ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Monday, May 29, 2006ஏதோ சுகம் எங்கோ தினம்...!இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு, தினமும் ஒரு பதிவு போட்டு, தமிழ்மணத்தில் புகையை கிளப்பும்படி மதி என்னை பணித்திருக்கிறார். வாரம் (அமேரிக்காவில்) தொடங்க இன்னும் பல மணிநேரங்கள் இருப்பினும், நாளை இணையத் தொடர்பு கொள்ள தாமதமாகிடும் என்பதால், இப்போதே ஆட்டத்தை தொடங்குகிறேன். இதற்கு மதி, காசி, அனைத்து தமிழ்மண நிர்வாகிகளுக்கும் நன்றி. இந்த பாடலை கேட்டுக் கொண்டு தொடர்ந்து படிக்கலாம். Writing must then return to being what it should never have ceased to be: an accessory, and accident, an excess. -- Jacques Derida. ஆயிரத்தை விரைவில் தொடக்கூடிய அல்லது ஏற்கனவே தொட்டுவிட்ட எண்ணிக்கையில் உள்ள தமிழ் வலைக் குமுகம், தினமும் நூற்றுக்கணக்கில் பதிவுகளை இடுவதும், அவை தீவிரமாய் சில நூறு மக்களால் வாசிக்கப் படுவதும், இன்னமும் எதிர்காலத்தில் வாசிக்கப் படப் போவதும், தமிழ் சூழலில் நிகழும் அகவுலகை விரிவாக்கும் மொழியாரோக்கியமான பல செயல்பாடுகளில், மிக முக்கியமான ஒன்று. இப்படி ஒரு ஆரோக்கியமான நிலையை அடைந்ததில், காசி 'தமிழ்மணம்' என்பதை தொடங்கிய நிகழ்விற்கு முக்கிய பங்கு இருப்பது எல்லோருக்கும் தெரியும். வலைப்பதிவு அதன் பின்னுட்ட வசதி கொண்டு தொடர்ந்த விவாதம் போன்ற, தொழில்நுட்ப புரட்சியினாலான வசதியும் சுதந்திரமும் கொண்ட ஜனநாயக வெளி வேறு இருப்பதாக தெரியவில்லை. அவற்றில் தோன்றியிருக்கும் சில சிக்கல்கள், தடுக்க இயலாத குறைந்த பட்சம்/குற்றவாளியை கண்டுகொள்ளக் கூட இயலாத வகையில் போலி மறுமொழி, போலி பதிவுகள் இடுவதும், தங்கள் போக்கிற்கு ஒத்துவராதவர்களை பற்றி எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் எழுத இயலும் என்கிற சாத்தியப்பாடும், இந்த ஜனநாயக அமைப்பு பற்றி விரிவாய் விவாதிக்கவும், எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும் தேவைப்படும் நிபந்தனைகள், கட்டுபாடுகள், தண்டனைகள் பற்றி விவாதிக்கும் தேவையை ஏற்படுத்துகின்றன. வலைப் பதிவுகளின் இன்றய நிலை, அதன் வெளிபாடின் மீது எத்தனையோ விமர்சிக்க இருந்தாலும், ஓரிரு கேடுகள் (அதற்கு அளிக்க வேண்டிய விலை) தவிர்த்து பல நூறு மக்கள் நிதானத்துடன் கருத்து பரிமாறி விவாதித்து நடக்கும் அறிவு செயல்பாடு பற்றி, நாம் நிச்சயமாய் பெருமை கொள்ளலாம். அதில் நானும் ஒரு ஓரமாய் பங்கு கொள்வதில் மிகவும் மகிழ்சியும், இதுவரை செய்த இடையீடுகளில் ஓரளவு நிறைவும் கொள்கிறேன். இந்த பதிவு முழுக்க வெறும் சுய புராணம் மட்டுமே. குழந்தை வயது முடிந்து, ராஜேஷ் குமார், தமிழ்வாணன் என்று அலைந்து, எனக்கான எழுத்தை சுஜாதாவிடம் முதன் முதலில் அடையாளம் கண்டேன். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எனக்கான அரசியலை துக்ளக் பத்திரிகையில் 'சோ'விடம் அடையாளம் கண்டேன். எனது துவக்க அரசியல் ஈடுபாடுகளும் இந்துத்வ சார்பாகவே இருந்தது. கிட்டதட்ட வாலிப பருவம், சோ, சுஜாதா பாதிப்பில் ஏற்பட்ட பார்வையின் அடிப்படையிலேயே தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் பார்வையை முற்றிலும் புரட்டி போட்டது நூலகத்தில் படிக்க நேர்ந்த பெரியாரின் எழுத்துக்கள். அதற்கு முன்னாலான பல பரிசீலனைகளில் மனம் அதை உள்வாங்கும் வகையில் பக்குவப் பட்டிருந்ததும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. சோவும், அதுவரை வாழ்ந்த சூழலும் ஏற்படுத்தியிருந்த பாதிப்பிலிருந்து மீண்டு, ஒரு மார்க்சிய, பெரியாரிய சார்பில் சிந்திக்க துவங்கவும், பின் அதையும் மீள் பார்வை பார்க்க, பல நிகழ்வுகள், நண்பர்கள், புத்தகங்கள் என்று வாழ்வின் ஒரு பெரிய பகுதி கழிய வேண்டியிருந்தது. என்றாலும் தீவிரமான அரசியல் பார்வை என்பது எனக்கு 'சோ'வின் எழுத்துக்களை படிப்பதன் மூலமாகவே நிகழ்ந்தது. ஒருவேளை 'சோ'வை படித்திராவிட்டால், அரசியல் ரீதியாய் தீவிரமாய் சிந்திக்கும் ஒரு பழக்கமே வராமல் போயிருக்கலாம். அந்த வகையில் சோ எனக்கு முக்கியமானவரே! வண்ணநிலவன், வண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றவர்கள் பிளவை ஏற்படுத்தியிருந்தாலும், சுஜாதா எழுத்துப் பிதாமகனாக மனதை ஆக்ரமித்திருந்த பிம்பத்தை, தி. ஜானகிராமன் படித்த முதல் நாவலிலேயே உடைத்து எறிந்தார். பிறகு ஒரு வெறியுடன் படிக்க தொடங்கி, இன்றுவரை தி,ஜா. பற்றிய பிம்பம் மட்டும் வீழவே இல்லை. அதற்கு பிறகுதான் புதுமை பித்தனும், சுந்தர ராமசாமியும் வந்து ஆக்ரமித்துக் கொண்டனர். அதிகமுறை மீண்டும் மீண்டும் படித்த நாவலாக, கிட்டதட்ட எல்லா வரிகளையும் மனபாடமாய் இன்றும் சொல்லகூடிய அளவிற்கு மனதில் பதிந்ததாய், ஜேஜே சில குறிப்புகளே இருக்கிறது -அதன் மீது இன்று பல விமர்சனங்கள் வந்து, அதன் மீதான தனிப்பட்ட மதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது எனினும். 'மௌனி'த்தனமான இலக்கிய வாசிப்பினால் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த அரசியல் பார்வை, 'சுபமங்களா' இதழ்கள் மூலம் அறிமுகமான 'நிறப்பிரிகை' பத்திரிகை மூலம் - குறிப்பாய அ.மார்க்சின் 90களின் துவக்ககால எழுத்துக்கள் மூலம் - மீண்டும் விழிப்பு கண்டது. இவ்வாறாக இலக்கிய அரசியல் பார்வைகள் ஒன்றோடொன்று முரண்பட்டு, தனக்குத்தானே தெளிவாகி கொண்டு முகிழ்ந்த அக உரையாடலில், இலக்கியமும் அரசியலும் ஒன்றுக் கொன்று எதிராக முரண்பட்டதல்ல, இரண்டும் பகிர்ந்து கொள்ளும் வெளி பற்றிய அறிதல் மட்டுமின்றி, பகிராமல் இயங்கவும் இயலாது என்ற தெளிவும் பிறந்தது. மேலோட்டமாக போலெமிக்ஸ் மொழியிலேயே இன்றுவரை எழுதி வந்தாலும், இந்த தெளிவிலேயே இன்றய எனது எழுத்து இயங்குவதாக நான் நினைத்து கொண்டிருக்கிறேன். இதற்கான -அரசியல்/ இலக்கியம் இரண்டும் சுய பிரஞ்ஞையுடன் பகிர்ந்து வெளிபடும் இயக்கத்திற்கான - ஒரு உதாரணமாக அருந்ததி ராய் அவர்களை சொல்லலாம் -அவரின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் தேடி கரைத்து குடித்து விடவில்லை யெனினும் (அப்படிப்பட்ட ஆயிரக்கணகான ரசிகர்களை அவர் நிச்சயம் கொண்டவர்). இவ்வாறாக 90களின் மத்தியில் சுமார் மூன்று ஆண்டுகள் தீவிரமாய் சிறுபத்திரிகைகள் வாசிக்கத் தொடங்கி, அதன் எல்லாவித தா(க்)கங்கள், தேடல்கள், மலச் சிக்கல்களுடன் அலைந்தேன். நல்லவேளையாய் (ஆமாம், நல்லவேளைதான்), வாழ்வின் சொந்த பிரச்சனைகள் சார்ந்த கட்டாயங்கள் அதிலிருந்து விடுவித்தது என்றாலும், தொடர்ந்து இலக்கிய/அரசியல் தொடர்பு கொண்ட ஒரு சிந்தனை தொடர்ச்சி அகவயமாய் இருந்ததாகவே கருதி வருகிறேன். ஐந்து வருடங்கள் முன்பு நண்பர் ஒருவரிடம் மின்னஞ்சலில், கிட்டத்தட்ட வாசிப்பு என்று எதுவுமே இல்லாமல், இலக்கிய அரசியல் தொடர்புகள் அற்று வருடக் கணக்கில் இருப்பது பற்றி புலம்பியிருந்தேன். அவர் என்னை திண்ணையை வாசிக்க சொன்னார். அப்போது ஏனோ பார்க்க நேரவில்லை. அதற்கு பிறகு பல மாதங்கள் கழிந்து திண்ணையை பார்த்த போது, அது மிகவும் ரத்த அழுத்தத்தை ஏற்றி விடுவதாய் இருந்தது. நண்பர் சொன்ன நோக்கம் வேறு என்றாலும், அவருடைய பரிந்துரை என்னை ஒரு சுழலில் மாட்ட காரணமாய் இருந்தது. மஞ்சுளா நவனீதன், சின்ன கருப்பன் போன்றவர்களுக்கு யாருமே எதிர்வினை வைக்காத ஒரு சூழலில் (அல்லது எதிர்வினைகள் வைத்து, நான் வாசிக்க வரும் காலகட்டத்தில் அலுத்துப் போய் வெளியேறிவிட்ட நிலையில், அனாதை ஆனந்தன் மட்டும் திடீரென தோன்றி ஒரு கொரில்லா தாக்குதல் நடத்திவந்த சூழலில்), எளிதில் எழுதி உள்ளிடும் இணையத்தின் வசதி காரணமாய், நான் எதிர்வினை வைக்க தீர்மானித்து, திண்ணை விவாத களத்தில் உள் நுழைந்தேன். ஆனால் வேலை சார்ந்த கட்டாயங்கள், தொடர்ந்த கணணி வசதிகள் இல்லாமை, அனுபவமின்மை காரணமாய் தீவிரமாய் எழுத இயலவில்லை. எழுதிய அனைத்துமே மட்டையடிகளாய் மேலோட்டமாய் இருந்தது. என்றாலும், அன்று ஒரு தேவையான இடையிடுகைகளை செய்ததாய் நிறைவு உள்ளது. பிறகு திண்ணை விவாதகளம் மூடப்பட்டு, பதிவுகள் விவாத களத்தில், ஒரளவு முதிர்ச்சியுடன், இந்த முறை (ஒரே ஒரு முறை இன்றய பெயரிலி/அன்றய திண்ணை தூங்கியுடன் நடந்த சண்டை, அவர் மீதான என் தாக்குதல் தவிர்த்து, ரவி ஸ்ரீனிவாசுடன் நடந்த விவாதங்கள் உட்பட) நட்பு சார்ந்தே எழுத்து தொடர்ந்தது. இதற்குள் ஏதோ ஒரு போக்கில் திண்ணையில் அரவிந்தன் நீலகண்டனுக்கு, திடீர் தாக்குதல் செய்வதாய் ஒரு எதிர்வினை வைத்து, பின் தொடர்ந்த பலதரப்பட்ட வினைகளின் முடிவில், திண்ணை பொய் காரணம் கூறி, நான் திண்ணையில் தடை செய்யப் பட்டது குறித்து பல முறை கத்தியிருக்கிறேன். (இந்த வாரமும் முடிந்தால் ஒரு பாட்டம் ஒப்பாரி காத்திருக்கிறது.) அதற்கு பிறகு, திண்ணையில் நான் தடை செய்யபட்ட நிகழ்வு குறித்து, திண்ணை (மாதங்கள் கழித்து நேரடியாக அல்லாமல் மறைமுகமாக) அளித்த கயமைத்தனமான ஒரு விளக்கத்தை பற்றிய என் இடுகை, நியாயமின்றி பதிவுகள் ஆசிரியரால் எடிட் செய்யப் பட்டதாக நினைத்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்து பதிவுகள் விவாத களத்திலிருந்தும் வெளியேறியவனை, நண்பர் அனாதை ஆனந்தன் அழைத்து தன் பதிவில் என்னை எழுதப் வைத்தார். அவர் அன்பிற்கும் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ற வகையில் நிறைவாக எதையும் அவரின் வலைப்பதிவில் எழுத முடியவில்லை. இதற்கிடையில் வாழ்ந்த/வேலைபார்த்த சூழலின் காரணமாய் மிகவும் தனிமையான ஒரு வாழ்க்கை அமைந்தது. முற்றிலுமான தனிமை என்பதை அதற்கு முன் அனுபவித்து இருந்தாலும், இந்த முறை அதில் ஒரு இழை கூட மன அழுத்தமில்லாமல், 'நவீனத்துவ சோகம்' கலந்த தேடலென்ற பாவனையில்லாமல், முற்றிலும் உற்சாகமாய், முழுக்க சந்தோஷமும் இன்பமுமாய், ஒரு கட்டத்தில் எழுதுவது மட்டுமில்லாமல் தமிழிணைய தொடர்பும் நின்று, மது, இசை, வேலை, பேசக்கூட ஆளில்லாத தனிமை என்று, காற்றில் ஒரு தூசு போல, கடலில் ஒரு தோணி போல அற்புதமாய் கழிந்து கொண்டிருந்த வாழ்க்கை. இதில் ஒரு கட்டத்தில் அவ்வப்போது இளைபாறும் வகையில் தமிழிணையத்திற்கு வந்தபோது, இகாரஸ் பிரகாஷ் இடையீடு செய்ததில், மீண்டும் ஏதோ தீர்மானித்து வலைப்பதிவு தொடங்கினேன். பிறகு எழுதிய அனைத்தும் இங்கே இருக்கிறது, தொடக்கத்தில் பின்னூட்டங்களை சேமிக்கவில்லை. பின்னர் சேமிக்கத் தொடங்கினேன். இப்போது அதையும், அதை முன்வைத்த விவாதத்தை நோக்கமாகவும் கொண்டு 'கூத்து' வலைப்பதிவை தொடங்கியிருக்கிறேன். என் பதிவுகளை வாசிக்கும் அனைவருக்கும், பின்னுட்டமிட்ட, உற்சாகமளித்த, விமர்சித்த அனைத்து நண்பர்களுக்கும், இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் நன்றி கூறுகிறேன். இடை குறிப்பு: பதிவின் தொடக்கத்தில் தெரிதாவை மேற்கோள் காட்டியிருப்பது வெட்டி பந்தாவிற்கு மட்டும்தான். இந்த ஒரு வாரத்தில் முழுமையாய் பதிவு எழுதுவதில் மட்டுமே என்னை ஈடுபடுத்திக் கொள்வதாய் இருக்கிறேன். தினமும் ஒரு பதிவு உள்ளிட தமிழ்மணம் என்னை பணித்திருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்டது தினமும் வந்து விழ சாத்தியம் உள்ளது. அதற்கான கருக்களை சேர்த்தும் வைத்திருக்கிறேன். வேலைகளை விலக்கியும் வைத்திருக்கிறேன். இசை இலக்கியம், அரசியல், அறிவியல் என்று, எல்லாம் ஒன்றோடு ஒன்று விலகி வாழ்வதில்லை என்ற என் பார்வையுடன் இயைந்து, எல்லாவற்றையும், தொட்டு, ஆடு புல் மேயும் லாவகத்துடன் ( 'நாய் வாயை வைப்பது போல' என்றும் வாசிக்கலாம்), எழுத உத்தேசித்திருக்கிறேன். எவ்வளவு தூரம் இறைவன், சாத்தான் மற்றும் சார்பற்ற இயற்கையின் ஓரப்பார்வை எனக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கலாம். எனது பழைய சில பதிவுகள் பற்றி நண்பர்கள் அவ்வப்போது விசாரிக்கிறார்கள் (பீலா ரொம்ப விடக்கூடாது, மொத்தமாய் இரண்டு நண்பர்கள் இதுவரை கேட்டார்கள்). அதனால் ஒரு வசதிக்காக உருப்படியாய் எழுதியதாக நானே நினைக்கும் சில பதிவுகளும் அது குறித்த சில வரிகளிலான குறிப்பையும் கீழே தருகிறேன். எனது ஒரே ஒரு சிறுகதை வடு. கடைசியாக ஹரன் பிரசன்னா கேள்விப்பட்டு, படித்து தனது பாராட்டையும், ஊக்குவிப்பையும் தெரிவித்துள்ளார். அவருக்கும் நன்றி. புனைவு எழுத்து நாம் திட்டமிட்டு முன் தீர்மானித்து எழுதக் கூடியது அல்ல. சில ஐடியாக்கள் உள்ளன. விரைவில் அதில் நேரத்தை செலவிடும் உத்தேசமும் உள்ளது. இதுவரை முன் திட்டமிடலில்லாத அந்த நேரத்து வெளிபாடாக வந்த மூன்று கவிதைகள். எதிர்கொள்ளும் மரம். வட்டம்! மெய்களாலானது! இனி நமது வழக்கமான பாணி பதிவுகளில் இருந்து.. மன்மதன் படத்தை முன்வைத்து இரண்டு விமர்சனங்கள். கொடுக்க வேணும் இனிமா! சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும். இதில் முதல் பதிவு கண்டுகொள்ளப் படாமல் இரண்டாம் பதிவு மட்டும் பரவலாக -பொதிவாகவும், நொகையாகவும் - பேசப்பட்டுள்ளது. வலை பதிய தொடங்கிய காலத்தில் மிக சாதாரணமான ஒரு மனநிலையில் எழுதியது. ஆனால் இதில் வரும் ஆண்குறியை இன்றுவரை பலர் பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார்கள். 'சிம்புவின் ஆண் குறியை அறுக்க வேண்டும்!' என்ற பதிவை எழுதும் நோக்கம் முதலில் இல்லை. எனது முதல் பதிவை படித்தவர்கள், அது காட்டம் குறைவாகவும், 'சினிமாவை மிகையாக தாக்க வேண்டிய அவசியம் இல்லை' என்ற பார்வையுடன், சினிமாவை விட சமூக மதிப்பீடுகளே தாக்குதலுக்கு உரியது என்ற கருத்துடன் எழுதப் பட்டிருப்பதை அறியலாம். ஆனால் தமிழ் சமூகம் -குறிப்பாய் பெண்ணிய அமைப்புகள் - பாய்ஸ் போன்ற ஒரு படத்திற்கு நிகழ்த்திய மிகையான எதிர்வினைகளையும், மன்மதன் போன்ற ஒரு படத்திற்கு காட்டிய அரசியல் மௌனத்தையும், இணையத்தில் பல இடங்களில் 'மன்மதன்' பாராட்டப் பட்டு எதிர்குரல் கேட்காத சுரணையின்மையை முன்வைத்து, ஒரு தீவிரமான எதிர்வினையின் தேவையை உணர்ந்ததாக நினைத்து அந்த பதிவை எழுதினேன். குறிப்பாக மற்ற எந்த மேற்கத்திய சூழலிலும் நிகழ்ந்திருக்க கூடிய எதிர்வினையில் ஒரு விழுக்காடு கூட தமிழ் சமூகத்தில் ஒலிக்கக் கேட்டிருந்தால், நான் என் எதிர்வினையை எழுதும் கட்டாயம் வந்திருக்காது. இன்னமும் நான் கத்தியை வைத்துக் கொண்டு சிம்புவின் ஆண்குறியை அறுக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாக, ஏதாவது ஒரு உவமேயம் கொண்டு கருதிக்கொள்ளும், எல்லா அன்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! முதிரா மனம் வாய்ப்பது போல பெரும்பேறு வேறு உண்டோ! ஃபேன்ஸி பனியன்கள்! சாரு நிவேதிதா பற்றி நான் விரிவாய் எழுத நினைத்திருப்பதற்கு ஒரு முன்னுரையாய் இதை கொள்ளலாம். 'காதல்' திரைப்படம் தமிழ் சினிமாவில் வறலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக எனக்கு படுகிறது. அதற்கான முக்கிய காரணம் 'காதல்' திரைப்படம் படம் பிடிக்கும் யதார்த்தம், அதே நேரம் அது தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஜனரஞ்சக தனமை. யதார்த்தம் என்பதாக நாம் அனுமானித்து வைத்திருப்பதற்கு முற்றிலும் வேறுபட்டே, தமிழ் சினிமாவில் நமக்கு காட்டப்படும் யதார்த்தம் இருந்து வந்திருக்கிறது. இதற்கான ஒரு சமன்பாட்டை ஒப்புகொண்ட மனநிலையிலேயே தமிழ் பார்வையாளர்களால் சினிமா பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. இவ்வாறு பொதுவாக யதார்த்தம் என்று அனுமானித்திருப்பதையும், சினிமா யதார்த்தம் என்பதாக இதுவரை அமையப்பெற்றிருப்பதையும் ஒரே தளத்தில் கொண்டு வருகிறது 'காதல்' திரைப்படம். யதார்த்ததை படம் பிடிப்பதில் வெற்றியடைகிறது, ஆனால் கலைப்பட யதார்த்த சிமிழில் அடங்கவில்லை. ஒரு வெகுஜன ரசனைக்குரிய தளத்திலிருந்து நகராமல் அதை சாதித்திருக்கிறது. இதற்கு முன் இதை இத்தனை பொருத்தமாய் சாதித்த வேறு திரைப்படம் இருப்பதாய் தெரியவில்லை. அதை முதல் பதிவில் எழுதினேன். அதுதான் படம் மீதான எனது அடிப்படை விமர்சனம். ஆனால் ஒரு விஷயத்தை, படம் தவறு செய்யாமல், ரொம்ப கவனமாய் கையாண்டிருப்பது மண்டையில் உரைத்து, படத்தின் மீதான அந்த விமர்சனமும் அவசியம் என்று தோன்றியதால் அதை அடுத்த பதிவிலும் எழுதினேன். இரண்டையும் சேர்த்து ஒரு திருத்திய வடிவில், சில வரிகள் நீக்கி சிலதை சேர்த்து பதிவுகளில் வெளிவந்த வந்த கட்டுரை படிப்பதற்கு இன்னும் நேர்தியானது என்பது என் கருத்து. காத்தடிக்குது, காத்தடிக்குது கானா பாடல்கள் பற்றி என் அவதானிப்புகள் சார்ந்து சில குறிப்புகள் சந்திரமுகி பற்றிய என் பதிவை சற்று மாற்றி மேலான வடிவத்தில் பதிவுகளில் வாசிக்கலாம். என் பதிவில் பின்னூட்டங்களுடன் சுந்தர ராமசாமி எழுதி பலரால் கண்டனம் செய்யப்பட்ட 'பிள்ளை கெடுத்தாள் விளை' சிறுகதை பற்றி ரவிக்குமார் எழுதிய ஒரு கட்டுரையை முன்வைத்து, ' ஷங்கரின் அந்நியன் பற்றி..' நான் எழுதிய பகடி கட்டுரை. பதிவுகளில் ஒரு வாசகர் நேரடியாக பொருள் கொண்டு வாசித்து என்னை திட்டியது, தமிழகத்தின் பிரபல எழுதாளர் ஒருவர் நேரடியாக பொருள் கொண்டு எனக்கு மின்னஞ்சல் எழுதியது, மற்றும் டோண்டு தவிர்த்து, அனைவரும் சரியான வகையில் பொருள் கொண்ட ஒரு ஹிட் பதிவு. சில திருத்தங்களுடன் பதிவுகளில் 'ஷங்கரின் அந்நியன் பற்றி'. இளயராஜாவை பற்றி சாருவின் திரித்தல் மற்றும்... சன் டீவியில் நடந்த ஒரு கலந்துரையாடலை முன்வைத்து, குறிப்பாய் திருமாவின் அரசியல் பற்றிய விமர்சனங்கள் சட்டி சுட்டதடா! சண்டை கோழி படத்தில் வரும் ஒரு வசனத்தை முன்வைத்து, குட்டி ரேவதியும் மற்றவர்களும், எதிர்ப்பு அரசியல் டீஷர்ட் அணிந்துகொண்டு நடத்திய ஒரு அழுகுணி ஆட்டம் பற்றிய என் பார்வை. கேலிக்கூத்தாகும் எதிர்ப்பு அரசியல். தேர்தல் குறித்த பதிவுகள் 1 2 குறிப்பாய் ரவிக்குமாரை முன்வைத்த பதிவை நானே முக்கியமாய் நினைக்கிறேன். தேர்தல் முடிவு பற்றி 'ம்!; இவ்வாறாக எனது பழைய பதிவுகள் அனைத்தையும் ஒரு முறை மறுபடி மேய்ந்து ஒரு மீள்பார்வை பார்க்க நேர்ந்தது. இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி |
55 Comments:
உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தாலும் நிறைய முறை கருத்துக்களை எழுத ஆரம்பித்து பின் அவசியம்தானா என்று யோசித்து சென்றுவிடுவது வழக்கம். ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். தொடர்ச்சியாக படிக்க முடியாவிட்டாலும், எல்லாவற்றையும் படிக்க முயற்சி செய்கிறேன். வாழ்த்துக்கள்
//என்னை பணித்திருக்கிறார்/
அடிடா சக்கை. பணிந்துபோற ஆளாம் ;-)
வாழ்த்துக்கள்
ரோசா!
உங்களின் "ஆற்றொழுக்கான" செயற்கை இடைச்செருகல்தனமற்ற நடையா, ஓராயிரம் விஷயங்களை சொல்லவந்த கருத்தின்/பதிவின் மையப்புள்ளியை விட்டு விலகாமலேயே தொட்டுச் செல்லும் பாங்கா - அல்லது 'களார்'னு பேசும் பூடகமற்ற எழுத்தா தெரியவில்லை, (மூன்றுமா?!) - வசீகரிக்கிறது!
எனக்கு மிகவும் appeal செய்வது மூன்றாவதுதான் என்று தோணுது.
நீங்கள் எழுதும் விஷயத்தில், சொல்வதில், கடும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், படிப்பவனை முழுப்பதிவையும் - வரிகளை, சொற்களை விட்டு விடாமல் வாசிக்கத் தூண்டும் தன்மையுடையது உங்கள் எழுத்து.
உங்கள் பழைய பதிவுகள் சிலதை இனிதான் படிக்க வேண்டும் - சுட்டி தந்தமைக்கு நன்றி :)
வாழ்த்துக்கள்! பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
ஸ்ரீகாந்த்.
பத்மா, பெயரிலி, சந்திரவதனா, நியோ, ஸ்ரீகாந்த் உக்குவிப்பிற்கு நன்றி.
கொஞ்சம் டென்ஷனாய் இருக்கிறது. பார்போம்.
கிளம்பவேண்டும். நாளை பார்க்கலாம்!
'எண்ணியிருந்தது ஈடேற' ன்னு இப்பொ சூரியன் எஃப் எம் பாடிட்டு இருக்கு. சரிதான்.
அருள்
//'எண்ணியிருந்தது ஈடேற' ன்னு இப்பொ சூரியன் எஃப் எம் பாடிட்டு இருக்கு. // வச்சு பாத்தேன். வைச்சபோது 'அரிசி குத்தும் அக்கா மகளே" மிர்சியில் "ஆசையை காத்துல தூது விட்டேன்"
இப்போ "வெத்தலயை போட்டேண்டி.. சத்து கொஞ்சம் ஏறுதடி"
நான் இதுவரை உங்கள் பதிவுகளை வாசிக்கவில்லை. இந்த நட்சத்திர வாரத்தில்தான் நீங்கள் எனக்கு அறிமுகம்.
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!!
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.
நல்லா இருங்க.
பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
மச்சான் பேரு மதுர !! நீ
நின்னு பாரு எதிர... நான்
ரெக்க கட்டி பறந்துவரும்..
ரெண்டு காலு குதுர !!
வாங்க வந்து கலக்குங்க
வாழ்த்துக்கள், கொஞ்சம் லேட்டாக உங்கள் பதிவுகளை படித்திருந்தாலும், உங்கள் எழுத்து என்க்கு மாறுதலான ஒன்று! தொடர்ந்து பதிவுகளை எதிர் கொள்ள இருக்கிறேன்!
வாழ்த்துக்கள் ரோசா
Wow!
வாங்க, வாங்க!
நம்ம காட்டுல..
மழை பெய்யுது
நம்ம பாட்டுல..
சுதி ஏறுது
நம்ம கோட்டையில்
கொடி ஆடுது
நம்ம கோப்பையில்
சுவை கூடுது
வசந்த்,
வழக்கமாக இடுகைகளை நான் படிக்க முற்படும் பொழுது, அங்கு விவாதம் ஏற்கனவே முடிந்திருக்கும். அதன் பின் கடைசியில் எட்டிப் பார்த்து எப்பொழுதாவது பின்னூட்டம் (எச்சம் :-)) இடும் நான் எதேச்சையாக இன்று சீக்கிரமாகவே படிக்க வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
பலவகைகளில் உங்கள் அனுபவங்களில் என்னுடைய பரிணாமத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. நீங்கள் சொல்லியது போல் சோவில் ஆரம்பித்தது என்னுடைய அரசியல் பார்வையும் கூட. ஒருவகையில் சொல்லப் போனால் நடுத்தர வர்க்கத்து fashion என்று கூடச் சொல்லலாம். பள்ளி இறுதியில் ஆரம்பித்த அந்த fashion-லிருந்து வெளிவர சில ஆண்டுகள் பிடித்தன. நம்மைப் போன்று நிறைய பேர்களின் தீவிர அரசியல் வாசிப்பு சோவில் ஆரம்பித்திருக்கிறது. அதே போல் சோ-வின் மட்டையடிகளைப் புரிந்து கொள்ள இடது சாரி நூல்கள் பெரிதும் உதவின என்று சொல்லலாம். அதன் பின் பெரியாரிய நூல்களைப் படிக்கும் பொழுது மட்டையடிகளுக்குப் பின் ஒளிந்துள்ள சோத்தனத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த வாரம் நிறைய எதிர்பார்க்கிறேன்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
புதிய நட்சத்திரத்திற்கு.. வாழ்த்துக்கள்.
முடிந்தால் ழாக்தெரிதா-வைப்பற்றியும் எழுதுங்கள்.
அவரைப் பற்றி தமிழில் ஏதேனும் நூல் வந்திருக்கிறாதா.. ?
அஞ்சலிக்கட்டுரைகள் தவிர்த்து..
வாழ்த்துக்கள் இந்த வார நட்சத்திரம் !
உங்கள் நடை சற்றே கடினமாக இருந்தாலும் சிந்தனைகள் நேர்மையாகவும் நேரடியாகவும் இருக்கும். வரும் பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
தமிழின் மிகச்சிறந்த வலைப்பதிவர் களில் ஒருவரான உங்கள் வாரத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
இந்த வாரம் உங்கள் பக்கத்தை தவிர வேறு எதையும் படிக்கமுடியாது என்று நினைக்கிறென்.
அ.மார்க்ஸ் பற்றியும் எழுதவும்.
பழைய சுட்டிகளுக்கு நன்றி ( தருமி சார்..பார்த்துக்குங்க..சிம்புவின் ***)
நட்சத்திர வாழ்த்துக்கள் ரோசா! :)
ரோசாவசந்த்,
வாழ்த்துக்கள்.
அன்புடன்
வெற்றி
அட, நீங்க தூத்துக்குடியா?
வாழ்த்துக்கள் ரோசா..
Expecting a great week..Wishes to Roza sir..Though it will be bit difficult for me to access net this week,I will try my best to follow up.
VazhthukkaL!
வாழ்த்துக்கள்
ஏலே...பூர்ஷுவா!
"சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச் சொல்லை, வெல்லும் சொல் இன்மை அறிந்து!"
இது குறள்டா! இதுக்கு மேலே நான் உனக்கு என்னதான் சொல்றது!
வெய்ட்டிங் :)
நட்சத்திரம் ரோசா வாழ்த்துக்கள்!
உங்களது படிப்படியான ஆளுமை வளர்ச்சியும், இலக்கிய வளர்ச்சியையும் அறிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.
இது இடஒதுக்கீடு குறித்த காலமாக இருப்பதால், அமெரிக்காவில் இடஒதுக்கீடு எப்படி அமலாக்கப்படுகிறது. அதாவது, அபர்மேட்டிவ் ஆக்ஷன் என இது அழைக்கப்படுவதாக அறிந்தேன். இது குறித்து ஒரு பதிவைப் போடுங்களேன்.
நன்றி ரோசா
Roza,
It is surprising that you have become a "STAR" after so long !!! Are you not one already ????
vAzththukkaL !
கருத்தளித்த, ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்த வாரத்தை பதிவு எழுதுவதில் ஈடுபடுத்தி செலவழிக்க நினைப்பதால், பின்னூட்டங்களுக்கு பெரிய அளவில் பதில் எழுத இயலாது என்று தோன்றுகிறது. அதனால் இனி வரும் பதிவுகளில் தனியாய் அனைவருக்கும் பதில் தர இயலாததற்கு நண்பர்கள் பொறுத்து கொள்ள வேண்டும்.
பலர் காட்டியுள்ள எதிர்பார்ப்பு இன்னும் டென்ஷனை ஏற்படுத்துகிறது. முடிந்தவரை முயற்சிக்கிறேன்.
செங்கள்ளு சித்தரிடம் இப்படி ஒரு வாழ்த்தை பார்த்த பிறகு, உண்மையிலேயே புண்ணியம் செய்யத்தான் செய்திருக்கிறோமோ என்று தோன்றிவிட்டது. அவர் வாழ்த்தும் அளவிற்கு என் மொழிகிடங்கிடம் சொல் இல்லாததால், 'சொல்வேன் உண்டென்று சொல்,இல் இல்லாத அது' என்று பிரமீள் எழுதியதை தருகிறேன், இன்னொரு பதிவில்.
மலைநாடன், கல்ஃப் தமிழன், துளசியக்கா, பொடிச்சி நன்றி.
எதிர்பார்த்தபடி பிரகாஷும் வெங்கட்டும் கானாவுடன், பாட்டுடன் (ரெண்டும் வேறா!)வந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் சில பின்னூட்டம் தரும் வகையில் ஏதாவது எழுதுவேன் என்று நினைக்கிறேன்.
வெளிகண்ட நாதர் பட்டினத்து ராசா, பாபா, சங்கரபாண்டி, யாழிசை செல்வன், சென்ற வாரத்தில் கலக்கிய மணியன், முத்து, இளவஞ்சி, வெற்றி ஜோசப் சாருக்கு நன்றி.
ஜோசஃப் சார், ஆமாம், தூத்துகுடிதான், வாவுசி கல்லூரிதான்!
ஜோ, சிபி ராசா, சந்திப்பு, பாலா நன்றி. ஆனாலும் பாலாவின் கிண்டல் அதிகமில்லையா?
முத்து, அ. மார்க்ஸ் பற்றி நினைத்திருப்பதை எழுத முடியுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.
யாழிசை செல்வன், தெரிதாவை மேற்கோள் காட்டமுடியும், பற்றி எழுத முடியாது. அதற்கு நிறைய படிக்க வேண்டும், உழைப்பு வேண்டும். அப்படி உழைத்து எழுத ஆசைதான், ஆனால் நிச்சயமாய் இந்த வாரத்தில் முடியாது.
சந்திப்பு, ஏற்கனவே சொன்னது போல் இடவொதுக்கீட்டை முன்வைத்து நீங்களும் மற்றவர்களும் எழுதியது நன்றாக இருக்கிறது. ஆதரிக்கிறேன்! நான் எழுத நினைப்பதை எழுத அதற்க்கென்றே முழுதாய் இரண்டு வாரம் வேண்டும். அதனால் மன்னிக்கவும்!
மீண்டும் எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
சித்தன் ஒரு அருமையான குறளை மேற்கோள் காட்டி இருக்கார் உங்க எழுத்துக்கு.
கலக்குங்க, படிக்கக் காத்திருக்கிறோம்.
வாழ்த்துகள் ரோசாவசந்த். இந்த வார நட்சத்திரமாக ஜொலிக்க எனது வாழ்த்துகள்.
வாழ்த்துகள் ரோசா வசந்த்
வாழ்த்துக்கள்! பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
ரோசா அண்ணாச்சி,
நல்லா இருக்கியளா?
'நாளைக்கு ரெண்டு பதிவு போடுறதுன்னா நல்லா இருக்கேன்னுதானல அர்த்தம்'னு எதிர் கேள்வி கேக்காதிய :-)
இந்த சோ அண்ணாச்சி விசயத்துல உங்களுக்கு நேர்ந்ததுதான் எனக்கும். நெறய பேருக்கு 'சாயம் வெளுக்கறவரைக்கும்' அவரு பெரிய பருப்புதான் போல. நான் பிஸ்தான்னு சொல்ல வந்தேன். தப்பா எடுத்துக்காதிய :-)
விண்மீன் ஒளிர வாழ்த்துகளுடன்
சாத்தான்குளத்தான்
Rosa
Congrats for going to shine in the bloggers' sky for a week.Who are all going to get nightmare coz of u.nobody knows!!!! Are u frm Tuty. I studied PUC in APC Mahalaxmi,1976.
Expecting a lot from this controversial,contemporary!!!
கேவியார், ராகவன், குமரன், யெட் அனதர் வெங்கட், ஆசிஃப் நன்றி.
தாணு, நீங்களும் தூத்துகுடியா! ஆஹா!
நீங்கள் ஏபிசில படிச்சு பத்து வருஷம் கழிச்சு வவுசிலே நான் நுழைந்தேன்!
வாழ்த்துகள் ரோசா...
ஒரு கலவையான காரசாரமான வாரம் காத்திருக்கிறது. வாசிக்க காத்திருக்கிறேன்.
வசந்த், இப்போதுதான் பார்த்தேன். இந்த வாரத்தில் நிறைய எழுத வாழ்த்து!
வாழ்த்துக்கள்.
எதிர்பார்ப்புகளுடன்.......
//. குழந்தை வயது முடிந்து, ராஜேஷ் குமார், தமிழ்வாணன் என்று அலைந்து, எனக்கான எழுத்தை சுஜாதாவிடம் முதன் முதலில் அடையாளம் கண்டேன். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எனக்கான அரசியலை துக்ளக் பத்திரிகையில் 'சோ'விடம் அடையாளம் கண்டேன். எனது துவக்க அரசியல் ஈடுபாடுகளும் இந்துத்வ சார்பாகவே இருந்தது. கிட்டதட்ட வாலிப பருவம், சோ, சுஜாதா பாதிப்பில் ஏற்பட்ட பார்வையின் அடிப்படையிலேயே தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அரசியல் பார்வையை முற்றிலும் புரட்டி போட்டது நூலகத்தில் படிக்க நேர்ந்த பெரியாரின் எழுத்துக்கள். அதற்கு முன்னாலான பல பரிசீலனைகளில் மனம் அதை உள்வாங்கும் வகையில் பக்குவப் பட்டிருந்ததும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. சோவும், அதுவரை வாழ்ந்த சூழலும் ஏற்படுத்தியிருந்த பாதிப்பிலிருந்து மீண்டு, ஒரு மார்க்சிய, பெரியாரிய சார்பில் சிந்திக்க துவங்கவும், பின் அதையும் மீள் பார்வை பார்க்க, பல நிகழ்வுகள், நண்பர்கள், புத்தகங்கள் என்று வாழ்வின் ஒரு பெரிய பகுதி கழிய வேண்டியிருந்தது. என்றாலும் தீவிரமான அரசியல் பார்வை என்பது எனக்கு 'சோ'வின் எழுத்துக்களை படிப்பதன் மூலமாகவே நிகழ்ந்தது. ஒருவேளை 'சோ'வை படித்திராவிட்டால், அரசியல் ரீதியாய் தீவிரமாய் சிந்திக்கும் ஒரு பழக்கமே வராமல் போயிருக்கலாம். அந்த வகையில் சோ எனக்கு முக்கியமானவரே
//
//அரசியல் ரீதியாய் தீவிரமாய் சிந்திக்கும் ஒரு பழக்கமே வராமல் போயிருக்கலாம்// இந்த ஒரு வரியை தவிர மற்ற அனைத்தும் எனக்கும்... ம்...எல்லோருக்கும் ஒரே பின்னனிதான் போல... :-)
வாழ்த்துகள்...
முத்து குமரன், தருமி, டீசே, குழலி நன்றி.
குழலில் ஆமாம், அது ஒரு வேளை எனக்கு மட்டும் பொருந்திப் போகலாம்.
ஆஹா... இவ்வாரம் பல "சிம்ம சொப்பனங்களின்" (எனக்கில்ல...!) எழுத்துக்களை மீண்டும் பார்க்கலாம். இவ்வாரம் தரப் போகும் மலரும் நினைவுகளில் அவர்கள் மீண்டும் தொடர்ந்து எழுத வரவேண்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இவ்வாரத்தையும்., இங்கு பலரின் வருகையையும்.
அன்புள்ள வசந்த்:
வலைப்பதிவுக்கு வந்து பல நாட்களாகிறது. உங்கள் வாரம் இந்த நிலையை மாற்றிவிடுமோ என்றஞ்சுகிறேன்! :) படம் அருமையாக இருக்கிறது.
சுரா சம்பந்தமான, மதிவண்ணனின் கட்டுரையை நீங்கள் வாசித்திருக்காவிட்டால் வாசிக்க இங்கு குறிப்பிடுகிறேன்.
மற்றபடி பிறகு எழுதுகிறேன். சுராவின் கவிதைகள் பற்றி உங்களது கருத்துக்களோடும், மதிவண்ணனின் பார்வையோடும் பெரிதும் உடன்படுகிறேன்.
http://www.keetru.com/anicha/Mar06/mathivannan.html
//தாணு, நீங்களும் தூத்துகுடியா! ஆஹா!
நீங்கள் ஏபிசில படிச்சு பத்து வருஷம் கழிச்சு வவுசிலே நான் நுழைந்தேன்!
//
நானும் தூத்துக்குடி காமராஜ் மற்றும் வ.ஊ.சி. கல்லூரிதான். ஏபிஸி கல்லூரி பக்கம் வீடு. இங்கு ஒரு தூத்துக்குடி கிளப் ஆரம்பிக்காலாம் போல் தெரிகிறது :-) நீங்கள், நான், தாணு, ராகவன், சுதாகர் என்று பட்டியல் நீளுகிறது!
நன்றி - சொ. சங்கரபாண்டி
Rozavasanth, I only wish I had more time these days to write proper feedbacks to your posts. The bludgeon's arc may be wide, but it almost always gets what it intends to get ;-). Congratulations, keep the posts coming and keep up the great work!
நேசக்குமார் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.
அப்படி போடு நன்றி.
தங்கமணி, சன்னாசி எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் எடுத்து கொண்டு கருத்துக்களை சொல்லவும். நன்றி!
ரோசா வசந்த்,
இப்போதுதான் தமிழ்மணம் வந்தேன். நட்சத்திரம் பார்த்தேன். இன்னும் இரு தினங்கள் வர இயலாது.. மொத்தமாகத் தான் படிக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்..
நீங்கள் தூத்துக்குடி என்பது எனக்கு செய்தி.. சங்கரபாண்டி நான் படித்த கல்லூரியின் பெயரை வேறு குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்க எல்லாம் கிடைத்த காலத்தில் படித்திருக்கிறீர்கள்.. நாங்கள் படிக்கும்போது ஜிஞ்சர் தான்!
வலைப் பதிவிலிருந்து (தற்காலிகமாகவாவது) ஓய்வு பெறலாம் என்று நினைத்த நேரத்தில் இப்படி ஒரு சோதனையா? தமிழ் மென்பொருளையும், எழுத்துருக்களையும் கணினிகளிலிருந்து கழற்றிவைத்து விட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு அரிப்பு தாங்காமல் தமிழ்மணத்தில் எட்டிப் பார்த்தால்....இன்னும் ஒரு வாரமாவது தங்கவேண்டும் போலிருக்கிறது. 'சுரதா'வின் உதவியோடு தட்டிய இதுவே கடைசி பின்னூட்டம் (அடுத்த இரண்டு மாதங்களுக்காவது).
சுமு, நன்றி, உங்கள் நேரத்தை பொறுத்து...!
தெருத்தொண்டன் நன்றி. நான் கிடைத்த காலத்தில் படித்ததாக எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? குறிப்பாக நான் ஜிஞ்சர் அடிக்கவில்லை என்று..?
இந்த வார நட்சத்திரத்திற்குத் தாமதமான வாழ்த்துகள்.
//இனி இந்துத்வ ஆசாமிகளும், பார்பன கொழுந்துகளும் பெரியார் எழுதுக்களை தடை செய்ய லாஜிக் போட்டு கேள்வி கேட்கலாம்//
:) :) :)
http://agaramuthala.blogspot.com/2006/06/selective-selective.html
பதிவுக்கு நன்றி ரோசா வசந்த்.
சுந்தர், நன்றி!
Post a Comment
<< Home