ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, June 05, 2006

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...!

நன்றி! .. நன்றி!!.. நன்றி!!!

எல்லாவற்றையும் வாசித்தவர்கள், சிலவற்றையாவது வாசித்தவர்கள், வாரத்தின் முதல் பதிவில் பின்னூட்ட மிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள், பின்னர் தொடர்ந்து பின்னூட்டியவர்கள், கில்லியில் போட்ட பிரகாஷ், எல்லாவற்றிற்கும் காரணமான மதி, தமிழ்மணம் நடத்தும் காசி, நான் உடன் செலவழிக்க வேண்டிய நேரத்தை தியாகம் செய்து எழுதுவதில் மட்டும் என்னை ஈடுபட அனுமதித்த துணைவி, தூக்கத்தை மட்டும் தொந்தரவு செய்து மற்றபடி சுதந்திரமாய் விட்ட மகன் அனைவருக்கும் நன்றி. முதல் பதிவில் எதிர்பார்ப்பை நண்பர்கள் வெளிபடுத்தியபோது கொஞ்சம் டென்ஷனாகவே இருந்தது. எழுத விஷயம் இருந்தும் தட்டச்சு செய்ய முடியுமா என்ற பயம்தான்.

தொடர்ந்து எழுதுவதை மட்டுமே ஒரே வேலையாய் வெறித்தனமாய் வைத்திருந்தாலும் எழுத நினைத்த சில விஷயங்களை எழுத முடியவில்லை. செவ்வாய் இரவு வரை முன்தீர்மானித் திருந்ததை அப்படியே செயல்படுத்த முடிந்தது. புதனில் ஒரு பதிவு குறைந்தது. வியாழன் தொடங்கி நினைத்தவற்றை எழுத இயலவில்லை. ஆனால் எழுத நினைக்காத சிலவற்றை, இந்த வார நிகழ்வுகளுடன் சம்பந்த முடைய சிலதை எழுதினேன். இளயராஜா பற்றிய தொடரில் மொத்தம் நான்கு எழுத நினைத்தேன். இரண்டுதான் முடிந்தது. குவாண்டம் கணித்தல் பற்றி இரண்டு பதிவுகள் போட நினைத்தேன். ஒன்றுதான் முடிந்தது. ஜப்பானை முன்வைத்த சில பார்வைகளை படங்களுடன் எழுத நினைத்ததை எழுத முடியவில்லை. நம் ஊரில் இருக்கும் மாற்று வைத்தியங்கள் அதன் பிரத்யேகங்கள் பிரச்சனைகளை தொட்டு, என் பட்ரஹள்ளி அனுபவத்தை எழுத நினைத்ததை எழுத இயலவில்லை. தமிழ் நாட்டை பற்றி பலர் வைத்திருக்கும் சினிமா பின்னால் போவதான பிம்பம் போன்றவற்றை முன்வைத்து வெகுகலாச்சாரம் பற்றியும், இந்துமதம் அதன் வெகுகலாச்சாரப் பண்மைதன்மை, அதே நேரம் அது கொண்டிருக்கும் சாதியம், அதிலிருந்து முகிழ்ந்த ஆனால் அடிப்படையான இந்துதன்மைக்கு எதிரான இந்துத்வம், இதன் பிண்ணணியில் காந்தி பெரியாரை எப்படி பார்ப்பது என்று என் பார்வவகளை வரிசையாக ஒரு நான்கு பதிவுகளாக முக்கியமானதாக எழுத நினைத்ததை தொடங்கவே இல்லை. இதன் காரணமாகவே அரசியல் நெடி இந்த வாரம் குறைவு. அதுவும் நல்ல விஷயம்தான். எழுதியிருந்தால் அது சிறிதளவாவது ஆழமான முறையில் பிரச்சனைக்குள் போயிருக்கும் என்று தோன்றவில்லை. இப்படி நினைத்த பல விஷயங்கள் நடக்கவில்லை. புதனுக்கு பிறகு ஏற்பட்ட சோர்வும், அலுப்பும் இதற்கு முக்கிய காரணம். மேலும் ஸ்டாமினாவிற்கு ஒரு எல்லை இருக்கிறதே! நர்மதாவை முன்வைத்த பதிவை எழுதும் போது, அலுப்பு எழுத்தில் கலந்து, எழுத்து நடை சற்றே அலையவும் வேண்டி வந்தது. ஆனாலும் அது நிறைவாய் வந்திருப்பதாகவே முடித்தவுடன் நினைத்தேன். தங்கமணி அதை குறிப்பிட்டதும் திருப்தியாக இருந்தது.

எழுதாத பதிவுகளில் சில பத்திகள் எழுதியுள்ளேன். அவற்றை முடித்து நட்சத்திரமில்லாத வாரங்களில் எழுத மீண்டும் இறைவன், சாத்தான், சார்பற்ற இயற்கை கடைக்கண் காட்ட வேண்டும். மீண்டும் அனைவருக்கும் நன்றி. அடுத்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

Post a Comment

13 Comments:

Blogger பினாத்தல் சுரேஷ் said...

எல்லாப்பதிவுகளையும் படித்தேன் ரோசா வசந்த்.

குவாண்டம் பற்றிக்கொஞ்சம் விளங்கிக்கொள்ளவும், இளையராஜா பற்றி உடன்வியக்கவும் முடிந்தது. அரசியல் நெடி ரொம்பவே குறைவுதான்:-) இன்னும் எதிர்பார்த்தேன்.

ஆரம்பித்தவற்றைத் தொடர வேண்டுகிறேன்.

6/05/2006 2:31 AM  
Blogger வித்யாசாகரன் (Vidyasakaran) said...

ரோஸா,

நல்ல பதிவுகள். நன்றி. எழுத நினைத்து இயலாமற் போனவற்றையும் வரும் நாட்களில் தொடர்ந்து எழுதுங்கள்.

ஒரு சிறிய வேண்டுகோள்.
ஒரு தனி மனிதன், அரசியலில் உண்மையான ஈடுபாடும், அக்கறையும் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? பல்வேறு காரணங்களால், நம்மில் பலரும் அதிலிருந்து ஒதுங்கியே இருக்கிறோம். உண்மையில், தேர்தல் செய்திகள் கூட, சுவாரசியத்துக்காக மட்டுமே என்னால் படிக்கப்பட்டன. ஒன்று ஒதுங்கி நிற்கிறோம், அல்லது வெறும் சுவாரசியத்துக்கு மட்டும். இது ஆரோக்கியமில்லைதான். ஆனால், அரசியலில் ஈடுபாடு கொள்ளக் காரணங்கள் உண்டா? அவ்வீடுபாட்டால் ஏதும் நல்லது நடக்க வாய்ப்புண்டா?

உங்கள் எழுத்தில் அந்த ஈடுபாட்டையும், அக்கறையையும் பார்க்கிறேன். எனவேதான், இந்தக் கேள்விகள் குறித்து உங்கள் சிந்தனை எனக்கு உதவும் என்று தோன்றுகிறது.
இயன்றால், இது குறித்தும் எழுதுங்கள்.

6/05/2006 2:36 AM  
Blogger SnackDragon said...

நன்றி அய்யா!

6/05/2006 3:37 AM  
Blogger SnackDragon said...

சப்பான் குறித்த அனுபவப்பதிவு உணர்ச்சிபூர்வமாகவும் நெஞ்சைத் தொடுவதகதாகவும் இருந்தது.

6/05/2006 3:41 AM  
Blogger Jayaprakash Sampath said...

நட்சத்திரமாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் அனைவரும், இதே spirit உடன் இயங்கினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்..

வெறும் வார்த்தைக்காக இல்லை, நிசமாகவே கலக்கிட்டீங்க...

6/05/2006 3:59 AM  
Blogger துளசி கோபால் said...

நல்ல வாரமாகவே இருந்தது.

நன்றி.

எழுதவிட்டதை எல்லாம் மெதுவா எழுதுங்கள், வாரம் ஒரு நாலு ன்ற கணக்குலே.

6/05/2006 7:36 AM  
Blogger ROSAVASANTH said...

சுரேஷ் அரசியல் பேசுவதில் நாம் என்ன குறை வைக்கவா போகிறோம்! ஆரம்பித்தவற்றை தொடர நிச்சயம் உத்தேசம் உள்ளது.

வித்யாசாகரன், தனியாக உங்களுக்கு பதில் தருகிறேன்..

கார்திக், நன்றி, ஆனால் ஃபிரான்ஸை பற்றி (அல்லது நாகசாகி பற்றி ) சொல்கிறீர்களோ, நான் ஜப்பானை பற்றி பொதுவாய் எதையும் எழுதவில்லையே.

துளசியக்கா, பிரகாஷ் நன்றி. தொடர முயல்கிறேன்.

6/05/2006 6:41 PM  
Blogger ROSAVASANTH said...

இந்த அரசியல் ஈடுபாடு சற்று குழப்பமான சமாச்சாரம்தான். பொதுவாய் சூழலே ஒருவரை குறிப்பிட்ட அரசியலில் ஈடுபட நிர்பந்திக்கிறது. அப்படிப்பட்ட சூழல் இல்லாத போது, அரசியலுக்காக தேவையில்லாத போது ஒதுங்கி நிற்க வைக்கிறது. ஒதுங்கி நிற்பதற்கு அரசியல் பற்றி எதிர்மறையாக (வீட்டிலோ, வெளியிலோ) ஏற்படுத்தப் பட்ட பிம்பமும் காரணமாய் இருக்கலாம். இந்த சூழல் என்பதன் அருத்தமும், தீவிரமும் ஓவ்வொருவருக்கும் பலவிதங்களில் வேறுபடுகிறது. சூழல் என்பது பிறப்பு சார்ந்த அடையாளம், தனக்கான சுயநலம், மற்றும் சமூகம் தரும் அனுபவம் உள்ளிட்ட எல்லாவற்றையும் குறிக்கிறது.

எனது பழைய பதிவுகளில் (கைகளால் மலம் அள்ளும்) துப்புரவு தொழிலை முற்றிலும் ஒழிக்க போராடும் பெசாவாடா வில்ஸன் பற்றி எழுதியிருப்பேன். கொடுமையிலும் கொடுமை தனது ஒடுக்கப்பட்ட நிலையை, சமூகத்தால் உண்டாக்கப்பட்ட இழிநிலையை முழுமையாய் உணர்ந்து கொள்ளும் அறிதலை பெறுவது. அதனால் உண்டாகும் வலி ஒடுக்கப்படும் நிலையைவிட கொடுமையானது. மற்றவர்களுக்கு அந்த அறிதல் இல்லை என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியாது. ஆனால் சமூகம் தனக்கு அளித்த நிலையில் வேறு வழியின்றி (உடைக்க நினைத்தால் உருவாகக் கூடிய வன்முறை காரணமாகவோ) தொடர, மனச்சாமாதானங்கள், தன் இழிநிலை குறித்த பிரஞ்ஞை இல்லாத பாவனை, போதை என்று எத்தனையோ தேவைப்படும். தன் நிலை குறித்து முழுவதும் புரிந்த போது, 'ஒன்று தான் சாகவேண்டும், அல்லது போராட வேண்டும்' என்ற நிலைக்கு வந்ததாக வில்சன் சொல்கிறார். அவரின் அரசியல் ஈடுபாடு என்பது உயிர்வாழ்தலுக்கு தேவையான சுவாசித்தல் போன்றது. அவரிடம் அரசியல் அவசியமானதா, அதனால் நல்லது நடக்க வாய்புண்டா என்ற கேள்விகளுக்கே இடமில்லை.

நமக்கு அப்படிப்பட்ட நிர்பந்தம் எதுவும் இல்லாத போது இந்த கேள்வியை எடுத்து கொண்டோமானால், உண்மையில் யாராவது அரசியல் சார்பு இல்லாமல் இருக்கிறார்களா என்று யோசிக்க வேண்டும். நமது வேலையிடத்தில் ஓவொருவருக்கும் ஒரு சார்பு இருக்கிறது. தங்களது இருப்பு சார்ந்து, அடையாளம் சார்ந்து, சுயநலம் சார்ந்து எல்லோருக்கும் அரசியல் இருக்கிறது. அவரவரின் அரசியல் பங்களிப்பு அரசியல்ரீதியாய் இயங்குவதற்கான சந்தர்ப்பம், அதற்கான வெளி சார்ந்து இருக்கிறது. இதற்கான தேவை என்ன என்று பார்த்தோமானால் பொதுவாய் அரசியல் என்பது தங்கள் அடையாளம், இருப்பு சார்ந்தே பலருக்கும் வருகிறது. இடவொதுக்கீட்டையே எடுத்து கொண்டால் மிக தெளிவாக தங்கள் நலம் (மட்டுமில்லாது தாங்கள் அடையாளம் காணும் இனம், சமூக கூட்டம்) இவற்றை முன்வைத்தே பெரும்பாலானவர்களின் நிலைபாடு இருக்கிறது.

இவ்வாறு தங்கள் நலம் சார்ந்து, அடையாளம் சார்ந்து எடுக்கப்படும் அரசியல் நிலைபாட்டில் தெளிவான இரண்டு வகை. தான் சமூகத்தால் ஒடுக்கப்படுவதாய் அடையாளம் காண்பது. அதில் சுயநலம் இருப்பது மிகவும் நியாயமானது. இன்னொன்று தாங்கள் அனுபவித்து வரும் சலுகைகளை உரிமைகளாய் போனவற்றை பாதுக்காப்பது. தவிர இந்த இரண்டு வகையாய் ஏதாவது ஒன்றில் அடையாளம் கண்டு அதன் விளைவாய் பல்வேறு தளங்களிலும் நிலைபாடுகளை எடுப்பது.

இப்படியில்லாமல் தங்கள் சுய அடையாளங்கள், தங்களுக்கான உரிமைகள் சலுகைகளை பாதுக்காக்கும் சுயநலத்தை மீறி சிந்திக்க முடியுமா என்று கேட்டால் முடியும் என்றுதான் சொல்ல விரும்புகிறேன். ஆனால் எவ்வளவு தூரம் முடியும், அதை தொடர்ந்து எப்படி பரிசீலிப்பது என்பது சிக்கலான விஷயம். ஆனால் அதற்கான உதாரணங்கள் எல்லா இடங்களிலும் உண்டு. இந்த அரசியல் சிந்தனைக்கான தூண்டுதல் எங்கிருந்து வருகிறது என்பது இன்னமும் புரியாததாகவே இருக்கிறது. இது ஒரு போதையாக கூட சில நேரங்களில் இருக்கலாம். ஈகோ காரணமாக கூட இருக்கலாம், நேர்மையான அறிவு தேடலாகவும் இருக்கலாம். அல்லது வாழ்வதன் அபத்தததை உணர்ந்ததால் ஏற்பட்ட தெளிவாகவும் இருக்கலாம். இன்னும் ஒரு (இயற்கையாய் இருக்க வேண்டிய சுயநலத்தை மீறும்) பைத்தியகாரத்தனமாக, எக்ஸென்ட்ரிக்தனமாக கூட இருக்கலாம். இவை எல்லாம் சேர்ந்ததாக இருக்கலாம்.

இதனால் நல்லது நடக்குமா என்றால் வேறு எப்படி நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது? சமூகத்தை பற்றி அதன் நிகழ்வுகளை பற்றி பேசாமல், விவாதிக்காமல் வேறு எப்படி மாற்றம் நடக்க முடியும்? மாற்றத்தை நிகழ்த்த கூடிய அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது குறித்து பேசக்கூடிய விவாதிக்கக் கூடிய வெளியில் அதை முன்வைக்காமல் வேறு எப்படி நல்லது (என்று நாம் நினைப்பது) நடக்க எதிர்பார்க்க முடியும்? இப்போதைக்கு இந்த பதிலை தருகிறேன். (ஒரு வாரம் கழித்து வேலையில் இறங்கியிருக்கிறேன்.) தேவைபட்டால் பிறகு மீண்டும் பேசலாம்.

6/05/2006 7:52 PM  
Blogger Kasi Arumugam said...

அடேங்கப்பா வாரம்! நிறைய சிரத்தை எடுத்திருக்கிறிர்கள். நன்றி. நன்றாக ஓய்வெடுங்கள்.

6/05/2006 7:58 PM  
Blogger நியோ / neo said...

நிறைய உழைப்பு செய்திருக்கிறீர்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது. :)

எல்லாப் பதிவுகளையும் மீண்டும் ஒருமுறை படிக்கப் போகிறேன்! :)

6/05/2006 8:47 PM  
Blogger Srikanth Meenakshi said...

ரோசா, உண்மையிலேயே சென்ற வாரத்திற்கு சுவாரசியம் கூட்டி விட்டீர்கள்்..ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு எதிர்பார்ப்புடன் bloglines-ஐத் திறக்க வைத்தீர்கள்... நன்றி!

குவாண்டம் தொடரைத் தொடருங்கள்...

ஸ்ரீகாந்த்.

6/05/2006 11:25 PM  
Blogger ROSAVASANTH said...

மீண்டும் நண்பர்களுக்கு நன்றி. வெள்ளி தொடங்கி 10 நாட்களுக்கு விடுமுறையில் செல்கிறேன். வலைப்பதிவு பக்கம் குறைந்துவிடும். திரும்பி வந்து 'குவாண்டம் கணித்தல்' தொடரை தொடர எண்ணம். எழுதாமல் விட்ட மற்றவைகளையும் (ராஜா பற்றியது உட்பட) சந்தர்ப்பம் வாய்க்கும்போது எழுத எண்ணம்.

6/07/2006 7:36 PM  
Blogger வித்யாசாகரன் (Vidyasakaran) said...

ரோஸா,

உங்களது பதிலுக்கும், நேரத்திற்கும் மிகவும் நன்றி. எனக்குச் செய்த உதவியாக இதைக் கருதி நன்றி கூறுகிறேன். நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ளவும், ஒத்துக்கொள்ளவும் முடிகிறது. சூழல் குறித்தும், வில்ஸன் நிலை பற்றியும் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
வேறு எப்படி நல்லது(என்று நாம் நினைப்பது) நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற உங்கள் கேள்வியும் சரியே.

என் கேள்வி, ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, அவ்வளவாக அரசியலால் பாதிப்புகளோ, நன்மைகளோ தன்வரையில் இல்லாத (அல்லது அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதன் பாதுகாப்பு உணர்ந்த), ஆனால் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தால் பொதுவாக ஏற்படும் பாதிப்புகள் பற்றி உணர்ந்த, ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில ஆட்சியின் அடக்குமுறை பற்றியும், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றியும் வரலாற்றிலும் தமிழிலும் படித்த, ஆனால் தன் உறவினர்களிலோ, கிராமத்தவர்களிலோ யாரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அறிந்திராத, நல்லது என்று தான் சொல்வது, நல்லது என்று தான் நம்புவது மட்டுமே என்பதையும் உணர்ந்த, நல்லது செய்வதாகக் கூறிக்கொண்டு, நினைத்துக்கொண்டு பலரும் செய்யும் காரியங்களைக் கண்டு நொந்த, இசை அல்லது அது போன்றவற்றில் கிடைக்கும் மன அமைதியைச் சிறிதேனும் உணர்ந்த, எது சரி என்ற தேடலுடைய, சரியானதென்று எதுவும் இல்லையோ என்ற ஐயமுடைய ஒருவனது மனத்தில் எழுவது.

மேற்கூறியது, அலங்காரமாகத் தோன்றுவதற்கு மன்னிக்கவும். சுருங்கச் சொல்லும் கலை எனக்குக் கை வரவில்லை. எல்லா வாய்ப்புகளையும் இதனுள் கூறிட வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம். ஆனாலும், இன்னும் நிறைய விடுபட்டிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். உதாரணமாக, புகழ் பெற வேண்டுமென்ற அடிமன ஆசை.

உங்களது பதில், இதையும் தொட்டுச் செல்வதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், என்னிடம் இதன் பின்னும் எழக் கூடிய கேள்விகள் இருந்ததாக ஞாபகம். நீங்கள் கூறியது போல, மீண்டும் கட்டாயம் இது குறித்துப் பேச வேண்டும்.

விடுமுறை கழிந்து வாருங்கள். எனக்கும் அதற்குள் சற்றுத் தெளியும் என்று நினைக்கிறேன்.
நன்றி!

6/11/2006 10:13 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter