ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, January 14, 2005

கண்ணன் மனநிலையை.....!

சென்ற பதிவில் எழுத நினைத்தது இது. விஷ்வதுளசி படத்தில், இளையராஜாவின் பிண்ணணி இசையில் ஸ்பார்குகளை எதிர்பார்த்து ஏமாந்ததை குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பிண்ணணியில் வந்த வேறு ஒரு இசை, ஏதோ 'அருள் வந்தது' போல், என் மேல் தாக்குதலிட்டது. "கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்..." என்று 'தெய்வத்தின் தெய்வம்' படத்தில் ஜானகி பாடிய பாடல். நந்திதா மன சஞ்சலத்துடன் இருக்கும் பல கட்டங்களில் இரண்டில், பிண்ணணியில் எதிர்பாராமல் இசைத்த பாடலின் இரணடு சரணங்கள் என்னை நிலைகுலைத்துவிட்டது.

இந்த பாடலை சிலோன் தமிழ்சேவையில் எத்தனையோ முறை சிறுவயதில் கேட்டிருக்கிறேன். இந்த அளவிற்கு ஒரு பாதிப்பை உருவாக்கியதில்லை. திறமையான இசை, திறமையாய் பாடப்பட்ட பாடல், என்பதை மீறி அது குறித்து கருத்து பெரிதாய் இருந்ததில்லை. இப்போது ஐந்தாறு நாட்களாய் கணக்கின்றி முழுபாடலை கேட்டபோது கூட அப்படி ஒரு உணர்ச்சி வந்ததில்லை. எனக்கென்னவோ அந்த *சரணங்களை மட்டும்*, நந்திதாவின் மன சஞ்சலத்திற்கு பிண்ணணியாய் கேட்டபோதே அந்த பாடல் அப்படி ஒரு உணர்வெழுச்சியை உண்டாக்குவதாய் தோன்றியது. இரண்டுமுறை வெவ்வேறு சந்தர்பங்களில் இரண்டு சரணங்கள் படத்தில் வருகிறது. (பல்லவி வருவதிலை.)

முதன் முறை "ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள் .." என்று, அதை தொடர்ந்து ஒரு ஷெனாய்(?) இசையும், எதிர்பாராத தருணத்தில் வந்த போது, உடலெங்கும் பரவிய உணர்வலையில், மயிர்கால்கள் சிலிர்த்தன. அது உள்ளே உருவாக்கிய உணர்வை எழுத முடியாது. இரண்டாவது முறையும், அதே போன்ற ஒரு காட்சியில், எதிர்பாராத வகையில் அடுத்த சரணம். "நேர முழுதிலும் அப்பாவி தன்னையே..." என்று, அதை தொடர்ந்து ஒரு புல்லாங்குழல் தொடர்ச்சி..... அய்யோ...உயிரே போய்விட்டது! பல வருடங்கள் கழித்து கேட்டதா, சின்ன வயது நனவிடை தோய்ந்ததா, வேறு பழைய நினைவுகள் ஆக்ரமித்ததா, நந்திதா மீதான காதலா, ஜானகியின் குரலுக்கும் இசைக்கும்தான் அத்தனை சக்தியா? அழுகையே வந்துவிட்டது! இந்த பாடாவதி படம் கூட கண்ணீர் வரவழைக்க கூடும் என்று நினைத்து பார்கவே இல்லை.

அதற்கு பின்னான படத்தை பார்க்கும் உணர்வில்லாமலே பார்த்தேன். அதற்கு அடுத்து இரண்டு நாட்கள் வெறி பிடித்தது போல் இணையத்தில் தேடினேன். கூகிள் வழியே சத்யா கீர்த்தி என்பவரின் (இவர்தான் எனக்கு 'யானை தந்தம்' அளித்தவர்) ஜானகி பாடல் தளத்தை அடைந்து, இந்த பாட்டை கண்டுபிடித்து சுட்டினால், எங்கேயோ போய் "The page you wanted is taking a long lunch." என்றது. மீண்டும் சுட்ட, "This page has moved to California to find itself. ", மீண்டும், "The dog ate your webpage. Yeah, that's it". தூள்.காமில் பலமுறை மனம் தளாராமல் முயன்றால் சில பாட்டுக்கு திடீரென உயிர்வந்து ஒலிக்ககூடும். அதனால் விடாமல் மீண்டும் "We sent this page to NASA for testing. ", மீண்டும், மீண்டும், மீண்டும்...

"I think we should not be meeting like this",

"A billion websites, and you had to pick this one. "

"OK, that's the last time we let you drive."

"If true happiness can only be achieved through a state of nothingness, you're going down the right path."

"Wait, don't leave! Let's make our own webpage! "

இத்தனையும் கேட்டுகொண்டு மீண்டும், மீண்டும் முயற்சித்து கஜினி முகமதின் தளாராமையை வெற்றிகொண்டும், செயலில் வெற்றியை பெறமுடியாமல், மீண்டும் தூள்.காமிற்கு போய் தேடி, அங்கே இருந்த பாடலும் வேலை செய்யாமல் அதே சோதனையை தர, ஆனாலும் விக்கிரமாதித்யன் மனம் தளரவில்லை. ஏதோ நம்பிக்கையில், தூள்.காமின் SOTDஇல், முதலில் மேலோட்டமாய் தேடி கிடைக்காமல், பின் கண்ணில் ஆலிவ் எண்ணெய் விட்டுகொண்டு ஒவ்வொன்றாக தேடி கண்டுபிடித்தேன். கடைசியில் வேதாளம் கையிலடங்கியது. இதோ பயித்தியம் பிடித்து நாளொன்றுக்கு இருபது தடவை கேட்கிறேன். ஆனால் இன்னும் நந்திதாவின் மனசஞ்சலத்தின் பிண்ணணியில் கேட்ட அந்த உணர்வை அடைய முடியவில்லை. இந்த ஒரே காரணத்திற்காக விஸ்வதுளசி படம் பார்த்ததை நினைத்து வருத்தபடவில்லை. பாடல் வரிகளை பார்த்துகொண்டு கீழே தரப்பட்டுள்ள சுட்டியில் பாடலை கேட்கலாம்.

பாடல் வரிகள்:
கண்ணன்....(குழலிசை தொடர்சி..)

கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;

எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்..ஆஆ...(ஜானகி ஹம்மிங்)
எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்
பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!

(கண்ணன்...)

ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள்...

(ஷெனாய் இசை. தொடர்ச்சி..)

ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள்
எனை அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேனென்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்..!

(கண்ணன்...)

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே...

(குழலிசை தொடர்ச்சி...)

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே
உள்ளம்நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்..!
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்....

தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
பின்பு
தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்..!

(கண்ணன்..)

சந்தேகமே வேண்டாம். பாட்டை எழுதியது பாரதி.
படம்: தெய்வத்தின் தெய்வம்.
பாடியது: எஸ் ஜானகி.
இசை : ஜி. ராமநாதன்.

இது ஆபேரியும், பேஹாகும் கலந்த ராகமாலிகையாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை.

நான் பதிவு செய்த அனுபவத்தை நம்பாதவர்களும், நம்ப விரும்புபவர்களும், பாடலை கேட்க. (எம்.எல்.வி.யின் பாட்டு ரொம்ப சுமார்தான்) ஒரு வேளை நெஞ்சை தொடவில்லையெனில், மீண்டும், மீண்டும் கேட்டு பார்க்கவும், வேறென்ன சொல்ல

பின் குறிப்பு: இசையமைப்பில் பல நுட்பங்களை கொண்ட பாடல், அது குறித்து பேச தெரிந்தவர்கள் பேசட்டும்.

Post a Comment

23 Comments:

Blogger ROSAVASANTH said...

I gave a direct link to the song. But it was accepting. So gave that SOTD page. Listen to the second song by S. Janaki.

1/14/2005 4:05 AM  
Blogger ROSAVASANTH said...

not accepting!

1/14/2005 4:14 AM  
Blogger SnackDragon said...

பாரதியின் பாடல்களை கேட்கும்போது, பாரதியின் ஆளுமை முதலில் மனதில் வந்து
சம்மணம் போட்டுக் குந்திகொள்ளும். அதன் விளைவாய் பாடல் மயிர் கூச வைக்கும்.
அது போல் சிறு வயதில் 2 3 பாடல்கள் கேட்டதுண்டு.
"வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்" -ல் இருக்கும் சுதந்திரத்தின் உயரம் எக்ஸ்ட்ரீம்.

நெஞ்சைத் தொட்டது என்று சொன்னால், "தீர்த்த கரைதனிலே" ஏதே ஒரு சோகத்தை கொண்டுவந்து
மீண்டும் மீண்டும் உட்காரவைத்ததுண்டு. இத்தனைக்கும் அந்த படம் கூட பார்த்ததில்லை.

ரோசா, ஓடி விட்ட அந்த் உணர்வை எல்லாம் திரும்ப பெற முடியாது , கண்ணா! அது அப்படித்தான்.


ஒரு வேளை பாரதியின் பாடல் என்பதால் உணர்ச்சி வசப்பட்டீர்களா?

1/14/2005 4:48 AM  
Blogger SnackDragon said...

தப்பா கேட்டுட்டேன்.
நந்திதா மேல காத்ல்தான் நிச்சயமாய் காரணம்.

1/14/2005 4:52 AM  
Blogger Balaji-Paari said...

Kaarthiku,
oruththarai summa vudamaateengalae, kudumbathila kuzhappam pannikittu... :)
Rosa,
Antha paattai en friend ennidam koduththu ketka sonnaar miga nanraaga amaintha paattu.
nadrigal

1/14/2005 6:44 AM  
Blogger இளங்கோ-டிசே said...

கார்த்திக்,உங்களுக்கு தோன்றியதைப் போல எனக்கும் ரோசாவசந்தின் பதிவை வாசித்தபோது தோன்றியது. Single இருந்தால்கூட பரவாயில்லை. துணை தூரத்திலை இருக்க, இப்படி நந்திதா தாஸிற்காக உருகுவது கொஞ்சம் too-much மாதிரி இல்லை? அய்யோ அடிக்க வராதிங்கோ ரோசாவசந்த்!!! சில மாதங்களிற்கு முன்னர் நந்திதா தாஸின் இந்திப்படம் ஒன்று பார்த்தேன். படத்தின் பெயர் நினைவினில்லை. நந்திதா தாஸ் படம் முழுக்க ஓடிக்கொண்டேயிருந்தார். அதில் Mr & Mrs Iyerல் நடித்த இராகுலும் (பெயர் சரியா?) நடித்திருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து கலக்கப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துப் படத்தைப் பார்த்தால், சுமாரான படமாய் இருந்ததால் கொஞ்சம் ஏமாற்றம்தான். ரோசாவசந்த் விஷ்வதுளசிக்கு சொன்னமாதிரி, ஆகக்குறைந்தது நந்திதாவையாவது பார்த்தேன் என்று இறுதியில் என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

1/14/2005 7:49 AM  
Blogger ஒரு பொடிச்சி said...

நல்ல பாடல் ரோசா வசந்த்.நன்றி.
நந்திதா தவிர படத்தில் ஒன்றுமுமில்லைத்தான்.
மிக மிக எதிர்பார்ப்புடன் பார்க்க இருந்த படம், பத்ரியின் அந்த விமர்சனத்திற்குப் பிறகுதான் பார்த்தது. நல்லவர்களையும்' கெட்டவர்களையும்' சித்தரித்த விதம் (நல்லவர்கள் வெள்ளையாக, கெட்டவர்கள் கறுத்தவர்களாக குரூரமாக) fairy tale களை ஒத்திருந்தது.

1/14/2005 9:54 AM  
Blogger ROSAVASANTH said...

பொடிச்சி, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

பாலாஜி, டீஜே, இதெற்கெல்லாம் குழப்பம் வராது. ரொம்ப உறுதியானது. நந்திதாவையும் சேர்த்து இன்னும் ஆயிரகணக்கில் நான் காதலிப்பது, துணைவிக்கு தெரியும். அதே போல் பார்திபன், அஜித் உள்ளிட்ட பல பேரை அவருக்கும் 'பிடிக்கும்' என்று தெரியும். காதலிக்கிறாரா என்று என்னிடம் சொன்னதில்லை. எப்படியிருந்தாலும் இதனால் ஒரு குழ்ப்பம் வர வாய்பில்லை. கருத்துகளுக்கு நன்றி! (balaji, I am coming to your comment in previous post.)

1/14/2005 3:38 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

இளையராசாவும் விஸ்வநாதனும் இணைந்ததால் இசைப்பக்கத்தில் (குறிப்பாக பாடல்களில்) மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியருந்தது இப்படம். ஆனால் படு ஏமாற்றம்தான். இருவரும முன்பு இணைந்த “நினைவெல்லாம் நித்யா”, “மெல்லத் திறந்தது கதவு” போன்றவற்றில் வந்த பாடல்கள் போல் எதிர்பார்த்தது வீண்போனது.
பாடல்களில் இருவருமே தெரியவில்லை. இங்கே பின்னணி இசைபற்றி நான் கதைக்கவில்லை. படம் பற்றியும் கதைக்கவில்லை. என் முதலாவது ஏமாற்றம் பாடல்கள் பற்றியதே. என் விருப்பம் என்னவெனில் அப்பெண்மணி இன்னும் படமெடுக்க வேண்டும் முற்றிலும் வேறான கதையில், களத்தில். மற்றும்படி, அவர் பிற்போக்குத் தனங்களை நியாயப்படுத்தவோ மேன்மைப்படுத்தவோ இப்படத்தை இயக்கவில்லை என நம்புகிறேன். கதைக்கான காலப்பகுதியில் களச்சூழலுக்கேற்ப படத்தை நகர்த்தியுள்ளார் என்று எண்ணிக்கொள்கிறேன்.

1/14/2005 6:34 PM  
Blogger இராதாகிருஷ்ணன் said...

நல்ல பாடல் ரோஸாவசந்த். நானும் இன்றைக்கு இப்பாடலையே முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன், நன்றி!

1/14/2005 6:39 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

கலகக் காரனுக்குள்ளும் பாட்டுக்கேட்டு உருகும் ஒரு குட்டி பூர்ஷ்வா இருப்பது வியப்பைத் தரவில்லை.பொதுவாகவே வலைப்பதிவுகளில் கலக்காரர்கள் என்று நான் அடையாளப்படுத்தி வைத்திருப்பவர்களின் பதிவுகளில் அவ்வப்போது வெளிப்படும் சின்னச் சின்ன ரசனைகள் வியப்புக்குப் பதில் மரியாதையைக் கூட்டுகின்றன.

நந்திதா உங்களுக்கு காதலி என்றால் எனக்கு நீங்கள் என்ன முறை சகலையா?

1/14/2005 7:27 PM  
Blogger ROSAVASANTH said...

வசந்தன் நினைவெல்லாம் நித்யாவில் இளயராஜா மட்டுமே, மெல்ல திறந்த்த கதவில்தான் ஒன்று சேர்ந்தார்கள்.

ஈழநாதன் இதிலெல்லான் என்ன உறவுமுறை?

ரா.கி. மற்றும் நண்பர்களுக்கு நன்றி

1/14/2005 7:45 PM  
Blogger Kannan said...

//"நேர முழுதிலும் அப்பாவி தன்னையே..." என்று, அதை தொடர்ந்து ஒரு புல்லாங்குழல் தொடர்ச்சி..... அய்யோ...உயிரே போய்விட்டது! //
...இதற் கப்புறம்

இது...
//இது ஆபேரியும், பேஹாகும் கலந்த ராகமாலிகையாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை......இசையமைப்பில் பல நுட்பங்களை கொண்ட பாடல், அது குறித்து பேச தெரிந்தவர்கள் பேசட்டும்.//

தேவையே இல்லை போங்கள்!

1/14/2005 10:53 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

1/15/2005 12:33 AM  
Blogger ROSAVASANTH said...

யளனகபக கண்ணன் மற்றும் வீச்சறுவாள், கருத்துக்களுக்கு நன்றி!

1/15/2005 12:37 AM  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

பாடலைக் கேட்க முடிய வில்லை. (Under the Firewall - office), வீட்டிற்கு சென்றதும் கேட்கிறேன்.

1/15/2005 5:37 AM  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

This comment has been removed by a blog administrator.

1/15/2005 5:38 AM  
Blogger ROSAVASANTH said...

(வந்தியதேவனின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம், ஒரு பதிவிற்காக இங்கே)

ஞாநி எழுதுவதை நிறுத்திவிட்டு, மர்மதேசம் எடுப்பது, லஷ்மியின் கட்டபஞ்சாயத்தில் இணைவது போன்று ஏதாவது செய்யலாம்.

எனக்கு ஞாநி என்ன எழுதுகிறார், யாரிடம் அடிவாங்குகிறார், கிழிபடுகிறார் என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் தொடர்ந்து இந்த ஆசாமி செய்துவரும் சொதப்பல்களால் ஞாநி எதற்கு ஆதரவாய் பேசி வருவதாய் காண்பித்து வருகிறாரோ, அதற்கெல்லாம் மிக பெரிய தீங்கை உண்டு செய்து வருகிறார். இப்போது திண்ணை ஞாநியை முன்வைத்து தான் சொல்ல வந்ததை சொல்லியிருக்கிறது. இதற்குமுன் ஜெயமோகன் ஞாநியை முன்வைத்து தன் கருத்தை 'நிருபித்து' கொண்டார். முதலில் ஞாநி மற்ற பெரியார்வாதிகள், மார்க்ஸிஸ்டுகள், மதசார்பற்றவர்களிடன் தன் சொதப்பல்களுக்கு மன்னிப்பு கேட்க்கவேண்டும். இது மிரட்டல் அல்ல, பரிந்துரை.

1/15/2005 11:58 AM  
Blogger ROSAVASANTH said...

http://vanthiyathevan.blogspot.com/2005/01/blog-post_14.html

1/15/2005 12:48 PM  
Blogger ROSAVASANTH said...

http://www.thinnai.com/pl0113058.html
அப்படி போடு அறுவாளை..ஸாரி.. பூணூலை!

1/15/2005 1:36 PM  
Blogger Narain Rajagopalan said...

இதை, இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன்.

1/17/2005 3:33 PM  
Blogger ஓகை said...

https://www.youtube.com/watch?v=L2k2JUK31mA

12/25/2013 9:15 PM  
Blogger ROSAVASANTH said...

சுட்டிக்கு நன்றி

12/25/2013 9:58 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter