ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Thursday, June 01, 2006இனி.தமிழை பத்தாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்கியதற்கு (செய்தியை இன்னமும் முழுமையாய் படிக்கவில்லை, தமிழகத்திலுள்ள எல்ல வகை பள்ளிகளையும் (உதாரணமாய் மகாராஷ்டிரத்தில் இருப்பது போல்) இது கட்டாயப்படுத்துமா என்று தெரியவில்லை) கலைஞரை பாராட்டி பதிவு போடலாம் என்று நினைத்தால், டாவின்சி கோட் திரைப்படத்தை நேற்று மாலை தடை செய்து, மிக மோசமான முட்டாள்தனமான முன்னுதாரணத்தை தமிழக அரசு ஏற்படுத்தி யிருக்கிறது. இனி இந்துத்வ ஆசாமிகளும், பார்பன கொழுந்துகளும் பெரியார் எழுதுக்களை தடை செய்ய லாஜிக் போட்டு கேள்வி கேட்கலாம். அப்படி கேட்டால், 'கிரிஸ்தவர்கள் கேட்டால் செய்வோம், நீங்கள் கேட்டால் முடியாது' என்று சொல்வதற்கான நியாயத்தை, ஒரு அரசாங்கம் வெகுமக்களிடம் எடுபடக்கூடிய வகையில் தர முடியும் என்று தோன்றவில்லை. குறிப்பிட்ட அளவு கிருஸ்தவ சமுதாயம் திரைப்படத்திற்கு எதிராக தமிழகத்தில் கொதித்து எழுந்ததாகவும் தெரியவில்லை. கோரிக்கை எழுப்பியவர்களில் பலர் படத்தை பார்த்திருப்பார்கள், நாவலை படித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. குருட்டுத்தனமான மதப்பற்றிலேயே ஒரு மேலோட்டமான எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள். குறிப்பிட்ட ஜாதியினர், தங்களுக்கென்று ஒரு வரலாற்று ஆசாமியை தேர்ந்தெடுத்து மாவட்டத்தின் பெயரை அவர் பெயரில் மாற்றாவிட்டால் 'புரட்சி வெடிக்கும்' என்று போஸ்டர் ஒட்டுவது போன்ற, தமிழகத்தில் பழகிப் போன உணர்வு தளும்பும் எதிர்ப்பு. அது தமிழ்நாட்டின் அமைதியை, சமனை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. ஆனால் ஓட்டிற்காக இந்த அரசு இதை செய்திருக்கிறது. அதுவும் முட்டாள்தனமானது என்பது என் கருத்து. காங்கிரஸ் இதை செய்தால், ஏற்கனவே பாஜகவிற்கு எதிராக இருக்கும் கிருஸ்தவ மனம் காங்கிரஸை ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் அதிமுக மீது அப்படி ஒரு எதிர்ப்புணர்வு கிருஸ்தவர்களுக்கு இல்லாத நிலையில், அடிப்படைவாத கிரிஸ்தவர்கள் இந்த ஒரு தடைக்காக திமுகவை ஆதரிப்பார்கள் என்று தோன்றவில்லை. தாராள மனம் உடைய கிரிஸ்தவர்களுக்கு இந்த தடை ஒரு பொருட்டு அல்ல. 'என்ன இருந்தாலும் இவர்கள் கடவுள் இல்லை என்பவர்கள், மதத்துக்கு எதிரானவர்கள்' என்று படிந்து போன கருத்துடன் நாளை ஜெயா டீவியில் யாராவது பாதிரியார் பேசலாம். அதனால் எதிர்ப்பார்ப்பது போல் (அதுவும் அதிமுக தடையை எதிர்த்து பேசாத போது) திமுகவிற்கு வோட்டு லாபம் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. திமுக என்ன வகை சமரசங்களை செய்தாலும், வளைந்து கொடுத்தாலும், அதை பற்றி ஏற்ப்பட்ட பிம்பம் மாறப் போவதில்லை. மத அடிப்படைவாதிகள் தேவையென்றால் ஒன்று சேர்ந்து கொள்ளவும் தயங்க மாட்டார்கள். பெரியார் எழுத்தை, அல்லது பெரியார் பற்றி நாளை தடை செய்ய உதவுமென்றால் டாவின்சி கோட் தடைக்கு ஆதரவாக இந்துத்வ பார்பனியவாதிகள் குரலெழுப்பவும் செய்வார்கள். மற்றவர்களும் சேர்ந்து கொள்ளலாம். ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரபூர்வ 'ஆர்கனைஸர்' தலையங்கத்தில் டாவின்சி கோட் தடை செய்யப்படுவதற்கு ஆதரவாக எழுதியுள்ளது. ஆனால் அவர்கள் அதே போல வாட்டர், ஃபயர் படங்களையும் அரசாங்க ஆணை மூலம் தடை செய்ய விரும்புகிறார்கள். தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து தங்களுக்கான வெளியையும், வசதியையும் கருதி, அம்பேத்காரை இந்துத்வா (எல்லா இந்துத்வ இயக்கங்களும் என்று சொல்ல முடியாது, குறிப்பாக ஆர். எஸ். எஸ்) தங்கள் சட்டகத்திற்குள் தொட்டுகொண்டிருக்கின்றன. (அதற்கு முன்னாலேயே கூட முயற்சி தொடங்கியிருக்கலாம் என்றாலும், நேரடியாய் ஊடகத்தில் அம்பேத்காரை தங்கள் சார்பாக உதிர்க்க தொடங்கியதை குறிப்பிடுகிறேன்.) அம்பேத்காரை இந்துத்வ சட்டகத்தில் அடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை, அம்பேத்காரை பலர் தீவிரமாய் படிக்கத் தொடங்குவது இந்துத்வத்திற்கு உவப்பாக இருக்காது என்பது நிதர்சனம். என்றாலும் இந்துத்வம் பகிர்ந்து பயன்படுத்திகொள்ள அம்பேத்காரிடம் ஒரு பகுதி இருந்தது. அதன் வெளிபாட்டைத்தான் காண்கிறோம். அப்படிப் பட்ட நிலையிலேயே சல்மான் ருஷ்டியின் சாத்தானின் கவிதைகள் தடை செய்யப்பட்டது போல், அம்பேத்காரின் எழுத்துக்களையும் தடை செய்ய வேண்டும் என்று குரல் எழும்பியது. உதாரணமாய் நியு இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு கட்டுரையே வந்தது. (தமிழ்நாட்டுக்கு வெளியே இருப்பதால் அவர்களுக்கு பெரியாரின் இன்னும் பிரச்சனையான எழுத்து பற்றி பேசவேண்டியிருந்ததில்லை. அதே நேரம் தமிழ்நாட்டுக்குள் பெரியாரை எதிர்கொள்ள இவர்கள் அம்பேத்காரை தொட்டுகொள்ளவும் செய்வார்கள்.) இஸ்லாமிய, கிருஸ்தவ அடிப்படைவாதிகள் தாங்கள் புண்படுவதாக சொல்லி கேட்கும் தடைக்கும், இந்துத்வவாதிகள் விரும்பும் தடைக்கும் மிக தெளிவான வித்தியாசங்கள் உண்டு. அதை வித்தியாசத்தை தர்க்க பெருக்கில் அடித்து சென்று விடுவார்கள். கிரிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கேட்பது தங்கள் மதம் மட்டும் சார்ந்த விஷயம். அதை தடைசெய்வதற்கும் சமுதாய பிரச்சனைகளுக்கும் தொடர்பு இல்லை. அவர்கள் கேட்கும் தடையை நிறைவேற்றினால் ஒரு கருத்து சுதந்திர மறுப்பாக மட்டும் இருக்கும். ஆனால் வட்டர் படத்தை தடை செயவ்து, நமது வரலாற்றில் இருந்த விதவைகளின் நிலை பற்றி பேசுவதற்கான தடையாகும். அம்பேத்காரின்/பெரியாரின் எழுத்துக்களின் நோக்கம் இந்துமதத்தை தாக்குவது அல்ல, சாதிய சட்டகத்தை தாக்குவது. அதில் இந்துமத்ததையும் தாக்குவது தவிர்க்க இயலாதது. இந்த வித்தியாசம் புரியும் என்றாலும், மொட்டையாக டாவின்சி கோடிற்கும், சாத்தானின் கவிதைகளுக்கு விழுந்த தடையை (அதுவும் எனக்கு ஒப்புக் கொள்ள கூடியது அல்ல என்றாலும்) பெரியார் அம்பேத்கார் எழுத்துக்களுடன் ஒப்பிட்டு மட்டையடிப்பதற்கு காரணம், அவர்களுக்கு சிந்திக்க தெரியாது என்பதல்ல. ஆமீர்கானின் ஃபானா திரைப்படம் இப்படி அதிகார பூர்வ தடையில்லாமல் குஜராத்தில் அராஜகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அதிகார பூர்வமான தடையில்லாததையே ஒரு வித்தியாசமாய் காட்டி, தங்களின் ஜனநாயகத்திற்கு சுயசான்றிதழ் வழக்கும் கலையெல்லாம் இந்துத்வ குதர்கங்களுக்கு மட்டுமே தனித்துவமானது. கவனிக்க வேண்டியது என்னவெனில், தமிழக அரசு தடை செய்யவில்லையெனில், 'டாவின்சி கோட்' எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடியிருக்கும். கூடிபோனால் ஒரு கூட்டம் போட்டு தங்கள் எதிர்ப்பை காட்டியிருப்பார்கள். ஆனால் சட்டபூர்வமாய் தனக்கு படத்தை வெளியிட உரிமை இருந்தும், ஆமீர்கானால் முடியவில்லை. அவர் தோன்றும் விளம்பரங்களை கூட திரும்ப பெற்று கொண்டாகிவிட்டது. இதெல்லாம் மக்கள் தாங்களாக செய்யும் எழுச்சியாகத்தானே கருத வேண்டும் என்று கூட சொல்வார்கள். இத்தனக்கும் திரைப்படம் பாஜகவின் கருத்துருவத்திற்கு எதிரானது அல்ல. நர்மதாவிற்கும் படத்திற்கும் கூட தொடர்பு இல்லை. படத்தில் அவர்களுக்கு பிரச்சனையே இல்லை. ஆமீர்கான் பேசிய ஒரு பேச்சுக்கு, சொந்த கருத்துக்கு அவர் விலை தர வேண்டியிருக்கிறது. அப்படியும் அவர் குஜராத்திற்கு எதிராக, அணை கட்டுவதற்கு எதிராய் கூட பேசியதாய் தெரியவில்லை. வெளியேற்றப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு சட்டப்படி நடக்க வேண்டிய மறுவாழ்வு பற்றியே அவர் பேசினார். மனிதாபிமானம் இருப்பதாக கூறும் யாருக்கும் இதில் எதிர்க்க எதுவும் இருக்க வாய்பில்லை. ஆனல் உலகிலேயே எங்கேயும் இல்லாத சகிப்புதன்மையை கொண்டிருப்பதாக, தூக்கி பிடித்து கொண்டிருக்கும் மதத்தையும் நாட்டையும் முன்வைத்த தேசியவாதிகளுக்கு, ஆமீர்கானின் மனிதாபிமானம் தேசத் துரோகமாக தெரிகிறது. ஆமீர்கான் சின்னதாய் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இறங்கி வந்திருப்பார்கள். நஷ்டமடைந்தாலும் தன் கருத்தில் உறுதியாக இருந்த அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த விஷயங்கள் ஒரு புறத்திலிருக்க இந்துவவாதிகளுக்கு அவலை அளிக்கும் வகையில் நியாயமில்லாத இந்த தடையை தமிழக அரசு செய்திருக்கிறது. ஒரு தெளிவான கிரிஸ்தவ அடிப்படைவாதியான புஷ் ஆட்சி செய்யும் அமேரிக்காவில் கூட தடை செய்யப்படாதது, கிரிஸ்தவத்தின் மீதும் கடும் தாக்குதல் நடத்திய பெரியாரின் படத்தையும் பெயரையும் ட்ரேட் மார்க்காக கொண்ட ஒரு கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் தடை செய்யப்பட்டிருப்பது வெட்கக்கேடு. மிகவும் தவறான உதாரணத்தை எதிர்காலத்தில் மேற்கோள் காட்டும்படி நிறைவேற்றியிருக்கிறது. அதே நேரம் தமிழை கட்டாய பாடமாக ஆக்கியதற்கு, இதை ஏன் இத்தனை ஆண்டுகளாய் செய்யவில்லை என்ற கேள்விகளை எல்லாம் விடுத்து பாராட்டுவோம். இதில் எதோ ஜனநாயகமின்மை இருப்பது போலவும், ஏதேச்சதிகாரம் போலவும் வழக்கம் போல குரல்கள் ஒலிக்கும். தமிழ் சூழலில் மட்டுமே நடக்கக் கூடிய அவலமாக இது இருந்தாலும் இதை கண்டு கொள்ள வேண்டியதில்லை. அவர்களும் இந்த நாட்டில் இருந்து விட்டு போகட்டும். இப்படி சிலர் பேசுவதையும் பொறுத்துக் கொள்ளக் கூடிய பரந்த மனப்பான்மை நமக்கு இருப்பதாக எடுத்து கொண்டு புன்சிரிப்புடன் காரியங்களை கவனிக்க வேண்டியதுதான். மற்றபடி இந்த விஷயத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்டு அரசாங்கம் நடக்க முடியாது. நாட்டின் பாதுகாப்பிலோ, மற்ற அடிப்படை விஷயங்களிலோ ஒரு அரசாங்கம் அப்படி நடந்து கொள்வதில்லை. குழந்தைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது என்று, அப்படி அனுப்பக் வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பத்தின் பெற்றோர்களை கேட்டுவிட்டு ஒரு அரசாங்கம் சட்டம் கொண்டு வருவதில்லை. அரசாங்கம் சிலதை நிர்பந்திக்கிறது என்றால், திட்டமிட்ட நுகர்வு கலாச்சாரமும் காலனியாதிக்க பாதிப்புக்ளும் வேறு ஒன்றை நிர்பந்திக்கிறது. அதில் அரசாங்கம் மட்டும் கருத்து கணிப்பு நடத்தி விட்டு செய்ய முடியாது. அதே நேரம் தமிழ் பயில்வதில் பல மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும். மார்க் போடுவதில் உள்ள கஞ்சத்தனம், எடுப்பதில் உள்ள பிரச்சனைகளை களையப் பட வேண்டும். இன்று தமிழ் தெரியாத ஒரு இளய தலைமுறையே வடிவெடுத்துள்ளது. அவர்கள் தமிழை தங்களுக்கான மொழியாக கொள்வதே இப்போதய முக்கிய கரிசனமாக இருக்க வேண்டும். முதலில் தமிழை கற்பதும், தமிழில் எல்லாவற்றையும் புழங்க வைப்பதும் மிக அத்தியாவசியமாய் செய்யவேண்டியவை. தமிழ் வளர்ச்சிக்கு வேறு எத்தனையோ செய்யலாம். தமிழ் வளர எல்லா மாணவர்களும் சங்ககால பாடல்களை உருப்போடவேண்டிய கட்டாயமில்லை. இலக்கியத்திலும் தற்கால நவீன இலக்கியம் அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் அதில் தமிழண்ணலும் வைரமுத்து போன்றவர்களும்தான் இப்போதைக்கு மூக்கை காட்டுவார்கள் என்பதால் இன்னும் கொஞ்ச காலம் அதற்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. |
13 Comments:
வழக்கம் போல் ஒரு கேள்வி: அடுத்த வருடம் பத்தாவதுக்கு செல்லும் மாணவர்களும் பத்தாம் வகுப்பு தமிழ் பயில வேண்டுமா? (கர்நாடகாவில் சட்டம் இப்படித்தான் இயங்குகிறது. திடீரென்று ஜாகை மாறி, +2-வில் சேர்ந்தாலும், கன்னடம் படித்து தேற வேண்டும்.)
கருணாநிதியின் கண்ணுக்கு இப்பொழுது ஓட்டு வங்கியை
தவிர வேறு எதுவும் தெரிய மாட்டேங்கிறது.அவர்களுடைய
தேர்தல் அறிக்கையே பெண்கள் ஓட்டு, விவசாய ஓட்டு, மத ஓட்டு
என்று செக்ஷன் செக்சனாக பிரித்து எழுதியிருந்தார்கள்.
ஆட்சியை கவிழ்த்தால் மீண்டும் அதிக பலத்தோடு வருவதற்கு
என்ன வேண்டுமோ அதை மட்டும் தான் இப்பொழுது செய்து வருகிறார்.
டாவின்சி கோட் தடை செய்ய பட்டதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது
அருட் தந்தை எஸ்ரா சற்குணம் கலைஞரின் நீண்ட நாள் நண்பர். அவர் கலைஞரிடம்
அந்த படத்தை தடை செய்ய சொல்லி கேட்டு இருப்பார். எது எப்படி இருப்பினும் இது
தவறே. ஓரிரு மாதம் கழித்து இந்த தடை நீக்கப் படும் என்றே கருதுகிறேன்.
எல்லா சாதியினரும் அர்ச்சகர், கோவில்களில் பரிவட்டம் நீக்குதல்,தமிழ் கட்டாய பாடம்
மீண்டும் கண்ணகி சிலை இப்படி பலவற்றை எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
பாஸ்டன், அரசாங்கம் இதை எப்படி செயல்படுத்தப் போகிறது என்று தெரியாது. அடுத்த வருஷம் பத்தாவது போகப்போகும் நபர் (அதுவரை தமிழ் படிக்காமல் திடீரென்று) பத்தாப்பு தமிழ் படிக்க சொன்னால் அது அநியாயம்தான். அதற்கு பதில் பழைய மொழியிலேயே தொடர்ந்து கொண்டு, தமிழில் ஒரு ஆரம்பக் கட்ட தேர்வை எழுதச் சொல்லலாம். அப்படி செய்தால் தவறு இருப்பதாக தெரியவில்லை.
சிவா, கண்ணகி சிலை மீண்டும் வைத்ததை பெரிதாய் நான் நொள்ளை சொல்லவில்லை என்றாலும், அதில் பாராட்ட எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அர்சகர் விஷயம் நிச்சயம் பாராட்டுக்குரியது (நமக்கென்ன ரவி ஸ்ரீனிவாஸ் மாதிரி குதர்க்க புத்தியா?) பரிவட்டமும் பராவாயில்லை. தமிழ் கட்டாயப் பாடம் முக்கியமான நடவடிக்கை. ரவி ஏன் இன்னும், 'இது தவறு, அரசியல் சட்டத்தில் தந்த உரிமைக்கு இது எதிரானது. இது குறித்து ஏற்கனவே நான் கருத்து சொல்லியிருக்கிறேன்.' என்று ஒரு எச்சப்பதிவு போடவில்லை என்று தெரியவில்லை? நாளை வருமோ?
டாவின்சி கோட் திரைப்படத்திற்கு ஓட்டுவங்கி அரசியல் அடிப்படையில் தடை செய்த கலைஞரை திராவிட தமிழர்கள் முன்னணி சார்பாக கடுமையாக கண்டிக்கிறோம்.
(ஆந்திர அரசாங்கத்தையும்)
அடுத்த வருடம் பத்தாவது எழுதுபவர் தமிழ் எல்லாம் எழுத தேவையில்லை ரோசா.
ஒவ்வொரு வகுப்பாக வருகிறதாம்.இந்த வருடம் ஒண்ணாப்பு.அடுத்த வருடம் இரண்டாப்பு..அப்படி
Atheist(atleast self-proclaimed one)at the helm of affairs of a secular state.In a ideal scenario this is a dream for irrelgious secularist like me - government that can concentrate on issue of governance and deliver the needs of the people.
But look what this octagenarian is doing.Most of the measures of the new government seem to directed at regualting religious affairs.Absurd
I think the attempt to ban this movie is blatant and obvious instance of religious appeasement .Vote-bank politics of the worst kind
முத்து விளக்கத்திற்கு நன்றி.
டாவின்சி கோடு திரைப்படத்தை தடை செய்வது தேவையில்லாத வேலை .கலைஞர் இதை தவிர்த்திருக்க வேண்டும்.
ரோசா,
தமிழ் சம்பந்தமாக கலைஞர் செய்வது பாரட்டுதலுக்கு உரியதே. ஆனால் அவரின் கடந்த கால நடவடிக்கை முதல் இப்போது செய்வது வரை மதம் என்று வந்து விட்டால் சிறுபான்மை ஆதரவு நிலையையே எடுக்கிறார்.கடவுள் இல்லை (ஒருவனே தெய்வம் ??) என்ற கொள்கையுள்ள அவர் செய்வது எல்லாம் ஓட்டுக்காகவே.நெல்லுக்குப்(ஓட்டுக்குப்) பாயும் தண்ணீர் எதோ புல்லுக்கும் (இந்த அர்ச்சகர் சட்டம், தமிழ்ப் பாடம்..இப்படி) புல்லுக்கும் பாய்வது வரை மகிழ்ச்சியே.
பரிவட்டம்:
பரிவட்டம் என்பது கோவில்களில் கொடுக்கப்படும் மரியாதை.சால்வை போடுவது,பழம் கொடுப்பது, கையடக்க பைபிள் கொடுப்பது,திருநீர் கொடுப்பது, நோன்பின் போது வருபவர்களுக்கு நோன்புகஞ்சி கொடுப்பது ( எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் நோன்பின் போது அனைவருக்கும் கைக்குட்டையும் கொடுப்பார். தலையில் தொப்பி போல் அணிந்து கொள்ள) ...இப்படிப் பலவற்றைச் சொல்லலாம்....
கலாச்சாரக் குப்பையில் VIP உபச்சாரம் இருக்கும் வரையில் எல்லா மதக் கோவில்களிலும் இது போல் ஒரு மரியாதை முறை இருந்தே தொலைக்கும். கடவுளின் முன் எல்லாரும் சமம் என்று நினைக்கும் ஆத்திகவாதிகள் VIPக்கு கொடுக்கும் மரியாதை வேறு சாதாரண மனிதனுக்கு கொடுக்கும் மரியாதை வேறு. இது மனிதனும் மதமும் உள்ளவரை இருக்கும். பரிவட்டம் மட்டுமே கலைஞருக்குத் தெரிவது அதிசியமல்ல.
அர்சகர் விஷயம்
நிச்சயம் பாராட்டுக்குரியது.அது ஏன் என்பது பாதிக்கப் பட்டவர்களுக்கே(அவமானப் பட்டவர்களுக்கே) தெரியும்.
தமிழ்ப் பாடம்
படிப்படியாக வகுப்பு ஒன்று முதல் அமுலுக்கு வரும் என்றுதான் படித்ததாக ஞாபகம்.
டாவின்சி தடை
இந்த டாவின்சி தடை சுத்தமான அக்மார்க் ஓட்டு அரசியல். அப்படிப்பார்த்தால் தி.க வினரைத்தான் முதலில் தடை செய்ய வேண்டும் :-)) . இவர்களின் சுவர் விளம்பரங்களுக்காக.
டமில்டோரனாடோ, ஆர்கனைஸரின் தலையங்கத்தை எடுத்து போட்டதற்கு மிகவும் நன்றி.
நான் அதை முழுமையாய் படிக்கவில்லை என்பது உண்மைதான். டெகான் கொரோனிகிளில் இதை பற்றி வந்த செய்தி, அதில் வந்த மேற்கோளை முன்வைத்து மட்டுமே எழுதினேன். என் பதிவின் மையம் ஆர் எஸ் எஸ் என்ன சொன்னது என்பது இல்லை என்பதால், நேரில் சென்று படிக்க முயலவில்லை. டெகான் கொரோனிகிள் செய்தியில் தெளிவாய், டாவின்சி கோட் தடையை RSS ஆதரிக்கிறது, ஆனால் வாட்டர் ஃபயர் படங்களுக்கும் அதை செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தது. எடுத்து போட இயலும். ஆனாலும் நான் 'ஆதாரம் டெகான் கொரோனிகிள்' என்று சொல்லியிருக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று பதிவு போடும் அவசரத்தில் சொல்லவில்லை. மன்னிக்கவும்! டெகான் க்ரோனிகிள் நேரடியாய் செய்தியை அப்படியே தரும் என்று நம்பியது என் தவறுதான்.
சரி, டெகான் க்ரோனிகிள் செய்தியில் சொல்லியிருந்த படி RSS தாங்கள் வாட்டர் படம் பற்றி சொல்வதை டாவின்சி கோட் படத்திற்கும் பொருத்துவார்கள் என்று தோன்றியது. ஆனால் அந்த நேர்மை இல்லை, தர்க்கத்தை தங்களுக்கு ஆதரவாய் வளைத்து தங்கள் அஜெண்டாவிற்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது. வாட்டர் படத்தின் தடைக்கு தெருவில் RSS போராடியது. தடைசெய்ய கோரியது. இங்கேயும் வரலாறு இந்தியன் பெருமைப்படும்படி எழுதப்படவில்லை என்று அங்கலாய்க்கிறது. அப்படி எழுதப்படவேண்டும் என்றும் சொல்லிவருகிறது, செயலிலும் இறங்குகிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் தங்கள் மத வரலாறு திரிக்கப் படுவதாய் கூச்சல் போடும் போது மட்டும், RSS முற்போக்கு வேடம் போடும் என்றுதான் தலையங்கம் சொல்கிறது.
சரி, என் ஜல்லி இருக்கட்டும். இப்படி எடுத்து போடாமல், மொட்டையாய் ஜல்லி என்று சொல்லி ஜல்லியடிக்காமல், நான் எழுதியதில் உள்ள ஜல்லி பற்றி விளக்கம் தரலாமே! ஆர்கனைஸர் தலையங்கம் விட்டு விட்டு, சாத்தானின் கவிதைகளுக்கும்/டாவின்சி கோடிற்கும் வாட்டர்படம் பெரியார் எழுத்துக்களுக்கான வித்தியாசங்கள், ஆமீர்கான் விவகாரம் இதில் நீங்கள் எதையும் வெட்டி ஒட்டாததால் என் கருத்தை அமோதிக்கிறீர்கள், அதில் ஜல்லி எதுவும் இல்லை என்று எடுத்து கொள்ளலாமா? மீண்டும் நன்றி.
நானும் அந்த நாவலை வாசித்துவிட்டேன். அதில் ஒன்றும் இல்லை....
That novel can not be made into an interesting movie. They will be talking and talking for hours.... I feel that this is a publicity stunt !!!!
//தமிழகத்தில் அதிமுக மீது அப்படி ஒரு எதிர்ப்புணர்வு கிருஸ்தவர்களுக்கு இல்லாத நிலையில்//
??????
----
//தமிழில் ஒரு ஆரம்பக் கட்ட தேர்வை எழுதச் சொல்லலாம்.//
ஆமோதிக்கிறேன்.
டாவின்சி கோட் தடை வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. மயிலாடுதுறை சிவா சொன்னது போல் இது எஸ்றாவிற்கு தேர்தலில் உழைத்ததற்கான பரிசு. அப்படியே மத்தவங்களுக்கும் பரிசு கொடுங்கப்பா.
Post a Comment
<< Home