ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Tuesday, May 30, 2006கண்கள் எங்கே?சிலருக்கு போதையேற்றிக் கொண்டால், அது மேலும் மேலும் போதையேற்றிக் கொள்வதையே தூண்டிக் கொண்டிருக்கும். கஞ்சா அடிப்பவர்களில் இந்த பண்பு அதிகம் காணப்படும். அது மாதிரி ஒரு சில பாடல்கள் மட்டும் திரும்ப திரும்ப கேட்டும் அலுக்காத அதே நேரம், ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மீண்டும் புதிதாய் ஒலித்து, மீண்டும் அதையே கேட்க தூண்டிக் கொண்டிருக்கும். ஜேசுதாசின் 'ஏழிசை கீதமே', எஸ்பிபியின் இளமை எனும் பூங்காற்று', லதாவின் 'மௌஸம் ஹை ஆஷிக்கானா!' (பாகிஸா) போன்றவை எனக்கான அத்தகைய பட்டியலில் சில. அதில் முதலில் இடம்பெறும் பாடல் 'கண்கள் எங்கே?'. இந்த பாடலை கணக்கற்ற முறை கேட்ட பின்பு, சுசீலாவை மட்டும் 'பாடகி' என்று அழைத்து மற்றவர்களை எல்லாம் வேறு ஏதாவது ஒரு வார்த்தையால் விளிக்க வேண்டும் என்பது என் தீர்க்கமான முடிவு. பெர்ஃபக்ஷன் என்பது இதற்கு மேல் சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. சுசிலாவை தவிர இதை இந்தியாவில் இருக்கும் வேறு எந்த பாடகியும் பாடமுடியும் என்றும் தோன்றவில்லை. பாடல் மிக மெதுவான வேகத்துடன் துவங்கி, நாம் வேறுபடுத்தி உணர முடியாத தொடர்சியுடன், மெள்ள மெள்ள வேகம் பெற்று ஒரு உச்சக்கட்டத்தை தொடுவதை உணரலாம். அதற்கான முக்கிய பாலமாக கோரஸை ஒரு வாத்தியத்தின் நிலையில் வைத்து எம், எஸ்.விஸ்வநாதன் பயன்படுத்தி யிருப்பதை கவனிக்கலாம். கோரஸ் இசை ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு பாணியில் வெளிபடுகிறது. எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு வேறு வழியில்லாமல் தன் மோனாடனியை ஈடுகட்ட பயன்படுகிறது. ரஹ்மான் தேவையான அளவு திறமையாக பயன் படுத்துகிறார். இளயராஜா பல பாடல்களில் தனக்கே உரிய உச்சநிலையில் பயன்படுத்தியிருக்கிறார். உடனடி உதாரணங்களாக 'மடை திறந்து', ராமன் ஆண்டாலும், 'ஆசையை காத்துல' என்று பல பாடல்கள்; இப்போது திருவாசகத்தில். 'பொல்லா வினையேன்'; பாரதி திரைப்படத்தில் கடைசியில் வரும் 'நல்லதோர் வீணை செய்தே..' பாடலில் மிக அனாசியமான முறையில் கோரஸை பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு சோக உணர்வை கொண்டு வருவதை உன்னிப்பாய் கவனித்தால் தெரியலாம், குறிப்பாய் பாடல் இறுதி பகுதியில். என்றாலுல் எம்.எஸ்.வி. அளவிற்கு எஃபக்டிவாக கோரஸை பயன்படுதியவர்கள் வேறு யாருமில்லை என்று என்றோ ஏற்பட்ட கருத்து மட்டும் மாற மாட்டேனென்கிறது. அதற்கு உதாரணமாக 'பார்த்த ஞாபகம் இல்லையோ' 'உன்னை நான் சந்தித்தேன்' அழகிய தமிழ் மகள் இவள்' என்று உடனடியாய் பல எண்ணிக்கைகளில் சொல்ல முடியும் என்றாலும், இந்த பாடல் அளவிற்கு கோரஸ் அற்புதமாய் இயைந்த ஒரு பாடல் வேறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. கோரஸை நீக்கி வேறு ஏதாவது செய்தால் பாடல் முற்றிலும் வீழ்ந்துவிடும் வகையில் கையாளப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.வி. நேரடியாய் காப்பி அடிக்கும் பழக்கம் இல்லாதவராயினும், இசையமைக்க மேற்கிலிருந்து, ஹிந்தியிலிருந்து பல பாடல்களை இன்ஸ்பிரேஷனாக கொண்டவர். (அது தேவா மாதிரி 'இன்ஸ்பிரேஷன்' இல்லை என்றாலும், அதை பற்றி கூட நேர்மையாய் "காப்பியடிக்கலாம் தப்பில்லை, ஆனா காப்பியடிச்சது எவனுக்கும் தெரியக் கூடாது, எவனாலயும் கண்டு பிடிக்க முடியாத படிக்கு காப்பியடிக்கணும்" என்று எம்.எஸ்.வி. ஒரு இடத்தில் சொல்லியிருப்பார்.) அந்த வகையில் 'கண்கள் எங்கே?' பாடலுக்கு ஹிந்தியில் (மேற்கில் நிச்சயமாய் இருக்க முடியாது) எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. ஒரு வகையில் ஒப்பிடக் கூடியதாய் 'பியா தோஸே நைன லாகேரே' இருக்கலாமோ என்று ஏனோ சம்பந்தமில்லாமல் (கோரஸ் காரணமாக?) இந்த கணத்தில் தோன்றினாலும், ஒப்பிடக்கூடிய அனைத்து பாடல்களையும் விட அற்புதமானதாக 'கண்கள் எங்கே?' வடிவெடுத்திருக்கிறது என்பது என் எண்ணம். பாடலை கேட்க. (பாடல் வரிகளை எழுதும் பொறுமை இப்போது இல்லை. மன்னிக்கவும்!) |
18 Comments:
ஓஓஓஓஓ.. நீங்களும் இசைரசிகரா?
நல்லது. வசந்!நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் அத்தனையும் அருமையானவை. இந்த கண்கள் எங்கே பாடலை அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுசிலா பாடினார். முன்பு பாடிய அதே குரல் சற்றும் மாறாமல் அப்படியே வந்தது.
' சொன்னதும் நீதானா.. சொல் என்னுயிரே ' பாடலும் அவருடையதுதானே?
மிகவும் அருமையான பாடல். நல்ல நினைவு கூறல். விஸ்வநாதனின் சிறப்புகள் என்றால் முதலில் வருவது, பாடகர் தேர்வு, அமுக்காத இசைக்கோர்வை, இனிய மெட்டுகள், கோரஸ் என்று சொல்லலாம். இந்தப் பாடல் அனைத்தும் சிறப்பாக அமைந்த பாடல்.
விஸ்வநாதன் காப்பி அடித்திருப்பார் என்று சொல்ல முடியாது. யாதோங்கி பாரத் படத்தை நாளை நமதே என்று எடுத்த பொழுது இசையமைக்க மறுத்தார். ஹிந்தி டியூன்களைப் பயன்படுத்தச் சொல்வார்களோ என்று.
ஆனால் inspirations இருக்கலாம். அது தவறில்லை. எந்த நல்ல இசையமைப்பாளரும் inspiration இல்லாமல் இருக்க முடியாது.
பி.சுசீலாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். In Mary Poppins movie, the Mary Poppins charactor is refered as Practically Perfect. It suits for P.Suseela also. அதாவது முழுமையான பாடகி. எனக்கும் மிகவும் பிடித்த பாடகி. ஏ.ஆர்.ரகுமான் வரைக்கும் பாடியிருக்கிறார். கார்த்திக்ராஜா கூட தனது முதல் படத்தில் பி.சுசீலாவைப் பயன்படுத்தியிருக்கிறார்.
"நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா..." என்ற சுசிலாவின் பாடல் விருது பெற்ற பாடல்.
//யாதோங்கி பாரத் படத்தை நாளை நமதே என்று எடுத்த பொழுது இசையமைக்க மறுத்தார். ஹிந்தி டியூன்களைப் பயன்படுத்தச் சொல்வார்களோ என்று//
விஸ்வநாதன் காப்பி அடித்திருப்பாரா தெரியாது. ஆனால் மேலே சொன்ன விஷயத்தை. எம்.எஸ்.வி ஓரிடத்திலே சொல்லி கேள்விப்படிருக்கிறேன். நாளை நமதே படம் துவங்கிய போது, எம்ஜிஆரிடம் மாட்டாமல் எஸ்கேப் ஆகிக் கொண்டிருந்தாராம். ஏனெனில்,அதே யாதோங்கி பாராத் ட்யூனைப் போடச் சொல்வார்களே என்று. சொந்தமாகப் போடலாம் என்று எம்ஜிஆர் உறுதி அளித்த பின்னரே எம்.ஏச்.விஸ்வநாதன் ஒத்துக் கொண்டாராம்.
சுசீலாவின் பாடல்களில் எனக்கு ரொம்ப பிடித்தது..
"குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் பிறந்தது கண்களீலே
சங்கு போன்ற இதழ்களிலே
ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
ஒரு நாள் இரவு
பகல் போல் நிலவு
கனவிலே என் தாய் வந்தாள்"
அப்பறம்,
"கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை..."
//பாடலில் மிக அனாசியமான முறையில் கோரஸை பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு சோக உணர்வை கொண்டு வருவதை உன்னிப்பாய் கவனித்தால் தெரியலாம், //
//கோரஸை நீக்கி வேறு ஏதாவது செய்தால் பாடல் முற்றிலும் வீழ்ந்துவிடும் வகையில் கையாளப்பட்டிருக்கிறது.//
அட உண்மைதான்!! கோரஸைப் பத்தி இத்தனை ஆராய்ச்சி செஞ்சி நான் பார்த்தே இல்லை.. படிக்க சுவையாக இருந்தது :)
சுசிலா, பேசிக் கேட்டு இருக்கீங்களா? அப்படியே தெலுகுவாரூ என்று நன்றாக தெரியும். ஆனால்
முதல் பாடலான "அமுதை பொழியும் நிலவே" வில் இருந்து எப்படி இந்த மொழி உச்சரிப்பு, இந்தளவு
பாடல்களில் ஸ்டஷ்டமாய் ( தமிழில் என்ன) உச்சரிக்கிறார்.
இருவர்" படத்தில் வரும் "பூக்கொடியின் புன்னகை" பாடியது சுசீலாவின் அண்ணன் மகளாம். வாய்ஸ் அப்படியே சுசிலாதான்.
பதிவையும் ரசித்தேன்.
பாடலையும் ரசித்தேன்.
http://cinemapadalkal.blogspot.com/2006/05/blog-post_30.html
ரோசா,
நட்சத்திரமானதுக்கு ச்சீயர்ஸ்!!! இப்படியே மசாலா பாட்டுபதிவுகளை போட்டுக்கொண்டிருக்காமல் சிலதை உடம்பு வணங்கி எழுதவும் என்று தாழ்மையோடு கேட்டுக்குறேன் ;-)
அனைவருக்கும் நன்றி. சந்திரவதனா பாடல் வரிகளுக்கு இன்னும் ஒரு கூடுதல் நன்றி.
கார்திக், இப்பவே கண் பஞ்சடைக்கிறது. சினிமாப் பாடல் பற்றியும் உடல் வணங்கிதான் எழுதுவதாக நினைக்கிறேன். ஆனால் நீங்கள் நினைப்பதற்கு பிறகு வருகிறேன். ஆனால் எவ்வளவு முடியும் என்று தெரியவில்லை.
ராகவன், பிரகாஷ், விஸ்வநாதன் நேரடி காப்பி அடித்ததில்லை என்றே நானும் நினைக்கிறேன். ஆனால் உந்துதல், அதுவும் தெளிவாய் தெரியும்படியான உந்துதல் பொதுவாய் எல்லாவற்றிற்கும் உண்டு. அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். சில இசை துண்டுகளை மேற்கிலிருந்து எடுத்திருக்கிறார். ஒரு உதாரணமாய் 'பச்சை கிளி' துவக்க இசை, அனுபவம் புதுமை. யாரந்த நிலவுக்கும் உண்டு. (ஆனால் ஒரிஜினல் எல்லாம் இப்போது பெயர் நினைவிலில்லை. இந்த தகவல்களை முழுங்கிய யாராவது வந்து எழுதலாம்.)
'வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்' ஹிந்தியிலிருந்து உந்தப்பெற்று வந்தது என்று நினைக்கிறேன். ஆனால் தமிழிலிருந்து போகவில்லையா என்று நிச்சயமாக தெரியுமா என்றால், எனக்கு தெரியாது. கேட்டுப் பாருங்கள்.
Do Sitaron Ka Zamin Par
http://www.musicindiaonline.com/p/x/Q5Omc69ubt.As1NMvHdW/
இன்று காலை உங்கள் பதிவை பார்த்தபிறகு நாள் முழுதும் இதை முணுமுணுத்து கொண்டிருந்தேன்.பழைய பாடல்களில் பிடித்த பாடல்கள் பொதுவாக இருப்பது ஆச்சரியம்
//'மடை திறந்து', ராமன் ஆண்டாலும், 'ஆசையை காத்துல' என்று பல பாடல்கள்//
பழைய கேசட்டை எல்லாம் தேட வெச்சீட்டீங்களே...ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் இவை...
அதுவும் அந்த மடைதிறந்து பாட்டு இருக்கே..
// ROSAVASANTH said...
ராகவன், பிரகாஷ், விஸ்வநாதன் நேரடி காப்பி அடித்ததில்லை என்றே நானும் நினைக்கிறேன். ஆனால் உந்துதல், அதுவும் தெளிவாய் தெரியும்படியான உந்துதல் பொதுவாய் எல்லாவற்றிற்கும் உண்டு. அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். சில இசை துண்டுகளை மேற்கிலிருந்து எடுத்திருக்கிறார். ஒரு உதாரணமாய் 'பச்சை கிளி' துவக்க இசை, அனுபவம் புதுமை. யாரந்த நிலவுக்கும் உண்டு. (ஆனால் ஒரிஜினல் எல்லாம் இப்போது பெயர் நினைவிலில்லை. இந்த தகவல்களை முழுங்கிய யாராவது வந்து எழுதலாம்.) //
விஸ்வநாதன் பாரம்பரிய இசையில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தாலும் மேற்கத்திய இசையில் ஈடுபாடும் பயன்பாடும் கொண்டிருந்தால் இரண்டையும் கலந்தும் நிறைய செய்திருந்தார். மாப்பிள்ளைக்கு மாமன் மனது என்று இளையராஜா பாடல். கர்னாடக அடிப்படை. ஆனால் மெற்கத்திய இசைக்கோர்வை. இதற்கு முன்னோடியாக விஸ்வநாதன் பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் பாடலைச் சொல்லலாம். இங்கே மேற்கத்திய அடிப்படை. ஆனால் கர்னாடக இசைக்கோர்வை. அவரும் முடிந்த வரை புதுமைகளைச் செய்திருக்கிறார். ஆனால் முறையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் குறைவுதான்.
inspirations இருந்ததை எனக்குத் தெரிந்து அவர் மறைத்ததில்லை. எங்கோ ரயிலில் போகையில் அந்தச் சத்தத்தில் இருந்து கூட அவருக்கு மெட்டுக் கிடைத்தது என்று சொல்லியிருக்கிறார்.
// 'வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்' ஹிந்தியிலிருந்து உந்தப்பெற்று வந்தது என்று நினைக்கிறேன். ஆனால் தமிழிலிருந்து போகவில்லையா என்று நிச்சயமாக தெரியுமா என்றால், எனக்கு தெரியாது. கேட்டுப் பாருங்கள்.
Do Sitaron Ka Zamin Par
http://www.musicindiaonline.com/p/x/Q5Omc69ubt.As1NMvHdW //
இதற்கு விஸ்வநாதன் இசையில்லை. எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான் இசை. இவர் மறைவிற்குப் பிறகு இவரது துணைவியை கடைசி வரை வைத்துக் காப்பாற்றி அவருக்கும் இறுதிச் சடங்கைச் செய்தாராம் விஸ்வநாதன்.
//இதற்கு விஸ்வநாதன் இசையில்லை. எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான் இசை.//
தகவலுக்கு நன்றி ராகவன். ஆனால் எம் எஸ் வி போட்ட முதல் சில படங்கள் சுப்பய்யா நாயிடு பெயரிலேயே வந்ததாக விஸ்வநாதன் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். இது அந்த வகையில் சேர்தியோ, இல்லையோ?
ரோசா சார்,
மெல்லிசை மன்னரை பொறுத்தவரை அவர் இந்தி இசையமைப்பாளர் நவுசத் அலியின் தீவிர ரசிகர் .அவருடைய பாதிப்பு இருப்பதை அவரே சொல்லியிருக்கிறார் .அதே போல நவுசத் அலியும் மெல்லிசை மன்னரை வெகுவாக சிலாக்த்திருக்கிறார் .
மெல்லிசை மன்னர் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் இங்கே நிறைய இருக்கிறது
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=1794
மற்றபடி சுசீலாவைப் பற்றி என்ன சொல்லுவது ? 'காதல் சிறகை காற்றினில் விரித்து' ,'ஆலயமணியின் ஓசைய நான் கேட்டேன்' ,'கங்கைக்கரை தோட்டம்' இப்படி அள்ள அள்ளக் குறையாத தேனமுது .ஈடு இணையில்லாத பாடகி என்பது என் கருத்து.
// ROSAVASANTH said...
//இதற்கு விஸ்வநாதன் இசையில்லை. எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான் இசை.//
தகவலுக்கு நன்றி ராகவன். ஆனால் எம் எஸ் வி போட்ட முதல் சில படங்கள் சுப்பய்யா நாயிடு பெயரிலேயே வந்ததாக விஸ்வநாதன் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். இது அந்த வகையில் சேர்தியோ, இல்லையோ? //
நிச்சயாமாக இல்லை வசந்த். ஏனென்றால் இந்தப் படம் வருகையில் (மன்னிப்பு என நினைக்கிறேன்) விஸ்வநாதன் தமிழகத்தின் நம்பர் 1 இசையமைப்பாளர்.
மீண்டும் நன்றி ராகவன். தோசிதாரோங்கா ஜமீன் பாடலின் நேரடியான காப்பியாக 'வெண்ணிலா வானில்'ஐ சொல்ல முடியாது. திறமையான மாற்றங்கள் இருக்கும். அதனால் எம் எஸ் வியோவென நினைத்தேன்.
Post a Comment
<< Home