ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Sunday, October 13, 2013ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தவளைகளும்!
ஒரு வழியாக ̀ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' பார்த்துவிட்டேன்; மனம் நொந்து விழுந்தேன். இவ்வளவு ஏமாற்றம் தரும் படமாக இருக்கும் என்று என் அடி ஆழ்மனதில் கூட எதிர்பார்த்திருக்க மாட்டேன். இதற்கு இத்தனை பாராட்டுக்களா என்று வியப்பும், விரக்தியும் ஒருங்கே அடைந்தேன்.
ட்விட்டரில் சில மேலோட்டமான கருத்துக்களை பார்த்ததை தவிர, முன் அபிப்பிராயத்தை தவிர்க்க, எந்த விமர்சனத்தையும் வாசிக்கவில்லை. புக் பாயிண்டில் நடந்த ̀உரையாடல்' பற்றியும், அதில் மிஷ்கின் விமர்சனங்களுக்காக கோபப்பட்டார் என்பதையும் கேள்விப்பட்டேன்; படம் பார்க்காமலேயே (படத்தின் இடைவேளை வரை) மிஷ்கினை ஆதரித்து வந்த நான், அவர் கோபம் நியாயமானதாக இருக்கலாம் என்று கூட நினைத்தேன்; படைப்பாளி எந்த வித விமர்சனத்திற்கும் கோபப்படகூடாது மட்டுமல்ல, மிக மிக இன்றியமையாத தருணம் தவிர விமர்சனத்திற்கு எதிர்வினை செய்வதும் கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன்; ஆனால் ட்விட்டர் ஃபேஸ்புக்கில் பொதுவாக வெளிவரும் பல சல்லித்தனமான எழுத்துக்களினால், இடர்களை தாண்டி கடும் உழைப்பை செய்துள்ள கலைஞனின் கோபத்தில் நியாயம் இருக்கலாம் என்று நினைத்தேன்.
படம் பார்த்து நொந்ததுடன், பார்த்த பிறகு சில விமர்சனங்களை தேடி வாசித்து பாயை பிராண்டும் அளவிற்கு சென்றுவிட்டேன். இப்போதைக்கு எதையும் எழுதுவதில்லை என்ற விரத்தத்தை மீறி மண்டையில் உளைவதை இங்கே இறக்கி விட்டால் மட்டுமே தீவிரமான மற்ற வேலைகளை தொடரமுடியும் என்ற கட்டாயத்தில் இந்த பதிவு.
எழுத தொடங்கும் முன் வழக்கமான ஆர்வத்தில், ராஜன்குறை என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்க, ரொம்ப நாள் கழித்து ஃபேஸ்புக் பக்கம் போனேன்; இந்த படம் கிளப்பிய போலி சென்சேஷனில் மனம் நொந்தோ என்னவோ, மனிதர் ஃபேஸ்புக் கணக்கையே மூடிவிட்டு போய்விட்டார். காட்சிப்பிழை பக்கத்தில் சுபகுணராஜன் மட்டுமே ஒரு முக்கியமான விமர்சனத்தை எழுதியிருப்பதை வாசித்தேன். (கிளி ஜோசியம் போல எழுதப்படும் ஆனந்த விகடன் விமர்சனத்திற்கு ஒரு எதிர்வினையை, ஞாநி பாணி கடிதமாக ஆனந்த விகடன் ஆசிரியருக்கு ஏன் எழுதினார் என்பது மட்டும் புரியவில்லை. )
இளையராஜா மற்றும் மிஷ்கினை பற்றி எதிர்மறையான முன்முடிவுகள் எனக்கு இல்லை என்று டிஸ்கி போட்டு இந்த பதிவை தொடங்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஏன் இந்த படத்தை மிகுந்த எதிர்பார்புடன் முக்கியமானதாக கருதி (பல மாதங்களுக்கு பிறகு தியேட்டருக்கு சென்று) பார்த்தேன் என்பதை மட்டும் சொல்கிறேன். நான் இளையராஜாவிற்கு ரசிகன் பக்தன் என்று சொல்வதை விட எல்லாம் மேலான ஒரு இடத்தில் அவரை வைத்திருக்கிறேன். ரசிகன் என்று சொன்னால் தவறான அர்த்தம் வருகிறது. ராமானுஜனுக்கும் ஐன்ஸ்டினுக்கும் யாராவது ரசிகனாக இருக்க முடியுமா? பாதி வாழ்விற்கு மேல் கடந்தவிட்ட இந்த வாழ்வனுபவத்தில், இளையராஜாவை ஏதோ ஒரு அளவில் புரிந்து, புரியாத அளவில் வியந்துகொண்டு, அவரது இசையை அணுகுவதை வாழ்வின் ஒரு பயணமாக கொண்டு, அந்த பயணத்தில் கிட்டும் இன்பம், பரவசம், அகவாழ்க்கை பெறும் அர்த்தத்திற்கு அவருக்காக எதையும் செய்யலாம் என்ற நன்றியுடன் இருக்கிறேன். ஆகையால் இளையராஜா இசையமைத்து, மாபெரும் பாராட்டை பெறும் படம் வெற்றி பெறுவதை போல, பலர் அந்த படத்தை போற்றுவதை போல உவகைக்கான விஷயம் எனக்கு வேறு இல்லை. இன்னொரு பக்கம் இளையராஜாவிற்கு பின், ரஹ்மானால் பற்றவைக்கப்பட்டு, முக்கியமாக தேவா போன்றவர்களால் சமாளிக்கப்பாட்டு, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா போன்றவர்களால் தொடரப்பட்ட தமிழ் திரை இசை பாரம்பரிய தொடர்ச்சி இன்று தீவிர நெருக்கடியில் இருப்பதாக நினைக்கிறேன். இந்த நெருக்கடித் தருணத்தில் இளையராஜா மீது கவனம் குவிவதை முக்கிய நிகழ்வாக கருதுகிறேன். மேலும் மிஷ்கினை தமிழ் சினிமாவின் முக்கிய கலைஞனாக, திறமையாளனாக கருதுகிறேன். படம் பார்க்காமலேயே (இசை மட்டும் கேட்டு), இளையராஜாவை கௌரவப்படுத்திய ஒரே காரணத்திற்காகவே மிஷ்கினை பாராட்டி ட்விட்டரில் எழுதி வந்தேன்.
இந்த பின்னணியில், படத்தை போற்றி சிறு ட்விட்லாங்கர் எழுத உள்மனதில் தயாராகவே படத்திற்கு சென்றேன். இடைவேளை வரையான படத்திலேயே ட்விட்லாங்கரை மனதளவில் தயாரித்து விட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். நம் 'பாமர மக்கள்' படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்று அறிய இடைவேளையில் நாலு பேரிடம் பேசி கருத்து கேட்கவும் செய்தேன். (எல்லாம் பாசிடிவ்தான்).
இடைவேளைக்கு பிறகான படம் எனது இத்தனை நேர்மறையான முன்முடிவுகளையும் தகர்த்து, பின்னான படத்தை மட்டுமின்றி, இடைவேளைக்கு முன்னான படத்தையும் குப்பைக்கூடைக்குள் தள்ளியது. படம் குப்பை என்று சொல்லமாட்டேன்; குப்பை என்று சொன்னால் அதில் ஏதோ இருக்கிறது, நம் மதிப்பீடு அதை குப்பை என்று குறிப்பதாக பொருளாகிறது. இந்த படமோ காற்று மட்டும் அடைக்கப்பட்ட ராட்சத பலூன் போன்று, உள்ளே வெற்றாக, வெளியே பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது; காற்று இறங்கிய பிறகு வெறும் பளாஸ்டிக்கை மட்டுமே நாம் குப்பை தொட்டியில் போடவேண்டியுள்ளது. படத்தில் என்ன பிரச்சனை என்பதை விட, படத்தில் என்னதான் இருக்கிறது என்பதுதான் என் கேள்வி. சிறந்த காட்சியமைப்பு, உள்ளத்தை உலுக்கும் உன்னதமான இசை இவை மட்டும் ஒரு திரைப்படத்தை உருவாக்கிவிடாது.
படத்தலைப்பில் வரும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் யாரார் என்பது எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், படம் பார்ப்பதற்கு முன்னரே பலமுறையும், திரைக்கதையின் தொடக்கத்திலும் தெளிவாக சொல்லியாகிவிட்டது. நமக்கு முன்னபிப்பிராயம் ஏற்படுத்தியபடி, இவர்களுக்குள்ளான முரண்பாடுதான் முக்கிய கதையோட்டமா என்றால் அப்படி ஒரு முரணியக்கம் படத்தில் நிகழவே இல்லை. இவர்களுக்குள்ளான குணரீதியான, உணர்வுரீதியான, உளரீதியான எந்த மோதலும் பார்வையாளனை பாதிக்கும் வகையில் எங்கும் காட்சியாகவில்லை; அது எந்த விதத்திலும் படத்தின் கதையும் இல்லை.
ஆட்டுகுட்டியான சந்துரு வுல்ஃபை காப்பாற்றுகிறான்; போலிஸ் சொல்படி கொல்ல முதலில் மறுக்கிறான்; பின் ஏற்று வுல்ஃபை சந்திக்க செல்கிறான். 'ப்ளீஸ் சரணடைஞ்சுருங்க சார்' என்று கெஞ்சுகிறான்; பின்பு தன்னை தளை செய்து வைத்திருக்கும்போது கல்லால் தாக்கி எதிர்வினை செய்கிறான்; வுல்ஃப் தன்னை கட்டிப்போட்டு சென்றபின் துரத்துகிறான்; குழந்தை மீது கத்தி வைத்தும், பாதளச்சாக்கடையில் தள்ளப் போவதாகவும் மிரட்டி, வூல்ஃபை கொஞ்ச நேரத்திற்கு பணிய வைக்கிறான். இது அவன் இயல்புக்கு மாறானது என்றாலும், அவனுள் இருக்கும் ஓநாய்தன்மையாக இதை நிச்சயம் எடுக்க முடியாது; அவனுள் ஏற்கனவே இருக்கும் சாகசதன்மையின் இன்னொரு பகுதியாகத்தான் பார்க்கமுடியும். பின்பு ஃப்ளாஷ்பேக் கதையை 'ஈசாப் கதை' உருவில் கல்லறைத் தோட்டத்தில் கேட்டு, மனம்மாறி, வுல்ஃபிற்கு உதவ பின்னால் ஓடுகிறான். காப்பாற்றப்பட வேண்டிய மற்ற அனைவரும் செத்த பிறகு, வுல்ஃபிற்கு இருக்கும் மிச்ச கடமையான அந்த குழந்தையை தூக்கிகொண்டு மொத்த கூட்டதிலிருந்து நகர்கிறான். இவ்வளவுதான் ஓநாய் ஆட்டுக்குட்டியாக மாறுவதும், ஆட்டுகுட்டி ஓநாயாக மாறுவதுமா? ஓநாயோ கதை தொடங்குவதற்கு முன்பே, ஏற்கனவே ஆட்டுகுட்டியாகவே மாறிதான் இருக்கிறான்; அப்படித்தான் அந்த மெழுகுவர்த்திகளுக்கு இடையேயான ஃப்ளாஷ் பேக் கதை சொல்கிறது. அந்த குடும்பத்தில் ஒருவனாக ஆன போதே அவன் ஓநாய் அல்ல. கதையின் முதல் ஆட்டுக்குட்டியான தங்கள் மகனின் பெயராலேயே ̀எட்வர்ட்' என்றுதான் அந்த அம்மா-அப்பா ஆடுகள் மிஷ்கினை அழைக்கின்றனர். ஆனால் அந்த அம்மாவை கோவில் வாசலில் காட்டும் சீன் வரை, மிஷ்கின் கதாபாத்திரம், இந்த கதையதார்த்ததிற்கு சம்பந்தமில்லாமல் , பார்வையாளர்களான நமக்காக இயல்பில் ஓநாயாகவே படத்தில் சித்தரிக்கப்படுகிறது. நிச்சயமாக வுல்ஃப் சந்துருவிடனான முரணான உறவில் ஆட்டுக்குட்டித்தன்மையை அடையவில்லை. பின் என்ன ஓநாய் -ஆட்டுக்குட்டி பிரச்சனை?
இதைவிட 'ரங்கா' படத்தில் அன்பும் அறமும் உருவான ரஜினியும், திருடனான கராத்தே மணியும் ஒரு இரவில் உரையாடி, காலையில் ரஜினி திருடனாகவும் கராத்தே மணி நல்லவனாகவும் மாறியது காத்திரமான கதாதர்க்கத்துடன் இருந்தது என்று சொல்வேன். சிறந்த தொழில்நுட்பம், திறமையான காட்சிபடுத்துதல், உச்சகட்ட படைப்பாக்கத்தில் விளைந்த இசை, இவைகளின் துணை கொண்டு உலகத்திரைப்படம் என்று ஒரு பம்மாத்துடன், வெற்றான கதையோட்டத்தை இந்த படம் முன்வைப்பது போல் 'ரங்கா' படத்தில் ஒரு போலியான பாவனை நிகழவில்லை; 'ரங்கா' தன்னை மசாலா என்று பாவனையின்றி முன்வைக்கிறது.
̀ரங்கா' ரொம்ப மலினமான உதாரணமாக தோன்றினால் ̀அஞ்சாதே' படத்தை எடுத்துக் கொள்ளலாம். போலிஸ்காரனாவதை தன் வாழ்வின் லட்சியமாக கொண்டு, அதற்காக தீவிரமாக உழைத்து, நேர்மையாக தேர்வு எழுதி தோற்கிறான் ஒருவன்; தில்லுமுல்லு செய்து போலீஸ்காரனாகிறான் நண்பன். நேர்மையாக தேர்வு எழுதி தோற்றவன், மேலும் மேலும் தீமையின் பக்கமாக போய், இறுதியில் குழந்தைகளை கொல்ல முயன்றபோது சுட்டுக்கொல்லப்படுகிறான்; சுட்டுக்கொன்ற நண்பன் அந்த தேர்வில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றாலும், நல்லவை அவனை அரவணைக்க, அவன் நண்மையின் பக்கமே தொடர்ந்து நிற்பவன்; தனது செயலால் தீமையின் பக்கம் தள்ளப்பட்ட நண்பனை கொல்வது அவனுக்கும் நமக்குமான முக்கிய அறச்சிக்கல். ̀அஞ்சாதே' (அவ்வளவு சிக்கலாக கையாளப்படாவிட்டாலும்) தெளிவான முரணியக்கம் கொண்ட கதை. இப்படி எதுவுமே 'ஓநாயும் ஆட்டுகுட்டியும்' படத்தில் இல்லை. துப்பாக்கியால் மிருகங்கள் மாறி மாறி சுட்டுக்கொள்வதை தவிர எந்த முரணியக்கமும் இல்லை; பின்னணியில் ஓடும் இசை அப்படி ஒரு உணர்வை தந்தாலும், கதையும் காட்சிகளும் அதற்கு எந்த ஒத்துழைப்பையும் நல்காமல், நம் இசை பயணத்தையும் வெறுமையாக்குகிறது.
அடுத்து படத்தில் இருக்கும் லாஜிக்கல் பிரச்சனைகள் என்று பலர் முன்வைக்கும் பார்வைகளை நான் ஏற்கவில்லை. கதை கட்டமைக்கும் தர்க்கத்தை உடைக்காதவரை நாம் கண்டு பிடிக்கும் லாஜிக்கல் பிரச்சனைகள் ஒரு கதாமுரண்பாடு இல்லை. அப்படி ஒரு ஆபரேஷன் பண்ணமுடியுமா, ஆபரேஷன் ஆனவன் இப்படி எல்லாம் ஆக்ஷன் செய்யமுடியுமா, மெழுகுவர்த்தி அணையாமல் இருக்குமா, முன் அனுபவம் இல்லாத சந்துருவால் ரயிலில் இருந்து அப்படி குதிக்க முடியுமா, ஏன் அப்படி குதிக்க வேண்டும் வேறு வழியில் இறங்க முடியாதா, குண்டுகள் வந்துகொண்டே இருக்குமா என்று எனக்கு எந்த கேள்விகளும் இல்லை.
இரவில் இயக்குனர் காட்டும் கதையின் பாத்திரங்கள் தவிர வேறு யாரும் குறுக்கிடவில்லையே, சாலைகள் யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறதே என்று நான் கேட்கவில்லை; யதார்த்தத்தை கூர்மையாக படம் பிடிப்பதாக பாவனை செய்யும் போது இந்த விஷயங்களில் கவனம் தேவை என்றாலும், இவை முக்கிய கேள்விகள் அல்ல என்பதே என் கருத்து. இதெல்லாம் கதை உலகினுள் கட்டமைக்கபடும் தர்க்க ஒழுங்கில் இருக்கும் பிழைகள் அல்ல; கதையின் உள்ளிருக்கும் உலகை, நமக்கு பழக்கப்பட்டதை முன்வைத்து, நாம் அடையாளம் காணும் உலகினால் வரும் கேள்விகள். 'பட்டியல்' என்ற படத்தில் அத்தனை குற்ற சம்பவங்கள் நடக்கும்போது போலீஸின் குறுக்கீடே இல்லாததை ஒரு தர்க்க பிழையாக நண்பர் ஒருவர் சொன்னபோது நான் அதை மறுத்தேன். அந்த கதைக்கு போலீஸ் தேவையில்லை என்பதுதான் அதற்கான பதில்.
இன்னொரு புறத்தில் 'கில்லி' படத்தில் லைட்ஹவுசின் மேலிருந்து குதித்து த்ருஷாவும் விஜய்யும் சாதரணமாக எழுந்து போவதிலும், விமானத்துள் உட்கார்ந்துவிட்ட த்ருஷா கபடி மைதானத்தில் பின் தோன்றுவதிலும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது; செவ்வாய் கிரகத்தரத்துடன் இருப்பதாக இங்கே பம்மாத்துக்கள் காட்டினாலும், நான் இந்த ஓநாய் ஆட்டுக்குட்டி படத்தையும் ஒரு தமிழ் வெகுஜன திரைப்படமாகவே அணுகுவதால், இந்த படத்திலும் இது போன்ற விஷயங்கள் ஒரு பிரச்சனையோ நெருடலோ அல்ல. உதாரணமாக, யாருமற்ற இரவில் இத்தனை பெரிய நகரில் சொல்லி வைத்தது போல் ஒவ்வொருவரும் படத்தில் எண்ணற்ற காட்சிகளில் எப்படி வந்து சேர்கிறார்கள் என்று கூட நான் கேட்கவில்லை.
ஆனால் கதை தனக்குள் புனைந்துகொள்ளும் தர்க்கத்தில் உள்ள ஓட்டை மிக மிக முக்கியமான பிரச்சனை. 'ஓநாயும் ஆட்டுகுட்டியும்' என்ற படத்தின் மிச்ச முக்கால்வாசி கதைக்கு அடித்தளமாக இருப்பது மிஷ்கின் ஶ்ரீயை ரயிலில் கடத்தி தன்னுடன் கொண்டு போகும் சம்பவம்; போலீஸ் தூண்டுதலில் அந்த பையன் ஓநாயை சந்திக்க போகவில்லை; எந்த சந்தேகமும் இல்லாமல், அந்த பையனை வரவழைத்து, துப்பாக்கி காட்டி மிரட்டி, முந்தய இரவில் தனக்கு உதவியனை பலவந்தமாக கடத்தி கொண்டு போகிறது வுல்ஃப். இது ஏன் என்பதற்கு கதையின் தர்க்கத்தில் எந்த விடையும் இல்லை; கதை பாவனைகூட ஒழுங்காக செய்யாமல் பொய்யாக நடிக்கும் தத்துவ தளத்திலும் இதற்கு எந்த தர்க்கரீதியான பதிலும் இல்லை.
என்ன எழவுக்குத்தான் வுல்ஃப் அந்த பையனை கடத்துகிறான்? கதைப்படி அதற்கான தேவைதான் என்ன? அதனால் வுல்ஃபிற்கு கிடைத்த பயன்தான் என்ன? வுல்ஃபின் நோக்கம் யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல், யாருடய கண்காணிப்பிற்கும் ஆளாகாமல் அந்த அம்மா அப்பா ஆடுகளையும் குழந்தை ஆட்டுகுட்டியையும் அந்த 'ஹிந்திக்கார பார்ட்டி'யுடன் சேர்ப்பது, அல்லது சேர்ந்து தானும் தப்பிப்பது; இடையில் கல்லறையில் ஒரு மெழுகுவர்த்தி பிரார்த்தனை. ஒட்டுமொத்த போலீசின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இரவுகளில் தான் இருக்கும் இடங்களை ஊகிக்க விட்டு, தானிருக்கும் சுற்று வட்டாரத்தில் தேடவிட்டு, தான் மாட்டிகொள்ளும் ரிஸ்க்கை காரணமே இன்றி எடுப்பது மட்டுமின்றி, எந்த காரணமும் இன்றி சந்துருவையும் அந்த ஆபத்தின் உள்ளே கொண்டு வருகிறான். தன்னை கொல்ல போலிஸ் சந்துருவின் உயிரை பணையம் வைக்கவும் தயங்காது என்று நன்கு அறிந்த வுஃல்ப், போலிஸ் அவன் பின்னால் வருகிறது என்று நன்கு அறிந்து அவனை எதற்கோ கடத்துகிறான்.
̀உன் பின்னால போலிஸ் இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும்!' சரி, அப்பறம் எதுக்குய்யா கடத்தினே? போலிஸை ஏதாவது trap செய்யும் திட்டம் என்று எதிர்பார்த்தால் அப்படி எதுவுமே பின்கதையில் இல்லை. 'நன்றி சொல்லணும்னா போன்லயே சொல்லியிருக்கலாமே' என்று நமக்கான பதிலை ஷாஜியே படத்தில் சொல்லிவிடுகிறார். எதுக்கு கடத்தினான் என்ற கேள்வியையும் எழுப்பிவிட்டு, அதற்கு படம் முழுக்க எந்த பதிலும் இல்லை. சந்துரு ஓநாயுடன் சென்று செய்யும் ஒரே காரியம் அந்த அம்மாவிற்கு பிச்சை போடப்போவது; அப்போது தம்பாவின் ஆட்கள் வர, வுல்ஃப் பின்னாலிருந்து தாக்குகிறான். இந்த சப்பை மேட்டருக்க்காகத்தான் தனக்கும் தன்னை காப்பாற்றியவனுக்கும் இவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி கடத்துகிறான்.
இந்த கேள்வி எல்லா பார்வையாளனுக்கும் நிச்சயம் இருக்கத்தான் செய்யும்; ஆனால் கதையின் இந்த முக்கியமான பிரச்சனையை எப்படி பலர் எளிதாக கடந்து செல்கிறார்கள் என்பதுதான் சுவாரசியம். விமர்சனம் எழுதிய பலர், படத்தை ஒருமுறைக்கு மேல் பார்த்ததாக சொல்லி பாராட்டிய பலர் இந்த முக்கிய பிரச்சனையை கண்டுகொள்ளவேயில்லை; சிலர் போலீஸ் அவ்வாறு திட்டம் தீட்டியதாக தப்பான கதையை அவர்களே சொல்லிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் பணய கைதியாக சந்துருவை கொண்டு சென்றதாக உடான்ஸ் விடுகிறார்கள். போலீஸுக்கு சந்துருவின் உயிரை காப்பாற்றுவதை விட வுல்ஃபின் உயிரை எடுப்பதுதான் முக்கியம் என்று கதையில் ஆழமாக சொல்லிய பிறகு இதற்கு அர்த்தமே இல்லை; மேலும் அப்படி எந்த காட்சியிலும் பணையக் கைதியாக பயன்படுத்தவே இல்லை. முந்தய நாள் ஆபேரேஷன் முடிந்து, தன் மருத்துவ தேவைக்காக அழைத்து சென்றான் என்று சொன்னாலாவது பொருள் உண்டு. அப்படி சற்று மேலான அபத்தமாக காரணம் சொல்லக்கூட வழியில்லாமல், மிஷ்கின் அந்த பையனை மருத்துவத்திற்கு கூட பயன்படுத்துவதில்லை. பெரிய கல்லால் அடிவாங்கி, மிதிக்க மிதிக்க மயங்கிய பிறகும் கூட, நேற்று ஆப்பரேஷன் செய்த பாடிக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. அந்த அம்மாவிடம் பிச்சை போடும் சப்பை மேட்டருக்காக மட்டுமே, கதையின்படி சந்துருவை வூல்ஃப் கூட்டி செல்கிறான் என்றுதான் நாம் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அந்த வேலை முடிந்த பிறகும் அபத்தமாக அவனை எதற்கோ கூட்டிகொண்டு அலைகிறான். ஆகையால் கதையின் அடிததளமே மாபெரும் தகறாரு; அடித்தளமே இல்லை. தர்க்கரீதியான அடித்தளம் என்று ஒன்று இல்லவே இல்லாமல், அந்தரத்தில் சீட்டுமாளிகையாக கதை கட்டப்பட்டுள்ளது. படம் தத்துவரீதியாக பாவனை செய்துகொள்ளும் ஓநாய் X ஆட்டுகுட்டி என்ற முரணுக்கும் சந்துரு பயன்படுத்தப்படவில்லை; கதையின் நோக்கமாக உள்ள காரியத்திற்கும் தேவையில்லை. மிஷ்கினை ஆபரேஷன் செய்த ஆரம்ப காட்சியோடு அந்த கதாபாத்திரத்திற்கு வேலைமுடிந்து, பின் கதைக்கு சம்பந்தமில்லாமல் படம் முழுக்க சுற்றிக்கொண்டு இருக்கிறது.
படத்தில் நிகழும் கதையில் வேறு என்ன இருக்கிறது என்று பார்த்தால், அந்த அம்மா ஆடு, அப்பா ஆடு, குழந்தை ஆட்டுக்குட்டி என்ற இந்த பார்வையற்ற மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு, இறந்த எட்வர்டின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு, பின் அந்த பார்கிங் லாட்டில் ̀ஹிந்திக்கார' பார்ட்டியை அடுத்த கட்ட திட்டத்திற்காக சந்திப்பது. மிஷ்கின் கண்ணிமைக்காமல் சொல்லும் அந்த கதையின் படி, இந்த எட்வர்ட் ஆட்டுக்குட்டி குறுக்கே வந்து மாட்டி இறந்து போகிறது. தம்பா ஏவி செய்யப்பட்ட கொலை அல்ல; தெரியாமல் நடந்த கொலை. தம்பா கும்பலுக்கும் அந்த ஆட்டுக்குடும்பத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனையே இந்த ஓநாய் ̀மனம் திருந்தி' அவர்களுடன் தங்குவதுதான். கதையிலேயே அந்த குடும்பத்தை பார்த்துகொள்ள பாரதி அக்கா இருக்காங்க; இன்னும் கண்தெரியாதவர்கள் சமூகமே பாட்டு பாடிக்கொண்டு கூட இருக்கிறது. அப்படியும் அவர்கள் வாழ்வதற்கு கண் தெரியாததை தவிர வேறு பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. விபத்து போன்ற சம்பவத்தில் மகன் இறந்த பிறகான வாழ்க்கையில் இருக்கும் ஒரே பிரச்சனை இந்த ஓநாய்தான். இந்த ஓநாய் கூட இருப்பதால்தான், ̀வேட்டைக்கு வா… வேட்டைக்கு வா…' என்று வற்புறுத்தும் தம்பா அந்த குடும்பத்திற்கும் பிரச்சனை தருகிறான். இந்நிலையில் போலிசில் சரணடைவதுதானே அவன் அந்த குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் தராமல் பிரச்சனையை முடிப்பதாக இருக்கும்; தம்பாவின் ̀வேட்டைக்கு வா.. வேட்டைக்கு வா..' நிர்பந்தத்தில் இருந்தும் தப்பிக்கும் வழி அது; இதை சுபகுணராஜன் சரியாக கேட்கிறார்; இன்னும் யாரோ ஒருவர் கூட இந்த மாதிரி கேட்டிருந்தார். இவ்வளவு சாதாரண லாஜிக்கல் கேள்வி மொத்தமாக ரெண்டு பேருக்கு கேட்க தோன்றியதே நம் சமூகத்தில் பெரிய விஷயம்தான்.
(நாற்பதோ பதினாலோ சரியாக தெரியாத) கொலைக்குற்றங்களை செய்து வந்தவன், மனம் திருந்திய உடன் நார்மலாக செய்வது போலிசில் சரணடைவதுதானே; அல்லது நம் வூல்ஃப் போலிஸ் ஒரு அடக்குமுறையின் அதிகார வடிவம், அரசியல் சட்டத்தை ஏற்கமுடியாது என்று ஏதாவது எதிர்ப்பு அரசியல் வைத்திருக்கிறானா? நிஜ மிஷ்கினுக்கு கூட அப்படி ஒரு அரசியல் இல்லாதபோது (அவர் படங்கள் போலிஸ் வன்முறையை என்கவுண்டர்களை நியாயப்படுத்துகிறது!) நமக்கெல்லாம் தெரியாமல் கதாபாத்திர மிஷ்கினுக்கு அப்படி ஒரு அரசியல் இருக்க சாத்தியக்கூறுகள் இல்லை. பிரச்சனையுடன் எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு ஆட்டுக்குட்டியை ஏற்கனவே கொன்றது போக, தேவையில்லாத அலைக்கழிப்பில் அந்த ஆட்டுகுட்டி ஃபேமிலியில் ஒவ்வொருவராக பலி கொடுத்ததிலும், குழந்தையையும் சாவுக்கு அருகிலான ட்ரௌமாவிற்கு கொண்டுபோனதிலும் எந்த நியாயமும் புத்திசாலித்தனமும் இல்லை.
சந்துருவும் கதையில் இல்லாமல், மிஷ்கினும் சரணடைந்துவிட்டால் என்னய்யா படம் இருக்கிறது என்பது நியாயமான கேள்வி. இந்த மாதிரி தர்க்கப்பிரச்சனைகள் இல்லாமல், அந்த குடும்பத்தையும் சந்துருவையும் கதையில் தர்க்கபூர்வமாக பிணைப்பதுதான் நல்ல திரைக்கதையாக இருக்க முடியும்; குறைந்த பட்சம் ஒரு கதையாகவே தகுதி பெறமுடியும். இந்த படத்தின் சொதப்பல் கதையாடல் கதையே இல்லாமல் செத்து கிடக்கிறது என்பதுதான் மேலே உள்ள வாதம்.
இந்த ஓநாய்-ஆட்டுகுட்டி பிரச்சனைக்கு வருவோம். வுல்ஃப் என்ற பட்டப்பெயரை கொண்ட அந்த மனிதன் உண்மையிலேயே ஒரு ஒநாய் கதாபாத்திரமா? அவன் சொல்லும் ப்ளாஷ்பேக் கதையின்படி, ஒரு ஆட்டுகுட்டியை கொன்ற குற்றவுணர்வில் மன வருந்தி, மூலையில் உட்கார்ந்து அழுது, அந்த அம்மா-அப்பாவின் பேரன்பை கண்டு திருந்தி, நல்ல மனிதனாக படம் தொடங்கும் முன்னரே மாறிவிட்டானே! ஆட்டுகுட்டியாக மாறினானா என்பது தெளிவில்லாவிட்டாலும் தனக்குள் இருந்த ஆட்டுகுட்டியை கண்டு கொண்டான் அல்லவா? பிறகு எப்படி அந்த நல்லவன் அப்பாவி சந்துருவை- அதுவும் முந்தய நாள் தன் உயிரை காப்பாற்றியவனை- அவ்வளவு உயிராபத்தில் மாட்டி கடத்துகிறான். யாரோ ஒரு தம்பதிகளை துன்புறுத்தி காரில் தப்பிக்கிறான்; ஒரு வயோதிக போலிஸ்காரரை காரணமின்றி காலில் சுடுகிறான். அந்த போலிஸ்காரரை காலில் சுடவேண்டிய அவசியம்தான் என்ன? அவரோ 'அவன் துப்பாக்கி வச்சிருக்கான் என்றாலே பயபடுகிறவர்; சந்துருவை வாயை கையை கட்டி தெருவில் போட்டு, வுல்ஃப் திகில் ஏற்படுத்தும் விதமாக விளக்கு கம்பத்தினடியில் உட்கார்ந்து, அந்த போலிஸை காலில் சுட்டு கடத்த வேண்டிய அவசியம்தான் என்ன? அவர்களோ துப்பாக்கியை காட்டினாலே பயந்து கூட வரப்போகிற மிடில்கிளாஸ் போலிஸ்காரர்கள். கதையின் தர்க்கத்திற்கு மாறாக ஒரு கொடிய ஓநாயாக மிஷ்கின் காதாபாத்திரத்தை படத்தின் தொடக்கத்தில் சித்தரித்துவிட்டு, எந்த தர்க்கமும் கதைத்திருப்பமும் இல்லாமல் ஆடு குடும்பம் வந்தவுடன் அவனை நல்லவனாக சித்தரிக்கிறார்கள்.
சரி, வுல்ஃபுக்குத்தான் மூளை மட்டுமல்ல, தான் ஆட்டுகுட்டியா ஓநாயா என்ற பிரஞ்ஞையும் இல்லை. எந்த காரணமும் இல்லாமல் சந்துருவை கடத்தி உயிராபத்தில் வைத்திருப்பது மட்டுமின்றி, தான் மனம் திருந்திவிட்டதையும் மறந்து இரக்கமில்லமால் செயல்படுகிறான். கடவுள் போல இருக்கும் அந்த அம்மா! ஆடு வன்முறையில்லாததாயினும், சுயநலமுடையது; தனக்கு கெடுதல் செய்தவனை மன்னிக்கும் தன்மைக்கு ஆடு குறியீடு அல்ல. இந்த அம்மா-அப்பா ஆடுகளல்ல; ஏசுவை போன்றவர்கள்; தன் மகனை கொன்றவனை மன்னித்து, கொன்றவனை தன் மகனாக கருதுபவர்கள். அந்த அம்மா எதற்காக இந்த சந்துருவை கடத்திக் கொண்டு செல்வதையும், காலில் சுடப்பட்ட போலிஸ்காரரை அவ்வளவு கொடூரமாக நடத்தியே கூட்டிசெல்வதையும் அனுமதிக்கிறார். கண் தெரியாதவர்களுக்கு நடப்பது எதுவுமேவா தெரியாது; சந்தேகமேவா வராது. 'எட்வர்ட் தண்ணி குடுப்பா' என்பவர் அந்த போலிஸ்காரரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போப்பா' என்று ஏன் சொல்வதில்லை? காதிற்கு அருகில் கொடுமைகள் நடக்கும்போது கேளாவிருந்து, தன் சொந்த பிரச்சனைக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவிகளை, தனது சுயநலத்திற்காக கொடுமை படுத்துவதை அனுமதிப்பவர் எப்படி தன் மகனை கொன்றவனை மன்னிக்கும் கடவுள்தன்மை கொண்டவராக இருக்க முடியும்?
மேலும் இந்த வுல்ஃப் ஆதியிலாவது ஒரு ஓநாயாக இருந்தானா? தம்பா என்று அத்தனை கொடூரமானவனாக காட்டப்படுபவனிடம் அடியாளாக வேலை பார்க்கும் பெய்டு கில்லர் அதுவரை நரிகளை மட்டுமேவா கொன்றுவந்திருக்க முடியும்? நரிகளை மட்டுமே கொல்ல சொன்னால் அந்த தம்பா அவ்வளவு மோசமானவனாக இருக்க முடியாது; (அந்த எட்வர்ட் ஆட்டுக்குட்டியை தம்பா சொல்லி அல்ல, தவறுதலாகத்தான் கொல்கிறான்.) நரிகளை மட்டுமேதான் கொல்லவேண்டிய வேலை என்றால், பின்னாடி கதையில் அப்பாவிகளை துன்புறுத்துபவனும், மேலும் பல கொலைகள் செய்பவனுக்கு, அந்த நரிவேட்டை வேலையில் என்னதான் பிரச்சனை?
மேலும் நரிகளை மட்டுமே கொல்வதுதான் ஓநாய்தனமா? ஓநாய் எதற்காக குறுக்கே வந்த ஆட்டுக்குட்டியை, முதன்முறையாக தெரியாமல் கொன்றதற்காக வருந்த வேண்டும்? ஆட்டுக்குட்டியை வஞ்சகமாக தெரிந்தே கொல்வதற்கும் வருந்தாமல், அவ்வாறு கொல்வதை தன் இயல்பாக கொண்டிருப்பதுதானே ஓநாய்தனம்! தன் கடமையை முதன்முறையாக ஆக்சிடெண்டலாக தெரியாமல் செய்யும் ஓநாய் , அந்த முதன் முறையிலேயே தரிசனம் பெறுவதும் மனம் திரும்புவதும் என்னவிதமான கதை! தன் ஆட்டுக்குட்டி தன்மையை கண்டுணர்வது என்பது எவ்வளவு தீவிரமான தருணமாக ஒரு கதையில் இருக்க வேண்டும்! ஒரு அச்சு பிச்சு ஃப்ளாஷ்பேக் கதையில், ஒட்டாத மிகை நடிப்பில் அவ்வளவு அபத்தமாக சொல்லப்படுவதற்கு ஏன் இத்தனை பேர்கள் பாராட்டுகிறார்கள்? கதையில் ஓநாயே இல்லையே; ஆட்டுகுட்டியும் ஓநாயாக தன்னை எந்த தருணத்திலும் உணர்வதோ, இயல்பில் கொண்டிருப்பதோ இல்லை.
இந்த தத்துவ பிர்ச்சனைகள், கதை சார்ந்த பிரச்சனைகளை விடுவோம்; ஒரு வெகுஜன சினிமாவாக திரில்லராக இது வெற்றி பெற்றிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. திரில்லர் என்பது தொடர்ந்து கொலைகள் விழுவதோ, துப்பாக்கி வெடிப்பதோ அல்ல; தொடர்ந்து நம் எதிர்பார்ப்பை கிளப்புவதும், சீட் நுனியில் உட்கார்ந்திருக்கும் விறுவிறுப்பை கடைசி காட்சிவரை தக்கவைப்பதுமே ஆகும். இந்த படத்தைவிட ̀துப்பாக்கி' நிச்சயம் மேலான வெகுஜன திரில்லர்.
படத்தில் நமக்கு இடைவேளை வரும் வரை ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரே எதிர்பார்ப்பு, கதையில் ஏதோ தீவிரமாக முன்னாலும், பின்னாலும் இருக்கிறது என்ற சஸ்பென்ஸ்தான். ப்ளாஷ்பேக் கதையும் தண்டம், பின்னால் வரப்போவதும் அபத்தம் என்று தெரிந்து விடும் அந்த கல்லரை காட்சிகளிலேயே பாபா படத்தின் கதையளவிற்கு நம் எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது; அதற்கு பிறகு நடக்கும் சண்டைகள் எந்த எதிர்பார்ப்பையும் தூண்டுவதில்லை.
உண்மையிலேயே இது ஒரு வெகுஜன திரில்லராக இருந்தால் அது தன்போக்கில் நிச்சயம் ஹிட்டாகியிருக்கும். மக்களின் ரசனையின்மையை திட்டவேண்டிய அவசியமே இருந்திருக்காது. வெகுமக்களை கவராத ஒரு படத்தை ஊடகங்கள், ஆர்வக்கோளாறு கொண்ட இணைய எழுத்தாளர்கள், பலூன் வண்ணத்தை பார்த்து மயக்கியவர்கள், உண்மையிலேயே படத்தின் ஒரே உன்னதமான இளையராஜாவின் இசைக்கு ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு சென்சேஷன் அலையை உருவாக்கி, அதில் தாங்களும் மிதந்து இப்போது ஹிட்டாக்கியிருக்கிறார்கள். சரி, இதனால் தமிழகத்திற்கு எந்த பெரிய ஆபத்தும் இல்லைதான். இந்த படத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொருளாதாரரீதியாக லாபமடைவதும் பெரிய பிரச்சனையில்லைதான்.
இந்த படத்தில் ̀குறியீடுகள் பொங்கி வழிவதாக ஆர்வக்கோளாறு கொண்ட முதிரா இணைய எழுத்தாளர்கள் என்ன என்னவெல்லாமோ சொல்கிறார்கள். அன்பார்ந்த அன்பர்களே, நட்பார்ந்த நண்பர்களே, சினிமா, நாவல், சிறுகதை போன்ற ஒரு கதைசொல்லும் கலையில் கதைதான் முதலில் முக்கியமானது. கதை தீவிர இலக்கியமாக மாறும் தளத்தில் இருக்கும்போதுதான் குறியீடு பற்றி பேசுவதில் அர்த்தம் உண்டு. சும்மா கோபால்ஜி உபன்யாசம் மாதிரி இதெல்லாம் குறியீடு என்பது உளரல். அதுவும் கதையின் ஓட்டைகளை பற்றி பேசும்போது, அதெல்லாம் குறியீடு என்று சொல்லி, பிரச்சனைகளை பேசுபவனை மொண்ணை முட்டாள் அது இதென்று திட்டுவது எல்லாம் அறிவுரீதியான சண்டியர்த்தனம்.
கதை என்பது நேர்கோட்டில் இல்லாமல் இருக்கலாம்; சிதறலாக துண்டு துண்டாக உளரலாக இருக்கலாம்; இன்னும் சொல்லப்போனால் கதை என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் எதுவும் இல்லாமல் கூட ஒரு கதை இருக்கலாம்; அதில் கூட கதையாடலைத்தான் நாம் முக்கியப்படுத்த வேண்டுமே தவிர குறியீட்டை அல்ல. கதை எந்த பிரச்சனையும் இன்றி தன்னை நிறுவிய பிறகுதான், அதில் உள்ள குறியீடுகளை பற்றி பேசமுடியும். இல்லையெனில் என்ன ….க்கு கதையாக அது எழுதப்படுகிறது?
ஒருவேளை கதையல்ல, குறியீடுகள்தான் படம் என்றால், நம்மால் ஒரு கதாதர்க்கமாக சிந்திக்கவே முடியாமல், கதையை மனதில் உருவாக்கவே முடியாமல் படிமங்களாக மட்டும் காட்சிகள் நகர்ந்திருக்க வேண்டும். இரண்டு வருடங்கள் முன்னால் வந்த `Tree of life' படம் இதற்கு ஒரு உதாரணம். மிக தெளிவாக ஒரு சாதரண தட்டை யதார்த்த கதையை நேர்கோட்டில் சொல்லும் போது இந்த குறியீடு என்று பேசுவது அபத்தம் மட்டுமல்ல, ஏமாற்று வேலை.
இறுதியாக
1. 'காமெடி இல்லை ஆனால் படத்தில் ஹாஸ்யம் நிறைய இருக்கிறது' என்று சொல்லப்பட்டதை பற்றி பேசலாம் என்று நினைத்தேன். அதற்குள் மிகவும் அலுத்துவிட்டது; பதிவு நீண்டும் விட்டது. விட்டுத்தள்ள வேண்டியதுதான்.
2. மிஷ்கின் பார்வையாளர்களையும் கதாபாத்திரமாக்கியதாக சிலர் சொல்கிறார்கள்; அது என்ன எழவு, அதை எப்படி சாதித்தார் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் படத்தில் பார்வையாளனையும் ஒரு கதாசிரியனாக மாற்றி, பலவற்றை நாமே கற்பனை செய்து கொள்ளச் சொல்கிறார் என்பது மட்டும் பிடிபடுகிறது. இதுதான் பின்நவீனத்துவ கதை சொல்லல் முறை என்று யாராவது மிஷ்கினுக்கு சொன்னார்களோ என்னவோ! ஆனால் என்ன யோசித்தும் அந்த ஹிந்திக்கார பார்ட்டியை, அந்த கார்பார்கிங்கிற்கு வர செய்து, மீண்டும் மொத்த போலீஸ் மற்றும் தம்பா கூட்டத்தை சமாளித்து, அவர்களிடமிருந்தும் சென்னையில் இருந்து தப்பித்து செல்ல என்ன மாஸ்டர் ப்ளான் இருந்திருக்கும் என்று ஒரு பார்வையாள கதாசிரியனாக என்னால் என்ன கற்பனை செய்தும் எதுவும் தோன்றவில்லை. புனைவு எழுத்தாளனாகும் தகுதியை இந்த இடத்தில் இழக்கிறேன்.
3. உலக மகா நடிப்பாக எல்லோரும் பாராட்டும் அந்த ஃப்ளாஷ்பேக் கதையின் போது தியேட்டரில் பின்னால் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இருந்தவர்கள் மட்டும் கைதட்டினார்கள்; என் பக்கத்தில் இருந்தவவர்கள் எதற்காக கைதட்டுகிறார்கள் என்று திரும்பி பார்த்தார்கள்.
அந்த கதை யாருக்காக சொல்லப்படுகிறது? பார்வையாளர்கள் கதையின் சஸ்பென்சை புரிந்து கொள்வதற்காக, அவ்வளவு தீவிரமான தருணத்தில், செயற்கையாக கல்லறை தோட்டத்தில் வைத்து சொல்லப்படுகிறது. குழந்தைக்கு சுவாரசியமற்ற அந்த கதையை குழந்தைக்கும் நமக்கும், அந்த சந்துருவுக்கும் மெழுகு வர்த்திகளுக்கு நடுவில் கண்ணிமைக்காமல் சொல்லவேண்டியதன் தாத்பர்யம்தான் என்ன? எந்த விதத்தில் இந்த அபத்தமான டெக்னிக் வழக்கமான ஃப்ளாஷ்பேக் காட்சிகளை விட சிறப்பானது? காட்சிக்கும் கதைக்கும் சம்பந்தமேயில்லாத குறியீடுகளால் மிகை படுத்தி அபத்தமாக நடிப்பதுதான், தமிழ் சினிமாவின் கதைக்கு சம்பந்தமுள்ள மிகை நடிப்பிற்கான பதிலீடா?
4. இன்னும் இரண்டு பதிவுகள் எழுதலாம் என்று இருக்கிறேன்; நடக்குமா, எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.
|
26 Comments:
/ - சிகிச்சை நடந்து ஆறு நாட்கள் கழித்துத்தான் கதை நடக்கும் அந்த நாளில் எட்வர்ட் சந்துருவை ’அழைத்துச் செல்கிறான்’. / என்று நண்பர் மயில் செந்தில் முக்கிய தகவலை சொன்னார்.
கதை தொடர்ச்சியாக இருந்ததால் இந்த விஷயத்தை நான் தவற விட்டிருக்கிறேன். இப்போதுதான் அந்த 6 நாட்கள் மேட்டர் பற்றிய சில வசனங்கள் நினைவுக்கு வருகிறது. எனினும் 'அடுத்த நாளே ஆக்ஷன் செய்யமுடியுமா?' என்று எந்த லாஜிகல் கேள்வியும் நான் கேட்காததால் இந்த தகவல் பிழை விமர்சனத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை.
ட்விட்டரில் மயில் செந்திலிடம் அவர் அளித்த தகவல் என் ̀ ̀விமர்சனத்தை பலவீனப்படுத்தவில்லை, பலப்படுத்துகிறது' என்றேன். அவர் விளக்கம் கேட்டதனால் கீழே.
வுல்ஃப் ஆபேரேஷன் முடிந்து ஓடிப்போய் எங்கே இருக்கிறான் என்றே போலிஸுக்கும் யாருக்கும் தெரியாது. ஆபரஷன் முடிந்த காரணத்தால் அவன் 12 நாட்கள் (?) ஓய்வு வேறு எடுக்க வேண்டியுள்ளது. அவன் வெளியே வர வாய்பில்லை என்ற எண்னத்தில் குறைந்த பட்சம் அந்த 12 நாட்கள் போலிஸ் அவனை தேடுவதில் மும்முரம் காட்டாது; இதனால் அந்த ஆறாவது நாளில் யாருமே கண்காணிக்காத வகையில் சிக்கல்கள் இல்லாமல் அந்த ஆட்டுக்குடும்பத்தை பத்திரமாக 'ஹிந்திக்கார பார்ட்டி'யிடம் சேர்த்துவிட முடியும்.
ஆனால் அவனாக வந்து சந்துருவை போனில் அழைத்து, (காரணமும் இல்லாமல்) கடத்திக் கொண்டு போய் மொத்த போலிசையும் தன்னை தேட வைத்து, தன் பணியை சிக்கலாக்கிக் கொள்கிறான். இத்தனைக்கும் போலிஸ் ஒட்டுக்கேட்கும் என்று அவனுக்கு தெரியும்; தம்பாவின் ஆட்கள் போலிசில் இருப்பதும் அவனுக்கு தெரியும்.
தொடர்ச்சிக்கு உதவியாக இருக்க இதற்கு முன் எழுதியதை இணைத்துவிடுகிறேன் : http://www.twitlonger.com/show/n_1rpmogh
இப்போது நீங்கள் கேட்பது படத்தையே காலிசெய்துவிடுவதுதான். :) 6வது நாள் எட்வர்டின் நினைவுநாளுடன் ஒட்டிவருவது திரைக்கதையின் வேர். A convenience. இதைக் கேள்விகேட்டால் படத்துக்கு எங்கே போவது?
மயில், படத்தை நீங்கள் விரும்புவதையும் (நானும் உங்களின் அதே காரணங்களுக்காக விரும்ப தயாராக இருந்தேன்), நிறுவ விரும்புவதையும் புரிந்து கொள்கிறேன்.
உங்களின் ட்விட்லாங்கரில் உள்ள சமாதானங்களை (இந்த தகவல் பிழை தவிர) சுத்தமாக நான் ஏற்கவில்லை. படம் பார்த்துவிட்டு தொடர்ந்து பல மணி நேரம் வாசித்தும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன். அலுப்பாகவும் களைப்பாகவும் இருப்பதால் மேலே பதில் சொல்ல முயலவில்லை.
எனக்குப் படம் பிடித்திருக்கிறது என்னவோ உண்மைதான், ஆனால் இதைக் காபந்து செய்யுமளவுக்கு எல்லாம் பிடிக்கலை. உங்க விமர்சனத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவே முயற்சி செய்கிறேன். நீங்கள் சொல்வது உட்பட நிறைய conveniences படத்தில் இருப்பதை உணர்கிறேன்.
படம் உள்ளபடியே பிடித்திருப்பது வேறு கதை. :)
’உலகப்படம்’னுலாம் நான் எங்குமே நினைக்கவில்லை. Of course, except for our man's music. hehe.
மதி மாறனின் பதிவு பார்த்தேன்; உள்ளடக்கமாக எதுவுமே இல்லாத ஒரு படத்தை, எல்லோரும் அறிவின் பாவனையில் உளறிக்கொண்டு இருக்கும்போது, அல்லது அப்படி உண்மையிலேயே நம்பிக் கொண்டு இருக்கும்போது, தான் புரிந்த உண்மையை எந்த பாவனையும் தயக்கமும் இல்லாமல் பேசியிருக்கிறார்
என் விமர்சனத்திற்கு பதிலாக, படத்தின் அடித்தளமாக உள்ள சம்பவமான, வுல்ஃப் ஶ்ரீயை கடத்துவதற்கு காரணங்கள் கூறி சிலர் எழுதியுள்ளதை வாசித்தேன்; இன்றய ̀கேணி' கூட்டத்தில் ஒரு நண்பர் தனது வாசிப்பாக சொன்னது (நான் ஏற்காவிட்டாலும்) இருப்பதில் கொஞ்சம் அணுகும்படி இருந்தது. ஆனால் அவரும் இந்த கேள்வியை என் விமர்சனத்தை வாசித்த பிறகு தனக்குள் கேட்டு, யோசித்து இந்த பதிலை வந்தடைந்ததாக சொன்னார். மற்ற பதில்கள் குறித்து என் கருத்து "பயங்கரம்!"
மொத்தமாக ஆறுவிதமான பதில்களை கேட்டேன். எந்த இரண்டு பேரும் ஒத்துப்போகும் வாசிப்பை சொல்லவில்லை. ஓவ்வொருவர் சொல்வதும் ஒவ்வொருவிதமாக இருப்பதிலிருந்தே, அவரவர் தங்கள் தரப்பு வாசிப்பாக, (சரியாக சொல்வதானால் தங்கள் தரப்பு சமாளிப்பாக) இதை சொல்கிறார்கள் என்பது விளங்குகிறது. திரைக்கதையில் நிச்சயம் இதற்கு தெளிவான விளக்கம் இல்லை. மற்ற விமர்சனங்களுக்கு யாரும் எந்த உருப்படியான பதிலும் சொன்னதாக எனக்கு தெரிய வரவில்லை.
வாசிப்புகளாக முன்வைப்பதற்கு நான் மறுத்து பதில் சொல்ல விரும்பவில்லை; என்னிடம் அந்த வாசிப்பை சொன்னால் என் வாதங்களால் மறுப்பேன். மற்றபடி அவர்களுக்கு அவ்வாறு வாசித்துக் கொள்ள உரிமை இருக்கிறது. நான் என் வாசிப்பாக இந்த பிரச்சனைகளை முன்வைக்கிறேன். படத்தை யாரும் துய்த்து அவர்களுக்கு கிடைப்பதை பெறுவதில் குறை கூற எனக்கு எந்த காரணமும் இல்லை. நானும் சில காட்சிகளை ரசித்தேன்; பின்னணி இசையை ரசிப்பதோடு இன்னமும் முழுசாக உள்வாங்க முயற்சி செய்து வருகிறேன்.
நம் காலத்தின் சிறந்த திரைப்படமாக முன்வைக்கப்படும்போது, குறிப்பாக அவ்வாறு முன்வைக்கப்பட்டு எழுதப்பட்ட விமர்சனங்களுக்களை மேம்போக்கானது போலியானது பொய்யானது என்று நினைப்பதால் இந்த என் எதிர்வினை. ஓவ்வொரு விமர்சனமாக எதிர்வினை வைப்பது என் சக்தியை மீறிய செயல். அடுத்த பதிவில் சிலவற்றை எதிர்கொள்ளலாம் என்று நினைத்தேன்; இப்போது அந்த நினைப்பை கைவிட்டுவிட்டேன்.
நான் பார்த்த சிறந்த திரைப்படங்களின் வரிசையில் மட்டுமல்ல, ஒரு நல்லபடமாக கூட இந்த படம் தேறவில்லை என்பதுதான் கருத்து. ஏற்கனவே சொன்னது போல் அழகான கவர்ச்சியான உள்ளே காற்று மட்டும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பலூன். சும்மா சொல்லிவிட்டு ஓடிவிடக்கூடது என்று இந்த நீண்ட பதிலை எழுதினேன். மேலும் இரண்டு பதிவுகள் எழுதும் ஐடியாவை விட்டுவிட்டேன். எதிர்கொள்ள வேண்டிய முக்கிய எதிர்வினையாக நான் கருதும் எதையாவது வாசித்தால் மட்டுமே மேலே ஏதாவது இந்த விஷயத்தை பற்றி எழுதுவேன். வாசித்தவர்களுக்கு கருத்து சொன்னவர்களுக்கு நன்றி.
ட்விட்டரில் நடந்த விவாதம்
@equanimus: [ஒரு விஷயம் என் தெளிவிற்காகக் கேட்கிறேன். Please feel free to ignore if you're tired. :-)] வுல்ஃப் சந்துருவைக் கடத்துவது அவன் மூலம் சரணடைய/அவனை போலிஸின் பிடியிலிருந்து விடுவிக்க (பழைய கதையாடல் தான்) என்று எடுத்துக்கொள்ள மட்டும் தானே சாத்தியம் உள்ளது. " திரைக்கதையில் நிச்சயம் இதற்கு தெளிவான விளக்கம் இல்லை." ஆனால் கேள்வி எழுப்பப் படுகிறது, வுல்ஃப் காரணமாக ஏதோ சொல்கிறான். (சொல்லப் போனால் மயில் செந்தில் தந்தத் தகவலிலிருந்து நீங்கள் முன்வைக்கும் கேள்வி கூட படத்திலேயே எழுப்பப்படுவது தான்.) அதாவது.. நான் சொல்லவருவது, இது தெரியாமல் தெளிவில்லாமல் கதையில் ஏற்பட்ட இடைவெளி என்பதை விட வேண்டுமென்றே ஒரு அம்சத்தை அதன் logical extreme க்கே எடுத்துச்சென்றது போல இருக்கிறது
@rozavasanth என் கருத்து -இந்த ( சரணடைய/அவனை போலிஸின் பிடியிலிருந்து விடுவிக்க) இரண்டு வாசிப்பிற்குமான தடயம் படத்தில் இல்லை; இருந்தால் கூட இக்காரணங்களுக்காக கடத்துவதாக சொல்வது அபத்தம்.
கதையில் வசனம் மூலம் கேள்வி எழுப்பப்படுவது உண்மை; ஆனால் திரைக்கதையில் பதில் இல்லை. பலவிதமான வாசிப்புகளுக்கும் சாத்தியங்களில்லை.
வேண்டுமென்றே விடப்பட்டதாக கருத முடியாது; படத்தின் மற்ற சொதப்பல்களை காணும்போது அப்படி கொள்ளமுடியவில்லை. மேலும் 'வேண்டுமென்றே விடப்படும் லாஜிக்கல் உத்திக்கு இந்த திரில்லர் படத்தில் என்ன வேலை என்பதும் புரியவில்லை.
இரண்டு ட்விட்லாங்கர்கள்
http://www.twitlonger.com/show/n_1rpoddc
http://www.twitlonger.com/show/n_1rpofdu
மீண்டும் ஒரு @equanimus எழுதிய ட்விட் லாங்கர், அதன் கீழே என் பதில்
@equanimus : @rozavasanth அப்படி நீங்கள் அணுகுவதாக நினைக்கவில்லை (இந்தப் பதிவில் சொல்லாவிட்டாலும் உங்கள் approach படத்தின் internal logicஐ ஒட்டியே இருக்குமென அறிவேன்), just ஒரு தெளிவிற்காகச் சொன்னது தான். அதாவது ஒரு மிஷ்கின் படத்தில் "அதற்காக?! சந்துருவைக் காக்க மெனக்கெட்டு இப்படி விபரீதமாக முடிவெடுப்பானா?" என்றெல்லாம் கேட்டுவிட முடியாது என்று சொல்ல. :-)
'அஞ்சாதே' படத்தில் 'I am good and totally deserved it but "they" rejected me and gave it to him instead" என்ற ஒரு கோபத்தின் வெளிப்பாடாகவே அவன் மேலும் மேலும் எதிர்ப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான், "அவர்களை" வெல்லவும் (in simple terms, to go one up) முனைகிறான். Spiderman பட வில்லன் character arc, அவன் எடுக்கும் முடிவுகளும் ரொம்ப dramaticஆக இருக்கும் என்பதால் நினைவுகூர்ந்தேன்.
இந்தப் படத்தில் வுல்ஃப் ஆரம்பத்திலேயே மனம் மாறியவன். முன்பே ஒரு ஆட்டுக்குட்டியைத் தவறுதலாகக் கொன்ற குற்றவுணர்வில் வாழும் ஒரு ஓநாய் திரும்பவும் ஒரு ஆட்டுக்குட்டி தன்னால் மாட்டிக்கொள்வதை விரும்பவில்லை, அதனாலேயே தனக்குத் தெரிந்த முறையில் அவனையும் காக்க முற்படுகிறான். இதில் அபாயங்கள் உண்டு. ஆனால் வுல்ஃபுக்குத் தெரிந்த முறை வன்முறையும் மிரட்டலும் தான். இது படத்தில் தெளிவாகவே இருக்கிறது. (எவ்வளவு நல்லவன் என்று காட்சிகள் ஒருபுறம் ஓங்கியிருக்க கோபம் வந்து கடித்துப் போடும் ஒரு காட்சியும் உண்டு - அந்தக் கோயில் வாசல் அடியாட்களின் உள்ளங்கால்களைக் கிழித்து விடுகிறான்.)
வுல்ஃப் அவனையும் ஆட்டுக்குட்டி என்று சுட்டுவதிலேயே கூட ஒரு equivalence இருக்கிறது. ஓநாய்களின் தவறுகளால் அவதிப்படுபவர்கள் தானே ஆட்டுக்குட்டிகள். (சந்துருவுக்கும் எட்வர்டுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பது கூட யதேச்சையாக அமைந்தது இல்லையென நினைக்கிறேன்.)
என் பதில்: உங்களின் இந்த வாசிப்பை நான் மறுக்கப்போவதில்லை; ஏன் இப்படி வாசிக்கக்கூடாது என்று சொல்ல காரணமும் இல்லை. ஆனால் இப்படி எல்லாம் வாசிக்க திரைக்கதை மூலம் எனக்கு தீவிரமான காரணமோ தூண்டுதலோ இல்லை; அவ்வளவுதான்.
முந்தய இரவில் தனக்கு உதவியனை பலவந்தமாக கடத்தி கொண்டு போகிறது வுல்ஃப். இது ஏன் என்பதற்கு கதையின் தர்க்கத்தில் எந்த விடையும் இல்லை//
It has been explained by the character wolf to goat while traveling together...
//ஆட்டுகுட்டியும் ஓநாயாக தன்னை எந்த தருணத்திலும் உணர்வதோ, இயல்பில் கொண்டிருப்பதோ இல்லை. //
இயல்பு என்பது, சூழ்நிலைகளைப்பொறுத்து மாறும். இது மண்ணில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளுக்கும் பொறுந்தும்.
நேரம் ஒதுக்கி, நெட்ஜியோ தொடர்ந்து கவனித்துப வாருங்களேன்.. உங்களின் இந்த கூற்று மாறுபட வாயிப்பிருக்கிறது.. :).
கவிதா, மன்ணில் இருக்கும் ஜீவராசிகளின் இயல்புகளை பற்றி எதுவும் சொல்லவில்லை. ஓநாய் ஆட்டுக்குட்டி என்று குறிக்கப்படுவதன் இயல்பை முன்வைத்து, எந்த தன்மைகள் குறிக்கப்படுகிறதோ அதை பற்றி சொன்னது. இவ்வளவு நீண்ட பதிவு எழுதிய எனக்கு சற்று பொது அறிவும் இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு இடமளித்து வாசித்து கருத்தளித்தால் நல்லது.
சும்மா பகிர்கிறேன்..
பருத்திவீரன் என்ற ஒரு திரைப்படத்தை ஆஹா ஓஹோ என்று இணையத்தில் புகழாதோர் இல்லை. ஆனால் எங்கோ ஒரு இடத்தில் மட்டும்.. "பெண்களின் உழைப்பில், வெட்டியாக தண்ணி அடித்து, ரவுடித்தனம் செய்யும் ஒரு எதற்கும் பிரசயோசனம் இல்லாத ஆணின் கதை" என்று படிக்க நேர்ந்தது.
அந்தப்படத்தை கூர்ந்துப்பார்த்தால், அந்தப்படத்தின் ஒற்றைவரி கதை அதுதான் போலவே :) இப்படி இணையத்தில் பலர் தூக்கிவைத்து ஆடும் படங்கள் மொக்கையாகவும், மொக்கை என சொல்லப்பட்ட பல படங்கள் நல்ல படங்களாகவும் இருந்திருக்கின்றன.
இது மனிதர்களுக்குள் உள்ள தனிப்பட்ட சிந்தனை, எதிர்ப்பார்ப்பு, வித்தியாசங்கள் என வெவ்வேறாக வெளிப்படுகிறது என்றே கொள்வோம்.
அதைவிட்டு, மற்றவர்களை வேறொன்றும் நாம் சொல்ல இயலாது கூடாது என்றே என்னளவில் நினைக்கிறேன்.
உங்களின் விமர்சனத்தையும் சேர்த்து...
எனக்கு படம் பிடித்திருந்தது.. :).
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் : என் புரிதல் http://www.writercsk.com/2013/10/blog-post_14.html
இதையெல்லாம் விட எனக்கு ஒரு சந்தேகம்/நெருடல்.. மொத்த போலிஸ் போர்ஸும் இப்படி வெறி பிடித்து தேடுமளவுக்கு வுல்ஃப் என்பவன் யார்? அவன் என்ன வீரப்பனா, தாவுத் இப்ராஹிமா, ஆட்டோ ஷங்கரா,அந்நியனா,இந்தியன் தாத்தாவா அல்லது வழக்கமான சினிமாவில் வருவது போல ஊரை அழிக்க வெடிகுண்டுடன் அலையும் தீவிரவாதியா,சீரியல் கில்லரா,சைக்கோ வா ? அவனால் பொது மக்களுக்கோ சமூகத்துக்கோ பெரும் ஆபத்து ஏதும் வரப்போகிறதா ? ஏதுமில்லை அவன் ஒரு "முன்னாள்" பெய்ட் கில்லர் அதாவது கூலிக்கு மாரடிப்பவன்,அவனை பிடித்து கோர்டில் நிறுத்தினாலும் குற்றவாளியை விட கொலை செய்ய சொன்னவனுக்கே அதிக தண்டனை(இதுவும் சினிமா மூலம் அறிந்த டயலாக் தான்)அவன் யாருக்காக வேலை செய்தானோ அவன் தான் முதன்மை குற்றவாளி அவன் வேலை செய்ததோ தம்பாவிடம் தம்பாவோ போலிஸ் கஸ்டடியில் ஸோ அங்கேயே கேஸ் முடிந்துவிடுகிறது
சரி தம்பா குற்றத்தை நிருபிக்க வுல்ஃப் தேவை என எடுத்துக்கொள்ளவும் முடியவில்லை போலிஸ் வுல்ஃபை சுட்டுக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறது,அப்படி என்ன போலிஸ்க்கு வுல்ஃப் மீது தீரா கோபம்/பகை ? வுல்ஃப் கொன்றது எல்லாம் நரிகள் தான் தவறுதலாய் கொல்லப்பட்ட ஒரே ஆடுக்குட்டி எட்வர்ட் மட்டுமே அந்த ஒரு அப்பாவியை கொன்றதற்காகவா இத்தனை போலிஸும் வுல்ஃபை தேடுகிறது ? அவன் அரசியல் பிரமூகரையோ,முக்கிய நபரையோ,சிபிசிஐடி(ஷாஜி)யின் அண்ணன் தம்பியையோ கொன்றது போல தெரியவில்லை,வுல்ஃப் வெளியில் இருப்பதால் யாருக்கும் ஆபத்து வரப்போவதுமில்லை (தம்பாவிற்கு தவிர)அப்படி இருக்க பிடிப்பட்ட தம்பாவை வைத்து வழக்கை நடத்தி வுல்ஃபை தேடப்படும் குற்றவாளியாக்கி ஜஸ்ட் ஒரு தனிப்படை அமைத்து அவனை தேட சொல்வது தானே நடைமுறை.(அப்படி கூலிக்கு கொலை செய்தவர்கள் எல்லாம் எளிதாக ஜாமீன் வாங்கி வெளியில் வந்து விடுவார்கள் என்பதை நாம் விட்டுவிடுவோம்)
"முன்னாள்" பெய்ட் கில்லருக்கெல்லாம் மொத்த போலிஸும் கமிஷனர் உட்பட தெரு தெருவாய் அலைவதெல்லாம் ரொம்ப சாஸ்தி ஸார்.அதுவும் அவனை விடிவதற்குள் பிடிக்கவில்லை என்றால் மொத்த போலிஸயும் சஸ்பென்ட் செய்து விடுவேன் என கமிஷனர் புலம்புவதெல்லாம் டூ த்ரீ மச்சு இல்லையா ?
வுல்ஃபிற்கு எதுக்கு இவ்வளவு பில்டப் அவரே படத்தின் இயக்குநரும் ஹீரோக்களில் ஒருவரும் என்பதாலா ? அப்படியெனில் இதுவும் சராசரியான பத்தோடு பதினொன்றான ஹிரோயிச படமல்லாமல் வேறென்ன? //என்னமோ மனசுல இருக்கிறதை எல்லாம் இங்க இறக்கி வைக்கணும்னு தோணுச்சு சொல்லிட்டேன்.
வசந்த்,
உங்கள் எழுத்து, லாஜிக், அனலிடிகல் திறமைகள் கொண்டு நேர்த்தியாக வாசிப்பவரை கருத்துகளை ஏற்றுக் கொள்ள வைக்கும் உங்கள் பலம், ஃபார்ம் அன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது!
இருந்தாலும், உங்கள் சற்றே கடுமையான விமர்சனத்தையும் தாண்டி, இது வித்தியாசமான நல்ல திரைப்படம் என்பது என் கருத்து. குற்றம் குறைகள் இருந்தாலும், ”காற்று போன பலூன்” என்று கூறுமளவுக்கு மோசமில்லை. ’பொதுப்புத்தி’ என்று நிராகரிக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன் :-)
உங்களை, உங்கள் எழுத்துகளை நன்கு அறிந்தவன் என்பதால் உங்களுக்கு நேட்ஜியோவை பரிந்துரைக்கப் போவதில்லை!
எ.அ.பாலா
ஒரு இடுகையை இத்தனை பெரிதாக எழுதினால், ஒரே மூச்சில் வாசித்து, ஏற்றிக் கொள்ள கஷ்டமாக இருக்கிறது. 2 இடுகைகளாக பிரித்து எழுதியிருக்கலாம் என்பது ஒரு சஜஷன்.
//உங்களுக்கு நேட்ஜியோவை பரிந்துரைக்கப் போவதில்லை! // :) ஏங்க இப்படி..?! ..இதுக்காக எழுதிய கமெண்ட்டை காக்கா தூக்கிப்போச்சே... . :(
மேலே உள்ள விமர்சனத்திற்கும் படத்திற்கும் சம்மந்தமில்லாமல் சும்மா பேசும் சில பின்னூட்டங்களை நான் வெளியிடவில்லை. அதே நியாயத்தை மற்றவற்றிற்கும் செய்யும் விதமாக, இந்த பதிவை (கருத்து எதுவும் சொல்லாமல்) பாராட்ட மட்டும் செய்யும் சில பின்னூட்டங்களையும் நீக்கிவிட்டேன். உங்களின் அந்த பின்னூட்டமும் படத்திற்கும் விமர்சனத்திற்கும் சம்பந்தமில்லாதது என்பதால் அதையும் தூக்கிவிட்டேன். வருத்தமாக இருந்தால் மன்னிக்கவும்.
ஒரு காலத்தில் எல்லா வகையான பின்னூட்டங்களையும், வசைகளையும் கூட இங்கே அனுமதித்து வந்தேன்; வேறு வேறு பெயர்களில் எழுதி - என் பெயரிலேயே போலி பின்னூட்டமிட்டு- குழப்பம் விளைவித்ததால் அனானி பின்னூட்டங்களை மட்டும் தவிர்த்தேன்.
இன்று யாருக்கும் கருத்து சொல்ல எந்த வசதி குறைவும் இல்லை. ப்ளாக் போதாதென்று ஃபேஸ்புக், ட்விட்டர் என்று ஏராளமான இடங்கள். இன்று கருத்து சொல்லும் ஜனநாயகத்தை பாதுகாப்பதை விட, தேர்ந்தெடுத்த கருத்துக்களை மட்டும் நம்மை சீண்ட அனுமதிக்கும் சிக்கல்தான் இருக்கிறது. அதனால் விவாதத்திற்கு உதாவாது என்று தெளிவாக தெரியும் கருத்துக்களை, பதிவிற்கும் பதிவில் பேசப்படும் பொருளுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களையும் அனுமதிக்க போவதில்லை. பதிவை பாராட்டும், என்னை விசாரிக்கும், மற்றும் சாட் மெஸேஜ் நிலையில் இருக்கும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட்டு ஒரு நாளில் நீக்கப்படும். புரிந்து கொண்டு பின்னூட்டமிடவும். நன்றி.
Of course, OA is not much impressive for a common man but it is a movie that must be celebrated and encouraged for many things.
Pros:
* No male-female theme like in most Tamil movies,
* No lavishness like in shankar movies,
* No extremists like in Bala movies,
* No songs,
* Feminist-friendly
* No much commercial elements.
Cons:
* Could have been crafted better and be more impressive.
My question:
How many movies released in this year 2013 have the above merits?
"என்ன எழவுக்குத்தான் வுல்ஃப் அந்த பையனை கடத்துகிறான்? கதைப்படி அதற்கான தேவைதான் என்ன? அதனால் வுல்ஃபிற்கு கிடைத்த பயன்தான் என்ன?"
வுல்ஃப் முதல் பிரச்சனை தம்பா தான் .தாய் ஆட்டுக்குட்டி தம்பாவின் பார்வையில் சிக்கியதும் வுல்ஃப் சந்துருவை அழைகிறான் . சந்துருவை கடத்தும் பொழுது நிகழும்
இரு மரணத்தின் வழியாகவே ஷாஜி நடக்கும் நிகழ்வுகலுக்கும் தம்பாவுக்குமான தொடர்பை உருதி செய்கிறார் .வுல்பின் தேவை இதுதான் இந்த ஒருனால் தன்னை தேடும் இரு
தரப்பையும் ஒன்றை ஒன்று சந்தேகத்துடன் மோதும் சூழலை உருவாக்குவது.
இதற்கு பின் சந்துருவுக்கு தம்பாவாலும் பிறச்சனை வரும் என்பதால் அவனை பாதுகாக்க தன்னுடன் இனைத்தாக வேண்டும்.
ரயில் நிலயத்தில் மேலும் சில தம்பாவின் ஆட்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.வுல்ஃப் வெளி வருகிறான் என்ற செய்தி மட்டுமே தம்பா மருத்துவ மனையில் இறுந்து வெளியேற காறனமாகிறது.
சுடபட்ட காவல் அதிகாரி கோவில் நிகழ்வுக்கு சாட்சியாக மாருகிறார் ஷாஜியிடம் சந்துருவையும் அதிகாரியையும் ஒப்படைத்து விட்டு கிலம்ப நினைகிறான் வுல்ஃப் .அதற்குள் சூழல் மாருகிறது.
கத்தி காயப்பட்டு உயிருடன் இறுக்கும் தம்பாவின் ஆலான இன்ஸ்பெக்டறுடன் சந்துருவை விட்டு விட்டு கிளம்புகறான்.
தம்பாவே தன்னை முதலில் நெறுங்குவான என்ற வுல்பின் என்னம் இருதிகாட்சியிலும் கல்லறை மோதலிலும் உருதியாகிரறது .கல்லறையில் சுடப்பட்ட தம்மாவின் ஆலும்,
இருதிகாட்சியில் தம்பாவின் வாகனமும் ஷாஜி வுல்ஃப்பை நெருங்க காறனம்.
தம்பாவிற்க்கு பாவமன்னிப்பு வழங்கி தனக்கான பாவமன்னிப்பை கோரும் ,ஆடாக மட்டும் இனி வாழ வேண்டும் என்று போறாடி மாண்ட ஓநாய்.
படம் பார்த்த அன்றய இரவே இந்த பதிவு எழுதப்பட்டது. ̀காட்சி பிழை'யில் கட்டுரையாக கேட்டதற்கு இணங்க, சற்று மாற்றி வடிவான ஒரு கட்டுரையாக (எதிர்வினைகள் சிலதை கணக்கில் கொண்டு) எழுதப்பட்டுள்ளது. நவம்பர் இதழில் வெளிவரும்.
யோசிக்க யோசிக்க படத்தின் பிரச்சனைகள் ஒரு கட்டுரையில் எழுதி முடிக்க முடியாதபடி வந்துகொண்டே இருக்கின்றன. இந்த படம் இவ்வளவு பாராட்டுதல்களை பெற்றுள்ள வரலாற்று அபத்தம், எதிர்காலத்தில் மிகவும் மேற்கோள்காட்ட வேண்டிய ஒரு உதாரணம்.
எனக்கு புரியவில்லை . சுடபட்ட அதிகாரிக்கும் சந்த்ருவுக்கும் இடையில் வுல்ஃப் உருவாக்கும் உறவை எப்படி புரிந்துகொள்கிறிர்கள். நியே அவரை மருத்துவமனையில் சேர்க்கலாம் என்கிறான்.
அது சந்துருவிற்க்கு பயன் தராதா?
anna super ,nenga keta kelvi enku thonuchu ,ana nariya per paratunathala ,nan en friends paka soli review ketaen, nenga sonathu avlavum unmai //அந்தப் பார்வையற்றவர்களின் குடும்பம் செய்த தவறெல்லாம் தங்கள் பிள்ளையைக் கொன்றவனை ‘மன்னித்தது’ மட்டுமே. அவர்களுக்கும் கரடிக்கும் என்ன பகை. புலி/போலிஸுக்கும் அவர்களுக்கு என்ன சம்பந்தம்.ஓநாய் அநாவசியமாய் அந்த அப்பாவிகளை ஆபத்தில் தள்ளி சாகவும் வைத்துவிடுகிறது. ஓநாய் அவர்களைக் காக்கச் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களை விட்டு விலகி போலிசிடம் சரண் அடைவதே. அதன் மூலம் அப்பாவி இளைஞனையும் அவனது குடும்பத்தையும்கூட காப்பாற்றலாம்//nandri subaguna rajan sir
Post a Comment
<< Home