ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, May 29, 2006

அறைகூவல்!

சுந்தர ராமசாமியின் 'சவால்' கவிதையை பிகே சிவக்குமார் தன் பதிவில் போட்டு, அதை முன்வைத்து தனது சிந்தனைகளாக கொஞ்சம் கதைத்திருந்தார். ரவி ஸ்ரீனிவாஸ் அதற்கு எதிர்வினையாக தன் வறலாற்று ஞானத்தை முன் வைத்திருந்தார். இந்த சண்டையை பற்றி என் கருத்துக்களை எல்லாம் எழுதத் தொடங்கினால், நட்சத்திர வாரத்தின் துவக்கத்திலேயே 'அமங்கலமாய்' கதைப்பதாக விடும். அது குறித்து பேசுவதல்ல என் நோக்கம். இதை முன்வைத்து, பசுவய்யா, பிரமீள் பற்றி ஸ்வீப்பிங்காக (அதாவது ரொம்ப விளக்கம் தராமல்) என் கருத்துக்களை முன்வைப்பது மட்டுமே. (ஆனால் தப்பித்து போகாமல் இந்த சண்டை பற்றி மொட்டையாய் சொல்வதென்றால், அது சிவக்குமார் சார்பாகத்தான் இருக்கிறது. சிவக்குமார் நா.முத்துசாமி எழுதியதை அடிப்படையாக வைத்து எழுதிய அளவில், அப்படி (குறிப்பிட்டு விட்டு) எழுதலாம் என்ற அளவிலும், நா.முவின் கருத்தை திரிக்கவில்லை என்ற அளவிலும் அவர் தவறாக எதுவும் எழுதியதாக தெரியவில்லை. ரவி எழுதியதில் வழக்கம் போல, தன் வறலாற்று அறிவை பறை சாற்றும் முனைப்பும், வழக்கமான அவசரமும் தெரியும் அளவிற்கு, தகவல்களை தெளிவாக்கும் நோக்கம் முதன்மையாக தெரியவில்லை. பதிலுக்கு பிகேஎஸ் கேட்ட கேள்விகளுக்கும் வழக்கம் போல பதில் இல்லை.) அது எப்படியும் போகட்டும்.

சிவக்குமார், "தனிப்பட்ட சண்டைகளும் சச்சரவுகளும் பொருட்டுப் பிறக்கிற எதிர்வினையான படைப்புகள் மிகவும் இலக்கியத்தரமானதாக இருக்க முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன..... இணையச் சண்டைகளும் கூட அப்படிப்பட்ட நல்லக் கட்டுரைகளுக்கோ படைப்புகளுக்கோ வழிவகுக்க முடியும் .... .... சச்சரவுகளின் சண்டைகளின் பொருட்டு எழுந்த எழுத்து என்று எதையும் புறந்தள்ளுவது மிகவும் அபத்தமான காரியம் என்பதே நான் சொல்லவருவது" என்று எதை முன் வைத்து சொல்லியிருந்தாலும், இந்த கருத்து எனக்கு மிகவும் ஏற்புடைய கருத்துதான் ('அதுதானே உன் பிழைப்பு' என்று தோன்றுகிறதோ, அதுவும் சரிதான்!). வேறுபாடு என்னவென்றால் சிவக்குமார் முன்வைக்கும் உதாரணங்களுக்கு (எல்லா தளத்திலும்) நேரெதிரான உதாரணங்களை நான் முன் வைப்பேன். அந்த வகையில் பிரமீளின் சில கவிதைகளை இங்கே தர நினைத்தேன். நினைத்தவை கைவசம் இல்லை! கைவசம் இருக்கும் கவிதைகளை வைத்து பதிவை ஒப்பேத்த எண்ணம்.

சுந்தர ராமசாமியின் 'சவால்' கவிதை என்னை கவரவில்லை, கவர்ந்ததில்லை. சிவக்குமார்(உம்) சிலாகிக்கும் 'உறக்கமல்ல தியானம் பின்வாங்கல் அல்ல பதுங்கல்' என்பது வாசிக்க சுவாரசியமாய் இருந்தாலும், கவிதை என்ற அளவில் ஒப்பேறியதாக தோன்றவில்லை. வைரமுத்துவின் சொல் விளையாட்டுக்கள் போலத்தான் இருக்கின்றது. இந்த கவிதை மட்டுமல்ல, பொதுவாகவே எனக்கு சுராவின் (பசுவய்யாவின்) கவிதைகள், அவரது உரைநடை அளவிற்கு, எதுவும் கவர்ந்த நினைவு இல்லை. அவர் நிலை நிறுத்திக் கொண்ட ஆளுமைக்காக அவரது கவிதைகள் பேசப்படுகின்றனவே தவிர, கவிதைக்காக அல்ல என்பது என் எண்ணம். அல்லது அதில் இலக்கிய/வேறு ஏதாவது ஒரு அரசியல் இருக்கலாம். ஒரு பொருத்தமான உதாரணமாக அவரது 'தக்காளி ரசம்' கவிதையை சொல்லலாம். புதுக்கவிதை எழுதத் தொடங்கும் பல முதிரா இளைஞர்களின் கவிதையை போன்ற, அசட்டுத்தனம் வழியும் கவிதைக்கு, வாசிப்புகளை மக்கள் தரும் போது சிரிப்புதான் வரும். சிவக்குமார் (மற்றும் பாஸ்டன்) எடுத்துப் போட்ட நாய்/ பூனை/ ஆந்தை கவிதைகளின் நிலமை ரொம்பவே மோசம். முகமுடி ( மற்றவர்களும்) கூட, தங்கள் மன அரிப்புக்கு ஏற்ப, உண்மையிலேயே சுரா போல கவிதை படைத்து விட முடியும் என்ற தரத்தில்தான் அது இருக்கிறது. ('ஆட்டுகுட்டி மறைத்த சூர்யோதயம்' இன்னமும் பரிதாபத்திற்குரியது. அபத்த தரிசனங்களை தத்துவமாக்குவதும், வலியற்ற சோகத்தை நவீனத்துவமாக்குவதும் நிச்சயமாய் சுராவிற்கு கை வந்த கலை. )

முகமுடிக்கு இலக்கிய முதிர்ச்சி இருந்திருந்தால் (இலக்கிய முதிர்ச்சியுடன் கவிதை படைப்பது அவர் நோக்கம் அல்ல, தன் மன அரிப்பை கொட்டி அரசியல்ரீதியாய் எதிரான ஒரு கூட்டத்தை நாய் உவமை போட்டு திட்டுவது மட்டுமே என்றாலும்), சில நேரடி வாசிப்புகளை தவிர்க்கும் வகையில் உருவக உருவத்திலேயே எழுதியிருந்தால், கவிதை பசுவய்யா தரத்திற்கு வந்திருக்க கூடும் என்றே தோன்றுகிறது. (ஞானகூத்தனின் 'தவளைகள்' இந்த வட்டத்திற்குள் வராது, அதன் தளம் வேறு என்பதற்கு முடிந்தால் இன்னொரு சந்தர்ப்பத்தில் வருகிறேன்.) சுரா நாய், ஆந்தை, பூனை என்று உருவகப் படுத்தியதை எல்லாம் 'படிமம்' என்கிறார் சிவக்குமார். ஒரு வங்காள கவிஞர் ஒரு சந்தர்ப்பத்தில், "If he is a poet, then I would like to be called as a plumber" என்று சொல்லியிருப்பார். அந்த மாதிரி, இந்த குழப்பம் அப்படியே தொடர்ந்து , இன்னும் நான்கு பேர் வழிமொழிந்து 'படிமம்' என்ற வார்த்தை அதிகமாய் புழங்க நேர்ந்தால், பிரமீள் கவிதைகளில் வரும் படிமங்களை ( 'பார்வை செவிப்பறையில் பருவம் முரசறையும்' 'கைப்பிடியளவு கடலாய் இதழ் விரிய உடைகிறது மலர் மொக்கு' ) பற்றி பேச நாம் புதிய வார்த்தை எதையாவது தேடவேண்டும்.


பிரமீளும், கவித்துவத்தோடு தொடர்பில்லாமல் சில 'வசை கவிதைகளை' எழுதியிருக்கிறார்தான். ('பாடபேதம், சுறா அல்ல சு.ரா.' 'எங்கிட்டு பாக்கிரே வெங்குட்டு விமர்சகா' ). ஆனால் பிரமீள் தன் சொந்த பகையின் காரணமாய் எழுதிய சில 'வசை கவிதைகளில்' கூட சில பொறிகளை எடுத்து காட்ட முடியும். உதாரணமாய் அவர் சாருநிவேதிதாவை திட்டுவதற்காகவென்றே எழுதிய நீண்ட கவிதையில் ஒரு வரி,

"எலிவால் நுனியில் எலியொன்றுண்டு
பாம்பு முழுவதும் வாலே என்று கிராமத் தானுக்கறிவு உண்டு! "

இது தவிர்த்து சுபமங்களாவிற்கு சமர்ப்பித்து எழுதிய கழுதை சிங்கம் கவிதையை குறிப்பிடலாம்.(வார்த்தைகள் சரியாய் நினைவிலில்லை.)

வயிற்றுக் கோளாறை சரி செய்துகொள்ளும் விதமாக பிரமீள் எழுதிய சில அதிரடி கவிதைகளை விட்டு விட்டு பார்த்தால், பிரமீளின் பல கவிதைகள், தமிழ் கவிதை இலக்கியத்தின் உச்ச கட்ட சாதனையாக இருந்திருக்கிறது. நான் தரும் எனது ஒரு உதாரணம் 'முதுமை' (அடுத்த பதிவில்.)

பிரமீள் தனது இலக்கிய பயணத்தில் காட்டிய அளவுக்கு மீறிய சகிப்பின்மை, போலித்தனம் என்பதாக அவர் நினைப்பது சட்டையை போல ஒரு சமூகத்தின் தேவை என்பதை உணராத அவரது குறுகிய பார்வை, தன்னை மட்டுமே மையமாய் கொண்டு/தன்னை முன்னிறுத்திய இலக்கிய அரசியல் சார்ந்த விமர்சனம் இவை எல்லாம் மிகுந்த விமர்சனத்திற்குரியது. அவர் முன்வைத்த அறிவு கோட்பாட்டை நான் இன்னொரு பார்பனியமாகத்தான் பார்கிறேன் என்று சுந்தரமூர்த்தியின் பதிவில் சொல்லியிருக்கிறேன். பார்பனராய் பிறக்காமல், பார்பனராய் ஆக விரும்பிய பார்பனரல்லாதவர் முன்வைக்கும் பார்பனியத்தின் சாயல் அதில் இருப்பதாக நினைப்பதை அலசுவது, இந்த பதிவின் நோக்கமல்ல. ('அம்பை பற்றி பிரமீள் சொன்னதை' யாரும் கண்டிக்கவில்லையே, அதை வசதியாக எல்லோரும் மறந்துவிடுகிறார்கள் என்று ( அவர் யாரிடமோ கேள்விபட்ட ஒன்றை மனதில் வைத்து என்று நினைக்கிறேன்) சிவக்குமார் இரண்டு முறை கேட்டிருந்தார். , 'பிரமீள் என்ன சொன்னார் சொல்லுங்கள், என் கருத்தை (தேவையாயின் கண்டனத்தை) வைக்கிறேன்' என்று இரண்டு முறையும் நான் கேட்டும் பதில் வரவில்லை. நான் எழுதியதை அவர் பார்க்காமலும் இருந்திருக்கலாம். அதனால் இந்த பதிவின் பின்னூட்டத்திலும் சொல்லலாம்.)

சுந்தர ராமசாமியின் 'சவால்' கவிதைக்கு பதிலாகவோ/பாதிப்பினாலேயோ பிரமீள் தனது 'அறைகூவலை' எழுதினாரோ, அல்லது நேரெதிராய் நடந்ததோ, வேறு எப்படி வறலாறு இருப்பினும், எனக்கு பிரமீளின் 'அறை கூவல்' கவிதைக்கு அருகே எந்த சவாலும் நெருங்க இயலும் என்று தோன்றவில்லை. சும்மா அள்ளி கொண்டு போகும் கவிதை! பிரமீளின் கவிதைகளில், அதன் ஒவ்வொரு அலகும் ஒரு தனிக் கவிதையாய் இருப்பதை காணமுடியும். அடுத்த பதிவில் தமிழின் மாகவிஞனின் (கைவசமிருக்கும்) சில கவிதைகளுடன் இந்த வாரத்தை தொடங்குவதில் மிகவும் உணர்ச்சி வசமடைகிறேன்.

Post a Comment

17 Comments:

Blogger ROSAVASANTH said...

தட்டிகொண்டிருக்கிறேன். அரை மணி நேரத்திற்குள்ளாக பிரமீளின் மூன்று கவிதைகள் வரும்.

5/29/2006 6:07 PM  
Blogger Vaa.Manikandan said...

//அவர் நிலை நிறுத்திக் கொண்ட ஆளுமைக்காக அவரது கவிதைகள் பேசப்படுகின்றனவே தவிர, கவிதைக்காக அல்ல என்பது என் எண்ணம்//

அவர் நிலை நிறுத்திக் கொண்ட ஆளுமை என்பது அவரது கவிதையுடனும் சேர்த்துதானே? அல்லது உரைநடையில் தனது முத்திரையை பதித்துவிட்டு பின்னர் கவிதைக்குச் சென்றாரா? அப்படி தோன்றவில்லை எனக்கு.

ஆரம்பத்திலிருந்தே கொல்லிப்பாவை, தாமரை போன்ற இதழ்களில் தனது கவிதைகளை தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கிறார்.

// 'உறக்கமல்ல தியானம் பின்வாங்கல் அல்ல பதுங்கல்' //

இதனை நீங்கள் வார்த்தை விளையாட்டு என ஒதுக்கியதும் கூட எற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. உறக்கமல்ல தியானம் என்பது என்னைப் பொறுத்த வரை சிலாகிக்கக் கூடியதுதான்.

கவிதையும் அதுதானே...உங்களுக்கு பிடித்தது எல்லாம் எனக்கு பிடிக்க வேண்டுமென்பதில்லை. எனக்கு பிடித்ததெல்லம் மற்றவருக்கு பிடிக்க வேண்டும் என்பதில்லை.

நம்க்கென ஒரு 'சூத்திரம்' வைத்திருக்கிறோம். அதனில், அதற்குள் பொருந்திப் போகாதவற்றை-உடன்படாதவற்றை கவிதை என ஏற்றுக் கொள்ள இலக்கிய வாசம் பெற்ற மனம் ஒத்துக் கொள்வதில்லை.

5/29/2006 6:26 PM  
Blogger ROSAVASANTH said...

மணிகண்டன் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

உங்களுக்கு அப்படி தோன்றுகிறது, எனக்கு இப்படி தோன்றுகிறது. கவிதையை வைத்து கொண்டு இதை நாம் அதிகம் விவாதிக்க முடியாது அல்லவா? அதனால் சிவக்குமார் அப்படி சொன்னார், நான் என் கருத்தை இப்படி சொல்கிறேன். நீங்கள் இப்போது ஒப்புகொள்ளவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் மாறினாலும் மாறுவீர்கள். அடுத்த பதிவில் நான் தரப்போகும் அறைகூவலையும், சவாலையும் ஒப்பிட்டு பாருங்கள் என்று மட்டும் சொல்கிறேன்.

''உறக்கமல்ல தியானம் பின்வாங்கல் அல்ல பதுங்கல்' உங்களுக்கு பிடித்திருந்தால் நல்ல விஷயம்தான். 'வழியில் ரோஜாக்களும் இருக்கும், முட்களும் இருக்கும், முள்ளை கொண்டு ரோஜாவை சட்டையில் குத்திக்கொள்' என்று வைரமுத்து சொல்வதும் பலருக்கு பிடிக்கும். இதையெல்லாம் அங்கீகரிப்பதுதானே பரந்த மனப்பான்மை. அந்த வகையில் உங்களுக்கு பிடித்திருக்கிறது, எனக்கும் சுவாரசியம்தான், ஆனால் பிரமீளின் கவிதை இயங்குவது வேறு தளத்தில் என்பதுதான் நான் சொல்ல வருவது. மீண்டும் ஜனநாயகப்படி எல்லோருக்கும்....

5/29/2006 6:43 PM  
Blogger ROSAVASANTH said...

//கவிதையும் அதுதானே...உங்களுக்கு பிடித்தது எல்லாம் எனக்கு பிடிக்க வேண்டுமென்பதில்லை. எனக்கு பிடித்ததெல்லம் மற்றவருக்கு பிடிக்க வேண்டும் என்பதில்லை. //

ஆமாம்!

5/29/2006 6:45 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

அடிச்சி ஆடுங்க, ஆரம்பமே ரவியை இழுத்தாச்சா :-))))

5/29/2006 6:49 PM  
Anonymous Anonymous said...

//அவர் நிலை நிறுத்திக் கொண்ட ஆளுமைக்காக அவரது கவிதைகள் பேசப்படுகின்றனவே தவிர, கவிதைக்காக அல்ல என்பது என் எண்ணம்//

எனக்கு இதனோடு முழு உடன்பாடுண்டு அண்ணாச்சி! அவரது ஆளுமை அவரது கவிதையையும் சேர்த்துத்தான் என்பதும் ஒப்புக்கொள்ளத்தகுந்ததுதான் என்றாலும்..

/உறக்கமல்ல தியானம்/

என்றெழுத சாத்தான்குளத்தானால் கூட முடியும் :-) எனக்கும் இதில் சிலாகிக்க ஏதுமிருப்பதாகத் தோன்றவில்லை.

அதுசரி..'சுரா' வை விமர்சிக்க 'சுறாக்கள்' இருக்கும் உலகத்தில், நமக்கெதுக்கு அண்ணாச்சி வம்பு? நீங்க எழுதுங்க. நாங்க வாசிக்கிறோம்.

சாத்தான்குளத்தான்

5/29/2006 7:25 PM  
Blogger ROSAVASANTH said...

ஆசிஃப் நன்றி.

இங்கே ஆளுமை என்று நான் எழுதியதில் ஒரு சின்ன குழப்பம் இருப்பதாக தெரிகிறது. சுராவின் கவிதை, கதை, கட்டுரை எல்லாம் சேர்த்துதான் ஆளுமை என்றாலும், அதை மட்டும் நான் சொல்லவில்லை. இலக்கியத்தில் அவர் ஒரு முக்கிய புள்ளி. நாகர்கோவிலுக்கு போகும் யாரும் அவரை சந்திக்காமல் போகமாட்டார்கள். காலச்சுவடின் ஆசிரியர், இன்னும் பல பல தொடர்புகள், புரவலர்தன்மை எல்லாவற்றையும் சேர்த்து சொல்கிறேன். கவிதைக்கு அப்பாற்பட்ட அளுமையையே குறிப்பிடுகிறேன்.

5/29/2006 7:35 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

வணக்கம் ரோசா
இந்தவாரம் எரிநட்சத்திரமா நல்லது நல்லது

எனக்கு ஓரோர் கணத்தில் ஒரு எழுத்தாளரோ கவிஞரோ பிடித்துப் போவார்கள் அந்தக் கணத்திலிருந்து அவரது எழுத்துக்கள் முழுவதையும் படித்து முடிக்கவேண்டும் என்ற விசரும் பிடித்துக்கொள்ளும்.அதே வரிசையில் இப்போது பிரமிள் விசர் அந்த விசரின் காரணமாய் பிரமிள் கவிதைகள்,பிரமிள் படைப்புகள்(சிறுகதைகள்,குறுநாவல்கள்)வானமற்ற வெளி(கவிதை பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றை வாங்கி வைத்துப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் முதலில் கவிதையில் ஆரம்பித்தேன் நீங்களும் கவிதை கொண்டு வந்திருக்கிறீர்கள் வருக வருக

அம்பை பற்றிய பிரமிளின் வசைக்கவிதை பற்றி எனக்கு அரவிந்தன்(சிங்கப்பூர்)சொன்னார் என்னிடமிருக்கும் கவிதைத் தொகுப்பில் அது இருக்கிறதாவென்று பார்க்கிறேன் அவர் சொன்ன வரிகள் ஞாபகமிருக்கின்றன ஆனால் பிரமிள் உயிரோடு இல்லாதவிடத்து எழுத்தில் இல்லாத பட்சத்தில் வாய்மொழிமூலம் கேட்டதை இங்கே சொல்வது சரியாகப் படவில்லை.கவிதை இருக்கும் பட்சத்தில் எடுத்துப் போடுகிறேன்

சிறு வேண்டுகோள்:முன்னொருதரம் ஆத்மாநாம் பற்றி சிறிது பேசிவிட்டு பின்னர் வருகிறேன் என்று சொல்லியிருந்தீர்கள் ஆத்மாநாம் மற்றும் நாகராஜன் பற்றி இச்சந்தர்ப்பத்தில் பேசவேண்டும்

5/30/2006 12:46 AM  
Blogger ROSAVASANTH said...

யெட் அனதர் வெங்கட் விரிவான பின்னூட்டம். நன்றி.

ஈழநாதன், ஆத்மாநாமை பற்றி எப்போது சொன்னேன், என்ன சொன்னேன் நினைவிலில்லை. ஆத்மாநாம் கவிதைகள் படித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, இப்போது புத்தகம் கையிலில்லை. அர்த்தமுள்ளதாய் எதுவும் எழுத முடியும் என்று தோன்றவில்லை. நன்றி.

5/30/2006 1:57 AM  
Blogger -/பெயரிலி. said...

அறிதுயில் (இணையச்)சஞ்சிகையிலே கற்சுறா பிரமிளின் பார்ப்பனியம் குறித்த செவ்வியினைப் போட்டிருந்தார். இப்போது தளம் தொழிற்படவில்லை. பிடிஎப் கோப்பாக எங்கோ கணனிக்குள்ளே கிடக்கவேண்டும். அகப்பட்டால், அனுப்பிவைக்கிறேன்.

ஈழநாதன், பிரமிள் கவிதைத்தொகுப்பிலே, விமர்சனக்கவிதைகளிலே பாதி விமர்சனமாகவும் மீதி விசர்மனமாகவும் பிரமிள் எதிர் சுரா, வெசா, சிவசேகரம் கவிதைகள் கிடக்கிறன.

5/30/2006 3:31 AM  
Blogger ROSAVASANTH said...

//அறிதுயில் (இணையச்)சஞ்சிகையிலே கற்சுறா பிரமிளின் பார்ப்பனியம் குறித்த செவ்வியினைப் போட்டிருந்தார்//

கற்சுறா எழுதியிருந்ததை படிக்கவில்லை. அளித்தால் நன்று, நன்றி. என் ஊகப்படி நான் கற்சுறாவுடன் பெரிதும் வேறுபடுவேன் என்று நினைக்கிறேன் - அவரின் பல கருத்துக்களை வாசித்து வரும் வகையில்.

5/30/2006 3:39 AM  
Blogger arulselvan said...

ரமணி,
கண்டிப்பாக அதை பதிக்காவும்.
பிரமிளின் 'ஆன்மீகத்' தேடல்களை அப்போது சிலர் அவர் எதிர்த்த , அனால் அவர் தானாக மாற முயன்ற , பிராமணத்துவம் என்று புரிந்து இருந்தார்கள். அப்படியா என்று என்னால் அப்போது ஏதும் முடிவு செய்ய இயலவில்லை.இப்போதும்தான். புதிதான வாதங்கள் எப்படி என்று பார்க்கவேண்டும். அவர் தான் ஒரு பொருள்முதல்வாதியல்ல என்று தெளிவாகவே இருந்தார். அவர் எத்தகைய கருத்துமுதல்வாதி என்பது சுவாரசியமாக இருக்கும். அவருடைய சிந்துசமவெளி பற்றிய பேன்ட்டஸிகளில் சில குறிப்புகள் உண்டு. பழைய லயம் இதழ்களைத் தேடவேண்டும்.
அருள்

5/30/2006 4:06 AM  
Blogger முகமூடி said...

// வாரத்தின் துவக்கத்திலேயே 'அமங்கலமாய்' கதைப்பதாக விடும் // எப்போதிருந்து இப்படி?

// சில நேரடி வாசிப்புகளை தவிர்க்கும் வகையில் உருவக உருவத்திலேயே எழுதியிருந்தால், கவிதை பசுவய்யா தரத்திற்கு வந்திருக்க கூடும் என்றே தோன்றுகிறது // ...கலாம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. இலக்கிய முதிர்ச்சியின் ஆரம்ப கட்டத்தின் கோளாறு என்று வேண்டுமானால் கொள்ளலாம்...

// முகமுடி ( மற்றவர்களும்) கூட, தங்கள் மன அரிப்புக்கு ஏற்ப, உண்மையிலேயே சுரா போல கவிதை படைத்து விட முடியும் என்ற தரத்தில்தான் அது இருக்கிறது // :)))

இப்போதுதான் கவனித்தேன். இந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக நிறைய பதிவுகள் எழுதுவதாக முடிவெடுத்திருக்கிறீர்கள் போல... நல்லது.

5/30/2006 9:03 AM  
Blogger ROSAVASANTH said...

முகமுடி பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.

//எப்போதிருந்து இப்படி? //

எப்போதுமே அப்படித்தான்! தவிர்க்க முடியாமல் இருந்தால், தேவை என தோன்றினால் ஒழிய வலிந்து அப்படி பேசுவதில்லை என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறேன்.

'அமங்கலமாய்' என்ற பகுத்தறிவுக்கு முரணான சொல் பற்றிய கிண்டல் கேள்வி என்றால், இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ்!

மீண்டும் நன்றி - என் விமர்சனத்தை சகஜமாக எடுத்துக் கொண்டதற்கும்!

5/30/2006 3:17 PM  
Blogger முகமூடி said...

'அமங்கலமாய்' என்ற பகுத்தறிவுக்கு முரணான சொல் பற்றிய வெறும் கேள்வி மட்டுமே...

உங்கள் விமர்சனம் மட்டுமல்ல எல்லா விமர்சனங்களையும் சகஜமாகவே எடுத்துக்கொள்கிறேன். ஆனால் விமர்சனம் என்ற போர்வையில் சிலர் [ உங்களை சொல்லவில்லை, தற்போதைக்காவது :) ] தங்களுடைய கற்பனையான நம்பிக்கைகளை முன்வைத்து அதுகுறித்து என்னிடம் மேல் விளக்கம் இருந்தால் "விமர்சனத்தை தாங்க முடியாமல் கதை எழுதுகிறேன்" என்பதும், எதுவும் தராவிட்டால் கற்பனைகளை உண்மை போல் கற்பிப்பதுமான சம்பவங்கள் நிகழ்வதால் அது குறித்த குழப்பத்தில் இருக்கிறேன்...

5/30/2006 5:16 PM  
Blogger ROSAVASANTH said...

//'அமங்கலமாய்' என்ற பகுத்தறிவுக்கு முரணான சொல் பற்றிய வெறும் கேள்வி மட்டுமே...//

முதலில் பதில் சொல்லவேண்டாம் என்று நினைத்தேன், இப்போது சின்னதாய் சொல்லலாம் என்று தோன்றுவதால்..

எனது முக்கிய் கரிசனமாய் பகுத்தறிவு என்பது இருந்ததில்லை என்பதை என் பதிவுகளிலிருந்து ஒரு வேளை அறியலாம். மேலும் பகுத்தறிவை தீவிரமாக பேசுவதும் ஒரு வகை வன்முறை என்பதாகவும் ஒரு பார்வை உண்டு. இன்று பரவலாக பேசப்படும் விஷயம்தான். (அப்ப பெரியார் வன்முறையாளரா என்ற சிக்கலான கேள்வியை இந்த வாரம் எதிர்கொள்ளும் ஐடியா இருக்கிறது. ஆனால் தட்டச்சு செய்ய நேரம் ஆகிறது, எழுத நினைப்பதை எல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை.)எப்படி இருப்பினும் நிச்சயமாய் இது போன்ற வார்த்தைகளுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது -இந்த சந்தர்ப்பத்தில் அதன் பொருள் தெளிவாக தெரியும் போது.

குறிப்பிட்ட வார்த்தைகளை வலிந்து தேர்ந்தெடுத்து விலக்குவதும், அதில் பெரும் உறுதி காண்பிப்பதும் கூட ஒரு அடிப்படைவாதம் என்றும் தோன்றுகிறது.

இன்னொரு முறை பகுத்தறிவை முன்வைத்த மேலோட்டமான, அதுவும் வார்த்தையை முன்வைத்த கேள்விகளுக்கு, பதில் தரவேண்டாம் என்ற வசதிக்காக இந்த பதில்.

5/30/2006 6:10 PM  
Blogger Muthu said...

//பொதுவாகவே எனக்கு சுராவின் (பசுவய்யாவின்) கவிதைகள், அவரது உரைநடை அளவிற்கு, எதுவும் கவர்ந்த நினைவு இல்லை. அவர் நிலை நிறுத்திக் கொண்ட ஆளுமைக்காக அவரது கவிதைகள் பேசப்படுகின்றனவே தவிர, கவிதைக்காக அல்ல //


உண்மை.அவர் உக்கிரமாக வெளிப்படுவது உரைநடையில்தான். சில விஷயங்களை அவர் கவிதையாக உடைத்து எழுதியுள்ளார்.அவையும் ரசிக்கக்கூடியதே.ஆனால் பிரமிள் லெவலுக்கு வராது என்கிறீர்கள்.எனக்கு பிரமீளை தெரியாது.படித்து பார்க்கிறேன்

5/31/2006 1:45 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter