ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, May 12, 2006

ம்!

ரவிக்குமார் அமோக வெற்றி பெற்றிருப்பது முதல் சந்தோஷம். இதுவரை சீரியசான தளங்களில் செய்து வந்த, திராவிட இயக்க எதிர்ப்பை முதன்மையாய் கொண்ட அரசியலை, இன்னும் தீவிரமாக வெகுதளத்தில் செய்யபோகிறார் என்றாலும், ஏற்கனவே எழுதிய காரணங்களுக்காக, தமிழகம் முதல் முறையாக ஒரு தலித் அரசியல் சார்ந்த, ஒரு தலித் அறிவுஜீவி ஒருவரை சட்டசபைக்குள் அனுமதித்ததற்காக, பெருமையும் மகிழ்ச்சியும்!

விடுதலை சிறுத்தைகள் மொத்தம் இரண்டே இரண்டு இடங்கள் மட்டும் வெற்றி பெற்றிருப்பதை தவிர மற்ற எல்லாமே, இருப்பதில் நல்லது நடக்க சாத்தியமுள்ளதாக நான் நினைத்தவையே நடந்துள்ளது. திமுக, கூட்டணி ஆதரவில் இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் நல்லதுதான். அதிகாரம் கையில் இல்லாத போதே, பல ஆட்டங்கள் ஆடியுள்ள பாமகவிற்கு ஏற்பட்ட சரிவும் ஆரோக்கியமான விஷயம்தான். தங்கள் ஆதரவை நம்பி அரசு இயங்கும் யதார்த்தத்தில், எந்த அராஜகத்தில் இறங்கினாலும், மக்கள் கேள்விகள் இன்றி தங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் கைவைக்கப் பட்டிருப்பது, நாட்டுக்கு மட்டுமின்றி பாமகவிற்கே மிகவும் தேவையானது. அந்த வகையில் பாமகவின் கோட்டைக்கு சென்று அதன் அடித்தளத்தில் ஆப்பு வைத்த விஜயகாந்தின் வெற்றியும் சந்தோஷத்திற்குரியதே.

பத்திரிகையாளர் சந்திப்பில், கலைஞரின் முகத்தில் வெற்றி களிப்பின் ஓட்டம் இருந்ததாக தோன்றவில்லை. ஸ்டாலினை ஏனோ காணவேயில்லை. தமிழகத்தின் பழக்க தோஷம் காரணமாக ஏதாவது நடந்து பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று நம்பி ஏமாந்ததாலோ, சென்னையிலேயே அடிபட்டதாலோ, திமுகவின் உற்சாகம் வழக்கமான ஆரவாரத்துடன் இல்லை. என்றாலும், ஒரு அறுதி பெரும்பான்மை கொண்ட ஆட்சியின் கொட்டத்தை கொண்டிருக்க இயலாது என்பதை தவிர, போட்டியிட்ட இடங்களில் நான்கில் மூன்று பங்கிற்கு மேல் வெற்றிபெற்றுள்ளதிலும், தங்கள் ஆட்சியை தவிர இந்த சட்டசபைக்குள் வேறு சாத்தியங்கள் இல்லாததிலும் திமுக சந்தோஷம் கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது.

திமுக வெற்றிபெற்று கலைஞர் பதவி ஏற்பது என்பது, மிக தீவிரமான உணர்ச்சிகளை தமிழகத்தின் குறிப்பிட்ட மக்களிடையே ஏற்படுத்தக் கூடியது. அந்த தீவிர உணர்ச்சிகள், இரு விதங்களில் எதிர்வகைப் பட்டது. இந்த இரண்டு வகைப்பட்ட உணர்ச்சிகளையும், மிக அருகில் இருந்து பல முறை பார்த்தவன் என்ற முறையிலும், இரண்டையும் நானே தனிப்பட்ட முறையில், வேறு வேறு கால கட்டங்களில், மிகையாக அனுபவித்தவன் என்ற முறையிலும், இந்த முறையும் மக்களிடையே அதை உணர முடிகிறது.

ஒன்று எப்பாடு பட்டாவது கலைஞர் ஆட்சியில் அமர்வதை தடுக்க நினைக்கும், கலைஞரை தங்களின் இன எதிரியாக பார்க்கும், பார்பனர்களில் பெரும் பகுதியினர். கலைஞர் முதல்வர் நாற்காலியில் அமர்வது என்பதை தாங்கவே இயலாமல், உச்சகட்ட வயிற்றெரிச்சலில் இருப்பவர்கள். இவர்களில் நடுத்தர மற்றும் 'ஏழை பிராமண' வர்க்கத்தை சார்ந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்பது சுவாரசியத்திற் குரியது. மோடி ஆட்சிக்கு வருவதை பார்த்து முஸ்லீம்களுக்கு அப்படி ஒரு உணர்ச்சி இருக்க கூடுமெனின், அது எல்லா நியாயத்தின் படியும் புரிந்து கொள்ளக் கூடியது. ஏனெனில் மோடியின் கையிலிருக்கும் அதிகாரம், இஸ்லாமியர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால் கலைஞர் ஆட்சி உட்பட்ட எல்லா காலகட்டத்திலும், தங்கள் மேலான்மை கூட எந்த விதத்திலும் அச்சுறுத்தப் படாத தமிழக பார்பனர்களின், இந்த உளவியலின் வெறித்தன்மை உண்மையிலேயே ஆராய்சிக் குரியது. கலைஞரின் வெற்றியை (இந்த முறையும்) இவர்கள் எதிர்கொள்ளும் வகையில் வரும் மிக மோசமான வசைகளை, நானே என் காதால், பிறந்ததில் இருந்து நேற்றுவரை கேட்டு வருபவனவற்றை, நாகரீகம் கருதியும், பொலிடிகலி கரெக்ட்னஸ் கருதியும் இங்கே என்னால் எழுத முடியாது. என்றாலும் மனசாட்சிப்படி, பொத்தாம் பொதுவாய் இங்கே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இவர்களின் இந்த வயிற்றெரிச்சலும் நமது (அதாவது என்னை போல இந்த வயிற்றெரிச்சல் நேரவேண்டிய சமூகத்தேவையை அங்கீகரிப்பவர்களின்) சந்தோஷத்திற்கு உரியதே. (கலாநிதியின் மனைவியை வைத்து எல்லாம், ரொம்ப லாஜிக்கலாய் கேள்வி எழுப்பி என்னை திக்குமுக்காட வைக்க வேண்டாம் என்பது வேண்டுகோள் மட்டுமே - ப்ளீஸ்! இந்த இடத்தில் காக்கை பாடினியார் என் பதிவில் எச்சங்களை இட்டு தொந்தரவு செய்யமாட்டார் என்பது மிகவும் நிம்மதியாய் இருக்கிறது.)

இதற்கு நேரெதிராய், திமுக என்ற கருப்பொருளை, உடலின் அத்தனை திரவங்களிலும் கலந்து கொண்ட வேறு லட்சோப லட்சம் மக்களுக்கு, கலைஞர் நாற்காலியில் அமர்வது என்பது வாழ்வின் உச்சகட்ட பரவச நிலைக்கு கொண்டு செல்லும் நிகழ்வாகும். சில நாட்கள் முன்பு சந்திக்க நேர்ந்த கிழவர் ஒருவர், கலைஞர் மீண்டும் நாற்காலியில் அமர்வதை காணவே உயிரோடு இருப்பதாகவும், அதற்கு பிறகு சந்தோஷமாய் சாக தயாராய் இருப்பதாகவும் சொன்னார். அவர் ஏழை எளிய வர்க்கத்தை சார்ந்தவரும் அல்ல. திமுகவின் ஊழலை, தொண்டர்களின் கேள்வி கேட்காத விசுவாசத்திற்கு கலைஞர் அளிக்கும் உதாசீனங்களை, கூட இருந்த பலருக்கு கலைஞர் செய்த துரோகங்களையும், கலைஞரது குடும்ப அரசியலையும் அதன் இன்றய செல்வ செழிப்பையும் மிக நன்றாக புரிந்து கொண்டவர். நல்ல வசதியுடன் இருக்கும் அவர், தனக்கு எந்த லாபமும் இல்லாத கலைஞரின் அரியணை ஏற்றத்தை, தன் வாழ்வின் லட்சிய நிகழ்வாக பார்பதை எப்படி புரிந்து கொள்வது? இது லட்சக்கணக்கான உதாரணங்களில் ஒன்று மட்டுமே. இப்படிப்பட்ட நிலை எம்ஜியாருக்கும், ஜெயலலிதாவிற்கும், ராஜிவிற்கும் சோனியாவிற்கும் கூட இருக்கலாம். ஆனால் இவர்களை கொண்டாடுவதில் உள்ள வழிபாட்டுத் தனமையை தாண்டி, கலைஞர் மீதான பிரேமைக்கு வேறு பல பரிமாணங்கள் இருப்பதாகவும், ஒரு சமூகத்தின் அடையாளம் சார்ந்த கொண்டாட்டமாகவும், ஒரு குறிப்பிட்ட அரசியல் சார்ந்த குதுகலமாக இருப்பதாகவும் எனக்கு தோன்றுகிறது. மிகவும் பிற்படுத்தப் பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை, ஜாதிய உணர்வுகள் தாண்டி, தமிழ் சமூகம் இவ்வாறு கொண்டாடும் உளவியலை நாம் புரிந்து கொள்ள புதிய கருத்தியல்களை தேடவேண்டும் என்று தோன்றுகிறது.

சமூகத்தின் இப்படிப்பட்ட அடையாளம் சார்ந்த ஒரு கொண்டாட்டத்தை திருப்தி செய்யவேண்டியது ஒரு ஆதாரத் தேவை என்று நினைக்கிறேன். இதை ஒரு மட்டையான மார்சியதை கொண்டோ, எலீட்தன்மை கொண்ட வறட்டுப் பார்வை கொண்டோ புரிந்து கொள்ள இயலாது. அந்த குதுகலத்தை அளிக்கும் ஒரு நிகழ்வாகவும் திமுகவின் இந்த தேர்தல் வெற்றியை பார்க்கலாம்.

மற்றபடி அதிமுக வறலாறு காணாமல் செலவு செய்த, எல்லவற்றையும் விலைக்கு வாங்கி போட்ட பணபலத்தை, ஊடகத்தை ஆக்ரமித்த அதன் பிரசாரத்தை திமுக தனியாய் எதிர்கொண்டு வென்றது ஒரு சாதனையாகவே தோன்றுகிறது. கலைஞரின் கண்ணம்மா படத்தை முன்வைத்த அயோக்கியத்தனமான பிரச்சாரம், தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு, 'சோ'வை எக்ஸிட் போல் வரை எல்லாவற்றிற்கும் கருத்து சொல்ல வைத்து ஜெயாடீவியின் பொய் பிரச்சாரங்கள் அனைத்திற்கும் அங்கீகாரம் வரவழைக்க முயன்றது (இந்த விஷயத்தில், வழக்கமான பிம்பத்தித்ற்கு மாறாக, சோ கோமாளியானார் என்ற வகையில் சந்தோஷம்தான்) என்று பல பிரச்சனைகளை திமுக தாண்டியிருக்கிறது. இதில் சென்னையில் வழக்கத்திற்கு மாறாக (அதாவது பொதுவாய் திமுகதான் செய்யும், இந்த முறை) அதிமுக அதிக அளவில் கள்ள ஓட்டு போட்டதாக கேள்விப்படுகிறேன் (தகவல் தரும் இடங்கள் திமுக சார்பானவை என்பதை குறிப்பிடவும் வேண்டும்.) இத்தனைக்கும் நடுவே பொதுக்கருத்தின் மிக பாரபட்சமான பார்வையும் திமுகவிற்கு எதிராகவே இருந்தது. உதாரணமாய் சன் டீவியின் 'ஞாபகம் வருதே' விளம்பரத்தை மகாபாதகமாக ஒரு பத்து பேராவது என்னிடம் சொன்னார்கள். (அதில் ஒருவர் நம் அன்புக்குரிய வலைப்பதிவு நண்பர் என்பது ஆச்சரியத்திற்குரியது.) சன் டீவியின் விளம்பரத்தில் என்ன பாதகம் இருக்கிறது என்று மூளையை கசக்கி யோசித்தும் எனக்கு பிடிபடவில்லை. அதிமுக ஆட்சியில் நடக்காத எதையும் காண்பிக்கவில்லை. கலைஞரை நள்ளிரவில் கைது செய்தார்கள். அரசு ஊழியர்கள் மீது ஏதேசதிகாரம் பாய்ந்தது. நிவாரணத்தில் ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, மூன்று முறை நெரிசலில் மக்கள் செத்தனர். யானைகளை துக்ளக்தனமாக இடமாற்றம் செய்து துன்புறுத்தியதும் நடக்கத்தான் செய்தது. இதையெல்லாம் ஒரு எதிர்கட்சி தன் பிரச்சாரத்தில் பயன்படுத்தாமல் வேறு என்னய்யா செய்யும்? மிக வடிவாக எடுக்கப் பட்ட தேர்தல் விளம்பரம் அது. முடிவில் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கூட கேட்காமல் 'சிந்திப்பீர் வாக்களிப்பீர்' என்று முடிகிறது. கடைசி இரண்டு நாட்களில் மட்டும் போட்டு, மிகையாக்கி விடாமல் செய்தது சன் டீவியின் முதிர்சியையும் காண்பிக்கிறது. இப்படிப் பட்ட உருவாக்கப் பட்ட பொது கருத்துக்களையும் தாண்டி, திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்வது இந்த பதிவின் நோக்கமில்லை. இந்த தேர்தல் முடிவுகளில் நிறைவும் சந்தோஷமும் கொள்வதற்கான காரணங்களை, பொத்தாம் பொதுவாய் அவசர கதியில் அடுக்குவது மட்டுமே நோக்கம்.

கலர் டீவி வழக்கும் திட்டம், எல்லா மட்டத்திலும், மந்திரியிலிருந்து கடைசியாக டீவியை பெற ஒரு குடிமகள் அரசு ஊழியனுக்கு தரவேண்டிய லஞ்சம் வரை, ஒரு வறலாறு காணாத ஊழலை ஊற்றுவிக்கும். ஆனால் இரண்டு ரூபாய்க்கு (நல்ல )அரிசி என்பதை சாத்தியமாக்கினால், உண்மையிலேயே மக்கள் காலகாலத்திற்கும் திமுகவை போற்றுவார்கள். ஒரு வகையில், இன்றய சந்தை/நுகர்வு பொருளாதாரத்திற்கு, உலகமயமாதலுக்கு எதிரான அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படுவதும், அதற்கு மக்கள் கூட்டத்தில் வேறு சிலர் ஒரு விலை கொடுப்பதும் எந்த விதத்திலும் அநியாயமானதாய் தெரியவில்லை. இதற்கு ஆகக்கூடிய சில நூறுகோடிகள் ஒரு அரசாங்கத்திற்கு ஜுஜுபியான தொகை மட்டுமே. நேரடியாக இதை காரணம் காட்டி, தமிழகத்தில் தொழில் செய்பவர்களிடம் கூட இதை வசூலிக்க இயலும். கலைஞர் சொதப்பாமல், ஒரு புத்திசாலித்தனமான கண்ணோட்டத்துடன் அணுகுமுறையுடன் உண்மையிலேயே இதை நிறைவேற்றினால் அடுத்த முறையும் அவர் முதல்வராக வருவார் என்று தோன்றுகிறது. இப்போதைக்கு இங்கே நிறுத்தி கொள்கிறேன்.

Post a Comment

30 Comments:

Blogger Muthu said...

ரோசா,

நன்றி.

சூப்பர் என்றெல்லாம் எழுதி பதிவை ஆபாசப்படுத்தவிரும்பவில்லை.

5/12/2006 8:31 PM  
Blogger Pavals said...

ம்?
:)

5/12/2006 8:46 PM  
Blogger அருண்மொழி said...

நல்ல பதிவு. பார்ப்பனர் திருந்திவிட்டனர் என்று கூறுவோர் சிந்திக்கவேண்டும்.

கலைஞரிடம் இருந்து நிறைய எதிர்பார்கின்றேன். அவருக்கு ஊடகங்கள் ஆதரவு அளிக்குமா என்பது சந்தேகமே.

5/12/2006 8:47 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

சோ அவர்கள் தன் எழுத்துக்களில் தெளிவாகவே இருந்தார். இந்தத் தேர்தலை பொருத்தவரை அவர் ஜெயை ஆதரித்தார். இருந்தாலும் எதிர்தரப்பு வாதங்களையும் அவர் புறக்கணிக்கவில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பிளாங்கி அடித்தது. அதே தேதியில் சட்டசபை தேர்தல் நடந்திருந்தால் ஜெ இன்னும் மோசமாகவே தோற்றிருப்பார்.

முதலிலிருந்தே கருணாநிதி அவர்களின் கூட்டணையின் பலமே ஜெயின் பலவீனம் என்பதையும் தெளிவாகவே கூறி வந்திருக்கிறார் சோ அவர்கள்.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது சோ கூறியபடி நடந்து கொண்டிருந்தால் ஜெக்கு இன்னும் அதிக சீட்டுகள் கிடைத்திருக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது. அவற்றில் முக்கியமானது அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம். வெகு திறமையாகச் செயல்பட்டு வேலை நிறுத்தத்தின் முதுகெலும்பை முறியடித்தார் ஜெ.

உடனேயே ஊழியர்கள் வழிக்கு வந்தனர். அப்போது சோ அவர்கள் கூறினார், சட்டென்று எல்லொரையும் மன்னித்து வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி. ஆனால் ஜெ அதை கேட்காமல் போனதில் அவரது வெற்றி நீர்த்து போயிற்று. அப்போது மட்டும் அதை செய்திருந்தால் நிலைமை ஜெக்கு சாதகமானதாகவே இருந்திருக்கும். அதை கேட்காததில் ஜெக்குதான் நஷ்டம்.

பிறகு பல சட்டங்களை வாபஸ் பெற்று கேலிக்குள்ளானதுதான் மிச்சம்.

இப்படி ரொம்ப பாதகமான சூழ்நிலையில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த ஜெ படிப்படியாக திமுகவின் வெற்றியை கேள்விக்குரியதாக்கினார். கடைசி கருத்துக் கணிப்பில் அவருக்கு 26 சீட்டுகள்தான் கிடைக்கும் என்று ஆரூடம் கூட கூறப்பட்டது. ஆனால் அவர் அவ்வளவு மோசமாகத் தோற்கவில்லைதானே. சோ கூறியபடி விஜயகாந்தை சேர்த்துக் கொண்டிருந்தால் நிலைமை இன்னும் சாதகமாகியிருக்கும். அதுவும் சோ கூறிய ஆலோசனைதான். ஆனால் ஜெ அதையும் கேட்கவில்லை. சோ அவர்கள் எல்லா சினோரியோவையும் அலசி எழுதியுள்ளார். இப்போது நடந்த விஷயத்தின் சாத்தியக்கூறையும் எழுதியுள்ளார் என்பதுதான் நிஜம்.

இப்பின்னூட்டத்தின் நகல் சோ பற்றிய என் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/12/2006 9:09 PM  
Blogger இளங்கோ-டிசே said...

/...இவர்களை கொண்டாடுவதில் உள்ள வழிபாட்டுத் தனமையை தாண்டி, கலைஞர் மீதான பிரேமைக்கு வேறு பல பரிமாணங்கள் இருப்பதாகவும், ஒரு சமூகத்தின் அடையாளம் சார்ந்த கொண்டாட்டமாகவும், ஒரு குறிப்பிட்ட அரசியல் சார்ந்த குதுகலமாக இருப்பதாகவும் எனக்கு தோன்றுகிறது. மிகவும் பிற்படுத்தப் பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை, ஜாதிய உணர்வுகள் தாண்டி, தமிழ் சமூகம் இவ்வாறு கொண்டாடும் உளவியலை நாம் புரிந்து கொள்ள புதிய கருத்தியல்களை தேடவேண்டும் என்று தோன்றுகிறது.

சமூகத்தின் இப்படிப்பட்ட அடையாளம் சார்ந்த ஒரு கொண்டாட்டத்தை திருப்தி செய்யவேண்டியது ஒரு ஆதாரத் தேவை என்று நினைக்கிறேன். இதை ஒரு மட்டையான மார்சியதை கொண்டோ, எலீட்தன்மை கொண்ட வறட்டுப் பார்வை கொண்டோ புரிந்து கொள்ள இயலாது./

சுவாரசியமும் முக்கியம் வாய்ந்ததுமான விவாதப்புள்ளிகள் இவை.
....
பதிவுக்கு நன்றி வசந்த்.

5/12/2006 9:41 PM  
Blogger Srikanth Meenakshi said...

திமுக கூட்டணி வென்று ஆட்சி அமைப்பதால் அவர்களது ஆட்சியில் நிகழக்கூடிய சமூக, பொருளாதார மாற்றங்கள், அவற்றினால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய சாதமான பாதிப்புகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, இத்தேர்தல் முடிவில் உங்களது சந்தோஷத்தை விளக்கியிருந்தால் பரவாயில்லை. மாறாக, இம்முடிவினால், இவர்கள் சந்தோஷப்படுவார்கள், இவர்கள் வருத்தப்படுவார்கள், இரண்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது, ஆகையால் எனக்கு சந்தோஷம் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அதை ஒரு சமூகவியல் பார்வையாக நீங்கள் முன்னிறுத்துவது நீங்களே் அடிக்கடி வசைபாடும் pseudo-intellectuallism என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.

மேலும்,

//இதற்கு ஆகக்கூடிய சில நூறுகோடிகள் ஒரு அரசாங்கத்திற்கு ஜுஜுபியான தொகை மட்டுமே. நேரடியாக இதை காரணம் காட்டி, தமிழகத்தில் தொழில் செய்பவர்களிடம் கூட இதை வசூலிக்க இயலும்.//

என்னவென்று 'வசூல்' செய்வது? வரியாகவா, நன்கொடையாகவா? இந்த ஒரு 'திட்டத்தின்' sustainability என்ன? எவ்வளவு ஆண்டுகள் இவ்வாறு செய்ய இயலும்? (சுனாமி போன்ற) ஒரு குறிப்பிட்ட அசம்பாவிதத்திலிருந்து மக்கள் நிவாரணம் பெறும் வகையில் ஒரு அரசாங்கம் இத்தகைய விநியோகங்களை மேற்கொள்ளலாமே ஒழிய, பொதுவாக இது போன்ற திட்டங்கள் எந்த ஒரு தொலைநோக்குமின்றி முன்வைக்கப்படுபவையே.

5/12/2006 10:39 PM  
Blogger Mookku Sundar said...

ரோசா,

"சூப்பர்"

முத்து, இதில் என்னயா ஆபாசம் இருக்கிறது..?? சூப்பர் என்று சொல்லக்கூடிய ஏகப்பட்ட கருத்துகள் இந்தப் பதிவில் இருக்கின்றன. இன்னமும் கொஞ்சம் விலாவரியாக எழுதியிருந்தால், சூ....ப்பர் என்று எழுதி இருப்பேன்.

நேற்று என் எதிர்வீட்டுக்கார வடநாட்டவர் " என்ன..கருணாநிதி ஆட்சிக்கு வந்து விட்டாராமே" என்று துக்கம் விசாரிப்பதை போல கேட்டுக் கொண்டிருந்தார். ஏன் இந்தத் தொனியில் கேட்கிறீர்கள் என்றேன். " இல்ல..அவரு SC/ST சாப்ர்பில் பேசற ஆளாச்சே." என்றார். நம்புங்கள். சத்தியம் இது.

என்ன செய்தோ, யாரை பகைத்துக் கொண்டோ கலஞருக்கு இம் மாதிரியான ஒரு இமேஜ் இந்தியா முழுக்க இருக்கிறது. அவர் பதவியேற்பில் யாருக்கு சந்தோஷம் இருக்கும் / யாருக்கு இருக்காது என்பது இதில் இருந்தே தெரியும்.

இன்றைக்கு அவரைக் குறைசொல்லும் ஆசாமிகள், அவருடைய காலத்திற்குப் பின் அவருடைய அரசியலின் தேவையை, இருப்பை உணர்வார்கள். ஆனால் அப்போது காலம் கடந்து விட்டிருக்கும்.

5/12/2006 11:11 PM  
Blogger SnackDragon said...

வசந்த்,
ஜெயலலிதா செய்த அதே வன்முறை ஆட்சியை திமுக நடத்தியிருந்தால், அதிமுகவுக்கு கிடைத்தது போல் இந்த அளவுக்கு கணிசமான வாக்குகள் கிடத்திருக்கும் என்று என்னால் நம்பமுடியவில்லை. இன்னும் பெரும்பாலான பார்ப்பனத்தைச் சாராத தமிழக வாக்காளர்களுக்கு பார்பனியத்தின் மீதுள்ள கவர்ச்சி குறையவில்லை என்றுதான் சொல்வேன். ஓரளவுக்கு இரட்டை இலையையும் கணக்கில் எடுக்கலாம். கலைஞரின் முக்கியமான வார்த்தைகளான "காழ்ப்பு ஆட்சி நடத்தமாட்டோம்" என்று சொல்லியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அப்படியே செய்வார்களானால் மிகவும் பாராட்டலாம். காங்கிரசு இந்தளவுக்கு வந்திருப்பது நல்லது என்றுதான் படுகிறது, அதுவும் மத்தியில் காங்கிரசு இருக்கும்போது. ஆனால் இந்த கூட்டாட்சி , ஈழத்துக்கு எந்த அளவுக்கு சாதகமாக அமையும் என்று போகப்போகத்தான் பார்க்கவேண்டும்.

விடுதலைச்சிறுத்தைகளின் முதல் முன்னேற்றம் சிறியதாக இருப்பதில் வருத்தம்தான் என்றாலும் மிகவும் அவசியமானது நடந்தேறியது குறித்து மகிழ்ச்சியே. ரவிக்குமாரின் அரசியல் குறித்து, அவரது முக்கியமான செயற்பாடுகள் குறித்து எதுவும் எதிர்பார்க்கிறீர்களா? மைய நீரோட்ட அரசியலில் தமது தனித்தன்மையை எந்த அளவுக்கு முன்னடத்துவர் என்று எனக்குப்புரியவில்லை. பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.

5/13/2006 5:10 AM  
Blogger Boston Bala said...

---ஸ்டாலினை ஏனோ காணவேயில்லை. ---

ஏன்... ஏன்? ('ஞாபகம் வருதே மாதிரியே ஓவர் எக்ஸ்போசரை தவிர்க்கிறார்களா?)

5/13/2006 12:57 PM  
Blogger ROSAVASANTH said...

பின்னூட்டங்களை மட்டுறுத்தி அனுமதிக்கவே வந்தேன். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. விரிவாய் எழுத இருந்தால் திங்கள் பார்க்கலாம்.

ஸ்ரீகாந்த், நீங்கள் சொல்வது போலவே கூட கருதிக்கொள்ளலாம். பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை முன்வைத்து எழுதுவது என் நோக்கமல்ல. அவை முக்கியமல்ல என்பது அல்ல. என்னைவிட தெளிவாக அதை எழுத பலர் இருக்கவும் செய்வார்கள். எனக்கு அது குறித்து எழுத சரியாகவும் தெரியாது. மற்றபடி இண்டெலெக்சுவலிசம் என்பது பற்றி எனக்கு உங்களுடன் நிறய முரண்பாடு இருக்கும். இண்டலக்சுவல் பார்வையைவிட உணர்வுகளுக்கு நான் அதிக மதிப்பளித்தே என் பதிவுகளை எழுத வருகிறேன். என் பார்வைகள் எல்லா விதத்திலும் சரியானது என்று நானே நினைக்கவில்லை என்பது மட்டுமல்ல, அது முழுமையான வகையில் எதையும் பார்க்க முயல்வதும் இல்லை. ஒரு ஓரத்தில் நின்று ஒரு குறிப்பிட்ட கருத்தை, அதன் தேவையை உணர்வதாக நினைத்து, ஒரு கடமையாய் அதை அளிப்பது மட்டுமே நான் இப்போதைக்கு செய்து வருகிறேன்.

தொழில் செய்வோர்களிடம் 'நன்கொடை' என்று கூட (வெளிப்படையாக) வாங்கமுடியும் என்பது என் கருத்து. வழக்கமாக கட்சிகள் (மறைமுகமாய்)வாங்குவதில் எந்த பங்கமும் வராமல், நேரடியாய் ஒரு அங்கீகரிக்கப் பட்ட வழியில் கூட இதை செய்யலாம் என்று நினைக்கிறேன்.

நேசக்குமார், முதலில் சல்மா போட்டியிடுவதை, ஒரு லாபியுள்ள கவிஞர் தேர்தல் களத்தில் இருக்கிறார் என்பதை மீறி அதிக முக்கியத்துவம் நான் கொடுக்கவில்லை. இப்போது உங்கள் மற்றும் ரவி ஸ்ரீனிவாசின் பதிவின் மூலம் சல்மா மீதான எதிர்பிரசாரத்தினை அறிந்தேன். இந்த காரணத்திற்காகவே நானும் ஆதரித்து பதிவு எழுதியிருக்க வேண்டும். சல்மாவிற்கு ஆதரவு தருவது, மத அடிப்படைவாதத்தை எதிர்க்கும் எல்லோரின் கடமையும் ஆகும். அவரது தோல்வி வருத்தத்திற்குரியது. இங்கே கருத்தை பதிந்தமைக்கு நன்றி. மீண்டும் அனைவருக்கும் நன்றி.

5/14/2006 4:11 AM  
Blogger Thangamani said...

//திமுக வெற்றிபெற்று கலைஞர் பதவி ஏற்பது என்பது, மிக தீவிரமான உணர்ச்சிகளை தமிழகத்தின் குறிப்பிட்ட மக்களிடையே ஏற்படுத்தக் கூடியது. அந்த தீவிர உணர்ச்சிகள், இரு விதங்களில் எதிர்வகைப் பட்டது. இந்த இரண்டு வகைப்பட்ட உணர்ச்சிகளையும், மிக அருகில் இருந்து பல முறை பார்த்தவன் என்ற முறையிலும், இரண்டையும் நானே தனிப்பட்ட முறையில், வேறு வேறு கால கட்டங்களில், மிகையாக அனுபவித்தவன் என்ற முறையிலும், இந்த முறையும் மக்களிடையே அதை உணர முடிகிறது.

ஒன்று எப்பாடு பட்டாவது கலைஞர் ஆட்சியில் அமர்வதை தடுக்க நினைக்கும், கலைஞரை தங்களின் இன எதிரியாக பார்க்கும், பார்பனர்களில் பெரும் பகுதியினர்......

ஒரு சமூகத்தின் அடையாளம் சார்ந்த கொண்டாட்டமாகவும், ஒரு குறிப்பிட்ட அரசியல் சார்ந்த குதுகலமாக இருப்பதாகவும் எனக்கு தோன்றுகிறது. மிகவும் பிற்படுத்தப் பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை, ஜாதிய உணர்வுகள் தாண்டி, தமிழ் சமூகம் இவ்வாறு கொண்டாடும் உளவியலை நாம் புரிந்து கொள்ள புதிய கருத்தியல்களை தேடவேண்டும் என்று தோன்றுகிறது.//

இந்தப்பதிவில் நான் முக்கியமானதாகக் கருதுவது மேலே நான் குறிப்பிட்டிருக்கும் விதயத்தைத்தான். இது மிகவும் வெளிப்படையான, ஆதாரமான விதயமானாலும், மிகவும் திறமையான மட்டையடி, சமத்துவ பொன்னகர புத்தொளிகளால் இப்படியான ஒருவிதயமே இல்லாதது போன்ற ஒரு தோன்றமும், அப்படியான விதயத்தைப் பேசுவது சமூக அமைதியைக் குலைக்கும் பாதகமாக சித்தரிக்கப்படும், இச்சூழலில் இதை நீங்கள் எழுதியிருப்பதும், தமிழக அரசியலில் பொருளாதார, அரசியல் காரணங்களை முன்னிருத்தும் அறிவு ஜீவிகள் வெளிப்படையாகத் தெரியும் இந்த காரணிகளைக் கண்டு கண்களை இறுக மூடிக்கொள்ளும் சூழலில் மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது. நன்றி.

5/14/2006 5:33 AM  
Blogger வெளிகண்ட நாதர் said...

இந்த பதிவு பார்த்தீங்களா?

5/14/2006 12:30 PM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணி கருத்துக்கு நன்றி. ஆனால் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு சரியாய் பிடிபடவில்லை. நம் இருவருக்கும் இணையத்தில் நிதானமாய் நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம்.

வெளிகண்ட நாதர், உங்கள் பதிவை பார்தேன். முழுவதும் இப்போது படிக்க முடியவில்லை. நாளை படித்து கருத்து இருந்தால் எழுதுகிறேன். நன்றி.!

5/15/2006 1:08 AM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணி, நிதானமாய் படித்த போது புரிந்தது. மேல் விளக்கம் தேவையில்லை என்று சொல்ல மட்டும்...! நன்றி!

5/15/2006 1:10 AM  
Blogger Muthu said...

மூக்கு,

கலைஞர் முதல்வரானது யாருக்கு வெறுப்பு? யாருக்கு சந்தோஷம் என்பதெல்லாம் இங்கு தெரியாமலா கிடக்கிறது...
(முக்கியமாக வலைப்பதிவுலக புள்ளிகளை பார்த்தாலே தெரிகிறதே)

5/15/2006 1:42 AM  
Blogger நியோ / neo said...

>> /...இவர்களை கொண்டாடுவதில் உள்ள வழிபாட்டுத் தனமையை தாண்டி, கலைஞர் மீதான பிரேமைக்கு வேறு பல பரிமாணங்கள் இருப்பதாகவும், ஒரு சமூகத்தின் அடையாளம் சார்ந்த கொண்டாட்டமாகவும், ஒரு குறிப்பிட்ட அரசியல் சார்ந்த குதுகலமாக இருப்பதாகவும் எனக்கு தோன்றுகிறது. மிகவும் பிற்படுத்தப் பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை, ஜாதிய உணர்வுகள் தாண்டி, தமிழ் சமூகம் இவ்வாறு கொண்டாடும் உளவியலை நாம் புரிந்து கொள்ள புதிய கருத்தியல்களை தேடவேண்டும் என்று தோன்றுகிறது.

சமூகத்தின் இப்படிப்பட்ட அடையாளம் சார்ந்த ஒரு கொண்டாட்டத்தை திருப்தி செய்யவேண்டியது ஒரு ஆதாரத் தேவை என்று நினைக்கிறேன். இதை ஒரு மட்டையான மார்சியதை கொண்டோ, எலீட்தன்மை கொண்ட வறட்டுப் பார்வை கொண்டோ புரிந்து கொள்ள இயலாது./ >>

இந்த உணர்வை அனுபவித்த லட்சோபலட்சம் தமிழர்களில் ஒருவனாக - இதைப் படிக்கிற பொது மீண்டும் அவ்வுணர்வெழுச்சியை கொண்டு வந்து விட்டீர்கள்.

எத்தனை 'டன்' குப்பைகளைப் படிக்க நேர்ந்தாலும் - இது போன்ற நம் நெஞ்சுடன் உரையாடும் விவரிப்புக்களைப் படிக்கும் போது ஏற்படும் உணர்வும் வார்த்தைகளில் வடிக்க இயலாதது. நன்றி ரோசா அவர்களே!

5/15/2006 7:40 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

ரோசா
உண்மையில் கலக்கல்.
அவர் இதுவரை கடுமையாக உழைத்த காரணத்தால் கலைஞர் முதல்வர் ஆகிவிட வேண்டுமே
என்று கடந்த 3 அல்லது 4 வாரங்களாக மனம் அடைந்த பதட்டத்திற்கு அளவேயில்லை.
நீங்கள் சொன்ன அந்த தாத்தா போன்ற மனநிலையில்தான் நான் இருந்தேன். மேலும் ஸ்டாலினுக்கு
நல்ல துறை கிடைத்ததும் மனம் மகிழ்ச்சியே. ரவிக்குமார் வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சியே.
மொத்ததில் நீங்கள் இங்கே எழுதிய அனைத்தும் மிக அருமை. கலைஞருக்கு இது பதவி காலத்தில்
நிச்சயம் தமிழகத்தை வளமாக மாற்றுவார் என்று நான் பலமாக நம்புகிறேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

5/15/2006 9:18 AM  
Blogger ROSAVASANTH said...

நியோ, சிவா நன்றி.

நேசக்குமார், கலைஞரின் சாதி பற்றுக்கு அடையாளமாக நீங்கள் தரும் ஆதாரங்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். உங்களின் ஆதரங்கள் உண்மையாகவே கூட இருக்கலாம், எனக்கு சரியாய் தெரியாது. ஆனால் அவர் இதுவரை ஐந்துமுறை முதல்வரான ஒவ்வொரு தடவையும், தன் சாதி ஆட்களுக்கு எதையாவது செய்தார் என்று நான் கேள்விப்பட்டதில்லை. வேறு வகையில் கூட (அவர் மீது நியாயமாகவும் அநியாயமாகவும் பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போதும்) அவர் ஜாதியரீதியாய் இயங்கியதாய் யாரும் சொல்லி கேள்விப்பட்டதில்லை. காமராஜரை நாடர்கள் தங்கள் ஆளாக அடையாளம் கண்ட அளவில் கூட கலைஞரை அவரது ஜாதியினர் அடையாளம் கண்டதாக சொல்ல முடியாது. அவருடைய திருமணம், அவரது மகள்/மகனின் திருமணங்கள் ஜாதிக்கு அப்பாற்பட்டே நடத்தப் பட்டது. கொஞ்சம் ஏதாவது அப்படி இப்படி தன் ஜாதிக்காரர்களுக்கு செய்ததாக நீங்கள் சொல்லும் ஆதரத்தை ஒப்புகொண்டாலும் கூட, கலைஞரை ஜாதி உணர்வால் உந்தப்பட்டவராக காணமுடியவில்லை. உதாரணமாய் தன்னை 'பாப்பாத்தி' என்று ஜெயலலிதா சொல்லிகொண்டது, பிரமண சங்கம் 'நம்ம ஆட்சி' பற்றி பேசியது, சசிகலா லாபி மூலம் தேவர் ஜாதி அடைந்த பலன்கள், செய்த அட்டூழியங்கள் இதனுடன் எல்லாம் தொலைவில் வைத்து கூட கலைஞரை ஒப்பிட முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் நான் எழுதியது கலைஞர் ஜாதிக்கு அப்பாற்பட்டு இயங்கியது பற்றி அல்ல. (நீங்கள் வேறு மாதிரி புரிந்து கொண்டதாக சொல்லவில்லை.) பார்பனர்கள் தவிர்த்த பல ஜாதியினர் கலைஞரை தங்கள் அடையாளமாய் கண்டு கொண்டாடியது. உதாரணமாய் (மிகவும்)பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் மட்டுமின்றி, பல பிள்ளைமார்கள், முதலியார்கள், நாயக்கர்கள், தேவர்கள், கோனார்கள் என்று (பார்பனர்கள் தவிர்த்த)பல மேலான்மை ஜாதியினரும் கலைஞரை ஒரு 'இன்றய ராஜராஜ சோழனை' போல கொண்டாடியது. அதில் கொஞ்சம் நிலப்பிரபுத்துவ உளவியல் இருக்கலாம். ஆனால் மற்ற விஷயங்களில் ஜாதிய உணர்வை விட்டு வெளியே வராதவர்களுக்கு, கலைஞரை கொண்டாடும் விஷயத்தில் சாதி ஒரு பொருட்டாகவில்லை என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

5/15/2006 4:04 PM  
Blogger Muthu said...

//மற்றபடி எம்.பி.சி கேட்டகிரியில் இருக்கும் பிற ஜாதிகளோடு ஒப்பிட்டால்(விகிதாச்சாரப்படி) இசை வேளாளர்கள் மிக நல்ல நிலையில்தான் இருக்கின்றனர். அவர்கள் தம்மை பிராம்மணர்களோடும், பிராம்மணரல்லாத மற்ற (தமிழ்)உயர்ஜாதிகளோடுமே(குறிப்பாக முதலியார் மற்றும் பிள்ளை) ஐடெண்டிஃபை செய்கின்றார்கள் - இது என்னுடைய நேரடி அனுபவம்.//


இது படுபயங்கர ஜோக் நேசக்குமார் அவர்களே..

அந்த நேரடி அனுபவத்தை கூறுங்கள்.நாங்களும் கேட்கிறோம்.ஏனென்றால் நாங்களும் பல இசை வேளாளர்களை பார்த்திருக்கிறோம்.

5/15/2006 5:43 PM  
Blogger Srikanth Meenakshi said...

முத்து,

//(முக்கியமாக வலைப்பதிவுலக புள்ளிகளை பார்த்தாலே தெரிகிறதே)//

:-) நீங்கள் என்னையும் சேர்த்துக் குறிப்பிட்டீர்களா என்று தெரியவில்லை, regardless, and for what it's worth, எனக்கு திமுக ஆட்சிக்கு வந்ததில் நிஜமாகவே (நம்புங்கள்) மகிழ்ச்சிதான். எதேச்சாதிகாரமாக செயல்படாமல் (ஓரளவிற்கேனும்) வெளிப்படையாக நடக்கக்கூடிய ஆட்சியை எதிர்பார்க்கலாம் என்ற விதத்திலும், அதிமுகவினால் கிடப்பில் போடப்பட்ட பல திட்டங்கள், குறிப்பாக உழவர் சந்தை மற்றும் நமக்கு நாமே திட்டங்கள் மீண்டும் உயிர் பெறும் என்ற விதத்திலும் எனக்கு சந்தோஷம் தான்.

5/16/2006 2:29 AM  
Blogger ROSAVASANTH said...

நேசக்குமார், உங்கள் பின்னூட்டம் குறித்து ஒரு ஸைட் ரிமார்க் மட்டும்.

ஒரு ஜாதி தங்களை எவ்வாறு அடையாளம் காண்கிறது என்பதை முன்வைத்து அதன் நிலையை பற்றி பேசமுடியாது. ஜாதிய படிக்கட்டில் எல்லோருமே தங்களின் ஜாதி பெருமையாக பலதை கற்பித்துக் கொள்கின்றனர். சாதிய சட்டகத்தில் ஆக கீழே இருக்கும் அருந்ததியினர் கூட தங்களை மேன்மைக்குரிய ஜாதியாய், அருந்ததி வம்சமாகவே அடையாளம் காண்கின்றனர். பள்ளர்கள் தேவேந்திர வம்சமாக கருதி, வேளாளர் அடைமொழியுடன், தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்துக் கொள்கின்றனர். எல்லா ஆசாரிகளும் பிராமண வழக்கங்கள் சிலதை போலி செய்கின்றனர். (இவையெல்லாம் சாதிய உணர்வுகள் நவீனமான பின் நடந்தவை அல்ல, சனாதன சாதிய சட்டகத்தினுள்ளேயே இவர்களை தங்களை பற்றி கற்பித்து கொள்வது. நவீன காலத்தில் எல்லா ஜாதிகளும் தங்களை 'ஆண்ட இன்மாக' அடையாளம் காண்பதும், அது குறித்த பெருமைகளை கட்டமைப்பதும் வேறு.) இதை வைத்து நாம் முடிவுக்கு வர இயலாது. சாதிய படி நிலையில் எந்த இடத்தில் இருக்கிறார்கள், சமூக அதிகாரத்தில் என்ன பங்கை பெற்றனர்/பெறுகின்றனர் போன்றவற்றை முன்வைத்தே பேச முடியும்.

மற்ற படி நீங்கள் 500 குடும்பத்தை முன்வைத்து, பேசுவது பற்றி பேசும் அளவிற்கு, எனக்கு அனுபவம் இல்லை.

ஸ்ரீகாந்த், முத்து என்ன நினைக்கிறாரோ தெரியாது. திமுக ஆட்சிக்கு வந்ததில் உங்களுக்கு மகிழ்ச்சி என்பதில் எந்த்ய சந்தேகமும் படவில்லை. நீங்கள் சொல்வதற்கு முன்பு கூட அவ்வாறுதான் நினைத்திருந்தேன். முத்துவும் அவ்வாறுதான் நினைப்பார் என்று தோன்றுகிறது. ஆனால் என் பதிவில் பேசிய விஷயம் வேறு!

கருத்துக்களுக்கு நன்றி.

5/16/2006 3:59 PM  
Blogger ROSAVASANTH said...

//இசைவேளாளர்களில் நட்பு வட்டம் தவிர்த்து குறைந்த பட்சம் ஒரு ஐந்தாறு குடும்பங்களோடாவது எனக்கு பரிச்சயம் உண்டு //

மிகவும் மன்னிக்கவும். ஐந்தாறு என்பதை ஐநூறு என்று படித்துவிட்டேன். (படித்த போது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது!)

5/16/2006 7:20 PM  
Blogger Muthu said...

சம்பத்,

பூணூல் மற்றும் மணியாட்டுவதைப்பற்றி ஒரு பின்னூட்டத்திற்கு இங்கே மக்கள் டென்சன் ஆனார்கள்.அது நியாயம் என்றால் கலைஞர் ஊதுவது விஷயத்தில் டென்சன் ஆனது தவறா?

இரண்டுமே தவறா அல்லது இரண்டுமே தவறில்லையா?



நேசகுமார்,

ஐந்தாறு குடும்பம் அதுவும் பொருளாதார ரீதயாக மிகவும் முன்னேறிய இசை வேளாளர் குடும்பத்தை வைத்து நீங்கள் கூறி உள்ளீர்கள் பேர்ல தெரிகிறது.

என்றுமே பொருளாதார ரீதியாக நன்கு முன்னெறியவர்கள் பூஜை புனஸ்காரத்தில் ஆழ்ந்து இருப்பது தனியாக பேசவேண்டிய உளவியல் விஷயம்.

நர்ன பார்த்த குடும்பங்கள் ஆத்தூர் தேவியாகுறிச்சியி்ல் நிறைய வசிக்கிறார்கள். மூட்டை தூக்கியும்,சவரம் செய்தும் வாழ்கிறார்கள்.முதல் தலைமுறை படிப்பை இப்போது பார்த்தும் வருகிறார்கள்.


srikanth,

கும்பலை விட்டு விலகி நீங்கள் பலநேரங்களில் பேசுவதை பார்த்திருக்கிறேன்.என் காமெண்ட் உங்களுக்கு பொருந்தாது.(ரொசாவும் கூறிவிட்டார்)

5/17/2006 8:54 AM  
Blogger அருண்மொழி said...

சம்பத் ராமானுஜம்,

//முதல் பட்டாஸுகள் வெடிக்கப்பட்டது (காலை 11.30 அளவில்) நான் இருக்கும் நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவிலும், வள்ளுவர் கோட்டம் வாசலிலும். வெடித்தவர்கள் பிராமணர்கள்.//

அவர்கள் வெடித்த பட்டாசு கலைஞர் வெற்றிக்கல்ல. ஜெவின் தோல்விக்கு. காரணம் நம்ம சுப்பிரமணி matterதான்.

ஒழிந்தாள் நாசக்காரி என்று கோஷமிட்டதாகவும் தகவல் வந்தது.

5/17/2006 4:35 PM  
Blogger அருண்மொழி said...

சம்பத் ராமானுஜம்,

17/05/2006 Junior Vikatanஇல் வந்த செய்தி.

அறிவாலயத்தில் வெற்றி வெடியை உடன் பிறப்புகள் வெடிப்பதற்கு முன்பு, வள்ளுவர் கோட்டத்தில் வெடித்துவிட்டனர். வெடித்தது யார் என்று சொன்னால் உம்மால் நம்பவே முடியாது. ஆமாம் வெடித்தது... தி.மு.க-வினர் இல்லை. சாட்சாத் காஞ்சி மட பக்தர்கள்தான்!. அதிலும் காவி சேலை அணிந்த ஒரு பெண்மணி, "பெரியவாளைக் கைது செய்த அந்த நரகாசூரிக்கு, நரசிம்ம ஜெயந்தியான இன்று நல்லத் தீர்ப்பு கிடைத்திருக்கிற்து" என்று பொங்கித் தீர்க்க, அதைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடிவிட்டார்கள் மற்றவர்கள்.

இப்போது புரிகிறதா??

வெடித்தவர்களுக்கு ஒரு செய்தி. இந்த கருணாநிதி நோயில் விழ நான் பூசை செய்தேன் என அன்று வாக்கருளிய பெருந்தகைதான் நம்ம சுப்பிரமணி.

5/17/2006 5:20 PM  
Blogger arunagiri said...

"பூணூல் மற்றும் மணியாட்டுவதைப்பற்றி ஒரு பின்னூட்டத்திற்கு இங்கே மக்கள் டென்சன் ஆனார்கள்.அது நியாயம் என்றால் கலைஞர் ஊதுவது விஷயத்தில் டென்சன் ஆனது தவறா?"

இரண்டும் ஒன்றுதான், இரண்டிற்கும் ஒரே காரணம்தான் - சாதிச்சார்பு. இதைத்தான் நேசகுமாரும் சுட்டிக்காட்டினார். அவசரப்பட்டு ஸேம் ஸைடு கோல் போட்டுக் கொண்டு விட்டீர்கள்.

சாதிச்சார்பு இருக்கும் சாதாரணன் டென்சன் ஆவதற்கும் பெரியார் பாசறையில் இருந்து வந்த சமத்துவபுர இனமான வீரர், திராவிட மூதறிஞர், தமிழின வழிகாட்டி, மாநில முதல்வர் டாக்டர் கலைஞர் டென்சன் ஆவதற்கும் வித்தியாசம் இருக்கிறது முத்து(தமிழினி) அவர்களே.

5/31/2006 4:24 AM  
Blogger நியோ / neo said...

>> சாதிச்சார்பு இருக்கும் சாதாரணன் டென்சன் ஆவதற்கும் பெரியார் பாசறையில் இருந்து வந்த சமத்துவபுர இனமான வீரர், திராவிட மூதறிஞர், தமிழின வழிகாட்டி, மாநில முதல்வர் டாக்டர் கலைஞர் டென்சன் ஆவதற்கும்..>>

இந்த அருணகிரி அவர்களுக்கு நம்முடைய ரோசாவின் முந்தைய பதிவு ஒன்றை சிபாரிசு செய்கிறேன்.

அதாவது - "பாப்பான்" "பாப்பாரப் புத்தி" என்று சொல்வதும், "பறப்பயலே" என்று இழித்துப் பேசுவதும் - "ஒரேவிதமான வன்முறைதான்" என்று வெங்கட்( Domesticatedonion) சாதித்தபோது அப்போது ரோசாவும் மற்றவர்களும் வைத்த வாதங்களை இவர் பார்க்கட்டும்.

நினைவில் இருந்து சொல்கிறேன். சுட்டி தேடித் தருகிறேன்.

( ரோசா! உதவுங்கள்! :) )

5/31/2006 5:10 AM  
Blogger ROSAVASANTH said...

Not to get into any debate, but just as Neo asked for this

http://rozavasanth.blogspot.com/2005/03/blog-post_21.html

hope this is waht he refers!

5/31/2006 5:18 AM  
Blogger நியோ / neo said...

ரோசா! இதேதான்! உங்களின் இந்தப் பதிவையும், இதை எழுதக் காரணமாயிருந்த அந்த செரு்ப்படி பதிவையும் வாசிக்கும் முன்பே - முதலில் வெங்கட்டின் எதிர்வினையைப் படித்து விட்டுதான் உங்களின் பதிவுக்கு வந்தேன் (அப்போது பதிவுகளை ஊன்றிப் படிக்கவில்லை - வெங்கட், பத்ரி, போன்றவர்களைத்தான் முதலில் வாசித்துக் கொண்டிருந்தேன்).

5/31/2006 5:39 AM  
Blogger arunagiri said...

சுட்டி பார்த்தேன், சுத்தமாய் ஒன்றும் புரியவில்லை. இந்தப் பிரச்சினையின்போது நான் தமிழ்மணத்திற்கு பரிச்சயம் ஆகியிருக்கவில்லை. காஞ்சி பிலிம்ஸ் ப்ளாக்-கே இப்போது காணவில்லை.
வெங்கட், ரோசா வசந்த் இவர்களின் கருத்துக்களின் முழு விவரம் தெரியாமல் அதற்குள் போக விரும்பவில்லை. என்னைப்பொறுத்தவரை சாதி சொல்லி இழிவுபடுத்துவது பெரும் தவறு. நிற்க.

நான் முத்து (தமிழினி)க்கு எழுதிய பதிலில் எந்த மாற்றமும் இல்லை.

5/31/2006 6:47 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter