ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Saturday, April 29, 2006

2. தேர்தல் - 2006.

ஓ போடு' என்ற ஒரு 'சமூக விழிப்புணர்வு இயக்கம்', இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், 'யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை' என்ற '49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தி, இன்றைய 'கழிசடை அரசியலுக்கு' எதிரான ஒரு தீர்மானமாக, எதிர்ப்பை முன்வைக்க அழைக்கிறது. கேட்க சுவாரசியமாகத் தான் இருகிறது. இப்படி ஒரு வாய்ப்பு இருப்பது ஒரு குறிப்பிட்ட குரலை ஒலிப்பதற்கான உரிமையும் தேவையும் ஆகும். அந்த வகையில் நல்ல விஷயம்தான். ஆனால் தோழர் ஞாநி இந்த நடவடிக்கையை 'நம்மை இனி ஏமாற்ற முடியாது' என்பதன் அறிவிப்பாகவும், ' ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட, 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும்.' என்று சொல்வ தெல்லாம்தான் நம் சிந்தனையை தூண்டுகிறது.


முதலில் இது ஒரு நடுத்தர படித்த வர்க்கத்தின் குரலாக இருக்குமே ஒழிய, ஏழை எளிய மக்கள் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை தேர்ந்தெடுத்து, ஓட்டளித்து, சந்தோஷத்துடன் தங்களின் சிறிய உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில்தான் ஆர்வமாக இருப்பார்கள். சமூகத்தின் எந்த போக்கிலும் அதிகாரம் இல்லாதவர்கள், சமூகத்தில் எதையும் நிர்ணயிக்க இயலாதவர்கள், தங்களிடம் உள்ள ஒரு குறைந்த பட்ச, ஆனால் முக்கியமான அதிகாரத்தை வீணாக்காமல் பயன்படுத்த விளைவதும், அதில் நிறைவு கொள்வதும், புரிந்து கொள்ளக் கூடியதே. ஒரு வேளை குறிப்பிட்ட மக்கள் பிரச்சனைக்கு எதிர்ப்பாய், ஒட்டு மொத்தமாய் முன்பே பேசி வைத்து, வாக்களிப்பதை பகிஷ்கரிப்பதில் இறங்கக் கூடும். அதுவும் தங்களிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தும் உத்தியாகவே இருக்கும்.


வாக்களிப்பதை தவிர்க்கும் பெரும் பகுதி மக்கள், சமூகத்தில் வசதியுடன், அதன் அதிகாரத்தையும், உற்பத்தியையும் நுகர்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் இருப்பவர்கள். 'யாரையும் பிடிக்கவில்லை' என்று பொதுவாய் சொல்லிக்கொண்டாலும், நீண்ட வரிசையில் நின்று, காத்திருத்தலுக்கு பின்பு, தாங்கள் அளிக்கப் போகும் ஒற்றை ஓட்டின் மீது பெரிய மதிப்பு இல்லாத அலட்சியத்தினாலேயே, ஓவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்காத விழுக்காடினரில் பெரும்பகுதியினர் வாக்களிக்காமல் இருப்பதாக தோன்றுகிறது. அவர்கள் சிரமம் எடுத்து '49 ஓ' போடுவார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்தான்.


இப்படி 'வாக்களிக்க விரும்பவில்லை' என்பதாய், வாக்களிக்க விரும்பாத விழுக்காடினர் வாக்களிப்பதால், எதாவது பயனோ, யாரிடமாவது மனமாற்றமோ இருக்கப் போவதாக எனக்கு தோன்றவில்லை. மிஞ்சிப் போனால் ஒரு சுய நிறைவும், மனச்சமாதானமும் கிடைக்கலாமே தவிர, அரசியல்ரீதியாய் இதற்கு என்ன முக்கியத்துவம் ஏற்படும் என்று புரியவில்லை. அல்லது இப்படிபட்ட நடவடிக்கைகளை, ஒரு கட்டத்தில் நாம் மாற்றிக்கொண்டு, யாருக்காவது ஓட்டளிக்கக் கூடிய 'தரத்திற்கு', நமது தேர்தல் அரசியல் என்றாவது 'உயர்ந்து' மேலெழும்பி வரும் என்றும், எனக்கு தோன்றவில்லை. தேர்தல் அரசியல் என்று வந்துவிட்ட பின் அது இப்படித்தான் இருக்கும் என்று மீண்டும் மீண்டும் மாற்று உதாரணங்கள் இல்லாமல் நிருபிக்கப் பட்ட பின், இன்னமும் 'அரசியல் ஒரு சாக்கடை' என்று ஸ்டீரியோடைப்பாய் சொல்லிக் கொண்டு செய்யும், ஒரு அசட்டு தார்மீகமாகவே எனக்கு இந்த நடவடிக்கை தோற்றமளிக்கிறது. அரசியல் நாம் எதிர்பார்க்கும் தரத்திற்கு வரும் என்ற அசட்டு நம்பிக்கைகளும் எனக்கு கிடையாது. யாருக்கும் வோட்டுப் போட விருப்பமில்லை யெனில், கடும் கோடையில் வெளியே செல்லாமல், வீட்டில், ஜிஞ்சர் லெமன் உருஞ்சிக் கொண்டு, எஃப் எம் கேட்டுக் கொண்டிருப்பதே உத்தமமானதாய் எனக்குத் தோன்றுகிறது.


அது தவிர 'ஓ போடு'விலிருந்து ஐஐடிக்காரன்களுக்கு ஓட்டுப் போடும் படி ஒரு மின்னஞ்சல் வந்ததை பார்த்து கொப்பளமே வந்துவிட்டது. ஒரு வேளை பிராமண சங்கம் தொடங்கியுள்ள கட்சிக்கு ஓட்டு போடச் சொன்னால் கூட கோபம் வந்திருக்காது. வலைப்பதிவிலும் ஒரு இடத்தில் ஒருவர் லோக் பரித்ரனுக்கு ஓட்டுப் போட அழைக்கிறார்.('சமஸ்கிருதப் பெயரை வைத்துகொண்டு பிழைக்க முடியுமா!' என்பதாக துக்ளக் இதை கிண்டலடிக்கிறது. கிண்டல் லோக் பரித்ரனை பற்றி அல்ல, தமிழகத்தை பற்றி.) இன்னொருவர் 'Give a chance to vijaykant' என்கிறார். அப்படி சொன்னவருக்கும் ஐஐடிக்காரன்களின் கட்சி சிறந்ததாக தெரிகிறது.

படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் விடிவுகாலம் வரும் என்பது போன்ற அபத்தமான, அதே நேரம் சம அளவில் கபடமான சிந்தனை வேறு இருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. நாட்டில் ஹவாலாக்களிலும், என்னென்னவோ வகைகளிலும் கொள்ளையடித்த எவரும் தற்குறிகளோ, மாமா வேலை செய்துகொண்டிருந்தவனோ, சாராயம் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தவனோ அல்ல. உலகின் வீழாத ரவுடிகளாக வலம் வரும் அமேரிக்க இங்கிலாந்தின் படித்தவர்களின் அரசியலால், அக்கிரமங்கள் இன்னும் அதிகரித்திருக்கிறதே ஒழிய, உலகத்தின் எதிர்காலம் இந்த கல்வியினால் மட்டும் உய்யப் போவது இல்லை. முழுவதும் பட்டதாரிகளை கொண்டு ஆட்சிக்கு வந்த, ஏகப்பட்ட விளம்பரம் செய்யப்பட்ட, அஸாம் கன பரிஷத்தின் ஆட்சியும் எந்த விதத்திலும் வேறு படாத ஊழல் ஆட்சியாகவே வடிவம் பெற்றது.

கல்வியின்/அறிவின் முக்கியத்துவத்தை மறுப்பது அல்ல, நான் சொல்ல வருவது. தொழிற் கல்வி கற்றவர்களும், எம்பிஏ காரர்களும், எந்த வித அடிப்படையும் இல்லாமல் தாங்கள் மற்றவர்களை விட யோக்கியர்கள் என்பதாக ஒரு வாதத்தை முன்வைப்பதும், அதை உயர் நடுத்தர வர்க்கம் எந்த பிரஞ்ஞையும் விமர்சனமும் இல்லாமல் தூக்கி பிடிக்கும் அசிங்கம்தான் எரிச்சல் தருகிறது. அதிலும் சுயநலத்திலும் தனது முன்னேற்றத்திலும் மட்டுமே கவனம் உள்ள, சமூக பிரஞ்ஞையோ, வேர்களோ எதுவும் இல்லாத ஐஐடிகாரன்கள்! இதில் ஒரு ஆள், வீட்டுக்கு வந்து, வீட்டில் இல்லாதவர்களின் நம்பர் வாங்கிக் கொண்டு, செல்ஃபோனில் எல்லாம் வந்து ஓட்டு கேட்கிறார். 'மேம், கேன் ஐ டேக் எ ஃபியு மினிட்ஸ்' என்று தொடங்கி ஆங்கிலத்தைலேயே தொடர்கிறார் (என்னிடம் அல்ல, என்னிடம் மாட்டியிருந்தால் ஒரு வாங்கு வாங்கியிருப்பேன்). குறைந்த பட்சம் ஓட்டை தமிழில் கேட்கவேண்டும் என்ற உணர்வு கூட இல்லாதவர்கள், வாக்காளர்களிடம் திட்டு வாங்காமல் இருப்பதே 'சாதாரண' மக்களின் பரந்த மனப்பான்மைக்கு உதாரணமாய் இருக்கிறது. ஐஐடிகாரன்கள் முதலில் ஐஐடி உள்ளே நடக்கும் சாதிய பாகுபாடுகளை பற்றி, உள்ளே உள்ளவர்களின் வெறி பிடித்த, தங்கள் நலம் சார்ந்த, பரிசீலனைகளுக்கு வாய்பில்லாத ஒற்றை பார்வைகளை பற்றி கொஞ்சமாவது பரிசீலித்து விட்டு, நாட்டில் நடப்பதை புரிந்து கொள்ள முயற்சி எடுக்கலாம். இடவொதுக்கீடு என்பதை ஆதரிப்பது எதிர்ப்பது என்பதும், அது குறித்த ஒரு நிலைபாட்டை மேற்கொள்வது என்பதும் வேறு விஷயம். ஆனால் இட ஒதுக்கீடு பற்றிய இவர்களின் பார்வையில் ஒரு குறைந்த பட்ச நாகரீகமோ, தங்களுக்கு அந்நியமான வாழ்க்கை பற்றிய குறைந்த பட்ச மரியாதையோ இல்லாததும் இவர்களின் யோக்கியத்தனம் பற்றியும், முரட்டுத்தனமாய் தங்கள் கருத்தை பற்றிக் கொண்டு மாற்றுக் கருத்துக்களின் நியாயத்தை அறிய முயலாததிலேயே இவர்களின் அறிவு பூர்வமான அணுகுமுறையும் விளங்குகிறது. (நேரடி ஆதாரம் கேட்காதீர்கள். சொந்த அனுபவத்தில் எதிர்கொள்ள நேர்ந்ததை வைத்துத்தான் எழுதியிருக்கிறேன்.) இதை விட 'படிக்காதவர்களின் அரசியலில்' உள்ள பிரச்சனைகள் எவ்வளவோ மேல். நல்லவேளையாக இவர்கள் மக்கள் ஆதரவை குறிப்பிட்ட அளவில் கூட ஒரு காலத்திலும் பெறமாட்டார்கள் என்பதால் இதில் கவலை கொள்ள எதுவுமில்லை.

அடுத்த (நோய்கூறு குறைவான) நகைச்சுவை விஜய்காந்தை ஒரு மாற்றாக சொல்வது. ரஜினி அரசியலுக்கு வரவே போவதில்லை என்பதால், அதை விரும்பியவர்களுக்கு இப்படி ஒரு வாதம். ஒருவேளை தமிழகத்தில், ஒரு நல்ல ஆட்சியை தந்திருக்க முடியும் என்றால், அது எம்ஜியார் அவர்களால்தான் சாத்தியமாயிருக்கும். உண்மையிலேயே ஏழைகள் மீது பரிவும், ஏதாவது நல்லது செய்யும் உணர்வும அவருக்கு இருந்தது. சினிமாவில் இருந்த போதும் அவர்( தன்னால் மட்டும் படம் ஓடிய காரணத்தால், தான் தோன்றித்தனமாய் சில இடங்களில் நடந்து கொண்டாலும்), தன் வருவாயை மட்டும் குறியாய் கொண்டிருக்கவில்லை. அவர் தனது படங்கள் மூலம் சம்பாதித்ததை விட, மற்றவர்கள் அவர் படங்கள் மூலம் அள்ளியது ஏராளம். ஆனால் அவர் ஆட்சியில்தான் ஊழலின் பரிமாணம் புதிய வடிவங்களை அடைந்தது. எம்ஜியாரை போல அல்லாமல், தனது படத்தின் மூலம் சாத்தியமாகும் எல்லா வகை வருவாயையும் கறாராக வசூலிக்கும், லாபத்தின் எல்லா தளங்களிலும் பங்கு கேட்கும், இன்னும் வேறு பல வழி வகைகளில் வருவாயை பெருக்குவதையே குறியாய் கொண்டிருக்கும், ரஜினியும் விஜயகாந்தும் ஊழலற்ற ஆட்சியை தருவார்கள் என்று வாதத்தை முன்வைத்து, அதற்கு சிலர் ஒரு வாய்ப்பு தரக் கேட்பது, இந்த தேர்தலில் நடக்கும் மற்ற கூத்துக்களில் இருந்து, கேலித்தன்மையில் எந்த விதத்திலும் குறையாத விளையாட்டு.

விஜயகாந்த வெற்றி பெற்றால் அதனால் புதிதாய் எதுவும் குடிமுழுகப் போவதில்லை. மற்ற எல்லா ஆட்சிகளைப் போலவே, கேனத்தனமாகவும், ஊழலாகவும், அவருக்கு வேண்டியவர்கள் நிறைந்த அரசாகவும் இருக்கும். அதில் புதிய கெடுதல் எதுவும் இல்லை என்றாலும், ஏதோ விஜயகாந்த் வித்தியாசம் காட்டுவார், விஜயகாந்தால் விடிவு வரக்கூடும் என்பதாக சிலர் வித்தியாசமான ஓ போடுவதால் மட்டுமே, இதை சொல்ல வேண்டியிருக்கிறது. (சில கணிப்புகளின் படி, அவர் திமுக ஓட்டுக்களை மட்டும் சிதறடித்து, அதனால் அதிமுக வெற்றி பெற்றால், அது அவரால் ஆன கைங்கர்யம்.) அது தவிர விஜயகாந்த் உதிர்க்கும் சொல்லாடல்கள், சங்கராச்சாரியாருடன் சேர்ந்து முன்வைத்த அவரது பழைய உதிர்ப்புக்கள், எதிர்காலத்தில் பலம் பெற்றால் அவர் இந்துத்வ சார்பாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கேட்பாரின்றி இப்போது கிடக்கும் பாஜகவிற்கு அவரால் அட்ரஸ் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்பதை தவிர வேறு வித்தியாசங்கள் தென்படும் என்று தோன்றவில்லை.

(இன்னும் ஒரு பதிவு வரும்.)

Post a Comment

25 Comments:

Blogger மயிலாடுதுறை சிவா said...

என்ன வசந்த

ரொம்ப நாளாய் ஆளை காணோம்?
ஞானி மற்றும் விஜய்காந்தில் உடன்பாடு இல்லை
என்று புரிகிறது? ஆனால் நிறைய பேர் விஜய்காந்த்
விருத்தாசலத்தில் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என்று
சொல்கிறார்களே?

நன்றி
மயிலாடுதுறை சிவா...

4/29/2006 8:29 PM  
Blogger மாயவரத்தான் said...

//விஜயகாந்த வெற்றி பெற்றால் அதனால் புதிதாய் எதுவும் குடிமுழுகப் போவதில்லை. மற்ற எல்லா ஆட்சிகளைப் போலவே, கேனத்தனமாகவும், ஊழலாகவும், அவருக்கு வேண்டியவர்கள் நிறைந்த அரசாகவும் இருக்கும்//

எதை வைத்து இந்த வாதத்தை முன் வைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? எல்லாவற்றையும் நெகட்டிவ் அப்ரோச் என்ற பெயரில் எழுதுவதினால் தான் இதுவும் என்றால், ஸாரி, நான் என் கேள்வியை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

ஒரு வார்டு, முனிசிபாலிடி, எம்.எல்.ஏ., என்று எங்காவது அவருக்கு வாய்ப்பு கொடுத்து அங்கே இப்படி எதுவும் 'திராவிட & சன்ஸ்' கம்பெனிகளைப் பின்பற்றி கொள்ளை அடித்தாரா? இன்னும் வாய்ப்பே கொடுப்பதற்கு முன்பு இப்படி பொத்தாம் பொதுவாக பேசுவது சரியல்ல ரோசா.

4/29/2006 8:41 PM  
Blogger ROSAVASANTH said...

சிவா, மாயா கருத்து நன்றி.

விஜயகாந்த இதுவரை முன்வைத்துள்ள சொல்லாடல்கள், நடவடிக்கைகளை முன்வைத்து, தேர்தல் அரசியலில் வேறு எதுவும் சாத்தியமில்லை என்ற தெளிவில் சொல்லுகிறேன். ஆதாரம் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு கிடைக்கலாம். இப்போதைக்கு எம்ஜியார்தான் முன்மாதிரி ஆதாரம். அதுவரை இது வெறும் தனிப்பட்ட பார்வையாக மட்டுமே இருக்க முடியும். ஏற்றுகொள்வது அவரவர் கன்விக்ஷன்களை பொறுத்தது. மற்றபடிஉ விஜயகாந்த் வெற்றிபெறுவதில் எந்த பிரச்சனையும் எனக்கு இல்லை, அதனால் புதிதாய் எந்த கெடுதலும் நேரப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறேனே! நன்றி!

4/29/2006 8:58 PM  
Blogger மாயவரத்தான் said...

கறுப்பு எம்.ஜி.ஆர். என்று விஜயகாந்த் தன்னைத் தானே அழைத்துக் கொள்வதினால் இப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களோ ரோசா?

விஜயகாந்த் வித்தியாசம் காட்டுவார் என்ற வாதத்தை நானும் நம்பவில்லை. என்றாலும் திராவிட கம்பெனிகளை தாக்கும் அதே தட்டில் விஜயகாந்தையும் (அட்லீஸ்ட் அடுத்த தேர்தல் வரையிலாவது) தாக்குவது சரியல்ல என்றே நினைக்கிறேன்.

நன்றி.

4/29/2006 9:25 PM  
Blogger Jayaprakash Sampath said...

இந்த ஐஐடிக்காரன்களுடைய ஆரம்பமே தப்பு. அவர்கள் கட்சியின் பெயரில் இருந்து, கட்சியின் கொள்கை என்று பக்கம் பக்கமாக அவர்கள் இணையத் தளத்தில் உளறியிருப்பது வரை, எல்லாமே கந்தரகோளம். இல்லேன்னு சொல்லலை. ஆனாலும் நான் இந்தத் தேர்தலில், ஐஐடிகாரன் கட்சியைச் சேர்ந்த அபேட்சகருக்குத்தான் ஓட்டு போடப் போகிறேன்.

ஏன் அப்படிங்கறதுக்கு ஒரு சின்ன விளக்கம்.

நம்ம ஊர் அரசியலைப் புரிஞ்சுக்கிறது ரொம்ப சிக்கலான விஷயங்க. வெற்றி வாய்ப்புங்கிறது, வேட்பாளர், அவருடைய தகுதியை வைத்து மட்டும் வருவதில்லை.

1. அவர் சார்ந்திருக்கிற கட்சி
2. கட்சிச் சின்னம்
3. அவருடைய சாதி
4. தொகுதியில், அவரது சாதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை.
5. இரு பெரும் கழகங்களின் ஓட்டு வங்கி
6. வேட்பாளரின் பொருளாதார பலம்
7. தொண்டர்களிடையே செல்வாக்கு
8. உட்கட்சி பூசல்களால், சொந்தக் கட்சிக்காரர்கள் டபுள் கேம் ஆடாமல் இருப்பது
9. பிரபலங்களைக் கூட்டிக் கொண்டு வந்து பிரச்சாரம் செய்ய வைக்கக் கூடிய திறமை
10. செயல் திறமையைக் காட்டிலும் பேச்சுத் திறமை.

இந்த விஷயங்கள் அனைத்திலும், ஓரளவுக்குத் தேறக் கூடியவர்களே வெற்றி பெறுகிறார்கள். ஆனால், இதல்லாம் எனக்குப் புரிவதில்லை. என் தொகுதியிலே நிற்கிற ஒருத்தன் நல்லவன், நேர்மையானவன், திறமையானவன் அப்படின்னு தோன்றினால், அவனுக்கு ஓட்டுப் போட்டு செயிக்க வைக்க முடிகிற காலம் வருமான்னு நிஜமாகவே ஏங்கறவன்.பொலிடிகல பண்டிட்டுகள் தூக்கி எறிகிற புள்ளி விவரங்களும், ஆராய்ச்சிகளும், முடிவில்லாத குழப்பத்தைத்தான் தருகின்றன. ஒரு தொகுதியிலே, இது போன்ற 'விவரம் அறிந்த அரசியல் ஞானிகளுக்கும்', இவன் ஜெய்ச்சா நமக்கு நல்லது என்று நினைக்கிற என்போன்ற சாதாரண வாக்க்காளர்களுக்குமான ratio 1:99, இருக்கும் என்பது என் கணிப்பு. அந்த ஒரு சதவீதத்திலே, எத்தனை பேர் ஓட்டுச் சாவடிக்கு வரப்போறான் என்பது வேற கதை. நான் எந்த அரசியல் கட்சி மீதும் நம்பிக்கை இல்லாதவன் ( என்று வைத்துக் கொள்வோம்). மாறி மாறி இரண்டு கழகங்களும் என்னை ஏமாற்றி வருகின்றன என்பதைப் புரிந்து கொண்டவன். திமுக கூட்டணீ மோசம் தான், ஆனாலும், ஜெயலிதா மீண்டும் ஆட்சி அமைத்தால் கெடுதல் அதிகம் என்பதால், திமுகதான் வர வேண்டும் என்கிற தர்க்கத்தை புரிந்து கொள்ள முடியாதவன். இந்தச் சூழ்நிலையிலே நான் யாருக்கு ஓட்டு போடுவது என்று யோசித்துப் பார்த்தால், ஐஐடிகாரன் தான் நினைவுக்கு வருகிறான்.

ஐஐடி மாதிரி உயர்தரப் பள்ளிகளிலே படிச்சவன்னா, அவனால விடிவு காலம் வந்திருங்கறத்துக்கு உத்தரவாதம் கிடையாதுதான். ஆனால், அவனால இந்தச் செக்குமாட்டு அரசியலில் இருந்து விடிவு காலம் பிறக்கும்னோ, அல்லது, செயிக்காவிட்டாலும், அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய ஓட்டுக்கள் தரும் நம்பிக்கையால், அரசியலில், இன்னும் சிலர் உள்ளே வருவதுக்கு சாத்தியக் கூறு இருக்கும்னோ நினைக்க வாய்ப்பே இல்லீங்களா? ஆட்சி அரசியலை ஒரு கும்பல் கிட்டேயேதான் வெச்சிருக்கணுமுன்னு சட்டம் இருக்குதா?

இந்தத் தேர்தலில், ஐஐடிகாரன்கள் டெப்பாசிட்டு கூட வாங்க மாட்டார்கள் என்பதிலே எனக்கு சந்தேகமில்லை. ஆனால், நெப்போலியனோ, எஸ் வி சேகரோ, வெற்றிபெற்றால், எதையும் கிழிக்கப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகு, ஐஐடிகாரன் சந்தானகோபாலன் வாசுதேவனுக்கு நான் ஏன் ஓட்டு போடக்கூடாது என்பதற்கு காரணம் சொல்ல முடியுமா?

நீங்கள் சொல்லக் கூடிய காரணங்கள்.

1. பேர்லேயே சமஸ்கிருதம் இருக்கிறது. ஆகவே வலதுசாரி.

வலதுசாரிகள் மீது எனக்குப் பிரச்சனை இல்லை. வலது சாரி தீவிரவாதிகள் மீதுதான். இவங்க தீவிரவாதியாக இருக்கமாட்டாங்க என்பது ஒரு நம்பிக்கை.

2. செல்·போனில் கூப்பிட்டு இங்கிலீஸில் பேசுகிறான்.

இன்றைக்கு சென்னையில் எந்த utility நிறுவனத்தை - செல்போன், வங்கி, கடன்அட்டை, டிராவல் ஏஜண்ட், நட்சத்திர ஓட்டலின் வரவேற்பறை, மது அருந்தும் இடம், விமான நிலையம் - தொலைபேசியில் அழைத்தாலும், ஆங்கிலம் தான் ஒலிக்கும். நீங்க கேட்டுக் கொண்டால் தமிழுக்கு மாறுவார்கள். வெளுத்து வாங்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. ஒரு உயர்தரக் குடியிருப்பிலே, மரியாதைப் பட்ட தோற்றத்துடன் இருக்கிறவரிடம் ஆங்கிலத்தில் பேசினால், கொஞ்சம் கெத்தாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஏன் வந்தது, யார் அதற்குக் காரணம் என்பது ஒரு தனிக் கேள்வி. மேடைக்கு மேடை, தமிழ்ல முழங்கறவன் மட்டும் என்னதைக் கிழிச்சான் என்று பொத்தாம் பொதுவாக நான் கேட்கவில்லை என்பதை கவனத்தில் வைக்கவும்.

3. ஊழலுக்கும், கல்வி அறிவுக்கும் தொடர்பில்லை. ஆகவே, ஐஐடிகாரன் வந்து மட்டும் ஒண்ணும் வெளங்கிடப் போறதில்லை.

ஐஐடிகாரன் என்கிற பிரமிப்பினால் நான் வக்காலத்து வாங்க வில்லை. வேற வழியே இல்லாமல், மாற்றி மாற்றி கழகங்களுக்குக் குத்திக் கொண்டிருக்கிற கையாலாகத்தனம் தருகிற வெறுப்பில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் தான் ஓட்டு போடப் போகிறேன்.

4. அரசியல் பற்றி என்ன எழவை இவனுங்களுக்குத் தெரியும்.

தெரியாதுதான். ஆனால், கத்துக்கலாம். முடியாதுன்னு சொல்லுங்க பாக்கலாம்?


4. டெப்பாஸிட்டு கூட வாங்க முடியாது, தெரியும்ல

நல்லாத் தெரியும். என் தொகுதியிலே நிக்கிற ஐஐடிகாரன், ஒரு ஆயிரம் ஓட்டு வாங்கினால், நம்பிக்கை தருவதாகத்தான் இருக்கும்.

ஒட்டுவங்கி, சாதி ஓட்டுக்கள், கட்சி பலம், முந்தைய தேர்தல் முடிவு என்று எல்லாத்தையும் கலந்து கட்டி அடித்து, அதிலிருந்து, தேர்தல் முடிவுகளை deduce செய்யும் ஞானிகள், மனதிலே ஒரு விருப்பத்தை வைத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல, ஆராய்ச்சி பாவ்லா செய்து எழுதுபவர்கள், கலைஞர் மோசம் தான், ஆனால், அம்மா இன்னும் மோசமாச்சே என்று நொந்து கொண்டு திமுகவுக்குக் குத்துபவர்கள்., சே நம்மூருக்கு டெமாக்ரஸியே ஒத்துவராது என்று வெட்டி நாயம் பேசிக் கொண்டு, ஓட்டை வீணடிப்பவர்கள், ஆகியவர்களுக்கு மத்தியிலே, சரி, இறங்குவோம் என்று நிஜமாக்வே களத்தில் இறங்கியவர்களுக்கு, அவர்களைப் போலவே, நம்பிக்கை கொண்டிருக்கிற, ஏன் கூடாது என்று நேர்மையாக நினைக்கிற நான் கூட ஓட்டு போடாவிட்டால் எப்படி என்பதற்காகத்தான் ஓட்டு போடப் போகிறேன்.

கொஞ்ச பைத்தியக்காரத்தனமாக, சினிமாத்தனமாகத்தான் இருக்குது இல்லீங்களா?

பரவாயில்லை. எல்லாரும் கூட்டமாச் சேர்ந்து டெஸ்க்டாப்பிலே கும்மி அடிக்கும் போது, ஒர்த்தன் ரெண்டு பேர் இப்படி சட்டையைக் கிளிச்சுகிட்டு, சுத்தி வந்தால், ஒண்ணும் தப்பாகிடாது.

4/30/2006 4:40 AM  
Blogger Srikanth Meenakshi said...

வசந்த்,

நீங்கள் சொல்லும் பல கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன். (வழக்கம் போல்) ஒத்துப் போகாத ஒரு கருத்து: படித்தவர்கள்/லோக் பரித்ரண் பற்றிய கருத்து.

அவர்கள் வலைத்தளம் சென்று மேய்ந்திருக்கிறேன்: அரசியல் முதிர்ச்சியற்ற, எளிதில் பகடி செய்யக் கூடிய கட்டுரைகளும் கருத்துக்களும் நிறைந்தது - அதை அனுப்பிய நண்பர்களுக்கு அதிலிருந்து மேற்கோள்கள் காட்டி இவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்த அளவுக்கு அரசியல் தெரியவில்லை என்று கிண்டலாய் பதிலனுப்பினேன். இவர்கள் ஜெயிக்க வேண்டும் என்று பெரிசாய் நான் விரும்பவுமில்லை, ஜெயிப்பார்கள் என்று நம்பவுமில்லை.

இருப்பினும், இவர்கள் அரசியலுக்கு வருவதற்கான யோக்கியதை/தகுதிகளைக் கேள்விக்குள்ளாக்குவது தேவையற்றது. 'சமூகப் பிரக்ஞை இல்லாதவர்கள்', 'வேர்களற்றவர்கள்' என்று 'ஐஐடிக் காரன்'களைப் பொதுமைப்படுத்துவதும் சரியில்லை. சமூகப் பணியே கதி என்று இருக்கும் பாலாஜி சம்பத், ரவி குச்சிமான்சி போன்றவர்களும், தமிழ் ஆர்வலர்/சமூக சிந்தனையாளரான நமது பத்ரியும் 'ஐஐடிக்காரன்கள்' தான்.

மேலும் இவர்கள் முதலில் ஐஐடியைப் பரிசீலித்து விட்டு வரட்டும் என்று சொல்வதும் விதண்டா வாதம். இந்தக் குறிப்பிட்ட சில இளைஞர்களுக்கு ஐஐடி உள்ளே நடப்பது பற்றி என்ன கருத்து இருக்கிறது, அவர்கள் அவற்றை பரிசீலிக்கவில்லையா என்பது பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்து இதை எழுதினீர்களா? திருமாவளவன் முதலில் தலித் சமுதாயத்தைச் சரி செய்து விட்டு பொது அரசியலுக்கு வரட்டும் என்று சொன்னால் உங்களுக்கு நியாயமான எரிச்சல் வராதா?

படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் மற்றவர்கள் எல்லாம் ஒதுங்கி வழி விட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் (தான்) எல்லாம் சரியாகும் என்றும் நான் சொல்லவில்லை. இன்றைய அரசியலில் படித்தவர்கள் இல்லை என்றும் சொல்லவில்லை.

அதே சமயம், நல்ல கல்லூரியில், நன்கு படித்த இளைஞர்கள் சமூக சிந்தனையோடு அரசியலுக்கு வந்து செயல்பட முனையும் போது அதை வரவேற்பதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களுக்கு (ம் எனக்கும்) இது பற்றி வந்த மின்னஞ்சல்கள், மக்களில் சிலர் பழகிய அரசியலை விடப் புதிதாக ஒன்று வந்தால், அது ஓரளவுக்கேனும் promising-ஆக இருக்கும் பட்சத்தில், அதை ஆதரிக்க விரும்புவதன் அடையாளமாகத் தான் பார்க்கிறேன்.

அவர்கள் கட்சிப் பெயர் தமிழில் இல்லை (இது ஒரு அகில இந்திய கட்சி - காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் இதெல்லாம் தமிழா?), அவர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் (இது தவறு, இந்த அதிகப்பிரசங்கித்தனம் அவர்களது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது) போன்றவை காரணமாக இவர்களைப் பார்த்து எரிச்சல் படுவது கொஞ்சம் மிகையான எதிர்வினையாகவே எனக்குப் படுகிறது.

4/30/2006 7:54 AM  
Blogger வலைஞன் said...

//வாக்களிப்பதை தவிர்க்கும் பெரும் பகுதி மக்கள், சமூகத்தில் வசதியுடன், அதன் அதிகாரத்தையும், உற்பத்தியையும் நுகர்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் இருப்பவர்கள். 'யாரையும் பிடிக்கவில்லை' என்று பொதுவாய் சொல்லிக்கொண்டாலும், நீண்ட வரிசையில் நின்று, காத்திருத்தலுக்கு பின்பு, தாங்கள் அளிக்கப் போகும் ஒற்றை ஓட்டின் மீது பெரிய மதிப்பு இல்லாத அலட்சியத்தினாலேயே, ஓவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்காத விழுக்காடினரில் பெரும்பகுதியினர் வாக்களிக்காமல் இருப்பதாக தோன்றுகிறது. அவர்கள் சிரமம் எடுத்து '49 ஓ' போடுவார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்தான்.//

இது தான் உண்மை. இவர்களை வாக்களிக்க வைப்பதற்கு இன்கம்டாக்ஸ் சலுகை ஏதாவது கொடுத்தால்தான் உண்டு. :)

http://valai.blogspirit.com

4/30/2006 11:17 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

//அது தவிர 'ஓ போடு'விலிருந்து ஐஐடிக்காரன்களுக்கு ஓட்டுப் போடும் படி ஒரு மின்னஞ்சல் வந்ததை பார்த்து கொப்பளமே வந்துவிட்டது.//

"எங்கும் தகுதி எதிலும் திறமை" என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஐஐடி யின் JEE இல் தேர்ச்சியடைவது மட்டுமே போதும் என்று நினைக்கலாம். தகுதியும், திறமையும் இல்லாதவர்கள், ஆட்டுமந்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலைக் கெடுக்கிறார்கள். ஆகவே JEE போன்ற கடினமான ஒரு நுழைவுத் தேர்வு நடத்தி,தகுதியும் திறமையும் உடையவர்களை கண்டுபிடித்து சட்டமன்றத்திற்கோ, பாராளுமன்றத்திற்கோ அனுப்பவேண்டும் என்று ஒரு போராட்டம் நடந்தாலும் ஆச்சரியப்படமுடியாது.

நாலைந்து நாட்களுக்கு முன் இங்கு National Public Radio வில் நடந்த அமெரிக்கத் தேர்தல் சீர்த்திருத்தம் பற்றிய விவாதித்தின்போது சொல்லப்பட்டது:
I would rather be governed by the first 100 names in the Boston telephone directory than the entire Harvard Faculty.

4/30/2006 3:08 PM  
Blogger ROSAVASANTH said...

இகாரஸ் ஸோபராக இருக்கும் போது நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று மீண்டும் படிக்கவும்.

//நீங்கள் சொல்லக் கூடிய காரணங்கள்.

1. பேர்லேயே சமஸ்கிருதம் இருக்கிறது. ஆகவே வலதுசாரி.//

அப்படி சொல்லவே இல்லை. சமஸ்கிருதம் பற்றி துக்ளக்கின் (தமிழகம் பற்றிய) கிண்டலை மட்டுக் குறிப்பிட்டேன். 'எனவே வலதுசாரி' என்பது உங்கள் திரித்தல்.
//2. செல்·போனில் கூப்பிட்டு இங்கிலீஸில் பேசுகிறான்.//

ஆமாம், ஆனால் எதிர்ப்பதற்கு காரணமாய் இதை சொல்லவில்லை. அவர்களின் மக்களை அணுகும் முறை பற்றிய விமர்சனம் மட்டுமே இது.

//. ஊழலுக்கும், கல்வி அறிவுக்கும் தொடர்பில்லை. ஆகவே, ஐஐடிகாரன் வந்து மட்டும் ஒண்ணும் வெளங்கிடப் போறதில்லை.//

ஆமாம், இது மட்டும் நேரடியாய் நான் எழுதியதுடன் தொடர்புடையது.

5/01/2006 1:30 AM  
Blogger ROSAVASANTH said...

ஸ்ரீகாந்த், ஐஐடி கட்சியில் நல்லவர்கள் யாராவது இருக்கிறார்களா, அவர்களுக்கு அரசியலுக்கு வர தகுதியில்லையா என்பது பற்றி நான் அதிகம் பேசவில்லை(அல்லது எதுவும் பேசவில்லை). ஐஐடி என்ற ஒரு வார்த்தையை, அரசியல் யோக்யதைக்கான தகுதியாய் சொல்லும் உளவியலை முன்வைத்து மட்டுமே பேசியுள்ளேன்.

உங்கள் எதிர்கேள்வி ரொம்ப சுவாரசியமானது. தலித் சமுதாயத்தில் திருத்தப் படவேண்டியதாக என்ன இருக்கிறது என்று சொல்லமுடியுமா? உதாரணமாய் ஐஐடிகாரர்களின் முரட்டுத்தனமான தங்கள் சுயநலம் சார்ந்த பார்வை. பலரிடம் இருக்கும் அப்பட்டமான(ஆதிக்க) ஜாதிவெறி. அது போல ஒருவேளை தலித்கள் 'மற்ற ஜாதியினரை கொடுமை படுத்துவதை' எதிர்த்துவிட்டு திருமா அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று புரியவில்லை. கருத்துக்கு நன்றி.

5/01/2006 1:45 AM  
Blogger ROSAVASANTH said...

சில்வியா நாஞ்சில் பீட்டர் கருத்துக்கு நன்றி. இட ஒதுக்கீடு பற்றி ஏற்கனவே வலையில் அதிகம் எழுதப்பட்டுள்ளதால் நான் குறுக்கிடவில்லை. மேலும் அது குறித்த விவாதத்தில் இறங்குவது எளிதில் வெளிவர இயலாத சுழலில் மாட்டிகொள்வது. அப்படி விவாதித்தும் பெரிய பயன் இருக்காது என்று நினைப்பதனால், விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை.விரிவாய் எழுதும் நோக்கம் உள்ளது. இஅட ஒதுகீட்டின் அடைப்படை நியாயங்கள், அதிலிருக்கும் பிரச்சனைகள், அதை சமூகம் எதிர்கொள்ளும்/கொண்ட விதம் பற்றியும் எழுத ஆசை உள்ளது. ஆனால் அது மிகவும் உழைப்பை கோரும் வேலை. இப்படி மேலோட்டமாய் சொல்வது எளிதாய் இருக்கிறது. முடிந்தால் வேறு சமயத்தில் விரிவாய் எழுதக்கூடும்.

இகாரஸ், ஸ்ரீகாந்த், வலைஞன் சிட்டுக்குருவி நன்றி.

5/01/2006 1:54 AM  
Blogger Srikanth Meenakshi said...

ரோசா, நான் தலித் பற்றியதை ஒரு எதிர்கேள்வியாக முன்வைக்கவில்லை. ஒரு வாத உதாரணமாகவே வைத்தேன். ஒருவர் ஒரு வட்டத்திலிருந்து வெளிவந்து அரசியலுக்குள் நுழைந்தால், 'முதலில் அவர் வட்டத்தை சரி செய்யட்டும்' என்று சொல்வது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. அது தவறு என்ற வகையில் வாதிட முன்வந்தேன், அவ்வளவுதான்.

5/01/2006 1:57 AM  
Blogger ROSAVASANTH said...

Srikantha, thanks for the comment.

5/01/2006 2:06 AM  
Blogger ROSAVASANTH said...

//I would rather be governed by the first 100 names in the Boston telephone directory than the entire Harvard Faculty.//

SuMu, Thanks for the comment

5/01/2006 2:07 AM  
Blogger arulselvan said...

வசந்த்,
வலைப் பக்கம் வந்து நாளாகிறது.
சரியான வாதம் - முக்கியமாக இந்த ஐஐடி பையன்களைப் பற்றியது. வெளிப்படையாக எழுதியதற்கு நன்றி.
அரசியல் என்பது வெறும் நல்லெண்ண/இன்டெலெக்சுவல் பூச்சாண்டி அல்ல என்பது நிறையப்பேருக்கு உறைக்க வேண்டும்.

அருள்

5/01/2006 2:33 AM  
Blogger ROSAVASANTH said...

அருள் நன்றி.

பின்னூட்டங்களை மட்டுறுத்த மட்டுமே வந்தேன். இப்போது கிளம்பியாக வேண்டும். புதிய பின்னூட்டங்கள் இருந்தால், நண்பர்கள் நாளை (இங்கே) மாலை வரை பொறுத்தருளா வேண்டும். நன்றி!

5/01/2006 2:49 AM  
Blogger VSK said...

30 வருட காலமாக முன்னேற்றம் என்பதைக் கட்சிப் பெயரில் மட்டும் வைத்துக்கொண்டு, மக்கள் முன்னேற வாய்ப்பினைக் கொடுக்காமல், தான், தன் குடும்பம், தன் நட்பு இவர்களை மட்டுமே சுற்றி ஆள்வது, வாழ்வது, வீட்டு வாழ்க்கைக்கு வேண்டுமானால் சரியாக இருக்க முடியுமே தவிர, நாட்டை ஆள நினைப்போர் செய்யும் காரியம் அல்ல.

ஆனால், அதுதான் நடந்தது இவ்விரு கழகங்களும் செய்தன.

அவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டியதுதான் என்னும் வாதம், பொதுநலம் சார்ந்த ஒன்று இல்லை என்பது தெளிவு, அது யார் மூலம் வெளிப்பட்டாலும் சரி.

எல்லாவற்றையும் விட, மிக, மிக முக்கியமான நிகழ்வு, மாற்றம் வேண்டுவோருக்கு ஒரிரு மாற்றுகளும் இந்த் முறை இருக்கின்றன.

இந்த இரு கழகங்களும் திருந்தவும் [திருந்துவார்களா என்பது வேறு !] இதன் மூலம், இவர்களைத் தோற்கடிப்பதின் மூலம், ஒரு வாய்ப்பு கொடுத்த மாதிரி இருக்கவும் கூட, கேப்டனையும், மற்றவர்களையும், ஆதரிக்கும் மனநிலைதான் வரும், இன்னும் அடுத்த 7 நாட்களில், என்பது என் துணிபு!

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்!
இனி, இவ்விரு கழகங்களால், "இதே மனநிலையில்", நல்லாட்சி தர முடியாது.
இவர்களின் அடிவருடி, இவர்களை அண்டிப் பிழைக்க நினைத்த கட்சிகளும் தங்கள் வாய்ப்பினைத் தவற விட்டதாகவே நான் உணர்கிறேன்.

ஆகவேதான், துணிந்து, "தனித்துத்தான் போட்டி" என அறிவித்து, அதை நடத்தியும் காட்டியவர்களுக்கே நாம் ஆதரவு தர வேண்டும் என விழைகிறேன்.

5/01/2006 3:01 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

ரோசா வசந்த்,

உங்களுடைய இரண்டு கட்டுரைகளுடனும் பெரும்பாலும் உடன்படுகிறேன். குறிப்பாக Lok Paritran (ஐஐடிக்காரர்கள் கட்சி) பற்றிய கருத்தில் முழுக்க உடன்படுகிறேன். நீங்கள் இதைப் பற்றி பதிந்தது நல்லது. ஓரிரு வாரங்களுக்கு முன் இதைப்பற்றிய மின்னஞ்சலும், பின்னால் அவர்களுடைய இணையத்தளத்துக்கு சென்றபின்னும் எரிச்சல்தான் மிஞ்சியது. இந்தியையும், ஆங்கிலத்தையும் மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு இந்தியாவில் எல்லா மக்களும் இவர்கள் சொல்வதை நம்பி இவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறார்கள் என்பது ஐஐடிக்காரர்களின் வழக்கமான புத்திசாலித்தனத்தைத் தான் காண்பிக்கிறது. மக்களுடைய மொழியைப் புறக்கணிப்பவனால், மக்களுடன் சாமானியனாகப் பழக முடியாதவனால் எப்படி மக்களை நெருங்க முடியும், அல்லது எதைப் புடுங்க முடியும். கட்சியின் பெயரே வாய்க்குள் நுழைய வில்லை. இந்திப் பெயரோடு, ஆங்கிலத்திலும், மற்ற இந்திய மொழிகளிலும் பெயரையாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று இவர்களுக்குத் தோன்ற வில்லை. இதைப் பற்றிக் கேட்டால் தேசியம், மொழி வெறி என்று குதிக்கும் வழக்கமான கும்பல் போலத் தோன்றுகிறது.

மற்ற விசயங்களைப் பற்றியும் எழுத ஆசை, முடிந்தால் நீங்கள் முடித்த பிறகு எழுதுகிறேன். உங்களுக்கும் வந்தியத் தேவனுக்கும் நடந்த விவாதங்களையும் இப்பொழுதுதான் கொஞ்சம் படித்தேன், இன்னும் முடிக்கவில்லை. நிறைய கருத்துக்கள் உண்டு, எழுத நேரமில்லை. உங்களுடைய பதிவுகளும், பின்னூட்டங்களும் எனக்கு வரிசைக் குழப்பம் இருக்கிறது, சில நேரங்களில் எது எதற்கு என்று தெரியவில்லை.

நன்றி - சொ. சங்கரபாண்டி

5/01/2006 1:58 PM  
Blogger Jayaprakash Sampath said...

இப்போழுதுதான் ஊரில் இருந்து வந்தேன். பார்த்ததும், ஒரு அவசரப் பின்னூட்டம். சில விளக்கங்கள்.

'சோபராக' இல்லாத போது, அதை எழுதியிருக்ககூடாது :-). நான் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும், என்பது என்னுடைய நம்பிக்கையைப் பொறுத்த விஷயம். அதை நான் பொதுவில் பேசி இருக்கக் கூடாது.

ஐஐடி என்றதுமே, பிறருக்கு 'ஸ்விட்ச் போட்டாற் போல' த்தோன்றும் பிம்பம், எனக்குத் தோன்றுவதில்லை. காரணம், பரிச்சயமின்மை. தமிழகத்தில், இருக்கும் நூற்றுச் சொச்சம் பொறியியல் கல்லூரிகளில், ஐஐடியும் ஒன்று. ஐஐடியில் கொடுக்கும் பட்டத்துக்கு, வேலைவாய்ப்புச் சந்தையில் மதிப்பு அதிகம் என்ற அளவில் தான் தெரியும். இதே, மக்கள் கழகம் என்றோ, மாணவர் கழகம் என்ற பெயரிலோ, பச்சயப்பன் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கட்சி ஆரம்பித்து தேர்தலில் குதித்திருந்தாலும் இதையே தான் எழுதியிருப்பேன். [ மறுபடி சொல்கிறேன், ஐஐடிக்காரர்களுக்காக நான் வாக்கு சேகரிக்கவில்லை. இந்த விவகாரத்திலே ஐஐடி என்பது ஒரு தற்செயலான விஷயம். ஓட்டுச் சீட்டில், இரு கழகங்களில், ஏதேனும் ஒன்றுக்குப் போட்டுத் தொலைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த எனக்கு ஒரு breather அவ்வளவே]

இதே பின்னூட்டத்தில் இன்னும் சிலர், ஐஐடி காரர்கள், நாட்டை உய்விக்க வந்தவர்கள் என்ற ரீதியில் எழுதியிருப்பது எனக்கு உடன்பாடில்லை. ரோசா வசந்த் சொல்வது போல, ஐஐடி காரர்கள் தங்கள், படிப்பையும் அறிவையும் முன்னிறுத்தி, ஓட்டு வாங்க நினைப்பது தவறு என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இந்த விஷயங்களையும் மீறி அவர்களுக்கு ஓட்டுப் போடுவதற்குக் காரணம் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்த போது, இருக்கிறது என்று தோன்றியது.

அரசியல் என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல என்று மீண்டும் மீண்டும் [இன்னும் குறிப்பாக அருள் வார்த்தையிலே சொல்வதானால், ' இன்டெலக்சுவல்/நல்லண்ண பூச்சாண்டி' ] சொல்வதைத்தான், நான் இன்டலக்சுவல் மிரட்டல் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு வாக்காளன் இத்தனை தூரம் அரசியல் பேசுவது, வேலைக்கு ஆகாது. ஆகவே, இத்துடன்......

5/02/2006 2:35 PM  
Blogger Kasi Arumugam said...

இந்தத் தேர்தலைப்போல இதுவரை எந்தத்தேர்தலிலும் என் தேர்வை முடிவு செய்வதில் சிரமம் இருக்கவில்லை. குடும்ப அரசியல்/ஊடக வன்முறை உண்மையிலேயே உறுத்துகிறது. அம்மாவின் சர்வாதிகாரம், தான்தோன்றித்தனம் மிரட்டுகிறது. இயற்கையாகவே ஹீரோயிச நடிகர்கள்மேல் உள்ள அவநம்பிக்கை கடந்தகால நிகழ்வுகள் காரணமாக, விசயகாந்த்திடம் ஒட்டவிடாமல் மனது மறுக்கிறது. என்னதான் செய்வது? ஹும். முழுக்கமுழுக்க தேர்தல் அன்று ஒத்தையா ரெட்டையா பிடித்து பெரிய கூட்டணி ரெண்டில் ஒண்ணுக்குப் போடப்போறேன். எதுன்னு இப்பத் தெரியலை.

அந்த ஐஐடிக் காரங்க இன்னும் கொஞ்சம் கீழிறங்கி வரலாம்னுதான் தோணுது. ஆனா இதனால் எல்லாம் பெரிசா எதுவும் நடக்கும்னு நம்பிக்கை வரலை. நாம வலைப்பதிவில் எழுதுவதுபோல அவங்களுக்கும் அவங்களுக்கு ஓட்டு போடுறவங்களுக்கும் இதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அதுக்குமேல் எதையும் எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

ரோசாவசந்தின் கருத்துக்களோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறேன்.

5/02/2006 3:57 PM  
Blogger Muthu said...

//தேர்தல் அரசியல் என்று வந்துவிட்ட பின் அது இப்படித்தான் இருக்கும் என்று மீண்டும் மீண்டும் மாற்று உதாரணங்கள் இல்லாமல் நிருபிக்கப் பட்ட பின், இன்னமும் 'அரசியல் ஒரு சாக்கடை' என்று ஸ்டீரியோடைப்பாய் சொல்லிக் கொண்டு செய்யும், ஒரு அசட்டு தார்மீகமாகவே எனக்கு இந்த நடவடிக்கை தோற்றமளிக்கிறது.//


//.('சமஸ்கிருதப் பெயரை வைத்துகொண்டு பிழைக்க முடியுமா!' என்பதாக துக்ளக் இதை கிண்டலடிக்கிறது. கிண்டல் லோக் பரித்ரனை பற்றி அல்ல, தமிழகத்தை பற்றி.)//

//படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் விடிவுகாலம் வரும் என்பது போன்ற அபத்தமான, அதே நேரம் சம அளவில் கபடமான சிந்தனை வேறு இருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை//

//இன்னும் வேறு பல வழி வகைகளில் வருவாயை பெருக்குவதையே குறியாய் கொண்டிருக்கும், ரஜினியும் விஜயகாந்தும் ஊழலற்ற ஆட்சியை தருவார்கள் என்று வாதத்தை முன்வைத்து, அதற்கு சிலர் ஒரு வாய்ப்பு தரக் கேட்பது, இந்த தேர்தலில் நடக்கும் மற்ற கூத்துக்களில் இருந்து, கேலித்தன்மையில் எந்த விதத்திலும் குறையாத விளையாட்டு. //

கலக்கல்..ரோசா..

5/02/2006 5:04 PM  
Blogger arulselvan said...

பிரகாஷ் என்னை குறிபார்த்து திட்டியதால் (சும்மா விளையாட்டுக்கு- கோபப்படாதீங்க. விரிவாக எழுத நேரமில்லை.):
1. ஐஐடி மாணவர்கள் பொதுச் சேவைக்கு வருவது தவறென்று நான் நினைக்கவில்லை.
அவர்களுடைய பயிற்சி வேறு. அதைக் கொண்டு நாட்டுக்கு எவ்வளவோ செய்யலாம். செய்திருக்கிறார்கள்.
70 களில் பல மாணவர்கள் இப்படி ஆப்ட் அவுட் ஆன பல கதைகள் உள்ளன. அநில் அகர்வால் பலருக்கும் தெரிந்திருக்கலாம். இந்திய சுற்றுச்சூழல் இயக்கத்தை முறைப்படுத்தியதில் அவருடைய பங்கு மகத்தானது. எனது நண்பர்களில் கூட பிற சமூக துறைகளில் சென்றவர்கள் உண்டு. எவ்வளவோ நிகழ்சிகள், தோல்விகள், கதைகள். பின்னால் என்றேனும் சொல்கிறேன்.
2.அரசியல் என்பது கடினம் அல்ல. ஆனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதை பிரதிநிதிப்படுத்துவது அதற்காக உழைப்பது முக்கியம். இன்று இகழப்படும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் கோடிகளைக் கடந்து பார்த்தால் இக்குணம் இருப்பது தெரியும். கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இதற்காக அவர்கள் மேல் மரியாதையும் உண்டு. சும்மா ஐஐடி என்பது என்பது எந்த விதமான தகுதி என்பது எனக்குத் தெரியவில்லை. தோற்றால் திரும்பப் போய் ஒரு கார்ப்பரேடில் உழைக்கப்போகிறார்கள். வாட் ஆர் தே ஸ்டேக்கிங்?
3. எடுத்தவுடன் திராவிட /கழக ஆட்சியிலிருந்து விடுவிப்போம் என்கிறார்கள். ஏன் விடுவிக்க வேண்டும். தமிழகத்தை நாற்பது ஆண்டுகளில் ஆசியாவிலேயே வெளிநாட்டு முதலீட்டுக்கு முதல் இடமாக நினைக்கவைக்கும் அளவுக்கு மாற்றிக் காட்டியதாலா? ஏன் போய் பீகாரையோ சட்டிஸ்காரையோ முன்னேற்ற உழைக்கமாட்டார்கள்.
These guys just want to be where the action is. The current action in the subcontinent is in the four southern states which donot owe anything to this tribe. Go set right the rest of the country dude. இல்லாவிட்டால் வலையில் சோ குளோன்களாக பகடி செய்துகொண்டிருக்கலாம். அதைப் பற்றி ஆங்கில பத்திரிக்கைகளிலும் blogoshere ஆக்டிவிஸம் என்ற அளவுக்கு எழுதுவார்கள்.
4. Let them go the people without the IIT Tag, without the tail smooching media glare, win a seat or two, show their self attested concerns for the poor for a term and *then* say they want to get the state rid of dravidians.
சரி சரி சென்னையில் ஏற்கனவே 40 டிகிரி.
அருள்

5/02/2006 5:06 PM  
Blogger ROSAVASANTH said...

அருள் பொருத்தமான தேவையான கருத்துக்கள். ஒப்புதல் உண்டு. நன்றி.

5/02/2006 7:54 PM  
Blogger Jayaprakash Sampath said...

அருள், நன்றி.

சொல்ல வேண்டும் என்று நினைப்பதை, சரியாக, கோர்வையாகச் சொல்லத் தெரியவில்லை என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். எப்பவாச்சும் நேர்ல பார்த்தால், பேசறேன்.

5/03/2006 3:00 AM  
Blogger Doctor Bruno said...

This is regarding the Lok paritran

I pity those guys....

They are SOOOOOO IGNORANT of ground realities....

Point One
Paritrarararar... what is that.... Give me the meaning

Even BJP calls itself "Bharathiya janata katchi"
Ba.Ja.Ka in tamil nadu.....it is not Bee.Jay.Pee in tamil nadu

They do not even care to give their party a local name. (let them have this name for the other states).. how do they think that the people here will vote for them....

Point two

What are their aims....
What is their foreign policy... Are They planning to get back POK or support Cuba or fight with US against Iran etc
What is the economic policy... Are They going to fill the govt vacancies...are they going to privatise the transport. electricity depts etc

Point three

What is The party structure ....

If you want to serve people, contest in LOCAL BODY ELECTIONS FIRST

5/08/2006 9:59 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter