ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, February 07, 2011

#tnfisherman அரசியல்.

'தமிழ்' என்ற சொல் குறிக்கும் கருத்துருவங்களால் வழி நடத்தப்பட்ட பல அரசியல்கள், இதுவரை அளித்த ஏமாற்றம், துரோகம், அலுப்புகள் அநேகம். இவைகளை தாண்டி வெவ்வேறு அரசியல் மனம் கொண்டவர்கள் இணைந்து, இணையத்தில்- குறிப்பாக ட்விட்டரில்- காட்டிய #tnfisherman எழுச்சியும், எதிர்ப்பும் மிகவும் நம்பிக்கை அளிக்க கூடியதாக உள்ளது; அதாவது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவதற்கு எதிரான அரசியல் கொண்டவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் தருவதாக உள்ளது.

இதுவரை பல நூறு முறை செய்தியாக அறிந்த போது வராத கூட்டுக் கோபம், இந்த முறை வந்ததற்கான காரணங்களை ஆராய்வது அத்தனை முக்கியமில்லை. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை சரியான வகையில் பயன்படுத்தி தமிழ் மீனவர்களின் நிரந்தர பாதுகாப்பை நோக்கி திடமாக ஏதாவது செய்ய முனைவதுதான் இப்போது முக்கியம்.

இந்த எழுச்சியை திட்டமிட்டவர் நண்பர் TBCD என்று நினைக்கிறேன்; பிரகாஷ் வெங்கடேசனுக்கும் முக்கிய பங்குண்டு என்று அறிகிறேன். இதற்கான பேச்சுக்கள் கீச்சுகளாக வந்தபோது நான் இணையத்தில் இல்லை; அதனால் TBCD, பிரகாஷுடன், வேறு யாருக்கு துவக்கியதில் பங்கு இருந்தாலும் அவர்களுக்கும், இந்த பிரச்சனையில் ஆண்டுக்கணக்கான கொதிப்பு கொண்டவன் என்றமுறையில் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

தமிழ் சூழலில் இது போன்ற வேகங்கள் தோன்றுவது இது முதல் முறையல்ல. இந்த வேகமும், எழுச்சியும் நீர்த்து போகாமல், வேறு போக்கில் கடத்தப்படாமல் இருப்பதுதான் இந்த தருணத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டிய விஷயம். 'ஆக்க பூர்வம்' என்று நாம் பொதுவாக குறிக்கும் ஒன்றை நோக்கி இந்த உணர்வை எப்படி மாற்றபோகிறோம் என்பது நம் முன்னிருக்கும் இப்போதய கேள்வி. எனக்கும் அதற்கான தெளிவான பதில்கள் கிடையாது. பதிலை நோக்கி பயணிக்க அக்கறை கொண்ட அனைவரும் உரையாடுவோம்.

இணையத்தில் உருவான எழுச்சி செயல்பாட்டிற்கான ஒரு உற்சாகமான சந்தர்ப்பத்தை அமைத்து தருகிறது. இணைய செயல்பாடுகள் என்பது நடைமுறை அரசியல் என்று ஒன்றிற்கு இணையாக, துணையாக நடக்க வேண்டியதே தவிர, நடைமுறை செயல்பாட்டை பதிலீடு செய்யக்கூடியது அல்ல. இதுவரை திருட்டு மௌனம் சாதித்து வந்தவர்களை ட்விட்டர் எழுச்சி சாடியுள்ளது; நிலவும் கள்ளச் சூழலில், இந்த பிரச்சனையை பற்றி எதுவும் அறியாதவர்கள், எதுவும் பேசாதவர்கள் மனசாட்சியை தட்டியிருக்கிறது; அந்த வரை நல்ல விஷயம். இதை மட்டுமே தொடர்ந்து செய்வதில் பயனும் அர்த்தமும் இல்லை. அடுத்த கட்டத்திற்கு இணைய செயல்பாட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அந்த வகையில், வழக்கமான- ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த தீவிர பிரச்சனை குறித்த விவாதமாக- மெரீனா பதிவர் சந்திப்பு நடந்தது. அது குறித்த பதிவை பத்ரியும், கும்மியும், ஷரன்கேயும் எழுதியுள்ளனர். அதில் விவாதித்துள்ள நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே கும்மியும், பத்ரியும் குறிப்புகளாக எழுதியிருந்தாலும், மீண்டும் நமக்கு நாமே புதுப்பித்து கொள்ள, விவாதித்த கருத்துக்களுடன் என் இப்போதய கருத்துக்களையும் சேர்த்து தருகிறேன். தொடர்ந்து இன்னமும் பல பதிவுகளை எழுதும் உத்தேசமும் உள்ளது.

1. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து முழுமையாக ஆதாரங்களை இணையத்தில் ஆவணப்படுத்துவது. ஆங்கில ஊடகங்கள் குறிப்பாக இலங்கையில் இருந்து வரும் ஊடகங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து பொய் பிரசாரத்தை மட்டுமே செய்து வரும் 'இந்து' போன்ற பத்திரிகைகள் அளிக்கும் செய்திகளை ஆதாரபூர்வமாக, ஒரு சுட்டியை அளித்து மறுக்கும் வசதியை உருவாக்குவது; இது தவிர, உதாரணமாக சூர்யநாராயணன் தனது கட்டுரையில் சுடப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கையை நூற்றிச் சொச்சமாக சொல்கிறார். இது போன்ற தகவல் பிழைகளை நாம் உடனடியாக மறுத்து எதிர்வினையாற்றும் வசதியை இணையத்தில் உருவாக்க வேண்டும்.

இதன் முதல் கட்ட வேலை கொல்லப்பட்ட 537 மீனவர்கள் பற்றிய முடிந்தவரை தகவல்களை இணையத்தில் ஏற்றுவது. 2006 வரை கொல்லப்பட்ட முன்னூறு(+) மீனவர்களின் தகவல்களை அருள் என்ற மீனவர் சங்க தலைவர் நாளை அளிப்பதாக சொல்லியுள்ளார். அதிகப்படியாக கடந்த 5 ஆண்டுகளில் கொல்லப்பட்ட மீனவர்கள் குறித்த தகவல்களை திரட்ட வேண்டும். சீமான் தனது கட்சியினர் மூலம் அதற்கு ஏற்பாடு செய்வதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தொடர்பு ஏற்படுத்தி தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இறப்பு என்பது மீனவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் துன்பங்களில், ஒரு உச்ச நிகழ்ச்சி என்கிற அளவில், செய்தியாக மாறுகிற ஒரு துளி யதார்த்தம் மட்டுமே. குண்டடி பட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அங்கங்களை இழந்தவர்கள், வேறு பல கொடூரங்களை அனுபவித்து நினைவில் கொண்டிருப்பவர்கள், பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள், பாலியல் வக்கிரங்களை அனுபவித்தவர்கள், பணரீதியில் கோடிக்கணக்கான நஷ்டங்கள் என்று எண்ணற்ற கதைகள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. அவைகள் மீனவர்களின் வாய்மொழியில் பதிவு செய்யப்பட வேண்டும். முடிந்தவரை அதற்கான ஆதாரங்கள் (உதாரணமாக அங்கத்தை இழந்த, காயமடைந்த மீனவரின் புகைப்படம்) ஆங்கிலத்தில் பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட வேண்டும். யூ ட்யூப் போன்றவற்றிலும், www.savefisherman.org போன்ற தளங்களில் ஒட்டு மொத்தமாகவும், தேடி கண்டுபிடிக்கும் வசதிகளுடன் இணையத்தில் ஏற்றப் படவேண்டும்.

மீனவர்கள் சங்க தலைவர்களிடம் இந்த தகவல்களை விசாரிக்கும்போது 'ஈமெயில் குட்தீங்கன்னா வசதியா இருக்கும்' என்றார். நவீன மூன்னேற்றங்களுடன் அனைவருக்கும் பரிச்சயம் இருக்கும் இன்றய கட்டத்தில், நேரடியாக அவர்களை இணைய செயல்பாட்டில் பங்கெடுக்க வைக்க முடிந்த வகையில் முயலவேண்டும்.

2. இந்த பிரச்சனை குறித்து இதுவரை வெளிவந்த அனைத்து தமிழ்/ஆங்கில கட்டுரைகள், புத்தகங்கள் குறித்த தகவல்களை இணையத்தில் ஏற்ற வேண்டும். இணையக்கட்டுரை என்றால் சுட்டியளிக்க வேண்டும். இணையத்தில் இல்லாத புத்தகங்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்; முடிந்தால் அதன் முக்கிய பகுதிகளையாவது இணையத்தில் ஏற்ற வேண்டும். (என் கைவசம் மறவன் புலவு சச்சிதானந்தன் எழுதிய குறும் புத்தகம் மட்டுமே உள்ளது. ) பலவகை செய்திகளை வகைப்படுத்தி, முக்கிய ஆதரங்களை மட்டும் வரிசைப்படுத்த வேண்டும்.

இவை தவிர முக்கிய பிரச்சனைகளை, தகவல்களை, ஆதாரங்களை மையப்படுத்தி தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் கொண்டு வரவேண்டும்.

3. பல என்ஜிவோக்களின் ஈடுபாடுகள் குறித்த பயம், சந்தேகம் அந்த பகுதி மக்கள் மற்றும் இயக்கங்களிடம் இருப்பதால், பாதிக்கப் பட்ட மக்களை நாம் அணுகுவதில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரலாம். உரிய நபர்களின் தொடர்புகளை கொண்டு, அந்த மக்களின் பேட்டிகளை, வாக்குமூலங்களை பதிவு செய்து இணையத்தில் ஏற்ற வேண்டும்.

சீமானின் rhetoric மீது எனக்கு விமர்சனம் இருந்தாலும், அவர் எங்களிடம் வாக்களித்தபடி தொடர்புகளை தன் கட்சியினர் மூலம் ஏற்படுத்தி தந்தால், மிக முக்கியமான உதவியாக இருக்கும். இதற்காக அந்த பகுதிகளுக்கு (உடன் வரத் தயாராக இருக்கும் நண்பர்களுடன்) சென்றுவர நான் தயாராக இருக்கிறேன். இந்த விஷயங்கள் குறித்து மீண்டும் ஒரு முறை சந்தித்து-பதிவர்களுடனும், மற்றவர்களுடனும் உரையாட வேண்டும்.

4. ஊடகங்களில் தொடர்பு உள்ளவர்கள் தொடர்ந்து இந்த பிரச்சனை குறித்த செய்திகளும், விவாதங்களும் இடம்பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். கர்நாடகத்தில் இருந்து வாசித்தவரை ஒரு தமிழ் எதிர்ப்பு பத்திரிகையாகவே நான் பார்த்து வந்த டைம்ஸ் ஆஃப் இண்டியா, தமிழக அவதாரத்தில் இந்த பிரச்சனைகள் குறித்து முக்கிய செய்திகளை அளிக்க முன்வருவது ஆரோக்கியமான அறிகுறிதான்.

இதைவிட முக்கியமானது நம்மில் பலர் தொடர்ந்து மீனவர் மீதான தாக்குதல்கள் குறித்த பொய் பிரச்சாரங்கள், திசை திருப்பல்கள் குறித்து தொடர்ந்து எதிர்வினை செய்வது. மீனவர் மீதான கரிசனம் கொண்டு எழுதப்படுவதாக சொல்லி கொள்ளும் கட்டுரைகளும் சில திரித்தல்களை கொண்டிருப்பதை நாம் அறியலாம். அவை அனைத்தையும் தர்க்க பூர்வமாக மறுத்து, பொதுவான தளத்தில், (அடுத்த முறை ஒரு சுட்டியளிப்பது மூலமாக மறுக்கும் வசதியாக) ஏற்றி வைப்பது.

இந்த இடத்தில் 'இந்து' பத்திரிகையின் பொய்பிரசாரத்திற்கு எதிரான எதிர்வினைகளை நாம் மிக தீவிரமாக எடுக்க வேண்டியுள்ளது. இந்துவை புறக்கணிக்க சொல்வதோ, திட்டுவதோ மட்டும் போதுமானவை அல்ல. 'இந்து' பத்திரிகை இன்னமும் இடதுசாரி பிம்பம் கொண்டதாகவே பல ஆங்கில அறிவுஜீவிகளால் பார்க்கப்படுகிறது. இன்றைக்கும் பல EPW அறிவுஜீகளிடம் இந்து முக்கிய பாதிப்பை செலுத்துவதை நாம் உணரவேண்டும். மிகவும் விசித்திரமாக இஸ்லாமியர் மீதான குஜராத் தாக்குதல் தொடங்கி, நர்மதா பிரச்சனை வரை, இந்து ஒரு முற்போக்கு பிம்பத்தை தனது செய்திகள் கட்டுரைகள் மூலம் தக்க வைத்திருக்கிறது; ஈழப்பிரச்சனை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் போன்ற தமிழ் சார்ந்த பிரச்சனைகள் தவிர, மற்ற பிரச்சனைகளில் அது ஒரு இடதுசாரி முற்போக்கு பிம்பத்தை தொடர்ந்து தக்க வைத்திருப்பதை காணலாம்; சாம்ஸ்கி இந்தியா வரும்போதெல்லாம் இந்து பேட்டி வெளியிடுவது (அவர் இந்து ராம் வீட்டில்தான் தங்குவதாக கேள்வி) போன்றவற்றை ஒரு உதாரணமாக சொல்லலாம். இடதுசாரி அரசியலை கொண்ட பெரும் கூட்டத்தை, இந்து பத்திரிகை கருத்தை விதைப்பதற்காக ஆக்கிரமிப்பு செய்திருப்பதையும், இந்துத்வாவதிகள் இந்துவை திட்டுவதும், இந்த பிம்பத்துடன் முரணின்றி பொருந்தி வருவதையும் கவனிக்க வேண்டும். இலங்கை தொடர்புடைய பிரச்சனைகளில் மட்டும் இந்து ஏன் இத்தனை கேவலமான, அயோக்கியத்தனமாக பொய்பிரச்சரத்தில் இயங்கி வருகிறது என்பதற்கு இன்னமும் முழுமையான காரணம் புரியவில்லை. அதை முழுமையாக புரிவது அத்தனை முக்கியமில்லை என்றாலும், இந்துவின் அயோக்கியத்தனத்தை இந்திய மனித உரிமையாளர்கள் செய்தியாகவும், ஆதாரங்களாவும் நம்புவதை உடைக்கும் முக்கிய பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. ஈழப்பிரச்சனையில் இந்துவின் முகமுடியை கிழிப்பதைவிட, தமிழக மீனவர் பிரச்சனையில் கிழிப்பது எளிதானது; ஆதாரபூர்வமாக செய்யக் கூடியது; இங்கே உடைக்கப்படும் வாதங்களும், அழிக்கப்படும் பிம்பங்களும் ஈழப்பிரச்சனையிலும் இந்துவின் முகமுடியை கிழிக்கவும் உதவியாக இருக்கும்.

5. வழக்குகள் தொடுப்பதன் மூலம் சட்டரீதியாக இந்த பிரச்சனையை அணுகுவது குறித்த விரிவான சாத்தியங்களை விவாதிக்க வேண்டும். இதுவரை பல வழக்குகள் தொடுக்கப்பட்டு வழக்காடப்படாமல் இருப்பதாக கேள்விப்படுகிறோம். அது குறித்த தகவல்களை திரட்டுவதும், மேலெடுப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும்.

என் கருத்துப்படி வழக்கின் எதிரியாக(குற்றம் சாட்டுவதாக) ஆளும் இந்திய அரசை முன்வைக்க வேண்டும்; அது சாத்தியம் என்றே நான் நினைக்கிறேன். இந்திய குடிமகன்கள் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களுக்கு ஒரு கண்டனம் கூட வலிமையான குரலில் எழுப்பாத அரசாங்கத்தையே எதிரியாக்க வேண்டும். அவ்வாறு வழக்கு தொடுப்பதற்கான சாத்தியங்களை சட்ட நிபுணர்களுடன் விவாதிக்க வேண்டும்.

இதற்காக இந்த வாரம் (பத்ரியின் முனைப்பில்) ஏற்பாடு செய்வதாக இருந்த கூட்டம் நடைபெறவில்லை. அடுத்த சில வாரங்களின் இறுதியிலாவது ஏற்பாடு செய்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கு இட்டு செல்ல வேண்டும்.

இதுவரையில் பேசப்பட்ட முயற்சிகளுக்கான முக்கிய பங்களிப்பை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டும். வேறு எந்த வகையில் பங்களிக்கலாம் என்று உலகமெங்கும் இருக்கும் இந்த பிரச்சனை குறித்து ஆர்வமுள்ளவர்கள், அவர்களே முடிவு செய்து செயலில் இறங்க வேண்டும்.


சுஷ்மா ஸ்வராஜ் இந்த பிரச்சனையை ஒரு அரசியலாக்குவாரா என்பது எனக்கு மிகவும் சந்தேகமாகவே உள்ளது. ஆனால் அவ்வாறு காங்கிரசுக்கு எதிரான ஒரு அரசியலாக இதை உருவாக்கினால் அதை ஒரு நல்ல அறிகுறியாகவே பார்க்க வேண்டும். காங்கிரசும், இந்திய இடது சாரிகளும் தமிழக மீனவர் பிரச்சனை குறித்து பேசப்போவதில்லை. காங்கிரஸ் இதில் முக்கிய அடிப்படை எதிரி; இடதுசாரிகளுக்கு பல பிரச்சனைகள். இந்நிலையில் பாஜக இதை அரசியலாக்கினால் இந்த பிரச்சனை பேசப்படுவது மட்டுமின்றி, மீனவர் மீதான தாக்குதல்கள் தற்காலிகமானவேனும் நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. 2009 முள்ளி வாய்க்கால் முடிவு, இந்திய தேர்தல்கள் முடிவுகள் வெளிவருவரை காத்திருக்கும் அளவிற்கான, இவர்களிடையேயான ஒத்துழைப்பை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தவகையில் பாஜக இந்த பிரச்சனையை கையெலெடுப்பதை நாம் வரவேற்க வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் பாஜக தீவிரமாக கையிலெடுக்குமா எனபது இன்னமும் பல காரணங்களால் எனக்கு சந்தேகமாகவே உள்ளது.

இப்போதைக்கு அளிக்கப் பட்ட மனுவை சுஷ்மா முழுவதும் படித்திருப்பாரா என்பதே நிச்சயமில்லை. ஆனால் அரசியல் செய்ய முடிவு செய்தால் நிச்சயம் வாசிப்பார்; காத்திருந்து பார்ப்போம்.

நண்பர் கும்மி ஏற்பாட்டில் சில மீனவ சங்க தலைவர்களை சந்தித்து, விண்டீவி புகழ் டி.எஸ்.மணி துணையுடன் உரையாடினோம். அது குறித்த பதிவை அடுத்து இடுகிறேன்.

Post a Comment

---------------------------------------
Site Meter