ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Wednesday, May 31, 2006கள்ளன் போலிஸ்.பத்தாண்டுகளுக்கு முன்பு நண்பனுடன் வந்த தோழியிடம் பேச நேர்ந்தது. உளவியல் பயின்று கொண்டிருந்தார். உண்மையிலேயே சமூக அக்கறையும், சுரண்டலுக்கு எதிரான உணர்வும் அவரிடம் இருந்தது. அத்தோடு கல்விப் பரவலாக்கம், கிராமங்கள் நவீனமடைய வேண்டியதன் அவசியம் என்பதாக அழைக்கக் கூடிய விஷயங்கள் குறித்து, அவருக்கு பல யோசனைகள் இருந்தன. அவரது அக்கறைகள் எல்லாம் எனக்கும் மரியாதைக்குரியதுதான். அவர் வாக்கியத்திற்கு வாக்கியம் ஆங்கிலமும் டமிலும் மாறி மாறி பேசியதற்கும், அவரது அக்கறைகளுக்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியம் இருக்க வேண்டியதில்லை என்ற தெளிவு அப்போது ஏற்பட்டு விட்டுருந்தது. அன்றெல்லாம் இப்படி பேசுபவர்களுடன், குறிப்பாக பெண்களிடம், பேசுவதற்கென்றே ஒருவகை அசட்டு புன்சிரிப்பும், உடலசைவும் என்னிடம் இருந்தது இப்போது தெரிகிறது. தோழி நிறய பேசினார். நானும் நண்பனும் பொதுவாய் கேட்டுக்கொண்டு மட்டுமே இருந்தோம். தோழி போகிற போக்கில் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு போலிஸ் ஸ்டேஷன் வரவேண்டும். நவீனமடைவதன் அடையாளம் அதுதான் என்றார். இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் சுதாரிப்பதுதானே நம் வழக்கம். ஏன் போலிஸ் ஸ்டேஷன் வேண்டுமென்று கேட்டேன். விநோதமாக பார்த்து, 'குற்றத்தை தடுப்பதற்காகத்தான்' என்றார். சரி, அது என்ன குற்றம், அதை யார் செய்கிறார்கள், அதை ஏன் தடுக்க வேண்டும் என்று விதண்டாவாதமாய் என் கேள்விகளை நேர்கோட்டில் அடுக்க, தோழி 'இது அந்த மாதிரி எதாவது கேஸோ?' என்பது போல் நண்பனை பார்த்துவிட்டு, பதில் சொல்ல பிரயத்தனிக்க வில்லை. நானே பேசவேண்டியாகியது. போலிஸ் எதுக்கு? திருடங்க கிட்டேயிருந்து நம்மள பாதுகாக்க! நம்மன்றது யாரு? திருடங்க கிட்டேயிருந்து பாதுகாப்பு தேவைப்படறவங்க. அதாவது திருடங்க திருட பொருளும் பணமும் அதுக்கான பாதுகாப்பும் வச்சிருக்கறவங்க. நம்ம கிட்டயிருந்து யாரு திருடப்போறா? இந்த பொருளும் பணமும் இல்லாதவங்க. இப்படி வசதியா இருக்கற நம்ம மிஞ்சி போனா ஒரு நாப்பது பெர்சண்டேஜ் இருக்கலாம். ஆக இந்த நாப்பது பெர்சண்டேஜை அறுபது கிட்டேயிருந்து பாதுக்காக்க போலிஸ் தேவை! கிராமத்திலே இந்த பெர்சண்டேஜ் என்னன்னு தெரியுமா?' தோழி 'அந்த மாதிரி கேஸ்தான்' என்று முடிவுக்கே வந்து விட்டார் போல இருந்தது. ஆனாலும் பொறுமை காட்டி 'கம்யூனிசத்தில் உள்ள பிரச்சனைகள்' என்பதாக பேசப் போக, அவசரமாக 'நான் கம்யூனிஸ்ட் இல்லை' என்றேன், இது போன்ற சந்தர்ப்பங்களில் முத்திரையை சந்தோஷமாய் வாங்கி கொள்ளும் வழக்கத்திற்கு மாறாக. அவர் குழம்பி விடவில்லை. கிராமத்தில் இருக்கும் நிலப்பிரபுத்துவ அராஜகம் என்று நாம் நினைப்பதில் தொடங்கி போலிஸின் தேவையை நீட்டி சொன்னார். நான் அவர் சொன்ன அராஜகங்களை ஒப்புகொண்டு, அந்த அராஜகத்திற்கான இன்னும் அதிகமான பாதுகாப்பை மட்டுமே போலிஸ் வழங்கும் என்பதாக நீட்டினேன். ஒரு கிராமத்தில் அது வரை இருக்கக் கூடிய நிலை, ஒரு போலிஸ் படை நிலை கொண்டால் நடைபெற கூடிய அராஜகங்கள், இன்னும் ராணுவம் வந்தால் வரக்கூடிய நிலமை என்று நீட்டமாய் சில உதாரணங்களுடன் போக அவர் சொன்னார். "இதையெல்லாம் ஏன் சொல்றீங்க? ரொம்ப டிஸ்டர்பிங்கா இருக்கு!" (குத்து மதிப்பாய் நடந்த ஒரு சம்பவத்தை எழுதியிருக்கிறேன்.) |
19 Comments:
ரோசா,
நல்ல சிந்தனையை தூண்டினீர்கள்.இது சம்பந்தமாக என் அனுபவம் ஒன்றை ஒரு பதிவாக நாளை இடுகிறேன்.
இந்தமாதிரி தான் எல்லாரெயும் கிண்டல் செய்வீங்களா?
எங்க ஊரு பக்கம் (நாகர் கோவில்) சின்ன வயசுல விளையாடுற 'கள்ளன் போலிஸ்' விளையாட்டு பற்றி தான் எழுதியிருக்கீங்களோண்ணு பார்த்தா ,இது நிஜ கள்ளன் போலிஸ்.
//இந்தமாதிரி தான் எல்லாரெயும் கிண்டல் செய்வீங்களா?//
கிண்டலா? சரி, கிண்டல்னே வச்சுக்கலாம். ஆனா உங்களை நான் கிண்டல் செய்யமாட்டேன் சுமா!
நன்றி கேள்விக்கு.
ஜோ, என்ன இது பாரதி போய் பச்ச குழந்தை வந்திருக்கு! நீங்களா?
முத்து இடுங்கள்!
//ஜோ, என்ன இது பாரதி போய் பச்ச குழந்தை வந்திருக்கு! நீங்களா?//
ரோசா,
அது குட்டி ஜோ.
நினைத்தேன், ஆனால் உங்களுக்கு திருமணமான விஷயம் கூட தெரியாததால் நீங்களா என்றேன். உங்கள் பதிவில் எழுதி தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும். எனிவே வாழ்த்துக்கள்!
ரோசா சார்,
குட்டி ஜோ முதல் குழந்தை .பிறந்து 5 மாதங்களாகிறது .வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
இதைப்பற்றி நீண்ட ஒரு உரையாடல் எனக்கும் இன்னொரு முக்கிய அதிகாரிக்கும் இடையே நிகழ்ந்தது நினைவுக்கு வருகிறது.உங்கள் பதிவின் தொடர்ச்சியையும் படித்துவிட்டு பிறகு எழுதுகிறேன்.
பத்மா, நீங்கள் உங்கள் அனுபவத்தை கட்டாயம் எழுதுங்கள். ஆனால் என் பதிவே இவ்வளவுதான்.
இதில் பேசப்படும் விஷயத்தை வேறு இடத்தில் வேறு வகையில் தொடக்கூடும்.
/"இதையெல்லாம் ஏன் சொல்றீங்க? ரொம்ப டிஸ்டர்பிங்கா இருக்கு!"/
அதுதானே ஏன் சொல்றீங்க. ரொம்ப ரொம்பவே டிஸ்டர்பிங்கா இருக்கு ;-)
ரோஸா,
மிகவும் சரி.
யாராயிருந்தாலும், அதிகாரம் கையில் கிடைத்தவுடன், அதைத் தக்க வைத்துக்கொள்வதும், மேம்படுத்துவதுவுமே நோக்கமாகிப் போகிறது.
இதே போன்றதுதான் என்னுடைய ராணுவம் பற்றிய கருத்தும். படிக்கும் காலத்தில் ராணுவத்தை ஒரு புனிதமாகக் கருதியவர்களையும் கண்டிருக்கிறேன்.
அவர் கூறியது போல, இதையெல்லாம் கூறாமல், கேட்காமல் இருந்தால், 'டிஸ்டர்பிங்' ஆக இருக்காதுதான். :-)
- வித்யா
>> அன்றெல்லாம் இப்படி பேசுபவர்களுடன், குறிப்பாக பெண்களிடம், பேசுவதற்கென்றே ஒருவகை அசட்டு புன்சிரிப்பும், உடலசைவும் என்னிடம் இருந்தது இப்போது தெரிகிறது. >>
ஹாஹ்ஹா! I can feel how it would have been! :)
ரோசாவின் இந்தச் சம்பவ விவரிப்பில் வந்தது ஒரு 'பெண்' என்பது ஒரு தற்செயல் என்றுதான் எடுத்துக் கொள்ளணும். இதைப் போல பசங்களும் நெறைய பாத்து நொந்திருக்கன்! ("ஒரு அரசியல்வாதியும் சரியில்ல, பேசாம ஒரு 100 வருஷத்துக்கு மிலிட்டிரி ரூல் வந்தாதான் இந்தியா உருப்படும்!")
மேம்போக்காக, மேட்டுக்குடி-மேல்வர்க்க "Rainbow bubble"-க்கு உள்ளாக இருப்போரின் சிந்தனைப்போக்கைச் சொல்வதாக இருந்தாலும் - இது தெரிவிக்கும் சமூக-கல்வி-தளச் செய்திகள் அநேகம்.
இந்த 'மனப்பாங்கை' எதிர்கொள்வதென்பது ஒரு குமைச்சலான அனுபவம்தான்.
இதைக் குணப்படுத்தும் 'உளவியல்' ரீதியிலான அணுகுமுறை கொண்ட கல்வித்திட்டமும் வேணும்!
மத்தபடி இந்தியத் 'திருநாட்டின்' நிரந்தரச் சாபக்கேடான சாதீய அடுக்குமுறைச் சூழல், நகர்ப்புற மாந்தரின் 'அன்னியமயமானதன்மை' என்று பலது இருக்கு!
//ரோசாவின் இந்தச் சம்பவ விவரிப்பில் வந்தது ஒரு 'பெண்' என்பது ஒரு தற்செயல் என்றுதான் எடுத்துக் கொள்ளணும். //
நியோ, இப்படி ஒரு பிரச்சனை இருப்பது பற்றி நானும் யோசித்தேன். எதாவது விளக்கம் தரவும் நினைத்து, பின் தேவையிருந்தால் பிறகு பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். யோசித்து பார்த்தால் இந்த இடத்தில் ஒரு ஆண் இருந்தால் நான் இவ்வளவு தூரம் பேசியிருக்கவே மாட்டேன்.
கருத்துக்கு நன்றி.
>> யோசித்து பார்த்தால் இந்த இடத்தில் ஒரு ஆண் இருந்தால் நான் இவ்வளவு தூரம் பேசியிருக்கவே மாட்டேன். >>
வாத்யாரே!
அப்போ லேசா 'ஆண்'களின் Intellectual self-awareness / flaunting பற்றிய ஒரு உளவியல் பகுப்பும் இந்த விவரிப்பின் அடியிலே இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
;)
பெண்ணிடம் காட்டியிருக்கக் கூடிய பொறுமையை, ஒரு ஆணிடம் காட்டியிருக்க மாட்டேன் என்று சொல்லவந்தேன். அதற்கு வேறு வாசிப்புகள் வரலாம். 'ஆண்'களின் Intellectual self-awareness / flauntingஉடன் தொடர்பு இருப்பதாய் தோன்றவில்லை.
சும்மாதான் சொன்னேன் :))
/"இதையெல்லாம் ஏன் சொல்றீங்க? ரொம்ப டிஸ்டர்பிங்கா இருக்கு!"/
அதுதானே ஏன் சொல்றீங்க. ரொம்ப ரொம்பவே டிஸ்டர்பிங்கா இருக்கு ;-)
Post a Comment
<< Home