ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Friday, January 28, 2005காதல்!காதலை தீண்டாத, காதலின் கனவுச்சுவையை தராத, அதன் கற்பனை ஃபாண்டஸிக்கு வித்திடாத ஒரு தமிழ் சினிமா இருக்கமுடியாது. இத்தனை விதமாய் பேசப்பட்டும், காட்டப்பட்டும் இன்னும் அலுக்கவில்லை. இனியும் அலுக்கபோவதில்லை. 80 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாய் இயங்கி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் ஒரு உன்னத சாதனை என்று ஒன்று உண்டெனில், அது காதலை சமூகத்தில் லெஜிடிமைஸ் செய்ததுதான். இன்னும் குடும்ப தளத்தில் காதல் முழுவதும் அங்கீகரிக்கபடவில்லை எனினும், சமூகத்தின் ஊடகங்கள், நிறுவனங்கள் அத்தனையிலும் காதல் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஒரு நூற்றாண்டு காலத்தில் இது ஒரு பெரிய சமூக மாற்றமாகவே தெரிகிறது. இதற்கு மிக பெரிய உந்தும் சக்தியாய் தமிழ் சினிமா விளங்கி வருவதை மறுக்க முடியாது. விஷயம் ஒன்றும் இல்லை. இணையத்திலிருந்து இறக்கி 'காதல்' படம் பார்தேன். வலைப்பதிவிலே பலரும் பாரட்டிவிட்ட படம். நண்பர் கார்திக் மட்டும் சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதற்கு கடைசியில் வருகிறேன். எனக்கு என்னவோ இது சமீபத்திய தமிழ் திரைப்படங்களில் குறிப்பிட தகுந்ததாகவே தெரிகிறது. தமிழ் வெகுஜன சினிமாவின் வெளி அளிக்கும் சாத்தியங்களை மிக திறமையாய் பயன்படுத்தி, மிக குறைந்த அளவு சொதப்பி எடுக்கப்பட்ட படமாகவே தெரிகிறது. முக்கியமான விஷயம் இப்படி ஒரு படம் ஹிட்டாவது. இது ஒரு ட்ரெண்ட் அமைத்து மேலும் இது போன்ற படங்கள் வெளிவர வழி வகுக்கும். கதை ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாய் கொண்டதாகவும், ஒரு ரயில் பிரயாணத்தில் இந்த (தன்) கதையை சொன்ன மனித நேயம் மிக்கவரின் அனுமதியோடு படமாக்கப் பட்டதாகவும், படமுடிவில் எழுத்துக்கள் மேலே போகின்றன. இதையும் கதை புனைவின் ஒரு பகுதியாக கருதி வாசிக்க முடியும். அப்படி ஒரு வாசிப்பின் சாத்தியம் படம் பார்க்கும் அனைவருக்குமே இருக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நம் மக்கள் "அப்படின்னு சொல்லுதான். எவனுக்கு தெரியும்! படம் ஓடணும்னு நேக்கா இப்படி சொல்லுதானே என்னவோ!" என்று தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பேசக்கூடும். உண்மையிலேயே உண்மை கதையின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில், அச்சாக அதை அப்படியே எடுக்கவில்லை என்பது தெளிவு. அதற்கு பாராட்டவேண்டும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. அச்சாக எடுத்திருந்தால் படம் இத்தனை பேரால் பார்க்கபட்டிருக்காது. படத்தின் சிறப்பாக தெரிவது அதன் கச்சிதமான திரைக்கதை, மற்றும் யதார்த்தபடுத்துதல். சற்றும் தொய்வில்லாமல், எந்த இடத்திலும் அலுப்பு தராமல், தொடர்ந்து ஒரு ஆர்வத்தை தக்க வைத்துகொண்டே செல்லும் திரைக்கதை. எந்த கலைப்படைப்பினாலும் யதார்த்தத்தை அப்படியே படம் பிடிக்க இயலாது என்பது இன்று ஒப்புகொள்ளப்படும் உண்மை. முடிந்தவரை துல்லியமும், நம்பபகத்தன்மையை ஏற்படுத்துவதையுமே யாதார்த்தபடுத்துதல் என்கிறேன். அது சிறப்பாகவே செய்யபட்டிருப்பதாக தெரிகிறது. யதார்த்தமாய் எடுக்கிறேன் பேர்வழி என்று மாடு சாணி போடுவதையும், வைக்கோல் தின்பதையும், மனிதன் சாம்பார் சாதம் சாப்பிடுவதையும் நிமிடக்கணக்கில் காட்டும் இந்திய 'கலைப்படம்' போல் இல்லாமல், ஒரு வெகுஜன திரைப்படத்தின் சுவாரசியத்தையும். மேலோட்டத்தையும் தக்கவைத்தபடியே இதை செய்திருப்பதே தனித்தன்மை. படத்தின் தொடக்கம் தமிழக எண்ணெய் பலகாரக்கடை, சர்வோதயா இலக்கிய பண்ணை, கோவில், சர்ச், மசூதி என்று மதுரைக்கு எளிதில் அழைத்து செல்ல படுகிறோம். படம் முழுக்க அப்படி ஒரு மிகை காட்டாத, சொதப்பாத ஒரு நடிப்பை அனைவரும் தந்திருக்கின்றனர். காதநாயகி நிஜமாகவே காதலிக்கிறார். உணர்ச்சி வசப்படுகிறார். அலைமோதுகிறார். காதலை பற்றியே எடுக்கப்பட்ட முழுநீள திரைப்படங்களில், 80களின் கதாநாயகிகள் காதலிக்கும் நடிப்பை ஒப்பிடும்போது, எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டதாக தோன்றுகிறது. (அவர் அழகாய் இருப்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.) இனிவரும் வருடங்களில் இவர் எப்படி எக்ஸ்ப்ளாயிட் பண்ண படுவார் என்று நினைக்க மட்டும் கொஞ்சம் கவலையாய் இருக்கிறது. காதாநாயகன் இதைவிட இயல்பாய் நடித்திருக்கவே முடியாது. படத்தில் வரும் ஏனைய அனைவருமே அந்த பாத்திரத்தை மிகையின்றி உணர்விக்கின்றனர். மிக எளிதாக இவர்களை நடைமுறை வாழ்வில் சந்திக்கலாம் -"உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?" என்று கேட்கும் சகமாணவியை ஒரு பஸ் நிலயத்தில் சந்திக்கமுடியும். கதாநாயகனின் அம்மாவின் முருகபக்தை வேடம் தமிழ் சினிமாவில் புதிது. கதாநாயகனின் அம்மாவென்று ஒரு 'ஷ்பெஷல்'தன்மை எதுவும் தராமல் ஒரு ஸபால்டர்ன் அம்மாவை காண்பித்திருக்கிறார்கள். தமிழில் எத்தனையோ படங்களில் கலக்கியது போல் இந்த படத்திலும் ஒரு சின்னபையன் வந்து கலக்குக்கிறார். புரியவே இல்லை. காஜா ஷெரீஃப், தவக்களை தொடங்கி இந்த உதாரணக்கள் எல்லாம் என்னவானார்கள்? இவரும் என்னவாவார் என்று தெரியவில்லை. அப்பத்தா போன்ற அப்படியே உயிர்கொண்ட பாத்திரங்களை பாரதிராஜா படங்களில்தான் பார்க்கமுடியும். ஆனால் அவர் படத்தில் கதாநாயகி/நாயகன் அசடு வழிவார்கள். சமீப கால திரைப்படங்களில் ஒரு டெரெண்டாக அமைந்துள்ள (திலி தமிழ்போல்) மதுரை தமிழ் அப்படியே எல்லோராலும் (க.நாயக/நாயகி முதல் சீன் உட்பட) பேசப்பட்டாலும், திடிரெனெ கதாநாயகனின் தோழன் ஒரு கட்டத்தில் மட்டும் 'ஏலே, வாலே'யை மதுரை தமிழுடன் கலந்தடிக்கிறார். ஒருவேளை அவர் ராமநாதபுரம் பக்கத்திலிருந்து வந்ததாக உணர்துகிறார்களோ? ஒரு சடங்கு நிகழ்ச்சி அத்தனை யதார்த்தங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது போன்ற வைபவங்களில் தவறாமல் நடைபெறும் சண்டையும் காண்பிக்கபடுகிறது. கதாநாயகியின் ஜாதியை குறிப்பால் உணர்த்திவிடுகிறார்கள். மற்றபடி கதை பெரிய விஷயமில்லை. இந்த சம்பவ கோர்வையை போட்டு, ஏற்கனவே சொல்லப்பட்ட சாதாரண கதையை, மனதை பாதிக்கும் விதமாய் எடுத்ததே படத்தின் சிறப்பு. படத்தை பார்த்த எவரும்-பொதுவாய் உணர்சிவசப்படும் தமிழ் சினிமா பார்க்கும் வெகுமனம்- ரொம்பவே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் என்று தோன்றுகிறது. படத்தின் பல்வேறு சிறப்பை ஏற்கனவே பலர் எழுதியிருப்பதால் இத்தோடு ஜகா வாங்கிகொள்கிறேன். நான் பார்த்தது ஒரு இணணய காப்பி. இடையில் கொஞ்ச நேரம், இருட்டாகி ஒலிச்சித்திரமாய் கேட்க வேண்டியிருந்தது. மொத்தத்தில் தமிழ் சினிமா உலகில் உற்சாகத்தை அளிக்கும் படமாகவே என்னால் இதை பார்க்கமுடிகிறது. இனி கார்திக் முன்வைத்த குற்றசாட்டுகளுக்கு வருகிறேன். கதாநாயகனுக்கு புத்தியில்லாததாக சித்தரிக்கபட்டிருப்பதாக கார்திக்கை போல என்னால் வாசிக்க முடியவில்லை. ஆனால் கார்திக்கின் வாசிப்பை மறுக்கவும் வாதங்களில்லை. கதாநாயகன் வேறு வழியின்றியே நாதியற்ற தன் சென்னை தோழனை நாடி போகிறானே ஒழிய, புத்திகுறைவினால் அல்ல என்று தோன்றுகிறது. அதே போல கிரிமினல் மூளையுடய சித்தப்பாவை நம்புவது பொதுவாய் (காதலிக்கும் ஒருவனுக்கு தேவையான) வெகுளித்தனமும், அப்பாவித்தனமுமே அன்றி, முட்டாள்தனமாய் எனக்கு தெரியவில்லை. இப்படி பார்ப்பது சரியா என்பதை விட படம் பார்த்து துய்க்க அது உதவும் என்று தோன்றுகிறது. துய்பது முக்கியமானது என்று நான் நினனக்கிறேன். அது தவிர கார்திக் நோண்டி பார்த்து சொல்லும் பல குறைகள், தமிழ் வெகுஜன சினிமாவை பற்றி பேசும்போது பெரிதுபடுத்த தேவையில்லாத விஷயங்களாக எனக்கு தோன்றுகிறது. அதனால் இரண்டு கருத்துக்களை அவர் சொல்வதில் முக்கியமாய் கருதி அதை மட்டும் எதிர்கொள்கிறேன். "இப்படம் காதல் என்பது பண்க்காரனுக்கும் ஏழைக்கும் வரவே கூடாது என்பது போல் தான் எடுக்கப்பட்டுள்ளது. அது நம் சமூகத்தில் பிச்சிகிட்டு ஓடி வெற்றி பெறுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை." முதலில் எந்த ஒரு கலைப்படைப்பும் ஒரு குறிப்பிட்ட நோக்கதுடன் எடுத்தாலும், அப்படி அது திகழ்வதாய் தெரிந்தாலும், அது நிறைவேறாது என்பது முக்கியமானது. நண்பர் ஒருவர் 50களில் வந்த ஒரு திரை விமர்சனத்தை பல வருடங்கள் முன்னால் காட்டினார். படம் பெயர் எதுவும் நினைவிலில்லை. அது இங்கே தேவையும் இல்லை. அந்த விமர்சனம் "மோசமான காட்சிகள் கொண்ட படம் என்றாலும், நல்ல கருத்துள்ள முடிவு" என்பதாக ஒரு தொனியுடன் நிறைவு பெறும். அதாவது படம் சற்று தூக்கலாக ஸெக்ஸ் காட்சிகள் கொண்டது, ஆனால் படமுடிவில் கதாநாயகன் தனது 'லீலை'களுக்கு பாடம் கற்றுகொண்டு திருந்துவதாய் கதை இருக்கலாம். இப்போ விஷயம் என்னவெனில் படம் பார்க்கும் யாரும் இந்த நீதிபோதனைத்தனமான முடிவிற்காக பார்க்கபோவதில்லை. அதை கண்டுகொள்ளவே போவதில்லை. படம் பார்த்த கூட்டம் அத்தனையும் பாலியல் காட்சிகளுக்காக மட்டுமே படம் பார்த்திருக்கும். ஆக படத்தின் நோக்கம் என்று ஒன்றை சொல்லகூடும் என்றாலும், அது யாராலும் கண்டுகொள்ள போவதில்லை. இதுவரை எடுக்கப்பட்ட காதல் படங்கள் பல காதல் தோல்வியை அடிப்படையாய் கொண்டாலும், அது காதலை போற்றுவதாகவும் காதல் குறித்த கற்பிதத்தை இன்னும் தீவிரமாக்கவுமே பயன்பட்டிருப்பதாய் தோன்றுகிறது. இது போன்ற படங்கள் மேலும் வர காதலிப்பவர்கள் இன்னும் அதிகமாக கூடுமே ஒழிய, இது அவர்களை நம்பிகை இழக்க வைக்காது என்றே நினைக்கிறேன். "மேலும் சாதி விட்டு சாதி கல்யாணம் பற்றி கதை இருந்தும் கூட, அதை ஆதரிப்பது பற்றி ஒரு டயலாக் கூட இல்லாதது பாலாஜி சக்திவேலின் சமூகச் சிந்தனையின் அளவை தெரிந்து கொள்ள உதவுகிறது." ஓரளவு நியாயமான விமர்சனம் என்றாலும், நம் வெகுஜன சினிமாவின் முக்கிய நோக்கம் படம் பிரச்சனையில்லாமல் ஒடுவதும், அதை ஹிட்டாக்குவதும் மட்டுமே. இதற்கு நடுவிலேயே மற்ற விஷயங்கள் பேசப்படும். அவைகள் எந்த வித தீவிரத்தன்மை அற்றதாய் இருப்பினும், இத்தகைய பிரம்மாண்டமான வெளியில் பிரச்சனை தொடப்படுவது முக்கியமானது. இந்த படத்தில் ஜாதி குறித்த தகவலை முழுவதும் மறைத்து எடுத்திருக்க முடியும். ஆனால் அது சாமர்தியமாய் பேசப்படுகிறது. மெல்லியதாய் அந்த பிரச்சனையும் தொடப்படுகிறது என்பதே நல்ல விஷயம்தான். குறிப்பாய் ஒரு இடைநிலை ஆதிக்க ஜாதியின் (என்ன வென்று சொல்லவும் வேண்டுமோ) வெறி கோடிட்டு காட்டபடுகிறது. பொதுவாய் நிலப்பிரபுத்துவ ஜாதி அடையாளங்கள் மறைக்கப்பட்டு கிராம சினிமாக்கள் கூட எடுக்கப்படும் (அதில் தலித்தாக வாசிக்க கூடிய பாத்திரங்கள் கேவலப்படுத்த படும்) சூழலில், பாரதி கண்ணம்மா போன்ற (உண்மையில் தேவர் ஜாதிக்கு சார்பாக எடுக்கப்பட்ட ஒரு) திரைப்படத்தையே ஒடவிடாமல் செய்த பிறகும் இந்த அளவாவது பிரச்சனை தொடப்படுவது நல்லது என்றே தோன்றுகிறது. 'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. இந்த படத்தில் (தெளிவாக அடையாளங்கள் சொல்லபடவில்லை எனினும்) ஒரிரு நாள் சேர்ந்து வாழ்கிறார்கள். பார்போம்! (அ.ராமசாமி படம் பற்றி தீம்தரிகிடவில் எழுதியதாக ரஜினி ராம்கி குறிப்பிட்டிருந்தார். எனக்கு தீம்தரிகிட படிக்க கிடைப்பதில்லை. யாரவது, அந்த விமர்சனத்தை அல்லது அது குறித்த கருத்தை தரமுடியுமா?) |
17 Comments:
i may not access net till monday evening(here).
//"மேலும் சாதி விட்டு சாதி கல்யாணம் பற்றி கதை இருந்தும் கூட, அதை ஆதரிப்பது பற்றி ஒரு டயலாக் கூட இல்லாதது பாலாஜி சக்திவேலின் சமூகச் சிந்தனையின் அளவை தெரிந்து கொள்ள உதவுகிறது."//
கார்த்திக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்ளை வெவ்வேறு கோணங்களில் அணுக முடியும். ஆனாலும், அவரின் இந்தக்குற்றச்சாட்டுக்க்கு என்னால் பதில் சொல்ல இயலும். கல்யாணம் முடிந்து அவர்களிருவரையும் 'சித்தப்பா' காரில் ஊருக்கு அழைத்து செல்லும்போது, அவர் கேட்கும் ஒரு கேள்விக்கு பதிலாக அந்த கதைநாயகன் சொல்லும் வசனம் "நான் மனுஷ ஜாதி". ஆக, காதலிக்கும்போதும் சரி, கல்யாணம் முடிந்தப் போதும் சரி, கதை நாயகனும், கதை நாயகியும் அந்த ஜாதீய மீறல் பற்றிய எந்த சிந்தனையும் அற்றவர்களாய், உண்மையாய் காதலித்து வாழ்க்கையை வாழ விருப்பமுள்ளவர்களாகவே காட்சிப் படுத்தப் பட்டுள்ளனர். ஜாதீய ரீதியிலாக வாழ்க்கையைப் பார்க்க பெரியவர்களால் மட்டுமே முடியும். அதுவும் மிக சாதுரியமாக, சாதியின் பெயர் சொல்லாமல், ஆனால், குறிப்பிட்ட சாதிய மனப்பான்மையை விளக்கியது இயக்குநரின் சாமர்த்தியம்.
மேலும் ஏன் நாம் இன்னும் திரைப்படங்கள் தேவாலயத்தில் இருக்கும் பாதிரியார்கள்ப் போல் 'கருத்து' சொல்லவேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். அந்த தவறை திரு. கமல் பலமுறை செய்து அதன் பலன்களை வணிக ரீதியாய் அனுபவித்திருக்கிறார். இதில் முன்வைப்பது ஒரு இழந்துப்போன காதல் மட்டுமல்ல, இன்னமும் சாதிய அடிப்படையில் எந்த நூற்றாண்டில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே தரமாக எடுக்கப்படும் பட்சத்தில், அதனையும் நாம் நம் அறிவுஜிவித்தனத்தை முன்னிறுத்தி, குற்றம் சொல்வது சற்றே நெருடக்கூடிய விசயம்.
வசந்த், அந்தப் பெண்ணை தமிழ் சினிமா கண்டிப்பாக எக்ஸ்பாட் செய்துவிடும். இதேப் போல எவ்வளவோ நிகழ்வுகள், முன் உதாரணங்கள் உண்டு. என் கவலையெல்லாம், அழுக்கு சட்டையைக் கூட ஆலன் சோலியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் தமிழ் சினிமாவில் அச்சு அசலாக ஒரு மெக்கானிக்கை (இதை குறிப்பிடும் நேரத்தில், பால்காரராய் வேடமிட்டாலும், ரீ-பாக் ஷீவை கைவிடாத உச்சநட்சத்திரம் தேவையில்லாமல் ஞாபகத்திற்கு வருகிறார்) கண் முன்னால் நிறுத்திய கதை நாயகனை இனி, ரசிகர்களுக்காக ஒரு டப்பாங்குத்தும், ஒரு கானா பாடலுக்கும், பஞ்ச் டையாலாக்குக்கும் (அது சரி, இதைப் போல் கிளிஷே அனைத்தையும் உடைத்த ரஜினியின் மருமகன் என்ன செய்கிறார் இப்போது?!!) உபயோகிக்காமல் இருக்க கடவது.
கூடுதல் விவரங்கள், புதிய பார்வையில், இந்தப் படத்தின் இயுக்குநரின் பேட்டியை படியுங்கள். படித்ததில் பிடித்தது
"சிங்கம்"லே எனக்கூறி அது எந்த சாதிய ஆட்கள் என்று குறிப்பால் உணர்த்தியிருப்பேன்."
உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன் ;-)
Dear ரோசா,
கொஞ்ச நாட்களாகவே ஒன்று கேட்க வேண்டும் என எண்ணியிருந்தேன்! தவறாக நினைக்க வேண்டாம்! தாங்கள் உங்களது வலைப்பதிவுக்கு இட்ட தலைப்புக்கு (ஒரு குட்டிபூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும், சில நல்லிணக்க முயற்சிகளும்..!) ஏற்றபடி, பலவித நடப்புகள் குறித்து நிஜமான "கலக்கம்" கொள்கிறீர்கள்!
"கலகம்" நன்றாகவே செய்கிறீர்கள் :-) தங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் இடப்படும் பின்னூட்டங்களிலிருந்தே இதை அறிய முடிகிறது!!!!!
நிறைந்த வாசிப்பனுபவத்தின் பயனாய் எழும் உங்கள் "எண்ணங்களை" படிக்கத்தக்க வகையில் பதிக்கிறீர்கள் எனபதிலும் ஐயமில்லை!
ஆனால், "நல்லிணக்க முயற்சிகள்" இன்னும் செய்ய முயற்சிக்கலாமே :-( பல சமயங்களில், உங்கள் பதிவுகள்/பிற பதிவுகளில் நீங்கள் இடும் மறுமொழிகள் காரணமாக பெரும்பாலும் சண்டை மண்டை உடைகிறது அல்லவா?????
என்றென்றும் அன்புடன்
பாலா
காதலைப்பற்றி தமிழ் சினிமா வைக்கும் எதிர்மறைப் பார்வை (அதாவது அது கடுமையாகபோரடிப் பெறவேண்டியதாகவும், அதற்கு எதிராக செயல்படுவது பெற்றோர் கடமை, குடும்பப்பெருமை என்பதாக)அதன் (திருமணத்துக்கு)பின்னால் அத்தகைய ஜீவமரணப் போரட்டத்துக்கு எந்த பெரிய மரியாதையோ, அர்த்தமோ இல்லாமல் குடும்ப வாழ்க்கை மிக போலித்தனமாக இருப்பதைப் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பார்க்கும் படித்த இளைஞர்கள் காதலிக்க, அதில் நேர்மையாக இருக்க (திருமணம் நோக்கமாகக் கொள்ளப்படுகிறது அல்லது இல்லை. அது வேறு விசயம்)இப்போதெல்லாம் தயாராக இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? காதல் ஒரு பொழுதுபோக்காக மட்டும் பார்க்கப்படுகிறது. இப்போது காதலில் விழுகிறவர்கள் எபோதும் போல பெரும்பாலும் அடிமட்ட இளைஞர்களே. இவர்களின் அந்நாளைய காதலிலாவது சினிமா கற்பனைகள்/எதிர்பார்ப்புகள் கலக்காமல் இருந்தது இப்போது அதுவும் இல்லை. காதல் இப்படி தமிழ்ப்படத்தால் குளோரிபை பண்ணப்படுவதுபோல நுட்பமாக குறுக்கப்பட்டு, அது ஒரு பிழைக்கத்தெரியாதவன் செயல்போல இளைஞர்களை அதில் இருந்து விலக்குகிறதோ என்றே நான் நினைக்கிறேன். இப்படியே அரசியலையும். அதை மோசம், சாக்கடை என்கிற சினிமா ( மற்றும் துக்ளக் மாதிரி ஜனநாயக விரோதப் பத்திரிகைகள்) அதை வெகுமக்களிடமிருந்து அன்னியப்படுத்தி, மக்களை வெறும் பார்வையாளர்களாக ஆக்குகிறதாகவே உணர்கிறேன்.
எனினும் நான் படம் பார்க்கவில்லை. இது காதல்/அரசியல் போன்ற சமூக மாற்றக்காரணிகளை இந்த ஊடகங்களைக் கைப்பற்றியிருக்கும் சக்திகள் வெகு நுட்பமான புறக்கணிக்கும் வழியாக நான் பார்க்கிறேன்.
தங்கமணி, நாரயாணன் கருத்துக்கு நன்றி. என் பதில் கருத்துக்கு முடிந்தால் விரிவாய் செவ்வாய் வருகிறேன்.
பாலா, நல்லிணக்க முயற்சி செய்வதுதான் அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், மற்றவை அதற்கான பாதையில் வேறுவழியின்றி நடைபெறுவதாகவும் நினைத்துகொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதை முயற்சி செய்து பார்கிறேன். கருத்துக்கு நன்றி!
இனி அந்த நடிகையோ நடிகனோ என்ன ஆவார்கள் என்று கவலைப்படவே வேண்டாம். அவர்களும் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து விடுவார்கள். அல்லது சந்தர்ப்பங்களே கிடைக்காமல் அலைந்து திரிந்து ஓய்ந்து விடுவார்கள், குறிப்பாக கதாநாயகி. குறைந்த பட்சம் சினிமா நீரோட்டத்தில் சேர்ந்து தான் ஆகவேண்டும், இயக்குநர் உட்பட.
இப்படி முதலில் கவர்ந்திழுப்பவர்கள் பின்னர் சோடை போவது சினிமாவில் நாம் பார்ப்பதுதான். இயக்குநர்களில் பாரதிராஜாவும் தங்கர்பச்சானும் உதாரணங்கள். முதல் படங்களை ஒரு தவமாகச் செய்வதும் பின்னர் அவற்றைத் தொழிலாகச் செய்வதும் தான் காரணமோ தெரியவில்லை.
கமல் சில நல்ல படங்களில் அடிபட்டார் என்பது உண்மை. அதை புத்திமதி சொன்னதாக எடுக்கலாமா தெரியவில்லை. அன்பே சிவம் ஹேராம் என்பவை புத்திமதி சொல்லும் படங்களா? இருந்தாலும் கமல் பேசப்படுவதும் பேசப்படப்போவதும் அந்தத் தோல்விப்படங்களுக்காகத் தானேயன்றி வசூல்ப் படங்களுக்காக அன்று என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
அவ்வப்போது ரசிக்கும்படியாக வரும் தமிழ்ப்படங்களில் காதலும் ஒன்று. அண்மையில் வெளிவந்து எனக்குப்பிடித்த அழகிய தீயே மற்றும் குடைக்குள் மழை என்பவற்றோடு இதுவும் சேர்ந்து கொள்கிறது. கதாநாயகியை ஒரு மனுசியாக, ஒரு பாத்திரமாக மதித்து கதை சொல்லும் பாங்கே போதும் இது பத்தோடு பதினொன்று அன்று என்று கூற.
//இயக்குநர்களில் பாரதிராஜாவும் தங்கர்பச்சானும் உதாரணங்கள். முதல் படங்களை ஒரு தவமாகச் செய்வதும் பின்னர் அவற்றைத் தொழிலாகச் செய்வதும் தான் காரணமோ தெரியவில்லை.//
வசந்தன்: பதினாறு வயதினிலே திரைக்கதையை பாரதிராஜா முதலில் கொடுத்தது NFDCயிடம் - "மயில்" என்ற பெயரில். கிணற்றில் போட்ட கல்லாக அது போகவே நாம் பார்த்த வடிவத்தில் எடுத்ததாகச் சொல்லி, "அப்போது NFDCயில் அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தால் என் பார்வையே வேறுமாதிரி இருந்திருக்கும்" என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
காதல் படத்தில், அதிகம் பேருக்கு பிடிக்காத, எனக்குப் பிடித்த பகுதி, அந்த மேன்ஷன் பகுதியும், வடிவேலின் சாயலிலுள்ள நடிகரின்(ஜோர்ஜ்? வசூல்ராஜா MBBSல் பார்த்தாய் நினைவு) நடிப்பும். நாயகனையும், நாயகியைம் முக்கியப்படுத்தித்தான் அனைத்துக் காட்சிகளும் வரவேண்டும் ஏன் நாமெல்லோரும் எதிர்ப்பார்க்கிறோம்?. திருவல்லிக்கேணி (எழுதியது சரியா?) bachelorsற்கான அடைக்கலப்பகுதி என்று அவ்வப்போது வாசித்திருந்தாலும், காட்சியாகப் பார்ப்பது இன்னொரு பரிமாணமாய் இருந்தது. எடுத்த இடமும் அது சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்தவர்களும் (இயக்குநர் முந்தியிருந்த இடமெனப்பேட்டியில் சொல்லிருக்கிறார்) உண்மையாயிருப்பதால் இன்னும் யதார்த்தமாயிருந்தது. அதுவும் ஒரு பெண் இந்த இடத்திற்கு வந்திருந்தால் எப்படியிருக்கும் என்று சித்தரித்திருந்தது தமிழ் சினிமாவிற்கு புதிதென்றுதான் நினைக்கிறேன்.
........
//அண்மையில் வெளிவந்து எனக்குப்பிடித்த அழகிய தீயே மற்றும் குடைக்குள் மழை என்பவற்றோடு இதுவும் சேர்ந்து கொள்கிறது. //
என்று வசந்தன் எழுதத்தான், அண்மையில் பார்த்த, Johny Depp நடித்த, The Secret Window ஞாபகம் வந்தது. கிட்டத்தட்ட குடைக்குள் மழையின் கதை அதோடு ஒத்திருந்தது. ஆனால் அதில் Depp ஒரு எழுத்தாளராய் நடித்திருந்தார்.
டிசே தமிழன், நீங்கள் படத்தில்ப் பார்க்கும் மேன்ஷன் ஒரு நிஜமான மேன்ஷன். இருக்குமிடம்: மேற்கு மாம்பலம். இந்தப் படத்தின் இயக்குநர் இந்த மேன்ஷனில் தங்கி வாழ்ந்திருந்ததால், அதனை அப்படியே படமெடுத்திருக்கிறார். அந்த மேன்ஷனில் காவல்காரராய் வரும் தாடிக்கார பெரியவர் உண்மையிலேயே அங்கு காவலிருப்பவர் என்று கேள்வி.
பதிக்க மறந்தது.... மேன்ஷன்கள் பற்றி தமிழில் சமீபத்தில் பவுத்த அய்யனாரால் எழுதி ஒரு மேன்ஷனில் வெளியிடப்பட்ட "மேன்ஷன் கவிதைகள்" படித்திருக்கிறார்களா. புத்தகக் கண்காட்சியில் சந்தித்து, அய்யனாருடன் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தக்த்தின் முன்னுரையை, பிரபஞ்சன் எழுதியுள்ளார். சிலவற்றை என் பதிவில் பதிந்திருக்கிறேன்.
Thanks friends! will be back tommorow.
anbuLLa vasanth
விபரங்களுக்கு நன்றி நரேன்.
அய்யப்பபவுத்தரின் 'மேன்ஷன் கவிதைகள்' வாசிக்க கிடைக்கவில்லை.
டிசெ தமிழன், சில நல்ல கவிதைகளை நேரம் கிடைக்கும்போது என் பதிவில் பதிகிறேன்.
In my name last post, the name should be PAVUDHA IYANAAR. Sorry about that mistake.I was so tired last night, guys only tired alright, not anyfynk else :))
Yah, Narein. I'd like to see the Manson Poems soon in your blog.
ரோசா,
இப்பொழுதுதான் வரமுடிந்தது. விமர்சனம் செய்துவிட்டு ஏன் அவ்வாறு எழுதினேன் என்று பின்னால் சென்று யோசிக்கவேண்டியதாய் ஆகிவிட்டது.
முதலில் காதல் படத்தை, புனைவாய்தான் நினைத்து விமரிசித்து உள்ளேன். ஒரே ஒரு நண்பன், அந்த ஒரு நண்பனுக்கும், ஒரு நண்பனும் இல்லை , இவையெல்லாம், நடைமுறையை விட்டு சற்று தள்ளி இருப்பதாக மட்டுமே பார்க்கிறேன். சரியான நடுரோட்டில் பெண்கள் பிரச்சினை, இதெல்லாம் புனைவில் பிரச்சினையை அடுக்கியுள்ளதாகப் பட்டது.
ஹீரோவை முட்டளாக காட்டியுள்ளதாய் சொல்ல வரவில்லை; கதைப்படி ஹீரோ எடுக்கும் முடிவு முட்டாள்த்தனமாய் உள்ளது என்று சொல்லவந்தேன்.
போதுமான அளவுக்கு நம்ப வைக்கும் காரணங்களை சொல்லி உள்ளார்கள்தான்.
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.
மற்ற படி படம் தொட்டுள்ள இடங்கள்/தளங்கள் நன்றாகவே உள்ளது. சுவாரஸ்யம் மாறமல் செல்கிறது என்பதையும் ஏற்கிறேன்.
நீங்கள் சொன்னதையும்,நரேன் சொன்னதையும் சரியான பதிலாக/மறுப்பாகவே பார்க்கிறேன். :)
கார்திக்கு லேட்டு! ஆனாலும் பின்னூட்டத்திற்கு நன்றி!
Post a Comment
<< Home