ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Sunday, June 04, 2006பகுத்தறிவின் காட்டுமிராண்டித்தனம்.தர்மபுரியிலிருந்து மைசூருக்கு ஜைன கருத்துக்களை போதிக்கும் பணியில் நடைபயணம் மேற்கொண்டிருந்த நிர்வாண ஜைன சாமியார்களை, நேற்று முந்தய தினம் பெரியார் திகவினரும் திமுகவினரும் சுற்றி வளைத்து போகவிடாமல் தடுத்து கலவரம் செய்ததில், அவர்கள் (சீடர் ஒருவரின்) கெமிக்கல் தொழிற்சாலையில் இரவு முழுக்க தஞ்சம் கொள்ள வேண்டியிருந்தது. போலிஸ் திகவினரை சமாதானப்படுத்த முயல, அவர்கள் சாமியார்கள் கைது செய்யப்படவேண்டும், துணி அணியவில்லையெனில் சாமியார்களை போகவிடமாட்டோம் என்றும் உறுதியாய் நின்று போராடியிருக்கிறார்கள். இந்துத்வ இயக்கங்கள் வந்து சாமியார்கள் சார்பாக குதித்து பிரச்சனை பெரிதாகுமோ என்றிருந்த நிலை மாறி, ஒரு வழியாய் நேற்று ஒரு சமாதான உடன்படுக்கைக்கு வந்தார்கள். சாமியார்களை சுற்றி சதுர வடிவில் துணியினால் ஒரு திரையமைத்து, அந்த கூண்டிற்குள் அவர்கள் நடந்து, பாதுக்காப்பான பூமியான கர்நாடகத்தை அடைய முடிவு செய்துள்ளனர். ஆனால் திகவினருக்கு இரவு நேரத்தில் சாமியார்கள் துணியை விட்டு வெளியே வந்துவிடுவார்களோ என்று சந்தேகமாம். கர்நாடக எல்லையை அடையும் அவர்களை கண்காணித்தபடி கூட செல்லப் போகிறார்களாம். பொதுமக்கள் யாரும் பார்காத நேரத்தில் நிர்வாணமாய் வெளியே வந்தால், அதனால் யாருக்கும் பிரச்சனை இல்லையெனில், அதிலும் திகவினருக்கு என்ன பிரச்சனை என்று புரியவில்லை. அப்படி நிர்வாணமாய் இருப்பதே தவறு என்றால், இனி திககாரர்கள் குளிக்கும்போதெல்லாம் கேமேராவைத்து எந்த கணத்திலாவது பொட்டு துணியில்லாமல் இருக்க நேரிடுகிறதா என்று கண்காணித்து தண்டிக்க வேண்டியதுதான். அடுத்த அபத்தம் என்னவென்றால் கர்நாடகத்தில் நுழைந்து போராட திககாரர்களை எது தடுக்கிறது என்று புரியவில்லை. கர்நாடகத்தில் நுழைய எதாவது விசா பிரச்சனையா அல்லது கர்நாடகத்தில் நிரவாணமாய் அலைந்தால் தப்பில்லை என்று எதாவது தமிழ்ததனமான கருத்து இருக்கிறதோ என்னவோ? அது எப்படியோ பெரியார் பிறந்த தமிழகம் பாதுக்காப்பற்ற பிரதேசமாகவும், கர்நாடகம் பாதுகாப்பான பிரதேசமாகவும் நிர்வாண சாமியார்களுக்கு இருக்கிறது. திக நடந்து கொண்டது சிவசேனா பஜ்ரங் தள் நடத்தும் அராஜகங்களை விட எந்த விதத்திலும் குறையாத ஒரு காட்டுமிராண்டித்தனம். அவர்களுக்கு மதம் என்றால் இவர்களுக்கு பகுத்தறிவு (என்பதாக இவர்கள் கற்பித்து கொண்டது ) தூண்டுதலாக இருக்கிறது. பெரியார் ஜெர்மனி சென்ற போது, அங்கிருந்த நிர்வாண சங்கத்தில் சேர்ந்து, தானும் நிரவாணமாக படம் எடுத்து கொண்டார். அந்த விவரமெல்லாம் எல்லா பெரியார் சீடனுக்கும் தெரியும். மதரீதியாய் நிர்வாணமாவது காட்டுமிராண்டித்தனம், மேற்குபோய் ஏதாவது நவீன எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து நிர்வாணமாவது பகுத்தறிவு என்று பகுத்தறிவுப்பூர்வமான காரணங்கள் ஏதாவது அவர்களிடம் இருக்கலாம். ஆனால் இப்போது எதிர்ப்பதற்கு இவர்கள் சொன்ன முக்கிய காரணம் ஆபாசம். ஆபாசத்திற்காக கைது செய்யப்பட வேண்டும். எப்படி பெரியார் நிரவாணமாய் போஸ் கொடுத்தது ஆபாசம் இல்லை, இது ஆபாசம் என்று பகுத்தறிவு கொழுந்துகள்தான் விளக்க வேண்டும். ஒரு மனிதருக்கு பொது இடத்தில் நிரவாணமாய் இருக்க உரிமை இருக்கிறதா என்று கேட்டால் அது சிக்கலான கேள்வி. மேற்கில், ப்ரான்ஸ் போன்ற நாட்டில் கூட கடற்கரையில் முழுவதும் நிரவாணமாக பொதுவாய் உரிமை இல்லை. (ஆண்களும் பெண்களும்) கீழேயாவது சின்னதாய் ஒரு கைக்குட்டையாவது அணிந்திருக்க வேண்டும் (ஆனால் அது போதுமானது.) கடற்கரையில் நிரவாணமாக இருக்கவே சில குறிப்பிட்ட கடற்கரைகளை ஒதுக்கியிருக்கிறார்கள். அங்கே நிர்வாணமாகலாம். அமேரிக்க பல்கலைகழகம் ஒன்றில் (கலிஃபோர்னிய, பெர்க்லி) ஒரு மாணவன் (யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல்) நிர்வாணமாய் வரத் தொடங்க, சட்டத்தில் அதை தடுக்க வழி வகையில்லாத்தால், கொஞ்ச நாட்கள் பொறுத்து பிறகு ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து சிறிய ஷார்டஸாவது அணிய கட்டாயப் படுத்த வேண்டியதாயிற்று. (அங்கே எல்லாம் மதவாதிகள் பழைமைவாதிகளின் பிரச்சனை என்றால், இங்கே பகுத்தறிவு பேசுபவர்களின் பிரசனை.) ஒரு மனிதரின் (ஆணொ, பெண்ணோ) நிரவாணமாக்கி கொள்ளும் உரிமை என்பது, அந்த குறிபிட்ட இடத்தில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை முன்வைத்தே இருக்க முடியும். ஜைன சாமியார்கள் பேருந்து நிலயத்திலும், கடைதெருவிலும் நிரவாணமாகவில்லை. தேர்ந்தெடுத்த ஒரு பாதையில், தங்கள் வாழ்க்கை முறை பற்றி அறிவித்து துறவரம் பூண்டு நிர்வாணமாயிருக்கிறார்கள். அவர்கள் தங்களை பினபற்றும் சிலரை மட்டுமே சந்திக்க போகின்றனர். அவர்கள் செயலால் யாருக்கும் ஒரு தொந்தரவும் கிடையாது. (உதாரணமாய் பொது இடத்தில் பெண்கள் முன்னால் நிர்வாணமாகி காட்டுவது, அந்த பெண்கள் மீதான வன்முறையாக இருக்கும்.) அவர்களை வழிபடுபவர்கள் பார்க்கலாம், வணங்கலாம். மற்றவர்கள் கண்ணை மூடிக்கொள்ளக் கூட தேவையில்லை, அந்த பக்கமே போகாமல் இருக்கலாம். இப்படி சமூகத்திற்கு எந்த தொந்தரவும் இல்லாத ஒரு விஷயத்திற்காக இந்த முட்டாள்கள் இரவு முழுக்க கொட்டும் மழையில் தேவுடு காத்து போராடியிருக்கிறார்கள். தமிழகத்தில் இன்னமும் ரெட்டை கிளாஸ் இருக்கும் பிரச்சனைக்காகவோ (சரி, அதையெல்லாம் பேசினால் தமிழர்களை பிரித்து சண்டை போட வைத்ததாகிவிடும்), அனைவரும் அர்சகராவதை நடைமுறை யதார்த்தமாக்கவோ, தமிழில் அர்ச்சனை செய்வதையும் நடைமுறை யதார்த்தமாக்கவும் இத்தனை தீவிரத்தை கட்டவில்லை. இத்தனைக்கும் ஜைன சாமியார்கள் மற்ற செக்ஸ் சாமியார்கள் போல எந்தவித லீலைகளிலும் ஈடுபடவில்லை. நிர்வாணம் என்று தாங்கள் நம்பும் தத்துவம் சார்ந்து ஆடையில்லாமல் இருக்கிறார்கள். அதற்கு வசதி ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமலும், மற்றவர்களால் அவர்களுக்கு தொந்தரவு இல்லாமலும் பார்த்து கொள்வதுதான் ஒரு நாகரீக, சகிப்புத் தன்மையுள்ள, பரந்த மனப்பான்மை கொண்ட, பண்மைதன்மையை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் ஒரு சமூகம் செய்ய வேண்டிய கடமை. திகவின் ஒற்றை பரிமாண, கச்சாவான, குதிரை தட்டை பகுத்தறிவு பார்வை அதை நோக்கி பயணிக்காது என்பதற்கு முக்கியமான் உதாரணம் இது. பெரியாரின் 50 ஆண்டுகால இயக்கத்தை, பேச்சுக்களை, எழுத்துக்களை திகவினர் Crudeஆக எடுத்து கொண்டு, மொண்ணையான பகுத்தறிவு பேசுவது உண்மைதான், என்றாலும் இந்த விஷயத்தில் பெரியாரிடமே அடிப்படையில் பிரச்சனை இருப்பதாகவே தோன்றுகிறது. கடவுள் கதைகளை முன்வைத்து, அதன் ஆபாசங்கள் பற்றி பேசியது, கடவுள்களின் ஒழுக்கக் கேட்டை விலாவாரியாக பேசியது என்ற விஷயத்தில் பெரியார்தான் இதற்கான மதிப்பீடுகளை இவர்களுக்கு ஏற்படுத்தி தருகிறார். அப்படியானால் அவர் தன் 'ஒழுக்க கேட்டை' பற்றி வாக்குமூலம் கொடுத்ததும், திருமணத்தை மீறிய உறவுகளுக்கு தார்மீக நியாயத்தை (இரு பாலினருக்கும்) அளித்ததும் அதற்கு முரணாக தோன்றும். பிரச்சனை என்னவென்றால் பெரியார் ஒரு கூட்டத்தை நோக்கி உரையாட வேண்டியிருக்கிறது. ஒரு பக்கம் அவர்களின் மதிப்பீடுகளை உடைக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் அவர்களின் மதிப்பீடுகளை தனது பார்பன எதிர்ப்பிற்கு, ஜாதிய எதிர்ப்பிற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. அதனால்தான் 'சூத்திரன் என்றால் தாசிமகன்;' என்று மீண்டும் மீண்டும் மேடைதோறும் சொல்கிறார். அதே நேரம் வேசியாயிருப்பதிலும், வேசி மகனாய் இருப்பதில் கேவலம் எதுவுமில்லை என்றும் சொல்கிறார். பெரியாருக்கு தான் என்ன பேசுகிறோம், எங்கே பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம் என்பதை பற்றி எல்லாவித தெளிவும் இருந்தது. அதற்கு ஏற்ப தனது நிகழ்த்துதல் கலையை வெற்றிகரமாய் நிகழ்த்திக் காட்ட முடிந்தது (இலக்கை அடைவதில் அது வெற்றி பெற்றதா என்பது வேறு விஷயம்.) பெரியாரின் செயல்பாடுகள் பற்றிய எந்த புரிதலும் தெளிவும் இல்லாத சீடர்கள், ஒரு மதவாதியின் மூர்கத்தோடு சமூகத்தை அணுகி கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்க, பகுத்தறிவு கொண்டு உண்மையை அடையமுடியும் என்கிற பார்வை இன்று பல தளங்களில் பொய்ப்பிக்கப் பட்டு, பகுத்தறிவின் வன்முறை பற்றியும், அதன் அதிகாரம் பற்றியும் பேசப்பட்டு, பகுத்தறிவு என்பதே இன்று கட்டுடைக்கப் பட்டு வருகிறது. யதார்த்தவாத எழுத்தை கொண்டு எப்படி யதார்தத்தை படம் பிடிக்க இயலாதோ, அதே போல பகுத்தறிவை கொண்டு உண்மையையும் அடையமுடியாது. ஆனால் யதார்த்தவாதம் யதார்த்தத்தை படம் பிடித்துவிட்டது போல் பவனை செய்யும். அது போல பகுத்தறிவு பார்வையும் தான் உண்மையை பேசுவது போல், தான் மட்டும்தான் உண்மையை பேசுவது போல் பாவனை செய்யும். இங்கேதான் அதன் ஆபத்து அடங்கியிருக்கிறது. இன்று பல சமூகவியல் கலாச்சார ஆய்வுகள் பகுத்தறிவை கட்டுடைத்து மறுபார்வைகளுக்கு அழைக்கிறது. பகுத்தறிவு பூரவமாகவே பாத்தாலும் கூட, பகுத்தறிவு வெற்றிகரமாய் எந்த பிரச்சனயும் இல்லாமல் ஒரு கணித சட்டகத்தில்தான் செயல்பட முடியும். இயற்பியல் உட்பட்ட மற்ற துறைகளிலும், கணித சட்டகத்தில் இயங்கும் போது மட்டுமே, அங்கே அறிவியல் பூர்வமான ஒரு பகுத்தறிவு பார்வை செயல்படுவதாக கூற முடியும். ஆனால் கணித சட்டகத்தில் நாம் அரசியலும், இலக்கியமும், சமூகவியல் ஆய்வுகளும் செய்ய இயலாது. அதனால் பகுத்தறிவு என்பதன் பயன் ஒரு எல்லை வரைதான் இருக்க முடியும். இந்த இடத்தில் இந்துத்வவாதிகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப அவர்கள் மாறிக்கொள்கிறார். கோல்வால்கர் ஹிட்லரை புகழ்ந்து பேசியதற்காக இன்று அவர்கள் புகழ்வதில்லை. கோல்வால்கர் சொன்னதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்றய காலத்துக்கு ஏற்ப இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் நவீன கருத்தாக்கங்கள், நவீன அறிவியல் அனைத்தையும் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆராய்கிறார்கள். அந்த வகையில் மற்ற மத அடிப்படைவாதிகளிலிருந்து அவர்கள் வேறுபடுகிறார்கள். இந்த வேறுபாடு ஒரு சில விஷயங்களில் ஆபத்துக்களை தடுப்பதாகவும், ஒரு சில விஷயங்களில் இவர்கள் இன்னும் பெரிய ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். எப்படி என்று இந்த பதிவில் ஆராயப் புகமுடியாது. ஆனால் சொல்ல வந்த விஷயம் என்னவெனில், இந்துத்வவாதிகள் காலத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொள்கிறார்கள், திகவினர் (ஒருவகையில் கம்யூனிஸ்டுகளும்) ஒரே சூத்திரத்தை மத அடிப்படைவாதிகளை போல பற்றி கொண்டு, காலத்துக்கு ஏற்ற பரிசீலனைகளில் ஈடுபடாமல் இயங்கிவருகிறார்கள். இதில் யார் உயிர்த்து இருப்பார்கள், எந்த தத்துவம் சாகும் என்பதை தெரிந்துகொள்ள பரிணாம அறிவியல் தேவையில்லை. (செய்திகளுக்கு ஆதாரம் :இன்றய நேற்றய டெகான் க்ரோனிகிள்) |
38 Comments:
சொல்றேன்னு தப்பா நெனக்காதீங்க. ஒரு நாலு பத்தியிலே முடிக்க வேண்டிய மேட்டரை நானூறு வரிக்கு இழுத்திட்டீங்களோ?!
இருந்தாலும் சூப்பர் - (கொட்டாவியை மறைத்தபடி!)
நீங்க சொல்றது சரிதான். மேட்டர் கடைசி நாலுவரியில் இருக்கிறது. நன்றி!
//நவீன கருத்தாக்கங்கள், நவீன அறிவியல் அனைத்தையும் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆராய்கிறார்கள்//
மிக சிலர் மட்டுமே இதை போல செயல்படுகிறார்கள்.
பெரும்பான்மையானோர் கோமாதா பூசையில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.
சற்றே நீளமான, ஆனால், நியாயமான பதிவு!
அடேங்கப்பா, ஒருவாரத்தில் இத்தனையா எழுதியிருக்கிறீர்கள்! இன்னும் படிக்கவேண்டியது நிறைய இருக்கிறது.
kalvi idangalilum velai idangalilum, kudiyiruppugalilum innum samathuvam vandhuvida villai. thika. karargal iyakkathin nokkathai vittu veru engeyo poi kondirukirargal.
ippozudhu periyar irundhirundhal discriminationai edhirthu oru nooru poratangal nadathi iruppar
//இந்த இடத்தில் இந்துத்வவாதிகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப அவர்கள் மாறிக்கொள்கிறார்.//
இந்துத்துவவாதிகளிடையே இப்படிச் செய்பவர்கள் (சமுத்ரா சொல்வது போல்) குறைவு என்று தான் நினைக்கிறேன். மாறாக, பொது சமுதாயத்தில், பகுத்தறிவுவாதிகள் என்று தம்மைக் கருதாதவர்கள், இறைநம்பிக்கை, பக்தி போன்றவற்றைக் கொண்டிருப்பவர்களுள் பலர் தான் இப்படிக் 'காலத்திற்கு ஏற்ப' மாறிக் கொள்கின்றனர். இன்றளவும், மனு தர்மத்தின் மோசமான கூற்றுக்களைப்பற்றியும் வேத, புராணங்களின் காலத்திற்கொவ்வாத கருத்துக்கள்/கதைகள் குறித்தும், சாதாரண மக்களை விட பகுத்தறிவுவாதிகளுக்குத் தான் அதிகம் தெரிந்திருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த விஷயம் எனக்கு மிகவும் முரண்நகையாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது.
நீங்கள் திக-வினரைப் பற்றி சொல்லுயிருக்கும் சில விசயங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும். நம் தமிழகத்தில், கடவுளே ஆனாலும் இது போல நிர்வாணமாக நடந்து செல்லுதல் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் இது போன்ற ஊர்வலங்கள் தேவையில்லாத சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். துறவிகளான அவர்கள் எதற்கு இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்கவேண்டும். ஆடை அணிவதால் அவர்களை, அவர்களின் கடவுள் தண்டித்துவிடப்போகிறாரா?
கடவுளின் போதனையே, மற்றவர்களின் மேல் அன்பைக்காட்டு!, மற்றுவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்படி நடந்துகொள்ளாதே! என்பது போன்றவைதான். தமிழகத்தில் இவ்வாரு ஆடையில்லாமல் நடந்து வருவது, அவர்களின் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல என்று சூழ்நிலையில் ஆடை அணிந்து வந்தால் கடவுள் ஒன்றும் அவர்களை தண்டித்துவிட மாட்டார்.
மற்றபடி தனி மனித உரிமை என்பதெல்லாம் மற்றவர்களுக்கு பிரச்சனை ஏற்படாத வரைதான். இதை மத ரீதியான கண்ணோட்டத்தில் பார்க்காமல் கலாச்சார ரீதியான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். நமது ஊரில் சாமியாரகவே இருந்தாலும் சிலர் நிர்வாணமாக தெருக்களில் நடந்து போனால் ஏற்படும் அசெளகர்ய சூழ்நிலையை சற்று யோசித்துப்பாருங்கள்.
வசந்த்,
நிர்வாணம் பற்றிய என் கருத்துக்கள் , நமது முதல் விவாதத்தலிருந்து இடைப்பட்ட 3 அல்லக்து 4 ஆண்டுகளில் வெகுவாக மாறியுள்ளது. பாய்ஸ் படம் பற்ரியும் நிறைய மாறியுள்ளது. இங்கு சொல்ல விருப்பப்பட்டது, துறவிகளின் நிலையை சமூகம் அனுமதிக்கும் படியாக இருக்கவேண்டும் என்பதில் முழு ஒப்புதல் உண்டு. இதிலும் கூட "பெண்களுக்குக் கேடு" என்று ஆண்கள்தான் வரிந்துகட்டிக்கொண்டு வீதிக்கு வந்து போரடுகிறார்கள் பெண்களுக்கு என்ன வாயில்லையா? இல்லை கையில்லையா? என்னத்தைச் சொல்ல?
பகுத்தறிவின் selective காட்டுமிராண்டித்தனம்.
ஜைனர்களுக்கு கடவுள் உண்டா? அப்படி கடவுள் இருந்தாலும் தண்டிக்கும் கடவுளா? என்பது நமக்கென்ன தெரியும்? இதை எல்லாம் அவர்கள் முன்பே ஆராய்ந்து முடிவெடுத்திருக்கமாட்டார்களா? அவர்கள் மற்றவர்களை தொந்தரவு பண்ணாமல் தன் வழியே போகும் போது நாமும் அவர்களது வாழ்க்கை முறையை மதித்து விலகி நிற்பதுதான் மரியாதை.
எல்லோரும் நிர்வாணமாகத்தான் போகவேண்டும் இல்லையேல் மவனே வெட்டித்தள்ளிவிடுவேன் என்று நம்மிடம் வராதவரை, அவர்கள் வழி அவர்களது, நம் வழி நம்மளது. அவர்கள் தங்கள் வழியே சிறந்தது, எல்லோரும் நிர்வாணமாகத்தான் போகவேண்டும் என்று எங்களது கடவுள் ஆணை கொடுத்திருக்கிறார். அப்படி நிர்வாணமாகப் போகாதவர்களை கொன்றுதள்ளச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னால், உங்களது எதிர்ப்பில் பொருளுள்ளது. அப்படி சொல்பவர்களிடம் உங்களது எதிர்ப்பை காட்டுங்கள். அப்படி சொல்லாதவர்களை அனுசரித்து செல்லுங்கள்.
Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it
//இந்துத்துவவாதிகளிடையே இப்படிச் செய்பவர்கள் (சமுத்ரா சொல்வது போல்) குறைவு என்று தான் நினைக்கிறேன். //
ஸ்ரீகாந்த்,
சமுத்ரா சொல்லும் எதையும் நான் சீரியசாய் எடுப்பதில்லை. இது உங்களுக்கான பதில்
இந்துத்வவா என்று நான் VHP, சிவசேனா, பஜ்ரங் தள் போன்றவற்றை அல்லாமல், RSSஐ முன்வைத்து பேசுகிறேன். அவர்கள் காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிகொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. மற்ற இந்துத்வவாதிகள் போல அவர்கள் அடிப்படையில் பழைமைவாதிகள் அல்ல. நவீனத்துவத்தின் ஒரு கூறாகத்தான் அவர்களை பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். அஷீஷ் நந்தி போன்றவர்கள் இந்த கருத்தை வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள். எனது ட்சுனாமி நிவாரனத்தை முன்வைத்த பழைய பதிவில் இந்த பிரச்சனைகளை தொட்டிருப்பேன். பின்னர் இதை மீண்டும் பேசும் நோக்கம் உள்ளது.
எனது பழைய பதிவிற்கான சுட்டிகள்.
http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_07.html
http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_08.html
நவீனத்துவம் சார்ந்த பிரச்சனைகள் பற்றி அதில் பேசவில்லை, ஆனால் இந்துத்வத்தை எதிர்கொள்ள இந்துத்வம் போலவே புதிய அணுகுமுறைகளை கைகொள்ள வேண்டும் என்று ...
காசி, எழுதியதில் சில குட்டி பதிவுகள், படப்பதிவுகள், பிறகு குவாண்டம் கணித்தல் பதிவு ஐந்து முறை வந்தது.
கருத்து எழுதிய எல்லோருக்கும் நன்றி.
ரோசாவசந்த். மிகவும் அருமையான பதிவு. பகுத்தறிவுக்கும் இன்றைய திகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே மிகவும் உண்மை. இவர்களது இந்தச் செயல் மிகவும் பகுத்தறிவற்றது. நான் பல பதிவுகளில் ஏற்கனவே சொன்னது போல எந்த விஷயத்தையும் நல்வழியில் அணுகும் மனப்பாங்கு மிகவும் குறைந்து போயிருக்கிறது. காரணம்? அந்த விஷயத்தின் மீதிற்கும் அவர்களது நேர்மையற்ற எண்ணம். இதெல்லாம் மாற வேண்டும் என்று புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டுமோ என்றுதான் கவலையாக இருக்கிறது. ஆனால் ஒன்று. எது எப்படியாயினும் உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டியது திண்ணம்.
பக்தியும் முத்திப்போச்சு..பகுத்தறிவும் முத்திப்போச்சு..
அவங்க ஒரு ஓரமாப்போய்டுவாங்க..நீங்க கண்டுக்காதீங்க என்பதை ஏற்க முடியுமா?
பப்ளிக் நியுடிடி ஈஸ் பப்ளிக் நியூஸன்ஸ் அட் எனி கேஸ்..தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!
//கர்நாடகத்தில் நுழைய எதாவது விசா பிரச்சனையா///
-;)))
நிர்வாண ஊர்வலத்தை தடுக்க முயன்றது காட்டுமிராண்டித்தனமா?
எந்த ஊரு நியாயம் நைனா இது?
//நிர்வாண ஊர்வலத்தை..//
ஊர்வலமா?
இந்தச் செய்தியைப் படிக்கும் போது „ அறிவொளியின் முரண்வளர்ச்சி“ என்ற ஹோர்க்ஹைமர் மற்றும் அடோர்னோ இருவரும் எழுதியவை தான் ஞாபகத்திற்கு வருகின்றது. அறிவொளி கால மரபில் வந்த சமூகங்கள் தான் இரண்டு உலக மகாயுத்தங்களைக் கொண்டுவந்தன. பகுத்தறிவினதும் பெரியாரியத்தினதும் முரண் வளர்ச்சியைத்தான் தான் இந்த ஜைன மதத்தவர்கள் மீதான திகவினரின் செயல் காட்டுகிறது. பகுத்தறிவு, பெரியாரியம், ஜைனமதம் இவற்றில் எதுவும் புரிந்து கொள்ளப்படாமல்….இன்றைய சமூக வளர்ர்சியின் போக்கில் பன்மைத்துவ எதிர்நிலையும், சகிப்புத்தன்மையற்றதுமாக வளரும் சமூகத்தின் ஒரு கூறுதான் இந்தப் போக்கு. இது சமணர்களைக் கழுவேற்றிய வரலாற்று மீளலின் அணித்தான புள்ளி. ஆம், காட்டுமிராண்டித்தனமல்லாது வேறு என்ன!
சித்தரே, மேலான கருத்துக்கு மிகவும் நன்றி!
பொது இடத்தில் நிர்வாணமாக வந்தால் அதை எதிர்க்க யாருக்கும் உரிமை உண்டு.இதற்கு திக திமுக யாரும் வரவேண்டியதில்லை.
இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி வழியாக சாமியார்கள் போவதை தடுக்க முனைவது தவறானது.
முத்து, அவர்கள் பொதுமக்களின் புழக்கத்தில் குறிக்கிடும் வகையில் எங்கும் போவதாய் தெரிவதில்லை. (பெரும்பான்மையை மதித்து தொலைக்கும் கட்டாயம் அவர்களுக்கும் இருக்கிறது.) முன்னமே தீர்மானிக்கப்பட்டு, தங்களை மதிக்கும் மக்களுடன் புழங்குகிறார்கள், நடக்கிறார்கள், போதிக்கிறர்கள். இதனால் யாருக்கும் தொந்தரவு இல்லாதபோது எதிர்ப்பிற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. இது அப்பட்டமான சகிப்பின்மை மட்டுமே.
ரோசாவசந்த் எழுதிட்டமேன்னு நீங்க நியாயப் படுத்தறதா தோணுது.... நிர்வாணமாகப் போவது என்பதே ஆபாசம் தான்.... அவர்கள் ஏதாவது காட்டுக்குள்ளோ இல்லை அவர்களது ஆசிரமத்திலோ நிர்வாணமாக இருந்து தொலைத்தால் பிரச்சினை இல்லை.... பொது இடத்துக்கு வந்து தொலைப்பதால் தான் எதிர்க்க வேண்டி இருக்கிறது....
எப்படியோ இத்தனை நாட்களாய் புனித பிம்பங்கள் எல்லாம் இந்துக்களை மட்டுமே தி.க.வும், திமுகவும் எதிர்க்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்... அவர்கள் வாயில் மண்போடும் விதமாக திக/திமுகவினர் இப்போது சமணர்களையும் எதிர்த்திருக்கிறார்கள்.....
ரோசாவசந்த் எழுதிட்டமேன்னு நீங்க நியாயப் படுத்தறதா தோணுது.... நிர்வாணமாகப் போவது என்பதே ஆபாசம் தான்.... அவர்கள் ஏதாவது காட்டுக்குள்ளோ இல்லை அவர்களது ஆசிரமத்திலோ நிர்வாணமாக இருந்து தொலைத்தால் பிரச்சினை இல்லை.... பொது இடத்துக்கு வந்து தொலைப்பதால் தான் எதிர்க்க வேண்டி இருக்கிறது....
எப்படியோ இத்தனை நாட்களாய் புனித பிம்பங்கள் எல்லாம் இந்துக்களை மட்டுமே தி.க.வும், திமுகவும் எதிர்க்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்... அவர்கள் வாயில் மண்போடும் விதமாக திக/திமுகவினர் இப்போது சமணர்களையும் எதிர்த்திருக்கிறார்கள்.....
தமிழகத்தை தாண்டினால், இந்த மூடர்களுக்கு ஆப்பு வைத்து ஒட்ட நறுக்கி விடுவார்கள்.
தமிழ்நாட்டில் தான் பாப்பானை தரக்குறைவாக கொச்சையாக பேசி இந்துக்கடவுள்களை மட்டும் அவமானப்படுத்தி இவர்கள் புரட்சி செய்வார்கள்.
வெளியே கால் வைத்தால், இவர்களுக்கு ஒட்ட நறுக்கி விடுவார்கள். அங்கு 'வீரமும்' இருக்காது, 'மணியும்' கறைந்துவிடும். எதற்கு வம்பு?
நன்றி
>> இன்றைய சமூக வளர்ர்சியின் போக்கில் பன்மைத்துவ எதிர்நிலையும், சகிப்புத்தன்மையற்றதுமாக வளரும் சமூகத்தின் ஒரு கூறுதான் இந்தப் போக்கு. இது சமணர்களைக் கழுவேற்றிய வரலாற்று மீளலின் அணித்தான புள்ளி. ஆம், காட்டுமிராண்டித்தனமல்லாது வேறு என்ன! >>
சித்தர் சொல்வதும் வசந்த் சொல்வதும் மேம்போக்காக உள்ளது.
'பன்மைத்தன்மை' என்பது அவர்களை நிர்வாணமாக நடக்கவிடாததில் கெட்டுப் போய்விட்டதாகச் சொல்வது அதிக ஆழமற்று ஒலிக்கிறது.
சமணத்தினை இந்துத்துவவாதிகள் முற்ற முழுக்க தங்கள் ஐடியாலஜியில் விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் (அதை சமணர்களும் கூமுட்டைத்தனமாக ஆதரித்துக் கொண்டிருக்கும் வேளையில்) - இந்தக் குற்றச்சாட்டை திக திமுகவினர் மீது வைப்பது - ஆராயாமல் செய்யும் விசயம்.
>> முத்து, அவர்கள் பொதுமக்களின் புழக்கத்தில் குறிக்கிடும் வகையில் எங்கும் போவதாய் தெரிவதில்லை. (பெரும்பான்மையை மதித்து தொலைக்கும் கட்டாயம் அவர்களுக்கும் இருக்கிறது.) முன்னமே தீர்மானிக்கப்பட்டு, தங்களை மதிக்கும் மக்களுடன் புழங்குகிறார்கள், நடக்கிறார்கள், போதிக்கிறர்கள். இதனால் யாருக்கும் தொந்தரவு இல்லாதபோது எதிர்ப்பிற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. இது அப்பட்டமான சகிப்பின்மை மட்டுமே. >>
பொதுமக்கள் புழங்கும் இடத்தில் நிர்வாணத்துக்குத்தானே முதலில் எதிர்ப்பு வந்தது. பிறகுதானே இவர்கள் தங்கள் வழியை மாற்றிக் கொண்டதாக அறிகிறோம்?
இரவில் இவர்கள் இப்படிப் பயணம் செய்வதை எதிர்ப்பது தேவையற்றது.
>> இந்த விஷயத்தில் பெரியாரிடமே அடிப்படையில் பிரச்சனை இருப்பதாகவே தோன்றுகிறது. கடவுள் கதைகளை முன்வைத்து, அதன் ஆபாசங்கள் பற்றி பேசியது, கடவுள்களின் ஒழுக்கக் கேட்டை விலாவாரியாக பேசியது என்ற விஷயத்தில் பெரியார்தான் இதற்கான மதிப்பீடுகளை இவர்களுக்கு ஏற்படுத்தி தருகிறார். >>
போச்சு! :))
ரோசா! 'மதம்' என்கிற கேடுகெட்ட கருத்தாக்கத்தை வைத்து பார்ப்பனீயவாதிகள் நடத்தி வந்த ஒரு அதிகார அராஜகத்தை - அதன் உளுத்துப் பொன உள்ளீடுகளை, சின்னங்களை கட்டுடைக்க வேண்டிய தேவையின் பொருட்டும் - அதன் context-இலுமே பெரியார் - அவர்களின் புராணங்களை கிழித்தார்.
இதை வெட்டி ஒட்டி பின்நவீனத்துவ எட்சைபோடுதலுக்கான உங்கள் 'சட்டத்தில்' அவரது 'செயல்பாட்டை' நீங்கள் எடை போடுகிறீர்கள்.
உங்கள் கோபம் கொஞ்சமேனும் நியாயமுள்ளது; ஆனால். Your belligerance is losing its logical plane! :)
>> பகுத்தறிவு பூரவமாகவே பாத்தாலும் கூட, பகுத்தறிவு வெற்றிகரமாய் எந்த பிரச்சனயும் இல்லாமல் ஒரு கணித சட்டகத்தில்தான் செயல்பட முடியும். இயற்பியல் உட்பட்ட மற்ற துறைகளிலும், கணித சட்டகத்தில் இயங்கும் போது மட்டுமே, அங்கே அறிவியல் பூர்வமான ஒரு பகுத்தறிவு பார்வை செயல்படுவதாக கூற முடியும். ஆனால் கணித சட்டகத்தில் நாம் அரசியலும், இலக்கியமும், சமூகவியல் ஆய்வுகளும் செய்ய இயலாது. அதனால் பகுத்தறிவு என்பதன் பயன் ஒரு எல்லை வரைதான் இருக்க முடியும். >>
ஜெயமோகனின் குரல் கேட்கிறது இங்கே!
அவர்தான் "ஒரு முதிராப் பழங்குடிச் சமூகத்துக்கு இருக்கும் அளவு 'மெய்யியல்' (அது என்ன எழவோ?!) கூட பெரியாரிடமோ அவரது இயக்கத்திடமோ இல்லை" என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்!
ஒரு செயல்பாட்டைப் பேசும்போது அதன் நோக்கத்தை அதன் தளத்தில் வைத்துப் பேசுவதென்பதுதான் இயல்பாக இருக்கும்.
பெரியார் Shock Value-க்காக மட்டுமே இயக்கம் கணிட்ருந்திருப்பாரானால் கடைசி வரை பிள்ளையார் சிலை உடைப்பில் மட்டும் ஈடிபட்டிருந்திருப்பார்.
இந்தியாவின் சமூக-அரசியல் தளங்களின் Paradigm Shift- ஐ தீர்மானித்திருந்திருக்க மாட்டார்! :)
அவரது - அவரது இயக்கங்க(ளின்) செயல்பாடுகளின் பிழிவே - இன்று நாம் காணும் கூட்டாட்சி முறையின் வெற்றி, மொழிக் கொள்கை, சமூக நீதிக் கொள்கை போன்ற - உன்னதக் கருத்தாக்கங்கள் இந்தியாவின் நாளைய உள்ளீட்டையே தீர்மானிக்கும் அளவு வெற்றி பெற்றிருப்பது - எந்தப் பெருங்கொம்பன்களின் மதிப்பீட்டையும் விட திக, திமுக-வின் தனிப்பட்ட சாதனையே.
மற்றபடி - உங்கள் பதிவில் Sweeping generalisations அதிகப்படியாக உள்ளது.
வசந்த்:
இந்தப்பதிவை இப்போதுதான் படித்தேன். முக்கியமான விதயம் ஒன்றைக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி. இவ்விதயத்தை நீங்கள் எழுதியது குறித்து ஒருவிதத்தில் ஆழ்ந்த மகிழ்ச்சியும் அடைகிறேன். இது பற்றி (திகவினர் சமணத்துறவியிடம் நடந்துகொண்டமுறை, இவ்விதயம் குறித்த அவர்களது அணுகுமுறை பற்றி பின்னூட்டத்திலோ, பதிவிலோ எழுதியதாக நினைவு).
1. பகுத்தறிவு என்பதை ஒரு சட்டகமாக, அணுகுமுறையாக பார்க்கிறீர்கள் என நான் புரிந்துகொள்கிறேன். நான் அவ்வாறு பார்ப்பதில்லை. பகுத்தறிவின் செயல்வடிவமாக தளைப்படுத்தும் எதையும் கட்டுடைக்கும் வழிமுறையாக மட்டும் பார்க்கிறேன். அதனால் அதை மதம் போன்ற இன்னொரு வழியாக, நம்பிக்கையாக என்னால் பார்க்கமுடியவில்லை. அவ்விதத்திலேயே அது கம்யூனிசத்தில் இருந்து ஒரு தளத்தில் மிக அழகாக வேறுபட்டு அதைக்கடப்பதாக நினைக்கிறேன். அதாவது பகுத்தறிவு என்பதை இறுக்கமான ஒரு கொள்கையாக, பின்பற்றத்தக்கதாக நினைக்கவில்லை. மாறாக அது ஒன்றே எல்லா தளைகளையும் தனக்குத்தானே இனங்கண்டுகொள்ளவும் அவற்றை உடைத்து கடந்துசெல்லவும் தேவைக்குத் தகுந்தாற்போல பயன்படுத்திக்கொள்ள வேண்டிய மருந்தாகப் பார்க்கிறேன். இதற்கு மிகவும் சரியான உதாரணத்தை நீங்களே பெரியாரைக்குறிப்பிட்டதன் மூலமாக சொல்லியிருக்கிறீர்கள். நானும் இந்துமத புராண நூல்களில் ஆபாசமாகக் கருதத்தக்கனவற்றை அவர் விரித்துப் பேசியபோது அதுபற்றி ஆச்சர்யம் அடைந்திருக்கிறேன். அந்த நேரங்களில் ஒரு ஒழுக்கவாதியைப்போல தோற்றமளிக்கும் பெரியாரை பின்னாளில் எனக்கு புரிய நேர்ந்தது. பெரியாரை நாம் ஒரு அரசியல் கட்சிக்கு தாரை வார்க்கநேர்ந்த துர்பாக்கியத்தாலேயே இந்த வித (திகவின் பகுத்தறிவு மடத்தனம்) விபரீதங்கள் நேர்கின்றன. அவரை தமிழ்ச் சமூகம் ஆழமாக உள்வாங்கவேண்டியிருக்கிறது. அதற்கு கட்சி, இனவேறுபாடுகள் அவசியமற்றவைகள். அவைகளை முன்னிருத்தியும் அவரை அலட்சியப்படுத்தி, குறைத்தும், மற்ற தலித் விரோத தளங்களில் அவரை வைப்பதுமான முயற்சிகள் சிலரால் அறிந்து பலரால் அறியாலும் செய்யப்படுவன. இவைகளை கடந்து பெரியாரை எடுத்துக்கொள்வதுதான் இது போன்ற விபரீதங்கள் நிகழாவண்ணம் வழிவகுக்கும்.
2. துறவு என்பது பற்றிய இன்றையபுரிதல் திகவினரின் முட்டாள்தனத்துக்கு குறைவற்றதாக இருக்கிறது. துறவு என்பது சமூகத்தை அதன் அத்தனை ஒழுங்குகளோடும், அழகுகளோடும், அசிங்களோடும், வசதிகளோடும் துறப்பதே. அது இன்னொரு புற ஒழுங்கைப்பேணுவதால் வருவதல்ல. உண்மையான சுயஒழுங்கை சுயவெளிச்சத்தில் கண்டுகொள்வது. இந்த ஒரு வசதிதான் கிழக்கு (குறிப்பாக இந்தியா) ஆபிரகாமிய மதங்களைப் போலல்லாமல் வழங்கமுடிந்தது. இதைக்கூட உணரமுடியாத அளவிற்கு நாமும் அத்தகைய ஆபிரகாமிய பார்வைக்குள் விழுந்துவிட்டதை என்னவென்பது?
இதற்கு முன் சபரிமலையில் பக்தர்கள் ஒழுங்கைப்பேணவேண்டும் என்று ஒரு பதிவர் எழுதியபோது எழுத எண்ணியது. இதை நீங்கள் எழுதியதன் மூலம் மகிழ்வும் நன்றியும்.
நியோ, தங்கமணி, மற்றும் கருத்தெழுதிய மற்றவர்களுக்கும் நன்றி.
தங்கமணி எழுதியது குறித்து சொல்ல சில விஷயங்கள் உண்டு (எதிர்ப்பாய் அல்ல, பக்கவாட்டில்) நாளை பொறுமை நேரம் இருந்தால் வருகிறேன். இப்போது வீட்டிற்கு கிளம்பவேண்டும். சென்ற வாரம் போல் இரவு வேலையிடத்திற்கு வரப்போவதில்லை என்பதால், இனி பின்னூட்டங்கள் வந்தால் அது நாளைதான் வெளியாகும்.
ரோசா மன்னிக்கவும். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. தவறாக இருப்பின் வெளியிட வேண்டாம்.
// ஜயராமன் said...
தமிழகத்தை தாண்டினால், இந்த மூடர்களுக்கு ஆப்பு வைத்து ஒட்ட நறுக்கி விடுவார்கள்.
தமிழ்நாட்டில் தான் பாப்பானை தரக்குறைவாக கொச்சையாக பேசி இந்துக்கடவுள்களை மட்டும் அவமானப்படுத்தி இவர்கள் புரட்சி செய்வார்கள்.
வெளியே கால் வைத்தால், இவர்களுக்கு ஒட்ட நறுக்கி விடுவார்கள். அங்கு 'வீரமும்' இருக்காது, 'மணியும்' கறைந்துவிடும். எதற்கு வம்பு?//
ஏன்னா,
ஆடு நனையுதேன்னு ஏதோ அழுத கதை மாதிரி இருக்கு.
இதில் எங்கு பாப்பான் வந்தான்?. எப்படியாவது சந்தடிசாக்கில் ராமசாமிய, வீரமணிய திட்டனும் அவ்வளவுதானே?
ஏங்கப்பு உ.பி.ல பெரியார் விழா நடந்ததே பார்க்கவில்லையா? நாட்டின் பல பகுதிகளில் ( பம்பாய் மற்றும் டெல்லி உட்பட ) அவரின் கருத்துகள் பரப்பப்படுகிறது.
ஆப்பு, நறுக்கு :- அய்யோ பாவம். இந்த மாதிரி பிதற்றல்காரர்களுக்காகவே பாப்பாத்தி ஜெ அருமையா ஒரு ஆப்பு வெச்சாளே !!! அது தெரியாதா நோக்கு? அத்த சரி செய்ய முதல்ல கோபாலபுரத்துக்கு காவடி எடுங்கோ. சாரின்னா நீங்களாம் காவடி எடுப்பேளா ? அப்புறம் வேற ஆப்ப பத்தி பேசலாம்.
ரோசா,
பெரியார் திகவினர், திகவினரின் Militant Wing என கூறலாம் (ஒரு காலத்தில் இருந்த தீ.கம்யூனிஸ்டுகள் போல).
பொதுவாக நிர்வாணமாக சாலையில் செல்வது என்பது சரியல்ல (அது யாராக இருப்பினும்). அதை தடுக்கமுயன்ற வழிகள் தவறாக இருக்கலாம். ஆனால் தடுப்பதே தவறு என்பது ஏற்கக்கூடியது இல்லை. இதுபோல் ஏற்கனவே பல முறை தமிழகத்திலும் பாண்டியிலும் நடந்து இருக்கிறது.
இதில் நீங்கள் பெரியாரையும் இழுத்துவிட்டீர்கள். அவர் நிர்வாண சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து புகைபடம் எடுத்துக்கொண்டார். ஜெர்மனியிலோ அல்லது தமிழகத்திலோ நிர்வாணமாகவே திரிந்தார் என்றிருந்தால் இவ்விஷயங்களை ஒப்பிட்டு பேசியிருக்கலாம்.
அவர்களுக்கு உட்பட்ட இடத்தில் ஒருவர் எப்படி இருந்தாலும் அதை பற்றி மற்றவர்கள் கவலை பட போவதில்லை. ஆனால் ஒரு பொது இடத்தில் இவ்வாறு நடத்து கொள்வது என்பது வேறு.
"வஞ்சப் புகழ்ச்சி" யில் ஹிந்துத்வாவாதிகளைத் திட்டித்தான் ஆகவேண்டுமா...(இந்தப் பதிவில்).?
தி. க காட்டுமிராண்டித்தனம் இந்துக்களிடம் தான் செய்வார்கள்...எங்கே...பெண்ணீயம் பேசும் தி. க வினர் முஸ்லீம் பெண்கள் புர்கா அணியக் கூடாது என்று போராட்டம் செய்யட்டுமே பார்க்கலாம்...இவர்கள் "பப்பு" அவர்களிடம் வேகாது...infact, பகுத்தறிவு, கம்யூனிசம் எல்லாமே, செமைடிக் மதங்கள் தான். அவர்களிடம் இருக்கும் அதே, ஏற்றுக் கொள்ளாதன்மை இவர்களிடமும் பார்க்கலாம். அதை இரண்டு வரியில் சொல்லி முடித்திருக்கலாம்.
இப்படி நீட்டி, உங்கள் இந்துத்வா வெறுப்பை ஞாயப்படுத்தியிருக்கவேண்டிய அவசியம் தான் என்ன?
//
இந்துத்வத்தை எதிர்கொள்ள இந்துத்வம் போலவே புதிய அணுகுமுறைகளை கைகொள்ள வேண்டும் என்று ...
//
உங்கள் மற்ற பதிவுகளையும் பார்த்தேன்...இந்துத்வா மேல் அப்படி என்ன வெறுப்பு உங்களுக்கு....?
நல்ல கேள்வி. ஆனால் இப்படி கேள்வி கேட்பவரை 'ஹிந்துத்வா' என்று சொன்னால் கூட அது லேபிள். அது தானே லாஜிக்!
முதலில் தான் என்ன தின்கிறோம் எதை சுவாசிக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லவும் ஒப்புகொள்ளவும் கூடிய குறைந்த பட்ச நேர்மையை கொண்டவர்களுக்குத்தான், என்னோடும் பேசும் தகுதியை தரமுடியும்.
//வஞ்சப் புகழ்ச்சி" யில் ஹிந்துத்வாவாதிகளைத் திட்டித்தான் ஆகவேண்டுமா..//
//உங்கள் மற்ற பதிவுகளையும் பார்த்தேன்...இந்துத்வா மேல் அப்படி என்ன வெறுப்பு உங்களுக்கு....? //
'எய்ட்ஸிற்கு மருந்து கண்டு பிடித்துத்தான் ஆகவேண்டுமா?,
எய்ட்ஸ் கிருமி மேல் ஏன் இந்த வெறுப்பு?, அதை ஏன் எதிர்கொள்ள வேண்டும்?, என்று எய்ட்ஸ் கிருமியை ஒரு உயிரியல் ஆயுதமாய் உலவவிட்டவன் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?
கண்ணகி பற்றி ஞாநி எழுதியதற்காக விகடனை எரித்திருக்கிறார்கள்.
'ஞாநியை விட தீவிரமாய் கண்ணகியை பற்றி மோசமாய் பேசிய பெரியாரை என்ன செய்ய போகிறார்கள்?' என்று சோ கேட்டால், அதில் வழக்கமான 'சோ'த்தனம் இருக்குமென்றாலும், தர்க்கபூர்வமாய் கேள்வி 'நியாமில்லை' என்று எப்படி சொல்லமுடியும்?!
இது பற்றிய என் பதிவில் இந்த இணைப்பை அளித்திருக்கிறேன்.
நான் எழுதியதை விட மிக சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
ஆங்கிலத்தில் சில வரிகளை எழுதுகிறேன்.மன்னிக்கவும்.அதை தமிழில் மொழிபெயர்க்க தெரியவில்லை.
Rationalism has taken many new forms in western philosophy.Classical rationalism has been subject to reviews,criticisms and has lead way to relativism,scientific realism and logical positivism.Rationalists in tamilnadu are unaware of such radical new concepts.This will end up as you prophesised.
/திகவினர் (ஒருவகையில் கம்யூனிஸ்டுகளும்) ஒரே சூத்திரத்தை மத அடிப்படைவாதிகளை போல பற்றி கொண்டு, காலத்துக்கு ஏற்ற பரிசீலனைகளில் ஈடுபடாமல் இயங்கிவருகிறார்கள்/
செல்வன், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இந்த விஷயத்தில் உங்களுடன் நானும் ஒத்து போகிறேன்.
ஸாஹுல்,
ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் திகவையும், சிவசேனாவையும் ஒப்பிட்டால், இரண்டும் ஒன்று, இரண்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்வதாக அர்த்தமில்லை.
சமண சாமியார்களின் நிர்வாணத்திற்கு திக காட்டிய எதிர்ப்பு, ஃபயர் போன்ற படங்களுக்கு சிவசேனா காட்டிய எதிர்ப்பை ஒத்தது என்பதுதான் நான் சொல்ல வருவது. இரண்டு எதிர்ப்புக்கும் பின்னால் அடிப்படையாக இருப்பது, கலாச்சார அடிப்படையில், தாங்களின் சொந்த மதிப்பீடுகள் சார்ந்து, ஆபாசமாகவும் கலாச்சாரத்திற்கு எதிரானதாகவும் கருதப்பட்டிருக்கும் கருத்தியல்கள். சிவசேனாவின் எதிர்ப்பும் சரி, திகவின் எதிர்ப்பும் சரி மக்கள் பிரச்சனை, சமூக பிரச்சனை, மனித விடுதலை சார்ந்தது அல்ல. மாறாக அதற்கு எதிரானது. மற்ற நிலைபாடுகளை அனுமதிக்கும், சகித்து கொள்ளும் பரந்த மனப்பான்மைக்கு எதிரானது. இரண்டும் ஆபாசம் என்று, தனது பார்வையை மட்டும் சார்ந்த, சொந்த மதிப்பீடுகளை ஒரு அடிப்படைவாதமாக மூர்க்கமாக நம்பும் மனநிலை சார்ந்தது. இன்னும் ஒற்றுமைகளை சொல்லமுடியும் என்றாலும், இப்போதைக்கு இது போதும் என்று தோன்றுகிறது. நன்றி!
///////
//உங்கள் மற்ற பதிவுகளையும் பார்த்தேன்...இந்துத்வா மேல் அப்படி என்ன வெறுப்பு உங்களுக்கு....? //
'எய்ட்ஸிற்கு மருந்து கண்டு பிடித்துத்தான் ஆகவேண்டுமா?,
எய்ட்ஸ் கிருமி மேல் ஏன் இந்த வெறுப்பு?, அதை ஏன் எதிர்கொள்ள வேண்டும்?, என்று எய்ட்ஸ் கிருமியை ஒரு உயிரியல் ஆயுதமாய் உலவவிட்டவன் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?
///////
உங்க தகுதிக்கு இது பேச்சல்ல. உங்களுக்கு பேச தகுதியுமில்லை.
உங்க பதிவும் அந்தப் பதிவிலே இந்த comment-ம் நிச்சயம் contradiction தான்.
Post a Comment
<< Home