ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Saturday, April 29, 2006

2. தேர்தல் - 2006.

ஓ போடு' என்ற ஒரு 'சமூக விழிப்புணர்வு இயக்கம்', இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், 'யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை' என்ற '49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தி, இன்றைய 'கழிசடை அரசியலுக்கு' எதிரான ஒரு தீர்மானமாக, எதிர்ப்பை முன்வைக்க அழைக்கிறது. கேட்க சுவாரசியமாகத் தான் இருகிறது. இப்படி ஒரு வாய்ப்பு இருப்பது ஒரு குறிப்பிட்ட குரலை ஒலிப்பதற்கான உரிமையும் தேவையும் ஆகும். அந்த வகையில் நல்ல விஷயம்தான். ஆனால் தோழர் ஞாநி இந்த நடவடிக்கையை 'நம்மை இனி ஏமாற்ற முடியாது' என்பதன் அறிவிப்பாகவும், ' ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட, 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும்.' என்று சொல்வ தெல்லாம்தான் நம் சிந்தனையை தூண்டுகிறது.


முதலில் இது ஒரு நடுத்தர படித்த வர்க்கத்தின் குரலாக இருக்குமே ஒழிய, ஏழை எளிய மக்கள் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை தேர்ந்தெடுத்து, ஓட்டளித்து, சந்தோஷத்துடன் தங்களின் சிறிய உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில்தான் ஆர்வமாக இருப்பார்கள். சமூகத்தின் எந்த போக்கிலும் அதிகாரம் இல்லாதவர்கள், சமூகத்தில் எதையும் நிர்ணயிக்க இயலாதவர்கள், தங்களிடம் உள்ள ஒரு குறைந்த பட்ச, ஆனால் முக்கியமான அதிகாரத்தை வீணாக்காமல் பயன்படுத்த விளைவதும், அதில் நிறைவு கொள்வதும், புரிந்து கொள்ளக் கூடியதே. ஒரு வேளை குறிப்பிட்ட மக்கள் பிரச்சனைக்கு எதிர்ப்பாய், ஒட்டு மொத்தமாய் முன்பே பேசி வைத்து, வாக்களிப்பதை பகிஷ்கரிப்பதில் இறங்கக் கூடும். அதுவும் தங்களிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தும் உத்தியாகவே இருக்கும்.


வாக்களிப்பதை தவிர்க்கும் பெரும் பகுதி மக்கள், சமூகத்தில் வசதியுடன், அதன் அதிகாரத்தையும், உற்பத்தியையும் நுகர்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் இருப்பவர்கள். 'யாரையும் பிடிக்கவில்லை' என்று பொதுவாய் சொல்லிக்கொண்டாலும், நீண்ட வரிசையில் நின்று, காத்திருத்தலுக்கு பின்பு, தாங்கள் அளிக்கப் போகும் ஒற்றை ஓட்டின் மீது பெரிய மதிப்பு இல்லாத அலட்சியத்தினாலேயே, ஓவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்காத விழுக்காடினரில் பெரும்பகுதியினர் வாக்களிக்காமல் இருப்பதாக தோன்றுகிறது. அவர்கள் சிரமம் எடுத்து '49 ஓ' போடுவார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்தான்.


இப்படி 'வாக்களிக்க விரும்பவில்லை' என்பதாய், வாக்களிக்க விரும்பாத விழுக்காடினர் வாக்களிப்பதால், எதாவது பயனோ, யாரிடமாவது மனமாற்றமோ இருக்கப் போவதாக எனக்கு தோன்றவில்லை. மிஞ்சிப் போனால் ஒரு சுய நிறைவும், மனச்சமாதானமும் கிடைக்கலாமே தவிர, அரசியல்ரீதியாய் இதற்கு என்ன முக்கியத்துவம் ஏற்படும் என்று புரியவில்லை. அல்லது இப்படிபட்ட நடவடிக்கைகளை, ஒரு கட்டத்தில் நாம் மாற்றிக்கொண்டு, யாருக்காவது ஓட்டளிக்கக் கூடிய 'தரத்திற்கு', நமது தேர்தல் அரசியல் என்றாவது 'உயர்ந்து' மேலெழும்பி வரும் என்றும், எனக்கு தோன்றவில்லை. தேர்தல் அரசியல் என்று வந்துவிட்ட பின் அது இப்படித்தான் இருக்கும் என்று மீண்டும் மீண்டும் மாற்று உதாரணங்கள் இல்லாமல் நிருபிக்கப் பட்ட பின், இன்னமும் 'அரசியல் ஒரு சாக்கடை' என்று ஸ்டீரியோடைப்பாய் சொல்லிக் கொண்டு செய்யும், ஒரு அசட்டு தார்மீகமாகவே எனக்கு இந்த நடவடிக்கை தோற்றமளிக்கிறது. அரசியல் நாம் எதிர்பார்க்கும் தரத்திற்கு வரும் என்ற அசட்டு நம்பிக்கைகளும் எனக்கு கிடையாது. யாருக்கும் வோட்டுப் போட விருப்பமில்லை யெனில், கடும் கோடையில் வெளியே செல்லாமல், வீட்டில், ஜிஞ்சர் லெமன் உருஞ்சிக் கொண்டு, எஃப் எம் கேட்டுக் கொண்டிருப்பதே உத்தமமானதாய் எனக்குத் தோன்றுகிறது.


அது தவிர 'ஓ போடு'விலிருந்து ஐஐடிக்காரன்களுக்கு ஓட்டுப் போடும் படி ஒரு மின்னஞ்சல் வந்ததை பார்த்து கொப்பளமே வந்துவிட்டது. ஒரு வேளை பிராமண சங்கம் தொடங்கியுள்ள கட்சிக்கு ஓட்டு போடச் சொன்னால் கூட கோபம் வந்திருக்காது. வலைப்பதிவிலும் ஒரு இடத்தில் ஒருவர் லோக் பரித்ரனுக்கு ஓட்டுப் போட அழைக்கிறார்.('சமஸ்கிருதப் பெயரை வைத்துகொண்டு பிழைக்க முடியுமா!' என்பதாக துக்ளக் இதை கிண்டலடிக்கிறது. கிண்டல் லோக் பரித்ரனை பற்றி அல்ல, தமிழகத்தை பற்றி.) இன்னொருவர் 'Give a chance to vijaykant' என்கிறார். அப்படி சொன்னவருக்கும் ஐஐடிக்காரன்களின் கட்சி சிறந்ததாக தெரிகிறது.

படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் விடிவுகாலம் வரும் என்பது போன்ற அபத்தமான, அதே நேரம் சம அளவில் கபடமான சிந்தனை வேறு இருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. நாட்டில் ஹவாலாக்களிலும், என்னென்னவோ வகைகளிலும் கொள்ளையடித்த எவரும் தற்குறிகளோ, மாமா வேலை செய்துகொண்டிருந்தவனோ, சாராயம் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தவனோ அல்ல. உலகின் வீழாத ரவுடிகளாக வலம் வரும் அமேரிக்க இங்கிலாந்தின் படித்தவர்களின் அரசியலால், அக்கிரமங்கள் இன்னும் அதிகரித்திருக்கிறதே ஒழிய, உலகத்தின் எதிர்காலம் இந்த கல்வியினால் மட்டும் உய்யப் போவது இல்லை. முழுவதும் பட்டதாரிகளை கொண்டு ஆட்சிக்கு வந்த, ஏகப்பட்ட விளம்பரம் செய்யப்பட்ட, அஸாம் கன பரிஷத்தின் ஆட்சியும் எந்த விதத்திலும் வேறு படாத ஊழல் ஆட்சியாகவே வடிவம் பெற்றது.

கல்வியின்/அறிவின் முக்கியத்துவத்தை மறுப்பது அல்ல, நான் சொல்ல வருவது. தொழிற் கல்வி கற்றவர்களும், எம்பிஏ காரர்களும், எந்த வித அடிப்படையும் இல்லாமல் தாங்கள் மற்றவர்களை விட யோக்கியர்கள் என்பதாக ஒரு வாதத்தை முன்வைப்பதும், அதை உயர் நடுத்தர வர்க்கம் எந்த பிரஞ்ஞையும் விமர்சனமும் இல்லாமல் தூக்கி பிடிக்கும் அசிங்கம்தான் எரிச்சல் தருகிறது. அதிலும் சுயநலத்திலும் தனது முன்னேற்றத்திலும் மட்டுமே கவனம் உள்ள, சமூக பிரஞ்ஞையோ, வேர்களோ எதுவும் இல்லாத ஐஐடிகாரன்கள்! இதில் ஒரு ஆள், வீட்டுக்கு வந்து, வீட்டில் இல்லாதவர்களின் நம்பர் வாங்கிக் கொண்டு, செல்ஃபோனில் எல்லாம் வந்து ஓட்டு கேட்கிறார். 'மேம், கேன் ஐ டேக் எ ஃபியு மினிட்ஸ்' என்று தொடங்கி ஆங்கிலத்தைலேயே தொடர்கிறார் (என்னிடம் அல்ல, என்னிடம் மாட்டியிருந்தால் ஒரு வாங்கு வாங்கியிருப்பேன்). குறைந்த பட்சம் ஓட்டை தமிழில் கேட்கவேண்டும் என்ற உணர்வு கூட இல்லாதவர்கள், வாக்காளர்களிடம் திட்டு வாங்காமல் இருப்பதே 'சாதாரண' மக்களின் பரந்த மனப்பான்மைக்கு உதாரணமாய் இருக்கிறது. ஐஐடிகாரன்கள் முதலில் ஐஐடி உள்ளே நடக்கும் சாதிய பாகுபாடுகளை பற்றி, உள்ளே உள்ளவர்களின் வெறி பிடித்த, தங்கள் நலம் சார்ந்த, பரிசீலனைகளுக்கு வாய்பில்லாத ஒற்றை பார்வைகளை பற்றி கொஞ்சமாவது பரிசீலித்து விட்டு, நாட்டில் நடப்பதை புரிந்து கொள்ள முயற்சி எடுக்கலாம். இடவொதுக்கீடு என்பதை ஆதரிப்பது எதிர்ப்பது என்பதும், அது குறித்த ஒரு நிலைபாட்டை மேற்கொள்வது என்பதும் வேறு விஷயம். ஆனால் இட ஒதுக்கீடு பற்றிய இவர்களின் பார்வையில் ஒரு குறைந்த பட்ச நாகரீகமோ, தங்களுக்கு அந்நியமான வாழ்க்கை பற்றிய குறைந்த பட்ச மரியாதையோ இல்லாததும் இவர்களின் யோக்கியத்தனம் பற்றியும், முரட்டுத்தனமாய் தங்கள் கருத்தை பற்றிக் கொண்டு மாற்றுக் கருத்துக்களின் நியாயத்தை அறிய முயலாததிலேயே இவர்களின் அறிவு பூர்வமான அணுகுமுறையும் விளங்குகிறது. (நேரடி ஆதாரம் கேட்காதீர்கள். சொந்த அனுபவத்தில் எதிர்கொள்ள நேர்ந்ததை வைத்துத்தான் எழுதியிருக்கிறேன்.) இதை விட 'படிக்காதவர்களின் அரசியலில்' உள்ள பிரச்சனைகள் எவ்வளவோ மேல். நல்லவேளையாக இவர்கள் மக்கள் ஆதரவை குறிப்பிட்ட அளவில் கூட ஒரு காலத்திலும் பெறமாட்டார்கள் என்பதால் இதில் கவலை கொள்ள எதுவுமில்லை.

அடுத்த (நோய்கூறு குறைவான) நகைச்சுவை விஜய்காந்தை ஒரு மாற்றாக சொல்வது. ரஜினி அரசியலுக்கு வரவே போவதில்லை என்பதால், அதை விரும்பியவர்களுக்கு இப்படி ஒரு வாதம். ஒருவேளை தமிழகத்தில், ஒரு நல்ல ஆட்சியை தந்திருக்க முடியும் என்றால், அது எம்ஜியார் அவர்களால்தான் சாத்தியமாயிருக்கும். உண்மையிலேயே ஏழைகள் மீது பரிவும், ஏதாவது நல்லது செய்யும் உணர்வும அவருக்கு இருந்தது. சினிமாவில் இருந்த போதும் அவர்( தன்னால் மட்டும் படம் ஓடிய காரணத்தால், தான் தோன்றித்தனமாய் சில இடங்களில் நடந்து கொண்டாலும்), தன் வருவாயை மட்டும் குறியாய் கொண்டிருக்கவில்லை. அவர் தனது படங்கள் மூலம் சம்பாதித்ததை விட, மற்றவர்கள் அவர் படங்கள் மூலம் அள்ளியது ஏராளம். ஆனால் அவர் ஆட்சியில்தான் ஊழலின் பரிமாணம் புதிய வடிவங்களை அடைந்தது. எம்ஜியாரை போல அல்லாமல், தனது படத்தின் மூலம் சாத்தியமாகும் எல்லா வகை வருவாயையும் கறாராக வசூலிக்கும், லாபத்தின் எல்லா தளங்களிலும் பங்கு கேட்கும், இன்னும் வேறு பல வழி வகைகளில் வருவாயை பெருக்குவதையே குறியாய் கொண்டிருக்கும், ரஜினியும் விஜயகாந்தும் ஊழலற்ற ஆட்சியை தருவார்கள் என்று வாதத்தை முன்வைத்து, அதற்கு சிலர் ஒரு வாய்ப்பு தரக் கேட்பது, இந்த தேர்தலில் நடக்கும் மற்ற கூத்துக்களில் இருந்து, கேலித்தன்மையில் எந்த விதத்திலும் குறையாத விளையாட்டு.

விஜயகாந்த வெற்றி பெற்றால் அதனால் புதிதாய் எதுவும் குடிமுழுகப் போவதில்லை. மற்ற எல்லா ஆட்சிகளைப் போலவே, கேனத்தனமாகவும், ஊழலாகவும், அவருக்கு வேண்டியவர்கள் நிறைந்த அரசாகவும் இருக்கும். அதில் புதிய கெடுதல் எதுவும் இல்லை என்றாலும், ஏதோ விஜயகாந்த் வித்தியாசம் காட்டுவார், விஜயகாந்தால் விடிவு வரக்கூடும் என்பதாக சிலர் வித்தியாசமான ஓ போடுவதால் மட்டுமே, இதை சொல்ல வேண்டியிருக்கிறது. (சில கணிப்புகளின் படி, அவர் திமுக ஓட்டுக்களை மட்டும் சிதறடித்து, அதனால் அதிமுக வெற்றி பெற்றால், அது அவரால் ஆன கைங்கர்யம்.) அது தவிர விஜயகாந்த் உதிர்க்கும் சொல்லாடல்கள், சங்கராச்சாரியாருடன் சேர்ந்து முன்வைத்த அவரது பழைய உதிர்ப்புக்கள், எதிர்காலத்தில் பலம் பெற்றால் அவர் இந்துத்வ சார்பாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கேட்பாரின்றி இப்போது கிடக்கும் பாஜகவிற்கு அவரால் அட்ரஸ் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்பதை தவிர வேறு வித்தியாசங்கள் தென்படும் என்று தோன்றவில்லை.

(இன்னும் ஒரு பதிவு வரும்.)

Post a Comment

---------------------------------------

Friday, April 28, 2006

1. தேர்தல் -2006

வழக்கத்தை மாற்றாமல் ஒரு பல்லவியுடன் தொடங்க வேண்டுமென்றால், நண்பர் ஜோ கேட்டுக் கொண்டபடி, தேர்தலை முன்வைத்து பதிவு எழுதத் தொடங்கினால், நடக்கும் கூத்துக்களை பார்த்து எரிச்சல் என்ற வார்த்தையை எல்லாம் தாண்டி ஏதோ ஒன்று வருகிறது. அந்த எதோ ஒன்றில் ஆட்பட்டு, இது போல வலிந்து எழுதிய எதையும் சொதப்புவதே என் வழக்கம் என்றாலும், சொதப்புவதால் என்ன குடிமுழுகப் போகிறது என்று நினைத்து தொடங்கியிருக்கிறேன்.

தேர்தல் அரசியலில் எதற்கும் கொஞ்சம் கூட விவஸ்தை கிடையாது என்பது காலகாலமாய் தெரிந்த விஷயமானாலும், இந்த அளவு கேவலமாய் எந்த தேர்தலும் நடந்ததாய் தெரியவில்லை. இந்திராகுமாரி திமுகவில் சேர்வதற்கு, கலைஞரை சந்திக்க சில நிமிடங்கள் முன்பு, நினைவு படுத்தப் பட்டு, பேண்டேஜால் கையில் பச்சை குத்தியிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்து கொண்டதை, கேவலமான கூத்துக்களின் உச்சமாய் சொல்லலாம். மற்றபடி வைகோவின் பேச்சுக்கள், சரத்குமார் என்று தொடங்கி பெரிய பட்டியலே உள்ளது. இந்த தேர்தல் கூத்துக்களின் மூலம் ஒரு குறிப்பிட்ட தரப்பை 'வாழ்வா சாவா' என்ற தீவிரத்தில் ஆதரிக்கத் தோன்றாமல், எல்லோருக்கும் ஆர்வமற்று போவதும் ஒருவகையில் நல்லதிற்குதான் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தேர்தலின் மூலம் நடக்க வாய்ப்புள்ள, மிக மிக ஆபத்தான, தமிழகம் அதிகம் விலை தரவேண்டி வரக்கூடிய நிகழ்வு, ஜெயலலிதா மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது என்று நினைக்கிறேன். 'சோ'க்கள், இதர பார்பனிய சார்பு ஆசாமிகள் அதிமுக திரும்ப வருவதை பிரச்சாரம் செய்வதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நான் வேறு மாதிரி நினைத்த சில நண்பர்கள் கூட(வலைப்பதிவில் அல்ல), விரக்தியின் விளைவாய், ஜெயலலிதா மீண்டும் வந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது, எனக்கும் அத்தகைய விரக்தியும் வெறுப்பும் இருக்கிறது என்றாலும்.

திமுக (ஒருவேளை பெரும்பான்மை பலத்துடன்) ஆட்சிக்கு வந்தால் எந்த பெரிய நல்லதும் நிகழப் போவதில்லை என்பது மட்டுமில்லாமல், குடும்பத்தின் கொள்ளை முன் பார்திராத வண்ணம் நடைபெறும். ஆட்சி, வாரிசின் கைகளில், எல்லோரும் உணர்ந்து எதிர்பார்த்து ஏற்றுகொள்ளும் லாவகத்துடன், வழுக்கிகொண்டு விழுவதும் நடைபெறும். இதிலெல்லாம் துகளளவும் ஐயம் இல்லை. அது தவிர பாமக போன்ற திமுகவின் தோழமை கட்சிகள், அதிகாரமும் சாதகமாய் இருந்தால், 'தமிழ் கலாச்சார பாதுக்காப்பு நடவடிக்கை'களாக, என்னவென்ன நடுத்தெரு அராஜகத்தில் ஈடுபடுவார்கள் என்பதும் ஊகிக்க முடியாதது அல்ல.

ஒரமாய் தேர்தல் அறிக்கையில் இருந்ததை, எல்லோரும் சேர்ந்து 'விவாத'த்திற்கு உள்ளாக்கி, இப்போது ஏற்பட்டு இருக்கும் நிர்பந்தத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் 'இலவச கலர் டீவி கொடுக்கும் திட்டம்' நிஜமாகவே தொடங்கப் படும் என்றே தோன்றுகிறது. 'கலர் டீவி கொடுப்போம்' என்ற வாக்குறுதியை விட கேலிக்கூத்தாக, அதை உண்மையிலேயே செயல்படுத்தத் தொடங்கும் நடவடிக்கைகள் இருக்கும். திமுகவினர் கலர் டீவி திட்டத்தில் செய்யப் போகும் ஊழலும், ஒரு கலர் டீவியை பெற ஓவ்வொரு குடிமகனும், எல்லா மட்டங்களிலும் அளிக்கப் போகும் லஞ்சமும் என்று வரலாறு காணவியலாத லஞ்ச லவாண்யக் கூத்துக்கள் நடைபெறும். (எனக்கு தெரிந்து ஒரு அம்மா, சென்ற திமுக ஆட்சியில், நிராதரவான பெண்ணுக்கு அளிக்கப்படும் 10000ரூபாயை வாங்க, 4000ரூபாய் +பல முறை அலைச்சல்கள் + சிபாரிசுகள் கொடுக்க வேண்டியிருந்தது.)

இது தவிர தலித் ஆதரவு நிலைபாடு கொண்ட அனைவரும், விடுதலை சிறுத்தைகள் எந்த அளவு திமுகவால் கேவலப்படுத்தப் பட்டு அதிமுக பக்கம் சேர நேர்ந்தது என்பதையும், பாமக பல சால்ஜப்புகளை சொல்லி அது குறித்து முனகக் கூட முன்வராமல் செய்த துரோகத்தையும் மறக்க இயலாது. தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு தலமை என்றெல்லாம் கேடயமாக பயன்படுத்தப் பட்ட திருமாவளவன், அதிகாரம் என்று வரும்போது பொருட்டில்லாமல் போவதை கவனிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி, ஃபார்வார்டு பிளாக்கின் 'சிங்கம்' சின்னப் பிரச்சனையை முன் வைத்து, தேவர்களின் ஜாதிவெறி பெருமையின் குறியீடாய் இருக்கும் 'சிங்கம்' என்ற வார்த்தையில் விளையாடி, "சிறுத்தை நடமாடும் போது சிங்கம் ஏன் நடமாடக் கூடாது?" என்று கேட்டதும், அதை திமிராய் மீண்டும் நியாயப் படுத்தியதையும் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. (திமுகவை எதிர்க்கும் பலரும் இதை பெரிதுபடுத்தாதையும் கவனிக்க வேண்டும்.)

இதையெல்லாம் தாண்டியே ஜெயலலிதா மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே, சாத்தியமாகும் தேர்தல் முடிவுகளில், மிக மிக ஆபத்தானது என்று நினைக்கிறேன். மூன்று மாதம் முன்பு வரை கூட, வைகோ தாய் சொல் மறந்து 'அம்மா'வின் செருப்படி தேடி சரணடைந்த போதும் கூட, ஜெயலலிதா மீண்டும் வரமாட்டார் என்று மிகவும் நம்பிக்கையாய் இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை ரொம்பவே வலுவிழந்து வருகிறது. ஏற்கனவே ஜெயலலிதா மீது மக்களுக்கு பெரியதாய் எந்த கோபமும் இல்லை. சொல்லப் போனால், நிவாரண நெரிசலில் மக்கள் நசிங்கி செத்த கணக்குகளை தாண்டி, மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ரெண்டாயிரம் 'ஒழுங்காய் கிடைத்தது' பற்றி மக்கள் கூட்டம் சந்தோஷமாகவே இருக்கிறது. திமுக ஆதரவு சேரிகளில் கூட, மக்கள் இந்த விஷயத்தில் நிறைவாகவும், திமுக 'இந்த பக்கமே வரவில்லையே' என்ற ஆதங்கத்தோடும் இருப்பது தெரிகிறது. அல்லது அப்படி ஒரு மாயையாவது இருக்கிறது. வேறு காரணங்களாலும் திமுக மீது அவநம்பிக்கையும் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. அதற்கு மிகப் பெரிய புண்ணியத்தை சன் டீவி, தனது கச்சாவான விளம்பர பாணியினால் சேர்த்து கொண்டிருக்கிறது. ஒரு வகையில் திமுக மிடையத்தின் நட்பும் அன்பும் இல்லாமல் தவிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மிக பலம் வாய்ந்த ஊடகங்களான சன் டீவி, தினமுரசு, தமிழ்கரன் விளம்பர பாணி பிரசாரம் எல்லாம் எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. மழை பெய்வதையும் வெள்ளத்தையும் கேமாராவில் படம் பிடித்து காட்டினால் கூட,' சன் டீவிக்காரன் புளுகறான்' என்று மக்கள் சொல்கிறார்கள்.

சென்ற சட்டசபை தேர்தலின் போதும், கலைஞரின் ஆட்சிமீது மக்களுக்கு பெரிய கோபம் எதுவும் இல்லைதான். ஆனால் மக்கள் கலைஞர் மீது கோபமில்லாமல் இருப்பதற்கும், ஜெயலலிதா மீது பெரிய கோபம் இல்லாமல் இருப்பதற்கும் மிக பெரிய உளவியல் வித்தியாசம் இருக்கிறது. ஜெயலலிதா மீது வண்டி வண்டியாய் குற்றச்சாட்டு ஆதரங்களோடு வருவதற்கும், தயாநிதி மாறன் நாட்டில் 'நேர்மைக்கு' பெயர் போன டாடா நிறுவனத்தை மிரட்டியதாக 'செய்தி = வதந்தி' வந்து பரவுவதற்கும் கூட வித்தியாசங்கள் உண்டு. 'இந்தாளு ஆட்சிக்கு வந்தால் மழை எப்படி பெய்யும்?' என்று கருணாநிதி பற்றியும், 'அந்த அம்மா என்ன செய்யும்?' (அல்லது 'அந்த மகாராசன் என்ன செய்வான்?') என்று ஜெயலலிதா எம்ஜியார் பற்றியும், கேட்டு பழகிப் போன, கருப்பு வெள்ளை உளவியலுக்கு அடிமையாகிப் போன சமூகம் தமிழர்களுடையது. அதனால் 96ஐபோல ஜெயலலிதா மீது மக்கள் ஆத்திரம் இல்லாத நிலையில், எந்த கணத்திலும் மனம் மாறி அதிமுகவையே கடைசி நேரத்தில் வெற்றி பெறச் செய்யக் கூடிய சாத்தியம் உள்ளது. இத்தனையும் தாண்டி ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையெனில் மூச்சுவிட்டு கொள்ளலாம். அவ்வளவுதான்!

ஏன் ஜெயலலிதா வரக்கூடாது என்பதற்கு நீட்டி முழக்க வேண்டிய காரணங்கள் எதுவும் இல்லை. எனக்கு ஜெயலலிதா ஒரு நடிகை என்பதோ, ஒரு நடிகை ஆட்சியில் இருப்பதில் கேவலமோ, அவர் 'கன்னடத்தவர்' என்பதோ எந்த விதத்திலும் காரணமல்ல. அதையெல்லாம் பொதிவான விஷயங்களாக, தமிழகம் குறித்து பெருமை பட்டுகொள்ளக் கூடிய விஷயங்களாகவே நான் பார்கிறேன். ஆனால் ஜெயலலிதா கையில் மீண்டும் ஒரு ஐந்து வருட ஆட்சி, அதுவும் கடந்த ஐந்து வருடத்தை அங்கீகரிக்கும் வகையில் தொடர்ச்சியாக போனால், அவர் என்னவெல்லாம் செய்வார் என்பதை ஊகிக்க கூட முடியாது. லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஒரே வீச்சில் தூக்கி எரிந்ததையும், பின்பு பல பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுத்ததும், கடந்த ஐந்து வருட எதேச்சதிகாரங்களில், ஏராளத்தில் ஒரு உதாரணம் மட்டும்தான் என்றாலும், அதைவிட தெளிவான வேறு உதாரணம் இருக்க முடியாது. (அதையும் 'சோ'க்களும், வேறு பல சிந்தனையாளர்களும், துணிவான நடவடிக்கைகளாக, பாராட்டியதை பார்க்கவேண்டும்.) பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின் ஜே சற்று மாறியதாய் காட்டிகொண்டு தொடரப் போகும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இறங்கி வந்தாலும், மீண்டும் ஒரு வெற்றியில், அதுவும் தேர்தலை எதிர்கொள்ள 5 வருடங்கள் கையில் இருக்கும் சாதகத்தில் அவர் எந்த ஆட்டத்தையும் ஆடத் தயங்கமாட்டார். இந்த அளவிற்கு அராஜகமான நடப்புக்கள் திமுக ஆட்சியில் அதுவும், திமுக தலைமையிலான ஒரு கூட்டணி ஆட்சியில் நிச்சயமாய் நடைபெறாது என்று நம்பிக்கை கொள்ள முடியும்.

திமுக என்ன செய்யும் என்பதை ஊகிக்கவாவது முடியும். மேலும் திமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்க மிக மிக குறைந்த வாய்ப்பே உள்ளது. வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கூட்டணி ஆட்சி என்ற வகையில், திமுக அதிமுகவை விட கூடுதல் ஜனநாயகத்துடனேயே நடந்து கொள்ளும் என்றுதான் கடந்த காலம் எடுத்துரைக்கிறது. ஸ்டாலின் கையில் லாவகமாக ஆட்சியை கலைஞர் தன் காலத்தில் நகர்த்தினாலும், அவரது மறைவுக்கு பிறகு, திமுக தொண்டர்கள் உட்பட பலரால் ஸ்டாலின் ஏற்றுகொள்ளக் கூடியவராக இருக்க மாட்டார். அப்போது தமிழக அரசியலில் நிகழும் மாற்றங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

சங்கராச்சாரியை உள்ளே போட்டதை முன்வைத்து ஞாநி போன்றவர்கள் 'சபாஷ் ஜே' போட்டபோது, சொன்ன கருத்தையே மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. பார்பனர்களுக்கு சங்கராச்சாரியை விட முக்கியமான அடையாளம், மற்றும் தேவை ஜெயலலிதாதான். சங்கராச்சாரியை ஜே ஏன் உள்ளே போட்டார் என்பதன் சரியான பிண்ணணி இன்னமும் தெரியவில்லை, தெரியாமலே கூட போகலாம். ஆனால் பார்பனர்களுக்கு அது ஒரு எரிச்சல் மட்டுமே. அந்த காரணத்திற்காக கூட திமுகவை ஒரு நாளும் அண்டமாட்டார்கள் என்பதையே இப்போதும் நிருபித்து வருகிறார்கள். இந்துத்வவாதிகளின் நிலையும் அதுதான். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்த சென்ற தேர்தலின் போதே, இந்து முண்ணணியும், பிராமண சங்கமும், அதிமுகவை வெற்றி பெறச் செய்ய விண்ணப்பிக்கும் அறிக்கைகளை தனிசுற்றாகவும், கோவில்களிலும் விநியோகித்தார்கள். இப்போது திமுகவும் கூட அசட்டுத்தனமாய் நம்புவது போல, சுப்பிரமணியனின் கைதினால் விளைந்த கோபத்தில் காவியும் பூணுலும் திமுகவை அண்டப் போவதில்லை. முதலில் ஜெயலலிதாவை ஒளிப்பதே இலக்கு என்பதாக கோஷமிட்ட (சுப்பிரமணிய சாமி உட்பட்ட) கூட்டம் இப்போது பேசும் தொனியை கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 70 வருடப் பிரயதனங்களுக்கு பிறகும் தனக்கான வெளியை கைப்பற்ற இயலாத இந்துத்வ சக்திகள், 5 வருட ஜெயலலிதா ஆட்சியில் அதை எளிதாக விரைவாக சாதித்து கொண்டனர். கட்சியின் இருப்பே யாருக்கும் தெரியாமல் இருந்த பாஜக ஒரு கூட்டணியின் மூலம், அதன் தின அறிக்கைகள் கவனிக்கப் பட்டு, பின்னர் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாய் தமிழகத்தில் வளர்ந்தது. இந்த தேர்தலில் பாஜக தனிமைப் படுத்தப் பட்டாலும், ஜெயலலிதா அடைப்படையில் பாஜகவை விட தீவிர இந்துத்வவாதி என்பதை கவனிக்க வேண்டும். அரசியல் நிர்பந்தங்களால் அவர் சற்று நிறம் மாற்றி செயல்பட வேண்டியிருக்கிறது. மாறாக திமுக, அரசியல் நிர்பந்தங்களால் இந்துத்வத்துடன் சமரசம் செய்துகொண்டாலும், தனது அரசியல் குடும்ப நலன்கள் பாதிக்கப் படாத போது, இந்துத்வத்திற்கு எதிராகவே இருக்கும். ஆகையால் இந்துத்வத்தின் (அதன் எதிரொலியாய் இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்வது உடபட்ட) ஆபத்துக்களை உணர்ந்த அனைவரும் ஜெயலலிதா மீண்டும் வருவது மிக ஆபத்தானது என்பதை உணர வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட சிலர் சுப்பிரமணியனை உள்ளே போட்டதை முன்வைத்து இன்னமும் புளகாங்கிதத்தில் இருப்பதை பார்க்க பாவமாய் இருக்கிறது.

திமுகவால் ஒதுக்கப் பட்டு, பாமகவால் கைவிடப்பட்டு, வேறு வழியில்லாமல் திருமா அதிமுக பக்கம் சேர்ந்தாலும், கருணாநிதி கண்டிக்கப் படவேண்டிய பேச்சுக்களை பேசியிருந்தாலும், அதிமுக அடிப்படையில் ஒரு தேவர் ஆதரவு கட்சி என்பதை மறக்க இயலாது. முந்தய சட்டசபை தேர்தலுக்கு முன்பு மறவர் குல மாணிக்கங்கள் வெளிப்படியாகவே 'எங்க ஆட்சி' பற்றி பேசியதும். அதிமுக வென்ற பின், கிராம அளவில் நடந்த அட்டூழியங்களையும் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. இப்போது தேர்தல் முடிந்தவுடன் சசிகலா லாபி என்னவகை புது அவதாரமெடுக்கும் என்பதும் ஊகத்திற்கு அப்பாற்பட்டே இருக்கிறது.

இன்னும் காரணங்களை அடுக்க முடியும் என்றாலும் எதேச்சதிகாரமும், இந்துத்வ ஆபத்துக்களுமே ஜெயலலிதா மீண்டும் வரக்கூடாது என்று நினைக்க எனக்கு காரணமாயிருக்கிறது. ஆகையால் இருக்கும் சாத்தியங்களில் ஜெயா மீண்டும் வருவது மிக ஆபத்தானதாக தெரிகிறது. திமுக பெரும்பான்மை பெறாமல், திமுக தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி வருவது, இருக்கும் சாத்தியங்களில் நல்லதாகவும் எனக்கு தோன்றுகிறது. இரண்டுக்குமே சம அளவில் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த நிச்சயமின்மை சுவாரசியத்தை கிளப்பியிருக்க வேண்டும். கடந்த இரண்டு தேர்தல்களிலும் முடிவு முன்பே தெளிவாக தெரியும் என்ற நிச்சயம் இருந்தது. 96இல் அதிமுக தோற்கப் போவது தெரிந்தும், தோற்றாக வேண்டுமே என்ற படபடப்பும், அடுத்தமுறை திமுக தோற்பது உறுதி என்று தெரிந்தும், ஒருவேளை ஜெயித்துவிடாதா என்ற நப்பாசையும் நிலை கொள்ளாமல் இருந்தன. இந்த முறை இருக்கும் நிச்சமின்மையையும் மீறி எந்த விதத்திலும் சுவாரசியமோ ஆர்வமோ இருக்கவில்லை. எது நடந்தாலும் பாதிக்காத மனநிலையிலேயே நான் இருக்கிறேன். ஜோ அவர்கள் கேட்டுகொண்டதால் இந்த பதிவு. அவருக்கு நன்றி.

(இன்னும் ஒரு பதிவு வரும்.)

Post a Comment

---------------------------------------

Tuesday, April 25, 2006

DROWNED OUT.

நர்மதா பிரச்சனையில் அக்கறை கொண்ட சென்னை வாழ் நண்பர்களின் தகவலுக்காக. Nature Quest அளிக்கும் Drowned Out திரைப்படம் வரும் சனி மாலை 6.45க்கு புக் பாயிண்டில் திரையிடப்படுகிறது. திரையிடலுக்கு பின் தொடர்ந்த விவாதமும் உண்டு. நான் போவதாக இருக்கிறேன். கீழே முழு விவரம் ஆங்கிலத்தில்.

In association with friends of the Narmada in Chennai, NatureQuest presents
DROWNED OUT ? a film by FRANNY ARMSTRONG followed by a discussion.

SATURDAY 29TH APRIL 2006
6.45 P.M.
BOOKPOINT AUDITORIUM
160, ANNA SALAI
(OPP. SPENCER PLAZA)

Sashi Kumar and G.Gautama will moderate the discussion following the film.

THE NARMADA SAGA:

The Narmada dam has been in the news again, with Medha Patkar and others going on a hunger strike. Ever wonder what all the fuss is about? Come and find out, and express your solidarity with the 35,000 displaced families ousted from the dam area who are yet to be rehabilitated.

DROWNED OUT tells the true story of one family's inspired stand against the destruction of their land, home and culture. Shot over three years, the film is a portrait of the consequences of ill-conceived development.

DROWNED OUT was released theatrically in the U.S. in April last year and has been seen by millions worldwide.

The screening is OPEN TO ALL. Please feel free to circulate this mail to anyone you think might be interested.

Post a Comment

---------------------------------------

Friday, April 21, 2006

மீண்டும் நர்மதாவிற்கு ஆதரவாக.

மேதா பட்கரின் உண்ணா விரதம் மற்றும் பலதரப்பட்ட மக்களின் போராட்டம் தந்த அழுத்தத்தின் பலனாக, நடுவண் அரசு தனது அமைச்சர்களை பார்வையிட அனுப்பி, கொஞ்சமாவது பாதிக்கப் பட்ட மக்களின் நியாயத்தை அங்கீகரிக்கும் வகையில் இறங்கி வந்தது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியும், குஜராத் காங்கிரஸ் கட்சியும், அரசியல் நிர்பந்தங்களும் தந்த அழுத்தத்தில் மீண்டும் முருங்கை மரமேறி உச்ச நீதி மன்றத்தில் (தனது மந்திரிகளை கொண்டு தானே உறுதிபடுத்திக்கொண்ட நிலமையை மாற்றியமைத்து) வேறு ஒரு சித்திரத்தை அளிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. மே 1க்கு தனது முடிவை உச்ச நீதி மன்றம் தள்ளிப் போட்டிருக்க, அணைகட்டும் வேலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த பிரச்சனையில் மீண்டும் எல்லோரும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்த பிரச்சனையில் பாதிக்கப் பட்ட மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் மீண்டும் சில நிமிடங்கள் எடுத்து, மீண்டும் பெடிஷன் ஆன்லைனில் புதிதாக இடப்பட்டுள்ள விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தங்கள் குரலை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். வலைப்பதிவில் ஏற்கனவே யாராவது எழுதிவிட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தால் மன்னிக்கவும். மிக்க நன்றி!

Post a Comment

---------------------------------------

Thursday, April 13, 2006

சாக்ய சங்கம் -2.

சாக்ய சங்கம் குறித்த முதல் பதிவையும் விண்ணப்பத்தையும் இட்ட இரு நாட்களிலேயே இரண்டு நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டதை குறிப்பிட்டிருந்தேன். அதற்கு பிறகு இன்னொரு அன்பரையும் சேர்த்து, இதுவரை மூன்று நண்பர்கள், மணலியில் உள்ள, ட்சுனாமியால் பாதிக்கப் பட்டு, ஆதரவு அற்று இருக்கும் குழந்தைகளுக்கான சாக்ய சங்க விடுதிக்கு (மற்றும் குழந்தைகளின் எல்லா வகை செலவுகளுக்கும்) உதவியளிக்க என்னை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தன் முதல் தவணையாக அனுப்பியும் விட்டார். அவர்களுக்கு என் நன்றி. நண்பர்களை பற்றிய விவரங்களை அடுத்து வரும் பதிவுகளில் (அவர்களுக்கு ஆட்சேபணை இல்லாத பட்சத்தில்) தருகிறேன். இது தவிர நான் அறியாமலேயே நேரடியாக சாக்ய சங்கத்தை தொடர்பு கொண்டவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் எல்லா நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

பத்து நாட்களுக்கு முன்பு, மணலி சாக்ய சங்க விடுதிக்கு என் நண்பருடன் சென்று, குழந்தைகளுடன் ஒரு முழுநாளை செலவழித்தோம். முழு ஆண்டு தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்த அவர்களுக்கு, முடிந்த வரையில் ஒரு நாள் முழுவதும் எங்களால் முடிந்ததை சொல்லி கொடுத்தோம். (நண்பர் அந்த வேலையை ஒரு வருடத்திற்கு மேலாக செய்துவருகிறார்.) மொத்தம் 58 குழந்தைகள். 5 வகுப்பிலிருந்து 11 வரை படிப்பவர்கள். நண்பர் ஒற்றை ஆளாக (அதுவும் தமிழ் இன்னும் முழுமையாய் தெரியாத நிலையில்) பெரிய அளவில் எல்லா மாணவ மாணவிகளையும் பயிற்றுவித்திருக்க முடியாதுதான். எனக்கு மிக மிக வருத்தமாகவும், கழிவிரக்கமாகவும் இருந்தது. 10 ஆம் வகுப்பு தேர்விற்கு தயாராகி கொண்டிருந்தவர்களுக்கு கணக்கு மற்றும் ஆங்கில இலக்கணம் முடிந்தவரை நடத்தினேன். சில மாதங்கள் முன்பு இந்த அறிமுகம் நிகழ்ந்திருந்தால் உருப்படியாய் எதையாவது செய்திருக்க முடியும். குழந்தைகள் படிப்பதில் மிக மிக ஆர்வமாக இருந்தார்கள். படிப்பின் முக்கியத்துவம் எல்லாவிதத்திலும் அவர்களுக்கு புரிந்திருக்கிறது. யாருடைய உதவியும் இல்லாமல் கல்வி பயில்வதில் உள்ள இயல்பான பிரச்சனைகள் இருந்தன. பல கேள்விகளை கேட்டார்கள். பலவற்றை அவர்களாகவே சொல்லித் தரக் கேட்டார்கள். ஆனால் ஒரு நாளில், தேர்வை மட்டும் மனதில் வைத்து எந்த அளவிற்கு சாதிக்க முடியும்? அடுத்த வருடம் உருப்படியாக எதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

விடுதி என்று சொல்வது மிகவும் தவறான சித்திரத்தை தோற்றுவிக்கக் கூடும். பெரிய அறைகளை கொண்ட இரண்டு வீடுகள்.(அடுத்த முறை புகைப்படம் இடுகிறேன்.) ஒன்றில் மாணவிகள், இன்னொன்றில் மாணவர்கள். எல்லோரும் ஒரே(பெரிய) அறையில் உறங்கவேண்டும். சுவரில் புத்த மதம் சார்ந்த சுலோகங்கள்(எல்லாமும் இன்புற்றிருக்க வேண்டுவதாய்) எழுதப்பட்டுள்ளன. காலையிலும், மாலையிலும் அதை சேர்ந்து சொல்லக்கூடும். சொல்லிக் கொடுப்பதிலேயே நேரம் கழிந்ததால் குழந்தைகளிடம் வேறு விஷயங்கள் குறித்து பேச இயலவில்லை.

தலித் குழந்தைகளை மனதில் வைத்தே இந்த விடுதிகள் துவங்கப் பெற்றதை குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சில மீனவ இனத்தை சேர்ந்த குழந்தைகளும் உள்ளார்கள். நானறிந்து ஒரு முஸ்லீம் குழந்தை கூட இருக்கிறார். ஆகையால், பலவித நிவாரணப் பணிகளால் கைவிடப்பட்ட தலித் குழந்தைகளை மனதில் வைத்து தொடங்கப் பட்டதாயினும், மற்றவர்களும் இருப்பதால், ட்சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களை ஜாதிரீதியாய் பிரிப்பதாய் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.

சரி, இப்போதிருக்கும் முதன்மையான பிரச்சனை மற்றும் தேவையை ஒரு வார்த்தையில் சொல்வதானால் அது பணம். இதைவிட மேலான ஒரு தங்கும் விடுதி அவர்களுக்கு தேவைப்படும். நிலம் வாங்கவும், புதிதாய் விடுதி கட்டவும் சாக்ய சங்கம் முயற்சிக்கிறது. பணம் திரட்டும் அவர்களது பல முயற்சிகள் (உதாரணமாய் வெளிநாட்டு பௌத்தர்கள் மூலம்) முழு வெற்றியடையவில்லை. அடுத்த வருடம் பள்ளி துவங்கினால் சீருடைகள் புத்தகங்கள் இன்னும் எத்தனையோ தேவைப்படும். 10வது முடித்தவர்கள் மேல்நிலை பள்ளியில் சேரவேண்டும். இன்னும் சமாளிக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அதைவிட முக்கியமாக இன்னும் எத்தனை குழந்தைகளுக்கு உதவி தேவை என்ற கேள்வியும் இருக்கிறது. தங்களால் இயன்ற ஒரு சிறிய அளவிலான குழந்தைகளை மட்டுமே சாக்ய சங்கம் பராமரிப்பதக தோன்றுகிறது.

அடுத்து குழந்தைகளை நமக்கிருக்கும் அனுபவத்தை வைத்து வழி காட்டுதல். 12ஆவது படிக்கும் நம் வீட்டு பிள்ளைகள் ஐஐடி பற்றியோ, குறைந்த பட்சம் பொறியியல் மருத்துவம் என்று சிந்திப்பது இயற்கையானது. இவ்வாறு சிந்திக்கவும் தானாகவோ அதற்கு முயற்சிக்கவும் ஒரு உந்துதல் தேவைப்படுகிறது. அதை அளிக்க வேண்டும். மற்ற வகைகளிலும் பாடங்களில் பயிற்றுவிக்க வேண்டும்.

ஆகையால், இந்த பதிவை படித்து உந்துதல் ஏற்பட்டால், ஏற்பட்ட நண்பர்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்கவும். சென்னையில் இல்லாதவர்கள் நிதிரீதியாக உதவலாம். மற்றவர்கள், எல்லாம் நல்லபடியாக அமைந்தால் நான் ஈடுபடுத்திகொள்ள உத்தேசித்திருக்கும், அடுத்த வருடம் இந்த குழந்தைகளுடன் பழகி அவர்களை நம் அனுபவத்தை கொண்டு பாதையை காண்பிக்கும் வேலையில், குறிப்பாக பாடங்கள் சொல்லித்தரும் வேலையில் என்னுடன் ஈடுபடலாம். வேறு ஏதாவது யோசனைகள் உங்களுக்காகவே தோன்றினால் அதையும் செய்யலாம். எதற்கும் அவசரமில்லை. மிக நிதானமாக எல்லா விவரங்களையும் என்னிடமும், மற்றவர்களிடமும் விசாரித்து மனம் தெளிந்து செய்யலாம். என்னாலான எந்த விவரத்தையும் (தனிப்பட்ட முறையில்) அளிக்கத் தயாராயிருக்கிறேன். மிகவும் நன்றி. May all beings be happy!

Post a Comment

---------------------------------------

Monday, April 10, 2006

நர்மதாவிற்கு ஆதரவாக!

தமிழ் சசி, சந்திப்பு மற்றும் என் பதிவு மூலமாகவும், செய்திகள் மூலமாகவும் இன்று நர்மதா அணைக்கு எதிரான போராட்டத்தின் முக்கியமான ஒரு கட்டம் குறித்து அறிந்திருக்கக் கூடும். இவற்றிற்கு ஆதரவாக, அவ்வாறான உணர்வு உள்ளவர்கள், பெடிஷன் ஆன்லைனில் ஒரு கையெழுத்திட இந்த சுட்டியை சுட்டலாம். இதனால் எதாவது பயன் உண்டா என்ற நியாயமான சந்தேகம் வரலாம். ஆனால் இதனால் பாதகம் எதுவும் கிடையாது, இதற்காக நாம் எதையும் வீணடிப்பதில்லை, இழப்பதில்லை. இதனால் ஒரு உணர்வு உருவாக்கப்படலாம். ஒரு ஸ்டேட்மெண்டை கூட்டாக முன்வைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் தயவு செய்து சில நிமிடங்கள் எடுத்து ஒரு கையெழுத்திடவும். நன்றி.

Post a Comment

---------------------------------------

Friday, April 07, 2006

எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்-2.

மொத்தம் ஐந்து பதிவுகளில், நான் எழுதிய பதிவிற்கு எதிர்வினையாய் தொடங்கி, தமிழகத்து மீனவர்கள்/இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சனைகளை விரிவாக வந்தியத்தேவன் அலசியிருந்தார். இதில் முதல் மற்றும் இறுதி பதிவு (மற்ற அவரது பின்னூட்டங்கள்) தவிர்த்து மற்ற மூன்று பதிவுகளும், விரிவான தகவல்களுடன் 'பிரச்சனையை' அலசுவதாக இருக்கின்றது.

'சலம்பல் பதிவு' என்பதாக வந்தியத்தேவனால் வர்ணிக்கப் பட்ட என் முதல் பதிவு, ஸ்ரீகாந்த போன்றவர்களுக்கு கூட ( அதாவது சில அரசியல் சார்புகளால் இயல்பாக கொதிநிலைக்கு ஆட்படுத்தப் படுபவர்களை தாண்டி) உண்டாக்கிய கோபத்தை சமன் படுத்தி, பிரச்சனை வேறு ஒன்று என்பதாக முன்வைப்பதில் அவர் கணிசமான வெற்றியையும் பெற்றிருக்கிறார். எழுத்து நேர்த்தி மட்டுமில்லாது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதால் தமிழக/ஈழத்து மீனவர்களிடையேயான பிரச்சனை குறித்த புரிதல் மற்றும் அதை தகவல் ஆதாரங்களோடு முன்வைத்து பேசியது அதற்கான காரணம். எனக்கும் அதில் வாசிக்கவும், அறிந்த கொள்ளவும் புதிய விஷயங்கள் இருந்தன என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை. விவாத களத்தில் வெற்றி தோல்வி, எதிராளியின் கருத்து வாசக கூட்டத்தை கவர்ந்திழுப்பது, நமது தரப்பு மீதான கவனம் கைவிட்டுப் போவது இவற்றை பற்றிய கவலைகளுக்கு அப்பாற்பட்ட திறந்த மனதை வைத்திருந்தாலொழிய, பிரச்சனை பற்றிய அறிதலை நோக்கி பயணிக்க இயலாது. அந்த வகையில் வாந்தியதேவனின் இடைபட்ட மூன்று பதிவுகளை முக்கியமானதாகவும், இந்த பிரச்சனை குறித்த எல்லா விவாதத்திலும் கணக்கில் கொள்ள வேண்டிய தாகவுமாகவே நான் பார்கிறேன்.

நான் துவங்கிய, மையப்படுத்திய பிரச்சனையுடன் இது எவ்வளவு தூரம் உண்மையிலேயே தொடர்பு உள்ளது, அது எந்த வகையில் அலசப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டியது ஒரு இயல்பான சுய பிரஞ்ஞை மட்டுமின்றி, எனக்கு அது கடமையும், கட்டாயமும் ஆகும். எனது பதிவு, சென்ற வியாழன் நடந்த, மீனவர்கள் மீதான தாக்குதலை, டெகான் க்ரோனிகிளில் வந்த செய்தியை முன்வைத்து எழுதப்பட்டது என்பது வாசித்த அனைவருக்கும் தெரியும். வந்தியத்தேவன் (நான் இரண்டு முறை விளக்கம் அளித்த பின்பும்) திரிப்பது போல், இந்து பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறதா என்று நான் தேடியதற்கான காரணம், இந்து ராம் பற்றி எதையும் வெளிச்சம் போட்டு காட்ட அல்ல. அப்படி எதையும் நான் எழுதவும் இல்லை, நான் முன்வைத்த பிரச்சனையும் அதுவல்ல. டெகான் க்ரோனிகிள் இணையதளத்திற்கு ஒருமுறை கூட போயிராத நான், செய்திக்கான ஒரு சுட்டியை அளிக்கவே இந்து இணையதளத்தில் தேடினேன். அது கிடைக்காததால் செய்தி வராததை குறிப்பிட்டு, டெகான் க்ரோனிகிளில்(செய்திதாளில்) வந்த செய்தியிலிருந்து பெரும்பாலானதை அப்படியே எடுத்து என் பதிவில் இட்டேன். இதை இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி சொல்ல காரணம் ஒன்றே ஒன்றுதான். அது என்னை, இதை படித்தாயா, மனதிற்குள் கேள்வி கேட்டாயா, கூகிளிலாவது தேடினாயா, என்று கேட்கும் வந்தியத்தேவன் அந்த செய்தியை ஒழுங்காய் படித்தாரா என்பதுதான் நான் கேட்கும் முதல் கேள்வி. அவர் என்னை அறிவுறுத்துவது போல், டெகான் க்ரோனிகிளை தேடி எடுத்து படித்தாரா என்று நான் கேட்கவில்லை. எனக்கு எதிர்வினை வைப்பதற்கு அடிப்படை தேவையான, என் பதிவில் எழுதியிருந்ததை ஒழுங்காய் படித்தாரா என்பது மட்டுமே என் கேள்வி.

இன்னமும் கூட என்னால் டெகான் க்ரோனிகிள் இணையதளத்தில் செய்தியின் சுட்டியை தரமுடியாததால், நேரடியாய் ஆங்கிலத்தில் கீழே தட்டுகிறேன். Chennai, Friday 31 March 2006 Deccan Chronicleஇல் முதல் பக்கத்தில் உள்ள செய்தியிலிருந்து,

Two Boats with eight fishermen have gone missing after the Sri Lanka Navy opened fire on a flotilla of Tamilnadu fisherman near Danushkodi in Rameswaram in the early hours of thursday.

The Lankan navy also sank one boat and towed away another. Eight fishermen in the two boats jumped into the sea and were rescued by friends.

According to the sources in the fishries department it all started when Sri Lankan Navy men started chasing nearly 300 boats carrying fishermen from Rameswaram who are trying to cast their nets in Lankan waters near Katchadeevu. The fishermen were chased Sri Lankan Navy men through Indian waters up to the Danushkodi coast. (தேவையானது மட்டும் இங்கே, முழு செய்தியை வேண்டுமானால் பிறகு தட்டுகிறேன்.)

என் பதிவில் செய்தியாக நான் எழுதியது: கச்சத்தீவு அருகில், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக சொல்லப்படும், ராமேஸ்வரத்திலிருந்து வந்த மீனவர்கள் நிறைந்த 300 படகுகளை 'விரட்டுவதில்' தொடங்கி, அவர்களை இந்திய கடற்பரபிற்குள் தனுஷ்கோடி கடற்கரை வரை துரத்தியிருக்கிறது. (இதில் 'சொல்லப்படும்' என்பது எனது சேர்க்கை.)

கச்சத்தீவு அருகில் (இலங்கை கடற்பரப்பில்) மீன் பிடிக்கவும், வலைகளை கச்சத்தீவில் காயப்போடவும் அதே 1974 ஒப்பந்தப் படி தமிழகத்து மீனவர்களுக்கு முழு உரிமை இருப்பதை வந்தியத்தேவனும் அறிந்து வைத்திருக்கிறார். தனது 5 பதிவுகளில் இரண்டு இடங்களில் இதை குறிப்பிடுகிறார். ஆக இந்த செய்தியை எடுத்துகொண்டோமெனில், தமிழகத்து மீனவர்கள் தங்களுக்கு முழு உரிமையுள்ள கச்சத்தீவிற்கருகில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, இலங்கை படையால் தாக்கப்பட்டு, (இந்தியாவில் இருக்கும்) தனுஷ்கோடி கடற்கரை வரை இந்திய கடற்பரப்பினூடாக துரத்தப் பட்டுள்ளனர். இதை முன்வைத்தே எனது பதிவு.
வந்தியத்தேவன் 'நீளமாய் ஆழமாய்' அலசியுள்ள பிரச்சனைக்கும், என் பதிவில் நான் எடுத்து கொண்ட செய்திக்கும் பிரச்சனைக்கும் எந்த அளவிற்கு தொடர்பு என்பதை கவனிக்க வேண்டும். அவர் எந்த அளவிற்கு தொடர்பு என்று விளக்கும் அளவிற்கு இறங்கி வரமாட்டார். ஒரு அனானியுடன், 'ரோஸா சலம்புவது போல' என்று சாக்கு சொல்லிவிட்டு, சலம்பும் நேரத்தில் கூட அதை செய்யமாட்டார். என் சலம்பல் பாஷையில் சொல்வதானால், அவர் தனது அலசலுடன் இந்த நிகழ்வை தொடர்பு படுத்த வேண்டுமெனில், குறைந்த பட்சமாய் இந்த செய்தி பொய் என்று சாதித்து, மீனவர்கள் தங்களுக்கு உரிமையில்லாத இலங்கை கடற்கரையருகில் இருந்ததாக அனுமானிக்கவாவது வேண்டும். அவர் அது குறித்து சிறிய அக்கறைகூட எடுக்காததை பார்த்தால் அவர் கவனமாய் என் பதிவை கூட படிக்கவில்லை என்றுதான் தெரிகிறது. ஒருவேளை படித்து விட்டு கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அதில் எனக்கு பெரிய ஆச்சரியம் இல்லை. ஏற்கனவே மூன்று 'ஆழமான' பதிவுகளும் போட்டு, பலரது பாராட்டையும் பெற்று தன் பரந்த அறிவை நிலைநாட்டிவிட்ட அவருக்கு, இது குறித்து விளக்கமளிக்கும் அளவிற்கு இறங்கி வரவேண்டிய கட்டாயம் நேரிடும் என்று தோன்றவில்லை.

பிரச்சனை குறித்து எந்த வித ஞானமும் இல்லாதவருக்கும், மிக நேரடியான பார்வையில் புரியக்கூடிய விஷயம். இலங்கை கடற்படை செய்தது மிக அக்கிரமமான, இந்திய குடிமகன்கள் மீது நிகழ்த்திய சட்டவிரோத தாக்குதல், மற்றும் இந்தியா எல்லை மீதான அத்து மீறல். இந்தியா இதற்கு ஏதாவது எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும், மாறாக எந்த அலட்டலும் இல்லாமல் மௌனமாக இருக்கிறது. இந்த விஷயத்தை மட்டும் முன்வைத்து என் பதிவின் சாராம்சமாக நான் கேட்கும் கேள்வியாக, மீண்டும் மீண்டும் கேட்டது (வந்தியதேவன் அப்பட்டமாக திரிப்பது போல் இந்து பத்திரிகை பற்றி பேசாமல்) எனது இரண்டாவது பதிவிலிருந்து கீழே.

இலங்கை கடற்படை இந்திய கடற்பரப்பில் நுழைவதற்கும், இந்திய கடற்பரப்பில்-சில நேரங்களில் கடற்கரை வரை கூட வந்து- இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை, அங்கே தயாராக இருக்கும் இந்திய கடற்படை எப்படி அனுமதிக்கிறது? இந்த விஷயத்தில் இவ்வளவு சோப்ளாங்கியாய் இருக்கும் இந்திய கடற்படை, மற்ற விஷயங்களில் -புலிகள் கப்பல், ஈழதமிழ் அகதிகள் விஷயங்களில்- அத்தனை திறமையுடையதாகவும் கடுமையானதாகவும் இருக்கிறது? தான் என்ன ஆட்டம் ஆடினாலும் இந்தியா தன்னை எதுவும் செய்யாது என்று இலங்கைக்கு எப்படி இவ்வளவு தைரியம் வருகிறது? இந்த அட்டூழியம் குறித்து, எது எதற்கோ கூக்குரல் இடுபவர்கள் - பத்திரிகை டீவி, அரசியல் கட்சிகள், தொடங்கி வலைப்பதிவுகள் வரை -யாரும் முனகுவது கூட இல்லையே, ஏன்?

எல்லாவற்றிற்கும் எதையாவது பதிலாக தர இவர்கள் தயாராக இருப்பார்கள் என்று அறிந்தே இருந்ததால் 'இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையில், இந்தியாவுடன் எந்தவிதத்திலும் வலிமையில் ஒப்பிடமுடியாத ஒரு அந்நிய நாட்டுபடை, உறுப்பை நுழைப்பதை பற்றி இந்தியா ஏன் மௌனமாய் இருக்கிறது?' என்ற கேள்வியை மட்டும் கேட்டிருந்தேன். சம்பவம் நடந்து இந்த ஒரு வாரத்தில் என்ன கண்டனம், நடவடிக்கை நடந்திருக்கிறது? அது குறித்து ,மேற்படி செய்திகளே இல்லை. காணாமல் போன மீனவர்கள் பற்றிய செய்தி கிடக்கட்டும்.தன் எல்லைக்குள் நடந்த அத்துமீறல் பற்றி இந்தியா எதுவுமே வாய் திறக்கவில்லையே என்பது கேள்வி. அதற்கு ஏதோ கேனத்தனமான (ஸாரி, அதை வேறு எப்படியும் எவ்வளவு யோசித்தும் சொல்ல முடியவில்லை) பதில் வந்தியத்தேவனிடம் இருந்து வந்ததே தவிர வேறு என்ன விளக்கம் இருக்கிறது!

அவர் பதிவை மீள் வாசிப்பு செய்து என் கேள்விகளுக்கு இன்னமும் பதில் தெரியாவிட்டால் மீண்டும் கேட்டால் தருவதாக சொல்கிறார். ஏகப்பட்ட நண்பர்கள் அவர் பதிவை படித்து தெளிவாகி எல்லா கேள்விகளுக்கும் விடை கண்டுகொண்டிவிட்ட பின்னர், அவர் என் கேள்வி எதையும் நேரடியாக அணுகி, அது குறித்து பேசுவார் என்று எனக்கு தோன்றவில்லை. திறந்த மனதுடன் வாசிக்கும் வாசகர், அவர் பதிவில் தேடி, நான் சொல்வது போல பிரச்சனை திசை திருப்பப் பட்டுள்ளதா இல்லையா என்று பரிசீலித்து கொள்ளாலாம்.

தமிழகத்து மீனவர்கள் ட்ராலர் படகுகளில் வந்து, ஈழத்து மீனவர்களின் அடிமடியில் கைவைக்கும் பிரச்சனை வேறு. கடந்த சில ஆண்டுகளாக இருக்கும் இந்த பிரச்சனையின் காரணமாகத்தான் இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை தாக்குகிறது என்று சொல்வதை போல ஒரு அபத்தம் ஒன்று உண்டா? ஈழத்தில் இருக்கும் ஒரு தமிழனாவது, தங்கள் ,மீது இலங்கை கடற்படைக்கு அப்படி ஒரு அக்கறை இருக்கும் என்று நம்பமுடியுமா? அவர் நீட்டி முழக்கி ஈழத்து மீனவர்கள் ட்ராலரால் பாதிக்கப் படுவது பற்றி மூன்று பதிவுகள் போட்டதற்கும், இந்த பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? மிஞ்சி போனால் இந்திய மீனவ்ர்களில் சிலர்(அல்லது பலர்) எல்லை தாண்டி அத்து மீறுகிறார்கள் என்பதை தவிர வேறு எந்த ஆதாரத்திற்கும் அது உதவாது.

அவர் சொல்வது போல் எல்லா மீனவர்களும், trawlersஇல் மீன் பிடிப்பதாகவும் அல்லது அப்படி ட்ராலரில் எல்லை கடந்து போனவர்கள் மட்டுமே இலங்கை படையால் தாக்கப் பட்டதாகவும் சித்தரிப்பதை எந்த விதத்திலும் ஏற்றுகொள்ள முடியாது. சென்ற வாரம் தாக்கப் பட்ட 300 படகுகள் ட்ராலர்கள் என்று செய்தியில் ஒரு இடத்திலும் இல்லை, வெறும் boats என்பதாகத்தான் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன்பு சாதாரண படகுகளில் சென்ற பலர் தாக்கப்பட்டுள்ளதற்கு, கடந்த 20 ஆண்டு வறலாற்றில் ஏராளமாக ஆதாரங்கள் உண்டு. விரிவாக சில நாட்களில் முன்வைக்க முடியும், வைக்கிறேன்.

எல்லா மீனவர்களுக்கும் கடலில் உள்ள எத்தனையோ ஆபத்துக்களை போல ஒன்றுதான் இலங்கை கடற்படை. கடந்த வாரம் ஆனந்த விகடனில் ( 2.04.06- சுட்டி கொடுக்க முடியாததால், சந்தாதாரராயிருந்தால் நீங்களே இணையத்தில் தேடி படிக்கவும்) , ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரையில் வசிக்கும், கண்தெரியாத மீனவர் அருள் சேசுராஜ் பல இடங்களில் 'சிங்கள கடற்படையின் எந்த நேரத்திலும் தாக்கலாம்' என்ற ஆபத்தை பற்றியே பிரதானமாய் பேசுகிறார். அவர் சொல்வதிலிருந்து,

".... கொஞ்ச நேரத்திலே 'பாங்னு' காதை கிழிக்கிற சத்தம். என்னன்னு புரிபடறதுகுள்ளே 'விஷும், விஷும்'னு என் ரெண்டு பக்கமும் காத்தை கிழிக்கிற சத்தம். 'ஆத்தீ! இது சிலோன் நேவிக்காரன் தோட்டா சத்தமாச்சே'ன்னு முக்குளிப்பான் நீச்சல்ல தண்ணிகுள்ளே போயிட்டேன். மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்சா தனுஷ்கோடி பக்கத்துல ஒரு தீடைலே கிடக்கேன். மக்கா நாள் ஊர்காரங்க வந்து காப்பாத்திட்டாங்க அப்புறமாத்தான் தெரியுது.. என் கூட கடலுக்கு வந்த ஃபெர்ணாண்டை சிலோன் நேவிக்காரன் சுட்டுக் கொன்னுட்டாங்கன்னு!"

ராமேஸ்வரம் வட்டாரத்துல அருள்சேசுராஜை பற்றி அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கிறது. "ஓ..அவரா! வைராக்கியக்கார ,மனுஷன். நாங்க ரெண்டு கண்ணை வெச்சுகிட்டே சிலோன் காரனுக்கு பயந்து உசிரை கையில பிடிச்சுகிட்டு பாடு பாக்குறோம். ஆனா மனுஷன்...."

"சிலோன் நேவிக்காரன் எந்த நேரத்திலேயும் சுட்டுருவான்னு உசிரை கையில புடிச்சுகிட்டுதான் கடலுக்கு போகவேண்டியிருக்கு. வலைய அத்துபோடறது, கூட்டிட்டு போய் சித்ரவதை பண்றதுன்னு அவிங்களோட அட்டூழியம் நிறய. என் சொந்தத்துலயே சிலோன் நேவிக்காரன் சுட்டு எட்டு பேரு செத்து போயிருக்காங்க. போன வாரம் கூட ஒருத்தர் தப்பிச்சு அரைகுரை உசிரோட நீந்தி வந்திருக்காரு. நானெல்லாம் இன்னிக்கு உசிரு பொழச்சு நிக்கிறேன்னா என் பொம்பளையாளு செஞ்ச புண்ணீயந்தான் சாமி!......."

கண்தெரியாத அவரது மீனவ வாழ்க்கை பற்றி பேசும் ஒரு கட்டுரையில், இயற்கை சார்ந்த மற்ற ஆபத்துக்களை விட, நேவிக்காரன் அட்டூழியம் பற்றியே அதிகம் பேசுகிறார். (வந்தியதேவனின் தகவலுக்கு, தனி ஆளான அவரிடம் இருப்பது ட்ராலர் படகு இல்லை என்பது மட்டுமில்லை, மோட்டார் பொருத்திய படகு கூட இல்லை. துடுப்புடன் அவர் வள்ளத்தில் நிற்கும் படமும் உள்ளது.) கையில் விகடன் இருந்ததால் இதை தட்டியிருக்கிறேன். இது வரை நாம் கேள்விபட நேர்ந்த மீனவர்கள் ஒலிக்கும் எல்லா குரல்களிலும் சிங்களக் கடற்படை பற்றி சொல்லாமல் விட்டது கிடையாது.

அநியாயமானதாக இருந்தாலும், நிருபமா ராவ் சொன்னதாக பத்ரி எழுதிய பதில் கொஞ்சமாவது நான் பேசிய பிரச்சனையுடன் தொடர்புள்ளது. பத்ரி தான் ஒரு மெஸெஞ்சர் மட்டும்தான் என்று சொல்லி அந்த கருத்துடன் தனக்கு சம்பந்தமில்லை என்கிறார். ஆனால் வந்தியதேவன் அதை வசமாக பற்றிக்கொண்டார்.

//ஏதேனும் கைது நடந்தால் இலங்கைக் கடற்படை உடனடியாக இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் அளித்துவிடுவதாகவும், உடனேயே இந்தியத் தூதரகமும் அவர்களை விடுவிக்கும் முயற்சிகளை எடுப்பதாகவும் சொன்னார். அதே சமயம் இலங்கைக் கடற்படை நிறுத்தச் சொல்லி நிறுத்தாமல் போன படகுகள்மீதுதாம் துப்பாக்கித் தாக்குதல் நடக்கிறது என்றும் அதற்கான காரணம் இலங்கைப் படைகளுக்கு இந்தப் படகுகள் தமிழக மீனவர்களுடையதா அல்லது விடுதலைப் புலிகளின் கடத்தல் படகுகளா/ஆயுதப் படகுகளா என்பது தெரியவில்லை என்பதும்தான் என்றும் சொன்னார்.//

பழக்கத்திற்கு மாறாக, ஆத்திரத்தை ரொம்பவே அடக்கிகொண்டு கேட்கிறேன். இப்படி ஒரு பதிலை சிறிய அளவில் கூட பரிசீலனைக்கு இல்லாமல் எடுத்து கொண்டு பேச உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா? இலங்கை கடற்படை எங்காவது தான் வலியப் போய் சுட்டதாக சொல்லுமா? இலங்கை சொல்வது இருக்கட்டும். அதை அப்படியே ஏற்றுகொண்டு, அதை ஒரு காரணமாய் பத்ரியிடன் சொல்லும் ஒரு நாட்டின தூதுவரின் சார்புகளை பார்க்க வேண்டாமா? போரடிக்கிறது, ஆனாலும் வேறு ஏதாவது சரியான உதாரணம் உண்டா? இந்தியாவில் ஐஐஎஸ்சியிலும் வாரணாசியிலும் பயங்கரவாத தாக்குதல் நடக்கிறது. பாகிஸ்தான் தனக்கு அதற்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தானுக்கான தூதரிடம் சொன்னால், இப்படி கேள்வி கேட்காமல் அவரும் எல்லோரும் அதை ஏற்றுகொண்டு, அதை ஒரு பாயிண்டாக தன் கட்டுரையில் சொல்வார்களா? என்ன கொடுமை! சென்ற வாரம் நடந்த தாக்குதலில் புலிகளாக இருக்குமோ என்று தெரியாமல், கச்சத்தீவு அருகில் வலை பரப்பிக் கொண்டிருந்தவர்களை, தாக்கி, தனுஷ்கோடு வரை புலிகள் என்று நினைத்து துரத்தி வந்தார்களா? கேட்பவனை கேனயனாக நினைப்பது மட்டுமில்லாமல், தனக்கு தேவை என்றால் எவ்வளவு கேனத்தனமான வாதத்தை முன்வைக்கிறார்கள். எதோ தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சு, பெரிய மனசு பண்ணி, இது கேனத்தனமா இல்லையான்னு நீங்களே யோசியுங்கள்.

வந்தியதேவன் எழுதியதில் நானே ஏற்றுகொள்ளும் (ஈழத்து தமிழக மீனவர்களிடையேயான பிரச்சனை குறித்த) கருத்துக்கள் தவிர மற்றவற்றை அக்கு அக்காக கழற்றி பேச மீண்டும் ஆசைதான். யாரும் கண்டுகொள்வார்களா என்பது அல்ல என் பிரச்சனை. அது குறித்து ஒரு போதும் கவலைப்பட்டது கிடையாது. இதை எழுதுவதில் உள்ள அலுப்பும் கழிவிரக்கமும் தான் தாங்கமுடியவில்லை. நான் சட்டசபை தேர்தலை பற்றி எழுதக்கேட்டால், பாராளுமன்ற தேர்தலை பற்றி எழுதிவிடபோகிறேன் என்று வந்தியத்தேவன் கிண்டலடிக்கிறார். ஆனால் பாராளுமன்ற தேர்தலை பற்றி பேசி, சட்டசபை தேர்தலை பற்றித்தான் பேசுவதாக இத்தனை பேர்களையும் நம்பவும் வைத்து பலத்த பாராட்டையும் அவர் பெற்றிருக்கிறார். இங்கே இப்போதைக்கு நிறுத்திகொள்ள விழைகிறேன்.

Post a Comment

---------------------------------------
மேதா பட்கர்.

நர்மதா அணைக்கு எதிரான போராட்டத்தில் தன் வாழ்க்கையை அர்பணித்திருக்கும் மேதா பட்கர் இன்று ஒன்பதாவது நாளாக தனது உண்ணவிரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வலைப்பதிவில் யாராவது இது குறித்து எழுதினார்களா என்று தெரியாது.

நர்மதா அணைக்கட்டின் உயரத்தை இன்னும் அதிக படுத்துவதையும் (அதனால் இன்னும் சில கிராமங்கள் தண்ணீரின் மூழ்குவதை), புலம் பெயர்க்கப் பட்ட மக்களுக்கான மறுவாழ்வு இன்னமும் மிக பெரிய ஏமாற்று வேலையாக இருப்பதையும் எதிர்த்து தனது உண்ணாவிரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். நேற்று இரவில் போலிஸ் புகுந்து மேதா பட்கரை கைது செய்து கிட்டதட்ட முரட்டுத் தனமாக இழுத்து சென்றதாக செய்திகள் வந்துள்ளன. அரசு பலவந்தமாக மேதாவை உயிர்பிழைக்க செய்வதை தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை.

மேதா மேற்கொண்டது கிட்டத்தட்ட ஒரு தற்கொலை முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். ஒருக்காலும் அரசு அணைக்கட்டு தொடர்பான தன் நிலையை தளர்த்தப் போவதில்லை. மிஞ்சி போனால் புலம் பெயர்க்கப் பட்ட மக்களுக்கான மறுவாழ்வு பற்றி மீண்டும் வாக்குறுதி அளிக்கலாம். அது நடைமுறையில் காலப்போக்கில் என்னவாகும் என்பதை மீண்டும் மீண்டும் வறலாறு சொல்கிறது. இந்நிலையில் உண்ணா விரதம் என்று இறங்கி விட்ட பிறகு, முடிவை மாற்றி உண்ணாவிரததை முடித்து கொள்ளும் வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை மேதா இறந்து போனால் (அரசு பலவ்ந்தமாக காப்பாற்றிவிடும் என்றாலும்) அது எந்த வகை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. நிச்சயமாய் அது அரசின் அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்பில்லை. போராட்ட வடிவத்தில் எந்த வகை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே கேள்வி. ஒரு வேளை பலவந்தமாக மேதாவின் உயிர் காப்பாற்றப் பட்டாலும், அது போராட்டத்தில் எந்த வித மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் கேள்விக்குரியது. உலகின் மிக பெரிய வன்முறையற்ற, காந்திய வழியிலான போராட்டம், வன்முறையை கையிலெடுக்க வழிவகுத்து விடுமோ என்ற கவலையாக இருக்கிறது. வன்முறை தீண்டதகாதது என்பதல்ல பிரச்சனை. வன்முறை என்று வந்துவிட்டால் அரசிடமிருந்து, அதை சாதமாக்கி கொண்டு வரும் பதில் வன்முறையின் அடக்குமுறையின் பரிமாணம் தாங்கவியலாததாக இருக்கும் என்பதனால் மட்டுமே அது கவலைக்குரியது.

Post a Comment

---------------------------------------

Saturday, April 01, 2006

இன்னும்...!

இன்னும் எத்தனை காலம்தான்...??!!

மீண்டும் டெகான் கொரோனிகிளில் இருந்து இன்று காலையில் படித்த செய்தி. இந்து பத்திரிகையின் இணையதளத்தில், என்னளவில் 'பினாயில் ஊற்றிகொண்டு' தேடுதேடென்று தேடியும், என் மானுடக் கண்களுக்கு இந்த செய்தி புலப்படவில்லை. மீறி வந்திருந்தால் மன்னிக்கவும். வரவில்லையெனில் செய்தியை படித்த பின், வெளிவராததன் காரணம், ஒருவேளை சிலருக்கு விளங்கலாம். அல்லவெனின் அதற்கான காரணத்தை அவரவர்களின் அரசியல் அகராதிப் படி மனதிற்குள் கற்பித்து கொள்ளவும்.

நாம் இதுவரை ஒரு 500 முறையாவது கேள்விப் பட்டது போல், மீண்டும் ராமேஸ்வரத்து மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நிகழ்தியிருக்கிறது. இரண்டு படகுகளில் இருந்த மீனவர்களைக் காணவில்லை என்று செய்தி சொல்லுகிறது. கச்சத்தீவு அருகில், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக சொல்லப்படும், ராமேஸ்வரத்திலிருந்து வந்த மீனவர்கள் நிறைந்த 300 படகுகளை 'விரட்டுவதில்' தொடங்கி, அவர்களை இந்திய கடற்பரபிற்குள் தனுஷ்கோடி கடற்கரை வரை துரத்தியிருக்கிறது.

ஒரு படகு இலங்கை படையினரால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளது. எரிந்து கொண்டிருந்த அந்த படகிலிருந்த மீனவர்கள், படகு மூழ்கும் முன், நடுக்கடலில் குதித்து, நண்பர்களால் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள். இன்னொரு சம்பவத்தில், ஒரு படகிலிருந்த மீனவர்களை தண்ணீரில் தள்ளிவிட்டு , அந்த படகை தங்களுடன் எடுத்து சென்றிருக்கிறது. இந்த மொத்த நிகழ்வில் இரண்டு படகுகளும் எட்டு மீனவர்களும் காணாமல் போயிருப்பதாக செய்தி சொல்லுகிறது.

இந்த செய்தியில் வந்த கடைசி பத்தி கவனத்திற்குரியது. மூன்று நாட்கள் முன்பு விடுதலை புலிகள் ஒரு சிங்கள கடற்படை கப்பலை வெடித்து தள்ளினார்கள். அதனால் இலங்கைப் படையினர் தங்களின் கண்காணிப்பை அதிகரித்திருக்கிறார்களாம். 'இதனால் இலங்கை கடற்படையினர் தமிழகத்து மீனவர்களை விரட்டியடிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதாக' போலிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்த சம்பவம் மீண்டும் மீண்டும் எழுப்பும் பல கேள்விகளை பின்னர் தள்ளிவைத்து ஒரு அடிப்டை கேள்வியை கேட்போம். இலங்கை கடற்பரப்பில், மீன் படித்ததாக கூறப்படும் மீனவர்களை, இலங்கை கடற்படை இந்திய கடற்பரப்பில் தனுஷ்கோடி கடற்கரை வரை துரத்தியிருக்கிறது. அங்கே மீனவர்கள் அலறி கூச்சலெழுப்பினால் கேட்கக் கூடிய தூரத்திலோ, அல்லது இந்த செய்தி போய் சேர்ந்து, உடனே நடவடிக்கைக்கு தயாராக இருக்கக் கூடிய இந்திய கடற்படை என்ன புடுங்கி கொண்டிருந்தது?

இலங்கை கடற்பரப்பில் தமிழகத்து மீனவர்கள் நுழைந்ததாகவே வைத்துகொள்வோம். முற்றிலும் தண்ணிராய் இருக்கும் கடலில் இந்திய எல்லையையும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பையும், சாதாரணப் படகுகளில் சென்ற மீனவர்கள் எப்படி அடையாளம் காண முடியும்? தவறி போனவர்களை (அல்லது இந்தி(ரா)யாவால் தாரை வார்க்கப் பட்ட, இலங்கை கடற்பரப்பில் மட்டுமே மீன் வளமாக சிக்கும் என்று போனவர்களை) கைது செய்வது, நடைமுறையாக இருக்கலாம். தாக்குதல் நடத்தவும், சுட்டு கொல்லவும், அதை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இதையே வழமையாய் செய்வதையும், இந்தியா அனுமதிப்பதும், சுனமி போல, கடலில் உள்ள எத்தனையோ ஆபத்துக்களைப் போல, இதையும் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாய் அந்த மீனவர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்திய கடற்பரப்பில், அதன் இறையாண்மைக்கு சவால்விடும் வகையில், தன் உறுப்பை நுழைக்கும் அந்நிய நாட்டின் கடற்படை பற்றி, இந்திய கடற்படை எந்த அலட்டலும் காட்டவில்லை என்றால், இராமேஸ்வரம் கடற்கரை பக்கம் ரோந்துக்கு நிற்பது இந்திய கடற்படையா அல்லது இலங்கையின் கூலிப்படையா?

இதுவரை எத்தனை முறை நிகழ்ந்தாயிற்று என்று யாராவது புள்ளிவிவரம் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. என் கணிப்பின் படி ஒரு 500 மீனவர்களாவது இலங்கை கடற்படையினரால், இதுவரை கடந்த 15 ஆண்டுகளில் கொல்லப் பட்டிருப்பார்கள். உலகின் நான்காவது வலிமையான ராணுவம் வைத்திருப்பதாக சொல்லப் படும், இந்தியாவின் கடற்படை நிலைகொண்டு, கவனமாய் கண்காணித்து வரும் ஒரு பகுதியில், இந்தியாவுடன் ஒப்பிட்டால் ஒரு சுண்டைக்காயான ஒரு பக்கத்து நாட்டு ராணுவம் இத்தனை வெறியாட்டம் ஆடியிருக்கிறது. பாகிஸ்தான், சீனா என்றால் அதன் சதிவேலைகளை முன்வைத்து கூச்சல் வருவதாக கொள்ளலாம். (ஒரு பேச்சுக்கு) பூடான் ராணுவம் வந்து அடிக்கடி இந்திய எல்லையில் உள்ளவர்களை சுட்டுவிட்டு போனால், இங்கே எப்படி ஒரு கிளர்ச்சி நடக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

புலிகளின் கப்பல் ஒன்று, இந்திய கடற்பரப்பிலோ, அல்லது அப்படி பிறகு செய்தியில் சொல்லப்படும் அகில உலக பரப்பிலோ, போனால் அதை தடுத்து அதில் உள்ளவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தும். அதில் உள்ளவர்களை கைது செய்யும். நியாயம்தானே! அங்கே ஆயுதம் கொண்டு செல்வது இலங்கை அரசுக்கு மட்டுமே ஊறு விளைவிக்க கூடும் என்றாலும், ஒரு பொறுப்புள்ள இந்தியப் படை அதை எப்படி அனுமதிக்க முடியும்? ஆனால் இந்திய கடற்பரப்பில் நுழைந்து, அன்னிய நாட்டுப் படை இந்தியக் குடிமகன்கள் மீதும், அவர்கள் உடமைகள் மீதும் தாக்குதல் நிகழ்தி அட்டகாசம் செய்தாலும், காந்திய பாதையில் செல்லும் இந்தியப் படைக்கு அலட்டிகொள்ள எந்த தேவையும் வராது. இந்திய எல்லைக்குள் உறுப்பை நுழைப்பது, இலங்கை படைக்கு இது முதன் முறை அல்ல. இதற்கு முன் பலமுறை நுழைத்திருக்கிறது. ஒரு முறை இந்திய கடல் எல்லையில் இருந்த விடுகளின் சுவர்களில், குண்டுகளால் தடம் பதிக்கும் அளவிற்கு ஆட்டமாடி விட்டு திரும்பியிருக்கிறது. (யாரேனும் விரும்பினால் செய்திக்கான சுட்டியை சற்று சிரமம் எடுத்து தேடி எடுத்து போடமுடியும்.)

புலிகள் யாழ்பாணத்தை முற்றுகையிட்ட போது, எல்லா உடமைகளையும் இழந்து, இலங்கை ராணுவத்தால் ரத்தம் உரிஞ்சப்பட்டு (உவமை அல்ல, தங்கள் மருத்துவ தேவைக்காக ரத்தம் எடுத்த பின் நாட்டை விட்டு செல்ல அனுமதிக்கபடும்) ஈழத்தமிழ் மக்களை, நடுகடல் மணல் திட்டில், சோறு தண்ணி இல்லாமல் குழந்தைகளுடன் தவிக்க விட்டது. தமிழகத்து கடற்கரையில் நிலைகொண்டிருக்கும் கடற்படையின் ஏதோ ஒரு அட்மிரலோ, கமாண்டரோ, ஒரு வடக்கத்தியான், 'நாங்கள் எதற்காக அவர்களை மனிதாபிமான அடிபடையில் அனுமதிக்க வேண்டும்?' என்று டீவியில் தர்க்கபூர்வமாய் கேட்க, இங்கே ஆட்சியில் இருந்த திமுக அரசு தன் மாபெரும் துரோகத்தை மௌனத்தின் மூலம் நிகழ்திக் காட்டியது. இவ்வாறு புலிகளானாலும், நிராதரவான மக்களானாலும், இத்தனை கடுமை காட்டும் இந்தியா, தன்னுடன் எந்த விதத்திலும் ஒப்பிட இயலாத, தன்னைப் பார்த்து பயப்பட வேண்டிய நிலையிலுள்ள ஒரு அன்னிய ராணுவம், வெறியாட்டம் ஆடும் போதெல்லாம், கடற்கரையிலேயே நங்கூரமிட்டு வாளாவிருப்பதன் பிண்ணணி என்ன? வெறியாட்டம் நிகழ்ந்த பின்னும், நடவடிக்கை மட்டுமில்லாமல், அதை மீண்டும் தடுக்கும் கண்காணிப்பில் கூட இது வரை ஈடுபடுவதாய் பாவனை செய்யும் செய்தி கூட கிடையாது.

இந்தியப்படை ஏன் சும்மாயிருக்கிறது என்ற கேள்வியை விடுவோம். எது ஒரு சுண்டைக்காய் இலங்கைக்கு இத்தனை தைரியம் கொடுக்கிறது? இந்தியப் படைக்கு தெரிந்தே, அல்லது அதன் அனுமதியுடன் செய்யாவிட்டால், கோபத்தில் தும்மினால் கூட இலங்கையே காணாமல் போகக்கூடிய வலிமை கொண்ட ஒரு படை, தன்னை ஒன்றும் செய்யாது என்ற தைரியம் ஒரு சுண்டெலிக்கு எப்படி வருகிறது?

இந்தியாவில் பயங்கரவாத சதிச் செயல்களால் உயிரிழப்பு நேரும் போதெல்லாம், தொடர்ந்து சில நாட்களுக்கு எல்லா ஊடகங்களிலும் கூச்சலாக இருக்கிறது. என்னவோ இந்திய உளவு நிறுவனங்கள் எல்லாம், மனித உரிமை பேசுபவர்களின் சாட்டைக்கு பயந்து, சர்கஸ் காட்டுவது போல், 'தீவிரவாதத்தை நசுக்க வேண்டும், பொடா வேண்டும், போட்டு தள்ள வேண்டும்' என்று ஒரே கூச்சல். ஏதோ எங்கோ ஊடகங்களின் மூலையில் 'நட்டு கழண்டு போய்' நாலு பேர் மனித உரிமை, அரச பயங்கரவாதத்தின் மற்ற விளைவுகள் பற்றி பேசினால், இந்தியாவில் தீவிரவாதிகள் மீது வேட்டை நடக்காமலா இருக்கிறது? அதை மீறி அரசினால் முடிந்தது அவ்வளவுதான்! இந்த கூச்சலை எழுப்பும் யாராவது, இத்தனை முறை, ஒரு சுண்டைக்காய் ராணுவம் இந்திய குடிமக்களை சுட்டு கொன்ற நிகழ்வுகளை பற்றி வாயை திறந்து ஏதாவது சொல்லியிருக்கிறார்களா? கார்கில் தொடங்கி இன்றுவரை எழுப்பப் பட்ட கூச்சல்கள் என்ன? கார்கிலுக்கு நிதியளிப்பதில் முதலிடம் வகித்த தமிழகத்திலாவது ஒரு திடகாத்திரமான ஒரு குரல் ஒலித்திருக்கிறதா? சும்மா வெட்டி தலையங்கங்கள் தவிர்த்து, இந்திய அரசை இதை தடுக்கும் நடவடிக்கைக்கு நிர்பந்திக்க, எந்த வடிவத்திலாவது போராட்டம் நடந்திருக்கிறதா? சம்பந்த பட்ட மீனவர்கள், மற்றும் சில தமிழ் தேசியவாதிகளை தவிர மற்றவ்ர்கள் ஏன் சக இந்தியர்கள் கொல்லப் பட்டதை பற்றி வாய் திறக்கவில்லை?

இன்னும் எத்தனையோ கேள்விகளும், அதை முன்வைத்த புரிதல்களும் உள்ளன. இப்போதைக்கு (இந்த பதிவை எழுத மட்டுமே வேலையிடத்தில் தங்கி, நேரமும் ஆகிவிட்டதால், நிறுத்தி) இங்கே இந்த பதிவை முன்வைக்கிறேன். பின்னூட்டங்கள் மட்டுறுத்தலில் இருப்பதால் திங்கள் வரை இங்கே வெளிவர வாய்பில்லை. அதனால் எனது 'கூத்து' பதிவில் மட்டுறுத்தலை நீக்கியிருக்கிறேன். அங்கே பின்னூட்டமிட்டால் உடனடியாய் எல்லோரும் படிக்கவும், மேலே விவாதிக்கவும் சாத்தியமாகும். (பின்னூட்டங்கள் வந்தால்) தொகுத்து என் கருத்தை சேர்த்து பிறகு இடுகிறேன்.

Post a Comment

---------------------------------------
Site Meter