ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Wednesday, December 06, 2006விடைபெறும் முன் நண்பர்களுக்கு..!இந்த பதிவை எழுதுவதன் தேவை குறித்து ஒரு முடிவுக்கு வர இயலாமல் குழம்பி, இந்த பதிவின் இறுதியில் பேசப்போகும் விஷயம் காரணமாக இதை எழுதுவது என்ற முடிவுக்கு வந்து, என் பதிவுகளை சீரியசாக எடுத்து படித்து வந்த நண்பர்களுக்காக இதை எழுதுகிறேன். இதற்கு முன்பு பலமுறை குறுகிய காலத்திற்கு தமிழ் வலையுலகத்திலிருந்து (படிப்பதிலும், எழுதுவதிலும், பின்னூட்டமிடல் உட்பட்ட எதிர்வினையாற்றுவதிலிருந்து) சில காலத்திற்கு விலகியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அதை முழுவதும் செயல்படுத்த முடியாமலே இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அதற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் இருப்பது மட்டுமில்லாமல், அதை செயல்படுத்தும் முதிர்ச்சியும், சந்தர்ப்ப சூழலும் வந்துவிட்டதாக நினைக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே நாள்தோறும் தமிழ்மண பதிவுகளை படிப்பது என்ற நிலையிலிருந்து விலகி, சில நாட்களுக்கு ஒருமுறை ஒட்டுமொத்தமாக கடந்த நாட்களின் பதிவுகளை (தேர்ந்தெடுத்து) படிப்பது என்ற நிலையிலேயே இருக்கிறேன். அதனால் இந்த முறை இந்த விரதத்தை செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். சில மாதங்களுக்கு - முதலில் நான்கு மாதங்களுக்கு, தேவைப்பட்டால் அதிக மாதங்களுக்கு - வலைப்பதிவிலிருந்து முழுமையாய் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருக்கிறேன். புதிதாக அழுத்தும் கூடுதல் வேலைப்பளு, வேறு சில வேலைகள் மட்டுமின்றி, வலைப்பதிவில் ஏற்பட்டுவிட்ட அலுப்பு, இயங்குவதில் உணரும் அபத்தம் மட்டுமின்றி, வேறு தளங்களில் தீவிரமான ஈடுபாட்டுடன் இயங்குவதற்காக முயலவும் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இதை இங்கே அறிவிக்க வேண்டியது அத்தனை முக்கியமானது அல்லதான். இரண்டு காரணங்களுங்காக மட்டும் ஒரு பதிவின் மூலம் அறிவிக்க வேண்டியுள்ளது. வரும் மாதங்களில் சாக்ய சங்கத்தின் விடுதியில் உள்ள குழந்தைகளுடன், அவர்கள் கல்வி சார்ந்த சில பணிகளை ஆற்ற முடிவு செய்துள்ளேன். இது குறித்து நான் எழுதிய பதிவுகளுக்கு கிடைத்த 'ஆதரவு' மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது என்றாலும், சொந்தமாகி விட்ட கடையை திறந்து வைப்பதில் நஷ்டம் எதுவும் ஏற்படபோவதில்லை என்கிற வகையில், ஊதுவதை ஊதி வைப்போம் என்ற அளவிலேயே எழுதி வருகிறேன். இது குறித்து உதவி செய்யும் நோக்கத்துடன் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் rosavasanth at yahoo dot com என்ற முகவரிக்கு எழுதலாம். பண உதவி மிக முக்கியமானது எனினும், சென்னையில் உள்ள நண்பர்கள் -சிறார்களுக்கு பாடம் சொல்லி தருவது போன்ற - நேரடி பணிகளில் ஈடுபட விரும்பினாலும் என்னை அணுகலாம். சாக்ய சங்கம் குறித்த பதிவுகள் 1. Sakya Sanga 2. சாக்ய சங்கம் -2. 3. சாக்ய சங்கம் -3. 4. சாக்ய சங்கம் -4. இரண்டாவதாக என்னை கடந்த ஒரு வாரத்திற்கு மேல் உறுததிக் கொண்டிருக்கும் முக்கியமான விஷயம் பெரியாரின் 'கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்த அறிக்கை' (1 + 2 இதை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ரவி ஸ்ரீனிவாசிற்கு நன்றி) . இது குறித்து எழுத நினைத்த நீண்ட பதிவை எழுத இயலாமல் செல்லும் காரணத்தாலே இந்த பதிவை எழுத வேண்டியுள்ளது. இன்னமும் பெரியாரின் அறிக்கையை படித்து வந்த அதிர்ச்சியை விழுங்க இயலாமல் இருப்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இதுவரை நான் வாசித்துள்ள பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள், சொற்பொழிவுகளுக்கு மாறாக, மிகவும் பிரச்சனைக்கு உரியதாக இந்த அறிக்கை எனக்கு தென்படுகிறது. இந்த அறிக்கையை பெரியார் வெளியிட்டதன் பிண்ணணி, அவருக்கு கிடைத்த தகவல்கள் என்பது பற்றி எதுவும் எனக்கு தெரியவில்லை. (இந்த அறிக்கையே இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது. இதுவரை வெண்மணி குறித்து பெரியார் அறிக்கை எதுவும் விடவில்லை என்றே நினைத்திருந்தேன்.) இந்த அறிக்கையை மட்டும் ஒரு தனிப்பிரதியாக பார்கும் போது, மிக மோசமான அரசு ஆதரவு நிலைப்பாட்டுடன், எதையும் நியாயப்படுத்த வலிந்து செய்யும் கபடமான தர்க்கத்துடன் எழுதப்பட்டதாகவே எனக்கு தெரிகிறது. பெரியார் குறித்த முந்தய வாசிப்புகள் இல்லாதிருந்தால், பெரியார் இதுவரை ஏற்படுத்தியிருந்த பாதிப்புகள் மீதிருக்கும் மரியாதை இல்லாதிருந்தால், 'அயோக்கியத்தனம்' என்ற பெரியாரிய சொல்லாடலில்தான் இந்த அறிக்கையை அழைக்க வேண்டும். முத்துகுமரனின் பதிவின் பின்னூட்ட விவாதத்தில், பெரியார் மீதான அளவுக்கு அதிகமான நம்பிக்கையில், ரவி ஸ்ரீனிவாஸ் மீது வழக்கமான தாக்குதலை தொடுத்திருந்தேன். இப்போதும் ரவி மீதான (அவரது நோக்கங்கள், புரிதல்கள் மற்றும் அவரது அறிவின்/புரிந்து கொள்ளும் திறனின்/அரசியல் முதிர்ச்சியின் எல்லைகள் மீதான) கருத்துக்களில் மாற்றமில்லை; ஆனால் பெரியார்தான் காலைவாரிவிட்டிருக்கிறார். சமீபத்தில் நட்பு ஏற்பட்ட நண்பர் (மிதக்கும் வெளி) சுகுணா திவாகருடன் அரைமணி நேரத்திற்கு மேலாக இது குறித்து இருவரும் தொலைபேசினோம். இருவருக்கும் இது விழுங்க இயலாததாய், ஒத்த கருத்துடனான விமர்சனத்துடன் இருப்பதாக தோன்றியது. அவர் விரிவாய் தன் கருத்தை எழுதி வருவதாக (வலைப்பதிவில் அல்ல)சொன்னார். அவர் அதை வலைப்பதிவிலும் எழுத வேண்டும் என்பது என் வேண்டுக நமது விமர்சனங்களை 'எதிரிகள்' பயன்படுத்திக் கொள்வார்கள் என்று அஞ்சாமல், அதே நேரம் அவ்வாறு பயன்ப்படுத்திக் கொள்ளப்படும் சாத்தியங்கள் பற்றிய தெளிவுடன், அதையும் குறிப்பிட்டு அது குறித்த ஜாக்கிரதை உணர்வுடன் எல்லாவற்றை பற்றியும் விம்ர்சனமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அவ்வாறாக பெரியாரின் வெண்மணி அறிக்கை பற்றி (என் குழப்பங்களுடன், இது போன்ற வரலாற்று தவறுகள் நிகழ்வது பற்றிய என் புரிதல், பெரியாருக்கான சில பிரச்சனைகள், இதை முன்வைத்து பொதுவாகவே எந்த அரசியல் இயக்க சொல்லாடல்களிலும் வெளிபட வாய்ப்புள்ள வன்முறை இவைகளை முன்வைத்து) நான் எழுத உத்தேசித்திருந்த பதிவு மிக நீளமாக செல்லும் என்று தோன்றுகிறது. இப்போது முடிவு எடுத்துவிட்ட நிலையில் அதை இங்கே இந்த தருணத்தில் எழுத முடியாது என்று நினைக்கிறேன். அதனால் குறைந்த பட்சம் பெரியாரின் அறிக்கை மிக மோசமானது, மிகவும் பிரச்சனைக்குரியது (அதை சிலர் நேர்மறையாக பார்த்துக் அப்பாவியாய் அதை வெளிப்படுத்தும் விபத்துக்கள், ஆபத்துக்கள், பரிதாபங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்தில்) என்ற கருத்தை பதிவு செய்ய இந்த பதிவை எழுத வேண்டியுள்ளது. இது தவிர எழுத துவங்கிய, எழுத நினைத்த பதிவுகளை எழுதப் போவதில்லை. இதுவரை என் பதிவுகளை வாசித்த, பின்னூட்டமிட்ட, விமர்சித்த பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம். |
25 Comments:
:-(((((((((((((((((((((
// :-((((((((((((((((((((( //
மீண்டும் நேரம் கிடைத்தால் வலை உலகுக்கு வரவேண்டும்...
பணி சிறக்க வாழ்த்துகிறேன்...
ரோசா சார்,
உங்கள் பங்களிப்பு தற்காலிகமாக இல்லாமல் போவது வருத்தமே..உங்கள் மற்ற முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
லக்கி, தங்கவேல்,ரவி, ஜோ நன்றி.
கடந்த பதிவில் எழுதியிருந்த 'Being Indian' முதல் இடத்தில் அமோக வெற்றிபெற்றுள்ளது என்பதை இப்போதுதான் அறிந்தேன். வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
வணக்கம் ரோசாவசந்த். உங்கள் முடிவு உங்களுக்கானது. அது உங்களுக்கு நல்லவிதமாகப் பயனாகவே விரும்புகிறேன்.
பெரியாரும் ஒரு மனிதர்தானே. அவரும் தவறியிருக்கலாம். அவருடைய கருத்தில் நல்லதை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. அல்லது என்று தோன்றினால் விலக்குவதில் தவறில்லை. அவர் ஒரு தவறு செய்து விட்டார் என்பதற்காக தவறுகள் அனைத்தையும் சப்பைக்கட்டுவது ஏற்க முடியாது. பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும். இதற்கு எதிரான எவரும் தவறானவரே.
//பெரியாரும் ஒரு மனிதர்தானே. அவரும் தவறியிருக்கலாம். //
பெரியாரை ஒரு முக்கிய ஆதர்சமாக தனிப்பட்ட முறையில் கொண்டிருப்பதானால் இது குறித்து எழுதுவது எனக்கு கடமையாகிறது. மற்றபடி இதை எழுவதற்கான அவசியம் //அதை சிலர் நேர்மறையாக பார்த்து அப்பாவியாய் அதை வெளிப்படுத்தும் விபத்துக்கள், ஆபத்துக்கள், பரிதாபங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்தில்)//
நன்றி!
Wish you the very best in whatever you seek to endeavour.
Expecting that you will take a break and return !
Tried calling you in vain. If possible, pl. call me at my home tel. no. after 8 PM.
(New computer - Tamil Keyboard not installed)
Best wishes for a fruitful time-off. Needless to say, your writings have helped me think about many issues with new perspectives. I am sure you will get back to writing with increased energy and focus.
Thanks,
Srikanth
வசந்த், கீழ்வெண்மணி குறித்த பெரியாரின் இரண்டாவது சுட்டியை இப்போதுதான் பார்க்கின்றேன். மிக மோசமாய் இருக்கின்றது. அதுவும் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கீழ்வெண்மணிப்படுகொலைகள் நடக்க, திமுகவைக் கண்டிக்காது கம்யூனிஸ்டுக்களை தடைசெய்யவேண்டும்... அது இது என்று பெரியார் எதையெதையோ பேசுகின்றார் (பெரியாருடைய முக்கிய பலமே சுற்றிவளைக்காது நேரடியாகப் பேசும் திறன் என்றுதான் விளங்கி வைத்திருந்தேன், ஆனால் இந்த அறிக்கையில் அது இல்லாமற் போகின்றது). பெரியார் கீழ்வெண்மணி குறித்து கூறியது பற்றி பிறர் எழுதியதியும் தேடிப் பார்க்கவேண்டும். பெரியார் பன்முகத்தை வலியுறுத்தியவர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த அறிக்கையில் பார்த்தால் திமுகவும், காங்கிரசும் மட்டும்தான் இருக்கவேண்டும் என்கின்றார், பிற கட்சிகள் வேண்டாம் என்கின்றார் :-(.
பாலா, ஸ்ரீகாந்த், டீஜே நன்றி.
டீசே, ஆமாம். அடிப்படை ஜனநாயக சிந்தனை கூட இல்லாமல், ஒருவகையில் கொலைகளை நியாயப்படுத்துவதாகவே அந்த அறிக்கை இருப்பதாக நினைக்கிறேன். தலித் முரசு அதை எதோ முக்கிய அறிக்கையாக -நேர்மறையாக பார்த்து- கீழ் வெண்மணி கொலைகளை தடுப்பது எப்படி என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது. வேறு சிலரும் அதை நேர்மறையாய் பார்கிறார்கள். இந்த கட்டத்தில்தான் வாய் திறப்பது மனித விடுதலை பற்றி சிந்திக்கும் அனைவரது கடமை. நன்றி!
முத்துகுமரன் பதிவில் கடைசியாக எழுதிய பின்னூட்டம். ஒரு பதிவிற்காக இங்கே.
//ரவி சுட்டியளித்த, தலித் முரசில் வெளிவந்த பெரியாரின் 'அறிக்கையை' (இப்போதுதான்) படித்தேன். படிக்க மிகவும் கொடுமையாக இருந்ததை சொல்லத்தான் வேண்டும். (மேலும் அது படுகொலைகளை வெளிப்படையான வார்த்தைகளில் கண்டிக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.) இதை உண்மையில் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை ஒப்புகொள்கிறேன். பெரியாரின் மற்ற எழுத்துக்களுடன், பேச்சுக்களுடன் ஒப்பிடும்போது, இது ஜீரணிக்க இயலாததாகவே எனக்கு இருக்கிறது.
அவரது கடைசி கால எழுத்துக்களில் வெளிப்பட்ட தீவிர நம்பிக்கை வரட்சி, அதீதமான கோபம், ஒன்றையே தொடர்ந்து வரட்டுத்தனமாய் பேசுவது, (கருத்து ரீதியில்) தனிமைப்படுத்தப் பட்டது போன்றவற்றுடன் தொடர்புடையதாய் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த அறிக்கை மிகவும் பிரச்சனைக்குரியது என்று ஒப்புக்கொள்வதில் பிரச்சனையில்லை. (அது பெரியாருடையதுதான் என்று நம்புகிறேன்.) பெரியாரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்றோ, பெரியாரை பற்றி நம்பியதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டால் எல்லாம் விழுந்த விடும் என்ற நிலையிலேயோ நான் இல்லை. என்றாலும் இதை முன் வைத்து மட்டும் என்னால் பெரியார் குறித்த ஒட்டுமொத்த முடிவுக்கு வரமுடியாது. இந்த குறிப்பிட்ட விஷயத்தில் பெரியாரின் வார்த்தைகள் பெரிய நெருடலாக இருக்கிறது.
இப்போதும் ஏதாவது சால்ஜாப்பு சொல்வது பெரிய விஷயமே இல்லை. ரவி அளித்த சுட்டியை தொடர்ந்து படித்து எழுந்த உடனடி உணர்வு இது! புதிதாய் கருத்துக்கள் இருந்தால் பிறகு.//
//இப்போதும் ஏதாவது சால்ஜாப்பு சொல்வது பெரிய விஷயமே இல்லை//
அதான் எனக்கு பெரிய வருத்தமாக இருக்கிறது. இதை ரசிக்கும் வகையில் செய்த ஒருவர் வலையுலகை விட்டு (தற்காலிகமாக) விலகுவது எனக்கு வருத்தம்தான்.
நான் விரும்பிக் கேட்ட குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி நீங்கள் எழுதாமல் போவது எனக்கு மிகப் பெரிய வருத்தம்.
உங்களின் எல்லா முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ஓகை, நன்றி. குவாண்டம் கணித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேறு விஷயங்களை ஐந்து முதல் பத்து கட்டுரைகளாக எழுதும் நோக்கம் உள்ளது. எப்படியுமே இப்போதைக்கு அதை எழுதுவது சாத்தியமில்லை. (அப்படி எழுத உத்தேசித்தே முதல் கட்டுரையை துவக்கினேன்; தொடர இயலவில்லை). பின்னர் விரிவாக செய்யலாம். நன்றி!
ரொம்ப சந்தோசம் வசந்த்...புண்ணியம்...பொது வாழ்க்கை போதும்..வேற வேலையப் பாருங்க..:):):):):)
பணிகளை சிறப்பக முடித்து விட்டு வாருங்கள். காத்திருக்கிறேன் மற்ரவர்களுடன் நானும்.
ரோசாவசந்த், உங்கள் நேர்மையான வாதங்களும் தீர்க்கமான கருத்துக்களும் என்னை மிகவும் கவர்ந்தவை. உங்களால் தொடர்ந்து பதிவிட முடியாதிருப்பது வருத்தமென்றாலும் அந்த நேரத்தை பிற சமுகாயப் பணிகளுக்கு செலவிட எண்ணியுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! அதற்கான என் ஆதரவு நிச்சயம் உண்டு.
புலிப்பாண்டி, பாலபாரதி, மணியன் நன்றி. மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.
ரோசாவசந்த்,
சற்று தாமகமாகத்தான் இந்த பதிவை பார்த்தேன்.
கண்டிப்பாக உங்கள் பதிவுகள் வராமல் இருந்தால் இழப்பே.
பெரியார் கீழ்வெண்மணி விசயத்தில் தவறி இருக்கலாம். ஆனால் இதுதான் சாக்கு என்று அவரின் கருத்துகளை முற்றிலுமாக் புறக்கணிக்க இயலாது. ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றதிற்கான போரட்டத்தில் அவரின் பங்கு மறுக்க இயலாதது.
தங்களின் வருகையை மீண்டும் எதிபார்க்கிறேன்.
நன்றி
வசந்த்
வசந்த், கவி நன்றி. இணையத்துடன் சில நாட்களாய் தொடர்பு இல்லாததால் பின்னூட்டங்களை உடனடியாய் பதிப்பிக்க இயலவில்லை. பிறகு வந்து சின்ன பதில் எழுதுகிறேன். நன்றி.
ரோசா :)
கடந்த சில மாதங்களாய் தொடர்ந்து தமிழ்மணம் பக்கம் வராததால் இப்போதுதான் இந்த இடுகையைப் படித்தேன். உங்களுக்கு விருப்பமான பணியில் ஈடுபடவிருகும் உங்அட்கு என் வாழ்த்துக்கள்.
'ரோசா' இல்லாத வலையுலகம் 'இடிப்பாரை இல்லாத' தாகிவிடும் என்று அஞ்சுகிறேன்!
விரைவில் மீண்டும் வருக! :)
நியோ, இப்போதிருக்கும் நிலையில் 'விரைவில்' வர இயலும் என்று தோன்றவில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி.
கவி, மீண்டும் இங்கு வந்தால் பதில் எழுதவும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை உங்கள் ப்ரோஃபைலில் தேடினேன், இல்லை. இந்த பின்னூட்டத்தை பார்த்தால் எழுதவும் -இங்கோ அல்லது என் முகவரிக்கோ!
ரோசா நலமா? உங்களது பணி திட்டமிட்டபடியே தொடர வாழ்த்துக்கள். மீண்டும் வாருங்கள்...
அன்புடன்
திரு
திரு மிகவும் நன்றி!
Post a Comment
<< Home