ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, May 31, 2012

டெசோ அரசியல்.


முன்குறிப்பு:  இன்று அல்லது நாளை வெளியாகும் 'ஆழம்' இதழிற்காக மூன்று வாரங்கள் முன்பு எழுதப்பட்ட கட்டுரை கீழே.  பலர் கிண்டலடிப்பது போல டெசோ சினிமா உருவாகி சில நாட்கள் ஓடுவது போல ஒரு தோற்றமாவது காட்டுமா என்பது கூட தெரியாது. ஈழ இன அழிப்பை குறிக்கும் முக்கிய நாட்களான மே 17, 18இல் டெசோவிலிருந்து அறிக்கை எதுவும் வந்ததாக தெரியவில்லை.  இப்போது கூட இருக்கிறதா அல்லது இருப்பதை அவர்களே மறந்துவிட்டார்களா என்று தெரியாத நிலையில், 'வரும் 'ஆழம்' பத்திரிகையில் 'டெசோ'வை முன்வைத்து கட்டுரை எழுதியிருக்கிறேன்; கட்டுரை வெளிவரும்வரையாவது 'டெசோ' இருக்குமா?' என்று ட்விட்டரில் எழுதியிருந்தேன்.  டெசோ படம் தொடர்கிறதோ பெட்டிக்குள் போகிறதோ,  அதற்கு டெசோவுடன் சம்பந்தப்பட்டவர்களை தவிர வேறு யாரும் எதுவும் செய்யமுடியாது.  ஒரு குறிப்பிட்ட அரசியல் பிரச்சனையில் நிலைபாடு எடுப்பது குறித்த அணுகுமுறையாக இந்த கட்டுரை வெளியிட உகந்ததாக நினைக்கிறேன்.


திசைகளற்ற வெளியில் டெசோ அரசியல்.

---- ரோஸாவசந்த்தனி ஈழத்தை இலக்காக அறிவித்து கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. எண்பதுகளில் கலைஞர் தலைமையில் செயல்பட்டு க் கலைக்கப்பட்ட இதே பெயருடைய அமைப்பு, அதே நோக்கத்தை அறிவித்து இப்போது துவங்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே இதர ஈழ ஆதரவாளர்களால் கடுமையாக இந்த முன்னெடுப்பு விமர்சிக்கப்படுகிறது.

ஆட்சியதிகாரத்தில் இல்லாத காலத்திலெல்லாம் திமுகவினரை திமுகவுடன் உணர்வுரீதியாக பிணைக்க, அவர்களை ஏதாவதொரு தொடர்ந்த அரசியல் செயல்பாட்டில் வைத்திருப்பது கலைஞரின் வழக்கம். ஆனால் இம்முறை திமுக தொண்டர்கள் கூட ஈழம் மலர்வதே டெசோவின் இலட்சியம் என்று நம்புவது சந்தேகம். திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளை சமாளிக்கவே தொடங்கப்பட்டிருப்பதான பரவாலான நம்பிக்கையையே அவர்களும் பகிர்ந்து கொள்ளக்கூடும். இது தவிர நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும், காங்கிரஸை பின்னால் கழட்டிவிட ஒரு சாக்காகவும் இதை சொல்கிறார்கள். ஈழப்பிரச்சனையில் தொடர்ந்து குரல் ஒலித்துவரும் திருமாவளவனை அழைக்காதது குறித்த விமர்சனத்தை திருமாவளவன் உட்பட சிலர் முன்வைத்திருக்கிறார்கள்.

போர்குற்றத்திற்கான ஐ.நா. விசாரணை நடத்துவது, மற்றும்  தெற்கு சூடான் கிழக்கு திமோர் போன்ற நாடுகளுக்கான தீர்வினைப் போல பொது வாக்கெடுப்பின் மூலம் ஈழம் உருவாக ஐ.நா. முன்வர வேண்டும் என்று தாங்கள்  முன்வைப்பதையே முன்னெடுக்கப் போவதாக சொல்லும் டெசோவை, மற்ற தீவிர ஈழ ஆதரவாளர்கள் ஒரு ஏமாற்றுவேலையாக கண்டனம் செய்கிறார்கள். 2009இல் ஆட்சியதிகாரத்தில் இருந்த கலைஞரின் செயல்கள் மற்றும் செயலின்மையின் எதிர்வினையாக, தங்களின் நோக்கத்தையே கலைஞரும் முன்வைப்பதற்காகவே திட்டுகிறார்கள்.

ஒரு மாநிலத்தின் முதல்வராக கலைஞர் எந்த அளவிற்கு 2009 ஈழத்து இன அழிப்பை தடுத்திருக்க முடியும், மாறாக ஜெயலலிதா பதவியில் இருந்திருந்தால் என்ன சாதித்திருக்கக் கூடும் என்ற கேள்விகளுக்கு அப்பால், 2009 மே மாதத்தில், இன அழிப்பின் இறுதிக் காட்சிகள் கொடூரமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, ரத்தக்கறை கொண்ட டெல்லியுடன் தன் வாரிசுகளுக்கான பதவி பேரங்களில் மும்முரமாக இருந்த துரோகம், வரலாற்றில் எதை செய்தும் மறைத்துவிட முடியாதபடி ஆழப் பதிவாகியிருக்கிறது. இது தவிர முத்துக்குமாரின் உயிர் தியாகத்தை தொடர்ந்த எழுச்சியை அமுக்க கையாண்ட வழிமுறைகளில் தொடங்கி, கலைஞர் தன் அரசியல் வாழ்க்கையில் ஆவேசமாக தானே பலமுறை பேசிய பேச்சுக்களை பேசியதற்காகவே, சீமான் போன்ற தமிழ் தேசியவாதிகளை சிறையிலடைத்தது வரையிலான கடந்த திமுக ஆட்சியின் நடவடிக்கைகள், பிற ஈழ ஆதரவாளர்கள் டெசோ அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் கொள்ள முடியாமலிருக்க தீவிர காரணங்களாக உள்ளன. அந்த வகையில் இன்று கலைஞரின் டெசோ மீதான விமர்சனங்களும் நம்பிக்கையின்மையும்  தனக்கான நியாயம் கொண்டவையே.  ஒரு கொடூர வரலாற்று நாடகத்தின் அபத்தக் காமெடி நிகழ்வான, தன் 2மணிநேர காலை உண்ணாவிரதத்தை இன்னமும் சீரியசாக முன்வைத்து, சிங்களர்கள் போர் நிறுத்த உறுதிமொழி அளித்து, தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்ததாக, கலைஞர் இப்பொழுதும் சொல்வது, டெசோவின் அரசியல் குரலை பவர்ஸ்டாரின் நகைச்சுவைக்கு அருகில் கொண்டு வருகிறது. டெசோ மாநாடு குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்கிறார்கள். ஒருவேளை அப்படி ஒன்று நடந்தால், 1985இல் நடந்த டெசோ மாநாட்டிற்கு கூடிய உணர்வுரீதியான மாபெரும் கூட்டத்தில் சிறு பகுதியோ, பரவாலான அகில இந்திய பங்கேற்போ இம்முறை நிகழப்போவதில்லை.

2009ற்கு முன்பும், கலைஞரின் ஈழம் சார்ந்த அரசியல் என்பது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தனி ஈழ வீரமுழக்கமாகவும், 'ஒன்றுபட்ட இலங்கையினுள் அதிகாரப் பகிர்வு' என்றாகவும்,  போராளித்தனமும் சாத்விகமும் மாறி மாறி அலையடிக்கும் 'முரணியக்க'மாக, துக்ளக் சோ தொடர்ந்து கிண்டலடிப்பதற்கு ஏற்ப கடந்திருக்கிறது. கொத்து கொத்தாக ஈழத்தில் மக்கள் கொல்லப்பட்டபோது, அதற்கு மறைமுக உடந்தையாக இருந்த இந்திய 'மத்திய அரசின் நிலைபாடே தன் நிலைபாடு' என்று 2009இல் சொன்ன கலைஞர், இப்போது தனி ஈழத்தை இலக்காக முன்வைக்கிறார்.

இந்தவகையில் கலைஞர் மீது ஈழ ஆதரவாளர்களால் காட்டப்படும் கோபமும், விமர்சனங்களும் மிகுந்த வரலாற்று நியாயம் கொண்டது என்றாலும், எல்லோருக்கும் தெரிந்த அடிப்படையான ஒரு விஷயம் இதில் மறக்கப்படுகிறது. கலைஞர் தன்னளவில் ஈழ ஆதரவு அரசியலுக்கு அடிப்படையில் எதிரி அல்லர். ஈழப்பிரச்சனையை தனது தேர்ந்தல் சார்ந்த அரசியல் சாதூர்ய கையாளுதல்களுக்கு பயன்படுத்த அவர் தயங்கியதில்லை; ஆனால் தான் நம்பாத, தான் மறைமுகமாக எதிர்க்கும் அரசியலாக, அதை பொய்யாக கைகொண்டதில்லை. அவரது சமரசங்களும், ஏமாற்றுதல்களும், சிறியது முதல் உச்சம் வரையியிலான எல்லாவகை பரந்த துரோகங்களும் சுயநலம் சார்ந்த அரசியலாலும், ஆட்சியதிகாரத்தை தக்கவைப்பதற்கான கொள்கை பலிகொடுத்தல்களாலுமே நிகழ்ந்தன. கலைஞரை தங்கள் கொள்கை அரசியலுக்காக ஆதரித்த பலருக்கும் இது நெடுங்காலமாக தெரிந்தே உள்ளது. தெரிந்தே சமரசத்துடன் ஆதரித்த பலருக்கு, 2009இன் துரோகம் இனியும் சகித்துக் கொள்ளமுடியாத எல்லையாக உள்ளது. ஆனால் இதன் காரணமாக கலைஞரை நோக்கி  தீவிர எதிர்ப்பு நிலையிலேயே  எல்லா நேரங்களிலும் எதிர்வினை செய்வதில் சில பிரச்சனைகள் உள்ளது.

எல்லாவித அரசியலையும் பொழுதுபோக்கிற்காகவாவது அலசுவதும், பொதுவெளியில் விவாதிப்பதும் தமிழ் வெகுமக்களின் ஆரோக்கியமான ஒரு பொதுப்பண்பு. 90களுக்கு பிறகு இதன் பரப்பு வெகுவாகக் குறைந்தாலும், இன்றும் தமிழ் வெகுமனத்தின் அப்பண்பு மறைந்துவிடவில்லை என்பதை, பொதுவெளியில் காது கொடுத்து கேட்டறியலாம். இந்த இடத்தில் வெகுமக்கள் என்று சமூகத்தில் அதிகாரமற்ற எளிய மக்களை மட்டும் குறிக்கவில்லை; அதிகாரமற்ற எளிய மக்கள் தீவிர கடப்பாட்டுடன் பலவகை அரசியல் நடவடிக்கைகளில் பங்கெடுப்பது தமிழகத்தில் தொடர்ந்து நடக்கிறது. இங்கே அதை தாண்டி, சினிமாவாலும், தொலைக்காட்சிகளாலும், வெகுஜன பத்திரிகைகளாலும் நிர்ணயிக்கப்படும் உளவியல் கொண்ட, தமிழ் சூழலின் வெகுமனநிலை கொண்ட பொதுமக்கள் கூட்டத்தையே குறிக்கிறேன்.

ஈழம் சார்ந்த தீவிர அரசியலை முன்னெடுக்கும்  அமைப்புகள் எதுவும் இந்த வெகுமக்கள்  கூட்டத்தின் மனநிலையில் சலனமேற்படுத்துவதாக இல்லை. இந்த வெகுமக்களின் பங்கேற்பை கொண்ட அரசியலை, தேர்தல் அரசியலை மையமாக கொண்ட அரசியல் கட்சிகளே இன்னமும் முன்னெடுக்கின்றன. தேர்தல் அரசியல் கட்சிகளில், தேர்தல் அரசியலுக்கு இன்றியமையாத ஆகக் குறைந்த சமரசத்தை தாண்டி, ஈழப்பிரச்சனையில் துரோகம் செய்ததாக குற்றம் சாட்ட முடியாத கட்சியாக விடுதலை சிறுத்தைகளை தவிர வேறு யாருமில்லை. ஆனால் வெகுமக்கள் மனநிலையில் விடுதலை சிறுத்தைகளின் வீச்சு மிக குறுகியது. இந்நிலையில் திமுகவும் அதிமுகவுமே, நாம் எவ்வளவு விரும்பாவிட்டாலும் வெகுஜன அரசியலை கொண்ட கட்சிகளாக திகழ்கின்றன. இதில் ஜெயலலிதா கலைஞரை போல அல்லாமல், தன் இயல்பான அரசியலிலேயே தனி ஈழ இலக்கிற்கு பொதிவானவர் அல்லர். 2009இல், தேர்தல் பலன்களை மனதில் கொண்டு மட்டுமே, அவர் தனி ஈழமுழக்கம் செய்தார் என்பதில் சிறிதும் ஐயம் கொள்ள காரணம் ஏதுமில்லை. திமுகவின் துரோக நிலையில், ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாத முழக்கத்தை, முற்றிலும் சந்தர்ப்பவாதங்களால் திரளும் அரசியல் சூழலில், நெருக்கடியான நிலையில் ஆதரித்திருந்தால் தவறு ஏதுமில்லை. ஆனால் அதையே காலகாலத்திற்குமான அணுகுமுறையாக கொள்வது விவேகமற்றது மட்டுமல்ல, அத்தகைய அணுகுமுறைக்கு ஜெயலலிதாவே கூட போதிய இடம் தரமாட்டார்.

திமுக என்ற அரசியல் நிறுவனத்திற்கு அடித்தளமாக இருப்பது திமுகவினர்களின் அடையாள அரசியல் சார்ந்த வெகுஜன உணர்வு; திமுக துவங்கப் பெற்றக் காலத்திலிருந்து  80கள் வரை இருந்த திமுகக்காரன் என்ற பரவசம் கொண்ட வெகுஜன உணர்வு, வீர்யம் இழந்து காணப்பட்டாலும், திமுகவின் இத்தனை சந்தர்ப்பவாதங்கள், ஊழல்கள், துரோகங்களுக்கு பின்னும், இன்றும் பெருமளவு உயிர்த்து இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

திமுகவின் வெகுஜன மனநிலை கொள்கையரசியல் சார்ந்து மட்டும் உருவான ஒன்றல்ல; கலைஞர் என்ற திருஉரு சார்ந்து கொள்ளும் அடையாளப் பரவசத்தால் உருவானது. கலைஞரை ஒரு இன்றய ராஜராஜ சோழனாக காணும் மனநிலை அது. இன்னொரு பக்கம் அது வாழ்வியல் யதார்த்தம் சார்ந்ததும் ஆகும். திமுகவினர் ஒவ்வொருவருக்கும் கட்சியரசியலுக்காக தியாகம் செய்யும் மனம் இருந்தாலும், கட்சி அதிகாரத்திற்கு வருவதன் மூலம் தனக்கு ஒரு ஆதாயம் உண்டு என்ற மனப்பான்மையும் திமுகவினரை திமுகவுடன் பிணைக்கிறது. இவ்வாறாக திமுகவினரின் வெகுஜன மனநிலை என்பது முரண்பட்ட காரணிகளால் உருவான ஒன்று. அதை அடையாள அரசியல்ரீதியாக பதிலீடு செய்யக்கூடிய பரந்த வெகுஜன அரசியல் இயக்கம் வேறு எதுவும் தமிழகத்தில் உருவாகவில்லை என்பதுதான் யதார்த்தம்;  குறிப்பாக ஈழப்பிரச்சனையை தீவிரமாக பேசும் அமைப்புகள் எதற்கும் திமுகவிற்கு இருக்கும் வெகுஜன ஈர்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

ஈழப்பிரச்சனையில் சாத்தியமாகக் கூடிய அரசியல் தீர்வு மட்டுமல்ல, இன்றய சூழலில் சாத்தியமாககூடிய நடைமுறை அரசியல் கூட என்னவென்பது தெளிவாக இல்லை. ஈழத்தமிழ் மக்களில் பெரும்பாலோர் ஆதரிக்கும் பட்சத்தில், தனி ஈழத்தின் நியாயத்தை, 2009 படுகொலையையும் நியாயப்படுத்தக் கூடியவர்களை தவிர மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. பிரச்சனை தனி ஈழம் நியாயமானதா என்பது அல்ல; சாத்தியமானதா என்பதே.  இன்றய சூழலில் தனி ஈழம் சாத்தியமல்ல மட்டுமல்ல, அதற்கான எந்த போராட்டமும் ஈழத்தமிழ்மக்களை மேலும் மேலும் அழிவுநிலைக்கு கொண்டு செல்லும் என்பது பலரது நிலைபாடு. ஒரு ஆயுத போராட்டத்தின் மூலம் நிச்சயமாக தனி ஈழம் சாத்தியமில்லை என்ற இன்றய சூழல் எதிர்காலத்தில் மாறக்கூடும் என்று தோன்றவில்லை. ஆயுத போராட்டம் இன்றி உலகத்தால் அங்கீகரிக்கப்படும் ஒன்றின் வழியாகவும் தனி ஈழம் இன்றய நிலையில் சாத்தியம் என்று தோன்றவில்லை;  ஆனால் என்றென்றைக்கும், அடுத்த 25 வருடங்களுக்கு இதே போன்ற நிலை தொடரும் என்று உறுதியளிக்கும் ஆரூடம் எதுவுமில்லை. நிகழும் பொருளாதார நெருக்கடிகளும்,  முதலீட்டிய நடைமுறையின் பக்க விளைவுகளாக நிகழப்போகும் உலக நெருக்கடிகளும், நிர்பந்தங்களும் உருவாக்கப் போகும் உலகச் சூழல் குறித்து, யாருக்கும் எந்த தெளிவும் இல்லை. இந்நிலையில் ஈழமக்களுக்கான பல்வேறு அரசியல்களுக்கு நடுவில், ஈழம் என்ற நியாயமான கோரிக்கையை  உயிரோடு வைத்திருப்பது அர்த்தமுள்ள ஒன்றுதான்.

அண்மைய ஜெனிவா தீர்மானம் நீர்த்தும் நேரடி பயனற்றும் இருந்தாலும், உலக கவனத்தை ஈர்த்த வகையில் தமிழர்களுக்கான முதல் வெற்றிப்படியாகவும், இலங்கை அரசிற்கான முதல் பின்னடைவாகவும் திகழ்கிறது. இதன் தொடர்சியாக அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். பயணித்து  ஈழத்திற்கான ஐநா வாக்கெடுப்பு என்கிற கனவை என்றாவது நெருங்க வேண்டும் என்றால் அதற்கு பல தரப்பிலிருந்து, பலதரப்பட்ட குரல்கள் ஒருமித்து தொடர்ந்து ஒலிக்க வேண்டும். அந்தவகையில் இன்னமும் தமிழக வெகுஜன உணர்வுகள் பங்கேற்கும் திமுகவின் அரசியலில் ஈழம் உச்சரிக்கப் படுவதும், அதற்கான தர்க்கங்களை முன்வைப்பதும் முக்கியமான ஒன்றுதான். டெசோ அமைப்பின் தீர்மானமாகவும், குறிக்கோளாகவும் அண்மையில் வெளிவந்த அறிக்கையின் உள்ளடக்கத்துடன் ஈழ ஆதரவாளர்கள் யாருக்கும் முரண்பாடும் எதிர்ப்பும் இருக்காது; அறிக்கையில் உள்ளதைத்தான் அவர்களில் பலரும் சொல்கிறார்கள். ஆனால் கலைஞர் அதை சொல்வது மட்டுமே அவர்களது பிரச்சனை. அந்த வகையில் இது அரசியல் தூய்மைவாதத்தின் பிரச்சனையாக இருக்கிறது.

டெசோ அமைப்பை சீரியசாக எடுக்காமலிருப்பதும், கலைஞரை ஆதரிக்காமல் இருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே; ஆனால் எதிர்ப்பதும் திட்டுவதும் எந்த வகையிலும் நேர்மறையான அணுகுமுறை அல்ல. மேலே குறிப்பிட்ட திமுகவின் வெகுமக்கள் பங்கு மட்டுமின்றி, ஒருவேளை இன்னும் கொஞ்ச காலம் தீவிரமாக பேசி, ஈழவிடுதலைக்கான டெசோ மாநாடு ஒன்றை சொன்னபடியே நடத்துவார்களெனில், 1985 கூட்டத்தின் பத்தில் ஒரு பங்கு கூடினாலும், அகில இந்திய பங்கேற்பும் நிகழ்ந்தால் அது முக்கியமான நிகழ்வாகவே இருக்கும்; திமுகவும் கலைஞரும் விடுக்கும் அறிக்கைகள் அகில இந்திய கவனம் பெறும்.  திமுகவின் அரசியல்படுத்துதல் அதிமுகவையும் நிலைபாடு எடுக்க நிர்பந்திக்கும். திமுகவும் அதிமுகவும் இணைந்து குரல் கொடுத்ததன் பலனாக, ஜெனீவா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு இந்தியா ஆளான அண்மைக்கால நிகழ்வை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகையால் டெசோ உருவாக்கத்தை வரவேற்கவேண்டிய நிகழ்வாகவே ஈழ ஆதரவாளர்கள் காணவேண்டும் என்பது என் கருத்து; வெளிப்படையாக ஆதரிப்பதாலும் அரசியல்ரீதியாக எதுவும் குடிமுழுகாது. ஆனால் ஈழம் வாங்கித்தருவதே தன் மீதி வாழ்க்கையின் குறிக்கோளாக கலைஞர் சொல்வதை எல்லாம் உண்மையென நம்பி யாரும் ஏமாறக்கூடாது.  டெசோ விஷயத்தில் மட்டுமின்றி, அரசியல் தூய்மையும், அரசியல் இறுக்கமும் மிக தீவிரமாக இருக்கும் ஈழம் சார்ந்த அரசியலில், இதற்கு இணையான அணுகுமுறையை எல்லா தளங்களிலும் பின்பற்றவேண்டும்.

Post a Comment

4 Comments:

Blogger Kalvetu Kalvetu said...

ரோசாவசந்த்,

1. நல்ல கட்டுரை.

2. //ஈழப்பிரச்சனையில் துரோகம் செய்ததாக குற்றம் சாட்ட முடியாத கட்சியாக விடுதலை சிறுத்தைகளை தவிர வேறு யாருமில்லை//

ஒப்புக்கொள்ள முடியாதது. கலைஞர் கருணாநிதி, மருத்துவர் இராமதாசு களுக்கு கொஞ்சமும் குறைந்தவரில்லை தொல் திருமா.

அதாவது ஈழப் பிரச்சனையை அரசியல் ஆதயமாக்குவதில்.

http://www.youtube.com/watch?v=AyuTyX6GSvk


3. //திமுகவின் வெகுஜன மனநிலை கொள்கையரசியல் சார்ந்து மட்டும் உருவான ஒன்றல்ல;//

சரியான ஒன்று. கொள்கைகளுக்காக கட்சியில் இருப்பவர் /சேர்ந்தவர் யாரும் இல்லை. கொள்கை அரசியல் எனபதே இங்கு சுத்தமாக இல்லை.

அரசியல் - கொள்கை மற்றும் இலக்கு மாறலாமா?
http://kalvetu.blogspot.com/2010/12/blog-post.html

4. //கலைஞர் என்ற திருஉரு சார்ந்து கொள்ளும் அடையாளப் பரவசத்தால் உருவானது. கலைஞரை ஒரு இன்றய ராஜராஜ சோழனாக காணும் மனநிலை அது. இன்னொரு பக்கம் அது வாழ்வியல் யதார்த்தம் சார்ந்ததும் ஆகும். திமுகவினர் ஒவ்வொருவருக்கும் கட்சியரசியலுக்காக தியாகம் செய்யும் மனம் இருந்தாலும், கட்சி அதிகாரத்திற்கு வருவதன் மூலம் தனக்கு ஒரு ஆதாயம் உண்டு என்ற மனப்பான்மையும் திமுகவினரை திமுகவுடன் பிணைக்கிறது. இவ்வாறாக திமுகவினரின் வெகுஜன மனநிலை என்பது முரண்பட்ட காரணிகளால் உருவான ஒன்று.//

மிகச்சரி.

திமுக மட்டுமல்ல இன்று வந்துகொண்டிருக்கும் தேதிமுக வரை எல்லாம் அப்படியே.

****


இந்த விசயத்தில் lesser evil principle படி....

டெசோவை கலைஞர் முன்னெடுப்பதைவிட வைகோ முன்னெடுத்து ...அதற்கு நிபந்தனையற்ற ஆதரவையும் 100 சதவீத ஒத்துழைப்பையும், மேடைப்பகிர்தலையுன், தயக்கமின்றி இணைந்து செயலாற்றவும் கலைஞர், இராமதாசு, திருமா, மற்றும் அனைவரும் முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.

.

5/31/2012 9:35 PM  
Blogger ராவணன் said...

நாளை கனிமொழிக்கு அமைச்சர் பதிவி கொடுத்தால், இந்திய அரசின் முடிவே என் முடிவு என்று கட்டிய கோவணத்தை கழட்டி வீசிவிட்டு நடு ரோட்டில் அம்மணமாக ஆடக்கூடிய கருணாநிதியை நம்பவேண்டுமா? அதற்கு ஈழ மக்கள் தற்கொலை செய்துகொள்ளலாம்.

5/31/2012 11:42 PM  
Blogger ராவணன் said...

இந்திரா காங்கிரஸ் எம்ஜியாருக்கு எதிராக, விடுதலைப் புலிகளை முற்றாக புறக்கணித்து, கருணாநிதி ஆரம்பித்த டெசோ அரசியல்...அதுதான் அரசியல் என்று கூறுகின்றீர்களே அதில் கருணாநிதியை எப்படி நம்புவது?

.0000000001% கூட நம்பிக்கைக்கு உரியவரில்லை கருணாநிதி என்ற நபர்.

ஆட்சியில் இருந்தபோது சிறு புல்லைக்கூட பிடுங்கமுடியாமலிருந்த ஒருவர் இப்போது ஆணியைப் பிடுங்கிவிடுவார் என்று நம்ப இது என்ன கற்காலமா?

5/31/2012 11:52 PM  
Blogger ராஜ நடராஜன் said...

2009ன் முள்ளிவாய்க்கால் மற்றும் இந்திய பாராளுமன்ற தேர்தல் சூழல்,இயல்பாக உருவாகிய போராட்டத்தை அடக்கிய முறை,மத்திய அரசின் நிலைப்பாடே தி.மு.கவின் நிலைப்பாடு என்று கலைஞருக்கு எதிரான பல காரணங்களும் விமர்சனங்களும் இன்னும் உயிர்ப்புடனே இருக்கின்றன.இப்போதைய டெசோ கூட அவரது கட்சி சார்ந்த ச்ய்நல நோக்காக இருக்கலாம்.ஆனால் தனது சுயநல அரசியலுக்கும் அப்பால் கலைஞரின் குரல் முக்கியமான ஒன்று என்பதால் கலைஞருக்கு எதிரான விமர்சனங்களுக்கும் அப்பால் டெசோவுக்கான ஆதரவு என்பதே எனது நிலைப்பாடு.

கல்வெட்டு பின்னூட்டத்தில் குறிப்பிட்ட அனைத்து தலைகளும் ஈழ உணர்வு சார்ந்தே இருந்த போதிலும் ஒன்றாய் இணைந்து குரல் கொடுக்க இயலாத படி ஈகோ மற்றும் அரசியல் சுயநலங்களால் தமிழகம் சார்ந்து ஈழம் என்ற குரலை உயர்த்திப்பிடிக்க முடியாத சூழலில் தமிழகம் இன்னும் பயணிக்கிறது.

தமிழகமே ஈழத்தின் பலமும் பலவீனமும்.

6/01/2012 3:35 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter