ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Tuesday, November 30, 2004கொடுக்க வேணும் இனிமா!தமிழ் சினிமாக்கள் பார்க்க கிடைக்காத ஒரு இடத்தில் வாழ்வதில், `இந்த பழம் கடிக்கும்' என்று தெரிந்தாலும், அவ்யபோது கொஞ்சம் ஏக்கமாகவே இருக்கும். சில மாதங்கள் முன்பு உஸ்மான் ரோட்டில் அள்ளிவந்த சில (சத்தியமாய் திருட்டு) விசிடிக்களை பார்த்ததில், தமிழ் படங்களை நினைத்து கொஞ்சம் சந்தோஷமாகவே இருந்தது. விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு சமரச சமன்பாட்டு மனதுடன் பார்க்கையில், தமிழ் சினிமா ஒரு ஆரோக்கியமான சூழலில் இருப்பதாகவே தோன்றியது. அப்படியே இருந்திருக்கலாம்! சென்ற வாரம், மேற்சொன்ன ஏக்கம் வந்து தொற்றிகொள்ள, ஸன்மிக்ஸ் பக்கம் போய் பார்தேன். `மன்மதன்' படம் ஆன்லைனில் இருந்தது. இறக்கி ஒரு பதினைந்து நிமிடம் (அதுவும் மற்ற வேலைகளை கவனித்து கொண்டே) பார்த்திருக்க மாட்டேன். தாங்கமுடியாமல் விண்டோஸ் மீடியா ப்ளேயரை ஒரு கிளிகடித்து காலி பண்ணினேன். படமாய்யாஅது! இப்படியும் கேவலமாக படம் எடுக்க முடியுமா? சிம்புவின் நடிப்பு வேறு, சகிக்கவில்லை! இவ்வாறாக, ஆபிஸ் நேரத்தில் வாங்கும் சமபளத்திற்கு வேலை செய்யாமல் ஒரு விதேச துரோகியாய் இருப்பது உறைத்து மீண்டும் வேலையிலாழ்ந்தேன். ஆனாலும் விதி விடவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சொந்த காரணங்களால் கொஞ்சம் பதற்றத்தில் இருந்தேன். பதற்றித்து ஆவதொன்றுமில்லை என உணர்ந்து, ரிலாக்ஸிக்க மீண்டும் ஸன்மிக்ஸ் பக்கம் போய் பார்தேன். `மன்மதன்' படத்தின் மூன்றாம் பாகம் இருந்தது. படத்தில் கவுண்டமணி இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. `என் ஆசை மைதிலியே..' பாட்டை வேறு ஏற்கனவே கேட்டிருந்ததால் பழைய டீ.ராஜேந்தர் ரசனையும் வந்து சதி செய்ய, விதி வழி சென்று படத்(தின் மூன்றாம் பாகத்)தை இறக்கி, அதையும் முன்னே ஒட்டி கடைசி சில காட்சிகளை மட்டும் பார்த்து தெரிந்துகொண்ட கதை இது. இடையில் வந்த `என் ஆசை மைதிலியே..' பாட்டு மட்டும் ஏமாற்றவில்லை. சிம்பு-ஜோதிகா போட்டு கலக்கியிருந்தார்கள். ரெண்டு சிம்பு. அண்னன் சிம்பு ஹீரோ. தம்பி சிம்பு, அண்ணன் விவரிக்கும் ப்ளாஷ் பேக்கில் மட்டும் வரும் ஒரு (மனதளவு) சொங்கி. சில படங்களில் தொடக்கத்தில் ஹீரோவிற்கு கனவில் கனவுக்கன்னி வந்து விளையாட்டு காட்ட (உதாரணம் காதலன், காதல் தேசம், ....), அந்த கனவுகன்னியை நனவில் சந்தித்து கதை போகும். இங்கே புதுமையோ புதுமை! ஒரு மாறுதலாய் ஜோதிகாவிற்கு கனவு. கனவு வாலிபனாய் வரும் சிம்பு, கனவில் ரேப் பண்ணி விடுகிறார். ரேப் பண்ண வருவதாய் அல்ல கனவு, பண்ணுவதாய் முழுசாய் ரேப் பண்ணி முடியும்வரை கனவு கான்கிறார். (குரோசோவாவிற்கு இது தோணாம போச்சே, இதையும் இன்னொரு நேரேஷனாக ரஷோமானில் சேர்த்திருக்கலாம்.) எல்லோரும் எதிர்பார்பது போல் சிம்புவை நேரில் சந்திக்க நேர்ந்து, கனவில் `கற்பை பறிகொடுத்தவர்' (படத்தில் வரும் வசனம்), பிடித்து போய் நனவில் மனதை பறிகொடுக்கிறார். இடையில் இந்த சிம்பு பாரில் தண்ணியடிக்கும், பலருடன் காதல் கொள்ளும், `கெட்ட' பெண்களை எல்லாம் சிகப்பு ரோஜாக்கள் பாணியில் தீர்த்துகட்டி வருகிறார். ஜோதிகாவிற்கு விஷயம் தெரியவந்து, போலீஸில் போட்டு கொடுக்க ப்ளாஷ் பேக். தம்பி சிம்பு காதல் தோல்வியில் `ஏ..புள்ள..புள்ள..' என்று பாட்டு பாடி(அய்யோ!), பின்பு காதலில் பாஸாகி, பிறகுதான் காதலி மேற்சொன்ன `நடத்தை கெட்ட' பெண் என்பது தெரிகிறது. வாழ்க்கையில் பல ஆடவரோடு ஜாலியாக இருக்கவேண்டும் என்ற நோக்கதிற்காக, அதை கண்டுகொள்ளாத ஒரு சொங்கி கனவன் வேண்டும் என்ற சூப்பர் ஐடியாவை மனதில் வைத்து, சிம்புவை பிடிக்கிறாராம். இன்னொரு ஆணுடன் காதலியை படுக்கையில் (விலாவாரிவாக) பார்க்கும் தம்பி சிம்பு, ரெண்டு பேரையும் தீர்த்து கட்டிவிடுகிறார். பிறகு, சொங்கியாயிருந்தவர் கெட்டப் மாறி, அவர்தான் மேலே உள்ள கொலைகளை எல்லாம் செய்ததாக ப்ளாஷ் பேக் சொல்ல, அண்ணன் சிம்பு விடுதலையாகிறார். ஜோதிகா `என் ஆசை மைதிலியே..' பாட்டை கனவு காண்கிறார். ஆனால் சிம்பு அவரது காதலை மறுக்கிறார். ஏனெனில் உண்மையான ப்ளாஷ்பேக்கில் தம்பி சிம்பு தற்கொலை செய்துகொண்டுவிட, அந்த கொலைகளை எல்லாம் அண்ணன் சிம்புதான் செய்துவருகிறார். இன்னும் செய்ய போகிறார். இதுதான் கதை. சிகப்பு ரோஜாக்கள்/visiting hours போன்ற திரில்லர்களில் எல்லாமாவது கதாநாயகன் மனநிலை பாதிக்கபட்டவனாய், கொலைகளுக்கு அந்த பாதிப்பே ஒரு காரணமாய், விமர்சன பூர்வமாய் இருக்கும். இங்கே மிக தெளிவாக, `நடத்தை கெட்ட' பெண்களை எல்லாம் கொல்ல வேண்டும், அப்படி கொல்வதுதான் சரி என்று ஒரு தர்க்க நியாயத்தை முன் வைத்து, தீர்மானத்துடன் கொலைகளை செய்கிறான். அதை வசனமாய் சொல்ல வேறு செய்கிறான். போலீஸிலிருந்து தப்பிப்பது (இந்தியன் தாத்தா மாதிரி ஒரு நல்லகாரியம் செய்வதால் அவன் தப்பிப்பது தர்மரீதியாய் நியாயமானது என்று கட்டமைப்பது) மட்டுமில்லாமல், அதை ஒரு வாழ்க்கை லட்சியமாய் (ஜோவின் காதலை மறுத்து) தொடரவும் போகிறான். படத்தில் ஒரு ஏட்டு (காமெடியாம்!) வசனம் பேசுகிறார், " நாங்க அவன பிடிக்க மாட்டோம். நாங்க எதுக்கு அவன பிடிக்கணும்! அவன் என்ன நல்ல பொண்ணுங்களையா கொலை பண்றான், நடத்த கெட்டதுகளைத்தானே கொல்றான்! நாங்க அவன பிடிக்க மாட்டோம்!" உலகில் எங்குமே இல்லாத அளவிற்கு கற்பு மதிப்பீட்டை தூக்கி பிடிக்கும் தமிழ் சூழலில் இப்படி ஒரு படத்தை சென்ஸார் எப்படி அனுமதித்தது? கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு தீவிரவாதி உருவாவதையோ, வீரப்பன் போன்று ஒருவர் உருவாவதையோ, அதற்குரிய சமூக சூழல்/நியாயங்களை முன் வைத்து (விமர்சனத்துடனேயே) படம் எடுத்தால் இங்கே எத்தனை பிரச்சனைகள் வரும். எத்தனை கண்டனங்கள் குவியும். பிரச்சனைகளை கொச்சை படுத்துவது தவிர வேறு எதுவும் தெரியாத மணிரத்தினத்தின் படங்களுக்கே எத்தனை பிரச்சனைகளை சென்ஸார் தந்திருக்கின்றன. தமிழகத்து பெண்கள் எல்லாம் இந்த படத்தை பார்த்து பொங்கி எழுந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் பெண்ணிய அமைப்புகள் என்று சொல்லி கொண்டிருப்பவர்களாவது பொங்கி எழவேண்டும். ஆர்பாட்டம் நடத்த வேண்டும். வழக்கு தொடுக்க வேண்டும். பாய்ஸ் படத்தில் ஈவ்டீஸிங் கொஞ்சம் நியாயபடுத்த பட்டிருந்தாலும், அதில் தாராள பாலியல் பேசபட்ட காரணத்திற்காகவே பெருமளவில் எதிர்க்க பட்டது. பெண்ணை இன்னும் கொஞ்சம் சுதந்திரமாய் காட்டும், டேட்டிங் செய்வதை, பாய்ஸும், கேர்ள்ஸும் பாலியல் குறித்து பேசிகொண்டதை இயல்பானதாய் காட்டியதனாலேயே இங்கே மிகுந்த கண்டனத்திற்கு உள்ளானது. ஞாநி, யமுனா ராஜேந்திரன் என்று ஒரு கூட்டமே போட்டு தாக்கியது. இதுவரை இப்படி எதையும் `மன்மதன்' படம் குறித்து எந்த எதிர்ப்பையும் கேள்வி படவில்லை. அப்போது வழக்கு தொடுத்த பெண்ணிய அமைப்புகள் எல்லாம் இப்போது மன்மதன் படம் குறித்து மௌனம் சாதிக்குமெனில் இவர்களின் நோக்கங்களை ரொம்பவே சந்தேகபட வேண்டி வரும். `சினிமா அதுக்கு கொடுக்க வேணும் இனிமா!' என்று பாவலர் வரதராஜன் ஒரு பாட்டு எழுதியிருப்பார். (வெகுஜன)சினிமாவை ஒரு சமூகசீரழிவாக பார்பதன் அடைப்படையில் அவ்வாறு எழுதியிருப்பார். ஞாநி போன்றவர்களும் அத்தகைய ஒரு பார்வையிலேயே எழுதிவருகிறார்கள். இந்த பார்வைகளை முழுமையாய் நிராகரிக்கிறேன். எந்த அளவிற்கு சமுதாயம் மற்றும் அதன் மதிப்பீடுகள், சீரழிந்து இருக்கிறதோ அதை பொறுத்து, அதற்கு ஏற்ற அளவில் (வெகு)சினிமாவும் சீரழிந்திருக்கும் என்று நினைக்கிறேன். (மேலும் சீரழிவு என்று இவர்கள் சொல்வது பொதுவாக அதன் ஜனரஞ்சக தன்மையையே!) சினிமாவில் இருக்கும் ஆணாதிக்கம் எல்லாமே சமூகத்தின் மதிப்பீடுகளை பிரதிபலிப்பதாக இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த படம் ஓடாது, ஊத்திகொள்ளும் என்றே தோன்றுகிறது. மீறி ஒரு வேளை ஓடினால், சினிமாவை விட, நிச்சயம் தமிழ் சமுதாயத்திற்குதான் இனிமா கொடுக்க வேண்டும்.
|
5 Comments:
தீபாவளி ரேஸில் மன்மதன் தான் நம்பர் ஒன்னாம்.
நானும் பார்தேன் (http://www.thatstamil.com/specials/cinema/specials/manmadhan.html ). கொடுமை!
இந்த கருமம் பிடிச்ச படத்த ஒரு நாள் தூக்கத்த கெடுத்துட்டு நைட் ஷோ பாத்துட்டு, உங்கள மாறி தான் திட்டிக்கிட்டு இருந்தேன். சத்தியமா ஊத்திக்குமுன்னு நானும் நெனச்சேன். இது சூப்பர் டூப்பர் hit படமாம். தேவுடா !!!
வசந்த், உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படிப்பட்ட படத்தையெல்லாம் பார்க்கறீங்க?
மோசமான பொண்ணுங்களையெல்லாம் கொல்லலாம்னு சொல்ற படம் தமிழ் நாட்ல ஓடாம வேற எங்க ஓடும்னு நினைக்கிறீங்க. சரியான ஆணாதிக்க பர்வர்ட்ஸ் இருக்குற ஊருல வேற எப்படி படம் வரும்.
இந்த நியாத்தின் பேரிலேயே மோசமான தமிழ் படத்தையெல்லாம் திருட்டு சீடி பார்த்து ஒழிக்கலாம்னு ஏன் ஒரு படம் எடுக்கக்கூடாது? (ஒரு படமும் மிஞ்சாது)
சரி, ஜாலியா இருங்க. அப்படியே அப்ப்ப்ப எழுதுங்க. குட்டி பூர்ஷ்வாங்ற பேரு எனக்கு புடிச்சிருக்கு.
நன்றி சந்தோஷ் குரு, தங்கமணி.
தங்கமனி ஜாலிக்கு ஒரு முடிவு வந்துவிட்டது. தனி மெயிலில் எழுதுகிறேன்.
Post a Comment
<< Home