ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Sunday, March 14, 2010டீஎம்மெஸ்! (TMS)பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் உடல் நலம் குன்றி சிகிச்சையில் இருந்ததை சொன்ன நல்லவர்கள், அவர் தேறிவிட்டாரா என்கிற நல்ல செய்தி பற்றி சொல்லவில்லை. தேறி அவர் மீண்டும் நலமாக இருக்கிறார் என்று நம்புகிறேன். என்னை பற்றியும் அபிப்பிராயம் வைத்திருக்கும் சிலரில் பலருக்கு நான் ஒரு தீவிர இளையராஜா ரசிகன் என்பதாக ஒரு கருத்து இருக்கிறது. அதிலும் விமர்சனமற்ற ரசிகன் என்பதாகவும் ஒரு நினைப்பு இருக்கிறது. ரசிகன் என்பதன் பொருள் என்ன, அவ்வாறு இருப்பதில் என்ன பிரச்சனை, அதில் விமர்சனமின்றி இருப்பது எப்படி, இவையெல்லாம் எனக்கும் பொருந்துமா என்ற கேள்விகளுக்குள் போகாமல் சொல்வதென்றால், நான் என்னை இளையராஜாவின் ரசிகன் என்றே முதலில் நினைத்து கொள்ளவில்லை. இளையராஜாவை இந்திய திரை இசை உலகில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு ஜீனியஸாக கருதுகிறேன். அதை புரிந்து உள்வாங்கி கொண்டிருப்பதாக நினைக்கும் என்னால், சில அலைவரிசைகளுக்கிடையில் இருப்பவர்களுக்கு விளக்கவும் முடியும் என்றும் தோன்றுகிறது. ராஜா ஒரு தனித்த ஜீனியசாக இருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் உடையதாகவும் நினைக்கிறேன். ராஜா மீதான பல தாக்குதல்கள் நியாயமற்றவை என்று நினைப்பதாலும், வேறு சில தாக்குதல்களில் 'அரசியல் சரி'களின் வன்முறை இருப்பதாகவும் நினைப்பதால் அவற்றை எதிர்க்கிறேன். இவ்வாறெல்லாம் கருதும் காரணத்தால் ராஜாவின் ரசிகனாகிவிட முடியாது என்றே நினைக்கிறேன். ராஜாவின் இசை வியக்க வைக்கிறது; அது உருவான விதம் எல்லாவித புரிதல்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. இவ்வாறு சொல்வதற்கும் மிகவும் நேசிப்பதற்கும், மனதுக்கு நெருக்கமாக உணர்வதற்கும் மிகுந்த வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வகையில் நான் என்னை எம்கேடியின் ரசிகனாக, முகமத் ரஃபியின் ரசிகனாக, பழைய ஹிந்திப்பாடல்களின் ரசிகனாக, மெல்லிசை மன்னரின் ரசிகனாகவே உணர்கிறேன். எம்.எஸ்.வியின் இசை அளவிற்கு எனக்கு ராஜாவின் இசை மனதுக்கு நெருக்கமானது இல்லை என்றுதான் உணர்கிறேன். இந்தவகையில் எல்லாவற்றையும் விட, இந்திய திரை இசையில் எனக்கு மிக நெருக்கமானவர் TMS. அழகியல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டிஎம்மெஸ்ஸையே நான் கொண்டாட விரும்புகிறேன். தற்போது பிரபலமாக இருக்கும் ஒரு பிண்ணனி படகர் ஒருவர் சொன்னதாக என் நண்பர் ஒருவர் சொன்னார். தமிழ் சினிமா இசையில் எல்லா பாடகர்களையும் தன்னால் ரசிக்க முடிகிறது - டி.எம். சௌந்தர்ராஜனை தவிர. டி.எம்.சௌந்தர்ராஜனை கேட்கும் போது தமிழ்நாட்டு வெயிலும், வரட்சியும் மட்டுமே தனக்கு நினைவுக்கு வருவதாக அந்த பிரபல பாடகர் சொன்னதாக் நண்பர் சொன்னார். என்னை போலவே ஒரு தீவிர டி.எம்.எஸ். ரசிகரான நண்பர் இதை மிகுந்த வியப்புடன் சொன்னார். ஆனால் ஒருவகையில் என்னால் அந்த பிரபல பாடகரின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது. பாலைத்தன்மையாக டிஎம்மெஸ்ஸின் குரலை அவர் சொன்னது என் புரிதலுக்கு உட்பட்டே இருக்கிறது. ஏனெனில் அப்படி ஒரு கருத்து எனக்கே சின்ன வயதில் இருந்தது. தமிழ் சினிமா பாடல் ரசனையற்ற பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட என்னை எஸ்பிபியின் குரலே சினிமாப் படல் பக்கம் கவர்ந்து இழுத்தது. சுஜாதாவை எழுத்து மேதை என்ற ஒரு காலகட்டத்தில் நினைத்திருந்தது போல், எஸ்பிபியை விட சிறந்த ஒரு பாடகரை எண்ணி பார்க்க முடியாத கட்டத்தில் இருந்தேன். மேலும் திரைப்பட பாடல்களை கவனம் கொண்டு கேட்க துவங்கிய கட்டத்தில் டிஎம்மெஸ் பாடிய பாடல்கள், இன்றைக்கும் கூட என் சகிப்பு தன்மையை சோதனை செய்வதாகவே உள்ளது. இந்த துவக்க நிலையிலிருந்து வழுவி நழுவி என்றைக்கு டிஎம்மெஸ்ஸை தீவிரமாக ரசிக்கத் துவங்கினேன் என்பது சொல்ல முடியாமலே இருக்கிறது. ஆனால் அந்த மாற்றத்திற்கு 'தரை மேல் பிறக்க வைத்தான்' பாடல் திடீரென அதிர்வு கொண்டு ஆட்கொண்ட ஒரு மாலைக்கு முக்கிய பங்கு உண்டு என்பது மட்டும் நினைவில் இருக்கிறது. சுமார் 12 வருடங்கள் தமிழகத்திற்கு வெளியேயான இந்தியாவில் வாழ நேர்ந்த போது, தமிழ் சினிமா பாடல்களும் கூடவே வந்தது. அப்போதே டிஎம்மெஸ்ஸின் தீவிர ரசிகனாக இருந்த எனக்கு, டிஎம்மெஸ்ஸை விடுதியறைகளில் கேட்பதும் (பொதுவாக கத்தி பாடும் பழக்கம் உள்ள எனக்கு) பாடுவதும் மிக பெரிய எக்சிஸ்டென்ஷியலிச பிரச்சனையை உருவாக்குவதாக இருந்தது. இன்று உலகின் பல பாகங்களை காண நேர்ந்த எனக்கு, வட இந்தியர்களிடம் உள்ளது போன்ற காரணமற்ற மொழி சார்ந்த அர்ரகன்ஸை வேறு எங்கும் கண்டதில்லை. என்னை போல சுயமரியாதையையும், சுய அடையாளத்தையும் பேணும் எவரும் தமிழகம் தவிர்த்த இந்தியாவில் அவமதிக்கபட்டதான உணர்வை கொள்ளாமல் வாழ்வை கழித்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. வட இந்தியர்களால் எந்த விதத்திலும் அடையாளம் காண இயலாத ஒரு குரலாகவே டிஎம்மெஸ்ஸின் குரல் இருந்தது. இந்த வட இந்திய மக்களில் நல்லவர்கள் என்று ஒரு வகையினரை பிரிக்கலாம். சாம்பாரில் கூட சுவை இருக்க கூடிய சாத்தியம் உள்ளதாக எண்ணுபவர்கள். அப்படி நண்பர்களான பலருக்கும் கூட டிஎம்மெஸ்ஸை சகித்து கொள்ள முடியவில்லை. பலரும் பொதுவாக புழங்கும் என் அறையில், மற்றவர்களின் இருப்புக்கு ஏற்ப ஹிந்தி அல்லது மேற்கத்திய இசையை போடுவதா, இளையராஜா பாடலை போடுவதா, டிஎம்மெஸ்ஸை போடுவதா என்று நான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு பிடித்த இசையை எல்லாம் என்னால் ரசிக்க முடிந்தது; அதன் நுட்பங்களை பகுத்தறியும் திறனும் (சில நேரங்களில் அவர்களை விட மிகுதியாக) வாய்க்கிறது. ஆனால் அவர்களால் எங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் சகிக்க கூடியதாக இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. இதை புரிவதை விட இந்த யதார்த்தம் ஒரு வித தாழ்வு மனப்பான்மையை மன ஆழத்தில் உருவாக்குவதாக இருக்கிறது. ஆஸ்கார் வாங்குவதையும், இந்தி சினிமாவில் தடம் பதிப்பதையுமே சாதனையின் நிருபணமாக கொள்ளும் அடிமை மனநிலை நம் கூட்டு உளவியலில் கலந்ததுதானே. டிஎம்மெஸ் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஆனால் தமிழ் சூழலில் கூட டிஎம்மெஸ்ஸை அறவே பிடிக்காத, டிஎம்மெஸ்ஸின் குரலை சகிக்காத பலர் இருப்பதை அறிந்த எனக்கு மிக முக்கியமான பதற்றம் வந்தது. என் வாழ்க்கை துணையாக போகும் பெண்ணிற்கு டிஎம்மெஸ்ஸை பிடிக்காமல் போய்விட்டால்? இந்த விஷயத்தை உறுதி செய்துவிட்டே எந்த தீர்மானத்தையும் எடுக்க வேண்டும் என்கிற நிலைபாட்டுக்கு வந்தேன். இருந்தாலும் மற்றவர்கள் முற்றிலும் சகிக்காத, நாம் மிகவும் நேசிக்கும் விஷயத்தின் முரண் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. டிஎம்மெஸ் குரலை பாலையை ஒப்பிட்டு விவரித்த பாடகர் போல, பலர் தமிழ் மொழியின் ஒலியை கேட்பது ஒரு பாத்திரத்தில் கல்லை போட்டு உருட்டுவது போல கருதும் மனநிலையை கொண்டதாக தோன்றியது. (தமிழ் குறித்த இந்த உவமையை தமிழகத்திற்கு வெளியே பலர் கேட்டிருக்கலாம்.) ஆகையால் எனக்கான தேடல் கேள்வியாக, தமிழகத்தில் பிறக்காமல், தமிழின் ஒலியையே கேட்டிராத ஒருவரால் டிஎம்மெஸ்ஸின் குரலை ரசிக்க முடியுமா என்பது. இந்த தேடலின் விடை Tim gendron என்கிற ஒரு அமேரிக்க கணிதவியலாளனும், ராக் இசைஞனுமானவனுடனான நட்பின் போக்கில் கிடைத்தது. இந்திய இசை குறித்த தேடலில், மேற்கத்திய தாக்கம் அதிகமுள்ள (ஆமாம்!) தமிழ் திரையிசை, ஹிந்தி இசையை விட , அதிகமாக டிம்மை ஈர்த்தது ஆச்சரியமில்லை. ஆனால் டிஎம்மெஸ்ஸின் குரலும், பாடும் விதமும் அவனை கலங்க அடித்த விஷயம்தான் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நான் போட்டு காட்டிய டிஎம்மெஸ்ஸின் சிறந்த பாடல்களை கேட்டு 'oh, this guy is too good!' என்று அவன் நொந்து வியக்காத சந்தர்ப்பமில்லை. என்னை விட டிஎம்மெஸ்ஸை அவன் அதிகம் ரசித்து வியந்ததாக எனக்கு தோன்றியது. என் ரசனையை நானே தீர்மானித்து கொள்ளும் எல்லா குணங்களும் எனக்கு இருந்தும், டிம் டிஎம்மெஸ்ஸை ரசித்தது என் தேடலுக்கான விடையாக, நாம் ஏதோ இரும்பு சுவர்களுக்குள்ளான கலாச்சரத்தை கொண்டிருப்பதான மனநிலையையிலிருந்து விடுவித்தது. அட பிரச்சனை நம்மிடம் இல்லை, இவன்களிடம்தான் என்கிற நிலைபாட்டிற்கு கொண்டு வந்தது. இது நடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இடையில் விருப்ப பட்டியலில் கீழே போன எஸ்பிபி மீண்டும் மறு பரிசீலனைகளில் மிகவும் பிடிக்க தொடங்கியது, தேடலில் ஒரு பகுதியாக ரஃபி அவ்வப்போது மாபாடகன் என்கிற இடத்தை என்னுள் பெற்று கொண்டிருந்தார். சுமார் இரண்டு வருடங்கள் முன்பு இகாரஸ் பிரகாஷுடன் பாரில் மதுவருந்திக் கொண்டிருந்த போது சொன்னேன் "டிஎம்மெஸ் மாதிரி ஒரு பாடகன் உலகத்திலேயே இல்லை' என்றேன். இதை அந்த நேர உணர்வெழுச்சியாக அல்லாமல், நான் பல ஆண்டுகளாக அசை போட்டு கண்டுபிடித்த புது உண்மை போன்ற ஒரு முடிவாக சொன்னேன். நான் சொன்னதன் காரணங்களை, பின்னணிகளை அவர் அன்றய உரையாடலில் புரிந்து கொண்டிருக்க முடியாது. நான் சொன்னதன் தீவிரமும் ஆழமும் அவரை அடைந்திருக்கும் என்றும் எனக்கு தோன்றவில்லை. அதற்கு பிறகு இன்னும் அந்த கருத்து மேலும் மேலும் உறுதியாகி போனாலும், இன்றைக்கும் அதை விளக்கங்களுடன் சொல்ல முடியாது. ஆனால் அது மிகுந்த யோசனைக்கு பின் நான் வந்த முடிவு. இதே முடிவுக்கு வரும் இன்னொருவரால்தான் இதை புரிய முடியும். அவருக்கு நான் விளக்கி சொல்ல இதில் ஏதாவது இருக்க முடியுமா? |
13 Comments:
//தேறி அவர் மீண்டும் நலமாக இருக்கிறார் என்று நம்புகிறேன். //
ஆம் ..நலமாக இருக்கிறார் என்ற செய்தி வந்தது.
// இவ்வாறெல்லாம் கருதும் காரணத்தால் ராஜாவின் ரசிகனாகிவிட முடியாது என்றே நினைக்கிறேன்.// இதை ஒரு மாதிரி நான் ஊகித்தேன். அதனால் என்ன...மிகவும் நேசிப்பதற்கும், மனதுக்கு நெருக்கமாக உணர்வதற்கும் உரித்தான இசையை கொடுத்த, கொடுக்கும் ஒரு கலைஞன் எந்த வித கருத்து வேறுபாடின்றி ஒரு ஜீனியசாகவும் அமைந்து விடுவது என் போன்ற ரசிகர்களின் பெரிய பேறு அல்லவா?....
நான் இளையராஜாவை வியந்த்தோதுவதற்கு ஒரு காரணம் அவரின் மேலை மற்றும் நமது நாட்டுப்புற அல்லது கர்நாடக கலப்பிசையோ காரணம் அல்ல என்னை பொறுத்த வரை தமிழ் மண்ணுக்கு ஒரு ஆன்மா உண்டென்றால் அதை இசையின் வழியாக கண்டடைந்த ஒரு கலைஞன் ராஜா மட்டுமே... அதை எந்த விதமான அவரின் பரிசோதனை முயற்சிகளிலும் என்னால் அடையாளம் காண முடிந்திருக்கிறது அது மட்டுமே அவரின் இசையோடு என்னை ஒன்றிணைக்கக வைத்த ஒரு புள்ளி.
இதை சொல்லும் வேலையில் TMS அவர்களின் குரல் என்பது ஒரு சில விதி விலக்குகளுக்கு அப்பால் தமிழர்களால் மட்டுமே அடையாளம் காணக்கூடியது என்று தோன்றுகிறது... நானும் அவரின் பாடல்களுக்கு ஒரு ரசிகன்தான்....( நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்... கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா... என்னும் எத்தனையோ பாடல்கள்....)
பள்ளிப் பருவத்துல எனக்கும் கூட, டி.எம்.எஸ் பாட்டு பிடிக்காது... அன்னை ஓர் ஆலயத்துல, அம்மா நீ சுமந்த பிள்ளை பாட்டை கேட்டுட்டு, ரஜினிக்குப் போய் இந்த கெழவனான்னு கன்னா பின்னான்னு திட்டியிருக்கோம்.. அதுவுமில்லாம, அவரும் நான் இருந்த அதே மந்தைவெளியிலே தான் இருந்தார். அடிக்கடி கண்ணுல படுவார். அவரோட டிரெஸ், பந்தா எல்லாம் பாக்க காமெடியா இருக்கும் ( அதே ஏரியாவிலே, நான் இருந்த தெருவிலே, திருச்சி லோகனாதன் & சன்ஸ், இன்னும் கொஞ்சம் தள்ளி சீர்காழி கோவிந்தராஜன் இருந்தாங்க. இவங்க மேலயும் அப்ப எனக்கு பெரிய மரியாதை இல்லை. பின்னாளிலே, கல்லூரி ஸ்ட்ரைக்கின் பொழுது, ஹாஸ்டல்லேந்து துரத்தி விட, நடுராத்திரி வேலூர் வரை நண்பர்களுடன் லாரிலே வந்த பொழுது டூஇன் ஒன்ல கேட்ட, 'என்னை விட்டு ஓடிப் போக முடியுமா' 19 வருஷம் கழிச்சு இன்னி வரைக்கும் நெஞ்சை அறுத்துட்டு இருக்கிறது தனிக்கதை) . அந்த காலகட்டத்துல எஸ்பிபி தான் டாப்ஸ்டார். சங்கராபரணம், ராஜபார்வைன்னு, கமலுக்கும் ரஜினிக்கும் மோகனுக்கும், சிவகுமாருக்கும் பட்டையக் கிளப்பிட்டு இருந்த காலகட்டத்துல, கத்திப் பாடற டி.எம்.எஸ் எல்லாம் ஒரு பாடகனான்னு நானும் நினைச்சிருக்கேன்.
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமாதான், நான் டி.எம்.எஸ் கிட்டப் போய் விழுந்த முதல் பாட்டுன்னு நினைக்கிறேன். அந்தப் பாட்டு இதுக்கு முன்னாலே காதுல விழுந்திருக்கு. ஆனா, பாட்டு ஆரம்பிச்சதும், சட்டுன்னு விவித்பாரதிக்குத் தாவிடுவேன். கேரண்டியா, நக்கல் சிரிப்போட ஒரு எஸ்பிபி பாட்டு ஓடிட்டு இருக்கும்பொழுது இத எவன் கேப்பான்னு ஒரு எண்ணம். முதல் முறையா 'கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம்' னு, இதுவரைக்கும் கேட்காத ஒரு டெக்ஸ்ச்சர்ல, பிசையறாப்பல ஒரு எமோஷன்ல பாடிக் கேட்டதும், அப்படியே தொபுகடீர்னு கீழே விழுந்தது நினைவில் இருக்கு. இப்படி இளையராஜாவின் குரலில் முதன் முதலாக விழுந்தது, மெட்டிலே, ராகம் எங்கேயோ', சுசீலாவுக்கு ' கங்கைக் கரைத் தோட்டம்', விஸ்வநாதனுக்கு, சொல்லத்தான் நினைக்கிறேன், ஜென்சிக்கு தெய்வீக ராகம், சைலஜாவுக்கு, தவிக்குது தயங்குது, மலேசியா வாசுதேவனுக்கு தென்னங்கீற்றும் தென்றல் காற்றும், வாணிஜெயராமுக்கு ப்ரோசேவா (சங்கராபரணம்) etc.... ( இந்தப் பட்டியல் ஆளாளுக்கு மாறுபடும்னே எனக்கு கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சது) இந்த குறிப்பிட்ட பாடல்களைக் ஒழுங்காக் கேக்க்றதுக்கு முன்னாலே, அவங்க மேல பெருசா ஒரு மரியாதை இருந்ததில்லை.. கேட்ட பிறகு, விட்டுப் போன பாடல்களைத் தேடி எடுக்கிறது ஒரு ஒரு சுகம்.
மத்தவங்களை எல்லாம் ஒரளவுக்குக் கேட்டு, முடிச்சுர முடியும்னாலும், டி.எம்.எஸ் கிட்ட அது கொஞ்சம் சிரமம். அவ்வளவு பாடியிருக்கார். ராத்திரி பதினோரு மணிக்கு மேலா, டிவி முன்னாலே உக்காந்திருக்கும் போது, இந்தப் பாட்டுதானே, நமக்குத் தெரியாதா, ன்னு தெனாவட்டா கேட்கும் பொழுது, திடுதிப்புன்னு, சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்னு முகத்திலே வந்து அடிக்கும். செஞ்சுகிட்டு இருக்கிற வேலையை விட்டுட்டு, பாட்டை மட்டும் கவனமாக் கேட்டீங்கன்னா புதுசா ஒலிக்கறது புரியும். முடிஞ்சதும் கொஞ்சம் முன்னாலே போனா, 'மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும் சுந்தர வடிவே உன் துணை காணவா', கொஞ்சம் பின்னாலே வந்தீங்கன்னா, எழில் வானமெங்கும் பலவண்ண மேகம், அழகான வீணை ஆனந்தராகம், எதிர்காலக் காற்று, எது செய்யும் என்று அறியாத உள்ளம், அது தெய்வ வெள்ளம்'...
டிம்.எம்.எஸ் ஒரு மாதிரி கடல்...முழுசா குளிச்சு முடிக்க நாளாகும்.
ஜோ, கவி, மற்றும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
பிரகாஷ், ரொம்ப நாளைக்கு பிறகு நீண்ட பின்னூட்டம். 80களில் வயசுக்கு வந்த அனைவருக்கும் இந்த வகை அனுவம் ஒன்று இருக்கும் என்று தோன்றுகிறது.
பட்டாக நெய்தது,
எனக்கு எம்ஜியார், சிவாஜி இருவருக்குமான குரலும் ஒரு முழுமையடைந்த இரு பாடகனின் குரலாக தெரிகிறது. அருள் சொன்னது மதிரி தமிழின் அகமும், புறமும் போல. ஜெய் சங்கருக்குதான் ஒரிஜினல் குரலில் பாடியதாக டிஎம்மெஸ்ஸே ஒரு பேட்டியில் சொன்னதாக எனக்கு ஞாபகம். நீங்கள் சொல்லும் க்ளாசிக்கை அடக்கிய எல்லா முருகன் பாடல்களின் குரல் தமிழின் ஆன்மீக அடையாளம்.
பல வருடங்களாக டிஎம்மெஸ்ஸின் குரலை கேட்டு விட்டு அவரது ஆரம்ப கால குரல் ஒன்றை கேட்டு திடுக்கிட்டு விட்டேன். சில நொடிகளுக்கு மட்டுமே வரும் டிஎம்மெஸ் குரலை கீழே கேட்கலாம்.
http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/thaathi.rm
அழகென்ற சொல்லுக்கு முருகா என்னும் பாடல் எங்கள் ஊர் திருவிழாவில் ஆரம்பத்தில் ஒலிக்கும் , நாஸ்டால்ஜிக் குரல்.இந்த தலைமுறை பலருக்கு டிஎம் எஸ் பாடல்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
T.M.S is some kind of Uniq genius. I have heard almost all Singers including Md.rafi, kishore kumar, Yesudas and S.B.B but this TMS is uncomparable, the manlines of his voice and texture is, find no words to describe.
T.M.S is some kind of uniq genius and I agree with the view he is the best in the world.Manlines and texture of his voice are some thing i find no words to describe.
உண்ணிமேனன் ஒரு பேட்டில சொன்னார், 'அவர் பட்டுல தமிழ்ப் பண்பாடு தெரியும்'னு. அப்பத்தான் நாம ஏன் இவ்வளவு நெருக்கமா உணர்றோம்னு எனக்கு உரைச்சது.
நான் வாழ வைப்பேன் படத்துல முதல் இரண்டு பாட்டு பாலு(ன்னு நினைக்கிறேன்), அடுத்து 'எந்தன் பொன்வண்ணமே' சட்டுனு நிமிர்ந்து படம் பார்த்தேன்.
இனிமையான குரல்ல பாடுறேன்னு ரொம்ப மென்மையாப் பாடுறவுங்க பெருகினதுக்கப்புறம் எப்பவாச்சுந்தான் அவர் பாடலைப் போன்ற ஆண்குரல் பாடல்கள் கிடைக்குது.
http://www.tmsounderarajan.org/
பின்னூட்டம் பெறவும் :-)
முகவை மைந்தன் பின்னூட்டத்திற்கும் இணைப்பிற்கும் நன்றி.
The lead write-up is a good read. The syntax is as complex as the thoughts of the author on TMS, in particular, and music, in general. A single read will certainly not be enough to understand the thought process the author/writer went through before he arrived at the right decision that "there is no playback singer like TMS in the world".
Yes it will be difficult for pseudo intellectuals to appreciate TMS, while ironically ordinary and common people with a heart revel in his music (songs). That is one of the reasons for his long and dominant rein in Tamil Filmdom. It is his music sense, skills, god-given voice and talent that shot him to the top though the introvert, reticent and forthright singer had more enemies than friends inside the film field. His songs are short, sweet and crisp, more like Thirukurals—confusing at the first sight but offering a world of knowledge and emotion once into the mood of the songs.
Even MGR the great found it hard to dislodge TMS from the pedestal, long after the singer had passed his prime. His efforts to bring into focus spb and kj succeeded partially. When the crucial election was around and with the failure of movies like pallandu vazhga and navaratinam, MGR safely compromised himself and bowed to the demands of TMS that he would be singing at least 80% of the propaganda songs at a commanding (demanding) price.
Great Sivaji initially did not merit TMS but when the rivalry picked up heat at the start of 60s, he stuck to TMS even to the extent of dismissing the suggestions and newer attempts of music directors to use different singers. I have heard people say that Sivaji had confided to his best friend Nightingale Lata Mangeshkar that he owed at least 40% of his success to TMS.
Apparently music directors were not happy with the way TMS dominated the songs with his style of singing. Still they had no choice because the songs were a hit and continue to be so with people who have an ear for music. Probably the only music director who gave TMS full freedom to sing was K V Mahadevan. Take any song from that combination, you will find TMS at his vocal best.
As Yazh Sudhakar has said in his Soundarabharanam, TMS’s songs (music) will live as long as air and tamil are there in the universe. Abdul Hameed rightly described TMS as the Sun in the world of music and the only one. With God’s grace, TMS is here to stay forever
KPS, Thanks for the comment.
Post a Comment
<< Home