ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Saturday, January 08, 2005சுனாமி பேரழிவின் மீட்புபணிகளில் வைத்திருந்த தொடர்பை வைத்து, தனது அனுபவங்களையும், அதை சார்ந்த சில கருத்துக்களையும் ஜெயமோகன் திண்ணையில் எழுதியுள்ளது ஒரு முக்கியமான பதிவாக எனக்கு படுகிறது. அதிலுள்ள சில கேள்விகளை எதிர்கொள்ள தொடங்குவதே இந்த பதிவின் நோக்கம். பொதுவாய் ஜெயமோகனின் (புனைவற்ற) எழுத்துக்களில் தட்டுபடும் ஒரு தன்மையை நான் அவதானித்து வருவதாக நினைத்து கொண்டிருக்கிறேன். ஒரு புனைவு எழுத்தாளன் இயல்பாகவே சிக்கலானதாக கருத/முன்வைக்க வேண்டியவற்றை, ஒற்றைதன்மையுடன் ஒரு மேலோட்டமான பார்வையின் முடிவாக (யாரை நோக்கி எழுதபடுகிறதோ அந்த வாசக கூட்டத்திற்கு உவப்பானதாகவும்) அறிவிக்கும் வேலையை ஜெயமோகன் பல இடங்களில் செய்வதை காணலாம். குறிப்பாக திராவிட இயக்கம் மற்றும் அதன் 'பக்க விளைவுகள்' என்பதாக கருதபடுபவை குறித்து பேசும்போது இதை தெளிவாகவே பார்க்கமுடியும். மிக எளிமையான தர்கத்தை கொண்டு அதை செய்வதையும் காணமுடியும். இந்த எளிமைபடுத்துதல் அல்லது மேலோட்டத்திற்கு பின்னே ஜெயமோகனின் இயல்பு இருக்கிறது என்பதை விட தேவையே இருக்கிறது என்று தோன்றுகிறது. அத்தகைய தன்மை இல்லாத ஒரு பதிவாகவே இந்த திண்ணை கட்டுரையை என்னால் பார்க்கமுடிகிறது. இதற்கு ஒரு காரணம் அத்தகைய தன்மையின் தேவையே இல்லாமலிருப்பதாக கூட இருக்கலாம்.

ஜெயமோகனின் குறிப்புகளில் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வியாக எனக்கு படுவது, 'சர்ச், ஆர்.எஸ்.எஸ், த.மு.மு.க. போன்ற மத அமைப்புகளால் அர்பணிப்புடன் மீட்பு பணிகளில் ஈடுபட முடிந்த அளவிற்கு, மற்ற எந்த மத சார்பற்ற அமைப்புகளால் ஏன் ஈடுபட முடியவில்லை?' என்பதே.இந்த கேள்வியின் பின்னுள்ள ஜெயமோகனின் வெகுகால அரசியல் குரல், உள்நோக்கம் இன்ன பிற விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அல்லது பிற்கால சிந்தனைக்கு தள்ளிவிட்டு, அல்லது அதை ஒருமுறை சம்பிரதாயமாய் இந்த வரியை போல சொல்லிவிட்டு, மிக சிக்கலான இந்த கேள்வி எதிர்கொள்ள படவேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு எளிமையான சொல்லபோனால் எந்த வித தெளிவான பதிலும் இல்லாத நிலையில், இந்த என் பதிவை படித்து பின்னூட்டமாய் வரும் கருத்துக்களையும் கணக்கில் சேர்த்து, இதை எதிர்கொள்ள தொடங்குவதே என் நோக்கம். சற்று சிந்தித்து நிதானமாய் தங்கள் கருத்துக்களை முன் வைத்தால் நல்லது என்று பொதுவாய் சொன்னாலும், எல்லோரையும் சிந்திக்க நான் கட்டாயபடுத்தவில்லை. தர்ம அடிகளையும், இதை பயன்படுத்தி தங்கள் லட்சியங்களை ஒரு அடி தள்ள நினைப்பவர்களையும் நான் இங்கே கருத்து சொல்ல வரவேற்கிறேன்.

ஒரு விஷயத்தில் தெளிவாகிவிட வேண்டியதிருக்கிறது. மேலே சொன்னதில் சர்ச் என்று பொதுவாய் விளிக்க படுவதை தவிர்த்து, ஆர்.எஸ்.எஸ்ஸும் த.மு.மு.க.வும் வெறும் மத இயக்கங்கள் அல்ல. அதன் உருவாக்கம், செயல்பாடு எல்லாமே மதம் சார்ந்து இருந்தாலும், அவர்களுடைய நோக்கங்கள் தெளிவான அரசியல்தன்மை கொண்டவை. ஒரு குறிப்பிட்ட மக்கள் நலன் சார்ந்த அரசியல் லட்சியங்களை அறிவித்து பிறந்தவை. இதில் RSSஐயும் தமுமுகவையும் வேறு படுத்தும் பல விஷயங்கள் இருந்தாலும் இரண்டும் அரசியல் இயங்கங்களே, அதற்கு பின்னே மதச்சார்பு இருக்கிறது என்பதே இங்கே சொல்லவருவது. இது தவிர்த்து ஜெயமோகன் பதிவின் பட்டியலிலே, கிருஸ்தவ இயக்கங்கள், மாதா அமிர்த்தானந்தமயி, சத்ய சாயிபாபா, ராமகிருஷ்ணா மிஷன் என்று ஒரு பட்டியல் நீள்கிறது. இதில் மாதா அமிர்தானந்த மயி அடியார்கள் தவிர்த்து மற்றவர்களின் பணி குறித்து எனக்கு சந்தேகங்கள் உண்டு. உதாரணமாய் பிணங்களை கையாள்வது போன்ற பணிகளில் அவர்களின் பங்கு என்னவென்று எனக்கு தெரியாது. அவைகள் எப்படியிருந்தாலும், நாம் கவனிக்க விழைவது RSS, த.மு.மு.க. போன்றவைகள் பற்றியே.

முந்தய மகராஷ்டிர, குஜராத பூகம்பங்க அழிவுளில் நண்பர்கள் மூலமும், ஒரிசா புயலழிவில் ஓரளவு நேரடியாகவும், இந்துத்வ இயக்கங்கள் அர்பணிப்புடன் செய்துள்ள மீட்புபணிகள் குறித்து எனக்கு தெரியும். இதை எப்படி பார்பதென்ற குழப்பம் ரொம்ப காலமாகவே உண்டு. அதே போல அன்னை தெரசா போன்றவர்களின் சில அர்பணிப்பை பார்க்கும்போது மதம் என்ற ஒன்றின் உந்துதல் இல்லாமல் அது சாத்தியமா என்ற சந்தேகம் ரொம்ப காலமாகவே உண்டு.இந்த இடத்தில் ஒன்றை எனக்கு சொல்லவேண்டியிருக்கிறது. த.மு.மு.க. முஸ்லீம் பிணங்களை மட்டுமே சுமந்ததாக *வதந்திகள் வந்ததாகவும்*, தாமே கண்ணால் அவர்கள் கிரிஸ்தவ பிணங்களையே அதிகம் தூக்கி சென்றதாகவும், சர்சிற்கு கொண்டு சென்றதாகவும் ஜெயமோகன் சாட்சியம் சொல்கிறார். தமுமுகவிற்கு எதிராய் சிந்திக்கும் ஜெயமோகன் சொல்வதை நம்பகதன்மையுடனேயே எடுத்துகொள்ள வேண்டும். RSS சார்பாக யோசிப்பவராக பலரால் கருதப்படும் ஜெயமோகன் RSSஇடம் ஏதேனும் பாகுபாடு இருந்ததா என்று கூறவில்லை. மகாராஷ்டிர பூகம்ப மீட்புபணிகளில் தீவிரமாய் பங்கு கொண்ட (இமாசல பிரேதேசத்தில் பிறந்து பூனாவில் வாழும்) என் நெருங்கிய நண்பன் RSSஉடன் இணைந்தே பணிகளை மேற்கொள்ள வேண்டிவந்தது. (தோண்ட தோண்ட பிணங்களாய் வந்த காட்சிகளை அவன் விவரித்ததை இங்கே அதே தீவிரத்துடன் தரமுடியாது. அதன் தீவிரத்தை விளக்க ஒரே ஒரு விஷயம். பணிகள் முடித்து ஊர் திரும்பிய பின் 15நாட்களுக்கு எங்கே சென்றாலும் நாய்கள் அவனை பார்த்து குரைத்த வண்ணம் இருந்ததாக கூறுகிறான்.) எந்த விதத்திலும் RSSஐ தவிர்த்து எந்த பணியும் நடந்திருக்க வாய்பில்லை என்றே கூறுகிறான். ஆனால் ஒரு கட்டத்தில், இருப்பதிலேயே அதிகமாய் பாதிக்க பட்ட, யாருமே பிழைக்கவில்லை என்று கருதிய சில முஸ்லீம் கிராமத்தில் பணியாற்ற அவர்கள் மறுத்ததாக சொன்னான். உண்மையில் அவன் அதை குற்றமாகவே சொல்லவில்லை. "அவர்கள் எங்களை தடுப்பார்களோ என்று பயமாய் இருந்தது. ஆனால் எங்களை அனுமதித்ததற்கும், சில உதவிகள் செய்ததற்கும் அவர்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும். அவர்கள் அனுமதிக்காமல் ஒன்றுமே செய்யமுடிந்திருக்காது." என்றான். இந்த சம்பவம் என் நண்பன் சொல்லி நான் பதிவு செய்யும் ஒரு தகவல் அன்றி இதற்கு ஆதாரம் எதுவும் தரமுடியாது.

தமிழகத்தில் நிலமை வேறு மாதிரி, ஓரளவு வெளிப்படையான பாரபட்சம் இல்லாமலே இருக்கும் என்றே தோன்றுகிறது. இத்தகைய ஒரு அர்பணிப்பு மற்ற யாரிடமும் இருக்கமுடியாது என்பதல்ல என் வாதம். இதன் தீவிரத்தை காணமுடியுமா என்பது சந்தேகமாய் உள்ளது. புலிகள் போன்ற தற்கொலைக்கும் தயாரான ஒரு அமைப்பில் இது சாத்தியமாகலாம். ஜெயமோகனும் ரஜினி ராம்கியும் அழுத்தி சொன்னது போல் எந்த அரசியல் கட்சியிடமும், ரசிகர் மன்றங்களிடமும் இதை எதிர்பர்க்க முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி களத்தில் இறங்கியதாக தெரிந்தாலும் அது குறித்த தகவல் எதுவும் இல்லை. ஓட்டுக்களை வாங்கி தரகூடிய இந்த வேலையில் ஏன் அரசியல் கட்சிகளால் இறங்க முடியவில்லை, இது போன்ற மீட்புபணிகளில் RSS ஒரு தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகவே இருக்கிறது என்ப்தை எப்படி எதிர்கொள்வது என்பேதே என் பிரச்சனை.

இது குறித்து சொல்ல வருவதெல்லாம் 'மதவெறி' என்ற ஒற்றை வார்த்தை RSSஇன் செயல்பாடுகளை எல்லாம் விளக்க போதுமானதாக இல்லை எனபதுதான். அதாவது, "இவ்வமைப்புகளின் கொள்கைகளைப்பற்றிய விவாதமோ எதிர்ப்போ உருவாக்கப்படுவதற்குப் பதிலாக அவற்றை பேய் பிசாசு என்று பிரச்சாரம்செய்யும்போக்கு உருவாக்கப்படுகிறது." என்ற ஜெயமோகனின் குற்றசாட்டை ஆமோதித்து வேறு பார்வைகளில் இது விவாதிக்கபடவேண்டும் என்பதே நான் சொல்ல விரும்புவது.

இந்த இடத்தில் அஷீஷ் நந்தி தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தாக வேண்டும். கோட்ஸேயை வெறும் "இந்து மத வெறியன் " என்ற சொல்லாடல்களுக்குள் சிக்க வைத்து விளக்குவதை நிராகரித்து, அவனை ஒரு சமூகத்தின் ஒரு ஆண்மைய சிந்தனையின் , "தங்களுக்கு என சில சலுகைகளை எதிர்பார்த்த" உயர்சாதியின் , நவீனமான பிரதிநிதியாய், இந்தியாவை ஒரு வல்லரசாக்கும் கனவை கொண்ட லட்சியவாதியாய் முன்வைத்து விளங்க முயற்சிக்கிறார். இங்கே மிகவும் ஜாக்கிரதையாய் இதை கையாள வேண்டியிருக்கிறது. ஏனெனில் அஷீஷ் நந்தியை உந்துதலாய் வைத்து, இந்துத்வமாய் வெளிவந்த ஹேராம் எடுத்த கமலை பாராட்டுவதில் போய் இது முடியக்கூடிய அபாயம் உண்டு.

அஷீஷ் நந்தியின் பார்வை இங்கு உதவுமா என்று தெரியவில்லை. என்னுடய கேள்வி RSSபோன்றவற்றின் இத்தகைய பணிகளை சாதகமான ஒரு விஷயமாய் எடுத்து கொள்ளலாமா என்பதுதான். பின்னூட்டங்களை (ஒருவேளை வந்தால்) கவனித்த பின் இதை மேலே தொடர்கிறேன்.

ஆனால் ஜெயமோகனுக்கு மீண்டும் வழக்கம் போல் ஞாநியின் மேற்கோளை முன்வைத்து தான் சொல்வதை வலியுறுத்த வேண்டிய அவசியம் வந்ததில் ஆச்சரியபட எதுவும் இல்லை. ஞாநியை அவர் சொல்லும் கருத்துக்களை தீவிரமாய் எதிர்ப்பவர்கள்தான் பொருட்படுத்த வேண்டி இருக்கிறது. ஞாநி அவரை எதிர்பவர்களுக்கே அதிகம் பயன்படுவார் என்பதற்கு இன்னோரு ஆதாரமாய் அவருடய மிரட்டல் கடிதம் திண்ணையில் இந்த வாரம் வெளிவந்துள்ளது. இத்தனை முறை இந்த ட்ராமா காட்டியும் புத்தி வராவிட்டால் என்ன செய்வது?

ஜெயமோகன் சொல்வதில் மேலே உள்ள கேள்வி தவிர்த்து மற்றவை வழக்கம் போலவே இருக்கிறது. உதாரணமாய் வெங்கடேஷ் விவகாரம். வலைப்பதிவில் உள்ள சில அபிஷ்டுக்கள் தவிர்த்து யாராலுமே நியாயபடுத்த முடியாத இதை, 'ஒரு பிராமண நடுத்தர வர்கத்து' சுயநலமான பதிவாக பார்கிறார். ஓரளவு ஜெயமோகன் சொல்வது சரியென எனக்கு தோன்றினாலும், அதற்கான சிறுபத்திரிகை பங்கை அவர் மறுக்கிறார். மற்றொரு பக்கம் பிராமண நடுத்தர வர்கத்து பார்வையை ரொம்பவே எளிமைபடுத்தி ஆபத்தில்லாததாக காட்டுகிறார். அதாவது ":பெரியவாளை உள்ளே போட்டதுனாலத்தான் இப்படி நடந்தது" என்று குசும்பு செய்வதுதான் அந்த பார்வை. அதை எதோ மூட நம்பிக்கை என்பது போல் மெல்லியதாய் மத்த பெந்தகோஸ்தே, 'இணையத்தில் கூட கேள்விபட்ட' ஜாபர் அலியுடன் சேர்த்து பொதுவாய் சொல்லி செல்லமாய் தட்டுகிறார்.

மேலே உள்ள பழைமை வாத பார்பனியம் நவீனமனால் அது இப்படித்தான் வெளிவரும். பார்பன வெறி எந்த முகமுடியும் இல்லாமல் வெளிவருவது என்பது இதுதான். இதை எந்த விதத்திலும் பெந்தகோஸ்தேவுடனும், ஜாஃபர் அலியுடனோ ஒப்பிடமுடியாது. அது ஆழ்ந்த ஒரு மதநம்பிக்கை, அவர்களிடம் வெளிப்படுவது பிறர் மீதான வெறுப்பொ, நடந்தது குறித்த களியாட்டமோ இல்லை. மாறாக பாசிசம் என்பது, உதவிகள் எதையும் இந்தியாவிற்கு அளிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுக்கும் இந்த பார்பன வெறிதான். ஜெயமோகன் எல்லாத்தையும் பற்றி ஒற்றை வரி எழுதி தீவிரமான பார்பனியத்தையும் ஒரு மூடநம்பிக்கை சார்ந்த பிரச்சனையாக்கி விடுகிறார்.

வெங்கடேஷ் எழுதியது, ஒரு சிறுபத்திரிகை அன்னியமாகும் மனோபாவமாய் நினைக்கும் ஒன்றின் விளைவு என்று சொல்ல ஜெயமோகனுக்கு வசதிபடாது. சாருநிவேதிதா தயிர்வடை சென்ஸிபிலிடி என்று அழைத்து வருவதும் இதைத்தான். சிறுபத்திரிகை மனோபாவத்தின் இந்த தன்மையை புரிந்துகொண்ட ஒரே நபராக சாருதான் தெரிகிறார். அவர் ஒரு போலியாக இருப்பதால் இது பொய்யாகிவிடாது. தயிர்வடை சென்ஸிபிலிடியின் ஆபத்தை வன்முறையை வெங்கடேஷ் இன்னும் இதற்காக ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்க்காததில், அதை இத்தனை அபிஷ்டுக்கள் (ஏதோ வகையில்) நியாயபடுத்தி வருவதிலிருந்து காணலாம். அதைவிட இரா முருகன் அதை பாரதி சொன்னதோடும், இன்னும் சில அபிஷ்டுக்கள் அசோகனோடும் ஒப்பிடும் வக்கிரமாய் போவதில் காணலாம்.

கடைசியாய் வைரமுத்துவை நான் நாய் என்று சொன்னதை பலர் விமர்சித்திருந்தார்கள். சில அபிஷ்டுக்கள் 'ஒரு கவிஞர் அப்படித்தான் உயர்வு நவிற்சியுடன் எழுதுவார்' என்று சொலவதை பற்றி எல்லாம் பேச எதுவும் இல்லை. ஆசிஃப் மாதிரி நபர்கள் கூட எழுதியிருந்தது ஆச்சரியமாய் இருந்தது. கொஞ்சம் விரிவாய் பார்ப்போம்.முதலில் எழுதுவது என்ற செய்ல்பாடே செயற்க்கை தன்மை தவிர்க்க முடியாதது. எதை எழுத உத்தேசித்தாலும், வார்த்தைகளை தேடி, வாக்கிய அமைப்பை திட்டமிட்டு ஒரு வரிசை படுத்தி, தர்க்கபடுத்தி எழுத வேண்டியிருக்கிறது. ஆதலால் யாராலும் மிக 'இயல்பாய்' எழுதுவது என்பது சாத்தியமே இல்லை. இதனாலேயே ட்சுனாமி நிகழ்ந்த பின் உடனே எதுவும் எழுத முடியாமலும், அதற்கு பின் எதை எழுதினாலும் எனக்கே போலித்தனமாகவும் தெரிந்தது. ஆகையால் போலித்தனமாய் எழுத நேர்வதல்ல பிரச்சனை. ஒரு பேரழிவு குறித்து எந்த வித பிரஞ்ஞை சுய உணர்வு இல்லாமல் ஒருவன், 'சுனாமி பினாமி' என்று அதை ஒரு ஆபாசமாய் மாற்றுவதுதான் கோபமே. வைரமுத்து தன் சாமர்த்தியத்தை காண்பிக்க நினனத்தது அல்ல கோபம், தன் சாமர்த்தியத்தை காண்பிப்பதாய் நினனத்து ஒரு ஆபாச கோஷமாய் மாற்றியதுதான் கோபம். இங்கே விசிதா என்பவர் கூட கவிதை என்று ஒன்று எழுதியிருந்தார். எனக்கு கூட பிடித்திருந்தது. கவிதைக்கு பின் என்ன உணர்வு இருக்கிறது என்பதுதான் பார்க்க வேண்டியது. ஜெயமோகனை போல ஒரு வாரம் கழித்து, திண்ணையில் எழுத நேர்ந்தால் அதை ஆபாசம் என்று மட்டும் சொல்லிவிட்டு போயிருப்பேன்.

ஆனால் ஆசிஃப் அதை சுத்தமாய் மாற்றிவிட்டார். விரும்பி செய்தார் என்று சொல்லவரவில்லை. அரையும் குறையுமாய் புரிந்துகொண்டதானால் இப்படி சொல்கிறார். அவர் சொல்வதை போல் இந்த அழிவை பாடு பொருளாய் வைக்க கூடாது என்று யாருமே சொல்லவில்லை. நிச்சயமாய் நான் இந்த அழிவை பதிவு செய்வதையோ, கருவாக கொள்வதையோ எங்குமே ஆட்சேபிக்கவில்லை. பாடிய விதம்தான் ஆபாசம். இதனால் என்ன பெரிய பிரச்சனை என்று கேட்டால், இது இன்னும் பல பேரை போலித்தனத்தையே மேதாவித்தனமாய் முன்வைத்து நிலமையை இன்னும் ஆபாசமாக்குவதுதான். உதாரணமாய் இங்கே குறைந்தது 4 நபர்கள் மீண்டும், மீண்டும் வைரமுத்துவின் கவிதையை பதிவு செய்தார்கள். அதே மதிரி வேறு கவிதைகளும் வரக்கூடும், வந்திருக்கிறது. இன்னும் முக்கியமாய் தமிழகத்தின் தெருக்களில், ஒரு மக்கள் கூட்டத்தின் பெரும் சோகம் ஆபாசமான மொழியில், வெற்று கோஷமாய் போஸ்டர்களிலும், பத்திரிகைகளிலும் இளிக்கும். நான் பலமுறை தமிழ்நாட்டின் ஆரோக்கியமான அம்சமாய் வலியுறுத்திய வெகுகலாச்சாரத்தின் அழுகிய இன்னொரு முகம்தான் இது. மிக தீவிராமான பிரச்சனையையும் வலியையும், மிக சாதரணமாய், ஒரு ஆபாசமான வன்முறையாய் மாற்றுவது. மேலும் கோபத்தின் முக்கிய காரணம், ஜெயமோகன் அதை இப்படி சொல்வார்

"தமிழனின் சுரணையின்மையின் தடையம். கேரள ஆட்கள் காறித்துப்புகிறார்கள்."

Post a Comment

18 Comments:

Anonymous Anonymous said...

ஜெ.மோவின் பதிவு முக்கியமானது என்று உங்களுக்கு கொஞ்சம் முன்னால் பதிந்தவரும் சொல்கிறார். நெஜமாவே அது ரொம்ப முக்கியமான பதிவா? ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க வசந்து.... இன்னிக்கு சுனாமி பத்தி எத்தனைக்கு எத்தனை dispassionate ஆக, எழுதறோமோ அதுக்குத்தான் மவுசு. ஜெயமோகன் செஞ்சது என்ன? கடலோரப் பகுதியில் வசிக்ககூடிய ஒரு ரேஷனலான மனுஷன், அந்த நேரத்தில் பண்ணக் கூடிய காரியத்தைத்தான். ஆனால் அவர் எழுத்திலே பதிஞ்சது மூலமா ஜெ.மோ, காட்டுவது என்ன? மும்மதத்தினரும் சேர்ந்து செயல் பட்டாங்கன்னு சொல்லி தன்னுடைய பாசிட்டிவ் ஆட்டிட்யூடை. கழக அரசுகளை திட்டி, அதன் மூலமான தன் நடுநிலைமையை, அரசு அதிகாரிகளின் மெத்தனத்தைக் கண்டித்து அதன் மூலமாக, தன் ஆன்டி எஸ்டாப்ளிஷ்மண்ட் ஸ்டாண்டை, கம்யூனிஸ்ட்டுகளை லேசா ஒரு தட்டு தட்டி, தன்னுடைய சா·ப்ட் கார்னரை, மொத்தத்திலே, முக்கியமான பதிவுங்கற உங்களோட, மற்றும் உங்களை ஒத்தவங்களோட பாராட்டுக்களை, "வெங்கடேஷ் என்பவர் அன்புடன் பகுதியில்" ன்னு நடுவுலே சொருவினார் பாருங்க, அங்க அவாளோட வீக் பாய்ண்டை டச் செஞ்சது, தன்னுடைய இலக்கிய உலகில் வெங்கடேசு என்பவர்களுக்கு எல்லாம் இடமே இல்லைன்னு தன்னுடைய பீடத்தை உறுதி செஞ்சதுன்னு எத்தனை விஷயம் ஒரு கட்டுரைலே நடந்து முடிஞ்சிருக்கு.? இல்ல நான் கேக்கிறேன் இதை எல்லாம் எழுதியே ஆகணுமா? பரபரப்பா ஒரு விஷயம் நடந்தா, அங்கே போய் தன்னை இருத்திக்கிறது ஒரு வியாதி. இந்தக் கேசிலே, அவர் அங்கேயே இருந்தது, இன்னும் வசதியாப் போச்சுது. சுனாமியில் இருந்து தப்பித்த ஜெயமோகனின் அனுபவங்கள்னு நாளைக்கு, குமுதத்திலேயோ, விகடன்லயோ, பேட்டி வராட்டா, தலையை மொட்டை அடிச்சிகிறேன். இவரோட ஒன்ஸ்-அப்பான்-அ-டைம் குருவே, இல்லத்தரசியோட, ஐம்பதாண்டு திருமண நிறைவு விழாவுக்கு, பெஸ்ட் செல்லிங் பத்திரிக்கைக்கு போஸ் குடுக்கிறப்போ இது என்ன பெரிய விஷயம்? 'டைமண்டு'க் கவி விரிச்ச வலையிலேந்து தப்பிச்சீங்களேன்னு சந்தோசப் படறதுக்குள்ளே, இது என்ன புது கலாட்டா? ( என் பேரைச் சொல்ல முடியாததுக்கு ரொம்பவும் வருத்தப் படறேன்)

1/08/2005 4:45 AM  
Blogger சன்னாசி said...

திரு.அனானிமஸின் பின்னூட்டத்திலிருந்து:

//சுனாமியில் இருந்து தப்பித்த ஜெயமோகனின் அனுபவங்கள்னு நாளைக்கு, குமுதத்திலேயோ, விகடன்லயோ, பேட்டி வராட்டா, தலையை மொட்டை அடிச்சிகிறேன். இவரோட ஒன்ஸ்-அப்பான்-அ-டைம் குருவே, இல்லத்தரசியோட, ஐம்பதாண்டு திருமண நிறைவு விழாவுக்கு, பெஸ்ட் செல்லிங் பத்திரிக்கைக்கு போஸ் குடுக்கிறப்போ இது என்ன பெரிய விஷயம்?//

சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்கள் வணிக இதழ்களில் பங்குபெறுவதே குற்றம் என்று நினைப்பதுகூட ஒருவகை அறிவுமறுப்புதான். Elite வாசகர்கள் எங்கள் முன்னால் நீங்கள் யாரு குமுதம், விகடன் படிக்கும் மரமண்டைகள் என்று எழுத்தாள பீடங்கள் போய், வாசக பீடங்களைச் செதுக்கிக்கொள்வதுதான் இன்னும் ஆபத்தானது.

தவிர, ஜெயமோகனின் பதிவு, ஜெயமோகன் என்ற பெயர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நல்ல பதிவாகவே இருந்திருக்குமென்று படுவதால், இதையே வேறு யாரும் எழுதியிருந்தாலும் கூட, டூர் போன பொறுப்பற்ற டாக்டர்களும், போஸ்டர் அடிக்கும் ஆசாமிகளும், குப்பத்தான் புதுத்துணி கேக்கறான் என்று நக்கலடித்தவர்களும், மன்னராட்சி காலத்து மந்திரிகளும் ஜெயலலிதாவும், சன் டிவியும் தாங்கள் செய்வதையே அப்போதும் செய்துகொண்டிருந்திருப்பார்கள் என்பதால், எழுதிய ஆளைக் குறைசொல்வதை விடுத்து, எழுதப்பட்டிருப்பதில் ஏதாவது இடக்கு இருக்கிறதா என்று பார்ப்பது நலம்.

1/08/2005 6:28 AM  
Anonymous Anonymous said...

//சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்கள் வணிக இதழ்களில் பங்குபெறுவதே குற்றம் என்று நினைப்பதுகூட ஒருவகை அறிவுமறுப்புதான்//

டியர் பாம்பு.... நீங்கள் சொல்லுவது போல அர்த்தம் வருகிறதென்பதற்காக வருந்துகிறேன். என் நோக்கம் குமுதம் இன்னபிறவற்றை 'வாருவது' இல்லை. ஜெயமோகன் வகையறாவின் ஜட்ஜ்மெண்ட்டுகள் எப்படி என்பதற்காகச் சொன்னேன். விகடன் மீதான சுந்தர.ராமசாமியின் மதிப்பீட்ட்டையும், விகடனில் அவர் போட்டோ-கம்-கட்டுரை வருவதையும் எப்படி சேத்து வெச்சிப் பார்ப்பது என்று புரியவில்லை.

// எழுதிய ஆளைக் குறைசொல்வதை விடுத்து, எழுதப்பட்டிருப்பதில் ஏதாவது இடக்கு இருக்கிறதா என்று பார்ப்பது நலம்//

ºÃ£... «Å÷ ±Ø¾¢ÉÐ§Ä «ôÀÊ ±¼ìÌ Á¼ìÌ ±Ðõ þø§Äí¸§ÈÇ¡?

1/08/2005 6:45 AM  
Anonymous Anonymous said...

Good things even if it is done by our worst enemies should be acknowledged and welcome. This is not the first time RSS stepped into such relief efforts, may be for the TN people it may be a surprise. Even Nehru could not resist expressing his appreciations towards RSS noble efforts during several great calamities. Whether it was Gujarath floods, wars, earth quakes in Gujarath and Maharashtra, floods in Orissa and Andhra, it is RSS which stood first on the line. RSS always handled dead bodies with due respects. Mostly it was the only organization that dared to handle decomposed dead bodies. Here majority of the fishermen were not Hindus, still RSS is extending their helping hands. If we dont have the broad mind and heart to appreciate their noble efforts, let us atleast desist from attributing motives to their actions. People who criticise RSS in this moment should ask one question to themselves 'what is my contribution and will I dare to touch even a dead rat in my home?'. With all due respect to their great sacrifices I salute RSS.

Read the works of some RSS volunteers in this week's anandha vikatan if you dont want to believe Jeyamohan.

1/08/2005 7:42 AM  
Blogger சன்னாசி said...

//சரீ... அவர் எழுதினதுலே அப்படி எடக்கு மடக்கு எதும் இல்லேங்கறேளா?//

அனானிமஸ், இடக்கே இல்லாமல் எழுதும் யாரையாவது சொல்லுங்களேன், ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்! உண்மையைச் சொல்லப்போனால், இதற்கெல்லாம் உரைகல் என்று ஏதும்/யாரும் கிடையாது. வலைப்பதித்துவிட்டு கமெண்ட்டுகள் வருவதற்காக ஜிகிடி வேலை காட்டுபவர்கள் போலத்தான் அனைவரும் என்று எடுத்துக்கொள்வோமா? எழுத்தாளர்கள், சு.ராவோ ஜெயமோகனோ வேறு யாரோ அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பதே, அவர்கள் அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் எனக் கருதி (விரும்பியோ விரும்பாமலோ) அவர்களது பீடத்தை அங்கீகரித்துச் சரணாகதி அடைவது போலத்தான். அப்படி எதுவுமே அரசியல் செய்யாமல் கடைசிவரை விறைப்பாக இருந்த ஏதேனுமொரு ஆளுமை எனக்குத் தெரிந்து இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கிறேன்!?!?!? யாரையும் குறிப்பிட இயலாதது என் போதாமையால் கூட இருக்கலாம், தவறிருப்பின் திருத்தவும். நான் சொல்லவிரும்பியதெல்லாம், எழுதிய ஆளின் பெயர் ஜெயமோகன் என்பதால் இந்த factகளெல்லாம் மாறிவிடுமா என்பதே. ஜெயமோகன் என்ற பெயர் இருப்பதாலேயே, வாக்கியத்தின் அர்த்தங்கள் திரிகின்றன என்று நீங்கள் கூறினால், மனிதர்களின் உளறல்களுக்கும் திரிப்புகளுக்கும் அவரவர்கள் எவ்வளவு காரணமோ அதேயளவு சூழலின் மடத்தனமும் காரணம் என்று கருதுகிறேன். சுற்றுப்புறம் சுறுசுறுப்பாக இருந்தால் துணிந்து யாராவது உளறுவார்களா என்ன? அந்தச் சுறுசுறுப்புதான் உங்களது முதல் பின்னூட்டம் என்றால், சரி! உங்களது கருத்துக்களை ஒத்துக்கொள்கிறேன். வெறுமனே, ஜெயமோகன் என்ற பெயரைப் பார்த்ததும் விடப்படும் தன்னிச்சையான உதை (reflex kick) என்றால், மன்னிக்க, அது உங்கள் அபிப்ராயம் உங்கள் உரிமை, ஆனால் நான் அதை ஒத்துக்கொள்ளமுடியாது. :-)

1/08/2005 7:53 AM  
Anonymous Anonymous said...

எங்கோ தூரதேசத்தில் சொகுசாக உட்கார்ந்துக்கொண்டு இதை எழுதக் கூச்சமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் எழுதுகிறேன். ஜெயமோகனின் கட்டுரைக் களம் குமரி மாவட்டம். இந்தப் பகுதியில் பொதுவாகவே அரசியல்-மத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகம். கலவரங்களிலும் சரி, ஆபத்து காலங்களிலும் சரி. நாகை, கடலூர், சென்னைப் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் பெரிய அளவில் பங்காற்றிய தொண்டு நிறுவனங்களின் பின்னணிகள், நோக்கங்கள் என்ன என்று ஜெயமோகன் போல யாராவது எழுதினால் எல்லாவற்றையும் ஒரு context ல் வைத்துப் பார்க்க முடியும். ஜெயமோகன் குறிப்பிட்ட எல்லா அமைப்புகக்கும் முதலில் நன்றி சொல்லிவிட்டு அடுத்து அச்செயல்பாடுகளை எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். எனக்கு இந்த மாதிரி விஷயங்களை கேட்கும், படிக்கும் நேரங்களில் ஆர்பர்ட் காமுவின் The Stranger நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடிவதில்லை. இப்போது தியாகுவின் சிறையனுபவ நூலும்.

பெரிய அரசியல் கட்சிகளின் தொண்டர் படைகள் போகாமலிருந்ததே நல்லது. சண்டைபோட்டு வேலை செய்துக் கொண்டிருந்தவர்களையும் கெடுத்திருப்பார்கள்.

சுந்தரமூர்த்தி

1/08/2005 8:16 AM  
Anonymous Anonymous said...

Dear Anonymous (I can almost guess who you are):
//Good things even if it is done by our worst enemies should be acknowledged and welcome.//

Very valid point. Then, how did you miss other organizations (or your enemies!) in your comments and salute?

//With all due respect to their great sacrifices I salute RSS./

Sundaramoorthy

1/08/2005 8:23 AM  
Blogger ROSAVASANTH said...

எல்லோருக்கும் நன்றிகள். நேற்று இந்த ப்ளாக்கர் கணக்கு ரொம்பவே பிரச்சனை செய்துவிட்டது. எழுதியது அழிய, மீண்டும் எழுத ..என்று! அதனால் ரொம்ப கோர்வையாய் எழுத முடியவில்லை.

கொஞ்சம் வில்லங்கமாய் எழுதியும், அசாதாரண பின்னூட்டங்கள் எதுவும் வராதது கொஞ்சம் ஆச்சரியம். என் கருத்தை பிறகு(இந்த முறை நிச்சயமாய்) இன்னும் சிறிது காத்திருந்துவிட்டு தருகிறேன்.

மக்கள் இப்படி பெயர் சொல்லாமல் அநாமதேயமாய் வருவதில் எனக்கு பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், ஏகபட்ட பேர் அப்படி எழுதும் போது எந்த அநாமதேயம் எதை எழுதினார் என்று குழம்ப வேண்டியிருக்கிறது. அதனால் 1, 2 என்று நம்பராவது போட்டுகொள்ளுங்கள், ப்ளீஸ்!

RSSக்கு ஸல்யூட் அடித்த அநாமதேயத்தை சு.மு.வுக்கு தெரியும் போல. அவரை குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால் முதலில் பெயர் போடாமல் எழுதியவர் "என் பேரைச் சொல்ல முடியாததுக்கு ரொம்பவும் வருத்தப் படறேன்" என்று சொல்வதன் காரணம் புரியவில்லை. நான் காரணம் இல்லையே? என்னால ஒரு பிரச்சனையும் இல்லையே? மீண்டும் வருகிறேன்.

1/08/2005 12:37 PM  
Blogger வீச்சறுவாள் said...

மிகவும் துரதிர்ஷ்டமான, கண்ட அனைத்து கண்களிலும் கண்ணீரையோ குறைந்தபட்சம் கவலையோ தரும் காட்சிதான் சுனாமியின் விளைவு. அதைவிட துரதிர்ஷ்டமானது , ஜெயமோகன் ஆர் எஸ் எஸ் எல்லோரும் மீட்பு பணிகளில் வேலை செய்கிறார்கள், அமிர்தானந்தமயி 100 கோடி நிவாரண நிதி அளித்துள்ளார் ஆதலால் ஆர் எஸ் எஸ்தான் உலகின் மிகப் பெரும் தியாக அமைப்பு அல்லது அது போன்ற ஒரு அமைப்பில் சேராதவன் எஅவ்னுக்கு மீட்பு பணிகளில் ஈடு பாடு இந்த ஜென்மத்துக்கு வராது என்பது போல் கூவிக்கொண்டே , மதங்களை தூக்கிப் பிடிப்பது.


ஜெய்மோகனின் கட்டுரையில் உள்ள தகவல்கள் அனைத்திலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்படித்தான் கேடு கெட்ட சமூகமாய் இருக்கிறது நம்முடைய சமூகம்/அரசு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த பிரச்சினைக்கெல்லாம் தீர்வு
மதம் தான் என்று ஒரு ஓலமிட்டு அழுகிறாரே அங்கேதான் பிரச்சினை.


1976- சைனாவின் தங்ஷான் நகரில் ஒரு 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.அதன் இறப்பு கணக்கு 8000 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்ன் நேரடி பாதிப்புக்குள்ளானோர் 242,419 பேர். இன்னுமொரு 164,581 பேர் பலத்த காயப்பட்டனர்.
உடனடி சாவுகள் 7000 போல என்று பதிவாகியுள்ளது.
ஆதாரம்:http://history1900s.about.com/od/horribledisasters/a/tangshan.htm

அந்தக்காட்சியை காற்பனைசெய்து பார்த்தோமெனில் சற்றேறக்குறைய சுனாமியின் காட்சி போலவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கும். பிரச்சினை என்னவெனில் அங்கு ஆர் எஸ் எஸ் இருக்கவில்லை. மீட்பு பணிகளும் இதுபோல்தான் நட்ந்துள்ளன.
எங்கு பார்த்தாலும் அழுகிய பிணங்களும் இருந்தன. சீனாக்காரனுக்கு மதம் தேவைப்படவில்லை மீட்பு பணி செய்வதற்கு. இந்த உண்மையின் பின் உள்ளதை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் நேர்மை தேவைப்படுகிறது. ஜெயமோகனுக்கு நேர்மையைவிட,
சுனாமியை, சுனாமி மீட்பு செயல்களை அளவுகோலாக மாற்றி, அனைவரையும் அதில் fail ஆக்கி , ஆர் எஸ் எஸ் இன்னும் பல
வர்ணங்களை அப்பி கலவையான புருடாவை சுவையாக தருகிறார்.

ஆர் எஸ் எஸ் -ஐயே எடுத்துக்கொள்வோம் உதாரணத்துக்கு(அல்லது சேவை செய்யும் எந்த அமைப்பையும் ஆகட்டும்). தமிழ் நாட்டில் இருந்த அத்தனை ஆர் ஆர் எஸ் சேவகர்களுமா மீட்பு பணிக்கு ஆஜராகி விட்டார்கள் இல்லையே. இந்த கேள்வியை ஏன் கேட்க வேண்டியதாகிறது எனில், மதம் சார்ந்த அத்தனை உள்ளங்களும் கருணையே வடிவாய் மாறிவிட்டதா, ஜெயமோகன் சொல்வது போல் என்று தெரிந்து கொள்ளத்தான்.

திமுக அதிமுக கட்சிகள் ஆள் பலமிருந்தும் ஏன் மீட்ட்பு பணிகளை செய்யவில்லை. அவர்கள் செய்தால்தான் ஆச்சரியபடவேண்டும் , செய்யாததற்கு ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இவர்கள் பொது வாழ்வில் சம்பாரிக்க வந்தவர்கள். பொது வாழ்வில் அக்கறை , ஆட்சி போகிறது என்றால் தான் வரும். ஆ ர் எஸ் எஸ் சினால் எப்படி செய்யமுடிகிறது? என்று பார்ப்போம்.
இத்தனை பெரிய மீட்பு பணியை செய்ய அத்ற்கேற்ற ஒருங்கிணைப்பு முதலில் தேவை. அந்த ஒருங்கிணைப்பை பொது மக்களிடமிருந்து அவரசர காலத்தில் பெற முடியவே முடியாது என்பதுதான் , இன்றல்ல என்றும் வரலாற்றில் இருந்து வரும் சிக்கல். அவ்வாறு ஒருங்கிணைப்பை பெற முடிந்தால், காவல் துறைகூட தேவைப்படாது சமூகத்திற்கு. ரோட்டில் நடந்து சென்றுகொண்டுருக்கு அத்தனை பேரும் , உடனடியாய் லெப்ட் ரைட் என்று சொல்லி , மீட்பு பணியில் சுனாமி வந்த 5 நிமிடத்தில் இறங்கிவிடுவார்கள். பொது மக்களிடம் அதை எதிர்பார்க்கமுடியாது. அவர்களை கலவரமும் பீதியும் தான் தொற்றிக்கொள்ளும். உடமையையும்,உயிரையும் பாதுகாப்பு நோக்கி செலுத்துவத்லே மனம் இருக்கும். 9/11 கூட அப்படத்தான் ஆயிற்று. எந்த பேரழிவின் முதல் மணினேரங்கள் அப்படித்தான் இருக்கும் இதற்க்கு எந்த சமூகமும் விலக்கல்ல. ஆர் எஸ் எஸ் ஓ, மறற அமைப்புகளுக்கோ இந்த ஒருங்கிணப்பு ஒரு சில மணி நேரங்களில் சாத்தியமாகும். அதன் பலனாகவே இம்மாதிரி பெரும் பணிகளில் ஈடுபட முடிகிறது. எந்த ஒருங்கிணைப்பு இந்திய ராணுவத்தில் சாத்தியமாகிறதோ அதே ஒருங்கிணைப்பு. இதற்க்கும் மதத்துக்கு முடிச்சு போடுவது போல் ஒரு முட்டாள்தனம் இல்லை.

இன்னொரு முக்கியமான காரணி, கையிருப்பு நிதி. இது போன்ற சமயங்களில் அளவுக்கு அதிகமாகவே செலவாகும் நிதி கையில் பணமாக இருந்தால் தான், பணத்தை அதிகமாய் செலவு செய்தாவது சில உயிர்களை காப்பாற்ற முயலலாம்.
அது சரி தளவாய் சுந்தரம் என்ன ஆர் எஸ் எஸ் காரரா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எப்படி மீட்பு பணியிடத்துக்கு வந்தார்? உலகமெங்கிலும் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சுனாமி நிதியாக மீண்டும் சொல்கிறேன், 4 பில்லியன் டாலர்கள் (இணைய செய்திகள்) குவிந்துள்ளன. இவர்களில் 99.9 சதவீதம் இந்து மதத்தினர் இல்லை என்பதை எப்படி மறுப்பார் ஜெயமோகன்.இல்லை நாகர் கோவிலுக்கு வந்து பிணம் சுமந்தால் தான் மீட்பு மனம் உண்டு என்று சொல்வரா? ஒரு வேளை ஆர் எஸ் எஸ் சில் சேர்ந்தால் சொன்னால் சொல்வார்.

ஜகத் குரு கைதின் காரணமாய்தான் சுனாமி வந்தது என்று சொல்லும் மூடர்களை , இந்து மதத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்போகிறாரா? அல்லது ஆர் எஸ் எஸ் சில் சேரச் சொல்லபோகிறரா? குஜராத் சம்பவம் கண்முன் வந்து குமட்டுகிறது ஏனோ தெரியவில்லை.

இந்தியாவுக்கு தொலைபேசும்போது நண்பரொருவர் சொன்னார்.தமிழகத்தில் 5,6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிப் பிள்ளைகள் , தெருவில் செல்பவர்களுக்கு காலணி துடைத்துவிட்டு,பாலிஷ் போட்டு உதவி நிதி திரட்டுகிறார்களம். இவர்கள்மனத்தில் ஆர் எஸ் எஸ் விதைக்கபடவில்லை. இவர்கள் மனத்தில் மதமும் முழுசாய் விதைக்கப்படவில்லை. இவர்களுக்கு மதம் எதற்கு என்று புரியவும் புரிவதில்லை. ஆனால் மீட்பு பணியில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். இது வரை செய்திராத வேலையைச் செய்து நிதி சேகரிக்கிறார்கள்.
இது மாசற்ற உள்ளங்களுக்கு ஜெயமோகனின் அறிவுரை என்ன. ஆர் எஸ் எஸ்-சில்/மதத்தில் சேர்ந்து அடுத்த சுனாமி வருவதற்குள் மீட்பு பணிக்காக ஆயத்தமாகிவிங்கள் என்பதா? என்ன லாஜிக் ஜெயமோகனுடையது.

இன்னும் நிறைய எழுத இருந்தாலும் , சலிப்பு தட்டுகிறது.
இனியாவது ஜெயமோகன், தனது எழுத்து வலிமையை நேர்மையாய் செலவிடுவார் என்று எதிர்பார்க்கலாமா?

1/08/2005 1:03 PM  
Anonymous Anonymous said...

பாம்பு, இது நீங்கள் எழுதினது

//வலைப்பதித்துவிட்டு கமெண்ட்டுகள் வருவதற்காக ஜிகிடி வேலை காட்டுபவர்கள் போலத்தான் அனைவரும் என்று எடுத்துக்கொள்வோமா?//

இது வசந்த் எழுதினது

//கொஞ்சம் வில்லங்கமாய் எழுதியும், அசாதாரண பின்னூட்டங்கள் எதுவும் வராதது கொஞ்சம் ஆச்சரியம்.//

சந்தேகத்துக்கு இடமில்லாமல் நீங்க தான் வஸ்தாது. :-).

ஜெயமோகன் என்ற பெயரைப் பார்த்ததும் எழுந்த ரி·ப்ளக்ஸ் ஆக்ஷன் இல்லை அது. இந்த வலைப்பதிவு உலகத்திலே ஜெயமோகனை முகமூடி போட்டுக் கொண்டு திட்டுபவன் பிராந்தன். ( வர கிரிடிட்டை எதுக்கு விட்டுக் கொடுக்கோணும்). இந்த விஷயத்தில், ஜெயமோகன் பதிவு செய்த அனைத்துமே போலியானது, பாசாங்கானது என்பது என் கருத்து. ஆனால் அதை நிரூபிக்க என்னிடம் வழியில்லை.

1/08/2005 3:12 PM  
Blogger ROSAVASANTH said...

அனானிமஸ், பாம்பு சொன்னதையும் *நானே* சொன்னதையும் சேர்த்து போட்டு என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. சரி, புரிகிறது. சிம்புவின் ஆண் குறையை அறுக்கவேண்டும் என்று தலைப்பு வைத்தது, பரபரப்புக்காகத்தான் என்று சொல்லும் ஆணாதிக்க வக்கிரங்களை போல, நீங்கள் சொல்வதை நான் எடுத்துகொள்ளவில்லை என்றாலும், இந்த பின்னூட்டத்தை வைத்து கொண்டு என்ன எழவை சாதிக்க முடுஇயும் என்று யோசித்து பாருங்கள்.

மேலும் பரபரப்புக்காக என்று எழுதிய அபிஷ்டுக்கள் எதுவும், பரபரப்புக்காக நான் சொன்னாலும், சிம்பு ஒரு படம் ஓடுவதற்காக பெண்களை கொல்வதை பிரசாரம் செய்வதை நியாயபடுத்துவதை கவனியுங்கள். என்ன சொல்ல வ்ருகிறேன் என்றால், ஜெயமோகன் எழுதுவது அத்தனையும் போலியாக இருந்தால், அதனால் என்ன? 'வலைப்பதித்துவிட்டு கமெண்ட்டுகள் வருவதற்காக ஜிகிடி வேலை காட்டி'னால் அதனாலென்ன? பிரச்சனை அதுவல்ல. நான் பேச் புகுந்ததும் அதுவல்ல. நான் வில்லங்கமாய் எழுதியதாக சொன்னது, ஜெயமோகனை குறித்து அல்ல. RSSகுறித்து நான் எழுதியுள்ளது.

ஜெயமோகம் கட்டுரை முக்கியமானது என்று சொன்னது, ஒரு குறிபிட்ட பதிவில் கிடைக்க கூடிய விஷயங்களை குறித்தே தவிர, அது உண்மையிலேயே முக்கியமானதா என்பது முக்கியமல்ல. இதை எழுதியதை, வீச்சரிவாளுடன் ஒன்று சேர்த்து என் அடுத்த பதிவாய் தருகிறேன்-இன்று தூங்க போகும் முன். இப்போது வெளியே போகவேண்டியிருக்கிறது.

1/08/2005 3:33 PM  
Blogger ROSAVASANTH said...

"இது குறித்து சொல்ல வருவதெல்லாம் 'மதவெறி' என்ற ஒற்றை வார்த்தை RSSஇன் செயல்பாடுகளை எல்லாம் விளக்க போதுமானதாக இல்லை எனபதுதான். அதாவது, "இவ்வமைப்புகளின் கொள்கைகளைப்பற்றிய விவாதமோ எதிர்ப்போ உருவாக்கப்படுவதற்குப் பதிலாக அவற்றை பேய் பிசாசு என்று பிரச்சாரம்செய்யும்போக்கு உருவாக்கப்படுகிறது." என்ற ஜெயமோகனின் குற்றசாட்டை ஆமோதித்து வேறு பார்வைகளில் இது விவாதிக்கபடவேண்டும் என்பதே நான் சொல்ல விரும்புவது.

இந்த இடத்தில் அஷீஷ் நந்தி தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தாக வேண்டும். கோட்ஸேயை வெறும் "இந்து மத வெறியன் " என்ற சொல்லாடல்களுக்குள் சிக்க வைத்து விளக்குவதை நிராகரித்து, அவனை ஒரு சமூகத்தின் ஒரு ஆண்மைய சிந்தனையின் , "தங்களுக்கு என சில சலுகைகளை எதிர்பார்த்த" உயர்சாதியின் , நவீனமான பிரதிநிதியாய், இந்தியாவை ஒரு வல்லரசாக்கும் கனவை கொண்ட லட்சியவாதியாய் முன்வைத்து விளங்க முயற்சிக்கிறார். இங்கே மிகவும் ஜாக்கிரதையாய் இதை கையாள வேண்டியிருக்கிறது. ஏனெனில் அஷீஷ் நந்தியை உந்துதலாய் வைத்து, இந்துத்வமாய் வெளிவந்த ஹேராம் எடுத்த கமலை பாராட்டுவதில் போய் இது முடியக்கூடிய அபாயம் உண்டு.

அஷீஷ் நந்தியின் பார்வை இங்கு உதவுமா என்று தெரியவில்லை. என்னுடய கேள்வி RSSபோன்றவற்றின் இத்தகைய பணிகளை சாதகமான ஒரு விஷயமாய் எடுத்து கொள்ளலாமா என்பதுதான். பின்னூட்டங்களை (ஒருவேளை வந்தால்) கவனித்த பின் இதை மேலே தொடர்கிறேன்."

இதுதான் நான் எழுதிய வில்லங்கமான விஷயம். இதற்குதான் எந்த அசாதரணமான பின்னுட்டம் எதுவும் வராதது மட்டுமல்ல, இந்த விஷயத்தை தொட்டு பார்த்துகூட யாரும் எழுதவில்லை என்பதுதான் நான் கடைசியாய் சொல்ல விரும்பியது. மற்றபடி ஏற்கனவே சொன்னதுப்போல்....

1/08/2005 3:40 PM  
Blogger ravi srinivas said...

i did read the article in thinnai.i have no time to respond now.i may react later by writing an article.
you have written about nandy's views on RSS.one can
discuss that.a perfect gentleman can also be a collaborator in a genocide.a zealot can be a humanitarian in some context.organizations like
RSS have views on nation-state and cultural nationalism.
nandy's views are important as they question these.

1/08/2005 5:44 PM  
Blogger ROSAVASANTH said...

// perfect gentleman can also be a collaborator in a genocide.a zealot can be a humanitarian in some context.organizations like
RSS have views on nation-state and cultural nationalism.
nandy's views are important as they question these. //

it is exactly what I wish to start talking about, not about what Jeyamohan is interested in!

1/08/2005 5:47 PM  
Blogger சுந்தரவடிவேல் said...

நானெழுதப் போவதை நன்றிகெட்ட பினாத்தல் என்று சுலபமாய்த் திரிக்க முடியும். ஜெயமோகனுக்குத் தெரியும் இதனால் லாபமடையப் போவது கிறிஸ்தவ அமைப்புக்களோ அல்லது தமுமுவோ இல்லையென்பது. மூனு கொடியையும் தூக்கிப் போடுறேன். வேணுங்கறவன் புடிச்சுக்க. யாரு எப்போ அந்தக் கொடியைத் தூக்கிப் புடிச்சுக்குவாங்கன்னு தெரியும். I salute RSS அப்படின்னு யாரு முன்னாடி ஓடியாறுவான்னு தெரியும். கழகங்கள் செய்யத் தவறியதை ஆர் எஸ் எஸ் செய்திருக்கிறது. கழகங்களுக்குக் கிடைக்காத மதிப்பெண்கள் ஆர் எஸ் எஸ்ஸுக்குக் கிடைக்கும். இந்த அமைப்பு செய்த அதே வேலையைத்தான் ரஜினி ராம்கியும், பாபுவும் செய்தார்கள். அவர்கள் யாராக அங்கே நின்றார்கள்? பிணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கைகழுவி விட்டிருப்பார்கள். ஆனால் அதை ஆர் எஸ் எஸ் சுமந்து கொண்டேயிருக்கும். இருக்கிறது. கிறிஸ்தவப் பிணங்களைத் தூக்கிப் போட்ட இஸ்லாமியர்கள் அதற்கான நற்சான்றிதழ்களோடு ஊர்வலம் போவார்களா என்று தெரியாது. விபத்து நடந்த எல்லாவிடங்களிலும் மனிதம் வெளிப்பட்டிருக்கிறது. அது மதத்தால் அங்கு கொண்டுவரப்பட்டதோ அல்லது எக்ஸ்னோராக்கள், க்ளப்புகளால் கொண்டுவரப்பட்டதோ. பகைவரும் பாராட்டும் ஒழுக்கமும், வேகமும் புலிகளின் மீட்புப் பணிகளிலும் இருந்திருக்கிறது. அவர்கள் என்ன மதத்தின் கீழா ஒன்றாயிருக்கிறார்கள். சமூகப் புரட்சி செய்யாததை மதம் சாதிக்கிறது என்று ஜேமோ கூப்பாடு போடுவதைப் புலிகளின் மீட்புப் பணிகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. கழகங்களும், ரசிகர் மன்றங்களும், அரசமைப்பும் இயங்காத இடத்தில் அம்மணமான ஊர்ல கோவணம் கட்டுன ஒசத்தியா மதங்களின் வேலை தெரிஞ்சிருக்கு. அதுலயும் ஏற்கெனவே நெகட்டிவ் இமேஜ் இருக்க ஒரு மதவமைப்புக்காரங்க அதைச் செஞ்சா அதுக்கான மதிப்பு பெருசாக் கூடிப்போகும். அந்தக் கோவணமே பெருங்கொடியா மாறும். இதையெல்லாம் அவரு யோசிச்சு எழுதினாரான்னு தெரியாது. ஆனா இதெல்லாம் சாத்தியம். ஒரு விபத்துக்குப் பின்னாடி டக்குன்னு போயி உதவுறதுக்கு ஆயிரமாயிரம் வருஷமா மதத்தைக் கட்டிக் காக்க வேணாம், அதுகளோட சேர்ந்த கழிவுகளைக் கட்டிக் காக்க வேணாம், எழுத்தில் 1, 2, 3 போட்ட சாதாரண விதிகளையும் அதைச் செய்யும் முறைகளையும் fire drill மாதிரி சொல்லிக் குடுத்தாப் போதும். யாரோ கேட்ட மாதிரி, மதங்களாலதான் இந்தச் சேவையைச் செய்ய முடியும்னா சொவத்துல குந்திப் பேசுன டாக்டர்மாரெல்லாம் மதத்துக்காரங்க இல்லலயா அல்லது பக்கத்துத் தெருவுல பொணம் நாற நாற மோச்சதீபம் மெழுகுவர்த்தி ஏத்துனவங்க மதத்துக்காரங்க இல்லலயா. வேலை செய்றதுக்கு மனுசன் போதும், மதம் வேண்டியதில்லை. அங்கு வேலை செய்த மனிதர்களை நான் வணங்குகிறேன்.

1/08/2005 7:50 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

வசந்த்,

நல்ல பதிவு என்று கூறும் அதே நேரத்தில், என் மனதில் பட்ட சிலவற்றை சொல்ல விழைகிறேன்.

//தயிர்வடை சென்ஸிபிலிடியின் ஆபத்தை வன்முறையை வெங்கடேஷ் இன்னும் இதற்காக ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்க்காததில், அதை இத்தனை அபிஷ்டுக்கள் (ஏதோ வகையில்) நியாயபடுத்தி வருவதிலிருந்து காணலாம்//

வெங்கடேஷ் எழுதியது தவறு என்று இருந்தாலும் கூட, நீங்கள் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை சற்று ஆணித்தரமாகவே வலியுறுத்தி வருகிறீர்கள்! அதை நான் தவறு என்று கூறவில்லை.

அதே சமயம், ஒரு சிறந்த சாதனையாளரான வைரமுத்துவை, உங்களுக்கு அவர் மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும், சர்வ சாதாரணமாக 'நாய்' என்று பலரும் படிக்கும் தங்கள் பதிவில் எழுதியிருப்பது, ஆரோக்கியமானது அல்ல. அதைப்பற்றி விமர்சனம் வரும்போதாவது, நீங்கள் வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்பது என் கருத்து. பதிவுகளில் தனிமனித வழிபாடும் தவறு; வசவுகளும் தவறு.

//மேலே உள்ள பழைமை வாத பார்பனியம் நவீனமனால் அது இப்படித்தான் வெளிவரும். பார்பன வெறி எந்த முகமுடியும் இல்லாமல் வெளிவருவது என்பது இதுதான். இதை எந்த விதத்திலும் பெந்தகோஸ்தேவுடனும், ஜாஃபர் அலியுடனோ ஒப்பிடமுடியாது. அது ஆழ்ந்த ஒரு மதநம்பிக்கை, அவர்களிடம் வெளிப்படுவது பிறர் மீதான வெறுப்பொ, நடந்தது குறித்த களியாட்டமோ இல்லை. மாறாக பாசிசம் என்பது, உதவிகள் எதையும் இந்தியாவிற்கு அளிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுக்கும் இந்த பார்பன வெறிதான்.//

அந்த வெறியரை மட்டும் வைத்துக் கொண்டு, "பெந்தகோஸ்தேவும், ஜாஃபர் அலியும் பரவாயில்லை" என்ற கூற்றும் ஏற்புடையது அல்ல. அதுவும், மத, இனவெறி சம்மந்தப்பட்டது தான், எல்லாம், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். இதில் தரம் பிரித்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை!

மற்றபடி, ஜெயமோகனின் திண்ணைக் கட்டுரையின் பேரில் இத்தனை பெரிய விவாதம் நடக்கும் என்று எண்ணிப் பார்க்கவில்லை :-)

என்றென்றும் அன்புடன்,
பாலா

1/10/2005 6:09 PM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ள பாலா, உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

வெங்கடேஷ் எழுதியதை 'எதிர்பாராமல் செய்த தவறா'கவும், அவர் அதை உத்தேசித்து செய்ததில்லை என்றும் இன்னும் பல வகைகளில் பலர் எழுதியுள்ளனர். அவர்கள் சொல்வதில் சிறிதளவு நியாயம் இருந்தால் கூட, வெங்கடேஷ், ஒரு விளக்கம் அளித்து, 'யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்' என்றாவது, அல்லது இதை போல ஏதாவது சொல்லியிருப்பார் என்பதுதான் என் வாதம். பலர் அதை மீண்டும் நியாயபடுத்தி, கண்டித்தவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பதால் சொல்லவேண்டி வந்தது.

வைரமுத்துவை நான் பல நேரங்களில் நியாய படுத்தியிருக்கிறேன். அவர் எழுதுவதை 'கவிதை அல்ல, குப்பை' என்று சொல்வதை எதிர்த்து எழுதியிருக்கிறேன். ரவி ஸ்ரீனிவாஸுடன் பதிவுகளில் இந்த விஷயத்தில் விவாதம் நடந்திருக்கிறது. இங்கே எதிர்பிற்கான காரணம் சொல்லிவிட்டேன். 'நாய்' என்று சொல்லியிருக்க வேண்டாம்தான். அது உடனடி கோபம். ஆனா அதற்க்காக மன்னிப்பு கேட்கவேண்டும் எனில், வைரமுத்து ஒரு போலி ஆபாச கவிதை எழுதி, ஒரு பெரும் மக்கள் சோகத்தை கொச்சை படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும், என்பது என் கருத்து.

நான் ஜாஃபர் அலியையும், பெந்தகோஸ்தேயையும் பரவாயில்லை என்று சொல்லவில்லை. அதன் ஆபத்தை குறைத்து மதிப்பிடவில்லை. அதை விட பலமடங்கு மேலே வெளிப்படும் பார்பன வெறியை (இப்படி வெளிப்படையாகவோ, முகமுடி அணிந்தோ வருவதை) எதிர்கிறேன். இது என் தனிப்பட்ட க்ருத்து. இது குறித்து வெங்கட்டின் பதிவில் ஏற்கனவே என் கருத்தை சொல்லியுள்ளேன்.
http://www.domesticatedonion.net/blog/?itemid=372

1/10/2005 6:39 PM  
Anonymous Anonymous said...

வசந்த்,

பதிலுக்கு நன்றி!

//வெங்கடேஷ், ஒரு விளக்கம் அளித்து, 'யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்' என்றாவது, அல்லது இதை போல ஏதாவது சொல்லியிருப்பார் என்பதுதான் என் வாதம்.//

சொல்லியிருக்கலாம். இது குறித்து மேலும் கிளர விரும்பவில்லை!

//'நாய்' என்று சொல்லியிருக்க வேண்டாம்தான். அது உடனடி கோபம். ஆனா அதற்க்காக மன்னிப்பு கேட்கவேண்டும் எனில்//

மன்னிப்பெல்லாம் கேட்க சொல்லவில்லை, ஒரு வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்றல்லவா கூறினேன்!

//அதை விட பலமடங்கு மேலே வெளிப்படும் பார்பன வெறியை (இப்படி வெளிப்படையாகவோ, முகமுடி அணிந்தோ வருவதை) எதிர்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து.//

புரிந்து கொண்டேன்! நான் சொல்ல வந்தது இன/மத வெறியர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் என்பதே! பல உயர்சாதி இந்துக்களும் இதில் அடக்கம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

1/11/2005 5:02 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter