ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Tuesday, May 30, 2006சொல்லித் தந்த பூமி!ஒரு வருடத்திற்கும் மேலாக என் வீட்டில் இந்த அதிசயம் நடந்து வருகிறது. பையனுக்கு ஒன்றரை வயது. எல்லா குழந்தைகளை போல பல காரணங்களுக்காக அவன் அழுவதை, சில நேரங்களில் மிக தீவிரமான குரலில் அழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குழந்தையின் அழுகைக்கு பொதுவாக பசி, தூக்கமின்மை காரணமாய் இருக்கலாம். அப்படியில்லாமல் நம்மால் எளிதில் விளங்கி கொள்ள இயலாத பல காரணங்களினாலும் குழந்தைகள் அழ நேர்கிறது. எளிதில் தெரிந்துணர முடியாத உடல் உபாதை, உடை அணிகலனின் உறுத்தல் தொடங்கி, மூளை பாகங்களின் புதிய வளர்ச்சி வரை பல காரணங்கள் இருக்க கூடும். இப்படி தீவிரமான காரணங்கள் எதுமில்லாமலே அல்லது நம் ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களால் கூட கட்டுபடாமல் குழந்தைகள் அழக்கூடும். கி. ராஜநாராயணன் 'கரிசல் காட்டு கடிதாசிகள்' தொகுப்பில், விடாமல் பல மணிநேரங்கள், யாராலும் சமாதான படுத்த முடியாமல், தொடர்ந்து அழுத குழந்தையை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியிருப்பார். வயதான மூதட்டி ஒருவர் , நாலு முள வேட்டியை இரு பக்கங்களிலும் பிடித்துகொள்ள செய்து, குழந்தையை அதில் சரித்து வைத்து, குறிப்பிட்ட கோணத்தில் ஆட்டி அழுகையை நிறுத்தியது பற்றி எழுதியிருப்பார். அதற்கான நவீன மருத்துவத்தின் விளக்கம் எதுவும் இல்லாமல் இருப்பது பற்றி கட்டுரை பேசும். நவீனமாக்கி கொண்ட வாழ்க்கையில் இது போன்ற மரபு வைத்தியங்கள் கிடைப்பதில்லை. தலைமுறை தலைமுறையாய் பாடபட்டு வரும் பாட்டியின் பாடல்கள், கதைகள் என் மகனுக்கு கிடைக்கப் போவதில்லை. நவீன வாழ்க்கையின் பல பயன்/வசதிகளில் இது போன்ற அரிய இன்பங்கள் அவனுக்கு நிராகரிக்கப் படுகிறது. தளையற்ற முறையில், பாரபோலிக் பாதையில் மூத்திரம் அடிக்க கூட, அவனை ஜப்பானில் இருந்த 8 மாதங்களுக்கு அனுமதிக்கவில்லை என்பது, அதைவிட எல்லாம் கொடுமையாய் படுகிறது. ஜப்பானில் இருந்த அவனது எட்டு மாதங்களில், ஜப்பானிய தத்தாமி அறையை அசிங்கம் செய்தால், காலி செய்யும் போது கட்டவேண்டிய தொகையை நினைத்தாவது 'நாப்பி' என்ற கருமத்தை போட்டு, நான் பெற்ற இன்பத்தை அவனுக்கு தராமல் கொடுமை படுத்த வேண்டியிருந்தது. அதைவிட கொடுமையாய் படுவது ஒரு குழந்தைக்கு தன் குஞ்சில் அளையும் சுதந்திரத்தை நிராகரிப்பது. கைக்கு இலகுவாக எட்டகூடிய இடத்தில் கிலுகிலுப்பை வடிவில், பிசந்து ஆட்டகூடிய கவர்ச்சியுடன் இருக்கும், தனது குஞ்சை தொடக்கூட விடாமல், இந்த டைஃபர் கருமத்தை போட வேண்டி யிருந்தது. அவன் அழும்போது இந்த கோபமெல்லாம் கூட சேர்ந்து கொள்ளுமோ என்னவோ! பசி, தூக்கம் தவிர்த்து நமக்கு புலப்படாத காரணங்களால் அழ நேரிடும் போது, நாம் செய்ய கூடிய ஒரே விஷயம் கவனத்தை திசை திருப்புவது. பிறந்த சில மாதங்களுக்கு கிலுகிலுப்பையின் நவீன வளர்ச்சியடைந்த விளையாட்டுப் பொருட்கள் உதவக் கூடும். கனமான நிறங்கள், குறிப்பாய் சிவப்பு, கனமான நீலம் கவனத்தை கவரக் கூடியவை. சிவப்பு மூடியிட்ட டப்பாக்கள், கொடியில் ஆடும் அம்மாவின் திக் நீல நிற நைட்டி, இவற்றின் அருகே தூக்கி காட்டலாம். அவருக்கு அதைவிட மேலே உத்திரம் பார்வையில் ஆடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஜப்பானில் நிலம் நடுங்கினாலொழிய, தானே ஆடக்கூடிய சாத்தியம் இல்லாததால், அவரை தூக்கி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க வேண்டும். மேலே உத்தரம் எதிர்திசையில் நகர்வதற்கான காரணத்தை கண்கொட்டாமல் ஆராய்ந்து கொண்டிருப்பார். கொஞ்சம் சுமாராய் பாடுவதாக எனக்குள் பலர் ஏற்றிவிட்ட எண்ணத்தின் காரணத்தினால், எழுபதாண்டு தமிழ் திரைப்படப் பாடல்களில் அந்த நேரத்தில் தோன்றுவதை நடிப்புடன் பாடுவேன். இப்படி பாடிய பல பாடல்களில், எதிர்பாராத விதமாய் அவன் தானே செட்டிலாகி கொண்டதுதான் 'அள்ளி தந்த புமி அன்னை அல்லவா!'. வீம்பான அழுகையின் போதெல்லாம் இந்த பாடலை பாடினால் அவன் அழுகை நின்று அழுத்தமாய் என் முகத்தையே கவனிப்பதை, துணைவிதான் முதலில் கவனித்தாள். பிறகு அது பழக்கமாகி எத்தனையோ முறை அழுத போதெல்லாம், படலின் துவக்க ஹம்மிங்கை இழுக்கத் தொடங்கியவுடனேயே, விசை அமுங்கியது போன்ற கணப்பொழுதில் அழுகை நின்று, நான் பாடுவதையே கவனிக்கத் தொடங்கினான். இது மிகவும் பழகி, அவன் ஒவ்வொரு முறை அழும்போதும் இந்த பாடல் (என் குரலில் அல்லது மியூசிக் இண்டியா ஆன்லைன் தயவில், இறுதியில் டீ நகரில் கண்டெடுக்க நேர்ந்த MP3 மூலம் தேவையான வால்யூமில் 'மலேசியா' பாட) ஒரு நிவாரணமாகவே எங்களுக்கு வாய்த்தது. அழத் தொடங்கி பசி, தூக்கம், உறுத்தல் போன்ற காரணங்கள் இன்றி, இந்த பாடலையும் மீறி அழுகை தொடர்ந்தால், அது விபரீதமானது என்ற எங்களின் அனுமானம் தவறவில்லை. இரண்டு தீவிரமான தருணங்களில் இந்த அனுமானம் உதவிய பயனை மறக்க இயலாது. இந்த மாயத்தை என் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவர் முதலில் சிரித்த விதம் மிகவும் எரிச்சல் தந்தது. நான் புண்படக் கூடாது என்று, 'எப்படியோ வாழ்க்கைல இந்த மாதிரி அஸம்ஷன்ஸும் சுவாரசியமும் தேவைதான்' என்ற வகையில் சொன்னது மேலும் எரிச்சலை மட்டுமே வரவழைத்தது. அவரிடம் அது குறித்து மேலே பேசுவதில்லை என்று முடிவு செய்தேன். இன்னொரு நண்பனிடம் பேசிய போது, முதல் முறை நான் பாடிய போது, பாடிய தருணத்தில் எதாவது நிவாரணம் ஏதேச்சையாய் கிட்டியிருக்கலாம்; உதாரணமாய் வலியோ உறுத்தலோ இருந்து, தூக்கி கொண்டு பாடும் போது, அது நீங்கியிருக்கலாம்; இதை ஒத்த வேறு காரணமும் இருக்கலாம் என்று தர்க்க பூர்வமாய் அணுகினான். அவன் சொன்ன காரணம் உண்மையாகவே இருக்கலாம். நமக்கு புலப்படாவிட்டாலும், நாம் கையில் வைத்திருக்கும் சட்டகத்தினுள் விளங்காவிட்டாலும், இயற்கை தனக்கான ஒரு சட்டகத்தினுள் எல்லாவற்றிற்கான விளக்கங்களை அடக்கி கொள்கிறது என்ற அடிப்படையில்தானே மனித இனம் தன் அறிதலை விரிவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாக இந்தப் பாடல் மீதான மகனது ஈர்ப்பு குறையாமல், அதன் டெசிபல்களின் மாயத்தனம் தரும் ஆச்சரியத்தை, ஏதாவது தர்க்கத்தை அளித்து சாதாரணமாக்கி விட என் மனம் ஒப்பவில்லை. கடவுள் இறந்து விட்ட உலகில், கற்பிதங்களும், தர்க்கத்திற்கு பிடிபடாமல் அதற்கு அப்பாற்பட்டதாய் தோன்றும் நம்பிக்கைகளும், வாழ்வின் அத்தியாவசியமாக தோன்றுகிறது. ஒரு குழந்தையை கொண்டு அதை அடைவதே இயல்பானதாகவும் இருக்க முடியும். அதை மிக எளிதாக விளங்கிக் கொள்ள மனம் ஒப்பவும் இல்லை. அதற்கு பிறகு யாரிடமும் இதை பற்றி பேசியதில்லை. பல மாதங்கள் கழித்து இங்கே பதிகிறேன். இப்போது பாடலுக்கான மரியாதை ரொம்பவே குறைந்துவிட்டது. வளர்ந்து மொழி வழியில் சிந்திக்கத் தொடங்கத் தொடங்கும் பருவத்தில், இந்த அதிசயம் மறந்து எல்லாம் சாதாரணமாகவும் ஆகி விடக்கூடும். பாடலை கேட்க. சொல்லத்தேவையில்லை இசை: இளயராஜா. படம்: நண்டு பாடியவர்: மலேசியா வாசுதேவன் அள்ளித் தந்த பூமி அன்னை யல்லவா சொல்லித் தந்த வானம் தந்தை யல்லவா ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் - இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள் சேவை செய்த காற்றே பேசாயோ ஷேமங்கள் லாபங்கள் யாதோ பள்ளி சென்ற கால பாதைகளே பாலங்கள் மாடங்கள் ஆஹா! புரண்டு ஓடும் நதி மகள் இரண்டு கரையும் கவிதைகள் தனித்த காலம் வளர்த்த இடங்களே இளமை நினைவை இசைக்கும் தெருக்கள். காவல் செய்த கோட்டை காணாயோ கண்களின் சீதனம் தானோ கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே காரணம் மாதெனும் தேனோ விரியும் பூக்கள் வாசல்கள் விசிறியாகும் நாணல்கள் மனத்தில் ஊறும் மகிழ்சிப் படுக்கையே பழைய சோகம் இனியுமில்லை. |
18 Comments:
பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :-)
wow! ஒரு ஆச்சரியத்தைச் சொல்லவே இந்தப் பின்னூட்டம்.
http://www.musicindiaonline.com/l/cl/270/
உங்களின் இந்த இடுகையைப் படிக்கும்போது ஓடிக்கொண்டிருந்த பாடலைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்..
:)
நிஜமாகவா?! ஆச்சரியம்தான்!
ரோசாவசந்திடம் இருந்து வித்தியாசமான ஒரு பதிவு, ஆனால் வழக்கமான நடையிலேயே. அதுவே உங்கள் தனிச்சிறப்பு. நன்று.
ஏதாவது ஒரு பாடலின் வழியே குழந்தைகள் மனவமைதியடைந்து போவதை வெறும் தர்க்க ரீதியாக அணுகமுடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. பெரிதாய்ப் பாட்டுக்கள் தெரியாமல் வெறும் 'நீராரும் கடலுடுத்த'வில் தூங்க வைத்த என் பெண்களோடான அனுபவத்தில் சொல்கிறேன் !
இது போன்ற அனுபவம் எனக்கும் உண்டு.
குழந்தை அழுகிறது என மருத்துவரிடம் கேட்டால், குழந்தை அழாமல் என்ன செய்யும் என்று இங்கிருக்கும் மருத்துவர்களிடம் கிடைக்கும் பதில் எரிச்சலையே வரவழைக்கும். அதுவும் இரண்டாம் மாதம் தொடங்கி "gas", "colic" என குழந்தை அழும் பிரச்சனையை எதிர்கொள்வதற்கு மிகுந்த மனதிடம் வேண்டும்.
குழந்தை அழுது கொண்டே இருப்பதற்கு என்ன தீர்வு என்று யோசித்து எதுவும் கிடைக்காமல் சில ஆங்கில தாலாட்டு பாடல்களை குழந்தை அழும் நேரங்களில் போடுவதுண்டு. அதைக் கேட்டு குழந்தை தூங்கியதா, அல்லது தானாகவே தூங்கி விட்டதா என்பதும் தெரியவில்லை. ஆனால் அது ஏதோ ஒரு தாக்கத்தை குழந்தையிடம் ஏற்படுத்துகிறது என்பதை நான் உணர்ந்தேன். உங்களின் பாடல் டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
வெளிநாட்டில் குழந்தைப் பெற்றுக் கொள்வது போன்ற ஒரு அவஸ்தையான விடயம் எதுவும் இல்லை. இது குறித்து ஒன்றுமே தெரியாமல் திடிரென்று ஏதோ ஒரு திக்கு தெரியாத காட்டில் தள்ளப்பட்டது போல குழந்தை பிறந்த சமயத்தில் உணர்ந்தேன்.
நம் கிராமங்களில் குழந்தை வளர்க்கும் முறைக்கும் தற்கால குழந்தை வளர்க்கும் முறைக்கும் இருக்கும் பெருத்த வேறுபாட்டினையும் உணர்ந்தேன். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சரி இந்தப் பிரச்சனைகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதுவும் வெளிநாட்டில் எதிர்கொள்வது புதிதாக உள்ளது மற்றொருச் சிக்கல். குழந்தையின் அழுகையை நிறுத்த அவர்கள் மேற்கொள்ளும் பரம்பரை உத்திகளை வெளிநாட்டு சூழலில் அனுமதிக்கலாமா, அவர்களின் அரைகுறை அறிவை பயன்படுத்திக்கொள்ளலாமா எனப் பல உளவியல் பிரச்சனைகளை எதிர்கொண்ட அந்த நாட்கள் இப்பொழுது திரும்பி பார்க்கும் பொழுது சுவாரசியமாக இருந்தாலும் மிகுந்த அச்சத்துடனே அந்த நாட்களை கழித்தேன் என்று சொல்லலாம்
செல்வராஜ் நன்றி.
சசி உங்கள் அனுபவத்தையும் பதிந்ததற்கு நன்றி.
ப்ளாகர் ஏனோ தகறாறு செய்கிறது. பாடலுக்கான சுட்டியை பதிவினுள் வைப்பதில் ஏதோ பிச்சனை, அதானால் பாடலை கேட்க
http://www.musicindiaonline.com/p/x/lUvgYbWcqS.As1NMvHdW/
வேட்டியின் போட்டு குழந்தையை உருட்டி அந்த அழுகை நின்றால் அது 95% colic pain ஆக சாத்தியமிருக்கிறது. என்னுடைய முதல் பையனைப் போல 8.5 மாதங்களில் பிறந்திருந்தால் Colic Pain உத்தரவாதம். இதற்கு நவீன மருத்துவத்தில் விளக்கம் இல்லை என்று கி.ரா. சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர். அவர் கண்ட நவீன மருத்துவருக்குத் தெரியாமல் இருந்ததை வைத்து தன் கைவைத்தியத்தை Romanticize செய்திருக்கிறார். (நான் கைவைத்திய விரும்பி. அதிகம் தலைவலித்தால் இப்பொழுதும் வீட்டில் சுக்கு கஷாயம் உண்டு. ஆனால் என் சுக்கு கஷாயத்தின் மகிமை ஹார்வர்ட் மருத்துவர்களுக்குத் தெரியாது என்றெல்லாம் சொன்னால்...).
பாட்டு: 100% உண்மை. என் பெரிய பையனுக்கு 'ஆயர்பாடி மாளிகை' ' இந்தப் பச்சைக்கிளிக்கொரு' (என் கரகர குரலில், போர்ச்சுகலில் வசித்தபொழுது என் குரல்தான் சாத்தியம்) சின்ன பையனுக்கு 'கண்ணே கலைமானே' (ஒரிஜினல், ஜப்பானில் இருக்கும்பொழுது எம்.பி3 வந்துவிட்டது) இரண்டும் உத்தரவாதமாக அழுகையை நிறுத்தின.
இன்னும் கூட உண்டு. சின்ன பையனுக்கு அப்பொழுது பிரபலமாக இருந்த சந்தனத் தென்றலை (கண்டுகொண்டேன்^2), மற்றும் பெரிய பையனுக்கு என் அப்பா குரலில் 'ப்ரூகி முகுந்தேஹி' இரண்டும் காதில் விழுந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் காலி. உடனடியாக உதட்டைப் பிதுக்குவதில் தொடங்கி பெருங்குரலெடுத்து ஓலமிடுவதில் போகும். ஒருமுறை டோக்கியோ இக்கிபுக்குரோ நெரிசலில் காதில் சந்தனத் தென்றலை என்று சொல்லப்போக அவன் கத்தி, முழு டோக்கியோவும் அவனைத் திரும்பிப் பார்த்ததை நினைத்தால் இன்னும் சிரிப்பு வருகிறது.
என்னுடைய மாமாவின் மகன் கனடாவிலிருந்து வந்து கொஞ்சகாலம் கொழும்பிலும் ஊரிலும் நின்றுவிட்டு போனார். அவருக்கு வெயில் ரொம்ப பிடித்துப்போய்விட்டது. அவருடைய நிழல் அவருக்கு புதிய தோழமையாகிப்போனது.
என்னதான் அழுகை அடம்பிடிப்பு இருந்தாலும் அவரை மகுடிப்பாம்பாய் மயங்கி கிறங்கவ்வைக்கு விஷயம் ஒன்று உண்டு.
குழப்படி மன்னனான அவரை அது அடக்கி ஆட்கொள்வது எனக்கு பயங்கர ஆச்சரியம்.
அது,
சுட்டும் விழிச்சுடரே என்ற கஜினி (?) பாடல்.
---
பதிவை மிகவும் ரசித்தேன்.
ரோசா, பரவாயில்லை, உங்களுக்கு அதிர்ஷ்டம், ஒரு நல்ல ராஜா பாட்டு பயன்பட்டது...என் மகள் வெகு நாட்களாக 'ப்ரியமான தோழி'யில் வரும் 'காற்றே பூங்காற்றே' என்ற சொதப்பலான பாட்டை விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தாள், அதைக் கிட்டத்தட்ட ஆயிரம் தடவை கேட்டிருப்பேன் இதுவரை :-( இப்பொழுது தான் சில நாட்களாக 'செந்தூரப் பூவே' பக்கம் திரும்பி இருக்கிறாள்...crossing our fingers... ;-)
பேச்சு வர்றவரை குழந்தையின் அவஸ்த்தையைப் புரிஞ்சு கொள்வது ரொம்ப கஷ்டம்ப்பா.
பேச்சு வந்தபிறகு, நாம் படற கஷ்டம் வேற ரகம்ப்பா.:-)))))
This comment has been removed by a blog administrator.
நன்றி வசந்த்
என்க்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது. கேட்டு பல நாள் ஆகி விட்டது. சுட்டிக்கு நன்றி.
என் முதல் மகன் பிறந்த போது கேபிள் கனெக்ஷன் இல்லை. அவன் தூரதர்ஷனின் செய்தி ஆரம்பிக்கும்போது ஆரம்ப இசையொலி கேட்டால் வீட்டில் எங்கிருந்தாலும் தொலைக்காட்சிக்கு முன்னே ஓடிவந்து நின்று அது முடியும் வரை இமைகொட்டாமல் பார்த்திருப்பான். அந்த இசையும் லோகோவும் ஓடி முடிந்ததும் பழைய இடத்துக்கு போய்விடுவான். அழுதுகொண்டிருந்தாலும் உடனே நிறுத்தி முடிந்ததும் தொடர்வான். இதைக் கவனித்தபின் அந்த இசையை டேப்பில் இட்டு முயற்சித்தேன். டிவியில் வந்து தேடி படம் காணாவிட்டலும் இசை முடியும் வரை நின்று விடக்கண்டிருக்கிறேன்.
இப்போது மகள். அவள் சன்டிவி செய்திகளை அதே மாதிரி கவனிக்கிறாள். மேலும் சில குறிப்பிட்ட விளம்பரங்களும் அவளை ஈர்க்கின்றன. அந்த விளம்பர ஒலி கேட்டால் என்ன செய்து கொண்டிருந்தாலும் ஓடிவருவாள்.
குழந்தைகளின் உலகத்திலும் ஏதோ சில ரசனைகள்!
சமீபத்தில் 1973-ல் ஒரு ஹிந்தி படம் வந்தது, பெயர் "ஆ கலே லக் ஜா". அதில் சஷி கபூர் தன் மகனை நோகிப் பாடும் பாடல் "ஹே மேரே பேட்டே" என்னும் பாடல் சாதாரண டெம்போ மற்றும் சோகமான டெம்போவில் வரும். எனக்கு சோகமாக மெதுவான, பின்னணி இசைகளால் அதிகம் பீடிக்கப் படாத வெர்ஷன்தான் பிடிக்கும். அதே படம் தமிழில் "உத்தமன்" என்ற பெயரில் வந்தது, சிவாஜி அவர்கள் நடித்தது. இதே பாடல் "கேளாய் மகனே" என்று இரண்டு டெம்போக்களிலும் வந்தது.
என் பெண் ஆறேழு மாதக் குழந்தையாக இருந்த போது அவளை தோளில் தூக்கிவைத்துக் கொண்டு "கேளாய் மகளே" அல்லது "ஹே மேரீ பேட்டீ" என்று மெதுவான டெம்போவில் மாற்றிப் பாட, குழந்தை அப்படியே என் தோளில் சாய்ந்து கொண்டு, என் தோளை தட்டியபடியே உறங்கிப் போவாள். இது அவள் நான்கு வயதாகும் வரை தொடர்ந்தது. அது ஹிந்தியோ, தமிழோ எதுவானாலும் அதே நிலைதான்.
இதற்காகவே அவ்விரு பாடல்களின் முழு வரிகளையும் அப்படியே ஒரு பெண்குழந்தைக்கு தோதாக மாற்றிப் பாடுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
வெங்கட், கிரா அந்த வைத்தியத்த்தை பற்றி கட்டுரை எழுதிவிட்டு, நாம் புரிந்துகொள்ள முடியாமல் பல விஷயங்கள் இருக்கின்றன என்று பொதுவாய் விஸ்ராந்தியாய் வியந்திருப்பார். 'நவீன மருத்துவத்தில் அதற்கு விளக்கம் இல்லை'என்று அவர் ஏதோ ஆராய்சி பூர்வமாக நவீன மருத்துவத்துக்கு சாவால் விட்டோ, நவீன மருத்துவத்திற்கு எதிராகவோ சொல்லவில்லை. நான் எழுதிய விதம் தவறான வாசிப்பை உண்டாக்கியிருக்கிறது. அதற்கு மன்னிக்கவும்!
எனக்குப் பதில் தெரியவில்லை; தெரிந்து கொள்ள ஆவல். பதில் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்:
ஏன் எல்லா குழந்தைகளையும் டிவியில் வரும் பாடல்கள் மற்ற எல்லாவற்றையும் விடவும் விளம்பரங்கள் கவர்ந்திழுக்கிறதே; ஏன்?
அடிக்கடி மாறும் காட்சி என்றார் ஒரு நண்பர். அப்படித் தெரியவில்லை. இந்த cut-shot படக்காட்சிகளில் கூட உண்டு.
எதிர்காலத்துக்குப் பயன்படக் கூடிய சில குறிப்புகளுக்கு ரோஸாவுக்கும் மற்ற பின்னூட்ட நண்பர்களுக்கும் நன்றி. :-)
நல்ல பாடல்
மனதை தொடும் பாடல்
எனவே குழந்தையின் மனது அமைதியானது
ராஜாவின் தாலாட்டு !
Hi,
May be this is old blogspot...but I should comment here about this.
My Son will immediately, come to normal, if I hum any of his fav tamil songs..and he will became joyful.
Yes,certain sound does do some chemistry in your brain cells :)
Like how you became alert after your wify voice :)
Post a Comment
<< Home