ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Saturday, January 15, 2005

அறிந்த முகமொன்று சுனாமியில் மறைந்தது....

மு. சுந்தரமூர்த்தி

(நண்பர் சுந்தரமூர்த்தி இங்கே பகிர்ந்து கொள்ள சொல்லி கேட்டுகொண்டதை பதிவு செய்கிறேன். என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்-ரோஸாவசந்த்)

சுனாமியில் மறைந்த லட்சத்திற்கும் அதிகமானோரின் முகங்களில் ஒன்றுகூட நேரடியாக பார்த்திராத முகங்கள். இந்தியாவிலும், இலங்கையிலும் மறைந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் தேச, கலாச்சார காரணங்களால் நெருக்கமாக உணரப்பட்டவர்கள். அதில் விளைந்த சோகம் எல்லோரையும் போலவே என்னையும் ஆட்கொண்டது. பணியிடத்திலும், பிற இடங்களிலும் தெரிந்தவர்கள் "உங்களுக்கு வேண்டியவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டார்களா" என்று கேட்டுவந்த கேள்விக்கு இதுவரை இல்லை என்று சொல்லிவந்தேன். இனிமேல் அது சாத்தியமில்லை.

தொழில்முறையில் நான் அறிந்த என் துறையைச் சேர்ந்த மூத்த அறிவியலாளர் பேராசிரியர் முத்தையா சுந்தரலிங்கமும், அவர் மனைவி இந்திராணி சுந்தரலிங்கமும் விடுமுறைக்காக திருக்கோணமலை சென்றிருந்தபோது சுனாமியில் கொல்லப்பட்ட செய்தியை இன்றுதான் பார்த்தேன். கல்லூரிக் கல்வியை இலங்கையில் முடித்து 60களில் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று வாஷிங்டன், விஸ்கான்சின், ஒஹையோ மாநிலப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். X-கதிர் படிகவியல் துறை ஆராய்ச்சியாளரான சுந்தரலிங்கம் இத்துறையில் புகழ்பெற்று விளங்கியவர். சென்னைப் பல்கலைக்கழக இயற்பியல் துறை, பெங்களூர் இந்திய அறிவியல் கழக அறிவியலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். இந்தியாவில் நடக்கும் இத்துறையின் அறிவியல் மாநாடுகளுக்கு அடிக்கடி வந்துக்கொண்டிருந்தார். அவரிடம் பயிற்சி பெற்ற, அவருடைய ஆய்வகத்தில் பணியாற்றியவர்களில் பலர் இந்தியர்கள். எண்பதுகளில் பெங்களூரில் மாணவனாக இருந்தபோது தான் முதன்முதலாக சந்தித்தேன். அவருக்கும், எனக்கும் இருந்த பெயர் ஒற்றுமை கூட அமெரிக்கா வந்த புதிதில் துறையில் உள்ளவர்களோடு அறிமுகம் பெற எனக்கு கொஞ்சம் உதவியாக இருந்திருக்கிறது.

மேலதிக விவரங்களுக்கு:
http://www.hwi.buffalo.edu/ACA/

http://www.post-gazette.com/pg/05003/436264.stm

http://www.pittsburghlive.com/x/kqvradio/s_287800.html


Post a Comment

3 Comments:

Blogger -/பெயரிலி. said...

இங்கே என் நண்பர் ஒருவர் சென்றகிழமை இவர்(கள்) இறந்ததுபற்றிச் சொன்னார். ஒஹாயோ மாநிலத்திலே இருந்தவர்களென்றும் திருகோணமலை சென்றிருந்தார்களென்றும் சொன்னார். திருகோணமலை என்றபடியால், எனக்குத் தெரியுமா என்று கேட்டார். இவர் பற்றிய விபரங்களை இப்போதுதான் அறிகிறேன். நண்பருக்குச் சொல்ல உதவும்.

1/15/2005 3:55 PM  
Blogger ROSAVASANTH said...

I won't be accesing net till monday evening.

1/16/2005 1:51 AM  
Blogger ROSAVASANTH said...

மோண்ட்ரஸரின் தளத்தில் இட்ட பின்னூட்டம்.

http://dystocia.blogspot.com/2005/01/blog-post_17.html

நல்ல பதிவு என்று நினைக்கிறேன். நினைப்பதற்கு காரணம், இன்னும் ஜெயமோகனின் 'கதையை' முழுவதும் படிக்கவில்லை. படிக்க தொடங்கி, கதையின் நீளம் காரணமாக அப்போது நேரமில்லாத ஒரே காரணத்தால் நிறுத்த வேண்டி வந்தது.

தொடர்ந்து வாசகனின் வாசிப்பில் குறுக்கிடுதல், தன்னை பற்றி தானே தீர்ப்பு கூறல் போன்ற (இதன் பின்னுள்ள நோக்கமாய் தன் படைப்பை, தன்னை பற்றிய அருவருப்பூட்டும் பிம்ப உருவாக்கம்) ஒரு புணைவு எழுத்தாளன் அறவே நினைக்ககூடாத காரியத்தை ஜெயமோகன் தொடர்ந்து செய்து வருகிறார். இவ்வாறு செய்வதற்கு தரும் விளக்கம் இன்னும் அபத்தமாக இருக்கும். தன்னை பற்றி ஏன் பேசகூடாது, ஏன் அடக்கம் காண்பிக்க வேண்டும் என்பதாக ஜெயமோகன் இதற்கு தரும் விளக்கமாக (முன்னர் திண்ணையில் சொன்னதுபோல்) இருக்கும். அவருக்கு விளங்காதது, அது(தன்னை பற்றி பேசுவதும், வாசிப்பில் குறிக்கிடுவதும்) *சாத்தியமில்லாதது* என்பது. இது கூட புரியாத எழுத்தாளன், (ஏதோ ஒரு வகையில், எதிர்பதற்கு கூட) முக்கியமானவனாக நினைக்கவேண்டிய நாம் சூழலின் கட்டாயம் குறித்து என்ன சொல்ல?

இது குறித்து பேசுவது மிகவும் அலுப்பூட்டும், எதிர்வினைகள் வந்தால் அருவருப்பூட்டும் செயல். பிரச்சனை என்ன வெனில் ஜெயமோகனை எதிர்பவர்கள் நிகழ்த்தும் அல்பத்தங்களும், அவதூறுகளும். உதாரணமாய் இப்போது தன்னை ஸ்டாலினிஸ்ட் என்று பெருமையாய்(எனக்கு அவர் உண்மையிலேயே ஸ்டாலினிஸ்டா என்பது பிரச்சனை இல்லை, அதை ஒரு பெருமையாய் சொன்னதுதான்) சொன்ன யமுனா. ஜெயமோகனின் பலமே இது போன்ற அவரை எதிர்ப்பவர்கள்தான். இதை முன்வைத்தே தன்னை அவர் நிருபித்துகொண்டதாய் நினைத்துகொள்ளலாம். ஆனால் இதில் உண்மையில் அழிபடுவது, ஜெயமோகனின் உள்ளிருக்கும் ஒரு திறமையான புனைவாளன்தான் என்பது கூட அவருக்கு புரியாததுதான் கொடுமை!

கதையை படித்த பின் மீதி இருந்தால்..!

1/17/2005 5:07 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter