ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Wednesday, May 31, 2006ஆஷா -10சும்மா 'மசாலா பதிவுகளா' போட்டுக் கொண்டிருக்காமல், உடம்பு வணங்கி எதையாவது எழுத சொல்கிறார் நண்பர் கார்திக். அவர் நினைக்கும் விஷயங்களையும் எழுதும் நோக்கம் உண்டு எனினும், சினிமா பாட்டை பற்றி எழுதுவதெல்லாம் 'மசாலா' விஷயங்களாக எனக்கு தோன்றவில்லை. எந்த ஒரு சமூகத்திற்கும் கொண்டாட்டமும், இன்பமும் மிக ஆதாரமான விஷயங்கள். இந்திய சமூகத்தில், முக்கியமாய் தமிழ் சமூகத்தில், அதற்கான புலமாக சினிமா மிக முக்கியமான தளத்தில் இருக்கிறது. சினிமாவின் நுகரப்படும் முக்கிய பகுதி சினிமா பாட்டு. ஒரு சினிமா பாட்டு கூட பிடிக்காமல் தமிழ்நாட்டில் ஒருவர் கூட இருக்க முடியாது என்று தோன்றுகிறது. அதனால் இது குறித்து எல்லாம் சீரியசாய் பேச வேண்டும் என்பதுதான் என் நிலைபாடு. நமது வழக்கமான பதிவுகள் எதிர்வினைகளாக போய் விட, இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் இதை பற்றி எழுதலாம் என்று ஏதோ தொடுகோட்டுத் திசையில் சொல்லி செல்கிறேன். ஆனால் இதற்கும் உடல் வணங்காமல் இல்லை. ஒரு பத்து பாடல்களை தேர்ந்தெடுத்து, மியூசிக் இண்டியா ஆன்லைனில் தேடி(அதாவது வார்த்தையை தட்டி தேடும் இணயத்தேடல் அல்ல, அது வேலைக்காவ தில்லை, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பட்டியலில் தேடி) எடுப்பதற்குள், இன்னொரு பதிவு போட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. நமக்கு முக்கியமான இளயராஜா, விஸ்வநாதன், சுசீலா என்று தொட்டாகிவிட்டது. ஆஷாவை பற்றி பேசாவிட்டால் இந்த வாரம் சாபல்யம் அடையாது என்று தோன்றுவதால் இந்த பதிவு. லதா மங்கேஷ்கரை இந்தியா (அதாவது தமிழகம் தவிர்த்த வட இந்தியா) ஆபாசமாய் கொண்டாடி வருவதாக, ஒரு நான்கைந்து முறை, நண்பர்கள் கூட்டத்தில் சொல்லி தர்ம சொல்லடி பட்டிருக்கிறேன். அதில் ஒரு முறை லோக்கல் தமிழ் அன்பர்களின் கூட்டமாக இருந்தது குறிப்பிடுதலுக்கு உரியது. 'ஆபாசமாக கொண்டாடுவது' என்று ஒன்றை சொல்வதன் பொருள், கொண்டாடப்படும் விதத்துடன்/கொண்டாடப்படும் அளவுடன் தொடர்புடையதே அன்றி, கொண்டாடப்படும் நபர் 'கொண்டாட்டத்துக்கு தகுதியானவரா' என்ற கேள்வியுடன் தொடர்புடையதல்ல. பாரதி பற்றி பேசும் போதும் நண்பர்களுக்கு இந்த நுண்மை ஏனோ தொடர்ந்து பிடிபடாமல் போவதற்கு, அந்நேரத்திய ஆல்கஹால் மட்டும் காரணமா என்று புரியவில்லை. தமிழ் திரைப்பாடல்கள் அளவிற்கு ஹிந்திப் பாடல்களிலும் சிறு வயதிலிருந்தே பரிச்சயம் கொண்டிருக்கும் எனக்கு, லதா ஒரு மாபாடகி என்பதில் எந்த ஐயமும் இல்லை. நாற்பதுகளில் தொடங்கிய, அவரின் 50களின், அறுபதுகளின் குரலும், பாடிய பாடல்களும் (ஓரளவிற்கு 70களும்) வேறு ஒன்றுடன் ஒப்புதலுக்கு இடமில்லாத இந்திய திரை இசையின் பொக்கிஷம் என்பதிலும் ஐயம் எதுவும் இல்லை. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அவர் முழுவதும் பதிவாகி விட்டதும், அது தினமும் பொது ஊடகங்களில் நுகரக் கிடைப்பதும், என் காலகட்டத்தில் என்னால் உள்வாங்க முடிந்ததும் பெரும்பேறு என்றுதான் தோன்றுகிறது. 80 களில் அவரின் குரல் வீழத் தொடங்கியதையும், 90களில் சகிக்க முடியாமல் போய்விட்டதையும் பல நண்பர்கள் ஒப்புக்கொள்ளவும் கூடும். (அப்படி ஒப்புகொள்ளாமல் 2006வரை லதாவின் குரல் 'ஆயேகா ஆனேவாலா'வில் இருப்பது போல அப்படியே இருப்பதாக, தீவிரமாய் நம்பும் மிக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் இருப்பார்கள் என்றும் தோன்றுகிறது. ) பிரச்சனை அது பற்றியதல்ல. ஏதோ லதாவிற்கு வாய்த்தது மட்டுமே ஒரு அல்டிமேட் குரல் என்பது போலவும், மெலடி என்பதன் எல்லை அதுதான் என்பது போலவும், அந்த குரலுடன் ஒப்பிட இந்த உலகில் எதுவும் இல்லை என லட்சங்கணக்கான் மக்களும், எல்லா வகை ஊடகங்களும் கற்பித்து கொண்டாடுவது மட்டுமே அபாசமாக தெரிகிறது. பாடும் திறமையில் லதாவை விட பலருக்கு அதிக திறமை இருக்கிறது என்பது தெளிவு என்றாலும், அவருக்கு வாய்க்கபெற்ற குரலினால் மட்டும், அவர் ஒப்பிலாதவராக கருதப்படுகிறார். எனக்கு குரல் விஷயத்திலும் ஆஷா போஸ்லேயும், நமது சுசீலாவுமே இணையற்றவர்களாக தெரிகிறார்கள். துரதிர்ஷ்ட வசமாக லதாவிற்கு அளிக்கப் பட்ட கவனமும் முக்கியத்துவமும் ஆஷாவிற்கு அளிக்கப் படவில்லை. லதா அளவிற்கு ஆஷாவிற்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை.(அண்மையில் தமிழில் வந்து ராஜாவின் 'செண்பகமே' 'ஓ பட்டர்ஃபளை' தொடங்கி 'எங்கெங்கே' , 'காதல் பிசாசு' என்று 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்'வரை என்று கலக்கியிருப்பது எல்லோருக்கும் தெரியும்.) ஆஷாவின் என்றும் அழியாத ஒரு பத்தை, மீண்டும் கைக்கு வந்த வகையில் தேர்ந்தெடுத்து தருவது இந்த பதிவின் நோக்கம். Jayiye Aap Kahan Jaayenge உலுக்கும்தன்மையுடன் துவங்கும் இசை, மிக லாவகமாக ஆஷாவின் குரலுக்கு மாறும். மயிர் சிலிர்தெழுவதை பல இடங்களில் தவிர்க்க முடியாது. Nigahen Milane Ko Jee Chahta Hai மீண்டும் மீண்டும் கேட்டு, தொடர்ந்து கேட்க இன்பம் தரும் பாடல். பொதுவாய் கவாலி பாடவே பிறந்தவர் ஆஷா. உம்ராவ் ஜான் பாடல்களை கேட்கும் போதெல்லாம் ரேகாவின் முகம் நினைவில் தோன்றாமல் இருக்காது. அழ வைத்துவிடும் படம். எல்லா படல்களும் ஆஷாதான் ('ஜிந்தஹி ஜாபி' தவிர்த்து) . பொதுவாக 'இன் ஆங்கோங்கி மஸ்தி' யும், முதல் பாடலான தில் சீஸ் கியா ஹைதான் பலருக்கு பிடித்தது. ஆனால் எனக்கு கேட்கும் ஒவ்வொருமுறை அழுகையின் விளிம்பிற்கு கொண்டு வரும் பாடல் Yeh Kya Jagah Hai Dosto இன்னும் சில... Aage Bhi Jaane Na Tu Aankhon Se Jo Utri Hai Aao Huzoor Tumko Parde Mein Rehne Do Balma Khuli Hawa Mein Bhanwara Bada Nadan Chain Se Hamko Kabhi Woh Haseen Dard De Do |
4 Comments:
எனக்குக் கொள்ளை விருப்பம் அந்த Umrao Jaan பாடல். "இது எந்த ஊர் என்று சொல்லுங்கள் நண்பர்களே...இது எந்த இடம்...கண்ணுக்கெட்டிய தூரம் வரை மங்கிக் கிடக்கிடக்கிறதே...நான் எந்தச் சந்தியில் வந்து நிற்கிறேன்..."என்று அவள் பிறந்து பின் தொலைத்த இடத்தில் வந்து பாடுவதானது அந்தக் காட்சி. குரலும் இசையும் எப்படிப் பொருந்திப் போகிறது! நான் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்தேனன்.ஞ்ஜபகமூட்டியமைக்கு நன்றி
கடந்த மூன்று நாட்கள் விடுமுறையில் "கோதாவரி" (தெலுங்கு)படம் பார்த்து , அதன் பாடல்களை ஒரு 10 தடவையாவது கேட்டு, மொழி புரியாதது இவ்வளவு பெரிய நல்ல விஷயமா என்று நினைத்துக்கொண்டிருக்கும் நான், சினிமா பாடல்களை "மசாலா" என்று சொன்னால் அது பொய்தான், நான் சொல்லவந்தது சினிமாவை மட்டம் தட்டும் எண்ணத்திலல்ல. ஆனால் நேரம் கிடைக்காமல் அவ்யப்போது(:)) வலைவிட்டு துறவறம் போகும் நீங்கள், இப்படி தொடர்ந்து எழுதும்போதாவது சில சமூக பதிவுகளை எழுதினால் அது பலரையும் பார்க்க வாசிக்க ஒரு கிரியாவூக்கியாய் இருக்கு என்ற எண்ணத்தில்தான்... போன கமண்ட்டை எச்சில் தொட்டு வேண்டுமானால் அழிச்சுடுறேன் :)
சித்தரே, கவிதைவரிகளுக்கு நன்றி. எனக்கு உருது தெரியாது, ஆனாலும் உம்ராவ் ஜான் பாடல்களின் வரைகள் ஒரு நண்பன் மூலம் தெரியும்.
எப்படி "ஜவானி திவானி" படத்தில இருந்து "ஜானே ஜா" மிஸ் பண்ணீங்க, அருமையான ஆஷா பாடல் அல்லவா அது..
பிரசன்னா
Post a Comment
<< Home