ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Tuesday, May 30, 2006சாமியாரும், குழந்தையும், சீடையும்...-- புதுமைப்பித்தன். "மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான். "இருவரும் மாறி மாறிப் போட்டி போட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை. "நேற்றுவரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப் பிறந்த மனிதன் ஈடு காட்டிக் கொண்டு வந்தான் "இதில் வெற்றி -தோல்வி, பெரியவர் -சின்னவர் என்று நிச்சயிப்பதற்கு எப்படி முடியும்? 'நிச்சயிக்க என்ன இருக்கிறது?" ... இப்படியாக பின்னிக் கொண்டே போனார் சாமியார். எதிரிலே தாமிரவருணியின் புது வெள்ளம் நுரைக் குளிர்ச்சியுடன் சுழன்று உருண்டது. அவர் உடகார்ந்திருந்தது ஒரு படித்துறை. எதிரே அக்கரையில் பனைமரங்களால் புருவமிட்ட மாந்தோப்பு; அதற்கப்புறம் சிந்துபூந்துரை என்று சொல்வார்களே அந்த ஊர். இப்பொழுது பூ சிந்துவதற்கு அங்கு மரம் இருக்கிறது. அதைப்போல எண்ண குலவையும் ஏமாற்றத்தையும் சிந்துவதற்கு சுமார் ஆயிரம் இதயங்கள் துடிக்கின்றன. துடிப்பு நின்றவுடன் வைத்து எரிக்க அதோ சுடுகாடு இருக்கிறது. இப்பொழுது இந்த நிமிஷத்தில் கூடத்தான் அது புகைந்து கொண்டிருக்கிறது. தோல்வியின், ஏமாற்றத்தின் வாகனங்களை வைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது பலவீனந்தானே? பலவீனத்தை வைத்துக் கொண்டு நாலு காசு சம்பாதிக்க பிச்சைக்காரனுக்கு முடியும். மனுஷனால் வாழமுடியுமா? அதனால்தான் இந்தச் சுடுகாடு என்ற ரண சிகிச்சை டாக்டர், வாழ்க்கை என்ற நோயாளிக்கு மிக அவசியம். அதை இந்த சாமியார் அறிந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் இவருக்கு விரக்தி ஏற்பட்டது. இவருக்கு இடது பக்கத்தில் சுலோசன முதலியார் பாலம். கட்ட பொம்மு சணடையின் போது சமரசம் பேச முயன்ற துபாஷ் அவர். அவர்தான் அதை கட்டினது. திருநெல்வேலிக்காரர்களுக்கு அதில் அபாரப் பெருமை. முட்டையும் பதினீரும் விட்டு அரைத்த காரையில் கட்டியதாம். அதில் ஒரு தனிப் பெருமை. இதற்கு முன் எப்போதோ ஒரு முறை இதுபோல வந்த வெள்ளம் அடித்துக் கொண்டு வந்த வைக்கோல் போர், முன் பல்லை தட்டின மாதிரி இரண்டு மூன்று கணவாய்களை பெயர்த்துக் கொண்டு போய்விட்டது. இப்பொழுது மறுபடியும் கட்டிவிட்டார்கள். பொய்ப்பல் கட்டிகொண்டால் எப்படியும் கிழவன் தானே; அப்படித்தான் அதுவும் வயசு முதிர்ந்த நாகரிகம் ஒன்று தன்னை வலுவுள்ளது மாதிரிக் காட்டிக்கொள்வது போன்றிருந்தது. அதற்கும் சற்று அப்பால் பொதிகை. குண்டுக்கல் மாதிரி ஒரு குன்று. தெத்துக்குத்தான வானத்தின் சிவப்புக் கோரச் சிரிப்பை தாங்குவது போலப் படுத்திருந்தது குன்றின் தொடர். சாமியாருக்குப் பின்புறத்தில் சுப்பிரமணியன் கோவில்.அதாவது வாலிபம், வலிமை, அழகு, நம்பிக்கை இவற்றை யெல்லாம் திரட்டி வைத்த ஒரு கல் சிலை இருக்கும் கட்டிடம். அதற்கு பின்னால் ஒரு பேராய்ச்சி கோவில். மேற்குத் திசையின் கோரச் சிரிப்பிற்கு எதிர்ச் சிரிப்பு காட்டும் கோர வடிவம். இருட்டில் மினுக்கும் கோவில். வாலிபமும் நம்பிக்கையும் அந்த கோரச் சிரிப்பின் தயவில் நிற்பது போல, சாமியாரின் முதுகுப் புறத்திலிருந்தன. அவர் வெறுத்து விட்டவை; ஆனால் மனிதனால் வெறுக்க முடியாதவை. அதனால்தான் அவரது முதுகுப் புறமானது அவற்றிற்கு அப்பால் விலகிச் செல்ல முடியாது தவித்தது. சாமியாரின் வலது பக்கத்தில்... சாமியாரின் வலது பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தை, நான்கு வயசுக் குழந்தை, பாவாடை முந்தானையில் சீடையை மூட்டை கட்டிக் கொண்டு, படித்துறையில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிருந்து வெளி வரும் பொழுது ஓய்ந்துபோன சூரிய கிரணம் அதன் மேல் கண் சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்திற்கு ஏமாற்றம், குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் துளிக்கு தவம் கிடந்துதான் ஆக வேண்டும். குழந்தை சீடையை மென்று கொண்டு சாமியாரை பார்கிறது. சாமியார் வெள்ளத்தை பார்கிறார். வெள்ளம் இருவரையும் கவனிக்கவில்லை. "மனிதன் நல்லவன் தான்;தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அப்பொழுது அது தன்னிடமிருந்த தாக அவனுக்கு தெரியாது. இப்போழுது அறிவாளியாக அல்லல் படுகிறான். "சிருஷ்டித் தொழிலை நடத்துகிறவனுக்கு அறிவு அவசியம் என்பது அவனுக்கு அப்போது தெரியாது. இப்போழுது அவஸ்தைப் படுகிறான். அதற்காக அவனை குற்றம் சொல்ல முடியுமா? "மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்குக் கடவுள் என்று பெயர். மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்கத் தெரியாது. அழியும் வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக் கூடியது. "அதனால்தான் காத்திருக்கிறான். ஆனால் அவனுக்குத் துறு துறுத்த கைகள். அதனால்தான் பிசகுகளின் உற்பத்தி கணக்கு வரமபை மீறுகிறது..." என்றார் சாமியார். துறையில் தலை நிமிர்ந்து வந்த நாணல் புல் ஒன்று சுழலுக்குள் மறைந்துவிட்டது. குழந்தையும் 'ஆமாம்' என்பது போல் தலையை அசைத்துக்கொண்டு ஒரு சீடையை வாயில் போட்டுகொண்டு 'கடுக்'கென்று கடித்தது. அந்த படித்துறையில் 'கடுக்'கென்ற அந்த சப்தத்தைக் கேட்க வேறு யாரும் இல்லை. (கையில் புதுமை பித்தனின் ஒரே ஒரு தொகுப்புதான் உள்ளது, ஐந்திணை பதிப்பகம் முன்னாளில் போட்ட சின்ன சின்ன தொகுப்பு. மற்றவை பலரால் சுடப்பட்டு விட்டதால் அதிலிருந்த சொற்பமான கதைகளில் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம். முதலில் 'கயிற்றரவு' கதையை தட்டச்சிட தொடங்கியிருந்தேன். பிறகு நீளம் கருதி இந்த கதையை அடித்தேன். புதுமைபித்தனை இதுவரை படிக்காதவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் (இப்போதய நினைவில் சில) கதைகள் துன்பக்கேணி, நாசகார கும்பல், பிரம்ம ராக்ஷஸ், உபதேசம், காஞ்சனை, கயிற்றரவு, நிகும்பலை, சாபவிமோசனம் ..... ) |
6 Comments:
புதுமைபித்தனின் கதைகளை பரிந்துரைத்ததுக்கு நன்றி.
ரோஸா, "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்" கதையைப் படித்ததில்லையா, அல்லது படித்தும் உங்கள் சிபாரிசில் அது இடம்பெறாதா?
நிச்சயமாக படித்திருக்கிறேன். ஐந்திணை பதிப்பகம், சின்ன சின்ன தொகுதிகளாக தொகுத்த அனைத்தையுமே படித்து விட்டேன்.
'கடவுளும் கந்தசாமி பிள்ளையும்' படிப்பதற்கு சுவாரசியமானது. அந்த வகையில் புபி எழுதிய எல்லாமே சுவாரசியமானதுதானே. நையாண்டியை தாண்டி, க.க. சிறந்த சிறுகதையாய் எனக்கு தோன்றவில்லை. மற்றபடி சிபாரிசு, 12 வருடங்கள் முன்பு படித்ததில், சும்மா அந்த நேரத்தில் தோன்றியவை மட்டுமே.
பு.பியின் சிறுகதைகளீல், எனக்குப்பிடித்தது, பொன்னகரம்
மற்றும் ஒரு நாள் கழிந்தது.
ஒரு நாள் கழிந்தது கதையை நான், என்னுடைய பன்னிரண்டாவது வயதில் படித்தேன். ( அக்காவின் நான் டீடெயில் புத்தகத்தில்). அதற்குப் பிறகும் பல முறை வாசித்திருக்கிறேன். முருகதாசரையும், அவர் பேசும் நெல்லைத் தமிழும் காக்காசு இல்லை என்கிற போதும், நண்பர்கள் வீட்டுக்கு வரும் போது பண்ணுகிற பந்தாவும், இறுதியில் கடன் கேட்கிற நைச்சியமும் ( ஒரு எய்ட் அணாஸ் இருக்குமா? ), இன்னமும் மறக்க முடியாமல் இருக்கிறது. அவர் கதையில் சில விஷயங்களைப் படிக்கும் போது, இதை எப்படி, அந்தக் காலத்தில் எழுதினார் என்கிற வியப்புத்தான் அதிகமாக இருக்கிறது. கற்பு என்கிற விஷயத்தை, நிராகரிக்கும் போது, பின்னால் வந்த ஜெயகாந்தனுக்குக் கூட ஒரு சொம்பு 'பச்ச வெள்ளம்' தேவைப்பட்டது. இது தானய்யா பொன்னகரம் என்று, ஒரே வாக்கியத்தில், கற்பு என்கிற விஷயத்தை உயர்த்திப் பிடிப்பவர்களை, தூக்கிக் கடாச பு.பியால் முடிந்திருக்கிறது.
சிறுகதை என்கிற விஷயத்தை எனக்குப் பிடிக்கிற விதமாகச் செய்தவர்கள் வெகு சிலரே. அவர்களில், முதன்மையானவர் புதுமைப் பித்தன். புலம்ப ஸ்பேஸ் குடுத்ததுக்கு நன்றி. ஆர்.சி. ஆன் தி ராக்ஸ் இலே இன்னொரு நாள் ஈடு கட்டுகிறேன்.
http://www.chennainetwork.com/tamil/ebooks/ppnshortstories.html
இங்கு புதுமைப் பித்தனின் 13 சிறுகதைகளைக் காணலாம்.
//பொன்னகரம்// என் பட்டியலில் விடுபட்டுவிட்டது.
Post a Comment
<< Home