ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, May 02, 2006

3. தேர்தல் - 2006

ஜெயலலிதா பெரும்பான்மையுடன் திரும்ப வரக் கூடாது என்பது தவிர, எனக்கு இந்த தேர்தலில் இருக்கும் வேறு ஒரு அக்கறை, விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 11 இடங்கள்(11 அல்ல 9- திருத்திய அருண்மொழிக்கு நன்றி). தேர்தல் அரசியலில் திருமாவளவனை ஆதரிப்பது, தலித்திய சார்பில் சிந்திக்கும் அனைவரின் தார்மீக கடமை என்பதாக தோன்றினாலும், அப்படி ஆதரிப்பது, அதையும் விமர்சனமின்றி செய்வது, உண்மையிலேயே தேவைதானா என்ற கேள்வியும், அவரது சமீபகால நடவடிக்கைகளினால் எழுந்திருக்கிறது. குறிப்பாக குஷ்பு பிரச்சனையில் அவர்(உம்) ஆடிய ஆட்டம் மறக்கக் கூடியது அல்ல.

திருமாவளவனின் தொடக்க கால செயல்பாடுகள், அவர் உருவாக்கிய எழுச்சி, இதனால் கிடைத்த நம்பிக்கையில் உத்வேகம் பெற்று, பல தரப்பிலிருந்து அவரை ஆதரிக்கும் குரல்கள் வந்தன. அவர்களில் (என்னையும் சேர்த்த) பலர், அவரது அண்மைக்கால தமிழ் சார்ந்த அரசியல் செயல்பாடுகளால் (சினிமாவில் 'தமிழ் பெயர்' வைக்க நடத்திய அடாவடித்தனங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அரசியல் பார்வைகளில் செய்யும் எத்தனையோ சமரசங்களில் ஒன்றாக அதை பெரிதாக்காமல் புறக்கணித்து விட்டு), குறிப்பாக குஷ்புவை முன்வைத்த பிரச்சனைக்கு பின்னர், அந்த ஆதரவை ரொம்பவே பரிசீலிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றனர்.

திருமாவை போன்ற மக்கள் ஆதரவைப் பெற்ற தலைவர், தலித்திய நோக்கில் செய்ய எவ்வளவோ இருக்கிறது. இன்னமும் சாதியமைப்பை மீறாத சமூக ஒழுங்குகளும், தலித்கள் மீதான வன்கொடுமைகளும் அன்றாட நிகழ்வாய் இருக்கும் சமூக யதார்த்தத்தில், அது குறித்த மீறல்களுக்கு மக்களை அணிதிரட்டுவதில், அவற்றை வெளிச்சமிட்டு காட்டுவதில், பரவாலாக அதை கண்டிக்கும் மனநிலையை ஊடகங்களிலும் சமூக பிரஞ்ஞையிலும் உருவாக்குவதில் எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது. தேர்தல் அரசியல் மூலம் குரல் கொடுத்தல், அரசியல் கட்சிகள் உட்பட்ட எல்லா சமூக அமைப்புகளுடன் உரையாடல், சாதிக் கொடுமைகளுக்கு எதிரான களத்தில் நேரடியான போராட்டம், ஒன்று திரட்டிய பலம் கொண்டு மிரட்டல், பேரம் பேசி மசிய வைப்பது என்று எத்தனையோ வழிமுறைகளில் தலித் நலன்களை முன்வைத்து செயல்படும் தேவையும் உள்ளது. ஆனால் அவர் சக்தியை வேறு விஷயங்களில் செலவழித்து, ஏற்கனவே சாதகமில்லாத பொதுக்கருத்தின் வெறுப்பை இன்னும் சம்பாதிப்பதிலும் அல்லது சாதிய ஒழுங்கை ஒப்புகொள்ளும் பொதுமனோபாவத்திற்கு தனக்கு தானே நியாயம் சொல்லி கொள்ள உதவுவதிலும், (கேள்விப்படும் செய்திகளின் படி) கிராம அளவில் இன்றும் தொடர்ந்திருக்கும் தலித்கள் மீதான் சாதிய நடைமுறைகளை கண்டு கொள்ளாம லிருப்பதிலும்தான் இப்போது நிலை கொண்டிருப்பதாய் தெரிகிறது.

இது குறித்து திருமா மீது விமர்சனம் வைக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், அந்த விமர்சனங்களை வைக்கும் இரு எதிர் தரப்புகளை அடையாளம் கண்டு வகைப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. இதுவரை தலித் அரசியல் சார்ந்த எல்லாவற்றையும் முரட்டுத்தனமாய் எதிர்த்தவர்கள், தலித் சார்பாகவோ சாதிய நடைமுறை பற்றி விமர்சனமாகவோ ஒரு முறை கூட பேசியிராதவர்கள், அப்படி பேசுபவர்களை கடுமையாய் தாக்கி வந்தவர்கள். இவர்கள், திருமாவளவன் தலித் நலன் மீது அக்கறையில்லாமல், கற்பை முன்வைத்தும் 'தமிழ் கலாச்சாரத்தை காக்கவும்' செய்யும் அரசியல் பற்றி அங்கலாய்ப்பது ஒரு வகை. அவர்களின் போலித்தனத்தை தோலுரிக்கும் முனைப்பில், திருமா மீது உண்மையிலேயே விமர்சனம் வைக்கும் தேவையும் கடமையும் கொண்ட தலித்திய சார்புடையவர்கள், மௌனமாக இருப்பது அல்லது விமர்சனத்தை மென்மையாய் கையாள்வது இன்னொரு வகை. தீவிரமான அணுகல்களின் போது, முதல் தரப்பை முற்றிலும் புறக்கணித்து அலசினால் ஒழிய, ஒரு அடி கூட நகரமுடியாது. இரண்டாவது தரப்பினரின் நோக்கம் சாதிய நடமுறையை தகர்ப்பதாயின், இருக்கும் விமர்சனத்தை திடமான குரலில் முன் வைப்பதை தவிர வேறு வழியில்லை.

இப்படி விமர்சனங்கள் இருந்தாலும், திருமாவை எல்லா கட்டங்களிலும் ஆதரித்துத்தான் ஆகவேண்டுமா என்ற கேள்வி இருந்தாலும், அதை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய தேவை இருந்தாலும், இன்றய நிலையில் தலித் நலன்களுக்கு விடுதலை சிறுத்தைகளை தவிர, வேறு யாரும் குரல் கொடுக்கும் நிலை இருப்பதாக தெரியவில்லை. இன்றைக்கும் 'பஞ்சமி நில மீட்பு' பற்றி திருமாதான் பேச வேண்டியிருக்கிறது. சினிமா பெயர் மாற்றம் பற்றியும். குஷ்புவை எதிர்த்தும் நடக்கும் போராட்டங்களுக்கு கிடைக்கும் ஊடக கவனம், இது போன்றவற்றில் விழுவது கிடையாது. திருமா நடத்திய/நடத்தும் மற்ற போராட்டங்களை பொதுவாய் பலர் கேள்விப்பட்டதும் கிடையாது. அவரது கடந்த ஒன்றரை ஆண்டு நடவடிக்கைகளை முன்வைத்து, அதற்கு முந்தய பத்தாண்டு நடவடிக்கைகளையும், அதன் மூலம் நிகழ்ந்த எழுச்சியையும் புறக்கணிக்க முடியாது. விடுதலை சிறுத்தைகளின் இருப்பின் மூலம், தலித் பிரச்சனைகள் சைடு ட்ராக்கிலாவது கவனிக்கப் படும். குறிப்பாக மற்ற வேறு யாரும் அதை செய்யப் போவது இல்லை என்ற நிலமையில், திருமாவுக்கு ஆதரவாக எண்ணுவதுதான், தலித் சார்பு உள்ளவர்களுக்கான இப்போதைக்கான வழிமுறையாய் தோன்றுகிறது.

திருமாவை ஒரு தலித் போராளி என்று பார்க்காமல், ஒரு அரசியல்வாதி என்று பார்த்தால், இன்றய அரசியலில், மற்ற அனைவரோடும் ஒப்பிடும்போது, அவரிடம் தான் கொஞ்சாமாவது விவஸ்த்தையும், நேர்மையும் இருக்கிறது. அதிமுக பக்கம் சென்றதை நியாயபடுத்திப் பேசிய போது நிதானம் காட்டியதிலும், வைகோவை போல் கூட்டணியில் சங்கமித்து விட்டதென்றாகிய பின் வாய்க்கு வந்த படி உளராததிலும், ஜெயா டீவி நேர்காணலில் கூட குறைந்த அளவே அம்மா புகழ் பாடி, தேவையான அளவே கேனத்தனமாய் பேசியதிலும் இன்றய அரசியலில் அவரே ஓரளவாவது பொருட்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறார் என்று தோன்றுகிறது.

அந்த வகையில் திருமாவளவனும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இன்று அரசியலில் அடைந்திருக்கும் இடம் மிக முக்கியமானது. திமுகவில் இருந்திருந்தால் கிடைத்திருக்க கூடியதை விட அதிகமாக கிடைத்தாலும், அவருடைய பலத்திற்கு ஏற்றார் போல இடங்கள் கிடைத்திருக் கின்றனவா என்று தெரியவில்லை. நான் வாழும் பகுதியில் அவருக்கு மிக பெரிய ஆதரவு இருப்பது தெரிகிறது. அதிமுக பக்கம் சேர்ந்த சில தினங்களிலேயே சுவர்களில் இங்கே வேலை தொடங்கிவிட்டது. எப்படியிருந்தாலும் இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கணிசமான வெற்றி பெற்றால், அதன் மூலம் கைப்பற்றப் போகும் அரசியல் வெளியும் அங்கீகாரமும், இன்னொரு மைல் கல்லாக இருக்கும். இவற்றின் மூலம், எந்த அளவு தலித் நலன்களுக்கு, தலித் அரசியலுக்கு குரல் கொடுக்கும் சாத்தியங்களும், அதே நேரம் லோக்கல் தளத்திலான போராட்டங்களில் சமரசம் செய்யாமல் இருக்கும் சவாலும்தான், அக்கறைக்கும் கவனத்துக்கும் உரியதே ஒழிய, சட்டசபைக்குள் விசியினர் பெறும் பிரதிநிதித்துவம் அல்ல. இவை குறித்து காலப்போக்கில்தான் பேசமுடியும். இப்போதைக்கு விடுதலை சிறுத்தைகள் கணிசமாய் வெற்றி பெறுவது ஒரு நல்ல அறிகுறியாகவே இருக்கும்.

(மன்னிக்கவும், இன்னும் ஒரு பதிவு வரும்.)

Post a Comment

14 Comments:

Blogger Muthu said...

//ஜெயா டீவி நேர்காணலில் கூட குறைந்த அளவே அம்மா புகழ் பாடி, தேவையான அளவே கேனத்தனமாய் பேசியதிலும் //

ஹி ஹி..

திருமாவளவன் போன்றவர்கள் விஜயகாந்தைவிடவும் பலம் பெறுவது அவசியம்.பார்ப்போம்.நம்புவோம்.

5/02/2006 4:55 PM  
Blogger அருண்மொழி said...

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 11 இடங்கள்???

I thought amma gave only 9 seats.

5/02/2006 5:24 PM  
Blogger சீனு said...

திருமா மேல எனக்கு சில விடயங்களில் வெருப்பு இருந்தாலும், எரிகிற கொள்ளியில் எது நல்லது என்று பார்க்க வேண்டியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இன்று ஓரளவேணும் இவர் பின்னால் திரள்கின்றனர். இதை அவர் மாலடிமை போல (அதாங்க ராமதாஸ் [எ] இராமதாசு) தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் இருப்பார் என்று நம்புவோமாக.

5/02/2006 5:53 PM  
Blogger ROSAVASANTH said...

மன்னிக்கவும். அது 9 இடங்கள்தான். 9 ஜெயலலிதாவிற்கு ராசியானது என்பதும் சொல்லப்பட்டது. ஒரு அவசரத்தில் மறந்து 11 என்று வந்துவிட்டது. ஏன் 11 என்று வந்தது என்பதற்கு காரணம் எதுவும் புரியவில்லை.

திருத்தியதற்கு மிகவும் நன்றி.

5/02/2006 5:54 PM  
Blogger Prasanna said...

Hi

Tend to agree with your observations that Thiruma comes across as balanced Dalit Politician

But still i feel that he should not make common cause with Ramadoss on useless forums like Tamil Protection Front or dissipate his energy in mindless opposition to liberalisation/globalisation

What Dalits need is English Education so that they meaningfully participate in the economic activity in the emerging India which moving forward will only be driven by Private Enterprise.Government will cease to be a big employer in the future

So instead of identifying himself with leftist ideology(they believe in perpeuating poverty),Dalits can fully emrace the Market forces atleast as short -term tactics to achieve ecomomic affluence

I have been immensely impressed with the views of Chandrabhans Prasad who i think is a really visionary dalit writer

He has been advocating the participation of Dalits in the liberalisation process

What prevents them now is being deprived of English Education - movements like Tamil Protection forces will only marginalise them more and keep them economically backward

i hope my views are taken in the spirit its written in.This is not a anti-tamil stance but a pragmatic position needed to integrate with the global society

5/02/2006 6:19 PM  
Blogger Prasanna said...

Hi

Tend to agree with your observations that Thiruma comes across as balanced Dalit Politician-not prone to rable rousing and very measured in his responses.

i feel that he should not make common cause with Ramadoss on useless forums like Tamil Protection Front or dissipate his energy in mindless opposition to liberalisation/globalisation

What Dalits need is English Education so that they meaningfully participate in the economic activity in the emerging India which moving forward will only be driven by Private Enterprise.Government will cease to be a big employer in the future

So instead of identifying himself with leftist ideology(they believe in perpeuating poverty),Dalits can fully emrace the Market forces atleast as short -term tactics to achieve ecomomic affluence

I have been immensely impressed with the views of Chandrabhans Prasad who i think is a really visionary dalit writer

He has been advocating the participation of Dalits in the liberalisation process

What prevents them now is being deprived of English Education - movements like Tamil Protection forces will only marginalise them more and keep them economically backward

i hope my views are taken in the spirit its written in.This is not a anti-tamil stance but a pragmatic position needed to integrate with the global society

5/02/2006 6:21 PM  
Blogger ROSAVASANTH said...

hi prasanna, Thanks for focusing on Chandrabhans idea. I also agree with you, that Dalits should take a lead or get a share through the globalisation. At the same time, getting represented in election politics is also important. more later, thanks!

5/02/2006 6:28 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

//அதிமுக பக்கம் சென்றதை நியாயபடுத்திப் பேசிய போது நிதானம் காட்டியதிலும், வைகோவை போல் கூட்டணியில் சங்கமித்து விட்டதென்றாகிய பின் வாய்க்கு வந்த படி உளராததிலும்...//

இதேபோல், திமுகவின் தேர்தல் அறிக்கையில் எங்கோ மூலையில் இருந்த கலர் டிவி பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக, "மக்களுக்கு இலவசக் கல்வி கொடுப்பதைப் பற்றி பேசாமல் இலவச கலர் டிவி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னவரும் திருமா மட்டும்தான். இதுவும் "கலர் டிவி மட்டும் குடுத்தா கேபிள் கனெக்ஷன் யாரு குடுக்குறது. கரண்ட் பில் எப்படி கட்றது" என்று வைகோ மாதிரி ஆட்கள் கத்திய கத்தலில் எடுபடாமல் போய்விட்டது.

5/02/2006 6:34 PM  
Blogger ROSAVASANTH said...

முத்து, சீனு, சுந்தரமூர்த்தி கருத்துக்களுக்கு நன்றி.

5/02/2006 7:56 PM  
Blogger arulselvan said...

I have to agree with Prasanna about the english education. Dalits should get on with life as a first priority - get an english education and move out of the stifling village environs . My feeling is that that is exacltly the general mood among dalits. Let the forwards and Other upper caste OBC -s who have already established themselves in the new power peking order take up the tamil cause and work for it
arul

5/02/2006 8:35 PM  
Blogger SnackDragon said...

வசந்த் , குஷ்பூ பிரச்சினை ,தலித் பிரச்சினை ஆகிய இரண்டும் வேறு வேறு போர்கள். வேறு வேறு எதிரிகள். முன்னதுக்கு எதிர்கட்சிகள் ரூபத்தில் எதிரிகள். பின்னதுக்கு எல்லாகட்சிகளும், அதாவது நம்மையும் சேர்த்து. குஷ்பூ பிரச்சினைக்காக தலித் அரசியலை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் அல்லது இரண்டையும் ஒன்றாக பேசவேண்டிய அவசியம் கூட இல்லை என்பது என் கருத்து. தமிழகத்தில் பெண்ணியத்துக்கு குரல் கொடுத்தால் எத்தனை பெண்களின் வாக்குகளை இழக்கவேண்டி வரலாம் என்பது எனக்கும் உங்களுக்கும் அவசியமில்லாமல் இருக்கலாம், திருமாவுக்கு அவசியம். இன்னும் ஒருபடி மேலே போய் "கற்பு அரசியலைக் " கொண்டாவது தலித்துக்கான அரசியல் வெளியைப் பெறுவது அவசியம் என்றுதான் சொல்வேன். நீங்கள், கற்பு அரசியலைக் காரணமாகக்கொண்டு திருமாவளவனை ஒதுக்குவது(அப்படிச்சொல்லவில்லை யெனினும்) என்பது ஆச்சரியம் அளிக்கும்படி உள்ளது. சரி ஒரு வாதத்துக்கு கேட்டால், கற்பைப்பற்றி நாம் இருக்கும் நிலைப்பாட்டில் தமிழகத்தில் எந்த தலைவன்/வி இருக்கிறார் சொல்லுங்கள்? அப்படி யாரவது முற்போக்கான கருத்தில் இருந்தாலுமேகூட, திருமாவளவன் பிற்பாடான கருத்தில் இருந்தாலுமே அவரை விமரிசிப்பது அரசியல் மற்றும் தேர்தல்களில் தேவைப்படாதது என்பேன்.
குஷ்பூ பிரச்சினையில் குஷ்புவுக்கு ஆதரவாக எந்தக் கட்சியும் குரல் கொடுக்கவில்லை. அல்லது அப்படித்தான் நடந்தது என்று நான் கவனித்தவரைக்கும் சொல்வேன். எந்த கொள்கைப்பேச்சுக்கும் நடக்கும் அதே கவனிப்பில்லாமைதான் குஷ்புவுக்கு ஆதரவாக பேசிய இயக்கங்களுக்கும்,தன்னார்வ தொண்டுநிறுவனங்களுக்கும் இந்த முறை கிடைத்தது.

5/02/2006 10:43 PM  
Blogger Kannan said...

//I have been immensely impressed with the views of Chandrabhans Prasad who i think is a really visionary dalit writer//

aye aye...

5/03/2006 2:57 PM  
Blogger நியோ / neo said...

ரோசா

நிரம்ப நாட்களுக்குப் பின்னர் நிறைவாக எழுதியுள்ளீர்கள் - உங்கள் தேர்தல் பற்றிய 4 பதிவுகளையும். இன்னும் சில நாட்களில் விரிவாகப் பின்னூட்டம் எழுதுகிறேன்!

சில கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உள்ளது - எனினும் பூடகமற்ற வெளிப்படையான உங்கள் எழுத்து - இதுகாறும் இங்கு (தமிழ்மணத்தில்) படித்த சில அஜீரண எழுத்துக்களின் தாக்கத்தை குறைக்க உதவியுள்ளது - அதற்கு என் நன்றிகள் :)

5/07/2006 6:44 PM  
Blogger ROSAVASANTH said...

நியோ நன்றி!

திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றுதான் தோன்றுகிறது. பார்போம்!

5/09/2006 3:43 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter