ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, May 29, 2006

3 கவிதைகள் - பிரமீள்.

மொழியின் தீராத பக்கங்களில் கவிதையின் வாழ்வை எழுதிச் சென்ற பிரமீள்.

(பிரமீள் இறந்த பின், 'உன்னதம்' இதழில் சித்தார்த்தன் எழுதிய அஞ்சலி குறிப்பிற்கு நான் அளித்த தலைப்பு.)



அறைகூவல்

இது புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.

நடுவே நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என் குதிரை.

பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர்வீரா!
சொல் வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தோலும் தசையும்
ஓடத் தெரியாத
உதிரமும் மரமாய்
நடுமனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விறகுப் போர்வீரா!

தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.

சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து) எரியும்
சோதி ஒன்று வருகிறது.

சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்

நீ ஏந்தி நிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன் மீசையிலும்!

நில் விலகி,
இன்றேல் நீராகு!



முதுமை

காலம் பனித்து விழுந்து
கண்களை மறைக்கிறது.
காபாலத்தின் கூரையுள்
ஒட்டியிருந்து
எண்ணவலை பின்னிப்பின்னி
ஓய்கிறது மூளைச்சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில்
புலனின் வாடைக் காற்று
வாரியிரைத்த பழந்தூசு.
உலகை நோக்கிய என் விழி வியப்புகள்
உயிரின் இவ் அந்திப் போதில்
திரைகள் தொடர்ந்து வரும்
சவ ஊர்வலமாகிறது.
ஒவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்
அந்தியை நோக்குகிறேன்:
கதிர்க்கொள்ளிகள் நடுவே
எதோ எரிகிறது...
ஒன்றுமில்லை பரிதிப்பிணம்.



முடிச்சுகள்

கீழே நிலவு
நீரலையில் -
சிதறும் சித்தம்
சேரக் குவிகிறது
மேலே நிலவு.

' மலைமேல் நிலா ஏறி
மழலைக்குப் பூக்கொண்டு
நில்லாமல் ஓடிவரும்
குடிசைக்குள் சிதறும்
கூரைப் பொத்தல் வழி
மல்லிகை ஒளி.


மண்ணைப் பிடித்தான் கடவுள்
மனிதனாயிற்று ஆகி
அது என்ன உளிச்சத்தம்?
கல்லை செதுக்கிச் செதுக்கி
கடவுளைப் பிடிக்கிறது
மண்.

ஜாதியம்தான் வாய் ஓதும்
நாளாந்த வேதம்
அப்பப்போ வாய்
கொப்பளித்துச் சாக்கடையில்
துப்பும் எச்சல்
வேதாந்த வாயலம்பல்.


சாக்கடைக்கும் சமுத்திரத்துக்கும்
சேர்ந்தாற்போல் சாந்நித்யம்
நிலவொளியில்


முடியாது மணலைக்
கயிறாய் திரிக்க
காலத்தைக் திரித்து
நேற்று நாளை
இரண்டுக்கும் நடுவே
இன்று முடிந்திருக்கிறது
முடிச்சின் சிடுக்கு - நான்.

அத்துவிதம் கணந்தோறும் நான்
செத்த விதம்

சொல்வேன் உண்டென்று
சொல்லில் இல்லாதது

சொல்வேன் உண்டென்று சொல்லில்,
இல்லாதது

சொல்வேன் உண்டென்று
சொல், இல்
இல்லாத
அது.

(இந்த கவிதையின்
டிவத்தில் அடுத்தடுத்த பத்தி வேறு இடங்களில் அலைன் ஆகவேண்டும். ஏனோ ப்ளாகர் மறுக்கிறது.)


பிரமீளின் கவிதைகள் சுந்தரமூர்த்தியின் பதிவுகளில்.

பிரமிள் கவிதைகள் - 1

பிரமிள் கவிதைகள் - 2

பிரமிள் கவிதைகள் - 3 - குறுங்காவியம்
கண்ணாடியுள்ளிருந்து

பிரமிள் - மேலும் சில குறிப்புகள்

Post a Comment

9 Comments:

Blogger Vaa.Manikandan said...

கவிதைக்கு நன்றி.

இந்த வாரத்தில் 'தீவிர இலக்கியம்', அதனுள் விவாதத்திற்கான பொருள்கள்- நிறைய வைப்பீர்கள் என மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

5/29/2006 7:57 PM  
Blogger Maravandu - Ganesh said...

அன்புள்ள ரோசா

FYI

கால சுப்ரமணியம் நடத்தி வந்த லயம் சிற்றிதழில் , பிரமிளின் பேட்டிகள் நிறைய வெளிவந்திருக்கின்றன.


என்றும் அன்பகலா
மரவண்டு

5/29/2006 11:24 PM  
Blogger ROSAVASANTH said...

/கால சுப்ரமணியம் நடத்தி வந்த லயம் சிற்றிதழில் , பிரமிளின் பேட்டிகள் நிறைய வெளிவந்திருக்கின்றன.//

ஆமாம், அது 'மீறல்' வெளியிட்ட பிரமீள் சிறப்பிதழின் தொடர்ச்சிதான். நன்றி.

5/30/2006 2:00 AM  
Blogger ramachandranusha(உஷா) said...

ரோசாஜி, கவிதைகளை அலச பலரும் வருவார்கள் என்று எதிர் பார்த்தேன்.
மிரள மிரள முழிப்பவளுக்கு கவிதை என்ன சொல்கிறது என்று சொல்ல முடியுமா? பின்னுட்டத்தில் கூட கவிதையை யாரும் பேச காணோமே? என்னைப் போன்று பலரும் மிரண்டுப் போயிருக்கிறார்களா? தாலாட்ட போனவர்களை அழைக்கிறேன் :-)

5/30/2006 3:20 PM  
Blogger ROSAVASANTH said...

உஷா, கவிதைள் அகவாசிப்புக்கு உரியது. அதனால் பலர் அதை படித்து, கிடைத்ததை உள்வாங்கிவிட்டு சென்றிருக்கலாம். கவிதை என்ன சொல்ல வருகிறது என்று விளக்குவதை போல அபத்தம் இருக்க முடியாது. கவிதை பற்றி எழுதுபவர்களும் அது என்ன சொல்ல வருகிறது என்பதை பற்றி எழுதுவதில்லை. தங்கள் வாசிப்பாக வேண்டுமானால் சொல்லலாம். மேலும் கவிதை எதையாவது சொல்ல வேண்டும் என்று எழுதப்படவேண்டியதில்லை.

பிரமீளின் முதுமை கவிதை முதுமை பற்றிய என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் மூப்பை பல வித படிமங்கள் கொண்டு கவிதையாக்கியிருக்கிறார். மற்றதெல்லாம் நேரடிகாவே கிட்டத்தட்ட இருக்க, 'கதிர்க்கொள்ளிகள் நடுவே
எதோ எரிகிறது...
ஒன்றுமில்லை பரிதிப்பிணம்." என்ற வரி மட்டும் பல வித வாசிப்புகளுக்கு கொண்டு செல்கிறது. இப்போது விரிவாய் எழுத நேரமில்லை, அடுத்த போஸ்ட்!

5/30/2006 3:46 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

நன்றி வசந்த், முதல் கவிதையை பலமுறை படித்துவிட்டேன். அதில் கவரப்பட்டு, யாராவது அலசி
ஆராய்வீர்கள் என்று ஆவலுடன் காத்திருந்து ஏமாந்தேன். அதன் விளைவே முந்தைய பின்னுட்டம்.
வரிக்கு வரி பொருள் சொல்ல கேட்கவில்லை, சாதாரண வாசிப்புக்கு இக்கவிதைகள் பயமுறுத்துகின்றன.

5/30/2006 4:10 PM  
Blogger Vaa.Manikandan said...

//கவிதை என்ன சொல்ல வருகிறது என்று விளக்குவதை போல அபத்தம் இருக்க முடியாது. கவிதை பற்றி எழுதுபவர்களும் அது என்ன சொல்ல வருகிறது என்பதை பற்றி எழுதுவதில்லை. தங்கள் வாசிப்பாக வேண்டுமானால் சொல்லலாம்.//

முழு சம்மதம். எனக்கு இதில் ஒரு கருத்து இருக்கிறது. தன்னைக் கவர்ந்த கவிதைகளை மற்றவரின் பார்வைக்கு முன்வைக்கும் போது, தனக்கான புரிதல்களை சொல்லிவிடலாம் எனத் தோன்றுகிறது. அனைவரின் புரிதலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் குறிப்பிடும் பார்வை எனக்கு வேறு கதவுகளை திறந்துவிடக்கூடும். படைத்தவனுக்கே புரிபடாத பார்வையை வாசகன் தந்து விடக் கூடும். நல்ல விவாதம் அரங்கேறலாம்.

5/30/2006 5:03 PM  
Blogger கார்திக்வேலு said...

ரோசாவசந்த்,
தாங்கள் தேர்வு செய்த இரண்டு கவிதைகளுமே சிறப்பானவை.
படித்து முடித்ததும் மிக அரிதான ஒரு நிறைவையும், உவகையும் அளிக்கிறது.

மணி சொல்லியிருக்கும் கருத்திலும் எனக்கு உடன்பாடே.

//அதில் கவரப்பட்டு, யாராவது அலசி
ஆராய்வீர்கள் என்று ஆவலுடன் காத்திருந்து ஏமாந்தேன். அதன் விளைவே முந்தைய பின்னுட்டம்.வரிக்கு வரி பொருள் சொல்ல கேட்கவில்லை, சாதாரண வாசிப்புக்கு இக்கவிதைகள் பயமுறுத்துகின்றன//

இதில் உஷா கூறி உள்ளது போல் பலருக்கு சில வகையான கவிதைகள்,மொழிக் கட்டமைப்பிலும்,பார்வையிலும்,சொற்பொருள் அடர்த்தியிலும் எளிதில் அனுக முடியாதது போன்ற ஒரு பிம்பதை தோற்றுவிக்கின்றன.

அதே சமயதில் அவரே கூறியுள்ளது போல அந்தக் கவிதை நேர்த்தியில்
உள்ள உயிர் துடிப்பால் கவரவும் படுகிறார்.

"Things should be made as simple as possible, but not simpler."
கவிதை தொடர்பான எந்த ஒரு கலந்துரையாடலும் பல "disclaimer" உடனே தான் அரம்பிக்க வேண்டியுள்ளது :-).

I feel they just need some "pointers" and "suggestions" to expand and be exposed to unique and novels way of expressions.
தோன்றும் பொழுதே கவிஞனாகவோ / வாசகனாகவோ யாரும் பிறப்பதில்லை
எல்லாம் நடைவழியில் அறிந்து தெளிவது தானே

["வானமற்ற வெளி"-- பிரமிளின் கவிதை பற்றிய கட்டுரைகளை கால சுப்ரமணியம்
புத்தகமாக தொகுத்துள்ளார்.]

5/31/2006 11:35 PM  
Blogger saravana said...

"கீழே நிலவு
நீரலையில் -
சிதறும் சித்தம்
சேரக் குவிகிறது
மேலே நிலவு".
மிக உணர்வுபூர்வமான வரிகள் ..அருமையான கவிதை தேர்வு .வாழ்த்துக்கள்...
http://aadaillathavarigal.blogspot.com/

10/22/2010 6:11 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter