீட்பு பணிகளில் ஈடு பாடு இந்த ஜென்மத்துக்கு வராது என்பது போல் கூவிக்கொண்டே , மதங்களை தூக்கிப் பிடிப்பது.

ஜெய்மோகனின் கட்டுரையில் உள்ள தகவல்கள் அனைத்திலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்படித்தான் கேடு கெட்ட சமூகமாய் இருக்கிறது நம்முடைய சமூகம்/அரசு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த பிரச்சினைக்கெல்லாம் தீர்வு மதம் தான் என்று ஒரு ஓலமிட்டு அழுகிறாரே அங்கேதான் பிரச்சினை.

1976- சைனாவின் தங்ஷான் நகரில் ஒரு 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.அதன் இறப்பு கணக்கு 8000 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்ன் நேரடி பாதிப்புக்குள்ளானோர் 242,419 பேர். இன்னுமொரு 164,581 பேர் பலத்த காயப்பட்டனர்.உடனடி சாவுகள் 7000 போல என்று பதிவாகியுள்ளது.ஆதாரம்:http://history1900s.about.com/od/horribledisasters/a/tangshan.htm

அந்தக்காட்சியை காற்பனைசெய்து பார்த்தோமெனில் சற்றேறக்குறைய சுனாமியின் காட்சி போலவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கும். பிரச்சினை என்னவெனில் அங்கு ஆர் எஸ் எஸ் இருக்கவில்லை. மீட்பு பணிகளும் இதுபோல்தான் நட்ந்துள்ளன.எங்கு பார்த்தாலும் அழுகிய பிணங்களும் இருந்தன. சீனாக்காரனுக்கு மதம் தேவைப்படவில்லை மீட்பு பணி செய்வதற்கு. இந்த உண்மையின் பின் உள்ளதை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் நேர்மை தேவைப்படுகிறது. ஜெயமோகனுக்கு நேர்மையைவிட,சுனாமியை, சுனாமி மீட்பு செயல்களை அளவுகோலாக மாற்றி, அனைவரையும் அதில் fail ஆக்கி , ஆர் எஸ் எஸ் இன்னும் பல வர்ணங்களை அப்பி கலவையான புருடாவை சுவையாக தருகிறார்.

ஆர் எஸ் எஸ் -ஐயே எடுத்துக்கொள்வோம் உதாரணத்துக்கு(அல்லது சேவை செய்யும் எந்த அமைப்பையும் ஆகட்டும்). தமிழ் நாட்டில் இருந்த அத்தனை ஆர் ஆர் எஸ் சேவகர்களுமா மீட்பு பணிக்கு ஆஜராகி விட்டார்கள் இல்லையே. இந்த கேள்வியை ஏன் கேட்க வேண்டியதாகிறது எனில், மதம் சார்ந்த அத்தனை உள்ளங்களும் கருணையே வடிவாய் மாறிவிட்டதா, ஜெயமோகன் சொல்வது போல் என்று தெரிந்து கொள்ளத்தான்.

திமுக அதிமுக கட்சிகள் ஆள் பலமிருந்தும் ஏன் மீட்ட்பு பணிகளை செய்யவில்லை. அவர்கள் செய்தால்தான் ஆச்சரியபடவேண்டும் , செய்யாததற்கு ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இவர்கள் பொது வாழ்வில் சம்பாரிக்க வந்தவர்கள். பொது வாழ்வில் அக்கறை , ஆட்சி போகிறது என்றால் தான் வரும். ஆ ர் எஸ் எஸ் சினால் எப்படி செய்யமுடிகிறது? என்று பார்ப்போம்.இத்தனை பெரிய மீட்பு பணியை செய்ய அத்ற்கேற்ற ஒருங்கிணைப்பு முதலில் தேவை. அந்த ஒருங்கிணைப்பை பொது மக்களிடமிருந்து அவரசர காலத்தில் பெற முடியவே முடியாது என்பதுதான் , இன்றல்ல என்றும் வரலாற்றில் இருந்து வரும் சிக்கல். அவ்வாறு ஒருங்கிணைப்பை பெற முடிந்தால், காவல் துறைகூட தேவைப்படாது சமூகத்திற்கு. ரோட்டில் நடந்து சென்றுகொண்டுருக்கு அத்தனை பேரும் , உடனடியாய் லெப்ட் ரைட் என்று சொல்லி , மீட்பு பணியில் சுனாமி வந்த 5 நிமிடத்தில் இறங்கிவிடுவார்கள். பொது மக்களிடம் அதை எதிர்பார்க்கமுடியாது. அவர்களை கலவரமும் பீதியும் தான் தொற்றிக்கொள்ளும். உடமையையும்,உயிரையும் பாதுகாப்பு நோக்கி செலுத்துவத்லே மனம் இருக்கும். 9/11 கூட அப்படத்தான் ஆயிற்று. எந்த பேரழிவின் முதல் மணினேரங்கள் அப்படித்தான் இருக்கும் இதற்க்கு எந்த சமூகமும் விலக்கல்ல. ஆர் எஸ் எஸ் ஓ, மறற அமைப்புகளுக்கோ இந்த ஒருங்கிணப்பு ஒரு சில மணி நேரங்களில் சாத்தியமாகும். அதன் பலனாகவே இம்மாதிரி பெரும் பணிகளில் ஈடுபட முடிகிறது. எந்த ஒருங்கிணைப்பு இந்திய ராணுவத்தில் சாத்தியமாகிறதோ அதே ஒருங்கிணைப்பு. இதற்க்கும் மதத்துக்கு முடிச்சு போடுவது போல் ஒரு முட்டாள்தனம் இல்லை.

இன்னொரு முக்கியமான காரணி, கையிருப்பு நிதி. இது போன்ற சமயங்களில் அளவுக்கு அதிகமாகவே செலவாகும் நிதி கையில் பணமாக இருந்தால் தான், பணத்தை அதிகமாய் செலவு செய்தாவது சில உயிர்களை காப்பாற்ற முயலலாம். அது சரி தளவாய் சுந்தரம் என்ன ஆர் எஸ் எஸ் காரரா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எப்படி மீட்பு பணியிடத்துக்கு வந்தார்? உலகமெங்கிலும் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சுனாமி நிதியாக மீண்டும் சொல்கிறேன், 4 பில்லியன் டாலர்கள் (இணைய செய்திகள்) குவிந்துள்ளன. இவர்களில் 99.9 சதவீதம் இந்து மதத்தினர் இல்லை என்பதை எப்படி மறுப்பார் ஜெயமோகன்.இல்லை நாகர் கோவிலுக்கு வந்து பிணம் சுமந்தால் தான் மீட்பு மனம் உண்டு என்று சொல்வரா? ஒரு வேளை ஆர் எஸ் எஸ் சில் சேர்ந்தால் சொன்னால் சொல்வார்.

ஜகத் குரு கைதின் காரணமாய்தான் சுனாமி வந்தது என்று சொல்லும் மூடர்களை , இந்து மதத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்போகிறாரா? அல்லது ஆர் எஸ் எஸ் சில் சேரச் சொல்லபோகிறரா? குஜராத் சம்பவம் கண்முன் வந்து குமட்டுகிறது ஏனோ தெரியவில்லை.
இந்தியாவுக்கு தொலைபேசும்போது நண்பரொருவர் சொன்னார்.தமிழகத்தில் 5,6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிப் பிள்ளைகள் , தெருவில் செல்பவர்களுக்கு காலணி துடைத்துவிட்டு,பாலிஷ் போட்டு உதவி நிதி திரட்டுகிறார்களம். இவர்கள்மனத்தில் ஆர் எஸ் எஸ் விதைக்கபடவில்லை. இவர்கள் மனத்தில் மதமும் முழுசாய் விதைக்கப்படவில்லை. இவர்களுக்கு மதம் எதற்கு என்று புரியவும் புரிவதில்லை. ஆனால் மீட்பு பணியில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். இது வரை செய்திராத வேலையைச் செய்து நிதி சேகரிக்கிறார்கள்.இது மாசற்ற உள்ளங்களுக்கு ஜெயமோகனின் அறிவுரை என்ன. ஆர் எஸ் எஸ்-சில்/மதத்தில் சேர்ந்து அடுத்த சுனாமி வருவதற்குள் மீட்பு பணிக்காக ஆயத்தமாகிவிங்கள் என்பதா? என்ன லாஜிக் ஜெயமோகனுடையது.

இன்னும் நிறைய எழுத இருந்தாலும் , சலிப்பு தட்டுகிறது. இனியாவது ஜெயமோகன், தனது எழுத்து வலிமையை நேர்மையாய் செலவிடுவார் என்று எதிர்பார்க்கலாமா?


அனானிமஸ்: இந்த விஷயத்தில், ஜெயமோகன் பதிவு செய்த அனைத்துமே போலியானது, பாசாங்கானது என்பது என் கருத்து. ஆனால் அதை நிரூபிக்க என்னிடம் வழியில்லை.


ரவி ஸ்ரீனிவாஸ் : A perfect gentleman can also be a collaborator in a genocide. A zealot can be a humanitarian in some context.organizations likeRSS have views on nation-state and cultural nationalism. Nandy's views are important as they question these.(I have edited by putting capital letters etc - Rosvth)

சுந்தர்: நானெழுதப் போவதை நன்றிகெட்ட பினாத்தல் என்று சுலபமாய்த் திரிக்க முடியும். ஜெயமோகனுக்குத் தெரியும் இதனால் லாபமடையப் போவது கிறிஸ்தவ அமைப்புக்களோ அல்லது தமுமுவோ இல்லையென்பது. மூனு கொடியையும் தூக்கிப் போடுறேன். வேணுங்கறவன் புடிச்சுக்க. யாரு எப்போ அந்தக் கொடியைத் தூக்கிப் புடிச்சுக்குவாங்கன்னு தெரியும். I salute RSS அப்படின்னு யாரு முன்னாடி ஓடியாறுவான்னு தெரியும். கழகங்கள் செய்யத் தவறியதை ஆர் எஸ் எஸ் செய்திருக்கிறது. கழகங்களுக்குக் கிடைக்காத மதிப்பெண்கள் ஆர் எஸ் எஸ்ஸுக்குக் கிடைக்கும். இந்த அமைப்பு செய்த அதே வேலையைத்தான் ரஜினி ராம்கியும், பாபுவும் செய்தார்கள். அவர்கள் யாராக அங்கே நின்றார்கள்? பிணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கைகழுவி விட்டிருப்பார்கள். ஆனால் அதை ஆர் எஸ் எஸ் சுமந்து கொண்டேயிருக்கும். இருக்கிறது. கிறிஸ்தவப் பிணங்களைத் தூக்கிப் போட்ட இஸ்லாமியர்கள் அதற்கான நற்சான்றிதழ்களோடு ஊர்வலம் போவார்களா என்று தெரியாது. விபத்து நடந்த எல்லாவிடங்களிலும் மனிதம் வெளிப்பட்டிருக்கிறது. அது மதத்தால் அங்கு கொண்டுவரப்பட்டதோ அல்லது எக்ஸ்னோராக்கள், க்ளப்புகளால் கொண்டுவரப்பட்டதோ. பகைவரும் பாராட்டும் ஒழுக்கமும், வேகமும் புலிகளின் மீட்புப் பணிகளிலும் இருந்திருக்கிறது. அவர்கள் என்ன மதத்தின் கீழா ஒன்றாயிருக்கிறார்கள். சமூகப் புரட்சி செய்யாததை மதம் சாதிக்கிறது என்று ஜேமோ கூப்பாடு போடுவதைப் புலிகளின் மீட்புப் பணிகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. கழகங்களும், ரசிகர் மன்றங்களும், அரசமைப்பும் இயங்காத இடத்தில் அம்மணமான ஊர்ல கோவணம் கட்டுன ஒசத்தியா மதங்களின் வேலை தெரிஞ்சிருக்கு. அதுலயும் ஏற்கெனவே நெகட்டிவ் இமேஜ் இருக்க ஒரு மதவமைப்புக்காரங்க அதைச் செஞ்சா அதுக்கான மதிப்பு பெருசாக் கூடிப்போகும். அந்தக் கோவணமே பெருங்கொடியா மாறும். இதையெல்லாம் அவரு யோசிச்சு எழுதினாரான்னு தெரியாது. ஆனா இதெல்லாம் சாத்தியம். ஒரு விபத்துக்குப் பின்னாடி டக்குன்னு போயி உதவுறதுக்கு ஆயிரமாயிரம் வருஷமா மதத்தைக் கட்டிக் காக்க வேணாம், அதுகளோட சேர்ந்த கழிவுகளைக் கட்டிக் காக்க வேணாம், எழுத்தில் 1, 2, 3 போட்ட சாதாரண விதிகளையும் அதைச் செய்யும் முறைகளையும் fire drill மாதிரி சொல்லிக் குடுத்தாப் போதும். யாரோ கேட்ட மாதிரி, மதங்களாலதான் இந்தச் சேவையைச் செய்ய முடியும்னா சொவத்துல குந்திப் பேசுன டாக்டர்மாரெல்லாம் மதத்துக்காரங்க இல்லலயா அல்லது பக்கத்துத் தெருவுல பொணம் நாற நாற மோச்சதீபம் மெழுகுவர்த்தி ஏத்துனவங்க மதத்துக்காரங்க இல்லலயா. வேலை செய்றதுக்கு மனுசன் போதும், மதம் வேண்டியதில்லை. அங்கு வேலை செய்த மனிதர்களை நான் வணங்குகிறேன். (தாமதமாய் சேர்க்கபட்டுள்ளது. ரோஸாவச.)


இதை தொடர்ந்து என் கருத்து:
ஜெயமோகனின் பதிவு முக்கியமானதா என்பது முக்கியமில்லை. ஜெயமோகனின் பதிவு அளிக்கும் செய்திகளை நம்பகமானது என்று எடுத்துகொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அந்த வகையில் அது முக்கியமானது என்பதுதான் என் தொனி. கிரிஸ்டோபர் தன்னுடைய குமரிமாவட்டம் குறித்தது என்பதனால் முக்கியமானது என்று பதிந்திருக்க கூடும். சிவக்குமார் முக்கியமானது என்று சொல்வதன் பிண்ணணி கூட புரியாத வாயில் விரல் வைத்த குழந்தைகளிடம் இனியும் எத்தனை காலத்திற்கு பேசிகொண்டிருப்பது? இதையே பேசி கொண்டு, இதிலேயே சக்தி அனைத்தும் செலவழிப்பது அலுப்பாக இருக்கிறது.

என் பதிவில் இதை ஜெயமோகன் எழுதியதால் எழக்கூடிய கேள்விகளை ஒதுக்கிவைத்து விட்டு வேறு விஷயங்களை பேசுவதை பற்றியே அக்கறை காட்டியிருந்தேன். ஆனால் அது எளிதானது அல்ல என்று தெரிகிறது. ஜெயமோகன் காட்டிகொள்வதற்காக செய்கிறாரா என்பதற்கு, ஏன் இத்தனை எத்தனமும், முக்கியமும் தரவேண்டும் என்று புரியவில்லை. கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாய் இணையத்தில் ஜெயமோகனின் 'வேஷங்கள்' குறித்து பேசி பேசி எங்கே போய் சேர்ந்திருக்கிறோம் என்பது புரியவில்லை. நான் சொல்ல வருவது ஜெயமோகனின் எழுத்தின் அரசியலை பேசக்கூடாது என்பதல்ல. உண்மையில் தன் மீதான சிலவகை தாக்குதல்களை திரித்து, தன் எழுத்தின் அரசியலை பேசும் அனைத்தையும் ஒரே லெபிளில் அடக்கி ஒரு நிராகரிப்பு கேப்ஸ்யூலை வழங்குவதுதான் ஜெயமோகனின் வலை.

ஜெயமோகனின் பதிவு மதத்திற்கு வக்காலத்து வாங்குவதாக நினைப்பதில் நியாயம் உண்டு. வழக்கமான உத்தியாக ஞாநி சொன்ன ஒன்றரையணா மேற்கோளை எடுத்துகொண்டு பேசுவதில் அதை தொட்டிருக்கிறேன். மற்றபடி ஜெயமோகனின் பதிவு குறித்து மேலே உள்ள கருத்துக்களில் பொதுவாக ஒத்துபோகிறேன். குறிப்பாக வெட்டறுவாள் எழுதியது மிகவும் பிடித்திருந்தது. என்னை பொறுத்தவரை ஜெயமோகனின் எழுத்து அவரது ஐந்தாவது மருந்தில் விவரிக்கபடும் கிருமியின் தனமையை கொண்டது. இதுவரை வந்த எதிர்புகளை உள்ளடக்கி மேலெழும்பியதாகும். எப்படியிருப்பினும், ஜெயமோகனின் பாசாங்குகள், அரசியல்கள் இன்ன பிற கதகளியாட்டங்கள் பற்றி மட்டும் பேசி சக்தி அனைத்தையும் விரயம் செய்ய ஆசை எனக்கில்லை என்பதால் நான் பேச வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

முதலில் RSSஇனால்தான் எல்லாம் சாத்தியம் என்ற தொனி எங்கே எற்பட்டிருந்தாலும் மிக பிரச்சனை குரியது. RSSபணிகளை எப்படி அணுகுவது என்பதுதான் கேள்வி. இதை சாக்காக வைத்து RSSற்கு ஸல்யூட் அடிக்கும் பிரகிருதிகள் குறித்தெல்லாம் கவலைப்பட எதுவும் இல்லை. எப்படியும் இது போல பல இணையத்தில் எழுதப்படும், இன்னும் பல பிரசாரங்கள் நடக்கும். யார் எதை சொன்னாலும். நான் எழுப்ப வந்த விஷயம் RSS போன்றவையை என்ன வகை சொல்லாடல்களால், பார்வைகளால் அணுகுவது என்பதை பற்றியது. அஷீஷ் நந்தியை உந்துதலாய் வைத்து இதை செய்யவேண்டிய அவசியத்தையெ வலியுறுத்துகிறேன். அதில் காட்டவேண்டிய அளவுக்கதிகமான ஜாக்கிரத்கை உணர்வு முக்கியமானது. அதை கோடிட்டு காட்டவே ஹேராம் என்ற 'விபத்தை' பற்றி குறித்திருந்தேன். (விளக்கமாய் இப்போது முடியாது.)

இதை ஏன் செய்ய வேண்டும் எனில் பழைய பாணி சட்டகங்கள் பயனற்றவையாய், சோனியாய் இருப்பதுதான். (எப்படி எய்ட்ஸிற்கு ஐந்தாவது மருந்து வேண்டுமோ!) உதாரணமாய் இங்கே வலைப்பதிவுகளில் 'என் கிறுக்கல்கள்' என்று ஒருவர் தொடர்ந்து RSS பற்றி பழைய பாணி தொடர் ஒன்று எழுதிவருகிறார். நான் புரிந்துகொண்ட வரை விடுதலை ராஜேந்திரனோ யாரோ எழுதிய புத்தகத்திலிருந்து வழங்கி கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு 15 வருடங்கள் முன்பு மிகவும் பயனுள்ள கட்டுரையாய் அது இருந்திருக்கலாம். இப்போது அதை வைத்துகொண்டு பயணிக்க முடியாது.

இந்த விஷயத்தை யாருமே தொட்டு செல்லாதது (தர்ம அடியாய் கூட்) ஏமாற்றமாய் எனக்கு தெரிகிறது. ரவி அல்லது வேறு யாராவது கொஞ்சம் நிதானமாய், விரிவாய் எழுதினால், எனக்கு ஏதேனும் புதிய கருத்துக்கள் தோன்றினால் மீண்டும் இது குறித்து பேசலாம். ஒரிரு வாரங்கள் விடுப்பு எடுத்து கொண்டு அதற்கு பிறகு அதை செய்யலாம் என்று நினைக்கிறேன்.


Post a Comment

1 Comments:

Blogger SnackDragon said...

This comment has been removed by a blog administrator.

1/09/2005 7:55 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter