ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Monday, December 13, 2010'நந்தலாலா' -உலகின் முதல் இருமை நிலை கலைப்படம்.எந்த ஒரு கலைப்படைப்பும் படைப்பாளி என்று கருதப்படும் ஆசிரியனால் உருவாக்கப்படுவது அல்ல. படைப்பு தன்னை தானேயும் உருவாக்கி கொள்வதும் இல்லை. இலக்கிய படைப்பு என்பதே வாசகர்களால் ஒட்டுமொத்த வாசிப்பின் முரணியக்கத்தின் மூலம் உருவாக்கிக் கொள்ளப்படுவது மட்டுமே என்பதுதான் இன்றய காலகட்டத்து புரிதல். ஒரு படைப்பு எவ்வாறு உருவாகிறது, எந்நிலையில் உருவாகியுள்ளது என்பதல்ல நமக்கு முக்கியம்; ஒரு படைப்பு சார்ந்த வாசிப்பு எவ்வாறெல்லாம் உருவாகின்றன என்பதுதான் நாம் எதிர்கொள்ள வேண்டிய படைப்பாக்க சவால். இந்தகைய புதிய கோட்பாட்டு புரிதலுடன் 'நந்தலாலா' திரைப்படத்தை அணுகுவதற்கு சுழி போடுவதே இந்த விமர்சனத்தின் நோக்கம். நந்தலாலா திரைப்பட உருவாக்கம் சார்ந்த வேலைகளை மிஷ்கின் எப்போதோ முடித்துவிட்டு படத்தை வெளியிடுவதிலான சில சிக்கல்களில் மாட்டியிருந்ததாக சொல்லி வந்தார்கள். மிஷ்கினும் கூட அப்படி சொல்லி வந்தார். ஆனால் இது ஒரு சரியான கூற்று அல்ல. அவர் படப் பிரதியை திரையிட்ட பின்புதான் திரைப்பட உருவாக்க வேலைகளில் ஈடுபடத் துவங்கினார் என்று சொல்வதே கோட்பாட்டுச் சரியான கூற்று. திரைப்படம் முதலில் வெளியாகியதும் திரை அரங்குகளில் அல்ல. முதன் முதலாக 'நந்தலாலா' என்கிற திரைப்படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்து விட்டு, எழுத்தாளர் சாரு நிவேதிதா கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் முன்னால் கட்டுரை ஒன்றை எழுதியதில்தான் திரைப்படத்தின் முதல் பிரதி உருவாகிறது. அதற்கு பிறகு தொடர்ந்து அரசல் புரசலாக விவாதிக்கப்பட்டு வந்து, ஷாஜி, மனுஷ்யபுத்திரன், சாருநிவேதிதா, பிரபஞ்சன் கலந்து கொண்ட கலைஞர் தொலைக்காட்சி கலந்துரையாடல் மூலம் மெருகூட்டப்பட்ட புதிய பிரதி உருவாகுகிறது. இந்த பிரதியின் துணையுடன் பலரால் வாசிக்கப்பட்டு, 'நந்தலாலா' என்கிற கலைப்படைப்பு ஒரு நிலையில் உருவாகி எழுவதை நாம் காணலாம். இதற்கு நேர் எதிரான நிலையிலும் 'நந்தலாலா' என்கிற கலைப்படைப்பு உருவாகிறது என்பதுதான் இந்த படைப்பின் விசித்திரமும், மாயமும். இவ்வாறாக நந்தலாலா (எதிர்)இருமை நிலைகளில் உருவாகும் உலகின் முதல் கலைத் திரைப்படம் ஆகிறது. இதை குவாண்ட நிலை திரைப்படம் என்று சொல்வது க்ளிஷேயாகவும், awkward ஆகவும் இருப்பது மட்டுமின்றி, பிழையான மெடாஃபிசிகல் பொருளையும் தர வல்லது என்பதால், பொருத்தமான புதிய சொல் கிடைக்கும் வரை இருமை நிலை கலைப்படம் என்றே அழைக்கிறேன். உலகின் இருமை நிலை கலைப்படத்திற்கு ஒரே ஒரு உதாரணமாக நந்தலாலா மட்டுமே நம்மிடையே இருப்பதால், உதாரணங்களுக்கும் மேற்கோள்களுக்கும் இந்த திரைப்படத்தை சார்ந்தே இயங்கிவேண்டிய நிர்பந்தத்திற்கு நாம் ஆளாகிறோம். இந்த இடத்தில் மெடாவாசிப்பு என்கிற கருத்தக்கத்தையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பிரதியை நேரடியாக வாசிக்காமல் வாசிப்பது மெடாவாசிப்பு. உதாரணமாக நான் இன்னமும் 'நந்தலாலா' பார்க்கவில்லை; ஆனால் பார்த்துவிட்டேன். இதென்னடா 'வரும்.. ஆனா வராது' என்கிற சினிமா வசனம் போல இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கக் கூடாது. தமிழ் சினிமா வசனங்கள் நம் அன்றாட யதார்த்தத்தை கட்டமைப்பதுடன் கொச்சையும் படுத்துவதினாலும் ஏற்படும் உளவியல் சிக்கல்தான் இது. 'நந்தலாலா' என்கிற திரைப்பட பிரதியை நான் நேரடியாக வாசிக்கவில்லை; ஆனால் விமர்சனங்கள் மூலமாக உருவாக்கப்பட்ட பல நந்தலாலா பிரதிகளை வாசித்து, எனக்கான ஒரு நந்தலாலா கலைப்பிரதியை நான் உருவாக்கியிருப்பதுதான் மெடாவாசிப்பு. முதலில் 'நந்தலாலா' 'கிகிஜுரோ' என்கிற ஜப்பானிய திரைப்படத்தின் காப்பி என்கிறார்கள். இதை போன்ற ஒரு அபத்தமான ஒரு குற்றச்சாட்டை என் விமர்சன வாழ்வில் நான் இதற்கு முன்பு கேட்டதேயில்லை. கிகிஜுரோ 1999இல் வெளியிடப்பட்டு ஜப்பானிய பார்வையாளர்களால் ஜப்பானிய மொழியிலும், சப்டைட்டில்கள் மூலமாக ஜப்பானிய மொழி அறியாத உலக பார்வையாளர்களினாலும் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படைப்பு. மாறாக கிகிஜுரோ என்ற படத்தை பார்க்காமல் -சொல்லப்போனால் அதை பற்றி கேள்விப்படக் கூட செய்யாமல்- சாருநிவேதிதா என்கிற தமிழ் எழுத்தாளர் உருவாக்கிய முதல் பிரதியில் எதிரொளித்து வெளிவந்த வாசிப்புகள் மீதான எதிர்வினைகளின் முரணியக்கத்தில் விவாதித்து பக்குவப்பட்டு வளர்ந்து சிறந்து கவனமாக உருவான அச்சு அசலான தமிழ் கலைப்படைப்பும், அதற்கு நேர் எதிரான பிரதியாகவும் அதே நேரத்தில் இயங்கும் ஒரு கலைப்படைப்புதான் 'நந்தலாலா'. இந்த மொத்த உருவாக்கமும் தமிழ் பண்பாட்டுதளத்தில் நடைபெற்றது. இதில் எங்கிருந்தய்யா காப்பி வந்தது? காப்பி அடிப்பது சாத்தியமாகாத யதார்த்தத்தில் காப்பி எப்படி அடிக்க முடியும்? இந்த கூக்குரல் நம் தமிழ் சூழல் எவ்வளவு தூரம் கோட்பாட்டு வறட்சியில் உள்ளது என்பதை நம் முகத்தில் அறைந்து சொல்கிறது. நேற்று கூட தமிழின் முக்கிய எழுத்தாள நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, காட்சிக்கு காட்சி எவ்வாறு பல இடங்களில் சுடப்பட்டிருக்கிறது என்று எனக்கு விளக்கினார். கிகிஜுரோ பார்த்து விட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் 'நந்தலாலா'வை பார்த்ததாக அவர் சொன்னார். அதுதான் பிரச்சனை என்பதே அவருக்கு புரியாததன் பிரச்சனைதான் நம் சூழலின் பிரச்சனை. கிகிஜிரோவை பார்த்து விட்டு, இன்னும் முழுமையாக உருவாகாத கலைப்பிரதியை உள்வைத்துக் கொண்டு, 'நந்தலாலா' பார்க்கும்போது, 'நந்தலாலா' உதவியுடன் அவருடைய கிகிஜிரோ படைப்புருவாக்கம் முழுமையடைகிறது. இதையே அவர் காப்பி என்று கற்பிதம் செய்து கொள்கிறார். மாறாக சாருநிவேதிதா அளித்த முதல் பிரதியின் உதவியுடன், முன்பிரதி கற்பிதம் செய்துகொண்டு, நந்தலாலா பார்த்து பரவசம் கொண்டு, பின் கிகிஜிரோ பார்த்தால், one liner மட்டுமே பொதுவாக இருப்பது கள்ளிடை போதையாக புலப்படும். நாம் தமிழ் சூழலில் உருவாக்கிய பிரதி எங்கேயோ தாண்டி சென்று விட்டதால், மிஷ்கினும் கிகிஜிரோவை தாண்டி எங்கோ சென்று விட்டதும் புலப்படும். ('நந்தலாலா'வை கிகிஜிரோவின் தழுவல் என்று கேள்விப்பட்டதால், 'நந்தலாலா'வின் மெடாபிரதியை எனக்குள் உருவாக்கிய பின், கிகிஜிரோவையும் இணையம் மூலம் மெடா வாசிப்பு செய்து படைப்பு உருவாக்கம் செய்து கொண்டேன். இனிதான் அதையும் என் லேப்டாப் திரையில் பார்க்க வேண்டும்.) ஆனால் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது, 'காப்பியடிக்கப்பட்ட நந்தலாலா' மற்றும் 'உந்துதல் மட்டும் கொண்டு ஒரிஜினலை தாண்டிய நந்தலாலா' என்று இரு(எதிர்)நிலை நந்தலாலா பிரதிகள் வாசக பிரதி உருவாக்கத்தில் இருக்கிறது என்பதையே. கலைப்படைப்பை இந்த இரண்டு நிலைகளிலும் நாம் அங்கீகரிப்பதே பின் அமைப்பியல் புரிதல் சார்ந்த ஜனநாயகமாக இருக்க முடியும். அதே போல எல்லாவகையிலும் நந்தலாலா திரைப்படம் இரு எதிர் நிலைகளில் உருவாவதை காணலாம். உதாரணமாக நந்தலாலாவை தாய்மை பற்றிய படமாக பலர் பார்கிறார்கள். அதை மறுத்து பல வாதங்களை முன்வைத்து 'இதில் எங்கிருந்து வந்தது தாய்மை?' என்று கேட்டு எதிர் நிலையில் படைப்புருவாக்கம் செய்கிறார் எழுத்தாளர் சாருநிவேதிதா. துரதிர்ஷ்டவசமாக இந்த விமர்சனம் தாமதமாக பலருக்கு வாசிக்க கிடைத்ததால், பலரால் இதை ஒட்டி இந்த நிலையில் படைப்புருவாக்கம் பொதுவெளியில்(Public sphere) நிகழ்த்த இயலாமல் போய்விட்டது; அவர்கள் பொதுப்புத்தி சார்ந்து தாய்மை பற்றிய படமாக உருவாக்கம் செய்துவிட்டார்கள். ஆனாலும் தங்கள் தனி வெளியில் (private space) அவர்கள் இந்த சாருநிவேதிதாவின் பிரதியின் மீது, மீள் பிரதிபலித்து, தங்களுக்கான மீள் படைப்பாக்கம் செய்வார்கள் என்பது நிச்சயம். அந்த வகையில் 'தாய்மை' பற்றிய படமாகவும், அவ்வாறு அல்லாத படமாகவும் இரு நிலைகளின் அதற்கான சம நியாயங்களுடன், சம சாத்தியங்களுடன் நந்தலாலா உருவாகி நிலைகொள்வதை காணலாம். இதே போன்று திரைக்கதை சார்ந்து இன்னும் அடுக்கலாம் என்றாலும் அதைவிட முக்கியம் மிஷ்கினை விட பெரிய எழுத்துக்களை சொந்தமாக்கிக் கொண்ட இளையராஜாவின் இசை. உலகம் காணாத அதிசயம் இந்த திரைப்படத்தின் இசை என்று பலர் சொல்லிவிட்டார்கள். அதற்கு எதிராக இளையராஜாவிற்கு இசை அமைக்கவே தெரியவில்லை என்கிற முதல் விமர்சனத்தை எழுத்தாளர் சாரு நிவேதிதா பொதுவெளியில் முன்வைத்தார். சாருநிவேதிதாவின் கருத்தை உள்வாங்கி எதிரொலித்து மேலும் சில வாசிப்புகள் வந்தன. (இங்கே பிரபல இசை விமரசகர் ஷாஜி சாரு நிவேதிதா மூலம் ஒரு விமர்சன பிரதியையும், ஜெயமோகன் மூலம் அதற்கு நேரெதிரான பிரதியையும் உருவாக்குவது இன்னொரு மாய மொழிவிளையாட்டு (Magical Language Game).) படம் வெளியாவதற்கு முன்னால் மிஷ்கினுடன் அளித்த பேட்டியில் இளையராராஜா 'ரீ ரெகார்டிங்கில் இசையமைப்பதை விட மௌனமாக இருக்க தெரிவதே முக்கியம்' என்கிறார். மிஷ்கின் தான் பல பக்கங்கள் எழுதி, முயற்சி செய்து, பின் வீண் என வசனத்தை கைவிட்டு, இளையராஜாவின் இசையை மட்டும் ஓரிடத்தில் இருக்க செய்ததாக சொல்கிறார். அதற்கு பதில் சொல்லும்போதும் இளையராஜா ஸைலண்டாக சில இடங்களில் இருப்பதை முக்கியமாக சொல்கிறார். ஆனால் படைப்பாளி படைப்பை உருவாக்குவதில்லை என்பதுடன், படைப்பை பற்றி விளக்கமளிக்கும் உரிமையும் இழந்தவனாகிறான்; படைப்புருவாக்கத்தில் நாம் வாசக பங்களிப்பையே மீண்டும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அமைதியாக இருக்க வேண்டிய கட்டத்தில் எல்லாம் நாராசமாக இளையராஜா இசைத்ததாக உருவான வாசிப்பையும் நாம் அங்கீகரிக்க வேண்டியுள்ளது. மீண்டும் பின் அமைப்பியல் ஜனநாயக பூர்வமாக பார்த்தோமானால், இளையராஜா இசை உலகத்தரம் என்கிற நிலையிலும், காட்சி ஒழுங்கை குலைக்கும் நாராசம் என்கிற எதிர் நிலையிலும் சம நியாயங்களுடன், சம நிகழ்தகவு கொண்ட சாத்தியங்களுடன் இயங்குவதை உணரலாம். (இங்கே 'உலகத் தரம்' என்பது தமிழ் பண்பாட்டு சூழல் சார்ந்த ஒரு சொல் என்பதை நாம் நினைவில் இருத்த வேண்டும்.) இறுதியாக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ஒரு புதிய பிரதியை உருவாக்கியிருக்கிறார். தாமதமாக வந்ததால் இந்த விமர்சனத்தை ஒட்டி படைப்புருவாக்கம் பொதுவெளியில் நடைபெறாவிட்டாலும், வாசக தனி வெளியில் (private space) படைப்புருவாக்கம் உருவாகி எழுவது உறுதி. 'நந்தலாலா' உலகின் முதல் இருமை நிலை கலைப்படம் என்கிற கூற்றை நிகழ்த்திக் காட்ட (demonstrate) இன்னும் பல கோட்பாட்டாக்கங்கள் என் கைவசம் உள்ளன. குறிப்பாக குறியீட்டு தளத்தில் நிகழ்த்துவது எனக்கு வசதியானது என்றாலும், அதை நிகழ்த்தி காட்ட முயல்வது ஒரு புத்தகம் அளவிற்கு நீண்டுவிடும் என்பதால் விரிவஞ்சி நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் நான் நிகழ்த்துவது அல்ல கூற்று. வாசககர்கள் வாசித்து உருவக்குவதுதான் படைப்பு, அதன் அடிப்படையில் முன்வைப்பதுதான் கூற்று என்பதால், ஒரு வாசகனாக நந்தலாலாவை பார்த்து விட்டு மீள்நிகழ்த்துதல் நிகழ்த்தும் முடிவில் உள்ளேன் |
1 Comments:
i am afraid this article is written with the sense of humor.
Post a Comment
<< Home