ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, December 16, 2009

sinuses-3

முந்தய பதிவுகள்.


Sinuses-1


sinuses-2


எஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சுதான் இந்த நிகழ்வின் மிகப்பெரிய ஆபாசம் என்று நான் கருதுகிறேன்.  ஆனந்த் என்கிறவர் சாருவிற்கும், சாரு ஆனந்திற்கும் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள்.  இவை சாருவின் இணையதளத்தில் வெளிவந்தது. கடித பரிமாற்றம் நடந்து கொண்டிருந்த போது ஆனந்தை வெகுவாக புகழ்ந்தும், அவரது சமூக அக்கறைகள், நுண்ணுணர்வுகள் பற்றி சிலாகித்தும் தனது வழக்கமான (இந்த இடத்தை நிரப்பவும்) வேலைகளை சாரு செய்தார். பின்னர் என்ன பிரச்சனை என்று முழுவதும் புரியவில்லை. ஆனந்த் துரோகம் செய்துவிட்டதாகவும் ஜெயமோகனுடன் சேர்ந்து விட்டதாகவும் சொன்னார்; தான்தான்   ஆனந்தின் கடிதங்களை பல மணிநேரம் உட்கார்ந்து மெருகேற்றி தளத்தில் இட்டதாகவும் சொன்னார். அவரை அயோக்கியனாக, துரோகியாக சித்தரித்தார்; வளைக்க நினைக்கும் மலைப்பாம்பு என்கிற கலைஞர் வசனங்கள் ஆங்கிலத்தில் வந்தது. ஆனந்தின் சில கடிதங்கள் ஜேமோவின் தளத்திலும் வந்தது.


இவ்வாறாக நடந்த பின், சாருவின் பெயரை அட்டையில் தாங்கி   ̀மலாவி என்றொரு தேசம்' என்கிற தலைப்பில் புத்தகம் வெளிவரும்போது எழுந்திருக்க வேண்டிய நியாயமான கேள்வி, இந்த கடித பரிமாற்றங்கள் ஆனந்தின் விருப்பத்துடன் உரிய அனுமதி பெற்று வெளிவருகிறதா என்பது. (அவரிடம் முன்னுரை வாங்கி வெளிவருவதுதான் உண்மையான பொருளில் நேர்மையான நாகரீகமான ஒரு செயல்.)  இந்த இயல்பான சின்ன கேள்விகூட யாருக்கும் எழவில்லை. ஆனந்தின் விருப்பமில்லாமல்/அனுமதியில்லாமல் வெளி வந்தால் அதற்கு மோசடி என்று பெயர். இது குறித்து எங்கும் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தெளிவு செய்யப்பட்டதாகவும் எனக்கு தெரிந்து இல்லை. இது போதாது என்று ஆனந்தை -அவர் கடிதங்களை முன்வைத்து - எஸ்ரா மிகவும் கேவலப்படுத்தினார்.  சரி, அப்படி என்றால் தொடக்கத்தில் ஆனந்தை சாரு புகழ்ந்து எழுதியது எல்லாம் ஜால்ராதானே? அப்படி செய்துவிட்டு திட்டுவது கேவலமான செயல் அல்லவா? சாரு தான் உட்கார்ந்து பலமணிநேரம் கண்விழித்து அந்த கடிதங்களை மெருகேற்றியதாக சொல்கிறார்.  சாருவால் மெருகேற்றிய பிறகும் அது சாதாரணமாகத்தான் இருக்கிறது என்கிறாரா எஸ்ரா? (ஒரு கடிதத்தை பிழை திருத்தலாம். சில வார்த்தைகளை மாற்றி பொருத்தமான வார்த்தைகளை இடலாம். அதற்கு மேலும்  'மெருகேற்றினால்'  அது எப்படி எழுதியவரின் கடிதம் ஆகும்? ஒருஜினல் மற்றும் மெருகேற்றிய வடிவம் இரண்டையும் பார்த்தல் ஒழிய இந்த சமாச்சாரத்தை என்னால் புரிந்து கொள்ளமுடியாது.) 


ஒரு எழுத்தாளனுக்கு தேவையான எந்த தார்மீகமும் இன்றி, எஸ்ரா ஒரு அரசியல்வாதியை போல நடந்து கொண்டார் என்றுதான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.  சென்னையில் உட்கார்ந்து கொண்டே மாலாவியை பற்றிய சித்திரத்தை சாரு அளித்ததாக எஸ்ரா நீட்டியதெல்லாம் அதீத புகழச்சியாகத்தான் தெரிகிறது. இணையத்தை வைத்து செய்யக்கூடிய வேலைதான். அதை திறம்பட செய்பவரை பாராட்டுவதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் சாரு இங்கிருந்து கொண்டு அந்த தேசத்தின் ஆன்மாவை படம் பிடிக்கும் ஒரு பெரும் கலைஞனாக மாறியதாகவெல்லாம் எனக்கு தோன்றவில்லை, ஒரு நாளும் தோன்றாது. அவரிடம் வெளிப்படுவது தகவல்கள் மட்டுமே என்பது என் அபிப்பிராயம். தேவை பட்டால் வேறு  விஷயங்களை வைத்தும் இதை விளக்கி என்னால் பேசமுடியும்.


எனக்கு எஸ்ரா ஏன் கீழிரங்க வேண்டும் என்று உண்மையில் புரியவில்லை. இதன் மூலம் அவர் அடைந்த பலன் என்ன என்றும் புரியவில்லை. சாருவை மட்டும் அதீதமாக பாராட்டிவிட்டு, ஆனந்தை கேவலப்படுத்தாமல் இருந்தால் கூட இப்படி தோன்றியிருக்காது. (உதாரணத்திற்கு சாருவிற்கும் ஆனந்திற்கும் உறவு பழைய நிலைமையிலேயே இருந்து, ஆனந்த் மேடையில் அமர்ந்திருந்தால் எஸ்ரா என்ன பேசியிருப்பார் என்று யோசிக்க வேண்டும்.)


மிஷ்கின் பேசியதை சாரு வீடியோ பதிவு ஏற்றினால் பாருங்கள். சுவாரசியமாக இருக்கும்.  சாருவை படித்ததில்லை என்றார். அதனால், சாரு நந்தலாலா பற்றி எழுதியதற்கு பதிலாக அவர் பேசியது எல்லாம் ஓகே.  அவர் பாராட்டினார், இவர் திரும்ப பாராட்டுகிறார்; நல்லது, இருக்கட்டும். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்கள் சம்பந்தப்பட்ட குத்து பாடல்களால் அடையாளம் பெறுவதை நகைச்சுவையாக கூறினார். இளயராஜாவை சந்தித்த போது ' நானும் ஒரு குத்து பாட்டு போடவா?' என்று கேட்டதாக சொன்னார். ராஜாவை கடவுள் அளவிற்கு புகழ்ந்து விட்டு (தேடி பார்க்க: நந்தலா குறித்த செய்திகள்), இந்த கூட்டத்தில் இப்படி பேசியதை எப்படி பார்ப்பது என்று யோசிக்கவும். 


சாருவின் ஏற்புரை ரொம்ப மொக்கை என்று அவரது ரசிகர்கள் கூட ஒப்புகொள்வார்கள் என்று நினைக்கிறேன்- (கொள்ளா விட்டால் நான் எதுவும் செய்யமுடியாது). தனது குடிப்பழக்கம் பற்றிய அச்சு பிச்சு ஜோக்குகள், நைனா இறந்த போதும் எழுதியது போன்ற ஏற்கனவே எழுதிவிட்ட விஷயங்கள் என்று போனது. பருத்திவீரனில் ஒரு சாகச கதாநாயகத்தன்மை இருப்பதையும், வெயில் பட நாயகனுக்கு சபால்டர்ன்தன்மை இருப்பதையும் தான் மிஸ் பண்ணி விட்டதாக சொன்னார். எப்படி மிஸ் பண்ணியதை சரியாக இப்போது கண்டுபிடித்தார் என்கிற கேள்விக்குள் போக வேண்டாம். இந்த  சின்ன விஷயத்தை  ̀மிஸ் பண்ணி', வருடங்கள் கழித்து ஞானம் அடைபவரின் சினிமா விமர்சனங்களை எவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்வது என்பதுதான் அறிவுப்பூர்வமான நியாயமான கேள்வியாக இருக்கும்.  ̀வெயில்' தமிழின் முக்கியமான படங்கள் வரிசையில் வரவேண்டிய சிறந்த படம் என்பது என் கருத்து (பதிவுலக நண்பர்கள் சிலருடன் பேசும்போது இதை சொல்லியிருக்கிறேன்) . சாரு கிளி ஜோசியம் சொல்வது போல் இஷ்டத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் எழுதுவதில் இந்த நல்ல திரைப்படத்தை  ̀மிஸ் பண்ணியது', ஆச்சரியப்பட  எதுவுமில்லாத ரொம்ப யதார்த்தமான விஷயம் என்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. 


அடுத்து இளையராஜா பற்றி வழக்கம் போல அவதூறு. கதாரை, பாப்மார்லேயை (அவருக்கு பெயர் மறந்து விட்டது, கூட்டத்தில் எடுத்து கொடுத்தார்கள்) குப்பை என்று சொன்னார் என்று கடந்த 4 வருடங்களாக பாடிவரும் அந்த ஒரே பழைய பல்லவி. மனுசன் அலுக்க மாட்டார் போலும். கையில் வேறு ஆயுதம் இல்லாத போது வேறு வழி.  இது குறித்து ராஜா அவ்வாறு பேட்டி கொடுத்ததாக சொல்வது  மோசடி என்று நான் எழுதியிருக்கிறேன். ராஜாவின் கருத்தை அப்படி பார்க்க முடியாது என்று எழுதிய பதிவை அவருக்கு அனுப்பியிருந்தேன். நாராயணனும் அவருக்கு தகவல் சொல்லியிருந்தார். ஆனால் விமர்சனங்கள் இருப்பதை கண்டுகொள்ளவே கொள்ளாமல் மீண்டும், மீண்டும் பழைய பல்லவியை சாரு பாடுவது ஒன்றும் புதிது அல்லவே. அவரின் விமர்சனத்தை கணக்கில் கொண்டு பேசும் தன்மையை பற்றிதான் பதிவின் தொடக்கத்தில் எழுதியது போல தெரிந்த விஷயம்தான்.  


ராஜா மீது புதிய அவதூறு ஒன்றையும் வைத்தார். இளயராஜா ஓ.என்.வி. குரூப் பற்றி சொன்னதுடன் தொடர்புடையது.  ராஜா பல நேரங்களில் உளரும் விஷயங்களை நியாயப்படுத்த எனக்கு எந்த தேவையும் இல்லை. (அப்படி உளரக்கூடும் என்பதுதான் எனது கருத்தும்.) அவை எனக்கு முக்கியமான கவனம் கொள்ள வேண்டிய செய்திகளும் அல்ல. அதில் இந்த விஷயமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சாருவின் திரித்தல் என்னவென்றால் பழசிராஜாவில் ராஜாவின்  இசை மோசமாக இருந்ததாக கேரளத்தில் பரவாலாக விமர்சனம் வந்ததாம். அதனால்  ராஜா அதற்கு (பாடல்கள் மோசமாக இருக்க) காரணமாக ஓ.என்.வி.குரூப்பை (சாருவிற்கு பெயர் நினைவிலில்லை, மலையாளத்தில் புகழ்பெற்ற பாடலாசிரியர் என்று மட்டும் சொன்னார்) பற்றி அப்படி சொன்னதாக  திரித்தார். இணையத்தில் இந்த கணத்தில் தேடலாம். வாசிக்க கிடைக்கும் அனைத்து விமர்சனங்களும் ராஜாவை கொண்டாடுகின்றன.  குருப் விஷயத்தில் ராஜாவை கண்டித்த அமைச்சரும், ராஜாவின் இசை போல குருப்பின் வரிகளும் முக்கியம்  என்றுதான் சொல்கிறார். (கவனிக்க வேண்டியது - சாரு உண்மையிலேயே குரூப்பின் பாடல் வரிகளின் தரத்தை அறிந்து (அதாவது இளயராஜா சொல்வது சரியா தவறா என்று ஆராய்ந்து) ராஜா பற்றி குறை சொல்லவில்லை. குரூப்பின் பாடல்வரிகளின் தரத்தை பற்றி அளவிடக்கூடிய சாத்தியம் தனக்கு இல்லாமலே, ராஜாவை பற்றி சாரு குற்றம் சாட்டுகிறார். அதாவது கேரளா மதிக்கும் ஒருவரை பற்றி பேசக்கூடது என்பதுதான் சாரு சொல்வதன் பின்னுள்ள கருத்து. ஜேசுதாசை பற்றி இவர் பேசலாம், ராஜா குரூப்பை பற்றி பேசக்கூடாதுபோலும். என்ன ஒரு யோக்கியமான பார்வை!)


கடந்த 15 வருடங்களாக இளயராஜா தனது முக்கிய இசைகளை மலையாளத்தில்தான் அளித்து வருகிறார். அவை அனைத்தும் அங்கு மிகையாக கொண்டாடப்பட்டு வருகின்றன என்பது விஷயம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். மேடையில் ஷாஜி போன்றவர்கள் மௌனமாக இருக்க சாரு இப்படி ஒரு திரித்தலை எந்த ஆதாரமும் இல்லாமல் செய்கிறார். 


இதே போலவே தனது பதிவில் வேறு இடத்தில்  ̀பா'  பட இசைக்காக ஹிந்தி திரை உலகில் இளையராஜாவை ஜோக்கராக பார்பதாக எழுதியுள்ளார். என்ன ஆதாரம்? மீண்டும் அப்படியே கூகிளில் தேடுங்கள். வரிசையாக ராஜாவை புகழும் கட்டுரைகள் மட்டுமே கிடைக்கும். ஒரு கட்டுரை கூட ராஜா இசையை விமர்சித்து கிடைக்காது.  ̀பா' படத்தின் பலமே ராஜா என்பதாக பல கட்டுரைகள் உள்ளன. படத்தை பற்றி பேசுபவர்கள் எல்லாம் ராஜாவை புகழ்கிறார்கள்.  அமிதாப் ராஜாவிற்கு படத்தை  பிரத்யேகமாக திரையிட என்று சென்னைக்கே வருகிறார். ராஜாவை அமிதாப்பும், பால்கியும் கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வைக்கிறார்கள். பாலிவுட்டில் எல்லோரும் ராஜாவை வானளாவ புகழ்கிறார்கள். (இவை எல்லாம் சரியான விமர்சனங்களா என்ற கேள்விக்குள் போகவில்லை. எனக்கே அதை பற்றி சந்தேகம் உண்டு. சாரு பொய் சொன்னதை மட்டுமே மறுக்கிறேன்).  ஆகையால் நாம் வாழும் காலகட்டத்தின் மிக பெரிய இசை மேதையை அவதூறு செய்ய சாருவிற்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஆனால் இவர் எழுத்தை யாராவது (அதுவும் ஆதார பூர்வமாக) விமர்சித்தால் மிக கேவலமான முறையில் எதிர்வினை செய்ய தயங்க மாட்டார். ஏனென்றால் எழுத்துதான் இவருக்கு மனைவி, அம்மா, அப்பா எல்லாவற்றையும் விட எல்லாமாம். அப்ப இளையராஜாவிற்கு இசை என்ன நொறுக்குதீனியா? ( ̀பழசிராஜா',  ̀பா'வில் ராஜா இசை பற்றி சொன்னதற்கான ஆதாரங்களை அளித்தால் மேலே பேசலாம்.)


இவ்வாறாக இந்த ஆபாச நிகழ்வு முடிந்தது. பங்கேற்ற கூட்டத்தை பற்றி சொல்ல வேண்டும். சும்மா இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் கைதட்டிக் கொண்டிருந்தது. வேண்டுமானால் சாரு பாணியில் ஐரோப்பாவில் எப்படி கைதட்டுவார்கள் என்று ஒப்பிட்டு ஒரு பத்தி எழுதலாம். எனக்கு நமது சாலைகளில் ஹார்ன் அடிப்பதுதான் நினைவுக்கு வந்தது. நான் பார்த்த எல்லா நாடுகளிலும் மிக அத்தியாவசியமான ஒரு தருணம் தவிர்த்து  யாரும் ஹார்ன் அடிப்பதை கேட்கமுடியாது. நம்ம ஊரில் சாலையில் ஹார்ன் அடிப்பது ஒரு வியாதி மாதிரி. யாருமே சாலையில் இல்லாமல் தனியாக போகும்போது கூட பழக்க தோஷத்தில் ஹார்ன் அடித்தபடி போவார்கள்


கைதட்டுவது விசில் அடிப்பது மீதெல்லாம் எனக்கு எந்த மரியாதை குறைவும் இல்லை. ரஜினிக்கு, கமலுக்கு, விஜய்க்கு, இன்னும் கலைஞரின் பேச்சுக்கு, பிடித்த ஏதோ ஒரு இசைக்கு கைதட்டுவது நம் பாராட்டின் வெளிபாடு. ஆனால் மேடையில் பேசும் கருத்தை நாம் உள்வாங்க கூட சில நொடிகள் தேவை. (ஏற்கனவே அந்த கருத்தை வந்தடைந்திருந்தால் வேறு விஷயம்.) கருத்து குறித்த விமர்சனத்துடன் உள்வாங்குவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதற்கு ஒரு தடையாக இருப்பது வாக்கியத்திற்கு வாக்கியம் வரும் கைதட்டல்.


இலக்கியம், திரைப்படம் போன்ற கலைகளை, இசை நடனம் போன்ற கலைகளை அணுகுவதுபோல அணுக முடியாது என்று நினைக்கிறேன். இசையில் தன்னை மறந்து 

அதில் ஆழ்வதும், அதில் பரிச்சயமாவதும், அடையாளம் காண்பதும் மிக அவசியமானது; ஒரு வகையில் போதுமானது. இசை குறித்த விமர்சனம் என்பது அதன் நுட்பம் குறித்தது.  இலக்க்கியத்தை பொறுத்தவரை வெறுமே அடையாளம் காண்பதும், பரிச்சயபடுத்திக் கொள்வதும் ஆபத்தானது ஆகும். உள்வாங்கி, ஆழ்ந்து அடையாளம் காணும் செயல்பாட்டினூடேயே சுய உணர்வு கொள்வதும், வாசிக்கும் போதே விமர்சித்து கொள்வதும் மிக முக்கியமான செயல்படாகும். அத்தகைய ஒரு வாசிப்பிற்கு இலக்கியவாதிகள் சார்ந்த  இந்த கூட்டம் எந்த விதத்திலும் உதவுவதாக இல்லை என்றே நினைக்கிறேன். 


இந்த கூட்டத்தில் நல்ல விஷயங்களாக சொல்ல எதுவும் இல்லையா என்று கேட்டால், அதை சொல்ல நான் இதை எழுத தொடங்கவில்லை என்பதை ஒப்புக்கொள்வதுதான் நேர்மையாக இருக்கும். சாருவின் எழுத்துக்களும், அவர் செய்யும் இடையீடுகளும் வேறு காரணங்களுக்காக முக்கியமானவை. அந்த காரணங்களை இந்த கூட்டத்தில் யாரும் தொடவில்லை என்பதே என் கருத்து.  மற்ற எல்லா துதிபாடும் போலி கூட்டங்கள் போலவே இதுவும் நடந்தேறியது. அதில் பெரிய தப்பு இல்லை. அப்படி நடக்கும் போது இது வித்தியாசமானதாகவும், இந்த கூட்டம் ரொம்ப உண்மையானதாகவும்,  கூட்டத்தில் கைதட்டுபவர்களை ஜீனியசாகவும் சொன்னார்கள். அதனால் எதிர்வினையாக இந்த பதிவை எழுதியுள்ளேன். எழுத இன்னும் பல விஷயங்கள் இருக்கும், சில அற்பமான அவதானிப்புகளை சொல்லலாம் என்றாலும் இங்கே நிறுத்திகொள்வது வேறு வேலைகளை பார்க்க உதவும் என்பதால் நிறுத்திக் கொண்டு, வொயின் சாப்பிடலாமா, பிராண்டி சாப்பிடலாமா (இரண்டும் உள்ளது) என்று யோசிக்கிறேன். 

 

பின்குறிப்பு: இது சாருவின் எழுத்து குறித்த என் மதிப்பீடு அல்ல. இந்த நூல் வெளி யீட்டு விழா சென்று வந்த அனுபவம் மட்டுமே. 


Post a Comment

8 Comments:

Blogger ஹைப்பர்லிங்க் சிந்தனைகள் said...

எப்படி இந்த மாதிரி கறாரான தர்க்க முறையை வைத்து கொண்டு உயிர் வாழ்கிறீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஒன்று தலையை பிளக்கும் சைனஸ் தலை வலியோடு சென்று வந்த நிகழ்ச்சிக்கே இவ்வளவு சுவாரசியமாக பத்தி எழுத முடியும் என்றால்... நிறைய எழுதுங்கள்.....

12/17/2009 4:30 AM  
Blogger ஒரு பொடிச்சி said...

///இவ்வாறாக நடந்த பின், சாருவின் பெயரை அட்டையில் தாங்கி ̀மலாவி என்றொரு தேசம்' என்கிற தலைப்பில் புத்தகம் வெளிவரும்போது எழுந்திருக்க வேண்டிய நியாயமான கேள்வி, இந்த கடித பரிமாற்றங்கள் ஆனந்தின் விருப்பத்துடன் உரிய அனுமதி பெற்று வெளிவருகிறதா என்பது. (அவரிடம் முன்னுரை வாங்கி வெளிவருவதுதான் உண்மையான பொருளில் நேர்மையான நாகரீகமான ஒரு செயல்.) இந்த இயல்பான சின்ன கேள்விகூட யாருக்கும் எழவில்லை. ஆனந்தின் விருப்பமில்லாமல்/அனுமதியில்லாமல் வெளி வந்தால் அதற்கு மோசடி என்று பெயர். இது குறித்து எங்கும் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தெளிவு செய்யப்பட்டதாகவும் எனக்கு தெரிந்து இல்லை.//

எழுத்தாளர்கள் அனுமதி கூடக் கேட்பார்களா ரோசா :-)

அவர்களை மதித்தொரு கடிதம் எழுதினால் அதிலிருந்து தம்மை புகழ்பாடுவதை மேற்கோள் காட்டி கதை, கவிதை என்ன காவியமே எழுதுவார்கள்...!
/ஒரு எழுத்தாளனுக்கு தேவையான எந்த தார்மீகமும் இன்றி,/

12/17/2009 8:01 AM  
Blogger ROSAVASANTH said...

கவி, பொடிச்சி நன்றி.

12/17/2009 9:07 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

சாருவின் எல்லா எழுத்துக்களையும் படித்திருப்பேன் என்று கூறமுடியாவிட்டாலும் அவரது எழுத்துக்களை "எக்சிஸ்டென்ஷியலிசமும், ஃபேன்சி பனியனும்" இலிருந்து தொடர்ந்து வாசித்து வருகிறேன். நாளுக்கு நாள் கூடிவரும் அவருடைய அலம்பல்கள் சில சமயம் எரிச்சலூட்டக்கூடியதாக இருந்தாலும் வாசிப்பதை தவிர்க்க முடியாததாகத்தானிருக்கிறது. ஞாநியைக் குறித்து எழுதியதை சாருவைத் தவிர வேறு யார் எழுதியிருக்க முடியும்?

சாரு ஆபிதீன் விஷயத்தில் செய்தது யாருக்கும் தெரியாத இரவுக்கொள்ளை என்றால், 'மலாவி' ஆனந்த் விஷயத்தில் செய்திருப்பது எல்லாரும் பார்க்க நடத்திய பகற்கொள்ளை.

இந்த விமர்சனக் கட்டுரைகளில் தொடாத சாரு நூல் வெளியீட்டுவிழா குறித்த ஒரு நெருடல். அவர் தளத்தில் உள்ள வீடியோக்கள் ஓரிருப் பகுதிகளைப் பார்த்தேன். நிகழ்ச்சியைத் தொகுப்பவர் பங்கேற்ற எழுத்தாளர்களை வரவேற்று மேடைக்கு அழைக்கும்போது எல்லோரையும் திரு, திருமதி என்ற பொதுவான முன்னொட்டுகளோடு அழைத்துவிட்டு, அமீரையும், சசி குமாரையும், "திரைப்படக் இயக்குனர்" என்ற சிறப்புத் தகுதிகளோடு குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் நிலவும் ஃபிலிஸ்டைன் நிலை குறித்து மாய்ந்து, மாய்ந்து எழுதும் சாருவின் நூல் வெளியீட்டு விழாவிலே இப்படியா? இந்திரா பார்த்தசாரதி ஒரு பல்கலைக்கழக பேராசிரியர்,ஆய்வாளர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், நாடக ஆசிரியர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். ந. முத்துசாமி எழுத்தாளர், நாடக ஆசிரியர்/இயக்குனர். இப்படி பங்கேற்ற ஒவ்வொருவருமே, கலை, இலக்கிய, ஆய்வுத் துறையில் சாதித்தவர்கள். "திரைப்பட இயக்குனர்"களுக்கு கொடுக்கும் மரியாதையை இவர்களுக்கும் கொடுக்க முடியாதா?

பதிவோடு தொடர்பில்லாத இன்னொன்று (உங்கள் ட்விட்டரில் குறிப்பிட்டிருப்பதால்): பிரபாகரனின் மகள் துவாரகாவின் படுகொலைப் படம்/செய்தி மனதைக் கொதிப்படையச் செய்தது.

12/17/2009 2:52 PM  
Blogger Unknown said...

சாரு இளையராஜாவைப் பற்றி விமர்சிப்பது எனக்கென்னவோ தப்பாகத் தெரியவில்லை. நான் கூட ஒவ்வொரு வருஷமும்,எங்க ஊரு 'ரெக்கார்ட் டான்ஸ்' தவற விடாமல் பார்த்த அனுபவத்தில், 'Michel Jackson' டான்ஸை விமர்சனம் பண்ணியிருக்கிறேன்.

12/17/2009 4:06 PM  
Blogger ROSAVASANTH said...

சுமு, ராம், நன்றி. எனது வேறு சில கருத்துக்களை பிறகு பதிகிறேன்.

12/18/2009 2:51 AM  
Blogger ஜோ/Joe said...

3 பகுதிகளையும் வாசித்து முடித்தேன் நீண்ட நாட்களுக்கு பின் இந்த வாசிப்பனுபவத்தை மீண்டும் தந்தமைக்கு நன்றி..தொடர்ந்து எழுதுங்கள் .

1/05/2010 6:34 PM  
Blogger ROSAVASANTH said...

ஜோ வாசித்ததற்கு நன்றி. நெடுநாட்கள் கழித்து இங்கே சந்திப்பது மகிழ்ச்சி.

1/05/2010 6:45 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter